top of page
Writer's picturePraveena Vijay

கண்மணி... என் கண்ணின் மணி- 75

அத்தியாயம் 75-


ரித்விகா… ரிதன்யா… இருவரும்… ஆவென்று வாய் பிளந்து நண்பர்கள் இருவரையும் பார்ப்பதை தவிர வேறொன்றுக்கும் வழியில்லை அங்கு…


வெகுநாட்களுக்குப் பிறகு நண்பர்கள் நண்பர்களாக சந்திக்கும் தருணம்… இப்படித்தான் இருக்குமா?…. என்பது போல ஒரு சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருக்க… இவர்களை எல்லாம் யார் கவனிப்பார்கள் என்ற ரீதியில் ரிஷியும் விக்கியும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டிருந்தனர்…


“உன்னையெல்லாம் இன்னொரு தடவை பார்க்கவே கூடாதுன்னு நெனச்சேன்… ராஸ்கல்” என்று ரிஷி நண்பனைக் கட்டிக் கொண்டு… அவனையேத் திட்டியும் கொண்டிருக்க


”ஆனால் நான் ஒவ்வொரு நாளும் உன்னை எப்போடா மறுபடியும் மீட் பண்ணுவேன்னு நெனச்சேண்டா… உன் கூட இருந்த வரை உன் அருமை எனக்குத் தெரியலை…. ஆனால் உன்னை விட்டு போன பின்னாலதான்… நீ என்னோட லைஃப்ல எவ்ளோ முக்கியமானவன்னு புரிஞ்சுக்கிட்டேன்…. ஆனால் நீ என்கூட பேசவே தயாரா இல்லைன்ற நிதர்சனம் புரிஞ்சப்போ…. அவ்ளோ தூரத்துல இருந்து சமாதானப்படுத்த எனக்கு தெரியலைடா… அதுனால நானா விலகிக்கிட்டேன்…. ஆனால் எப்படினாலும் உன்னை நேர்ல மீட் பண்ணும் போது… கைல கால்ல விழுந்தாவது என்னைப் புரியவைக்க ட்ரை பண்ணியிருப்பேன்… நல்ல வேளை என் அதிர்ஷ்டம்… நீ அதே கோபத்தோட இல்லைடா“ விக்கி ரிஷியை விடாமல் இறுகக் கட்டிக் கொள்ள…


ரிதன்யா அமைதியாக நின்று தன் அண்ணனையும் காதலனையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க… ரித்விகாதான் இருவருக்கும் இடையில் வந்தாள்….


“ஹலோ… கொஞ்சம் கேப் விட்டு மறுபடியும் கொஞ்சிக்கோங்க… உங்க ஆனந்த கண்ணீர் மழைல நாங்க ரொம்ப நனைஞ்சிறப் போறோம்… ஜல்ப்பு புடிச்சுக்கப் போகுது… எக்சாம் வேற வரப் போது… கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க தோஸ்த் ரெண்டு பேரும்….” இருவரையும் வம்பிழுக்க ஆரம்பிக்க…


அவளை எல்லாம் இலட்சியமே செய்யவில்லை நண்பர்கள் இருவரும்… அவர்கள் இருவரும் தனி உலகில் பறந்து கொண்டிருந்தனர்… மூன்றாம் மனிதர்களால இத்தனை நாள் பார்த்து பழகிக் கொண்டிருந்தது வேறு அவர்கள் நெருக்கத்தை இன்னுமே அதிகப்படுத்தி இருந்தது


“ஏண்டா.. என்கிட்ட சொல்லாமல் போன… என்னால அதை ஏத்துக்கவே முடியலைடா… திடீர்னு… நான் வரலை… ஆஸ்திரேலியா போறேன்னு நீ சொன்ன அந்த நொடி… அந்த ஷாக் அதுல இருந்து இப்போ கூட என்னால மீண்டு வர முடியலடா… ” ரிஷி ஆதங்கமாகக் சொன்னபடியே…


”நீ ஆரம்பிச்சு வச்ச… அடுத்து என் அப்பா… அவர் ஃப்ரெண்ட்ஸ்… அம்மானு… எல்லார் கிட்டயிருந்தும் மரண அடிடா… இப்போ கூட அதை எல்லாம் விட்டு வெளிய வந்துட்டேனான்னு எனக்கே தெரியலை…” ரிஷி மீண்டும் ஆரம்ப இடத்திற்கே வந்து நிற்க


விக்கி அவனை மீண்டும் சமாதானப்படுத்த ஆரம்பித்திருந்தான்…


“விடுடா மச்சான்… அதுதான் திரும்பி வந்துட்டேன்ல… இனி… உன்னை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்…” என்று அவன் கைகளை இறுக்கிக் கொண்டவன்…


“ஆனா என்னதான் நான் ஆறுதல் சொன்னாலும்… அப்பாவை என்னால கொண்டு வர முடியாதே….” விக்கியின் கண்கள் இப்போது கலங்கி இருந்தது..


“அன்னைக்கு அந்த ஆதவன் கூட வரும் போது… நீ என்னை யாரோ ஒரு அந்நிய ஆளா பார்த்த போது… எப்படி இருந்துச்சு தெரியுமா… “ விக்கி கலங்க ஆரம்பித்திருக்க… இப்போது ரிஷியின் முறையானது சமாதானப்படுத்தும் பொறுப்பு…


“ரித்வி… கெளம்பு… நாம போகலாம்…. நாம ஏதோ பூஜை வேளைக் கரடி மாதிரி இருக்கோம் போல!!! ”


பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ரிதன்யா…. ஒரு கட்டத்தில் பொறுமை கடந்தவளாக…. தன் தங்கையைக் அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகரப் போக…


அடுத்த நொடி…


விக்கி வேகமாக தன் கரங்களைக் கொண்டு…. அவளை தன் பக்கம் இழுத்து… தன் அருகில் வைத்துக் கொண்டவன்…. மற்ற இருவரும் அறியாமல் காதல் மொழி பேசி சமாதானப்படுத்த… இப்போது. ரிதன்யா அமைதி ஆகி இருந்தாள்.. விக்கியின் சமாதானத்தில்…


என்னதான் விக்கி மறைக்க நினைத்தாலும்… ரிஷியின் கண்களில் இருந்து அது தப்புமா என்ன… பார்த்தும் பார்க்காமலும் அதை ரசித்த ரிஷியின் மனமோ நிறைந்தது என்றே சொல்ல வேண்டும்…


தனக்காவது பல விதங்களில் ஆறுதல் கிடைத்தது… சத்யா… நட்ராஜ்… வேலன் தினகர்… ஃபேபியோ என… ஆனால் ரிதன்யா அப்படி இல்லை… பிடிக்கிறதோ பிடிக்கவில்லை… தன் அண்ணனுக்கா… தன் அம்மாவுக்காக… தன் தங்கைக்காக என இத்தனை நாள் தன்னை தானாகவே ஒரு வட்டத்துக்குள் வைத்திருந்தாள்… கடைசியில் அவள் மனம் போல் வாழ்க்கை கிடைக்கப் போகிறது…. அண்ணனாக முதல் முறை ஜெயித்திருக்கின்றான் என்றே தோன்றியது ரிஷிக்கு…


அதன் பின் நால்வருமாகப் பேசிச் சிரித்தனரோ இல்லையோ… ரிஷியும் விக்ரமும் அவர்களின் கல்லூரி நாட்களை... அப்போது செய்த குறும்புகள் என மனம் விட்டு பேசிக் கொண்டிருக்க… பெண்கள் இருவரும் அவர்களை… அவர்கள் சொன்ன விசயங்களை சுவாரசியாமாக கேட்டபடி… அவர்களை ரசித்துக் கொண்டிருக்கும் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர்……


நிமிடங்கள் கரைந்திருக்க..


”அப்புறம் எப்போ உன் தாத்தாகிட்ட சொல்லலாம்னு இருக்க விக்கி….” தோழனாக இருந்தவன்… தமையன் அவதாரம் எடுத்திருக்க… கேள்வியை கேட்டவன்... இப்போது நண்பனை ஆழமாக பார்க்க ஆரம்பித்திருந்தான்


இதுவரை விக்கியும் சரி… ரிஷியும் சரி… இருவர் வீட்டிலும்… யாரிடமும் இவர்கள் திருமணம் பற்றி சொல்லவில்லை…. ஆனால் இன்று ரிஷி தன் தங்கையின் திருமணம் பற்றி தன் வீட்டில் சொல்லி முடித்துவிட்டான்… ரிஷியைப் பற்றி பிரச்சனை இல்லை… இங்கு… அதாவது அவன் குடும்பத்தில் அவன் எடுக்கும் முடிவுகள்தான் முதன்மையானது…


ஆனால் விக்கியின் நிலைமைதான் வேறு…

தொழில் வியாபாரம்… இவற்றைப் பொறுத்தவரை விக்கியால் சுலபமாக தன் முடிவை எடுக்க முடியும்… விக்கியின் குடும்பம் என்று வரும்போது அவனது நிலை…. அவன் சம்பந்தப்பட்ட விசயமே என்றாலும்… அவனால் முடிவு எடுக்க முடியாது… அந்தக் குடும்பம் அவனது தாத்தா கட்டிக் காத்துவரும் அழகான பாசமான ஒரு கூடு… அதற்கு சேதாரம் விளைவிக்காத அளவு எப்போதுமே முடிவுகள் எடுக்க நினைப்பான் விக்ரம்… அதை நினைத்தே அவனைப் புரிந்தே… ரிஷி இப்போதும் விக்கியை அர்த்தப் பார்வை பார்க்க…. அவனது பார்வை விக்குக்குமே தெரிந்தது…புரிந்தது…


“ஹ்ம்ம்.. இனிமேல் தான் தாத்தா கிட்ட சொல்லனும்டா”…குரல் மெல்ல அதன் சுருதியை இழக்க ஆரம்பித்திருந்தது… இருந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்ட விக்கி…


“கஷ்டம் தான்… கண்டிப்பா…. கொஞ்சம் போராடித்தான் சம்மதம் வாங்கனும்” என தன் நெற்றியை அழுந்தத் தேய்த்தவனைப் பார்த்து… இலட்சுமியின் மக்கள் சற்று குழப்பத்துடன் பார்க்க


“அப்பா அம்மா… சித்தப்பா… பெரியப்பா… அண்ணா அண்ணி இவங்க யாரும் என் முடிவுக்கு குறுக்க நிற்க மாட்டாங்க… ஆனால்” என விக்கி தடுமாறும் போதே


“தாத்தாக்கு இன்னும் பயம்… அப்படித்தானே… இன்னுமாடா அந்த காலேஜ் படிச்ச விக்கியா இருக்க” ரிஷி நக்கலாகவும்… கடுப்பாகவும் கேட்க…


ரிஷியின் நக்கலை எல்லாம் கண்டுகொள்ளாமல்


“அப்படி இருந்திருந்தால் கூட பரவாயில்லடா… அதை விட அதிகம்… இடையில தாத்தாவுக்கும் எனக்கும் ஒரு சின்ன பிரச்சனை… ஹம்ம்ம்… அதாவது எனக்கு சின்ன பிரச்சனை… ஆனால் அவரைப் பொறுத்தவரை அது பெரிய பிரச்சனை… அதுல இருந்து என் கூட அவ்வளவா பேசுறது இல்லை” விக்கி எங்கோ வெறித்தபடி சொல்ல…


ரிஷி புருவம் சுருக்கினான்… ரிதன்யாவுக்கு எல்லாம் தெரியும் என்பதால்… விக்கியின் கைகளைப் பிடித்து ஆறுதலாக விரல் கோர்க்க… அதில் சற்று தன் இயல்புக்கு வந்திருந்தான் விக்கி


“என்னடா பிரச்சனை… அதாவது உன் சின்னப் பிரச்சனை.. உன் தாத்தாவோட பெரிய பிரச்சனை” ரிஷி கேள்விக்கணையைப் வீச


விக்கி மெதுவாக ஆரம்பித்தான்…


“உனக்கு தெரியும் தானே… அண்ணாக்கும் அண்ணிக்கும் ரொம்ப வருசமா குழந்தை இல்லைனு…”

ஆமோதிப்பாக தன் தலையை ஆட்டிய ரிஷி….


“ஹ்ம்ம்… இப்போதான் ஒரு குழந்தை இருக்கே… ’கண்மணி’ தானே… அந்தப் பாப்பா பேரு” என்ற போதே விக்கி அமைதியாக இருக்க..


“இதுல என்னடா… உனக்குப் பிரச்சனை… அதுவும் உன் தாத்தா கூட..”


விக்கி இன்னும் அமைதியாகவே இருக்க… ரிதன்யா பேச ஆரம்பிக்கப் போக… அவளை தடுத்து விட்டு விக்கி ஆரம்பித்தான்


“அதுதாண்டா பிரச்சனையே… அது என்னமோ தெரியல… கண்மணி… இந்த பேருக்கும் எனக்கும் ராசியே இல்ல போலடா…..” பெருமூச்சு விட்ட விக்கியை ரிஷி முறைக்க…


“முறைக்காதடா உண்மைதாண்டா… அண்ணியோட வளைகாப்பு அப்போ…. அன்னைக்கு நைட்… மொத்த குடும்பமும்… சென்னைலருந்து பாண்டிச்சேரி திரும்பினப்போ… பெரிய ஆக்ஸிடெண்ட்… தாத்தாவைத் தவிர வேற யாருமே கான்ஷியஸ்ல இல்லை… அண்ணிக்கும் அவங்க வயித்துல இருந்த பாப்பாக்கும் உயிருக்கு ஆபத்தான நிலைமைல…. அந்த சூழ்நிலைல…. ஒரு பொண்ணு எல்லோரையும் காப்பாற்றி ஹாஸ்பிட்டல்ல சேர்த்ததோட… அண்ணிக்கு டெலிவரி டைம்ல பயப்படாமல் பக்கத்தில இருந்து காப்பாத்திருக்கா… அந்தப் பொண்ணு பேருதான்” நிறுத்திய விக்கி…. பெயரைச் சொல்லப் பிடிக்காமல்…


“அவளோட பேரைத்தான் பாப்பாக்கு வச்சுருக்கார்” என்றவன் எரிச்சலோடு…


“அந்தப் பொண்ணோட பேரைத் தவிர…. அவளப் பற்றி வேற ஒண்ணுமே அவருக்குமே தெரியல… ஆனா அவ எங்க வீட்டுக்கு மருமகளா வரனும்னு ஒரே பிடிவாதம்… அதுவும் நான் அவளக் கல்யாணம் பண்ணனுமாம்… என்கிட்ட பிடிவாதம் பிடிச்சார்…”


”ஒருவேளை என் மனசுல ரிது இல்லைனா கூட நான் சரின்னு சொல்லியிருப்பேனா….. எனக்கு தெரியலைடா…. ஒரு பக்கம் ரிதுவைப் பற்றின நினைவுகள்… இவ எனக்கு கிடைப்பாளான்னு தெரியாத குழப்பமான நிலை… இன்னொரு பக்கம் தாத்தா முகவரியே தெரியாத ஒரு பொண்ண தேடி அலைஞ்சுட்டு இருந்தார்…. அந்தக் கோபத்தில கொஞ்சம் வார்த்தைய விட்டுட்டேன்… அதுல இருந்து இந்த ரெண்டு வருசமா என்னைத் தள்ளி வச்சுட்டார்… பெருசா என்கிட்ட பேச்சு வார்த்தை இல்லை”


கண்மணி தாமதமாக வந்த நாள்… அதற்கு சொன்ன காரணம் அது அதுவுமே பெரிதாக நினைவில் இல்லை ரிஷிக்கு… விக்கியைப் போல் அவனுக்கும் அன்றைய சூழலில் பெரிதான விசயமாகப் பட்டிருக்கவில்லை.. இன்றும் ஞாபகத்துக்கு வரவில்லை…. அதனால் விக்கி சொன்ன விசயங்களை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தவன்…


“அப்படி என்ன வார்த்தையை விட்ட…” ரிஷி முன் நெற்றிக் கேசத்தை கைகளால் ஆயாசமாகத் தள்ளியபடி கேட்டவனுக்கு…


”நட்ட நடு இராத்திரில… ஒரு பொண்ணு தனியா வந்துருக்கான்னா… அவ என்ன குடும்பப் பெண்ணாவா இருப்பா… என்கிட்ட வந்து அப்படிப்பட்ட ஒருத்திய மேரேஜ் பண்ணிக்கச் சொல்லி கேட்கறீங்களேன்னு கேட்டேன்…” இந்த வார்த்தைகளைத் தன் தாத்தாவிடம் கேட்டபோது… அன்று தன் கன்னத்தில் உணர்ந்த அவரின் ஆக்ரோஷ கைத்தடச் சூட்டை இப்போது இந்த நிமிடத்திலும் விக்கியால் உணர முடிந்தது…


“ஆனாலும் உனக்கு எப்போதுமே வாய் ஜாஸ்திதான் விக்கி…” ரிஷி கடுப்பாகச் சொல்ல…


“அடப்போடா… அப்புறம்… என்னவாம்… தலையில தூக்கி வச்சுட்டு ஆடினர்…… ஆடிட்டு இருக்காரு… விட்டா கோவில் கட்டி கும்பிடுவார்டா… இந்த பைத்தியக்காரத்தனத்துக்கு என்ன பேர் சொல்றதுடா…”



“நான் பெரிய வரத்தை மிஸ் பண்ணிட்டேனாம்… அவர் சொன்னாரு… எனக்கு சிரிப்புதான் வந்துச்சு… என் குடும்பத்தையே காப்பாத்தின பொண்ணு… எங்க வீட்டுக்கு வர வேண்டிய அடுத்த வாரிச காப்பாத்தி கைல சேர்த்தவ… அந்த தெய்வப் பெண்… எங்க வீட்டுக்கு வர முடியாமல் வீட்டுக்கு வர வாய்ப்பில்லாமல் என்னால மிஸ் ஆகிட்டாளாம்… என்ன ஒரு லாஜிக்… அஃப்கோர்ஸ் அவ பண்ணின உதவி பெருசுதான்… என்ன மாதிரியான பொண்ணா வேணும்னாலும் இருக்கட்டும்… அவள நல்லபடியா எங்க வீட்டு குல தெய்வமா வச்சு கும்பிடட்டும்... ஏன் நான் கால்ல கூட விழறேன்… அதெல்லாம் நான் வேண்டாம்னு சொல்லலையே… அதுக்காக நான் எப்படிடா மேரேஜ் பண்ண முடியும்”


ரிஷிக்குமே அவனது நிலை புரிய…


“அப்புறம் என்னதான் தீர்வு….” ரிஷி கேட்க… விக்கி கண் சிமிட்டிச் சிரித்தான்..


”என் தாத்தா மட்டும் தானே பார்த்திருந்தார்… அவர் வேற குல தெய்வம்… அப்படி இப்படின்னு சொன்னாரா… லைட்டா ஒரு புரளி வேற கிளப்பி விட்டுட்டேன்… ”


ரிஷி புருவம் உயர்த்த


“உண்மையிலேயே அப்படி ஒரு பொண்ணெல்லாம் கிடையாது… நம்ம குலசாமிதான் நேர்ல வந்து நம்ம குடும்பத்தைக் காப்பாத்தி இருக்கு… இல்லைனா… அந்த பொண்ணு தகவல் கிடைக்காமல் இருக்குமா… இந்த தகவல் தொழில் நுட்ப உலகத்துலேனு… எங்க தாத்தாக்கும் அந்த எண்ணம் இருந்திருக்கும் போல… எப்படியோ தப்பிச்சுட்டேன்”


என்று முடிக்க… ரிஷி கைகளை உயர்த்து சொடக்கெடுத்தவனாக


”அடப்பாவி… சாமி… தெய்வம்னு சொல்லி… எப்படியோ தப்பிச்சுட்ட… ஹ்ம்ம்… அதெல்லாம் சரி… உன் தாத்தாவை எதிர்த்து பேசிட்டியாடா நீ… நம்பவே முடியலடா” ரிஷி உண்மையாகவே ஆச்சரியத்துடன் கேட்டவன்


“அதெல்லாம் விடு… அந்தப் பொண்ணு கிடச்சிருந்தால் கூட… உங்க தாத்தா கேட்டால்… அந்தப் பொண்ணூ உனக்கு உடனே ஓகே சொல்லிருப்பாளா என்ன… அதை யோசிக்கவே இல்லையா நீ… அவ்ளோ சுப்பிரியாரிட்டி ஃபீல்… உனக்கு மட்டும் இல்லை… உன் தாத்தாக்கும் தான்… நல்ல குடும்பம்டா ” ரிஷி கிண்டலடித்தபடியே


”அப்போ பலமா இருக்கும் போல கச்சேரி… உனக்கு உன் தாத்தாகிட்ட…” இப்போது ரிதன்யாவைப் பார்த்தவன்… தன் விளையாட்டெல்லாம் விட்டு விட்டு


“உன்னை நம்பி… என் தங்கச்சி கிட்ட உன் பேரைச் சொல்லி இருக்கேன்… பார்க்காமலே காதல்… ஆறு வருசக் காதல்னு என் தங்கைகிட்ட உனக்கு சப்போர்ட் பண்ணி… அவளையும் சம்மதிக்க வச்சுருக்கேன்… “ ரிதன்யாவைப் பார்த்த… அவன் குரலில் கவலை தோய்ந்திருக்க…


“நான் பார்த்துக்கிறேண்டா… இந்த ஜென்மத்தில எனக்கு என் ரிது தான்” சொன்ன போதே


“அக்கா” ரித்விகா திடீரென்று ஏதோ ஞாபகம் வந்து கத்த…


”என்ன ரித்வி” மற்றவர்கள் பதற….


“என் ப்ரெண்டு நோட் கேட்டா…. கொண்டு வர்றேன்னு சொல்லி இருந்தேன்…. ப்ளீஸ்க்கா… அண்ணா பேசிட்டு இருக்கட்டும்…. நீ வா…. இவ்ளோ நேரம் நீதானே விக்கி மாமாவோட பேசிட்டு இருந்த… ப்ளீஸ் ப்ளீஸ்… பைக்க எடு..” என எப்படியோ ரிதன்யாவை நச்சரித்து… அங்கிருந்து கிளம்பிச்செல்ல… இப்போது ரிஷியும் விக்கியும் மட்டுமே…


விக்கியின் முகத்தில் வந்த போது இருந்த உற்சாகம் இல்லை… அதைக் கவனித்த ரிஷி…


“தாத்தா கிட்ட நான் வந்து பேசவாடா …. ”


”ஆனால் என்னையும் புரிய வைக்கனுமே… இப்போ… இந்த இடத்தில நான் இருக்கிறதெல்லாம் பெரிய விசயமாகுமோ…. நாம எதையும் யோசிக்கலை ஆனால் எல்லாமே யோசிக்கனுமேடா…” நெற்றிப் புருவங்கள் நெறிந்தன ரிஷிக்கு… விக்கியின் தாத்தாவை நினைத்து…


தன் தங்கையை மருமகளாக எடுக்க சம்மதிப்பாரா… உண்மையிலேயே குழப்பம் சூழ ஆரம்பித்திருந்தது அவனுக்குள்… ஆனாலும் சமாளிக்க வேண்டுமே… அதனால் விக்கியை முதலில் தேற்ற ஆரம்பித்தான்


”நீயும் உன் தாத்தாவை…. உன் குடும்பத்தை சமாதானப்படுத்து… இந்த இடம் இங்க அவங்கள கூட்டிட்டு வந்து காண்பிக்கனுமேனுலாம் கவலைப்படாத…. சீக்கிரம் நான் வீடு மாத்திருவேன்… ரிது பாவம்டா…. உன்னை ரொம்ப லவ் பண்றாடா… அதை விட… நீதான் அவளோட நம்பிக்கைடா…. ரொம்ப நாளைக்கப்புறம் அவ உன்னை அவளோட சந்தோசமா பார்க்கிறாடா…’ ரிஷி தன் தங்கையை நினைத்து கவலையோடு பேச…


விக்கி நிமிர்ந்து ரிஷியையே பார்க்க ஆரம்பித்தவன்


“நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே…” விக்கி ரிஷியிடம் தயக்கமாக ஆரம்பித்தான்


“உனக்கு பணம் பிரச்சனையே இல்லை… அப்போ ஏன் இந்த வீட்டுக்கு வந்த… நீ தனியா இருந்தப்போ என்னமோ பண்ணிகிட்ட… ஆனால் அத்தை… ரிது ரித்விகா இவங்க உன்கூட இங்கதான்னு தங்க போறாங்கன்னு முடிவு எடுத்தப்போ… ஏன் நீ வேறொரு இடம் பார்க்கலை…”


ரிஷியுன் புருவங்கள் முடிச்சிட்டன…


“அப்போ மேரேஜ் கூட ஆகல தானே… இப்படி ஒரு இடத்தில் இருக்கனும்னு என்ன கட்டாயம் உனக்கு… இந்த இடத்தை தவிர்த்திருக்கலாமே… உன்னை கஷ்டப்படுத்திகிட்ட ஆனால் ஏன் உன் குடும்பத்தையும் கஷ்டப்பட விட்ட…”


கீழ் உதட்டைக் கடித்தபடி…. எங்கோ வெறித்தவன் சில பல நிமிடங்களுக்குப் பின்


“பாதுகாப்பு…. “


“என் குடும்பத்துக்கு…. என் தங்கைகளுக்கு”


விக்கி புரியாமல் பார்க்க


“கண்மணி… அந்தப் பொண்ணு இருக்கிற இடம்… எனக்கு தேவைப்பட்டது “ என்று ரிஷி அழுத்தமான வார்த்தைகளோடு நிதானமாகச் சொல்ல…


“இந்த வீட்டு பொண்ணுக்கு நட்ராஜ், இந்த ஏரியா மட்டும் இல்லை… அவங்க தாத்தா…. அர்ஜூன் என இப்படி இவங்க எல்லாருமே பாதுகாப்பு வளையமா இருந்தாங்க… அந்த பாதுகாப்பை… நான் என் குடும்பத்துக்கு யூஸ் பண்ணிக்கிட்டேன்… “


“கண்மணி… இவ பக்கத்தில என் தங்கைகள் இருந்தப்போ… அவளோட பாதுகாப்பு வளையம்… என் தங்கச்சிங்களுக்கும் கிடைக்கும் நெனச்சேன்..”


”முதல்ல கண்மணி இல்லத்தை என்னோட சுயநலத்துக்கு என் தங்கைகளோட பாதுகாப்புக்கு எடுத்துக்கிட்டேன்…. அடுத்து அந்தப் பொண்ணையே பயன்படுத்திக்கிட்டேன்…. கண்மணின்ற பொண்ணு நட்ராஜ் சாரோட பொண்ணு மட்டும் இல்லை விக்கி… மேதகு நாராயண குருக்களோட ஒரே பேத்தி… அவர் யார்னு நெனச்ச… அவரோட பணபலம்… ஆள்பலம்… அரசியல் வட்டம்…எல்லாமே எனக்குத் தெரியும்… அப்படிப்பட்ட அவரோட மொத்த சொத்துக்கும் ஒரே வாரிசு இந்தக் கண்மணி… அவரோட பணம்… செல்வாக்கு.. பலம்… இதெல்லாம் அவர் பேத்தியை அவர்கிட்ட கொண்டு வந்து வச்சுக்க முடியலை… ஆனால் அவர் பேத்தியை கண் கொத்திப் பாம்மா பார்த்துட்டு இருந்தார்… அது எனக்கு எப்போ தெரிந்ததுன்னா… ஒரு நாள் நைட் கண்மணி லேட்டா வந்தப்போ அதைப் தெரிஞ்சுக்கிட்டேன்… கண்மணின்ற பொண்ணு சுதந்திரமா சுத்திட்டு இருக்கான்னு நெனச்சேன்… அது அப்படி இல்லை… ஆனால் அவரோட கண்காணிப்பு வட்டத்துல அவள சுதந்திரமா சுத்த விட்டுட்டு இருக்கார்னு அப்புறம் தான் தெரிந்தது… அவளுக்கு ஒரு பிரச்சனைனா… அடுத்த அரை மணி நேரத்தில அவருக்கு விசயம் போய்ச் சேர்ந்துரும்…”


“நான் அவரோட பணத்தை குறி வைக்கல… அந்த பணத்தோட பலத்தை… அவர் பேத்தியோட பாதுகாப்பை…. என் குடும்பத்துக்கு குறி வச்சேன்… அவங்க நிம்மதிதான் என் நிம்மதி… அது கிடைத்தால் மட்டுமே… என்னால என் எதிரிங்களை ஃபோகஸ் பண்ண முடியும்னு நெனச்சேன்….”


“எனக்கு என்னோட தனிப்பட்ட விருப்பம்… காதல் இதை எல்லாம் விட… நிம்மதி… தேவைப்பட்டது… அந்த நிம்மதி கிடைக்க என்ன வழின்னு தேட ஆரம்பிச்சேன்… மகிளாகிட்ட அது கிடைக்காது… இன்னும் சொல்லப் போனால் இன்னுமே எனக்கு பிரச்சனைதான் பெரிதாகும்… அதுக்கு என் காதலை… அதைவிட வாழ்க்கையை பணயம் வச்சேன்… கண்மணிய பிடிக்குதோ இல்லையோ… அவ கூட என் வாழ்க்கைனு முடிவு பண்ணேன்… என்ன நெனச்சு நான் ப்ளான் பண்ணினேனோ… அது நடந்துச்சு…. நடந்துட்டு இருக்கு… ” விக்கியின் சூடாnஅ பார்வையில்


”இப்போ எல்லாமே மாறிருச்சு… எனக்குனு ஒரு தனி கோட்டை இருக்கு…. ”


“என் தங்கைகளுக்கு’’கண்மணி இல்லம்’ இனி தேவையில்லதான்… ” ரிஷியின் வார்த்தைகளை விக்கி கவனிக்கவில்லை….


“அஃப்கோர்ஸ் கண்மணிக்கும் எனக்குமான திருமணத்தில என்னோட சுயநலம் மட்டுமே… முழுக்க முழுக்க … எனக்கு என் குடும்பம் முக்கியம்… அது மட்டும் தான் என்னோட மைண்ட்ல இருந்துச்சு… வேற ஏதும் இல்லை… காதல்… கல்யாணம்… இதெல்லாம் எனக்குத் தேவையில்லைனு தோணுச்சு… ஆனால் ஒரு கட்டத்தில… என்னோட திருமணம்… என் குடும்பத்தோட பிரச்சனைக்கு ஒரு தீர்வா தேவைப்பட்டது… மகிளாவா… கண்மணி மாதிரி ஒரு பொண்ணா…என் குடும்பத்துக்குத் தேவை யார் சரியா இருப்பாங்க… அந்த அடிப்படைல நான் கண்மணியை செலெக்ட் பண்ணேன்… மகிளாவை ரிஜெக்ட் பண்ணேன் ”


”சோ… எதுக்காக நீ மேரேஜ் பண்ணுனியோ… அந்த பிரச்சனை அதாவது உன் தங்கைகள்… உன் அம்மாவோட உடல்நிலை… இதெல்லாம் இனி உனக்கு பிரச்சனை இல்லை… அப்படித்தானே..”




ரிஷி ஏதோ சொல்ல வாயெடுக்கப் போக… அவனைப் பேசவிடவில்லை விக்கி


“சோ… உன்னோட மேரேஜ்…. ஒரு கால்குலேஷன் தான்… நாட் அ ரிலேஷன்ஷிப் அப்படித்தானே… அதுதான் கணக்கு முடிஞ்சுருச்சே” விக்கியின் பார்வை அவனை சுட்டெறிக்க…


விக்கியின் பார்வை மட்டுமல்ல… உண்மையும் சுடத்தான் செய்யும்… ரிஷி அமைதியாக சில நிமிடங்களைக் கடந்தவன்



”அப்போ அந்தக் கண்மணியும்… இனி தேவை இல்லைதானே… ” விக்கி விசமமாகக் கேட்க



வாய் விட்டுச் சத்தமாகச் சிரித்த ரிஷி….


“நான் படிக்கும் போது… அடிக்கடி நினைப்பேன்…. கணக்கே வர மாட்டேங்குதேன்னு… அப்படிப்பட்ட எனக்கு கண்மணின்ற பொண்ணுகிட்ட நான் ஆரம்பிச்ச வாழ்க்கைன்ற கணக்குப் பாடத்தில பெர்ஃபெக்டா சென்டம் அடிச்சுட்டேன்னு நினைக்கிறப்போ… எனக்கே ஆச்சரியம்தான்… இதுல இன்னொரு ஆச்சரியம் என்னன்னா… அந்த கணக்கோட அடுத்தடுத்த கட்டம் போகனும்… எல்லாத்துலயும்… வின் பண்ணனும் தோணுதே விக்கி… முடிவில்லாத வாழ்க்கைக் கணக்கா மாறிருச்சே… கண்மணி அவளோட எல்லைகள் எல்லாம் நான் மட்டுமே ஆக்கிரமிக்கனும்… ஜெயிக்கனும்…” ரிஷியின் முகமெங்கும் அவனது வெற்றி ஜ்வாலை சுடர் விட ஆரம்பித்திருக்க ஆரம்பித்திருக்க…


ஏளனமாக இதழ் சுழித்தான் விக்கி…. ரிஷியின் வார்த்தைகளை ஏனோ அவனால் ரசிக்க முடியவில்லை…


“அவனுக்கு கண்மணி மேல் காதல் இல்லை… சுயநலம் மட்டுமே…” விக்கிக்கு இப்படித்தான் தோன்றியது…


“அப்போ நீ கண்மணியை லவ் பண்ணலை… அதை ஒத்துக்கறியா…“ இப்போது ரிஷியிடமிருந்து பதிலே வரவில்லை… நண்பனின் மௌனம் அவனுக்கு உத்வேகத்தைக் கொடுக்க… அவனுக்கு பாடம் எடுக்க ஆரம்பித்திருந்தான்




“காதல்னா என்னன்னு தெரியுமா ரிஷி உனக்கு… அது தெரியல உனக்கு… விளையாட்டா எடுத்துகிட்ட… அதுதான் எனக்கு தோணுது… அதெல்லாம் விடு… எனக்கு ஏன் ரிதன்யாவை பிடிக்க ஆரம்பிச்சுச்சுனு உனக்குத் தெரியுமா…. உன் மேல காட்டின அக்கறை… போன் பண்ணுவா எனக்கு…. என் அண்ணன பாத்துக்க… அவன் ரொம்ப நல்லவன்… இன்னோசண்ட்… ஈஸீயா எல்லார்கிட்டயும் ஏமாந்துருவான்… அதே போல… நீ தண்ணி அடிக்கிறது தம் அடிக்கிறதுனு எல்லாத்தையும் சொல்லி புலம்புவா… எப்படியாவது அவனை மாத்துனு… அந்த அக்கறை… அந்த அன்பு… இதெல்லாம் தான்… அவ மேல எனக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துச்சு… எப்படியாவது என் வாழ்க்கைல கொண்டு வந்துரனும்னு மனசுக்குள்ள அப்போதே பதிவு பண்ணி வச்சுகிட்டேன்…… காதல்னு கூட சொல்ல முடியாது…. ஆனால் அதுக்காக இதோ… இன்னுமே போராடப் போகிறேன்… ஆனால் நீ… சின்ன வயசுல இருந்து உருகின காதலை தூக்கிப் போட்டுட்டு…. கணக்கு போட்டாராம் கரெக்டா நடந்திருச்சாம்…. மகிளா என்னடா உனக்குத் துரோகம் பண்ணினா… உன்னையே சுத்தி சுத்தி வந்த பொண்ண… ச்சேய்… அன்னைக்கு அவ என் உலகம்… உயிர்…. மகிளா இல்லைனா என் வாழ்க்கையே இல்லை… இது மட்டுமா என்னென்னமோ சொல்லி இருக்க… இப்போ…”


விக்கி ஆவேசமாக கேட்க… ரிஷியின் கண்கள் சிவக்க ஆரம்பித்திருந்தன… அன்று விக்கியிடம் மகிளாவை நினைத்து பேசிய காதல் வசனங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்து போனது… அதிலும் அதில் பாதி சுயநினைவோடு…. பாதி போதையின் உச்சத்தில்… அவனின் இரத்தத்தின் கொதிநிலை சட்டென்று உயரத்தான் செய்தது… சுவற்றில் குத்த கைகளை ஓங்க ஆரம்பித்தவனுக்குள் அவனைக் குளிர்விக்கும் அவனின் தேவியின் முகம் வந்து போக… கண்களை மூடித்திறந்த போது கண்ணுக்குள் மணியாக வந்தவள்… அவனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க… தன்னை மீட்டெடுத்தவன்,,,


”விக்கி, மகிய இழுக்காத… அவ இன்னைக்கு வேறொரு லைஃப்ல சந்தோஷமா இருக்கா…” ரிஷி நிதனாமாகச் சொன்ன போதே… விக்கி நிதானத்தை இழந்தவனாக… ரிஷியுன் சட்டையைப் பற்றி இழுத்தவனாக


“என்னடா சந்தோஷமா இருக்கா… நீ பார்த்தியா… உனக்குத் தெரியுமா…. வேற வழி இல்லைடா அவளுக்கு… என்ன பண்ணுவா அந்த சின்னப் பொண்ணு இதுதான் தன் வாழ்க்கைனு… பிராக்டிக்கலா வாழ்க்கைய சூஸ் பண்ணிக்கிட்டா… அவ்ளோதான்… அவ சந்தோசமா இருக்கனும்னுதானே… அவள விட்டுக் கொடுத்த… அதை உனக்காக பண்றா… அந்த நிம்மதியை உனக்குக் கொடுத்திட்டு இருக்காடா… அது புரியுதா இல்லையாடா உனக்கு… அதை விட்டுட்டு எவளோ உனக்கு நிம்மதி கொடுத்தான்னு என்கிட்டயே சொல்ற” அதிர்ச்சியுடன் ரிஷி விக்கியைப் பார்க்க…


“என்னடா பார்க்கிற… ஒருவேளை… இந்த வாழ்க்கை பிடிக்காமல் மகி வேற ஏதாவது பண்ணி இருந்தான்னா என்ன பண்ணியிருப்ப… சொல்லுடா… நிம்மதியா இருந்துருப்பியா… கண்மணியாம்… நிம்மதி கொடுத்தாளாம்… “ ரிஷியை விட்டு விட்டு தள்ளி நின்றவன்…


“ப்ச்ச்… மகிய விடு… நீ சந்தோசமா இருக்கியா… ”


“காதல் இல்லை… கடமைக்காக குடும்பத்துக்காக தொழிலுக்காக ன்னு சொல்லி.. ஒருத்திய மேரேஜ் பண்ணுனியே… நீ சந்தோசமா இருக்கியா… என் கண்ணப் பார்த்து சொல்லுடா.” விக்கி கேட்க… ரிஷி இப்போது அமைதியாக அவனைப் பார்க்க…


“நிம்மதியா இருக்க… நீயே ஒத்துகிட்ட… ஆனால சந்தோசமா இருக்கியா… சொல்லுடா… நீ சந்தோசமா இல்லைடா… எனக்கு… எனக்கு மட்டும் தான் தெரியும்…. செண்டம் வாங்குனேன்னு சொன்னியே… ஆனால் உன்னோட மத்த எல்லா பாடத்திலயும் தோத்துட்டியேடா… நூத்துக்கு நூறு மார்க் வீண் தானே… அந்தக் கண்மணியும் அது மாதிரிதாண்டா…”


ரிஷி அவனைத் தள்ளிவிட்டு… விலகி நிற்க…


“ஏதாவது பேசுடா… உன் காவிய வசனம்லாம் எதிர்பார்க்கிறேன்” என்று எகத்தாளமாகக் கேட்க…


ரிஷி அப்போதும் அமைதியாக இருக்க…


“எனக்கும் தெரியும்… உன்னால முடியாது…. உன்னால யார்கிட்ட வேணும்னாலும்… அந்தக் கண்மணியப் பற்றி பேச முடியும்… என்கிட்ட பேசமுடியாது…. ஏன்னா உன்னால என்கிட்ட பொய் பேச முடியாது… அதுமட்டும் இல்ல உன்னோட மனசு என்ன…உன்னோட எதிர்ப்பார்ப்பு… இது எல்லாம் எனக்குத் தெரியும்டா… அதுல ஏதாவது இந்த கண்மணிகிட்ட பூர்த்தி ஆகி இருக்குமா என்ன… சொல்லுடா”


ரிஷி திரும்பினான்..... இப்போது மௌனமாக இருந்தாலும்… அவன் முகம் மென்னகையைப் பூசி இருக்க…


”என்ன அவதான் என் எல்லாமேனு சொல்லப் போறியா…. மகிளா ரீப்ளேஸ்மெண்ட்.… இனி கண்மணி… அவதான் உயிர்னு சொல்லப் போறீயா” விக்கி நக்கலாகக் கேட்க…ரிஷியோ முறைத்தான்…


“எல்லாம் முடிஞ்சுருச்சு… இனி என்ன பண்ண முடியும்னு… இனிமேல் என்ன ஆகப் போகுதுன்னு இவன் இவ்ளோ பேச்சு பேசுறான்னு யோசிக்கிறியா… ஆனால் நான் ஒண்ணு சொல்லவா… இனிமேல் தான் கண்மணிக்கும் உனக்கும் உள்ள மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் உனக்கு புரியும்டா… இவ்ளோ நாள் உன்னோட பெர்சனல் லைஃஃப்க்கு இம்பார்ட்டண்டட் கொடுக்கல… ஆனால் இப்போ நீ அதைத் தேடிப் போகும் போது…. நீ ஏமாந்துருவ… கண்டிப்பா ஏமாறுவ… ”


ரிஷி இறுகி நிற்க


“அந்தக் கண்மணியைப் பொறுத்தவரை… நீ ஒரு பொம்மை… எமோஷனலா வீக்கான ஒரு பெர்சன்… ரிஷின்ற இந்த பொம்மையை பேம்பரிங் பண்ணி பாதுக்காக்கிறது அவளுக்குப் பிடிச்சிருக்கு… அதைத்தான் உன்கிட்ட பண்ணிட்டு இருக்கா… நீ பொம்மையா இருக்கனும் அவளுக்கு…. அதுதான் உன்கிட்ட எதிர்பார்க்கிறா… கிட்டத்தட்ட… நாம கதைலல எல்லாம் படிப்போமே… சூனியக்காரி… அந்த கேரக்டர்தான் இந்த கண்மணி”


ரிஷி கைகளைக் கட்டிக் கொண்டபடி… இதழ்கள் வளைய சுவாரஸ்யமாக விக்கியைப் பார்த்துக் கொண்டிருக்க…



”அண்ட் உன்கிட்ட மட்டும் இல்லை… அவள சுத்தி இருக்கிறவங்க எல்லாம் அவளை எதிர்பார்க்கனும்… அவங்கள இவ கேர் பண்ணிக்கனும்… உனக்குத் தெரியலைனு நினைக்கிறேன்… எமோஷனலா ஸ்ட்ராங்க இருக்கிற யாரும் அவகிட்ட நெருங்க முடியாது… தன் பக்கத்திலயும் வச்சுக்க மாட்டா… ”


“அவங்க தாத்தா பாட்டிக்கிட்ட இவ இருந்திருந்தால்…. நட்ராஜ் அவ கிட்ட இந்த அளவு பாசமா இருக்க மாட்டார்… அதே நேரம் அவங்க தாத்தா பாட்டியும் இவ்ளோ தேட மாட்டாங்க… இப்போ பாரு… ரெண்டு பேரும் அவ மட்டும் தான் உலகம்னு இருக்காங்க… இன்னொன்னு சொன்னால் கோபம் வரலாம் உனக்கு…. ஆனால் என்னால சொல்லாம இருக்க முடியாது… அவளுக்கு தேவை அன்பு இல்லை ரிஷி… அவளுக்கு அவ சொல்றதெல்லாம் கேட்கிற ஆள் வேண்டும்… இல்லையில்ல அடிமை வேணும்… அவ பின்னாடி அலைய ஒரு கூட்டம் வேணும்… அவ கடவுள்னு காட்ற கண்ணாடி வேணும்… நீங்க எல்லோரும் அந்தக் கண்ணாடி… உங்க ஒவ்வொருத்தவங்க கிட்டயும் தெரியுற அவளோட பிம்பத்தை அவ ரசிக்கிறா…”


ரிஷிக்கு உண்மையாகவே இப்போது சிரிப்பை அடக்க முடியவில்லை… இருந்தும்… அடக்கிக் கொண்டு… விக்கியைப் பார்த்துக் கொண்டு இருக்க…


“இதெல்லாம் நான் எப்படி சொல்றேன்னு பார்க்கறியா… அர்ஜூன் அவர் ஒருத்தர் போதாதா இவளைப் பற்றி தெரிய… “ கோபமாக எகிறியவன்…


”அர்ஜூனை அவ பின்னாடி அலைய வைக்கிறான்னு உனக்கு தெரியலையா ரிஷி… அர்ஜூன்… அவர்லாம் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா… அவரை விட்டுட்டு உன்னை ஏன் மேரேஜ் பண்ணான்னு என்னைக்காவது யோசிச்சுருக்கியா… உன்னை, அவ அப்பாவை… அவ தாத்தா பாட்டிய எல்லாரையும் அன்பு காட்டி அடிமையா வச்சுருக்காடா… இதெல்லாம் உனக்கு கூடிய சீக்கிரம் தெரிய வரும்” பேச ஆரம்பித்தவன்… எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டு நிமிர…


”ஓகே… அது எனக்கு தெரிய வரும்போது பார்த்துக்கலாம்… “ இயல்பாக கூறிவிட்டு…. தன் சிரிப்பை எல்லாம் அடக்கிக் கொண்டு சீரியஸாகக் பேச ஆரம்பித்தான் ரிஷி… அதுவும் விக்கிக்காக…


“என்னடா இது… தெய்வப் பெண்… தேவதை சூனியக்காரினு… ஒரே கதையா சொல்ற.. அந்தக் கதையெல்லாம் விடு… உன் கதைக்கு வா… உங்க மேரேஜ் சீக்கிரமா நடக்கனும்… நீ உன் வீட்ல இருந்து எப்போ பேச வரமுடியுமோ… அதுக்கான ஏற்பாடு சீக்கிரம் பண்ணுடா” என்ற போதே


“ரிஷி அண்ணா… “ என்று கீழ் விட்டில் இருக்கும் சிறுவன் மேலே வர… அவனது கையில் இருந்த சிற்றூண்டி வகைகள் அடங்கிய தட்டைப் பார்த்தவன் புருவங்களோ நெறிந்தன…


கண்மணி மேலே வரப் பிடிக்காமல்… இவனிடம் கொடுத்தனுப்பியிருக்கின்றாள்… தெள்ளத் தெளிவாக விளங்கியதுதான்… உணர்ச்சிகள் துடைத்த முகத்தோடு அதை வாங்கினாலும்…. விக்கியிடம் காட்டிக் கொள்ளாமல்


“ரிது… ரித்விகா அக்காலாம் இல்லையாடா… “ என்ற இயல்பாக பேசுவது போல சட்டென்று பாவனையை மாற்றியபடி… தட்டை வாங்கிக் கொண்ட ரிஷி… அவனை அனுப்பி விட …அந்தத் தட்டையே வெறித்த விக்கியிடம்


“உனக்குப் பிடிக்காதவங்க யாரும் எடுத்துட்டு வரலை… தாராளமா சாப்பிடலாம் நீ” என்று அவனிடம் நீட்ட


விக்கி இப்போது கேட்டான்


”உன்னோட வீட்டுக்கு வந்தா இதுதான் எனக்கு மரியாதையாடா… “


”என் வீட்டுக்கே வர வேண்டாம்டா… என்னோட தங்கைய மட்டும் மேரேஜ் பண்ணிக்கோ… “ என்று ரிஷி அலட்டிக் கொள்ளாமல் பட்டென்று சொல்ல… அதிர்ந்து பார்த்த விக்கியிடம்


”கண்மணிக்கும் எனக்கும் இடையில யாருமே இருக்கக் கூடாது…. அவ அமைதிய கெடுக்கிற யாருமே எங்களுக்கு எனக்கு வேண்டாம்… பிஸ்னஸ்ல… ஃப்ரெண்ட்ஷிப்ல நீ முக்கியம்… ஆனால் ஃபேமிலி லைஃப்ல… நீ தள்ளியே இரு… ஏன்னா…என்னோட பொண்டாட்டிக்கு… உன்னை மாதிரி எமோசனலா ஸ்டாராங் பெர்சன்னா அலர்ஜி…” அசால்ட்டாகச் விக்கியிடம் சொல்லி அவனை இன்னும் அதிர வைத்தவன்


”என்னைப் பொறுத்தவரை அண்ணனா… என்னோட கடமையை நான் செய்வேன்… கண்மணி அவ அப்படித்தான்… அவ எப்படி இருக்காளோ… அப்படித்தான் இருப்பா… எனக்குப் பிடிச்சுருக்கு… அண்ட் இவ்ளோ நேரம் பேசுனியே அதெல்லாம் கேட்டுட்டு அமைதியா இருக்க காரணம் தெரியனுமா உனக்கு… எனக்கும் கண்மணிக்குமான வாழ்க்கையைப் பற்றி யார் என்ன வேணும்னாலும் பேசிக்கங்க… என்னைப் பற்றி, கண்மணியைப் பற்றி எவ்ளோ வேணும்னாலும் பேசினாலும்… காதலானு கேட்ட… இல்லைதான்… அப்போ என்ன????… கேட்டால்… அதுக்கெல்லாம் விளக்கம் கொடுக்க நான் தயாரா இல்லை… உங்களுக்கெல்லாம் அவ யாரா வேணும்னாலும் இருக்கலாம்… எனக்கு அவ என்னோட கண்மணி… இந்த சாதாரண ரிஷியோட கண்மணி… அவ்ளோதான்… ”


”இருந்தாலும் உனக்கான பதில் சிம்பிளா சொல்லனும்ணா… நீ பேசிட்டு இருக்கிறது… உன்னோட ஃப்ரெண்ட்… தனசேகர்-இலட்சுமி பையன் ரிஷி இல்ல… கண்மணியோட ரிஷிகிட்ட… மே பி… உன்னோட பாஷைல சொல்லனும்னா அவளோட அடிமைனே வச்சுக்கோ… உன்கிட்ட அடிக்கடி சொல்வேன்… உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையான்னு தெரியல… இந்த தண்ணி அடிக்கிறது… சிகரெட் அடிக்கிறது இதெல்லாம் ஜஸ்ட் ஹாபிதான்… அதுக்கெல்லாம் நான் அடிமை இல்லைனு… அப்படி பேசினவன் தான்… ஒரு பொண்ணோட மொத்த அன்புக்கும் அடிமை ஆகிட்டேன்… அன்புக்கு அடிமையாகுறது எவ்ளோ பெரிய போதைனு இப்போ தெரிஞ்சுகிட்டேன்… அந்தப் போதைய தெளிய வைக்கனும்னு நீ ஆசைப்பட்டியோ… இல்லை என் தங்கை உன்கிட்ட சொல்லி என்னை காப்பாத்த சொன்னாளோ… எதுவும் இந்த ரிஷிகிட்ட இனி நடக்காது…. உங்க வாழ்க்கை… அதைப் பார்த்துட்டு… அதை நோக்கி மட்டும் போங்க…


“அவளுக்கு நான் தேவையா இல்லையா எனக்குத் தெரியலை… ஆனால் அவ எனக்கு வேணும்… எனக்கு மட்டும்…. எனக்கே எனக்காக மட்டும்… யாராவது என் வாழ்க்கைல என் கண்மணிக்கும் எனக்கும் இடைல… வந்தீங்க… ” ரிஷியின் கண்கள் இதைச் சொன்னபோது… அதில் இருந்த தீவிரம்.. ரௌத்திரம்… ஆவேசம் விக்கியின் கண்களுக்கு ரிஷி வேற்றுக் கிரகவாசியாக ஆகி இருந்தான்


ரிஷியின் மொத்த உடலும் இறுகி இருக்க… அவனது முகமோ… கல்லாக கடினமாகி இருக்க… அவனின் கைகள் கைப்பிடிச்சுவரை அழுத்த ஆரம்பித்திருந்தான்…


”ப்ச்ச்… நான் என்ன சொல்ல வர்றே… ன்.. னா…” விக்கி தடுமாறினான் நண்பனின் நிலை கண்டு… அவனால் பேச முடியவில்லை… நண்பன் கொடுத்துக் கொண்டிருந்த அதிர்ச்சியில் இருந்து அவனாலும் வெளியே வர முடியவில்லை…


“டேய்… என்னைப் பாருடா” எனும் போதே


விக்கியைப் பேச விடாமல் சுட்டு விரல் காட்டி எச்சரித்த மறித்த ரிஷி….


”நீ என் ஃப்ரெண்ட்… என் தங்கையோட கணவன்… இந்த இடத்திலேயே நின்னுக்கோடா விக்கி… ப்ளீஸ்… எங்கள விட்ருங்க” முதலில் இருந்த ஆக்ரோஷம் மாறி… ரிஷியின் குரல் தடுமாறி வர ஆரம்பிக்க அதற்கு மேல் விக்கி பேசவா முடியும்


அவனுக்குப் புரியவில்லை… ரிஷியிடம் காதல் இல்லை… அதையெல்லாம் விட… என்ன… விக்கிக்கு குழப்பம் தான் மிஞ்சியது… கண்மணி என்பவள் இந்த அளவுக்கு ரிஷியை ஆக்கிரமித்திருக்கும் காரணம் தான் தெரியவில்லை… தான் இவ்வளவு எடுத்துச் சொல்லியும் கூட ரிஷி அதில் ஒரு வார்த்தையைக் கூட தனக்குள் யோசித்து ஆராய்ந்து பார்க்க நினைக்கவில்லை எனும்போது… என்ன சொல்வது… அவனாகப் புரிந்து கொள்வான்… ஆனால் தாங்கிக் கொள்வானா… ஆனால் இதுவரை அவன் பட்ட அனுபங்கள் கண்டிப்பாகக் கைகொடுக்கும்… பெருமூச்சு விட்டவனாக


“ஹ்ம்ம்… ஒருநாள் உனக்கு புரியவரும் ரிஷி…” சொன்ன விக்கியைப் பார்த்து சிரித்த ரிஷி


“அந்த ஒருநாள் உனக்கும் வரலாம் இல்லையா… ஆனால் அது வரலைனா கூட ஐ டோண்ட் கேர்… அவளைப் பற்றி எனக்கு மட்டும் தெரிந்தால் போதும்…….


”இப்போ அம்மா உனக்காக பண்ணிருக்காங்க… உனக்குப் பிடிச்ச கட்லெட்… சாப்பிடலாமா…“ சட்டென்று அவனிடம் பேச்சை மாற்றி இருந்தான் ரிஷி… விக்கியையும் அதற்கு மேல் பேசவிடவில்லை…


அதன் பிறகு… சில நிமிடங்களில் ரிதன்யாவும்… ரித்விகாவும் வந்துவிட…. கீழே இறங்கி வந்திருந்தனர்…


விக்கி கிளம்பும் போது…… ரிதன்யாவையைத் தன்னோடு அழைத்துக் கொண்டு போவதாகவும்…. இரவு உணவை வெளியே முடித்துவிட்டு தானே அவளை வீட்டில் வந்து விடுவதாகக் இலட்சுமியிடமும் ரிஷியிடமும் அனுமதி வாங்கிக் கொண்டு தன்னோடு அழைத்துச் சென்றுவிட…


இந்த இடைப்பட்ட நேரத்தில்… கண்மணி அவர்களோடு இல்லை… அதே போல கண்மணி எங்குமே தென்படவில்லை… விக்கியை அவள் தவிர்க்கிறாள்… என்பதை அப்பட்டமாக காட்டியிருந்தாள் கண்மணி… இலட்சுமி ரித்விகாவுக்கு தெரிகிறதோ இல்லையோ… சம்பந்தபட்ட மற்ற மூவருக்கும் நன்றாகவேத் தெரிந்தது….


ஒரு வழியாக அவர்களை வழி அனுப்பி விட்டு… கண்மணியைத் தேடிச் சென்றான் ரிஷி…. நடராஜ் இல்லத்திற்குள்…


அங்கு… கண்மணி அவளது கணினியை மடியில் வைத்திருக்க… இவன் வந்ததைக் கண்டும் கூட நிமிராமல் கண்கள் கணினித் திரையில் மட்டுமே வைத்திருக்க… கதை எழுதுகிறாள் என்பதை புரிந்து கொண்டவனாக… அதற்கு மேல் அவளைத் தொந்தரவு செய்யாமல்.. மாடி ஏறியவன் வானத்தை வெறிக்க ஆரம்பித்திருந்தான்….


“அப்போ நீ கண்மணியை லவ் பண்ணலை… அதை ஒத்துக்கறியா…“ விக்கியின் இந்த வார்த்தைகள் மட்டுமே அவனைச் சுற்றி சுற்றி வந்து எதிரொலிக்க…

வார்த்தைகள்… இல்லை… அவனிடம் அப்போதும் இப்போதும்… வார்த்தைகள் அவன் கொண்ட காதலுக்கு அளவுகோலாகி விடும்… இந்த வானம் போல் எல்லைகள் தீர்மானிக்க இயலா… வார்த்தைகளில் சொல்ல முடியாத உறவு அவனுக்கும் கண்மணிக்கும் உள்ள உறவு என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்… அவனுக்கு அவன் கண்மணி உணர்த்தி இருந்தாள்… ஆனால் உணர்த்தியவள் நிலையோ????

1,893 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page