top of page
Writer's picturePraveena Vijay

சந்திக்க வருவாயோ?-47-Part2

அத்தியாயம் 47-2

/*வானம் எங்கும் உன் பிம்பம்

ஆனால் கையில் சேரவில்லை

காற்றில் எங்கும் உன்வாசம்

வெறும் வாசம் வாழ்க்கை இல்லை*/

“சந்தியா” மெதுவான… நிம்மதியான குரலில் தன் வலியை எல்லாம் கட்டுப்படுத்தி… தன்னை ஆசுவாசப்படுத்திகொண்ட குரலில்…. தன்னவள் என நினைத்து… அவளை தன்னை நோக்கி அழைக்க…

அதீனாவோ…. அப்படியே அமர்ந்திருந்தாள்… புருவ முடிச்சோடு… தர்மசங்கடமான நிலையில்…

அதே பார்வையோடு அதீனா இப்போது நிரஞ்சனாவைப் பார்க்க…. நிரஞ்சனா “சந்தியா” ராகவ்” என்று மட்டும் எச்சிலை முழுங்கியபடி சொல்ல…

ராகவ்வோ… அதீனாவையே பார்த்தபடி…

சந்தியா தன்னைப் பார்த்து பயத்தில்… இரத்தத்தைப் பார்த்த அதிர்ச்சியில் மிரண்டு போயிருக்கின்றாள்… என்று மட்டும் தான் நினைத்தான்… அவனுக்கு அது அதீனா என்று நினைக்கவே தோன்றவில்லை… அதனால்

“எனக்கு ஒண்ணும் இல்லடா… இங்க வா” என்று மீண்டும் அழைக்க… அவள் அப்போதும் ஆணியடித்தாற் போல அங்கேயே நிற்க…

“மீசை வச்சுருக்கேன்னு அடையாளம் தெரியலையா சகி… “ தான் இருந்த நிலைமையிலும் தன்னவளை வம்பிழுக்க…

நிரஞ்சனாவால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை… வேகமாக அதீனாவிடம் திரும்பியவள்…

“ரகு பக்கத்தில போ… ஆனால் நீ ரகுகிட்ட பேச வேண்டாம்… இப்படியே மெயின்டைன் பண்ணு ப்ளீஸ்… அவருக்கு நீ சந்தியா இல்லைனு தெரிய வேண்டாம்” என்று காது கடிக்க…

கண்களில் தீப்பொறி பறந்தது அதீனாவிற்கு… ஆனாலும் நிரஞ்சனா… அவளிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்ள… வேறு வழி இன்றி.. மெதுவாக எழுந்தவள்… அப்படியே நிற்க…

வெங்கட்டும்…. ராகவ்வை சோபாவில் அமர வைத்திருந்தான் இப்போது…

சோஃபாவில் தலை சாய்ந்தவனுக்கு… அதற்கு மேல் பேச முடியவில்லை… தன் மனைவியைப் பார்க்கவென்று அதுவரை தான் சேர்த்து வைத்திருந்த கொஞ்ச நஞ்ச சக்தியும் வடிந்தது போல் இருந்தது… கண்கள் ஏனோ இருட்டிக் கொண்டு வர… மூச்சு விடுவதும் ஏனோ சிரமமாக இருக்க… அவனுக்குள் முதன் முதலாக தன் உயிரைக் குறித்த பயம் வரத் தொடங்கியது…. எங்கு சந்தியாவை இந்த உலகத்தில் தனியே விட்டு விட்டு போய்விடுவோமோ என்று… அதை நினைத்த போதே அவனையுமறியாமல் கண்களில் கண்ணீர் பெருக… அதே நேரம் சந்தியாவை இப்போது விட்டால் எப்போதும் பார்க்க முடியாது என்பது போல் தோன்ற…. வேகமாக இமைகளைப் பிரிக்க முயற்சி செய்ய…. அது முடியாமல் போக… கும்மிருட்டான உலகத்தை நோக்கி… அவன் பார்வை ஒட்டம் அவனை இழுக்க… இருந்தும்,

“ச.. ந்… தி… யா” என்றான்… தன் ஒட்டு மொத்த சக்தியையும் திரட்டி…. நான்கெழுத்து கொண்ட வார்த்தைக்கே அவன் திணறிய விதத்தில்…. நிரஞ்சனாவும் வெங்கட்டும்… பதறியவர்கள்…

“ராகவ்… ராகவ்” வெங்கட் அவன் கன்னத்தை தட்டி அவனை நினைவுக்கு கொண்டு வர முயற்சிக்க…

நிரஞ்சனவோ… “ரகு ரகு” என்று அழைத்தபடி அவன் கைகளைத் தேய்க்க ஆரம்பிக்க…. தொய்ந்து விழுந்தான் ராகவ்….

“வெங்கட் சார் ஏதாவது பண்ணுங்க…. ப்ளீஸ்…. “ நிரஞ்சனா கண்களில் நீரோடு துடிக்க ஆரம்பிக்க… அதீனாவோ கற்சிலையாக நின்றிருந்தாள்… இதையெல்லாம் பார்த்தபடி

வெங்கட் அதிர்ச்சியுடன் தன் அருகில் நின்ற அதீனாவை பார்த்தான்…. “சந்தியா எங்க நிரஞ்சனா” இப்போது வெங்கட்டின் குரல் முற்றிலுமாக உடைந்திருந்தது….

அங்கு இருப்பது அதீனா என்ற உண்மையைக் கண்டு கொண்டவனுக்கு… தன் நண்பனைக் காப்பாற்ற முடியாமல் போய் விடுமோ… மனைவியைப் பார்க்க வேண்டும் என்ற அவனின் கடைசி ஆசை கூட நிராசை ஆகி விடுமோ… பயப்பந்து சுழள ஆரம்பிக்க

வெங்கட்டின் கேள்வியில் இப்போது நிரஞ்சனா இன்னும் வேகமாக அழுதபடி…. வேகமாக அவனை ராகவ்விடமிருந்து தள்ளி அழைத்துச் சென்றவள்

“கோர்ட்ல என்ன ஆச்சுனே தெரியலை வெங்கட் சார்…. நியூஸ்ல கூட என்ன ஆச்சுனு சொல்ல மாட்டேங்கிறாங்க… சிவா சார் போனை எடுக்க மாட்டேங்கிறார்…. ஆனால் நியூஸ்ல காட்டுறதைப் பார்த்தால் பயமா இருக்கு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே…. ராகவ் மெதுவாக கண் திறக்க… இருவரும் பேசிக் கொண்டிருந்ததை சட்டென்று நிறுத்தி அவனை நோக்க….

ராகவ்வோ அருகில் நின்ற அதீனாவை நோக்கி தன் அருகே வருமாறு சைகை காட்ட… அவன் பார்வையில் தெரிந்த வலியில்…. தன்னையறியாமல் அதீனா அவனருகே சென்று அமர… வெங்கட்டும்… நிரஞ்சனாவும் அவர்கள் அருகில் வந்திருந்தனர் இப்போது…

தொண்டைக் குழிக்கும் நாசிக்கும் சுவாசத்தை கொண்டு செல்லவே பெரும்பாடுபட்டவனாக…. பெரு மூச்சை இழுத்து விட்டவனாக…

“சாரி சந்தியா” என்று சொல்லும் போதே கண்ணீர் வழிந்த அவன் கண்கள் வேதனையோடு அதீனாவின் கண்களையேப் பார்க்க… அந்த விழிகள் இவன் கண்கள் சொன்ன பாஷையை புரிந்து கொள்ள முடியாமல் திணற… ராகவ்வின் பார்வை அப்படியே ஆணி அடித்தார்ப் போல நின்று அவளையே சில நொடிகள் பார்க்க… அது சொன்ன செய்தி அவனுக்குள் இடியையே இறக்கியது இப்போது…

வார்த்தைகள் இன்றி பதட்டமடைந்தவனின் உடலும் தூக்கிப் போட… அதீனா வேகமாக அவனது கைபற்றினாள் இப்போது….

“ராகவ்… ரிலாக்ஸ்… டோண்ட் லூஸ் யுவர் ஹோப்” என்று இறுக்கமாக அழுத்த…

தன்னவளின் தோற்றத்தில் இருந்தவளின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள்… அப்படி கூட சொல்ல முடியாது… சந்தியாதான் அவளுக்கிருந்த அடையாளங்களை எல்லாம் தொலைத்து விட்டு… தோற்றத்தில் எப்போதோ அதீனாவாக மாறி விட்டாளே..

ஆக மொத்தம் தன் அருகில் இருந்த அதீனாவின் அந்நியத்தனமான வார்த்தைகளில் இன்னுமே உடைந்தவனாக… நிரஞ்சனாவை பார்த்தான்…

நிரஞ்சனாவைப் பார்த்த பார்வையில்… அவளை குற்றம் சாட்டும் பார்வை எல்லாம் இல்லை… மாறாக

“இனி என்ன இருக்கிறது…. எங்களுக்கு… “ என்ற இறுதிப் பார்வை…

இருந்தும் தன் கைப்பற்றி இருந்தவளின் கரங்களை நப்பாசையாக அழுத்தமாகப் பிடிக்க… அதுவும் அவன் மனைவிக்கும் அவனுக்குமான அறுந்த தொடர்பையே உறுதி செய்ய… விரல்கள் மெதுவாக தளர ஆரம்பித்தன….

ஆனாலும் மனைவியைப் பார்க்காமல் அவனால் இவ்வுலக தொடர்பிலிருந்து விடைபெற முடியாத கடினமான உயிர் வேதனை ஆரம்பிக்க… நிரஞ்சனாவிடம் சைகையால் தொலைக்காட்சியை காண்பித்து போடச் சொல்ல…

வெங்கட் வேண்டாமென்று நிரஞ்சனாவிடம் சொல்ல… இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அதினா… ரிமோட்டை உயிர்பித்தவள்…

“பாருங்க ராகவ்… உங்க மனைவிக்கு ஒண்ணுமில்லை…. நம்பிக்கையா இருங்க…” என்று அதீனா சொல்லிய வார்த்தைகள் எல்லாம் அவன் காதுகளில் விழவே இல்லை…

அந்தத் திரையையே அதில் தெரிந்த தன்னவளையே…. கஷ்டப்பட்டு பார்த்துக் கொண்டிருந்த ராகவ்வின் கண்கள்… மீண்டும் அதுவாகவே இமைகளை மூடிக் கொள்ள… பிரபஞ்சம் தாண்டிய பயணமாக அவன் பயணம் தொடங்க ஆரம்பிக்க….

நிரஞ்சனா அவன் காலடியில் அமர்ந்து கதறத் தொடங்கியிருந்தாள்… கடமை என்ற பெயரில் தான் செய்த அனைத்து மாபாதக செயல்களை நினைத்தும்…

……

பத்திரிக்கை நிருபர்களும்… கேமிராக்களைத் தாங்கிய மீடியா ரிப்போர்ட்டர்களும்… இந்த வழக்கு விசயமாக ஏதாவது தங்களுக்கு ஏதாவது ஒரு சின்ன விசயம் கிடைக்காதா என்று பரபரப்பாக வானில் வட்டமிடும் வல்லூறாக அந்த மருத்துவமனையைச் சுற்றி இருக்க….

மருத்துவமனையில்… சிவா… அமீத்… கரண் மற்றும் மருத்துவர் குழு என சந்தியாவைச் சுற்றி சிறு கூட்டம் பதட்டத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க…

“சார்… ப்ராப்ளம் ஏதும் இல்லையே… அதிர்ச்சியிலதான் மயக்கமானாங்க” என்று தன் பதட்டத்தை எல்லாம் தனக்குள் மறைத்தபடி…. ஒரு காவல் துறை அதிகாரியாக மட்டும் கேட்ட சிவாவிடம்…

“பயப்படும்படி ஒண்ணும் இல்லை” என்றார் தலைமை மருத்துவரும் சந்தியாவின் கைகளில் நாடித்துடிப்பைப் பார்த்தபடி….

அப்போதுதான் அனைவருக்கும் நிம்மதி வர… அமீத்தும் கரணும் வெளியே வந்திருந்தனர் இப்போது…

அவர்கள் வெளியே சென்றதும்… சிவா தன் அருகில் இருந்த சுமன் என்னும் பெண் மருத்துவரிடம் ஏதோ ரகசியம் பேச…

சுமன் வேகமாகத் தன் தலைமை மருத்துவரிடம்…

“டாக்டர்… நான் இந்த கேசை டேக் கேர் பண்ணிக்கிறேன்… இந்த அக்யூஸ்ட் ஜெயில்ல இருந்து நான் பார்த்துட்டு இருக்கிறதால்” என்று சொல்ல…

”ஷ்யர்… ஒண்ணும் பிராப்ளம் இல்லை… நீங்களே பார்த்துக்கங்க… ” என்று அங்கிருந்த மருத்துவக் குறிப்பில் எழுத ஆரம்பித்தவர்… சுமனுக்கு தலைமை மருத்துவராக இன்னும் சில தகவல்களை அறிவுரையாகச் சொன்னவர்…

கரண் மற்றும் அமீத்திடம் திரும்பி…

“ப்ரஸ் மீட்டுக்கு நான் ரெடி கரண்…. ஜஸ்ட் அதிர்ச்சில இவங்க மயங்கிருக்காங்க… வேற எந்தப் பிரச்சனையும் இல்லை…” என்று முடித்த நொடி…. சிவா நிம்மதிப் பெருமூச்சு விட… கரண் அங்கு படுத்திருந்தவளை வெறித்துப் பார்த்தார்… எப்படி தப்பித்தாள் என்ற வெறியோடு…

அதன் பிறகு…. பத்திரிக்கை நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு சிவா அமீத் கூட்டணி பதில் சொல்ல ஆரம்பிக்க…

அவர்கள் வைத்த ஒவ்வொரு கேள்வியும் சிவாவை திணறடிக்கவே செய்தது…ஹிந்தியிலும் ஆங்கிலத்திலுமாக சராமரியாக சிவாவை நோக்கி வந்து கொண்டிருந்தன கேள்விக் கணைகள்…

‘பாதுகாப்பின்மை’ இதுதான்… அங்கு வந்த ஒவ்வொருவரின் கேள்வியின் ஆரம்பமாக இருக்க… அப்போது அங்கிருந்த ஒரு நிருபர்…

“அந்தக் கட்டிடத்தில் இருந்து தீவிரவாதி சுட்டான்னு சொல்றீங்க… அதே நேரம்… அந்த தீவிரவாதியும் இறந்து போயிருக்கான்…” என்ற போதே

“அவன் தன்னைத்தானே சுட்டு இறந்துருக்கலாம்” இதுதான் இப்போதைக்கு எங்களால் சொல்ல முடியும் என்று முடிக்க… சலசலப்போடு… திருப்தியின்மையோடு கூட்டம் முடியப் போக…. அப்போது அங்கிருந்த பத்திரிகை நிருபர் ஒருவர்…

”ஜெயவேல் சார் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகியிருப்பதற்கு கூட இந்தப் பெண் தீவிரவாதி தான் காரணம்னு அரசல் புரசலா” என்று ஆரம்பித்த போதே…

”ஆதாரம் இருக்கா… அமைச்சர் சைட்ல இருந்து உங்களுக்கு தகவல் வந்ததா” சிவா சீறிப் பாய… கரண் பார்வையில் வஞ்சினம் இப்போது குடிகொண்டிருந்தது

அந்த நிருபர்… தலையைச் சொறிந்தபடி… “ஆதாரம் லாம் இல்லை” என்ற போதே…

“அப்போ கேள்வியா கேட்காதீங்க… உங்க அனுமானத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது சார்.. இது எப்படி நீங்க கேட்டீங்க… முதல்ல உங்ககிட்ட இருந்துதான் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்” என்று கேட்ட நிருபருக்கே ஆப்பை சிவா இறங்க… அந்தக் கேள்வி… மீட்டிங் நோட்டிலிருந்து திரும்பப் பெறப்பட…. ப்ரஸ் மீட்டும் முடிவடைய .. அதே நேரம் ஃப்ளாஷ் நியுஸில்… ’பெண் தீவிரவாதி உயிர் தப்பினார்… அவளைக் கொல்ல வந்த தீவிரவாதியும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை…’ என்ற புதிய தகவல்…. அனைத்து மீடியாக்களிலும்… ஒளி-ஒலியாக வந்து கொண்டிருந்தது….

பிரஸ் மீட்டை முடித்தானோ இல்லையோ… சந்தியா படுத்திருந்த அறைக்குள் வேகமாக நுழைந்த சிவா… சந்தியாவின் முன் மண்டியிட்டு அமர்ந்தவனாக அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்…

விசாரணை என்ற பெயரில் அவளிடம் காவல்துறையினர் அரக்கத்தனமாக நடந்ததில்… கண் மண் தெரியாமல் அடித்திருந்ததில்… ஆங்காங்கே முகத்தில் காயத்தடங்கள்… கண்கள் கலங்கின சிவாவுக்கு…

அதீனாவுக்கு உனக்கும் என்ன வித்தியாசம் என்று காட்ட இவனும்தான் சந்தியாவை அறைந்து காட்டினானே… மனதுக்குள் குற்ற உணர்வு அவனைக் கூர் கூராக கிழித்தது…

”சாரி சந்தியா” என்றபடி அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்து அதில் தலை வைத்தபடி.

“டோட்டலா நான் ஒரு டம்ப் சந்தியா… இதுக்கு மேல நான் முட்டாளா இருக்க விரும்பலை… நான் உன்னை உன் ரகுகிட்டயே சேர்த்துறேன் சந்தியா….” என்றவனின் கண்களில் கண்ணீர் துளித் துளியாக விழ…

“எப்படி சந்தியா… நீயும் அதீனாவும் மாறுனீங்க… ” என்று மயக்கத்தில் இருந்த சந்தியாவிடம் கேட்டான்.. பதில் தான் அவளிடமிருந்து வரவில்லை…

சந்தியாவுக்கும் ராகவ்வுக்கும் தங்கள் துணையின் சிறு கையணைப்பு கிடைத்திருந்தால் கூட தங்கள் நிலையில் இருந்து மீண்டிருப்பார்கள்… ஆனால் இருவருமே ஒருவரை ஒருவர் உணர முடியாத நிலையில் தங்கள் துணையை சந்திக்க முடியாத கோரமான எதிரெதிர் முனைகளில் இருந்ததுதான் விதியின் கொடுமை… இப்படிப்பட்ட கொடூரமான எதிரெதிர் முனைக்கு சந்தியா ராகவ் வர காரணமான சந்தியாவின் டெல்லி பயணம் இதோ உங்கள் பார்வைக்கு

----

சந்தியாவுக்கு… இதுவரை டெல்லிக்கு வர புகைவண்டி பயணம் மட்டுமே அனுபவமாக இருந்திருக்க…. இதுதான் டெல்லிக்கான அவள் முதல் விமான பயண அனுபவம்….

விமான நிலையத்தில் இறங்கும் போதே டெல்லியின் குளிர் வாட்டி எடுக்க… வேகமாக கையில் வைத்திருந்த தன் கணவனின் ஜெர்க்கின் ஜாக்கெட்டை எடுத்து அணிந்தாள்.. அவன் பிறந்த நாள் அன்று நள்ளிரவு வெளியே போனபோது அவனிடமிருந்து அவளிடம் மாறி இருந்த ராக்வ்வின் கோட்… குளிருக்கு இதமாக அவள் அணிந்தவளுக்கு… அவன் சொன்னது இப்போதும் காதில் ஒலித்தது

”அங்க இப்போ விண்டர் சீசன் சந்தியா… இறங்கியதும் இதைப் போட்டுக்க” அக்கறையாக அவன் சொன்ன அந்த வார்த்தைகளின் நினைவு தந்த தாக்கத்தில்… அந்த கோட்டோடு கைகளை இறுக கட்டிக் கொண்டவளுக்கு தன்னவன் தன்னருகே இல்லாவிட்டாலும்… தன்னோடு இருப்பது போலவே தோன்றியது…

ராகவ்வை விட்டு பிரிந்து வந்திருந்தாலும்…. நிரஞ்சனாவை, காதம்பரியை, முரளியை, காதம்பரியின் பிறந்த குழந்தையைப் பார்க்கப் போகிறோம் என்ற நினைவே அவளை ஓரளவு உற்சாகத்தில் வைத்திருந்தது…. அதுமட்டும் அல்லாமல் தன் கணவனும் இன்னும் சில நாட்களில் வந்து விடுவான்…. அதுவும் அவ்வவ்போது என்றில்லாமல் தன்னோடே தங்க வருகிறான் என்ற ஆனந்தம் வேறு….

விமான நிலையத்தை விட்டு வெளியே வராமல்…. அங்கிருந்தபடியே நிரஞ்சனாவுக்கு போன் செய்ய…. அவளும் இன்னும் சற்று நேரத்தில் தான் வந்து விடுவதாகக் கூற… நிரஞ்சனாவுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்…

முதலில் தன் அன்னைக்கு போன் செய்து டெல்லி வந்து சேர்ந்து விட்டதைச் சொன்னவள்… அடுத்ததாக ராகவ்வுக்கு போன் செய்ய… வழக்கம்போல இருவருக்கும் இடையில் கண்ணாமூச்சி ஆடும் போன் அழைப்பு அன்றும் தன் விளையாட்டை காண்பித்தது…

ஏற்கனவே சொல்லி இருந்தான் ராகவ்… இவளை டெல்லி அனுப்பி விட்டு தூங்கப் போவதாக… அதனால்

”இன்னுமா தூங்குகிறான்…“ செல்லில் மணியைப் பார்க்க மணி 8 எனக் காட்ட.. இன்னும் இரண்டு முறை அடித்துப் பார்க்க… அது எடுக்கப்படவே இல்லை….

“ப்ச்ச்… இந்த ரஞ்சியும் இன்னும் வரலை” என்று அந்த விமான வளாகத்தில் அமர்ந்தபடி கண்களைச் சுழற்றியபடி வேடிக்கை பார்த்தவளுக்கு… அங்கிருந்த அழகான ஜோடி.. அதிலும் அந்நியோன்யமாக இருந்த அவர்கள் அவள் கண்ணில் பட சுவாரசியமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்…. அந்தப் பெண் கர்ப்பமாக இருந்தாள்… அவன் ஏதோ பாடம் போல் அவளிடம் சொல்லிக் கொண்டிருக்க… அவன் கைகளைக் கோர்த்தபடி அவன் தோளில் சாய்ந்தபடி அந்தப் பெண்… சோகமாக அதைக் கேட்டுக் கொண்டிருக்க… அதைப் பார்த்தவள்

“எங்கு பார்த்தாலும் நம்ம கேஸ்தான் போல… இது கொஞ்சம் நம்மள விட அதிகம்…“ தனக்குள் சொல்லிக் கொண்டாள்….

கர்ப்பிணியாக இருக்கும் அவளை விட்டு விட்டு ஊருக்கு கிளம்புகிறான் போல… அந்தப் பெண்ணின் கண்களில் அவ்வளவு வலி…. சில நிமிடங்களில் அந்த இளைஞன் புறப்பட வேண்டிய நேரம் வந்து விட… அந்த ஜோடி அங்கிருந்து கிளம்ப… அதுவரை அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சந்தியாவுக்கு இப்போது பொழுது போகாமல் மீண்டும் போரடிக்க.. மீண்டும் தன் கணவனுக்கு போன் அடிக்க.. இப்போதும் எடுக்காமல் இருக்க…

“ரகு கும்பகர்ணா” என்று மனதுக்குள் அவனை தாளித்தவள்… வாட்ஸப்பில்

“ட்ரிப்ப்ள் ஆர்(RRR) கொஞ்சம் எழுந்திருடா… குவாட்ரப்பிள் ஆரா(RRRR) மாறி.. கனவுல உன் பொண்டாட்டியோட… ரொமான்ஸ் பண்றதை நிறுத்திட்டு… முழிச்சுப் பாருடா” அவள் அருகில் யாரும் இல்லைதான்… சற்று இடைவெளி விட்டுதான் மக்கள் அமர்ந்திருந்தனர்… இருந்தும்… ஹஸ்கி குரலாக…. ரகசியமாக மெதுவாக அவனுக்கு ஆடியோ மெசேஜ் அனுப்ப…

மனைவியின் குரல் கணவனின் மொபைலுக்கு சென்றடைந்த போதே… அவள் கணவனுக்கும் கேட்டு விட்டதோ… உறக்கத்தில் இருந்து கண் விழித்தவன்… மொபைலை எடுத்துப் பார்க்க… அது மனைவியிடமிருந்து வந்த மிஸ்ட் காலையும் கூடவே ஆடியோ மெசேஜையும் காட்ட… ஆர்வமாக எடுத்துக் கேட்டவன்…

“யெஸ் பாஸ்… ஆனால் டிர்ப்பிள் ஆர் மட்டும் தான் நான்… ரொமான்ஸுக்கு முழுப் பொறுப்பு ரகுவோட பொண்டாட்டிதான்… கனவுல ரொம்ப இம்சை பண்றடி… ஏய் பொண்டாட்டி என் மேல இவ்வளவு ஏக்கமா… ” என்று அவளைப் போலவே ஹஸ்கி வாய்சில் பதிவு செய்து அனுப்பியவன்… கூடுதலாக..

“10 மினிட்ஸ் டைம் கொடு… கால் யூ பேக்” என்று மனைவியிடம் டைம் கேட்க… சந்தியாவும் “ஒகே…வெயிட்டிங்” என்று ஸ்மைலி இமேஜை அனுப்ப

புன்னகையுடன்…. குளியலறை நோக்கிச் சென்றான்.. எப்படியும் அவளோடு பேச ஆரம்பித்தால்… மணிக்கணக்காகும் என்று உணர்ந்தவனாக

மீண்டும் தனிமை… ஏனோ தனிமை… சந்தியாவுக்கு எதுவுமே பிடிக்கவில்லை…. கணவனைப் பிரிந்த தனிமைதான் இந்த மாதிரியான உணர்வைக் கொடுக்கின்றது போல தன்னைத் தேற்றிக் கொண்டவளுக்கு காதம்பரியிடம் பேசினாலாவது ஆறுதலாக இருக்கும் எனத் தோன்ற….

காதம்பரிக்கு அழைத்து பேசலாம் என்று முடிவெடுத்தவளாக அலைபேசியை எடுக்க… அதற்கு முன்னமே அவள் கணவன் அடித்து விட்டான்…

அதாவது அவன் கொடுத்த 10 நிமிடத்திற்கு முன்னரே…

“காதுவை நாம நெனச்சாலே இவனுக்கு மூக்கு வேர்த்திருமே” என்று செல்லமாக கணவனைக் கடிந்தபடி போனை எடுக்க…

கண்ணாடியில் முகச் சவரம் செய்த படியே ராகவ் பேச ஆரம்பித்தான்…

“நிரஞ்சனா வந்துட்டான்னா… என்கிட்ட பேசாமல் போய்ட்டேன்னா.. அதுதான் உடனே அடித்தேன்” என்று தான் உடனே போன் செய்த காரணத்தையும் சொன்னவன்…. நிரஞ்சனா வீட்டைப் பற்றி விசாரித்தான்…

“பிடித்திருந்தா பாரு.. இல்லை நான் அங்க வந்தவுடனே வேற வீடு பார்த்துக்கலாம்” ராகவ் சொல்ல…

சிரித்த சந்தியா… “2 மந்த்ஸ் வேலைக்கு போகிற ஐடியா இல்லையா ரகு மாம்ஸ்…” எனும் போதே…

”அது சர்ப்ரைஸ்” என்று இவன் சொல்ல…

“ப்ச்ச்… என்ன சர்ப்ரைசோ… போ…. ஆமா மாமாவை எப்படி கரெக்ட் பண்ணின” ஆச்சரியத்துடன் கேட்டவள்…

“மாமாகிட்ட பேசிட்டியா ரகு” என்று ஆவலாக கேட்க ஆரம்பிக்க…

“ஹ்ம்ம்… நேத்து உங்க வீட்ல இருந்து வந்தவுடன்… எங்க வீட்ல பேசினேன்… நீ டெல்லிக்கு போற… ஏர்ப்போர்ட்டுக்குப் போகனும்னு…. ஆனால் அப்பாகிட்ட பெருசா நம்மளப் பற்றி சொல்லலை… அவருக்கு அதிகமான எமோசனல்ஸ் கொடுக்கக் கூடாதுனு டாக்டர்ஸ் சொல்லிருக்காங்க… ஜஸ்ட் லைக் தேட்னு சொல்லிருக்கேன்… அல்ரெடி மிருணா விசயத்தில் அவர் ரொம்ப வீக்கா இருக்கார்… நமக்கு எந்த ஒரு பிரச்சனையுமில்லை என்ற வகையில அவர்கிட்ட பாலிஷா சொன்னேன்… அதுக்கே மனுசன் ரொம்ப எமோஷனல் ஆகிட்டாரு….” என்றபடியே…. கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தவன்… முகத்தைச் சுளித்தபடியே

“சந்தியா… உண்மையாவே எனக்கு மீசை நல்லா இருக்குமாடி…” சிறு பிள்ளைபோலக் கேட்டவனிடம்…

“ஒரு ஆம்பளைப் பையன் கேட்கிற கேள்வியா ரகு… மீசை இல்லேன்னா நல்லாருக்குமான்னு கேட்டா அவன் ஆம்பளை… நீ என்னடான்னா”” என்று இவள் சலிக்க…

“சந்தடி சாக்குல… எவ்வளவு என்னைக் கேவலப்படுத்தனுமோ அவ்வளவு பண்ணுடி… என்னை டேமேஜ் பண்ணவேன்னு… பெறப்படுத்துருப்ப போல” என்றபடியே.. தன் வேலையில் மீண்டும் கவனமாக…

“ரகு” என்றாள் இப்போது குழைந்த குரலில்…

“என்ன மேடம்… இவ்ளோ… வழியுறீங்க” என்ற போதே இவன் குரலிலும் இப்போது போதை வந்திருக்க..

“இங்க எனக்கு முன்னால ஒரு செம்ம ஜோடி… ரகு” என்று இழுத்த போதே…

ராகவ்வுக்கு சிரிப்புதான் வந்தது…. அவனுக்கு ஏனோ சந்தியாவின் ஞாபகங்கள் பின்னோக்கி இழுக்க.. இதே போல் அன்றொரு நாள்… ட்ரெயினில் அவர்களோடு வந்த ஒரு இளம் தம்பதியோரோடு இவள் பண்ணிய அலம்பல்கள்தான் ஞாபகத்துக்கு வந்தது… அந்த கோச்சில் வந்த அந்த இளம்பெண்ணிடம்… இவள் அரட்டை என்ற பெயரில் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வர… அவள் கணவன்… கொலை வெறியோடு சந்தியாவை பார்த்துக் கொண்டு வந்தது இப்போது ஞாபகத்துக்கு வர… அப்போதான் அப்படி இருந்தா… இப்போதுமா…

சிரித்தபடி இவன் நினைத்தவற்றைக் கேட்க…

“ஹலோ… நான் ஒண்ணும் இவங்கள டிஸ்டர்ப் பண்ணலை… ஜஸ்ட் பார்க்க மட்டும் தான் செய்தேன்… ”

“அப்போ அவங்கள டிஸ்டர்ப் பண்ண… அதை ஒத்துக்கறியா… பாவம்டி.. நீ பண்ணின டார்ச்சர்ல வேற கோச்சுக்கே ஓடிப் போய்ட்டாங்க… என்ன சாபம் விட்டானோ அந்தப் பொண்ணோட புருசன்…. என்னைத்தான் வந்து துரத்தி அடிக்குது“ உண்மையாகவே சலித்தவனிடம்

“ரகு” சிணுங்கியவளாக…

“நான் சொல்றதை கேட்க போகிறாயா இல்லையா..” என்று பொய்க் கோபம் காட்டியவளிடம்…

“சொல்லு” என்றான் முகத்தை அலம்பிவிட்டு துண்டால் துடைத்தபடியே…

“அவங்க ப்ரெக்னெண்ட் லேடிடா… அவங்க ஹஸ்பெண்ட் அவங்கள விட்டுட்டு ட்ராவெல் பண்ணப் போறாங்க போல…”

“அதுக்கு” என்றான் எரிச்சலாக… இருந்தும் அதை அவளிடம் காட்டவில்லை

“அவங்க பாவம்டா… எவ்ளோ ஃபீலிங்க சோகமா இருந்தாங்க தெரியுமா”… இவள் உருக்கமாகச் சொல்ல…

“என்னை என்னடி பண்ணச் சொல்ற.. அதுக்கு” இப்போது இவன் குரலில் இருந்த கடுமை நேரடியாக அவளைச் சென்றடைய… வேகமாக தான் சொல்ல வந்த விசயத்துக்கு வந்தாள்

“அந்த மாதிரி… என்னை நீயும் விட்டுட்டு போயிருவியா... அங்க போறேன் இங்க போறேனு “ ஏக்கமாகக் கேட்க…

இவன் ஏதும் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க… சந்தியாவே தொடர்ந்தாள்…

“நீதானே சொல்லிருக்க… மாதத்துக்கு நாலுதடவை எங்கயாவது பறந்துட்டே இருப்பேன்னு… சென்னைல இருக்கிற டைமே ரொம்ப குறைவு… அதிலயும் வீட்ல இருக்கிறது ரொம்ப குறைவு… அதிலயும் என்கூட இருக்கிறது ரொம்ப ரொம்ப குறைவுனு… கால்குலேஷன்லாம் போட்டுச் சொன்னியே… அதுனாலதான் கேட்கிறேன்… நீ என்ன பண்ணுவியோ தெரியாது… நான் கன்சீவா இருக்கிறப்போ நீ என்னை விட்டு எங்கேயும் போகக் கூடாது…” அவன் கூறிய அனைத்தையும் ஒப்பித்து முடித்தவள்… முடிக்கும் போது ஆணையிடுவது போல் கூற,,,

“ஹ்ம்ம்ம்… அப்டீங்களா மேடம்.. அப்போ மற்ற நாள்லாம் நான் உங்களுக்குத் தேவையில்லையா சகி” என்ற போதே

“மிருனாளினி வெளில வாடி” என்ற சந்தோஷின் ஆவேசக் குரல் மாடி அறை வரை எதிரொலிக்க…

வேக வேகமாக ராகவ் அறையை விட்டு வந்து வெளியே எட்டிப் பார்க்க… சந்தோஷ் வரவேற்பறையில் பெருங்கோபத்தோடு கத்திக் கொண்டிருக்க…

நொடியில் சந்தியா பேசிக் கொண்டிருந்த விசயங்களை எல்லாம் மறந்தவனாக…

“சந்தியா நான் அப்புறமா பேசுகிறேன்” என படபடவேன்று பேசியபடி வைக்கப் போக…

சந்தியாவுக்கும்… இலேசாக ஏதோ ஒரு சத்தம் கேட்டதுதான்…. ஆனால் இப்போது ராகவ் குரலில் இருந்த பதட்டத்தில் என்னவென்று கேட்க

சந்தோஷைப் பற்றி சொல்லாமல்…

“ஒண்ணும் இல்லை சந்தியா… நான் வைக்கிறேன்” என்ற போதே

“நான் நிரஞ்சனா வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணவா” என்று மட்டும் கேட்டாள்…

“சரி சரி… நான் போனை வைக்கிறேன்” என்று அவளின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் வைத்து விட...

“என்னாச்சு இவனுக்கு” என்று யோசித்தபடியே போனை மட்டுமே பார்க்க முடிந்தது சந்தியாவால்….

/*உயிரை வேரோடு கிள்ளி

என்னை செந்தீயில் தள்ளி

எங்கே சென்றாயோ கள்ளி

ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன்

கடல் மேலொரு துளி வீழ்ந்ததே அதை தேடித்தேடி பார்த்தேன்

உயிரின் துளி காயும் முன்னே என் விழி உன்னை காணும் கண்ணே

என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா*/

2,843 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது...

Comments


© 2020 by PraveenaNovels
bottom of page