அத்தியாயம் 49-2:
/*வெண்ணிலாவை சிறையில் வைப்பதா வானம் என்ன வெளியில் நிற்பதா வீரமான நெஞ்சமில்லையா நெஞ்சில் இந்த வஞ்சியில்லையா*/
ஏர்போர்ட்டில் தன்னை அழைக்க வந்த நிரஞ்சனாவைப் பார்த்து… ஓடோடிப் போய்க் கட்டிக் கொண்டாள் சந்தியா….. பத்து நாட்கள்தான் ஆகி இருந்தன இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்து… ஏனோ நிரஞ்சனாவை பல வருடங்களாகப் பார்க்காதது போல… சந்தியா அவளது மகிழ்ச்சியைக் காட்டிக்கொள்ள… அவளது அன்பை பறிமாறிக் கொள்ள… ஆனால் நிரஞ்சனா அதை எல்லாம் ஏற்றுக் கொண்டு திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்தாள்…
அதிலும்… புதிதாக கட்டிய மஞ்சள் தாலியுடன்… அந்த பொலிவு மாறாமல்…. புதுப்பெண்ணின் பூரிப்பில் இருந்த சந்தியாவை காண உள்ளம் சந்தோஷத்தில்தான் திளைத்தது… ஆனால்… தான் அவளுக்கு செய்யப்போகும் துரோகம்… இதோ இந்த பூரிப்பை… இந்தப் புன்னகையை அவளிடமிருந்து பறிக்கப் போகிறதே… மனமெங்கும் குற்ற உணர்ச்சியுடன்… அவள் முகத்தைப் பார்க்க முடியாமல்… தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் சந்தியாவையும் அழைத்துக் கொண்டு… சிவாவின் வீட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள் நிரஞ்சனா…
நிரஞ்சனாவுடன் காரில் வரும் போது சந்தியா சந்தோஷமாக பேசியபடியே வந்தாள்… அந்த அளவு உற்சாகமாக வந்து கொண்டிருந்தாள்…
நிரஞ்சனாவின் ஒரு வார்த்தை பதில்கள் சந்தியாவுக்கு பெரிதாக வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை… நிரஞ்சனா எப்போதுமே அப்படித்தான்… பெரும்பாலான நேரங்கள் அப்படித்தான் இருப்பாள்… இன்றும் அது போலவே” என எடுத்துக் கொண்டாள் சந்தியா…
“ரகுவும் இன்னும் ஒன் வீக்ல வர்றாங்க ரஞ்சி” வெளியில் வேடிக்கைப் பார்த்தபடியே சந்தியா பேச ஆரம்பிக்க
”ஹ்ம்ம்” – என்று மட்டும் கேட்டுக் கொண்டாள் நிரஞ்சனா
”காதம்பரியைக் கூட பார்க்கலாம்னு சொன்னாங்க ரஞ்சி”… நிரஞ்சனா ஏதாவது கேள்வி கேட்பாள் என்றே நினைத்தாள்… ஆனால்
“ஓ” என்றதோடு இப்போது நிறுத்திக் கொள்ள… சந்தியாவும் அமைதியாக வர ஆரம்பித்தாள்… பின் திடீரென
“ரஞ்சி… ஏதாவது ஷாப் இருந்தா நிறுத்து… அம்மாக்கு ஏதாவது வாங்கிட்டு போகலாம்… ரகு சொல்லி அனுப்பினார்…” என்றவளிடம்…
”வேண்டாம்…” என்று பட்டென்று சொன்ன நிரஞ்சனா… சந்தியாவின் முக மாறுதலில்
“ரிலாக்சா போகலாம் சந்தியா “ சமாளிப்பாக முடித்தவளை இப்போது ஒரு மாதிரியாகப் பார்த்த சந்தியா….
“ஆர் யூ ஓகே… நிரஞ்சனா…. சாரி… சாரி… அம்மாக்கு உடம்பு சரியில்லாமல் இப்போதான் வீட்டுக்கு வந்திருக்காங்க…. நான் என்னடான்னா ஹேப்பி மூட்ல பேசிட்டு இருக்கேன்… ரகு கூட சொல்லிருக்கார்… அடுத்தவங்க என்ன மூட்ல இருக்காங்கன்னு பார்த்து பேசமாட்டேங்கிறேனு… ” என்று வருந்தியவளிடம்…
“இல்ல சந்தியா… கொஞ்சம் மூட் அவுட்” என்று நிரஞ்சனாவும் இயல்பாக பேச முயற்சிக்க… நிரஞ்சனா குரலில் இலேசாக மாற்றம் இருக்க… சந்தியா புருவம் சுருக்கி… அவளை முகத்தை நோட்டமிட… சந்தியவைப் பார்த்துக் கொண்டிருந்தவள் இப்போது வேறு திசை மாற்றி திரும்ப…
இப்போது சந்தியாவும் வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்தவள்…. அங்கொன்றும் இங்கொன்றுமாக பெரிய பங்களாக்கள் இருக்க… அவ்வளவாக வீடுகள் அந்த ஏரியாவில் கண்களில் படாமல் இருக்க
“ஏன் ரஞ்சி… உங்க வீடும் தன்னந்தனிக் காட்டுக்குள்ள தானா… ரகு மாதிரியே… இப்டி காட்டுக்குள்ள கட்டி வச்சுருக்க”
ஆக… சந்தியா பேசும் வாக்கியம் எல்லாம் ரகு என்ற சொல் வராத வாக்கியமே இல்லை எனலாம்…
நிரஞ்சனா அவளையே ஆச்சரியமாகப் பார்த்தவள்… ஒரு கட்டத்தில் கேட்டே விட்டாள்
“பத்து நாள்ல இவ்வளவு மாறிட்டியா சந்தியா…”
”முதலிலும் ரகுவைப் பற்றி சொல்லுவ, பேசுவதான்… ஆனால் இப்போ நீ ரகுன்னு ஒவ்வொரு தடவை சொல்லும் போதும் அதில அவ்வளவு காதல் தெரியுது” என்ற போது இப்போது நிரஞ்சனாவும் கொஞ்சம் இயல்பாக மாற…
கீழ் உதட்டைக் கடித்தாள்… வெட்கத்துடன் சந்தியா… அவள் எப்படி மறைத்தாலும் அவள் பூரிப்பை முகச்சிவப்பாக அவள் முகமெங்கும் பரவவிட…
“காதுவும் இதேதான் சொன்னா” என்றவள் நிரஞ்சனாவைப் பார்க்க முடியாமல் சிரிப்புடன் வெளியே வேடிக்கை பார்ப்பது போல திரும்பியவள்…
“சந்தியா… ஆக மொத்தம் ரகுன்னு சொல்லும் போதே டன் டன்னா வழியுற போல.. ரொம்ப முத்தித்தான் போயிருச்சு உனக்கு… மானம் போகுது” தனக்குள் குட்டிக் கொண்டவள்… அப்போதும் அடங்கவில்லை… ஏனோ ராகவ்விடம் பேச வேண்டும் போல் இருக்க… உடனே ராகவ்வின் எண்களுக்கும் கை போக… அப்போதும் அவன் எடுக்காமல் போக… விட்டுவிட்டாள்…
சில நிமிடப் பயணத்தில்…. சந்தியாவும் நிரஞ்சனாவும் டில்லியின் புற நகர் பகுதியில் இருந்த அந்த சிறு பங்களாவை அடைந்த போது…. சந்தியா சுற்றி முற்றி பார்த்தபடியே ஞே என்று விழித்தபடிதான் வந்து கொண்டிருந்தாள் நிரஞ்சனாவின் பின்னாலேயே..
கேட்டின் முன் இரண்டு பேர் நின்றார்கள்… சீருடையில் எல்லாம் அவர்கள் இல்லாததால் சந்தியா அவர்களை மேலும் கீழுமாகப் பார்த்தபடியே வந்து கொண்டிருந்தவள்…
“இதுதான் தான் உங்க வீடா… சூப்பரா இருக்கு… எனக்குப் பிடித்த முல்லைப் பந்தல்… ஆனால் இவ்ளோ பெரிய வீட்ல நீயும் உங்க அம்மாவும் மட்டும்தானா…. அப்போ நீ சென்னைல இருந்தப்போ அம்மா மட்டும் தனியா இருந்தாங்களா.. இவங்கள்ளாம் யாரு..” பல கேள்விகள்… அதையும் ஹஸ்கி குரலிலேயே சந்தியா கேட்க…
“ஹ்ம்ம்.. சொல்றேன் சந்தியா…” என்று தலை அசைத்தவளாக அழைப்பு மணியை அழைத்த… கதவைத் திறந்தவன் சிவாவாகவே இருந்தான்
கதவைத் திறந்த சிவாவைப் பார்த்த உடன் நிரஞ்சனா வேகமாக சல்யூட் அடித்து வைக்க… சந்தியாவோ கதவைத் திறந்தவனையும் நிரஞ்சனாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் புரியாத பார்வையாக..
”வாங்க வாங்க…” என்றவனின் பார்வை சந்தியாவின் மேலேயே நிலைத்திருக்க… அனிச்சையாகவே பார்வையை மாற்றினாள் சந்தியா…
நிரஞ்சனா தன்னைப் பற்றி அவனிடம் அறிமுகப்படுத்துவாள்.. இல்லை அவனைப் பற்றி தன்னிடம் அறிமுகப்படுத்துவாள் என்று நினைக்க…
ஆனால் கதவைத் திறந்தவன் அவனே…
”வெல்கம் சந்தியா.. ஆம் சிவா” என்று புன்னகையுடன் தன்னை அறிமுகப்படுத்தி வரவேற்க… சந்தியாவுக்கோ… ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தது
“இவன் தான்.. ச்சேய்… இவர்தான் சிவாவா” என்று தனக்குள் சொல்லிக்கொண்டவளாக…. என்ன சொல்வது என்றே தெரியாமல் தலை அசைத்து வைத்து தேமே என்று நின்றவள்…. நிரஞ்சனா உள்ளே செல்ல… வேறு வழி இன்றி சந்தியாவும் அவளோடு…. அவள் பின்னாலேயே போக… நிரஞ்சனாவிடம் என்னென்னவோ கேட்க வேண்டும் போல் தான் இருந்தது சந்தியாவுக்கு..ஆனால் சிவாவின் முன்பு பேச வேறு பயமாக இருந்தது…
ஆறடி உயரத்தில்… ஆஜானுபாகுவாக… கண்களில் ஒரு வித ஆராயும் பார்வை இருந்து கொண்டே இருக்க… சந்தியாவால் சிவாவைப் பார்க்கவே முடியவில்லை… இதில் எங்கு பேசுவது… நிரஞ்சனா இவனிடம் பேசும் போதெல்லாம்… காதல் மயக்கத்தில் வேறு லோகத்திற்கு போகிறாள் என்று நினைத்து கொண்டிருந்தவள் முதன் முதலாக எண்ணத்தை மாற்றிக் கொண்டவள்… சிவா மேல் கண்டிப்பாக நிரஞ்சனாவிற்கு காதல் கிடையாது என்பதை அந்த நொடியில் உறுதி செய்து கொண்டவளுக்கு… இது சிவா வீடு என்று அப்போதுதான் தோன்ற… சிவா வீட்டில் இவளுக்கென்ன வேலை… என்று அந்த எண்ணம் தோன்றும் போதே… வேகமாக வீட்டைச் சுற்றிப் பார்க்க… அவளுக்கு ஒன்றுமே புலப்படவில்லை
“வெயிட் பண்ணுங்க… நிரஞ்சனா சந்தியாவை கான்ஃப்ரென்ஸ் ரூமுக்கு கூட்டிட்டு போ… சந்தியா காஃபி இல்லை டீ.. இல்லை டிபன் சாப்பிடுறியா” என்க…
அவன் வந்ததிலிருந்து உரிமையோடு… ஏதோ நெடுநாள் பழகியவன் போல அவன் பெயரைச் சொன்ன விதத்தில் இப்போது சந்தியா நிமிர்ந்து பார்க்க… சிவா அவளைப் பார்த்துதான் சொல்லியிருப்பான் போல… இன்னும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க… சட்டென்று அவன் பார்வையிலிருந்து தன் பார்வையை விலக்கியபடி….நிரஞ்சனாவை பார்வை பார்த்தாள்…
இது சிவா வீடு என்றால்…. ஏன் இவள் தன்னிடம் சொல்ல வில்லை… சிவா வீட்டுக்குப் போகிறோம் என்று ஏன் சொல்லாமல் கூட்டி வந்தாள்…. என்னை ஏன் இங்கு கூட்டி வந்தாள்… உள்ளுக்குள் முரணான பல எண்ணங்கள் வரும்போதே கண்களில் இப்போது ஆராய்ச்சி வந்திருந்தது..
சிவாவின் குடும்ப புகைப்படத்தை அந்த வீட்டில் தேடியது அவள் கண்கள்…. திருமணமாகி விட்டது என்று சொன்னாளே…. மனைவி இறந்து போய்விட்டாள் ஆனால் இவருக்கு குழந்தை இருக்கின்றது என்று நிரஞ்சனா சொன்னாளே… கண்களால் குழந்தையை மட்டுமல்ல… அந்த வீட்டில் குழந்தை இருக்கும் தடத்தையும் தேடியபடியே…. சிவா காட்டிய அறைக்குள் பார்வையைப் பதித்தளுக்கு… முதன்முதலாக பயப்பந்து சுழள… தொண்டைக் குழிக்குள் எச்சில் விழுங்கவே சிரமப்பட… சிவா அவளின் தடுமாற்றத்தைக் கண்டு கொண்டவனாக…
“தண்ணி வேணுமா… சந்தியா… அதோ அங்க இருக்கு… நிரஞ்சனா சந்தியாவுக்கு தண்ணி எடுத்துக் கொடு” என்று சொல்லிவிட்டு… சமையலறை நோக்கிச் செல்ல…
தன்னைக் கூர்ந்து கவனிக்கும் அவனது பார்வை.. அதுமட்டுமின்று சிவாவின் அக்கறை வேப்பங்காயாக கசந்ததோடு மட்டுமின்றி…. எங்கோ இடிக்க… நிரஞ்சனாவைப் பார்க்க அவளோ வெறுமை சூழ்ந்த இயந்திர பாவையாக இருக்க… சந்தியாவுக்கு பயத்தில் தொண்டை வறண்டதில் உண்மையாகவே தாகம் வந்திருக்க….
வேகமாக... மேஜை மேல் இருந்த ஜக்கில் இருந்து தண்ணீரை எடுத்து தலையைச் சாய்த்து குடிக்கப் போக… சிவா சுட்டிக்காட்டிய அறையின் சுவர் இங்கிருந்தே தெரிய…. அதைப் பார்த்த அதிர்ச்சியில் அவள் இதயம் ஒருமுறை நின்றே விட்டது எனலாம்
சுவரில் ஒட்டப்பட்டிருந்த போர்டில்… இருந்த புகைப்படங்களையும் எழுத்துக்களையும் பார்த்து அப்படியே சமைந்து நின்றாள் சந்தியா…. உள்ளே போன தண்ணீர் கூட போக வழியின்றி தொண்டையை விட்டு வெளியேறி வந்து அவளை நனைத்திருந்தது…
அந்த அறைக்குள் அவளையுமறியாமல் அவள் கால்கள் செல்ல…
எங்கும் சந்தியாவின் புகைப்படங்கள்… அவளைச் சுற்றி அவளது குடும்ப உறுப்பினர்கள் என… ஹரி, திவாகர் என சுற்றியும் அவளைச் சேர்ந்தவர்கள்… அவளுக்கு அறிமுகமானவர்கள்…. கணேசன் வசந்தி… சந்தோஷ் மிருணாளினி… கடைசியாக ராகவ்… அவனின் ஒரு புகைப்படத்தில் பெருக்கல் குறியுடன் போடப்பட்டிருக்க… இன்னொரு புகைப்படத்தில் அவன் சாதனாவோடு பேசியபடி இருந்த போட்டோ… புரியாத விளக்கப் படங்களாக இருக்க… எல்லாவற்றையும் விட சந்தியாவின் முகத்தின் பகுதிகள் தனித் தனியாக வெட்டப்பட்டு ஒட்டப்பட்டிருக்க…
இதயம் பட பட வென்று அடிக்க ஆரம்பித்து இருந்தது சந்தியாவுக்கு…. கையில் இருந்த போனை அழுத்தமாகப் பற்றியவள் கண்கள் மேஜையில் பார்வையை பதிக்க… அதில் இருந்த கவரில் இன்னும் சில புகைப்படங்கள்… வேகமாக அங்கிருந்த கவரில் ஒரு கவரை எடுத்து… ஒரு புகைப்படத்தை எடுத்து பார்வை பதிக்க… பாதிப் புகைப்படம் வெளியில் வந்த போதே அதில் இருந்த பெண்ணை… அவள் இருந்த கோணத்தைப் பார்த்தவள்... அந்தப் பெண்ணின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல்…. கையில் தீப்பட்டாற்போல பதறி புகைப்படத்தை உள்ளே வைத்தவள்…
ஏதோ ஒரு பெண்ணின் அந்தரங்க புகைப்படம்… கைகள் நடுங்கியபடி அதற்கு மேல் பார்க்க முடியாமல்… கைகளில் இருந்த கவரை அப்படியே போட்டவள்… தான் மிகப்பெரிய ஆபத்தான சூழ்னிலையில் மாட்டி இருக்கிறோம் என்று புரிய… முதலில் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று படபடப்பாக வேகமாகத் திரும்ப… அவள் திரும்பிய வேகத்தில்… மேஜையில் இடிக்க… அந்த மேஜையின் ஒரு ஓரத்தில் இருந்த புகைப்படம் எல்லாம் கீழே விழ…. அதைப் பார்த்தவளுக்கு… இன்னும் இன்னும் அதிர்ச்சியே அவளுக்கு…
தான் எந்த அளவுக்கு நோட்டமிடப்பட்டிருக்கின்றோம்… இப்போது எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறோம்…. என்பது அதிலேயே தெள்ளத் தெளிவாக விளங்க.. மீண்டும் மீண்டும் கீழே கிடந்த புகைப்படங்களப் பார்த்தாள்…. நம்ப முடியாதவளாக… மூளை எதையுமே சிந்திக்க விடவில்லை…
அவளது திருமணத்தின் போது முந்தைய இரவில் எடுத்த புகைப்படம்…. அது கூட அவளுக்கு அதிர்ச்சி அளிக்க வில்லை…
ராகவ்வோடு அவனது பிறந்த நாளைக் கொண்டாட நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியே வந்து அவனது காரில் ஏறியது… கடைசியாக ராகவ்வோடு அவள் சென்ற போது இருந்த புகைப்படம்…. ஏர்போர்ட்டில் ராகவ்விடம் கையசைத்து சென்றது என… சமீபத்திய புகைப்படங்கள்…
தான் தான் மட்டுமே இவர்களது இலக்கு என்பது தெளிவாகத் தெரிய… இவர்களுக்கா… இவனுக்கா…. கால்கள் தள்ளாடியது சந்தியாவுக்கு… கண்கள் கலங்கியது தானாகவே…
நிரஞ்சனா தன்னை நன்றாக ஏமாற்றி இருக்கின்றாள்… இல்லை இல்லை நிரஞ்சனாவிடம் தான் நன்றாக ஏமாந்திருக்கின்றோம் என்று சந்தியாவுக்கு நச்சென்று புரிய…. இதற்கு மேல் இங்கு ஒரு நொடி கூட இருப்பது மிகப் பெரிய முட்டாள் தனம் என்று அங்கிருந்து வெளியேற நினைக்க… அதே நேரம்… இந்த இடத்தை விட்டு எப்படி போவது என்று கூட தெரியாது… பரவாயில்லை இங்கிருந்து வெளியேறி விட்டால்… முரளி மாமாவுக்கு கால் செய்தால் வந்து அழைத்துப் போகப் போகிறார் என்று முடிவு செய்தவளாக… வேகமாகத் திரும்ப சிவாவின் மேலேயே மோதி நிற்க… அதிர்ந்து பின் வாங்கினாள் சந்தியா… முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பி நின்றது உள்ளத்தில் ஏற்பட்ட அச்சத்தில்
“என்ன அவசரம் சந்தியா… போகலாம்… நிறைய விசயங்கள் பேசனும்” என்றபடியே… அங்கிருந்த சோஃபாவைக் கைகாட்ட
“உன்கிட்ட பேச எவ்வளவு வருசம்…“ என்றவன்…. சந்தியாவின் பயந்த விழிகளையும் படபடத்த தேகத்தையும் உணர்ந்தவனாக…
“சாரி சந்தியா… ரிலாக்ஸ்… நாங்க உன்கிட்ட பேசனும்… நீ பயப்படுகிற மாதிரி எதுவும் இல்லை…” என்ற போதே…
அவன் முன் முறைத்து நின்றவள்… அவனைத் தாண்டிப் போக எத்தனிக்க
“சந்தியா… சிவா சார் சொல்றதை முதலில் கேளு…” நிரஞ்சனா வேகமாக அவளிடம் வர…
அவளிடம் ஆள்காட்டி விரலை உயர்த்தியவள்…
கண்கள் கோபத்திலும்… ஏமாற்றப்பட்ட வேதனையிலும் சிவந்திருக்க… பேசவே முடியவில்லை என்றாலும்……
“ச்சீ… இனி ஒரு வார்த்தை நீ பேசுன… நீ எல்லாம்… ஒரு ஃப்ரெண்ட்னு உன்னை நம்பி வந்தேன் பாரு…”
“சந்தியா” என்று நிரஞ்சனா கலங்கிய விழிகளோடு அவள் கைகளைத் தொட….
சந்தியாவுக்கு வந்த கோபத்தில்… அவளையுமறியாமல்… நிரஞ்சனாவை அறையப் போக…சிவா வந்து இடையில் தடுத்தவனாக…
”சந்தியா.. கண்ட்ரோல்… அவ ஒரு போலிஸ் ஆஃபிஸர்…” அன்று அறையப் போன அவள் கைகளை பிடித்து நிறுத்த…
“என்னை விடுடா” என்று சந்தியா சிவாவையும் விட்டு வைக்காமல் மரியாதை குறைவாகச் பேச…
“ஏய்…” என்று திருப்பி அறையப் போனவன்… சந்தியாவின் மிரண்ட பார்வையில் தன்னையே சமாதானமாக்கிக் கொள்ள எத்தனிக்க…
“யாருடா நீங்கள்ளாம்…. என்னை எதுக்கு ஃபாளோ பண்றீங்க” என்ற போதே கையில் இருந்த மொபைல் இப்போது அதன் இருப்பை அவளுக்கு உணர்த்த…. வேக வேகமாக… தனது மொபைலை எடுத்து…. ராகவ்வுக்கு போன் செய்ய முயற்சிக்க… சட்டென்று பறித்த சிவா.. சந்தியாவின் மொபைலை தன் வசம் கையகப்படுத்தியவன்…
“சந்தியா… ஆர்ப்பாட்டம் பண்ணாத… நாங்க ரவுடிங்க இல்லை… உன்னை எதுக்காக இங்க கூட்டிட்டு வந்திருக்கிறோம்னு எங்களை சொல்ல விடு… நீயாக கற்பனை செய்யாத… முதல்ல பொறுமையா நாங்க சொல்றத கேளு…”
”இது இதெல்லாம் என்ன…. என்னை ஏன் இப்படி படம் படமா எடுத்து இங்க எதுக்கு ஒட்டி வச்சுருக்கீங்க…. எத்தனை வருசமா என்னை ஃபாளோ பண்றீங்க… இவள வச்சு என்னை இங்கயும் வர வச்சுருகீங்க… இது இதெல்லாம் பார்த்து நீங்க நல்லவங்கன்னு நம்பி நீங்க பேசறதை வேற கேட்கனுமா…… என்னை விடுங்க… என் போனைக் கொடுங்க நான் போகிறேன்” என்று தன் ஒட்டு மொத்த சக்தியையும் திரட்டி கத்த ஆரம்பிக்க…
நிரஞ்சனா … சந்தியாவிடம்….
“சந்தியா… எங்க கேஸுக்கு நீ தேவை சந்தியா… அதுனாலதான் உன்னைத் தேடி… “ தான் வந்த காரணத்தையும் அவளுக்கு ஹிந்தி சொல்லிக் கொடுத்த காரணத்தையும் வேக வேகமாகச் சொல்லி முடிக்க…
ஒற்றை விரலைக் காட்டி அவளை நிறுத்தியவள்… உதடுகள் துடிக்க…
“நீ மட்டும் பேசாத நிரஞ்சனா… என்கூட எப்போதுமே பேசாத… நம்பிக்கைத் துரோகி… என்னடி உனக்கு பாவம் பண்ணினேன்… நட்புன்ற வார்த்தைல என் மொத்த வாழ்க்கையையே பாழாக்க உனக்கு யார் ரைட்ஸ் கொடுத்தது… உன்னை...” என்றபடியே… அப்படியே மடங்கி அமர்ந்தவள்…
“சொல்லுங்க ஆஃபிசர் சார்… நான் என்ன பண்ணனும்… என்னை இத்தனை வருசம் பாளோ எதுக்கு பண்ணுனீங்க…” என்றவளின் வாய் வார்த்தைகளைப் பேசினாலும்…
கண்கள் அங்கிருந்த புகைப்படங்களைத்தான் மேய்ந்து கொண்டிருந்தன… அதிலும்… ராகவ் யாரோ பெண்ணிடம்… யாரோ ஒரு பெண் கூட கிடையாது… இவளும் பார்த்திருக்கின்றாள் அந்தப் பெண்ணை… அன்றொரு நாள் ராகவ் கன்னத்தில் முத்தமிட்ட பெண்… அன்று பார்ட்டியில் பார்த்த பெண்… பார்க்கும் போதே தெரிய…
ராகவ்வின் மேல் சந்தேகம் எல்லாம் இல்லை… இவளால் ராகவ்வும் இவர்களால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றான் என்பதே இவளுக்கு வேதனையைத் தர… தானாகக் கண்கள் கண்ணீரை உகுக்க… அப்படியே சிலையாக தரையில் அமர்ந்தவள் தான்… சிவா சொன்னதெல்லாம் காதுகள் மட்டுமே உள்வாங்கிக் கொண்டிருக்க…. எண்ணங்களோ ராகவ்விடம் மட்டுமே
வாழ்க்கை மீண்டும் அவளுக்கு மிகப்பெரிய எதிர்பாராத திருப்பத்தை கொடுத்திருக்க… உதடுகள் கடித்து வந்த அழுகையை அடக்கினாள்… இதுவரை தனக்காக.. தன் அன்னைக்காக மட்டுமே அழுது வந்த கண்கள்… அவளது ரகுவை நினைத்தும்… இவளுக்கு ஒரு சேதாரம் என்றால் அவனுக்கு மட்டுமே முழு இழப்பு… தாங்குவானா….சகி என்று காதலில் கசிந்து உருகும் அவன் வார்த்தைகள் காதில் இப்போதும் விழ… கண்கள் கடகட வென நீரை உகுக்க…
“என்னால முடியாது சிவா சார்…. என்னை விட்ருங்க… சத்தியமா என்னால அந்த பொண்ணு மாதிரிலாம் நடிக்க வராது…” கைகூப்பி அழ ஆரம்பித்தாள் சிவாவிடம் சந்தியா…
இவர்கள் என்ன ரவுடிகளா… தீவிரவாதிகளா… நம்மைக் காக்கும் காவலர்கள் தானே… மற்ற பயம் எல்லாம் போய்… தன் வாழ்க்கைக்காக இப்போது கெஞ்ச ஆரம்பித்திருந்தாள் சந்தியா…
”இல்ல சந்தியா… நீ இல்லாம எங்களால ஒண்ணும் பண்ண முடியாது… இதுவே நான் பலமுறை யோசித்து எடுத்த முடிவுதான் சந்தியா…. இத்தனை பேர் மரணத்துக்கு நீதி வேண்டும்… அது உன்னால கிடைக்கும்னா… பண்ணலாமே சந்தியா” என்றான் தன்மையான குரலில்….
“எனக்கு புரியல சார்… அக்யூஸ்ட் உங்க கஸ்டடில இருக்காங்க… அவங்க கிட்ட விசாரிச்சு அவங்ககிட்ட உண்மைய கொண்டு வரவைக்கனும்… அதுக்குத்தானே உங்களுக்கு கவர்ன்மெண்ட் சம்பளம் கொடுக்குது… நியாயம் வேணும்னு அநியாயத்தை கையில எடுக்கறீங்க… இருநூறு உயிர் போயிருச்சுனு… இரண்டு உயிரை உயிரோட வதைக்கிறீங்களே…. இது என்ன நியாயம்… இந்த மாதிரி நியாயத்துக்கு…. எல்லா கேசுக்குமே சப்ஸ்ட்டீயூட் போதுமே… இஷ்டத்துக்கு கேசை முடிக்க… “ என்று மூக்கை உறுஞ்சியவள்..
”அந்த பொண்ணு சொல்ல மாட்டேங்கிறா… நாங்க சொல்லச் சொல்றதை நீ சொல்லுன்னு சொல்றீங்களே… நான் மட்டும் சொல்வேன்னு எப்படி எதிர்பார்க்கறீங்க… என்கிட்ட அதே பிடிவாதம் இருக்காதா…” என்றாள் சந்தியாவும் தைரியமாக நிமிர்ந்து அவனைப் பார்த்து… தன் தந்தையிடம் எத்தனை அடி வாங்கினாலும்…. அழுத்தமாக நிற்கும் தன்னை நினைத்தபடி… தன் பிடிவாதத்தை நினைத்தபடி..சிவாவிடம் எதிர் வாதம் செய்தாள் சந்தியா
அவளுக்கு அத்தனை அழுத்தமில்லை… பிடிவாதம் இல்லை…. அதீனா வேறு… அவள் வேறு…. அப்போதே நிரூபித்தான் சிவா…
ஆம்.. சிவாவின் கைகளில் இருந்து பளாரென்ற அறை சந்தியாவுக்கு விழுந்திருக்க
இதுவரை தந்தையிடம் வாங்கிய அறைகளை எல்லாம் விட பல மடங்கு பலமானதாக இருக்க… வலி தாங்காமல் கன்னத்தைப் பிடித்தவளுக்கு… ஒரு நிமிடம் உலகமே தட்டாமலை சுற்றியது போல் இருக்க… தள்ளாடி விழ போக… நிரஞ்சனா ஓடிப் போய் அவளை பிடிக்கப் போக…
தன்னைப் பிடிக்க வந்த நிரஞ்சனாவைத் தள்ளிவிட்டவள் மீண்டும் துடுக்காகவேப் பேசினாள்…
“என்னை மாதிரி இருக்கிற பொண்ணுகிட்ட வராத வார்த்தைகளை அவள மாதிரி இருக்கிற என்கிட்ட இருந்தும் வர வைக்க முடியாது” என்ற போதே சிவா அடுத்த அறையை விட…
கண்கள் சொருக… அப்படியே சரிந்தாள் சந்தியா…
“இது சாதரண அறைதான்… அடுத்து போலிஸ் அடி பார்க்கிறியா சந்தியா…” என்ற போதே
சந்தியா ’வேண்டாம்’ என்பது போல இடம் வலமாக தலை ஆட்டினாள்
தேகம் நடுங்கி ஒடுங்கி அமர்ந்திருக்க… கண்களிலிலோ தீப்பொறி பறந்தது… சாதரண அடிக்கே… தாங்க முடியாத வலி…. பொல பொலவென கண்களில் நீர் வழிந்தது… அடுத்த அறை விழுந்தால் உயிரே போய் விடும் போலத் தோன்றியது சந்தியாவுக்கு… தன் தந்தையிடம் தான் வாங்கிய அடி எல்லாம் அடியே இல்லை என்று தோன்றியது அவளுக்குள்…
“இதுதான்… இந்த வித்தியாசம் தான் அதீனாவுக்கு உனக்கும்…“ என்று அவளைத் தூக்கியவனை சந்தியாவால் எதிர்க்க முடியவில்லைதான்… இதயம் தடதடவென்று அடிக்க… வலியில் இருபக்க கன்னங்களும் எரிந்தன… உதடுகளும் துடிக்க… பயத்தில் உடல் மொத்தமுமே நடு நடுங்கியது சந்தியாவுக்கு…
அங்கிருந்த சோபாவில் அமர வைத்தவன்… அவள் முன் அமர்ந்தான்…
“சாரி சந்தியா… உனக்கும் அதீனாவுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்ட எனக்கு இதைத் தவிர வேறு எதையும் காட்டி உன்னை உணர வைக்க முடியாது…” எனும் போதே…
“நான் தனியாளு இல்லை… எனக்கு குடும்பம் இருக்கு.. என் ரகு இருக்காரு இவங்களை எல்லாம் மீறி என்ன செய்ய முடியும் உங்களால… இது என்ன அந்தக் காலமா… மீடியா.. இல்லை ட்விட்டர்ல ஒரு வீடியோ போதும் உங்க கேவலமான நடவடிக்கையை பரப்ப…. ஆக்ரோசமாகவெல்லாம் சொல்லவில்லை… வார்த்தைகள் தந்தி அடித்தனதான்…. திக்கி திக்கிதான் வந்தனதான்… ஆனாலும் சொல்லத் தோன்றியது சொல்லி விட்டாள்
இதைக் கேட்ட போதே சிவா சிரிக்க… அவனின் சிரிப்பு அந்த அறை முழுவதும் எதிரொலிக்க…
”நீ எங்க கிட்ட வந்த அடையாளமே தெரியாமல்… உன் ஆஃபிஸ்ல உன் ப்ரெசெண்ட்ட காட்டப் போறோமே… எப்டினு யோசித்துப் பாரு… அதைச் செய்தவங்களுக்கு…. உன் வீட்ல இருக்கிறவங்களுக்கும்… நீ இருக்கிற மாதிரி எங்களுக்கு காட்ட தெரியாதா… ”
சிவா தொடர்ந்தான்…
‘உன்னோட மேனேஜர்… உன்னை அடுத்த ப்ராஜெக்டுக்கான லேர்னிங் ப்ரோசெஸ்ல மாத்திட்டார்… நோ டீம்… நோ க்ளைண்ட் கனெக்ஷன்…. சென்னைலருந்து டெல்லி… வொர்க் ஃப்ரம் ஹோம்… மேனேஜர் எங்க டீம் தான்… நீ ரிப்போர்ட் பண்ற ஒரே ஆளு அவர்தான்… வேற என்ன பிரச்சனை வந்தாலும் சமாளிப்போம்… வேலையில இருந்தே உன்னை தூக்க வச்சுருக்கலாம்… “
”உங்க வீட்ல காரணம் சொல்லனுமே… இங்க வர வைக்கனுமே… என்றவன்… இன்னும் தேவைனா… உங்க ஃபீல்ட்ல சொல்ற ஆன்சைட் ஆஃபர்ன்ற வார்த்தையை வச்சு… நீ இங்கேயே இல்லைனு உங்க வீட்ல நம்ப வைப்போம்…”
… சிவா சொல்லச் சொல்ல
கேவலமான பார்வை பார்த்தாள் அவனை…
”இது உனக்கான ஆப்ஷன் இல்லை சந்தியா… நீ கட்டாயம் இதுக்கு ஒத்துக்கணும்… நீ கண்டிப்பா ஒகே சொல்லுவ… அதை விடு… என்ன சொன்ன… உன் வீட்டை நம்ப வைக்க முடியாதா…. சேம்பிள் பார்க்கறியா…. என்றபடி நிரஞ்சனாவிடம் திரும்பி…. தன் கையில் இருந்த சந்தியாவின் போனை அவளிடம் அலட்சியமாகத் தூக்கி எறிந்தவன்
“நிரஞ்சனா, சந்தியா அம்மாகிட்ட பேசு” என்றபடி நிரஞ்சனாவை பேசச் சொல்ல…
நிரஞ்சனா சந்தியாவைப் பார்த்து சிறிது தயங்கி…. ஃபேக்டரி ரீசெட் செய்தவள்… அவள் போனை ஈஸியாக ஆபரேட் செய்ய ஆரம்பித்தாள் உடனடியாக… மனப்பாடம் செய்திருந்த வசந்தியின் எண்ணை தானே அடித்து… சந்தியாவின் குரலில் தன் குரலை மாற்றி வசந்தியோடு பேச ஆரம்பிக்க… கொஞ்சம் கூட சந்தேகம் வராமல் நிரஞ்சனாவோடு பேசிக் கொண்டிருக்க…
அப்படியே திகைத்துப் பார்த்தாள் சந்தியா… அப்படியே அச்சு அசலாக அவள் குரலே… யாராலும் கண்டுபிடிக்க முடியாத பிரித்தறிய முடியாத குரல்… இவளுக்கும் தெரியுமே…. அயர்ந்து போய் இருந்தாள் சந்தியா.. நிரஞ்சனா அடிக்கடி இவள் குரலில் மாற்றிப் பேசிக் காட்டியபோதெல்லாம்… வசந்தியை ஏமாற்றியதெல்லாம் இப்போது ஞாபகத்துக்கு வர
“ம்மா… அது நான் இல்லைமா… என் குரலை உனக்குத் தெரியலையாமா… என் சுவடே தெரியாம என்னை அழிக்கப் பார்க்கிறாங்கம்மா…” உள்ளுக்குள் கதறிக் கொண்டிருந்தாள் சந்தியா
10 நிமிடங்களாக தொடர்ந்த பேச்சை ராகவ் வைக்கச் சொன்ன போதுதான்… வைத்தாள் நிரஞ்சனா…
சந்தியாவின் கண்களை நேருக்கு நேராக பார்க்கமுடியாமல் குற்ற உணர்ச்சியோடு பார்க்க…
தான் இருந்த அந்த சூழ்னிலையிலும் முறைத்தாள் சந்தியா அவளை… அதே நேரம் ராகவ் எப்படி தன் அன்னையின் போனில்… இந்த சந்தேகம் அவளுக்குள் வந்திருக்க.. இப்போது அவள் இருக்கும் சூழ்நிலையில் அதைப் பற்றிய ஆராய்ச்சிக்கெல்லாம் பெரிதாக அவளால் போக முடியவில்லை
சிவா சந்தியாவிடம் திரும்பியவள்…
“பார்த்தேல்ல.. உன்னை ஜெயிலுக்கு அனுப்பி வச்சுட்டு… உன்னை ஆன்சைட் அனுப்புற மாதிரி இன்னைக்கே உன் குடும்பத்துக்கு ஒரு மெசேஜ்… உன் குடும்பத்தை நிரஞ்சனா அவ குரல்லையே சமாளிப்பா… வீடியோ கால் அது இதுன்னு என்கிட்ட வெட்டியா பேசாத…” தெனாவெட்டாக சிவா சொல்லி முடிக்க…
“த்தூ இதெல்லாம் ஒரு பொழப்பு…. அக்யூஸ்ட்ட மாத்த அப்பாவிப் பொண்ணு… அந்த அப்பாவிப் பொண்னோட குரலுக்கு சப்ஸ்ட்டியூட்..” என்று எள்ளலாகச் சொன்ன சந்தியா…
நிரஞ்சனாவிடம் திரும்பி…
“எல்லார்கிட்டயும் பேசுவ… சமாளிச்சுருவ… அதெல்லாம் சரி… பொண்ணா… தங்கையா மருமகளா நீ பேசிறலாம்… என் ரகுகிட்ட எப்படி பேசுவ நிரஞ்சனா… அவன் பொண்டாட்டியா உன்னால பேச முடியுமா… இல்லை அவன் புருசனா பேசுறதை எல்லாம் கேட்க முடியுமா உன்னால…” என்று எள்ளலாகப் பார்த்தவள்
”உன்னால முடியும் தான்… உனக்குத்தான் வெட்க மானம்லாம் இல்லதானே… சாரி சாரி… அதுக்கு பேர்தானெ நீங்க மாத்தி வச்சுருக்கீங்களே… கடமைனு…. நீ கடமைக்காக என்ன வேணும்னாலும் பண்றவங்கன்னு இப்போதானே தெரிஞ்சுச்சு… ஆனால் இங்க நீங்க ரெண்டு பேரும் ஒண்ண மறந்துட்டீங்க…”
”சிவா சார் இவ என் அம்மாவை ஏமாத்தலாம்… இல்லை அவங்க ஏமாறலாம்… ரகு கிட்ட இவள பேசச் சொல்லுங்க… ” திமிராகச் சொல்லி சிவாவைப் பார்க்க…
புன்னகை விரிந்தது சிவாவிடம்… கண்பார்வையாலேயே நிரஞ்சனாவிடம் பேசச் சொல்லி… நிரஞ்சனாவும் ராகவ்வுக்கு முயற்சிக்க அந்தோ பரிதாபம் ராகவ் எடுக்காமல் போக…
”உங்க அம்மா கூட மக போனுக்காக ஏங்கிட்டு இருக்காங்க போல… உடனே எடுத்துட்டாங்க… ராகவ்… அதாவது உன் ரகு… உன் போனைக்கூட எடுக்கல சந்தியா “ போலியாக சிவா வருத்தப்பட
வார்த்தைகள் வேறெதுவும் இல்லாமல் வெறித்து அமர்ந்திருந்தவளிடம்…
“நீ இதை பண்ணித்தான் ஆகனும் சந்தியா… நாங்க சொல்றதை காது கொடுத்து கேட்க முயற்சி பண்ணு” என்றவன் திரையில் அதீனாவின் புகைப்படங்களை ஓட்ட…
தன் போலவே இருந்த அந்தப் பெண்ணின் புகைப்படங்களை பார்க்க ஆரம்பித்திருந்தாள்… சந்தியா…
அது மட்டுமின்றி… வெடிகுண்டு நடந்த நிகழ்வையும்… அதில் இறந்து போன உயிர்களையும் காட்ட ஆரம்பிக்க… அதைப் பார்க்க முடியாமல் கண்களை சந்தியா மூடிக் கொள்ள… சிவா கசப்பாய் புன்னகைத்தான்… வலியோடு
இதைப் பார்க்கவே முடியலை உனக்கு சந்தியா… இதுல என் மனைவியையும்… இங்க நிற்கிறாளே இவ அப்பாவையும் இழந்திருக்கா… இந்த மாதிரி.. எத்தனையோ பேர்…. இவங்களுக்கெல்லாம் நீதி வேண்டாமா சந்தியா….
இப்போதும் சந்தியா அமைதியாக அமர்ந்திருக்க …. சந்தியாவின் அலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது…
நிரஞ்சனா சிவாவிடம் காட்ட…
சந்தியாவும் பார்த்தாள் தான்… கணவனின் அலைபேசி எண்களைப் பார்த்ததுக்கே…. கண்களில் கண்ணீர் ஆறாய் ஓட…
”பேசு நிரஞ்சனா… ” கட்டளை இட்டான் சிவா…
“பேசாத நிரஞ்சனா… அவர ஏமாத்தாத நிரஞ்சனா… ப்ளீஸ் … என் ரகுகிட்ட நான் மட்டும் தான் அவர் பொண்டாட்டியா பேசனும் ரஞ்சி” கெஞ்சினாள் சந்தியா
கடமை நட்பு என வழக்கமான இரு போராட்டத்தில் தற்போதும் உழன்றாள் நிரஞ்சனா…
வசந்தியோடு பேச முடிந்தவளால்… ராகவ்வோடு பேச… குரல் மட்டுமல்ல… மனமும் வரவில்லை… இருந்தும்… எப்போதும் போல கடமையே இப்போதும் அவளை ஜெயிக்க….
ரகுவின் காலை அட்டெண்ட் செய்தவள்..
“ரகு… உனக்கு எத்தனை தடனை போன் பண்ணினேன்… ஏன் எடுக்கலை…” உற்சாகமாக சந்தியா பேசுவது போலவே நிரஞ்சனா பேச…
தன்னவன் என்ன பேசுவானோ.. ஒரே நொடியில் ஆயிரம் முறை செத்துப் பிழைத்திருந்தாள்… இதயத்தில் அப்படி ஒரு வலி…. அவனுடைய தனக்கான ஒரு வார்த்தை கூட வேறொருத்திக்கு போய் சேர்ந்து விடக் கூடாதென்று துடித்தாள்…
இதே ராகவ் காதல் ததும்ப வேறொரு பெண்ணிடம் பேசியவன்தான்… ஐ லவ் யூ என்ற வார்த்தையைச் சொன்னவன் தான்… ஆனால் இப்போது அவனின் “ம்” என்ற ஒற்றைச் சொல் கூட தனக்கானது… அதை வேறு யாருக்காகவும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை சந்தியா… மனைவியாக தான் தோற்று விடுவோமா… கணவனாக அவன் தோற்று விடுவானா… அவன் பேசக்கூடாதே… ஆனால் இதோ பேசப் போகிறான்… யாரோ ஒருத்தியை தன்னை என்று நினைத்து
ரகு… ரகு என்று வாய் விட்டு அழ ஆரம்பித்தவள்… திடிரென்று யோசனை வர…. வேகமாக
”ரகு அது… நான் இல்லை…” பெருங்குரலெடுத்து சத்தமாகப் பேசப் போக… அதே நொடி தன் கைகளால் அவளது வாயை அடைத்திருந்தான் சிவா…
ஆனால் சிவா நிரஞ்சனா இருவருமே எதிர்பார்க்காத விதமாக…. ராகவ் நிரஞ்சனாவைக் கண்டுபிடித்து விட…
சந்தியாவுக்கு அந்தக் கணம்.. அந்தக் கணமே… கணவனிடம் போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்ற வேகம் வந்திருக்க…
இப்போது போனும் இவளிடம் வந்திருக்க… தன் காதில் விழுந்த கணவன் குரலில்… மொத்த துக்கத்தையும் கொட்டியவளாக கதறி அழ ஆரம்பித்தாள்….
/*நீ வரும் பாதையைப் பார்க்கிறேன் ஓ பிரியசகி நான் பிரியசகி பிரியசகி உன் பிரியசகி வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி தருவேன் பாடல் கோடி தனிமை ஏதடி*/
Sad