அத்தியாயம் 61 (Pre-Final) -2
யாரைத் தேடி வந்தார்களோ… அந்த சிந்தியா தங்கள் கண்ணெதிரில்… மிருணாளினிக்கும் சந்தோஷுக்கும் அப்படி ஒரு அதிர்ச்சி… ஆச்சரியம்…
அப்படியே சந்தியாவையே நேரில் பார்ப்பது போல இருந்தது… சந்தியாவிடம் மிருணாளினிக்கு பிடித்தது… அவளின் துறுதுறு கண்களே… அந்தக் கண்கள் இவளிடம் இல்லை… மற்றபடி நீள முடி இருந்தால் அப்படியே சந்தியாதான்… ஆவென்று மிருணாளினி அதீனாவையேப் பார்த்துக் கொண்டிருக்க..
சந்தோஷ்… ஆச்சரியம் எல்லாம் படவில்லை… மாறாக அதீனாவை ஆராயும் விழிகளோடு பார்த்திருந்தான்…
வசந்தியும் கணேசனும் தான் உணர்ச்சிப் பிராவகத்தில் இருந்தனர்
எந்தப் பெண்ணுக்கு துன்பம் இழைத்து விட்டோம் என்று அவளைப் பார்க்க மருகிக் கொண்டிருந்தாளோ… அந்த பெண்.. இதோ தன் முன் என வசந்தியின் மனம் நிம்மதியில் சந்தோஷம் அடைய…
கணேசனுக்கோ… தன் வாழ்க்கையின் அர்த்தமாக இருந்தவள் எவளோ… அந்தச் செல்ல மகளை தொலைத்துவிட்டு தன் பாசத்தை எல்லாம் அவளோடு மட்டுமே என தொலைத்தாரோ… அந்த, தன் மகளை… தன் உயிரைக் கண்டு விட்ட ஆனந்தத்தில்… கணேசன்… அவருக்கு வாய் வார்த்தைகள் எல்லாம் போய் விட… சந்தோஷத்தில் தொண்டை அடைத்திருக்க…
அதே நேரம் சந்தியாவும் அங்கு கொண்டு வரப்பட.. கணேசனுக்கு சந்தியாவெல்லாம்… அவள் நிலையெல்லாம் கண்ணிலேயே படவில்லை
அதே நேரம் அதீனா யார்.. தற்போதைய நிலை அதுவும் எல்லாம் அவருக்குப் பொருட்டாகவேத் தெரியவில்லை… இப்போதும் அவருக்கு தன்னைப் பார்த்தால் தன்னை நோக்கி ஓடோடி வரும் சிந்துவாகவேத் தோன்ற… கை நீட்டி தன் மகளை அழைக்க… அவரின் நம்பிக்கையை அவள் மகள் சிந்தியா ஏமாற்றவில்லை…
“அப்பா” என்று ஓடோடி வந்து அவருக்குள் அடங்கியவள்…. வாய் விட்டு கதற ஆரம்பித்தாள்… இத்தனை வருடங்களாகத் தான் அடக்கி வைத்திருந்த கண்ணீரை எல்லாம் அவரிடம் கொட்டித் தீர்க்க ஆரம்பித்திருந்தாள் அதீனா…
சந்தியாவின் பெற்றோர் வரப்போவதாக , சற்று முன் நிரஞ்சனா சொன்ன போது… சந்தியாவின் தந்தையும் வருகிறாரா.. என்று கேட்டு வைத்துக் கொண்ட அதீனா… தன் தந்தையைப் பார்க்கும் போது தெரிந்து கொள்ளாமல் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள் அதீனாவாக.
ஆனால் பார்த்த போதோ…. அதீனா என்பவள் மறைந்து போய்… சிந்தியா மட்டுமே அவளுக்குள் ஆக்கிரமித்திருந்தாள் போல…
அதீனாவாக தன்னை அடக்க நினைத்தவளை… சிந்தியா விடவில்லை…
தந்தை கரம் தன்னை நோக்கி நீண்ட அடுத்த நொடி…. தந்தையின் கரங்களுக்குள் அடங்கி இருக்க… இத்தனை வருட தன் துன்பத்தை எல்லாம் தந்தையின் அணைப்பில் கரைத்து விட நினைத்தாளோ இல்லை இனி தனக்கும் இந்த உலகத்தின் தொடர்புக்கும் இன்னும் சில மணித் துளிகளே என்பதை அவள் உள்மனம் உணர்த்தியதோ… அவரின் ‘சிந்தும்மா’ என்ற ஒவ்வொரு வார்த்தையிலும் இன்னும் இன்னும் கரைந்திருந்தாள் சிந்தியா…
அதே நேரம் வசந்தி, மிருணாளினி, சந்தோஷ் மூவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தனர்… அங்கு கொண்டு வரப்பட்ட சந்தியாவைப் பார்த்து… அதிலும் அவள் பேச முடியாமல்.. கிட்டத்தட்ட அரை மயக்கத்தில் இருக்கு நிலையைப் பார்த்து பதறி அவள் அருகே வர… சந்தியாவோ…. அதீனாவிடம் கதறிக்கொண்டிருக்கும் கணேசனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் விழி அகற்றாது…. சில நொடிகள்தான் அவள் அதைப் பார்த்தது…
“எனக்குப் பிடித்த என் அப்பாவின் மகள்” வார்த்தைகள் மீண்டும் மீண்டும் சந்தியாவுக்குள் எதிரொலிக்க… வேதனை தாளாது கண்கள் மூடினாள் சந்தியா…
“இப்போ கூட உங்க பொண்ணு சந்தியாவைப் பார்க்கத்தானே வந்தீங்க…“ என்று சிந்தியா கணேசனிடம் ஏமாற்றமாகக் கேட்க
“இல்லடா… உன்னை உன்னை மட்டும் தான் பார்க்க வந்தேண்டா” என்று தன் மகளை மட்டுமே பார்த்து சொல்ல…
முதன் முதலாக அதீனாவுக்கும் நெருடல் தோன்றியது... சந்தியா வந்த போதும் அவள் அருகில் செல்லாமல் தன்னை மட்டுமே பார்த்தபடி இருக்கும் தன் தந்தையின் நடவடிக்கையில் வித்தியாசம் உணர்ந்தாள் அவள்...
சந்தியாவைப் பார்த்தபோதே அவள் அருகில் அழுதபடி இருந்த சந்தோஷ் மிருணாளினி பார்வையில் பட… கூடவே வசந்தியும்… மகளைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டிருக்க…
தன்னருகில் தன் தந்தை… சந்தியாவின் அருகில் மற்ற அனைவரும்… தான் அருகில் இருந்து பார்த்து வளர்த்த அவரது பெண்… குற்றுயிரும் குலை உயிருமாக இருக்க அவளின் அருகே போகாமல்… அருகே என்ன… அவளிடம் பார்வையைக் கூடத் திருப்பாமல் இருக்கும் தந்தை வித்தியாசமாகப் பட.... அதேப் பார்வையோடு நோக்க
“நீ மட்டும் தாண்டா… என்னோட பொண்ணு… அந்த உரிமையை யாருக்கும் நான் கொடுக்கலைடா சிந்தும்மா…” என்று தான் தொலைத்த மகளைக் கட்டிக் கொண்டு அழ…
அவரோடு அருகில் இருந்தும் அவள் பாசத்தை அனுபவிக்காத அவர் மகளின் செவிகளிலும் அது விழத்தான் செய்தது… அந்த வார்த்தைகளில் மொத்தமாக உடைந்து போனாள் தான்…. ஆனால் ஏனோ வலிக்க வில்லை… அவளுக்கு அவரது உதாசீனங்கள் பழகி பழகி மரத்துப் போயிருந்ததே… பெரிதாகத் தெரியவில்லை…
அதே நேரம்… சந்தோஷ்… இவர்களை எல்லாம் விட்டு விட்டு… சிவா நிரஞ்சனாவைப் பார்த்தான் கண்களில் கொலை வெறியோடு… தன் தங்கைக்கு நடந்த அநியாயங்கள் என்னென்ன என்ற கேள்வியோடு அவர்களை நோக்கிப் போக…
சந்தியா… அவன் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினாள்…
“என..க்கு ஒண்ணுமில்லை… இப்போ அது முக்கியமும் இல்லை… “ என்றவள்… அதீனாவைக் கைகாட்டி..
“அவங்களுக்கு டைம் இல்லை…” என்றபடி சந்தோஷிடம் இறைஞ்சலாகப் பார்வையை வைக்க… சந்தோஷ் தன்னை அடக்கிக் கொண்டு இருக்க…
சந்தோஷை அடக்கிய திருப்தி சந்தியாவுக்குள் வர… இப்போது தன் தலைமாட்டில் இருந்து அழுது கொண்டிருக்கும் தன் தாயை தன் முன் வரவழைத்தவளாக…
”ம்மா… பேசும்மா அவங்ககிட்ட… நான் எப்போதும் உங்கூடத்தான் இருக்கப் போகிறேன்… உனக்கு உறுத்தலா இருக்கிற உன் வேதனையை எல்லாம் இன்னையோட முடிக்கப் பாரும்மா” என்ற போதே அவளால் முடியவில்லை… பல மூச்சுக்கள் விட்டு திணறியிருக்க…
வசந்தி… அப்போதும் போகாமல் மகளிடமே நிற்க
“வசந்தி… என்னால பேச முடியலை வசந்தி…ப்ளீஸ்… அவங்ககிட்ட போ..” என்றவள்…
சிவாவை தன் அருகே அழைக்க…. சிவா அவள் அருகில் போனான்… கொஞ்சம் பயந்தபடிதான்…
காரணம் தெரிந்ததுதான்…. சந்தியா ராகவ்வை எப்போது கேட்பாளோ… என்று பயந்தபடியே தான் நின்று கொண்டிருக்க… அவள் அழைத்தவுடன்.. உதறல் வந்திருந்ததுதான் உள்ளுக்குள்…
ஆனால் அவள் ராகவ்வை எல்லாம் கேட்கவில்லை…. மாறாக..
“சார்… ஒரு அரை மணி நேரம்” என்று அதினாவைப் பார்த்தபடியே சிவாவிடம் அவளுக்காக அனுமதி கேட்க…
சிவா மறுத்து தலை ஆட்டினான்
“இல்லை சந்தியா… அவ்வளவு நேரம் லாம் அதீனா இங்க இருக்க முடியாது…” எனும்போதே சந்தியா கண்களில் கவலை குடியேற…
“ஒக்கே… ஜஸ்ட் 10 மினிட்ஸ்.. என்னால முடிந்தது இவ்வளவுதான்” என்ற போதே… சந்தியாவின் கண்களில் மலர்ச்சி வர…
தன் அன்னையிடம் கண்களாலேயே சைகை காட்டினாள்… “அதீனாவிடம் போய்ப் பேசுமாறு… இது தனக்கான நேரம் இல்லை அவளுக்கான நேரம்” என்ற விதத்தில்..
வசந்தியும் அதைப் புரிந்து கொண்டு அதீனாவை நோக்கிப் போக… சந்தியா நன்றியுடன் சிவாவைப் பார்க்க… சிவாவோ வேறு புறம் திரும்பிக் கொள்ள… இப்போது சந்தியாவின் விழிகளோ அந்த அறையை சல்லடையாக அலச ஆரம்பித்திருந்தது… தன்னவன் எங்கே என்ற தேடலோடு…
---
தன் அருகில் வந்த வசந்தியின் அருகாமையை சிந்தியா உணர்ந்தாள் தான்… ஆனால் அவரைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை… அது ஏனென்று தெரியாமல் எல்லாம் இல்லை… தன்னுடைய இந்த நிலைக்கு வசந்தி மட்டுமே காரணம் இல்லை…. அது தெரியும்… ஆனால் தன் தாய் பட்ட துன்பங்களுக்கு… வசந்தி முக்கிய காரணமே… அந்த கோபம் வசந்தி மேல் சிந்தியாவுக்கு எப்போதுமே இருந்தது.. இருக்கின்றது…
இப்போதும்… அதனால் அவர் முகத்தைப் பார்க்காமலேயே…
“என் அம்மா தப்பு பண்ணலை… ஏன் அவங்களுக்கு தண்டனை கொடுத்தீங்க… அவங்க உங்க வாழ்க்கையை வாழலை… அது மட்டுமே உண்மை…” என்று சொன்னபோதே வசந்தி அவளைக் அணைத்துக் கொண்டு அழ… அதீனா இப்போது வசந்தியைக் கண் கொண்டு பார்த்தாள்…
“தெரியும்.. சிந்து... உன்கிட்ட மன்னிப்பு கேட்க கூட தகுதி இல்லாதவ நான்” என்ற போதே… அழுகையை நிறுத்தி இருந்தாள் சிந்தியா…
ஓரளவு நிதானத்திற்கு வந்தவளாக… தன்னைச் சுற்றி இருப்பவர்களை அதிலும் சந்தோஷ் அவனருகில் நின்ற மிருணாளினியை முக்கியமாகப் பார்த்தாள் அதீனா
சந்தோஷ் மிருணாளினி இருவரும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர்… மிருணாளினிக்கு ஓரளவு தெரிந்திருந்ததால் பெரிதாக ஆச்சரியம் இல்லை… சந்தோஷ்க்கு சிந்தியாவைப் பார்த்து பெரிதாக பாசம் எல்லாம் வரவில்லை…
நிரஞ்சனா மற்றும் சிவாவுக்கு மட்டுமே பெரிதாக ஆச்சரியம்… அதீனாவுக்குள் இப்படி ஒரு முகமா… இந்த அளவுக்கு பாசமா… என்று
அதிலும் நிரஞ்சனாவுக்கு கணேசன் இன்னொரு ஆச்சரியமாக இருந்தார்… சந்தியா கணேசனைப் பற்றி சொல்லும் போதெல்லாம் பாசமில்லாத மனிதன் என்றே பதிய வைத்திருக்க கணேசனின் இந்த கோணம் முற்றிலும் மாறுபட்டிருக்க… கணேசனை ஆச்சரியத்தோடு பார்த்தாள் என்றால்… சந்தியாவை வேதனையோடு பார்த்தாள் நிரஞ்சனா…
இதை எல்லாம் விட நிரஞ்சனாவுக்கு பெரிய வேதனை… சந்தியா மற்றும் அவளது குடும்பம் ராகவ்வைக் கேட்டால் என்ன சொல்வது .. தொண்டைக்குள் முள் சிக்கியது போன்ற உணர்வு… யோசிக்கும் போதே..
“என்ன சொல்லப் போகிறோம்… எப்படி சொல்லப் போகிறோம்” என்று நினைத்தபடியே… இருக்க
“ரஞ்சி…” என்று அழைத்தபடியே வெங்கட் உள்ளே வர… அங்கிருந்த அத்தனை பேரையும் பார்த்தவனுக்கு… சிவா நிரஞ்சனா தவிர தெரிந்த ஒரே முகம்… மிருணாளினி மட்டுமே…
“மிருணா” என்ற போதே அவனுக்கு வார்த்தைகள் வராமல் உலர்ந்து போயிருக்க…
“வெங்கட் அண்ணா… நீங்களும் இங்கதான் இருக்கீங்களா… அண்ணா எங்க” என்று கேட்டபடியே சந்தோஷிடம் திரும்பியவள்…
”நான் சொன்னேன்ல… அண்ணாவோட ஃப்ரெண்ட்…. ஐபிஎஸ்… இங்கதான் வேலை பார்க்கிறாங்க” சந்தோஷுக்கும் தகவல் தந்தாள்…
சிவா அதீனாவிடம் நேரம் ஆகிக் கொண்டிருப்பதாக கூற
சிவாவின் வார்த்தைகளைக் கேட்ட கணேசன் தன் மகளை அணைத்திருந்த கைகளில் இறுக்கம் கூட்டினார்.. தன் மகளை விடாமல் பிடித்து வைப்பராக
ஆனால் அதீனாவோ… பெருமூச்சு ஒன்றை விடுத்து… தன்னை நிலைப்படுத்தியபடி… தன் தந்தையிடமிருந்து தன்னை விடுவித்தபடி எழுந்தவள்…
“அப்பா… அம்மா கடைசி வரைக்கும் உங்க மனைவியாத்தான் இருந்தாங்க… இறந்தாங்க… அவங்க பண்ணிய ஒரே தவறு… உங்க மேல நம்பிக்கை வைக்காததுதான்… அது அவங்க தவறு இல்லை… அந்த நம்பிக்கையை அவங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் கொடுக்க தவறிட்டீங்க… ஒரு நூலிழைல அவங்க இழந்த நம்பிக்கை ” என்ற போதே அவள் கண்கள் கலங்கி இருக்க…
“இப்போ என் கழுத்துக்கு தூக்குக் கயிறு வருகிற இடத்தில நிற்கிறேன்…” உதடுகளை அழுந்த இறுக்கி தன்னை அடக்கிக் கொண்டவள்…
சந்தோஷுக்கே இப்போது கண்கள் கலங்கி விட… அதீனாவையே பார்த்தபடி இருந்தான்…
வசந்தியிடம் திரும்பினாள்…
“நீங்களும் தப்பு பண்ணலை… அப்படியே தப்பு பண்ணியிருந்தாலும்… உங்க பொண்ணு… அதை எல்லாம் போக்கிட்டா… “ என்றபடியே தான் கழட்டி வைத்திருந்த சந்தியாவின் மேல்க்கோட்டை எடுத்தவள்
சந்தியாவின் அருகே வந்திருந்தாள் இப்போது… அவளைப் பார்த்து புன்னகைத்தாள் பெரிதாக… சந்தியாவும் அவளைப் பார்த்து விரக்தியாக புன்னகைக்க…
அவள் கைகளைப் பிடித்து … ராகவ்வின் ஜெர்க்கினை சந்தியாவிடம் கொடுத்தபடியே
“உன் ரகுவோடது… உன்கிட்டயே வந்திருச்சு… இப்போ ஹேப்பியா” என்று சிரித்தபடியே சொன்ன போதே ராகவ்வின் தற்போதைய நிலை அதீனாவுக்குள் கவலையைக் கொண்டு வந்திருக்க… இருந்தும் அதைக் கண்களில் கொண்டு வராமல்
“உன் ரகுவைப் பார்த்தேன்… ” என்று மட்டும் சொல்ல… ரகு என்று அதீனா சொன்ன வார்த்தைகளில் சந்தியாவின் கண்களில் ஆயிரம் மின்னல்…
அதைப் பார்த்த அதீனா
“நாம ஒருத்தவங்க மேல வச்சிருக்கிற நம்பிக்கையை மட்டும் எப்போதும் விடக்கூடாது சந்தியா… நாம நேசிக்கிறவங்க நமக்காக வருவாங்கன்னு… கடைசி நொடி வரை நம்பிக்கையை வச்சுருக்கனும்… அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ… என் அம்மா ஒரு நொடில இழந்த நம்பிக்கை… எங்க வாழ்க்கையையே அழிச்சிருச்சு… அந்த தவறை நீ பண்ணிடாத…” என்ற போது… சந்தோஷ்… மிருணாளினி... வசந்திக்கு…. ஏன் சந்தியாவுக்குமே ஒன்றுமே புரியவில்லை…
அதற்கு மேல் அதீனா அங்கு இருக்க விரும்பவில்லை…
இப்போது கணேசனிடம் வர… அவரோஅவளது கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு விடாமல் அதீனாவை சோகத்தோடு பார்க்க…
“அப்பா… நான் போகனும்பா…” என்று அதீனா அவர் கைகளை விலக்கப் போக
“சிந்தும்மா… இனிமேல் அப்பா உன்னை விட மாட்டேண்டா” என்று தழுதழுக்க… அவரை ஆறுதல் படுத்த முடியாமல் தவித்த அதீனாவின் கண்களில் சந்தியாவின் அருகில் இருந்த சந்தோஷ் பார்வையில் பட.. அவனைத் தன் அருகில் வரச்சொல்ல…
சந்தோஷ்… மிருணாளினியுடன் சேர்ந்தே அவள் அருகில் வந்து நின்றிருந்தான் இப்போது…
அதீனாவுக்கு… மிருணாளினி சந்தோஷின் மனைவி என்பது சொல்லாமலேயே புரிய
ஏனோ… சந்தோஷின் மனைவியா என்று கேட்க தோணவில்லை அதீனாவுக்கு
“நீ… இவங்க மருமகளா” என்று கேட்டாள்… கணேசன் – வசந்தியைப் பொதுவாகக் காட்டி
மிருணாளினியும்…. தலையை ஆட்ட… மிருணாளினி - சந்தோஷை சேர்த்துக் காட்டி
“இவங்களுக்கு பொண்ணு பிறந்தா… என் பேர் வைங்க…“ என்ற போதே மிருணாளினி அதிர்ந்து அவளை நோக்க… வசந்தியிடம் திரும்பி …
“என் பேர் வைப்பீங்கதானே… அதுல உங்களுக்கு கௌரவக் குறைச்சல் இல்லையே” என்று சந்தேகமாகக் கேட்க…
சட்டென்று… மிருணாளினியின் கைகளைப் பிடித்து அவள் கைகளில் வைத்திருந்தார் வசந்தி…
என்ன நடக்கிறதென்று உணர்ந்து சந்தோஷ்… சுதாரிக்கும் முன்னரே…. இது நடந்து விட
“அம்மா” என்று வசந்தியை அதட்டல் போட…
சிவா இப்போது அதீனாவை அவசரப்படுத்த… வேகமாக தன் சத்தியத்தை அதீனாவின் கரங்களில் பதித்திருந்தாள் மிருணாளினி அவளையுமறியாமலேயே அந்த சூழ்நிலையின் தாக்கத்தில்…
அதீனா தந்தையிடம் அதன் பிறகு பேசவில்லை… கடைசியாக திரும்பி சந்தியாவைப் பார்த்து
“ஓய்… எதுக்கெடுத்தாலும் அழாத புரிஞ்சதா… இதை உன்கிட்ட சொல்லனும்னு தோணுச்சு எனக்கு… ஜெயில்ல உன் அழுகை சத்தம் என்னை அவ்வளவு டிஸ்டர்ப் பண்ணுச்சு…” என்று சந்தியாவை வம்பிழுப்பது போலச் சொன்னவள்… ஏனோ தெரியவில்லை… அவளின் அருகின் அருகே வந்து அவள் நெற்றியில் முத்தமிட… சந்தியாவின் கண்களின் ஓரங்களில் கண்ணீர்
“உனக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் சந்தியா… அந்த நம்பிக்கை மட்டும் உனக்குள்ள வச்சுக்கோ …” என்றவள்… அடுத்த நொடி மின்னலாக அந்த இடத்தை விட்டும் மறைந்திருந்தாள்
சிந்தியா அங்கிருந்து கிளம்பி விட… கணேசன் இடிந்து போய் அமர்ந்திருக்க… கணேசனைத் தவிர அத்தனை பேரும்… சந்தியாவின் அருகில் அமர்ந்திருக்க… நிரஞ்சனா அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருக்க…
வசந்தியின் மடியில் சந்தியா தலை வைத்திருந்தாள்… அன்னையின் கண்கள் வடித்த நீர் வழக்கம் போல சந்தியாவாக மீட்டெடுத்ததோ என்னவோ…
சந்தியாவுக்கு இப்போது ஓரளவு தெளிவு வந்திருக்க… கண்கள் வட்டமடித்தது… அது கடைசியாகச் சென்று வெங்கட்டிடம் நிற்க… அவனும் அவளைப் பார்க்க அவனைப் பார்த்த சந்தியாவின் கண்கள் சில நொடிகள் அதிர்ந்தது…
அவளின் அந்த அச்சப்பட்ட பார்வையில் வெங்கட்டின் தலை தானாகக் கவிழ…
“இவன் அறைய வந்த போதுதான் சிவா தடுத்து நிறுத்தி இருந்தான் அன்றைய விசாரணையில்… இவனெல்லாம் இங்கு இருக்கின்றான்… ரகு எங்கு போனான்” எரிச்சல் வந்திருந்தது சந்தியாவுக்கு…
அந்த எரிச்சல் தந்த கோபத்தை தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் காட்ட ஆரம்பித்து இருந்தாள் சந்தியா….
“நான் தான் வந்து சேர்ந்துட்டேனே… ஏன் என்னைச் சுத்தி அழுதுட்டு இருக்கீங்க… ரகு எங்க” சத்தமாக கோபப்பட்டுத்தான் பேசினாள்… ஆனால் அங்கு கேட்டவர்களுக்கோ… அது நலிந்த குரலாகவே ஒலித்தது…
சந்தியா இதில் எப்படி மாட்டினாள்…. என்று எல்லாவற்றையும் நிரஞ்சனா சொல்லச் சொல்ல அதைக் கேட்ட சந்தோஷ்… கை முஷ்டி இறுகி கோபத்தை அடக்கிக் கொண்டு இருக்க…
“ரகு எங்க…. யாரைக் கேட்டு அவன் இதுக்கெல்லாம் சம்மதிச்சான்… இப்போ எங்களை பார்க்க பயந்துட்டு எங்க ஒளிஞ்சுட்டு இருக்கான்… ஃபர்ஸ்ட் அவனை ஒரு வழி பண்றேன்… அதுக்கப்புறம் அந்த சிவாவுக்கு இருக்கு… “ எனும் போதே…
”அண்ணா… நான் தான்…” என்று சந்தியா அண்ணனின் கோபத்துக்கு பயந்தவளாக… மிரண்டு சொல்ல ஆரம்பிக்க
அவளைப் பேசவே விடவில்லை சந்தோஷ்… மிருணாளினியும் சமாதானத்துக்கு போக…
“உன் அண்ணனுக்கு சப்போர்ட் பண்றேன்னு… ஏதாவது சொன்ன… இவ்ளோ நடந்துருக்கு… பொண்டாட்டிய பண்ணாத தப்புக்கு… யாருக்காகவோ ஜெயிலுக்கு அனுப்பிட்டு… இவன்லாம்… ஆம்பளைனு.. த்தூ…” என்று நிறுத்தியவன்… எச்சரிக்கை காட்டி மனைவியையும் தள்ளி நிறுத்தினான் …
“என்ன பண்ணி வச்சுருக்காங்க… என் தங்கச்சிய பாருடி… நிற்க மூட முடியாமல்... பேசக் கூட முடியாமல்… இதெல்லாம் தெரியாமத்தான் உன் அண்ணா இருந்திருப்பானா… இப்படி பொண்டாட்டிய வேதனைல தள்ளி அவளைப் பார்த்துட்டு உயிரோட இருக்கிறதுக்கு அவன்” என்றவனுக்கு … அதற்கு மேல் பேச முடியவில்லை… ஆனாலும்… கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் …பல்லைக் கடித்தவனாக…
“இப்போ கூட பாரு… இந்தாளுக்கு எங்க மேல பாசம் இல்லை… அவ முக்கியம்னு… அவளுக்கு என்ன ஆச்சுனு ஓடி வந்தவர்… ஒரு நிமிசம் என் தங்கச்சி பக்கம் பார்வையை பார்த்தாரா…” என்ற போதே சந்தியாவுக்கும் இப்போது அழுகை வர…
வசந்தி… சந்தோஷை ஆறுதல் படுத்த நினைக்க…
“விடும்மா… இந்த கேவலமா வாழ்க்கைக்கு… அவர… அவருக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ விட்டு தொலச்சுருக்க… வேண்டியதுதானே… என்ன வாழ்க்கை நீங்க வாழ்ந்தீங்க…” என தாயைத் திட்டிக் கொண்டிருக்க… மகனின் வார்த்தைகளில் வசந்தி அழ ஆரம்பிக்க
இப்போது வசந்தியின் மகளுக்கு தாய் அழுவதைக் காண முடியவில்லை…
தாய் கலங்குவது தாள முடியாமல் சந்தியா எழ முயற்சிக்க… ஆனால் அது முடியாமல் போக… அனைவரும் அவளிடம் பதறி அருகில் போக.. வசந்தியும் இப்போது அழுவதை நிறுத்தி இருந்தாள்…
“ரகு எங்க” நிரஞ்சனாவிடம் கேட்கப் பிடிக்கவில்லைதான்… என்ன செய்வது… சிவாவும் இல்லை… வேறு யாரிடம் கேட்பது… வேறு வழியின்றி நிரஞ்சனாவிடம் கேட்க… தொண்டை வறண்டது போல பேசக்கூட சிரமமாக இருந்தது சந்தியாவுக்கு…
“தண்ணி” என்றாள் சைகையில்… எழுந்து உட்கார முயற்சி செய்தவளுக்கு... மிருணாளினியும் நிரஞ்சனாவும் உதவி புரிய… சந்தோஷ் தண்ணீரைக் கொடுக்க..
அதைக் குடித்து முடித்தவள்…
“எனக்கு ஒண்ணுமில்லை சந்தோஷ்… எனக்கு ஒண்ணும் ஆகாமல் இருக்கனும்னா… ரகுகிட்ட கூட்டிட்டு போங்க… அவன் எங்க… அதுக்கு ஏன் யாரும் பதில் சொல்ல மாட்டேங்கிறீங்க…” என்ற போதே….
நிரஞ்சனாவும்… வெங்கட்டும்… என்ன சொல்வதென்றே தெரியாமல்… ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க…
வெங்கட் உண்மையைச் சொல்ல வர… நிரஞ்சனா வேகமாக…
“ரகு… இந்த நிலமையில உன்னைப் பார்த்தார்னா… ரொம்ப கவலைப் படுவார்னு… ” என்ற போதே….
அவளை ‘போதும்’ என்பது போல கை மறித்து நிறுத்தியவள்…
“ரகு எங்க… உண்மையை மட்டும் சொல்லு… உன் பொய் வேஷத்தால நான் அனுபவிச்சது போதும் நிரஞ்சனா… ப்ளீஸ்… அவர் எங்க அதை மட்டும் சொல்லு” சொன்ன போதே அவள் கண்கள் நெருப்பைத்தான் கக்கியது…
ஆனால் மனம் தோழியின் பொய்யைக் கண்டுபிடித்த போதே… எதை எதையோ நினைத்தது… எங்கெங்கோ சென்றது…. தன்னைப் பார்க்க முதல் ஆளாக நிற்க வேண்டியவன்… நின்றிருப்பவன்… எங்கு போனான்… தொண்டைக்குள் ஆலகண்ட விசம் போல ஏதோ பாதியில் நின்று அவள் தொண்டையை அடைத்தது….
“சகி… “ என்ற ஒரு குரல் கேட்க… இவ்வளவு கஷ்டமா… தன்னை நோக்கி வாவென்று அழைக்கும் கரங்களுக்கு… இவ்வளவு போராட்டமா… தன்னை அந்த அறையில் இருந்து வெளியே அழைத்து வந்ததில் இருந்து… கண்கள் மூடி இருந்தாலும்… அவள் செவிகள் கூர்மையாகத்தானே இருந்தன… அந்த செவிகள் ஆவலாக கேட்க ஆசைப்பட்ட அந்த குரல்… இன்னும் அவளை வந்தடையவே இல்லையே…
“உனக்காக மட்டுமே இந்த உயிரைக் கையில் பிடித்து வந்திருக்கேன்… உன் சகியாக உன்னிடமே வந்துவிட்டேன்” என்று அவனைக் கட்டிக் கொண்டு மொத்தமாக அழுது முடித்து விட வேண்டும் என்று எண்ணி வந்தாளே தவிர… வேறு எதையுமே அவள் நினைக்கவில்லையே… இவர்களை எல்லாம் பார்த்துவிட்டு… அவனைப் பார்க்காமல் இருந்தால்… எனக்கு ஏன் எங்கெங்கோ எண்ணங்கள் போகின்றது…” தனக்குள் சொல்லிக்கொண்டவளுக்கு…. தவறிய மாங்கல்யம் இப்போது ஞாபகம் வந்து சேர… பல்லைக் கடித்து வந்த அழுகையை அடக்கிக் கொண்டாள்… அடக்கிக் கொண்டாள் என்று சொல்வதை விட…. அழக் கூடாது என்று வீம்பாக இருந்தாள்..
“ஒண்ணும் இருக்காது… ஒண்ணும் இருக்காது… அப்புறம் ஏன் எனக்கு அழுகை வரணும்” அழுகையை அடக்கி தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்… ஒரு முறை அல்ல… இரு முறை எல்ல… பலமுறை… இப்போது அவளுக்கு அவள் உடல் வாதனை எல்லாம் அவள் மூளைக்கு உறைக்கவே இல்லை…
இத்தனை பேர் இருக்க… சுகுமார், யசோதா இல்லாமல் இருக்க…. மிருணாளினியை உற்றுப் பார்த்தாள் சந்தியா… அவளின் பார்வையில்
“சந்தியா ஏதாவது வேணுமா… “ என்று அவசரமாக மிருணாளினி பார்க்க…
மிருணாளினி முகத்தில் இருந்த துக்கம் கவலை எல்லாம் இவளைப் பற்றியே என்பது போல் தான் தோன்றியது… கலக்கம் கொண்ட மனதில் எங்கோ மெல்லிய இதம் பரவியது… அது இன்னும் பரவ வேண்டும் போல இருக்க
“மாமா… அத்தை வரலை” என்ற போதே…
“அவங்களுக்குலாம் தெரியாது சந்தியா… சிந்தியாவை டிவில பார்த்து மாமா இங்க வரனும்னு சொன்னதால” என்ற போதே… ஜில்லென்ற மழை சந்தியாவுக்குள் பொழிய ஆரம்பித்து… அது இதயம் முழுவதும் பரவ ஆரம்பிக்க… சற்று முன் இருந்த பயம் எல்லாம் எங்கோ பறந்தோடி இருக்க… ராகவ்வுக்கு ஒன்றும் இல்லை… தனக்குள் உறுதிபடுத்திக் கொண்டாள்.. அதீனா கூட சொன்னாளே… ‘ரகுவைப் பார்த்தேன்’ என்று
அந்த வார்த்தைகள்…. இன்னும் கொஞ்சம் தெம்பை சந்தியாவுக்குள் கொண்டு வந்திருக்க… முதன் முதலாக தன் தந்தையைப் பார்க்க ஆரம்பித்தாள்… சிந்தியாவுக்கு கிடைத்தது தனக்கு கிடைக்குமா என்று…
கணேசனைப் பொறுத்தவரை… சந்தியாவை விட அவரது கவலை எல்லாம்… இப்போது சிந்தியாவிடம் தான் இருந்தது… தூக்கு கயிறென்று சொன்னாளே… இத்தனை வருடங்கள் கழித்து மகளைப் பார்த்தும்.. சில நிமிட அவசர அவசர சந்திப்பு இன்னும் வேதனையைக் கூட்ட… மீண்டும் சிந்தியாவை எப்படி பார்ப்பது… அந்த யோசனையில் இருந்தவருக்கு ஏதோ தோன்ற… தன்னையுமறியாமல் சந்தியாவின் புறம் திரும்பிப் பார்க்க… சந்தியாவின் கண்களில் கரகரவென கண்களில் கண்ணீர் முத்துக்கள் விழுந்தன தான்…
ஆனால்… ‘அப்பா’ என்று பாசத்தைக் கூட்டி அழைக்க முடியவில்லை அவளால்… கடமைக்காக மட்டுமே அவளிடமிருந்த அந்த வார்த்தைகள் இதுநாள் வரை வந்திருக்க… இன்று நெகிழ்ச்சியோடு அவரைக் கூப்பிட முடியாமல் ஏதோ ஒரு உணர்வு தடுத்தது…
கணேசனும் சந்தியாவையே பார்த்தபடியே தான் இருந்தார்… அந்த கண்களில் கலக்கம் இருந்ததே தவிர… அவள் அருகில் வரவில்லை… சந்தியாவை பாசத்தோடு பார்கக வேண்டும் என்று இவரும் நினைத்ததுமில்லை… அப்படி ஒரு எண்ணம் இதுவரை சந்தியாவுக்கும் ஏனோ வந்ததில்லை… இன்று இருவருக்குமே அவர்களை மீறி பாசம் தோன்றினாலும் இதுவரை இவர்களுக்கு இடையில் இருந்த சுவர் இன்றும் இருக்க அதை உடைத்து தந்தை மகள் என்ற உரிமைக்குள் நுழைய முடியவில்லை…
சந்தியாவுக்கு பெரிதாக வருத்தம் எல்லாம் வரவில்லை… தன் உணர்வுகளை எல்லாம் கொட்டி அழ ஆறுதலாக தன்னவன் தோள் இருக்கும் போது… வேறு எதற்காக தன்னை வருத்திக் கொள்ள வேண்டும்… தந்தைப் பாசத்தைக் கடந்தும் விட்டாள்… கணவன் பாசத்தைக் கண்டுபிடித்து… அதில் கட்டுண்டும் இருக்க வேறென்ன வேண்டும் அவளுக்கு… அன்னையின் தோள் மேல் சாய்ந்து கொண்டாள்… தன்னவனின் நினைவுகளோடு..
வெங்கட்டிடமும் நிரஞ்சவிடமும் வெகு தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்த சந்தோஷுக்கு திடிரென ஒன்று தோன்றியது…
ராகவ்வை வைத்து தங்கையை மிரட்டியிருப்பார்களோ… அவனுக்கும் இவர்களால் ஆபத்தோ… இந்தக் கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்த போது… அவனின் கோபம் இப்போது ராகவ் மேல் மொத்தமாக வடிந்திருக்க…
அதே நேரம் அதீனாவை அந்த அறையில் சேர்த்து விட்டு சிவாவும் இங்கு வந்திருக்க…
பாய்ந்து சந்தோஷ் சிவாவின் சட்டையைப் பிடித்திருந்தான்…
“ரகு எங்கடா என்னடா பண்ணி வச்சுருக்கீங்க… அவனை வச்சுத்தான்… என் தங்கையை இதுக்கு சம்மதம் சொல்ல வச்சீங்களா” என்ற போதே…
மிருணாளினியின் கண்களில் தன் அண்ணனுக்கு என்ன ஆயிற்றோ…’ என்ற பயம் முதன் முதலாக விரவ ஆரம்பிக்க… படபடத்த மனதோடு சந்தியாவைத் திரும்பிப் பார்க்க… சந்தியா அவளது கையைப் பிடித்து ஆறுதல் படுத்தினாள்…
ராகவ்வுக்கு ஒன்றுமில்லை என்பது போல… தன் அண்ணன் சொல்வது போல இங்கு யாரும் ரகுவை மிரட்டவெல்லாம் இல்லை என்று… மிருணாளினியை அமைதிப் படுத்த மிருணாளினியின் நெஞ்சம் சமாதானம் அடைந்திருந்தது…. சந்தியாவின் ஆறுதலில்
சந்தோஷின் பாய்ச்சலுக்கு எல்லாம் சிவா பதிலே சொல்லவில்லை… என்ன சொல்வது… சந்தோஷ் கேட்டது போல ரகுவை இவர்கள் மிரட்டவில்லை தான்… ஆனால் இப்போது ராகவ் இருக்கும் நிலைமைக்கு முழு முதல் காரணம் அவன் அன்றி வேறு யாரும் இல்லையே… காவல்துறை அதிகாரியான தன்னை ஒருவன் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்ட போதும் அவனால் தட்டிக் கேட்க முடியவில்லை… தன்னை அடக்கிக் கொண்டவனாக சந்தோஷிடம் பேச வரும் போதே அவனின் போன் அடிக்க…
கேட்டவனுக்கு இதயம் படபடவென்று அடித்தது… அறுவைச் சிகிச்சை அறையில் இருந்துதான் இவனுக்கு அழைப்பு வந்திருந்தது… ராகவ்வின் தற்போதைய நிலையைச் சொல்லி… அவனை அங்கு வரச்சொல்லி அழைத்திருக்க…
“கையை எடுங்க சந்தோஷ்” என்று வேகமாக சந்தோஷின் கையைத் தட்டி விட்டவனை… விடாமல் இப்போது சந்தோஷ் இறுக்கமாகப் பிடித்து தன் முன் இழுக்க… இப்போதைக்கு தன்னை இவன் விட மாட்டான் என்று சிவாவுக்குத் தோன்ற
“வெங்கட்… ராகவ்கிட்ட நீங்க போங்க… ப்ளட் தேவைனு என்னை வரச்சொன்னாங்க… இமீடியட்டா வரச் சொன்னாங்க… கோ க்யிக்.. என்னன்னு பாருங்க… நிரஞ்சனா நீயும் போ” என்று வேக வேகமாகச் சொல்லி சந்தோஷைத் தள்ளி நிறுத்த…
அவன் அடுத்த நொடி வெங்கட், நிரஞ்சனா இருவரும் அங்கிருந்து வெளியேறி இருக்க…
அத்தனை பேரும் ஒரே நேரத்தில் சிவாவைப் பார்க்க… சந்தோஷின் கைகள் இப்போது தளர்ந்திருந்தன… ஆனாலும் அவன் பிடி விலகவில்லை…
“ராகவ்வுக்கு என்ன ஆச்சு” சற்று முன் அவன் குரலில் இருந்த ஆவேசம் எல்லாம் எங்கோ காணாமல் போயிருந்தது… வார்த்தைகள் நடுக்கத்தோடு தெளிவில்லாமல் வர… சந்தோஷுக்கு பதில் சொல்ல வாய் திறந்தான் தான் சிவா…
ஆனால் அதற்கு முன்… சந்தியா… அவளின் நிலை…. நினைத்தபடியே சந்தியாவைப் பார்க்க… அவளோ… சிவாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்… ஆனால் அதில் அலைப்புறுதல் மட்டுமே…
சந்தியாவின் கண்கள் அங்கும் இங்கும் அலைந்தன… செவிகளோ… தான் கேட்ட வார்த்தைகளைத் தொடர்ந்து அதை ஆராய முடியவில்லை… சற்று முன் அடைந்த நிம்மதி எல்லாம் மனதில் இருந்து ஒரே அடியாக வெளியேறி போயிருக்க… அங்கு வெற்றிடம் மட்டுமே இருக்க… இருந்தும் அவள் நிதானம் தவறவில்லை… மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள்… அவளது இதயத்தில் இருந்து ஒரு எதிர்மறையான எண்ணம் கூட வரக் கூடாது என்பதை பதிய வைத்துக் கொண்டவள் தமனியும் சிரையும் இருக்கும் இரத்த நாளங்களை கொண்ட வெற்றுக் கூடாக மட்டுமே இதயத்தை கொண்டு வந்தவளாக…
கட்டிலில் இருந்து இறங்கி மெல்ல சிவாவின் அருகே வர… மிருணாளினியோ…. அங்கு அழுது கதற ஆரம்பித்திருந்திருந்தாள்… தன் அண்ணனுக்கு என்ன ஆயிற்றோ என்ற அச்சத்தில்
சந்தியா மிருணாளினியின் அழுகையைப் உணர்ந்த போதே… சிவாவைப் கெஞ்சலாகப் பார்த்தாள்… அந்தப் பார்வையில்…
“அவ அண்ணனுக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லேன்” என்ற அர்த்தம் அதில் பொதிந்திருக்க…
அவளின் தவிப்பான பார்வையில்… சிவாவின் கண்கள் இலேசாக கலங்க ஆரம்பித்தது...
அதைப் பார்த்த உடன் தொண்டைக்குள் இருந்து ஏதோ பீறிட்டு வருவது போல உணர்வு… ஆனாலும் அடக்கியவளாக…
சிவாவின் அருகில் வந்து நின்றவள்…
“ஏன்… என்னாச்சு ரகுவுக்கு…” வெறுமையாக வெளிவந்த அவளின் குரல் உயர்ந்திருந்தது… அதே நொடி மிருணாளினியின் அழுகை அவளுக்கு அவளின் நினைவோட்டங்களை அறுக்க ஆரம்பிக்க
“சந்தோஷ் மிருணா கிட்ட அழாம இருக்கச் சொல்லு…”
“அழாம இருக்கச் சொல்லு… சந்தோஷ்” சந்தியா தன் முயற்சியை எல்லாம் திரட்டி கத்திச் சொல்ல…. அப்போதும் மிருணாளினி அழுது கொண்டே இருக்க
சட்டென்று திரும்பி சந்தியா மிருணாளினியை முறைக்க… மிருணாவின் அழுகையை அடக்கிக் கொண்டவளாக அவளைப் பார்க்க
சிவா… நடந்தவற்றை சுருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தான்…
சிவா சொன்னவற்றை எல்லாம் கேட்டவளது மூளை விசயத்தை மட்டுமே கிரகித்துக் கொண்டது… அதன் பின் வேறொன்றுமே அவளுக்குள் தோன்றவில்லை… ஒரே நேரத்தில் சிந்தனைகளை அக்குவேறாக ஆணிவேறாக பிரித்து அலசி ஆராயும் அவளது மூளை… இன்று தான் கேட்ட விசயத்தை ஆராயவே இல்லை… ஏன் செய்தான்… எதற்கு அந்த கட்டிடத்திற்கு வந்தான்… ஆயிரம் கேள்விகள் அவளுக்குள் வந்திருக்க வேண்டும்.. ஏனோ வரவில்லை அவளுக்கு… மாறாக
“ரகுவைப் பார்க்கனும்… சிவா சார்… ஆப்ரேஷன் பண்ணினால் சரி ஆகிடும் தானே… ஏன் இவங்கள்ளாம் ஏன் அழறாங்க…” என்றவள் அப்போதும் கண்ணீரை விடவில்லை…
“ரகுவைப் பார்க்க வேண்டும்” இது மட்டுமே சிவாவிடம்… அவள் திரும்பத் திரும்ப உதிர்த்த வார்த்தைகள்
Comments