அத்தியாயம் 5:
காரை அருகில் இருந்த மைதானத்தில் நிறுத்தும் பொருட்டு செழியன் மட்டும் காரை விட்டு இறங்காமல் காரிலேயே அமர்ந்திருக்க…. மற்ற மூவரும் காரில் இருந்து இறங்கினர்.. முத்துராம் முன்னே செல்ல… செல்வியும் ஆராதனாவும் அவர் பின்னே சென்று கொண்டிருக்க… ஸ்டிர்யரிங்கில் தலைசாய்த்தபடியே… வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த ஆராதனாவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான் செழியன்…
அவர்கள் இருபதடி தூரம் மட்டுமே கடந்திருக்க…
“ஆராதனா”… சத்தமாக அழைத்தான் செழியன்… அவள் பெயரை மட்டுமே சொல்லி அழைத்தவன்… வேறொன்றும் சொல்லாமல் இருக்க… ஆராதனா நின்று திரும்பிப் பார்த்தாள் அவனை… அவ்வளவுதான்… என்ன என்று கூட கேட்காமல் ஆராதனா நிற்க…. செல்விதான் அவனைப் பார்த்து
“என்ன செழியண்ணா” என்று கேட்க…
”தனா” என்று ஆராதனாவைக் கைகாட்டியவன்… ”இங்கே வா…” என்பது போல ஆராதனாவிடம் கை சைகை காட்ட…
“சொல்லுங்க” என்றாள் ஆராதனா நின்ற இடத்தில் இருந்தே…
செழியன் முறைப்புடன் அவளை ஒரு பார்வை பார்க்க
செழியனிடமிருந்து ஆராதனாவுக்கு கிடைத்த முறைப்பில்… தானாகவே
“நீ போய்ட்டு இரு செல்வி…” என்று செல்வியை அனுப்பியவள்… காரின் அருகே மீண்டும் செல்ல… தன் அருகே வந்தவளிடம்…
“தண்ணீ எடுத்துட்டு வா” என்று சொன்னவன் அவளது பதிலை இல்லையில்லை முறைப்பைக் கூட எதிர்பார்க்காமல் காரைக் கிளப்பியும் இருந்தான்…
”திமிரு…” கோபத்தோடு பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது ஆராதனாவால்…
அதேநேரம்…
”இவன் என்ன வந்ததில் இருந்து தண்ணீ தண்ணீ நு கேட்டுட்டு இருக்கான்” என்று முணுமுணுத்தவளாக தன் வீட்டிற்குள் நுழைந்தாள்…
எதிர்பாராமால் மருமகன் வருகை…. முத்துராமை வரவேற்கும் பொருட்டு வீடே பரபரப்பாகி இருந்தது…. புன்னகையுடனே சமையலறைக்குச் சென்றாள் ஆராதனா… செழியனுக்கு தண்ணீர் எடுத்து வர…
---
காரை நிறுத்திவிட்டு நடந்து வந்த செழியனோ… ஆராதனா வீட்டுக்குச் செல்லாமல்… அவள் வீட்டின் எதிர் வீடாக இருந்த முகிலனின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தான்… அருகில் அவன் நண்பன் முகிலன்…
“என்னடா சொல்ற” செழியன் சொன்னதை எல்லாம் கேட்டு அதிர்ந்த முகிலனைப் பார்க்காமல்…
“உண்மைதாண்டா… கமலி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டாடா…. போன வாரம்… வீட்ல கூட சொல்லாமல் என்கிட்ட தான் போன் பண்ணி சொன்னா…” என்றவனின் பார்வை இப்போது எதிர் வீடாகிய தன் தாய்மாமன் வீட்டில் இருக்க…
”கமலி லவ் பண்ணின் விசயம் உங்க யாருக்குமே தெரியாதா… நம்பாமல் முகிலன் வினவ… அமைதியாகவே இருந்தான் செழியன்…
இப்போது முகிலன் கோபத்தோடு…
”நம்ம வீட்டுப் பொண்ணு என்ன செய்யறா, என்ன பண்றானு தெரியாமலாடா இருந்திருக்கீங்க… ” நண்பனைத் திட்டியவன்…. இன்னும் கோபமாக
“ஆனாலும் நீ இருக்கியேடா…. உன் வீட்ல என்ன நடக்குதுனு கூடதெரியாமல்… இங்க இருக்கிற மாமா பொண்ணப் பற்றி மட்டும் அப் டூ டேட் டீடெயில்ஸ் தெரிஞ்சு வச்சுக்கோ… இதுல அப்பப்போ லைவ் டெலிகாஸ்ட் வேற…. இப்போ எல்லாம் மண்ணாப் போச்சே…” என்ற போதே
“என்ன மண்ணா போச்சு… வாயிலேயே போடப் போறேன் பாரு… அதெல்லாம் ஒண்ணும் ஆகாது…. அதை நான் பார்த்துக்கிறேன்… இந்த மாதிரிலாம் பேசாத…” என்றவனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் முகிலனும் இப்போது அமைதி ஆகி விட்டான்…
ஆராதனா மேல் செழியன் கொண்ட காதலை உணர்ந்த,தெரிந்த ஒரே நபர் அவன் மட்டுமே… நண்பனைப் புரிந்தவன் தான்…
ஆனால் கார்த்திக்… அவன் வாழ்க்கை… வார்த்தைகளின்றி முகிலன் தன் நண்பனைப் பார்க்க
முகிலன் பார்வை புரிந்தவனாக செழியனும் தன் கதையை விடுத்து… கார்த்திக்-கமலி விவகாரத்திற்கு வந்தான்
“ரெண்டு மாதத்துக்கு முன்னால கார்த்திக், ’கமலி’ பேரை பச்சை குத்தியிருக்கான்னு கமலிகிட்ட சொல்லி இருப்பாங்க போல… அன்னைக்குத்தான் கமலி அவளோட வொர்க் பண்ற மிதுன லவ் பண்றேனு சொல்லிருக்கா… அம்மாவும் அப்பாவும் ஒத்துக்கவே இல்லைபோல…. எனக்கும் யாரும் தகவல் சொல்லலை…. வீட்ல போர்க்களமா இருந்திருக்கு….. அவள எப்படியும் மாத்திரலாம்னு அம்மா சொல்லி இருப்பாங்க போல… கார்த்திகோடத்தான் மேரேஜ்னு அவகிட்ட முடிவா சொல்லி மிரட்டி இருக்காங்க… அதோட மட்டுமில்லாமல் லாஸ்ட் வீக் மாமாவும் பெரியப்பாவும் வீட்டுக்கு வந்து கல்யாண விசயம் பேசிட்டு போய் இருக்காங்க…. இது எல்லாத்தையும் பார்த்து பயந்து… கார்த்திக்கே மேரேஜ் பண்ணி வச்சுருவாங்களோன்னு… இவ யாருக்கும் தெரியாமல் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டா…” என்றவன்…
”மேரேஜ் பண்ணின அன்னைக்கே எனக்கும் போன் பண்ணி சொல்லிட்டு… ஒரே அழுகை… நான் உடனே வரனும்னு… நான் வந்துதான் அம்மா அப்பாவுக்கே அவ மேரேஜைச் சொன்னேன்…”
”இதுல நான் என்னடா பண்றது…. அவளப் பார்க்கவே முடியல எனக்கு… அவ்வளவு அழுகை… எம்டி பீடியாட்ரிக்ஸ் முடிச்சிருக்காடா…. கார்த்திக்கை ஏமாத்தல… ஆனால் ஏதோ தப்பு செஞ்சிட்டோம்னு ஃபீல் பண்றாடா…. அவளுக்கு கார்த்திக்கைப் பிடிக்கலைனு இல்ல… அவளோட சர்க்கில் வேற லெவல்… அதுல இவன் ஒட்ட முடியும்ன்ற நம்பிக்கை இல்லை… மிதுனை லவ் பண்ணிட்டா… நம்மகிட்ட போராட பயம்… மேரேஜும் பண்ணிட்டா” என்றவன்…
”லவ் பண்றது… லவ் மேரேஜ் பண்றதெல்லாம்… அங்க இருந்து பார்க்கும் போது ரொம்ப சர்வ சாதாரணமாத்தான் எனக்குத் தெரியுது… தெரிந்தது… ஆனால் ஊர் எல்லையை நெருங்கும் போது… செழியனா… இந்த ஊர்க்காரனா என்னையுமறியாமல் மாறின மாதிரி ஃபீல்டா… தெரியலை…. ஒருவேளை நான் இங்கேயே இருந்திருந்தேன்னா… நானும் அவ லவ்வை அக்செப்ட் பண்ணியிருந்திருக்க மாட்டேனோன்னுதான் தோணுது…”
“ப்ச்ச் அதெல்லாம் விடு… எனக்கு கமலி வாழ்க்கை முக்கியம்… அவளுக்கு பிடித்த வாழ்க்கை அது மட்டும் தான் எனக்கு முக்கியம்… அப்பா கூட கமலி விருப்பம்தான் முக்கியம்னு இறங்கி வந்துட்டாரு… ஆனால் அம்மாதாண்டா பாவம்… பிறந்த வீட்டுக்கு பதில் சொல்லவும் முடியாமல்…. தான் பெத்த பொண்ணையும் விட்டுக் கொடுக்க முடியாமலும் திணறிட்டு இருக்காங்க….. அம்மா இன்னும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க… இதுல இன்னும் அண்ணா… அப்பா அம்மான்னு ஒரே அழுகை… அப்பாக்கும் அம்மாவுக்கும் இதுனால சண்டை… இவ்வளவு நடந்த பின்னால இத மறச்சு என்ன ஆகப் போகுது… என்ன ஆனாலும் சொல்லித்தானே ஆகனும்….
ரெண்டாவது இதுனால கமலிய என்னால விட்டுக் கொடுக்க முடியாது… என்ன இருந்தாலும் என் அக்கா அவ… அவளுக்காக நான் நிற்காமல் வேற யார் நிப்பாங்க… அவ சின்னபொண்ணா என்ன… டீன் ஏஜ் பொண்ணூனா…. தப்பான துணையை தேர்ந்தெடுத்திருவாளோனு நினைக்கலாம்…. அதைத் தடுக்கலாம்… அவளோட உரிமை…. தனக்குனு ஒரு வாழ்க்கைய தேர்ந்தெடுத்துகிட்டா…. இதுல நாம என்ன சொல்ல முடியும்…. சொல்லப் போனால் இது அவளோட தப்பும் இல்லை,….. கார்த்திக்கோட தப்பும் இல்லை…. பெரியவங்க பண்ணின தப்பு…. அன்னைக்கே இவளுக்கு அவன்னு முடிவெடுத்து சேர்த்து வச்சு பேசினப்போ தடுத்திருக்கனும்… அப்போ எங்க அப்பா அம்மா ஒண்ணும் சொல்லல… அஃப்கோர்ஸ் சம்மதம் தான் அவங்களுக்கும்… அந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே எல்லாவற்றையும் மன்னிப்பு கேக்கறதும் எங்க கடமை,…. அதுக்கப்புறம் அவங்க பெருந்தன்மை”
என்று தன் நண்பனிடம் புலம்பிக் கொண்டிருக்கும் போதே…. முகிலன் கண்களால் சைகை செய்தான்… பேச்சை நிறுத்துமாறு… ஏனென்றால் தண்ணீர் சொம்போடு ஆராதனா வந்து கொண்டிருந்தாள்…
”தண்ணி” என்று தண்ணீர் சொம்பை நீட்டியவளின் விரல்கள் மீது வேண்டும் என்றே பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் அவள் நீட்டிய பாத்திரத்தை வாங்கிய செழியன்… அந்த ரணகளத்திலும் தன் கள்ளத்தனத்தை அவள் உணராமல் நிறைவேற்றிக் கொண்டான்
ஆராதனாவுக்கும் அவன் விரல்கள் தன் விரல்களில் பட்டது உணர்ந்தாள் தான்… ஆனாலும் அவன் கைகளின் உரசல் விரசமாகவேத் தோன்றவில்லை… சாதாரணமாக தண்ணீர் சொம்பு ஒருவரின் கையில் இருந்து மற்றொருவரின் கைக்கு போகும்போது படும் லேசான தொடுகை போல இருந்தது… அப்படித்தான் அவளும் உணர்ந்தாள்… உணரவும் வைத்திருந்தான் செழியன்… ஆராதனாவும் வேறொன்றும் பேசாமல் அங்கிருந்து போக நினைக்க
வாங்கிய தண்ணீரைக் குடிக்காமல்… கீழே வைத்த செழியன்…
“தவிச்ச வாய்க்கு சீக்கிரம் தண்ணி கொண்டு வந்துட்ட போல.. எப்போ கேட்டேன்… எப்போ கொண்டு வர…” என்று வழக்கம் போல் மிரட்ட…. ஆராதனா இலேசான முறைப்போடு அவன் புறம் திரும்பினாள் ஆராதானா
முகிலனுக்கு அப்போது ஒன்றுதான் தோன்றியது..
”உள்ள என்ன கலவரம் நடக்கப் போகுதோ…. இருக்கிற பட்டாவையே பிடுங்கப் போறானுங்க… இதுல இப்போ போய் இவகிட்ட இவன் காதலுக்கு அஸ்திவாரம் போடறானே…. “ என்பதுதான் அது…
செழியனின் மிரட்டலில் திரும்பிய ஆராதனா… கொடுத்த தண்ணீரைக் குடிக்காமல் வாங்கிய சொம்பை அவன் அப்படியே கீழே வைத்திருந்ததையும் கவனித்தவளாக
“ஓ…. அதுதான் தாகத்துக்கு வேகமா குடிச்சு முடிச்சுட்டு வச்சுட்டீங்க போல…” ஆராதனாவும் இப்போது செழியனுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பிக்க… சற்று முன் கமலியை நினைந்து வருந்தியவனா எனும்படி முகமெங்கும் மலர்ச்சி… வாங்கிக் கட்டிக் கொண்டதென்னவோ ஆரதனாவிடமிருந்து குத்தலான பேச்சுதான்… இருந்தும் சிரித்தபடி
“சரி… இங்க உக்காரு… “ என்று அவன் அருகில் அமரச் சொல்ல….
இவன் என்ன சம்பந்தமே இல்லாமல் பேசுகிறான்… இப்படி எல்லாம் பேசுகிற ஆளே கிடையாதே இவன் என்று ஆராதனாவுக்குத் தோன்ற… இருந்தும்
“உள்ள வேலை இருக்கு போகனும்” முதலில் மறுத்தவள்… மீண்டும் அவன் முகம் பார்க்க…. அதில் இருந்த தீவிரம் உணர்ந்து… அவன் ஏதோ முக்கியமாகப் பேசப் போகிறானோ… நம்பி அவனின் அருகில் சென்றவள் உட்காராமல்…. அவன் முன்னே நின்றபடி
“சொல்லுங்க… ஏதாவது முக்கியமான விசயமா” என்று கேட்க…
“நான் யாரு” என்று செழியன் புன்னகையோடு கேட்க… ஆராதனாவோ தன் பொறுமை இழந்திருந்தாள்
“இதைக் கேட்கத்தான் உட்காரச் சொன்னீங்களா” என்று எரிச்சலோடு முறைத்தாள் ஆராதனா…
”கேட்டதுக்கு பதில்” என்று இவனும் அவளை விடாமல் கேட்க…
“ஏண்டா… காலேஜ்ல ராகிங் பண்ற மாதிரி பண்ணிட்டு இருக்க… அதுவும் என் முன்னாடியே… என் தங்கைகிட்டயே…” முகிலன் செழியனைத் திட்டியபடியே
”நீ போம்மா… அவன் கிடக்கிறான்” முகிலன் ஆராதனாவை அனுப்ப முயற்சிக்க….
அப்போது
“அடப்பாவிங்களா… இப்படி என் மகன் வாழ்க்கைய நாசம் பண்ணீட்டீங்களே எல்லாரும் சேர்ந்து… நீங்க எல்லாரும் நல்லா இருப்பீங்களா… நாசமா போவீங்க” என்ற மேகலாவின் அழுகையோடு வந்த கூக்குரல் சத்தத்தில்… ஆராதனாவுக்கு தொண்டை வறண்டது… தாயின் கதறல் அவளைப் பாதிக்க… கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது… என்ன காரணம் என்று தெரியாமாலேயே
தன் முன்னால் நின்றவனிடம் என்ன கேட்பது… எதைப்பற்றி கேட்பது என்று கூட தெரியாமல்… என்ன நடந்தது என்று கூட உணர முடியாத நிலையில் இருந்தாள் ஆராதனா…
உள்ளே கூச்சல் அதிகமாகிக் கொண்டே இருக்க… தெளிவில்லாத வாக்குவாதங்களாக இவள் காதுகளை அடைய… இப்போது உணர்வுக்கு வந்தவளாக… கண்களில் வழிந்த நீரைக் கைகளால் துடைத்தபடியே…
”என்ன சொல்றாங்க அம்மா… என்னாச்சு… அண்ணாக்கு என்ன பண்ணுனீங்க”
ஆராதனா செழியனிடமிருந்து பதிலை எதிர்பார்க்க…. அவனோ… கற்ச்சிலையாக இறுகி அமர்ந்திருந்தான்…
ஆராதனவுக்கு பதில் சொல்லவில்லை… மாறாக
“நீ உள்ள போகாத” என்று அவளை நிறுத்தியவனின் வார்த்தைகள் இப்போதுதான் புரிந்தது ஆராதனாவுக்கு…
முதலில் இருந்தே… தெரிந்தே… வேண்டும் என்றே தன்னை வீட்டுக்குள் இருக்க விடாமல்… தன்னை அழைத்து அவனோடு நிறுத்தி வைத்திருக்கிறான் என்பது புரிய… உள்ளே சண்டை நடக்கப் போகிறதோ என்ற பதட்டம் அவளுக்குள் வந்திருந்தது இப்போது... வேகமாக வீட்டை நோக்கி நடை எடுத்து வைக்க
“சொல்றதக் கேளு… தனா” என்று அவள் முன் நின்று வழியை மறைத்த செழியன்…
“முகில் வீட்டுக்கு போ…” என்று அவளிடம் அமைதியாகச் சொல்ல….
”அப்போ என்னாச்சுனு சொல்லுங்க” அவன் கண்களைப் பார்த்து மூக்கு விடைக்க கேட்டவளிடம்… வேறு வழி இன்றி….
“கமலி அக்கா உங்க அண்ணாவை மேரேஜ் பண்ணிக்க மாட்டேனு சொல்லிருச்சு…. “ அவள் முகம் பார்க்காமல் சொன்னவனைப் பார்த்து…. மூச்சே நின்றது போல தனை மறந்து நின்றாள் ஆராதனா… கண்களில் இருந்து கட கடவென்று வழிந்த கண்ணீர் மட்டுமே அவள் சிலை அல்ல உயிருள்ள பெண் என்று காட்டிக் கொண்டிருக்க… நிமிடங்கள் கடந்தும் அதே நிலையில் நின்றிருந்தாள் ஆராதன
“ஹேய் தனா… தனா” பதறி அவளின் தோள் தொட்டு உலுக்கியவனின் கரங்களில்…. இவள் கண்ணீரே பதிலாக வர… செழியனோ நிலை கொள்ளாமல் தவித்தான்…
முகிலனோ இவர்கல் இருவருக்கும் இடையே… என்ன சொல்வது என்று தெரியாமல் ஒரு வித பதட்டத்தோடு ஒருபுறம் தவித்தபடி நிற்க…
அப்போது…. அவர்களருகில் சத்தமே இல்லாமல் வந்து நின்ற காரில் இருந்து இறங்கினான்…. கார்த்திக்…
காரில் வரும் போதே… அவன் தங்கைதான் அவனது கண்களில் பட்டாள்… கூடவே அவள் தோளைத் தொட்டு உலுக்கியபடி நின்றிருந்த செழியனும்…
பதறி இறங்கியவன்… கமலியைப் பற்றியும் நினைக்கவில்லை… அதே நேரம் செழியன் தன் தங்கையின் தோள் பற்றி ஆறுதல் கூறிக் கொண்டிருந்ததையும் கூட தவறாகப் பார்க்கவில்லை… மாறாக
“யாருக்கோ??!!! என்னவோ ஆயிற்றோ???!!!…. செழியனும் மாமாவும் இங்கே இருக்கிறார்கள் என்றால் கமலிக்கு???!!!… அத்தைக்கு????!!!…. என்னவாயிற்று…” இப்படித்தான் கார்த்திக்கின் மனம் பதறியது
செழியனும் முத்துராமும் வந்திருக்கின்றார்கள் என்று செல்வி நரேனுக்கு செய்தி அனுப்பி இருக்க… அதைப் பார்த்து கார்த்திக், நரேன்… இருவரும் உடனே வீடு திரும்பி இருக்க… இங்கோ இப்படி…
ஓட்டுனர் இருக்கையில் இருந்து நரேன் செழியனைப் பார்த்து முறைத்தபடியே இறங்க…. செழியனோ நரேனை அலட்சியமாக எதிர்கொண்டான்…
”டேய் முகில்….. உள்ள என்னடா சத்தம்…” என்று முகிலனிடம் கேட்டாலும் நரேனின் பார்வை செழியனிடமே… அதிலும் ஆராதனாவை உரிமையாக அணைத்திருந்த அவனது கரங்களிடமே இருக்க… நரேனின் பார்வை சென்ற இடத்தைப் பார்த்த பின்தான்… செழியனுக்குமே சுயம் வந்தது… ஆராதனாவின் தோள் தொட்டுக் கொண்டிருந்த தன் கரங்களை எடுத்திருந்தான் இப்போது…
கரங்களை எடுத்தான் தான்… ஆனால் ஆராதனாவை விட்டு விலகவில்லை
கார்த்திக், ஆராதனா-செழியன் இருவரின் அருகில் வந்து நிற்க… கார்த்திக்கைப் பார்த்ததும் இன்னும் கேவி கேவி அழ ஆரம்பித்திருந்தாள் அவன் தங்கை…
“என்ன செழியா…. என்ன நடக்குது… உள்ள ஒரே சத்தம்…. இங்க இவ ஏன் அழுதுட்டு இருக்கா” என்று விசயம் தெரியாத உச்சக்கட்ட எரிச்சலுடன் கேட்ட கார்த்திக்கின் கைகளில் இருந்த ‘கமலி’-யின் பெயர் செழியனைப்பார்த்து சிரிக்க…
செழியனுமே வார்த்தைகள் வராமல்… கார்த்திக்கைப் பார்க்க முடியாமல் ஸ்தம்பித்து நின்ற நிமிடங்கள்… அந்த நிமிடங்கள்
“ஏய் தனா… சொல்லிட்டுனாலும் அழுது தொல” தன் தங்கையை வேகமாக இழுத்து.. தன் புறம் திருப்பி கார்த்திக் கத்த… ஆராதனாவுக்கோ அவனிடம் விசயத்தைச் சொல்லவே அப்படி ஒரு பயம்…
தன் அண்ணனின் கோபம் எந்த அளவுக்கு என்று அவளுக்கு யாரும் சொல்ல வேண்டுமா என்ன…. கோபம் வந்து விட்டால் கண் மண் தெரியாது அவனுக்கு…. அப்படிபட்டவனிடம் என்ன சொல்வது… எப்படிச் சொல்வது….. பாதி பயம் பாதி கவலை…. மலங்க மலங்க விழித்தவளிடம்….
“சொல்லித் தொலை… எனக்கு என்னன்னவோ தோணுது” என்ற உச்சஸ்தாயில் கத்தியவனிடம்…
”கமலி அக்கா” மென்று விழுங்கியவள்… செழியனைப் பார்த்து அழ ஆரம்பிக்க…
இப்போது செழியன் அவள் விட்ட வாக்கியத்தை தனது வார்த்தைகளில் முடித்தான்…
“கமலி அக்காக்கு இந்த மேரேஜ்ல இஷ்டம் இல்லை”
கார்த்திக்கின் கை முஷ்டி இறுகியது….
“இஷ்டம் இல்லைனா…. வேற என்ன இஷ்டமாம் உங்கொக்காவுக்கு….. அதையும் சொல்லி முடி…” என்றவனின் வார்த்தைகளின் அர்த்தம் புரிய ஆராதனா இப்போது ஸ்தம்பித்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்…
தன் அண்ணன் வேண்டாம் என்றால் கமலி அக்காவுக்கு வேறு யாரோ மேல் விருப்பமா???…. இப்படி ஒரு கோணத்தில் அவள் கமலியை நினைத்துப் பார்க்கவே இல்லை…
நினைக்கும் போதே… தன் கமலி அக்காவா…. அதிர்ந்து பேசினால் கூட வலிக்கும் என்று மெலிதாக பேசும் அந்த வெள்ளை உள்ளம் தான் தன் அண்ணனின் கல் போன்ற இதயத்தை தூள் தூளாக்கியதா??? நம்ப முடியாமல் அவள் உள்ளம் கதற ஆரம்பித்திருந்தது…
கார்த்திக்கும் நேரடியாக கேட்டு விட… அவனின் சீறிய முகத்தைப் பார்த்து பம்மவோ பயப்படவோ… செழியன் என்ன ஆராதனாவா???… இப்போது கார்த்திக்கைப் பார்த்து நிமிர்ந்து நின்றவனாக
“எஸ்…. அவளோட வொர்க் பண்ற மிதுன்” என்று முடிக்கவில்லை….. பளாரென்று அறை விழுந்திருந்தது செழியனின் கன்னத்தில்…
செழியன் சுதாரிக்கும் முன்னரே கார்த்திக்கின் கரம் பதிந்து விட….. நரேன் தான் சுதாரித்தான்….
”டேய் கார்த்திக்….” என்று அவனைப் பிடித்து விட்டான்…. இன்னொரு புறம் முகிலன் செழியனை சமாதானப்படுத்திக் கொண்டிருக்க….
இளையவர்கள் ஐவர் மட்டுமே…. அதிலும் ஆராதனா மட்டுமே பெண்….
“என்ன விடுடா நரேன்…. இவன கொன்னா கூட எனக்கு அடங்காதுடா…. அக்காவுக்கு அசிங்கமா மாமா வேலை பார்த்துட்டு வந்து என்கிட்ட என்ன மாதிரி … தெனாவெட்டா பேசுறான்… ராஸ்கல்… என்ன தைரியம் இவனுக்கு இருக்கும்“
கார்த்திக்கின் வார்த்தைகள் தாங்க முடியாமல் செழியனும் எகிறத்தான் நினைத்தான்… இருந்தும் கார்த்திக்கின் நிலைமையை புரிந்தவன்… அமைதி காத்தான்
“கார்த்திக்…. உள்ள வா…. அங்க பேசலாம்…. பெரியவங்க பேசிட்டு இருக்காங்க..” என்று நரேன் கார்த்திக்கை உள்ளே அழைக்க…
“அந்த பெரிய மனுச… **** என் வாழ்க்கையே போச்சு“ என்று ஆரம்பித்தவன் கெட்ட வார்த்தைகளையும் சேர்க்க ஆரம்பிக்க… கார்த்திக் தன் நிதானத்தில் இல்லை என்பது அப்பட்டமாக புரிந்தது அங்கிருந்த அத்தனை பேருக்கும்…..
அவமானம் மட்டுமே கார்த்திகேயனை ஆக்கிரமித்திருக்க…. என்ன செய்கிறோம் என்றே அவனுக்கு உணர முடியவில்லை…. அப்படி ஒரு ஆக்ரோசம்…
இத்தனை வருடமாக தன் காதலி… இல்லையில்லை தன் மனைவி என்று வரிந்து வைத்திருந்தவளை…. இன்று யாரோ ஒருவனோடு நினைக்கவே முடியாமல் ஆயிரம் ஆயிரம் கோடாலிகளை அவனுக்குள் இறக்கியது போன்று இருக்க…. அதன் வலி தாங்க முடியவில்லை… தன்னவள் இன்னொருவனுடனா…. ஏற்றுக் கொள்ள முடியாமல் துடித்தான்….
ஆண்மகன் என்பதால் கண்ணீர் வரவில்லை…. அதற்கு பதிலாக ஆத்திரம்…. உலகையே அழிக்கும் ஆத்திரம் வர… எல்லாம் ஒன்று சேர்ந்து… தன் முன்னே நின்றிருந்த செழியன் மேல் பாய ஆரம்பித்து இருந்தான்…
அடுத்த சில நிமிடங்களில்…. அந்த தெருவே அங்கு கூடி இருக்க…. ஊர் முழுக்க இவர்கள் குடும்ப பிரச்சனைதான் அன்றைய விவாதிக்கும் பொருளாக மாற….. அடுத்தடுத்த தெருவில் இருந்தவர்கள் எல்லாம் அங்கு கூட ஆரம்பிக்க….மொத்த ஊர் மக்களுமே அங்குதான் இப்போது என்பது போல் கூட்டம் கூடி இருந்தது…
”இந்தாப்பா…. கார்த்திக்… எதுவா இருந்தாலும் உள்ள போய் பேசலாம்… எதுவும் முடிவுக்கு வராமலேயே இவ்வளவு ஆத்திரம் எதுக்கு உனக்கு…. அப்படியெல்லாம் லேசுல உனக்குனு பேசி வச்ச பொண்ண விட்ருவோமா… “ என்று அவனிடம் அங்கிருந்தவர்களில் ஒருவர் ஆதுரமாக பேச ஆரம்பிக்க…
இதில் வேடிக்கை என்ன வென்றால்…. கமலினியின் ரெஜிஸ்டர் மேரேஜ் சொல்லப்படாமலேயே இத்தனை கலவரம் என்றிருக்க..
“என்னைய்யா பேசுவ… எனக்கு என்ன ஆக விட மாட்ட…. யாரும் ஒண்ணையும் கழட்ட வேண்டாம்… எல்லோரும் மூடிட்டு அவங்கவங்க வேலையப் பார்க்கப் போங்க…. நான் பார்த்துக்கிறேன்…” யாரையும் மதிக்காமல் கார்த்திகேயன் பேசிய விதம் அனைவரையும் கலங்கடித்த போதும்… அதற்காகவெல்லாம் அந்த இடத்தை விட்டு நகராமல்… நின்ற ஒவ்வொருவரும் ஆளாளுக்கு அவனிடம் சமாதானம் பேச ஆரம்பித்திருந்தனர்…
கார்த்திக்கின் அடாவடி ஆர்ப்பாட்ட கூச்சலில்… உள்ளே இருந்த குடும்பத்தினரும் இப்போது வெளியே வந்திருக்க செல்வியும் இப்போது வெளியே வந்திருந்தாள் அவர்களோடு…
அனைத்தையும் பார்த்தபடி… கார்த்திக்கின் ஆர்ப்பாட்டங்களை எல்லாம் கவனித்தபடி…. சற்று தள்ளி ஓரமாக நின்று கொண்டாள்…. அங்கு இருந்தவர்களைப் பொருத்தவரை செல்வியும் அந்தக் குடும்பத்தின் நிகழ்வுகளைப் பார்க்கும் பார்வையாளர்….
கமலியின் இழப்பு கார்த்திக்கை எந்த அளவுக்கு கீழ் இறக்கி விட்டது என்பதை பார்த்தவளுக்கு அங்கு அழக் கூட உரிமையின்றி… உதடுகளைக் கடித்து தன் அழுகையை அடக்கியவளின் இதயம் கனமாகியிருக்க…. சுவரோடு ஒடுங்கி இருந்தாள்…
செல்வியின் நிலை அப்படி இருக்க ஆராதனாவோ இன்னும் செழியன் மற்றும் கார்த்திக் அருகில்தான் நின்று கொண்டிருந்தாள்… அதிலும் செழியனின் அருகிலும்… கார்த்திக்கின் எதிர்ப்புறமும்…. அவள் அண்ணனிடம் மட்டுமே அவள் மொத்த கவனமும்… பார்வையும்
தன் சகோதரனின் கரை கடந்த கோபத்தை…. அவன் ஏமாற்றப்பட்ட விரக்தியில் பைத்தியக்காரனாக கத்திக் கொண்டிருந்த கோலத்தை…. என ஒவ்வொன்றையும் விரக்தியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ஆராதனா
“அய்யா… எதுக்குயா இவ்ளோ கோபம்… பேசலாம்….. நம்ம கமலிக்கிட்ட நாம் விசாரிப்போம்… நாம் நேர்ல போய் பேசுனா… நாம வளர்த்த புள்ளடா அது… நாம கூப்பிட்டா வரமலா போயிரும் வந்துரும்டா”
நீலவேணி கார்த்திக்கிடம் கெஞ்சிக் கொண்டிருந்ததை எல்லாம் தள்ளி விட்டவனாக
”ஏய் கெழவி உன்னைக் கேட்டேனா… உன் பேத்திய எனக்கு கல்யாணம் பண்ணி வைணு….” தன் அப்பாத்தைவையே மரியாதை இல்லாமல் பேச….
என்ன செய்வதென்றே யாருக்கும் புரியவில்லை….. கார்த்திகேயனின் தந்தை அவனைக் கட்டுப்படுத்துவது போல் அணைக்கப் போக… திமிறினான் கார்த்திக்… அதிலும் தலை குனிந்து நின்ற முத்துராமைப் பார்த்தவன் இன்னும் ஆவேசத்தோடு சீறினான் தன் தந்தையிடம்….
”இவன் பொண்ணு… எவனையோ லவ் பண்றாளாம்… நானும் சரினு சொல்லிருவேனாம்…. நீயும் மாமன் சீர் செய்யனுமாம்…. நம்பிட்டு வந்து நிக்கிறானுங்க ரெண்டும் பேரும்…. பொட்டைங்க” என்றவன்…. முத்துராமைப் பார்த்து
”யோவ்… உன் பொண்ணு எவன லவ் பண்ணி இருந்தாலும் இல்ல எவன்ட்ட போய்ட்டு வந்தாலும் எனக்கு கவலை இல்ல… எனக்கு அவ வேணும்…” என்றவனின் விரசமான வார்த்தைகளில் செழியனுக்கும்…. முத்துராமுக்கும் உயிர் துடித்த விதம் வார்த்தைகளில் விவரிக்க இயலாதவை…. தாங்க முடியாமல் செழியன் அவனை நோக்கி வர
”என்ன துள்ளுற… போங்க போங்க… கல்யாண ஏற்பாட்டைப் போய் பாருங்க… இல்லை… உங்க ரெண்டு பேரோட கருமாதிக்குத்தான் ஏற்பாடு பண்ணனும்.. எப்படி வசதி”
அதற்கு மேல் பொறுக்க முடியாத செழியனின் கண்கள் சிவந்து வன்முறையில் இறங்கப் போக முத்துராம் அவனை கைப்பிடித்து தடுத்து நிறுத்தியிருந்தார்…
“அப்பா… இதுக்கும்மேல என்ன பொறுமை நமக்கு வேண்டும்… பெரிய இவன் மாதிரி பேசுறான்…. இவனுக்கு என்ன தகுதி இருக்குனு நம்ம கமலியை கல்யாணம் செய்யனும்னு ஒத்தைக் கால்ல நிக்கிறான்… அவ கால் தூசிக்கு கூட இவன் வர மாட்டான்... போனா போகுது சொந்தம்னு… சொல்லிட்டோமேனு…. வாக்கு கொடுத்துட்டோம்னு… இவனுக்கு கொடுக்க நெனச்சோம்” என்று எரிமலையாக குமுறியவனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்திருந்தான் கார்த்திக்
“என்னது போனா போகுதுன்னு நினைச்சீங்களா.... சொல்லுடா... என்னடா தகுதி இல்லை எனக்கு…. படிப்பு…. இதுதானே… இது மட்டும்தானேடா… வரச் சொல்லுடா அவளை…. அவள மாதிரி எத்தனை பேருக்கு வேலை கொடுக்கிறேனு வந்து பார்க்கச் சொல்லு…. படிப்பாம் படிப்பு… ” என்று செழியனைத் தள்ளி விட்டவன் கைகளோ இப்போது நடுங்க ஆரம்பித்திருந்தன… அவனின் படிப்பைச் சுட்டிக் காட்டி செழியன் குறைச் சொல்லி இருக்க… கொஞ்சம் கொஞ்சமாக கார்த்திக் என்ற ஆலமரம் தனக்குள் சாய ஆரம்பித்து இருந்தது… இருந்தும்… வெளியே வீராப்பாக தன்னைக் காட்டிக் கொண்டவனாக… செழியனை விட்டு விட்டு… முத்துராமிடம் வந்தவன்
”இன்னொருத்தன விரும்பறேனு உன் பொண்ணு வந்து நின்னுருந்தானா… அவளக் கொன்னு போட்டுட்டு இங்க வந்து நின்னுருந்தா நீ ஒரு அப்பனுக்கு” என்ற போதே செழியன் கார்த்திகேயனின் மார்பிலேயே கால்களால் உதை விட…. வார்த்தைகளை முடிக்காமல் மண்ணில் நிலை குலைந்து விழ்ந்தான் கார்த்திகேயன்…
“கொல விழுந்துரும்… யாரைப் பார்த்து என்ன வார்த்தை பேசுற… “ செழியன் மீண்டும் அவனை எட்டி மிதிக்க… எழ முயன்ற கார்த்திக் மீண்டும் கீழே விழுந்தான்… வேஷ்டி ஒரு புறம் அவன் ஒரு புறம் என விழ…
இதுவே வேறொரு நேரமாக இருந்திருந்தால் இப்படி அவன் கீழே விழுந்திருப்பானா என்பது சந்தேகமே… இன்றைய நிலைமையோ…. உணர்ச்சிக் குவியலில் ஏமாற்றத்தின் உச்சத்தின் இருந்தவன் தன்னை விட 3 வயது குறைந்தவன் எட்டி உதைத்ததில் மண்ணில் கிடக்க…. தன்னை தூக்க வந்த அனைவரையும் தட்டி விட்டுவிட்டு கீழே விழுந்ததில் அவிழ்ந்த வேஷ்டியைக் கட்டியவன்… கொலை வெறியோடு செழியனை நோக்கிச் செல்ல….
‘நீ ஆம்பளையா நான் ஆம்பளையாடானு பார்த்திருவோம்” என்றபடி மூச்சிறைத்து தள்ளாடியவனை…. நரேன் கைப்பிடித்து நிறுத்த
”டேய் மாப்பிள்ளை… ஆட்டைக் கடிச்சு… மாட்டைக் கடிச்சு… மனுசனக் கடிச்ச மாதிரி… இவன் என்கிட்டயும் அவன் புத்தியக் காட்டிண்டா… இவன் இனி உனக்கு மட்டும் எதிரி இல்லடா… எனக்கும் தான்…. விடக் கூடாதுடா இவனை இனி…” கார்த்திக்கின் வார்த்தைகள் பெரிதாக இருந்தாலும்…. தடுமாற்றமாய் விழ…
“நீ தள்ளு… உனக்கும் எனக்கு எப்போதும் ஒத்து வராது… ஒதுங்கிரு” என்று நரேனிடம் முறுக்கிய செழியன்… கார்த்திக்கின் முன்னே போய் நின்றான்…
“என்னடா பண்ணுவ… பார்க்கலாம் வா…”
செழியனை அடிக்க நினைத்தான் தான் கார்த்திக்… ஆனால் முடியவில்லை… கை கால்கள் எல்லாம் ஆட்டம் கண்டது போல் இருக்க… இயலாமையோடும் அவமான உணர்வோடும் நரேனைப் பார்த்தவன்… இப்போதும் அழுதும் விட நரேனின் தோள் மீது சாய்ந்து விட்டான்… கார்த்திக்…
அவனின் உடல் நடுக்கம் உணர்ந்த நரேன்
”ஒண்ணும் இல்லடா… கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுடா மாப்ள…. உன் குடும்பத்தை பாருடா… உன் அப்பா அம்மாவைப் பாருடா…. எந்த அளவுக்கு நொறுங்கிப் போயிருக்காங்கனு… ஆராதனாவப் பாருடா….“ என்ற நரேனுக்கோ தன் தங்கையின் நிலை தெரியவில்லை…
நரேன் ஆராதனாவின் பெயரைக் குறிப்பிட… செழியனின் ஆவேசம் சட்டென்று அடங்கி… ஆராதனாவிடம் கவனம் சிதற ஆரம்பிக்கப் போக… கார்த்திக்கோ மீண்டும் ஆவேசமாகி இருந்தான் இப்போது
மீண்டும் கார்த்திக் ஆவேசத்துடன் பேச ஆரம்பித்ததில் கார்த்திக்கின் புறம் திரும்பினான் செழியன்
“இல்லடா நரேன்… இவன, இவன் அப்பனை இங்கயிருந்து விடக்கூடாதுடா…. இவங்கள வச்சுதான் அவள இங்க வர வைக்கனும்…. அப்பனுக்கு ஏதாவது ஒண்ணுன்னா அவ வந்துதானே ஆகனும்…” என்றபடியே…
“வருவாளாடா உன் பொண்ணு… இல்லை அப்பன விட… “ என்று வார்த்தைகள் மீண்டும் தடிக்க ஆரம்பிக்க.. செழியன் அவனிடம் பாய்ந்திருக்க… இப்போது அங்கிருந்த கூட்டம் சும்மா நிற்கவில்லை…. இருவரையும் விலக்கிவிட்டவர்களாக… கார்த்திக்கை வீட்டுக்குள் இழுத்துச் செல்ல ஆரம்பித்தனர் அங்கிருந்த சிலர்… அப்போதும் அவன் அடங்க மறுக்காமல் கத்தியபடிதான் உள்ளே செல்ல…..
செழியனிடம் அங்கிருந்த பெரியவர் ஒருவர்….
“ஏம்பா தெருவுல வச்சு பேசுற பேச்சா இது…. நீ உள்ள வாப்பா… அவன் தான் அப்படின்னா… நீ படிச்சவன் தானே… நாலு இடம் போய் பழகிட்டு வர்றவன் தானே… கேளுப்பா” என்று அதட்டல் போட்டார்…
“தாயி… நீ உள்ள போ…” என்று சிலை போல் நின்றிருந்த ஆராதனாவைப் பார்த்து உள்ளே போகச் சொல்ல… அவளோ அவரின் வார்த்தைகளை காதிலே விழாதவள் போல் இறுகி நின்றிருந்தாள்
”பிரச்சனைய பேசி முடிக்காமல்…. அடிதடினு… உள்ள வாப்பா” என்று செழியனைக் இழுத்துக் கொண்டு உள்ளே போக… மொத்த குடும்பமும் இப்போது ஆராதனா வீட்டினுள்…
உள்ளே இரு குடும்பமும் உறவு முடிச்சின் சிக்கல் முனையில் இருக்க…. கமலினியின் மனதை மாற்ற முடியுமா என்றெல்லாம் வரை விவாதிக்கப்பட்டது…. அதற்கு ஒத்து வராமல் செழியன் முற்றிலும் மறுத்துப் பேச… கார்த்திகேயன் இறுகிக் கொண்டிருந்தான்….
முத்துராமை செழியன் பேசவிடவே இல்லை… அவரிடம் கேட்ட கேள்விகளையும் தனதாக்கிக் கொண்டு பேசியவன் தன் தந்தையை மற்றவர்களையும் நெருங்க விட வில்லை…
கடைசியாக தன் தமக்கைக்கு அவள் விருப்பப்பட்ட வாழ்க்கையைதான் தான் அமைத்துக் கொடுக்கப் போவதாக மொத்த சபையிலும் செழியன் தெளிவாகச் சொல்ல…
மேகலா… தன் கணவரைப் பார்த்தார்… தன் மாமியாரைப் பார்த்தார்… அவர்களின் சம்மதப் பார்வையோடு முன் நின்றவர்… முத்துராம் வீட்டுச் சாவியை… சில பத்திரங்களை அங்கிருந்த பெரியவர்கள் சிலரிடம் கொடுத்தபடி…
“இதெல்லாம் எங்க பொறுப்புல இருந்துச்சு… கொடுத்துருங்க… இனி எங்களுக்கும் அவங்களுக்கும் ஒண்ணும் இல்லை…”
மேகலாவை முறைத்த செழியன்
“என்ன… அத்து விடறீங்களா… இப்படித்தான் எங்க சின்ன மாமாவை ஒதுக்கி வச்சீங்க… இப்போ எங்களையுமா… இந்தக் குடும்பம் இப்படி ஆனதுக்கே நீங்கதான் காரணம்… என்னைக்கு நீங்க இந்த வீட்டுக்கு வந்தீங்களோ அன்னைக்கே சர்வ நாசம் தான்… உடம்பெல்லாம் வெசம்… அமைதியா இருந்துட்டே என் மாமாட்ட இருந்து எல்லாரையும் பிரிச்சு… இப்போ எங்களையுமா“ ஆராதனாவின் தாய் மேகலாவின் மேல் செழியன் கடுஞ்சொற்களை வீச… இப்போது ஆராதனாவின் தந்தை ராஜசேகர்
“என்ன முத்துராம்… உன் பையனுக்கு பேச்செல்லாம் ஒரு மாதிரி வருது… இவ்வளவு நடந்த பிறகும்… என் தங்கச்சி மூஞ்சிக்காக உங்கள விடறேன்… இல்லை ஒரு பையன் இங்க முழுசா போக முடியாது… அந்தக் கழுதையை இழுத்துட்டு வரத் தெரியாம பேசிட்டு இருக்கோம்னு நினைக்கிறியா… “
அவ்வளவுதான் செழியன் பாய்ந்துவிட்டான்
“யாரைப் பார்த்து கழுதைன்றீங்க… மரியாதை கொடுத்து மரியாதை வாங்க பழகிக்கங்க…. இழுத்துட்டு வருவீங்களா… பண்ணுங்க பார்க்கலாம்… எந்தக் காலம் இது… இன்னும் உங்க காலம்னு நினைக்கிறீங்களா… குடும்பத்துக்குள்ள புகுந்து நாட்டாமை பண்றதுக்கு… என்னை மீறி என் அக்கா மேல கை வைங்க பாருங்க பார்க்கலாம்… மாமானாவது மச்சானாவது…” செழியன் ராஜ சேகரையும் விட்டு வைக்கவில்லை
கார்த்திக்கால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை…
“ஓ… பார்த்துருவோம்டா…. எவன் அவ கழுத்துல கைய வைக்கிறானு…. ஒண்ணு நான் கட்டின தாலி இருக்கனும்… இல்ல… வேறு எவன் கட்ற தாலியையும் வாங்க அந்த கழுத்து இருக்கக் கூடாது… அதுக்கு முன்னாடி தம்பின்னு சொல்லிட்டு அக்காக்கு மாமா வேலை பார்த்துட்டு வந்து நிக்குற நீ இருக்கக் கூடாதுடா…” என்று சுற்றும் முற்றும் பார்த்தவன்..
முற்றத்தை சுற்றி இருந்த தாழ்வாரத்தில் வைத்திருந்த அருவாளில் கண் பட… சட்டென்று அதை உருவியவன் செழியனை நோக்கிப் போக…. அத்தனை பேரும் பதற ஆரம்பித்திருக்க… ஆராதனாதான் சுதாரித்து கார்த்திக்கிடமிருந்து அருவாளைப் பறிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தாள்….
என்ன போராடியும் தன் அண்ணனிடமிருந்து அதைப் பறிக்க முடியவில்லை… அந்தப் போராட்டத்தில் அவள் கையில் இரத்தம் கொட்ட ஆரம்பிக்க… ஆராதனாவோ வலி பொறுக்காமல் பல்லைக் கடித்தாள் தான் இருந்தும்…. அவள் அண்ணனிடம் விடாமல் போராடிக் கொண்டிருந்தாள்..…
அது செழியனின் கண்களில் பட்டும் விட….
“விடுடி அதை…. உன் அண்ணன் என்ன பண்ணிருவான்னு பார்ப்போம்” என்று அந்த தெருவே அதிரும்படி கழுத்து நரம்பு புடைக்க கத்திய செழியன்… ஆராதனாவை இழுத்து தள்ளிவிட… ஆராதனாவோ கீழே விழுந்து மயங்கி இருந்தாள்…
இப்போது கார்த்திக் செழியனை நோக்கி வர… இன்னும் இவர்கள் இங்கே இருந்தால் ஏதோ ஒரு கொலைதான் விழும் என்ற அளவுக்கு நிலைமை மாறி இருக்க… செழியனையும் முத்துராமையும் கூடியிருந்த கூட்டம் பாதுகாப்பாக அந்த வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்திருக்க….
“டேய் என்னை விடுங்கடா… தனாவைப் பாருங்கடா… அவ மயங்கி விழுந்துட்டாடா” என்ற செழியனின் வார்த்தைகள் எல்லாம் காற்றில் பறந்திருந்தது…
ஒரு கூட்டம் முத்துராமையும்… செழியனையும் சென்னைக்கு அனுப்ப முயற்சித்துக் கொண்டிருக்க….
இன்னொரு கூட்டமோ கார்த்திகேயனை பிடித்து இழுத்து அறையில் அடைத்தும் வைத்திருக்க… அவனோ அங்கு அறைக் கதவைத் திறக்க அதை உடைக்கும் முயற்சியில் தன் கோபத்தை எல்லாம் காட்டிக் கொண்டிருந்தான் வெறி கொண்ட வேங்கை போல…
இன்னொரு புறம் நரேன் காரில் வைத்து ஆராதனாவை மருத்துவமனைக்கு சில பேர் கூட்டிச் செல்ல… அங்கு யாராலும் கவனிக்கப்படாத ஒரு ஜீவனான செல்வி… கார்த்திக்கின் அறையின் அருகிலேயே… அவனின் ஒவ்வொரு புலம்பலையும்… வேதனைகளையும்… அதில் வெளிப்பட்ட அவனின் சகிக்க முடியாத வார்த்தைகளையும்… தன் மனதோடு தாங்க ஆரம்பித்திருந்தாள்…
Comments