top of page
Writer's picturePraveena Vijay

சந்திக்க வருவாயோ?-48

அத்தியாயம்: 48



/*பூவோடு வாசமில்லை

காற்றோடு சுவாசமில்லை

என்னோடு நீயும் இல்லயே


அன்பே என் அன்பே

எங்கே நீ எங்கே

உன்னில் என்னை தொலைத்தேனடி

உன்னால் இன்நாள் மரித்தேனடி*/

ராகவ் சந்தியாவுடன் பேசிக் கொண்டிருந்த அழைப்பைக் துண்டித்து விட்டு… வெளியில் வந்த போது

”மிருணாளினி வெளில வாடி” என்ற உக்கிர குரலில் ரௌத்திரமான கண்களோடு காட்சி அளித்த சந்தோஷைத் தான் ராகவ் பார்க்க முடிந்தது…. அதிலும் அவன் குடித்துவிட்டு வேறு வந்திருப்பான் போல… முழு போதையில் இருந்தான் சந்தோஷ்… ராகவ் கீழிறங்குவதற்கு முன்னேயே…. சுகுமார், யசோதா என இருவரும் வரவேற்பறைக்கு வந்திருக்க…

“ஹைய்யோ இவன் ஏன் இப்படி பண்ணித் தொலைக்கின்றான்” என்ற கடுப்பே மிஞ்சியிருந்தது ராகவ்வின் எண்ணங்களில்… இவன் பொறுமையாகவே இருக்க மாட்டானா என்ற கோபம்தான் பொங்கியது ராகவ்வுக்குள்

இத்தனை களேபரத்திலும்… மிருணாளினி அவள் அறையை விட்டு வெளியில் வரவில்லை… சந்தோஷின் குரல் அந்த வீடு முழுவதுமே எதிரொலிக்க.. அவள் அறையில் மட்டும் கேட்காமல் இருக்குமா… வேண்டுமென்றே வராமல் இருக்கின்றாள் என்பது ராகவ்வுக்கு நன்றாகப் புரிய…

அதே நேரம் சுகுமார் சந்தோஷிடம் பேச ஆரம்பிக்கப் போக வேக வேகமாக படிகளில் இறங்கியவன்… தான் பேசுவதாகக் கூறி… தன் தந்தையைத் தடுத்துவிட்டு சந்தோஷின் அருகே போக…

ராகவ் சந்தோஷின் அருகில் வந்தானோ இல்லையோ… அதே நொடி…. … மிருனாளினி அனுப்பி இருந்த வக்கீல் நோட்டிஸ் பேப்பர் அத்தனையும் ராகவ் முகத்தில் எறியப்பட்டிருந்தது சந்தோஷின் கரங்களால்…

சந்தோஷின் இந்த செயலில் ராகவ்வுக்கு அதிர்ச்சியும் கோபமும் வரத்தான் செய்தது.... இருந்தும் அடக்கிக் கொண்டவனாக… பொறுமையை கையில் எடுத்துக் கொண்டவனாக… குனிந்து அத்தனை பேப்பர்களையும் பொறுக்க ஆரம்பித்தான்…

அதைப் பார்த்த சந்தோஷோ இன்னும் இளக்காரமாக ராகவ்வைப் பார்த்தபடி…

“அதை எடுத்து என்ன பண்ண போற நீ… அத்தனையும் வேஸ்ட் … உன் தங்கை எனக்கு அனுப்பி இருக்கிற டிவர்ஸ் நோட்டிஸ்… அதெல்லாம்“ என்று ஆங்காரமாக ஆரம்பித்தவன்… இன்னும் சத்தமாக

“அன்னைக்கு அவ்வளவு தூரம் சொல்லியும்… அடங்காமல் ஆடுறா… உங்க வீட்ல ஒருத்தவங்களுக்கு கூடவாடா அவகிட்ட பேச தைரியம் இல்லை… அவ எங்க இருக்கா… அவ ரூம் எது… இவளுக்கெல்லாம் மானே தேனேல்லாம் செல்லாது” என்று மிருணாளினியின் அறையைத் தேடியபடி நோட்டமிட…

“சந்தோஷ்… தேவையில்லாம நீ வார்த்தைகளை அதிகமா விடுறா… இது நல்லதுக்கில்ல…” என்று சற்றுமுன் சேகரித்த தாள்களை அருகில் இருந்த மேசையில் வைத்தபடி… ராகவ்வும் நிதானமாகத்தான் பேச ஆரம்பிக்க… அந்த நிதானமெல்லாம் சந்தோஷுக்கு இல்லை…. வேகமாக ராகவ்வின் சட்டையைப் பிடித்த சந்தோஷ்

“எதுடா நல்லதில்ல… நான் தப்பு பண்ணினேன் தான்… கால்லயும் விழுந்துட்டேன்.. இதுக்கு மேல உன் தங்கச்சி என்ன எதிர்பார்க்கிறா என்கிட்ட…” என்று அவன் சட்டையை விட்டவன்… கேவலமாக ராகவ்வைப் பார்த்தபடியே

“உன்கிட்டலாம் பேசி என்ன பிரயோஜனம்… கட்டின பொண்டாட்டியவே தங்கைக்கு பயந்து வீட்டை விட்டு வெளிய அனுப்பினவன் தானே…” என்றவன்…

ராகவ்வின் முறைப்பை எல்லாம் கொஞ்சம் எல்லாம் கண்டு கொள்ளாதவனாக…

”மிருணா ரூம் எது… அதை மட்டும் காட்டு” என்று முறைக்க…

”சந்தோஷ்…. தேவை இல்லாத அராஜகம் பண்ற…. நீ இப்போ இருக்கிற நிலைமைல அவகூட பேசுனா… இன்னும் பிரச்சனைதான் ஆகும்…” ராகவ் கோபமாகப் பேசினாலும்… நிலைமையை சந்தோஷுக்கு விளக்கவே செய்தான்… ஆனால் சந்தோஷ் புரிந்து கொள்ளும் நிலையில் தான் இல்லை….

“பிரச்சனை தானே வரட்டும்… நானும் பார்க்கிறேன்… நீ அட்வைஸ் ஆணிலாம் பிடுங்காம ஒரு ஓரமா போய் தள்ளி நில்லு,,, அவ ரூம் எங்க…” என்று ராகவ்விடன் சொன்னவன்….” ஏய் மிருணாளினி” மீண்டும் மிருணாளினியை கத்தி அழைக்க… வீட்டில் வேலை பார்த்தவர்கள் எல்லாம் எட்டிப் பார்க்க…

ராகவ்வுக்கு இப்போது சுருசுருவென்று உச்சியில் ஏறியது… ராகவ்வை கொஞ்சம் கூட அசட்டை செய்யாமல் சந்தோஷ் பேசுவதைப் பார்த்து சுகுமாருக்கும் கோபம் வர... அதே கோப முகத்தோடு சுகுமார் சந்தோஷோடு கோபமாக பேச வர…

இப்போது தந்தையின் கோபத்தில்… ராகவ் தன் கோபத்தைக் குறைத்துக் கொண்டவனாக….

“அப்பா… நீங்க பேசாமல் இருங்க… அவன் நிதானத்தில இல்லை… நீங்க பேசி… பதிலுக்கு மரியாதை இல்லாமல் அவன் பேசினால் இன்னும் பிரச்சனை தான் ஆகும்… என்னைப் பேசினால் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை…. நாளைக்கே நாங்க சகஜாமாயிருவோம்… புரிஞ்சுக்கங்க” என்று அவரை உள்ளே வர விடாமல் பார்த்துக் கொள்ள…

யசோதாவோ

“ஏண்டா… எல்லாத்தையும் கரெக்டா பண்ணுவான்னு தாண்டா நினைத்துட்டு இருந்தோம்… இப்படி குடிகாரன்… வேற ஒருத்தியோட வாழ்ந்தவன்னு ஒருத்தனை காதலிச்சு வச்சுருக்காளே… இந்தக் குடும்பத்தில போய்… இப்படி மாட்டிக்கிட்டோமே… அப்போதே இவர்கிட்ட சொன்னேன்… இவனோட நிறுத்தாம… பொண்ண வேற எடுத்து… இந்த மனுசனத்தான் சொல்லனும்..” என்று யசோதா ஒரு புறம் தலையிலடித்துக் கொண்டு அழ ஆரம்பிக்க…

ராகவ்வுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை… சந்தோஷ்க்கு வரும் வார்த்தைகள் எல்லாம் சந்தியாவையும் தாக்குவது போல் தான் இருந்தன… சந்தியா இப்போது இங்கு இல்லாதது பெருத்த நிம்மதியே அவனுக்கு…

தாய் தந்தை இருவரையும் அமைதியாக இருக்கச் சொன்னவனுக்கு… மிருணாளினியிடம் பேசாமல் சந்தோஷ் இங்கிருந்து போக மாட்டான் என்றே தோன்றியது…. அவளிடம் பேசட்டும் என்று முடிவு செய்தவனாக… சந்தோஷிடம் திரும்பி…

“சரி.. நீ இங்கேயே இரு சந்தோஷ்… நான் மிருணாளினிய கூட்டிட்டு வருகிறேன்…” என்ற போதே

“ஓ சாரோட அனுமதி வேண்டுமோ… என் பொண்டாட்டிய பார்க்க… உன்னை நம்பி எங்க வேணும்னாலும் என் தங்கை வரனும்… ஆனால் உன் தங்கை இருக்கிற ரூமுக்கு கூட சார் அனுப்ப மாட்டீங்களோ… நல்ல நியாயம் பண்றீங்கடா… நீ என்னடா என் பொண்டாட்டி ரூமுக்கு வழி சொல்றது” இளக்காரமாக சந்தோஷ் பேச

பல்லைக் கடித்தான் ராகவ்… அவனின் பொறுமை எல்லாம் கரை கடந்து கொண்டிருக்க… இருந்தும் சந்தோஷை பொறுமையாகவேக் கையாண்டு கொண்டிருக்க…

சுகுமார் சந்தோஷிடம்

“இங்க பாருங்க சந்தோஷ்,. பொறுமையா இருங்க… பேசலாம்” எனும் போதே

“பொறுமையான்னா… ஒரு 80 வயசு வரைக்கும்… ஐ மீன் என் 80 வயசு வரைக்கும் இருக்கவா..…” நக்கலாக தன் மாமனாரை ஒரு பார்வை பார்த்தவன்

“என் மேல தப்பில்லைனு சொல்லலை… டைம் எடுத்துக்கோ… இல்லை என்னை கொன்னுடுன்னு கூட சொன்னேன் உங்க பொண்ணுகிட்ட…. எனக்கு வாழ்க்கை கொடுக்கிறாளாம் அவ… யாரு யாருக்கு வாழ்க்கை கொடுக்கிறது… இவ மட்டும் வேறொருத்திய தொட்டவன பக்கத்துல நெருங்க விட மாட்டாளாம்… மத்த பொண்ணுங்கள்ளாம்… இளிச்சவாயிங்களா… வேற ஒருத்திய மனசுல நினைக்கிறவனோட வாழ” அவனுக்கிருந்த கோபத்திற்கு… மாமனார் என்றெல்லாம் பார்க்கவில்லை… வார்த்தைகளை அமிலமாக வீசியவன்…

”எங்க இருக்கா அவ” என்று அங்கிருந்த ஏதோ ஒரு அறை நோக்கிப் போக… ராகவ் வேகமாக ஓடிப் போய்த் தடுக்க…

“உனக்கு அன்னைக்கே சொல்லிட்டேன்… இதுல இடையில வராதேன்னு…” உக்கிரத்தின் உருவமாக சந்தோஷ் ஆகியிருக்க…

”எனக்கும் ஆசை இல்லை… நீ இப்போ இருக்கிற கோபத்தில அவள பார்க்கிறது நல்லா இருக்காது… பேசலாம் சந்தோஷ்…” என்று கொஞ்சம் கோபமும்… கொஞ்சம் இறங்கியும் ராகவ் பேச… அவனைக் கண்டு கொள்ளவே இல்லை சந்தோஷ்…

”ஏய் மிருணா… எங்கடி இருக்க… தாலியக் கழட்டி வச்சுட்டா நான் உன் புருசன் இல்லைனு ஆகிருமா….“ என்று போதையின் உச்சத்தில் வெறியோடு ஆரம்பித்தவன்… தன்னை இறுகப்படித்திருந்த ராகவ்விடம்

“ரகு என்னை விடுடா…” என்று இவன் திமிறும் போதே… மிருணாளினியும் வெளியே வந்திருந்தாள்…

அவள் முகத்தில் பதட்டம் கோபம் எதுவும் இல்லை.. நீ என்னதான் செய்து விடுவாய்…. பார்ப்போம் என்று சந்தோஷை எதிர்கொள்ளும் தெனாவெட்டுதான் இருந்தது… ஆனாலும் அழுதிருந்திருப்பாள் போல… கண்கள் சிவந்திருந்தன… கண்களில் இன்னும் ஈரம் இருக்க…. கன்னங்களிலோ கண்ணீரின் சுவடு இருந்தது…

தன்னவளைப் பார்த்த அடுத்த நொடி… ஒரே வேகத்தில் ரகுவைத் தள்ளிவிட்டு… மிருணாவின் அருகில் போய் நின்றிருந்தான் சந்தோஷ்…

ராகவ், சுகுமார் யசோதா என மூவருக்குமே பதட்டத்தில் வார்த்தைகளின்றி… இருவரையும் பார்க்க ஆரம்பிக்க…

அங்கோ… இதுவரை இவர்களிடம் எகிறிக் குதித்துக் கொண்டிருந்தவன் கண்களில்… கோபம் எல்லாம் போய்… ஏக்கம் வந்து நிற்க…

“இனிம்மா… ஏண்டா அழுதிருக்க… உன்னை யார்டா அழ வைத்தது..” என்று அவளிடம் பாசமாக நெகிழ்ந்தவன்.. வேகமாக இவர்கள் மூவர் புறமும் திரும்பினான்…

“உங்கள நம்பித்தானடா என் குட்டிம்மாவ… என் இனிய இங்கே விட்டுட்டு போனேன்… ஏண்டா அழ வச்சீங்க” என்று கேட்க…

அதை கேட்ட இவர்கள் மூவரும் தலையடித்துக் கொள்ளாத அதிர்ச்சி நிலையில் நிற்க…

அதிலும் சத்தியமாக ராகவ் தான் இப்போது லூசாகிப் போனான்… இருவருக்கும் இடையில்…

“என்னடா கருமக் காதல்” என்ற எண்ணத்தில்….

இவ்வளவு நேரம் தன்னிடம் கர்ஜித்துக் கொண்டிருந்தவன்… மனைவியைப் பார்த்தவுடன் நெகிழ்ந்த தருணத்தில்… இத்தனை காதல் வைத்துக் கொண்டு அவர்களை மட்டுமல்ல சுற்றி இருப்பவர்களையும் வேதனையில் தள்ளுகின்றனர் என்று புரியாமல் இல்லை ராகவ்வுக்கும்….

தன் தங்கை கொஞ்சம் மனது வைத்தால் அத்தனை பிரச்சனைகளும் நிமிடத்தில் முடியும் எனும்போது மிருணாவோ வேறொரு திசையை நோக்கி சென்று கொண்டிருப்பதும் புரிந்தது… அவள் அனுப்பிய விவாகரத்து பத்திரத்தால்…

வேகமாக தந்தையின் அருகில் வந்தவன்…

“அப்பா… சந்தியா அப்பாக்கு கால் பண்ணுங்க… அவங்க ரெண்டு பேரையும் வரச் சொல்லுங்க” என்ற போதே

”இனி… உன்கிட்ட தனியா பேசனும் வா”… என்று சந்தோஷ் மிருணாளினியை இழுக்க.. அவளோ மரம் போல் அசையாமல் இருந்தாள்...

சந்தோஷ் பண்ணிக் கொண்டிருந்த அலம்பல்களில் ராகவ்வுக்கு அவன் மேல் ஒரு புறம் கோபம் இருந்தாலும்…. மிருணாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்த இந்த சந்தோஷைப் பார்த்து ஒரு புறம் பாவமாகவும் தான் இருந்தது…

தன்னைத் தள்ளிவிட்டு போன சந்தோஷால் மிருணாளினியை இழுத்துக் கொண்டு போக முடிய வில்லையா… போக முடியும் அவனால்… அனால் அந்த அளவுக்கு மிருணாளினியிடம் தன் வன்மையைக் காட்ட சந்தோஷ் முனையவில்லை… அதிலும் போதையில் இருந்த போதும்… என்ற உண்மை ராகவ்வுக்கும் புரிய… மனம் பாரமாகியது… சந்தோஷை நினைத்து கவலை கொள்வதா… மிருணாளினியை நினைத்து கவலை கொள்வதா..

அமைதியாக… அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன்… இருவரும் பேசட்டும் என்று இங்கிருந்தே அவர்களை பார்க்க ஆரம்பித்தான்

யசோதா மகனின் அருகில் வந்து அமர்ந்தவராக…

“இதுக்கு முடிவே இல்லையா ராகவ்…” என ராகவ்விடம் புலம்ப ஆரம்பிக்க…

“மிருணாதான்மா பிடிவாதம் பிடிக்கிறா… அறிவுக்கும் உணர்வுக்கும் இடையில நிற்கிறா… சந்தோஷ் அவ்வளவு சொல்லிட்டு போயும் இவ அவனுக்கு டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பி இருக்கான்னா… எந்த மனுசனுக்குத்தான் கோபம் வராது” என தளர்வாக அமர்ந்தவன்…

”அம்மா… இதுல நாம வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும்… தலைய பிச்சுக்க வைக்கிறாங்க…” என்றவனைக் கவலையாகப் பார்த்தவர்…

“சந்தியா போன் பண்ணாளா ராகவ்” என்று விசாரிக்க…

”ஹப்பா ரொம்ப சீக்கிரமா கேட்டுடீங்க… மருமக மேல் என்ன திடீர்னு அக்கறை… ஹ்ம்ம்… டெல்லி போய்ட்டேன்னு… ஏர்போர்ட்ல இருந்து போன் பண்ணினா… அவகிட்ட பேசிட்டு இருக்கும் போதுதான்… ” எனும் போதே…

“எங்களுக்குலாம் ஆரம்பத்தில் இருந்தே அக்கறை இருக்குடா… உனக்குத்தான் திடீர்னு வந்திருக்கு” என்று பேசியபடியே அவனருகில் அமர்ந்த தந்தையைப் பார்த்து முறைக்க முயன்று தோற்றவன்

“போன் பண்ணுனீங்களாப்பா” என்றபடியே… திவாகருக்கும் போன் செய்ய ஆரம்பிக்க…

அங்கு மிருணாளினியோ சந்தோஷிடம்…

“என்ன கத்துனா… இப்படி குடிச்சுட்டு வந்தா…. இங்க இருக்கிற எல்லாரும் பயந்துருவாங்கனு நெனச்சுட்டு வந்தீங்களா சந்தோஷ்… நான் என்னோட பதிலைச் சொல்லிட்டேன்… அதுதான் என் முடிவு…” என்று மேஜையின் மேல் இருந்த காற்றில் ஆடிக் கொண்டிருந்த தாள்களை பார்த்துச் சொல்ல…

“மிருணா… உன்னோட பிரச்சனை என்ன… தப்பு செஞ்சிட்டேன்… அதை மாத்த முடியாதுதான்… நான் என்ன பண்ணினா என்னோட வந்து வாழுவ… உனக்கு துரோகம் பண்ணிட்டேன் தான்… ஆனால் நான் யாரையும் ஏமாத்தல மிருணா… அந்த பொண்ணு டேகி இட் ஈஸினு எடுத்துகிட்டு அவ வேற வழில போய்ட்டா… இல்லை உனக்கு அவதான் பிரச்சனைனா… அவகிட்ட நேரடியா பேசு” என்ற போதே மிருணா நெற்றிக் கண்ணைக் காட்டினாள்…

இன்னும் அந்தப் பெண்ணோடு பேசிக் கொண்டிருக்கிறாயா என்ற விதத்தில்…

அதில் பயப்பட வேண்டிய சந்தோஷின் முகத்திலோ.. அவளின் கோபம் பார்த்து…. இப்போது இலேசாக புன்னகை வர… அதில் இன்னும் காண்டான மிருணா…

“இப்போ எதுக்குடா சிரிக்கிற… “

“இல்ல மிருணா… நான் சிரிக்கவே இல்லை..” என்று சந்தோஷ் வாயை இறுக்கமாக மூடிக் கொள்ள…

”இல்ல நீங்க இப்போ சிரிச்சீங்க… நான் பார்த்தேன்…”

“மிருணா… இப்போ இது பிரச்சனையா… “ என்று அவள் கைகளைப் பிடிக்கப் போக…

“ப்ச்ச்… சந்தோஷ்… என்னை டைவர்ட் பண்ணாதீங்க என்னோட முடிவு இதுதான்… என்னை விட்ருங்க” என்று ஆயிரத்து ஓர் முறையாக சொல்லி முடிக்க…

சந்தோஷின் கோபம் உச்சத்திற்கு எகிற… அதில் தன் நிலை… சுற்றி இருப்பவர்கள் என அத்தனையும் மறந்தவனாக… மிருணாளினியை இழுத்து அணைக்க… மிருணாளினியோ அவமானத்தில் குறுகியவளாக கோபத்தோடு சந்தோஷை தள்ளி விட முயற்சிக்க…

அதற்கு மேல் ராகவ் பொறுமையாக இருப்பானா என்ன… வேகமாக எழுந்து தங்கை அருகில் வந்தவன்… தங்கையிடமிருந்து சந்தோஷை கோபமாக இழுத்தவனுக்கு வந்த ஆத்திரத்தில்… தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவனாக சந்தோஷை அறைய கையைத் தூக்க… ஒரே நொடிதான்… தன்னை மறந்த நிலை… உடனடியாகச் சுதாரித்து மிருணாளினியைப் பார்க்க… அவள்தான் தன் அண்ணனின் கைகளைப் பற்றி இருந்தாள்…

“வேண்டாம்னா” என்று அழ ஆரம்பித்தவளிடம்… எதுவும் பேச முடியாமல்… தர தர வென சந்தோஷை இழுத்துக்கொண்டு போக…

ராகவ்வின் இந்த செய்கையில்… மிருணாளினி மட்டுமல்ல… சுகுமார் யசோதா என அனைவரும் கதிகலங்கி நிற்க

சுகுமாருக்கோ அங்கு நடப்பது எதையுமே தடுக்க நினைக்க முடியவில்லை… மனம் முழுக்க படபடப்பாக… தன் மகளையும்… அவள் நிலையையும் எண்ணி வருத்ததோடு தொய்ந்து அமர… நடப்பதை எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது…

ராகவ் அவர்கள் நினைத்தது போல் எல்லாம் நடக்கவில்லை… அதாவது வீட்டை விட்டு வெளியே சந்தோஷைத் தள்ளவில்லை… மாறாக அங்கிருந்த விருந்தினர் அறைக்குள் சந்தோஷோடு சென்றவன்… குளியலறைக்கு இழுத்துச் சென்று ஷவருக்கு அடியில் கொண்டு போய் நிற்க வைக்க.,..

எங்கே சந்தோஷை வெளியில் தள்ளி விடுவானோ என்று ராகவ் பின்னால் படபடப்பாக வந்த மிருணாளினி… தன் அண்னனின் இந்த செய்கையில் நிம்மதியை உணர..

“நீங்க போங்கண்ணா” என்று சந்தோஷின் அருகில் வர…

“நீ போ… டவல் மட்டும் கொண்டு வா” என்று மிருணாளினியை அங்கிருந்து போகச் சொல்லியபடி… … சந்தோஷின் சட்டையைக் கழட்ட ஆரம்பிக்க

அவளோ மறுக்க…

“மிருணா… போன்னா போ” என்று சத்தமாக கடுமையாகச் சொல்ல… அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை…

வெளியே வந்தவள் டவலை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றவள் அதை தன் அண்ணனிடம் கொடுத்து விட்டு வாசலிலேயே நிற்க

சந்தோஷ் அவளையே பார்த்தபடி

“இனி… நீ என்னோட பொண்டாட்டிய நடந்திருந்தா… உன் அண்ணா உன்னை வெளில போகச் சொல்லிருப்பானா… ” என்றபடி…

ரகுவைப் பார்த்தவன்

”டேய் ரகு உனக்கு ஒரு ரைட்ஸும் இல்லை என் குட்டிம்மாவா வரக்கூடாதுன்னு சொல்றதுக்கு… இவன் கிடக்கிறான்… நீ வா குட்டிம்மா.. உன் சந்தோஷ் கிட்ட உனக்கில்லாத உரிமையா… ” என்று அப்போதும் சந்தோஷ் குடி போதையில் உளர…. ராகவ் முறைத்தான் தன் தங்கையின் கணவனைப் பார்த்து…

ஏற்கனவே ராகவ் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு இருந்தான்… இதில் இப்போதும் சந்தோஷ் தன் தங்கையைப் பார்த்து குறை சொல்லிக் கொண்டிருக்க… அதில் இன்னும் கூடுதலாக முறைக்க

ராகவ்வின் முறைப்பிலோ…. சந்தோஷ் பல்லை இளித்தான்…

“மச்சான்… நீ க்ரேட்டுடா மச்சான்… லவ் யூ ரகு மச்சான்” தண்ணீர் மேனியில் படும் போதே சொல்ல…

ராகவ் பல்லைக் கடித்தான்….

“ரொம்ப முக்கியம்டா எனக்கு… என் தலை எழுத்து இதை எல்லாம் உன் வாயில இருந்து கேட்கனும்னு” என்றான் அவனைப் பிடித்தபடியே… இன்னும் என்னவெல்லாம் உளருவானோ என்று ராகவ்வுக்கு பயமாகக் கூட இருந்தது…

“ஆனால் என் தங்கச்சி… ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கொடுத்து வச்சவடா” எனும் போதே இப்போது சந்தோஷ் அழத் தொடங்க…

“ஐயோ முடியலைடா” என்ற பாவம் தான் வந்திருந்தது ராகவ்வின் முகத்தில் இப்போது…

“ரகு நான் ஏன் குடிச்சேன்னு கேளேன்” அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க

”தெரிந்த ராமாயணம் தானே… மிருணாவை நினைத்து” என்ற போதே…

“நோ மச்சான்… நோ மச்சான்” என்ற படியே… வெளியில் நின்றவளைப் பார்த்து சுட்டு விரலை நீட்டியபடி..

“என் திமிர் பிடித்த… என் செல்ல… என் குட்டிம்மா.. இல்லையில்லை என் அம்முக்காக.. ஃபர்ஸ்ட் ரவுண்ட்”

”உம்மா மிருணாளினி” என்று அங்கிருந்தபடியே… மிருணாளினிக்கு பறக்கும் முத்தங்களை வைக்க… மிருணாளினியின் கண்களில் இப்போது கோபம் இல்லை… பதிலுக்கு கண்ணீர் தான்…

ராகவ்வுக்கு எல்லாம் நேரம் என்றிருந்தது… தங்கையின் கணவன்… மனைவியின் சகோதரன்… வேறு வழி… அவன் புலம்பலை எல்லாம் கேட்டபடியே… அவனைத் துடைத்து… இடுப்பில் டவலைக் கட்டி வெளியே அழைத்து வந்து அங்கிருந்த கட்டிலில் அமர வைத்தவன்…

”மிருணா… நான் போய்… அவனுக்கு மாத்திக்க ட்ரெஸ் எடுத்துட்டு வருகிறேன்…” என்று நகரப்போக….அப்போதும் சந்தோஷ்… ராகவ்வை விடவில்லை… ராகவ்வின் கையைப் பிடித்து அவனை நிறுத்தியவன்…

“இரண்டாவது ரவுண்ட்… என் தங்கச்சி.. என் தியாக்குட்டி… உன்னை விட்டு தனியா இருக்காளேன்னு குடிச்சேண்டா” என்றவன் குரல் தழுதழுக்க

“ஹ்ம்ம் .. சரி“ என்று மட்டும் அவனிடம் தலையாட்டியவனோ

“உன் தங்கச்சி என்னை விட்டு தனியா இருக்கான்னு… நான்தாண்டா குடிக்கனும்… தண்ணி அடிக்கிறதுக்கு… என்னென்னமா காரணம் வச்சுருக்கானுங்க” மனதுக்குள் சந்தோஷைத் தாளிக்க…

ராகவ்வின் அந்த யோசனை பாவனையை தலையைச் சரித்து பார்த்த சந்தோஷ்,…

”நான் கண்டுபிடிச்சுட்டேனே… நீ என்னா நினக்கிறேன்னு… உன் தங்கச்சிக்காக நான் தானே குடிக்கனும்னு… யெஸ் செண்ட் பெர்செண்ட் கரெக்ட் மச்சான்… ஆனால் நீ குடிக்க மாட்டேல்ல… அதுதான் உனக்கு பதிலா நான்…” என்றவன் நிறுத்தியபடி

”மூணாவது ரவுண்ட்…. குடித்தேன்”

ராகவ் அப்போதுதான் உண்மையிலேயே தன்னை பெருமையாக நினைத்துக் கொண்டான்… தன் பொறுமையை நினைத்து….

கண்களை மூடி தன்னை அடக்கி…. இதையெல்லாம் சகித்துக் கொண்டவன்…

”மிருணா… பார்த்துக்க” என்று சொன்னவனுக்கு… கொஞ்சம் பயமாகவும் இருந்தது… தன் தங்கையை அவனிடம் விட்டுப் போவதற்கும்…

சந்தோஷ்… அவளிடம் உரிமை என்று எதாவது உளறி…. முறை தவறி நடக்க முயற்சிப்பானோ என்று தயங்கி நிற்க..

சந்தோஷோ… அவன் எண்ணத்தை பிரதிபலித்தாற்போல

“நீ போ மச்சான்… உன் தங்கச்சிய நான் பத்திரமா பார்த்துக்கிறேன்… ஆனால் போய்ட்டு கொஞ்சம் லேட்டா வா” என்க

ராகவ் சந்தோஷை வேகமாக உற்றுப் பார்க்க… உளறவில்லை அவன்… மிருணாவை வெறித்தபடி பேச…

வேகமாக ராகவ் வெளியேறி தன் அறைக்கு வந்தவன்… தன் ஆடைகளில் எது சந்தோஷுக்கு பொருந்துமோ அதை தேர்ந்தெடுத்து கட்டிலில் போட…. அப்போதுதான் தன் போனையே கவனித்தவனுக்கு… சந்தியாவின் ஞாபகமும் வர….

தன் செல்போனை எடுத்து அதிவேக செக் செய்ய… சந்தியாவிடமிருந்து 2 அழைப்புக்கள் வந்து போயிருக்க…

வாட்ஸப் மெஸேஜை பார்க்க… “ நிரஞ்சனா வந்து விட்டதாகவும்… அவளோடு செல்வதாகவும்…” சந்தியா அனுப்பி இருக்க..

உடனெ சந்தியாவுக்கு போன் செய்ய மனம் நினைக்க… அதே நேரம் வேண்டாம் இப்போது இருக்கும் மனநிலையில் சந்தியாவோடு சாதரணமாகவும் பேச முடியாது… தன் குரல் மாற்றத்தை அவள் கண்டுபிடித்து விட்டால் சந்தோஷைப் பற்றி சொல்லியாக வேண்டும்…. என்று நினைத்து சந்தியாவுக்கு போன் செய்யாமல் போனைக் கீழே வைத்தவன்… அவனும் முற்றிலும் நனைந்திருந்தான் என்பதால்… குளியலறைக்குச் சென்றுவிட்டான்…

----

தலையில் நீர் சொட்ட சொட்ட இடுப்பில் மட்டும் டவலோடு அமர்ந்திருந்தவனிடம்… தலையைத் துவட்டிக் கொள்ளச்சொல்லி இன்னொரு டவலை மிருணாளினி நீட்ட …

முக்கால் வாசி போதை இறங்கியிருந்தாலும்… தலை பாரமாக வலிக்கத்தான் செய்தது சந்தோஷுக்கு… எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு இன்று.. அதிலும் அதிகப்பட்சமாக குடித்திருக்க… அதை அவனது உடல் ஏற்க முடியாமல் எதிர்வினை புரிய…. போதை வேறு தெளிந்ததில் மிருணாளினியைப் பார்க்கவே பயமாக இருந்தது சந்தோஷுக்கு…

இனி ஒரு போதும் குடிக்க மாட்டேன் என்று அவளிடம் சொல்லியிருந்தானே… இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளைப் பார்ப்பது…

மிருணாளினி தன்னை விரும்புவதாக சொன்ன போது… அவள் தன்னிடமிருந்து விலக தன் குடிப்பழக்கத்தை காரணமாகச் சொல்ல… அதையெல்லாம் கேட்டு தன்னை விரும்புவதை மாற்றிக் கொள்ளவில்லையே அவள்…… மனம் தவித்தது தன்னவளை நினைத்து

இவன் காதலிக்க ஆரம்பித்த போது இனி குடிக்கக் கூடாது என்று அவனிடம் மிருணாளினி கட்டளை இட்டிருக்க… இன்று தான் நடந்து கொண்டதை நினைத்து அவனுக்கே வெட்கமாக வர….

தன்னருகே வந்து அவள் நீட்டிய டவலை வாங்க விரல் நடுங்கியபடி நீட்டியவனுக்கு…. குற்ற உணர்ச்சியில் மனம் ஒருபுறம் அவனை தலைகுனிய வைத்தாலும்… மனைவி அனுப்பிய விவாகரத்துப் பத்திரம் அவன் மனதினை கொல்லாமல் கொல்ல… கையில் வாங்கிய டவலைக் கூட பிடிக்க முடியாமல் நடுக்கத்தில் கை ஆட… அதில் அந்தப் பூத்துவாலைத் துண்டு கீழே விழ….

அதை எடுத்து மிருணாளினி இப்போது தானே அவன் தலையைத் துடைக்க ஆரம்பிக்க… அந்த அக்கறையில்

“இனி என்னைப் பாருடி… ” கெஞ்சினான் சந்தோஷ்,,,

”உனக்காகவோ… இல்லை எனக்காகவோ…. நீ இந்த வாழ்க்கைக்கு சம்மதம் சொல்ல வேண்டாம்… ஆனால் கொஞ்சம் சுத்தி உள்ளவங்களப் பாரு… அவங்க சந்தோஷத்துக்காகவது நாம ஏன் சேர்ந்து வாழக் கூடாது… ராகவ் சந்தியா என்ன தப்பு செஞ்சாங்க… நாம இந்த மாதிரி பிரிந்து இருந்தால்… அவங்களுக்கு எப்படி இருக்கும்… இப்போ ஓகே… போகப் போக நம்ம லைஃப் அவங்க வாழ்க்கையையும் பாதிக்கும் மிருணா…” என இப்போது நிதானமாக அவளுக்கு புரிய வைக்க முயல

“ப்ச்ச்… இங்க யாரோட வாழ்க்கையும் யாரோடயும் சம்பந்தப்படலை... அதுமட்டுமில்லை என் அண்ணன் தெளிவானவன்.. அவன் லைஃபை குழப்பிக்க மாட்டான்” எனும் போதே

“சரி ரகு தெளிவானவனாகவே இருக்கட்டும்…. என் தங்கச்சி தெளிவானவ இல்லை… எனக்காக உன் அண்ணாகிட்ட சண்டை போட்டான்னா என்ன பண்ணுவ.. இதுக்கெல்லாம் ஒரே முடிவு… உனக்கென்ன… நான் உன்னைத் தொடக்கூடாது அவ்வளவு தானே…. நமக்குள்ள எதுவும் வேண்டாம்… எனக்கு நீ என் பக்கத்தில இருந்தா போதும்… “ என்ற போதே…

மிருணாளினி அவனைக் கேவலமாக ஒரு பார்வையைப் பார்த்து வைக்க…

“உண்மைதான் மிருணாளினி… இது உன் மேல சத்தியம்… நீ என்னை மறக்க மாட்டேன்னு தெரியும்… அதுக்கு ட்ரை பண்ணவும் மாட்டேன்னு தெரியும்… உன்னைப் பக்கத்தில இருந்து பார்க்கிற சந்தோசத்தை மட்டுமாவது கொடு மிருணாளினி… என்னைவிட்டு தள்ளி இருந்துட்டு என்னை நெனச்சுட்டு இருக்கிறதை விட… என் பக்கத்தில இருந்துட்டு… என்னை மறக்க முயற்சி பண்ணு” என்னும் போதே…

மிருணாளினி… அவனிடம்…

“நடக்காத கதையைப் பற்றி எதுவும் பேசாதீங்க…” என்றபடி அவனிடமிருந்து விலகி…. வரவேற்பறையை நோக்கிப் போக…

விலகிய அவளை சட்டென்று பிடித்தவன்,,,

“எனக்கு உன்கிட்ட தனியா பேசனும்… “

கைகளை அவனிடமிருந்து பறிக்க முயற்சி செய்தபடியே….

“அன்றைக்கு அண்ணா ஆஃபிஸ்ல நீங்க தனியா பேசுனீங்களே… அந்த மாதிரியா..” இளக்காரமாக அவனுக்கு இதழ் வளைத்து பதில் சொல்ல…

“அந்த மாதிரி பேசனும்னா…. இப்போ கூட பேசுவேன்… இவங்கள்ளாம் இருக்காங்கனுலாம் பார்க்க மாட்டேன்… ஆனால் அந்த மாதிரி நடக்க எனக்கும் விருப்பம் இல்லை” என்றான் பட்டென்று… சந்தோஷ் தன் மனைவியிடம்…

எதுவுமே பேசாமல்… அவனை விட்டு விலகிய மிருணா… அமைதியாக அங்கிருந்த சோபாவில் அமர…

சந்தோஷும் அவள் பின்னாலேயே வந்தபடி… மிருணாளினியின் அருகே அமர… மிருணாளினி ஏனோ இப்பொது அவனை விட்டு எழ முயற்சிக்காமல் அப்படியே அமர்ந்திருக்க… அவள் தோள் சாய்ந்திருந்தான் சந்தோஷ்…. சொற்போர் முடிவுக்கு வந்துவிட்டது என்பது போல…

ராகவ் வேக வேகமாக பேருக்கு தண்ணீரை அள்ளி ஊற்றி, உடை மாற்றி சந்தோஷுக்கு உடைகளோடு வந்தவன்… கட்டிலில் சந்தோஷைப் பார்த்தபடி வர… அவனோ சோஃபாவில் மிருணாளினியின் தோள் சாய்ந்து அமர்ந்திருக்க… அவர்கள் இருவரும் இருந்த நிலையைப் பார்த்தவன்… திகைத்து அப்படியே வாசலில் நின்றவன்… இனி தான் அவர்களுக்கு இடையில் போவது அநாகரிகம் என்று முடிவு செய்தவனாக….

வாசலிலேயே நின்றபடி… தங்கையை அழைத்து சந்தோஷுக்கான உடைகளை கொடுத்தவன்… அங்கிருந்து வெளியேற எத்தனிக்க….

சந்தோஷ் அவனை அழைத்தான்…

“ரகு ஒரு நிமிசம்…”

திரும்பினான் ராகவ்வும்

”உன் தங்கைகிட்ட சொல்றதெல்லாம் சொல்லிட்டேன்… 24 ஹவர்ஸ் டைம் கொடுக்கிறேன்… அதுக்குள்ள அவ எங்க வீட்டுக்கு வரணும்… இல்லை” என்று முடித்த போது…

ராகவ்வும்… கேள்வி முடிச்சோடு தன் பார்வையை சந்தோஷிடம் வீச…

“இல்லை நான் வந்துர்றேன்… “ என்ற போது… ரகுவுக்கு மெல்லிய சிரிப்பு வர… இருந்தும் அடக்கிக் கொண்டவனாக

“இந்த பொழப்புக்குத்தான் வரும்போது அவ்வளவு ஆவேசமாடா உனக்கு… நிம்மதியா என் பொண்டாட்டி கூட பேச விடறீங்களாடா” என்று இவனுக்குள் இவன் கவலை பெரிதாகிப் போக…

மிருணாளினியோ… இருவரையும் முறைத்துப் பார்த்தபடி… வெளியே போக… சந்தோஷ்… கண் சிமிட்டினான் ராகவ்வைப் பார்த்து…

“என் தங்கை லேட்டா வரட்டும்…. நான் இப்போதே வந்துர்றேன்… ஆனால் வரும் போது வலது காலை எடுத்து வச்சு வந்தேன்னா… அதுதான் ரகு சந்தேகம்” என்று சொன்னவனுக்கு… இன்னும் தலை சுற்றல் இருக்கத்தான் செய்தது….. போதையில் என்ன செய்தோம் என்று தெளிவாக ஞாபகம் இல்லை எனும் போது எந்த காலை எடுத்து வைத்தோம் என்றா ஞாபகம் இருக்கும்…

“வேணும்னா வெளில போய்ட்டு மறுபடியும் உள்ள வா… அப்போ வலது காலை எடுத்து வச்சு வா… தர்ம அடி வாங்கியிருக்கனும் என் தங்கச்சி கையால…. அநேகமா உனக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகி இருச்சுனு நினைக்கிறேன்… தப்பிச்சுட்ட” என்று சந்தோஷைக் கிண்டல் செய்தவன்… அதே நேரம்

“உன்னோட நிலைமை… எனக்கு புரியுது சந்தோஷ்… இனிமேல இந்த மாதிரி பண்ணாத சந்தோஷ்…. ப்ளீஸ்.. பிரச்சனையை இன்னும் இன்னும் அதிகமாக்குகிற மாதிரிதான் இருக்கு” என்றவனிடம் மனமாற சந்தோஷும் தன் மன்னிப்புகளை வேண்டிக் கொண்டவன்… வெளியில் வந்து கிளம்ப ஆயத்தமானவன்…

கிளம்பும் முன் மேசையின் மீதிருந்த விவாகரத்து பத்திரத்தை கையில் எடுத்தவன் அதை சுக்கு நூறாக கிழித்து மிருணாவின் கைகளில் திணித்தபடி…

“இனி இதுக்கு மேல இந்த பேப்பர் அனுப்புற ஐடியா இருந்தால்… ” என்று ஒரு நிமிடம் தன்னைச் சுற்றி இருந்த மூவரையும் ஒரு முறை பார்க்க…

அவன் அடுத்து என்ன சொல்ல வந்தானோ… ஏதாவது ஏடாகூடமாக சொல்லிவிடுவானோ என்று ராகவ் தான் முந்திக் கொண்டான்…

“சந்தோஷ்… அவ அனுப்ப மாட்டா விடு… நீ ஃபர்ஸ்ட் உட்காரு… நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு… அத்தையையும் மாமாவையும் வரச் சொல்லி இருக்கேன் “என்ற போதே

கணேசனும் வசந்தியும் வர… மிருணாளினி இவர்கள் வந்த உடன் தன் அறைக்குள் போய்ப் புகுந்து கொள்ள… அடுத்த சில நிமிடங்களில் திவாகரும் வந்து சேர…

இப்போது பெருத்த நிசப்தம் நிலவியது அங்கு… யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது என்று…

கணேசன் அன்று போல இன்று பெரிதாக வார்த்தைகளை எல்லாம் விட வில்லை…

பிரச்சனை என்ன என்று விசாரிக்க மட்டுமே செய்தார்… வசந்தி நடந்தவற்றை எல்லாம் கேட்டபடி இருந்தவருக்கு ஒன்று மட்டும் புரிந்தது… தன் மருமகள் மகனை வெறுக்கவில்லை… அவன் மேல் வைத்த அளப்பறிய காதல் தான் அவளின் இந்த பிடிவாதத்திற்கெல்லாம் காரணம் என்று உணர… மிருணாளினியிடம் தனியாக பேச முடிவு செய்தவளாக…

“நான் என் மருமககிட்ட தனியா பேசனும்” என்று யசோதாவிடம் சொல்ல… அத்தனை பேரும் வசந்தியை நோக்க…

சந்தோஷுக்கோ… தன் மேல் இருக்கும் கோபத்தை, மிருணாளினி தன் தாயிடம் காட்டி விட்டால் என்று தோன்ற

“ம்மா வேண்டாம்மா…” என்று தடுக்க

ராகவ்வுக்கும் அதே பயம் தான்…

“மிருணாளினி வசந்தியை ஏதாவது சொல்லி… வசந்தி மனம் வருந்தினால்… சந்தியா தாங்குவாளா… “ சந்தியாவை யோசித்து ராகவ்வும் வேண்டாம் என்று சொல்ல…

யார் தடுத்த போதும் பேசியே ஆக வேண்டும் என்று வசந்தி எழ…

அதே நேரம் வசந்தியின் போன் அடிக்க… சந்தியா எண்ணில் இருந்து தான்… வசந்தி அதைச் சொல்ல

ராகவ் வேகமாக வசந்தியிடம்

“அவகிட்ட இங்க நடக்கிற பிரச்சனையை பற்றிலாம் பேச வேண்டாம்… சாதரணமா பேசிட்டு வைங்க அத்தை” என்று சொல்லி விட…

“சொல்லு தியா…” என்று வார்த்தைகள் சுரத்தே இல்லாமல வசந்தியிடமிருந்து வர…

தாயின் தளர்ந்த குரலைக் கூட கண்டுபிடிக்க முடியாமல்…

எதிர்முனையில் சந்தியா போனை வைக்காமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க… வசந்தியும் பொறுமையோடு பதில் அளித்துக் கொண்டிருக்க…

ராகவ்வுக்கு சந்தியாவின் மீது தான் இப்போது கோபம் வந்தது….

தாயின் குரலில் இருந்த கலக்கத்தைக் கூட கண்டுபிடிக்க முடியாமல்,… அப்படி என்ன பேசிக் கொண்டிருக்கின்றாள்…. என்று…

வசந்தியும் வைக்காமல் அவளிடம் பேசியபடியே இருக்க..… பொறுமை இழந்த ராகவ் வசந்தியிடம் வந்து போனைத் தருமாறு கையை நீட்டிக் கேட்க…

வசந்தியும் அவனிடம் தயங்கியபடியே போனைக் கொடுக்க..

“சந்தியா.. உன் அம்மாகிட்ட கொஞ்சினதெல்லாம் போதும்… கொஞ்சம் போனை வைக்கிறியா…. அப்புறமா பேசுகிறோம்” என்று பட்டென்று அவள் பதிலைக் கூட கேட்காமல் வைத்து விட

வசந்தியின் போனை வைத்த அடுத்த நொடியே அவன் போனும் ஒலிக்க… அது சந்தியாவிடமிருந்தே வர… அதே நேரம் மிருணாளினியின் அறையை நோக்கிப் போன வசந்தியை மொத்த குடும்பமுமே ஆச்சரியமாகப் பார்க்க… ராகவ்வுக்கும் சந்தியாவின் அம்மா என்ன பேசி மிருணாளினியைச் சமாதானப்படுத்தப் போகிறார் என்று தோன்ற… அந்த ஆர்வத்தில்,ஆச்சரியத்தில் சந்தியாவின் போனைக் கட் செய்து சைலெண்ட் மோடில் போட்டவன்… சந்தியாவைப் பற்றி கவலை கொள்ளாமல்… அவள் நிரஞ்சனாவோடு அவளது வீட்டுக்கு போய்ச் சேர்ந்திருப்பாள். அதைச் சொல்லத்தான் அழைத்திருப்பாள்… இந்த களேபரம் எல்லாம் முடியட்டும் பிறகு பேசலாம் என்று முடிவு செய்தான்…

ஆனால் நிரஞ்சனா சந்தியாவைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல்… சிவாவிடம் அழைத்துச் சென்று விட்டாள் என்பதை அறியாதவனாக… வசந்தியிடம் பேசியது நிரஞ்சனா என்று புரியாதவனாக… தன் வாழ்க்கையில் அடுத்தடுத்து வரப் போகும் பிரச்சனைகள் பற்றி தெரியாதவனாக

தங்கையின் வாழ்க்கையில் பிரச்சனை தீர இனி என்ன செய்யலாம் என்று தன் தங்கை மிருணாளினி வாழ்க்கை பற்றி… சந்தோஷ் திவாகரிம் பேச ஆரம்பித்திருந்தான்…

---

/* என் பூமி சுற்றவில்லை

சூரியனில் வெளிச்சமில்லை

உன் வாசல் தெரியவில்லயே


அன்பே என் அன்பே

எங்கே நீ எங்கே

உன்னில் என்னை தொலைத்தேனடி

உன்னால் இன்நாள் மரித்தேனடி*/

2,830 views3 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது...

3 commentaires


DR.ANITHA selvan
DR.ANITHA selvan
21 juin 2020

Nice dear... But I miss Sandhiya.....

J'aime

haisulo
haisulo
21 juin 2020

Santhosh innaikku kalakittan. Sema. Ini vasanthi miruna kitta pesi samathanam pannitanga na Santhosh happy annachi

J'aime

Isai Selvam
Isai Selvam
21 juin 2020

Nice update.மிருணா சந்தோஷை ஏற்று கொள்வாள் அதுதானே ஆண்டாண்டு காலமாக நடக்கிறது.

J'aime
© 2020 by PraveenaNovels
bottom of page