top of page
Writer's picturePraveena Vijay

சந்திக்க வருவாயோ?-61-3

அத்தியாயம் 61 (Pre-Final1) – 3

சந்தோஷ் மட்டுமே இரத்தம் கொடுப்பதற்காக போயிருக்க மற்ற அனைவரும்… அறுவைச் சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்த அறையின் முன்னால் அமர்ந்திருந்தார்கள்

ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருந்தனர்… சந்தியாவும் அங்கு தான்...அங்கிருந்த பெஞ்சில்.... தலையைச் சுற்றி துப்பட்டாவைப் போட்டு முகத்தை மறைத்தபடி தான் அமர்ந்திருந்தாள்

அவளுக்கு யாரையுமே பார்க்கப் பிடிக்கவில்லை… பிடிக்கவில்லை என்பதை விட… பார்க்க முடியவில்லை என்பதே உண்மை…

கைகளைக் ஒன்றோடொன்று கட்டியபடி… குனிந்தவளாக தன் காலின் கட்டை விரலையே பார்த்துக் கொண்டிருந்தாள்… மனதின் அழுத்தத்தை எல்லாம் அதில் கரைத்து விடுவது போல…


கண்ணீரை அடக்கும் பொருட்டு உதட்டைப் பற்களால் கடித்துக் கொண்டிருந்தபடியே அமர்ந்திருந்தாள் சந்தியா.… பற்களால் அழுந்திய உதடுகளில் இருந்து எந்நேரம்.. இரத்தம் வருமோ எனும்படி… தன்னைக் கட்டுப்படுத்த தன் உதடுகளைப் புண்ணாக்க ஆரம்பித்து இருந்தாள் சந்தியா…

சந்தியா தனியே எல்லாம் அமர்ந்திருக்க வில்லை… சந்தியாவின் ஒருபுறம் சிவா இருக்க… அவளின் இன்னொருபுறமோ வசந்தி அமர்ந்திருந்தார்…

வசந்திக்கு மகளின் நிலையைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை… மகளுக்கு என்ன சொல்லி ஆறுதல் கூறுவது என்று புரியாமல் மனதால் துடித்துக் கொண்டிருக்க…

சிவாவுக்கோ அதை விட கவலையைக் கொடுத்தது…. சந்தியாவின் அமைதி….. அதிலும்… இங்கு வந்ததில் இருந்து…. அமைதியாக வெறித்தபடி சந்தியா குனிந்து இருந்தது… சிவாவின் மனதை இன்னும் பிசைய

“சந்தியா” என்று சிவா அழைக்க…

திடிரென்று அழைத்த அவன் குரலில் சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்… வெற்றுப் புன்னகையைப் படரவிட்டவள்…. ஏன் தன்னை அழைத்தான் என்றெல்லாம் கேட்கவில்லை…

“எந்த தோள்ல சார்… வலது பக்கமா” என்று தன்னை அழைத்தவனிடம் இவள் கேள்வி கேட்க ஆரம்பிக்க

சிவா என்ன பேச வந்தானோ அவனுக்கே மறந்து போனது…. ஆக அவளிடம் கேட்க வந்ததை மறந்து விட்டு

“ஆம்” என்று தலை ஆட்ட…

மீண்டும் அமைதி ஆனவள்… சற்று நேரம் குனிந்தபடி இருந்தவள்… இப்போது நிமிர்ந்து அவனைப் பார்த்து

“ஆபரேஷன் முடிஞ்சதுனா சரி ஆகிரும் தானே… சிவா சார்” என்று கேட்க…

அவள் கையை இவன் ஆறுதலாக அணைக்க…

“அப்போ ஏன் சார்… இப்படி இருக்கீங்க” என்றவள் சொன்ன படியே அவன் கண்களைப் ஆராய ஆரம்பிக்க…

சந்தியாவின் நம்பிக்கையைப் பார்த்து சிவாவுக்கு தைரியம் வர…. நம்பிக்கையாகப் புன்னகைக்க… அந்த நம்பிக்கை புன்னகை தந்த நிம்மதியில் சந்தியா தன் தாயின் தோளின் மீது சாய்ந்து கண்களை மூடினாள்…

உள்ளே அறுவைச் சிகிச்சை இன்னும் நடந்து கொண்டிருந்ததால்… சந்தியாவால் ராகவ்வைப் பார்க்க முடியவில்லை… இவளும் பார்க்க வேண்டுமென்று ஆர்பாட்டம் எல்லாம் பண்ணவில்லை… இத்தனைக்கும் சிவா அழுத்திக் கேட்டான் தான்…

“இல்லை பரவாயில்லை… ஆபரேஷன் முடிந்த பின்னால பார்த்துக்கலாம் சிவா சார்” என்று சொல்லி விட சிவாவும் கட்டாயப்படுத்த வில்லை… மிருணாளினியின் அழுகைச் சத்தம் மட்டுமே அந்த அறையில் வியாபித்திருக்க… மற்ற அனைவரும் சந்தியாவையே பார்த்துக் கொண்டிருக்க… அம்ரீத் கூட இங்கு வந்து சந்தியாவைப் பார்த்து விட்டுத்தான் போனார்..

ஒவ்வொரு நிமிடமும் கனமான நினைவுச் சுமைகளை தாங்கிய நிமிடங்களாக அடுத்த நிமிடத்திற்கு கடினப்பட்டு பயணித்துக் கொண்டிருக்க…

அந்த அறுவைச் சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்த செவிலிபெண்.. பரபரப்பாக வர… சந்தியாவைத் தவிர அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்திருக்க… சிவா அந்த நர்ஸிடம்…

“சிஸ்டர்… ராகவ் எப்படி இருக்காரு…” என்று கேட்க

“ஆபரேஷன் போயிட்டு இருக்கு சார்… அதுவரை ஒன்றும் சொல்ல முடியாது” என்று அந்த செவிலிப்பெண் சொல்லிவிட்டு நகன்று விட்டார்…

இவர்களின் உரையாடல் அனைத்து ஹிந்தியில் இருக்க.. திடீரென

“ஏன் சார்… இவ்ளோ லேட் பண்ணுனீங்க… ஏகப்பட்ட ரத்தம் வெளியேறி இருக்கு… டாக்டர் தான் அல்ரெடி சொல்லி இருப்பாரே” என்றபடி தமிழ்க் குரல்…

சிவாவின் தோரணையான தோற்றத்தில்… அவனைத் தயங்கிப் பார்த்தவளாக…

“ரொம்ப கிரிட்டிக்கலாத்தான் இருக்கு போல சார்… உள்ள அப்டித்தான் பேசிக்கிட்டாங்க… வெளில ஒண்ணும் சொல்ல மாட்டாங்க” என்று உண்மையைப் போட்டு உடைத்திருந்தாள் அங்கு அறுவைச் சிகிச்சைகளுக்கு உதவியாக எடுபிடி வேலைக்கு இருக்கும் பெண்… அவர்கள் எல்லாம் உள்ளொன்றும் வெளியொன்றும் வைத்து பேசத் தெரியாதவர்கள்… பட்டென்று போட்டு உடைத்து விட்டாள்…

அவள் பூர்வீகம் தமிழ்நாடு என்பதால் நிரஞ்சனா தமிழ் என்பதைக் கண்டுபிடித்து நிரஞ்சனாவோடு பேசியிருந்தாள்… அறுவைச் சிகிச்சை நடைபெறும் ராகவ்வுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம் தான் ஆகி இருக்கின்றது என்று நிரஞ்சனா மூலம் தெரிந்தும் கொண்டாள்…

இப்போது அந்த உதவிப் பெண்ணுக்கு பரிதாபம் ஒருபுறம் இருந்தாலும்… உள்ளே இருப்பவனின் மனைவி யாரென்று தெரிய வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது… கதறி அழுது கொண்டிருக்கும் அந்தப் பெண்ணா.. அமைதியாக இருக்கும் இந்தப் பெண்ணா…

நிரஞ்சனாவைப் பார்க்க… நிரஞ்சனா சந்தியாவைப் பார்க்க… சந்தியாவைப் பார்த்த அந்தப் பெண்ணின் பார்வையில் அப்படி ஒரு பரிதாபம் வந்திருந்தது…

சந்தியா கண்களைத் திறக்கவே இல்லை… சந்தியாவுக்கு நன்றாகவேத் தெரிந்தது… தன்னை அந்தப் பெண் … உறுத்து விழிக்கிறாள் என்று…

சந்தியா ஏதாவது கேட்பாள் என்று அந்தப் பெண்ணும் அவளையேப் பார்க்க… சந்தியா கண்களைத் திறந்தால் தானே…

சந்தியாவைப் ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு… வேக வேகமாக எட்டுக்கள் எடுத்து வைத்து சென்றவள்… அதே வேகத்தில்… இரத்தம் அடங்கிய பாட்டிலோடு வந்திருந்தாள்… யாருக்கும் தெரியாமல் நடக்கும் அறுவைச் சிகிச்சை என்பதால் எல்லாவற்றுக்கு நேரடியாக அந்தப் பெண்ணே அடிக்கடி வெளியே வந்து கொண்டிருந்தாள்…

அப்படி ஒரு முறை மீண்டும் வந்த போது… வசந்தியிடம்

“உன் பொண்ணாம்மா… “ என்று கேட்டவள்…

“அந்த பாய்கட் வச்சிருந்த பொண்ணு சொன்னுச்சு… கல்யாணமாகி ஒரு மாசம் தான் ஆகி இருக்காமே… அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுன்னு சொல்லி வைங்க” அவளுக்கு சந்தியா கண் திறந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமோ… ஏதோ தெரியவில்லை அந்த பணிப் பெண் அப்படிச் சொல்லிவிட்டுப் போக…

சந்தியா அப்போது கண்களைத் திறக்கவே இல்லை…. ஆனால்

வெற்றுக் கூடாக இருந்த இதயத்தில்… இப்போது ஏதேதோ என்ணங்களால் வெகு வேகமாக அடைக்கப்பட… அத்தனையும் தேவையில்லாத எண்ணங்கள்… அந்த எண்ணங்கள் தந்த கனம் தாங்காமல்… கண்கள் கண்ணீரை வெளியேற்றத் தயாராக இருக்க… பிடிவாதமாக அடக்கி அதை உள்ளுக்குள் இழுக்க… முடியவில்லை அவளால்…


ஒரு கட்டத்தில் அவளால் முடியாமல்… தொண்டையிருந்து பெரும் விம்மல் பெரு வேகமாக வர…. அதையும் அடக்க முயற்சி செய்தாள் தான் ஆனால் கண்ணீரையும் துக்கத்தையும் மாறி அடக்க அடக்க… இதயம் ஏனோ நினைவுகளின் பாரம் தாங்காமால் பெரிதும் விரிந்து அதன் கூட்டை கிழித்துக் கொண்டு சிதறப் போவதைப் போல உணர்ந்தவளுக்கு அதற்கு மேல் அதை கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை

“அம்மா… என்னால முடியலைமா” வெடித்த சந்தியா… அடுத்த நொடி தரையிலும் வீழ்ந்திருந்தாள்

“எனக்கு முடியலைமா… ரகுவை வந்து என்னைப் பார்க்கச்சொல்லும்மா” என்றவளின் கண்கள் தாரை தாரையாக கண்ணீரை வடித்து கொண்டிருக்க… வசந்தி தரையோடு கிடந்த மகளை தன் மடியில் போட்டு ஆறுதல் படுத்த… அவளோ அழுகையை நிறுத்தவே வில்லை…

“எனக்கு எல்லாமே இருட்டா இருக்கும்மா… இந்த உலகத்தை பார்க்கவே பயமா இருக்கும்மா… யாருமே இல்லாத தனி உலகத்தில இருட்டில இருக்கிற மாதிரி இருக்கும்மா… ரகுவை மட்டும் என்கிட்ட வரச்சொல்லும்மா… என்னால அவன் இல்லாம தனியா இருக்க முடியாது வசந்தி… என் கையைப் பிடிச்சுட்டு நான் உனக்காக இருக்கேன்னு சொல்லச் சொல்லு வசந்தி ” என்று அன்னையிடம் கதறியவள்…

“உன்னை மாதிரியே அவனுக்கும் தெரியும்மா… நீ என்கிட்ட வந்த மாதிரியே அவனும் என்கிட்ட வந்துருவான் தானேம்மா” தாயிடம் கதறிபடியே கேள்வியாகக் கேட்க…

வசந்தி பதில் சொல்லும் முன்பே…

“அவன் வருவான் தானேம்மா” என்று அவள் கதறிக் கொண்டிருக்கும் போதே… அறுவைச் சிகிச்சை முடிந்திருந்தது போல… அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவக் குழுவில் இருந்த இரு மருத்துவர் மட்டும் வெளியெ வர…

அத்தனை பேரும் அவர் முன் நிற்க…

அவரோ… அறுவைச் சிகிச்சை முடிந்து விட்டதென்றும்… மற்ற விபரங்களை எல்லாம்… தலைமை மருத்துவர் சொல்லுவார் என்று முடித்து விட்டுச் செல்ல…

அடுத்த சில நிமிடங்களில் தலைமை மருத்துவரும் வெளியே வந்தார்…

சிவாவை மட்டும் தனியே அழைத்தவர்… அறுவைச் சிகிச்சை முடிந்து விட்டதென்றும்… ஆனால் இன்னும் ஆபத்தான நிலைமையில் தான் இருக்கிறான் என்றும்… இன்னும் இரண்டு மணி நேரம் கழித்துதான் ராகவ்வின் நிலைமையை கணிக்க முடியும் என்று சொல்லிச் சென்று விட…

சிவா...


வெங்கட் மற்றும் சந்தோஷிடம் அதைச் சொல்ல… சந்தியாவுக்கு மட்டுமே அது தெரிவிக்கப்படவில்லை…

ஆனால் மற்றவர்கள் சொல்லாவிட்டால் என்ன.... சந்தியாவால் அதை உணர முடிந்தது… கலங்கி அமர்ந்திருந்தாள் வெற்றுத் தரையில்

அது மட்டுமின்றி மிருணாளினி

“சந்தோஷ்… என் அப்பாக்கும் அம்மாவுக்கும் போன் பண்ணுங்க சந்தோஷ்… என் அண்ணாவுக்கு ஏதாவது ஆனுச்சுனா அவங்களுக்கு என்னால பதில் சொல்ல முடியாது…. அவள் ஒரு புறம் சந்தோஷிடம் கதற ஆரம்பிக்க… சுகுமாரிடம் சொல்லாமல் யசோதாவுக்கு மட்டுமே சொல்லப்பட்டு… சுகுமார் யசோதா இருவரையும் டெல்லிக்கு வரவழைத்திருந்தனர்…

கணவன் இருக்கும் நிலைமையின் தீவிரம் மற்றும் அபாயாம் உணர்ந்தவளுக்கு… புயலுக்கு பின் வரும் அமைதி போல் ஆடி அடங்கிய வெறுமை மனதைச் சூழ்ந்தது… இந்த நிலைமையில் தன்னைக் கொண்டு வந்து நிறுத்தத்தான்.. மொத்த அன்பையும் தன் மேல் கொட்டித் தீர்த்தானா… கண்கள் குளம் கட்டியது அவளுக்கு…

ஏனோ அப்போதே அவனைப் பார்க்க வேண்டும் போல இருக்க… எழுந்து நின்றாள்…

கணவனைப் பார்க்க வேண்டும் என்ற வேகத்தில் எழுந்தவளால் நடக்கக் கூட முடியவில்லை... அவள் நிலை அதை விடக் கொடுமையாக இருந்தது…

ஆனாலும்… தன்னவனைப் பார்க்க வேண்டும் தவித்தது மனம்…. ஆனால் நிற்க கூட முடியாதவளால் என்ன செய்வது… யாரையும் உதவிக்கு கூட அழைக்க முடியவில்லை…

தங்கை தடுமாறுகிறாள் என்பதை பார்த்து… சந்தோஷ் வேகமாக ஓடி வந்து அவளைப் பிடிக்க…

“அவரைப் பார்க்கனும்னா… என்னைக் கூட்டிட்டு போன்னா” என்ற போதே சிவா உள்ளே சென்று ராகவ்வைப் பார்க்க அனுமதி வாங்கி வர சென்றிருக்க…


உள்ளிருந்த அறையில் உள்ள கண்ணாடித்தடுப்பின் வழியே மட்டும் பார்க்க அனுமதி கொடுக்கப்பட்டிருக்க…

அடுத்த சில நிமிடங்களில் சந்தியா அங்கிருந்த கண்ணாடித் தடுப்பின் வழியே ராகவ்வைப் பார்த்துக் கொண்டிருந்தாள்…

வெகு நாட்களுக்குப் பிறகு… தன் கண்களில் தன்னவனை நிரப்பிக் கொண்டிருந்தாள்... அவள் கணவனின் குரலைக் கேட்க முடியவில்லை… மாறாக அங்கிருந்த இயந்திரங்களின் ஒலியே அவள் கணவன் உயிரோடு இருக்கின்றான் என்று பறைசாற்ற…

ஆள்காட்டி விரலை கணவனை நோக்கி நீட்டிக் காட்டியபடி…

“அவர்கிட்ட போகணும்.. பக்கத்தில… சிவா சார்… நீங்க சொன்னா கேட்க மாட்டாங்களா” என்ற போதே

“கேட்டுட்டேன் சந்தியா… இன்னும் ஒரு அரை மணி நேரம்… ஆகட்டும்னு சொல்றாங்க… ஆபரேஷன் முடிஞ்சிருச்சும்மா இனி ஒண்ணும் கவலை இல்லைமா..” என்று அவளை அணைக்க…

இரண்டு விரல்களை அவனிடம் காண்பித்தபடியே

“இரண்டு மணி நேரம் ஏன் கெடு கொடுத்தாங்க சிவா சார்” என்றவள் அழ ஆரம்பிக்க….

“அது எல்லாருக்கும் கொடுப்பாங்க சந்தியா…” என்று சிவா பொறுமையாக அவள் கேட்டவ கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி… அவளைப் பார்க்க… அவளோ கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்…

வலது கையில் தோள்ப்பட்டை வரை கட்டுப் போடப்பட்டிருக்க… இடது கை அவளுக்கு தெரியவே இல்லை…

எப்போதுமே இவளைப் பார்த்ததுமே கைகளை உயர்த்தி தன்னை நோக்கி அழைப்பவனின் கரங்களுக்கு அவள் மனம் இன்றும் ஏங்க… நீ வரவில்லை என்றால் நான் வருகிறேன் என்று அவன் அருகில் போக கால்கள் பரபரக்க… அதுவும் முடியாமல் போக… அவன் முகத்தை ஏமாற்றத்தோடு பார்த்தபடியே இருந்தாள் சந்தியா…

உறங்குவது போலத்தான் இருந்தான் அவள் கணவன்… கணவன் முகத்தைப் பார்த்தபடியே இருந்தவளுக்கு.. அவன் வைத்திருந்த மீசையைப் பார்க்க… பெரிதாய் விம்மல் வர… அதற்கு மேல் அவனைப் பார்க்க முடியவில்லை… அதற்கு சக்தியும் இல்லாமல் போக….

அப்படியே கதவோடு சாய்ந்து அமர்ந்து விட்டாள்….

இதை எல்லாம் பரிதாபமாக பார்த்தபடி இருந்த அந்த பணிப் பெண்… அங்கிருந்த நர்ஸிடம்

“கல்யாணம் ஆகி ஒரு மாதம் தான் ஆகிருக்காம்… பாவம் அந்தப் புள்ளையைப் பார்க்கவே பாவமா இருக்கு… “ என்று ஹிந்தியில் சொன்னாள்…. சந்தியாவுக்கு ஹிந்தி தெரியாது என்று அவள் தன் போக்கில் சொல்லிக் கொண்டு இருக்க

சந்தியாவுக்கு அந்த வார்த்தைகள் செவியில் பட்டு எதிரொலிக்க… சில நிமிடங்கள் அப்படியே அங்கு அமர்ந்திருந்தவள்…. தானாகவே எழுந்து… மெதுவாக நடந்து வர ஆரம்பித்தாள்…

வெறுமையாக இருந்த எண்ணங்களில் கணவனின் நினைவலைகள் மொத்தமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்து இருந்தது இப்போது..…

அங்கிருந்து வெளியே வந்தவள்.. அங்கிருந்த இருக்கையில்… அப்படியே கல்லாக அமர்ந்து விட்டாள்…

இப்போது அங்கு சிவா இல்லை… அதீனாவிடம் வாக்குமூலம் வாங்க நீதிபதிகள் அங்கு வந்திருப்பதாக கிளம்புகிறேன்.... வெங்கட்டிடம் சொல்லி விட்டு கிளம்பி இருந்தான்…

கணேசனோ,


வசந்தியிடமும் சந்தோஷிடமும் ஏதோ சத்தமாக விவாதித்துக் கொண்டிருந்தார்…

மிருணாளினி இப்போது உள்ளே போய்விட… நிரஞ்சனா வெங்கட் இருவரும் அங்கில்லை… சந்தியா அப்படியே அமர்ந்திருந்தாள்… ஆனால் முதலில் போல அவளது மனம் வெறுமையாக இல்லாமல் ஆயிரம் எண்ணங்கள் …

அந்தப் பெண் சொன்ன ஒரு மாதக் கணக்கே இவளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது…


“ஒரு மாதமா” ஏளனமாக இதழ் வளைந்தது அவளுக்கு...

இவர்களுக்குத் தெரியுமா… ஒரு மாதம் கூட இல்லை… நான் அவனோடு வாழ்ந்தது விரல் விட்டு எண்ணக்கூடிய சில நாட்கள் மட்டுமே என்பது தெரியுமா…

அது தந்த ஞாபகங்கள் சத்தமின்றி அவள் கண்ணில் இருந்து கண்ணீரை வெளியேற்ற… அது கண்களில் இருந்து பயணித்து கன்னத்தில் தன் பதிவை பதிவு செய்ய… தன்னவனின் முதல் முத்தம் ஞாபகம் வந்தது சந்தியாவுக்கு…


மொரீஷியஸ் அவன் கிளம்பிச்சென்ற தினத்தன்று… இவள் அலுவலக நண்பர்களுக்கு ட்ரீட் வைத்த அன்று…


லிஃப்ட்டினுள் அவசரமாக அவன் பதித்த முதல் முத்தம்… இன்று அவசரமின்றி அதன் அடையாளத்தைக் கொண்டு வந்திருந்தது…. அன்று அதை உணரக் கூட முடியாதவளுக்கு இன்று அவன் இதழ் ரேகையின் தனித்தனி தடங்கள் கூட அதன் பதிவை அவளுக்கு உணர்ந்த… ஊற்றெடுத்த கண்ணீர்த் துளி… அடுத்தடுத்து வர… அது பெருக்கெடுத்து கழுத்தின் வழியே பயணித்து அவளை நனைக்க ஆரம்பிக்க… துடைக்க கணவனின் கரங்கள் தான் இல்லை…

இதற்கிடையில்

“நான் சிந்துவைப் பார்க்கப் போகிறேன்…” என்று கணேசன் வெளியேற… சந்தோஷ்… அவரிடம் ஏதோ சொல்லப் போக.. வசந்தி அவனைத் தடுத்து நிறுத்த… அவர்களைப் பார்த்தபடியே சந்தியா அமர்ந்திருந்தாள்… ஆனால் அவர்களின் ஆர்ப்பாட்டம் எல்லாம் சிறிது கூட அவளுக்கு எட்டவில்லை… அவள் வேறு உலகத்தில் கணவனின் நினைவுகளோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்….

மிருணாளினியும் இப்போது வந்திருக்க… அவளும் சந்தியாவின் அருகே அமர்ந்தபடி… சந்தியாவின் கரங்களில் தன் கைகளை வைக்க…

மிருணாளினியின் ஆறுதலில்… அடுத்த நதியை சந்தியாவின் கண்கள் வெளியேற்றி இருந்தது....

கணேசன் சென்ற பிறகு… வசந்தியும் இவள் அருகே அமர… சந்தோஷ் வசந்தியைத் திட்டிக் கொண்டிருக்க… சில நிமிடங்கள் கழித்து… அவனும் ஒரு புறம் தலையைக் குனிந்து சோகமே உருவாக அமர்ந்து விட… சந்தியா தன் அண்ணனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்

யார் செய்த பாவம்… ஏன் எங்களுக்கு இந்த தண்டனை….

வாழ்க்கையையே அனுபவிக்காமல் தூக்குக் கயிற்றின் முன்னாலா… இல்லை… ஜெயில் கம்பிக்களுக்கு பின்னாலா என அவள்…

கணவன் மனைவி என ஆகியும் வாழ்க்கையை அனுபவிக்காமல் தவிக்கும் தன் சகோதரன்…

எனக்கென்ன தண்டனையோ….

எல்லாவற்றையும் காண்பித்து விட்டு தனிமரம் ஆக்க காத்திருக்கின்றானா… உள்ளுணர்வு ஏதோ சமிக்ஞை சொல்லியது…

எண்ணம் வந்த அதே கணம் சந்தியாவுக்குள் தூக்கி வாறிப் போட… வேகமாக நிமிர… அதே நேரம்…

வேகமாக செவிலி வெளியே வர… சந்தியா மட்டுமே முதலில் உணர்ந்து அவளருகில் போனாள்… முதலில் போல அமைதியாக அவளால் இருக்க முடியவில்லை… உடல் மொத்தமும் பரபரத்தது…

மருத்துவரும் அதே நேரம் வர… வெங்கட் நிரஞ்சனா என அத்தனை பேரும் அங்கு கூட ஆரம்பித்து இருந்தனர்

“திடீர்னு பல்ஸ் குறைய ஆரம்பிச்சுருச்சு…. மெஷின்கெல்லாம் சப்போர்ட் பண்ண மாட்டேங்கிறார்…” என்ற போதே… வந்த மருத்துவர்… கேட்டபடியே… வேக நடை எடுத்து வைக்க..

அங்கு மீண்டும் பரபரப்பான சூழ்நிலை ஆகி இருக்க… சந்தியாவுக்கு எப்படி அப்படி ஒரு வேகம் வந்ததோ… வேகமாக அவர்கள் பின்னே ஓட… வெங்கட் மற்றும் சந்தோஷால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தாள்…

கண்ணாடித்தடுப்பின் வழியே மட்டுமே தன் கணவனைப் பார்க்க முடிந்திருக்க... துடித்துக் கொண்டிருந்தாள் சந்தியா

மிருணாளினியும் இப்போது அங்கு வந்திருக்க……


மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சை எதுவும் பலனளிக்காமல்…. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தன் அண்ணனை பார்த்த மிருணாளினி அந்தக் கணமே மயங்கிச் சரிந்திருந்தாள்...

“என்னை விடுங்க…. நான் ரகுவைப் பார்க்கனும்… நான் அவர்கிட்ட போகனும்” என்று கணவன் நிலை தாங்காமல்… பறித்துக் கொண்டு ஓட முயன்றவளை தடுத்து சந்தோஷ்… விடாமல் தன்னோடு இறுக்கமாக அணைத்திருக்க… கணவன் அடுத்தடுத்த ஒவ்வொரு மூச்சுக்கும் திணறும் காட்சிகளை மட்டுமே அவளின் கண்கள் பதிவு செய்து கொண்டிருக்க

“ரகு” என்று அவன் மனைவியால் இங்கிருந்து கதற மட்டுமே முடிந்தது…

1,171 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது...

Comments


© 2020 by PraveenaNovels
bottom of page