அத்தியாயம் 90-1
நேற்று மதியம் சாப்பிட்டது… இதோ அடுத்த நாள் காலையும் வந்து விட்டிருந்தது… இரவு சாப்பாடு… அறைக்கு வெளியே இருந்த போதும் பவித்ரா சாப்பிடவில்லை… சாப்பாடு என்ன ஒரு பொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் காலை வரை சமாளித்தவளால்… இதற்கு மேல் சமாளிக்க முடியாது போல என்றே தோன்றியது பவித்ராவுக்கு…
ஒரு பக்கம் கணவன் காவல்துறையின் பிடியில்… ஒரு பக்கம் இவளோ தன் சொந்த அறையில் பிணைக் கைதியாக… யாரை நினைத்து… எதை நினைத்து கவலை கொள்ள.. கண்ணீரை துடைத்தபடி அமர நினைத்தவளுக்கு மெல்ல மெல்ல நினைவும் தடுமாற…
“நோ பவித்ரா… உனக்காக இல்லைனாலும்… உன் குழந்தைக்காக நீ உன் நம்பிக்கையைத் தளரவிடாத…” பல்லைக் கடித்துக் கொண்டு தன்னையே தைரியப்படுத்திக் கொண்டவள்… மெல்ல வெளியே எழுந்து வர நினைக்கும் போதே... கால்கள் ஒத்துழைக்காமல் தடுமாறி மீண்டும் கட்டிலிலேயே அமர்ந்தவளுக்கு மெல்ல மெல்ல நம்பிக்கை குறைந்து கொண்டே வர ஆரம்பித்திருந்தது…
நன்றாகத் தெரியும்… அவள் உயிருக்கு ஒரு ஆபத்தும் இல்லை… ஆனால் அவள் மயக்கமாகி விட்டால்… கண்டிப்பாக அவள் கருவின் ஆயுள் அந்த நிமிடமே அழிந்து விடும்… கண்களில் இருந்து கண்ணீர் மழை மீண்டும் வர ஆரம்பித்திருக்க… இடையே ராஜின் நினைவும் வந்து சேர்ந்திருக்க… உடலும் மனமும் ஒரே நேரத்தில் அதிகப்படியான சோர்வடைந்த நிலையில் பவித்ரா தவித்து தத்தளித்துக் கொண்டிருந்த போது…
”அத்தை…” என அழைத்தபடி அர்ஜூன் கதவைத் தட்ட… உடனே எழ முடியவில்லைதான்… இருந்தும் எப்படியோ தன்னைச் சமாளித்து கதவைத் திறந்தவள்… அர்ஜூனை உள்ளே வர வைத்து மீண்டும் கதவைப் பூட்டியும் இருந்தாள்… ஆனால் இப்படியே எத்தனை மணி நேரம் சமாளிப்பாள்… இன்னும் ஒரு மணி நேரம் தாக்குப்பிடிப்பது என்பதே அதிகப்படிதான்…
எப்படி இந்த வீட்டை விட்டு வெளியே போவது… பவித்ரா இப்படி யோசித்தபடி இருந்தபோதுதான்.. அர்ஜூன் வந்திருக்க… வந்தவனோ… தண்ணீர் பாட்டிலுடன் வேறு வந்திருந்தான்…
“குடிங்க அத்தை…” எனப் பரிதாபப் பார்வை பார்த்தபடி பாசமாக நீட்ட
பவித்ராவோ மறுத்தவளாக…
“வேண்டாம் அர்ஜூன்… இந்த வீட்ல இருந்து ஒரு துளி தண்ணி கூட அத்தை குடிக்க மாட்டேன்… எடுத்துட்டுப் போயிருடா…” என குரல் கம்மச் சொன்னவள்… அவள் துக்கத்தை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போல் இருக்க.. அவளுக்கு கிடைத்தது அர்ஜூன் தான்
“என்னோட பாப்பாவை கொலை பண்ண பார்க்கிறாங்கடா…” ஏழு வயது சிறுவன் என்று கூடத் தோன்றாமல் பவித்ரா அவனிடம் அழ ஆரம்பித்திருக்க… அர்ஜூனோ ஒன்றும் புரியாமல் விழித்தான்
”அழாதீங்க அத்தை… தாத்தா வந்தால் நான் பேசட்டுமா… நான் சொன்னால் தாத்தா கேட்பாரு… நான் என்ன சொல்ல… நீங்க சொல்லுங்க” எனச் சொல்லி… பவித்ராவையேப் பார்த்தபடி இருக்க… அவனுமே என்ன சொல்வான்… என்ன செய்வான்…
”நான் இங்கயிருந்து போகனும் அர்ஜூன்… ” அவனிடமே மீண்டும் சொல்லி அழ ஆரம்பிக்க… அர்ஜூனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை… யோசனையோடு இருந்த போதே… பவித்ரா எழுந்து சன்னல் வழியே எட்டிப் பார்த்தவள், கீழே தரையைப் பார்த்த போதே தலை சுற்றியது… தனியாளாக இருந்தாலாவது எப்பாடு பட்டாவது இறங்கி இருக்கலாம்… இப்போது எப்படி இறங்குவது… உச்சகட்ட குழப்பத்தில் அவள் இருக்க… அர்ஜூனும் அவளுடன் சேர்ந்து வெளியே பார்த்தபடி இருக்க… அவன் கண்ணில் பட்டதோ அந்த வீட்டின் நீச்சல் குளம்… அத்தையையும் அந்த நீச்சல் குளத்தையும் மாறி மாறி பார்த்தபடி சில நிமிடங்கள் இருந்தவன்… என்ன நினைத்தானோ… வேகமாக கீழே இறங்கிப் போனவன்… மீண்டும் வந்த போதோ… அந்த வீட்டின் வேலைக்காரப் பெண்மணி காவேரியுடன் வர
“காவேரியம்மா… ப்ளீஸ் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தாதீங்க… சொந்த வீட்ல கை நனைக்க பயப்பட்ற நிலைமைல என் அப்பா என்னைக் கொண்டு வந்து விட்டுட்டார்” எனும் போதே
“பவிம்மா… நான் சாப்பிடச் சொல்லல… அர்ஜூன் தம்பிதான் என்னை இங்க கூட்டிட்டு வந்துச்சு… நீங்க இங்கயிருந்து தப்பிச்சு போயிறலாம்… அர்ஜுன் தம்பியும் நானும் ஒரு ஐடியா பண்ணிருக்கோம்மா…” என தங்கள் திட்டத்தைச் சொல்ல…
அவள் சொல்லக் கேட்டு அதிர்ந்தவள்… அர்ஜூனை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவள்… காவேரியைப் பார்த்து முறைத்தபடி…
”காவேரியம்மா… அவன் தான் சின்னப் பையன்… ஏதோ சொல்றான்னா… நீங்க வேற… என் குழந்தையைக் காப்பாத்த அர்ஜூனை ரிஸ்க்ல இழுத்து விடச் சொல்றீங்களா” எனும்போதே
“நான் பார்த்துக்கிறேன் அத்தை… காவேரியம்மா இருக்காங்கள்ள….” எனச் சொன்னவனின் அதிமேதாவித்தனத்தை என்ன சொல்ல
“நான் தான் இருக்கேன்லம்மா… அதெல்லாம் தம்பியை விட்ருவேனா…” எனும் போதே… பவித்ரா தயக்கத்துடன் அர்ஜூனைப் பார்க்க…
“அத்தை எனக்கு ஒண்ணும் ஆகாது… ஒன் வீக்கா நான் ஸிவிம்மிங் ட்ரெயினிங் எடுத்துட்டு இருக்கேன்… அதை வைத்து நான் பத்து நிமிசம் சமாளிச்சிருவேன்”
“ப்ச்ச்… சும்மா விளையாடாதடா… உலகத்துக்கே வராத இந்த உயிரை விட நீ எனக்கு முக்கியம்டா…” என்ற போதே
“அத்தை அது நம்ம பாப்பா… தாத்தாக்கு ஏன் புரியலை… ” என்ற போதே பவித்ரா மீண்டும் அழ ஆரம்பிக்க… கண்ணைத் துடைத்தவன்…
“காவேரி அக்கா சொன்னாங்க… பாப்பா பாவம்னு… நீங்க பாவம்னு… உங்களுக்கு ஒண்ணும் ஆகாது… நீங்க இங்கயிருந்து போயிறலாம்…” என்றபடி
“நான் பாப்பாக்கு நான் பேர் வச்சுருக்கேனே… நீங்க நேத்து சொன்னதில இருந்து… பாப்பாவை நினைக்கும் போதேல்லாம் சுபத்ரானு தான் நினைப்பேன்” என்றவனிடம் பவித்ரா மற்ற கவலை மறந்து சிரித்தவளாக
“அத்தை மாதிரியே மருமகனும்” என அவன் உச்சந்தலையில் முத்தமிட்டவள்…
“இது உன் பாப்பாதான்… உன் சுபத்ராதான்… நீ உன் சுபத்ராவை எப்போதும் விட மாட்டதானே… பார்த்துக்குவதானே…” கண்ணைத் துடைத்தவளாக வேகமாகக் கேட்க…
“கண்டிப்பா… ஆனால் “ என இழுக்க
“என்னடா” எனப் பவித்ரா குரலில் புதுவித உற்சாகம் வந்திருக்க
“உங்களைப் பிடிக்கும்… சுபத்ராவைப் பிடிக்கும்… அந்த ஆளை மட்டும் பிடிக்கலை…”
சட்டென்று பவித்ராவின் முகம் மாறினாலும்… காட்டிக்கொள்ளாமல்
“பிடிக்கும்டா… கண்டிப்பா ஒரு நாள் உனக்கு உங்க மாமாவையும் பிடிக்கும்… உன்னாலதாண்டா நான் மறுபடியும் இந்தக் குடும்பத்துக்குள்ள வருவேன்… அதுவரை இனி இவங்க யாரோடவும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை…” என உறுதியான குரலில் சொன்னபடி…
“காவேரியம்மா… என் மருமகன் பத்திரம்… உங்களை நம்பிதான் இதுக்கு சம்மதிக்கிறேன்” எனச் சொன்னவள்… கையில் ஒரு கவரை காவேரியின் கையில் கொடுத்தவள்…
“இதை அம்மா வந்தவுடனே…. இதை அவங்ககிட்ட கொடுத்திருங்க காவேரி அக்கா…” என்றவளின் மூக்கு வெறுமையாக இருக்க… காவேரி கவலையுடன் பார்க்க…
“இதைத்தான் என் பிறந்த வீட்டு சீதனமா எடுத்துட்டு போயிருந்தேன்… இப்போ இதைக் கூட விட்டுட்டு என் ராஜோட மனைவியா மட்டும் போறேன்…” குரல் மாறிய விதத்திலேயே அவள் முற்றிலும் உடைந்திருந்திருக்கின்றாள் என்பது புரிந்தது…
எப்படியோ தன்னைத் தேற்றிக் கொண்டவளாக… அர்ஜூன் முன் அவர் உயரத்துக்கு மண்டியிட்டு அமர்ந்தவள்…
“அர்ஜூன்… அத்தைக்கு ஒரு சத்தியம் பண்ணிக் கொடுப்பியா” என்றவள்…
“நீ உன் சுபத்ராவை யாருக்காகவும்…. எதுக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது.. இவ உன்னோட சுபத்ரா… அவ உன்னாலதான்… உன் தியாகத்தாலதான்… இனி உயிரோட வாழப் போறா… இந்த அத்தை ஒருநாள் உன்கிட்ட வந்து நிப்பேன்… “ என்றவள் சொன்ன வார்த்தைகள் அப்போது சிறுவனான அர்ஜூனுக்குப் புரியவில்லைதான்… இருந்தும் அத்தைக்காக சத்தியம் செய்து கொடுத்தான் தான்… ஏன் அவள் இறந்தபோது… கண்மணி மருத்துவ மனையில் அநாதையாக கிடந்த போது கூட அவனுக்கு பவித்ராவின் சத்தியம் புரியவில்லை… சத்தியம் புரிந்த போது… அவன் வயது பதினேழைக் கடந்திருந்தது… அதுமட்டுமல்லாமல் கண்மணியின் வாழ்க்கையும் மருதுவால் முற்றிலும் மாறியிருந்தது…
அர்ஜூன் சொன்னது போல… நீச்சல் குளத்தில் தெரியாமல் தவறி விழுந்தது போல விழுந்து நடிக்க.. அந்த வீட்டில் இருந்த மொத்த நபர்களும் நீச்சல் குளத்திற்குப் போயிருக்க… அந்த சமயத்தைப் பயன்படுத்தி பவித்ராவும் அங்கிருந்து வெளியெறி இருந்தாள்…
எப்படியோ அர்ஜூன் தன் உயிரைப் பணயம் வைத்து… தன் அத்தையையும்… தன் அத்தை மகளையும் அந்த வீட்டில் இருந்து காப்பாற்றி வெளியே அனுப்பி வைத்திருந்தான் தன் ஏழுவயதிலேயே...
--
நாட்கள்… மாதங்களாக கடந்திருந்தது
பவித்ரா முகத்தில் இப்போதெல்லாம் பழைய மகிழ்ச்சி இல்லாமல் போயிருந்தது… அவர்களுடன் எப்போதும் உடன் இருக்கும் கிருத்திகாவும் இப்போது இங்கு வர முடியாத சூழ்நிலையில் சிக்கிக் கொண்டாள்…
அன்று நட்ராஜ் போலிஸ் ஸ்டேஷனில் இருக்க… மருதும் வாசுவும் உதவிக்கு அழைத்தது கிருத்திகாவைத்தான்… கிருத்திகாவும் வந்தாள் தான்… நட்ராஜை வெளியே எடுத்தாள் தான்… ஆனால் அதுவே அவளுக்கு வினையாகவும் ஆகி விட்டது…
நாராயணன் கோபத்தில் கிருத்திகாவின் பெற்றோரை மிரட்ட… கிருத்திகாவின் பெற்றோர்கள் மகளை கட்டுப்படுத்த ஆரம்பித்திருந்தனர்… பவித்ராவோடு பேசினால் தங்கள் மகளுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று பயந்து.. பவித்ராவிடமிருந்து அவளைப் பிரிக்க நினைக்க… அது முடியாமல் போக… அதன் விளைவு கிருத்திகாவுக்கு திருமணமும் நிச்சயம் ஆகி இருந்தது…
பவித்ராவும் ராஜும் கிருத்திகா நலன் கருதி… கிருத்திகாவிடம் இருந்து கொஞ்சம் விலகியே இருக்க… வேலை பார்க்கும் இடத்தில் மட்டுமே பவித்ரா கிருத்திகாவின் நட்பு என்ற அளவில் தொடர்ந்தது…
அன்றைய தினம் தீபாவளி… ஊரே தீப ஒளித் திருநாளில் மூழ்கி இருக்க…
பவித்ராவும் ராஜும் பெரிதாக எல்லாம் கொண்டாடவில்லை… பவித்ராவுக்கு இன்னும் தந்தை வீட்டில் நடந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டும் வரவே முடியவில்லை…
இதோ இந்த மாதம் அவளுக்கு ஏழாவது மாதம்… பெற்ற தந்தைதான் அப்படி என்றால்… ஏன் தன் தாய் கூட வரவில்லையே… கண்டிப்பாக அவளது அப்பா சொல்லி இருப்பார் தானே… அந்த அளவுக்கு தான் என்ன தவறு செய்தோம்… இது ஒரு பக்கம் இருக்க…
நட்ராஜின் டெமோ… அதற்க்கான டாக்குமெண்டேஷன் மீட்டிங்… என பவித்ரா மருத்துவராக பணியாற்றிய நேரத்தை விட… கணவனின் காரியதரிசியாக பணியாற்றிய நேரங்களே அதிகமாகி இருந்தது… எல்லாமே கிடைப்பது போல இருந்தும்… கடைசி நேரத்தில் கை நழுவிப் போய்விடும்… இப்படியே போய்க் கொண்டிருக்க… பவித்ராவின் நிலையைப் பார்த்து ராஜுக்கு கொஞ்சம் கவலை வர ஆரம்பித்திருக்க
”என்னடி ஆச்சு… ஏண்டி இப்படி இருக்க…. இன்னைக்கு தீபாவளி… இன்னைக்கு கூட.. அந்த கம்ப்யூட்டர்ல என்ன பண்ணிட்டு இருக்க…. நீ பண்றது ஏதுமே எனக்குப் பிடிக்கலை… நேத்து அந்த ஆஃபிஸ்ல உன்னை 4 மணி நேரம் நிற்க வச்சு… அதுக்கப்புறம் உனக்கு அப்பாயின்மெண்ட் கொடுத்திருக்காங்க… மனசாட்சியே இல்லாதவங்க அவங்களாம் …. அவங்ககிட்ட போய்… என்னைப் பேசச் சொல்றியா…. இப்போ என்ன… மெதுவா நாம முன்னேறிக்கலாம்… உன் அப்பாக்கும் நமக்கும் தான் எல்லாமே முடிஞ்சு போச்சே…. போலிஸ் ஸ்டேஷன்ல அவரை நீ எனக்கு சாதகமா பேசி அவரை அவமானப்படுத்தின பின்னால… இப்போ மொத்தமா உன்னை தலை முழுகிட்டாரே… சவாலாவது ஒண்ணாவது… அவரே அதை மீறிட்டார்... இனி உனக்கென்ன கவலை… ”
“இல்லை ராஜ்… அவர் மீறலாம்… ஆனால் நான் சொன்னது சொன்னதுதான் அவர் முன்னால நாம தலை நிமிர்ந்து நிற்கனும் ராஜ்… நாம நல்லா வாழ்ந்து அவரைத் தோற்கடிக்கனும்… எனக்காக அதைப் பண்ணுவியா…” இந்த வார்த்தைகளை இதுநாள் வரை சாதரணமாகச் சொல்வாள்… இப்போது பவித்ராவின் கண்களில் வெற்றியைத் தேடி ஓடும் வெறி வந்திருக்க… நட்ராஜ் அவளைக் கவலையுடன் பார்த்தவனாக
“இங்க பாருடி… நீ உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்திகிறேன்னு நினைக்கிறேன்… “ எனும் போதே
“நான் சொல்றதை நீ கேட்பியா… மாட்டியா… ராஜ்… உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது…” என்றவளின் பிடிவாதத்தில்
“சரிடி… சரி…”
“என்ன சரி சரி… நம்ம பாப்பா பிறக்கிறத்துக்குள்ள” என்று வேறு சேர்த்து சொல்ல… நட்ராஜுக்கு மனைவியின் பேச்சு பிடிக்கவில்லைதான்… ஆனாலும் அவளிடம் சொல்லாமல்…
“அர்ஜூனை அதுக்கப்புறம் பார்த்தியா… அவன்கிட்ட பேசுனியா… எனக்கே ரொம்ப கஷ்டம் ஆகிருச்சுடி… ”
“இல்ல ராஜ்… ஆனால் நானுமே இதை எதிர்பார்க்கலை… நானும் உங்க பொண்ணும் அவனுக்கு காலம் பூரா நன்றிக் கடன் செலுத்தனும்… “ என்றவள் குரலில் அவளையுமறியாமல் உற்சாகம் வந்திருக்க…
“நம்ம பொண்ணுக்கு சுபத்ரானுதான் பேர் வைக்கனும் அர்ஜூன் சொன்ன மாதிரி…”
நட்ராஜ் சிரித்தபடி
“அதுசரி… இன்னும் எத்தனை பேர் மாத்துவேன்னு பார்ப்போம்… எல்லாம் லிஸ்ட் எடுத்து வை… இன்னும் 3 மாசம் வேற இருக்கு … லிஸ்ட் பெருசாகும் போல” நட்ராஜ் கிண்டல் செய்ய
“இல்லல்ல இதுதான் இனி… நான் ஃபைனலைஸ் பண்ணிட்டேன்…. அர்ஜூன் – சுபத்ரா பேர் பொருத்தம் கூட சூப்பரா இருக்குல…”
நட்ராஜ் எரிச்சலுடன் மனைவியைப் பார்த்தவனாக…
“ஏண்டி நட்ராஜ் – பவித்ரா பேர் என்ன பொருத்தமா இருக்கு… பவி உன் கற்பனை ஆசை எல்லாம் எல்லாம் எல்லை மீறி போய்ட்டு இருக்கு”
“ஆனால் ராஜ்… அ…ர்……..” என ஆரம்பித்த போதே…. நட்ராஜ் வேகமாக…
”நாம இருக்கிற நிலைமைக்கும்… அவங்களுக்கும்…ப்ச்ச்… முதல்ல இந்த பேச்சை விடு… இனி இப்படியெல்லாம் பேசாத… அவங்க யாருன்னு இவ்வளவு தூரம் காட்டின பின்னால…. இதெல்லாம் தேவையில்லாத பேச்சு” என்றவன் குரலில் கோபம் இலேசாக வந்திருக்க…
“அதுவும் என்னோட குழந்தையை அசிங்கம்னு சொன்னாங்கதானே… இருக்கட்டும் ஒரு நாளைக்கு… இதுக்கெல்லாம் ஒரு நாள் அவங்க பதில் சொல்லனும்… என் பொண்ணுக்காக… அவ பாசத்துக்காக கெஞ்சுற நாள் வரும்… உன் அப்பனுக்கு அப்போ இருக்குடி…” என்றபோதே… பவித்ரா முறைக்க
“என்ன கோபம் வருதோ… அவன் இவன்னு சொல்லாம விட்டேன்னு சந்தோஷப்படு… மனுஷனாடி… அப்பா ஆட்டுக்குட்டினு இனி சொல்லு… அதுக்கப்புறம் இருக்கு…”
“ப்ச்ச்… ரொம்ப பேசாத… உனக்கும் பொண்ணு வரப் போறா… அப்போ தெரியும் அப்பா-பொண்ணு பாசம் என்னனு”
“பவி அந்தாளு கூட என்னை கம்பேர் பண்ணாத… கொலைவெறி ஆகிருவேன்” என்ற நட்ராஜிடம்
”நீங்க வேணும்னா எழுதி வச்சுக்கங்க… கண்டிப்பா அவர் வருவார் ராஜ்… எனக்காக இல்லைனாலும் என் பொண்ணுக்காக வருவார்… அவளை எந்த மாத்திரி வளர்க்கப் போறேன்னு பாருங்க… நாராயணன் பொண்ணை விட நட்ராஜ் பொண்ணா பல மடங்கு பெருசா வேற லெவல்ல வளர்க்கப் போறேன் பாருங்க… அப்போ என் பொண்ணுக்காக வாசல்ல வந்து ஏங்கி நிப்பாங்க பாருங்க…“ அர்ஜூனை இழுக்காமல் பேச்சை மாற்றியிருந்தாள் பவித்ரா…
இதெல்லாம் நடக்கும் கதையா என்பது போல நட்ராஜ் அவளைப் பார்க்க…
“அதுக்காகத்தான்… உங்களை தயார் பண்றேன் ராஜ்… என் பொண்ணை இந்த ஏரியால இருக்கிற பொண்ணாவா வளர்ப்பேன்… ” என்ற போதே நட்ராஜ்ஜுக்கு சுருக்கென்று தைக்க … அதில் அவன் முகம் கோபத்தில் சிவந்திருக்க
“என்ன சொல்ற… இந்த ஏரியா பொண்ணுனா… உனக்கு அவ்ளோ கேவலமா… அப்போ நீ என்கூட இருந்தாலும்… இன்னும் உன் ஸ்டேட்டஸ் புத்தி உன்கிட்ட இருக்குதானே… கீழ்வர்க்கம் மேல்வர்க்கம்னு பார்க்கிற தானே…” என்றவன் அதற்கு மேல் பேசாமல்… எழுந்தான்
பவித்ராவோடு பேசினால்…. இன்னும் மனக்கசப்புதான் வரும் என்று தோன்ற அங்கிருந்து போக நினைக்க… பவித்ராவும் தன் தவறை உணர்ந்தவளாக
”சாரி சாரி ராஜ்…. நான் வேற மாதிரி மீன் பண்ணலை… ” என இழுக்கும் போதே
“பவி… என்னைச் சமாதானப்படுத்துறேன்னு நீ என்னைக் காயப்படுத்திட்டு இருக்க… இனி உன் பிறந்த வீட்டைப் பற்றி பேசுறதா இருந்தால்… நீ நட்ராஜ் பொண்டாட்டியா இருக்கத் தேவையில்லை” அவன் சொன்ன வார்த்தைகளில் பவித்ராவின் கண்களில் சட்டென்று நீர் கோர்த்திருக்க…
நட்ராஜும் இப்படி பேசுவோம் என்று நினைத்து பேசவில்லை… அதன் தாக்கத்தில்
”நான் இங்க இருந்தால் தேவையில்லாத பேச்சு… பிரச்சனை வரும்னுதான் நினைக்கிறேன்… நான் கிளம்புறேன்” என கோபமும் வருத்தமும் கலந்த கலவையான குரலில் சொன்னவனின் கைப் பிடித்து தடுத்து நிறுத்தியவள்…
“சாரினு சொல்றேன்ல… “ என அவனை விடாமல் பிடித்துக் கொண்டவளின் கையைத் தட்டி விட்டு… நட்ராஜ் வெளியே சென்று விட்டான்…
---
”யக்கோய் சாப்பிடலையா… அண்ணா வந்துருவாரு… சீக்கிரம் சாப்பிடுக்கா… நீ சாப்பிடலைனா என்னைத்தான் திட்டுவாரு” என்றவனிடம்
“இன்னைக்கு உங்க அண்ணன் ஒண்ணும் வரமாட்டாரு… நான் சாப்பிடவும் போறதில்லை… உங்க அண்ணாவும் திட்டப் போறதில்லை… அதேபோல ஹாஸ்பிட்டலுக்கும் போகப் போறதில்லை” எனப் பவித்ரா கடுப்பாகச் சொன்னபடி அங்கிருந்த கல்லில் அமர.. புருவம் சுருக்கி மருது அவளைப் பார்க்க…
“சண்டைடா…” சொல்லும் போதே குரலோடு சேர்ந்து வந்த அழுகையை அடக்கிக் கொண்டவளாக….
“சும்மா ஒரு ஃப்ளோல பேசுனதுக்கு… அந்தக் காட்டான் கோவிச்சுட்டுப் போய்ருச்சு…” என்றவள்… அடுத்த நிமிடமே தன் தவறை உணர்ந்தவளாக
“ப்ச்ச்… உன்கிட்டலாம் சொல்லக் கூடாதுதான்… கிருத்தி இருந்திருந்தால் அவகிட்ட கொட்டிருப்பேன்…” என சலித்தவள்..
“பசிக்க வேற செய்யுது… ஆனால் உங்க அண்ணா வராமல் சாப்பிட மாட்டேனே… எனக்கென்ன அவர் பொண்ணுதான் பாவம்… பட்டினி கெடக்கிறா…” என்றபடி உதட்டைச் சுழித்தவளிடம்… மருது சிரித்தபடியே
“ஏன் இந்தக் கொலவெறி… உங்க கோபத்தை வேற எப்படியாச்சும் காட்டிக்கங்க… உங்க ரெண்டு பேர் கோபத்தை வயித்துல இருக்கிற குழந்தையை பலிகடா ஆக்காதீங்க… முதல்ல சாப்பிடுங்க…” சாப்பாட்டுத் தட்டை நீட்டியவன்... கிருத்திகா அன்று எச்சரித்தபின் இப்போதெல்லாம் ’கண்மணி’ என்றெல்லாம் பெயர் சொல்லி அழைப்பதில்லை…
“நீ சொல்றதும் சரிதாண்டா” எனும் போதே அவனிடமிருந்து தட்டை வாங்கியவளிடம்…
“இப்போ நீ சாப்பிடற… அண்ணே வருவாரு…”
“வருவாரு… வருவாரு…. அவர் புள்ளைக்காக வருவாரு…” எனும் போதே நட்ராஜ் வந்து நிற்க… வாயில் முதல் கவளத்தை எடுத்து வைக்க நினைத்தவள்… அப்படியே சிலையென அவனை ஆவேன்று பார்க்க
“டேய்… அவளச் சாப்பிட்ச் சொல்லு… “ என்றபடி சற்று தள்ளி நட்ராஜ் அமர்ந்துவிட…
“அண்ணே நீயும் சாப்பிடு” என்ற மருதுவிடம்
“ஒண்ணும் வேண்டாம்…” மனைவியை முறைத்தபடியே பார்வையை வைத்தபடி சொல்ல
”ஆமாம்மா… நீ இன்னைக்கு சைவம் சமைக்கிறேன்னு தெரிஞ்சுருக்கும்… அதான் ஐயா வெளிய கொட்டிட்டு வந்துருப்பாரு… நீ வா சாப்பிட” என்றவள் நட்ராஜைப் பார்க்காமல் சாப்பாட்டில்தான் தன் கவனம் என்பது போல… இப்போது சாப்பிட்டுக் கொண்டிருக்க… இப்போது நட்ராஜுக்குமே பொறுமை இருந்திருக்க… வேகமாக அவளிடமிருந்த சாப்பாட்டுத் தட்டைப் பறித்தவன்… சாப்பிட ஆரம்பித்திருக்க… உள்ளுக்குள் குதூகலித்தாலும்… வெளியே காட்டிக் கொள்ளாமல்…
“ஏய்… காட்டான்… எனக்குப் பசிக்குது… புள்ளத்தாச்சிகிட்ட பறிச்சு சாப்பிடற…” எனும் போதே
“அவன் அவன் காலையில இருந்து சாப்பிடாமல் இருக்கான்… என்னையவே கிண்டல் பண்ற… பட்டினி கெடங்க ரெண்டு பேரும்” என்றவனிடம்
“ஆ…” என்று பவித்ரா வாயைத் திறக்க
“அம்மாவும் பொண்ணும் ஓடிப் போயிருங்க…” எனும் போதே
“உங்க பொண்ணை வேணும்னா போகச் சொல்லுங்க… நான் போக மாட்டேன்” என அவனின் மடியில் இப்போது அமர்ந்திருக்க…
“ஏய்… மருது இருக்காண்டி” என நட்ராஜும் சொன்னான் தான்… ஆனாலும் மனைவியை எழ விடவில்லை…
“யார் இருந்தால் எனக்கென்ன… என் ராஜ்… என் உரிமை… ஊட்டி விடுங்க” என்ற போதே… மருதுவும் வெளியே வர… பவித்ரா வேகமாக…
“டேய் ஒரு பாட்டு பாடுடா… நீ ஆடி… ரொம்ப நாள் ஆச்சு… கிருத்தி வந்தால் எப்படியும் உன்னைப் பாட்டு பாட வச்சுருவா… இப்போ அவளும் வர்றதில்லை…. நீயும் பாட்றதில்ல…” எனச் செல்லமாக மருதுவிடம் கோபிக்க…
“டேய் என் பொண்டாட்டி கேட்கிறா… பாட மாட்ட” எனும் போதே… மருதுவுமே அவர்கள் சந்தோசத்தில்… மிக உற்சாகமாக ஆகியிருக்க
”என் தலைவனுக்கு தலைவிக்கும் இல்லாத பாட்டா… இப்போ பாருங்க” என்றபடி ஆரம்பித்திருந்தான்… பாட்டு மட்டுமல்ல… நடனத்தோடும்….
/*ஓல ஓல குடிசையில கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க கஞ்சி கஞ்சி கவலயில்ல மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க துன்பத்தில இன்பம் உண்டு அந்த இன்பங்கள நீ கண்ட பின்னால
கட்டாத தொட்டிலுக்கு இப்போ வெத போடுங்க கட்டிலுக்கு மேலாக ஆ எப்போதும் விட்டு விட்டு வெள்ளமா போடுங்க கண்ணு வெய்க்க போறாங்க
பூமி எடங் குடுத்தா போதாதம்மா சாமி வரங் கொடுக்கும் தாராலம்மா பூமி எடங் குடுத்தா போதாதம்மா சாமி வரங் கொடுக்கும் தாராலம்மா முப்போகம் எப்போதும் நீ போடு தப்பாது அப்பாவா ஆகபோர யப்பா யப்பா ஓல ஓல ஓல ஓல குடிசையில கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க ஆ கஞ்சி கஞ்சி கவலயில்ல மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க துன்பத்தில இன்பம் உண்டு அந்த இன்பங்கள நீ கண்ட பின்னால */
பாடி முடித்தவன்…. இருவரையும் பார்க்க… இருவரின் முகத்திலும் சந்தோஷம் மட்டுமே
”யப்பா… ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டீங்களா…” என மருது சந்தோசமாக அவர்கள் முன் நிற்க… அவன் பாட்டு பாடி ஆடியதில் இன்னுமே அவனுக்கு மூச்சிறைக்க… அவன் தலையைக் கோதி கலைத்து விட்ட பவித்ரா…
“எனக்கு ஒரு தம்பி இல்லைன்ற குறை உன்னால போயிருச்சுடா… உண்மையிலேயே சொல்லப் போனால் எனக்கு ஒரு தம்பி இருந்திருந்தால் கூட இந்த அளவுக்கு என்னை பத்திரமா பார்த்துக்குவானான்னு தெரியலை… அவ்ளோ ப்ரொடெக்டிவ் நீ ” என சந்தோஷமாகச் சொல்ல… நட்ராஜும் அன்று மருதுவைப் பெருமையாகப் பார்த்தான்…
---
சில நாட்கள் சென்றிருக்க… கிருத்திகாவும்…. அவளின் வருங்காலக் கணவனும் நட்ராஜ்-பவித்ரா வீட்டிற்கு வந்திருந்தனர்.. தங்கள் திருமண அழைப்பிதழுடன்
”ஏய்… நான் சொன்ன டிசைனையே சூஸ் பண்ணிட்டியா… சூப்பரா இருக்குடி…” கிருத்திகாவின் திருமணப் பத்திரிக்கையைப் பார்த்தபடி பவித்ரா தோழியோடு பேசிக் கொண்டிருக்க
கிருத்திகாவுக்குப் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை விசாகனோடு நட்ராஜ் பேசிக் கொண்டிருந்தான்…
“நெக்ஸ்ட் மந்த மேரேஜ் முடிந்த பின்னால ஒன் வீக்ல நான் கனடா போயிருவேன்… அதுக்கபுறம் டிசம்பர் கிரிஸ்துமஸ் லீவ்லதான் ரிட்டர்ன் ஆவேன்… அடுத்து நியூ இயர் முடிந்து ஒன்வீக்ல கிருத்தியையும் கூட கூட்டிட்டுப் போயிருவேன்” என விசாகன் சொல்லிக் கொண்டிருக்க…
கிருத்திகாவும் பவித்ராவுமே இப்போது அவர்கள் பேச்சில் கலந்திருக்க…
“மாம்ஸ் மிஸ் யூ மாம்ஸ்… இப்போ கூடச் சொல்லுங்க… விசாகனை விட்டுட்டு உங்களை மேரேஜ் பண்ணிக்க ரெடி… எனக்கு ஒரே கவலை… உங்களை விட்டுட்டு போறேனுதான்” என்ற கிருத்திகாவை செல்ல அடி போட்ட பவித்ரா…
“உங்க மாம்ஸை ஆயுள் முழுக்க பார்த்துக்க நாங்க இருக்கோம்… கெளம்பு கெளம்பு…” என்ற உற்சாகமாக ஆரம்பித்தவள்… அடுத்த நிமிடமே…
”நீ என்னை விட்டு கொஞ்ச கொஞ்சமா விலகி விலகி போயிட்டே இருந்த… இப்போ…”
பவித்ராவின் கண்கள் கலங்க ஆரம்பித்திருக்க… இப்போது கிருத்திகாவின் கண்களும் கலங்கி இருக்க… நட்ராஜ் இருவரையும் பார்த்தவனாக… தோழியர் இருவரையும் தன் கையணைவில் கொண்டு வந்தபடி
”ஏய் லூசுங்களா… “ எனும் போதே கிருத்திகா அவனின் தோள் சாய… வேகமாக வந்து அவளைத் தள்ளிவிட்ட பவித்ரா…
“அங்க ஒரு தோள் உனக்காக காத்துட்டு இருக்கு… போ போ” என்றபடி வேகமாகத் தன் ராஜிடம் சாய்ந்தவளை… நட்ராஜ் அணைத்துக் கொள்ள
”இதுதான் சான்ஸுனு… இவங்க ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சிருவாங்க விசாகன்…” என்றவளிடம்
”கல்யாணத்துக்கப்புறம் நாமளும் டஃப் காம்பெட்டிஷன் கொடுத்திறலாம் கிருத்திமா” என்றவனிடம் கிருத்திகா சிரிக்க
“ஏன் சார்… இந்தியாவிலேயே இருக்க முடியாதா… “ ராஜ் தன் சந்தேகத்தைக் கேட்க
”ரிசெர்ஜ் போயிட்டு இருக்கு… என்னோட கேரியருக்கு இது முக்கியமான பீரியட்… அதை முடிச்சுட்டுத்தான் மேரேஜ் பண்ணனும்ன்றதே என்னோட ப்ளான்… தெரியாத்தனமா இவ போட்டோவப் பார்த்துட்டேன்… மாட்டிக்கிட்டேன்” விசாகன் கண் சிமிட்டிச் சொல்ல
“ஹலோ… எங்க கிருத்தி… எவ்ளோ பிரீஷியஸ் தெரியுமா… நீங்க எவ்ளோ லக்கினு இப்போ உங்களுக்குத் தெரியாது… பத்திரமா பார்த்துக்கங்க” என்ற பவித்ராவிடம்
“இப்படித்தான் சார்… அப்போப்ப ரெண்டும் சேம் சைட் கோலும் போடுங்க… அப்படி என்ன ரிசர்ஜ் சார்…” என்றவரிடம்
“நான் ஆன்காலஜிஸ்ட்” எனும் போதே நட்ராஜ் தனது மனைவியைப் பார்த்து புரியாத பார்வை பார்க்க
“ஹா..ன் கேன்சருக்கு ட்ரீட்மெண்ட் பண்றவங்க ராஜ்…” பவித்ரா தன் கணவனுக்கு விளக்கமளித்தவளாக
”விசாகன் எத்தனையோ கேன்சர் பேஷண்ட்ஸுக்கு இலவசமா ட்ரீட் பண்ண உதவி பண்ணிருக்காரு…. இதை ஒரு செர்வீஸா பண்ணிட்டு இருக்காரு… வெளிநாட்டுல… அப்புறம் இங்க இருக்கிற வசதி படைத்தவங்க கிட்ட ஹெல்ப் கேட்டு… இவர்கிட்ட வருகிற பேஷண்ட்ஸ் எத்தனையோ பேரைக் காப்பாத்திருக்காரு தெரியுமா… அம்மணி அதுலதான் அந்த குணத்திலதான் தொபுக்கடீர்னு விழுந்தாங்க…” பவித்ரா விளக்கம் கொடுக்க… நட்ராஜு பெருமையுடன் விசாகனைப் பார்க்க
“பவித்ரா சொல்ற போல அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை ராஜ்… ஜஸ்ட் என்னால முடிந்த உதவி…” என்றவன்…
“ஃபெப்ருவரி தானே பவிக்கு டெலிவரி… கண்டிப்பா நாங்க குழந்தை பிறந்த பின்னால வருவோம்…. மேடம் அல்ரெடி ஆர்டர் போட்டுட்டாங்க” எனக் கிருத்திகாவைப் பார்த்து சொல்ல… பவி தன் தோழியைப் பார்த்து…
“என் டெலிவரிக்கு இருக்கமாட்ட… அப்புறம் என்ன பின்னால வந்து பார்க்கிற… நான் உன்னைப் பார்க்க மாட்டேன் போ…. ” என கடுப்பாகச் சொல்ல
“உன்னை எதுக்கு நான் பார்க்க வர்றேன்.. என் கண்மணியை பார்த்துட்டு போறேன்… அவ வந்த பின்னால உனக்குலாம் மவுசு இல்லை…” என்றபோதே
“யார் வந்தாலும் என் பொண்டாட்டியோட மவுசு எப்போதுமே குறையாது” என நட்ராஜ் வேகமாகச் சொல்ல
”மாம்ஸ்… செம்ம ட்ரைனிங் எடுத்துருக்கீங்க போல… விசாகா நீங்களும் கத்துக்கோங்க” என்று விசாகனுக்கு சொன்னபடி கலகலக்க…. அந்த இடமும் அவர்களது கலகலப்பில் அதிர்ந்தது…
--
கிருத்திகா திருமணமும் முடிந்திருந்தது… விசாகனும் அடுத்த ஒரு வாரத்திலேயே அவன் சொன்னது போல வெளிநாடும் கிளம்பியிருந்தான்
அவர்கள் வாழ்க்கையில்… டிசம்பர் மாதமும் வந்தது…
அந்த மாதத்தின் மத்தியில் ஒரு நாள்…
“ஏய் கிருத்தி… எப்டிடி உன் ஆளை விட்டு பிரிஞ்சுருக்க… “ பவித்ரா கேட்க
“ஏண்டி” கிருத்திகா கேட்க…
“நான் கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு…. அதுவும் கல்யாணமான கொஞ்ச நாள்ளயே விசாகனை கனடா அனுப்பிட்டு எப்படிடி இருக்க..” பவித்ரா கவலையோடு அவளிடம் விசாரிக்க
“என்ன பண்றது… ஆனால் எப்போட டிசம்பர் லாஸ்ட் வீக் வருதுன்னு இருக்கு பவி… 20த் விசாகன் வந்துருவாரு… “ கிருத்திகாவின் குரலில் உற்சாகமும் சந்தோசமும் கூடவே விசாகனின் மீதான காதலும் கலந்திருக்க…
“உனக்கு டிசம்பர் லாஸ்ட் வீக் எப்போ வரும்னு இருக்கு… ஆனால் எனக்கு ஏன் வருதுனு இருக்கு…” என்றவளின் குரல் ஞஙணநமன பாடியிருக்க
“ராஜ் அந்த வீக் டெல்லி போறார்டி… வர்றதுக்கு 2 மந்த்ஸ் ஆகும்… எப்படி அவரை விட்டு அவ்ளோ நாள் பிரிஞ்சு இருக்கப் போறேனோ தெரியலை…. ஆனால் இது அவருக்கு கிடைச்சிருக்கிற மிகப் பெரிய சான்ஸ்டி… என்னோட பொண்ணு இந்த உலகத்தைப் பார்க்கும் போது நானும் ராஜும் அவளுக்கு இந்த உலகத்தோட அத்தனை சந்தோசத்தையும் கொட்டிக் கொடுக்கனும்… என்னை என் அப்பா வளர்த்ததை விட ஒரு படி மேல…. இளவரசி மாதிரி வளர்க்கனும்… இந்த ஸ்னோ வொயிட் கதைல வருகிற மாதிரி..” என்ற போதே
“ப்ச்ச்.. இல்லல்ல… நான் என் பொண்ணோட ஒவ்வொரு ஸ்டேஜையும்… அவளோட ஒவ்வொரு விசயத்தையும் பெருசா திருவிழா மாதிரி கொண்டாடனும்… என்னை மாதிரி அவளையும் டாக்டராக்கனும்… அப்புறம்… ”என ஆரம்பித்தவள்” தாயாக அத்தனைக் கற்பனைக் கனவுகளையும் தன் தோழியிடம் சொல்லி முடித்தவள்….
“அர்ஜூனுக்கு அவளுக்கு மேரேஜ் பண்ணி வச்சு… என் அப்பா அம்மா கூட கண்டிப்பா சேருவேண்டி… இதெல்லாம் நடக்கும் பாரு” என்ற பவித்ராவின் ஒரு ஆசை கூட கண்மணி விசயத்தில் நிகழப் போவதில்லை என்பது எப்போதோ எழுதப்பட்ட விதி…. பவித்ராவால் மாற்ற முடியுமா என்ன… இந்தப் பூமியில் தன் வாழ்நாள் இன்னும் சில நாட்களே என்று தெரியாமல் தன் மகளைப் பற்றிய எதிர்காலக் கனவில் மூழ்கி இருந்தாள் பவித்ரா
---
டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி…
பவித்ரா, மருது… வாசு என அனைவரும் நட்ராஜை வழி அனுப்ப இரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருந்தனர்…
“இப்போ கூட உங்க அம்மா அப்பா வர மாட்டாங்களா ராஜ்… கடுப்பா வருது… நான் என்ன பண்ணேன் அவங்கள…” எனப் பவித்ரா தன் மனத்தாங்கலைச் சொல்ல
“நான் என்னடி பண்றது உன்னைப் பெரிய இடத்துப் பொண்ணா பார்த்தே அவங்களுக்கு பழக்கமாயிருச்சு பவி… உன்கிட்ட பேசவே பயப்பட்றாங்க… நானும் எவ்வளவோ சொல்லிட்டேன்… அவங்க கேட்க மாட்டேங்கிறாங்க நான் என்ன பண்ண…
”என்ன ஆளுங்களோ… எப்படித்தான் உங்களை வளர்த்தாங்களோ… ஆளாக்கினாங்களோ” எனச் சலிப்பாகச் சொன்னவளிடம்
”ஆமா உங்க அம்மாவும் அப்பாவும் உன்னை வளர்த்த மாதிரி எங்களை வளர்த்தாங்கன்லாம் நினைக்காத… பெத்ததோட சரி… வீடு இருக்கும்… சாப்பாடு இருக்கும்… அது கூட சில நேரம் இருக்காது… எப்டி இருந்தாலும் வளர்ந்துட்டோம்ல… மேல இருக்கிறவன் பார்த்துப்பாண்டி… மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்… இதோ மருதுவைப் பாரு… அம்மா அப்பாவே இல்லாமல் வளர்ந்து வரலை… அதுக்கு நான் பரவாயில்லைதானே… ஏண்டி இப்போ என் வளர்ப்பை பற்றி பேசவா இவ்ளோ தூரம் வந்த… நானே உன்னை விட்டுப் போறேன்னு கவலையோட இருக்கேன்… என்னை போ போனு துரத்து அனுப்புறேல” என அவள் கையைப் பிடித்தவன்
“யோசியேண்டி… இந்த சூழ்நிலைல போகனுமா… “ எனும் போதே
“இப்போ என்ன நாளைக்கே டெலிவரி டேட்டா என்ன… ரொம்ப பண்ணாதீங்க… ரெண்டு மாசம்… இடையில வந்து பார்க்கப் போறீங்க… நல்ல ஆப்பர்சூனிட்டி ராஜ்..”
“நீ ரிஸ்க் எடுத்து பண்ணதாலதான் போறேன்… இல்லைனா போயிருக்க மாட்டேன்…” என எங்கோ பார்த்தவன் பின்
”கிருத்தி வர்றேன்னு சொன்னாளா” கிருத்திகாவை விசாரிக்க
“இல்லை… விசாகனோட ரிலேட்டிவ் சௌத் சைட்ல இருக்காங்க… மேரேஜப்போ போக முடியலேன்னு… இப்போ விசாகன் வந்த பின்னால விருந்துக்கு கூப்பிட்டு இருப்பாங்க போல… அவளால தட்ட முடியலை ராஜ்… முன்ன மாதிரி நம்ம பின்னாடியே திரியுறதுக்கு அவ இப்போ தனியாளா” பவித்ரா தோழிக்குச் ஆதரவாகப் பேச
”மாம்ஸ் மாம்ஸுன்னு சுத்திட்டு இருந்தவ… இப்போலாம் கண்டுக்கிறதே இல்லை… சரி விடு… காதல்னு வந்துட்டா எல்லாம் கண்ணை மறச்சுடும் போல” என்ற போதே அவன் குரல் கிசுகிசுப்பாக மாறி இருக்க… பார்வையிலோ காதல் மட்டுமே
“ஏய்.. இது இரயில்வே ஸ்டேஷன்… எல்லோரும் இருக்காங்க… லூசாடா நீ…” என சுற்றி முற்றி பார்க்க…
“அடிப்போடி… பொண்டாட்டிய எனக்கு கொஞ்சனும்னு மூடு வந்துட்டா… இரயில்வே ஷ்டெஷன் என்ன… போலிஸ் ஸ்டேஷன் என்ன… சரி சரி அட்லீஸ்ட் கைலனாலும் கிஸ் கொடு” என நீட்ட
“அடிங்க… எல்லாம் நேத்து நைட்ல இருந்து போதும் போதும்ங்கிற அளவுக்கு கொடுத்தாச்சு… இதுக்கு மேல நோ… அடிதான் விழும்” சிரித்தபடியே சொன்னவளின் கைகளைக் தன் கைகளோடுக் கோர்த்துக் கொண்டவன்
“ஏய் ஏய் ப்ளீஸ்ட்… இ…………..ர…………ண்………. டு மாசம்டி… தாங்காதுடி… நினைத்துப் பார்க்கும் போதே செத்துப் போயிருவேன் போல…”
”அடி வாங்கப் போற ராஜ்…” என வெட்கப் புன்னகையோடு சொன்ன போதே… இவன் செல்வதற்கான ட்ரெயின் இவன் ஸ்டேஷனுக்கு வருவதற்க்கான அறிவிப்பை அங்கு சொல்லி இருக்க
“அஞ்சு நிமிசம் தாண்டி இருக்கு…. ப்ளீஸ்… ப்ளீஸ்…” எனும் போதே பவித்ரா மருதுவையும் வாசுவையும் அவர்கள் அருகே அழைத்திருக்க… மனைவியை முறைத்தபடியே… ராஜ் பார்த்திருக்க… அவனிடமிருந்த கையைப் பிரித்துக் கொண்டவள்…
“வாசு… லக்கேஜ்லாம் எடுத்துக்க… ட்ரெயின் வரப் போகுது” என்றபடி
“ராஜ்… அங்க ஏதாவது பிரச்சனைனா உடனே எனக்கு கால் பண்ணு.. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் உனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க… ஆனால் முரட்டுத்தனமா கை நீட்டாத யார்கிட்டயும்… அதே நேரம் படோபமான அவங்க ஆடம்பரம்… நுனிநாக்கு இங்கிலீஷ்னு பயப்படாத… எதுவா இருந்தாலும் தைரியமா பேசு… நீ பேசுறதுதான் முக்கியம்… திறமையே இல்லாதவங்களா இருந்தாலும் பேசியே சமாளிக்கிற ஆட்கள் மத்தியிலதான் நீ உன் டெமோவை எல்லாம் காட்டப் போற… நீ எப்படி பேசுறியோ அதுலதான் உன் திறமை இருக்கு… அதுக்கப்புறம் தான் உன்னோட நாலெட்ஜ் அவங்களுக்கு தெரியவே வரும்… ஞாபகம் வச்சுக்கோ…” என்றவளிடம்
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்… சும்மாவா என்னை ட்ரெயின் பண்ணிருக்க… அடிச்சு தூள் கிளப்பிறேன்…” என்றவனிடம்
“அப்புறம்… எந்தத்த ஸ்டேஷன்ல இந்த ட்ரெயின் நிக்குதோ… அங்கயிருந்து இருந்து எனக்கு ஃபோன் பண்ணு… டைம் எல்லாம் நோட் பண்ணிருக்கேன்… 11 வரை நம்ம தெருமுனைல இருக்கிற எஸ்டிடி பூத்ல பத்து நிமிடம் முன்னால வந்துருவேன்… பேசு” எனும் போதே ட்ரெயினும் நடைபாதையில் வந்திருக்க
அதுவரை தைரியமாகப் பேசிக் கொண்டிருந்தவளின் குரல் அப்படியே நின்றிருக்க… அவளுக்கு குரலே எழும்பவில்லை…
“ஏய்.. என்னாச்சு… இவ்ளோ நேரம் லெக்சர் கொடுத்துட்டு இருந்த…” எனும் போதே அவன் மார்பில் சாய்ந்திருக்க… அவள் தோள் மேல் கைபோட்டு அணைத்துக் கொண்டபடியே நடக்க ஆரம்பித்தவன்
“சரி… சரி… ரெண்டே மாதம் தானே… சொடக்கு போட்ற டைம்ல ஓடிடும்… அதோட இடையில வர முடிந்தால் ஓடி வந்துருவேன்… அதுமட்டும் இல்லை எனக்கு என் மகாராணியைப் பார்க்கனும்னு தோணினாலோ… இல்லை என் மகாராணிக்கு என்னைப் பார்க்கனும்னு தோணினாலோ ஓடி வந்துறப் போறேன்… இங்க இருக்கிற டெல்லி தானே…” என்றவனிடம்… பவித்ராவும்
“சரி சரி… நான் இப்போ ஆல்ரைட்…” என அவனை விட்டு விலக் போனவளை விடாமல் தன்னோடே வைத்துக் கொண்டவன்
“ஆல்ரைட்னா விலகிருவீங்களா… ஓய்… உடம்பை பார்த்துக்கடி… நல்ல ரெஸ்ட் எடு… இவ்ளோ நாள் தான் எனக்காக ஓடி ஓடி திரிஞ்ச… இனிமேல ஒழுங்கா ஹாஸ்பிட்டல் வீடுன்னு மட்டும் இரு… சிஸ்டம்ல அதிக நேரம் உட்கார்ந்திருக்காத… நேரத்துக்கு சாப்பிடு… ”
என்ற போதே
“அதை மருது பார்த்துக்குவான்… அந்தக் கவலை இல்லை” என இப்போது நட்ராஜ் அவளுக்கு அட்வைஸ் மழை பொழிந்தபடி வந்தவன்… மனைவியின் முகத்தை நிமிர்த்திப் பார்த்தவனாக
“உங்க அம்மாகிட்ட பேசலாம்ல… எனக்கென்னவோ அத்தை உன்னைப் புரிஞ்சுப்பாங்களோன்னு தோணுது…”
“யாரைப் பற்றியும் பேச வேண்டாம்… நான் கன்சீவா இருக்கேன்னு அம்மாக்கு தெரியாமல் இருக்குமா ராஜ்… ஒரு நாள் கூட பார்க்க வரனும்னு தோணலை தானே… அன்னைக்கு அப்பா அவ்ளோ பண்ணினார்னு தெரிஞ்சும் என்னை வந்து பார்க்கலைதானே… இனி நான் அந்த வாசப்படியை மிதிக்க மாட்டேன்… செத்தா கூடஇனி அந்தப் பக்கம் போகக் கூடாது முடிவு பண்ணிட்டேன்”
”அப்டியே வாயில போட்டேன்னு வச்சுக்க…” என்று மனைவியைக் கடிந்திருக்க…
“நான் எப்போதும் போக மாட்டேன் ராஜ்…. என் பொண்ணை அழிக்க நினைச்சார்ல… ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவர் பேத்திக்காக கெஞ்சுவாரு பாரு…. கண்டிப்பா அந்த நாள் வரும்… அப்போ இருக்கு அவருக்கு… நீ சப்போர்ட் பண்ணினால் கூட என் பொண்ணை பார்க்க அவரைப் விட மாட்டேன்… ஞாபகம் வச்சுக்கோ” என்ற போதே
“சரிங்க மேடம்…” என்றபோதே அவன் அமரும் பெட்டியின் இடம் வந்திருக்க… ஏறி படிகளில் நின்றவன்… ஏழு மாதமான மேடிட்ட வயிறோடு… கலங்கி நின்றவளைக் காணமுடியாது
“பவி… நீ போ… இங்க ரொம்ப நேரம் நிக்காது… 2 மினிட்ஸ்தான்… யாராவது இடிச்சுறப் போறாங்க….” எனும் போதே அவன் சொன்னபடியே போர்ட்டர் ஒருவன் இலேசாக பவித்ராவை இடித்தும் விட… நட்ராஜ் கோபமாக கத்த ஆரம்பித்த போதே
“ஏய் ராஜ்… ஒண்ணும் பெருசா இல்லை… இப்போ ஏன் இவ்ளோ டென்சன் கூல்… உள்ள போய் உட்காருங்க… சன்னல் பக்கம் வாங்க..” என்றபடி…
அவன் அமரப் போகும் சன்னலோர இருக்கையை நோக்கி ஓடி வந்தவளைப் பார்த்தபடியே….நட்ராஜும் வேகமாக உள்ளே வந்தபடி தான் அமரும் இருக்கையில் அமர்ந்தவன்… சன்னல் வழியே அவள் கைகளைப் பிடித்துக் கொண்டவன் மருதுவிடம்
‘டேய் பார்த்துக்கடா… உன்னை நம்பிதான் விட்டுட்டுப் பொறேன்… யாரும் இல்லடா அவளுக்கு… நான்… எனக்கப்புறம் நீதான் அவளுக்குனு இருக்க…” எனும் போதே நட்ராஜ் கண்கள் சிவந்திருக்க… அவன் கைகள் மனைவியின் கையை இப்போது இறுக்கமாகப் பற்றி இருந்தது விட மனமில்லால்… ஆனால் காலம் காத்திருக்குமா என்ன…. இரயிலும் மெல்ல கிளம்ப ஆரம்பித்திருக்க… நட்ராஜ் கையை விலக்க ஆரம்பித்திருக்க… பவித்ராவோ அவனின் கைகளை விடாமல் வண்டியின் மெதுவாக வேகத்தோடே மெல்ல ஓடி வர ஆரம்பித்திருக்க
“ஏய்… பார்த்துடி…” என்றபடியே… வேகமாக மருதுவின் புறம் திரும்பியவனாக…
“டேய்… அவளைப் பிடி…” எனக் கைகளை எடுத்துக் கொள்ள முயல… பவித்ரா இப்போதும் விடாமல் இருக்க… மெல்ல இரயிலின் வேகம் அதிகரிக்க ஆரம்பித்திருக்க… பவித்ராவுக்கும் நிதர்சனம் புரியாமல் இல்லை… கைகளை எடுத்தபடி வேகமாக அவன் கைகளில் இதழ் பதித்து அவனைப் பார்க்க… நட்ராஜின் கண்களில் சோகமெல்லாம் மறைந்து புன்னகை வந்திருக்க… பவித்ராவும் கண்களில் குறும்போடும் வெட்கத்தோடும் அவனைப் பார்க்க…. அவர்களிடம் சந்தோசம் மட்டுமே இருக்க… அவர்கள் பறிமாறிக் கொள்ளும் கடைசிப் பார்வை என்றறியாமலேயே…. சந்தோசமாகவே முடிந்திருந்தது அந்தப் பார்வை..….
---
Comments