top of page
Writer's picturePraveena Vijay

கண்மணி... என் கண்ணின் மணி- 83

அத்தியாயம் 83:


/* ஏன் வந்தது காதல் ஏன் வந்தது

யார் சொன்னது அதை யார் சொன்னது


கண் சொன்னது எந்தன் மனம் சொன்னது

இதழ் மட்டும் தான் கொஞ்சம் பொய் சொன்னது


நான் உன்னைக் காணும் முன்னே காதல் தந்தேன்

ஏன் என்னை தள்ளி வைத்தாய் சொல்வாயா


தாய் என்னை கர்ப்பப்பையில் தாங்கும் முன்னே

நான் உன்னைக் காதலித்தேன் தெரியாதா*/


விக்கியும் ரிஷியும் சென்னை வந்து சேர்ந்தபோது மணி நள்ளிரவு 12 மணியைக் கடந்திருக்க…


“டேய்… நாம இருந்த வீட்டுக்கு போற ஏரியாக்கு பிரியுற ரோட்ல நிறுத்திக்கடா… அங்க இருந்து எங்க ஏரியாக்கு ஷார்ட் கட்ல போயிருவேன்” ரிஷி விக்கியிடம் சொல்ல


விக்கியோ அவனைக் கண்மணி இல்லத்தில் கொண்டு வந்தே விட்டுப் போகிறேன் என்று சொன்ன போதும் பிடிவாதமாக ரிஷி மறுத்து விட்டான்…


விக்கியும் வேறு வழியில்லாமல் ரிஷியை இறக்கி விட்டுச் செல்ல… இறங்கிய ரிஷி… மணியைப் பார்த்தபடியே… கண்மணியை அழைக்க தன் அலைபேசியை எடுத்தான்…


---


காதில் ஹெட்போன் மாட்டியபடியே… அலைபேசியில் பாடலைக் கேட்டவாறே… கணினியில் மும்முறமாக கதை எழுதுக் கொண்டிருந்தவள்… என்னதான் கற்பனை உலகில் சஞ்சரித்தாலும்… அவளின் கண்கள்… மடிக்கணினியில் நேரத்தையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தது… அலைபேசியில் எப்போதடா கணவனின் அழைப்பு வருமென்று செவிகளும் காத்துக் கொண்டிருந்தது…


ரிஷியின் அழைப்பு வந்தவுடன் கிளம்பிச் செல்வதற்கு ஏதுவாக தயாராகியும் இருக்க… காத்திருந்தாள் கணவனின் வருகைக்காக… அவன் அழைப்புக்காக…


”தூங்காத விழிகள் ரெண்டு உன்துணைதேடும் நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் ஆனந்தம் எனக்கேது அன்பே நீஇல்லாது தூங்காத விழிகள் ரெண்டு உன்துணைதேடும் நெஞ்சம் ஒன்று”


அலைபேசியில் பாடல் ஒலிக்க…


”ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…. ரொம்ப நல்ல பாட்டுடா… நம்ம நேரத்துக்கு தகுந்த மாதிரி வருதே… இனி எழுதின மாதிரிதான்… ” என்று நெட்டி முறித்தபடியே…. மடிக்கணியை தன்னிடமிருந்து தள்ளி வைத்தவள்… தன் அலைபேசியை எடுத்து அன்று அதிகாலையில் எடுத்த புகைப்படத்தொகுப்பை எடுத்து அதில் இருந்த ரிஷியைப் பார்த்தபடியே …


”டேய் ரிஷி எங்கடா இருக்க… சீக்கிரம் வந்து சேருடா… தூக்கம் வேற வருது… என்னடா மரியாதைலாம் பறந்துருச்சுனு திங்க் பண்றியாடா…. அப்டிதாண்டா… கூப்பிடுவேண்டா…. என்ன பண்ணுவடா…” தனக்குள் சிரித்தபடி பேசிக் கொண்டவள்…


“நீ எப்டிடா இவ்ளோ அழகா இருக்க.. என் கண்ணே பட்ரும் போல இருக்குடா” அவனுக்குச் சுற்றி போட்டு கைகளால் அவன் முகத்தைத் தொட்டு முத்தம் கொடுக்க… அதே நேரம் ரிஷியின் அழைப்பும் வர…


“ஹேய் ரிஷி…” என உற்சாகக் குரலில் பேச ஆரம்பித்த போதே… அவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்


”லொகேஷன் ஷேர் பண்ணிருக்கேன் பாரு… வா…” என்றவன்…. அவன் நின்று கொண்டிருந்த இடத்தின் வேறு அடையாளங்களையும் தீவிர பாவத்தோடு சொல்லிக் கொண்டிருக்க


“இதுக்கெல்லாம் ரொமான்ஸ்… ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கொரு தரம்தான் வரும் போல… எப்போ பாரு… மலையை புரட்டப் போற மாதிரியே… கப்பல் கவிழ்ந்த மாதிரியே… யோசனையிலேயே திரியுறது” மனதுக்குள் மானாவரியாக தன் கணவனைச் செல்லமாக???? கொஞ்சிக் கொண்டவள்… வெளியே சொல்வாளா என்ன… அதெல்லாம் சொல்லாமல்… அமைதியாக இருந்தபடியே…


“ஹ்ம்ம்…. சரி… சரி… சரி ரிஷிக்கண்ணா” என்று அவன் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டவள்… தன் இருசக்கர வாகனத்தை எடுத்தபடி அவனை நோக்கி விரைந்தாள்…


---


போனை வைத்தவன்… வெறுமையாக இருந்த அந்த அலைபேசியின் திரையையே வெறித்தவன்…. வெகு நாட்களுக்குப் பிறகு… இல்லையில்லை நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு… தன் அலைபேசியையின் வெறுமையை மாற்றி அலங்கரித்திருந்தான் அவனவளின் புகைப்படத்தை வைத்து… அதிலும் இருவரும் சேர்ந்து இல்லாமல்… தன் மனைவி மட்டுமே இருக்கும் புகைப்படத்தை வைத்தவன்… அதைப் பார்த்தபடி இருக்கும் போதே… அவன் மீது யாரோ வந்து மோத… ரிஷி சமாளிக்க நினைத்து… அவன் சமாளித்த போதும் அவனது அலைபேசியை அவனால் காப்பாற்ற முடியாமல் போக… அது கை நழுவி கீழே விழுந்தும் விட… தன் மேல் மோதியவனைப் பார்த்து கோபத்துடன் ஓங்கி குத்தப் போக… ரிஷியின் மீது வந்து மோதியவனோ மனநிலை சரியில்லாத ஒருவன்…


ரிஷியின் கை தானாகவே இறங்கி இருக்க… அவனை விட்டு விட்டு…. தன் அலைபேசியை எடுக்கப் போக… அவனுக்கு முன்பே… ரிஷியின் அலைபேசி அந்த பைத்தியக்காரன் கைகளில் சேர்ந்திருக்க…


“ஏய் போனைக் குடு” ரிஷி இப்போது வேகமாக அவனிடம் மல்லுக் கட்ட…


அவன் மீது மோதியவனோ அந்த அலைபேசியை அப்படியும் இப்படியுமாக மாற்றியபடி இருக்க… ஒரு கட்டத்தில் அந்தத் திரை ஒளிர… அவன் கண்களில் மின்னல்


”மீனா… என் மீனா… மீனுக்குட்டி…” என்றபடியே ரிஷியைப் பார்த்தவன்….


“நீ…. நீ ஏன் மீனுக்குட்டி போட்டோவை வச்சுருக்க… அவளுக்குத் தெரிஞ்சது உன்னை சும்மா விட மாட்டா… ”


’இது என்னடா புதுக் குழப்பம்’ ரிஷி அதிர்ந்த பார்வையில் பார்த்த போதே…


“அங்கயும் இருக்கா என்னோட மீனு… ” என்றபடி… அலைபேசியை கை நழுவ விட்டவனாக… சுவரில் ஒட்டப்பட்டு இருந்த திருமண விழா போஸ்டரை நோக்கிப் போக… ரிஷி வேகமாக குனிந்து தன் அலை பேசியை எடுத்தபடி… அவனைத் திரும்பிப் பார்க்க… யாரோ ஒரு மணமகன் மணமகள் திருமண விழா அழைப்புக்கான போஸ்டர்…


”ப்ப்ப்ப்ப்ப்ப்பூஊஊஉ…… பைத்தியம் போல… யாரைப் பார்த்தாலும் சொல்லுவான் போல” ரிஷி நிம்மதிப் பெருமூச்சு விட்டவனாக… தன் அலைபேசியை எடுத்து துடைத்தபடியே….


“நல்ல வேளை… போனை அவன் கையோட எடுத்துட்டு போகலை… லோகேஷன் வேற ஷேர் பண்ணியிருந்தேன்…. “ என்றபடி திரும்பிப் பார்க்க… அந்த பைத்தியக்காரன் அங்கு இல்லை…. காணாமல் போயிருந்தான்


தோளை உலுக்கியபடி…. மணியைப் பார்த்தபடி நின்றவன்


“இவளை இந்த நேரம் வரச் சொன்னது தப்போ… அவ தைரியம் தான்… யாரா இருந்தாலும் சமாளிப்பாதான்…. ஆனால் இந்த மாதிரி பைத்தியங்களை எல்லாம்…” யோசனையில் இருந்தவன்… கண்மணிக்கு போனை அடிக்க… அவளோ எடுக்காமல் இருக்க… கொஞ்சம் பயம் வந்த போதும்… கண்மணியை அறிந்தவன் அவன்… அதனால்… கொஞ்சம் சமாதானமாகி மீண்டும் அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்திருந்தான்…


----


சரியாக அடுத்த 15 நிமிடங்களில் ரிஷி பகிர்ந்திருந்த இடத்துக்கு வந்தவள்… பைக்கை நிறுத்தி… அவனைத் தேட… ரிஷியோ அங்கில்லை…. மீண்டும் அலைபேசியை எடுத்து… சரி பார்த்தவள்…


“இங்க தானே… காமிக்குது” கொஞ்சம் தயக்கம்… கொஞ்சம் குழப்பம் என பார்வையைச் சுழற்றி சுற்றி முற்றித் தேட… ஒரு கட்டத்தில் அவளது பார்வை சந்தோஷமாக முடிய… முடிந்த அந்த இடத்தில் ரிஷி நிற்க… ரிஷி இப்போது அவளைப் பார்த்து கையசைத்தபடி… அவளுக்கு அழைத்தான்


“அம்மு… இங்க வா…” எனச் சொல்ல… கண்மணியும் அவனை நோக்கி வண்டியைத் திருப்பினாள்…


“இங்க என்ன பண்றீங்க… மேப் கரெக்டாத்தான் காமிச்சுருக்கு… நான் தான் கொஞ்சம் பயந்துட்டேன்… வாங்க போலாம்.” என்று வண்டியை விட்டு இறங்காமலே பேச…


“இறங்குங்க மேடம்” என்றவனை கூர்மையான விழிகளில் தொணித்த பார்வையோடு நொக்கியவள்… அப்போதுதான் கவனித்தாள்… அங்கு அமர்ந்திருந்த பெண்மணியை… அதுவும் பூக்கூடையோடு…


புருவம் உயர்த்தியவள்… வண்டியை விட்டு கணவனின் அருகில் வந்து நின்றவளாக…


“ஹ்ம்ம்… ரிஷிக்கண்ணா… அந்த 24/7 டெமோ வெர்ஷன் காட்டப் போறீங்களா என்ன… ” என்று வம்பிழுக்க… அவளிடம் பேச்சை வளர்க்காமல்


“அக்கா… கொடுங்க அக்கா…” என பூவை வாங்க


“ரிஷி… எனக்குத்தானே பூ… அப்போ எனக்குப் புடிச்ச பூதானே வாங்கிக் கொடுக்கனும்” எனக் கண்மணி வேகமாகப் பேச


“என் அறிவுக் கொழுந்தே… அவங்க கிட்ட இருந்ததே… இந்த மல்லிப்பூ மட்டும்தான்” எனும் போதே… கண்மணி அசடு வழிய….


“ரொம்ப புத்திசாலிதான் என் பொண்டாட்டி… அப்போப்ப.. சறுக்குவ… அது மாதிரிதான்.. இப்போ… ரொம்ப ஃபீல் பண்ணாதம்மா” என்றபடியே அவளது கையில் அவன் வாங்கிய பூவைக் கொடுக்க… வாங்கிக் கொண்டவளிடம்…


”அதை பைக்ல உள்ள வச்சுட்டு வா….” என்று சொன்னவன்… அவளைக் கூட்டிக் கொண்டு… எதிர்திசையில் நடக்க


“நம்ம ஏரியா… இந்தப் பக்கம் ரிஷி…” கண்மணி சொல்ல… நின்றவன்…


“பூ வாங்கியாச்சுதானே… அடுத்து என்ன வாங்கனுமோ அங்கதான் போகப் போகிறோம் “ ரிஷி நிறுத்தி நிதானமாகச் சொல்ல… வேகமாக அவன் முன் வந்து நின்ற கண்மணி… அவனைப் பார்த்தபடியே… பின்புறமாக கால்களை எடுத்து வைத்து நடந்தவளாக…


“ஆ… ரிஷி… நீங்களா இது… என் புருசனா இது… ஐயையோ அம்னீஷியா ஏதும் உங்களுக்கு வந்துருச்சா ரிஷி… உங்க அம்மா… தங்கை இவங்க எல்லாம் மறந்து போய்… என்னை மட்டும் தான் ஞாபகம் இருக்கா உங்களுக்கு… ஹான்… உங்க அம்மா பேரு இலட்சுமி… அப்பா பேர் தனசேகர்… அப்புறம் ரிதன்யா… ரித்விகா… ஞாபகம் இருக்கா மிஸ்டர் ரிஷிகேஷ்…” கண்மணி வேண்டுமென்றே விடாமல் வம்பிழுத்தபடி… ரிஷியின் முறைப்பையும் அதற்கு பரிசாக வாங்கிக் கொண்டு அவனோடு நடக்க ஆரம்பிக்க…


“ஏய்…. ஒழுங்கா பாதையைப் பார்த்து நடடி…” என்று கைப்பிடித்து தன்னோடு சேர்ந்துக் கொண்டு நடக்கத் துவங்க…


“ம்ம்…. சரி சரி….” என்றவளை நிறுத்தி…. கடையினைக் கைகாட்ட… அங்கு பலதரப்பட்ட இனிப்புகள் இருக்க… அவளுக்குப் பிடித்த… அவள் சாப்பிட ஏங்கிய இனிப்பு வகைகள் அனைத்தும் இருக்க


“ஹேய் ரிஷி… “ என்றவளின் கண்கள் விரிய… ரிஷியைப் பார்க்க… அவள் காதருகே குனிந்தவன்


“அல்வா மட்டுமல்ல…. உனக்குப் பிடிச்ச எல்லாமே… நீ சின்ன வயசுல இருந்து என்னென்ன ஆசைப்பட்டியோ… அத்தனையும்… “ சொல்லி முடிக்கவில்லை…


”இதைப் பிடிங்க…“ எனத் தன்னுடைய அலைபேசியை அவனிடம் கொடுத்தவள்… அங்கிருந்த இனிப்புகளை பார்வையிட ஆரம்பித்தவள்… வரிசையாக சொல்லி… அத்தனையும் வாங்க ஆரம்பிக்க… ரிஷி மெல்லிய புன்னைகையோடு ரசித்தான் தான் அவளை… அதே நேரம் சிறு வலியோடும் அவளைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்…


அடுத்த சில பல நிமிடங்களில்… தேவையானப் பொருட்களை வாங்கிக் கொண்டு…. ரிஷியைப் பார்க்க… அவனும் அதற்கானத் தொகையைச் செலுத்திவிட்டு இருவருமாக படிகளில் இறங்கினர்… அந்த இரவிலும்…. அந்தக் கடையில் வாடிக்கையாளர்கள் இருக்க… அவர்களைப் பார்த்தபடியே


“ஏன் ரிஷி… இந்தக் கடை எப்படித் தெரியும்… அதுவும் இந்த டைம்க்க்லாம்… இந்தக் கடை திறந்திருக்கும்னு” கேட்ட போதே… கண்மணியை தாண்டி ஒருவன் கடந்து செல்ல… அதே நேரம் அவளைக் கடந்து சென்றவனிடம் மதுவாசனை அடிக்க..


கண்மணி… ரிஷியைப் பார்த்து… பொய் முறைப்பைக் காட்டியவளாக….


“இது நீங்களும்… உங்க ஆருயிர் தோழன்... தங்கள் வருங்கால மச்சான்... விக்கியும் தங்கி இருந்த வீடு இருந்த ஏரியாக்கு பக்கம் தானே…. ஓ ஓ ஒ ரிஷித் தம்பிக்கு இந்த மிட்நைட் கடை எப்படி தெரியும்னு இப்போ புரியுது... ” என்று குறும்பாக கண் அடித்தவளிடம்


ரிஷியின் கடுப்பாகப் பார்க்க… அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்


“ஆனா…. ரெண்டாளா இருந்துருப்பீங்களே…. ஞாபகம்லாம் இருக்கா என்ன???”


“தெரியுதுதானே… அப்போ விளக்கம் வேண்டாமே…” என்று ரிஷி அந்தப் பேச்சை முடித்து வைக்க….


கண்மணியும் அதற்கு மேல் அந்தப் பேச்சை விட்டு விட்டாள்… ஒரு காலத்தில்… அதாவது அவன் கல்லூரிக் காலத்தில் நள்ளிரவில்… அதுவும் குடித்துவிட்டு… வரும் பழக்கத்தை இப்போது ஏன் சொல்லிக் காட்டுவானேன்… அவனும் அதை விரும்பவில்லை என்பது கண்கூடாகத் தெரிய விட்டுவிட்டாள் கண்மணி….


“வீட்டுக்குப் போலாமா அம்மு…” ரிஷி கேட்டபடியே கண்மணியிடம் அலைபேசியை நீட்ட…. கண்மணி வாங்கியபடி… அதைப் பார்க்க… அது அவனது அலைபேசி… மீண்டும் அவனிடமே கொடுக்கப் போக… அப்போது அதில் கண்மணியின் புகைப்படம் வர… புருவம் சுருக்கினாள்…


“என்ன ரிஷிக்கண்ணா… ஒரே நாள்ள பல ஆச்சரியமா கொடுக்கறீங்க… இப்டிலாம் வைக்க மாட்டீங்களே…” என்று சொன்னபடியே அவனிடம் போனை வாங்க கை நீட்ட… அவனிடம் கொடுத்தவள்…. அப்போது ஒரு காலத்தில் அவனோடு அலைபேசியில் இருந்த அவன் குடும்பத்தைப் பார்த்து அது பற்றி பேசிய ஞாபகம் வர…


“ரிஷி சார்” என மூன்றாம் மனுசி போல் அந்நியக் குரலில் அழைக்க…. ரிஷி அவளைப் புரியாமல்… அவள் குரலின் அந்நியம் உணர்ந்து திரும்பிப் பார்க்க்க….


“உங்க போன்ல இருக்கவங்க உங்க வைஃபா… அழகா இருக்காங்க… ” என்று மட்டும் சொல்ல… ரிஷி அவளின் விளையாட்டுத்தனத்தைப் புரிந்தவனாக… இப்போது மென்னகை புரிய….


கண்மணி இப்போது…


“இப்போ உங்ககிட்ட இருந்து இதுக்கு ரெஸ்பாண்ஸ் எதிர்பார்க்கிறேன்… ரிஷி சார்…” என்றவளிடம் ரிஷி இன்னும் புரியாமல் விழிக்க…


”என்னாச்சு ரிஷி சார்… பாண்டிச்சேரி போய்ட்டு ஒரு ரேஞ்ச்ல வந்துருகீங்களா என்ன”


“வாய் உனக்கு அதிகமா நீளுதுடி… இங்கல்லாம் விட்டுட்டுத்தான் பாண்டிச்சேரில போய்த் தடுமாறுறோமோ…”ரிஷி முறைத்தபடியே


“இப்போ நான் என்ன சொல்லனும்னு எதிர்பார்க்கிற… நீ ஒண்ணை மனசுல வச்சுட்டு என்னைப் பேசு பேசுன்னா… நான் என்ன பேசுவேன்” என்று உண்மையிலேயே தெரியாமல் கேட்க…


“இப்போ நான் என்ன சொன்னேன்… அதைச் சொல்லுங்க முதல்ல” கண்மணி கேட்க


“நீ அழகா இருக்கேன்னு… சுய தம்பட்டம் அடிச்சுக்கிட்டியே… அதுவா” ரிஷி நக்கலாகக் கேட்க


“ஹான் அதேதான்… அப்போ அடுத்து நீங்க என்ன சொல்லிருக்கனும்”


“என்ன சொல்லிருக்கனும்” ரிஷி திரும்பி கண்மணி சொன்னதையே சொல்லி கேட்க… முறைத்த கண்மணியிடம்


”உண்மையிலேயே தெரியலடி…. என்னவோ சொல்லி தொலஞ்சுருப்பேன் போல… நீ முதல்ல சொன்னேல்ல... ரெண்டாளா இருந்திருப்பேன்னு... அதுனால சத்தியமா என்ன சொன்னேன்னு... சொல்லி இருப்பேன்னு... இப்போ ஞாபகத்துக்கு வரலை அம்மு…” உண்மையிலேயே ரிஷி அப்பாவியாக அவளிடம் சரணைடைய…


”பார்த்தா பாவமாத்தான் தெரியுது… நானே சொல்றேன்…” என்றவள்


‘இப்போ நீங்கதான் கண்மணி… நான் தான் ரிஷி… ஓகேவா… என்கிட்ட போனைக் கொடுத்துட்டு… “உங்க வைஃபா… அழகா இருக்காங்கனு சொல்லுங்களேன்” கண்மணி சொல்ல.. அதே போல ரிஷியும்….அவளிடம்… சொல்ல.. கண்மணி அலைபேசியை எடுத்து அதில் இருந்த தன் புகைப்படத்தை சில நிமிடம் பார்த்தவள்… பின் ரிஷியைப் பார்த்து அவனைப் போல அதே தோரணையுல்


“ஹ்ம்… என் மனைவிதான்… ஆனா அதுக்கு மேல… இவதான் என் மூச்சு…. நாடி நரம்பு… என் உயிர்…” என கண்மணி அடுக்க ஆரம்பித்திருந்தவள்… ரிஷியின் சிவந்த முகத்தில்… அவனை விட்டு விலகி முன்னால் வேகமாகச் செல்ல ஆரம்பித்திருந்தாள்..


அந்த பகுதியில் யாருமே இல்லாமல் இவர்கள் மட்டுமே இருந்தனர்…


“இதெல்லாம் சொல்லனும் பாஸ்… ஆமாதானே… உண்மைதானே” என்றவளை… ரிஷியும் இப்போது தன்னை மறந்து துரத்த ஆரம்பித்திருக்க… அவனிடம் மாட்டாமல்… அவனைத் திரும்பித் திரும்பி பார்த்தபடியே ஓட ஆரம்பித்திருக்க…


புன்னகையை பொய்க்கோபத்துடன் அணிந்து… அவளைப் பார்த்தபடி துரத்திச் சென்றவனின் கண்களில் கண்மணியின் முன் நின்று கொண்டிருந்த அந்தப் பைத்தியக்காரன் பட… ரிஷியின் புன்னகை இப்போது பதட்டத்தை அணிந்து உறைந்திருக்க… கண்மணியை அவன் எச்சரிக்கும் முன்னரே… கண்மணி… சற்று முன் ரிஷி சந்தித்த அந்த மனநிலை சரியில்லாதவன் மேல் இடித்து நிற்க…கண்மணி திரும்பிப் பார்க்கும் முன்னரே… கண்மணியின் கைகளை வலுவாக அவன் பிடித்துக் கொண்டான்…


ரிஷியை… அவன் பார்வை மாற்றத்தை பார்த்து புரிந்து கண்மணியும் சுதாரிக்க நினைத்தாள் தான்… ஆனால் அதற்கு முன்னரே அவள் கைகள் சிறை பட்டிருக்க… தன் கைகளைப் பிடித்திருப்பவனை வேகமாக பதற்றத்துடன் திரும்பியவள் கண்கள்… அந்த முகத்தைப் பார்த்து திரும்பும் போதோ… பதட்டத்தைக் களைந்து… கனிவைக் கொண்டிருக்க… அதே நேரம் ரிஷியோ…. கடுங் கோபத்துடன் அவள் அருகே வந்திருந்தான்


“கண்மணி…” என அவளைக் கைப்பிடித்து இழுக்க நினைக்க… அந்த பைத்தியக்காரனோ… இப்போது வேகமாக கண்மணியை அவன் புறம் இழுக்கப் போக…


”ரிஷி… ரிஷி… ஸ்டாப்… தள்ளிப் போங்க… நான் சமாளிச்சுக்கிறேன்…” கண்மணி சமாளித்து பேச ஆரம்பிக்க


“லூசாடி… அவன் பைத்தியக்காரண்டி…. மீனா…. மீனான்னு… யாரைப் பார்த்தாலும்… இப்போ கூட…. செல்போன்ல உன் போட்டோவைப் பார்த்து லூசு மாதிரி பிஹேவ் பண்ணினான்… நீன்னு இல்லை… எந்தப் பொண்ணைப் பார்த்தாலும்… இப்படித்தான் பைத்தியக்காரத்தனம் பண்ணுவான் போல… உண்மையிலேயே பைத்தியம் தானா… இல்லை வேணும்னே பண்றானா… யாருக்குத் தெரியும்… இனி.. இது மாதிரி நடக்கக் கூடாது… சாருக்கு அந்த மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுத்துறலாம்…” என ரிஷி முன்னேறி வர…


வேகமாக கண்மணி ரிஷியை மறைத்து…. தன்னைப் பிடித்திருந்தவனை மறைத்து காப்பாற்றியவளாக


”ரிஷி… சொல்றதைக் கேளுங்க… நீங்க போங்க… நீங்க ஏதாவது பண்ணினா… அண்ணா வேற மாதிரி ரியாக்ட் பண்ணுவாங்க… நா… நான் சொல்றதை மட்டும் கேளுங்க ப்ளீஸ்…” என்றவள்… ரிஷியின் கோப முகத்தை எல்லாம் கண்டு கொள்ளாமல்…


“வாசுண்ணா…. வாசுண்ணா” கண்மணி தன்னைப் பிடித்திருந்தவனை கூப்பிட…


அவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்…


“மீனா… மீனா… சாரிம்மா….” எனும் போதே… கண்மணி ரிஷியைப் பார்க்க… அவனோ கண்களிலே தீக்கங்குகளை அள்ளி வீசாத குறையா கண்மணியைப் பார்த்து நிற்க…


பெருமூச்சை இழுத்து விட்ட கண்மணி….


”நான் உங்க மீனாதான்… நான் சொல்றதை எப்போதான் கேட்கப் போறீங்க… அன்னைக்கும் கேட்கலை… இப்போதும் கேட்கலை…” கண்மணி அவனிடம் திரும்பி அவன் முகம் பார்த்து கேட்க…


“இல்லல்ல… சொல்லு… நான் கேட்பேன்… நீ என்ன சொன்னாலும் கேட்பேன்… “


“ஹ்ம்ம்… அப்போ என் கையை விட்டுட்டு… இப்டி உட்காருங்க…” அங்கிருந்த மேடையைக் காட்ட…


“உட்காருவேன்… ஆனால் கையை விட மாட்டேன்…” என்றபடி அமர்ந்தான் வாசு என்று கண்மணியால் அழைக்கப்பட்ட அந்தப் பைத்தியக்காரன்…


கண்மணியின் கையைப் பிடித்திருந்தாலும்… அவன் வாய் மீனா… மீனா… அவள் பெயரையே ஜபம் போல ஜபித்துக் கொண்டிருக்க


இப்போது ரிஷியாலும் ஓரளவு யூகிக்க முடிய… இருந்தாலும் அவன் மனம் கண்மணியை நினைத்து பதட்டத்தில் இருக்க…


”ரிஷி… என்னோட போன்ல… நம்ம ஸ்டேண்ட் ஆட்டோ ட்ரைவர் அண்ணா நம்பர் இருக்கும் பாருங்க… அவங்களுக்கு போன் பண்ணி… குமுதாக்கா நம்பர் கேளுங்க… என்கிட்ட அவங்க நம்பர் இருக்குதான்… ஆனால் இப்போதும் அவங்க பழைய நம்பர் தான் யூஸ் பண்றாங்களான்னு தெரியல… அதான்… அண்ணாகிட்ட அவங்க நம்பர் கண்டிப்பா இருக்கும்னு நினைக்கிறேன்… ” என ரிஷிக்கு கட்டளையிட


”ஹேய் பார்த்து ஜாக்கிரதைடி… போன் பண்றேன்…” என்றபடி… தன்னவளின் மேல் பார்வையை வைத்தபடி… வேகமாக ரிஷி கண்மணியின் அலைபேசியில் கண்மணி சொன்ன ஆட்டோ ஓட்டுனர் எண்ணை அழைக்க… அவனோ எடுக்காமல் போக… இப்போது கண்மணி


“என்னோட போன்ல… குமுதான்ற காண்டாக்ட்ட்க்கு ட்ரை பண்ணுங்க ரிஷி… கண்டிப்ப்பா அக்கா இங்கதான்… பக்கத்திலதான் இருக்கும்” கண்மணி ரிஷியை கெஞ்சலுடன் அவசரப்படுத்த


ரிஷியோ கடுப்புடன் முறைத்தான்….


“ஏண்டி… கையை உதறித் தள்ளிவிட முடியலையா… தள்ளி வா… அதுக்கு மேல ஏதாவது பண்ணினா… நான் பார்த்துக்கறேன்”


“ரிஷி ப்ளீஸ்… வாசுண்ணா…” கண்மணி ரிஷியை அவஸ்தையாக சொல்ல…


ரிஷியும் எரிச்சலாக இப்போது கண்மணி சொன்னபடியே வாசுவின் தாய்க்கு அழைக்க… உடனடியாக எதிர்முனையில் பதட்டமான பெண்மணியின் குரல் கேட்க


“அம்மா… உங்க பையன் இங்கதான் இருக்காரு”


“…சீக்கிரம் வாங்க… “ என்றபடி போனை வைக்க

கண்மணி நிம்மதிப் பெருமூச்சு விட்டு… ரிஷியைப் பார்க்க… ரிஷியோ அவளை கடுங்கோபத்துடன் முறைத்தபடி நின்று கொண்டிருந்தான்… கண்மணியோ வேறு வழி இன்றி வாசுவின் அருகிலேயே நின்று கொண்டிருக்க… சில நிமிடத்திலேயே…


“நீ யாரு… நீ என் கையை ஏன் பிடிச்சுருக்க… என் மீனா… அங்க இருக்கா… நான் போறேன்… “ எனக் கண்மணியின் கையை உதறியபடி… வேகமாக வாசு எழப்போக…


“இங்க பாரு,,, நான் தான் மீனா… என்ன இப்டி… சொன்னா… நான் உன்னை விட்டு போய்ருவேனா என்ன… நான் யார் சொன்னாலும் உன்னை விட மாட்டேன்… மவனே… என் கழுத்துல தாலி கட்டச் சொன்னா… என்கிட்ட இருந்தே எஸ்கேப் ஆகிருவியா…. எப்போட என்னை உன் பொண்டாட்டியா கூட்டிட்டு போவ…” கண்மணி வேக வேகமாக பேச… வாசுவின் கண்கள் கலங்க ஆரம்பித்திருந்தன…


“ஏண்டி என்னை விட்டுட்டு போன… நீ நல்லா இருப்பேனுதானே என்னை விட்டு தள்ளிப் போன்னு சொன்னேன்” கண்மணியி கைகளை அவன் மீனாவின் கைகள் என நினைத்து கண்களோடு ஒற்றிக் கொள்ள…


அதற்கு மேல் அந்தக் காட்சியைப் பார்க்க முடியாமல்… ரிஷி கடுப்புடன் திரும்பியவன்… .அங்கிருந்த சாலையை வெறிக்க ஆரம்பித்திருந்தான் இப்போது….


அந்த வாசுவால் கண்மணிக்கு ஆபத்தில்லை என்ற நிம்மதியோடு… அவன் தாய் குமுதாவின் வருகையை எதிர்பார்த்து அனைத்து திசைகளில் இருந்து வரும் சாலைகளை வெறித்துக் கொண்டிருக்க… அவன் காத்திருப்பு வீணாகாமல் அந்த வாசுவின் தாயும் வந்து சேர்ந்திருந்தார்…

“வாசு… இப்டி பண்றியேடா… ” என்றபடியே தன் மகனின் அருகில் வந்தவர்… அப்போதுதான் கண்மணியைப் பார்க்க…


“அக்கா… நான் யார்னு தெரியுதா… நான் தான் ‘மணி’ … என்னை ஞாபகம் இருக்க… நட்ராஜ்… “ கண்மணி தன்னை அடையாளம் சொன்ன போதே


“கண்ணு…. மணியா நீ… அப்டி வளர்ந்துட்ட… பவி அம்மா இருந்திருந்தால் உன்னைப் பார்த்து சந்தோசப்பட்ருப்பாங்க… ஐயா எப்டி இருக்காரு….” என்றபடியே… கண்மணியை சுற்றி நெட்டி முறித்தவள்… அடுத்த நொடியே… தன் மகனைப் பார்த்தபடி


“பாரு கண்ணு… உன் அண்ணனைப் பாரு… அந்தப் புள்ள…. இவனச் சுத்தி சுத்தி வந்தப்போலாம் விரட்டி அடிச்சுட்டு… பாவி மகன்… அந்தப் புள்ளையை காதலிச்சுருந்தாலும் பரவாயில்லை… போனப் பின்னால இப்படி அவளே எல்லாம்னு குத்தமுள்ள மனசோட அவனையே அழிச்சுட்டு இருக்கான்… ” அந்த பெண்மணி விம்மி அழ…


கண்மணிக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை


“அக்கா…. கூட்டிட்டு போங்க… பத்திரமா பாத்துக்கங்க…” என்று வாசுவை அவன் தாயிடம் ஒப்படைக்க…


“என்னைக்கூட அடையாளம் தெரியலை… அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அந்த மீனாதான்… “ தாயாக அந்தப் பெண்மணியின் கண்கள் கலங்கி கண்ணீரில் மூழ்க ஆரம்பித்திருக்க…


“ட்ரீட்மெண்ட்லாம் எடுக்கலையா…” என்று ரிஷி இப்போது அவர்களுக்கிடையே வர… அந்தப் பெண்மணி ரிஷியை அறியாத பார்வை பார்த்த போதே


“என் வீட்டுக்காரர்க்க்கா…” கண்மணி அறிமுகப்படுத்த


”போன்ல பேசுச்சே இந்தத் தம்பிதானா…” என்றபடியே


“எல்லாம் பார்த்து… ஒண்ணும் சரி வரலை… நாங்களும் விட்டுட்டோம்… கோவில் கோவிலா சுத்துறோம்… ஆனாலும் சரி ஆகல… எங்க காலம் வரை நாங்க பார்த்துப்போம்… அதுக்கபுறம் அந்த ஆண்டவன் விட்ட வழி… இந்த மாதிரி என்னைக்காவது வீட்டை விட்டு வெளியேறும் போதுதான் பிரச்சனை ஆகிருது… அதுனாலதான் என் நம்பரைக் கூட மாத்தாமல் சுத்திட்டு இருக்கேன்… ” என்று புலம்பியபடியே மகனை ஆட்டோவில் ஏற்றி அமர வைத்தார்


“அக்கா… இந்த கார்ட்ல இருக்கிற நம்பர்க்கு கால் பண்ணி… என்னோட பேர் சொல்லுங்க… அதுக்கப்புறம் எல்லாம் பார்த்துக்குவாங்க… தாத்தாவோட ஹாஸ்பிட்டல்தான்… பயப்பட வேண்டாம்…. உங்களுக்கும் வயசாகிருச்சு… எவ்ளோ நாள் தான் இப்டி அண்ணாவை வீட்ல வச்சுக்கிறது… சரியா” என்றபடி கண்மணி பேசிக் கொண்டிருக்க


“கண்ணு… தாத்தான்னா… பவி அம்மாவோட அப்பாவா… அந்த பணத்திமிர் பிடிச்ச ஆளா” கண்மணியிடம் கேட்க


கண்மணி சங்கடமாக அவரைப் பார்க்க


“வேணாம் தாயி…. நட்ராஜ் ஐயாவையே ஏத்துக்காத அந்தாளு உதவியா…. தேவையில்ல தாயி… ” என்றபடி மறுத்தவர்… கண்மணியை விட்டு விட்டு ரிஷியின் புறம் திரும்பினார்


“ஐயா… நீ யாரு என்னன்னு தெரியாது… ஆனால் என் பவி அம்மாவோட புள்ள… எப்படியோ வாழ வேண்டிய புள்ள… பிறந்ததில் இருந்தே கஷ்டம் மட்டும் தான் இந்தப் புள்ளைக்கு…. ஆனால் சிரிப்புக்கு குறைச்சல் இருக்காது என் ராஜாத்திக்கு… அந்த சிரிப்பு மட்டும் இந்த புள்ளைக்கிட்ட இருந்து மாறாமல் பார்த்துக்கோ ராஜா”


ரிஷி குழப்பமாகப் பார்க்க… கண்மணி ரிஷியிடம் திரும்பி…


“இவங்களுக்கு ஏதும் தெரியாது ரிஷி… வாசு அண்ணாக்கு இப்டி ஆன பின்னால ஏரியாவை காலி பண்ணிட்டாங்க… அண்ணா போன பின்னால தான் அந்த ராஸ்கல் துரை வந்தான்…” என்று கண்மணி மென் குரலில் சொல்ல… ரிஷிக்கும் புரிந்தது இப்போது…


கண்மணி பெரிதாக வார்த்தைகளை வளர்க்காமல்


“குமுதாக்கா… டைம் ஆகிருச்சு… இப்போ பேசுற விவாதம் பண்ற சூழ்நிலை இல்லை… நானே உங்களுக்கு போன் போட்றேன்… முடிந்தால் நேர்ல வந்து பார்க்கிறேன்… “ என்று கண்மணி அப்போது அந்த விசயத்தை முடித்திருக்க… அடுத்த சில நிமிடங்களில் குமுதாவும் வாசுவும் அங்கிருந்து கிளம்பியிருந்தனர்


---

ரிஷியும் கண்மணியும் இப்போது மௌனமாகவே நடந்து வந்து கொண்டிருந்தனர்… இருவரின் கலகலப்பும் அங்கு போயிருந்தது…



”ஏன் மருது மீனாக்கா இறந்து போனாங்க…”

---

“ஏன் வாசு அண்ணா இப்படி ஆகிட்டாங்க… மீனாக்கா வரும் போதெல்லாம்… பேசும் போதெல்லாம் திட்டிட்டே இருப்பாங்க.. ஆனால் அவங்க இறந்த பின்னால ஏன் இந்த மாதிரி எல்லாரையும் மீனா மீனான்னு ஏன் சொல்றாங்க”

---

”அப்போ எனக்கு கல்யாணம் நடந்தால்…. நானும் உன்னை விட்டு பிரியனுமா… பேச முடியாதா…”


”எனக்கும் உனக்கும் நடுவில யாரும் வரக்கூடாதுனா… என்ன பண்ணலாம்”


மருதுவை தொந்தரவு செய்த இவளின் அன்றைய கேள்விகள் இன்று ஞாபகத்தில் வந்து நிற்க


”உன்னை லூசுன்னு இங்க சொல்றாங்கள்ள அது தப்பே இல்லை மணி…… இப்படிலாம் என்கிட்ட பேசின மாதிரி வேற யார்கிட்டயும் பேசி வச்சுறாத… கேட்டு வைக்காத… அவ்ளோதான்…” என மருது அவளைத் திட்டியதும் ஞாபகத்துக்கு வராமல் இல்லை….


அனைத்தையும் மீண்டும் தனக்குள் புதைத்தபடி… அமைதியாக வந்தவள்… ரிஷியின் முகத்தைப் பார்க்க… கண்மணியாவது சாதரணமாக வந்து கொண்டிருந்தாள்… ரிஷியோ முகத்தில் எள் போட்டால் வெடிக்கும் என்ற நிலையில் வேகமாக நடந்து வந்து கொண்டிருக்க


“இப்போ ஏன் மூஞ்சிய இப்டி வச்சுருக்கீங்க…. தாடி இருந்தப்போ கூட பார்க்க முடிந்தது… இப்போ முடியல…” கண்மணி பொறுக்க முடியாமல் கேட்க…. அவனோ அதை விட… எப்போதடா கொட்டுவோம் என்று இருந்தான் போல… சுள்ளென்று விழுந்தான்…


“ஏண்டி… நீ தைரியமானவதான்… அதுக்காக… இவ்ளோ தைரியம் கூடாது… அவன் முதலாளிகிட்ட வேலை பார்த்தவனா இருக்கப் போய்… உனக்குத் தெரியப் போய்… ஹான் அவன்கிட்ட வேற பொருள் இல்லாம இருக்கப் போய்… ஒண்ணும் ஆகலை”


“ஆகலைதானே விடுங்க” என அவன் கைப் பிடிக்க… சட்டென்று தட்டி விட்டவன்…


“என்ன சொன்ன… உங்க மீனாவாம்.. அவங்க மாதிரியே பேசுவாளாம்… அப்டியே இங்கயிருந்து பத்திகிட்டு வந்துச்சு… இப்போ கையப் பிடிப்பாளாம் கடுப்படிக்காத… “ என ரிஷி அவளை விட்டு முன்னே நடக்க


“ப்ச்ச்… மீனாக்கா வாசு அண்ணாகிட்ட எப்டி பேசுவாங்கன்னு தெரியும் ரிஷி…. அண்ணனை துரத்தி துரத்தி லவ் எப்டி லவ் பண்ணாங்க தெரியுமா…” என்றவளின் குரலில் இப்போது சோகம் இழையோட ஆரம்பித்திருக்க


“பொண்ணுங்களோட காதல்… இந்த பசங்களுக்கெல்லாம் விளையாட்டுதான் போல…” எனப் பேச ஆரம்பித்தவளிடம்


“நிறுத்துறியா…” என்று கைகாட்டி நிறுத்தியவனின் கோபக்கனலில்….


“ரிஷி… நான் எதார்த்தமாத்தான்…” என கண்மணி தடுமாற…


“நீ எதார்த்தமா சொன்னாலும்… இல்லை சொல்லிக் காமிக்கனும்னு சொன்னாலும்…. அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை…. ஏன் அது தப்பாவே இருந்தாலும் எனக்கு கவலை இல்லை.. என்னைப் பொறுத்தவரை மகிளா விசயத்துல நான் பண்ணினது சரிதான்… அது என் மனசுக்குத் தெரியும்” என விடு விடு என முன்னே நடக்க


கண்மணியும் இப்போது விடவில்லை


“சரி நானும் மகிளாவைப் பற்றி பேசலை… எனக்கு ஒரே ஒரு டவுட் தான்… மகிளாவை விட்ருவோம்…. ஆனால் சார் நீங்க எல்லாத் தப்பையும் பண்ணிட்டு… நான் அப்படித்தான்னு திமிருத்தனமா பேசுறீங்களே…. அதுதான் எனக்குக் கடுப்பாகுது… “


“இங்க பாரு… தெரியாமத் தப்பு பண்ணினாத்தான்… தடுமாறனும்… எனக்குத் தெரிஞ்சுதான்… யமுனா… உனக்கு … இப்படி எல்லாமே நான் தெரிஞ்சு செய்த தப்புதான்னு… எத்தனை தடவைதான் சொல்றது… இதையும் பல முறை சொல்லி இருக்க்கேன்…. எல்லோரும் தப்பு பண்ணிட்டு தண்டனை அனுபவிப்பாங்க… நான் தண்டனையை அனுபவிச்சுட்டு… அதுக்கு பதிலாத்தான் இப்போ தப்பு பண்றேன்… போதுமா… போலாமா” என நிற்க


“இந்தப் பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை…. “ கண்மணி தனக்குள் முணங்கியபடி…


“போகலாம் சார்….” என்றபடி சாவியை எடுத்தவளிடம் அந்தச் சாவியை அவளிடமிருந்து கோபமாகப் பறித்தவன்… ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருக்க


”இவ்ளோ கோபமா இருக்கிறவங்க பின்னாடிலாம் உட்கார்ந்து நாங்க வர மாட்டோம்…” என்று கண்மணி முறுக்கிக் கொள்ள


“ரொம்ப சந்தோசம்… மெதுவா நடந்து வா… வர்ற வழில… சோசியல் சர்வீஸ் இன்னும் ஏதாவது இருந்தால் நிதானமா பார்த்து பண்ணிட்டு வா… நான் கிளம்பறேன்” என்றவன் பைக்கை ஸ்டார்ட் செய்ய…


கண்மணி முறைத்தபடி….


“ஆக்சுவலா நான் கோபப்படனும்… ஆனால் நீங்க கோபப்படறீங்க…. போங்க… அந்த வழிதான்… ஏன் இன்னும் நிற்கறீங்க… பெட்ரோலுக்கு பிடிச்ச வேஸ்டா“ என்று ஏறாமல் தன் பிடிவாதத்தைக் காட்ட…


பல்லைக் கடித்த ரிஷி


“மணி 1 ஆகப் போகுதுடி… வா… இது ரோடு… ரோட்ல கெஞ்சனுமா மேடத்துக்கிட்ட…” எனும் போதே… கண்மணிக்குமே வேறு வழியில்லைதான்… இங்கு இப்போது சண்டை போடுவதோ… பிடிவாதத்தைக் காட்டுவதோ அர்த்தமற்றது என உணர்ந்தவளாக… ஏறி அமர… அவள் உம்மென்று அமர்ந்த விதம் ரிஷிக்கு இப்போது சிரிப்பை வரவழைக்க… இருந்தாலும் சிரிக்காமல் வண்டியை எடுக்க… எப்படியோ கண்மணி இல்லம் வந்து சேர்ந்தனர்…இருவருமாக…

----


அத்தியாயம் 83:


ரிஷி பைக்கை நிறுத்திவிட்டு வரும் வரை… கண்மணியும் மேலே செல்லாமல் மாடிப்படியின் அருகிலேயே நின்று கொண்டிருக்க…


“மேல போகலையாடி…. கதவைத் திறக்கலையா” என்றபடி…. அவள் கையில் இருந்த சாவியை வாங்கியவன் மேலே ஏற… கண்மணியோ அவள் நின்ற இடத்தை விட்டு அசையாமல் நிற்க… அறைக்கு முன் போய்க் கதவைத் திறந்த போதுதான்… கண்மணி தன் பின்னால் வரவில்லை என்பதையே ரிஷியும் உணர்ந்தவனாக அவளைப் பார்க்க


“என்னாச்சுடி… ஏண்டி படுத்துற…”


“ரோட்ல தானே சண்டை போடக் கூடாது… பிடிவாதம் பிடிக்கக் கூடாது… இது வீடுதானே… அதுதான்…“ கண்மணி அவனைப் பார்க்காமல் சொல்லிவிட்டு இன்னும் வேகமாக வேறு புறம் திரும்ப…


“அப்டியா… அப்போ அங்கேயே நில்லு… எனக்கு சண்டை போட்ற மூட்லாம் இல்லை… உனக்கு 2 மினிட்ஸ் டைம் தர்றேன்… வந்து சேரு… இல்லைனா… கதவைப் பூட்டிட்டு நான் தூங்கப் போறேன்” என சொன்னபடி அவளைப் பார்க்க… அவளோ அவனை இப்போதும் பார்க்காமல் இருக்க..


அவன் சொன்ன இரண்டு நிமிடங்களும் கடந்திருக்க…


‘அப்போ சரி… மவளே…. தூங்கிட்டு இருக்கும் போது வந்து கதவைத் தட்டின… அப்புறம் இருக்கு உனக்கு…. பை… குட் நைட்… “ கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சொன்னவன்… அவள் அப்போதும் அசையாமல் இருக்க


”உனக்கென்னப்பா… இந்தப் புருசன் வீடு மட்டுமா என்ன… இதோ இந்தப் பக்கம் பொறந்த வீடு… அதோ அந்தப் பக்கம் புகுந்த வீடு… அப்போ இந்த தெனாவெட்டு இருக்கத்தானே செய்யும்…. ஆனால் பாவம் என் முதலாளியும், என் அம்மாவும்… வயசானவங்க… அதுனால நடுராத்திரில கதவைத்தட்டி அவங்களை டிஸ்டர்ப் பண்ணிறாத.… ஒருவேளை தூக்கம் வந்துச்சுனு வை... அதோ அந்த மாமரத்திண்டுல படுத்து தூங்கிரு… நல்லா காத்து வரும்... ஆனால் என்ன கொசுதான் பிரச்சனை...” ரிஷி நக்கலாக சொல்லி அவளைப் பார்க்க

அப்போதும் கண்மணி அவனை இலட்சியம் செய்யாமல் இருக்க…


“பைடிடிடி….. ரவுடிடிடி… பொண்டாட்டிடி… ” என இன்னும் வெறுப்பேற்றி விட்டு உள்ளே போனவன்… கதவைப் பூட்டியும் இருக்க… கண்மணிக்கோ இங்கோ எகிறிக் கொண்டிருந்தது கோபத்தின் அளவும்


“இருக்குடா உனக்கு… எனக்கே இடம் கிடையாதா… மாமரத்தடில படுக்கவா… வர்றேன்… “ எனத் அவனுக்கு வசைபாடியபடியே மேலே மாடி ஏறத் திரும்பப் போக… அதே நேரம் ரிஷியும் அவள் அருகே வந்திருக்க… அவன் மீதே மோதி நிற்க… அவளைத் தாங்கிப் பிடித்து தனக்குள் கொண்டு வந்தவன்… அடுத்த நொடி அவளைத் தன் கைகளிலும் ஏந்தி இருக்க


“கெட்ட வார்த்தை எல்லாம் போட்டுத் திட்றியாடி….” என சரசமாக அவள் காதில் கேட்க


அவனிடம் வலுவில்லாத எதிர்ப்பைக் காட்டித் திமிறியவளிடம்…


“ஏய்… ஓழுங்கா இருடி… அப்புறம் ரெண்டு பேரும்.. படியில டைவ் அடிச்சு.. ரத்தக் களரி ஆகிரும்… ” என அவளை அடக்க… கண்மணியும் இப்போது அமைதி ஆகி இருந்தாள்…


”ரோட்ல… இந்த மாடிப்படில… இங்கலாம் சண்டை போடக்கூடாது அம்மு… எங்க எப்டி போட்றதுன்னு நான் காமிக்கிறேன்…” என அவளை பற்றியிருந்த கரங்களில் அழுத்தம் காட்ட


”அப்டியா சார்… பார்க்கலாம்… உள்ள போகலாமே…” கண்மணியும் அவன் கழுத்தைச் சுற்றி கரங்களைப் போட


‘இது இது இதுதான் என் பொண்டாட்டி” என்றபடி அவளை ஏந்திக் கொண்டு…. அறைக்குள் சென்று இறக்கி விட… கண்மணியும் ஏதும் சொல்லாமல் இறங்க…


அமைதியாக இறங்கியவளிடம்…


”சண்டைதானே போடனும்… இப்போ போடு…” என்றவன்… அவளது முறைப்பில்…


” கண்ணுல கத்தி சண்டை

கையில கம்பு சண்டை

கன்னத்தில் முத்த சண்டை

வரியா வரியா மொத்தத்தில் இந்த சண்டை

நிக்காதா குத்து சண்டை

ஒத்தைக்கு ஒத்தையா

நீ வரியா வரியா ஹே நீ நீ நீ நீ என்னோட இஷ்டம்”

ரிஷி கண்மணியிடம் வேண்டுமென்றே வம்பிழுத்தபடி… பேசியவன்… இல்லையில்லை பாடியவன்…


“புரிஞ்சுக்கடி… அம்மு… என்னைப் பார்த்தால் பாவமா இல்லை… பாண்டிச்சேரில இருந்து ஒடோடி வந்தது இப்படி சண்டை போட்றதுக்கா என்ன… ப்ளீஸ்டி… ” என்றவன் கண்களில் கெஞ்சல் கலந்த தாபம் வழிந்தோட


இப்போதும் கண்மணி அமைதியாகவே இருந்தாள்….


“இப்டியே நல்ல பிள்ளையா… உன் மாமா” எனும் போதே கண்மணி வேண்டுமென்றே யாரையோ தேடுவதைப் போல் பார்க்க


“அந்த மாமன் வேற யாருமில்ல… நான் தாண்டி… உன் ரிஷிக்கண்ணாதான்… “ எனக் கடுப்பாகச் சொல்லியவன்


“சரி உன் ரிஷிக்கண்ணா கொடுத்த பூவை வச்சுட்டு வெயிட் பண்ணுவியாம்…” என்றவன்…


“நீ வைக்க வேண்டாம்… நானே வச்சு விட்டுட்டு போகிறேன்…” எனப் பூவை எடுத்து தலையில் சூடியவனிடம் இப்போதும் பேசாமல் இருக்க


ரிஷி யோசித்தான்


“என்ன நம்மாளு பேசாமலேயே லுக்க மட்டும் விட்டுட்டு இருக்கா… ஏதாவது உள்குத்து இருக்குமோ” நினைத்தபடியே


“பாப்பா…” ரிஷி கண்மணியைப் பார்த்து கூப்பிட


“நானா” கண்மணி நக்கலாகக் கேட்க


“நீயேதான் பாப்பா… இந்த ஸ்வீட்ஸ்லாம் சாப்பிட்டுட்டே இருப்பியாம்… மாமா வந்துருவேனாம்…” என கண் சிமிட்ட


”நீ நீ என்னோட இஷ்டமா…”


நான் நான் உன்னோட கஷ்டம்னு காட்றேன்” மனதுக்குள் சொல்லியபடியே வெளியிலோ


”ஹ்ம்ம்… சரி… சரி…” உள்ளுக்குள் கள்ளச் சிரிப்பை மறைத்தபடியே நல்ல பிள்ளை போல் தலை ஆட்டியவள்..



“குட் கேர்ள்..” என அவள் தலையில் செல்லமாகத் தட்டியபடியே ரிஷி குளியலறைக்குச் சென்றவன்…. மின்னல் வேகத்தில் வெளியேயும் வந்திருந்தான்… மனைவியின் முன்பும் வந்து நின்றிருந்தான்… அதே வேகத்தில் அவளையும் கட்டி அணைத்திருந்தான்…


“ரிஷி.. ரிஷி….” கண்மணி அவனிடமிருந்து விலக நினைக்க… ரிஷியோ விடாமல் இருக்க…


கண்மணியோ அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு எதிரில் இருந்த சுவரை நோக்கி கை நீட்ட…


“கதவை எல்லாம் பூட்டி விட்டுத்தானே வந்தேன்… இன்னும் என்ன” இருந்தாலும் ரிஷி வேகமாகத் திரும்பி பார்த்து….


“என்னடி” மீண்டும் மனைவியைத் திரும்பிப் பார்த்து புரியாத பார்வை பார்க்க…


“காலெண்டர்… டேட்” எனப் பாவம் போல விழி விரித்துச் சொல்ல


“காலெண்டர்… டேட்… அதுக்… கெ… ன் … ன “ முடிக்கும் போதே… ரிஷிக்கு எல்லாம் விளங்கி விட… அவன் முகமோ விளக்கெண்ணை குடித்தார் போல மாறி இருக்க


“ஏய் கண்மணி விளையாடாதடி…. பொய்தானே சொல்ற” ரிஷி கெஞ்சலும் ஏமாற்றமும் கலந்து அவளிடம் கேட்க


“ஹலோ… பொய் சொல்றதெல்லாம் உங்க பழக்கம்… எனக்கில்ல…. பொய் சொல்லி எனக்கு என்ன வரப்போகுது… நான் என்னைக்காவது உங்கள அவாய்ட் பண்ணியிருக்கேனா…. உங்களுக்கே தெரியும் தானே…”


கண்மணியைப் பிடித்திருந்த ரிஷியின் கைகள் தானாகவே தளர…


கண்மணி சொல்வதை நம்பவும் முடியவில்லை… நம்பாமலும் இருக்க முடியவில்லை…


”அப்புறம் எதுக்குடி… புடவையெல்லாம் கட்டிட்டு வந்த… இப்போ… இப்போ பூ வைக்கிற போது கூட ஒண்ணும் சொல்லாம சும்மாத்தானே இருந்த… இங்க பாரு… டென்ஷன் ஆக்காத…” ரிஷி படபடவென்று பேச ஆரம்பித்திருக்க


“புடவை கட்டிட்டு இருந்தால்… பூ வச்சா… என் புருசன் பூ வாங்கிக் கொடுத்தாரு…ஆசையா வைத்தேன்” கண்மணி சிரிக்காமல் சொல்ல

“மண்ணாங்கட்டி…” கடுப்போடு ரிஷி வாய் விட்டுச் சொல்ல


“நோ நோ… மண்ணாங்கட்டி இல்லை… மல்லிப்பூ… அவங்ககிட்ட இது மட்டும் தான் இருந்துச்சாம் மாமா… நீங்கதானே சொன்னீங்க”


“போயிருடி… கடுப்பாக்காதாடி…” என்றபடி நகர்ந்தவன்… கீழே விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் போய் அமர்ந்தவன்…


“கண்மணி… லாஸ்ட்டா கேட்கிறேன்… பொய்தானே சொல்ற…” ரிஷி கடைசி வாய்ப்பாகக் கேட்க


“காலமும் கடல் அலையும் யாருக்காகவும் காத்திருக்காது… அதுமாதிரிதான் இதுவும்” கண்மணி இரக்கமே இல்லாமல் ரிஷியிடம் வார்த்தையாடக் நிகழ்த்திக் கொண்டிருக்க…


அங்கிருந்தே நிறுத்து என்பது போலக் கைகளைக் காட்டியவன்…


“அடங்குறியா… நல்லா பண்றடி… “ என கண்மூடித் திறந்தவன்…. படுத்தபடியே


“இங்க பாரு… முதல்ல விளையாட்டுக்குத்தான் சொன்னேன்… பொறந்த வீடு… புகுந்த வீடு வசனம்லாம்… சத்தியமா… இப்போ முடியாமல் சொல்றேன்… ஒழுங்கா கீழ போ…” அவஸ்தையோடு அவன் சொல்லி முடிக்கவில்லை…


கண்மணி அவனருகில் வந்து அமர… வேகமாக எழுந்து அமர்ந்தவன்…


“ஏய் விளையாடாதா… நார்மலா இருந்திருந்தால்… இதெல்லாம் ஒரு விசயமே இல்லை எனக்கு… ஆனால் எக்கச்சக்க ஆசையோட எதிர்பார்த்து வந்தவன… ஏமாத்திட்ட… மேலும் மேலும் வெறி ஏத்தாதா… ” என உச்சக்கட்ட குரலில் ஆரம்பித்தவன்


“அடுத்த நொடியே அம்முல்ல புரிஞ்சுகோடி… நானே உன்னைக் கீழ கூட்டிட்டு போய் விடறேன்… ” என்று கெஞ்ச ஆரம்பித்தவனிடம்…


“நான் மாட்டேன்பா… ராமன் இருக்கிற இடம் தான் சீதைக்கு அயோத்தி… அதே மாதிரி என் ரிஷிக்கண்ணா இருக்கிற இடம் தான் எனக்கு அயோத்தி” எனக் கண்மணி நீட்டி முழங்க


“அம்மா தாயே… இதெல்லாம் நல்லா பேசு… உன்னை” என்றவனைப் பார்த்து


“ரிஷிக்கண்ணா… இப்போ ஏன் இவ்ளோ சீன் போடறீங்க… கன்ட்ரோல் பாஸ்… பொண்டாட்டியா இருந்தாலும்.. கட்டுப்பாடா இருக்கனும்… சரி சரி தள்ளிக்கங்க” என படுத்து கண் மூட ஆரம்பிக்க…


ரிஷியோ…


‘ரொம்ப பண்றடி… ஆண் பாவம் பொல்லாது… நானும் பார்த்துக்கிறேன்… ஒழுங்கா படுக்கனும்… கை கால் எல்லாம் இந்தப் பக்கம் வந்துச்சு” என்றவன்… அருகில் இருந்த போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டபடி…


“இப்படியே படுக்கிற…” என்றபடி கண்மணிக்கு முதுகைக் காட்டியபடி திரும்பிப் படு்த்து கண்களை மூடப் போக…


“ரிஷி… ரிஷிக்கண்ணா” கண்மணி மெதுவாக சன்னமான குரலில் அழைக்க…


“என்னடி…” திரும்பாமலேயே ரிஷி கேட்க


‘இந்தப் பக்கம் திரும்புங்களேன்…” சலுகையாகக் கேட்க


”ஏய்… இருக்கிற கோபத்துக்கு… ஏதாவது சொல்லிறப் போறேன்…. நான் பேசாமல்தானே படுத்திருக்கேன்… தேவையில்லாமல் நீதான் இப்போ வம்பிழுக்கிற…” ரிஷி இப்போதும் திரும்பாமலேயே பேச


“என்ன… இப்போ ஏன் இவ்ளோ கோபமா பேசுறீங்க… நான் என்ன கேட்டேன்… இந்தப் பக்கம் திரும்பிப் படுக்கச் சொன்னது அவ்ளோ பெரிய தப்பா என்ன… புருசன் முகத்தை பார்த்துகிட்டே தூங்கனும்னு சொல்றது அவ்ளோ பெரிய குத்தமா என்ன… அதுலயும் நான் ஆசைப்பட்டபடி… எனக்குப் பிடித்த மாதிரி… எனக்குப் பிடிச்ச ரிஷிக்கண்ணாவா இன்னைக்கு இருக்கீங்க… அந்த முகத்தை பார்த்துக்கிட்டே…” கண்மணி வழக்கம் போல மூச்சு விடாமல் அவனிடம் பேச ஆரம்பித்திருக்க


வேகமாகத் திரும்பியன்… அவளைப் பார்த்து கைகளைக் கூப்பியவனாக…


“வாயை மூடறியா… அந்தக் கீறல் விழுந்த ரெக்கார்டை ஆரம்பிச்சுறாதா… படுத்துட்டேன்… இந்த மூஞ்சிதானே… இதைத்தானே பார்க்கனும்… நல்லா பார்த்துக்க… ஆனால் ஏதாவது பேசின… டச் பண்ணின… எனக்கு ஒண்ணும் இல்லை…” என்றவன் அடுத்த நொடியே


“உனக்கு ஒண்ணும் இல்லை… எனக்குத்தான் எல்லா சேதாரமும்… அய்யோ படுத்துறாளே” என்றபடி கண்களை மூட…


கண்மணிக்கோ சிரிப்பை அடக்கவே முடியவில்லை… அதிலும் அவன் படும் அவஸ்தைகளைப் பார்த்து


“மாமா… இந்த மண்ணாங்கட்டி… சாரி சாரி… இந்த மல்லிப்பூ வாசமே வரலை… உங்களுக்கு வருதா என்ன…”


‘ஏய்…” என ரிஷி கண்களைத் திறக்காமலேயே அதட்டியபடி


“இப்போ நான் இங்க படுக்கவா… இல்லை கீழ மாமரத்தடிக்குப் போகவா..” ரிஷி சொல்ல..


”ஓகே… ஓகே… குட்நைட்… இல்லல்ல… குட் மார்னிங்”

“என்னையவே மாமரத் திண்டுல படுக்கச் சொல்றீங்களா… காத்து வரும்…. கொசுக்கடிதான்… என்ன பேச்சு” எனச் சொல்லிக் கொண்டவள்… சில நிமிடங்கள் அமைதியாக படுத்தபடி மோட்டு வளையத்தை வெறித்தவள்… மீண்டும் ரிஷியின் புறம் திரும்ப… ரிஷி உறங்கவில்லை என்பதை அவன் கண்மணிகள் அசைவதை உணர்ந்தே தெரிந்து கொண்டவள்… அவன் அருகே வர…


ரிஷியும் அவள் நெருங்குவதை உணர்ந்தவனாக… கண்களைத் திறக்கப் போக… அதே நேரம் அவன் இதழ்கள்… அவள் வசமாகி இருக்க… கண்களைத் திறக்கப் போனவன்… அவளிடம் கட்டுப்பட்டு கண்களை மூடி தன் வசம் இழந்தவனாக… அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்திருக்க… இதழ் கலந்த நிமிடங்கள் முடிந்திருக்க… இருவரின் பார்வைகளும் சங்கமித்திருக்க


”ஏண்டி… இவ்ளோ கொலை வெறி “ ரிஷி கண்களில் தாபத்தோடு கேட்க


பதில் பேசாமல் அவன் கண்களில் தன் இதழ் ஒற்ற… ரிஷி ஒட்டு மொத்தமாக அவளிடம் தன்னை இழந்திருந்தவன்…


“சும்மா விளையாண்டேன்… பீரியட்ஸ்லாம் இல்லை…” கண்மணியின் குரலும் மோகத்தில் கலந்து கரகரத்திருக்க…


”ஆனால் வர வேண்டிய நாள் தான்… ” என்ற போதே


“விக்கி வீட்ல கோவில்ல வச்சுதான் ரிதுவை பார்க்க வர்றேன்னு சொன்னாங்கடி… சப்போஸ்…” என ரிஷி இப்போது இழுக்க அவன் வாயிலேயே அடி போட்டவள்…


”அதானே… அப்டியே பாசமலர் மோடுக்கு உடனே மாறிடுவீங்களே… பார்த்துக்கலாம்… அம்மன் கோவில் தானே… அதெல்லாம் கணக்குல வராது. “ எனச் சொன்னவளின் கோபம் அதே வேகத்தில் மாறி…


“நாம ரெண்டு பேரும் ரியல் ஹஸ்பெண்ட் அண்ட் வைஃபா மாறிட்டோம் போல ரிஷி…” கண்மணி சொல்ல


ரிஷிக்கோ சரக்கடித்து.. அது அடுத்த நிமிடமே இறங்கியது போல ஒரு உணர்வு…


“ஏண்டி… நாம என்ன ரீல் ஹஸ்பெண்ட் அண்ட் வைஃபா… என்னடி பேச்சு இது… எங்கடி நான் கட்டின தாலி… “ என அதை எடுத்து வெளியே போட்டவன்… அதைப் பார்த்திவிட்டு பின் நிம்மதிப் பெருமூச்சு விட


சிரித்த கண்மணி


“அப்படி சொல்ல வரலை ரிஷி…. நான் இப்போலாம் அடிக்கடி சண்டை போட்றேன்… எனக்காக அதைப் பண்ணு… எனக்கு அது வேணும்னு இது வேணும்னு… சராசரி மனைவியா உங்கள டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டேனே… அதைச் சொல்ல வந்தேன்” அவன் மார்பில் சாய்ந்திருந்தபடி… தலை உயர்த்தி அவனோடு பேச


அவளையே பார்த்தபடி இருந்தவன்…


“என் பொண்டாட்டியா என்ன வேணும்னாலும் பண்ணு… எவ்ளோ கஷ்டம்னாலும் கொடு… ஆனால் அழ மட்டும் செய்யாதடி… ப்ளீஸ்… அன்னைக்கு(அன்று) உன் கண்ல கண்ணீரைப் பார்த்தப்போ நான் நானா இல்லடி…” ரிஷியின் குரல் உடைந்து வர.... கண்மணியோ அவனைத் தொடர விடவில்லை


“செண்டிமெண்ட்லாம் பேசற நேரமாடா… என்னமோ அப்போ குதி்ச்சீங்க” எனக் கண்மணி முடிக்கவில்லை… கணவனாக அவளை ஆட்கொண்டவனிடம்… மனைவியாக தன்னை சமர்ப்பித்திருக்க… அந்த அறை மட்டுமல்ல… கண்மணியின் கருவறையும் அவர்கள் காதலில் காமத்தில் தன் நிலையை மறந்திருந்தது…




/*என் காதல் மாளிகையை நீதான் திறந்தாய்

தேவதையாகஅதில் நீ வாழ்ந்தாய்


என் பெண்மை ரகசியம் நீதான் அறிந்தாய்

பூ மழையாய் என்னில் நீ விழுந்தாய்


உன் நெஞ்சமும் என் நெஞ்சமும்

ஒன்றோடு ஒன்றாக கலந்த ஓசைதான் காதல்


என்னுடையமனசு உன்னிடமே

உன்னுடைய மனசு என்னிடமே என்னிடமே

மூடாத கண்கள் கொண்டு உன்னழகை பார்த்தேன்

மூச்சுக்குள் உன்னை சுவாசிக்கும் நாள் பார்த்தேன்*/





2,301 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comentarios


Los comentarios se han desactivado.
© 2020 by PraveenaNovels
bottom of page