அத்தியாயம் 58
முதன் முறையாக அதீனாவின் நெஞ்சத்தில் பதட்டம்.. முகமெங்கும் வியர்வைத் துளிகள்… இதுவரை அவள் அடக்கி வைத்திருந்த அடிமனதின் உணர்ச்சிகள் எல்லாம் மேலெழுந்து வந்து கொண்டிருக்க… அடங்கு மனமே அடங்கு என்று சொல்லில் கொண்டாலும் அவளது மனது அடங்காமல் ஆர்ப்பரித்தது…
’அந்தப் பெண்…’ யோசிக்கும் போதே கண்கள் கரித்தது… அவளின் கழுத்தை நெறிக்க முயலும் போதே… உறக்கத்தில் இருந்த அவள் முகத்தைப் பார்த்த போது… அதீனாவால் அது இயலவில்லை… கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் இவளும் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை… குறைந்தபட்சம் அவளைப் பயமுறுத்தியாவது வைக்க வேண்டும் என்று நினைத்திருக்க… தான் என்ன செய்தாலும் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் உறக்கத்தில் இருந்த சந்தியாவைப் பார்க்க பார்க்க ஏனோ பழி வாங்கும் உணர்ச்சி வரவில்லை.. இதுவரை அவள் தன் மனதுக்குள் அடக்கி வைத்திருந்த மெல்லிய உணர்வுகள்கள் எல்லாம் அவள் கடினமான பாறைபோன்ற இதயத்தை உடைத்துக் கொண்டு வெளியே வர… சிறு வயதில் இவளைப் பார்த்த போது… அவள் நெற்றியில் கல்லை எறிந்து விட்டு… இப்போது உனக்கென்ன பாசம் என்று அவளது மனசாட்சி அவளிடம் கேட்க… சட்டென்று மனம் சொன்ன வார்த்தைகளில் அதீனா அதிர்ந்தாள்… அவளையுமறியாமல் அவள் ஞாபக அடுக்குகளில் இருந்த எண்ணங்கள் மனசாட்சியின் வார்த்தைகளாக வர… யாரோ ஒருத்தி தன்னைப் போல் இருக்கின்றாள் என்று, தான் நினைக்க… அவள் மனசாட்சி ஏன் அவள் சிறுவயதில் தான் பார்த்த அந்த பெண்ணோடு இவளை இணைக்கிறது. மனம் பரபரத்தது அதீனாவுக்கு….
வேகவேகமாக தன் முன் படுத்திருந்தவளின் முன் நெற்றியை மறைத்திருந்த முடிக்கற்றைகளை விலக்கி… வலதுபக்க நெற்றியைப் பார்க்க… அங்கிருந்த மிக மெல்லிய கீற்றலாக தழும்பு… அவள் யார் என்று இவளுக்கு நூறு சதிவிகிதம் பறைசாற்ற… அதீனாவின் கண்களிலோ… கண்ணீர் முதன் முதலாக வெகுநாட்களுக்குப் பிறகு…
அவளைக் கொல்ல நினைத்த கைகளோ… ஆதுரமாகத் தழுவியது அவளையுமறியாமல்
தான் தான் இப்படி ஆகி விட்டோம்… இவளுமா… என்று யோசித்த போதே… உன்னால் தான் இவளுக்கு இந்த நிலைமை என்று தோன்றும் போதே… அவள் காதுகள் கூர்மையாகின… யாரோ வரும் காலடி ஓசை கேட்க…. வேக வேகமாக சந்தியாவை அவள் சற்று தள்ளி படுக்க வைத்து விட்டு அந்த இடத்தைக் காலி செய்தவள்… அடுத்த சில நிமிடங்களிலேயே… தன் சிறை அறைக்கும் சென்று விட்டிருந்தாள்…
நிரஞ்சனாதான் இப்போது வந்திருந்தாள்… கூடவே சிவாவும்…
ராகவ்… சந்தியா என்ற வார்த்தைகள் இப்போது அவர்களின் உரையாடலில் இடம் பெற்றிருக்க… சந்தியா என்ற வார்த்தையில் அவளையுமறியாமல்… அவளது எண்ணங்கள் பின்னோக்கி சென்றன… சிந்தியாவாக…
---
“சிந்தியா” என்று அழைத்தபடியேதான் கணேசன் உள்ளே வர… அவரது குரலில் அவ்வளவு மகிழ்ச்சி.. பெருமை…
“அப்பா” என்றபடி கணேசனைப் பார்த்து ஓடிவந்த சிந்தியாவுக்கும் அதே மகிழ்ச்சி அவள் முகத்தில்…
”வாங்க வாங்க… பாருங்க பாருங்க… ” என்றபடி… தான் வாங்கிய சான்றிதழையும்… பதக்கத்தையும் காண்பிக்க… அதை எல்லாம் பார்த்தவர் உச்சி முகர்ந்தார் தன் மகளை…
“என் சிந்து குட்டிக்கு கிடைக்காம வேறு யாருக்கு கிடைக்கும்” என்று மகளை பாடச் சொல்லிக் கேட்க… சிந்தியாவும் தந்தை சொன்ன உடனே பாட ஆரம்பிக்க.. கண்மூடி மகள் பாடுவதைக் கேட்டு ரசிக்க ஆரம்பித்த கணேசனுக்கு… மனம் எங்கெங்கோ அலைபாய்ந்தது…
இந்த வீட்டுக்கும் வரும் போது மட்டுமே அவரின் மனம் காற்றைப் போல இலேசாக உணர்ந்தது… இந்த வீட்டில் அவரது அதிகாரங்கள் ஆட்சி செய்து அவருக்கானதை நிறைவேற்றிக் கொள்ளத் தேவையில்லை… தனக்காக தன் வரவிற்காக… தன் வார்த்தைக்காக மட்டுமே வாழும் இந்த ஜீவன்களோடு மட்டும் தன் வாழ்க்கை இருந்திருக்கலாமோ என்று தோன்றியது கணேசனுக்கு…
தாரகா… இவரைப் பார்த்தவுடன் அவள் முகத்தில் வரும் மகிழ்ச்சி… சிந்தியாவின் குதூகலம் இதெல்லாம் தான் சமுதாயத்திற்கு முன் காட்டிக்கொண்டிருக்கும் அந்த குடும்பத்தில் வருமா…
வசந்தியை நினைக்கும் போதே… அவளது இளக்காரமான பார்வை மட்டுமே அவர் ஞாபகத்திற்கு வரும்… அவள் பெற்ற அவள் மக்களோ அதற்கு மேல்… ஏனோ கொலைகாரனைப் பார்ப்பது போல பார்வை… இவன் ஒரு ராட்சசன் என்பது போல பட்டும் படாமலும்… அதிலும் சந்தியா… கணேசனைப் பார்த்தால் நாலடி தூரம் தள்ளியே நின்று விடுவாள்… காரணம் இல்லாமலும் இல்லை… வீட்டில் அடிக்கடி நடக்கும் சண்டை… அதில் ஆவேசம் தாளாமல் வசந்தியை அடித்த போதெல்லாம்… சந்தியா சந்தோஷ் இருவருமே அந்த இடத்தில் தான் இருப்பனர்…
போதாக்குறைக்கு… வசந்தி என்ன சொல்லி வைத்தாளோ தெரியவில்லை… என்று வசந்தி மேல் கோபம் வந்தாலும்… கணேசன் சந்தோஷிடமும்… சந்தியாவிடமும்.. முக்கியமாக சந்தியாவிடம் கணேசனும் நெருங்க நினைக்கவில்லை என்பதே உண்மை… அதைப் பற்றி அவருக்கு கவலையுமில்லை… அவருக்கு மகள் என்றால் நினைவுக்கு வருவது சிந்தியாதான்.. மகள் பாசம்… தனக்கு சிந்தியாவிடம் பூரணத்துவமாக கிடைக்கும்போது வசந்தி பெற்ற மக்களிடம் அதைத் தேட நினைக்கவில்லை…
“அப்பா மேடைக்கச்சேரி பண்ணலாமாப்பா….” போட்டியில் பாடிய பாடலை பாடி முடித்துவிட்டு தன் பெயர் பொறித்த தன் வீணையைத் தடவியபடியே மகள் கேட்க… தன் செல்ல மகளுக்கு என்ன பதில் சொல்வது என்று கணேசன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே
”ஆமாடி… இதுதான் நமக்கு குறைச்சல்” என்றவளிடம்…. முறைத்தார் கணேசன்… ஆனால் தன் மகளின் முன் தன் கோப முகத்தைக் காட்ட விரும்பாதவராக…
“சிந்தும்மா… நீ வெளில போ” என்று மகளை வெளியே அனுப்பியவர்… தாரகாவிடம் திரும்பி
“தாரகா… இது ஒளிவு மறைவான வாழ்க்கைதான்… ஆனால் சிந்தியா என் பொண்ணு… இதைச் சொல்ல நான் எப்போதும் தயங்க மாட்டேன்… நேரம் காலம் வரட்டும்… அந்த வசந்தியோட நான் வாழுகிற வாழ்க்கை… எனக்கு மூச்சு முட்டுது தாரகா… ஆனால் வேறு வழியில்லை… நான் இந்த சமுதாயத்தில எனக்குனு ஒரு இடம் பிடிக்கனும்னா… அந்த மாதிரியான குடும்பம் தேவை… நான் என் காலை ஊன்றி நின்ற பின்…. அவளை விட்டு அந்தச் ஜெயிலை விட்டு வந்து விடுகிறேன்” என்று முடிக்க…
தாரகாவும் அதை மறுத்து பதில் சொல்லவில்லை… இந்த வாழ்க்கை அவளுக்கு பெரிய அவமானமில்லை… திசைமாறிய வாழ்க்கை… ஏனெனில் அவளின் பதினெட்டு வயதிலேயே அவள் பெண்ணாக பல அவமானங்களை கடந்து வந்தவள்… அந்த சாக்கடை ஏனோ பிடிக்கவில்லை… அங்கிருந்து தப்பி இங்கு கணேசன் வேலை பார்த்த கடையில் வந்து சேர்ந்தவளுக்கு… கணேசனின் அன்பு கிடைக்க… அதை பற்று கோலாகப் பற்றி அவனுக்கு மனைவியாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் மறைமுக வாழ்க்கை… அவளைப் பொறுத்தவரை பேரின்ப வாழ்க்கைதான்… கணேசனும் அவளது பழைய வாழ்க்கை பற்றி எல்லாம் கண்டு கொள்ளவில்லை… இப்போது தனக்காக தன்னை மட்டுமே நேசிப்பவள்… அதே நேரம்… தாலி… அங்கீகாரம் இதெல்லாம் எதிர்பார்க்காத ஒருத்தி என சந்தோஷமாகத்தான் நாட்களை கடத்தி வந்தார்…. தாரகாவைத் திருமணம் செய்யும் என்ணம் எப்போதும் கணேசனுக்கு வரவே இல்லை… இந்த மாதிரி ஒரு பெண்ணை அவர்கள் குடும்பம் ஏற்கவே ஏற்காது… நன்றாகவேத் தெரியும்…
அது மட்டுமின்றி தாராகாவைப் பற்றி சொன்னால்…. அது தாரகாவிற்கு தான் இன்னும் ஆபத்து… இப்படி போய்க்கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் சேற்றில் முளைத்த செந்தாமரையாக அவர்களுக்கிடையே சிந்தியா வந்திருக்க… கணேசனுக்கு மகள் என்றால் அவ்வளவு பிரியம்தான்… ஆனாலும் அந்த உறவை வெளிச்சத்துக்கு கொண்டுவர அவருக்கும் தயக்கமே… தாராகவும் அவரைத் திருமணம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லையே தவிர… இந்த வாழ்க்கையும் நிரந்தரமில்லையோ என்ற எண்ணம் எப்போதும் அவளுக்குள் இருந்து கொண்டிருந்ததுதான்… இருந்தும் கணேசனோடு வாழ்ந்து குழந்தையையும் பெற்று விட்டாள்…
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் வசந்தி கணேசன் வாழ்க்கையில் நுழைந்தாள்
திடீரென்று ஊருக்கு போன இடத்தில்… உறவுக்காரப் பெண் வசந்தி திருமணத்தில் திடிரென்று பிரச்சனை ஏற்பட… வசந்தியை திருமணம் செய்யும் நிலை ஏற்பட்டு… திருமணமும் முடிய... அதுவரை ஏதோ ஒரு கடையில் வேலைக்காரனாக இருந்தவன் திடீரென்று கடை முதலாளி ஆகி விட… இப்போது கணேசன் இருதலைக் கொல்லி எறும்பாக தவிக்க ஆரம்பித்தான்…
வசந்தியின் குடும்பம்… அவர்கள் சுற்று வட்டாரத்தில் செல்வாக்கு மிகுந்தது… அந்தக் குடும்பத்துப் பெண்ணுக்கு தான் துரோகம் செய்தால்… ஒழுங்காக வாழ வைக்காமல் இருந்தால்… என்ன நடக்கும் என்று கணேசன் போராடிக் கொண்டிருக்க…வசந்தியே அவனுக்கு தீர்வையும் கொடுத்திருந்தாள்…
வசந்திக்கு சுத்தமாக கணேசனைப் பிடிக்கவில்லை… தன்னை விட கல்வியில்,பணத்தில், அந்தஸ்த்தில் குறைந்த கணேசனை அறவே வெறுக்க… கணேசனுக்கும் அது நல்லதாகவேப் போய்விட… இன்னும் தாரகா சிந்தியாவிடம் அவரின் நெருக்கம் அதிகரித்தது என்றே சொல்லலாம்… அதே நேரம் நாளுக்கு நாள் மனைவி தன்னை மதிக்காத அலட்சியபடுத்திய பாங்கு என வசந்தியிடம் வெறுப்பு கூடிக் கொண்டே இருக்க… மனைவி தன்னிடம் காட்டிய மெத்தனம்… அலட்சியம் ஒரு கட்டத்தில் வசந்தியிடம் அவர் ஆண்மகனென்பதை காட்டவும் வைத்தது… கணவனாக அவளை வெல்லவும் வைக்க… சந்தோஷ் சந்தியா என மக்கள் வசந்தியோடானா வாழ்க்கையிலும்…
வசந்தி தன் மீது காட்டிய அலட்சியம்… அவளிடம் அதிகாரத்தைக் காட்ட மட்டுமே செய்தது… தன் குரல் ஓங்கினால் வசந்தி அடங்குகிறாள் என்று எப்போது கணேசனுக்கு தெரிந்ததோ… அது முதலே… அதிகாரமும் கூடுதலாக கை நீட்டவும் செய்ய… ஆக மொத்தம் கணேசன் வசந்தி குடும்பம்.. குரங்கு கையில் கிடைத்த பூமாலை ஆகி இருந்தது… குழந்தைகளுக்கு இவர்களின் சண்டைதான் தினமும் காட்சிப் பொருளாக மாறி இருக்க… வசந்தி ஏட்டிக்கு போட்டியாக செய்து கணேசனிடம் சண்டைக்கு நின்று… கடைசியில் அவனிடம் அடி வாங்கி மூலையில் அழுவது மட்டுமே குழந்தைகளுக்கு தெரியும்…
தாய் பாவம் என்று மட்டுமே அந்தக் குழந்தைகள் தாயைப் பாவமாகப் பார்க்க ஆரம்பித்து இருந்தனர்… தந்தையை விரோதியாகவும் நினைக்க ஆரம்பித்தனர்…
வசந்திக்கு தாரகா பற்றி வெகு காலமாகத் தெரியவே வாய்ப்பில்லாமல் போயிருந்தது… தெரிந்திருந்தால் அப்போதே கணேசனை விட்டு வெளியே வந்திருப்பாளோ தெரியவில்லை… அடிக்கடி கணேசனோடு சண்டை போட்டுவிட்டு… குழந்தைகளோடு பிறந்த வீட்டில் போய் உட்கார்ந்து விடுவாள்… வசந்தி வீட்டிலும்… கணேசன் மேல் யாரும் பெரிதாக கோபப்படவில்லை… வசந்திக்குத்தான் கணேசனோடு வாழப்பிடிக்கவில்லை… அதனால் இப்படியெல்லாம் பன்ணுகிறாள் என்று இவளைத்தான் சமாதானம் செய்து அனுப்புவரே தவிர கணேசனிடம் குற்றம் கண்டுபிடிக்கவில்லை…
வசந்தி ஆசிரியர் வேலை பார்த்துக் கொண்டிருக்க…. வேறு வழியின்றி… சென்னைக்கு வந்து சேர்ந்து விடுவாள் … வசந்தி வாழ்க்கை இப்படி போய்க்கொண்டிருந்தது…
கணேசன் எல்லாவற்றையும் நினைத்தபடி பெருமூச்சொன்றை விட்டவனாக... தான் பார்த்து வந்த வியாபாரத்தில் முன்னேற நினைக்க… அவனால் முடியவில்லை… எங்கு போனாலும்… வசந்தியின் அண்ணன் தாமோதரனின் மைத்துனன் என்ற பெயரே முன்னிலையில் இருக்க... இவனுக்கென்று தனிச்சிறப்பு இல்லாமல் போனது அவனுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது…
கணேசன் அறியாதது இன்னொன்று… அதாவது கணேசனின் முன்கோபமும் எடுத்தெறிந்து பேசும் பழக்கமுமே அவனின் பல முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது என்பதே உண்மை… அந்த முன்கோபமும் அவரின் தாழ்வுமனப்பான்மையால் வந்தது என்பதே உண்மைக்குள் இருக்கும் உண்மை…
இப்படியாக போய்க்கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில்… கணேசனின் இன்னொரு வாழ்க்கை ஒருநாள் வசந்திக்கு தெரியவர… வசந்தி கணேசனிடம் சண்டை இட்டாளோ இல்லையோ… தன் அண்ணன் தாமோதரனிடம் தான் போய் நின்றிருந்தாள்… இதுநாள் வரை இவள் மேல்தான் தவறு என்பது போல இவள் மேல் குற்றம் சாட்டிய குடும்பத்திடம், இதுதான் தன் குடும்பம் தன்னை வாழ வைத்த விதமா… நியாயம் கேட்க போனாள் தான்…
ஆனால் அப்போதுதான் உணர்ந்தாள்… தான் கணேசனை வேண்டமென்று சொல்வது வேறு….
ஆனால் கணேசனுக்கு என்ன தகுதி இருக்கிறது… தன்னை அலட்சியப்படுத்தி இன்னொருத்தியுடன் இருப்பது என்பதை அவளால் தாங்க முடியவில்லை.. கணேசன் தனக்குத் துரோகம் செய்து விட்டான் என்பதை விட இவளில்லாத வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கின்றான்… என்பதே அவளுக்கு பெரும் கோபத்தைக் கொடுக்க… குடும்பத்தினரிடம் நீதி கேட்கச் சென்றவள்… நேராக தன் அண்ணனிடம் சென்றாள்… கணேசனைப் பற்றி … அவனது இன்னொரு வாழ்க்கையைப் பற்றி சொல்ல… தன் சகோதரியை அமைதிப்படுத்தியவன்… என்ன செய்தால் அவளுக்கு நிம்மதி என்று கேட்க… வசந்தி தன் எண்ணத்தையும் சொன்னாள்…
அந்தக் குடும்பத்தை கணேசனிடமிருந்து ஒரே அடியாக விலக்க வேண்டுமென்று… தாமோதரனும்… அதற்கான நேரம் பார்த்தவர்… கணேசன் ஊரில் இல்லாத சமயம்… கூடுதலாக தாரகா முன்னே இருந்த நிலைமையும் அவருக்கும் தெரிந்திருக்க… அவரின் செல்வாக்கப் பயன்படுத்தினதோடு மட்டுமல்லாமல்… கூடுதலாக போலிசையும் வைத்து தாரகாவை மிரட்ட… எல்லாவற்றையும் ஆயுதமாக பயன்படுத்தி யாருமற்ற அநாதையான அந்தப் பெண்ணை… எல்லா வழியிலும் ப்ளாக் மெயில் செய்தனர் வசந்தியும் தாமோதரனும்..
கணேசனும் பெரிய ஆள் இல்லையே…. இவர்களை மீறி தன்னைக் காப்பான் என்றும் தனக்காக இவர்களோடு போராடுவான் என்று தாராகவால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை… ஏனோ அந்த நம்பிக்கையை கணேசன் அவளுக்குள் விதைக்கவில்லை
கணேசன் வாழ்க்கையில் இருந்து போனால்… தாய்க்கும் மகளுக்கும் உயிர் மிஞ்சும்… இல்லையென்றால் என்னவென்று கேட்க நாதி இல்லாத அவர்கள் இருவரும் அநாதைப் பிணமாகத்தான் மிதப்பர்… என்று அடியாட்களை வைத்து மிரட்ட… சிந்தியாவிற்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை… யார் யாரோ வருகிறார்கள்… தன் அன்னையை மிரட்டுகிறார்கள்.. தன் அப்பாவிடம் பேச முடியவில்லை என்று ஒண்றும் புரியாமல் மிரண்டு போயிருந்தாள்…
தாரகா மிகவும் யோசித்தாள்… சொல்லப் போனால் கணேசனுடனுனான இந்த குடும்ப வாழ்க்கை இனி தொடராது என்று சர்வ நிச்சயமாகவேத் தோன்றியது… இவர்கள் மிரட்டியதால் மட்டுமல்ல… கணேசன் மீது நம்பிக்கை இல்லை அவளுக்கு… அதுவே உண்மை… ஆனால் கணேசன் அப்படி நினைக்கவில்லை என்பதை அவள் அறியவில்லை… எப்பாடு பட்டாவது தாரகா சிந்தியாவை தன் வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ளத்தான் நினைத்தான்… ஏன் அவர்கள் மட்டுமே தன் வாழ்க்கை என்று நினைத்தான்… ஆனால் தாரகா ஏனோ கணேசன் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்பதை கணேசன் அறியாமலே போனான்…
தாரகாவுக்கு கணேசனை விட்டும் போவதில் கூட பிரச்சனையில்லை… ஆனால் பதினம வயதின் ஆரம்பகட்டத்தில் இருக்கும் தன் மகளோடு எங்கு போவது… தான் வாழ்ந்த அந்த அசுத்த வாழ்க்கை தன் மகள் மீதும் திணிக்கப்படுமே… கணேசனின் வாழ்க்கையில் வசந்திக்கு முன்னமே வந்தாள் தான்… ஆனால் முறையாக வந்தாளா… அவள் செய்தது எல்லாம் தவறாகி விடுமா… யோசித்தாள்… யோசித்தாள்… முடிவுக்கும் வந்தாள்… குறைந்த பட்சம் தன் மகளையாவது கணேசனிடம் ஒப்படைத்து விடுவோம் என்று… ஆனால் எப்படி என்று தெரியவில்லை
தாரகாவுக்குத் தெரியும்… கணேசனுக்கு சிந்தியா என்றால் உயிர் என்று…. ஏனோ வசந்தியிடம் போய் பேசினால் சிந்தியாவின் தீர்வு கிடைக்கும் என்றே தோன்றியது… வசந்தியைப் பார்த்தால் பிரச்சனை தீரும் என்று தோன்ற… வசந்தியைப் பார்க்க முடிவு செய்துவிட்டு… அதன் பின்…கடைசியாக… தாமோதரனிடம் சரணடைந்தாள்… கணேசனை விட்டுப் போய்விடுவதாகச் சொன்னவள்… தன் மகளை கணேசனிடமே ஒப்படைக்க முடிவு செய்தவளாக… வசந்தியையும் பார்க்கச் சென்றாள் தாரகா…
---
கிட்டத்தட்ட காலைவேளை 11 மணி… வசந்தி அப்படியே அமர்ந்திருந்தாள்… தாமோதரனிடமிருந்து கால் வந்திருந்தது… இன்றே தாரகா கிளம்புகிறாள்… இனி கணேசன் வாழ்க்கையில் அவள் குறுக்கீடு இருக்காது… அதே நேரம் வசந்தியும் இந்த வாழ்க்கையை விட்டு வெளியே வரும் முடிவு எடுக்கக் கூடாது என்று வேறு அறிவுரை… இவள் ஒழுங்காக இருந்திருந்தால் கணேசன் தன் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டாள் என்ற வழக்கமான கண்டிப்பும்… கணேசனைப் பற்றி வெளியே தெரிந்தால்… போகப் போவது அவன் மானம் மட்டுமல்ல… தங்கள் குடும்ப மானமும் தான்… என்று தனக்கும் தன் சகோதரியும் மட்டுமே தெரிந்த கணேசனின் அத்தனை விசயங்களை மற்ற அனைவரின் கண் பார்வையிலும் இருந்து மறைத்து வைத்தார் தாமோதரன்…
ஏனோ மனம் இன்னும் திருப்தி அடையவில்லை வசந்திக்கு.. கண்களில் நீர் வழிய வசந்தி அமர்ந்திருந்தாள்…
திவாகரும் சந்தோஷும் வீட்டில் இல்லை… சந்தியா மற்றும் வசந்தி மட்டுமே
திவாகர் வசந்தி வீட்டில் இருந்துதான் கல்லூரிப் படித்துக் கொண்டிருந்தான்… வசந்தி வீட்டில் அடிக்கடி பிரச்சனை வர… திவாகர் அங்கிருந்தால்… கணேசன் கொஞ்சம் அடக்கி வாசிப்பான் என்று திவாகரை அங்கு தங்கியே கல்லூரிக்குப் போக வைத்திருந்தார் தாமோதரன்.. அது போலவே திவாகர் சென்ற பின் வசந்தி சண்டை பிரச்சனை என்று அடிக்கடி தன் பிறந்த வீட்டுக்கு வருவதும் குறைந்துதான் போய் இருந்தது…
யாருமில்லாத அன்றைய தினத்தில் தான் மற்றும் அன்னை மட்டுமே… தன் தாய் இருந்த இடத்தை விட்டு நகராமல் அழுதுகொண்டிருக்க… சிறு பெண்ணான சந்தியாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை… அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வீட்டுக்கு வருவாள்… தன் அன்னை அழுது கொண்டிருப்பதை சில நிமிடங்கள் பார்ப்பாள்… பிறகு மீண்டும் வெளியே விளையாடப் போய்விடுவாள்… காலையில் இருந்தே இதைத்தான் செய்து கொண்டிருந்தாள்… அவள் தந்தை இல்லாத இந்த ஒரு வாரம் அவளுக்கு ஜாலியாக இருந்தது… ஆனாலும் அன்னை அழுவதும் தாங்க முடியவில்லை… என்ன விசயம் என்றும் தெரியவில்லை… திவாகருக்கும்.. சந்தோஷுக்குமே தெரியவில்லை என்கிற போது இவளுக்குத் தெரியப் போகிறதா… இந்த ஒரு வாரமாக வசந்தி ஒழுங்காக சமைக்கவே இல்லை…. திவாகரிடம் கடையில் வாங்கி வரச் சொல்லி எப்படியோ சமாளித்துக் கொண்டிருக்க… இன்று அதற்கும் வேட்டு… திவாகரும் சந்தோஷும் கிரிக்கெட் என்று வெளியே சென்று விட…. சந்தியாவுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது… காலையில் எழுந்ததில் இருந்து சாப்பிடவே இல்லை…
தன் அன்னை இருந்த நிலையில் அவளிடம் கேட்க வேறு பயம்… அடி விழுமோ என்று… அதற்கு பயந்து… ஃபிரிட்ஜில் இருந்து கிடைத்த நொறுக்குத்தீனிகளை எல்லாம் தின்று குவித்தவளுக்கு அப்போதும் பசி அடங்கவில்லை… அதே நேரம் அன்னையிடமும் சென்று கேட்க மனதில்லை… இப்படியே ஓட்டிக் கொண்டிருக்க… ஒரு கட்டத்தில் பசி பொறுக்க முடியாமல்… மேகி பாக்கெட்டை எடுத்தவள்… டீவியில் குழந்தைகளே இதைச் செய்ய பார்த்திருந்தவளுக்கு தானே அடுப்படிக்குச் சென்று… வாணலியில் தண்ணீரை ஊற்றி… அதில் போட வேகவே இல்லை… அடுப்பைப் பற்ற வைத்தால்தானே அது வேகும்… வேறு வழியின்றி ஊறிய நூடுல்ஸை எடுத்து தண்ணீரை ஊற்றிவிட்டு… கையில் மசாலாவைக் கொட்டிக் கொண்டு ஊறிய நூடுல்ஸை சாப்பிட்டுப் பார்க்க… அது கூட அந்தப் பசிக்கு நன்றாகத்தான் இருந்தது.
சந்தியாவுக்கு மிகப் பெருமையாக இருந்தது… தானே சமையல் செய்து விட்டோம் என்று… அந்தப் பெருமையில் வேகவேகமாக தன் அன்னையிடம் வந்தவள்… தன்னைச் சட்டை செய்யாமல் அமர்ந்திருந்த தன் அன்னையிடம் …
“அம்மா.. நானே செஞ்சேன்.. நீயும் சாப்பிடு” என்று நூடுல்ஸைக் காட்டப் பதறிப் பார்வை பார்த்தாள் வசந்தி… வேக வேகமாக அடுப்படிக்குள் சென்று பார்க்க… அங்கு கேஸ் எல்லாம் ஆஃப் செய்யப்பட்டு இருக்க.. நிதானத்திற்கு வந்தவளுக்கு இப்போது மகள் மீது கோபம் வர… தன் அத்தனை கோபத்தையும் மகள் மீது காட்டியும் வைத்தாள்…
அழுதபடியே… நூடுல்சையும் சாப்பிட்டு முடித்தவளுக்கு…
“போ… உன்கூட சண்டை… நீயும் நல்ல அம்மா இல்லை… “ என்று அழுகையோடு கோபித்துக் கொண்டே வெளியே போக அப்போது தாரகாவும்… சிந்தியாவும் வெளியே நின்றிருந்தனர்…
தன் முன் வீணையோடு நின்றவளைப் பார்த்தாளோ இல்லையோ… வீணையைப் பார்த்த சந்தியாவுக்கு அவ்வளவு சந்தோஷம்…
“ஹை வீணை…” என்று தொட்டுப் பார்க்கப் போக… வேகமாக சிந்தியா அதை அவள் புறமிருந்து திருப்ப… உதட்டைப் பிதுக்கினாள் சிந்தியா…
பின் தன் முன் நின்றிருந்த பெரியவளைப் பார்த்தவள்…
“யாரைப் பார்க்கனும்… அம்மாவையா… அம்மா அழுதுட்டு இருக்காங்களே… “ என்ற போதே சந்தியாவுக்கும் அழுகை வர… இருந்தும் உள்ளே வந்தவள்…
“வசந்தி… உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க… ” என்று மட்டும் சொல்லி விட்டு அன்னை மேல் தனக்கு கோபம் என்பதால்… முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு….
“நான் விளையாடப் போறேன்.. நீ கூப்பிட்டாலும் வர மாட்டேன் போ” என்று சொல்லியபடி வெளியே போய் விட்டாள்…
அதே நேரம் தாரகா , சிந்தியாவோடு அந்த வீட்டுக்குள் நுழைந்தாள்…. இருவரையும் பார்த்த வசந்தியோ முகமெங்கும் அருவருப்போடு பார்க்க…. தாரகா அந்த பார்வையை எல்லாம் லட்சியம் செய்யவே இல்லை…
சிந்தியாவோ… அந்த வீட்டை மட்டுமே பார்வை பார்த்தபடி இருந்தாள்… கணேசன் வசந்தி திருமண புகைப்படம்... மற்றொரு புகைப்படத்தில் சந்தியா சந்தோஷ் இருவர் மட்டுமே… அங்கேயே பார்வை நிலைத்திருக்க… முதன் முதலாக அதுவரை தனக்கு மட்டுமே தன் தந்தை என்ற உரிமை… அவளிடமிருந்து கை நழுவியது போல் இருக்க…ஏனோ அவளால் அதற்கு மேல் ஒன்றும் யோசிக்க முடியவில்லை… இங்கு வருவதற்கு முன் அவள் அன்னை… இனி அந்த வீடுதான் உன் வீடு… உன் அப்பா மட்டும் தான் இனி உனக்கு என ஏதேதோ சொல்லிக் கூட்டிக் கொண்டுவர…
”எப்போதாவது உன் அப்பா இனி உன்னை வந்து பார்க்க மாட்டார்… எப்போதும் உன் அப்பாவின் அருகில் இருக்கலாம்” என்ற வார்த்தைகளிலேயே சிந்தியாவுக்கு மற்றதெல்லாம் யோசிக்கத் தோணவில்லை… அவளுக்கு தன் தந்தையோடு எப்போதும் இருக்கலாம் என்ற எண்ணமே அப்படி ஒரு சந்தோஷத்தைத் தந்திருக்க… பார்த்த வசந்தியின் புகைப்படம் அவளை உறுத்த வில்லை… மாறாக பார்த்த சந்தியா சந்தோஷ் புகைப்படங்களைத்தான் வெறுத்தாள்… அந்த வயதிற்கு அவளுக்குத் தெரிந்தது இதுதான்… தன் அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் இருக்கின்றது என்பது மட்டுமே…
”தான் இனி இங்கே வா தங்கப் போகிறோம்” என்று யோசனையிலேயே உழன்றவளை தாயின் குரல் மீண்டும் இழுக்க…
”வசந்தி… எனக்கு வாழ்க்கைப் பிச்சை நான் கேட்கலை.. அந்த அளவு பேராசையும் எனக்கு இல்லை… அவ்வளவு மோசமான பெண்ணும் இல்லை… ஆனால் இந்தப் பெண்… இது கணேசனோட ரத்தம்… இவள என்னோட கூட்டிட்டு போனால்அவங்க அப்பா இவளுக்கு கொடுக்க நினைத்த வாழ்க்கையை … என்னால , கொடுக்க முடியாது… அவர் பொண்ணை அவர்கிட்டேயே விட்டுட்டு போகிறேன்… இதுக்கு மட்டும் சரின்னு சொல்லுங்க… எனக்கு வேறு எதுவும் வேண்டாம்” என்று வசந்தியின் கைபற்றி … தாரகா கைகூப்பி தொழ..
”ச்சீய்… என்னைத் தொடாத… நீயே ஒரு சாக்கடை… அதுதானே உன் உடம்பிலயும் ஓடும்… அவளை என்கிட்ட விட்டுட்டு போகிறாயா…” இளக்காரமாக வசந்தி தாரகாவைப் பார்க்க…
“இவளை… இங்க நீங்க பொண்ணா வச்சுக்கிருவீங்களோ… இல்லை வேலைக்காரியா வச்சுக்குருவீங்களோ… இதுக்கு மட்டும் சரின்னு சொல்லுங்க வசந்தி… “ என்று தாரகா சொன்னாலும் கணேசன் மகளை விடமாட்டார் என்றே தோன்றியது தாரகாவுக்கு… அதே நேரம் மகள் திறமையுள்ளவள்… குடும்ப கட்டமைப்பு, பாதுகாப்பு மட்டும் கிடைத்தாள் போதும்… வாழ்க்கையில் எப்படியும் முன்னேறி விடுவாள் என்றே தோன்றியது… அதனாலேயே இந்த வார்த்தைகளையும் வசந்தியிடம் சொன்னாள் தாரகா
அப்போதும் வசந்தி அமைதியாக இருக்க…
”நான் கணேசன் பக்கம் தலை வைத்துகூடப் படுக்க மாட்டேன்… என்னை நம்புங்க வசந்தி”
இப்போது தாராகாவின் வார்த்தைகளில் வசந்தி நக்கலாக சிரிக்க ஆரம்பித்தாள்… பின்
“அந்தாளைப் பற்றி பேசாத… அவருக்காகத்தான் தான் உன்கிட்ட போராடிட்டு இருக்கேன்னு நினைத்தாயா… அவரை எப்போதும் நான் என் புருசனா நினைத்ததுமில்லை… நினைக்கவும் மாட்டேன்… இப்போ கூட அவர் இல்லாமல் என்னால வாழ முடியும்… ஆனாலும் அவரை அவ்வளவு ஈஸியா விட மாட்டேன்… நானும் அவர் கூட வாழ மாட்டேன்… அவரையும் வாழ விட மாட்டேன்” வெறித்தனமாகக் கத்திய வசந்தியை இறைஞ்சலாகக் பார்த்த தாரகா… சிந்தியாவுக்காக எவ்வளவோ கெஞ்ச… எதிலுமே மனம் இறங்க வில்லை வசந்தி…
என்ன ஒரு தைரியம் இருந்தால்… இப்படி வந்து கேட்பாள்… அப்படி என்ன தகுதி இருக்கின்றது அவளுக்கு…. என்று சிந்தியாவைப் பார்க்க… சிந்தியாவும் வசந்தியைப் பார்த்தாள்… தாரகாவின் சிறு சாயல் கூட அந்தப் பெண்ணிடம் இல்லை… இன்னும் சொல்லப் போனால்… தன் மகள் வளர்ந்தால் இவள் போல் இருப்பாளோ… இல்லவே இல்லை.. இருக்காது… இருக்கவும் கூடாது என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள்.. இருவரையும் வெளியே போகச் சொல்ல…
தாரகா வேறு வழியின்றி… வசந்தியின் காலில் விழ… அவளை அலட்சியபடுத்தியவளாக
“எதெது எங்கெங்கு இருக்க வேண்டுமோ… அதது… அங்குதான் இருக்க வேண்டும்.. அதுமாதிரிதான் இவளும்… என் பிள்ளைகளோட இவள சமமா வைக்க வேண்டுமா… ” தீக்கங்குகளை வசந்தி அள்ளி வீச…
தாரகா அதற்கு மேல் பேசவில்லை… கண்களைத் துடைத்தவள்…
“இதுதான் உன் முடிவா” என்று வசந்தியைப் பார்த்தவள்... சிந்தியாவை முன் நிறுத்தி… உனக்கும் ஒரு பொண்ணு இருக்குதானே… என்று நேருக்கு நேராக நிறுத்தி கேட்க…
வசந்தி உதட்டைச் சுழித்தாள் இகழ்ச்சியாக…
”நீ பதில் சொல்லனும் வசந்தி….” என்ற போதே…
“தராதரம் இல்லாதவள்ளாம் சாபம் விட வந்துட்டாங்க” என்று வசந்தி முணுமுணுக்க…. இருந்தும் தாரகா சிரித்தபடி….
“என்னைப் பற்றி… நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்க… நான் உன் வாழ்க்கையைப் பாழாக்கலை… அது உனக்கும் தெரியும்” என்று சிந்தியாவை இழுத்துக் கொண்டு போக… அவளைத் திரும்பி திரும்பி பார்த்தபடி போன சிந்தியாவை வசந்தி வெறித்த பார்வை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க…
”அம்மா… அப்பா கிட்ட பேசலை…” என்று சிந்தியா கேட்க ஆரம்பிக்க…
“இனி நீ தாரகவோட பொண்ணு மட்டும் தான்… “ என்று தாரகா இழுத்துக் கொண்டு போக.. சிந்தியாவுக்கு இப்போது அழுகை வந்திருக்க…
தன் தந்தையை காண முடியாத ஏக்கத்தோடு சிந்தியா… வெளியில் விட்டு வைத்திருந்த வீணையை கையில் எடுக்க... தாரகா கோபத்தோடு அந்த வீணையை அவள் கையிலிருந்து பிடுங்கி… தூக்கி எறிந்தவள் மனதில் அப்படி ஒரு ஆவேசம்…
என்ன கேட்டோம் இந்த வசந்தியிடம்… தன் வாழ்க்கைக்காகவா கெஞ்சினோம்… இந்த சிறு குழந்தைக்காக… அதுவும் பெண் குழந்தைக்காக மட்டும்தானே கெஞ்சினோம்… தன்னாலும் தன் மகளை வாழ வைக்க முடியும்… ஆனால் தன்னுடைய பழைய வாழ்க்கை முறைக்கு பயந்துதானே இப்படி கேட்டோம்… அது தன் மகளை பாதித்து விடக்கூடாது என்றுதானே கேட்டோம்… இப்படி இந்தக் குழந்தையின் வாழ்க்கையை கேள்விக் குறியாக ஆக்கி விட்டாளே… மனதோடு சபித்தாள் வசந்தியை தாரகா…
”என் பிள்ளையை இப்படி நடுத்தெருவில் நிற்க வைத்தவளின் பிள்ளைகள் மட்டும் நன்றாக இருப்பார்களோ…”
கண்களில் நீரோடு… ”தனக்கு பிடிக்காத தன் பழைய வாழ்க்கைக்கு தான் திரும்ப போக வேண்டுமா…” என்ற உள்ளம் முழுவதும் வேதனையோடு சாபம் விட்டுத்தான் தாரகா அங்கிருந்து போனாள்…
மாதவிகளின் சாபமும் பலிக்குமோ..
மாதவிகளின் கோபமும் கோவலன்கள் மேல் இல்லை!!!… என்ன சொல்ல… தாரகாவின் சாபங்கள் வசந்தி பெற்ற பிள்ளைகளை பாதித்து விட்டதா??…
அதன் பின்… தன் மகளை வெறியோடு ஆவேசத்தோடு இழுத்துக் கொண்டு தாரகா வெளியேறிவிட … சிந்தியாவுக்குள் அப்படி ஒரு ஆவேசம்… தன் தாய் மேல்… ஆனாலும் எதுவுமே பண்ண முடியாத வயது… தன் தாய் முன்னால் போக… அவள் சில அடிகள் தள்ளி அவள் பின்னாலேயே இறுக்கமாகவே வர…
சற்று முன் பார்த்த அந்த சிறு பெண்… சந்தியாதான்…
இவளைப் பார்த்து சினேகமாக… புன்னகைக்க…. சிந்தியாவுக்குள் அடக்கி வைத்த ஆத்திரம்… தன் தந்தை இவளுக்கும் தந்தை… தன் பாசத்தை இவளும் அனுபவிக்கின்றாள்… இனி இவள் மட்டுமே அனுபவிக்கப் போகின்றாள் என்ற கோபம்.. என எல்லாம் சேர… அவளுக்கு அப்படி ஒரு கொலைவெறி… ஏன் என்றே தெரியாத வெறி… அதிலும் அவள் தன்னைப் பார்த்து சிரித்தபோது அந்த புன்னகை முகம் அவளுக்குள் இன்னும் இன்னும் கொலை வெறியை அவளுக்குள் அதிகப்படுத்த… வேகமாக சுற்றும் முற்றும் பார்த்தாள் சிந்தியா.. அருகில் கட்டடம் கட்டுவதற்காக கூழாங்கற்கள்… போடப்பட்டிருக்க… அதில் பெரிய கல்லை எடுத்தவள்… அந்தச் சிறுமியை நோக்கி எறிய… குறி தப்பாமல் அவள் வலது நெற்றிப் பொட்டைப் பதம் பார்க்க…
அந்தச் சிறுமி… “அம்மா” குருதி வழிந்த என்று நெற்றிப் பொட்டை கையில் பிடித்தவாறே கீழே சரிய.. அதைப் பார்த்த சிந்தியாவுக்குள் இப்போது புன்னகை வந்தது… அதில் குரூரம் மட்டுமே நிறைந்து வழிந்தது…. அடுத்து அங்கு மற்ற குழந்தைகள் கூடுவதற்குள்… வேகமாக… தாரகாவிடம் வந்து சேர்ந்தவள்.. அதன் பிறகு நடந்ததெல்லாம் அவளின் மனதை இன்னும் இன்னும் இறுக வைத்த குரூரங்களே…கொடுமைகளே நடந்தன…
தாய் பழைய வாழ்க்கை வாழ வில்லைதான்… எங்கு ஓடினாலும்… ஆனால் பழைய வாழ்க்கையின் அடையாளங்கள் தாராகாவை விட்டு போகவே இல்லை… எங்கு சென்றாலும் அவள் ஒரு விபச்சாரி என்றே முன்னிருத்தப்பட்டாள்… அந்த வாழ்க்கைக்குத் திரும்பாத போதும்…
தாரகாவும் அதிக நாட்கள் வாழவில்லை… மனம் வெறுத்து, வாழ்க்கையும் வெறுத்து… ஒரு கட்டத்தில் போயும் சேர்ந்து விட்டாள்… இறக்கும் போது கூட தன் மகள் இப்படி தனியாக நிற்கிறாளே… என்று வசந்தியைத்தான் இன்னும் வெறுத்தாள்…
கடைசியில்… யாருமில்லாத… அநாதை ஆகி இருந்தாள் சிந்தியா… ஆக்கப்பட்டிருந்தாள் என்றே சொல்ல வேண்டும்…
அடிமனதில் என்றாவது தந்தையைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் இப்போதும் இருக்கின்றது… அவருக்கு ஏற்கனவே குடும்பம் இருக்கின்றது, பிள்ளைகள் இருக்கின்றது என்ற போதிலும்… கணேசனின் பாசம் சிந்தியாவுக்கு எப்போதும் பாசாங்காகவே தெரிந்ததில்லை… அன்று மட்டும் தன் தந்தையைப் பார்த்திருந்தால்… தந்தை தங்களை போக விட்டிருந்திருக்க மாட்டார் என்றே தோன்றியது…
நினைவுகளை அசைபோட்டபடியே இருந்தவளுக்கு கண்களில் ஏனோ அவளையுமறியாமல் கண்ணீர் வழிய… அதே நேரம் அதைத் துடைக்கவும் நினைக்கவில்லை…. வெகு நாட்களுக்குப் பிறகு அழுகின்றாள்… மனம் ஏனோ மெல்ல இளக ஆரம்பிக்க… அது அவளுக்கும் பிடித்திருக்க… அதற்கு காரணமான அழுகையும் அவளுக்கு இன்று ஏனோ பிடித்திருந்தது…
அன்று கொலை வெறியோடு அந்தப் பெண்ணைத் தாக்கியவளுக்கு… இன்று ஏன் முடியவில்லை… சந்தியா இருந்த சிறை அறையையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தவள்… தந்தை தன்னைத் தேடி இருந்திருப்பாரா… என்று யோசிக்கும் போதே… இப்போது அவர் எப்படி இருப்பார் என்று பார்க்க வேண்டும் போல இருக்க… சந்தியாவைப் பொறாமையுடன் பார்த்தாள்… அதே நேரம்.. இவள் எப்படி இங்கு வந்து மாட்டினாள்… இவளது குடும்பத்துக்குத் தெரியாமல் வந்து மாட்டி இருக்கின்றாளா… அவள் குடும்பத்திற்கு தெரிந்தே வந்திருக்கின்றாளா… அப்படி என்றால் தன் தந்தைக்கு தன்னைப் பார்க்கும் ஆர்வம் வந்திருக்காதா… ஒருவேளை தான் தீவிரவாதி என்று தெரிந்துதான்… தன் மற்றொரு மகளையும் இங்கு அனுப்ப சம்மதம் இருக்கிறாரோ… என்று சிந்தியாவாக மாறி இருந்த அதீனாவின் எண்ணங்கள் எல்லாமே தந்தையைச் சுற்றிய எண்ணங்களாக இருக்க…
சந்தியா என்ற பெண்ணுக்கு… தந்தை பாசம் என்பதே கிடைக்காமல் போனதைப் பற்றி அறிவாளா இந்த சிந்தியா… அது கிடைக்காமல் போனதற்கு கணேசன் மட்டும் காரணம் இல்லை… வசந்தியுமே…
சிந்தியா கணேசனை வெகுதூராமாக பிரிந்து வந்திருக்க… சந்தியாவோ.. தன் தந்தையை விட்டு வெகுதூரமாக விலகி இருந்தாள் மனதளவில்…
தாங்கள் வந்து சென்ற பின்னர்… வசந்தி வாழ்க்கையில் நடந்ததென்ன அதீனா அறிவாளோ?
தாரகா வசந்தியை பார்த்து விட்டு போன அதே நாள்… நடந்த மற்றவை…
கிட்டத்தட்ட மாலை 5 மணி… தலைக் காயத்திற்கு போடப்பட்டிருந்த ஊசி மருந்துகளின் விளைவாக மெதுவாக கண்விழித்தாள் சந்தியா… இன்னும் அரை மயக்கத்தில் தான் இருந்தாள்… ஆனால் வெளியே தந்தை தாயின் குரல்… அதிலும் தந்தையின் குரல் ஆக்ரோசமாக ஒலித்துக் கொண்டிருக்க… படக்கென்று எழுந்து அமர்ந்தாள் சந்தியா…
”அந்த அக்கா ஏன் தன்னை அடித்தார்கள்…” என்று யோசித்த சந்தியாவுக்கு ஏதும் புரியவில்லை… அதற்கு மேல் யோசிக்கவும் தெரியவில்லை… அடிபட்ட பிறகு… அங்கிருந்தவர்கள்… வசந்தியிடம் இவளைக் கூட்டி வந்து விட… அடிபட்ட அந்த நிலையிலும் சந்தியா அன்னையிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாள்…
அதுதான் வசந்தியிடம் வாங்கிய கடைசி அடியாக இருந்தது சந்தியாவிற்கு… அதன் பின் அந்த சூழ்நிலையிலும் வேறு வழியின்று வசந்தி சந்தியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டி… தையல் போட்டுக் கூட்டி வந்து மாத்திரைகளை உட்கொள்ள வைத்து படுக்க வைக்க… சந்தியா…
”நீ நல்ல அம்மாதான்” என்று சொல்லிவிட்டுத்தான் கண் மூடினாள் சந்தியா….
வசந்தி அப்படியே அமர்ந்திருந்தாள்… இனி என்னென்ன நடக்கும் என்று தெரியவில்லை… கணவன் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவான்… கேட்பான் என்று தெரியவில்லை… கண்களை மூடினால்…. அந்த சிறு பெண்ணின் முகமே வந்து நிற்க… தான் தவறாக முடிவெடுக்கிறோமோ என்று தோன்றியது… ஆனாலும் அதற்காக அந்தப் பெண்ணை தான் வளர்க்க முடியுமா… அதே நேரம் கணேசனோடு இனி வாழ முடியுமா… அவனைத்தான் பிடிக்கவில்லையே அந்த தாராகவோடு போய்த்தான் ஒழியட்டுமே… என்று நினைத்தால் அதுவும் முடியவில்லை…
கேவலாமான ஒருத்தியோடு வாழ்ந்தவனோடு தன் வாழ்க்கை… அதில் இரண்டும் குழந்தைகள்… அவமானம் மட்டுமல்ல.. தன் வாழ்க்கை இன்னும் இன்னும் அசிங்கமாகவேத் தோன்றியது வசந்திக்கு
அதே நேரம் அந்த கேவலமான ஒருத்திக்கு கணவன் குழந்தை என்ற வாழ்க்கை… தனக்கு எல்லாமே தோல்வியா… முடியாது… அழுத்தமாக அமர்ந்திருந்தாள்… பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் அவன் என்னோடுதான் வாழ வேண்டும் என்று மனம் முரண்டு பிடித்தது…
வெளியூர் சென்றிருந்த கணேசனும் வந்தான்… வீட்டுக்குள் நுழையும் போது… வாசலில் அலங்கோலமாக கிடந்த வீணை கண்ணில் பட… அதை எடுத்தபடியே உள்ளே வந்தவனுக்கு… தெரியாதா என்ன… தன் ஆசை மகளின் வீணை என்று… படபடத்தது மனம்… தாரகா வந்திருப்பாளோ… வசந்தியை ஏன் சந்திக்க வந்தாள்… ஆயிரம் கேள்விகள்
வேகமாக உள்ளே வந்து பார்த்தவன்… வசந்தியைப் பார்க்க… அவளோ நெற்றிக் கண்ணைக் காட்ட.. இருவருக்கும் இது தொடர்பாக வாக்குவாதம் வர…
அந்த வேளையில் தான் சந்தியாவும் உறக்கத்தில் இருந்து விழித்தாள்…
என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.. காலையில் இருந்து அன்னை அழுதாள்… இப்போது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உச்சக்கட்ட சண்டை… எழுந்து வந்தவளை இருவருமே பார்க்கவில்லை… இடையில் போனால் இவளுக்கும் அடி விழும் என்று நன்றாகத் தெரிய…
சந்தியா என்ற குழந்தைக்கும் அங்கிருக்க பிடிக்கவில்லை… அதே நேரம் போகவும் மனமில்லை… இது நாள் வரை இல்லாதது போல் பெரிய சண்டையாக வந்திருக்க.. மனதுக்குள் மிகப்பெரிய பயப்பந்து… என்னமோ நடக்கப் போகின்றது என்று தெரிந்ததே தவிர சந்தியாவுக்கு வேறு எந்த உணர்வுகளும் வரவில்லை... அந்த உணர்ச்சி தந்த வேகம்… தன் தாயை அடித்துக் கொண்டிருந்த கணேசனின் கைகளைப் பிடித்து தடுக்கப் போக… கணேசன் சந்தியாவை இழுத்து வேறு புறம் தள்ள…
முற்றிலுமாக பயந்தவள்… இங்கு இருந்தால் தனக்கு இன்னும் அடி விழும் என்று வேகவேகமாக வெளியே வந்தபடி… திவாகர்… சந்தோஷ்… வரவை எதிர்பார்த்து தெருமுனையில் அமர்ந்தவளுக்கு… மனம் திக் திக் என்று அடித்துக் கொண்டே இருந்தது….
கண்ணிலிருந்து வேறு… ஒரு புறம் நீர் வழிந்து கொண்டே இருக்க… சற்று நேரத்தில் கணேசன்… அவர் பைக்கில் இவளைக் கடந்தார்… மகளைக்கூட கண்டு கொள்ளாமல் அதி வேகமாக விரைய…
வேகமாக வீட்டுக்கு ஓடினாள் தன் அன்னையைப் பார்க்க அந்தச் சிறுமி…. இரவு ஆறு மணிக்கும் மேல்… இருள் சூழத் தொடங்கி இருக்க… எங்கும் இருள்… வீட்டில் விளக்குகள் எதுவும் போடப்படாமல் இருக்க…
“அம்மா… அம்மா” குரல் கொடுத்தாள் சந்தியா… பதிலே வரவில்லை எதிர்ப்பக்கமிருந்து… சன்னலில் இருந்து வீட்டுக்குள் பார்க்க… ஒரே இருள்…
“அம்மா… பயமா இருக்கும்மா… எனக்கு இருட்டுன்னா பிடிக்காதுதானேம்மா…. கதவைத் திறம்மா” என்று கத்த ஆரம்பிக்க.. எதற்குமே பதில் இல்லை… தொண்டைக் குழி வறண்டு வலிக்க… பயப்பந்து சந்தியாவுக்கு சுழல… வேகமாக…
”அம்மா ரூம்ல தூங்கறாங்களோ” நினைத்தபடியே
தன் அன்னையின் அறை இருக்கும் பகுதிக்கு வேகமாக சுற்றி ஓடினாள்… அங்கிருந்த சன்னலை திறக்க… அங்கோ…
வசந்தி தன் சேலையை எடுத்து தூக்கில் தொங்கிக் கொண்டிருக்க…பயத்தில் அலறியிருந்தாள் சந்தியா… அப்போதுதான் தூக்குக்கயிறில் தொங்கிய வசந்திக்கும் அது பட… அவளது கண்ணிலும் தண்ணீர்…
நீ தேவையில்லை… உன் குழந்தைகள் தேவை இல்லை… உன் வாழ்க்கையும் தேவையில்லை… அந்த தாரகாதான் முக்கியம் என்று கணவன் உதறிச் சென்று விட்டான்… இனிமேல் இந்த அவமான வாழ்க்கை தேவையா… முடிவெடுத்து விட்டாள் வசந்தி… வசந்தியும் கூட தன் பிள்ளைகளை நினைக்கவில்லை… கற்ற கல்வி கூட அவளை பண்படுத்தவில்லை…
“அம்மா… நீ நல்லா அம்மான்னு சொல்லிட்டேனேம்மா… நான் இனிமேல உன்னைக் கோபப்பட வைக்கிற மாதிரி நடக்க மாட்டேம்மா… நீ என்ன சொன்னாலும் கேட்கிறேம்மா… என்னை விட்டுப் போய்டாதம்மா… எனக்கு அப்பா வேண்டாம் அவர எனக்குப் பிடிக்காது… ஆனால் உன்னை எனக்குப் பிடிக்கும்மா” கெஞ்சினாள்… கதறினாள் சந்தியா…
வசந்தியின் கழுத்து கொஞ்சம் கொஞ்சமாக இறுக ஆரம்பிக்க… பதறிய சந்தியா இப்போது வேகமாக முன்வாசலுக்கு வந்தாள்… அங்கு யாரோ ஒருவர் போக… அவரிடம் சொல்லி உதவிக்கு அழைக்க.. அதுவரைதான் சந்தியாவுக்கு சுயநினைவு இருந்தது… அதன் பின் அவள் விழித்தபோது… திவாகர், சந்தோஷ்… தாமோதரன் என ஒரு கூட்டமே இருக்க… விழித்த கண்கள்… அன்னையை மட்டுமே தேட… வசந்தி அங்கு ஒரு ஓரமாக அமர்ந்திருக்க… எப்படியோ வசந்தி காப்பாற்றப்பட்டிருந்தாள்… பெரிதாக இறுகவில்லை கழுத்தெல்லாம்…இருந்தும் மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லப்பட்டுத்தான் இருந்தாள்… அங்கு ஒன்றும் பெரிதாக ஆபத்தில்லை என்று சொல்லி விட… அனைவருக்கும் அப்போதுதான் நிம்மதியாக இருக்க… சந்தியா வேக வேகமாக அன்னையிடம் ஓடியவள்…
”ம்மா… அப்பா வேண்டாம்மா…. நீ போதும்மா… நீ இனி இப்படி செய்யாதம்மா… அந்த ஆளு நமக்கு வேண்டாம்மா… நான் இருக்கேன்மா உனக்கு” என்று என்னென்னவோ பிதற்ற ஆரம்பிக்க… வசந்தி பேசவே இல்லை… வசந்தி அவளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக இறுகிக் கொண்டிருந்தாள்…
கணேசன் விபரங்கள் வெளியில் யாருக்கும்… ஏன் சந்தோஷ் திவாகருக்குமே சொல்லவில்லை தாமோதரன்..
வசந்திக்கு வாழ்க்கை தந்த ஏமாற்றம் கொஞ்சமாக கொஞ்சமாக மன அழுத்ததிற்கு ஆளாக… சந்தியா மட்டுமே அவளுக்கு ஆறுதலாக இருந்தாள்… மருத்துவர்கள்… சந்தியாவை அவள் அன்னையிடம் எப்படி நடக்க வேண்டும்… அவளோடு எப்படி பழக வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க… அதன் படி சந்தியாவும் நடக்க… வசந்தியும் மெல்ல மெல்ல தேற… ஒரு வாரம் கடந்திருக்க… கணேசன் வந்திருந்தான்… அவன் எங்கு தேடியும் தாரகா சிந்தியா கிடைக்கவே இல்லை
இதற்கிடையே தாமோதரன் கணேசனை மிரட்ட ஆரம்பித்தார்…
தங்கையோடு ஒழுங்காக வாழவில்லை என்றால்… சமுதாயத்தில் அவனுக்கு கிடைத்திருக்கும் அத்தனை அங்கீகாரங்களையும் ஒழித்து விடுவேன் என்று… மிகவும் முரண்டு பிடித்தால் பொய் வழக்குகள் போட்டு சிறையிலேயே அவனது மீதி வாழ்க்கையை முடித்து விடுவேன் என்று…
ஒரே வழி தங்கையோடு வாழ வேண்டும் என்று மிரட்டி… வசந்தியோடு வாழ வைத்தார் தாமோதரன்
வேறு வழியின்றி… வசந்தியோடு வாழ ஆரம்பித்தான் கணேசன்… தாரகா தன் மகளை… மகிழ்ச்சியை எல்லாவற்றையும் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டு போய் விட்டாளே… தாரகா மேல் கோபம் கோபமாக வந்தது… சிந்தியாவை எப்படியாவது தன்னிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று எங்கெங்கோ தேட… கடைசியாக தீவிரவாதியாகத்தான் அவர் கண்ணில் மீண்டும் கிடைத்தாள் அவர் மகள்
வசந்தியோ முன்னைப் போல… கணேசனோடு ஆங்காரமாக பேச வில்லை… தனக்குள்ளேயே முடங்கி விட்டாள்… தாமோதரனும் வசந்தியிடம் அறிவுரைகள் சொன்னார்… கணேசன் வாழ்க்கையில் இனி யாரும் தலையிட மாட்டார்கள் என்று…
ஆனாலும் அதே நேரம் கணேசனோடும் வாழப் பிடிக்கவில்லை வசந்திக்கு… விவாகரத்து கேட்டு இன்னொரு பிரச்சனையை ஆரம்பிக்க…. மறுபடியும் குழப்பம் வர… இப்போது கணேசனுக்கு இது கவுரவக் குறைச்சலாக தோன்ற… வேலை இருக்கும் தைரியத்தில் தானே ஆடுகிறாள் என்று வேலையை விடச் சொல்லி பிரச்சனை செய்ய… மீண்டும் பிரச்சனை ஆரம்பமாக… தாமோதரன் இப்போது தங்கையைத்தான் கண்டித்தார்… ஒழுங்காக கணவனோடு வாழ வேண்டும் என்று சொல்ல… ஆக மொத்தம் அந்தப் பிரச்சனையின் முடிவில் வேலையையும் விட்டாள் வசந்தி…
அதன் பிறகு வசந்திக்கு யாருமே பிடிக்கவில்லை… தான் பெற்ற மக்கள் போதும் என்று நினைத்தாள்... கணேசனிடம் காட்டாத கோப உணர்ச்சிகளை… தன் மக்களின் மீது பாசமாக மாற்றினாள்…
அதிலும் அவளுக்கு வாழ்க்கை பிடித்தமாக பற்றுக் கொம்பாக தன் மகளை மாற்றிக் கொண்டாள்… அவளின் அன்பு அவளை மெல்ல பழைய நிலைக்கு திரும்ப வைக்க... வசந்திக்கு சந்தியாவின் தாயாக இருப்பதைக் காட்டிலும்… சந்தியாவுக்கு மகளாக இருப்பது அவளுக்கு பேரானந்தத்தைக் கொடுக்க… அதிலேயே மூழ்கவும் தொடங்கினாள்… தனக்கு ஒன்று என்றால் தன் மகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை… தனக்காக தன் மகள் இருக்கின்றாள்… அவளுக்காக நாம் இந்த உலகில் இருப்போம் என்று தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை ஆரம்பித்தாள்… தன் கணவன் மீதான வருத்தம்… ஆக்ரோசம்.. கோபம்… எல்லாவற்றையும் அடி ஆழத்தில் புதைத்து… புது வாழ்க்கை வாழ ஆரம்பித்து இருந்தாள் சந்தியாவின் அன்னையாக…
இப்படி போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில்…
சந்தியாவின் அவளின் பத்து பனிரெண்டு வயதில் அப்படியே அன்று வந்த பெண்ணைப் போலவே தோற்றத்தில் இருக்க… முதன் முதலாக… சிந்தியாவுக்காக… மனம் பரிதவித்தது…. அந்தப் பெண் என்ன செய்கிறாளோ என்று வசந்திக்கு துடித்தது… சிந்தியா நன்றாக இருக்க வேண்டும் என்று மனம் அடித்துக் கொண்டது… அந்தப் பெண் ஏதாவது வேதனை அனுபவித்தால்… தன் பெண் அதனால் பாதிக்கப்படுவாளோ…. மனம் சிந்தியாவுக்காக பரிதாபப்பட்டாலும்… சந்தியாவையும் அதில் உள் இழுத்தது…
சந்தியா பூப்படைந்திருக்க… இன்னும் வசந்தியின் மனம் மகளை நினைத்து கவலை கொள்ள ஆரம்பித்திருந்தது
கேவலமாக பேசினோமே… அந்தப் பெண் நீயும் பெண் வைத்திருக்கின்றாய் என்றாளே…என் பெண்ணுக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ… தனக்குள் மருகினாள்… சந்தியாவையும்… ஏதாவது சொல்லிச் சொல்லி பயமுறுத்தியே வளர்த்தாள்… தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்கவும் செய்தாள்… திவாகர் சந்தோஷ் காதம்பரி என தனக்கு நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே அவளைப் பழகவும் வைத்தாள்… அதையும் மீறி…. திவாகர் திருமண நிகழ்ச்சியில் ராகவ் சந்தியாவை சேற்றில் தள்ளி… அது பெரும் பிரச்ச்னையாக மாறி இருக்க… அதிலும் ராகவ்வை பார்க்கும் போதெல்லாம் தன் மகளை அவன் வஞ்சினத்தோடேயே பார்ப்பது போலவே தோன்ற… ராகவ்வை எப்போது பார்த்தாலும் வசந்தி ஒரு எச்சரிக்கை உணர்வோடேயே பார்த்துக் கொண்டிருக்க… எங்கு பார்த்தாலும்… வசந்தி தன்னை ஒரு வில்லனைப் பார்ப்பது போல பார்க்கும் சந்தியாவின் அம்மா வசந்தியை ராகவ்வுக்கும் ஏனோ அவனையுமறியாமல் பிடிக்காமல் போனதுதான் உண்மை…
அதிலும் சந்தியாவிடம் மெல்ல மெல்ல பழக ஆரம்பித்த போது… சந்தியாவின் அன்னைப் பாசம் அவனுக்கு நெருடலாகவேத்தான் தோன்றியது… சந்தியாவை வசந்தி அவரின் கைப்பாவையாக வைத்திருக்காரோ என்றே தோன்றியது ராகவ்வுக்கு… ஆனால் அவர்கள் கணவன் – மனைவி பந்தத்திற்கு வசந்தியின் பாசம் இடையூறாக இல்லாமல் போக… சந்தியாவின் அன்னை மீதான பாசத்தின் ராகவ்வின் நெருடலும் காணாமல் போயிருந்தது இப்போதைய உண்மை…
சிந்தியாவுக்கு தந்தைப் பாசமும் தாய்ப்பாசமும் கிடைக்காமல் வளர… போக… சந்தியாவுக்கோ தாய் தந்தை அருகில் இருந்தும் அதை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் வளர ஆரம்பித்தாள்…
இதற்கிடையில் தாமோதரனும் இறந்து விட… கணேசனைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் போக… அதன் பின் கணேசன் தாரகா- சிந்தியா தேடுதல் வேட்டையை மீண்டும் ஆரம்பிக்க… எல்லாமே தோல்வியில் முடிய ஒரு கட்டத்தில் அவர்களைத் தேடுவதை நிறுத்தி விட்டு… வசந்தியைக் குற்றம் சொல்வதையே வாடிக்கையாக மாற்றி விட… இப்போதெல்லாம் வசந்தி அவரிடம் எதிர்த்துப் பேசுவதே இல்லை… ஏனோ சிந்தியாவுக்கு செய்த துரோகம் அவரை அடக்கி விட்டதோ இல்லை… மகனும் மகளும்.. கணேசன் என்ன சொன்னாலும் பதிலுக்கு பேச ஆரம்பித்து விட்டதாலா… தெரியவில்லை… வசந்தி ஆக்ரோசம்.. கோபம் என்ற அவளின் இயல்புகள் எல்லாமே… என்றோ மறைந்து விட்டிருக்க… இப்போதைய வசந்தி அப்பாவி வசந்தி என்று மட்டுமே தோன்றும் நிலையில் வாழ ஆரம்பித்தாள்… அப்படியே அவள் வாழ்க்கையாகவும் மாற்றிக் கொண்டாள்…
கணேசன் பெற்ற மகள்கள் வாழ்க்கை இப்படி இருக்க… ஆண்மகன் சந்தோஷுக்கோ தாய் தந்தை வாழும் முறை பார்த்து திருமண வாழ்க்கையையே வெறுத்திருக்க… அதிலும் நாட்கள் செல்ல செல்ல தந்தையின் இன்னொரு உறவு பற்றி தெரியவர… இங்கிருக்கப் பிடிக்காமல்… அயல்நாடு செல்லக் கிடைத்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டு அடிக்கடி அங்கு பறக்க ஆரம்பித்தான்… அங்கு அவன் செய்த தவறினால் மிருணாளினியோடான அவன் வாழ்க்கை இப்போது தடுமாறிக் கொண்டிருந்தது
ஆக மொத்தம் கணேசன், வசந்தி, தாரகா என பெரியவர்கள் செய்த தவறால் இளைய தலைமுறையினரான சந்தோஷ், சந்தியா, சிந்தியா வாழ்க்கை… காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே விட்டது போல அலங்கோலமாக போயிருந்தது… இதில் சந்தியா நேரடியாக தவறு செய்யாமல் மாட்டிக் கொண்டிருந்தாள்…
இப்படிப்பட்ட பெற்றோருக்கு மக்களாக பிறந்ததின் பலனாக சந்தியா சந்தோஷ் பிரச்சனைகளை அனுபவித்தார்கள் என்றால்… காரணமே இல்லாமல்… அதன் பாவ பலன்களை அனுபவித்தனர் இவர்களை மணந்த காரணத்தால்… சுகுமார்-யசோதா மக்களான ராகவ்வும் மிருணாளினியும்
வசந்தியும் கணேசனும்… நாணயங்களின் இருபக்கம் போல… கடவுளும் சாத்தானும் என தங்கள் இருவேறு முகங்களை தங்கள் மக்களிடம் காட்டியிருந்தனர்…
இங்கு யார் தவறு யார் சரி என்பதைக் கணிக்க முடியாவில்லை… வாழ்க்கையின் சுழலில் அவரவர்க்கான நியாயங்களை கையில் எடுத்துக் கொள்ள… சிந்தியாக்கு மட்டுமே மொத்த அநியாமும் நடந்தது… ஆனால் அவளும் அவள் வாழ்க்கையை தவறாக மாற்றியதுதான் அங்கு வேதனை… பல குடும்பங்களுக்கு அறிந்தே அநியாயம் செய்யும் அளவுக்கு மாறி இருந்தாள்… வெடிகுண்டு சம்பவத்தின் மூலம்…
அதீனாவின் கண்களில் நீர் வடிந்து கொண்டே இருந்தது… நினைவுகளின் சுழலில் ஆட்கொள்ளப்பட்டவளாக… அதிலிருந்து வெளியே வரவே முடியவில்ல அவளால்
தன் தாய் சரியாகத்தான் இருந்தாள்… ஆனால் விபச்சாரி என்ற பெயர் ஏன் வந்தது… தாயிடம் எத்தனையோ முறை அழுதிருக்கின்றாள்… தன் தந்தையைப் போய்ப் பார்க்கலாம் என்று அவளது அன்னை மறுத்து விட்டாள்… இனி தன் தந்தையை இனி பார்க்க முடியாது… அது ஒருவழிப்பாதை என்பதை உணர்ந்தவளுக்கு….
இந்த அதீனா சிந்தியாவாகவும் இனி மாற முடியாது என்பதும் புரியாமல் இல்லை… அப்படி இருக்க சந்தியாவும் சிந்தியாவும் ஏனோ மீண்டும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்க வைத்தது காலம் செய்த கோலமே…
அவரவர்களுக்கு அவர்அவர் நியாங்கள் அவர்கள் அளவில் அவர்களுக்கு சரி, பெற்றவர்கள் செய்தபாவம் பிள்ளைகளை வந்து சேரும் என்பதுபோல், கணேஷன், வசந்தி, தாரா, இவர்கள் செய்த வினை பயன் அவர்கள் பிள்ளைகள் சந்தோஷ், சந்தியா, சிந்தியா இவர்கள் அறுவடை செய்கிறார்கள் பாவத்தின் பலனை, 😪😪😪
thanks Tee Kay and Kala
Semma ud mam..... Daily update kodunga pls
Good to read. Nicely written. Tharaka should have met Ganesan and gave Sindhia to him. How Vasanthi will take care of her daughter. Anyway now no return to Sindhia. She already involved in bomb blast killing public. Because of her now Sandhiya, Ragavan also in critical stage. All mistakes on Ganesan, Vasanthi and Tharaka.