top of page
Writer's picturePraveena Vijay

சந்திக்க வருவாயோ?-62 Part 1

அத்தியாயம் 62 Pre Final2 -1:

அடுத்த ஆறு மாதங்களுக்குப் பின்…

சந்தோஷ் – மிருணாளினி வாரிசான ‘சிந்தியா’ விற்கு காதுகுத்து விழா ஆம்… டெல்லி திரும்பியபின் சந்தோஷ் மிருணாளினி இருவருமாக பேசி முடிவு செய்து தங்கள் பெற்றோரின் சம்மதத்தோடு பெண் குழந்தையை தத்தெடுத்து அக்குழந்தைக்கு ‘சிந்தியா’ என்ற நாம கரணமும் சூட்டி இருக்க.. அக்குழந்தைக்குத்தான் காதணி விழா… அது மட்டுமல்லாமல் கூடவே வசந்தியின் கிராமத்தில் திருவிழா வேறு அந்தச் சமயத்தில் வந்து சேர…

மொத்த குடும்பமும் வெகு நாட்களுக்குப் பிறகு சந்தோஷமாக ஒன்று கூடி இருந்தனர்… அதிலும் காரில் இல்லாமல் அவர்கள் கிராமத்திற்கு ட்ரெயினில் கிளம்புவதாக முடிவு செய்திருந்தனர்… வெகு நாட்களுக்குப் பிறகு

சந்தியா, காதம்பரி, திவாகர் குடும்பம்… பரிமளா-மணிகண்டன், வசந்தி-கணேசன், சுகுமார்-யசோதா என அந்த ரெயில்வே ஸ்டேஷன் ஒரே களை கட்டி இருந்தது….

நர்மதா- திவாகர் மோகனாவின் ஒரே பெண் வாரிசு… அவளுக்கு முதல் ட்ரெயின் பயணம் என்பதால் உற்சாகமாக வலம் வந்து கொண்டிருந்தாள்….

”நமு… சிந்தியாவைப் பிடிச்சுக்கோ” என மிருணாளினி நர்மதாவிற்கு எச்சரிக்கை செய்து கொண்டிருக்கும் போதே….

வழக்கம் போல அங்கு விற்க வரும் சுண்டல், கடலை, மாங்கா விற்கும் தள்ளும் வண்டி வர… நர்மதா திவாகரிடம் போய் நின்றிருந்தாள்… திவாகர் அவளுக்கு மட்டுமின்றி மொத்த குடும்பத்துக்குமே வாங்கிக் கொடுக்க… நர்மதா கையில் இருந்த கடலையை சிந்தியாவுக்கு ஊட்டி விடப் போக…

மிருணாளினியோ அதைத் தடுத்தபடியே… ”இல்லை நர்மதா… பாப்பாக்கு இந்த மாதிரி ஃபுட்லாம் ஒத்துக்காது… வேண்டாமே… எனக்கும் வேண்டாம்“ என்று பட்டென்று சொல்ல

நர்மதாவின் முகம் போன போக்கைப் பார்த்து… அருகில் இருந்த சந்தியாவுக்கு இலேசாக புன்முறுவல் வர…

“நமுக்குட்டி… சித்திக்கு கொடு…. சித்தியோட ஷேரையும் ப்ளஸ் மிருணா அத்தை ஷேரையும்” என்று அவளிடமிருந்து தனக்கான பாக்கெட்டுகளை வாங்க…

மிருணாளினியோ

“என்னோட ஷேர் என்னோட அத்தைக்கு ” என்று தனக்கானதை வாங்கி தன் அத்தையிடம் கொடுக்க..

சந்தியாவுக்கு இன்னும் முகத்தில் பெரிதாக புன்னகை வந்திருக்க… கடலையைச் சாப்பிட்டவளின் கையில் வைத்திருந்த பொட்டலம் மடித்த பேப்பரில் அவள் பார்த்த செய்தி… அவளை இழுக்க… வேகமாக தன் குடும்ப உறுப்பினர்களை விட்டு தனியே வந்து அங்கிருந்த நடை மேடையில் போடப்பட்டிருந்த அமரும் மேடையில் வந்து அமர்ந்தாள்…

கடலையைக் கையில் கொட்டியபடி… அந்த பேப்பரில் இருந்த செய்தியைப் படிக்க ஆரம்பித்தாள்

சிறு அளவிலான பெட்டி செய்தி அது… அதீனா வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டபின் வந்திருந்த செய்தி அது… கரண் அதீனாவால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும்… அதீனா தனக்குத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பற்றியும் குறித்த உண்மை நிலவரம் வேண்டி மக்கள் மன்றம் ஒன்று வழக்கு பதிவு செய்திருக்க… அதைத் தொடர்ந்து அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டதாக அந்த செய்தி இருக்க… கண்களை அதில் ஓட்டியபடியே சில நேரம் இருந்தவளுக்கு..

அதீனாவின் ஞாபகம் வர… அவளையுமறியாமல் அவளது கண்கள் தந்தையையும் தாயையும் பார்த்தது… இன்னும் அதே தாய் தந்தைதான்… தாமரை இலைத் தண்ணீர் உறவுதான் அவர்கள் உறவு…. ஆனால் இப்போது இந்த இருவரின் தனித் தனி உலகம் சிந்தியா என்ற இன்னொரு உலகத்தால் இணைக்கப்பட்டிருந்தது

சிந்தியா என்று அதீனா ஞாபகத்தால் நாமகரணம் சூட்டப்பட்ட்ட பெண்… தந்தை இவ்வளவு பாசம் காட்டுவாரா… சந்தியாவுக்கே வியப்புதான்… தனக்கு கிடைக்காத… வேண்டுமென்றே மறுக்கப்பட்ட தந்தை பாசத்திற்கு ஏனோ இவளும் அதன் பிறகு ஆசைப்படவில்லை…. அதற்காக ஏங்கவும் இல்லை… அவரும் இவளுக்கு அந்தப் பாசத்தை கொடுக்க நினைக்கவும் இல்லை… இப்போதைக்கு அவரின் உலகம் குட்டி சிந்தியா மட்டுமே… அவளைப் பற்றிப் பேச யார் கிடைத்தாலும் அவரது உலகத்தோடு இணைத்துக் கொள்வார்… இப்போது அவரது மனைவி மட்டுமே சிந்தியாவைப் பற்றி பேச கிடைத்த ஆள் என்பதால்… வசந்தி-கணேசன், கணவன் மனைவியாக தங்கள் பிள்ளைகளிடம் காட்ட மறந்த பாச பந்தத்தை தாத்தா-பாட்டியாக தங்கள் பேத்திக்கு காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்…

சந்தியாவுக்கு இப்போது ஒரு சந்தேகம் வந்திருந்தது….

வேறு ஒன்றுமல்ல… மிருணாளினி – சந்தோஷுக்கு அடுத்த குழந்தை பிறந்தால்… தன் தாத்தா பாசத்தை அந்தக் குழந்தையிடம் காட்டுவாரா… இல்லை என் பாசம் எனக்குக் கிடைத்த முதல் பேரக் குழந்தைக்கு மட்டும் என மறுத்து விடுவாரா… இதழ்கள் ஏளனத்தில் வளைந்தன…

அதே நேரம்

மிருணாளினி- சந்தோஷுக்கு குழந்தையா என்று தன் சகோதரனின் வாழ்க்கை குறித்து மனம் யோசித்த போதே… கூ வென்ற ட்ரெயினின் ஓசை வெகு அருகில் கேட்க…

அதே நேரம் நர்மதா ”சந்தியா சித்தி ட்ரெயின் வந்துருச்சு” என்று அழைக்க…

”வருகிறேன்” கை காட்டியபடி எழுந்தவளின் கண்கள் எதிர்புறத்தை வெறிக்க… கையில் இருந்த கடலை மடித்த காகிதத்தை கசக்கி தூக்கிப் போட்டவளாக… தன் குடும்பத்தை நோக்கி போக… ட்ரெயினும் அங்கு வந்திருந்ததது…

வழக்கமாக சந்தியா எப்போதுமே பயணியர் லிஸ்ட்டை சரிபார்க்கும் வழக்கம் உடையவள் என்பதால்… அந்த வழக்கம் இப்போதும் வந்திருக்க… வரிசையாக விரல் வைத்து சரிபார்த்தபடியே வந்தவளின் விரல்கள்… “சந்தியா ராகவ ரகு ராம்” என்ற இடத்தில் வந்து நிற்க… விரல்கள் இவளது பெயருக்கு பின் இருந்த ’ராகவ ரகு ராம்’ என்ற பெயரில் வேலை நிறுத்தம் செய்ய…

அந்த பெரிய லிஸ்ட்டில்… ராகவரகுராம் பெயர் தனித்து இல்லை… இவளோடு மட்டுமே சேர்ந்திருக்க.. கவனம் விரலில் அணிந்திருந்த மோதிரத்தை நோக்கிச் சென்றது….

மோதிர விரலில் இருந்த மோதிரத்தில் மூன்று ‘R’ களை சூழ்ந்த ‘S’ என்ற எழுத்திருக்க… ராகவ் நிச்சயதார்த்தம் அன்று இவளுக்கு கொடுப்பதற்காக வாங்கி வைத்திருந்தது என்று சிவாவிடம் இருந்தது… யாரிடம் சேர வேண்டுமோ… அவளிடமே வந்து சேர்ந்திருந்தது…

“சந்தியா லக்கேஜைக் கொடு…” என்று சந்தோஷ் கை நீட்ட அவனிடம் கொடுத்தபடி… ட்ரெயினின் படிகளில் கால் வைத்தவளின் கண்கள் இப்போதும் நடைமேடையை ஏக்கமாக பார்த்தபடிதான் இருந்தது…. கணவன் வரமாட்டான் என்று தெரிந்திருந்த போதும்…

ட்ரெயினும் மெதுவாக கிளம்ப ஆரம்பிக்க… மொத்த குடும்பமும் அவரவர்க்கான இருக்கையில் உட்கார ஆயத்தமாகி இருக்க சந்தியாவோ வாசற்படியிலேயே நின்றபடியே பார்த்தபடி இருக்க… அதே நேரம் ராகவ் அவளை ஏமாற்றாமல் வெகு தூரத்தில் அந்த ட்ரெயினை பிடிப்பதற்காக ஓடி வந்து கொண்டிருக்க… அதுவரை இருந்த சந்தியா அடக்கி வைத்திருந்த மொத்த குரலும் ஒரே நேரத்தில் ஒலித்தது… அத்தனை சந்தோஷத்தில்…

“ரகு… ரகு… நான் இங்க இருக்கேன்” என்று இவள் இங்கிருந்தே கை காட்டியபடி உற்சாகமாக கை அழைக்க… அவளுக்கிருந்த சந்தோஷ வெள்ளத்தில் தன்னையுமறியாமல் கடைசிப்படியில் கால்களை வைத்தவள்… தன்னை மீறித் தடுமாற… வேகமாக தன்னை நிலைப்படுத்திக் கொள்ள போராடியவளை… வேகமாக உள்ளிருந்து ஒரு கை இழுக்க… நடுத்தர வயது பெரியவர் அவர்…

“ஏம்மா… கொஞ்சம் தவறி இருந்தால் கீழ விழுந்திருப்ப…. ” என்ற திட்டியபடி அவளை உள்ளே இழுத்தவரிடம்

“இல்லை…இந்தக் கைல பிடிச்சுட்டுத்தான் இருந்தேன்..“ என்று அவருக்கு முணங்கலாக சந்தியா சொன்ன போதே…

“என்ன பிடிச்சுட்டு இருந்தியோ… உள்ள போம்மா” என்று சொல்லி விட்டு அவர் போக… அதெல்லாம் கேட்டு விட்டால் அவள் ’சந்தியா ராகவ ரகு ராம்’ ஆவாளா.. இப்போது மீண்டும் வாசலில் வந்து நின்று மீண்டும் எட்டிப்பார்க்க… அங்கு ராகவ் ஓடி வந்ததற்கான தடயமே இல்லாமல் இருக்க… சில நிமிடங்கள் அங்கிருந்தபடியே வேடிக்கை பார்த்தபடி வந்து கொண்டிருக்க… திவாகர் வந்து அழைக்க… வேறு வழியின்றி உள்ளே வந்தாள் சந்தியா…

சந்தியா- நர்மதா சந்தோஷ்- மிருணாளி , காதம்பரி-முரளிக்கு என ஒரே கோச்.. திவாகர்-மோகனா மற்ற பெரியவர்களுக்கெல்லாம் அடுத்தடுத்த கம்பார்ட்மெண்ட்டில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்க… ஒரே ஜாலி அரட்டை என அங்கு போய்க் கொண்டிருக்க…

நர்மதா திடீரென

“எல்லாரும் இருங்க… சந்தியா சித்தி பாட்டு பாடறேன்னு சொல்லி இருக்காங்க… சோ இப்போ அவங்க பாட்டு பாடப் போறாங்க… ”

திவாகர் சிரித்தபடி… நர்மதாவிடம்

“உங்க சித்தி பாட்டு பாடப்போறாளா… இந்த ஒப்பந்தம் எப்போ நடந்தது “ என்று திவாகர் கேட்க…

”இப்போ ஜஸ்ட் நவ்… நான் ரொம்ப நாளா கேட்டுட்டே இருந்தேன்… இப்போ பாடறேன்னு சொல்லிட்டாங்க..” என்று சந்தோஷமாகச் சொல்ல…

“செப்பி… உண்மையாவா… இவ கிட்ட என்ன டீல் போட்ட… சும்மாலாம் டீல் போட மாட்டியே” என்று திவாகர் பயந்தவன் போலக் கேட்க…

“விரைவில் தெரியும் திவா மாமா” என்று பெரிதாக சந்தியா புன்னகைக்க…. திவாகர் அவள் புன்னகையில் உண்மையிலேயே பயந்தவனாக… சந்தியா அருகில் போய் அமர்ந்தபடி…

அப்பாவியாகப் பார்வை பார்க்க…

“கெஸ் பண்ணிட்டீங்களா திவா மாமா… உன் பொண்ணை என்கிட்ட தள்ளிட்டு பொண்டாட்டிகிட்ட லவ்ஸ் விடற ப்ளான்லாம் சந்தியா கட் பண்ணிட்டா…” என்று அவன் காதுக்குள் சொல்ல…

காதம்பரியும் இப்போது சந்தியாவின் அருகில் வந்து அமர்ந்திருந்தாள்… சந்தியா அறியாதவளா அவள்…

“ஏன் சந்தியா, திவா மாமா மேல இவ்ளோ கொலை வெறி…” என்ற போதே…

”திவா மாமா மேல அவ்ளோ பாசமா மேடமுக்கு… திவா மாமாக்கு முரளி மாமாவை துணைக்கு அனுப்பவா காது பேபி” என்ற போதே காதம்பரி… அமைதி ஆகி விட்டிருந்தாள் இப்போது…

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே… நர்மதா சந்தியாவைப் பாடச் சொல்லி வற்புறுத்த…

”ஒகே… நான் பாடுவேன்… ஃபர்ஸ்ட்… 4 லைன்ஸ்… மத்த கோரஸ்லாம் நீங்க பாடுங்க… அப்புறம்… இன்னொரு விசயம்.. இந்த சாங்…. என் டிர்ப்பிள் ஆர்க்காக மட்டுமே… வேற யார்க்காகவும் இல்லை…” என்ற போதே…

”ஓஓஓஓஓஓஒ” என்று இவர்கள் மொத்தமாக கத்த ஆரம்பிக்கும் போதே… சந்தியா பாட ஆரம்பித்தாள்…

ஆரிராரோ ஆரிராரோ ஆனந்தம் தந்தாயே

தோள்களிலே தாங்கி என்னை அன்பினில் வென்றாயே

நேசத்திலே உள்ள சுகம் வேறேதும் தாராதே

பாசத்திலே வாழ்ந்த மனம் வேறெங்கும் போகாதே

வேறெங்கும் போகாதே

ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

திகு திகு தினத்தான் திகு திகு தினத்தான் திகு தின தின தின தான்

ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே

பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே

கிளிகளின் கூட்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே

அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே

கனிகள் தித்திப்பா கவிதை தித்திப்பா அது அன்பைவிட தித்திப்பா

கணேசன் மகள் பாடுவதையே பார்த்துக் கொண்டிருக்க… சந்தியா குற்ற உணர்ச்சியில் தலை குனிந்தாள்… இவளைப் பாட வைக்க எவ்வளவோ முயன்றிருக்கின்றார்… ஒரு வேளை இவள் பாடி இருந்திருந்தால் சிறிதளவு பாசமாவது தனக்கு கிடைத்திருக்குமோ… தெரியவில்லை…

சற்று நேரத்தில் டிடிஆர் வர… சந்தியா தனக்கான அடையாள அட்டையைக் காட்டியபடி… தனிமையை நாட ஆரம்பித்தவளாக… மொபைலை எடுத்துப் பார்க்க… அதில் புதிதாக அழைப்போ… மெசேஜோ வரவில்லை… எரிச்சலாக மொபைலைப் பார்த்தவளுக்கு…. கோபத்தில் ஏதேதோ தோன்ற… இருந்தும் அதற்கு காரணமானவனைத் திட்ட முடியாமல் போக… சந்தியாவும் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க… நினைவுகள் பின்னோக்கிச் சென்றது கணவனை நினைத்து….

அன்று…

”என்னை விடு… ரகு கிட்ட போகணும்னா… நான் அவனைப் பார்க்கனும்… ப்ளீஸ்” என்று சந்தோஷிடம் கை கூப்பி அழுதவளாக அப்படியே அவன் காலடியில் மடங்கி அமர.… வெங்கட்… சந்தியாவை இழுத்துக் கொண்டு ராகவ் அருகில் போக… அங்கிருந்த மருத்துவக் குழு… வெங்கட்டையும் சந்தியாவையும் திட்ட ஆரம்பித்து இருக்க…

“சந்தியா… அவன்கிட்ட பேசு… உனக்கு ஏதோ ஆகிருச்சோன்னுதான்… அவன் டிரை பண்ண மாட்டேங்கிறான்…. நீ பேசு… அவன் பக்கத்தில இருக்கேனு அவனுக்கு காட்டும்மா” என்று சொல்ல… சந்தியாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை… கண்களில் கண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்க… வாயில் இருந்து ரகு என்ற சொல் மட்டுமே வந்து கொண்டிருந்தது…

“ஏன் ரகு… இப்டிலாம் பண்ற… என்னை விட்டுட்டு போயிறாத ரகு…“ மனதுக்குள் மட்டுமே அவளால் கதற முடிந்தது…

”நீன்னு நெனச்சு அதீனாவை கை நீட்டி கூப்பிட்டான் சந்தியா… நீ வந்துட்டேன்னு அவன் கையைப் பிடிச்சு சொல்லு சந்தியா….” சந்தியாவிடம் வெங்கட் சொல்லச் சொல்ல… சந்தியா வெறித்தாள் இப்போது கணவனை…

“கைரேகையில என்னை உணர வைக்கிறேன்… நான் உன்னை ஃபீல் பண்றேன் சந்தியா…” அவன் பேசிய பேச்சுக்கள் எல்லாம் இப்போது ஞாபகம் வர…

“என்னென்னவோ பேசினானே… இப்படி அல்ப ஆயுளில் விட்டு விட்டு போகத்தானா என்னை…. இல்லை… இருக்காது…. என்னிடம் என் கணவன் திரும்பி வருவானா…” சற்று முன் ஒருத்தி சொல்லிவிட்டுப் போனாளே…. நம்பிக்கை … அது என் கணவனைக் காப்பாற்றூமா…

உதடுகளை அழுத்திக் கடித்தவளின் கரங்கள்… அவளையுமறியாமல் கணவனின் இடது கரங்களை நடுங்கியபடி பிடிக்க ஆரம்பிக்க... ராகவ் இப்போது பெரிய மூச்சை இழுத்து விட்டு அமைதியாக…. அதைப் பார்த்த சந்தியாவுக்கு அதற்கு மேல் ராகவ்வைப் பார்க்க தைரியம் இல்லாமல்… வேகமாக வெங்கட்டை திரும்பிப் பார்க்க… அவன் கண்களும்… ராகவ்வைப் பார்த்து வெறித்தபடி நிராசையாக நின்று விட்டிருக்க…

“ரகு… ஏன் அமைதி ஆகிட்டாரு… “ என்று… அவனைப் பார்த்தபடியே ராகவ்வை நோக்கி கைகள் நீட்டியபடி … கண்கள் சொருக ஆரம்பிக்க… அப்படியே வெங்கட் மேல் சாய ஆரம்பித்திருக்க

“சந்தியா பேசுங்க… உங்க ஹஸ்பெண்டோட பல்ஸ் நார்மலாகுது… பேசுங்க… நீங்க அவர்கிட்ட… அவர் பக்கத்தில இருக்கிற ஃபீல் கொடுங்க… “ என்று அங்கிருந்த தலைமை மருத்துவர் சொல்ல…. சந்தியாவுக்கு சந்தோஷத்தில் ஒரு நிமிடம் நின்று துடிக்க… எங்கிருந்து அத்தனை பலம் வந்ததோ தெரியவில்லை…

அவனது கைகளை தனது கரங்களுக்குள் கொண்டு வந்தவளாக…

“என்னை சகிம்மா கூப்பிடுறா… சகின்னு நீ கூப்பிடற ஒரு வார்த்தை எனக்கு போது ரகு… உன்கிட்ட என்னடா சொன்னேன்,,, “ என ஆரம்பித்தவள்…

“எனக்குத் தெரியும்… நீ எப்போதுமே என் தேவை எதுன்னு என்கிட்ட கேட்காமலேயே செய்வ… எனக்கு நீ மட்டும் தான் தேவைனு உனக்கு தெரியும்டா… நீ இல்லாமல் நான் இந்த உலகத்தில இருக்க மாட்டேன்னு உனக்கு தெரியும் தானே வந்திருடா” என்று அவன் வாய்வார்த்தை இன்றி அவன் கரங்களைப் பிடித்தபடி மனதோடு பேச ஆரம்பிக்க…

“ச…. கி….” என்ற வார்த்தை மட்டுமே அவள் காதுகளில் விழ…. நிமிர்ந்து பார்க்க…. இப்போதும் அவன் கண் திறக்க வில்லை… ஆனால் வாய் திறந்து சொல்ல… கண்கள் முழுக்க நீர் நிரம்ப… இமைகள் இமைக்க மறந்து அவனையே பார்த்தி்ருக்க…

அங்கிருந்த மருத்துவர்… செவிலியிடம்…

“ஒகே… ஹாஃப் அன் ஹவர் அப்சர்வேஷன்ல இருக்கட்டும்… அவங்க வைஃப் அவர் கூடவே இருக்கட்டும்” என்று சொன்னவர்…

“நத்திங்க் டூ வொரி… ஹி இஸ் கெட்டிங் பேக் டூ நார்மல்…” என்றபடி… அங்கிருந்த செவிலியரிடம்… மீண்டும் வருவதாக கூறிச் சென்றவர்… வெங்கட்டிடம்… ராகவ் அபாயக்கட்டத்தை தாண்டி விட்டதாகச் சொல்ல… சந்தியாவின் கண்ணீர் கரையை உடைத்து… கடகடவென்று வெளியே வர ஆரம்பிக்க… அது அத்தனையும் கணவனின் முகம் கழுத்து என அவனை நனைக்க ஆரம்பிக்க…. நிரஞ்சனாவும் வந்திருக்க…. எல்லாம் முடிந்து விட்டது… இனி கவலையில்லை என்பது போல அவள் தோள்களை பற்ற…. நிரஞ்சனாவின் இடுப்பைப் பற்றிக் கொண்டு அவளை இறுக அணைத்தபடி குலுங்கி அழ ஆரம்பித்தவளிடம்…

”பேஷண்ட் முன்னாடி… இப்படி அழக் கூடாது” என்று அங்கிருந்த நர்ஸ் சொல்ல… சிவாவும் அங்கு வர… வெங்கட்டும் நிரஞ்சனாவும்… வெளியில் வந்து மற்றவர்களிடம் ராகவ் அபாயக்கட்டத்தை தாண்டி விட்டான் என்று சொல்ல… அனைவருக்கும் மீண்டும் உயிர் வர….

மிருணாளினி ஓடோடி வந்தாள்… தன் அண்ணனிடம்… சந்தியா வேகமாக அவளை இழுத்து… தன் கணவன் முன் நிறுத்தியவள்…

“உன் குட்டிம்மா வந்திருக்கா ரகு… உனக்கு மிருணான்னா ரொம்ப பிடிக்கும் தானே ரகு… பேசு ரகு… மாமா அத்தை வந்தாங்கன்னா… நான் என்ன பதில் சொல்வேன்… அவங்க பிள்ளைய என்னாலதான் திருப்பிக் கொடுக்க முடியும்னு என்கிட்ட வந்து கெஞ்சுனாங்க… இப்டி அவங்க பிள்ளைய அடி வேரோடு சாய்த்து போடுவேன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருந்தா.. அன்னைக்கு வராமலே போயிருந்துக்காலாம்…”

“பேசு மிருணா… அவர பேசச் சொல்லு மிருணா… நீ சொன்னால் அவர் கேட்பாரு… நீ சந்தோஷ் கூட எங்க வீட்ல இருக்கேன்றது அவருக்கு எவ்வளவு நிம்மதி தெரியுமா… நான் தான் அவரோட நிம்மதியைக் குழி தோண்டி புதைத்தவ…” என்று புலம்பிக் கொண்டிருக்க… அடுத்து வசந்தியும் வந்திருக்க..

சந்தியா வசந்தியிடம் ஏதும் பேசவில்லை…. மாறாக ராகவ்விடம் திரும்பியவள்

“என் அம்மா வந்திருக்காங்கடா.. உனக்கு அவங்ககிட்ட பேசுனா பிடிக்காதுதானே… உன்னை விட அவங்கதான் எனக்கு முக்கியமா அடிக்கடி கேட்பியேடா… நீ இல்லேன்னா.. எனக்கு எல்லாமே சூனியம்டா… அதைக் காட்டத்தான் இப்டிலாம் நடிக்கிறேன்னு சொல்லு ரகு….” மகள் சொன்ன போதே வசந்தியால் அங்கு நிற்க முடியவில்லை… தன் மகளின் புலம்பல்கள் கேட்க முடியாமல் ஒடுங்கி அமர்ந்திருந்தார் வசந்தி…

இப்படி என் மகளைக் காண்பதற்காகத்தான்… இவ்வளவு போராட்டமா… வசந்திக்கு மகளைக் காணச் சகிக்க வில்லை… சந்தியா பெரிதாக எந்த ஒரு கவலையையும் தன்னிடம் காட்ட மாட்டாளே… என் முகம் வாடிவிடும் என்று நிமிடத்தில் தன்னையும் மாற்றி அவளும் மாறி விடுவாளே… அப்படிப்பட்ட பெண்ணை இப்படி நிற்க வைத்து விட்டாயே…என்ன தண்டனைனாலும் எனக்கு கொடு ஆண்டவா… என் பொண்ணுக்கு மட்டும் கொடுத்துடாத” இதுதான் கடந்த சில மணி நேரங்களாக வசந்தி பிரார்த்திக்குக் கொண்டிருப்பது…

நேரமும் மெல்ல மெல்ல கடந்திருந்தது… ராகவ்வின் நிலமை மெல்ல பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்க… ஆனால் மயக்க நிலையில் இருந்து முழுவதுமாக வர முடியவில்லை…

மருத்துவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம்… ஓரளவு பதில் சொல்ல ஆரம்பித்திர்க்க… சந்தியாவையும் அவனிடம் கேள்விகள் கேட்க வைக்க…

‘என்ன கேட்பது என்றே தெரியவில்லை… சந்தியாவுக்கு”

“ரகு” என்று மட்டும் சொல்லி்யவளுக்கு வார்த்தைகள் அதற்கு மேல் வரவில்லை… அவன் கையை இறுக்கமாகப் பிடித்திருக்க… கேட்ட அந்த வார்த்தைகள் மயக்கத்தில் இருந்தவனை ஒரே அடியாக தட்டி எழுப்பி இருக்க….

ராகவ்வுக்கு தன் சகி தன்னைக் கூப்பிட்ட குரலுக்கு பதில் சொல்ல தோண்றவில்லை… மாறாக தன் சகியை தன் கண்களுக்குள் நிரப்ப ஆசைப்பட… பிரயத்தணம் செய்தான் தன்னவளை மீண்டும் கண் பார்வையில் நிறுத்த…

தன்னவள் தன் அருகில் இருக்கிறாளா… நம்பவே முடியவில்லை… தனக்கு என்ன ஆயிற்று… தான் எங்கிருக்கின்றோம்… இதைப் பற்றி எல்லாம் அவன் மூளை யோசிக்க ஆரம்பிக்காமல்.. இதோ தன்னருகில் தன்னவளின் குரல்… அதுவும் ரகு என்று கசிந்தழைக்கும் குரல்…. கண்களைத் திறந்து பார்க்க நினைத்தாலும் அது அவனால் முடியாமல் போக… தன் இடது கையில் பொதிந்து வைத்திருந்த தன்னவளின் கரங்களின் இறுக்கம்… அவனுக்கு அவளது பதிவை மட்டுமின்றி… இருப்பை மட்டுமின்றி… அந்த கரங்களில் இருந்த நடுக்கம் அவளது கலக்கத்தையும் வேதனையையும் அழகாக கடத்தி இருக்க… மனைவியின் கலக்கத்தை அவன் என்று தாங்கியிருக்கின்றான்… தன்னவளின் கரங்களின் விரவியிருந்த மெல்லிய நடுக்கம் உணர்ந்த மறு வினாடி… அவனுக்குள் எங்கிருந்து சக்தி வந்ததோ… மெல்ல கண்களைத் திறக்க ஆரம்பிக்க… இப்போது அந்த இமைகளுக்கு அதற்கு மேல் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை… இதயத்தின் கதவுகளையே அவனவள் சட்டென்று உடைத்து வந்திருக்க… கேவலம் இமைக்கதவுகளுக்கு அதை விட அதிகாரம் அவள் மனைவி கொடுத்து விடுவாளோ… அவன் இமைகள் அவள் மனைவிக்கு பயந்து… சட்டென்று திறக்க…

ராகவரகுராமனின் விழிகள் தன் முன் நின்றிருந்த தன் மனைவியை மொத்தமாக தனக்குள் கொண்டு வந்திருக்க… அதே நேரம்… மனைவியின் முகம் அதில் இருந்த காயங்கள்.. இரத்த வரிகள்… இதயத்தை கசக்கிப் பிழிய… தன் சகியின் நிலையைப் பார்க்க பிடிக்காமல் மீண்டும் கண்களை மூடி இருந்தான் ராகவ்…

தான் பிடித்திருந்த தன்னவனின் கரங்களின் இறுக்கம் கூடுவதைப் போல இருக்க… சந்தியாவுக்குள் நெஞ்சுக்கூட்டில்… இரத்த ஓட்டம் சில்லென்று உறைந்து நிற்க…. வேகமாக, சந்தோஷமாக அவனின் கண்களைப் பார்க்க… அதில் அலைபாய்ந்த கருவிழிகள்.. மனதுக்குள் சந்தோஷ பூமாரியைப் பொழிய வைக்க…

தன் மொத்த காதலையும்… ஏக்கத்தையும்.. கலக்கத்தையும்… சந்தோஷத்தையும்… துடித்த தன் இதழ்களின் வழியை… அவனின் மூடியிருந்த இமைகளில் பதிவு செய்ய…

கணவன் கை ரேகையை மட்டுமல்ல… போல இவளுக்குத் தெரியாமலே… கள்ளத்தனமாக இவன் இதழ் ரேகை கலையையும் தனக்குள் உருப் போட்டு வைத்திருப்பான்… தன்னவளின் இதழ் ரேகையை உணர்ந்த கணம் கண்களில் இருந்து பக்கவாட்டில் கண்ணீர் வழிய…

“ரகு… என்னைக் கண்ணத் திறந்து பாரு ரகு” அவள் இதழ் சொன்னபோதே… அவள் கண்களில் வழிந்த கண்ணீர் கணவனின் கண்ணீரோடு கலந்து… அவன் பாதையை அடைய…

காதல் என்ற கடலில் ஏற்கனவே சங்கமித்திருந்த அந்த உள்ளங்களுக்கு… இனியும் கலக்கமா.. வருத்தமா.. துயரமா…

தன்னைப் பெற்றவர்களினால் தனக்கேற்பட்ட சாபம் தீர்க்க…. தன்னையே சிலுவையில் சுமந்து தன் வாழ்க்கையை சந்தியா காப்பாற்றிக் கொண்டாளா… இல்லை தன்னவளின் பாவம் எல்லாம் தீர்க்க… தன் இரத்தங்களைச் சிந்தி தன்னவளைத் தன்னிடம் தக்க வைத்துக் கொண்டானோ… இல்லை இருவரும் ஒருவருக்கொருவர் செய்த தியாகங்களா… அந்த இளம் ஜோடிகளின் இதயம் அதனதன் இணையை மீண்டும் துடிக்க வைக்க போராடிய போராட்டங்கள் முடிவுக்கு வந்திருக்க… ராகவ் மெல்ல கண்களைத் திறக்க… மிக மிக வெகு அருகிலே அவள் சகியின் முகம்…

எந்த முகத்தை தொலைவில் இருந்தாவது கண் கொண்டு பார்த்து விடுவோம் என்று தன் உயிரைப் பணயம் வைத்து அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்தானோ… இதோ அந்த முகம் மிக அருகில்…

“சகி” உதடுகள் பிரிந்தன.. தன்னவளின் பெயர் சொல்ல ..

கண்களோ… இமை படபடக்க்கும் அந்த ஷண நேரத்தில் தன்னவளை காண முடியாதோ என இமைக்கவும் மறந்திருக்க…

சந்தியாவின் கண்களோ தன் விழிநீரை… தன்னவன் மீண்டும் தன்னைக் கண்கொண்டு பார்த்திருந்த கண்களுக்குள் அருவியாக பொழிந்திருக்க…

ராகவ் அழவில்லை இப்போது… மாறாக அவனது கண்கள் தன்னவளின் கண்ணீரை தன் கண் வழியே வெளியேற்றிக் கொண்டிருக்க… ஒரு கட்டத்தில் தன்னவளின் விழிநீரே… அவளை இமைக்காது பார்த்திருந்த பார்வைக்கு தடையாக இருக்க..

“ஓய்… டேமைக் கொஞ்சமா திறந்து விடுடி… என் பொண்டாட்டி முகத்தைப் பார்க்க முடியலை” என்று கேலியோட சொன்னவனாக இதழைப் பெரிதாக்கினான் புன்னகைக்கும் விதமாக… இருந்தும் மனைவியின் முகத்தைப் பார்த்து மனம் சுணங்கியதுதான்.. அவள் சிறையில் பலவிதமான வேதனைகளைத் தாங்கி வந்திருக்கின்றாள்.. என்று பார்த்த மாத்திரத்திலேயே புரிய… எல்லாவற்றையும் மறைத்து தன்னிடம் பேசியிருக்கின்றாள் என்று அவனுக்கு நொடியில் புரிந்தது….

தன் வேதனைகளை எல்லாம் மறந்து அவளை அணைக்க வேண்டுமென்ற எண்ணம் வர… அந்த எண்ணம் வந்த போதே அவனுக்குள் பலம் வந்திருக்க… வேகமாக் தன் வலது கையை தன்னை மறந்து உயர்த்த முயற்சிக்க….அது முடியாமல் போக… அப்போதுதான் அவனுக்கே அவனைப் பற்றிய ஞாபகம் வந்தது… தனக்கு என்ன ஆனது… எங்கு இருக்கின்றோம் என்றே…

பெருமூச்சை விட்டு யோசித்தவனுக்கு…. தன் முன் நின்றிருந்தது அதீனா என்று உணர்ந்த அந்த நொடி.. இப்போதும் ஞாபகத்துக்கும் வந்தது….

”இவள் இங்கிருந்தால்… என் சந்தியா…. அய்யோ அடுத்தடுத்த குண்டுகளை அந்த தீவிரவாதி அவளை நோக்கி சுட்டானே…. சகி… அவளுக்கு என்னாயிற்றோ… என்னாலேயே இந்த வேதனை தாங்கமுடியாமல் உயிர் வாதனையாக இருக்கின்றதே… அவளால்… இதைத் தாங்க முடியுமா “ இந்த எண்ணம் வந்தம் போதே மயங்கி இருந்தான் ராகவ்… அத பின் என்ன நடந்தது என்பதெல்லாம் அவன் உணரவும் இல்லை… உணர நினைக்கவும் இல்லை… மீண்டும் நினைவு வந்த போது… தன்னவளின் வேதனை மட்டுமே நினைவு வர… அதில் அவன் உயிர் காற்று தன் காதலியின் நிலையை நினைத்து… இன்னும் வேதனை அடைய… மூச்சு முட்ட.. நினைவு திரும்பிய போதும்… அவனின் படபடப்பை அடக்க முடியாமல் போராட ஆரம்பிக்க… தன்னவளின் கரங்கள் பஞ்சுப் பொதியாக தனக்குள் பதிய…

இதயம் இலேசாக இதத்தை உணர ஆரம்பிக்க… அந்த தருணத்தில் ராகவ் இந்த உலகத்தில் மீண்டும் தடம் பதித்தான் தன்னவளுக்காக…. தன் சகியின் தடம் இன்னும் இந்த உலகத்தில் இருக்கின்றது என்ற காரணதுக்காக…

சந்தியா என்ற பெண்ணுக்கு தான் மட்டுமே இருக்கின்றோம் என்பது எப்போதோ அவன் கணவனுக்கு புரிந்திருக்க… அவள் இந்தப் புவியில் இருக்க… அவளை விட்டு போவானோ….

நிம்மதியோடு தன்னவளை தன் இடதுகரத்தால் அணைக்க முயற்சிக்க… ஆனால் அதுவும் அவனால் முடியாமல் போக… சந்தியா தானகவே அவள் கரத்தை தன்னைச் சுற்றி போட்டுக்கொள்ள..

“உன்னை விட்டுப் போக மாட்டேண்டி… உனக்கு நான் மட்டுமெ இருக்கேன்னு எனக்குத் தெரியும்டி…” சொன்னவனின் கண்கள் கசிய ஆரம்பிக்க…

அவனின் கண்களைத் துடைத்து விட்டவளுக்கு… ஏனோ வார்த்தைகள் வரவில்லை…

கணவன் சொன்னது நூறு சதவிகிதம் இல்லையில்லை இருனூறு சதவிகிதம் உண்மை என்பது போல… வேக வேகமாக தலையை ஆட்ட,,, பார்வையோ… சற்று முன் அணிந்திருந்த சோகம், கலவரம், பயம் என அனைத்தையும் தொலைத்தபடி கணவன் வார்த்தைகளில் அப்பாவியாக மாறி… அவன் அரவணைப்புக்கு ஏங்கும் சிறு குழந்தை போல ஏக்கப் பார்வை பார்க்க…

இவனால் சத்தமாகச் சிரிக்க முடியவில்லை… ஆனால் அவன் சிரிப்பு எல்லாம் அவன் கண்களுக்கு இடமாறி இருக்க…

“இந்த அப்பாவி பார்வை பார்த்து பார்த்து என்னைக் கொல்றடி…” என்றவன் வேகவேகமாக

“இல்லையில்லை…இந்த அப்பாவிப் பார்வையிலதாண்டி… யுகம் யுகமா என்னை வாழ வைக்கிறடி…” என்று மாற்றிச் சொல்ல… இவனின் வார்த்தையாடல்கலளுக்கெல்லாம்… அங்கு சந்தியாவின் இதழ்கள் மட்டுமே பதில் சொல்லிக் கொண்டிருந்தது…

காதலுடன்… கனிவுடன்… ஏக்கத்துடன்… மகிழ்ச்சியுடன் என தன் ஒவ்வொரு உணர்வுக்கும் இதழ் வரிகளை தன் மொழி வரிகளாக மாற்றி அவனோடு உரையாடிக் கொண்டிருந்தாள்…. உறவாடிக் கொண்டிருந்தாள்…அவன் மனைவி

அடுத்த சில நிமிடங்களில்… அனைவருமே ராகவ்வைப் பார்க்க வர ஆரம்பிக்க… தன் கரங்களை அவனிடமிருந்து பிரிக்காமலேயே… அவன் மற்றவர்களோடு பேசுவதைப் பார்க்க ஆரம்பித்து இருக்க…

மிருணாளினியை சமாதானம் செய்வதற்குள் தான் ராகவ்வுக்கு போதும் போதும் என்றாகி விட்டது… மனைவியைக் கூட சமாதானம் செய்ய பெரிதாக அவன் வார்த்தைகளைத் தேட வில்லை… உணர்வுகள் மட்டுமே போதுமாக இருக்க… தங்கையைச் சமாதானம் செய்ய அவன் போராட வேண்டியிருக்க… ஒரு கட்டத்தில் முடியாமல் போக… தன்னால் இயலாமல் சந்தோஷைப் பார்க்க… அவன் மிருணாளினியை சமாதானம் செய்ய ஆரம்பிக்க.. ராகவ்வுக்குத்தான் கடினமான வேலை மிருணாளினியைக் கட்டுப்படுத்த…. சந்தோஷுக்கு பெரிதாக இருக்கவில்லை… கண நேரத்தில் மனைவியைக் தன் கட்டுக்குள் கொண்டு வந்து அவளைச் சமாதானப்படுத்தி இருக்க… சந்தோஷமாக அவர்களைக் கண்களால் நிரப்பிக் கொண்டான் ராகவ்… கூடவே மனைவியையும் திரும்பிப் பார்த்தான்… தன் தங்கை வாழ்க்கையில் கரை சேர்ந்து விடுவாள் என்ற நம்பிக்கையோடு மனைவியைப் பார்க்க…

ஆமோதிப்பாக சந்தியா தலை ஆட்டினாள்…

நிரஞ்சனா வெங்கட் வசந்தி கணேசன் என அனைவரும் ராகவ்விடம் நலம் விசாரித்து விட்டு வந்திருக்க…

இதில் நிரஞ்சனா இன்னும் தன் புலம்பலை நிறுத்தவில்லை… அவளுக்கு அங்கு ஆறுதல் சொல்லவும் ஆள் இல்லாமல் போக…

வெங்கட்டுக்கு அவளைப் பார்க்கவே பாவமாகப் போக… வேறு வழியின்றி அவளை அவன் ஆறுதல் படுத்த ஆரம்பிக்க…

“இல்லை வெங்கட்… இரண்டு பேருக்கும் ஏதாவது ஆகி இருந்துச்சுனா…நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்… அந்த அளவு நான் துரோகி…” என்று அழ ஆரம்பிக்க

“அதான் நல்லா ஆகிட்டாங்கள்ள… பின்ன எதுக்கு அதையே நினைத்து உன்னை வேதனைப் படுத்திக்கிற “ என்ற போது… நிரஞ்சனா அமைதியாக ஆரம்பிக்க.. இதோ இன்னொரு ஜோடி கிளிகள்… தன் இணையின் வேதனை அதன் இணை மட்டுமே அறிய முடியும்.. சமாதானப்படுத்த முடியும் என்று அவர்களுக்கான காதல் கீதம் மெதுவாக இசைக்க ஆரம்பித்திருக்க… அதை அவர்களே இன்னும் அறிந்திருக்க வில்லை…

3,626 views1 comment

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது...

4 comentários


dharinisekar13
03 de fev. de 2021

akka yen ka ipdi alavaikiringa sathyama vijay deeksha story la aluthatha vida ipo rmba alugaya varuthu ka

Curtir

Saru S
Saru S
23 de jul. de 2020

Lovely baby

Raguuuu safe thank god

Curtir

Vimala-paappa Chandran
Vimala-paappa Chandran
22 de jul. de 2020

Very good story . Nice. Thank you so much Praveena.

Curtir

Tee Kay
Tee Kay
22 de jul. de 2020

அப்பாடா ராகவன் பிழைத்து விட்டான். மகிழ்ச்சி அளிக்கும் பகுதி. ஒரு வழியாக கரண் ஒழிந்தான், ஜெயவேல் ? அதீனா நிஜமாகவே சுட்டுக் கொண்டாளா.

Curtir
© 2020 by PraveenaNovels
bottom of page