அத்தியாயம் 23-1:
அந்த பெரிய திருமண மண்டபத்தின் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் நின்ற ரிஷி…தன் பைக்கை நிறுத்த இடத்தைப் பார்க்க… அங்கு இடமே இல்லை…. சுற்றி முற்றி பார்க்க…. அப்போது அங்கிருந்த காவலாளி… ஓடி வந்து
“சாரி சார்… சாரி சார்… ஃபோர் வீலர் பார்க்கிங் ஃபுல் ஆனதுனால கொஞ்சம் ப்ராப்ளம் சார்… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… அதோ அந்த கார் எடுத்துட்டு இருக்காங்க… அங்க உங்க பைக்கை நிறுத்திறலாம்… அங்க அப்போதான் வேற கார் நிறுத்த மாட்டாங்க… பொண்ணு வீட்டோட கார் அங்கதான் இருக்கு… அடிக்கடி எடுக்கிறாங்க… பைக் மட்டும் நின்னா அவங்களுக்கும் வசதி… ” என்று படபடவென்று சொல்ல ஆரம்பித்தான்…
அவன் கவலை அவனுக்கு…ரிஷி நிர்வாகத்திடம் புகார் அளித்து விடுவானோ என்ற பதட்டத்தில் சொல்ல… ரிஷியும் அவன் பதட்டத்தை புரிந்து கொண்டவனாக… காத்திருந்து… தன் பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றான்….
காலை 8 மணி… மூகூர்த்த நேரம் நெருங்கி விட்டது போல… மொத்த கல்யாண மண்டபமும் பரபரப்பாகி இருக்க… ரிஷியின் கண்கள் அந்த மண்டபத்தையே சுற்றி வந்து தன் தாய் தங்கைகள் இருக்கும் இடத்தை கண்டு கொள்ள…. அவர்களை நோக்கி சென்று கொண்டிருந்தான்…
நேற்று மாலையே இலட்சுமியை இங்கு… அதாவது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு கொண்டு வந்து விட்டுவிட்டு போனதும் ரிஷியே…. ஆனால் ரிது ரிதன்யாவைக் கூட உள்ளே போய் பார்க்கவில்லை…
“நாளைதான் திருமணத்திற்கு வரபோகிறேனே…அப்போதே பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றவன்… இதோ இப்போதும் வந்து விட்டான்…
மேடையைக் கூடப் பார்க்காமல் தன் குடும்பத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தவனுக்கு உள்ளுணர்வு நன்றாகவேச் சொன்னது….. மகிளா அவனைப் பார்த்து விட்டாள்… இப்போது பார்த்தும் கொண்டிருக்கின்றாள்… அதுமட்டும் அல்லாமல் இவனது பதில் பார்வைக்காக காத்துக் கொண்டிருக்கின்றாள்… என்பதை
அதை உணர்ந்த போதே…. ரிஷிக்கும் பரபரத்ததுதான் மனம்…
அவளைப் பார்க்க மனமெங்கும் ஆசைதான்…. ஆனால் வழக்கம் போல மூளை எச்சரிக்க….அதே நேரம் இன்னொரு பார்வையும் இவனை ஊடுருவியதை இவன் உணராமல் இல்லை… வேறு யாராக இருக்கக் கூடும்… மகிளாவின் தந்தை நீலகண்டனே… அவரும் இவனையேத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்…. மகளின் பார்வையை பார்க்கத்தான் தடை… தந்தையின் பார்வையை பார்க்க என்ன தடை… என்ற ரீதியில் நீலகண்டனின் பார்வையை அலட்சியமாக ரிஷி எதிர்கொள்ள… தன்னை ஊடுருவிய அந்தக் கண்களில் இருந்தது என்ன???? வழக்கமான அலட்சியம் இல்லை இன்று… மாறாக… அளவுக்கும் அதிகமான பரிதவிப்பு அவர் கண்களில் இருந்ததோ… ஒரு வேளை தன்னை அவர் இங்கு எதிர்பார்க்கவில்லையோ…
யோசித்தபடியே தன் குடும்பத்தை நோக்கி நடந்து சென்றவனை…. ரித்விகா பார்த்துவிட… ஓடோடி வந்து தன் அண்ணனைக் கட்டிக் கொள்ள… ரிஷியின் மனதில் அதன் பின் வேறு யாருக்கும் இடமில்லாமல் தங்கைகள் மட்டுமே… தன் தாய் இலட்சுமியிடம் கூட அவ்வளவாக பேசவில்லை… இன்றைய பொழுது தங்கைகளுக்கு மட்டுமே என்பது போல… இருவரிடமும் பேச ஆரம்பித்தான்…
அதிலும் ரித்விகாவுக்கு தன் அண்ணனிடம் சொல்ல வேண்டிய விசயங்கள் ஆயிரம் இருந்தது போல… பேச ஆரம்பித்தவள்… பேசினாள்… பேசினாள்… பேசிக் கொண்டே இருக்க… ரிதன்யாவும் ரிஷியும் புன்னகை முகத்தோடேயே அவள் பேசியதைக் கேட்டபடியே அவளைப் பார்த்துக் கொண்டிருக்க…
இப்போது ரிதன்யா ரிஷியிடம்
“அண்ணா உனக்கு தெரியுமா… மகிக்கும் இவளுக்கும் பெரிய பஞ்சாயத்துண்ணா… உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்றதில… கார்ல ஏறும் போதே…. எங்க அண்ணா கூட நாங்கதான் பேசுவோம்… உனக்குலாம் டைம் கொடுக்க மாட்டோம்னு மகிட்ட சொல்ல… மகி டென்சன் ஆகிட்டா” என்ற போதே
ரித்விகா… தன் சகோதரியைக் பழிப்புக் காட்டியபடி…
“ஏன் சொன்னா என்ன?... சொன்னதில என்ன தப்பு.... என் அண்ணா எனக்குத்தான் ஃபர்ஸ்ட் … அப்புறம்தான் மற்ற எல்லாருக்கும்” என்று உரிமையும் பிடிவாதமும் ஒருசேர தன் அண்ணன் தோள் சாய்ந்தவள்… மேடையைப் பார்க்க… பார்த்தவள் உடனே இங்கிருந்தே பழிப்புக் காட்ட… ரிஷியும் அவனை அறியாமல் தங்கையின் பார்வை சென்ற திசையைப் பார்க்க… மகிளாதான் இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்…ரிஷியின் பார்வை வட்டத்தில் தான் எப்போது விழுவோம் என்றுதான் மகிளாவும் காத்துக் கொண்டிருந்தாள் போல…
இவன் பார்வை அவளைத் தீண்டிய அடுத்த நொடி துள்ளளோடு வேகமாக கை அசைக்க… ரிஷி கைகளை எல்லாம் ஆட்டாமல்… தலையை மட்டுமே ஆமோதிப்பாக ஆட்டியவன் பார்வையை வேறு திசையில் மாற்ற நினைத்தான் தான்… ஆனால் அவனால் முடியவில்லை…
காரணம்…. ’புடவை கட்டிய மகிளா’… கண்கள் வேறு எங்கும் போகாமல் சண்டித்தனம் செய்து அவளிடமே நிலைக்க…. மூளை அதற்கு மேல் அவனைக் கட்டுப்படுத்த முடியாமல் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு விடைபெற்று போய்விட… ரிஷியின் கண்கள் மகிளாவை உரிமையோடு தழுவிக் கொள்ள நினைக்க….
சரியாக அதே நேரம் அவளை மறைத்தார்ப் போல ஒரு இளைஞன் வந்து நின்று விட… சட்டென்று ரிஷி தன்னிலைக்கு வந்தவனாக தலையைக் கோதிக் கொண்டவன்… சலனமின்றி திருமண வைபங்களை பார்க்க ஆரம்பிக்க…. அடுத்த சில நிமிடங்களில் மணமக்களின் மங்கல நாண் பூட்டும் நிகழ்வும் முடிந்திருக்க… அடுத்த சில நொடிகளில் மணமேடையில் இருந்த மகிளா ரிஷி இருந்த பார்வையாளர் வரிசைக்கு வந்திருந்தாள்…
“மகி… எப்போடா தாலி கட்டி முடிப்பாங்கன்னு பொண்ணும் மாப்பிள்ளையும் நினைத்தாங்களோ… இல்லையோ… நீ நினைச்சுட்டு இருந்தியா என்ன… அங்க தாலி கட்டி முடிச்சாங்களோ இல்லைய… தப்பிச்சோம்னு இங்க இருக்க” கண்ணடித்தபடி வழக்கம் போல ரித்விகா மகிளாவிடம் வம்பிழுக்க…
இலட்சுமி ரித்விகாவை முறைக்க சட்டென்று அடங்கினாள் ரித்விகா… அதே நேரம்… இலட்சுமியை யாரோ அழைக்க… இலட்சுமியும் அங்கிருந்து எழுந்து சென்று விட… ரிஷிக்கும் மட்டும் தாயின் முகபாவனைகளில்… அவர் அமர்ந்திருந்த விதத்தில் ஏதோ நெருடல்… நேற்று இங்கு வந்து தன் அன்னையை விட்டுச் சென்ற போதெல்லாம் சந்தோஷமாகத்தான் இருந்தார்… இப்போது என்ன ஆனது… இவனைப் பார்த்து புன்னகைக்க… பேசவெல்லாம் செய்ய கோபம் வருத்தம் எல்லாம் இவன் மீது இல்லை என்பது நன்றாகப் புரிய…. தாயின் முக வாட்டத்திற்கு வேறு என்ன காரணமாக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பிக்கும் போதே….
“ஹலோ… ரெண்டு பேரும் இடத்தைக் காலி பண்ணுங்க… இல்லை அட்லீஸ்ட் என் மாமா பக்கத்தில உட்காரவாவது இடம் கொடுங்க “ என்றபடியே மகிளா எழுந்து நிற்க…
”மகி… அங்கேயே உட்காரு” என்று ரிஷி முகத்தைக் கடுமையாக மாற்றியபடி சொல்ல… மீண்டும் ரிதன்யாவின் அருகிலேயே அமர்ந்தாள் மகிளா…. ஆனால் முகத்தைத் தொங்கப் போட்டபடியே.
தோழியின் முக வாட்டத்தை பார்த்த ரிதன்யாவுக்கு மனம் தாளாமல்….
”அண்ணா… நேத்து நீ ரூம்க்கு வராமல் அம்மாவை மட்டும் விட்டுட்டு போனதுக்கே… நைட் ஃபுல்லா… முகத்தை தூக்கி வச்சுட்டு இருந்த… இப்போதும் நீ பேசாம போன…அவ்ளோதான்” என்ற போதே…
“அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணா… அந்தப் பெரியம்மா வந்து மகிக்கு சேரி கொடுத்தவுடனே கொடுத்தவுடனே கூல் ஆகிட்டா…” என்று ரித்விகா மகிளாவை மீண்டும் வம்பிழுக்க…
ரிஷி இப்போது ரித்விகாவிடம்
“மகி உன்னை விட… எவ்ளோ வயது பெரியவ… பேர் சொல்லி… அவ இவன்னு என்ன ரித்தி இது” என்று ரிஷி கண்டித்த போதே
“இப்போ ரித்தி எனக்கு மரியாதை கொடுப்பதுதான் எனக்கு ரொம்ப முக்கியம் மாமா…” இதைச் சொன்னபோது மகிளாவின் குரல் அவனருகில் ஒலிக்க… கொஞ்சம் படபடப்பாகத்தான் உணர்ந்தான் ரிஷி… ஆயிரமாயிரம் மக்கள் கூட்டம் அவர்களைச் சுற்றி இருந்தும்… அவனின் இந்தப் படபடப்புக்கு காரணம்… மகிளாவின் அருகாமை தந்த மயக்கமல்ல… மற்றவர்கள் யாரும் பார்த்து விடுவார்களோ… என்ற அச்சத்தில் வந்த படபடப்பு…
காரணம் ரிதன்யா இருவருக்கும் தனிமை கொடுக்கும் பொருட்டு நாசுக்காக சற்று தள்ளி அமர்ந்து விட்டிருக்க… இப்போது அவன் அருகில் மகிளா…
அதே நேரம் ரித்விக்கா ரிஷியை விட்டு தள்ளி அமரவில்லை… தெரியவில்லை என்பதெல்லாம் இல்லை… நான் ஏன் என் அண்ணனை விட்டு தள்ளி அமர வேண்டும் என்ற பிடிவாதம் மட்டுமே அவளுக்கு…
”எனக்குப் பிறகுதான் உனக்கு உரிமை” என்ற தன் உரிமையை மகிளாவிடம் காட்டிக் கொண்டிருந்தாள் என்றே சொல்ல வேண்டும்… வேறொரு சமயம் என்றால் மகிளா அவளோடு சண்டை போட ஆரம்பித்திருந்திருப்பாள்… இன்றோ மகிளா ரித்விகாவை எல்லாம் எல்லாம் கண்டு கொள்ள வில்லை…
காரணம்… ரிஷியிடம் பேச வேண்டும்… பேச வேண்டும் என்பதை விட மனதில் இருப்பதை எல்லாம் கொட்டி அவனோடு சண்டை போட வேண்டும்… ஆனால் பேசுவதற்கே அவன் இடம் கொடுக்காத போது… ஆனால் எங்கு மனதில் இருப்பதை எல்லாம் கொட்டுவது… இருந்த கோபம் அனைத்தையும் மனத்தில் அடக்கியபடியே…
”நேற்றே வருவேன்னு நினைத்தேன் மாமா” தயங்கியபடி பேச ஆரம்பித்தாள் மகிளா… என்னதான் சண்டை போட நினைத்தாலும் அவன் முன் முடியவில்லை அவளால்…
“வேலை மகிளா” கேட்ட கேள்விக்கு ஒரு வரியில் பதிலை முடித்தான் ரிஷி…
“ஓ…” இழுத்தவளாக
“இன்னைக்கு ஃபுல் டே என் கூடத்தான் தானே இருப்ப மாமா” என்ற போதே
”ஹலோ… எங்க கூட” ரிஷி பதில் சொல்லவில்லை… மாறாக ரித்விகா மகிளாவின் கேள்வியை மாற்றி சொல்ல…
இப்போது மகிளா அவளை முறைத்தபடி…. சற்று எம்பி… ரிஷிக்கு அடுத்து அமர்ந்திருந்த ரித்விகாவின் போனில் இருந்த ஹெட்செட்டை எடுத்து அவள் காதில் மாட்ட முயற்சிக்க…
ரிஷியின் மேல் இலேசாக மகிளாவின் மேனி உரச….ரிஷி சட்டென்று எழுந்திருந்தான் இப்போது…. நன்றாகவேப் புரிந்தது மகிளாவிற்கு… ரிஷி தன்னைத் தவிர்க்கின்றான்… என்பது… இப்போது மட்டுமல்ல.. கடந்த சில வருடங்களுக்கு முன்பே…. ஆனாலும் அவன் மனநிலையை உணர்ந்து… இவளும் அவனை பெரிதாக வற்புறுத்த வில்லை….
“வருத்தத்தில் இருக்கின்றான்… விட்டுப் பிடிக்கலாம்… எங்கு போகப் போகின்றான்” என்ற எண்ணமும் கூடவே… ரிஷியைத் தொல்லை பண்ணவில்லைதான் அதே நேரம் ’தான் அவனை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கின்றேன்’ என்ற அவளின் நடவடிக்கையையும் அவள் மாற்றவில்லை…
இதோ இப்போதும் அவளைத் தவிர்த்தபடி எழுந்தவனின் கைகளைப் பிடித்து நிறுத்தியவள்..
”உட்காரு மாமா… “ என்று அவள் அழுத்தமாகச் சொல்ல… வேறு வழியில்லாமல் ரிஷியும் அமர
”எனக்கு இந்த புடவை நல்லா இருக்கா… நான் புடவைல எப்படி இருக்கேன்” குரலில் இப்போதும் அதே அழுத்தம்… என்னை நேருக்கு நேராக நீ பார்க்க வேண்டும்… எனக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அவளிடம் வெளிப்பட
ரிஷி இப்போதும் அவளைப் பார்க்காமல்…
“உனக்கென்ன மகி.. நீ எப்போதுமே அழகு… புடவைல தனியா ஸ்பெஷலாவா என்ன இருக்கப் போற” பொய் சொல்கிறோம் என்று தெரிந்தும்… விட்டேற்றியாக சொன்ன போதே… அவனது கரங்களில்… மகிளாவின் சூடான கண்ணீர் மட்டுமே விழ… ரிஷி அப்போதும் அமைதியாகவே அமர்ந்திருந்தான்… கல் போல… மகிளாவின் கண்ணீர் பார்த்து கொஞ்சம் கூட பதறவில்லை….
”சோ என்னைப் பார்க்க மாட்ட… அப்டித்தானே மாமா… என்கூட பேசலாம் வேண்டாம்… அதை எல்லாம் எதிர்பார்க்கல மாமா… ஜஸ்ட் ஒரு பார்வை கூட பார்க்கிறதுக்கு என்ன மாமா… “ என்று அவள் ஆரம்பிக்கும் போதே இப்போது ரித்விகாவும் ரிதன்யாவும் கலங்கி நின்ற தன் அத்தை மகளை கவலையோடு பார்க்க…. அவளின் நிலை தாங்க முடியாமல்
“ஆமாண்ணா… மகி கிட்ட பேசுண்ணா” ரித்விகா கூட மகிளாவுக்கு ஆதரவாக பேச ஆரம்பிக்க… அடுத்து ரிதன்யாவும் மகிளாவுக்கு ஆதரவாகப் பேச ஆரம்பிக்கப் போக….
இலட்சுமி வந்திருந்தார் இவன் அருகில்…. கூடவே அன்று அவர் சொன்ன பெரியம்மா… பெரியப்பா… அதாவது மணமகள் தாய் தந்தையர்…
தன் மகனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்… அவர்களையும் தன் மகனுக்கு அறிமுகப்படுத்த… சில நிமிடங்கள் அவனோடு பேசிவிட்டு சென்றவர்கள்… கூடவே ஏதோ சடங்கு செய்ய மகிளாவும் வேண்டும் என்று மகிளாவையும் தங்களோடு அழைத்துச் சென்று விட… மகிளாவுக்கு அவர்கள் வார்த்தைகளைத் தட்ட முடியாத சூழ்நிலை… வேறு வழியின்றி எழுந்து செல்ல…
அதைப் பார்த்த ரித்விகா…
“என்னம்மா… இந்த பெரியம்மா… மகியை விடவே மாட்டேங்கிறாங்க… கைலயே பிடிச்சுட்டு திரியறாங்க” நக்கல் செய்தபடியே மீண்டும் போனில் மூழ்க… இலட்சுமியின் முகம் இப்போது மாறி விட்டிருந்தது…
ரிஷி அனைத்தையும் கவனித்தபடி தான் இருந்தான்…
அதன் பிறகு… சாப்பிட ஆரம்பித்திருக்க… ரித்விகா ரிஷி இருவருமாம ஒரு வரிசையில் தனியே அமர்ந்திருந்தனர்… இப்போது ரிஷி… தன் தங்கையிடம் மெதுவாக போட்டு வாங்க ஆரம்பித்தான்… தன் இலையில் வைத்திருந்த இனிப்பை அவள் வாயில் ஊட்டியபடியே
“ரித்திம்மா… அம்மா ஏன் டல்லா இருக்காங்க… அவங்க முகமே சரி இல்லையே…” என்று ஆரம்பிக்க…
இப்போது ரித்விகாவும் மடை திறந்த வெள்ளம் போல ஆரம்பித்தாள்….
“அம்மாக்கு என்ன பிரச்சனை… அவங்களுக்கு ஒண்ணுமில்லை.. சொல்லப் போனால் மகிதான் பாவம்… அம்மா நேத்து அவளைத் திட்டிட்டாங்க’ என்ற போதே… ரிஷி புரியாமல் பார்க்க…
”நேத்து நைட் அந்தப் பெரியம்மா ரிசப்ஷனுக்காக…. மகிக்கு ட்ரெஸ் கொண்டு வந்து கொடுத்தாங்க... அவங்க வீட்டு சைட் எல்லோரும் ட்ரெஸ் கோட் யூஸ் பண்ணிருக்காங்கனு… மகிக்கும் அதே கலர்ல எடுத்திருப்பாங்க போல… அம்மா நம்ம அத்தைக்கிட்ட கூட இதைப் பற்றி பேசிட்டு இருந்தாங்க… இதோ மகி இன்னைக்கு கட்டிருக்கிற புடவை கூட அவங்க காலையில கொடுத்ததுதான்” என்றபடி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க…
ரிஷியின் கைகள் இலையில் வைத்திருந்த சாப்பாட்டை அளந்து கொண்டிருந்தாலும்… மனமோ… மேடையில் மகிளாவின் அருகில் நின்றிருந்த இளைஞன் மீது மையம் கொண்டிருக்க… அவனையும் மீறி கண்கள் இப்போது அந்த இளைஞனைத் தேட… அவனும் இவனது கண்களுக்குத் தரிசனம் தந்தான்தான்…
கூடவே நீலகண்டனின் அருகில் அவன் நின்றிருந்தான்… ரிஷியின் எண்ண ஓட்டங்கள் சரியே என்பது போல…
-----
கிட்டத்தட்ட மணி 12 ஆகி இருக்க…. ரிஷியால் அங்கு இருக்கவே முடியவில்லை…
அவன்தான் முடிவெடுத்திருந்தான்… மகிளாவை விட்டு தள்ளி நின்றிருந்தான்… ஆனால் தன் கண் எதிரிலேயே வேறொருவன் அவளை உரிமையோடு பார்த்துக் கொண்டிருக்க… அதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை…
அவனே அவனுக்குள்…
“இந்த சில வருடங்களில் அனைத்து கெட்ட பழக்க வழக்கங்களையும் மாற்றி… திருத்திக் கொண்டுதானே வாழ்கின்றேன்… மகிளா அப்பாவும் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்தானே… தன்னைப் பற்றிய அவரின் கணிப்பு இத்தனை வருடங்களில் மாறி இருக்காதா என்ன… “ மனம் ஒரு குரங்கு என்ற வார்த்தை அவனிடமும் பலிக்க ஆரம்பித்திருக்க…
இப்போதே மகிளாவை பார்க்க வேண்டும்… அவளோடு பேச வேண்டும் போல் இருக்க…அவளைப் பார்த்தபடியே… சட்டென்று எழுந்தவனாக அவள் அருகே போக நினைக்க…
அதே நேரம் சரியாக நீலகண்டன் அவன் முன் வந்து நின்றவர்…
“ரிஷி உன்கிட்ட தனியா பேச வேண்டும்” என்று அழைக்க… இவனுக்கும் அவரிடம் பேசியாக வேண்டுமே… மகிளாவை விட்டுக் கொடுக்க முடியாது என இன்றே சொல்லி விட அவனுக்கும் வாய்ப்பு கிடைத்தது போல் இருக்க… மறுக்கவில்லை…
“இங்கே இல்லை… கீழ கார் பார்க்கிங்க்ல வெயிட் பண்ணு… ” என்று உத்தரவிட்டவாறு நீலகண்டன் செல்ல…
எப்போதும் அவரிடம் இருக்கும் எள்ளல் பார்வை எல்லாம் இல்லை… வார்த்தைகளில் தான் மிரட்டல்… அதிகாரம் எல்லாம் இருந்தது… அதையும் மீறி நீலகண்டனிடம் இருந்தது என்ன…
எல்லாம் சேர்ந்து குழப்பமான மனநிலையோடு… ஏதேதோ யோசனையோடு…. கீழே தன் பைக் நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு வந்து சேர… அவன் குழப்பங்களுக்கெல்லாம் அங்கு முடிவு கிடைத்திருக்க…
அடுத்த சில மணி நேரங்களில் அவன் வந்து சேர்ந்த இடமோ ’கண்மணி’ இல்லம்…
---
புயலென கண்மணி இல்லத்திற்குள் தன் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்து நிறுத்தியவனின் மனதில் கேள்விகளோ குழப்பங்களோ இல்லை… இப்போது அவனுக்கு தேவைப்பட்டது தனிமை தனிமை… தனிமை மட்டுமே… மகிளாவைப் பற்றி அவன் எடுத்திருந்த முடிவுகளில் அவன் மனம் அலை மேல் ஓடம் போல் நின்றிருந்த நிலை மாறி… அனைத்துக்கும் முற்றுபுள்ளி கிடைத்தாற் போலத் தோன்ற… அந்த முடிவுரையை முழுவதுமாக மனம் உணர்ந்து ஏற்றுக் கொண்டாலும்… அதை கிரகித்துக் கொண்டு சமன் செய்து கொள்ள தனிமை மட்டுமே வேண்டும் தீர்வு என்பது போலத் தோன்றியது….
தன்னோடு பேச வேண்டுமென காத்திருக்கச் சொன்ன மகிளாவின் தந்தை நீலகண்டனுக்காகக் கூட காத்திருக்க வில்லை… உடனடியாக கிளம்பி விட்டான்… ரிதன்யாவுக்கு மட்டும் போன் செய்து… தனக்கு திடீரென்று ஒரு முக்கியமான வேலை வந்து விட்டதென சொல்லி… அன்னையிடமும் மற்றவர்களிடமும் சொல்லச் சொல்லி விட்டு… பறந்து வந்திருந்தான்… ’கண்மணி இல்லம்’ நோக்கி…
என்னதான் மனம் மகிளாவின் நினைவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தாலும்… ஒரு மாதிரி படபடப்போடுதான் இருந்தான் அவன்… பைக்கை நிறுத்தி வேகமாக இறங்கியவன்… கண்களில் முதலில் பட்டது… கைகளில் ஏணியை தூக்கியபடி வீட்டை விட்டு வெளியே வந்த கண்மணி தான்…
ஆனால் அவன் இருந்த மன நிலையில் கண்மணி எல்லாம் கண்ணுக்கு மட்டுமே தெரிந்தாள்…. மனதில் எல்லாம் பதியவில்லை…. புன்னகையோடு அவனை எதிர்கொண்ட அவளுக்கு… பதில் புன்னகை கூட கொடுக்க முடியாமல்… எங்கிருந்தோ… எதிலிருந்தோ தப்பிப்பது போல வேகமாக படிகளில் ஏறிச் சென்று… தன் அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்று மீண்டும் மூடிக் கொள்ள…
கண்மணியோ…
அவள் வாடகைக்கு விட்டிருந்த வீடுகளில் ஒரு வீடு கடந்த வாரம் தான் காலி ஆகி இருந்தது... அடுத்து வாடகைக்கு விட வேண்டுமென்றால் மீண்டும் பெயிண்ட் அடித்து, பராமரிப்பு செய்துதான் விட வேண்டும் என்பதால் அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தாள்….
----
கைகளைத் தலையணை போல தலைக்கு பின்புறம் கட்டியபடி வெற்றுத் தரையில் படுத்து… விட்டத்தை வெறித்திருந்தவன் நினைவுகளை இப்போதும் அந்த ’பிரேம்’ ஆக்கிரமித்திருந்தான்… அவனின் ஒவ்வொரு வார்த்தையும் இவனுக்குள் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டிருந்தது…
“என்னோட பெயருக்கு நேராக… அவள் பெயர்தான் இருக்கும்னா… எனக்கானவள்னா மகிளா என்கிட்ட வந்து சேருவா…” உறுதியாகச் சொன்ன அவன் வார்த்தைகள் இப்போதும் அவன் காதருகில் கேட்பது போலவே இருந்தது…
அதே நேரம் பண்பட்ட அவனது வார்த்தைகளா… எதுவோ… ஏனோ அவனைத் தனக்குப் போட்டியாகக்கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை ரிஷிக்கு …
அந்த பிரேமுக்கு இருந்த இந்த குணங்களைத்தான்… நீலகண்டனும் அவருக்கு மருமகனாக வருபவனுக்கு இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தாரோ…. மனம் நீலகண்டனுக்கு ஆதரவாக யோசிக்க ஆரம்பித்த விந்தையும் வந்து சேர்ந்திருந்ததுதான் ஆச்சரியம்… கூடவே சில மணித் துளிகளுக்கு முன் பிரேம் அவன் நண்பர்களோடு பேசிய காட்சியும் வந்து போனது…
---
”டேய் பிரேம்… காலேஜ்ல எல்லாம் எத்தனையோ பொண்ணுங்க உன் பின்னால சுத்தும் போதெல்லாம் பெரிய இவன் மாதிரி முறுக்கிட்டு போனவனாடா நீ”
இந்த வார்த்தைகள் ரிஷியின் காதில் விழுந்த போது பெரிதாக அவன் காதுகள் எதிர்வினை ஆற்றவில்லைதான்… யாரோ பேசுகிறார்கள் என்று நினைத்தபடி நீலகண்டனுக்காக காத்திருக்க ஆரம்பித்தான் தான்… ஆனால்???
“மகிளா சிஸ்டருக்கும் உனக்கும் செம்ம பொருத்தம்டா… “ என்ற போது…. அந்த வார்த்தைகளை கேட்ட போது… ரிஷியின் காதுகள் மட்டுமல்ல… அவன் தேகத்தில்.. தலை முதல் கால் வரை திடீர் மின்னல் ஒரே நேர்க் கோட்டில் அவனைத் தாக்கியது போல ஸ்தம்பித்து நிற்க… கேட்கக் கூடாத வார்த்தைகளைக் கேட்டது போல… குன்றினான் ரிஷி…
கைமுஷ்டி இறுக…. கால்களில் அணிந்திருந்த காலணியையும் மீறி கால்களின் அழுத்தத்தை தரையில் பதிய வைத்திருக்க…
“உண்மையாவாடா… ” என்று இப்போது அந்த பிரேமின் வார்த்தைகள்
”பொய்யாடா சொல்றோம்… அதிலும் நீயும் சிஸ்டரும் ஸ்டேஜ்ல ஒண்ணா நின்ன போது… யாரு பொண்ணு மாப்பிள்ளைனு குழப்பம் தான் போ” என்ற ஒருவன் சொன்ன போதே…
அங்கே சிரிப்பலை மட்டுமே… கேட்ட ரிஷிக்கோ… எரிமலை மட்டுமே….
“நான் வாங்கின புடவையை அம்மாகிட்ட சொல்லி அவள்கிட்ட கொடுத்து கட்ட வைக்கிறதுக்குள்ள… ஹப்பா… மூச்சு முட்டிருச்சுடா” என்ற போதே…
“டேய் பிரேமாடா இது… சொந்தமா ட்ராவெல்ஸ் வைத்து ஆல் ஓவர் தமிழ்நாடு முழுவதும் சக்சஸ்ஃபுல்லா ரன் பண்ணிட்டு இருக்க ஓனர் பிரேமாடா இது” அடுத்தடுத்து அவனது நண்பர்கள் குலாம் கலாய்க்க ஆரம்பித்து இருக்க…
ரிஷிக்கு இப்போது முதலில் இருந்த படபடப்பு எல்லாம் இல்லை… ’பிரேம்’ என்பவனை அவன் பேசிய வார்த்தைகளின் மூலம் கணக்கிட ஆரம்பித்திருந்தது ரிஷியின் மனம் …
“நெக்ஸ்ட் உன் மேரேஜ் தானடா … எப்போடா… சிஸ்டர்கிட்ட இன்னைக்கே ப்ரப்போஸ் பண்ணிருடா” என்ற போதே
கலகலவென் சிரித்த… பிரேம்…
”ஹ்ம்ம்ம்… ப்ரப்போஸ் பண்ணனும்னு நினைத்திருந்தால் அவ என் மனசுக்குள்ள வந்தவுடனேயே பண்ணியிருப்பேனே… லவ் பண்ணி அவகூட போன்ல பேசி்… ஊர் சுற்றி… இதெல்லாம் எனக்கு வேண்டாம்… ஃபர்ஸ்ட் மேரேஜ்… அப்புறம் லவ்…“ என்ற போதே… அவன் நண்பர்கள் குலாம் அவனை ஓட்ட ஆரம்பிக்க…
தன் பைக்கில் அமர்ந்திருந்த ரிஷிக்கு அந்த வார்த்தைகளைக் கேட்ட போது…. அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ஒரு ஒரு குண்டூசியாக மாறி அவனைக் குத்தியது போல் தான் உணர்ந்தான்… என்றே சொல்ல வேண்டும்
“டேய் மச்சான்… எதுக்கு வேண்டும்னாலும் வெயிட் பண்ணலாம்… ஆனால் காதல்ல மட்டும் வெயிட் பண்ணவே கூடாது… மனசுல வந்துருச்சுன்னா…பட்டுனு உடச்சிரனும்… இல்லை வேற யாராவது நம்ம இடத்தை பிடிச்சுருவாங்க… ”
அடுத்த சில நொடிகள் அங்கு பெரும் நிசப்தம்
அவர்கள் மட்டுமல்ல… ரிஷி கூட பிரேமின் பதிலுக்காக காத்திருக்க…
“என்னோட பெயருக்கு நேராக… அவள் பெயர்தான் இருக்கும்னா… எனக்கானவள்னா மகிளா என்கிட்ட வந்து சேருவா… அப்பாகிட்ட சொல்லிட்டேன்… என் வருங்கால மாமானார்கிட்டயும் அவர் பொண்ணு மேல இருக்கிற விருப்பத்தை சொல்லி அவர் சம்மதத்தைக் கேட்டுட்டேன்…” பிரேம் சொல்லி முடிக்க
“மச்சான் சிஸ்டரோட சம்மதம் முக்கியம் மச்சான்… “
”ஹ்ம்ம்… கண்டிப்பா… மகிளாகிட்ட பேசனும்… கிட்டத்தட்ட அரேஞ்ச் மேரேஜ் மாதிரி தோன்றினாலும்… லவ் மேரேஜ்… எனக்கு மட்டும்… அதே காதல் என் மகிளாகிட்டயும் எனக்கு கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு மச்சான் ”
அதற்கு மேல் எல்லாம் ரிஷி அங்கு நிற்க வில்லை…
இதோ இப்போதும் குழப்பத்தில் தான் இருக்கின்றான்… அந்த பிரேமுக்கு இருக்கும் தெளிவு தனக்கு ஏன் இல்லை… காதல் என்றால் என்ன… திருமணம் என்றால் என்ன… கண்டிப்பாக தனக்கு தெளிவு இல்லை என்றே தோன்றியது…
என்ன ஏதென்று தெரியாமல் பதின்ம வயதில் ஆரம்பித்த உணர்வு… அதை மகிளாவிடமும் சொல்லி… அவளையும் குழப்பி… தானும் குழம்பி…
நன்றாகவேத் தெரிந்தது அன்று காதல் சொன்னதும் சரி இல்லை… இதுநாள் வரை அவளைத் தள்ளி வைத்திருந்ததும் சரி இல்லை… இன்று மனம் மீண்டும் அவள் வேண்டுமென போட்டி போட்டதும் சரி இல்லை…
எப்போது மகிளாவை முன்வைத்து நீலகண்டனிடம்…. தன் குடும்பத்துக்கு பாதுகாப்பு கேட்டானோ அப்போதே மகிளா மீது அவன் வைத்திருந்த காதலிடம் அவன் தோற்றுப் போய்விட்டான்… புரிந்ததுதான்…
இன்று மீண்டும் அந்தக் காதலைத் துளிர்க்கவைக்க நினைத்தாலும் ஏதோ தடுக்கின்றதே… ஏன் இப்படி….
காதல் என்ற உணர்வைக்காட்டிலும் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மட்டுமே நான் நினைக்கிறேனா… இது என்ன மாதிரியான உணர்வு… அவளுக்கான என் காதல் உண்மையானது இல்லையா…
ஒன்று மட்டும் புரிந்தது அவனுக்கு இப்போது… காதலில் அவன் தோற்று விட்டான்… அவனிடமிருந்தது உண்மையான காதல் தான்… ஆனால் அந்த ஆழமான உணர்வுக்கு மதிப்பளித்தானா என்பதில் தான் கேள்விக் குறி…. வேறொருவனுக்கு அவள் மீதான காதலில்… சொல்லப் போனால் பிரேம் மகிளாவைப் பற்றி பேசிய பேச்சைக் கேட்ட போது ஆண்மகனாக… உரிமையானவனாக கோபம்தான் வந்திருக்க வேண்டும்… ஆனால் அவன் முன்னிலையில் நிற்க கூட தகுதியில்லாத கோழை போல் அல்லவா இங்கு வந்து விட்டத்தை வெறித்துக்கொண்டிருக்கின்றான்… தகுதியுள்ளவன் மட்டுமே போட்டியில் வெற்றி பெற்றிருக்கின்றான் என்பது போல சமாதானமான உணர்வு மட்டுமே அவனிடம் இருந்தது போல தோன்றியது ரிஷிக்கு…
மகிளா!!!??? அவள் நன்றாக இருப்பாள்… தகுதியில்லாத தன் காதலையே விட்டுக்கொடுக்காமல் தனக்காக காத்துக் கொண்டிருப்பவள்… தகுதியான ஒருவனின் காதலை…. உண்மையான மனம் நிறைந்த காதலோடு அவளுக்காக காத்துக் கொண்டிருப்பனின் காதலை புரிந்து கொள்ளாமல் போவாளா என்ன???… எண்ணம் மகிளாவுக்கான வாழ்க்கைக்கு விளக்கவுரை கொடுத்துக் கொண்டிருக்க… கடைக்கண்ணோ அவனையும் மீறி மகிளாவின் மீது கொஞ்சம் நஞ்சம் எஞ்சியிருந்த காதலையும் மிச்சம் சொச்சம் இல்லாமல் கரைத்துக் கொண்டிருந்தது….
-----
Commentaires