top of page

சந்திக்க வருவாயோ?-56

Writer's picture: Praveena VijayPraveena Vijay

அத்தியாயம் 56:

நிரஞ்சனா சிவாவை அழைத்து… கரண் வந்திருப்பதாகக் கூறிய மறு வினாடி… தனது காரை திருப்பியவன்… சந்தியாவைப் பார்க்க வருவதற்குள்… அங்கு நிலைமை இவன் கை மீறிவிட்டிருக்க… ஜெயவேல் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்க… கரணின் கரங்களோ சந்தியாவை பதம் பார்த்திருந்தன… நிரஞ்சனாவும் அம்ரீத்தும் நிலைமையை சமாளிக்க.. எவ்வளவோ போராடியும்… கரணைக் கட்டுப்படுத்த முடியாமல் போக… சந்தியாவோ… கரணின் அடி தாங்காமல் எப்போதோ மயங்கியபடி மூலையில் குன்றியிருக்க.. அவள் முகமெங்கும் ரத்த சிதறல்கள்….

அங்கு என்ன நடந்திருக்கும் என்று நொடியில் சிவாவால் ஊகிக்க முடிந்திருந்தது… சந்தியாவின் அருகில் கூட அவனால் போக முடியவில்லை… முதலில் ஜெயவேலை மற்றும் கரணை எப்படி இங்கிருந்து அப்புறப்படுத்துவது… முதலில் அதைச் செய்ய வேண்டும்… பரபரவென்று அவன் மூளை செயலாற்றியது…

வேகமாக கரணிடம் திரும்பியவன்…

“சார்… உடனே… சாரை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகலாம்… மீடியாவை கூப்பிடலாம்… சாரை இவ சுட்டுட்டான்னு சொன்னால்… இவ மேல கேஸ் ஸ்ட்ராங் ஆகும்… கன்ஃபார்ம் தூக்கு தண்டனைதான்” என்று வேண்டுமென்றே சொன்னான் சிவா… ஜெயவேல் மற்றும் கரணை கார்னர் செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதைச் செயலாற்றும் பொருட்டு…. இந்த வார்த்தைகளைச் சொல்ல

அதைக் கேட்ட அத்தனை பேருக்கும் ஒவ்வொரு விதமான அதிர்ச்சி என்றால்… சந்தியாவுக்கோ அந்த வார்த்தைகள்… இன்னும் இன்னும் அவளை உலுக்கி எடுத்தன என்றே சொல்லலாம்…

“அவ்வளவுதானா தன் வாழ்க்கை… யாருக்கு பதிலாகவோ… ஜெயில் வாசம் செய்ய வந்து… இனி அவள் செய்த குற்றத்திற்காக… ஜெயில் தண்டனையா…” உதடுகள் உலர்ந்தன… உடலோ மரத்தது…

”தனக்கும் ரகுவுக்குமான திருமண வாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து… இப்போது மொத்தமாக மூடு விழாவா…” கண்களில் இருந்து நீர் கரகரவென வடிய… கண் மண் தெரியாமல் கரண் அடித்த அடிகள் வேறு அவளை அசையக் கூட முடியாமல் செய்திருக்க… வார்த்தைகள் கூட பேச முடியவில்லை…

சிவாவுக்கு சந்தியா இருந்த நிலையைப் பார்க்கவே மனம் தாங்கவில்லை… இருந்தும் அவள் அருகில் செல்ல முடியாத நிலை…

அதே நேரம்… ஜெயவேல்…

“கரண்… இவனைப் பொறுத்தவரை அவளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கனும்… அதுக்கு நான் தான் கிடைத்தேனாடா…. மீடியாவை கூப்பிட்டு என் மானத்தையும் ஏலம் போடப் போகிறாண்டா… என்னைச் சுட்ட இவளை நாம வேற மாதிரி டீல் பண்ணிக்கலாம்… என்னை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போடா… முதல்ல குண்டை எடுக்கனும்…” அப்போதும் தன் அரசியல் வாழ்க்கையின் கவலையோடு பதறியபடி பேசிய ஜெயவேல்…. சந்தியாவை முறைத்தார்… அவளைப் பார்க்கும் போதே சற்று முன் நடந்தது நினைவில் வந்தது


அவள் மேல் கோட்டின் மேல் கை வைத்த அதே நேரம்… கரணின் துப்பாக்கியை எடுத்து தன்னைச் சுட்டவளை அதிர்ச்சியோடு கொலை வெறியோடு பார்த்து வைத்த ஜெயவேலுக்கு… உயிர் போகவில்லை என்பதை உணரவே சில நொடிகள் தேவைப்பட… முழங்காலுக்கு கீழே சுட்டாள் நல்ல வேளை… என்ற நிம்மதி வேறு வந்திருந்தது… தன்னைச் சுட்ட அதிர்ச்சியில் இருந்த சந்தியாவிடம் உடனடியாக அதே துப்பாக்கியை அவளிடமிருந்து பறித்து அவளைச் சுடப் போக… அதே நேரம் அறைக்கு வெளியே நின்றிருந்த நிரஞ்சனா அம்ரீத்ட் இந்த களேபர சத்தம் கேட்டு வந்திருக்க… சந்தியா நொடி நேரத்தில் தப்பித்து இருந்தாள்… அதீனா இருந்த கட்டிடம் தனிமைக் கட்டிடம் என்பதால் அங்கு மற்ற யாருக்கும் இந்த கலவரம் எல்லாம் தெரியவும் வாய்ப்பில்லை …

நினைவுகளை விடுத்து…. மீண்டும் கரணிடம் திரும்பிய ஜெயவேல்…

“இவள… இவள நான் தான் டீல் பண்ணனும் கரண்… இவளுக்கு தூக்குக் கயிறோ இல்லையோ… ஆயுள் தண்டனையோ… என் கைலதான் இவளுக்கு சாவு” என்று அந்த நிலையிலும் வெறித்தனமாகக் கத்த…

“சார்… ப்ளட் லாசாகிட்டே இருக்கு… ஏற்கனவே 20% லாசாகிருக்கும் போல… இன்னும் அதிகமாச்சுனா… ப்ளட் ப்ரெஷர் அதிகமா ஆகப் போகுது… ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறதுக்குள்ள… Hemorrhagic Shock கூட ஆகலாம்… ஏற்கனவே வயசானவர்… இறந்துட்டார்னா” சிவா பொய்யாகப் பதறிபடி கரணிடம் சொல்ல… அது சரியாக வேலை செய்தது என்றே சொல்லலாம்

ஜெயவேலுக்கு இப்போது தன் உயிரின் மேலேயே பயம் வர…. அது அவரின் கண்களிலேயே தெரிய…

”கரண்… யாருக்கும் தெரியாமல் என்னைக் காப்பாற்ற பாருடா” என்ற பதறிய போதே…

“ஜெயவேல் சார்… பயப்படாதீங்க… கரண் சாருக்கு… அதெல்லாம் தெரியும்… எங்க டீம் இது மாதிரி ஆயிரம் அண்டர்க்ரௌண்ட் வேலை பார்த்திருக்கு… கவலைபடாதீங்க” என்று முடிக்க… கரணுக்கும் வேறு வழியின்றி…

“இப்போ போகிறேன்… ஜெயவேல் உயிர் முக்கியம் எனக்கு” என்று சொல்லி விட்டு சந்தியாவை முறைத்த கரண்… அடுத்த நிமிடங்களில் ஜெயவேலை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆயத்தமாக நிமிடத்தில்… அந்த இடம் மீண்டும் சாதரணமாகி இருக்க… சந்தியாவோ இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை…

ஜெயவேலையும்…கரணையும் யாரும் அறியாவண்ணம் அப்புறப்படுத்திய பின்… இப்போதைக்கு அவர்களால் பிரச்சனை இல்லை என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட சிவாவுக்கு… ஓரளவு மனம் நிம்மதி வந்திருக்க… அம்ரீத்தின் மேல் முதன் முதலாக அதிருப்தி வந்திருந்தது சிவாவுக்கு…. இந்த இருவரைப்பற்றியும் அவருக்கு நன்றாகத் தெரிந்தும்… இப்படி செய்து விட்டாரே… குறைந்தபட்சம் தனக்கு தகவலாது கொடுத்திருக்க வேண்டும் என்று தனக்குள் மருகினான் தான்…

ஆனாலும் அவரோடு வாக்கு வாதம் செய்வது இப்போது சரியல்ல… சந்தியாவைத் தேற்றுவது முக்கியம் என உணர… அது மட்டுமல்லாமல் அவள் கைகளால் நடத்தப்பட்டிருந்த துப்பாக்கிச்சூடு… அவளுக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதை அவன் மனம் உணர்த்த… வேகமாக சந்தியாவின் அருகில் ஓடினான்….

அவளோ வெட வெடவென்று நடுங்கி அமர்ந்திருக்க… முகமெங்கும் இரத்த சிதறல்கள்… அதோடு கரண் அடித்ததில் உதடு வேறு கிழிந்து தொங்கி… அதிலிருந்து ரத்தம் வேறு வந்திருக்க… நெற்றியிலும் ரத்தம் வழிந்தது… வேகமாக தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண் மருத்துவர் சுமனை அழைத்து அங்கு வரச்சொல்லி விட்டு… அவளருகில் போக…

சந்தியாவுக்கு… பேச்சே வரவில்லை… விரல்களை மட்டுமே நீட்டிக் காட்டியபடி.. ஜெயவேல் இருந்த இடத்தை நோக்கிக் காண்பித்துக் கொண்டிருக்க… அவளின் சுட்டிக் காட்டிய அந்த விரல்கள் கூட நடுங்க … தேகம் நடுங்கிய விதத்தை சிவாவுக்குச் சொல்லவா வேண்டும்…

“சந்தியா…ஒண்ணும் இல்லைடா… உனக்கு ஒண்ணும் ஆகலை…” என்று தன்னோடு அணைத்துக் கொள்ள… ஆனாலும் அவளின் நடுக்கத்தை அவனால் நிறுத்தவே முடியவில்லை… பேச வைக்கவும் முடியவில்லை… அந்த கயவர்கள் தன்னிடம் நடந்து கொண்ட அதிர்ச்சி… கரணின் வன்முறை… எல்லாவற்றிர்க்கும் மேலே… தன்னைக் காத்துக் கொள்ள ஒரு உயிரைக் கொல்ல முயன்றது என…உச்சக்கட்ட அதிர்ச்சிக்கு கொண்டு சென்று.. அதிர்ச்சியில் சந்தியா உறைந்திருக்க… அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வரவே முடியவில்லை அங்கிருந்த யாராலும்….

சிவா எவ்வளவோ பேசிப் பார்த்தான்… நிரஞ்சனாவும் எவ்வளவோ முயல…. முடியவில்லை அவர்களால்... சுமனும் இப்போது வந்திருக்க… சந்தியாவின் சிறை அறைக்கு கூட்டி வரப்பட்டிருந்தாள் சந்தியா….

கிட்டத்தட்ட மூன்று பேர் அடங்கிய கும்பல் சந்தியாவை பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்க… அதீனாவோ.. புருவ நெறிப்போடு கூடிய கேள்வியோடு அந்த திசையையே நோக்கி கவனம் வைக்க… சிவா அதீனா சற்று அருகில் இருக்கின்றாள் என்று நினைக்கவே இல்லை…

தமிழ்நாட்டில்தான் அதீனா பிறந்திருந்தாள் என்றாலும் அவளுக்கு தமிழ் தெரியாமல் இருக்குமா.. என்று சிவாவுக்கு சந்தேகம் இருக்க பலவாறு பேசிப்பார்த்து… முடிவில் அவளுக்கு தமிழ் தெரியவில்லை என்று முடிவு செய்திருந்தான்… அதன் விளைவால் சந்தியாவிடம் தமிழில் பேசுவதை பெரிதாக நினைக்கவில்லை… அப்படியே அதீனாவுக்கு தமிழ் தெரிந்திருந்தாலும் சிவா அதைப் பற்றியெல்லாம் இப்போது கவலைகொள்ளப் போவதுமில்லை… சந்தியா… சந்தியா மட்டுமே முக்கியம் அவனுக்கு இப்போது

நிரஞ்சனா சந்தியா அருகில் அமர்ந்தபடி… அவளை அணைக்க… தான் இருந்த நிலையிலும் சந்தியா அவளிடமிருந்து விலகினாள்… நிரஞ்சனாவுக்கு சுளீர் என்று நெஞ்சில் வலித்தாலும்… அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்

“தியா… ப்ளீஸ்… பேசு தியா… உனக்கு ஒண்ணுமே இல்லை… நீ சுட்டதுல ஒரு தப்பும் இல்லை..” என்று அவளுக்கு சொன்னபோதே…

“ஹ்ம்ம்…” தலை மட்டுமே ஆடியது… கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்க… தேகத்தில் நடுக்கம் இன்னும் இன்னுமே கூடியது… தேகம் முழுவதும் கூசியது… சற்று முன் தன் நிலையை நினைத்து

சிவா சந்தியா அருகே அமர்ந்து…. அவளைத் தன் தோளோடு சாய்த்தபடி…

“சந்தியா…இங்க பாரு… இங்க நடந்தது உனக்கோ… இல்லை சுட்டது நீயோ இல்லை… அதை அண்டர்ஸ்டேண்ட் பண்ணிக்க… உனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லம்மா… இதைப் பற்றி நீ கவலையே பட வேண்டாம்… இதுனால உனக்கும் எந்த பிரச்சனையும் வரப் போறதில்லை… ” என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவள் கேட்கவே இல்லை…

சிவா… கவலையாக சுமனைப் பார்க்க…

“நோ வொர்ரி… நார்மலா வருவா… இந்த அதிர்ச்சியில இருந்து அவளால வெளிய வரமுடியலை…. டைம் கொடுங்க.. ஷீ வில் பி பேக்” என்று சொல்ல… சிவாவுக்கு அப்போதுதான் உயிரே வந்திருந்தது…

நிரஞ்சனா தன் தோழியையே கவலையோடு பார்த்தபடியே இருந்தவளுக்கு… திடீரென்று ஒரு யோசனை அவளுக்குள் மின்னல் கீற்றாக வெட்டியது…

“சந்தியா… ரகு உன்கிட்ட பேச கால் அடிச்சுட்டே இருக்கிறாரு… நான் பேசட்டுமா… நீ இப்படி இருந்தேன்னா… பேசாமல் இருந்தேன்னா… அவர் என்னமோ ஏதோன்னு நினைக்கப் போறார்… இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நான் உன்னை மாதிரி பேசவா… ரகு கஷ்டப்படப் போகிறார்” என்று ராகவ்வுக்காக வருந்துவது போல் பேச..

எதைச் சொன்னால் தன் தோழியை மீட்டெடுக்க முடியுமோ… அதைச் சொல்லி அவளைக் கேட்க… அது சரியாக சந்தியாவிடம் வேலை செய்தது…

இப்போது சந்தியாவின் கண்கள்… நிரஞ்சனாவை கோபத்தில் வெறிக்க… அவளது தேகத்தின் நடுக்கம் மெது மெதுவாக குறைய ஆரம்பிக்க…. அதை உணர்ந்த சிவா நிரஞ்சனாவை ஆச்சரியத்துடன் பார்த்தான்…. சந்தியாவை அவள் புரிந்துவைத்திருக்கும் விதம் அப்போது புரிந்தது சிவாவுக்கு

“சரி விடு… நான் பேசுறேன் உன் ரகு கூட” என்று வேக வேகமாக நிரஞ்சனா போனை எடுக்க…

மீண்டும் ’வேண்டாம்’ என்று மட்டுமே சந்தியா தலை அசைக்க… அது மட்டுமே முடிந்தது அவளால்

“நீ பேசாமல் இப்படி தலையை மட்டும் ஆட்டினால்… ரகுக்கு கேட்குமா சந்தியா… இன்னைக்கு அவர் உன்கிட்ட பேசாமல் இருந்தால்…ஆயிரம் கேள்வி கேட்பார்… இதெல்லாம் தேவையா” என்ற போதே…

”பே…சு… றேன்… “ என்ற வார்த்தைகள் தட்டுத்தடுமாறி அவளையுமறியாமல் சந்தியாவிடமிருந்து வர…. கண்களிலோ அருவிகள் கொட்டிக் கொண்டிருக்க…

நிரஞ்சனா அதைப் பார்த்தும் மனம் நெகிழவில்லை…

“நீ இப்டி அழுதேன்னா… இப்டி பேசுனேன்னா… அது கூட ரகுக்கு மன வேதனைதான்… இப்போ உனக்கு என்ன நடந்துச்சு… ஒண்ணுமே இல்லை… அவங்க தப்பு செய்தாங்க… தண்டனை கொடுத்த… பெண்ணா பெருமைப்படத்தான் வேண்டும்… நீ என்னடான்னா அழுதுட்டு இருக்க… ”

அப்போதும் சந்தியா அப்படியே இருக்க…

“வேண்டாம்… நானே பேசுகிறேன்.. ஸ்பீக்கர்ல போட்றேன்… நீ அவர் பேசுறதை மட்டும் கேளு” என்ற ராகவ்வை தொடர்பு கொள்ள ஆரம்பிக்க… இப்போது சந்தியா… தன்னை நிலைப்படுத்திக் கொண்டவளாக… சிவாவிடமிருந்து தள்ளி அமர்ந்தவளாக… தன் கண்களைத் துடைத்தாள்…

ஆனாலும் கண்ணீரை மட்டும் ஏனோ நிறுத்தவே முடியவில்லை அவளால்.. தேகம் முழுவதும் ஆயிரம் கம்பளி பூச்சிகள் ஓடி அவளை ஆட்கொண்ட அருவருப்பான அசூயை உணர்வையும் அவளால் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை…

இப்போதும் சந்தியாவுக்கு ஞாபகம் இருந்தது… அன்றொரு நாள்… ராகவ்வை… அவனது அலுவலகத்தில் சந்திக்கச் சென்ற போது அவன் நடந்து கொண்ட முறைகள் எல்லாம்…

”நான் என்ன அகலிகை காலத்திலேயே வாழ்கிறேன்… நீ தொட்டவுடனே என் வாழ்க்கையே போச்சுனு மூலையில உட்கார்ந்து அழறதுக்கு” காதுக்குள் எதிரொலித்த இவள் வார்த்தைகளை நினைத்த போதே இப்போது கண்களில் அருவியின் வேகம் இன்னும் கூடியது…. அவன் கைவளைவில் கொண்டு வந்து நிறுத்தியபோது…. அன்று தெனாவெட்டாக சொன்னவள் இவள் தானே… அன்று பதட்டம் இன்றி… நிதானமாக அவனை எதிர்த்து நின்றவளுக்கு இன்று என்ன ஆனது…

அன்று அவன் மிரட்டுகிறேன் பேர்வழி என்று அவளை இழுத்தானே தவிர… அவன் உடல் மொழியிலோ… அவன் பார்வையிலோ கிஞ்சித்தும் வேறெந்த எண்ணமும் இல்லை… மிரட்ட மட்டுமே அவன் செய்தான்… வித்தியாசம் இன்று புரிந்தது…

ஆனால் இந்த கயவர்களை நினைத்த போதே… உடலின் ஆணி வேர் வரை ஆட்டம் கொண்டது சந்தியாவுக்கு… ஒரு நொடி தவறி இருந்தால் அந்த ஜெயவேல் தன்னை முழுவதுமாக அணைத்திருந்திருப்பானே…

நொடியில் சுதாரிக்க வில்லை என்றால்…. என்னென்ன ஆகி இருக்கும்… ராகவ் தன்னிடம் அத்து மீறிய போது தான் சுதாரிக்காத அந்த நொடியின் வேகங்கள் இன்று அவளிடம் எப்படி தோன்றியது

காதல்… கணவன்… உரிமை அனைத்துக்கும் வித்தியாசம் தெரிய… தன்னவனைப் பார்க்கவேண்டும்… அவனோடு பேச வேண்டும்… அவன் கையணைப்புக்குள் அடங்கி… அவன் கதகதப்பில்… இந்த அருவருப்பை எல்லாம் துடைக்க வேண்டும்… துடித்தாள் ராகவ்வின் மனைவி... முடியுமோ… கிட்டுமோ அவன் அருகாமை….

“ரகு… ரகு” மீண்டும் விசும்ப ஆரம்பிக்க…

அப்போது நிரஞ்சனா…. ”ரகு கிட்ட பேசலாமா சந்தியா…” கேட்க…

கரண் அறைந்ததால்…. வாயில் இருந்து வந்த ரத்தம்… அது மட்டும் இன்றி… அருகில் இருந்த சுவரில் மோதி… நெற்றியில் வேறு அடி… சுமன் அவற்றிற்கெல்லாம் சிகிச்சை அளித்து மருந்தும் இட்டிருக்க

பேச முடியாதது போல்தான் தோன்றியது சந்தியாவுக்கும்… ஆனால்… ரகுவின் குரலைக் கேட்க வேண்டும் என்று தோன்ற… அதே நேரம்… இங்கு நடந்தவற்றை எல்லாம்… அவன் தெரிந்து கொண்டால்… அவன் நிம்மதியாக இருப்பானா… ஓரளவு தெளிவுக்கு வந்திருந்தாள் சந்தியா…

ராகவ்வை பற்றி நினைக்க நினைக்க அவள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பிக்க…

சிவாவும் நிரஞ்சனாவும்… இப்போது நிம்மதி அடைந்திருந்தனர்…

”இதெல்லாம் ரகு கிட்ட சொல்ல வேண்டாம் சந்தியா”… சிவா சொல்ல நினைத்து வாயெடுக்க அதே நேரம்… சந்தியாவும் அதே வார்த்தைகளை சிவாவிடம் சொல்ல…. அவள் முகத்தைப் பார்க்க முடியாமல்… தலை குனிந்திருந்தான் சிவா குற்ற உணர்வில்

சிவாவைப் பார்வை பார்த்தபடியே… நிரஞ்சனா கொடுத்த போனில் கணவனிடம் பேச ஆரம்பித்தாள் சந்தியா…. ஆனால் அவனது குரலில்… சற்றுமுன் அவள் தன்னைத் தேற்றி வைத்திருந்த தைரியத்தை.. இயல்பு நிலையை எல்லாம் அவனிடம் தொலைத்தவளாக… அதே நேரம் வேறு ஏதும் பேச முடியாதவளாக… அவன் பெயரை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க… அதிலும் ஒரு கட்டத்தில் …. ”நீ வேணும் ரகு” என்று திக்கித் திணறி வந்த வார்த்தைகளில்… மொத்தமாக அடி மரம் போல் வீழ்ந்தவன் அவள் கணவன் தான்…

மனைவிக்கு என்ன நடந்தது… என்று ஒன்றுமே ஊகிக்க முடியாதவனாக... ஆனால் என்னவென்று உடனே தெரிந்து கொள்ளவேண்டும்… மனைவிக்கு பேசியதை கட் செய்தவன்… உடனடியாக சிவா எண்ணிற்கு அழைக்க…

சிவாவும் அழைப்பை எடுத்தான்…

“யோவ்…. உன்னை நம்பித்தானே அவளை அனுப்பினேன்…. என்ன ஆச்சு அவளுக்கு…. உங்க நாடகம் மண்ணாங்கட்டி எதுவும் வேண்டாம்… உங்க நியாயம்… அநியாயம்… நீதி தண்டனையெல்லாம் நீங்களே பார்த்துக்கங்க… இன்னும் அரை மணி நேரம் டைம் தருகிறேன்… என் பொண்டாட்டிய என்கிட்ட கொண்டு வந்து ஒப்படைக்கணும்… இல்லை…உங்க வண்டவாளம்லாம் மீடியாக்கு போய்ரும்…”

படபடத்தான் ராகவ்… அவனது வார்த்தைகளில் நாகரீகம் எல்லாம் எங்கோ பறந்து போயிருந்தது…. சிவா என்றெல்லாம் அவன் பார்க்கவில்லை… மரியாதை எல்லாம் சுத்தமாக இல்லை…. அவன் குரல் அவனையுமறியாமல் உயர்ந்திருந்தது

“சிவா சார்… நான் சும்மா சொல்றேன்னு நினைக்காதீங்க… என் சந்தியாவை விட்ருங்க… இல்ல… என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது…. இதுக்கு மேல… நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிற நிலைமைல இல்லை…” கழுத்து நரம்பு புடைக்க கத்தியவனின் ஆக்ரோச குரலில் அவ்வளவு தீவிரம் வந்திருக்க.. இதற்கு மேலும் தான் பொறுத்திருந்தால்… அவன் ஆண்மகனே இல்லை என்று தோன்றியதால் வந்த ஆவேசம் இது…

ஆவேசத்தின் உச்ச கட்டத்தில் இருந்தவனை… “ரகு” என்ற சந்தியாவின் குரல் மென்மையாக… நிதானமாக தழுவியது… ஆம் போன் சிவாவிடமிருந்து சந்தியாவிடம் கைமாறி இருந்தது…

“ரகு சாரி… இங்க இருட்டுல… கரப்பான் பூச்சி… அந்த பயத்துல… “ என்று தட்டுத்தடுமாறி முடிக்க…

“என்ன” என்று அப்படியே நின்றான்… ஆணி அடித்தாற் போல… ஒரு நிமிடம் சந்தியா என்ன சொன்னாள் என்று கிரகித்துக் கொள்ளவே அவனுக்கு கடினமாகி இருக்க… புரிந்த போது…

அத்தனை நேர அவன் மனைவிக்கு என்ன ஆயிற்றோ என்ற ஆவேசமெல்லாம் இப்போது அடங்கி… இப்போது அதை விட வேகமாக மனைவியின் மீது பாய்ந்தான்

”நீ எதுவும் பேசாதடி… இங்க முதல்ல வாடி… உனக்கு இருக்கு… இதெல்லாம் பார்த்து பயப்படறவன்னு உனக்கு இன்னைக்குத்தான் தெரியுமா… அப்புறம் என்ன … “ அடுத்து என்ன சொல்ல வந்தானோ… சொல்லாமல் நிறுத்தியவன்… பல்லைக் கடித்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்தபடுத்த நினைத்தான் தான்… ஆனால் முடியவில்லை அவனால்…

கண்கள் ஆக்ரோசத்தில் சிவந்து… அப்படி எரிந்தது… உச்சஸ்தாயில் கத்தியதில் தொண்டை வறண்டு வலித்தது… அப்படி இவன் துடிக்க… அவளோ… இருட்டு… கரப்பான் பூச்சி என்று விளையாண்டு கொண்டிருக்கின்றாள்…

அந்தோ பரிதாபம்… மனைவியின் உண்மை நிலை தெரியாமல் அவளிடம்.. கோபத்தில் வெடிக்க ஆரம்பித்தான்… சற்று முன் தான் துடித்த வேதனை நிலை தாங்க முடியாமல்

இருந்தும் கண்களை மூடி நிதானித்து கோபத்தை அடக்கி… அடுத்து பேச ஆரம்பிக்கும் போதே…

சந்தியா ஏதோ சொல்ல வர.. இவனோ இன்னும் இன்னும் நெற்றிக் கண்ணைத் திறந்திருந்தான் இப்போது

“நீ ஒரு அட்வைஸும் எனக்கு கிழிக்க வேண்டாம்… போதும்மா உங்க டபுள் ஆக்ட் நாடகமெல்லாம்… ஒரு நிமிசம் என் உயிர் என்கிட்ட இல்லைடி…. நீ பேசுன பேச்சுல… எனக்கு நீ வேணும்னு சொன்ன லட்சணத்தில…” படபடவென்று கோபத்தில் மனைவியிடம் கொட்டிக் கொண்டிருக்க…

இப்போது மனைவியோ… அவனை நிறுத்த முடியாமல் வேதனையில் கண்மூட…

“சந்தியா… இது நமக்கு வேண்டாம்டா… இதுக்கு மேலும் தொடர வேண்டாம்… சிவா சார்கிட்ட கொடு” என்று கெஞ்சியவனாகச் சொன்ன போதே… இப்போது ஒரு நிமிடம் மனம் தடுமாறியது… பேசுவது சந்தியாவா…. நிரஞ்சனாவா…

எந்தவொரு கணவனுக்கும் வரக் கூடாத நிலைமை… கைகள் போனை இறுகப் பிடிக்க… உலகமே தட்டாமலை சுற்றியது

சிவாவிடம் போன் இப்போது கைமாறி இருக்க…

நிரஞ்சனாவா சந்தியாவா… இந்த சந்தேகம் எப்போது வந்ததோ…. ராகவ் சிவாவுக்கு கட்டளை இட்டான்…

“வீடியோ கால் போடுங்க… அது சந்தியாதானா… நான் பார்க்கனும்” கிட்டத்தட்ட கத்த ஆரம்பித்திருந்தான் வெறித்தனமாகவே…

சிவாவோ அது முடியாது என மறுத்தவனாக…

“நீ சந்தியாகிட்ட பேசு…. சந்தியாதான் பேசுறா” என்று சிவாவும் போராட… ராகவ் நம்பவே இல்லை…

“நான் நம்ப மாட்டேன்.. நம்பவே மாட்டேன்… “ என்று உச்சஸ்தாயில் கத்த… கணவனின் ஆக்ரோஷத்தில் சந்தியா இப்போது உண்மையாகவே பயந்தவளாக…. அவனது கோபத்தை நிறுத்தும் முயற்சியில்

”ரகு… நான் சந்தியாதான் ரகு… உன் சகிதான் பேசுறேன் ரகு… ” நம்ப மறுத்தான் ராகவ்…. உண்மையிலேயே அவனுக்கு பைத்தியம் பிடிப்பது போல் இப்போது இருந்தது… எதையும் நம்ப முடியவில்லை… கேட்பதெல்லாம்… தன்னைச் சுற்றி நடப்பதெல்லாம்… நிஜமாகவேத் தெரியவில்லை… எல்லாமே நாடகமாகவேத் தோன்ற…

சந்தியா என்ற நிஜம் பேசிய போதும் …. நிஜம் எது நிழல் எது என்று அவனால் பிரித்தறிய முடியவில்லை…

“எனக்கு உன் குரலை வைத்து நம்ப முடியலை சந்தியா… உன்னைப் பார்த்தால் தான் நான் நிம்மதியா இருப்பேன்” என்றவனின் குரல் நைந்து ஒலிக்க…

”நிரஞ்சனா அங்க வருவா… அப்போ என்கிட்ட பேசு.. ” என்று சந்தியா குரலில் கடினத்தன்மை வந்திருந்தது இப்போது… தன் நிலை புரியாமல் அவன் பேசுவதைக் கேட்டு… இவளுக்கும் இப்போது கோபம் வந்திருந்தது… அவள் கோபம் எல்லாம் அவனுக்கு உறைக்கவில்லை

“அப்போ கூட நீங்க வர மாட்டீங்க மேடம்… உனக்கு நான் முக்கியமில்லை அப்டித்தானே… பைத்தியகாரனா வெட்டவெளில நிற்கிறேண்டி… உனக்கு இருட்டு பயம்… கரப்பான் பூச்சி பயம்னு திடீர்னு சொல்லி கதறுவ… அதுக்கு ஆறுதல் சொல்ல நான் வேணும் உனக்கு… எல்லாரும் சேர்ந்து… என்னை உயிரோட கொல்றீங்க” என்று ருத்திர தாண்டவம் ஆட ஆரம்பிக்க…

அவனை நிறுத்தும் வழியோ… இல்லை ஆறுதல் படுத்தவோ சந்தியாவால் முடியவில்லை… அவனை இப்படிப்பட்ட நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டோமே… என்ற நினைப்பு கோபத்தையும் மீறி இவளையும் கரை உடைக்க வைக்க… இன்னும் பேசினால்… அவனிடம் அழுது கதறி விடுவோம் என்று தோன்ற… தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவளாக

“சரி விடு… இனி நான் உன்கிட்ட எது வந்தாலும் சொல்ல மாட்டேன்… நான் எப்போ நேரில் பார்க்கிறோனோ… அப்போதே பேசிக்கிறேன்” சட்டென்று சந்தியா போனை வைக்க… இப்போது திகைத்து நின்றவன் அவள் கணவனே…

சந்தியாவுக்கு ஏதாவது ஆகி விட்டதோ என்ற பயத்தில் அதிகமாகப் பேசி விட்டோமோ… தனக்கிருந்த படபடப்பில்…

யோசிக்க ஆரம்பித்திருந்தான் ராகவ்

ஆறுதல் தேடி தன்னோடு பேச வந்த மனைவிக்கு தான் ஆறுதலை தரவில்லையோ… இப்போது தனக்குள்ளாக ராகவ் புலம்ப ஆரம்பித்தான்… ஆனாலும் தன்னவளுக்கு எந்த பிரச்சனையுமில்லை என்பதை நம்ப அடம் செய்தது அவனது காதல் மனம்

அதே நேரம்…. தான் மிரட்டியபோது… தயங்கிய சிவாவின் குரல் ஞாபகத்துக்கு வர…. சிவாவுக்கு கால் அடித்தவன்… கறாராக பேச ஆரம்பித்தான்… மிரட்டும் தொணியில்

"நிரஞ்சனா… இப்போ இங்க இருக்கனும்.. அரை மணி நேரத்தில் இங்க உங்க வீட்ல இருக்கனும்… இல்லை வீடியோ கால் போடுங்க… சந்தியாக்கு ஒண்ணும் ஆகலைனு நான் அப்போதான் நம்புவேன்… இதுல எது நடக்கலைனாலும்… நீங்க பெரும் விளைவுகளை சந்திக்கனும்.. சிவா சார்” என்று சிவாவுக்கு ஆணையிட…

வேறுவழியில்லாமல்… சிவா நிரஞ்சனாவை தனது இல்லத்துக்கு அனுப்ப… நிரஞ்சனா வந்த அடுத்த நொடி… சிவாவுக்கு இவன் அழைக்க… சிவாவும் சந்தியாவைப் பேச வைத்தான்…

நிரஞ்சனா சற்று தள்ளி இருக்க… சந்தியாவிடம் பேச ஆரம்பித்தான்…

அவளிடம் ’கண்ணே மணியே… இல்லை வழக்கமான அவனது கொஞ்சல் அழைப்பான சகி’ என்றெல்லாம் கொஞ்ச வில்லை…

சராமரியாகத் திட்டல்கள்தான் அந்த அழைப்பு முழுவதும்…


ஆறுதலாக பேசத்தான் நினைத்தான்… அதையும் மீறி கோபத்தில் தான் வார்த்தைகள் வந்தன… அனுபவித்த வேதனை அப்படி….

“இதெல்லாம் தெரியாமலா நீ ஜெயிலுக்கு போன… அது என்ன ஸ்டார் ஹோட்டலாடி…” என்று அவன் திட்டிக் கொண்டிருக்க…

“லவ் யூ ரகு” என்றாள் இவளோ அவனின் திட்டல்கள் எல்லாம் யாருக்கோ என்பது போல….

கேட்ட அவளின் காதல் ததும்பிய வார்த்தையில்…. இன்னும் இன்னும் திட்ட ஆரம்பித்தான் இவன்…

“ஏய்… நான் உன்னைத் திட்டிட்டு இருக்கேண்டி…” என்ற போது இவனுக்கே சந்தேகம் வந்திருந்தது… நாம் இவளைத் திட்டுகிறோம் என்ற பெயரில் கொஞ்சிக் கொண்டிருக்கின்றோமா… என்று…. இல்லை என்று மனம் சொல்ல…

”சந்தியா…. அவனவன் இருக்கிற நிலைமை தெரியாம கடுப்படிக்காதடி…” எனும் போதே…

நீ என்னவோ பேசிக்கொள்… நான் இப்படித்தான் பேசுவேன் என்று சந்தியா பேச ஆரம்பித்தாள்…

“உன் மேல எனக்கு லவ் இருக்கா இல்லையானு உன்கிட்ட சந்தேகம் கேட்டேன்ல ரகு… இப்போ சொல்றேன் ரகு…. காதல்னா என்னன்னு உன்கிட்ட மட்டும்தான் புரிஞ்சுக்கிட்டேன் ரகு” என்ற அவளது குரலில்… அவன் கோபம் எல்லாம் வேறு உலகத்துக்கு போகாமல் இருந்தால் தான் ஆச்சரியம்…..

அதே நேரம் சொன்ன சந்தியாவின் குரலில் விளையாட்டோ குறும்போ இல்லை… தீவிரத்தை உணர்ந்த போது… இவனும் கோபப்படவில்லை…

“சந்தியா… நீ தான் குழம்பிட்டு இருந்த… எனக்குத் தெரியாதா… உனக்கு என் மேல லவ் இல்லாமலா… அங்க இருந்துட்டு என்னை கஷ்டப்படுத்துறடி….” என்ற போதே அவன் குரல் இப்போது கோபத்தை தொலைத்திருக்க

அவனது சகியோ… பொங்கி வந்த அழுகையை அடக்க முயற்சி கொண்டிருந்தாள்… என்னதான் தன்னவனிடம் காதல் மொழி பேசிக் கொண்டிருந்தாலும்.. நடந்த நிகழ்வுகளை அவளால் மறக்கவே முடியவில்லை…


"ஜெயவேல் கரணைப் பற்றி… அவனிடம் சொல்ல மனம் துடித்தது… தான் ஒருவனைச் சுட்டுவிட்டோம் என்று கணவனின் மார்பில் சாய்ந்து கதறத் தோன்றியது” ஆனால் தன்னவனிடம் சொல்ல முடியாத நிலை…

சந்தியா அமைதி ஆகி இருந்தாள் இப்போது…

அதே நேரம்… ராகவ்வுக்கு, காதம்பரி ஞாபகம் வர

“சந்தியா காதம்பரிக்கு இன்னைக்கு பிறந்த நாள்” என்ற போதே

அதை எல்லாம் அவள் காதில் வாங்கவே இல்லை…

“ரகு… நீ என்கிட்ட பேசு… ” என்றாள் என்னவோ அவன் அவளிடம் பேசாமல் இருப்பது போல…

“காதம்பரி… உன் அக்கா” என்று தான் பேசிய வார்த்தைகளை.. அவள் காதில் வாங்கவில்லையோ என்று காதம்பரி பெயரை அழுத்தி மீண்டும் சொல்ல…

“ப்ச்ச்… ரகு எனக்கு வேற யாரைப் பற்றியும் பேச பிடிக்கலை… உன்னைப் பற்றி மட்டும் தான் பேசப் பிடிக்குது” என்று அவள் சொல்ல…. வாய் விட்டுச்சிரித்தான் ரகு… அவன் சிரித்த சிரிப்பில்… கண்களின் ஓரம் இலேசாக கண்ணீர் கூட கசிந்திருந்தது… அது, மனைவி தான் மட்டுமே போதும் என்ற சொன்ன ஆனந்தத்தில் வந்த கண்ணீர்… அப்போதும் தன் மனைவியிடம் தன் இடத்தை உறுதிப்படுத்தும் விதத்தில்

“அப்போ வசந்தி… உன் அம்மா பற்றி பேசலாமா“ என்று உற்சாகமாக வம்பிழுக்க…..

“ரகு…. ரகு மட்டும் எனக்கு போதும்” இவளோ பேச முடியாமல் கஷ்டப்பட்டு பேசிக் கொண்டிருந்தாள்… கணவன் மீண்டும் இயல்பாக மாறிவிட்டான் என்ற எண்ணமே அவளுக்கு… தான் பட்ட… பட்டுக் கொண்டிருக்கும் அவஸ்தைகளை மறக்க வைக்க…

ராகவ்வும் சந்தியாவிடம் இயல்பாக பேச ஆரம்பித்திருந்தான்… சந்தியா நன்றாக இருக்கின்றாள் நூறுசதவிகிதம் அந்த நிமிடம் நம்பினான்… நம்பினான் என்று சொல்வதை விட நம்ப வைத்தாள் அவனது மனைவி என்றே சொல்ல வேண்டும்….

இவனும் மற்றதை எல்லாம் விட்டு விட்டு அவள் சொல்வதை மட்டுமே கேட்க ஆரம்பிக்க… சிவா சந்தியாவிடன் அருகில் வந்திருந்தான் இப்போது… கை சைகையில் நேரம் ஆகின்றது என்பதை காட்ட… சந்தியா கண்களை மூடி தன்னை ஒருமுகப்படுத்தியவள்…

ரகு…”

“ஹ்ம்ம்” என்றான்…. அவள் குரலை மட்டுமே அவன் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு ஏனோ வார்த்தைகளும் மறந்து போய் விட்டது போல… தலையை மட்டும் ஆட்டி வைக்க…

இந்த ஜென்மம் மட்டும் போதும்னு சொன்னேன்ல… அது எனக்கு போதாதுடா…. ஏழு ஜென்மமும் நீ வேணும்” என்ற போதே…

இதமான தென்றலும் அவனைத் தொட்டுச் சென்று அவன் கேசத்தை கலைத்துச் செல்ல… அவனது மனதிலும் அதே இதத்தைக் கொடுத்துச் சென்றது அவன் மனைவியின் வார்த்தைகள்… இருந்தும்…. சிரித்தபடியே

“இளிச்சவாயன்… எவ்வளவு அடினாலும் தாங்குறான்… இந்த ஜென்மத்தோட எதுக்கு விடனும்… ஏழேழு ஜென்மத்திலும் வச்சு செய்யணும்னு… முடிவு பண்ணிட்ட அப்டித்தானே சகி” மனைவியிடம் கிண்டலாகச் சொன்னாலும் புன்னகை மட்டுமே அவன் முகமெங்கும்….

சில நொடிகள் சந்தியாவிடம் அமைதி மட்டுமே…. அவளுக்கும் புரிந்தது… வழக்கமான நேரத்தை விட இன்று அதிகம் பேச அனுமதிக்கப்பட்டிருக்கின்றோம் என்று உணர்ந்தவளாக

“ரகு உன்னைக் கட்டிகனும் போல இருக்குடா… உன்னை மறுபடியும் பார்க்கும் போது… என்னை உன்னை விட்டு போகாத மாதிரி… என்னை உன்னோட கட்டிக்கோடா...” இப்போது அழுகை வந்திருந்தது சந்தியாவுக்கு… இருந்தும் அடக்கிக் கொண்டு சொன்னவள் கணவன் குரலைக் கேட்க ஆவலாக இருக்க…


அதே நேரம் … மொபைலிலோ சிக்னலும் கட்டாகியிருக்க… மொபைலையே சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள்…. அடுத்த சில நொடிகளில் சிவாவிடம் போனையும் கொடுத்தவளுக்குத் தெரியவில்லை… இனி கணவனைப் பார்க்கும் போது அவன் குரலைக் கேட்க அவன் முன் கதறிக் கொண்டிருப்பாள் என்று….

அங்கு போன் சிக்னல் கட்டானது தெரியாமல் இங்கு ராகவ் மனைவியிடம் வழக்கம் போல வம்பளக்கும் வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்தான்

“இப்போ கட்டிக்கோ, மிஸ் யூ எல்லாம் சொல்வ… நேர்ல பார்க்கும் போதுதானே தெரியும் உன் மிஸ் யூ கட்டிக்கோ எஃபெக்ட்லாம்” என்ற போதே… அவன் மீசை ஞாபகம் வர

“ஹேய் சந்தியா உனக்கு ஒரு விசயம் தெரியுமா… உன் ஃபேவரைட்… மீசை ” என்ற போதுதான்…. எதிர்முனை நிசப்தமே அவனுக்கு உறைக்க… போனை எடுத்துப் பார்க்க… அவள் மனைவியோடு இணைந்திருந்த அலைவரிசையில் இருந்து இவன் எப்போதோ கட்டாகி இருக்க… தன்னைத்தானே நெற்றியில் அடித்துக் கொண்டவனாக

“எப்போ கட் ஆனா… அது கூட தெரியாம தனியாவா பேசிட்டு இருந்தோம்” என்று புலம்பியபடியே இலேசான வருத்ததோடு சொன்னவனுக்கு தெரியவில்லை… இவன் நினைவோடு இருக்கும் போது… தன் முன் நின்ற அதீனாவை தன் சகி என்று நினைத்து கரங்களை நீட்டப் போகிறோம் என்று …

அது மட்டுமின்றி அவன் மனைவி அவனைத் தேடி வந்து அவன் கரங்களுக்குள் அடங்கி ஆதுரம் தேட நினைக்கும் போது…. அவன் நினைவின்றி இருக்கப் போகிறான் என்பதும் அப்போது தெரிந்திருக்கவில்லை…

அலைபேசியை பாக்கெட்டில் போட்டவன்… சற்று தள்ளி தூரமாக நின்று கொண்டிருந்த நிரஞ்சனாவிடம் வந்தான்… இயல்பாக அவள் பெயர் சொல்லி அழைக்க… நிரஞ்சனாவோ அவனைப் பார்க்க முடியாமல் கண்களைத் தாழ்த்தினாள்…

ராகவ்வுக்கு இப்போதும் சந்தேகமே….

ரஞ்சி… ப்ளீஸ்… அவ இந்த அளவுக்கு எமோஷனலா ஆகிறதுக்கு இருட்டு… அவ மேல விழுந்த பூச்சி மட்டும் தான் காரணமா” என்று சந்தேகமாகக் கேட்க

“சந்தியா பேசியும் கூட… நம்பிக்கை இல்லையா ரகு… அவளுக்கு ஒண்ணும் இல்லை ரகு ” என்றாள் தொண்டைவரை வந்த உண்மைகளை மறைத்து…

ராகவ்வுக்கு சந்தியாவிடம் பேசிவிட்டு வைத்தாலும்… மனம் ஆறுதல் அடையவே இல்லை… அதிலும் அவள் சாதரணமாக பேசி வைத்திருந்தாலும் பரவாயில்லை… பேசிய வார்த்தைகள் அத்தனையிலும் காதல் காதல் மட்டுமே…

அவள் மேல் அப்படி ஒரு கோபம் வந்தது… தன் மேலும் தான்…

இன்னும் எத்தனை நாட்கள்… விரல் விட்டு எண்ணகூடிய நாட்கள் தான்… ஆனால் அவளை விட்டு பிரிந்திருக்கும்… அந்த சில நாட்களும் கொடியதாக நீண்டு அவனைக் கலக்கமடைய வைத்திருக்க… அதே நேரம் அடுத்த வாரம் இதே நேரம் தன் சகி தன்னுடன் இருப்பாள் என்ற நினைவு வர… அவன் முகத்தில் மெல்லிய புன்னகைக் கீற்று தோன்ற… நிரஞ்சனாவைப் பார்த்து புன்னகைத்தவன் மணியைப் பார்த்தான்…

மணி எட்டாகி இருக்க…

ரஞ்சி… நீ வீட்டுக்கா… இல்லை டூயூட்டிக்கா” என்று கேட்க… ”

நிரஞ்சனாவோ மீண்டும் சிறைச்சாலைக்குத்தான் செல்வதாகக் கூற

“அதீனாவால சந்தியாக்கு ஏதும் பிரச்சனை இருக்காதே ரஞ்சி” மீண்டும் கவலையாகக் கேட்டான் ராகவ்…

அதீனாவால அவ இருக்கிற இடத்தை விட்டு சந்தியா பக்கம்லாம் வர முடியாது ரகு..” என்று நம்பிக்கையாக???? ராகவ்விடம் கூறியவள்… அதன் பின் கிளம்ப…

தன் அறைக்குள் சென்ற ராகவ்வுக்கோ… தூக்கம் வராமல்… லேப்டாப்பை ஆன் செய்து… சற்று முன் பார்க்க நினைத்த தாஜ்மஹால் போட்டோ கலெக்‌ஷனை பார்க்க ஆரம்பித்தவனுக்கு… அதற்கு கிடைத்த பாராட்டு மழை இப்போது ஞாபகம் வந்தது…

அந்த போட்டியில் அனைவரும்… தாஜ்மஹாலை மட்டுமே சுற்றி சுற்றி வந்து வளைத்து வளைத்து பல்வேறு விதமான கோணங்களில் எடுத்திருக்க… ராகவ் மட்டுமே… ஷாஜகானின் பார்வையில் தாஜ்மஹால்என்ற மையப் பொருளைக் கருத்தாகக் கொண்டு… ஷாஜகான் இறுதி நாட்களில் சிறை வைக்கப்பட்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து… இப்போது அங்கிருந்த வெகு உயரமான கட்டிடத்தில் இருந்து… தாஜ்மகாலை படம்பிடிக்க… அவனின் இந்த சிந்தனைக்காக… அவனது புகைப்படங்கள் முதலிடத்தை வென்றிருந்தன அந்தப் போட்டியில்…

அமைதியாக அவற்றையே பார்த்தபடி இருந்த ராகவ்வுக்கு திடீரென யோசனை வெட்டியது… சந்தியாவை கோர்ட் வளாகத்திற்கு கூட்டி வரும் போதே பார்க்க வேண்டும் போலத் தோன்றியது… ஏனோ அவளைப் பார்க்கவேண்டும் என்ற உந்துதல் தந்த ஆர்வம்.. அவனை அப்படி யோசிக்க வைக்க… அதிலும் சிக்கலே

தெரியாத ஊர்…. முன்னே இங்கிருந்த இடங்களுக்கு போக வர வெங்கட் உதவி செய்தான்…. இப்போது என்று யோசிக்க… இப்போது அவன் டெல்லியில் தான் இருக்கின்றான்… உதவிக்கும் அழைக்கலாம்… ஆனால் இந்த சில நாட்களில் அவன் கால் செய்த போதெல்லாம் எடுக்கவில்லையே… அவனைப் பார்த்தால் எப்படியும் அவனிடம் இங்கு நடப்பவற்றை எல்லாம் தான்உளறி விடுவோம் என்று ராகவ்வுக்கு சர்வ நிச்சயமாகத் தெரியும்… அதனாலேயே அவன் வெங்கட்டைத் தவிர்த்து வந்தான்…


பாதுகாப்பு தேடி… இல்லை சிவாவை எதிர்க்க வேண்டுமென்று நினைத்திருந்தால் அவன் எப்போதோ வெங்கட்டின் உதவியைக் கோரியிருப்பான்… அப்படி ஒரு சூழ்நிலையை அவன் மனைவி தடுத்து விட்டாளே… ஆக அவனைப் பார்த்தால் தான் இருக்கும் மன அழுத்தத்திற்கு தன் நண்பனிடம் அதற்கொரு வடிகால் தேடிவிடுவோம் என்று தோன்ற… வெங்கட்டை முற்றிலுமாகத் தவிர்த்திருந்தான் ராகவ்….

ஆனால் இப்போது அவன் உதவி தேவைப்பட… அழைத்தால் எடுப்பானா… அப்படியே எடுத்தாலும்… நீதிமன்ற வளாகத்தை எதற்கு புகைப்படம் எடுக்கின்றாய்?… ஏன்? எதற்கு? என்று கேள்வி மேல் கேள்வி கேட்பானே… பொய் சொன்னால் கண்டுபிடித்து விடுவானோ… போலிஸ் மூளை ஆயி்ற்றே… அவனுக்கு போன் செய்யலாமா வேண்டாமா… இந்த சிந்தனை மட்டுமே உழன்று கொண்டிருந்தது அவனுக்குள் இப்போது …

2,641 views6 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது...

6 Comments


Saru S
Saru S
Jul 12, 2020

Nice epi and sad

Sandu ku vaikum kuri mari ragava padam parkumo

Like

Unknown member
Jul 09, 2020

Some thing magical in ur stories.when start 2 read it cnt stop.i'm a big fan of ur novels......this z an imotional upadate

Waiting for next update

Like

Mumtaj Begum
Mumtaj Begum
Jul 09, 2020

Next update please quickly dear.wait panna mudiyala.

Like

vp vp
vp vp
Jul 08, 2020

Hate siva.

Like

Baladurga R Elango
Baladurga R Elango
Jul 08, 2020

Nice update. romba kastama irukku epa than sagi ragu va thedi varuva.

Like
© 2020 by PraveenaNovels

Developed by Varuni Vijay

© 2020 by PraveenaNovels

  • Grey Facebook Icon
bottom of page