top of page
Writer's picturePraveena Vijay

சந்திக்க வருவாயோ?-54

அத்தியாயம் 54:

சிவா அன்று வீட்டுக்கு வரும் போதே பரபரப்புடன் தான் வீட்டினுள் நுழைந்தான்… ராகவ் வரவேற்பறையில் தான் அமர்ந்திருந்தான்… வரவேற்பறையில் இவனைக் கண்ட போதே… சிவா ராகவ்வை நோக்கி

“ராகவ்… சந்தியாவை கிளம்பச் சொல்லு…” வார்த்தைகளில் அவசரம் இருக்க…

“கரெக்டான டைம் கிடைச்சிருக்கு… சந்தியாவை ஜெயிலுக்குள்ள கொண்டு போறதுக்கு” எனும்போதே ராகவ்வின் கைகளில் பிடித்திருந்த புத்தகத்தில் கூட அவனது நடுக்கம் தெரிய… அதே நேரம் சந்தியாவும் சிவாவின் குரல் கேட்டு வெளியே வர சிவா சொன்னது அவளுக்கும் கேட்கத்தான் செய்தது…

அமைதியாகவேவே இருந்தாள்… பெரிதாக அவள் பரபரக்கவெல்லாம் இல்லை.. சிவா ஏற்கனவே சொல்லியதுதான்… எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று…

ராகவ்வின் கண்கள் சந்தியாவின் கண்களை நேர்க்கோட்டில் சந்திக்க… அவன் கண்களில் இருந்த வேதனையைப் பார்க்க முடியாமல் அவனது சகி தன் பார்வையை வேறொரு புறம் திருப்பியிருந்தாள் இப்போது

சந்தியாவின் இடையைத் தொட்ட கூந்தல் என்று தோள் வரைக்கும் கத்தரிக்கப்பட்டதோ… அந்த நாள் முதல் அவள் அவளாகவே இல்லை… ரகுவின் அருகில் கூட அவள் நெருங்கவில்லை… அவனையும் தன்னிடம் அவள் நெருங்க விடவில்லை

ஏனோ இப்போது அவன் முன் நடமாடிக் கொண்டிருப்பவள் ரகுவின் சகி இல்லை என்ற எண்ணமே அவளுக்கு… ஏதோ கூடு விட்டு கூடு பாய்ந்தது போன்ற தோற்றம் அவளுக்குள் வந்திருந்தது… இத்தனை வருடமாக தான் இருந்த… மற்றவர்கள் பார்த்து இது சந்தியா என்ற தோற்றம் முற்றிலுமாக போயிருக்க… தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டாள் சந்தியா…

அவளாகவே ராகவ்விடம் சரணடந்த தினத்திற்குப் பின்… ராகவ் அடுத்த நாள் அவளை நாட… இவளோ.. அவனிடம் மறுத்து விட்டாள்…

அவளைப் பொறுத்தவரை… இது சந்தியா இல்லை… தன் கணவன் யாரோ ஒரு பெண்ணுடன் இருப்பது போல தோற்றம் அவளுக்குள் வந்திருக்க சந்தியா அவனை அருகிலேயே விடவில்லை… ராகவ்வுக்குத்தான் இந்த எண்ணம் வந்திருக்க வேண்டும்….. ஏனோ சந்தியாவுக்கு வந்ததுதான் வேதனை… ஏனோ ரகு தன்னை இந்த தோற்றத்தில் காதலோடு பார்ப்பது பிடிக்கவில்லை… அது அவனுக்கும் புரிந்தது தான்… அவன் எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை…

‘என்கிட்ட வராத ரகு நான் உன் சந்தியா இல்லை’… என்று அவனிடமிருந்து விலகியவளுக்கு… வழக்கமான மாத விலக்கும் வந்திருக்க… அவளுக்கு அவனிடமிருந்து விலக அதுவும் வசதியாகப் போய்விட்டது… அது மட்டுமில்லாமல் அவளுக்கு இத்தனை நாட்களாக இருந்த குறுகுறுப்பும் மறைந்து மனதில் நிம்மதி வந்திருந்தது… இந்த சூழ்நிலையில்… கர்ப்பம், குழந்தை என்றால் அது இன்னும் இன்னும் நிலைமையை சிக்கலாகவே மாற்றி இருக்கும்… வயிற்றில் கருவோடு சிறைக்குள்… நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்க… இன்று நேற்றல்ல… சிவாவிடம் அவன் திட்டத்துக்கு சம்மதம் சொன்ன போதே மனதுக்குள் அவளை அலைகழித்துக் கொண்டிருந்த எண்ணம்… ராகவ்விடம் சொல்லவில்லை… தனக்குள்ளேயே மனதுக்குள் குமைந்து கொண்டிருக்க… அப்படி ஒரு தர்மசங்கடமான நிலைமை வராமல் போனது சந்தியாவுக்கு மகிழ்ச்சியே…

ராகவ் ஏனோ அந்த அளவுக்கெல்லாம்… நினைத்துப் பார்க்கவில்லை… சந்தியா மட்டுமே அவனது நினைவில் இருக்க… குழந்தை என்ற எண்ணமெல்லாம் அவனுக்கு வரவே இல்லை… சந்தியா சந்தியா மட்டுமே அவனது எண்ணங்களில்

ஆக மொத்தம் இந்த சில நாட்களாக… சந்தியா அதீனாவாகவே மாறி இருந்தாள் என்பதே உண்மை… தனக்குள் சந்தியா என்றவளை புதைத்துக் கொண்டவளாக திரிந்து கொண்டிருக்க… இதோ இன்று சிறைச்சாலைக்கு செல்லும் தினமும் வந்து விட…

அத்தனை நாள்… சந்தியா என்ற தோற்றத்தில் தான் இல்லை… அதீனா என்ற தோற்றத்தில் தான் இருக்கின்றோம் என்ற நினைவுகள் ஒரே நொடியில் வீழ்ந்தது சந்தியாவுக்குள்…

சிவா சொன்ன அடுத்த வினாடி… வேகமாக ஒடிப் போய்.. ராகவ்வைக் கட்டிக் கொண்டவள்… சிவா இருக்கின்றான் என்றெல்லாம் பார்க்கவில்லை…

ஏனோ… ராகவ்வின் கரங்களுக்குள் அடங்கியபடி இப்படியே இருந்து விடலாம் என்றே தோன்றியது… அவனோடு இருந்த தினம் வரை… பெரிதாக எதுவும் தோன்றவில்லை… இப்போது ஏதோ பெரிய இழப்பு போலத் தோன்றியது… கணவன் அருகாமைதான் அவளுக்கு இத்தனை நாள் பலம் என்று இன்றுதான் தோன்றியது… அவன் இல்லாத இனி வரும் நாட்களை எப்படி கடத்தப் போகிறோம்?… முடியாதோ என்றே சந்தியாவுக்குத் தோன்றியது…. அது தந்த வலி… எந்த தோற்றத்தில் கணவனை தன் அருகில் நெருங்க விடக்கூடாது... என்று நினைத்தாளோ… எந்த தோற்றத்தில் அவன் அருகில் தான் நெருங்கக்கூடாது என்று நினைத்திருந்தாலோ… அந்த எண்ணமெல்லாம் தூரப் போய் விட.. ஓடோடிப் போய் அவனிடம் சரணடைந்தவள்…

“ரகு…” என்று தேம்ப ஆரம்பிக்க… இவனோ வேதனையைக் காட்டாமல்… தன்னவளை இன்னும் இறுக்கியபடி.. அணைத்தவன்… சில நிமிடங்கள் அவளை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அவகாசம் கொடுத்து... பின் அவளைத் தன் முன் நிறுத்தியவன்… அவளது கண்களைப் பார்க்க… அதில் அவ்வளவு ஒரு அலைப்புறுதல்.. இவனைப் பிரிய முடியாத வலி அந்தக் கண்களில் இருக்க… தான் உணர்ச்சி வயப்பட்டால்… அவளைத் தேற்றமுடியாது… என்று நன்றாகப் புரிய… இருந்தும் முடியவில்லை…. தன் உணர்வுகளை அவளிடம் காட்டாமல் இருக்க போராடினான் என்றே சொல்லவேண்டும்.. முகத்தை அழுந்ததுடைத்தபடி… தன்னை கட்டுக்குள் ஓரளவு கொண்டு வந்த பின் தான் அவளிடமே பேச ஆரம்பித்தான்

“இது என்னைக்காவது நடக்கும்னு தெரியும் தானே சகி… “ என்ன முயன்றாலும் முடியவில்லை… ஆரம்பித்த போது இருந்த உணர்வுகளைத் துடைத்த குரல்… சகி என்று முடித்த போது முற்றிலும் உடைந்திருக்க… சிவா குறுக்கிட்டான்…

“2 ஹவர்ஸ்குள்ள நாங்க அங்க இருக்கணும் ரகு… இப்போ கிளம்பினால் தான் சரியா இருக்கும்… ” இதை சொல்ல அவனுக்கு மனம் இல்லைதான்… ஆனால் சொல்லியாக வேண்டுமே

“இதைவிட சரியான வாய்ப்பு மறுபடியும் கிடைக்க எத்தனை நாள் ஆகுமோ… அதுமட்டுமில்லை… பத்தே பத்து நாள் தான்… சந்தியாவை உன்கிட்ட திரும்ப கொண்டுவந்து ஒப்படைச்சுடுறேன் ரகு…” சிவாவுக்கு அவர்கள் இருவரையும் பார்க்க பார்க்க… இன்னும் மனம் குன்றியது…

சிவா பேச ஆரம்பித்த உடனே…. ராகவ்வும் தன்னை மீட்டெடுத்துக் கொண்டு… சந்தியாவைத் தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தியவன்…

சிவாவின் முன் நின்றவன் இப்போது

“அன்னைக்கு நான் உங்களை கடவுளானு கேட்டேன் சிவா சார்… இப்போ நான் சொல்கிறேன்… எங்களுக்கு நீங்க கடவுள் மாதிரிதான்… நான் வேறு யாரையும் நம்பி அனுப்ப வில்லை… உங்களை மட்டுமே நம்பி அனுப்புகிறேன்… என்னோட லைஃபே உங்க கைலதான் சார்” என்று சிவாவின் கரங்களுக்குள் தன் முகத்தைப் புதைக்க… சிவாவின் உள்ளங்கையில் ஈரம் பரவியது…

நிமிட நேரம் தான்…. தன்னைச் சரிப்படுத்திக் கொண்ட ராகவ்… தன்னவளை அழைத்துக் கொண்டு தங்களறைக்கு வர… அவளோ அவன் கரங்களை விடவே இல்லை… கீ கொடுத்த பொம்மை போல அவனை பார்த்தபடி அவன் போகுமிடங்களுக்கு எல்லாம் அவன் பின்னாடியே வந்து கொண்டிருக்க…

“சந்தியா… இப்போ இந்த மாதிரி நீ பிஹேவ் பண்ணினா என்ன அர்த்தம்…“ என்று அவளைக் கடிந்தபடியே... அவளுக்கான பொருட்களை எடுத்துவைக்கும் தன் வேலையைத் தொடர்ந்தான் ..

ஏற்கனவே இவளுக்கான பொருட்கள்… அதீனா அணிந்திருப்பது போல ஆடைகள் என ஏற்கனவே பேக் செய்யப்பட்டுதான் இருந்தன… அதை கையில் எடுத்துக் கொண்டவன்.. தன்னருகில் சோகமே உருவாக நின்றவளிடம்

“தைரியமா இருக்கணும் சந்தியா… எந்தவொரு சூழ்நிலையிலையும் உன் தைரியத்தை இழக்கக் கூடாது… என்ன பிரச்சனைனாலும் சிவா சார்கிட்ட உடனே சொல்லிரு…” என்க… அவளோ அமைதியாக கட்டிலில் அமர்ந்தாள்…

இவன் சொன்ன அறிவுரைகளை அப்படியே மௌனமாகவே கேட்டபடி அமர்ந்திருந்தவளிடம்… அவள் முன் மண்டியிட்டு அவளிடம் பேசுவதற்கு ஏதுவாக அமர்ந்தவன்…

“10 டேஸ் தான் சகி பேபி… நீதானே சொன்ன யாருக்காவது ஜெயிலுக்கு பிக்னிக் போக சான்ஸ் கிடைக்குமான்னு…” என்று கலாய்க்க முயல… அதில் இன்னும் அவள் முகம் கூம்பி வாட...

என்ன முயன்றாலும் அந்த கனமான சூழ்நிலையை மாற்ற முடியவில்லை இருவராலும்…

சந்தியாவோ வார்த்தை வராமால் கண்கள் கண்ணீரை உகுக்க.. அவனோ இயல்பாக இருப்பது போலவே காட்டிக் கொள்ள பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தான்…

“உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன் சகி… அப்புறம்… நீ என்னை மறுபடியும் பார்க்கும் போது எனக்கு நல்லாவே மீசை வளர்ந்திருக்கும்… வேற யார்னோ நினைத்து பக்கத்தில் வராம போய்றாத” என்று சொன்னவனிடம்… இவள் முறைக்க…

“செஞ்சாலும் செய்வ…” என்று இன்னும் விடாமல் இவனும் அவளிடம் வம்பளக்க... முறைத்தபடி… வேகமாக அவனை இழுத்தவள்…

அவன் முகமெங்கும் தன் முத்தங்களைப் பதிக்க… அதன் அழுத்தமும் வேகமும்.. அவளுடைய வேதனையை அவனுக்கு சொல்ல… நிறுத்தவே இல்லை அவள்… கணக்கில்லாத வகையில் இன்னும் இன்னும் வேகமாக பதித்துக் கொண்டே இருந்தாள்... நிறுத்தவேண்டும் என்ற எண்ணமே இல்லாதவள் போல… இந்த நிமிடத்தோடு இந்த உலகம் முடிவதைப் போல… கொடுத்துக் கொண்டே இருந்தாள்… அவனை விடாமல்…

“சந்தியா… சந்தியா” என்று இவனின் அழைப்புக்கெல்லாம் அவள் செவிசாய்க்கவே இல்லை…

“லவ் யூ ரகு… ஐ மிஸ் யூ ரகு” இதை மட்டுமே அவள் வாய் சொல்லிக் கொண்டிருக்க… ஒரு கட்டத்தில் வலுக்கட்டாயமாக தன்னை விட்டு விலக்கி நிறுத்தியவன்… எழுந்து அவளையும் எழும்ப வைத்தவன்…

“லேட்டாகிருச்சு கிளம்பலாம்… சிவா சார் வெளியில வெயிட் பண்ணிட்டு இருக்காரு” என்று அவளோடு கிளம்ப… அவளோ அப்படியே நின்றவள்…

“ஏன் ரகு ஒரு மாதிரி இருக்க.. இவ்ளோ கிஸ் பண்றேன் பதிலுக்கு ஒண்ணு கூட திருப்பித் தர மாட்டேங்கிற… ஐ நீட் யுவர் ஹக்…” அவனை நோக்கி கை நீட்ட… அவனும் திரும்பியும் வந்தான்…. அவளையும் அணைத்தான்… நீ கேட்டாய் நான் கொடுத்தேன் என்பது போல… அதன் பின் நெற்றியில் இதழும் பதித்தான்…

நேருக்கு நேராக அவளைப் பார்க்கவே முடியவில்லை அவனால்... அவளை வழி அனுப்புவது என்னமோ... தானே தன் மனைவியை கல்லைக் கட்டிக் கிணற்றுக்குள் தள்ளுவது போல உணர்வு மூச்சு முட்டியது. அவளை மீண்டும் பார்க்கும் வரை... இந்த அவஸ்தையில் இருந்து மீள முடியாது என்று தெரியாமல் இல்லை... இருந்தும் அத்தனையையும் தனக்குள் புதைத்துக் கொண்டவனாக

“டேக் கேர் சகி… உனக்காக ஒருத்தன் காத்துட்டு இருப்பேன்னு ஒவ்வொரு நொடியிலயும் நினைக்கனும் நீ… “ என்று அவளைத் தன் அணைப்பில் இருந்து விடுவித்தவனின் குரல் சரியாக இல்லை… பிசிறாக இருக்க… அவன் தனக்குள் அவனது சோகத்தை மறைத்துக் கொள்கிறான்… தன்னிடம் காட்ட மறுக்கின்றான்… என்று சந்தியாவுக்கும் புரிய… இவளும் பெரிதாக அதன் பின் அவனிடம் பேச வில்லை… வாசல் வரை வந்து சிவாவுடன் காரில் ஏறச் சொல்ல… சந்தியா அப்போதும் அவன் கரத்தை விட வில்லை… அதே நேரம் அங்கிருந்து செல்லவும் மனம் வரவில்லை…

ராகவ்தான் அவளிடமிருந்த தன் கரத்தைப் பிரித்தபடி…

“கெட் இன் சந்தியா” என்று அவளை ஏறச் சொல்ல… ஏறப் போனவளுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது போல….

‘என்னோட ஜெர்க்கின்’ என்று வீட்டுக்குள் மீண்டும் நுழைய…. ராகவ்வும் அவள் பின்னாலேயேச் சென்றான்…

தான் வைத்திருந்த ராகவ்வின் ஜெர்க்கினை எடுத்து அணிந்தபடி… அதன் பாக்கெட்டில் இருந்த தன் மாங்கல்யத்தை மீண்டும் ஒருதடவை சரிபார்த்துக் கொண்டாள்…

ஆம்... ராகவ்வின் திருமதி என்ற வெளிப்புற அடையாளங்கள் எல்லாம் அவளிடம் இப்போது இல்லை….

ஆனால் மாங்கல்யத்தை மட்டும் கழட்டாமல் வைத்திருந்தவள்… சிவாவிடம் எவ்வளவோ கெஞ்சினாள்… யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க தன்னால் முடியும் என்று… சிவா அவளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது என்று தடுமாற…

ராகவ்தான் சிவாவுக்கு கைகொடுத்தான்…

“சந்தியா… ப்ரபெஷனல மட்டுமல்ல… நாம் ஒரு காரியத்தை கையில எடுக்கிறோம்னா.. 100 சதவிகிதம் அதுவாகவே மாற வேண்டும்… இல்லை அதில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும்… இந்த தாலி… மெட்டி… இதெல்லாம் ஒரு அடையாளம் தான் சந்தியா… இதுக்காக இவ்வளவு போராட்டமா… இதையெல்லாம் போட்டுட்டுத்தான் அங்க போகனும்னா… நீ சந்தியாவாகவே இருந்துரு” என்று கண்டிக்க… வேறு வழியின்றி கழட்டி வைத்தவள்… மாங்கல்யத்தை மட்டும் தன்கூடவே வைத்துக் கொண்டாள்… அதை ராகவ்விடமும் சொல்ல வில்லை…

“போகலாம் ரகு” என்று அவனைப் பார்க்க… அவளையேப் பார்த்தபடி நின்று கொண்டிக்க… அந்தப் பார்வையில் ஒன்றுமே உணர முடியவில்லை அவளால்…

“நீ என்கூடவே இருக்கிற ஃபீல் இது தருது ரகு… இப்போ ஓகே… நீ என் கையை பிடிக்கலைனா கூட என் கூடவே இருக்கிற மாதிரி ஃபீல்” என்று சொன்னபடி… அதன் ஜிப்பை கழுத்து வரை இழுத்து விட்டு… சரி செய்தவளுக்கு திருப்தியான முக பாவனை வர… அவளது கணவனுக்கோ அதற்கு மேல் தன் உணர்வுகளை எல்லாம் அடக்க முடியவில்லை...

“நான் இல்லைன்றதை உனக்கு இந்த கோட் ஃபில் பண்ணிருமாடி…” என்று கோபமாகக் கேட்டது அவன் குரல் மட்டும்தான்… உடல் மொழியோ வேறாக இருந்தது… அவளை இறுக்கமாக அணைத்து கொண்டு… அவள் இதழை தன் இதழால் சிறை எடுக்க.. இருவரின் இதழ்களிலும் உப்பு மட்டுமே கரிக்க… இருவருமே நீ என்னை எடுத்துக் கொள் என்று அடுத்தவரிடம் பணியை ஒப்படைத்திருக்க… ஒரு கட்டத்தில் சந்தியவால் மூச்சை அடக்க முடியாமல் அவனிடமிருந்து தன்னைப் பிரித்து தன்னை நிலைப்படுத்தி நின்றவளை… இவன் இப்போது விடாமல் மீண்டும் மீண்டும் முத்தமிட்டவன் ஒருகட்டத்தில் பெரும்பாடுபட்டு… தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தவன்…

“இது நம்மளோட மூன்றாவது பிரிவு சந்தியா… ஒவ்வொரு முறையும் உன்னை விட்டு இப்படி விலகிப் போறது எனக்கு உயிர் போய் உயிர் வருகிற மாதிரி இருக்கு… இது இதுதான் நம்மளோட கடைசி பிரிவா இருக்கனும்… இதுக்கபுறம் நான் உன்னைப் பிரிஞ்சேன்னா அது என்னோட சாவு மட்டும் தான் இருக்கனும்… என்னால முடியலைடி” என்று அவளைக் கட்டிக் கொண்டு அழுதவனைப் பார்த்து…

கண்ணீரோடு… தலையை ஆட்ட மட்டுமே முடிந்தது சந்தியாவால்…

காரில் ஏறும் போதுதான்… இவன் கையை அவள் விட்டாள்… அல்லது அவள் கையை அவனிடமிருந்து பிரிக்க இவன் வாய்ப்பளித்தான் என்றே சொல்ல வேண்டும்… வாகனமும் கிளம்பியது…

இவனைப் பார்த்துக் கொண்டே.. திரும்பிப் பார்த்துக் கொண்டே… சென்றவளின் முகம் மறைய… அப்படியே எத்தனை நிமிடம் நின்றிருப்பான் என்றே தெரியவில்லை… அதுவே தெரியவில்லை எனும்போது அவளை விட்டு பிரிந்து இருக்கும் கொடுமையான நாட்களை எப்படி இவன் கடப்பான் என்பதும் அவனுக்கு தெரியுமா… பேதைக் கணவனாக புத்தி பேதலித்து நின்றான்… தன் உணர்வுகளைக் கூட யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத துரதிர்ஷ்டசாலி நிலைக்கு ஆளாகி இருந்தான் சந்தியாவின் ராகவரகுராம்

இப்போதைக்கு ஒன்றே ஒன்று மட்டும் ஆறுதல் அவனுக்கு… தினமும் சந்தியாவை அவனிடம் பேச வைப்பதாக சிவா சொன்ன அந்த வார்த்தைகள் தான் அவனுக்கு அவன் வாழ்க்கையின் மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்த வார்த்தைகள்… அதுகூட 5 நிமிடங்கள் மட்டுமே… எந்த நேரம் என்று கூட குறிப்பிட்டுச் சொல்ல முடியாது…

அதேநேரம் அதிக நேரமும் சிவாவால் சந்தியாவை பேச வைக்க முடியாது… சிக்னல் ப்ளாக்கிங் ஏரியா என்பதால்… சிக்னலை அதிக நேரம் இவர்களுக்காக பிடித்து வைத்திருக்க முடியாது…

சிவாவுக்கு புரிந்தது…. ராகவ்வால் அவளோடு பேச முடியாமல் இருக்க முடியாது என்றே தோன்றியது… பேசாமல் அவன் இருந்தால்… இந்த தனிமையில் வேறு யாரிடமும் ஆறுதல் வேண்டி போக முடியாத சூழ்நிலையில் அவன் மிகப் பெரிய மன அழுத்தத்துக்குத்தான் போவான் என்றே தோன்றியது…. இந்த சில நாட்களில் சந்தியா கூட அவளை சமாளித்துக் கொண்டிருக்க… ராகவ் தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டு போராடிக் கொண்டிருக்கின்றான் என்றே தோன்றியது… அந்த இளம் தம்பதிகள் தனக்காக மட்டுமே இத்தனை தூரம் வந்திருக்கின்றனர் என்று தோன்ற… அவர்களுக்காக இதையாவது செய்வோம் என்றே தோன்றியது…

இருவரிடமுமே இதை ஏற்கனவே சொல்லி வைத்திருக்க… அந்த இரு உள்ளங்களும் தினமும் தங்கள் துணையோடு பேசும் அந்த சில நிமிடங்களுக்காக… அந்த நிமிடங்களை நோக்கி நாளின் மற்ற நிமிடங்களை கடத்த ஆரம்பித்தனர்…

அன்றொரு நாள் அவனது சகி…. அவள் இவனுக்காக காத்திருந்த நேரங்களை இவனிடம் அறுவடை செய்ய காத்திருந்த தருணம் இவனுக்குத் தெரியுமோ… அவன் சகியும் அந்த நிமிடங்களை அறுவடை செய்தாள் தான்… ஆனால் என்ன… அந்தோ பரிதாபம்… அவனோடு சேர்ந்து அவளும் அவனை எதிர்பார்த்து காத்திருந்ததுதான் அங்கு விதி சகிக்கு எதிராகச் செய்த சதி…

---

தன் கைகளில் பேருக்கென்று மாட்டப்பட்டிருந்த கைவிலங்கை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தியா… கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு முன் கணவனின் கரங்களில் சிறைபட்டிருந்த கரங்கள் இப்போது கைவிலங்குகளின் சிறையில்…

அதீனாவும் அந்த வளாகத்தில் தான் இருந்தாள்… அவளும் இவளைப் பார்க்க முடியாது… இவளும் அவளைப் பார்க்க முடியாது…

அந்த அறையைச் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்… தனிமைச் சிறை என்பதால் சந்தியா வேறு எந்த கொடுமைகளையும் அனுபவிக்க வேண்டியது இல்லை… ஆக மொத்தம் தன்னவனின் நினைவுகளோடு நாட்களை கடத்தி விடலாம் என்று தோன்ற… ராகவ்விடம் பேசும் போது தனக்கு எந்த பிரச்சனையுமில்லை என்று சொல்ல வேண்டும்… என்றே நினைத்துக் கொண்டாள்…

மிகக் குறைந்த வெளிச்சம் மட்டுமே… இன்னும் அந்த வெளிச்சத்துக்கு இவள் கண்கள் பழகவில்லை போல… சுற்றி இருந்த இடங்கள் எல்லாம் இவளுக்கு கண்களில் படவே இல்லை… இருள் சூழ்ந்ததாகவே இருக்க… அது மட்டுமே கொஞ்சம் பயமாக இருக்க… சற்று தள்ளி நிரஞ்சனா இவளுக்கு காவலாக அமர்ந்திருந்தாள்… அவளைப் பார்க்க பிடிக்கவில்லை என்றாலும்… அவள் அங்கிருப்பது சந்தியாவுக்கு அவ்வளவு ஒரு பலத்தை, தைரியத்தைக் கொடுத்துதான் கொண்டிருந்தது…

அது மட்டுமல்ல.. தனக்காக 24 மணி நேரம் அவள் இங்கு இருப்பாள் என்று சிவா சொல்லி இருக்க… மனம் கனத்தது…

இப்போதுதான் அவள் அன்னை மருத்துவமனையில் இருந்து வந்திருக்கின்றார்கள்… அவருக்கு நிரஞ்சனாவின் கவனிப்பு, அக்கறை இந்த நேரத்தில் மிகவும் அவசியம்… அதை எல்லாம் யாரோ ஒருவரிடம் விட்டு விட்டு தனக்காத்தான் இந்தப் பணியை எடுத்துக் கொண்டிருக்கின்றாள்… என்று அவள் உணர்ந்தாள்தான்

இங்கு கடமையை மீறி… என்ன இருக்கின்றது தன்னோடான நட்பா… கண்கள் அவளையுமறியாமல் கலங்கத்தான் செய்தது… அவளோடு இருந்த தருணங்களை இப்போது நினைத்துப் பார்த்த போது…

மனதைக் கல்லாக்கிக் கொண்டுதான் நிரஞ்சனா பழகியிருக்கின்றாள் என்றே தோன்றியது… பெரும்பாலான சமயங்களில் எல்லாம் அவள் இறுக்கமாக இருந்ததெல்லாம் கடமைக்கும்… நட்புக்கும் இடையில் போராடும் சமயங்கள் என்று தோன்ற… அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருக்க… நிரஞ்சனாவும் இவளையே பார்த்தபடிதான் இருந்தாள்…

இருவரின் பார்வைகளும் ஒரே நேரத்தில் சந்தித்த போதே… திடிரென ஒரு சத்தம்… நிரஞ்சனா வேகமாக எழுந்தவள்…

“சந்தியா நீ கொஞ்சம் தள்ளி உள்ள போய்க்கோ… உன்னோட முகத்தை அவள் பார்க்கவே கூடாது… ” என்றபடியே நிரஞ்சனா தன் கையில் இருந்த சாவி மற்றும் இடுப்பில் இருந்த துப்பாக்கியைச் சரிபார்த்தபடி.. சத்தம் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பிக்க…

சந்தியாவும் அவள் போன திசையையே பார்க்க ஆரம்பித்திருந்தாள்… அதீனா திடீரென்று விதவிதமாக சமிக்ஞைகள் கூடிய ஒலி எழுப்ப ஆரம்பித்திருந்தாள்….

சந்தியா பயத்தில்… இன்னும் சுவரோடு ஒன்ற ஆரம்பித்து இருந்தாள்…

அதீனா… ஏதோ சத்தமாகப் பேசினாள்.. அது ஹிந்தி இல்லை.. நிரஞ்சனா அதீனாவை ஏதேதோ அதட்டிக் கொண்டிருந்தாள்… அவளை அமைதியாக இருக்கச் சொல்லி… ஆனாலும் அதீனா சத்தம் எழுப்பிக் கொண்டேதான் இருந்தாள்…

இப்போது நிரஞ்சனா அதீனாவை அதட்ட… தன் வாய் வார்த்தைகளை எல்லாம் உபயோக்கிக்கவில்லை… பதிலாக லத்தியைத்தான் உபயோகப்படுத்தினாள்… அப்போதும் அசராமல்…. அதீனா ஏதேதோ குரல் எழுப்பி சந்தியா இருந்த திசை நோக்க… சந்தியாவுக்கு அதீனாவின் குரலே பயப்படும்படியாக இருந்தது…

அதீனாவின் குரல்.. கரகரவென்று இருந்தது… தான் ஆடியோவில் கேட்ட குரல் போலவே இல்லை என்று தோன்றியது…

சந்தியாவுக்கு அதீனா போல் பேசவே வரவில்லை முதலில்… எப்படியோ… சிவா அவளை பேச வைக்க முயற்சித்து இருக்க… ஓரளவு தேறியவளுக்கு… இப்போது கேட்ட அதீனா குரல் வேறு மாதிரியாக இருக்க… இதுபோல இப்படி எப்படி பேசுவது… என்று தோன்ற… அந்த சூழ்நிலையிலும்… அதீனாவாக தான் மாறியிருக்கும் வேடம் சரியாக இருக்கவேண்டுமே என்ற எண்ணம் தோன்றியது சந்தியாவுக்கு ஆச்சரியமாக இருந்தது… சிவா அந்த அளவுக்கு உடல் பயிற்சியில் மட்டுமல்ல… மனதளவிலும் தன்னை மாற்றி இருக்கின்றான் என்றே தோன்றியது…

அதே நேரம் அதீனாவின் எண்ணங்களிலோ… தன் கூட்டம் தன்னைக் கொல்லக் கூட இந்த மாதிரி ஆட்களை உள்ளே வர வைப்பார்கள் என்றே தோன்றியது… புதிதாக வந்திருப்பவள்… பெண் என்று தெரிந்து கொண்டாள்… ஆனால் இந்தப்பெண் தன் கூட்டத்தை சேர்ந்தவள் இல்லை.. தன்னுடைய சங்கேத மொழிகள் இவளுக்குப் புரியவில்லை என்பது புரிய… அப்படியென்றால் இவள் யாராக இருக்கக் கூடும்… இந்த எண்ணங்கள்… ஆனாலும் சந்தியாவை சந்தேகித்தாள் தான்

அதினாவுக்கு ஏளனத்தில் இதழ்கள் விரிந்தன… அவளுக்கு நன்றாகவேத் தெரியும்.. இனி தான் தன் கூட்டத்துக்குத் தேவையில்லை என்பது… இங்கு உண்மையைச் சொல்லாமல் இருப்போம் என்றெல்லாம் அவர்கள் நினைக்கவே மாட்டார்கள்… மரண தண்டனை இவளுக்கு வழங்கப்பட்டால் கூட அவர்களுக்கு இவள் அவர்களை விட்டு வெளியே இருப்பது அந்த அளவுக்கு உகந்தது அல்ல… எத்தனையோ பேருக்கு இவள் கண்முன்னாலேயே நிகழ்ந்திருக்கிறதே… இதோ வந்திருப்பவள் கூட தன்னைக் கொல்ல வந்தவளாக இருக்கலாம்… இல்லாமலும் போகலாம்.. இப்படியெல்லாம் நினைத்தாளே தவிர… தனக்கான ஒரு மாற்றை காவல்துறையினர் ஏற்பாடு செய்திருப்பனர் என்றே அவள் நினைக்கவில்லை…

நிரஞ்சனாவின் லத்தி அடிகள் பலமாக அதீனாவுக்கு… விழ… அதில் சந்தியாதான் எச்சிலை மென்று விழுங்கினாள்…

“பாவம் அந்தப் பெண்… இந்த அடி அடிக்கிறாளே” என்ற பரிதாபம் வேறு வந்திருந்தது…

“சரி அவளாவது அடிக்கு பயந்து அமைதி ஆகிறாளா…” என்று அதீனாவை வேறு தனக்குள் திட்டிக் கொண்டாள் சந்தியா…

சில நிமிடங்கள் கழிந்து… அதீனாவே தனக்குள் சமாதானமானவளாக

வரும் நாட்களில் இவள் இங்குதானே இருப்பாள்… பார்த்துக் கொள்ளலாம் என்று அதீனா அப்போது அந்த முயற்சியை விட்டு விட்டாள்… இப்போது அதீனாவின் குரல் அடங்க…

“ஊப்ப்ப்” சந்தியா இப்போதுதான் இழுத்து வைத்திருந்த மூச்சை விட்டாள் என்றே சொல்ல வேண்டும்…

அதன் பின் படுத்தவளுக்கு சுத்தமாக உறக்கம் என்பதே வரவில்லை… ஏனோ அந்த இடத்தில் படுக்கவே... அதிலும் வெற்றுத் தரையில் படுக்கவே மனம் வரவில்லை… யாருக்கும் தான் தெரியப் போவதில்லையே… ஒரு பாய் தலையணை கொடுத்தால் என்ன என்றே தோன்ற… இவளையே உள்ளே அழைத்து வந்து விட்டனர்…. அவற்றை எடுத்து வர முடியாதா… சந்தியாவுக்கு இப்போது இது பெருங்கவலை இதுதான்…

ஆனால் சின்ன சின்ன விசயங்களை சிவா அலட்சியப்படுத்தவில்லை…

அதீனாவுக்கு அனுமதி அளித்திருக்கும் பொருட்கள் கூடுதலாக மாறினால்… கடைநிலை ஊழியர் வரை.. சிவா தன் குழுவுக்குள் இழுக்க வேண்டும்.. என்று சில விசயங்களில் கறாராக இருக்க… சந்தியாவுக்கு இந்த மாதிரி சின்ன சின்ன கடினங்கள் மட்டுமே அனுபவித்தாளே தவிர… பெரிதாக ஒன்றுமில்லை என்றே தோன்றியது

ஆக மொத்தம்… சந்தியா அதீனாவாக மாறி இருக்க… அதீனாவுக்கோ… தன் உருவில் இருக்கின்ற ஒரு பெண்… தனக்காக இங்கு உருமாறி வந்திருக்கின்றாள் என்ற உண்மை தெரியாமல் அங்கு இருக்க…

ஐந்து நாட்கள் கடந்திருந்தன..

சந்தியாவும்… வந்ததிலிருந்து… தினமும் ராகவ்வோடு பேசி விட…

எந்த ஒரு பிரச்சனையுமில்லாமல் சூமூகமாகவே எல்லாம் செல்ல… ராகவ் சந்தியா தாங்கள் மீண்டும் சந்திக்கப் போகும் நாளான… நீதிமன்றத்துக்கு இந்த வழக்கின் கடைசி விசாரணை வரும் நாளை எதிர்பார்த்திருக்க… சிவா, நிரஞ்சனா மற்றும் அம்ரீத் அதே நாளை தங்களுக்கான போராட்டங்களுக்கான முடிவு நாளாக எதிர்பார்த்திருக்க… அதீனாவுவோ எந்த ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் அந்த நாள்… மற்றொரு சாதாரண நாளாகவே எண்ணினாள்…

இப்படியாக ஒவ்வொருவரும் அந்த நாளை எதிர்பார்த்திருக்க இருக்க… சந்தியாவின் அடுத்த ஐந்து நாட்கள் அவள் எண்ணியது போல சாதாரணமாகப் போக வில்லை.. அதீனா மேல் கொண்ட மோகத்தின் காரணமாக ஏற்பட்ட ஜெயவேலின் குறுக்கீடு சந்தியாவுக்கு வர.. சிறை வாழ்க்கை என்ன என்றால் என்று சந்தியாவுக்கு அது காட்ட… அதைத் தடுக்க முடியாத நிலைக்கு சிவாவும் ஆளாகியிருந்தான் என்றே சொல்ல வேண்டும்

2,871 views4 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது...

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.
© 2020 by PraveenaNovels
bottom of page