அத்தியாயம் 52
சிவா சொன்ன அனைத்தையும்… அமைதியாக ராகவ் கேட்டபடி இருந்தான்… கணேசன், சந்தோஷ் இருவரின் அத்தனை விசயங்களையும் அக்கு வேறாக அவனிடம் கடை பரப்பப்பட்டிருக்க… ராகவ்வுக்கு இன்னும் இன்னும் அதிர்ச்சியே… ஆக மொத்தம் சந்தியாவை மிரட்டி அடிபணிய வைப்பதற்கு ஏதுவாக… சந்தியாவைச் சுற்றி இருந்தவர்கள்.. அத்தனை பேரும் ஏதோ ஒரு விசயத்தில் தவறி இருந்தனர்… ஆனால் தன் விசயம் அதில் முதலிடம் பிடித்திருந்ததுதான் மிகப் பெரிய வேதனையாக மாறி இருந்தது ராகவ்வுக்கு…
அப்பாவிப் பெண்ணைச் சுற்றி இத்தனை வலை விரித்ததற்கு… அந்த தீவிரவாதி… என்று நினைத்த போதே… அது கணேசனின் மகள் என்பதும் இப்போது அவனுக்கு நினைவு வர… சந்தியாவை நினைக்கவே மனம் கனத்தது… ஏற்கனவே அரசல் புரசலாக தெரிந்த விசயம் தான்… ஆனால் அது இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து சந்தியாவின் வாழ்க்கையில் பேயாட்டம் ஆடும் என்று யாரும் நினைத்திருக்க முடியுமா… அதீனாவைப் பற்றி சந்தியாவின் தாய்க்கு வசந்திக்கு தெரிந்திருக்கும் என்றே தோன்றியது.. ஆனால் கணேசனின் வாழ்க்கையில் இருந்து அவர்கள் எப்படி மறைந்தனர் என்ன நடந்தது அதெல்லாம் சிவா சொல்ல வில்லை….
சந்தோஷ் விசயம் அப்படி ஒன்றும் பெரிதாகத் தோணவில்லை ராகவ்வுக்கு… இவனுக்கு ஏற்கனவே தெரிந்து விட்டிருந்ததால்… அதிர்ச்சியெல்லாம் இல்லை… சந்தியா சொன்னபோதெல்லாம் கணேசனைப் பற்றி பெரிதாக இவன் கண்டு கொள்ளவில்லை… இப்போது யோசித்துப் பார்க்கும் போது… கணேசன் இந்தக் குடும்பத்தில் இன்னும் சொல்லப் போனால்.. தன் மனைவியோடு பெரிதாக ஈடுபாட்டோடு வாழவில்லை என்றே தோன்றியது… ஏன் சந்தியாவைக் கூட அவர் பெரிதாக நினைக்கவில்லை என்றே தோன்றியது… வசந்தியின் மீதிருந்த கோபத்தை மகளிடம் காட்டியிருக்கின்றார் தோன்றியது… திவாகர்-மேனகா திருமண நிகழ்வில் நடந்த பிரச்சனையில் கூட பெரிதாக மகளிடம் அக்கறை காட்டவில்லை… தன் மீதுதான் கோபம் கொண்டார் அது மட்டுமே உண்மை…
எதை சரி செய்வது… எங்கு தொடங்குவது… தன் தலையில் பாராங்கல்லை வைத்து அழுத்துவது போல் ரண வேதனை… ஏற்கனவே பல பிரச்சனைகள்… மிருணா சந்தோஷினால்… அது முழுதாக முடியும் முன்னரே… இப்போது தங்களுக்கே… அதுவும் விஸ்வரூபமாக உருவெடுத்து நின்றிருக்க… ஆண்மகன் அவனுக்கே… அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க முடியாத மனநிலை… சந்தியா எப்படி தாங்குவாள்…
ஒன்று மட்டும் புரிந்தது ராகவ்வுக்கு… சந்தியாவுக்கு சிறு வயதில் இருந்தே… அவளுக்குள் பல குழப்பங்கள இருந்து வந்திருக்கின்றன.. தாய் தந்தை ஒட்டாத தன்மை… தன் தந்தையின் கண்டிப்பு…. தாயின் தனிமை… பல குழப்பங்களுக்கு விடை தெரியாமல்தான் தான் வளர்ந்திருக்கின்றாள்… மன ரீதியாக அவள் பாதிக்கப்பட்டிருக்கின்றாள்… அதை அவளாகவே சமாளித்தும் வாழ்ந்திருக்கின்றாள்… என்பதையும் அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது…
நிறைவேறாத.. தனக்கு கிடைக்காத பெரிதான ஆசைகளை தனக்குள் மறைத்துகொண்டு… சின்ன சின்ன விசயங்களுக்காக அவள் தந்தையிடம் போராடியிருக்கின்றாள் என்றே தோன்றியது… அந்த பிடிவாதங்களினால் அடிக்கடி தந்தையிடம் அடி வாங்கியிருக்கின்றாள் என்று தோன்ற… அவள் அன்னை பாசம் கூட அவளை முழுமைப்படுத்த வில்லை என்றே தோன்றியது…
கண்கள் கலங்கியது தன்னவளை நினைத்து…
அப்படிப்பட்டவளுக்கு… இவன் செய்தது என்ன…
அவளுக்கு கிடைக்காத அந்த அன்பை… தான் அதிக அளவு வழங்கியிருக்க… அதுவும் சந்தியாவுக்கு வேதனையாக மாறியிருந்ததோ… பயமாக இருந்தது ராகவ்வுக்கு… சந்தியாவின் வாழ்க்கையில் தான் எந்த அளவுக்கு முக்கியம் என்பது புரிந்த போது… இதை சந்தியாவும் யோசித்திருக்க வேண்டும் என்றே தோன்றியது… தன்னை விட்டு விலகி இருக்கவேண்டுமென அவள் தீர்மானித்தது அவனது அதீத அன்பை தாங்க முடியாமல் என்றே தோன்றியது… அவள் பயப்படுகின்றாள் என்றே உணர்ந்தான்… இவனின் அன்பு அவளுக்கு எந்த அளவு சந்தோசத்தை உணர வைத்ததோ அதே அளவுக்கு… பயத்தையும் அவளுக்குள் உருவாக்கியிருந்தது என்பதை நன்றாக உணர்ந்து கொண்டான்… சொல்லப் போனால் அவள் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்… தங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமா… தனக்கு சந்தோஷம் வந்தாலே கூடவே துக்கமும் வரும் என்று சொல்வாளே… மனைவிக்காக மனம் அடித்துக் கொள்ள… குழம்பி நின்றான் ராகவ்…
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது எளிதே…
சிவா அவனிடம்
“ராகவ்… என்னை நம்புங்க… சந்தியாவை பத்திரமா கொண்டு வந்து சேர்க்கிறது என்னோட பொறுப்பு… “ என்றவனிடம்
“நீங்க கடவுளா சார்” சிவாவின் கண்களைப் பார்த்து கேட்டான்… இதைக் கேட்பதற்கு ராகவ்வுக்கு பயம் இல்லை… சிவா எப்படி சொல்வான்… எந்த உத்திரவாதத்தில் சொல்கிறான்…
”நான் கடவுள் இல்லைதான்…. என்னோட கண்ட்ரோல்ல” என்று சொல்லும் போதே…
“நான் எப்படி சார் உங்கள நம்புவேன்… “ என்று நிறுத்தியவன்…
“சாரி உங்கள ஹர்ட் பண்ணினாலும் என்னால கேட்காமல் இருக்க முடியவில்லை சிவா சார்… உங்க மனைவியையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்… என்னோட மனைவியை எப்படி சார் என்கிட்ட பத்திரமா மீட்டுக் கொடுப்பேன்னு உத்திரவாதம் கொடுக்கறீங்க… பேசுற வார்த்தையைப் பார்த்துப் பேசுங்க…” கேலியாகவெல்லாம் அவன் பேசவில்லை… உண்மையைத்தானே கேட்கின்றான்
எதிராளியை சுக்கு நூறாக உடைக்கும் வார்த்தைகள்தான்…. தன்மானத்தை சீண்டி விடும் வார்த்தைகள் தான்… நிதானமாக வார்த்தைகளை சிவாவிடம் எறிந்தான் ராகவ்..
“எனக்குனு ஒரு ஸ்பேஸ் இருக்கு… அதில் யாரையும் நான் விட மாட்டேன்… அதே போல அடுத்தவங்க ப்ரைவேட் ஸ்பேஸ்லயும் நான் உள்ள போக மாட்டேன்… சிவா சார்… என் குணம் இதுதான்…. என் தங்கை வாழ்க்கைல பிரச்சனை வந்தபோது கூட நான் முடிவெடுத்திருக்க முடியும்… ஆனால் அவங்கவங்க வாழ்க்கை… அவங்கதான் முடிவெடுக்கனும்னு நினைப்பேன்… ஆனால் என்னோட வாழ்க்கைல” என்று வெளியில் தெரிந்த வெளியை வெறித்தவன்
“என்னோட மேரேஜ் ல இருந்து… இப்போ இந்த நிலை வரை…. அடுத்தவருக்காக என்னோட முடிவுகளை ஏற்க வேண்டியாதாக இருக்கின்றது…” தன்னை நினைத்து ராகவ்வுக்கே பச்சாதாபமாக இருக்க… சிவா அவனது தோளை ஆறுதலாகப் பற்ற…
“அந்த சாதனா கூட என்னை மிரட்டுறதுக்கு என்னோட வீக்னெஸ் தெரிந்ததில் தான் சார்… அடுத்தவங்களுக்காக நான் இறங்கிப் போகின்றேன்… அவங்களோட உணர்வுகளை மதிக்கின்றேன் என்ற காரணத்தினாலேயே பல இடங்கள்ள நான் அவமானப்பட்டு நின்னுருக்கேன்” என்றவன்…
“யோசித்துப் பார்த்தால் என்னோட பிடிவாதம்… கோபம்… காதல்.. வெறுப்பு எல்லாமே சந்தியான்னு ஒருத்திக்கிட்ட மட்டும் தான் சார்… எங்க அப்பா சொல்வார்… நீ தொலைந்த இடம் சந்தியாகிட்டதான்… அவ மூலமாத்தான் உன்னை என் மகனா மீட்டெடுக்க முடியும்னு”
“சுகுமாரோட மகனை அவர் மீட்டெடுத்துட்டார்னு சந்தோசமா இருக்காரு… அவருக்கு தெரியலை… இப்போ நான் சந்தியாவோட கணவனா தோத்துப் போயி்ட்டு இருக்கேன்னு… அவ இல்லைனா இந்த ராகவ் மொத்தமா சூனியமா ஆகிருவேன்ற நிலைமைல இருக்கேன் சார்.. என்கிட்ட அவளை அனுப்பி வச்சுருங்க சார்… ப்ளீஸ் சார்… எனக்கென்னவோ பயமா இருக்கு சார்… வாழ்க்கையையே ஆரம்பிக்காமல் எங்க வாழ்க்கை முடிந்து போய்விடுமோன்னு… என்னால இப்படித்தான் யோசிக்க முடிகிறது… ஆயிரம் குடும்பங்களுக்கு நீதி வேண்டி… சந்தியாவை…“ என்று தழுதழுத்தவன்
”என் சந்தியாவுக்கு மட்டும் ஏதாவது நடந்தால்…“ என்று நிறுத்தியவன்
“அநியாயமா இரண்டு அப்பாவி ஜீவன்களுக்கு அநீதி செய்யாதீங்க சார்… அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது…” எனும் போதே…
”ஏன் ரகு… நெகட்டிவா யோசிக்கிறீங்க… ஆயிரம் பேருக்கு நீதி கிடைக்க நாம ஒரு சிறு துரும்பா இருக்கும் போது நமக்கு என்ன ஆபத்து வர போகிறது…. அந்த மாதிரி ஏன் யோசிக்க மாட்றீங்க ரகு”
குரல் வந்த திசையை நோக்கி வேகமாகத் திரும்பிப் பார்க்க… மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டியபடி அவனைத் தெளிவான.. தீர்க்கமான பார்வை பார்த்தது அவனது மனைவி சந்தியாவேதான்…
இப்போது வேறு கோணத்தில் தெரிந்தாள் தன்னவள்… அவன் பார்த்த குறும்புச் சிறுமியாக… தந்தைக்குப் பயப்படும் மகளாக… தாயை அரவணைக்கும் பெரிய மனுசியாக… தன்னிடம் தொலைந்து குழப்பத்தில் மருகி நின்ற மனைவியாக அவள் தெரியவில்லை… தெளிவாக இருக்க…
அடுத்தடுத்து இவன் செய்த வாதங்கள் எல்லாம் சந்தியாவிடம் எடுபடவே இல்லை… அவள் முடிவெடுத்து விட்டாள் அது மட்டுமே அங்கு இறுதியாக இருக்க… கெஞ்சினான்… மிரட்டினான்… கோபம் கொண்டான்… அடிக்க மட்டும் தான் இல்லை… எதுவுமே சந்தியாவிடம் எடுபடாமல் போக…
முடிவில்...
“யாரைக் கேட்டு நீ இதுக்கு சம்மதம் சொன்ன… இது உன்னோட வாழ்க்கை இல்லை… இது என்னோட வாழ்க்கை… நீ சரின்னு சொன்ன ஒரு வார்த்தையால என் வாழ்க்கை அந்தரத்தில நிற்குது… அதுக்கு நீ பொறுப்பேற்பியா… “ என்றவனிடம்
“நீ பயப்படறியா ரகு… உன் மனைவியா போகிறவ… மறுபடியும் அதே மாதிரி திரும்பி வருவாளான்னு” அதிரடியாகக் கேட்டவளை… அறையக் கை ஓங்கியவனிடம் கண்கள் கூட சிமிட்டாமால் அப்படியே நின்றாள் சந்தியா…
அடிக்க கை ஓங்கியவனால் அடிக்கக் கூட முடியவில்லை… அவளைக் கட்டிக் கொள்ளத்தான் முடிந்தது…
சிவாவுக்குமே அங்கு நிற்க முடியவில்லை… மனம் கனத்தது… சந்தியா பேசிய வார்த்தைகள்… அவனுக்குமே உள்ளுக்குள் ஆட்டத்தைத்தான் கொண்டு வந்தது… ஏனோ அந்த ஜெயவேல், தன் உயர் அதிகாரி கரணின் ஞாபகத்தையும் கொண்டு வர… இதற்கு முன் அதீனாவை பார்க்க வந்த சமயங்கள் எல்லாம் கண் முன் வர… மனதுக்குள் தடுமாறினான்
தன்னை அணைத்திருந்த கணவனிடத்தில் சந்தியா இறுகி சிலையாக நிற்க… ராகவ் உடல் குலுங்கியதே அவன் அழுகிறான் அவளுக்குள் உணர்த்த…
“உன்கிட்ட நான் வருவேன் ரகு… உன் சந்தியாவா வருவேன் ரகு… எனக்காக காத்துட்டு இரு…” என்று அவனைத் தன்னிடமிருந்து விலக்கி அவன் நெற்றியில் முத்தமிட்டவளிடம்…
“என்னை ஏமாத்திற மாட்டியே சந்தியா…” விழிகளில் நிராசையுடன் மனைவியைப் பார்த்தவன்… மறைமுகமாக அவள் முடிவுக்கும் சம்மதமும் சொல்லியிருக்க… அவன் கண்களிலோ இன்னும் அலைப்புறுதல் மட்டுமே…
அவன் கண்களைப் பார்த்தபடியே
“மாட்டேன்” என்று தலை ஆட்டியவள் ஏனோ அவன் கேட்ட அதே வார்த்தைகளை தன் கணவனிடத்தில் மீண்டும் கேட்கத் தோன்றவில்லை… கேட்கத் தோன்றவில்லையா… இல்லை கணவன் தன்னை ஏமாற்றமாட்டான் என்ற அதீத நம்பிக்கையா…
---
அதன் பின் கிட்டத்தட்ட நான்கு நாட்கள் கடந்திருந்தன… சிவா இல்லம்தான் அவர்கள் தங்குவதற்கான இடம் என முடிவெடுக்கப்பட்டிருக்க… ஒரு மதிய உணவில் சிவா ராகவ்விடம்…
“நீ சந்தியாவை வெளியே எங்கேயாவது கூட்டிப் போய்ட்டு வருகிறாயா ராகவ்…நான் ஏற்பாடு பண்ணட்டுமா” என்று கேட்க….
“அப்படியே நாங்க தப்பித்து போக மாட்டோம்னு தோணலையா சிவா சார்” நக்கலாகத்தான் ராகவ் கேட்டான்… ஆனாலும் குரலில் அனலடிக்கவும் செய்ததுதான்
”உடம்பில பாமைக்கட்டி… ஊர் சுத்துறத்துக்கு வேற டிக்கெட் வாங்கி கொடுப்பாராம் இவர்”- நினைக்கும் போதே சாப்பிடும் சாப்பாடு கூட எரிந்தது ராகவ்வுக்கு…
சிவாவோ…. தன்னை முறைத்த ராகவ்வைப் பார்த்து புன்னகைத்தபடி
“சந்தியாவை நம்புகிறேன்” என்று அழுத்தமாகச் சொல்ல… சந்தியாவிடம் நெற்றிக் கண் காட்டி முறைத்தவன் அவள் கணவனே…
அப்படி ஒரு கோபம் வந்திருந்தது ராகவ்வுக்கு…. யாரிடம் காட்ட… பாதியோடு சாப்பாட்டை விட்டு எழுந்தவனிடம் சந்தியா எவ்வளவோ கெஞ்சியும் அவன் பிடிவாதமாக அறைக்குள் சென்று விட… அவனைத் தொடர்ந்து போய் கெஞ்சவும் முடியவில்லை…
காரணம் அடுத்தடுத்து என பயிற்சிகள்…. தற்காப்புக் கலைகள்… அதீனாவாக எப்படி நடக்க வேண்டும் எப்படி பேச வேண்டும்..அவளை யார் யார் எல்லாம் பார்க்க வருவார்கள்… அவர்களிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டுமென சிவா.. நிரஞ்சனா.. அது போக சில பயிற்சியாளர்கள் வேறு… என ராகவ் சந்தியா சேர்ந்திருந்தும் அவர்களுக்கான தனிமை கிடைக்காமல் போனது என்பதுதான் உண்மை…
மனைவி மேல் கோபம் இருந்தாலும்… சில சமயம் ராகவ்வும் அவளுக்கு சில பயிற்சிகளில் உதவி செய்ய ஆரம்பித்திருந்தான்... சந்தியாவுக்கு இயல்பிலேயே எதையும் வேகமாக கற்றுக் கொள்ளக் கூடிய திறன் இருக்க… அவளும் ஆர்வமுடனே கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தாள்…
அதிலும் ஒரு நாள் கணவன் கேட்டது இப்போது ஞாபகத்திற்கு வர.. அதுவும் அவளுக்குள் உத்வேகத்தைக் கொண்டு வந்திருக்க…
கொஞ்சமாக கொஞ்சமாக சந்தியா அதீனாவாக மாறி கொண்டிருக்க… சிவாவுக்கு மிகவும் திருப்தியான உணர்வு… அதீனா அளவுக்கு இல்லையென்றாலும்…. இவளை வைத்து சமாளிக்கலாம் என நம்பிக்கை வந்திருந்தது…
கோபம் கொண்டு போன கணவனைப் பின் தொடர முடியாமல்.. அடுத்து துப்பாக்கி சுடும் பயிற்ச்சி.. அந்த வீட்டின் தோட்டத்திற்கு சென்று விட… ராகவ்வும் சில நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்திருந்தான்… வேறு வழி… பூமி சுற்றுவது சூரியனைச் சுற்றித்தான் என்பது போல… சந்தியா இருக்கும் இடத்திற்கு வந்திருந்தான் அவள் கணவன்..
நிரஞ்சனா அவளுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்துக் கொண்டிருக்க… சிவாவும் ராகவ்வும் சற்று தொலைவில் நின்று சந்தியாவின் பயிற்சிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்… சந்தியா… அவ்வப்போது தன் நெற்றியின் முன் வந்து விழுந்த கேசத்தை சரி செய்தபடி பயிற்சியை மேற்கொண்டிருக்க… நிரஞ்சனாவுடன் சந்தியா தேவைகளுக்கு மட்டுமே பேசிக் கொண்டிருந்தாள்…
இவள் சில சமயம் பயிற்சியில் தவறும் போதெல்லாம்… நிரஞ்சனா அவ்வப்போது திட்ட… சந்தியா நினைத்துக் கொண்டாள்… தன் நிலைமையை… இதே நிரஞ்சனாவுக்கு டெவலெப்மெண்ட்டில் கோட் அடிக்க வர வில்லையென்று ப்ராசெஸில் வேலை மாற்றிக் கொடுத்தது இப்போது ஞாபகத்துக்கு வர… மனம் சோர்ந்தது… தோழியின் நம்பிக்கை துரோகம் கண் முன் வந்து நின்ற போது
“அது சரி… அவள் வேலை பார்க்கவா வந்தாள்…” நட்பின் துரோகம் முகத்தில் சலிப்பைக் கொண்டு வந்திருக்க… அதற்கு மேல் பயிற்சியில் கவனம் செலுத்த முடியவில்லை… நிரஞ்சனாவுக்கும் அது புரிய
“ப்ராக்டிஸ் பண்ணு… சந்தியா..” என்று அவளுக்கு தனிமை கொடுக்க… சிறிது நேரம் அவளாக பயிற்சி எடுக்க ஆரம்பித்தவள்… சில நிமிடங்கள் கடக்க… திரும்பிப் பார்க்க… சிவா நிரஞ்சனா இல்லை… தனியே சற்று தூரத்தில் இருந்த ராகவ்வைத்தான் பார்த்தாள்… அவன் உர்ரென்று அங்கிருந்த கல் பெஞ்சில் அமர்ந்திருக்க… அவனிடம் ஏனோ விளையாட வேண்டும் போல் இருக்க…
“ஓய் ட்ர்ப்பிள் ஆர்…” என்று தான் இருந்த இடத்திலே இருந்து அழைக்க…
அவனோ அசையாமல் அப்படியே இருக்க… வேகமாக அவனருகே வந்தவள்… அவனை இடித்துக் கொண்டு அமர… அவன் முறைக்க
அருகில் இருந்த நட்ஸ் டப்பாவை திறந்தவள்… அவற்றை கையில் கொட்டிக்கொண்டு தன் வாயில் போட்டுக் கொண்டு கணவனுக்கும் நீட்ட… மறுத்து திரும்பிய… அவனின் பிடிவாதத்தை எல்லாம் கண்டு கொள்ளாமல் தூரப் போட்டவளாய்… அவன் வாயிலும் ஊட்டி விட்டவளாக
”இப்போ உனக்கு என்ன பிரச்சனை…” என்றபடியே கையில் வைத்திருந்த பூத்துண்டால் தன் முகத்தைத் துடைத்தபடியே… தண்ணீர் பாட்டிலின் மூடியைத் திறந்தாள்….
பதில் வந்தால் தானே… அவன் இவளோடு ஒழுங்காகப் பேசி.. முகம் கொடுத்து பேசி நான்கு நாட்கள் ஆகிறதே…
“நீ பேசாவிட்டால் என்ன… நானே பேசுகிறேன்… ” என்று தான் இந்த நான்கு நாட்களையும் அவனோடு ஓட்டிக்கொண்டிருக்கின்றாள்…
இப்போதும் அதையே தொடர்ந்தாள்…
“அன்னைக்கு கேட்டேல்ல… உங்கம்மா உன்னைப் பயந்து பயந்து வளர்த்ததுக்கு தற்காப்பு கலை கத்துக் கொடுத்திருக்கலாம்னு…. நீ எந்த நேரத்தில சொன்னியோ…” என்று தண்ணீரைத் தொண்டைக்குள் சரித்தவள்… அவன் தோள் சாய்ந்தபடி… அவனைப் பார்க்க…
அவனோ வெட்டவெளியை வெகு சிரத்தையாக பார்த்துக் கொண்டிருக்க… கடுப்பாக வந்ததுதான் சந்தியாவுக்கு… ஆனாலும் அதை மறைத்தபடி
“இப்போ எவனாச்சும் என் கிட்ட வாலாட்டினா… சுட்ற மாட்டேன்” என்று புருவம் உயர்த்தி நக்கலடித்து ஆரம்பித்தவளின் குரல் வேதனையோடு முடிய…. இப்போது அவளின் குரல் மாறுதலில் ரகு அவளைப் பார்க்க…
அவன் பார்வையைத் தாங்க முடியவில்லை… இவளுக்கு மட்டும் என்ன சந்தோஷமா என்ன… மனதுக்குள் ஆயிரம் சஞ்சலம் இருந்தும்…. அவனிடம் காட்டிக் கொள்ளாமல் இருக்கின்றாள்… அதுவே உண்மை…
சந்தியாவின் குரல் மாறுதலோ என்னவோ… ராகவ் தன் மௌனத்தைக் கலைத்தான் இப்போது
”சந்தோஷ் பேசினான் உன்கிட்ட பேசனுமாம்… ஈவ்னிங் பேசுறேன்னு சொல்லிருக்கான்…” என்றான் தகவலாக
சந்தோஷ் என்ற வார்த்தையில்…
“உண்மையிலேயே மிருணா எங்க வீட்ல இருக்காங்களா… நம்பவே முடியலை ரகு… கண்டிப்பா அவங்க வாழ்க்கைல நல்லது நடக்கும் பாருங்க… சீக்கிரமே மிருணா எங்க அண்ணா கூட சேர்ந்து வாழ ஆரம்பிப்பாங்க” என்று தன் அண்ணன் வாழ்க்கையைப் பற்றி ஆரம்பிக்க…
அவள் தான் பேசிக் கொண்டிருந்தாள்…
இவன் அமைதியாக இவள் பேச்சை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க….
“வசந்தி இப்போல்லாம் என் கூட அடிக்கடி பேசவே மாட்றாங்க.. மருமக வந்தபின்னால என்னைக் கண்டுக்க மாட்றாங்க” என்று தன் தாயைப் பற்றி தன்னவனிடம் குறை கூற..
“மருமகன் மேல அவ்வளவு நம்பிக்கை…. அவன் பார்த்துக்குவான்னு… ஆனால் நான் அவங்க நம்பிக்கையைக் காப்பாற்றலையே சந்தியா” ஆற்றாமையில் வார்த்தைகள் தளர்வாக வர… அவன் குற்ற உணர்ச்சியை இவளும் உணர…. அமைதியாக சில நிமிடங்கள் இருந்தவள்…
கையில் வைத்திருந்த துப்பாக்கியை சரி செய்தபடியே
“ரகு மாம்ஸ்… என்னை சின்ன வயசுல ஒருத்தன் சேறுல தள்ளி… தள்ளி மட்டும் விடல முக்கி எடுத்துட்டான்… ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன் அவனை… நீ பார்த்தேன்னா சொல்லு… போட்டுத் தள்ளிறலாம்…” அவனைக் குறி பார்த்தபடி சொல்ல… அவனிடம் விளையாட ஆரம்பிக்க
“ப்ச்ச்… கடுப்பைக் கெளப்பாதடி… நேரம் காலம் தெரியாமல்... அவனவன் இருக்கிற நிலைமைல...” என்று அவள் விளையாட்டில் நக்கலில் கலந்து கொள்ளாமல் எழ… அவனை நிறுத்திவைக்க இவள் நினைக்கும் போதே… அதே நேரம் காதம்பரி இவளுக்கு அழைக்க…
தன் சகோதரியின் அலைபேசி அழைப்பை ஏற்றபடி….
“இல்ல காது… அவருக்கும் பிஸி…. எனக்கும் பிஸி… டைமே கிடைக்கலை… கண்டிப்பாக வருகிறேன்…” என்று ஏதேதோ சொல்லி சமாளித்தவள் அவளிடம் பேசி விட்டு போனை வைத்து விட்டு திரும்பிப் பார்க்க… ராகவ் அங்கில்லை….
ராகவ்வை அவளால் சமாதானப்படுத்த முடியவில்லை… இரவில் தனிமை கிடைத்தும் கூட காலையில் இருந்து செய்யும் பயிற்சிகளால்… எப்போதடா கண்மூடுவோம் என்றுதான் இவளுக்கு தோன்றும்… ராகவ்வோடு வார்த்தை போராட்டமெல்லாம் பண்ணுவதற்கு இவளுக்கு சுத்தமாக சக்தி இல்லை…
சரி அவனாவது…. குறைந்தபட்சம் உடலளவில் இவளைத் தேடினால் கூட இவளும் அவனோடு இணங்கியிருப்பாள்.. அதற்கும் வழியில்லாமல் என்னவோ வாழ்க்கையே முடிந்து விட்டது போல துக்கத்தில் மூழ்கி இருப்பவன் போல இருப்பவனிடம் என்ன சொல்லி இழுப்பது... எப்போது பார்த்தாலும் போனை இல்லை லேப்டாப்பைக் கட்டிக் கொண்டு இருப்பான்… இரவில் அப்படி என்றால் பகலில் சிவா நிரஞ்சனாவோடு பேசிக் கொண்டிருப்பான்…. அதிலும் நிரஞ்சனாவோடு இவன் பேசுவதைப் பார்த்தாலே பற்றிக் கொண்டுதான் வரும்…
பொறாமை எல்லாம் அதில் இல்லை…
“என்னோடு பேச மட்டும் தொரைக்கு வார்த்தையே வராது.. எல்லாத்துக்கும் காரணமான அவகிட்ட மட்டும் நல்லா பேசுடா”
மனதினுள் மட்டுமே தன்னவனுக்கு அர்ச்சனைகளை கொட்ட முடிந்தது… பெருமூச்சோடு உள்ளே போனபோது…. சிவா.. ராகவ் நிரஞ்சனா மூவர் கூட்டணி இவளைப் பார்க்க…
சிவா அவளிடம்…
“சந்தியா நாளைக்கு… உனக்கு அதீனா மாதிரி ஹேர் ஸ்டைல் மாத்தனும்… நீ எனக்கு சந்தியா மாதிரி தெரியக்கூடாது.. இனி…அப்பியரன்ஸ்லயும் நீ மாறனும்…” என்றபோதே அவன் என்ன சொல்ல வருகிறான் என்று அவளுக்கு புரிய…
இத்தனை வருடமாக வளர்த்த கூந்தல்… இனி இருக்கப் போவதில்லை நினைத்த கனமே கண்ணீர் அவளையுமறியாமல் வழிந்தது… சந்தியாவும் அவளது நீண்ட கூந்தலும் இரட்டைப் பிறவிகள் மாதிரி… இன்று யாருக்காகவோ… தன் கூந்தல்லை இழக்கம் போகிறோமா.. இதோ நான் வரப் போகிறேன் என கண்களில் நீர் குளம் கட்ட ஆரம்பிக்க… அதற்கு அங்கு நிற்க முடியாமல் அறைக்குள் போக…
அவள் கலக்கம் புரிந்த ராகவ்வும் அவள் பின்னாலேயே சென்றான்…
உள்ளே நுழைந்த போது கூந்தலை அவிழ்த்து விட்டவளாக தன்னையே கண்ணாடியில் பார்த்தபடி நின்றபடி நின்ற மனைவியைப் பார்த்து ஒன்றும் சொல்லாதவனாக…. அமைதியாக கட்டிலில் அமர்ந்திருக்க… அவன் வந்தது உணர்ந்தவள்… அவன் ஏதும் சொல்லாமல் இருக்க… வந்தவன் தன்னை ஆறுதல் படுத்துவது போல ஏதாவது பேசுவான் என்று நினைக்க… அவனோ அமைதியாக இருக்க… இருந்த கோபத்தை… தன் இயலாமையை எல்லாம் ராகவ்விடம் காட்டினாள்..
“டேய்… நாளைக்கு ஹேர்கட் பண்ணப் போறாங்களாம்.. உனக்கு கவலையே இல்லையா… எனக்கு கஷ்டமா இருக்குடா…. மண்ணு மாதிரி இருக்க” அவனிடம் மல்லுக் கட்டியவளிடம்….
“இதுல என்ன இருக்கு… அதினாவா மாறனும்னா.. இதுவும் அதுல வரும் தானே…” சர்வ சாதரணமாக இவன் சொல்ல…
திகைத்துப் பார்த்தாள் அவனை நிமிர்ந்து… கண்ணீருடன்…
“லாங் ஹேர் இல்லாத நான்” நினைவே அப்படி கசக்க… தன் அடையாளமே தன்னிடமிருந்து போகப் போகின்றது… இவனுக்கு வருத்தமில்லையா… கோபமும் வருத்தமும்… ஒன்று சேர… அவன் முன் நின்றவள்… அவன் தோளை உலுக்கியபடி
“உனக்கு… என்னை அப்படி பார்க்க முடியுமா ரகு… உன் நினைவிலும்… கனவிலும்… உன் சகியா… எப்டிடா பார்ப்பா இனி” அவள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்க..
“உனக்கு வேணும்னா ஃபிசிக்கல் அப்பியரன்ஸ் முக்கியமா இருக்கலாம் சந்தியா… என்னை மீசை வைக்கச் சொன்னது அந்த மாதிரி எனக்குள்ள நீ ஒரு அடையாளத்தை தேடலாம்… ஆனால் எனக்கு நீ எப்படி இருந்தாலும் என் சந்தியாதான்… என் சகிதான்... அதுனால எனக்கு இதெல்லாம் பெருசாபடலை… ஒகே இப்போதும் ஒண்ணும் பிரச்சனை இல்லை… உனக்குப் பிடிக்கலைனா…. நாம இங்கேயிருந்து போயிறலாமா சந்தியா” என அவளின் உணர்ச்சி வசப்பட்ட அந்த சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக் கேட்க
சந்தியாவோ சட்டென்று மாறினாள்… தன் கண்களைத் துடைத்தபடி
”நாளைக்கு எத்தனை மணிக்கு ஹேர்கட் பண்ணனும் ரகு….” என்றவளிடம் முறைத்தபடி கோபப்பட்டு எழ… அவனை எழ விடாமல்
“எனக்கு என் புருசனை விட மத்ததெல்லாம் முக்கியமில்லை… ஆனாலும்.. இந்த முகத்துக்கு மீசைதான் நல்லா இருக்கு” என்று அவன் கையைப்படித்து இழுக்க... ராகவ்வோ கையை உதறி விட்டு வெளியேறி விட…
”நீ என்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது ரகு” என்று சிரித்தவளுக்கு… அவனின் வேதனை புரியாமலும் இல்லை…
---
கிட்டத்தட்ட இரவு ஏழு மணிக்கு…. சந்தோஷுக்கு அழைத்தவள்...
“அண்ணா வீடியோ கால் போடலாமா… இதுக்கப்புறம் நான் ரொம்ப பிஸி… எனக்கு ஒரு பெரிய ப்ராஜெக்ட் அசைன் ஆகி இருக்கு” என்றவளின் வார்த்தைகளுக்கு மறுக்காமல்… அவனும் தலையாட்ட…
மொத்த குடும்பமும் இருந்தது… கணேசனைத் தவிர…
எவ்வளவுதான் தந்தை மீது வருத்தம் இருந்தாலும்… சந்தியாவின் கண்கள் அவரையும் தேட…
“அப்பா எங்கம்மா” தாயின் மீது பார்வையைப் பதித்தபடியே கேட்க…
”அவரோட உலகம் தனி உலகம்… நீ என்ன புதுசா கேட்கிற” என்ற சந்தோஷின் அருகில் மிருணாளினி அமர்ந்திருக்க… அதையும் தன் கண்களில் நிரப்பிக் கொண்டாள் சந்தியா
இந்த இடைப்பட்ட நாட்களில் மிருணாளினியுடன் பேசினாள்தான்… இருவருக்குமே ஏனோ ஒரு வித ஒட்டாத பாவம் தான் இருக்கும்… என்ன முயன்றாலும் இவளாலும் அதைத் தவிர்க்க முடியவில்லை… மிருணாளினி கூட அவளிடம் சாதரணமாகத்தான் பேசினாள். சந்தியாவால் தான் முடியவில்லை…
இத்தனை வருடங்களாக அவளுக்குள் இருந்த மிருணாளினி மீதான கண்ணோட்டத்தை அவ்வளவு சீக்கிரமாக மாற்றவே முடியவில்லை… திமிர் பிடித்தவள்… அவள் செய்வது மட்டுமே சரி என நினைக்கும் சர்வாதிகாரி… என்றெல்லாம் நினைத்து வைத்திருந்தது என இவளால் தான் அந்த பிம்பத்தை உடைக்க முடியவில்லை…
யோசித்துப் பார்த்தால்… மிருணாளினி தன்னை விட நல்ல பெண்ணாகவே தோன்றினாள்… போன் செய்யும் போதெல்லாம் மருமகளைப் பற்றி புகழ்மாலை சூட்டுவதுதான் வசந்திக்கு வேலை… மிருணாளினியைப் பற்றி தாய் சிலாகித்தபோது… ஏனோ பொறாமை எல்லாம் வர வில்லை… தான் இல்லாத இடத்தில் தன் தாய்க்கு தோள் சாய்க்க இன்னொரு தோள் கிடைத்து விட்டது….
”ம்மா… அண்ணியப் பார்த்துகங்க… அவங்க நம்ம குடும்பத்துக்கு கிடைத்த கிஃப்ட்ம்மா” என்றாள் மிருணாளினியைப் பார்த்தபடியே… சந்தியாவின் வார்த்தைகளில் கண்கள் கலங்கின மிருணாளினிக்கும்… சந்தியாவுக்குமே…
அதே நேரம் அருகில் இருந்த தன் அண்ணனைப் பார்த்த மிருணாளினிக்கு… அவன் முகம் சரியே இல்லாதது போல்தான் தோன்றியது… இந்த மாதிரி அவள் தன் அண்ணனைப் பார்த்ததே இல்லை… எப்போதுமே… ஃப்ரெஷ்ஷாக… நீட்டாகவே இருப்பான்… இன்றோ வெறித்த பார்வையில்… மனைவி பேசுவதையும்… மற்றவர்கள் பேசுவதையும் பார்த்தபடி அமர்ந்திருந்த அவன் ஒட்டாத பாவனையில் ஏனோ மிருணாளினிக்கு நெருடலாக இருக்க
அதைக் கேட்டும் விட
”மீசை வளர்க்கிறதுனால இருக்கலாம் மிருணா” என்று தன் பதிலைச் சுருக்கமாக முடித்துக் கொண்டான்… பெரிதாக யாரிடமும் அவன் அளவாடவில்லை… கேட்டவர்களுக்கு விளக்கமும் சொல்லவில்லை என்றே சொல்ல வேண்டும்… இன்னும் சொல்லப் போனால் அவனுக்கு யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை… ஒரு வித மன அழுத்தத்துடன் தான் இருந்தான் என்றே சொல்ல வேண்டும்…
ஏனோ... தான் எதற்குமே தகுதி இல்லையோ… கட்டிய மனைவியை தன் கண்முன்னே பாதாளத்தில் தள்ளப்படுவதைக் கைகளைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறோமோ… சந்தியாவுக்கு ஏதாவது ஒன்று நடந்து விடுமோ… எதுவுமே சரியாகப் படவில்லை… என்னவென்று சொல்ல முடியாத ஏதேதோ நினைவலைகள்… சந்தியாவைத் தவற விட்டு விடுவோமோ… இந்த எண்ணங்களே ராகவ்வை சூழ ஆரம்பிக்க… கடனே என்று நாட்களை கடத்த தொடங்கி இருந்தான்…
தன்னை மீறிய ஒன்று… அவனைச் சுற்றி வளைக்க ஆரம்பித்து இருந்தது… தன் நினைவுகளில் இருந்து மீண்டவன் மீண்டும் அலைபேசியில் கவனம் வைக்க…
சந்தியா பேசிக் கொண்டிருந்தாள் அவன் தங்கையோடு
“அண்ணி… வாழ்க்கை ஒரு தடவைதான் நமக்கு வாய்ப்பு கொடுக்கும்… சந்தோஷை நான் சப்போர்ட்லாம் பண்ணல… உங்க மேல அவன் வைத்திருக்கிற காதலுக்காக ஒரே ஒரு தடவை வாய்ப்பு கொடுங்க அண்ணி…” என்ற போதே மிருணா பதில் பேசாமல் இருக்க…
சந்தியாவுக்கு அவளது மௌனம் கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருந்தது… இருந்தும் சமாளித்தவளாக… மற்றவர்களோடும் பேசி முடித்தவள்… வசந்தியிடம் ஏனோ அதிகமாகப் பேச்சை வளர்க்கவில்லை… எங்கே தன் தாயிடம் பேசினாள்... அழுது விடுவோம் என்றே தோன்ற… துக்கம் தொண்டையை அடைத்தது.. எப்படியோ பேசி முடித்தவள்… இனி வீடியோ காலுக்கு வர மாட்டேன் என்று மீண்டும் மீண்டும் நினைவு படுத்திவிட்டுத்தான் வைத்தாள்…
அடுத்து சுகுமார் யசோதாவுக்கு அழைத்துப் பேச… ராகவ் அப்போதும் வேடிக்கை மட்டுமே பார்த்தான்… சுகுமாருக்குமே தோன்றியது மகன் முகமே சரியில்லை என்பது போல…
இருவருக்கும் ஏதாவது பிரச்சனையோ என்றே தோன்றியது… சந்தியாதான் ராகவ்வோடு திரும்பி திரும்பி பேசிக் கொண்டிருந்தாளே தவிர… ராகவ் சந்தியாவோடு சேர்ந்து இவர்களோடு பேசவே இல்லை… என்னவென்று கேட்டாலும் பதில் ஒழுங்காக வராமல் போக…
“இது தன் மகனே இல்லை” என்றே தோன்றியது…
சந்தியாவிடம் அதைப்பற்றி கேட்க… சந்தியா ஏதேதோ சொல்லி சுகுமாரை சமாளித்தும் விட்டிருக்க…
அடுத்து திவாகரோடும் அவர்கள் குடும்பத்தோடும் அரட்டை அடித்தவள்… காதம்பரியையும் கான்ஃப்ரென்ஸ் காலில் போட ஆரம்பிக்க… ராகவ் அந்த அரட்டையில் எல்லாம் கலந்து கொள்ள வில்லை… அறைக்குள் போய் விட்டான்..
அத்தனை பேரிடமும் பேசி முடித்தவளுக்கு… ஒரு திருப்தி வந்திருந்தது இப்போது…
ஆனால் அதே நெரம் ராகவ் மேல் கோபம் கோபமாக வந்தது… அத்தனை பேரும் அவன் முக மாற்றத்தை நன்றாகவே உணர்ந்திருந்தனர்.. சிரிப்பதற்கு கூட ராகவ் காசு கேட்பான் என்பது போல இருந்த ராகவ்வைப் பார்த்து வேறென்ன கேட்பார்கள்…
“இவள் என்ன சாகவா போகிறாள்… ஒரு பத்து நாள் அதிகபட்சம் ஒரு மாதம் இங்கிருக்கும் சிறைச்சாலையில் நாட்களைக் கடத்தப் போகின்றாள்… சிவா சார் இருக்கும் போது பயமே இல்லை.. அந்த சிறைச்சாலை அவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது இந்த ராகவ் ஏன் இவ்வளவு சீன் போடுகிறான்” என்றே தோன்றியது…
“அப்படியே மாட்டினாலும்.. சிவாவுக்குத்தான் பெரிதான பிரச்சனை… இவளுக்கு பெரிதாக இல்லை…”
என்று தனக்குள் எண்ணியவளை அந்த வீட்டின் பூத்திருந்த முல்லைப் பந்தல் கவனத்தை ஈர்க்க… அதன் நறுமணம் அவளின் எண்ணத்தை ராகவ்வின் மனைவியாக மாற்ற ஆரம்பிக்க… வேகவேகமாக அங்கு பூத்திருந்த மலர்களை பறிக்க ஆரம்பித்திருந்தாள்…
சிவா அன்று வீட்டில் இல்லை… வேலை இருக்கிறது என்றும் இன்று தான் வீட்டிற்கு வரமாட்டேன் என்று மாலையிலேயே சொல்லிச் சென்றிருக்க…இரவு மணி எட்டாகி இருக்க கணவன் மனைவி இருவருமாக சாப்பிட ஆரம்பிக்க..
அப்போது கூட ராகவ் இவளோடு பேசவில்லை..
சாப்பிட்டு விட்டு அறைக்குப் போய்விட்டான்…
“போடா போ… “ என்று முறைக்க மட்டுமே முடிந்தது இவளால்… அதன் பின் இவளும் சிவா சொன்ன விசயங்களை… காட்டிய போட்டோக்களைப் பார்த்து… என்ன செய்ய வேண்டுமென்று படிக்க ஆரம்பித்தாள்…
மணி பத்தடிக்க.. அறைக்குள் சென்றவளை நிமிர்ந்து கூட அவள் கணவன் பார்க்கவில்லை…
முறைத்தபடியே… தன் உடைகளை எடுக்க ஆரம்பித்தவள்… எடுத்த உடைகளை எல்லாம் வேண்டுமென்றே கட்டிலில் போட்டுவிட்டு… குளியலறை நோக்கிப் போக…
பின்னாலிருந்து விரல் சுண்டி அழைக்கும் சத்தம் கேட்க… கணவனைத் திரும்பிப் பார்க்க.. அவனோ படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து விழிகளை அகற்றாமல் இருக்க… சத்தம் கேட்டதுதானே என்று சந்தியா யோசிக்க ஆரம்பித்து இருந்தாள்…
“இதையெல்லாம் விட்டுட்டு… குளிக்கப் போனா… என்ன அர்த்தம்” என்று அவளைப் பார்க்காமல் கட்டிலைப் பார்த்து.. அங்கிருந்த உடைகளைப் பார்த்துக் கேட்க…
இடுப்பில் கை வைத்து முறைத்தாள் சந்தியா… வேண்டுமென்றே தான் போட்டு விட்டு போனாள்… இருந்தும் வாதாடாமல்….
“மறந்துட்டேன் ரகு… இப்போ என்ன… எடுத்துக் கொடுக்கச் சொன்னால் நீ எடுத்து தர மாட்டியா என்ன” என்ற போதே…
“தர மாட்டேன்” என்று சுள்ளென்று வார்த்தைகள் இவனிடமிருந்து விழ…
கடுப்பாக டவலை மட்டும் எடுத்தவள் குளியலறை உள்ளே போக… எழுந்தவன்… அவளை தடுத்து நிறுத்தி…
”என்னை மயக்குறேன்… ட்ராமா போட்றேன்னு… லூசுத்தனமா இப்டியெல்லாம் பண்ணின… நான் ரசிப்பேன்னு நினைத்தாயா…. தொலச்சுடுவேன்…” என்று மட்டும் சொன்னவன் கண்களில்… அத்தனை ரவுத்திரம்…
இப்போது இவளுக்கும் தன்மானம் சுட்டுக் கொள்ள…
“ட்ராமாவா… ஓ சார் நம்ம ஃபர்ஸ்ட் நைட்ல போட்டது என்ன... அதுக்கு பேர் இண்டெலிஜெண்ட் ப்ளேங்களா சார்… நீங்க பண்ணும் போது.. ஐ மீன்… உங்கள கேவலமா காட்டி… எங்கள மிரட்டினது தெய்வீகம்னா… என் புருசன்கிட்ட நான் பண்றது ட்ராமாவா சார்….” என்றவளிடம்
“சந்தியா… முதல்ல ஒண்ணைப் புரிஞ்சுக்க…” என்ற போதே…
“அய்யா சாமி… வாசல் அந்தப் பக்கம் தான் இருக்கு… உங்களுக்கு மட்டும் தான் ஃபீலிங்க்ஸ்… ஃப்ளாஸ்க்லாம்” என்றவள்…
“எனக்கு இவ்வளவுதான் ரைமிங்க் வருது… உங்க அளவுக்கு எல்லாம் வராது… அதுக்கும் சேர்த்து பாடம் எடுக்க ஆரம்பிச்சு காதுல இருந்து இரத்தத்தை வர வச்சுறாதீங்க..”
என்ற போது… இவனுக்கும் சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டவன்…
“நீ என்னை உன் பக்கம் இழுக்க இவ்வளவுலாம் மெனக்கெட வேண்டாம்னு சொன்னேன்…” என்றபடியே அவளை தன்னருகே இழுக்க… படபடத்த அந்த கருவிழிகள் என்னும் கருந்துளை அவனை அவளுக்குள் இழுக்க ஆரம்பிக்க… வேகமாக தலையை உலுக்கிக் கொண்டவன்… வேகமாக வெளியே போக முயற்சிக்க…
இவள் அவனை இழுத்தபடி...
“ட்ர்ப்பிள் ஆர் வச்சுக்கிட்டு ஒரு ஆர்க்கு கூட லாயக்கு இல்லடா நீ” என்று அவனை விட…
“ஏய்” என்று சுட்டு விரலை நீட்டியவனிடம்….
“இனி நீ ட்ரிப்பிள் எஸ் தாண்டா நீ”
”சாமியார்… சந்நியாசி… சொதப்பல் மன்னன்” என்று அவனிடம் சொல்ல..
முறைத்தவன்… படாரென்று கதவை மூடியும் செல்ல…
“போடா போ… ரொம்பத்தான் சீன் போடற… எங்க போனாலும் என்கிட்ட தான் நீ வரணும்… அப்போ இருக்கு உனக்கு கச்சேரி…” என்று புலம்பியபடிதான் குளியலறைக்குள் நுழைந்தாள்…
ராகவ் அந்த முல்லைப் பந்தலின் கீழ்தான் இப்போதும் அமர்ந்திருந்தான்… முழுமதியாக வானில் பௌர்ணமி நிலா ஒளி வீசிக் கொண்டிருக்க... அவனுக்கோ… அந்த முழுமதி கண்களைக் கவரவில்லை… அதற்குப் பதிலாக இனி வரப் போகும் தேய்பிறை நாட்கள் நினைவிற்கு வர… முழுநிலவாக இன்று தன் அருகில் இருக்கும் தன் சகி.. தன்னிடமிருந்து மெல்ல மெல்ல விலகிச் செல்வதை அது ஞாபகப்படுத்த… விரக்தியில் கண் மூடினான்
வீசிய சில்லென்ற காற்றோ… அதில் இருந்து வந்து முல்லையின் சுகந்தமான நறுமணமோ எதுவுமே அவனை உள்ளிழுக்கவில்லை… அவனது எண்ணங்களையோ… இல்லை மனதையோ… எந்த சூழலும் மகிழ்விக்க வில்லை…. சந்தியாவைப் போல இந்த விசயத்தை அவனால் எளிதில் எடுத்துக் கொள்ளவே முடியவில்லை… சிவா அவளருகில் தான் இருக்கப்போகிறான் நிரஞ்சனா அவள் கூடவே தான் இருக்கப் போகின்றாள் என்றாலும்… ஏனோ மனதுக்குள் ஒரு வலி… அவனை சாதாரணமாக இருக்கவிடாமல் அவனைக் குடைந்து கொண்டே இருந்தது… கண்முன்னே தன்னவளை தீராத வேதனையில் தள்ளப் போகிறோமோ.. இதுதான் அவனுக்கிருந்த ஒரே எண்ணம்… அது தந்த வேதனை நாளுக்குள் நாள் அவனைக் குற்ற உணர்ச்சியில் தள்ளிக் கொண்டே இருக்க… அவனால் சிவா, நிரஞ்சனா இவர்களை முற்றிலுமாக நம்பி…சந்தியாவை அனுப்பி வைக்க முடியவே இல்லை… எதுவோ தடுத்தது… அதே நேரம் இந்த விசயங்களை எல்லாம் தடுக்க முடியாமல் தான் கைகட்டி நிற்பதும் ஆண்மகனாக, கணவனாக அவனுக்குள் அவனை நினைத்து அவமானமாகவும் உணர்ந்தான்…
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்திருக்க… அறைக்குள் போக நினைக்க… சந்தியா இந்நேரம் உறங்கி இருப்பாள் என்றே தோன்றியது… இரவு பகல் பாராத பயிற்சிகள்… படுக்கையில் படுத்த உடனே இவனது கைகளைப் பிடித்தபடி படுப்பவள் அடுத்த நொடியில் உறங்கி விடுவாள்… ஆனால் இவன் வரும் வரை விழித்திருப்பாள்… இவனைப் பார்த்துவிட்டுத்தான் உறங்குவாள்… இந்த நினைவு வர… மணியைப் பார்த்தவன்… வந்து ஒரு மணி நேரம் ஆகி இருக்க… எழுந்து தன் அறைக்குச் செல்ல..
அறைக்குள் நுழைந்தவனை… கொடியில் படர்ந்திருந்த போது… அவனை இழுக்காத முல்லைப் பூவின் வாசம்… தன்னவளின் கூந்தலில் வாசம் செய்து… அவள் வசம் இவனை இழுக்க… அந்த நறுமணத்தில் கணவனாகத் தடுமாற்றம் அடைய… கால்கள் பின்ன.. அறைக்குள் செல்லவே தயங்கினான் தான் ராகவ்… வெளியே போய் விடலாம் என்று யோசித்தாலும்…
ஆகாய வண்ண சார்ஜெட் புடவை அணிந்து, கண்ணாடியின் முன் அமர்ந்து அலங்காரம் செய்து கொண்டிருந்த மனைவியை பார்த்துவிட்டு வெளியே போகவும் மனம் இல்லை… ஆசை யாரை விட்டது….
ஆனானப்பட்ட விஸ்வாமித்திரரின் தவத்தையே கலைத்து சம்சாரி ஆக்கி மயக்கினாள் மேனகை… தன்னால் சம்சாரி ஆன தன் கணவனை மயக்கமாட்டாளா சந்தியா…
மயக்கினாள் தான்… அவள் புறம் இழுத்துவிட்டாள் தான்… இருந்தும் ராகவ் தனக்குள் சொல்லிக் கொண்டான்
அவளோடு பேசினால் தானே… வாக்குவாதம் பண்ணினால் தானே.. அடுத்தடுத்த நிகழ்வுகள்…
தன்னவளைக் கண்டும் காணாமல் தன் படுக்கையில் விழுந்தவன்… அவளைப் பார்த்தும் பாராமலும்… கண்களை மூடியவன்… அவள் தன்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை என்று புரியாமல் இல்லை.. அதையும் தன் சூழ்நிலைக்கு சரியாகப் பயன்படுத்திக் கொண்டான்… அவள்தான் தன்னைப் பார்க்கவே இல்லையே… நாம் நன்றாகவே பார்த்து வைப்போம் என்று….
இவனுக்கு மாறாக சந்தியா இவன் புறம் திரும்பக் கூட இல்லை… என்னவோ ஏதோ ஒரு விழாவிற்கு கிளம்புவது போல… அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் மிகத் தீவிரமாக…
அதைப் பார்க்கப் பார்க்க … ராகவ்வுக்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்து விட்டது… சந்தியா என்னும் மயக்கும் மோகினி.. நிச்சயம் தன்னை தாக்கப் போகிறாள் என்று… அவன் எவ்வளவு தூரம் தாக்குப்பிடிக்கப் போகிறான் என்றுதான் அவனுக்குத் தெரியவில்லை… யோசித்தபடியே அவளைப் பார்த்துக் கொண்டு இருக்க…
உதட்டுச்சாயத்தை எடுத்த சந்தியா அதை தன் உதட்டில் தடவியவள்… தீட்டிக் கொண்டே இருக்க… அது அவள் உதடுகளில் இன்னும் இன்னும் அடர்த்தியாக விரவ ஆரம்பிக்க… அவள் எடுக்கவே இல்லை… தீட்டிக் கொண்டே இருந்தாள்…
வித்தியாசமாகத் தோன்றியது ராகவ்வுக்கு… அதே நேரம்… அவளோ அதைக் கீழே வைக்கவேவில்லை… கண்ணாடியில் பார்த்தபடி இன்னும் இன்னும் தீட்டிக் கொண்டே இருக்க
“சந்தியா… ஏதோ சரியில்லை… ” என்று அவள் நடவடிக்கைகளில் தோன்றியது அப்போதுதான் ராகவ்வுக்கு… சட்டென்று வேகமாய் எழுந்தவன்… அவளருகே பதட்டத்துடன் வர… புருவம் உயர்த்தினாள் சந்தியா கேள்வியாக அவனை நோக்கி
ragu mana nilamai puriyuthu. sandhiya ethuku ma risk edukura. thevai illathathu.
Pls save Sandhiya.... Ragu is the perfect husband.... U r living in this story praveena dear.... Perfect thoughts about ragu s situation.... Update soon dear...
சிவாவால் அதீனாவையே அந்த கயவய்களிட்ம் இருந்து காப்பாற்ற முடியவில்லை சந்தியாவை எப்படி காப்பாற்றுவது.ராகவ் இந்த ஏற்பாட்டிற்கு எப்படி இண்ங்கினான்.சந்தியா ஏன் இவ்வளவு தைரியமாக முடிவெடுத்தாள்