top of page
Writer's picturePraveena Vijay

சந்திக்க வருவாயோ?-55

Updated: Jul 7, 2020

அத்தியாயம் 55:

அதிகாலை 5 மணி… அழகான இனிமையான வேளைதான்… நம் நாயகனுக்கோ… உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் பஞ்சணையில்… மனைவி வெறும் தரையிலும் குளிரிலும் வாடிக் கொண்டிருக்க… கொண்டவனுக்கு நிம்மதியாக உறக்கம் வருமா… உறங்கினால் தானே உறக்கம் கலைவதற்கு… எப்போதடா விடியும் என்று மணியைப் பார்த்துக் கொண்டிருந்தவன்… மெல்ல வெளிச்சம் வெளியில் பரவ ஆரம்பிக்க… இங்கு அவனும் அவன் மனைவியும் அமரும் அந்த முல்லைப் பந்தலில் கீழ் உள்ள கல் பெஞ்சில் வந்து உட்கார்ந்தவனாக அன்றைய நாளை ஆரம்பித்தவன்… கையில் இருந்த செல்போனை பார்க்க ஆரம்பித்தான்…

இன்றைய தினத்தின் எந்த நிமிடத்தில் தன்னவளின் குரல் இந்த செல்போனை அதிர வைத்து… தனக்கு தன் உயிரை மீட்டெடுத்து கொடுக்கப் போகின்றது… எப்போதடா தன் மனைவியுடன் பேசுவோம் என்று இன்றைய நாளின் அவள் குரலைக் கேட்கும் நேரத்திற்காக காத்திருக்க ஆரம்பிக்க… அதே நேரம் மனம் அவளை மீண்டும் காணப்போகும் நாளை எண்ணி நாட்களைக் கணக்கிட ஆரம்பித்திருந்தது… 5 நாட்கள் முடிவடைந்து விட்டது… இன்னும் விரல் விட்டு எண்ணக் கூடிய சில நாட்களே…

தன்னவள் தன்னிடம் மீண்டும் வந்து சேரும் தினம் மட்டும் வரட்டும்… அப்படியே அவளைத் தூக்கிக் கொண்டு அவனும் அவளும் மட்டுமே உள்ள தனி உலகத்திற்கு பறந்து விட வேண்டும் என்று உள்ளம் துடிதுடித்தது … கைகள் இரண்டும் அவளை ஏந்திக் கொள்ள பரபரத்தது… ஒவ்வொரு நொடியும்… அவ்வளவு தூரம் வேண்டாம்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கழியும் என்று யாராவது முதலில் இவனிடம் சொல்லி இருந்தால் நம்பி இருப்பானோ இல்லையோ… இப்போது நம்பினான்… தனக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் மட்டுமே முடிந்திருக்கின்றது… இதில் அவளோடு சேர்ந்து இருந்தது சொற்ப நாட்களே… துணை இல்லாமல் நாட்களைக் கழிப்பது இத்தனை துன்பமா… இல்லை இவனுக்குத்தான் இப்படி இருக்கின்றதா என்று தெரியவில்லை… தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்…

சந்தியா அங்கு நன்றாகத்தான் இருக்கின்றாள் என்று தெரிகிறது… தினமும் அவளிடம் எப்பாடுபட்டாவது பேசி விடுகின்றான்தான்… ஆனால் சில சமயம் நிரஞ்சனா பேசுகிறாளா… சந்தியா பேசுகிறாளா என்று சந்தேகம் வேறு வந்து விடுகின்றது… சூடுகண்ட பூனை அல்லவா… 100 சதவிகிதம் நம்ப மறுக்கின்றது மனம்…

நிரஞ்சனா பேசும் போது…. அது தன் மனைவி குரல் இல்லை என்று அட்சர சுத்தமாக… கணித்த அவன் மனது… இன்று மனைவியே பேசும் போது… தடுமாற்றமடைகின்றதே நம்பிக்கை இல்லாமல்…

இன்று எப்போது பேசுவோம்… கையில் வைத்திருந்த மொபைலில் மணியைப் பார்க்க… அது 6.30 எனக் காட்ட... இன்றைய தினம் முடிய… இன்னும் கிட்டத்தட்ட 17 மணி நேரம் இருக்க… அந்த 17 மணி நேரத்தில் தன்னவளிடம் பேசும் பொன்னான நேரம் எப்போதோ… இப்போதிருந்தே தவமிருக்க ஆரம்பித்தான்… தன்னவளுக்காக… அதிர்வலைகளில் இவனை அடைய போகும் அவள் குரலுக்காக

---

சிறையில் சந்தியாவுக்கும் அதே நிலைதான் சாதரணமாகவே நன்றாக உறக்கம் வரும் அவளுக்கு… இங்கு கேட்கவா வேண்டும்… ரீங்காரமிடும் கொசுக்கடி… நடுக்கும் குளிர்… மிரட்டும் இருள்... கூடுதலாக வெறும் தரையில் படுத்ததால் ஏற்படும் உடல் வேதனை என அதிகாலையில் தான் அவள் உறங்கி இருக்க… அதே நேரம் நிரஞ்சனா சரியாக வந்து எழுப்பி விட…

அவள் வீட்டு அறையில் படுத்திருப்பது போல… பாதி தூக்கத்திலேயே… கண்களைத் திறக்காமலேயே சந்தியா அவளுக்கு பதில் அளித்தாள்

”ரஞ்சி… இப்போ எழுந்து என்ன பண்ணப் போகிறேன்… எனக்கு தூக்கம் வருது” என்று சொன்னபடியே மீண்டும் உறங்கியவளைப் பார்த்து… நிரஞ்சனாவுக்கு புன்னகை வர… தூங்கட்டும் என்று விட்டு விட்டவள்… அதீனாவை எழுப்பச் சென்று விட்டாள்…

அதீனாவுக்கோ எப்படியாவது அந்த சிறையில் இருப்பவளைப் முகத்தைப் பார்த்து விட வேண்டுமென்று … நேரம் காலம் பார்த்துக் கொண்டிருந்தாள்… இந்த நிரஞ்சனா நகரவே மாட்டேன்கிறாளே என்று நிரஞ்சனாவை முறைக்க மட்டுமே முடிந்தது… அவ்வப்போது நிரஞ்சனாவிடம் சந்தியாவைப் விசாரிக்கவும் செய்தாள் தான்… நிரஞ்சனா வாயைத் திறந்தாள் தானே…

சந்தியாவைப் பார்க்க வேண்டும்… இப்போதைக்கு அதீனாவின் குறிக்கோள் இதுதான்….

---

எல்லாமே சிவா திட்டமிடல் படி ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டிருக்க… சிவாவுக்கும் பெரிய மன திருப்தி வந்திருக்க… அதுவரை சூமூகமாக போய்க் கொண்டிருந்த அவனுடைய திட்டத்தை பாதை மாற்றி அமைக்க வந்தனர் ஜெயவேலும்… கரணும்…

கிட்டத்தட்ட 1 மணி அளவில் சிவா, நிரஞ்னாவிடம் வந்தவனாக, தான் அலுவலகப் பணி காரணமாக வெளியில் செல்வதாகக் கூறி விட்டு… சந்தியாவிடமும் கவனமாக இருக்கும் படி எச்சரித்துவிட்டு வெளியேறிவிட… அவன் அந்தப் பக்கம் போக… சரியாக ஜெயவேலும், கரணும் அங்கு வந்தனர்…

இருவரையும் பார்த்த அம்ரீத்துக்கு ஒரு பக்கம் எரிச்சல் இருந்தாலும்… வேறு வழி இன்றி இருவரிடமும் பேச ஆரம்பிக்க…

“அம்ரீத் அதீனா கிட்ட சில விசயங்கள் பேச வேண்டும்… நெக்ஸ்ட் வீக்ல அவ கேஸ் முடியப் போகிறது… அவ அப்ரூவர் ஆகிட்டான்னு நீங்க சொன்னது என்ன ஆச்சு” என்ற போது…

அம்ரீத்தையும் அறியாமல்…

“சார்… அவளை எல்லா விதத்திலயும் தயார் செய்து விட்டோம்… நிச்சயமா கோர்ட்ல அவ உண்மையைச் சொல்லுவா… சோ எந்த பிரச்சனையும் இல்லை… இதுல நீங்க அவளைப் பார்த்து என்ன ஆகப் போகிறது” என்று சொல்லி அவர்களை அங்கிருந்து கிளம்பவைக்க முயற்சிக்க…

கரண் எழுந்தபடி,

“எனக்கு ஆர்டர் போடாதீங்க அம்ரீத்… நீங்களும் சிவாவும்… இந்த மாதிரி என்னைக் கட் பண்ற மாதிரி பேசுறதுதான் எனக்கு சரியா படலை சம்திங் ராங்…“ என்று அம்ரீத்தை ஆராயும் பார்வை பார்க்க…

எரிச்சலாக எழுந்தார் அம்ரீத்… அம்ரீத்துக்கு ஏனோ சரியாகப் படவில்லை… முடிந்தவரை கரண் முக்கியமாக ஜெயவேல் அதீனாவைப் பார்ப்பதை தடுக்க முயன்றார்

“சார்… அதீனாவை நீங்க பார்க்கலாம்… ஆனால் சார்” என்று ஜெயவேலைப் பார்த்தவராக…

“ஏற்கனவே இரண்டு முறை… கோர்ட்ல ஆர்டர் வாங்கமால் தான் வந்து பார்த்துப் போயிருக்கிறார்… அதீனா மிக முக்கியமான பிரிவில் உள்ளே வைக்கப்பட்டிருக்கின்ற குற்றவாளி… அவளை இந்த மாதிரி கோர்ட் அக்செப்டன்ஸ் இல்லாமல பார்க்கிறது தவறு சார்” என்ற போதே…

“ஓ… நான் தான் ஹையர் ஆஃபிசர் பொறுப்பில இருக்கிறேன்னு நினைக்கிறேன்… இதெல்லாம் தெரியாமத்தான் எனக்கு அந்த போஸ்ட் கிடைத்ததா அம்ரீத் சார்” என்ற கரணின் இளக்காரமான பார்வையில் அம்ரீத்தும் பெரிதாக கண்டு கொள்ள வில்லை…

வழக்கம் போல தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி… அவர்கள் அங்கு வந்த அடையாளத்தை எல்லாம் மறைத்தவராக… எப்போதும் அதீனாவை பார்க்கப் போகும் அறைக்குச் செல்ல ஆரம்பித்தார் ஜெயவேலோடு….

”சந்தியாவை இவர்களிடம் கூட்டி வந்து நிறுத்தவெல்லாம் அம்ரீத் நினைக்கவில்லை… அதீனாவை அழைத்துக் கொண்டு… இருவரின் முன் போய் நிறுத்துவோம்…” என்று அவர்களை அழைத்துச் சென்ற அம்ரீத்… அவர்களை அந்த அறையில் அமரும் படி சொல்லி விட்டு… நிரஞ்சனாவிடம் அதீனாவை அழைத்து வரச் சொல்ல… அப்போதுதான் ஒன்று உணர்ந்தார்…

அதீனா… அப்ரூவர் ஆக ஒத்துக் கொண்டு விட்டாள் என்று சொல்லி விட்டோமே… கரண் முன் அதீனா சொல்வாளா… என்ன செய்வது என்று யோசித்தவர் சந்தியாவை அவர்களிடம் அனுப்பலாமா… சிவா என்ன சொல்வானோ என்றிருந்தது…

ஏற்கனவே அதீனா விசயத்தில் இவர்கள் அத்துமீறி நடக்க முயற்சித்தது தெரியும்… இவர்கள் குழுவின் தலைமைக்கு சொல்லிருக்கின்றனர் தான்… அதன் பின் கரண் வராமல் போக … கரணை பொருட்டாகவே நினைக்கவில்லை அம்ரீத்தும், சிவாவும்…

ஆனால் இன்று வந்து நிற்கின்றனரே… ஆனால் பெரிதாக என்ன நடந்து விடப் போகின்றது… பத்து நிமிடத்திற்கு மேல் சிசிடிவி காட்சியை நிறுத்தி வைக்க முடியாது என்று இவர்களை வெளியேற்றி விடலாம் என்று முடிவெடுத்தவர்….

நிரஞ்சனாவை அழைத்து… சந்தியாவை அழைத்து வரச் சொல்லி விட்டு… கரண் மற்றும் ஜெயவேல் இருந்த அறைக்குச் சென்று விட…

நிரஞ்சனாவுக்கு ஜெயவேல் மற்றும் கரண் பற்றி பெரிதாக தெரியாது… மினிஸ்டர்… ஹையர் ஆஃபீசர்… என்று மட்டும் நினைத்தவளாக…

சந்தியா இருந்த சிறை அறைக்குப் போனவளாக... அவளது கதவைத் திறந்தவளாக… சந்தியாவை வெளியே அழைத்து வர

“அதீனாவைப் பார்க்க… மினிஸ்டர் அப்புறம் டிசிபி சார் வந்திருக்காங்க…. ஜஸ்ட் நீ அப்ரூவர் ஆனதை மட்டும் அவர்கிட்ட சொன்னால் போதும்… “ என்ற போதே சந்தியா கண்களில் சிறு கலக்கம் வந்து போக…

“ஒண்ணும் பிரச்சனை இல்ல சந்தியா… 10 மினிட்ஸ் தான்” என்று அவள் கைவிலங்குகளைப் போட்டவள் லாக் போடவில்லை… இது கூட சிவா நிரஞ்சனாவிடம் சொல்லி இருந்தது… சந்தியாவை எங்கு அழைத்துச் சென்றாலும் பேருக்கு கைவிலங்குகள் இருக்க வேண்டுமே தவிர…பூட்டப்பட்டிருக்கக் கூடாது என்று சிவா இவளிடம் அறிவுறுத்தியிருந்தான்

எப்போதும் முக்கால் வாசி இருட்டு நிறைந்திருக்கும் அந்த அறையிலிருந்து வெளியே வந்து… நிரஞ்சனாவுடன் நடக்க ஆரம்பித்த சந்தியா… சில அடி தூரம் கூட நடந்திருக்க மாட்டாள்…

ஏதோ ஒரு குறையாக இருக்க… வேகமாக யோசித்தவள்… ’என்னோட ஜெர்க்கின்’ என்று நிரஞ்சனாவைப் பார்க்க… அவளும் சந்தியாவைப் போகவிட… வேகமாக வந்து கோட்டை எடுத்து அணிந்து… கழுத்துவரை ஜிப்பை ஏற்றியவளுக்கு… கணவனே தன்னுடன் இருப்பதைப் போல ஒரு எண்ணம்… இப்போது மனதில் பெருத்த நிம்மதி…

அதன் பின் நிரஞ்சனாவோடு… அந்த பெரிய லாபி வழியே வந்தவளுக்கு… அந்த மிதமான ஒளி அவள் கண்களுக்குப் பரவியது கூட இதம் தான் தந்தது… எப்போதடா வெளி உலகைக் காணப் போவோம்… ராகவ்வைப் பார்க்கப் போவோம் என்று மட்டுமே நினைவுகள்.. முழுதாக 5 நாட்கள் முடிந்திருந்தது… அவன் முகத்தைப் பார்த்து… அவனைப் பார்க்காததே அவளுக்கு பெரிய அலைகழிப்பாக இருந்தது… அவன் குரலைத் தினமும் கேட்டால் கூட… அவனைப் பார்க்காமல் இருப்பது இவளுக்குள் மன உளைச்சலைத்தான் கொண்டு வந்திருந்தது…

“தானாகவேத்தானே வந்தோம்” இப்போது புலம்பி என்ன பிரயோசனம் ... பெருமூச்சை விட்டவளுக்கு… வந்திருப்பவர்கள் என்ன கேட்பார்களோ… அந்த எண்ணமும் வந்து சேர அமைதியாகவே… நிரஞ்சனாவின் பின்னால் வந்தவள்… அந்த சந்திப்பு அறைக்குள்ளும் நுழைந்திருந்தாள்…

அங்கு தனக்கு முன் வந்து காத்திருப்பவர்களை பார்த்தவளுக்கு… இனம் புரியாத பயம் நெஞ்சத்தில் வந்திருந்தாலும்… பார்வையில் அதைக் கொண்டு வராமல் அவர்கள் முன் வந்து நின்றாள் சந்தியா…

பயம் இருந்தாலும் காட்டக் கூட முடியாத நிலை… ’அதீனா பயப்படமாட்டளே…’ தனக்குள் சொல்லிக் கொண்டாள் சந்தியா

அந்த அறிமுகமில்லா இருவரையும் பார்ப்பதை, சந்தியா அறவே தவிர்த்தாள் என்றே சொல்ல வேண்டும்… சிவா அவளுக்கு ஏற்கனவே சொல்லி வைத்திருந்ததுதான்… சிறையில் யார் இவளைப் பார்க்க வந்தாலும்… அவர்களை ஏற்கனவே அதீனா பார்த்திருக்கலாம்… இல்லை பார்க்காமலும் இருந்திருக்கலாம்.. ஏற்கனவே அதீனா அந்த நபர்களைப் பார்த்திருந்தால்… நீ அறிமுகமில்லா பார்வை பார்த்து வைத்தால்… அவர்களுக்கு சந்தேகத்தை விளைவிக்கும்… அதனால் முடிந்தவரை அவர்களை நேருக்கு நேராக பார்க்காதே… யார் வந்தாலும் இவர்கள் யார் என்ற ஆராய்ச்சிப் பார்வையை முன் வைக்காதே… என்று சொல்லி இருக்க…. சந்தியாவும் தப்பாமல் அதை இப்போது கடைபிடித்தாள் என்றே சொல்ல வேண்டும்

ஜெயவேல்… சந்தியா உள்ளே வந்ததில் இருந்து… சந்தியாவை சந்தியாவை மட்டுமே தன் பார்வையில் கொண்டு வந்திருக்க… கரண் தன் அருகில் வந்து நிற்கவைக்கப்பட்ட சந்தியாவைப் பார்த்தபடியே…

”ஓகே நீங்க போகலாம்” என்று அம்ரீத் மற்றும் நிரஞ்சனா இருவரையும் போகச் சொல்ல… இருந்தும் அம்ரீத் கரணிடம்

”சார் இவங்க இருக்கட்டும்..” என்று நிரஞ்சனாவை நிறுத்தி வைக்க நினைக்க… அதற்கெல்லாம் கரண் சம்மதிக்கவில்லை… அவர்களுக்கும் வேறு வழி இல்லை…

நிரஞ்சனாவை அழைத்துக் கொண்டு அம்ரீத் வெளியே போக…

நிரஞ்சனா மனமில்லாமல் வெளியே போக நினைக்க… அப்போது கரண் நிரஞ்சனாவை அழைத்தார்…

”இதுதான் அக்யூஸ்ட்ட விஸிட்டர்ஸ் பார்க்க அழைச்சுட்டு வருகிற இலட்சணமா” என்று நிரஞ்சனாவை கோப முகமாக பார்க்க… நிரஞ்சனா பயந்து பார்க்க…

தன் அருகில் நின்று கொண்டிருந்த சந்தியாவை கோபமாக இழுத்து அவள் கைகளை தூக்கிக் காட்ட… தொண்டை வறண்டு… உதடுகள் உலர்ந்தது போல் இருந்தது நிரஞ்சனாவுக்கு கரணின் அதட்டலில்..

வேறு வழியின்றி… சந்தியாவின் கைவிலங்கை லாக் செய்து விட்டு வெளியேறியவள்… உடனடியாக சிவாவிடம் சொல்ல வேண்டும் என்று தான் இருந்த இடத்திற்கு வேகமாக போனாள் தன் போனை எடுத்தவள்… அவனுக்கு சொல்லியும் முடித்தாள்…

நிரஞ்சனா… அம்ரீத் இருவருமே அங்கிருந்து போய் விட… ஓரளவு விஸ்தாரமான அறையில் ஜெயவேல், கரண் மற்றும் சந்தியா மட்டுமே…

சந்தியா அவர்களை நேரடியாகப் பார்க்காமல் திமிராக இருப்பது போல… எங்கோ பார்த்தபடி இருந்தாலும்… அவளை சல்லடையாகத் துளைக்கும் பார்வையை அவளால் உணர முடிந்ததுதான்… அந்த உணர்வே… அவளுக்குள் அசூயையான உணர்வைத் தர… அதை தனக்குள் அடக்க… தன் கோட் பாக்கெட்டுக்குள் கையை விட... அங்கிருந்த பொருளின் மேல் கைபட மனம் தன் கணவன் நினைவில் தவித்தது…

ரகுவை மட்டுமே தன் எண்ணங்களுக்குள் கொண்டு வந்தவள்… அவனுக்காக… அவனிடம் மீண்டும் அவனிடம் அவன் சந்தியாவாகப் போய்ச் சேர உலகில் இருந்த அத்தனை தெய்வங்களையும் ஒரே நேரத்தில் மனதுக்குள் கொண்டு வந்து பிரார்த்தித்து முடிக்க…

அதே நேரம் ஜெயவேலின் குரல் அவள் காதில் விழுந்தது…

“என்ன கரண்… பொன்ணு… முதல்ல பார்த்ததுக்கு… இன்னும் பளபளன்னு … சும்மா கெறங்கடிக்கிறா… ஜெயில் சாப்பாடா… ஆனால் இத்தனை நாள் இல்லாதது … இப்போ எப்படி… சமையல் காரர் மாறிட்டாரா”

நக்கலாக… அதுவும் தமிழில்… ஜெயவேலின் குரல் சந்தியாவின் காதுகளை அடைய… ஒரு நிமிடம் அவளுக்குத் தூக்கி வாறிப் போட்டது…

தன் முன்னால் நின்றவருக்கு தன் தந்தையின் வயது இருக்குமா… அதற்கு மேலேயே இருக்கும்.. ஆனால் அவரிடமிருந்து வந்த வார்த்தைகள் முதன் முதலாக இந்த மாதிரியான அனுபவம் சந்தியாவுக்கு… கேட்கும் போதே அருவருப்பாக இருக்க… இவளுக்குள் உள்ளுக்குள் உதறல் எடுக்கத் தொடங்கி இருக்க… அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல்… தன்னை கட்டுப்படுத்தவே பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தாள் சந்தியா…

“ப்ச்ச் கரண்… எப்படா இவள என்கிட்ட அனுப்பி வைப்ப…” என கேவலமான ஏக்கத் தொணியில் ஜெயவேல் பேச… அதைத் தொடர்ந்து அவர் பேசப் பேச… சந்தியாவால் அந்த வார்த்தைகளை எல்லாம் கேட்கவே முடியாமல் கால்களை அழுத்தி ஊன்றியவளின் கரங்களோ… தன் மாங்கல்யத்தை இறுகப் பற்றிக் கொண்டிருக்க… கண்களுக்கு பொங்கிக் கொண்டு வந்த நீரூற்றை அடக்கவே முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்

“இன்னும் ஒரே வாரம் தான் ஜெயவேல்… அடுத்து இவளுக்கு ஆயுள் தண்டனையோ… இல்லை மரண தண்டனையோ… இவளுக்கு என்ன ஆச்சுனு கேட்க முடியாத நிலைமைதான்… பொறுமை ஜெயவேல்” என்ற போதே…

சந்தியாவுக்கு… இருந்த அவஸ்தையிலும் இப்போது ஒரு நிம்மதி வந்திருந்தது… இப்போதைக்கு இவர்களால் நமக்கு பிரச்சனை இல்லை என்று மனம் முடிவுக்கு வந்திருக்க… இப்போது ஓரளவு தைரியமாக அவர்களை எதிர்கொள்ளலாம் என்றே தோன்ற…

ஆனாலும் அவர்கள் தன்னைப் பார்த்து பேசுவதை எல்லாம் கேட்க வேண்டுமே… நரக வேதனையாகத்தான் இருந்தது... ஆனாலும் அடக்கிக் கொண்டுதான் நிற்க வேண்டும்… கேட்டுத்தான் ஆக வேண்டும் என்ற நிலைமை… அதீனா என்று நினைத்துக் கொண்டு… அதுவும் அவளுக்கு தமிழ் தெரியாது என்றே பேசிக் கொண்டு இருக்கின்றனர் என்பது சந்தியாவுக்குப் புரியாமல் இல்லை… தான் இருந்த நிலையிலும் அதீனாவை நினைத்து மனம் வருந்தினாள் சந்தியா… இதற்கு முன் வந்திருந்தனர் போல… அவளுக்கு தொல்லை கொடுத்திருப்பனர் போல… சிவாவுக்கு அதெல்லாம் தெரிந்திருக்காதோ மனம் எங்கெங்கோ சென்று கொண்டிருக்க…

திடிரென்று அவளின் கரங்கள் சட்டென்று இழுக்கப்பட… திடுக்கென்று நிமிர்ந்தாள் சந்தியா… கரண்தான் சந்தியாவை வேகமாய்… இழுத்து அங்கிருந்த நாற்காலிலியில் அமர வைக்க…

வேகமாக அவரின் கைகளைத் தட்டி விட்டவளாக… அங்கிருந்த நாற்காலியில் தானே போய் அமர… ஜெயவேல் அவளின் திமிரைப் பார்த்து சத்தமாக சிரிக்க… சந்தியாவுக்கோ நாராசமாக காதில் விழ…

“கோபத்தில பொண்ணு முகமெல்லாம் சிவக்குதுடா… இதுக்கு முன்னாலே வந்தப்போ நாம பேசினப்போலாம்… கல்லு மாதிரி இருந்த முகத்தில தீடீர்னு என்னடா இவ்வளவு ஆக்ரோஷம்… என்னவோ… நடந்திருக்கு கரண்” என்றவர்…

"சரி நீ உன் கேள்விகளை ஆரம்பி… நான் என் வேலையைப் பார்க்கின்றேன்…” என்ற படி… சந்தியாவுக்கு முன் இருந்த டேபிளில்… அவளை இடித்துக் கொண்டே ஏறி அமர… சந்தியா அவளையுமறியாமல் சட்டென்று எழ முயற்சிக்க…. ஆனால் அவளால் எழ முடியவில்லை… பின்னால் இருந்து கரணின் கரங்கள் அவளின் தோளை அழுத்த… என்ன நடக்கின்றது என்பதை சந்தியா அறிந்து கொள்ளவே சில நிமிடங்கள் தேவைப்பட… உணர்ந்து கொண்டவளுக்கு… அங்கிருந்து தப்பிக்கும் வழிதான் தெரியவில்லை… அவளையுமறியாமல் அவளின் தேகம் நடுங்கத் தொடங்க… தன் கீழுதட்டை பற்களால் கடித்து தன் நடுக்கத்தை குறைக்க நினைக்க… அதைப் பார்வையாலே ஜெயவேல் அறிந்து கொண்டபடி…

“ஹா ஹா… என்னடா பொண்ணு ஜெர்க் ஆகுது…” என்றவரின் விரல்கள் சற்று கூட யோசிக்காமல் அவள் இதழ்களை தொட்டு பிரித்து விட… அவனின் சிறு இதழ் தீண்டலே… உடல் மொத்தமும் தூக்கிப் போட… வேகமாக சந்தியா அதிர்ந்து எழ முயற்சித்தாள்.. தன் முன்னால் அமர்ந்திருந்தவனின் கால்களை இடித்துக் கொண்டுதான் எழ வேண்டும்… பரவாயில்லை… அதற்கு பயந்து எழாமல் இருந்தால் இவன் என்னவெல்லாம் செய்வானோ சந்தியாவுக்குள் பயமும் பதட்டமும் மட்டுமே… வேறு எந்த எண்ணமும் இல்லை

அதே நேரம் இதழில் வைத்திருந்த ஜெயவேலின் விரல்கள் கீழிறங்கி… அவள் கழுத்தை நோக்கி பயணிக்க சட்டென்று விலங்கிடப்பட்ட கரங்களால் அதைத் தட்டி விட்டவள்… கரண் தன் தோளை அழுத்திய வேகத்தையும் மீறி படபடவென எழுந்தவள்… வேகமாக அந்த அறையின் கதவைப் பார்த்தாள்… தனக்கு யாராவது துணைக்கு வருவார்களா என்று…

அடுத்தவரை எதிர்பார்த்த சில நொடிகளிலேயே… அந்த சில நொடிகளை தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டிருந்தான் அந்த கயவன்.. சந்தியாவினை தன்புறம் இழுத்து அணைத்திருக்க.. நொடி நேரமும் இங்கு முக்கியம் என்பதை அப்போதுதான் உணர்ந்தவளாகி இருந்தாள் சந்தியா… ஆனால் காலம் கடந்திருந்ததே…

“என்னை விடுடா” என்று தமிழில் கத்தப் போக… அந்தோ பரிதாபம் வார்த்தைகள் அவள் வாயை விட்டு வெளியே வரவில்லை… காரணம் கரணின் கைகள் அவள் வாயை அடைக்க.. பின்னால் இருந்து கரணால் கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்க… முன்னால் நின்றவனோ சந்தியாவின் பின்னங்கழுத்தில் கரம் கொடுத்து… தன் புறம் இழுக்க..

சந்தியாவுக்கு வலுவான இருவர் பிடிகளில் இருந்தும் தன்னை விடுவிக்கவே முடியவில்லை… கண்கள் மட்டுமே அவளின் கட்டுப்பாட்டில் இருக்க… கரணின் பெரிய கரங்கள்… அவளது வாயை மட்டுமல்ல… அவளது நாசித்துவாரத்தின் முக்கால்வாசியையும் சேர்த்தே அடைத்திருக்க… மூச்சு விடுவது கூட சிரமமாயிருக்க…

நொடியில் அந்தக் கயவனின் வசம் தன் தேகம் முழுவதும் சிக்கி விடும் என்பது நன்றாகப் புரிந்தது சந்தியாவுக்கு ..


திணறியபடி திமிற ஆரம்பிக்க… அதே நேரம்…. ஜெயவேலின் பார்வை அவள் இதழை விட்டு கீழிறங்க… அவனின் பார்வைத் தேடலுக்கு… விரல்களின் பயணத்திற்கு… அவள் அணிந்திருந்த மேல்கோட்… தடையாக இருக்க… அந்தக் கொடியவனின் விரல்கள் அவளின் கழுத்துக்குச் சென்றது அவளது மேல் கோட்டில் இருந்த ஜிப் இருந்த இடத்தை நோக்கி நீள… நகரக் கூடிய முடியாமல் இருந்தாலும் திமிற முயற்சித்த சந்தியாவின் கண்கள் இப்போது அப்படியே நேர்க்கோட்டில் நிலைக்க ஆரம்பித்திருந்தது…

----

ராகவ்வுக்கு என்னவென்று சொல்லமுடியாத பாரம்… மனதிலா… இல்லை தலையிலா… நிலை கொள்ளா உணர்வு என்னவோ… காலையில் இருந்தே… சந்தியாவிடம் பேச வேண்டும் உடனே… அப்போதே அவள் குரலைக் கேட்க வேண்டும் போல் இருந்தது… ரகு என்ற அவளின் குரல் ஒன்று போதும் அவனுக்கு… இன்றைய பொழுதை அந்தக் குரலை நினைத்தே ஓட்டி விடலாம் என்றே தோன்றியது… கிட்டத்தட்ட மணி நண்பகல் மூன்று மணி ஆகி இருக்க… காலையில் ஏதோ கொறித்தது… இன்னும் சாப்பிடவில்லை… சாப்பிட வில்லை என்று சொல்வதை விட சாப்பிடப் பிடிக்கவில்லை அதுதான் உண்மை… நேரம் ஆக ஆக… ஏதேதோ எண்ணங்கள்… தன் கவலைகளை யாரிடமும் சொல்ல முடியாமல் அதை அவனுக்குள் அடக்க அடக்க… ஒரு மாதிரி அவனுக்குள் பாறையாக இறுகிக் கொண்டிருந்தான் என்றே சொல்லவேண்டும்… அவனுக்கு இப்போது அவன் மனைவியோடு பேச வேண்டும்… பேசியே ஆக வேண்டும் என்ற வெறி…. பேச முடியாமல் ஒவ்வொரு நிமிடமும் கடக்க… அந்த இறுக்கம்…கோபம் அவனுக்குள் மிருகத்தை விட வெறியேற்றிக் கொண்டிருந்தது… கையில் வைத்திருக்கும் அலைபேசியைத் தவிர… கண்ணுக்குத் தெரிந்த மற்ற அனைத்தையும் உடைத்தெறிய வேண்டும் போல் இருக்க…

நொடிக்கொரு தரம் அவனின் பார்வை… அவனது அலைபேசியைத் தழுவியது… அதைப் பார்க்கும் போதெல்லாம்… சந்தியாவையே பார்ப்பது போல உணர்வு… அவனுக்குள் இருந்த மிருகத்தனம் விலகி… சகியின் ரகுவாக நெகிழ்வைக் கொண்டு வந்திருந்ததது…

ஆனாலும்… அதுவும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றதே…. இன்று ஏனோ மனம் தவித்தது அவனுக்கு… இன்று அவனுக்குள் திடிரென்று ஏன் இந்த உணர்வு… அவனுடைய சகி்யின் துன்பங்களை இவனையுமறியாமலே உணர்ந்தானோ….

“என் சகியை… என்கிட்ட பேசச் சொல்லுங்கடா” என்று உலகத்துக்கே கேட்கும் படி கத்த வேண்டும் போல் இருக்க… உண்மையிலேயே எந்த நிமிடமும் அவன் அப்படி கத்தி விடுவான் என்றே தோன்றியது அவனுக்கு… பைத்தியக்காரனை விட…. போதைப் பழக்கத்துக்கு அடிமையாக இருப்பவனை விட அவனது நிலமை மோசமாக இருந்தது…

நொடிக்கொரு முறை…. போனை எடுத்து நிரஞ்சனா … சிவா மற்றும் சந்தியாவின் எண்ணுக்கும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டிருக்க… கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக அவர்களில் ஒருவர் கூட எடுக்காமல் இருக்க கிட்டத்தட்ட பைத்தியக்காரனின் நிலைமையில் வெறிப்பிடித்தவனாக இருந்தான் ராகவ்… இன்னும் சில நிமிடங்கள் கடந்திருந்தால் அவனுக்கு என்ன ஆகி இருந்திருக்குமோ…

அப்போது ராகவ் மொபைல் அடிக்க ….. சந்தியாவாகத்தான் இருக்கும் என்ற உணர்வு தந்த வேகத்தோடு…. ஆவலோடு எடுத்தவனை ஏமாற்றம் தழுவ ….. அவனது தொடர்பில் பதிவு செய்யப்படாத எண்ணில் இருந்த வந்த அந்த அழைப்பைப் பார்த்தவன்… அதை எடுக்கப் பிடிக்காமல் வெறித்தபடியே இருந்தவனுக்கு… சிவாவாக இருக்கலாமோ… என்ற எண்ணம் வர…

“ஹலோ” என்றான் அத்தனை கோபத்தோடு

இவனது கோபக் குரலை… எதிர்முனை எதிர்பார்க்கவில்லையோ என்னவோ.. சற்று தயக்கத்துடன் தான் பேச ஆரம்பித்தது…

“நான் காதம்பரி பேசுகிறேன்” என்றபடி ராகவன் பதிலை எதிர்பார்க்க…

“காதம்பரி” என்று கேள்வியாய் இழுத்தபடி இவன் மீண்டும் கேட்டான்…. இன்னும் யார் என்று அறிந்து கொள்ள முடியாத காரணத்தால்…


அந்த நிலையில் தான் இருந்தான் ராகவ்… சந்தியா.. அவள் குரல் மட்டுமே அவனுக்கு இப்போது தெரிந்த குரல்… கேட்க ஆசைப்படும் குரல்… மற்றவர்கள் யாராக இருந்தாலும்… ஏன் அவன் தங்கை பேசி இருந்தால் கூட… மிருணாளினியா யார் நீ என்று கேட்கக்கூடிய நிலையில் இருக்க… காதம்பரி எல்லாம் எந்த மூலைக்கு…

சத்தியமாக காதம்பரி இதை எதிர்பார்க்கவே இல்லை… ராகவ்வோடு பேசலாமா வேண்டாமா என்று ஆயிரம் யோசனைகளோடு இவனுக்கு போன் அடிக்க… இவனோ… காதம்பரி என்று இழுத்த விதத்திலேயே அவனுக்கு தான் யார் என்று தெரியவில்லை என்று புரிய…

அது எப்படி தெரியாமல் இருக்கும்… மற்றதெல்லாம் விட்டு விடலாம்… அவன் மனைவி சந்தியாவின் சகோதரி என்று கூடவா தெரியாமல் போகும்… பெரியம்மா மகள் தான் ஆனால் சந்தியாவோடான தன் உறவு அந்த எல்லைக் கோட்டோடு முடிந்த உறவோ… இவனுக்குத் தெரியவில்லை இல்லை மறந்து விட்டது என்றே வைத்துக் கொள்ளலாம்.. ஆனால் சந்தியா… அவளை நினைக்கும் போதே கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது…

திருமணத்திற்கு பின் இருக்கும் இந்த சந்தியா… அவளின் தங்கையே இல்லை… இதோ 3 வாரங்கள் ஆகி விட்டது… இன்னும் அவளை வந்து பார்க்கவே இல்லை… எப்போதாவது போனில் பேசினாள்… இல்லை இவள் பேசினால் அவள் பேசுவாள்… இந்த 5 நாட்களாக சுத்தமாக பேசவில்லை… எத்தனையோ முறை போன் அடித்தாள்… பதிலுக்கு ஒரே ஒரு முறை… பிஸியாக இருக்கிறேன் என்று மட்டும் பேசி வைத்துவிட்டிருக்க… இன்று காதம்பரி பொங்கி எழுந்து விட்டாள் என்றே சொல்ல வேண்டும்… காரணம் இன்று காதம்பரியின் பிறந்த நாள்…

சந்தியாவுக்கு நன்றாகத் தெரியும்… முதலில் எல்லாம் நள்ளிரவு 12 மணிக்கே அடிப்பாள் வெகு நேரம் பேசிக் கொண்டு இருப்பார்கள்… ஏன் திருமணம் ஆகியும் கூட வேண்டுமென்றே அடித்து வைப்பாள்… தங்கைக்கு, தன் கணவன் முரளியை வம்பிழுப்பது என்றால் அவ்வளவு ஆனந்தம் என்பது காதம்பரிக்கு நன்றாகவேத் தெரியும்… ஆனால் வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டு வைத்து சமர்த்தாக விடுவாள்… கடந்த வருடம் கொஞ்சம் பெரிய பொண்ணாக வளர்ந்து விட்டிருந்தாள் போல… 12 மணிக்கெல்லாம் போன் செய்து வாயாடாமல்… பகல் பொழுதில் தான் பேசினாள்..

இந்த வருடம் போனை எல்லாம் அவள் எதிர்பார்க்கவில்லை… அவளே நேரே வருவாள் என்றே நினைத்திருந்தாள்… வரவில்லையே… அதிலும் குழந்தை பிரசவித்திருக்கும் தன்னை அவள் பார்க்க வரவில்லை… என்றால்… அந்த அளவுக்கு தான் அவளுக்கு அந்நியமாக போய் விட்டோம் என்றால்… அதற்கு காரணம் யாராக இருக்க முடியும்… இவனாக மட்டுமே இருக்க முடியும்… கடந்த கால கசப்பை எல்லாம் இன்னும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறானோ… அதில் சந்தியாவை மிரட்டி வைத்திருக்கின்றானா… இல்லை தன்னை அவளிடமிருந்து அடியோடு பிரிக்கப் பார்க்கிறானா… என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றான்… என்று தனக்குள் போராடியவள்… கடைசியாக ராகவ்வுக்கு அடித்தே விட்டாள்… இன்று இரண்டில் ஒன்று பார்த்து விட முடிவு செய்தவளாக…

ராகவ்… “காதம்பரி” என்று முழு வார்த்தையையும் இழுத்து சொல்லி முடித்த போதுதான் அது யார் என்று அவன் மூளைக்கு புரிய…

“ஹலோ… ரகு… நான் சந்தியா அக்கா பேசுகிறேன்… உங்களுக்கு மறந்திருந்தால்… என் தங்கை சொல்லாமல் விட்டிருந்தால்… டெல்லியில இருக்கிற அவங்க பெரியம்மா பொண்ணு…” இதைச் சொல்லும் போதே அழுது விடுவாள் போல அவள் குரல் தழுதழுக்க…

காதம்பரியின்… அழுகைக் குரலில்… அதுவரை இருந்த இவனின்… மன உளைச்சல்… மன அழுத்தம் எல்லாம்… திசைமாற்றம் செய்யப்பட

“ஹேய் காது… சாரி சாரிம்மா.. சாரி சாரிங்க” என்று அவசர அவசரமாக தன் உறவு முறையை நினைத்து தன்னை சரிபடுத்திக் கொள்ள நினைத்தாலும்… ஆனாலும் பன்மை ஏனோ அவனுக்கு வரவில்லை… என்பதே உண்மை… வலுக்கட்டாயமாகவே சொல்லி வைத்தான்

“ரகு… இங்க பாருங்க… எனக்கு என் தங்கை சந்தியா பிடிக்கும்… அவ கூட நான் பேசுவேன்… அவளும் என்கூட பேசுவா… இதுக்கு இடையில நீங்க வந்தீங்க… நான் அதை ஈஸியா எடுத்துக்க மாட்டேன்… இத்தனை வருடம் எங்க சந்தியா இப்படி இருந்தது இல்லை… என் கூட பேசக் கூடாதுனு சொல்லி வச்சுருக்கீங்களா” என்று வேக வேகமாகப் பேச…

ராகவ்வுக்கும் அவள் எதற்கு கோபப்படுகிறாள் என்றே தெரியவில்லை எனும்போது… என்ன சொல்லி அவளிடம் அடுத்து பேச ஆரம்பிப்பது…

“காது… அவளை மாதிரியே பேசாத…” என்று கடுப்படிக்க மட்டுமே முடிந்தது அவனால்.. அவனையுமறியாமல் ஒருமையில் பேச ஆரம்பித்திருந்தான்.

ஆனால் சொல்லி முடித்த போது அவனுக்குமே எண்ணம் வந்தது… இங்கு சந்தியா இருந்த இரண்டு வார காலத்தில் காதம்பரி வீட்டுக்கு போய் வந்திருக்கலாம் என்று இப்போது தோன்றியது… காலம் கடந்த ஞானதோயம் என்றே தோன்றியது… ஏன் போக வில்லை… சந்தியாவும் கேட்கவில்லை… இவனும் இதைப் பற்றி பேசவில்லை… அவ்வளவே…

ஆனால் காதம்பரி குரலில்… அவள் இதனால் மிகவும் காயப்பட்டிருக்கின்றாள் என்றே தோன்ற… இவளை எப்படி சமாதானப்படுத்துவது… சந்தியா இல்லாத சூழ்நிலையை சொல்லாமல் அவளை எப்படி சமாளிப்பது… என்று யோசிக்கும் போதே…

காதம்பரியோ மடைதிறந்த வெள்ளமாக… இவனிடம் பேச ஆரம்பித்து இருக்க… எல்லாமே சந்தியாவைப் பற்றித்தான்… ராகவ்வின் மனைவியாக அவள் மாறிப் போனதைப் பற்றித்தான்…

படபட பட்டாசாகப் பொறிய… ராகவ்வின் முகத்தில் மெல்லிய புன்னகை…. கணவனாக பெருமை அவன் முகத்தில் தாண்டவமாடத்தான் செய்தது…

அதே நேரம் காதம்பரி இவ்வளவு பேசுவாளா என்று அயர்ந்தும் போனான்… இவ்வளவு பேசுகிறவள்… அன்று இதில் பாதியையாவது பேசி இருக்கலாமே என்று தோன்ற…

ஆனால் மனம் மனைவிக்கு எதிராக நின்று… காதம்பரிக்கு ஆதரவாகவும் பேசியது… பாவம் இவள் என்ன செய்வாள்… தன் மனைவி இவளை வைத்து ஆட்டம் ஆடியதற்கு… என்று தோன்ற… எந்த நிகழ்வுகள் இவனுக்கு மனதுக்கு இறுக்கத்தை இதுநாள் வரை கொடுத்ததோ… இப்போது அதுவே இன்றிருந்த அவன் சூழ்நிலைக்கு அவன் மனதை இளக வைத்திருக்க….

“காதம்பரி.. காதம்பரி… ஹோல்ட் ஆன்… ஹோல்ட் ஆன்” என்று இவன் நிறுத்தும் வரை அவள் பேசிக் கொண்டே இருந்தாள் தான்…

“எனக்கு பிறந்த நாள் இன்னைக்கு… அவ அதைக் கூட மறந்துட்டா…” ராகவ்விடம் இதைச் சொன்னபோது அவள் குரல் உடைந்திருக்க….

யாருக்கு பாவம் பார்ப்பது இவன்… தங்களுக்காகவா… இல்லை தங்கள் நிலை அறியாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் காதம்பரிக்காகவா..

‘ஹேய் காது… அவ உன்னை மறப்பாளா… இது என்ன சின்னப்பிள்ளை மாதிரி…. சந்தியா ரொம்ப பிஸி… மீட்டிங்… என்கிட்ட கூட இன்னும் பேசவில்லை” யாரிடமாவது கொட்ட வேண்டும் என்று நினைத்திருக்க… இவளிடம் சொல்லி விட…

அவளோ…

“உங்க கிட்ட பேசாமல் இருக்கலாம்… என்கிட்ட எப்படி பேசாம இருக்கலாம்” காதம்பரி தன் பிறந்த நாளை நினைத்து அன்றைய தினத்தில் தான்தான் சந்தியாவுக்கு முக்கியம் என்ற விதத்தில் பேச…

ராகவ் ஒரு நிமிடம் திகைத்து… பின் சுதாரித்தபடி

“ஹல்ல்லோ… நான் அவ புருசன்மா… என்னை விட நீங்க முக்கியமா…” ராகவ்வும் அவளோடு போட்டியில் இறங்கி இருக்க…

காதம்பரி அவன் அழுத்திய ஹலோ வில் தன்னையுமறியாமல் சிரித்து விட… ராகவ்வும் அவள் இயல்பாகி விட்டதை உணர்ந்து…

”கோபம்லாம் போயிருச்சா மேடம்… “ என்றபடி… அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்க்ளைச் சொன்னவன்

சற்று தயங்கி…

“சாரி காதம்பரி..” என்று சொல்ல… காதம்பரி… இப்போது எதற்கு சாரி கேட்கிறான்… என்று யோசித்து… பின் உணர்ந்தவளாக…

“நீங்க எதுக்கு சாரி கேட்கனும் ரகு…. அது எல்லாம் என் தங்கை பண்ணின முட்டாள்தனம்… அவ தான் சின்னப் பொண்ணுனு… நானும் அவ சொன்னதுக்கெல்லாம் தலை ஆட்டிய முட்டாள்தனம்… இப்போ இருக்கிற தெளிவில் நான் இருந்திருந்தால்…. அன்னைக்கு அவ்வளவு தூரம் நடந்திருக்காது” என்று அவள் முடிக்க வில்லை…

ராகவ்வுக்கு சற்று முன் காதம்பரி அழுதபடி பேசியது ஞாபகம் வர… மெல்லிய சிரிப்பு அவன் முகத்தில் படர்ந்திருக்க…

“ரொம்ப தெளிவாகிட்ட தான் காது…” என்று நக்கலாகச் சொல்ல… சொல்லி முடித்த போதுதான் அவனுக்கே தான் கொஞ்சம் அதிகப்பட்சமாக பேசியது மண்டைக்குள் உறைக்க… பின்னால் இருந்து ஒரு குரல்…

“ரகு… அதேதான்… இதுங்களே… இதுங்களை தெளிவாகிட்டேனு சொல்லிட்டு திரியுதுங்க” என்ற குரலில்… அதிர்ச்சியடைந்து… இவன் வாயடைத்து நிற்க…

“நான் முரளி… எங்க ராட்சசி கொழுந்தியா சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன்…” என்று அறிமுகப்படுத்திக் கொண்டவன்…


“நான் ரகுகிட்ட பேசனும்… நீங்க துணைக்கு இருங்கனு மேடம் ஆர்டர்…” என்ற போது… ராகவ்வும், முரளியின் அலட்டல் இல்லாத பேச்சில்… அவனையுமறியாமலேயே அவனோடு சகஜமாக பேச ஆரம்பிக்க… காலையில் இருந்து… அவன் இருந்த நிலைமைக்கு மாற்றாக… ஆறுதலாக இருந்தது மனம்… அவர்களிடம் போன் பேசிவிட்டு வைத்த போது…

சந்தியா பேசும் போது… அவளை காதம்பரிக்கு பேசச் சொல்ல வேண்டும் என்றே தோன்றியது இன்னும் சொல்லப் போனால்… தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த சந்தியாவின் ஐந்து நிமிடங்களைக் கூட சந்தியா காதம்பரியோடு பேசிகொள்ளட்டும் என்றே தோன்றி இருந்தது…

ஒருவாறாக மனம் இளகுவாக ஆரம்பித்து இருக்க… தன் மனதை திசை மாற்ற நினைத்தான்…


வெகு நாட்களாக கையில் எடுக்காத புகைப்படக் கருவியின் நினைவு வந்திருக்க… இனி அது அவன் தொழில் இல்லை என்று நினைக்கும் போதே… மனம் இலேசாக வலிக்க ஆரம்பித்தாலும்… தொழிலாக இல்லை என்றாலும் பொழுதுபோக்காக கேமராவைத் தொடலாம் என்ற வாய்ப்பு இருக்க மனம் நிம்மதி அடைந்திருக்க… தான் எடுத்த புகைப்படத் தொகுப்புகளைப் பார்த்தாவது.. ஆறுதல் தேடலாம் என்று தோன்ற… அதிலும் ஒரு முறை டெல்லி வந்த போது ஆக்ரா சென்று இவன் எடுத்த தாஜ்மஹாலின் புகைப்படங்கள்… அதை எடுத்த விதம் எல்லாம் ஞாபகம் வர… அதற்காக அவனுக்கு கிடைத்த பாராட்டுக்களும் நினைவில் வந்து போக… புகைப்பட கலைஞனாக அவன் முகம் பெருமையில் விரிந்தது என்றே சொல்ல வேண்டும்…

சந்தியாவுக்கு என்ன பிரச்சனையோ…. என்ற அவசரத்தில் அன்று கிளம்பி வந்திருந்ததால்… கேமராவை எடுத்து வர முடியவில்லை… அதற்காக கவலைப்படவும் இல்லை… அட்லீஸ்ட் எடுத்த புகைப்படங்களையாவது பார்க்கலாம் என்று லேப்டாப்பை எடுக்க உற்சாகத்துடன் உள்ளே போக நினைக்க… சரியாக அவனது போன் அடிக்க… எடுத்துப் பார்த்தால் ‘சந்தியா’ என்று இருக்க

வேகமாக எடுத்தவன்… முகமெங்கும் பரவசத்துடன்… உள்ளமெங்கும் குதூகலத்துடன்… அதே உற்சாகத்தை குரலிலும் வரவழைத்தவனாக “சந்தியா” என்றழைக்கும் போதே… அவன் சந்தியா என்ற குரல் அதன் இறுதி எழுத்தை அடையவில்லை அதற்கு முன்னதாகவே…

ஜீவனற்ற குரலாக அவன் மனைவியின் குரல் நைந்து அவனிடம் வந்து சேர்ந்திருந்தது

“ர… கு” என்று கிணற்றுக்குள் இருந்து ஒலித்தது போல் சந்தியா குரல்… அதுவும் திக்கித் திணறி வர… குப்பென்று நொடியில் ராகவ்வின் உடலெங்கும் வியர்வை மழை…

அவள் குரலில் பதட்டமடைந்தவனாக மனம் பதறியிருக்க…

இருந்தும் பதட்டத்தை மறைத்து

“என்னடா” என்று இவனும் ஆதுரமாகப் பேச

“ரகு…” அவள் வாயில் இருந்து இவன் பெயரே மீண்டும் வர…

“சொல்லு சகி… ஏண்டா… ஒரு மாதிரி பேசுற” அவனின் கேள்விகள் எல்லாம் காதில் விழுந்தாலும்… இவனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவளிடமிருந்து


“ரகு” என்ற வார்த்தை மட்டுமே… வந்து கொண்டிருக்க…

“சிவா சார் எங்க சந்தியா.. நிரஞ்சனா எங்க சந்தியா” என்று இவன் அவர்களிடம் பேச முயற்சிக்க…

அப்போதும் அவள்…

“ரகு…” என்றாள் மயங்கிய பலவீனமான குரலில்…

“சொல்லும்மா… என்னடா ஆச்சு உனக்கு” என்ற போது…. அவன் குரல் இங்கு உடைந்திருக்க..

“ரகு… உன்னைப் பார்க்கனும் ரகு… நீ வேணும் ரகு” திக்கித் திணறியவளின் குரல் இவனை கழுத்துவளையை நெறிக்கும் குரலாக இருக்க… வார்த்தைகளோ உயிரைப் பறித்த வார்த்தைகளாக இருந்தது…

“ரகு..” இப்போது அந்த வார்த்தை மட்டுமே… அவளிடமிருந்து வந்து கொண்டிருக்க

அவளிடமிருந்து ஓவ்வொரு முறை வந்த இவனின் ரகு என்ற பெயர்…. மோகத்துடன்… தாபத்துடன்… கெஞ்சலுடன்… கொஞ்சலுடன்… ஏக்கத்துடன்… கோபத்துடன் ஒலித்த போதெல்லாம் கேட்க முடிந்த இவனால்… இப்போது… கேட்க முடியவில்லை…

’ரகு’ என்று தட்டுத் தடுமாறி… ஒலித்த தன்னவளின் ஒரே சொல்… உயிர் வரை அவனை அறுத்து கொன்று போட…

”சிவா சார்…” என்று அவன் வெறி கொண்டு அலறிய கதறல்… சந்தியா இருந்த சிறைச்சாலைக்கும் கேட்டிருந்திருக்குமோ??….

2,484 views5 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது...

5 Comments


Saru S
Saru S
Jul 07, 2020

Sad ..

Bt enaku enna vo ameena sandiya a save pannitanga nu thonudu

Apdiye irukatum anda randu naigalaum ameena konnu irukanum

Inda Siva ivlo careless iruka koodathu

Ameena ku save Panna irundavan ipa enga ponan pakki

Sandiya va epdiyavadu save pannidunga

Like

vp vp
vp vp
Jul 07, 2020

Mam each and every time when I read this story I feel like either sagi or ragu only. Today I did not read fully just skipped this episode. I told you sagi should not be tortured. Plzzzzzzzzz don't write it in detail.

Like

DR.ANITHA selvan
DR.ANITHA selvan
Jul 07, 2020

Very painful epi varuni dear... Pls save Sandhiya..... Eppo intha kashtamana epis ellam mudium??? We need happy episode with ragu-sandhiya... Padikave mudiala.... I just scrolled this episode.... Update soon....

Like

Naga Joithi
Naga Joithi
Jul 06, 2020

சந்தியா வேதனையுடன் தன் ரகுவை காணவேண்டும் என்று அவனிடம் கேட்கிறாளே, ரகு தன் சகியை காண்பானா 🤔🤔🤔அவள் வேதனையை தீர்ப்பான 🤔🤔🤔♥️♥️♥️🌺🌺🌺ரகு ♥️சந்தியா வேதனைகள் எப்போது தீரும் 🤔

Like

Mumtaj Begum
Mumtaj Begum
Jul 06, 2020

Ayyoo.thaanga mudiyala.Please save sandhya.Ragu paavam.

Like
© 2020 by PraveenaNovels
bottom of page