அத்தியாயம்:51- 3
இருவருமே மௌனமாக இருக்க… ஒரு மாதிரியான கனத்த சூழ்நிலை… மனைவியை வீட்டை விட்டு அனுப்பிவிட்டு… இப்போது இந்த மாதிரியான பயணம்… அது தந்த குற்ற உணர்ச்சி ராகவ்வை அமைதியாக்கி சாலையைப் பார்த்தபடி வாகனத்தை ஓட்டி வரவைக்க… சந்தியாவுக்கோ என்ன சொல்லி அவனைத் தேற்றுவது எனத் தெரியாமல் வெளியே வேடிக்கை பார்த்தபடி வர…
இருந்தும் மௌனம் அங்கு உடைபட வேண்டுமே… சந்தியாதான் ஆரம்பித்தாள்… அதிகாலைப் பொழுது ரம்மியமாக அவளை உணர வைக்க…
“பாட்டு பாடவா ராகவ்” என்று ஆரம்பிக்க…
ராகவ் இப்போது விழித்தான்… சந்தியா நிச்சயதார்த்தம் அன்று பாடிய பாடலை எல்லாம் நினைத்து…
ஏனோ அந்த பாடல்கள் எல்லாம் அவனுக்குப் பிடிக்கவில்லை… ஆனால் அதை இப்போது சொல்ல முடியுமா…
“சந்தியா நான் தூங்கனுமா…” என்று கேட்டு கண் சிமிட்ட
“ஹலோ… நான் எவ்வளவு பெரிய கர்நாடிக் சிங்கர் தெரியுமா… போடா போ… யாருக்காகவும் நான் பாட மாட்டேன்… உனக்காக பாடுகிறேன்… உன் பிறந்த நாளுக்காக பாடுறேன்னா… நீ கேலி பண்ற” என்று முறுக்கிக் கொண்டு காரின் கதவோரம் தள்ளி அமர்ந்தவளை…
சிரித்தபடியே தன்னருகில் மீண்டும் வரவைத்துக் அமரவைத்துக் கொண்டவன்…
“இல்லை சகி பேபி… இருக்கிற டைம்ல… உன் பாட்டைக் கேட்கவா… உன்கிட்ட பேசிட்டு வரவா” என்று அவள் மனதை நோகடிக்காமல் கேட்க… இப்போது அவள் கொஞ்சம் சமாதானமாக….
“நீ நம்ம வீட்டுக்கு வா… கச்சேரியே வை… நான்… கேட்கிறேன்” என்று கூசாமல் மனைவியிடம் பொய் சொல்ல… அவன் மனசாட்சியோ… அடப்பாவி… உன் ரசனைக்கு அவ கச்சேரியா வைக்கவா முடியும்… ஏதாவது ஒரு மேடையில ராப் சாங்தான் பாடனும்… என்று ஒரு பக்கம் கை கொட்டிச் சிரிக்க… அதை அடக்கியவன்…
”நாம பேசிட்டே வருவோம்.. ப்ளேயர்ல சாங் போடுவோம்” என்று அவன் சொல்லியபடி… அவன் ப்ளே லிஸ்ட்டைக் காட்ட… சந்தியா மயங்கி விழாத குறைதான்
அத்தனையும் ஆங்கிலப் பாடல்கள்…
“வ்வாக்” என்றே சொல்லி விட… இவனுக்கு இப்போது கோபம் வர…
“ஓய்…ஒவரா பண்றடி…” என்று முறைக்க…
“உங்களுக்கு எங்க சாங் தூக்கத்தை வரவழைக்கும்னு சொல்லும் போது ஓவரா தெரியலையா சார்” இவளும் போட்டி போட்டுக்கொண்டு முறைக்க…
“என்னடா இது… ஒரு பாட்டு கேட்க இவ்வளவு அக்கப்போறா” என்றிருந்தது ராகவ்வுக்கு… அதில் அவன் முகம் அதிருப்தியாக மாறாக..
“ப்ச்ச்” என்றான்… கடுப்பாக… ரோட்டைப் பார்த்தபடியே
சந்தியாவுக்கோ…
“ஒரு சாதரணப் பாடலுக்கே…இருவரின் ரசனைகளும் வேறு வேறு திசையில் இருக்க… இருவரும் சேர்ந்து வாழப்போகும் வாழ்க்கை” கண்ணைக் கரித்துக் கொண்டு வர… வேகமாக வேறு திசையில் திரும்ப… ராகவ்வுக்கு அவள் உணர்வுகள் புரிய… வேகமாக தன்னை மாற்றிக் கொண்டவன்…
“ஓகே ஓகே… உனக்கும் வேண்டாம்… எனக்கும் வேண்டாம்… எஃப் எம் போடுவோம்…. என்ன பாட்டு வந்தாலும்… கேட்போம்… இதுக்கு இவ்ளோ பிரச்சனையாடி…. டீல் ஒக்கேதானே” என்று சமாதானத்திற்கு வர… அப்போதும் சமாதானமடையாத முகமே அவளுக்கு…
“ஹப்பா” என்றிருந்தது அவனுக்கு…
முதன் முதலாக… கணவன் என்ற கதாபாத்திரம் கொஞ்சம் கடிமானதுதான் போல என்பது தோன்றத்தான் செய்தது… ஆனாலும் பயத்தை தர வில்லை… சிறு புன்னகையைத் தரத்தான் செய்தது… கணவன் மனைவி உறவு பற்றிய மீம்ஸ் எல்லாம் இப்போது ஞாபகத்துக்கு வர..
“பொண்டாட்டி திட்றப்போ… உம்முனும்… அடி வெளுக்கிறப்போ… கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனும் இருக்கும்” குறிப்பாக இந்த மீம் நேரம் காலம் தெரியாமல் ஞாபகம் வர அதில் முகம் இன்னும் புன்னகையில் மலர…
’ஆஹா ராகவ்… 100 சதவிகிதம் நீ ஹஸ்பெண்ட் ரோலோடோ பொருந்திட்ட போல… கடுப்பை எல்லாம் மறச்சுக்கிட்டு… பல்லை இளிக்கிற…’ தனக்குள் சொல்லிக் கொண்டவன்… அதே முகத்தோடு எஃப் எம்மை ஆன் செய்ய…
“உங்கள் அதிகாலை நேரத்தை ரம்மியமாக்க… இதோ இன்னொரு பாடல்… உங்களுக்காக… இளம் நெஞ்சே வா… எஸ்பிபி… சித்ரா குரலில்… …” என்ற குரலில்… ராகவ் சந்தியாவைப் பார்த்தான்.. உனக்கு ஒகேதானே என்ற பார்வை இருக்க…
அவளோ பேசாமல் இருக்க… பாடல் ஆரம்பித்தது…
“சிட்டுக் குருவியைப் போல் ரெண்டு றெக்கைகள் கட்டிக்குவோம்
வெண்திரை மேகங்களில் இனி முத்தங்கள் தந்துக்குவோம்
இளம் காலை நேரக் காற்றை கொஞ்சம் தேடி…
சிறு சோலைப் பூவின் தோளில் கொஞ்ச வா வா நீ…
இளம் காலை நேரக் காற்றை கொஞ்சம் தேடி…
சிறு சோலைப் பூவின் தோளின் கொஞ்ச வா வா நீ…
பாடலைக் கேட்ட ராகவ்வின் முகம் அஷ்ட கோணலானதை சொல்ல வேண்டுமா என்ன… இந்தப் பாடலைக் கேட்கும் அளவுக்கெல்லாம் பொறுமை இல்லாதவனாக…
“என்னடி…. கிண்டர் கார்டன் பசங்களுக்கு ரைம்ஸ் சொல்ற மாதிரி சிட்டுக்குருவி… றெக்கை கட்டிக்கோன்னு… எனக்கு இவ்வளவு பொறுமைலாம் கிடையாது…. நான் சேனலை மாத்துறேன்…” என்று பட்டனில் கைவைத்து மாற்றப் போக…
சந்தியாவோ வேகமாக கையைத் தட்டி விட்டு…”எஸ்பிபி சித்ராம்மா வாய்ஸ்… எனக்கு வேண்டும்” என்று அடம்பிடிக்க… வேறு வழியின்றி…. பாடலை நிறுத்தாமல் கடுப்பாக சாலையில் கவனம் வைத்தாலும் பாடல் வரிகள்… காதுகளில் வந்து விழுவதை நிறுத்த முடியுமா என்ன…
”கடலின் தோள் மீது குதிரை நாம் ஏறி…
அலையை இன்றும் என்றும் நாம் ஜெயிப்போமா
எதையோ சொல்லி சொல்லி ஏங்காதேம்மா”
கடல், அலை, குதிரை… வார்த்தைகள் காதுகளில் விழ… இவனுக்கு தலை உண்மையிலேயே வலிக்க ஆரம்பிப்பது போல் இருக்க… சந்தியாவைப் பார்க்க… அவளோ… இவனுக்கு மாறாக கண்களை மூடியபடி ரசித்துக் கேட்டுக் கொண்டு வந்திருக்க…
தலையிலடித்துக் கொள்வதைத் தவிர வேறு எதுவுமே பண்ண முடியவில்லை…
“கடவுளே ராகவ் இது உனக்கு வந்த சோதனையா” என்று நினைக்க ஆரம்பித்த அடுத்த நொடி… பாடல் தொடர்ந்து ஒலிக்க… ராகவ்வின் முகம் மெல்ல மெல்ல புன்னகையைத் தழுவியது… குறும்புடன்… கல்மிஷத்துடன் மனைவியைப் பார்த்தபடியே இருந்தான்… அவள் இப்போது கண்களைத் திறப்பாள்… என்று சர்வ நிச்சயமாக
“நிலவின் மடி மீது சரசங்கள் நாம் ஆடி…
இளமை எல்லை எங்கே நாம் பார்ப்போமா
அடடா அய்யோ அய்யோ தாங்காதம்மா..”
தழுவிய தாகங்கள் பாடட்டும் சங்கீதம்”
வார்த்தைகள் கேட்ட அடுத்த நொடி… சந்தியா பட்டென கண்களைத் திறக்க… திறந்தவள் ராகவ்வைத்தான் பார்த்து வைத்தாள்…
“வாடி வா.. என் பொண்டாட்டியே… மாட்டுனியா” என்ற செய்தி மட்டுமே ராகவ் பார்வையில் இருக்க
“ஹி ஹி… ரகு…உனக்கு பிடிக்கலைனா வேறு சாங் மாத்திக்கிலாம்” என்று வேகமாக இப்போது இவள் மாற்றப் போக…
வேகமாக இவள் கையைப் பிடித்தவன்..
“சேச்சேய்… என் பொண்டாட்டிக்கு பிடித்த பாட்டை விட எனக்கு மற்றதெல்லாம் பெருசா… எஸ்பிபி… சந்தியா… சித்ராம்மா சகி…” உல்லாசமாக கண்களைச் சிமிட்ட… கையை விடாமால் தன் கரத்தோடு சேர்த்து… கியரில் வைத்து விடாமல் பற்றிக் கொள்ள…
சந்தியாதான் இப்போது அவஸ்தையில் நெளிந்தாள்…. அடுத்தடுத்த வரிகளில்….
“சிறு சிறு தாளங்கள் சந்தோசம்..
எழுதிய மோகங்கள் சுகமாகும் இந்நேரம்
இதழ்களில் தாம்பூலம் சிருங்காரம்
விழி சிந்தும் செந்தூரம்… அதை முந்தும் உன் வேகம்
அந்த சொர்க்கம் இன்னும் யம்மா யம்மா போதாதம்மா”
“சிட்டுக் குருவியைப் போல் ரெண்டு றெக்கைகள் கட்டிக்குவோம்
வெண்திரை மேகங்களில் இனி முத்தங்கள் தந்துக்குவோம்
இளம் காலை நேரக் காற்றை கொஞ்சம் தேடி…
சிறு சோலைப் பூவின் தோளின் கொஞ்ச வா வா நீ…
“கேளு சகி…. இப்போத கேஜி ல இருந்து ஸ்கூல் போயிருக்காங்க… அடுத்து யூனிவெர்சிட்டிதான்… யூஸ் ஆகும் உனக்கு” என்று அவளிடம் உற்சாகமாக வம்பளக்க… சந்தியாவுக்கு வெட்கத்தில் கன்னம் எங்கும் சிவக்க… அந்த காருக்குள் எங்கு போவது… அவனிடமே தோள் சாய்ந்தாள் தன் வெட்கத்தை மறைக்க…
”குளிரில் தளிரோடு குலவும் வேளை…
கிளியைக் கிள்ளக் கிள்ளக் காயங்களே..
உறவை அள்ள அள்ள வாருங்களேன்
வயதில் அணைப்பெல்லாம் வளரும் வேளை…
ரதியும் மெல்ல அழைக்கின்றாளே
மதனின் கண்ணில் என்றும் மோகங்களே
தேகம் சூடாகும் மாயம் தான் என்னம்மா
கதவைத் திறந்திடு என் கண்ணம்மா
பருவத்தின் ஆவேசம் தீராது சின்னைய்யா…
பகலும் இரவானால் என்னைய்யா
அட இன்னும் என்னாகும் தடை இல்லை என்றாகும்
சின்ன முல்லைப் பூவில் எல்லை இல்லை வா வா ராஜா”
கிட்டத்தட்ட பாடல் முடிவடைந்திருக்க.. வெட்கத்தில் அவனில் தோள் சாய்ந்திருந்த அவனது சகிக்கோ இப்போதைக்கு அவனிடமிருந்து எழ மனம் இல்லை போல… இவன் எஃப் எம்மையும் அணைத்திருக்க… காரையும் நிறுத்தி இருக்க… அப்போதும் அவனது சகி… எழாமல் அவனோடு புதைந்திருக்க…
ராகவ்வுக்கோ… எங்கோ பறப்பது போல் உணர்வு…
“ம்க்கும்” என்று குரல் செறுமலில் கூட அவள் எழாமல் இருக்க…
“தேகம் சூடாகும் மாயம் தான் என்னம்மா
கதவைத் திறந்திடு என் கண்ணம்மா”
இவன் பாட ஆரம்பிக்க… பாடலை இவன் குரலில் கேட்ட நொடி… அதுவரை மயங்கி அவனிடம் சாய்ந்திருந்த சந்தியா… வேகமாக அவனை தள்ளி அமர்ந்து திரு திருவென்று விழிக்க.. அப்போதுதான் கார் நின்றிருந்ததே புரிய… ஆனாலும் அடுத்து என்ன செய்வது என்று மலங்க மலங்க விழிக்க…
புருவம் உயர்த்தினான்… அவள் விழி காட்டிய ஜாலங்களில்… குறும்போடு…
பின் … வெளியே கையைக் காட்டியபடி
”கதவைத் திறந்திடு என் கண்ணம்மா” என்று மீண்டும் பாடியபடியே… கை சைகையில் இறங்கச் சொல்ல…
சந்தியா இப்போது வெளியே பார்க்க… ஹைவேயில் அமைந்திருந்த பேக்கரியின் முன் நின்றிருந்தது கார்….
“சந்தியா… இப்படி சொதப்புறியேடி” தனக்குள் தன்னைத் தானே மகா கேவலமாகத் திட்டிக் கொண்டவள்… கணவன் முகத்தைப் பார்க்க முடியாமல்… கணவனுக்கு கேக் வாங்கப் போகிறேன் பேர்வழி என்ற பாசாங்கில் கடையை நோக்கிச் செல்ல…
“ஏய் இருடி… நானும் வருகிறேன்” என்று இவனும் அவள் பின்னால் வேகவேமாக ஓட…. அதன் பின் கேக் வாங்கி்யவர்கள்… மீண்டும் காரில் ஏறி… சற்று தூரம் தள்ளி வந்து யாரும் இல்லாத இடமாக காரை நிறுத்தி காரையும் விட்டு வெளியே இறங்கினர்…
இலேசான தூறல்… நேற்று மாலையில் ஆரம்பித்தது… இன்னும் விடவில்லை… ஈரக்காற்று என உண்மையிலேயே ரம்மியமான ஒரு அதிகாலைப் பொழுதுதான்… மணி கிட்டத்தட்ட அதிகாலை 4 மணி… வாங்கிய கேக்கை எடுத்தபடி காரின் முன்னே வந்தவள்… தன்னையே பார்த்தபடி நின்று கொண்டிருந்த கணவனை… பார்த்தும் பார்க்காமலும்… கர்ம சிரத்தையாக மெழுகுவர்த்தியை வைத்து…. அதை ஏற்றி… வெட்டுமாறு கத்தியை நீட்டச் சொல்லி நிமிர
அவனோ இப்போது தன் கேமராவில் வித விதமான கோணங்களில் படமெடுத்துக் கொண்டிருந்தான் தன் மனைவியை… தாங்கள் இருவரும் ஒளிச்சிதறலாக சேகரிக்கப்பட்டு இன்னொரு கேமராவின் கண்களுக்குள்ளும் களவாடப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று அறியாதவனாக…
தன் கணவனை நிமிர்ந்து பார்த்தவள்…. முறைப்புடன் கேமராவை வாங்கியவள்… அதை காருக்குள் போட்டபடி… அவனைக் கேக்கினை வெட்டச் சொல்ல… அவனும் இவளின் கரங்களை பிடித்து இருவருமாகச் சேர்ந்து வெட்டியபடி… கேக் துண்டை வெட்டி எடுத்து அவளுக்கு ஊட்டப் போனவன்… அவள் வாயருகே கொண்டு சென்று… முதலில் தராமல் போங்கு காட்டியவன்… முறைத்த சந்தியாவை தன்னருகே இழுத்து… அவள் வாயில் ஊட்டி விட்டவன்… அதே வேகத்தில் அவள் வைத்திருந்த அந்த கேக்கின் மறு முனைப் பாதியை தனதாக்கி… சாப்பிடவும் ஆரம்பித்தவன்… அவளை விடாமல் தன் கைவளைவில் வைத்தபடி… அடுத்த துண்டை அவளிடம் கொடுத்து தனக்குக் கொடுக்க வைத்தவன் தான் முதலில் செய்த வேலையை அவளையும் செய்ய வைக்க… முதலில் வெட்கப்பட்ட சந்தியா… அதன் பின் ஏனோ பெரிதாக மறுக்க வில்லை…. மறுக்கத் தோன்ற வில்லை என்பதே உண்மை…
அவனுக்குள் கரைய… அவன் சொன்னவற்றை எல்லாம் செய்யச் சொல்லி… ஹார்மோன்கள் மட்டுமே ஆட்டம் ஆடிக் கொண்டிருக்க… மூளை சொல்வதெல்லாம் உணரும் மன நிலையில் சந்தியா இல்லை… அதே நிலையில் தான் ராகவ்வும் கூட இருந்தான்… எல்லாம் ஒழுங்காக நடந்திருந்தால்… இந்த ரோட்டிலா அவளைத் தன் கைவளைவில் வைத்திருந்திருப்பான்… தன் மனைவி தன் உரிமை… யாருக்காக அவனது உணர்வுகளை மறைக்க வேண்டும்… இப்படி ஒரு இடத்தில் மொத்தமாக தனது உரிமையை நிலைநாட்ட முடியாதுதான்… அதற்காக இதழ் கூட பதிக்காமல் மனைவியை எதிரில் வைத்து பார்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு நல்லவனெல்லாம் இல்லை… அதுமட்டுமல்லாமல் அவனுக்கு… அவன் பழகிய சூழலுக்கு… இது தவறாகவேத் தெரியவில்லை… இருவருமாக ஏதேதோ பேசியபடி இருந்தாலும்… அவனின் கைகள் தாராளமாக அவள் தேகத்தோடு பேசிக் கொண்டிருக்க… இதழ்களும் அவ்வப்போது தன் பணியைச் செய்து கொண்டிருந்தது கரங்களுக்குப் போட்டியாக
சந்தியா சில சமயங்கள் உணர்வுக்கு வந்து அவனைத் தடுத்தபடி பேசியபடி இருந்தாலும் ஒரு கட்டத்தில்… அவனை தடுக்காமல் அவன் போக்கிலேயே விட்டும் விட்டிருந்தாள்… இருந்தும் ஒரு கட்டத்தில் தன்னவன் எல்லை மீறுகிறான் என்பதை உணர்ந்தவள்… ராகவ்விடம் நேரடியாகச் சொல்ல முடியாமல்
”ரகு வாக் போகலாமா” என்று சிக்கித் திணறிய வார்த்தைகளில் சொல்ல… அவளைப் புரியாதவனா…
“காலுக்கு வேலை கொடுத்தா கை சும்மா இருக்கும்னு நினைக்கிறியா சந்தியா”என்று அவள் காதுகளில் கிசுகிசுத்தவன்… அவள் இடையில் கைவைத்து சில்மிசம் செய்ய… அவனை விட்டு முன்னே ஓடியவள்…
“பிடிங்க” என்று போக்கு காட்டியவளை…
“பிடிச்சா என்ன கொடுப்ப” என்று கேட்டபடி அவனைத் துரத்த ஆரம்பிக்க…. காரை விட்டு சற்று தூர வந்திருக்க…
இப்போது ராகவ்
”குளிரில் தளிரோடு உலவும் வேளை…
கிளியைக் கிள்ளக் கிள்ளக் காயங்களே..”
பாடியபடியே அவளைச் சீண்டியவனுக்கு… அடக்கப்பட்ட சிரிப்பில் இலேசாக அவன் உதடுகள் துடிக்க… தன்னவளைப் பார்த்து கண்சிமிட்ட
”நான் போறேண்டா… நீ இப்படி டீஸ் பண்ணிட்டே இருந்தா நான் கிளம்பிடுவேன்” வெட்கமும்… நாணமும் போட்டிபோட முகம் சிவக்க சொன்னாலும்… விடாமல் அவளிடம் வம்பிழுத்தான் அவன்
“சகியும் மெல்ல மெல்ல அழைக்கின்றாளே” அவளிடம் குனிந்து கிறங்கி… இவன் பாட…
பாடும் போது.. ‘ரதி’ என்ற சொல்லை ‘சகி’ யாக மாற்றி இருந்தான்…
இனி… இவனிடம் பேசி பிரயோஜனமில்லை என்பதை உணர்ந்தவளாக… அமைதியாக வந்துகொண்டிருந்தாள் வேறு வழி இன்றி.. அவன் சீண்டலில் பொய்க்கோபம் காட்டியபடியே…
இப்போதுதானே அந்தப் பாடலைக் கேட்டான்… அதற்குள் வார்த்தைகளை எப்படி மனப்பாடம் பண்ணினான்
பெரிய சந்தேகம் சந்தியாவுக்குள் வந்திருக்க… அது அவனுக்கும் புரிந்திருக்கும் போல
“யூனிவெர்சிட்டி ரேங்க் ஹோல்டெர் சகி பேபி…. “ என்றவன்..
அவள் இதழ் சுளிக்க… அதைத் தாளாது அவளின் இவன் இதழில் கை வைக்கப் போக… சட்டென்று கைத்தட்டிவிட்டவளிடம்,
அவளைச் சுட்டிக் காட்டி…
“ஹ்ம்ம்… இந்த யூனிவெர்சிட்டில என்ன வாங்கப் போகிறேனோ… இந்த அப்பாவிபையனை பார்டர் மார்க்லயவாது தேத்தி விட்ருடி… பாட்டெல்லாம் பாடி இருக்கேன்” போலியாக பயப்படுகிறவன் போல பெருமூச்சு விட்டவனை… பார்த்து முறைக்க முயன்று முடியாமல்
சந்தியா இப்போது மணியைப் பார்க்க… மணி 5.00 எனக்காட்ட… உள்ளுக்குள் இப்போது உதறல் எடுத்தது சந்தியாவுக்கு… ஆறு மணிக்குள் வீட்டுக்கு செல்ல வேண்டும்… பயம் வந்திருக்க….
கணவனின் சீண்டலாவது கிண்டலாவது… எல்லாவற்றையும் விட்டு விட்டு… ராகவ்விடம் சொல்ல… அவனுக்கோ அவளை விட்டுச் செல்லவே மனம் இல்லை… இருந்தும் தங்கள் நிலை அவனுக்குத் தெரியாதா??…
திரும்பி காரை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தனர்… அதுவரை இருந்த உல்லாச மனநிலை எல்லாம் மாறியபடி… கனமான மனதோடு இருவருமாக கரம் கோர்த்தபடியே வந்து கொண்டிருக்க… இப்போது தூறல் இன்னும் அதிகமாக… காற்றும் வேகமாக அடிக்க ஆரம்பிக்க… சந்தியாவுக்கு குளிரெடுக்க ஆரம்பித்திருந்தது…
அந்தக் குளிரில் நடுங்கிய உடலை சமன்படுத்த கரங்களை கட்டிக் கொள்ள நினைத்தவள்… ராகவ்வின் கரங்களுக்குள் அடைபட்டிருந்த கரங்களை விலக்க நினைக்க…
அவனோ அவள் கரங்களை விடாமல் இவளைக் கேள்விக்குறியாகப் பார்க்க… அப்போதுதான் சந்தியா குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதே இவனுக்கு விளங்க… வேகமாக தான் அணிந்திருந்த ஜெர்க்கின் ஜாக்கெட்டை அவளுக்கு அணிவித்தவன்… இப்போது அவள் கரங்களை மீண்டும் தனக்குள் கொண்டு வந்திருந்தான்…
அமைதியான நிமிடங்களாகவேதான் இருவரும் கடந்தனர்… காரின் அருகே வரும் போது…
”சந்தியா… நம்ம வீட்டுக்கே போயிறலாமா சந்தியா… உன்னை விட்டு பிரிஞ்சு இருக்கிறது இவ்வளவு கஷ்டமா இருக்கும்னு எனக்குத் தெரியலை சந்தியா” எங்கோ பார்த்தபடி சொன்னவனைப் பார்க்க சந்தியாவுக்கே பரிதாபமாக இருக்க… இருந்தும்
”ரகு… உனக்கு என்னைப் பிடிக்க ஆரம்பித்து இரண்டு வாரம் இருக்குமா… உனக்கே இப்படினா… சந்தோஷை நினைத்து பார்… பார்க்க முடியலை ரகு…”
அவளுக்கு பதில் சொல்லவில்லை ராகவ்… மௌனமாகவே வந்தான்… காதலை, தன் உணர்வுகளை நேர எல்லைகளை வைத்து அளந்தவளிடம் என்ன சொல்லி புரிய வைப்பது… வாக்குவாதம் செய்ய பிடிக்கவில்லை… விட்டு விட்டான்.
அதன் பின் காரில் இருவருமாக ஏற… அவனின் உம்மென்ற இந்த முகம் அவளுக்கு பிடிக்காமல் போல
“ஹலோ ரகு மாம்ஸ்… இது என்ன இப்படி ஒரு ரியாக்ஷன்… மார்னிங்… டான்னு உன் ஆஃபிஸ்ல 10 மணிக்கு வந்து நிற்கப் போகிறேன்” என்று அவன் கேசத்தைக் கலைத்து விளையாட… இவனும் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியவன்
“அதுசரி…. உன் ரகு மாம்சுக்கு பிறந்த நாள் பரிசு எதுவும் கிடையாதா… “ என்று காரைச் ஸ்டார்ட் செய்யாமல் அவள் புறம் திரும்பி அமர…
இவளோ திரு திரு வென்று விழித்தாள்…
”நான் தானே கேக் வாங்கினேன்…” இவளும் பொத்தாம் பொதுவாக சொல்லி வைக்க
”அது பரிசா…” எரிச்சலாகக் கேட்க
“உன் ஆஃபிஸ் வரும் போது வாங்கிட்டு வருகிறேன்” தட்டுத் தடுமாறித்தான் சொன்னாள் அந்த வார்த்தைகளை முடித்தபோது…
காரணம் அவன் பார்வை இப்போது அவளிடம் வேறு என்னவோ எதிர்பார்க்க.. திருமண முடிந்த நிமிடம் முதல் சற்று முன் வரை காட்டாத பார்வை… அது சொன்ன செய்தி… இவளுக்கும் இவள் தேகத்துக்கும் எப்படி சட்டென்று புரிந்தது… இவளுக்கு புரிந்து விட்டது என்பதை அவன் உணர்ந்த கணமே… தன் தேவை என்ன அவளுக்கு உணர்த்தி விட அவனுக்குள்ளும் வேகம் வர… அருகில் வர
சந்தியா சுதாரித்தாள்…
“ஹலோ… ஹலோ 24 கிஸ்… மார்னிங் ஃபர்ஸ்ட் கிஃப்ட்ல இருந்து இந்த காருக்குள்ள வருகிற வரை… அதுமட்டுமில்ல நான் கணக்குல கொஞ்சம் வீக்… கவுண்ட் அப்போப்ப விட்டுட்டேன்… இதுல இன்னும் கிஃப்ட்டா பாஸ் உங்களுக்கு…. ஓடிப்போயிருங்க… உதை” விரல் காட்டி எச்சரித்து விளையாட்டாக சிரிப்பாக சொல்லி முடித்தாலும்… உள்ளே படபடப்பாகத்தான் இருந்தது சந்தியாவுக்கு…
இருந்தும் சமாளித்து வைக்க… அவளின் சமாளிப்பைப் பார்த்து… அவனுக்குள் அப்படி ஒரு சிரிப்பு… இருந்தும் வெளிக்காட்டாமல்… ரோட்டைப் பார்க்காமல் இவளைப் பார்த்தபடியே… விழி அகற்றாது இருக்க….
சற்றுமமுன் குளிரில் நடுங்கிய சந்தியாவின் தேகத்தில் இப்போது திடீர் வெப்பம் வந்தது போல் இருக்க
கணவனின் அந்த ஒரு பார்வைக்கே… அது சொன்ன செய்திக்கே… அடி வயிற்றில் சிலிரென்ற உணர்வு தோன்றி அவளைக் கலங்கடிக்க ஆரம்பித்திருக்க… அவனைப் பார்க்காதது போல… மொபைலை ஆராய ஆரம்பித்திருக்க… தன்னைத் தவிர்க்கும் அவளின் அந்த அவஸ்தையான நிலை கூட ராகவ்வுக்கு பிடித்திருந்தது… இவன் இன்னும் இன்னும் அவளிடம் ஆழ புதைந்து கொண்டிருந்தான்… எழ மனமில்லாத ஆழப் புதைகுழியாக அவள் மனைவி தோன்ற.. அதில் இருந்து மீளவே முடியாமல் அப்படியே தொலைந்து போக நினைத்தான் தான்… முடியவில்லையே…
ஏக்கதுடன் ஆழப்பெருமூச்சை மட்டுமே விட முடிந்தது
தன்னை எப்படியோ சமாளித்து மீட்டெடுத்துக் கொண்டு…. புன்னகை முகத்துடன் காரை எடுத்தவன்…. அவள் தெருமுனையில் வந்து விடும் வரை… தன்னவள் முகத்தில் காட்டிய வர்ண ஜாலங்களை ரசித்தபடியே தான் வந்தான்…
இறங்கும் போது அவளிடம்… பின்சீட்டில் இருந்த புடவைப் பெட்டியை கொடுத்தவன்…
”என்னோட பேர்த்டேக்கு கிஃப்ட்…உனக்கு… ஆஃபிஸ் வரும் போது கட்டிட்டு வா” என்ற போது கூட அவன் முகத்தைப் பார்க்காமல் சரி என்று தலையாட்டியவளிடம்… தலையிலடித்துக் கொண்டவன்
“ஃபர்ஸ்ட் நைட்ல கூட இந்த வெட்கப்படலையேடி… “ என்று சீண்டியபடி புருவம் உயர்த்த… வேகமாக அவனிடம்
“அப்போ நீ நல்ல பையனா இருந்தா…. இப்போ நீயும் சரி இல்லை… உன் பார்வையும் சரி இல்லை“ என்று சொன்னவள்… சும்மா இருக்க முடியாமல்… அவன் மட்டும்தான் தன்னைச் சீண்டுவானா.. சந்தியாவின் வழக்கமான குணம் வந்து விட…
“ரகுவின் கண்ணில் என்றும் மோகங்களே” என்று கண்சிமிட்டியபடி அவன் தலை கலைத்தபடி… வேகமாகக் காரை விட்டு இறங்க காரின் கதவில் கை வைத்து திறந்தபடி இறங்கப் போக… அதே வேகத்தில் அவளைப் பிடிக்க அவள் புறம் வந்தவனுக்கு… கை எட்டாமல் போக… ஆனால் நல்ல வேளை அவன் அணிவித்த ஜெர்க்கின் அவனுக்கு உதவிக்கரம் நீட்ட… அதைப் பிடித்து இழுத்து அவளைக் காருக்குள் அடைக்க …
மீண்டும் அவள் காரை விட்டு வெளியே வந்த போதுதான் அவளால் மூச்சை நன்றாகவே வெளியே விட முடிந்தது…
அவள் திணறலை ரசித்தபடியே…
“25” ரவுண்டாக்கி விட்டேண்டி…. … அவளைப் பார்த்து கண்சிமிட்ட…
ஆளைவிட்டால் போதுமென்று புன்னகையோடும் வெட்கத்தோடும் அங்கிருந்து ஓடோடி வந்தவளுக்கு… தன் வீட்டை அடைந்த போதுதான் அவன் ஜெர்கினோடு வந்து விட்டோம் என்று தோன்ற.. தன்னவன் தன்னுடன் இருக்கின்றான் என்பது போன்ற தோற்றத்தை அது ஏற்படுத்த தனக்குள் இன்னும் இழுத்து இறுக்கினாள் அந்த ஜெர்க்கினை….
வீட்டருகே வந்தவளுக்கு இப்போதுதான் ஞாபகம் வந்தது… வெளியே ஏறி இறங்கும் போது எப்படி வந்தோமோ… மீண்டும் வீட்டுக்குள் போகும் போது அதே முறையில்தானே உள்ளே போக வேண்டும்… சுற்றி முற்றிப் பார்த்தாள்… இன்னும் அந்த தெருவுக்குள் ஆட்கள் நடமாட்டமில்லைதான் ஆனாலும்
இந்த கேட் ஏறி இறங்கனுமா… ஹையோ என்றிருக்க… தன் தாயிடம் சரண்டர் ஆகிவிடுவோமா என்று யோசிக்கும் போதே… வாசல் கேட் இலேசாக திறந்திருக்க…..
சந்தோஷ் வெளியே போயிருந்தவன் வந்துவிட்டான் போல… அவனிடம் எப்போதும் கேட் சாவி இன்னொரு செட் இருக்கும்…. ஆக அவளுக்கு அன்று நல்லகாலமாகிப் போக கேட் தாண்டிக் குதிக்கும் அவஸ்தை இல்லாமல் தன் அறைக்குள் வந்து சேர்ந்த பின் தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்… யார் கண்ணிலும் படாமல் மீண்டும் வீடு வந்து சேர்ந்த அன்றைய தினத்தில்
ஆனால் அன்றைய தினத்தின் நிம்மதியை… இன்றைய தினம் முற்றிலுமாக குலைத்திருந்தது…
கடைசியாக காரை விட்டு இறங்கிய போது இவளை எடுத்திருந்த புகைப்படம் இவள் முன் இப்போது… புன்னகையுடனும் வெட்கத்துடனும் இவள் முகம் இருந்த அந்தப் புகைப்படம்...இவளைப் பார்த்து இன்று கைகொட்டி சிரிக்க…தாங்க முடியாத வேதனையுடன் கண் மூடினாள்… இன்னும் என்னென்ன தாங்கள் இருவரும் பார்க்க வேண்டுமோ… நாளை என்ன வைத்திருக்கிறதோ என்று விளங்க முடியாதவளாக
Nice going