அத்தியாயம் 60
அம்பகம் வளாகம் சென்னை டிசம்பர் 30…
அரையாண்டு விடுமுறை தொடங்கி இருக்க… பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமே சிறப்பு வகுப்புகள்… வளாகத்தில் பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லை…
அர்ஜூன் அப்போதுதான் உள்ளே நுழைந்திருந்தான்…. காரை நிறுத்தி விட்டு… வேறு எங்கும் செல்லவில்லை… நேராக கண்மணியின் ஸ்கூட்டி நிறுத்தப்பட்டிருந்த இடத்தைப் பார்த்து அதன் அருகில் சென்றவன்… கண்மணி மற்றும் ரித்விகாவின் வரவுக்காகக் காத்திருந்தான்
மணியைப் பார்த்தான்… மணி 5.30 எனக் காட்ட… அதே நேரம் மாணவர்களும் வெளியே வரத் தொடங்கி இருக்க… ரித்விகாவும் வந்திருந்தாள்… நின்று கொண்டிருந்த அர்ஜூனைப் பார்த்தவுடன் அவள் முகமும் மலர்ந்தது. உற்சாகமாக அவனைப் பார்த்து கையசைத்தபடியே… அவனருகில் வந்தவள்…
“அண்ணி… உங்க கூட வர்றதுக்கு ஓகே சொல்வாங்களான்னு தெரியலையே அங்கிள்… வருவாங்களா” என்று அர்ஜூனிடம் கேட்டுக் கொண்டிருக்க… அவளிடம் அதற்கு பதில் சொன்னவாறு பேசிக் கொண்டிருந்தான் அர்ஜூன்…
என்னதான் ரித்விகாவிடம் பேசிக் கொண்டிருந்தாலும் பார்வை கண்மணி வருகிறாளா என்று தேடிக் கொண்டிருக்க… கிட்டத்தட்ட 5 நிமிட இடைவெளியில் கண்மணியும் வந்தாள்…
வெகு நாட்களுக்குப் பின் அவளை ஆராய்ச்சிப் பார்வை பார்க்க ஆரம்பித்திருந்தான் அர்ஜூன்…
ரித்விகாவை அழைப்பதற்காக மட்டுமே வந்திருக்கின்றாள் என்பது அவள் அணிந்திருந்த சல்வார் உடையிலேயே தெரிந்தது…
கண்மணி முதலில் இருந்ததற்கு இன்னுமே மெலிந்திருந்தாற்போல தெரிந்தது அர்ஜூனுக்கு… ரித்விகாவுக்கும் அவளுக்கு உயர வித்தியாசம் அவ்வளவே… கொஞ்சமே கொஞ்சம் சற்றே பூசினாற் போல இருந்தாள்… அது கூட இல்லையென்றால் இதோ நாளை 23 வயதை பூர்த்தி செய்யப் போகிறாள் என்று சொல்ல முடியாது… அதே நேரம், என்னதான் அவள் முகத்தை இறுக்கமாக வைத்து தனக்குள் முகமூடி போட்டிருந்தாலும்… உற்றுக் கவனித்தால் அந்த கண்களின் துறுதுறுப்பு இன்னுமே அவள் குழந்தைதான் என்பதைச் சொல்லாமல் சொல்லும்…
தங்களை நோக்கி வந்த கண்மணியைப் பார்த்தபடியே அர்ஜூன் யோசித்துக் கொண்டிருக்க
”அண்ணி வந்துட்டாங்க” அர்ஜூன் புறம் குனிந்து கிசுகிசுக்க… அர்ஜூன் இப்போது வேண்டுமென்றே… கண்மணியின் ஸ்கூட்டியில் ஒய்யாரமாக அமர்ந்தபடி கண்மணியை சீண்டலான பார்வை பார்த்தபடியே … கண்மணியின் சூடான பதிலை எதிர்பார்த்திருக்க…
அவளோ அர்ஜூன் என்ற ஒருவன் இருப்பதையே கண்டுகொள்ளாமல்
”ரித்வி போகலாமா” என தன் கைப்பையில் இருந்து சாவியை எடுத்தபடியே கேட்க… அர்ஜூன் சட்டென்று அவளிடமிருந்த சாவியை கைப்பற்ற முயல… கண்மணியோ ஏற்கனவே எதிர்பார்த்திருந்தவள்… போல… இலாவகமாக சாவியை அவன் கைப்பற்ற முடியாமல் தன் கரங்களுக்குள் வைத்துக் கொள்ள… முறைத்தான் அர்ஜூன்…
அவள் பார்த்தால்தானே…
“அண்ணி… நான்” ரித்விகா கண்மணியிடம் அனுமதி கேட்கும் போதே தடுமாற…
“ரித்வி என்கூட ஷாப்பிங் வர்றா… அவள கூட்டிட்டுப் போகத்தான் வந்தேன்….” அர்ஜூன் கண்மணியிடம் சொல்ல…
ரித்விகாவை முறைத்தாள் கண்மணி
“அண்ணி ப்ளீஸ் அண்ணி… நம்ம அர்ஜூன் அங்கிளோடத்தானே” என்று ரித்விகா ஆரம்பித்திருக்க
ரித்விகா இப்படி எல்லாம் அர்ஜூனோடு தனியே வெளியே சென்றதெல்லாம் கிடையாது… பள்ளிக்கு வரும் சமயங்களில் மட்டுமே அர்ஜூனோடு பேசுவது வழக்கம்… சில சமயம் மூவருமாக வெளியே செல்வர்…
கண்மணிக்கு வேலை இருந்து கண்மணிக்காக காத்திருக்க நேரிடும் போது… அர்ஜுன் ரித்விகாவை அழைத்துக் கொண்டு போய் வீட்டில் விடுவான்… ரிஷிக்குமே தெரியும்… அர்ஜூன் ரித்விகாவிடம் பேசுவதை ரிஷி பெரிதாக எடுத்துக் கொண்டது இல்லை… அர்ஜூனின் குணமும் அவனுக்குக்குத் தெரியும்… ஆனால் அர்ஜூன்-கண்மணி என்று வரும்போது மட்டுமே ரிஷிக்கு பிடிக்காது… அதே போல அர்ஜூனை அவன் எப்போதும் சந்தேகமும் பட்டது கிடையாது… ரித்விகா அர்ஜூன் பேசுவதற்கெல்லாம் அவன் கோபப்பட்டது இல்லை...
”இன்று ஏன் ரித்விகா- அர்ஜூன் கூட்டணி…” என்று புரியாதவளும் இல்லை….
அவளது பிறந்த நாளுக்காக இருவருமாக ஏதோ திட்டமிடுகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தது…
இத்தனை வருடமாக அர்ஜூன் இந்தியாவில் இருந்ததில்லை… ஆனால் ஒவ்வொரு வருடமும் சரியாக 12 மணிக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்பி விடுவான்… ஆனால் கண்மணிதான் இதுவரை அதற்கு எந்த பதிலும் அனுப்பியது இல்லை … வாழ்த்தை ஏற்றால் தானே பதில் சொல்ல வேண்டும்…
“ரித்வி… அர்ஜூனோட சேர்ந்து தேவையில்லாத ப்ளே பண்ணாத… வேஸ்டாத்தான் ஆகும்… சீக்கிரம் வந்துரு வீட்டுக்கு” - மறைமுகமாக ரித்விகாவுக்கு அனுமதி அளித்திருந்தாள் கண்மணி
“அர்ஜூன்… எழுந்திருங்க… பைக்க எடுக்கனும்…”
“கீயைக் கொடு… நாங்க ரெண்டு பேரும் பைக்ல போறோம்… “ அர்ஜூன் இறங்காமல் கையை நீட்ட… இப்போது கண்மணியும் தன் பைக் கீயை அவனிடம் நீட்டினாள்… வேறொன்றும் பேசாமல்…
சண்டை போடுவாள்… இல்லை ஏதாவது மறுத்துப் பேசுவாள் என்று எதிர்பார்த்துதான் அவள் பைக்கில் அமர்ந்து அர்ஜூன் இப்படியெல்லாம் வம்பிழுத்தது… கண்மணியோ அதற்கெல்லாம் வாய்ப்பே கொடுக்கவில்லை…
அவள் நீட்டிய பைக் சாவியை வாங்காமல்… தன்னிடம் இருந்த கார்க்கீயை ரித்விகாவிடம் நீட்டியவன்…
”கார்ல போய் உட்காரு… நான் வர்றேன்” ரித்விகாவை அந்த இடத்தில் இருந்து கிளம்பச் சொல்ல…
ரித்விகா சாவியை வாங்கியபடியே தயக்கமாக தன் அண்ணியைப் பார்த்தாள்…
அர்ஜூனும் கண்மணியும் தனியே பேசுவதெல்லாம் இப்போது ரித்விகாவுக்கு பிரச்சனை அல்ல… கண்மணி சொன்னால் மட்டுமே அவள் அங்கிருந்து போக முடியும்… அதற்காகவே தன் அண்ணியைப் பார்த்தாள்…
கண்மணியும் முதலில் யோசித்தாள் தான்… ஆனால் அடுத்த நிமிடமே… ரித்விகாவைப் போகச் சொல்லி தலை ஆட்ட… கிளம்பினாள் ரித்விகாவும்
கண்மணியும் அர்ஜூனும் மட்டுமே… இப்போதும் பைக்கை விட்டு எழுந்து கொள்ளாமல்… அர்ஜூன் அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவன்… தொண்டையைச் செருமியவனாக
“சோ என்கிட்ட பேசமாட்ட… பரவாயில்ல… இன்னும் எவ்வளவு தூரம் விலகி விலகி போக முடியுமோ போ… ஆனால் திரும்ப வரும்போது உனக்குத்தான் கஷ்டம்… அதுதான்டி எனக்கு கஷ்டமா இருக்கு…” என்றவனை
கொஞ்சம் கூட இலட்சியம் செய்யாமல்… தன் மணிக்கட்டைத் திருப்பி மணியைப் பார்க்க…
தனக்குள் சிரித்துக் கொண்டான் அர்ஜூன்… தனக்காக ஆயிரம் பேர் காத்துக் கொண்டிருக்க… இவளோ… அர்ஜூன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே
“என்னோட பேர் கண்மணி… எனக்கு தெரிஞ்சவங்க சுருக்கமா ’மணி’ ன்னு சொல்வாங்க… ’கண்மணி நட்ராஜை’ வாடி போடின்னு நீங்க கூப்ட்ருக்கலாம்… நானும் அளோ பண்ணிருக்கலாம்… ஆனால் ’கண்மணி ரிஷிகேஷ்’ ஆன பின்னால… ‘டி’ போட்டு பேசுறதை அவாய்ட் பண்ணினால் நல்லாயிருக்கும்… என்னோட மரியாதை மட்டும் இல்லை… ரிஷியோட மரியாதையும் இதுல அடங்கி இருக்கு…. இதை உங்ககிட்ட பலமுறை சொல்ல நினைச்சிருக்கேன்… இன்னைக்கு சொல்லிட்டேன்”
அர்ஜூனின் கண்களில் தீப்பொறி மட்டும் தான் பறக்கவில்லை…
“அவன் ஒரு ஆளு…. அவனுக்கு ஒரு மரியாதை…. எல்லாம் என் நேரம்… ஃபர்ஸ்ட் டைம் பார்த்த போதே… அவன் காருக்கு பதிலா… அவனை தூக்கி இருந்திருக்கனும்… ” தனக்குள் கடுப்பாகச் சொன்னவன்… வெளியே காட்டிக் கொள்ளாமல்… வேண்டுமென்றே செயற்கையாக புன்னகைத்தபடி
“ கண்மணி மேடம் கிட்ட பேச டைம் கிடைக்குமா…” பவ்யமாகக் கேட்க
“நான் இன்னும் பவித்ராவோட பொண்ணுதான்… ’கண்மணி’ ன்னே சொல்லுங்க” கண்மணி சொல்ல…
”என் அத்தையோட பொண்ணுன்னா… ’கண்மணி’ ன்னு சொல்ல முடியாதே” மீண்டும் வந்த இடத்திலேயே அர்ஜூன் நிற்க…
“இதுக்குத்தான்… அர்ஜூன்… இதை அவாய்ட் பண்ணத்தான் நான் ஒதுங்கிப் போறதே… நான் விளக்கம் கொடுத்து ஓஞ்சு போய்ட்டேன்” என்றவள்… அவன் அமர்ந்திருந்ததை எல்லாம் இலட்சியம் செய்யாமல் தன் ஹேண்ட்பேகை முன்னால் லாக் செய்து மாட்டியவள… கீயை வண்டியில் வைத்து திருக… அர்ஜூனும் அதற்கு மேல் அவளிடம் வம்பு வளர்க்க விரும்பவில்லை… அவன் பேச வேண்டாம் என்று நினைத்தாலும்… கடைசியில் அங்குதான் வந்து நிற்கிறான் என்பது அவனுக்குமே தெரிகிறது…. ஆனாலும் அவனை மாற்றிக் கொள்ள முடியவில்லையே
தன்னையே நொந்தவனாக… இறங்கியவன்…
“தாத்தா பாட்டி … “
“வந்துட்டாங்க… தெரியும்” அவன் சொல்லி முடிக்கும் முன்னேயே அவள் முடித்து விட்டவளாக… பைக்கில் அமர்ந்து ஸ்டார்ட் செய்ய…. அர்ஜூனோ அதை ஆஃப் செய்தவனாக
”ஆதவனை மீட் பண்ணேன்…” அடுத்து பேச ஆரம்பித்திருக்க
புருவம் சுருங்கி…. மீண்ட போது… ஆதவன் யாரென்பதும் ஞாபகத்தில் வந்திருக்க.. அர்ஜூனைப் பேச விடாமல்
“என்ன டெஷிசன் நீங்க எடுத்தாலும்… எனக்கும் சம்மதம்னு சொல்லிட்டேன் அர்ஜூன்…”
பொறுமை இழந்தவனாக… ”பேச விடுடி… நீயே முடிவெடுத்து நீயே பேசாத… என்ன சொல்ல வர்றேன்னு கேளு” பல்லைக் கடித்தபடி… நிமிர… கண்மணியோ அவன் வார்த்தைக்கெல்லாம் அவகாசம்… இல்லையில்லை பார்வைக்கெல்லாம் அவகாசம் கொடுக்காமல் தன் பைக்கில் பறந்திருந்தாள்
அவன் ‘டி’ போட்டது பிடிக்காமல் தான்… அவள் போகிறாள்” கண்மணியின் வேகமே அர்ஜூனுக்கு சொல்லாமல் சொல்லியது… காலைத் தரையில் உதறியவனாக… சத்தமாக அவளை நோக்கி அவள் கேட்கும்படி பேச ஆரம்பித்திருந்தான்…
“நீ என்னடி சொல்லக் கூடாதுன்னு சொல்றது… .ஆயிரம் ‘டி’ போடுவேன்… நான் முதன் முதல்ல கூப்பிட்ட போதே சொல்லிருக்கலாமே… இப்போ கண்மணி ரிஷிகேஷாம்… மரியாதையாம்… அப்போ அதுக்கு முன்னாடி… என்ன நினைச்சுட்டு இருந்த ” அர்ஜூனின் குரல் காற்றில் தேய்ந்து மறைந்திருக்க… கண்மணியும் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வந்திருந்தாள்…
அர்ஜூனின் இந்த உரிமைதான் கண்மணிக்குமே பயத்தை தருவிப்பது… தன்னை நினைத்து அல்ல… அர்ஜூனை நினைத்தே… இப்படியே விட்டால்… வேகத்தில் பைக்கை எடுத்து வந்தவளின் கைகள் நடுக்கமாகி இருக்க… பைக் கட்டுப்பாட்டில் இல்லாமல்… அங்குமிங்கும் ஆட… சட்டென்று நிறுத்தியிருந்தாள் கண்மணி… இப்போதைக்கு ஓட்ட ஆரம்பித்தால்… எங்காவது மோதுவது நிச்சயம்…
பெருமூச்சை விட்டுக் கொண்டாள் கண்மணி…
ரிஷியுடன்… அவன் மீதான புரிதலில் தான் எவ்வளவுக்கெவ்வள்வு தெளிவாக இருக்கின்றேனோ… அர்ஜூனிடம் அந்த அளவு தெளிவு ஏன் தனக்கு வர மாட்டேன் என்கிறது… புரியவே இல்லை… கண்மணிக்கு… அதோடு அர்ஜூனும் ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறான் என்பதும் புரியவில்லை இவளுக்கு….
இதற்கிடையே ரிஷி வேறு… நீ உன் வாழ்க்கை… உன் விருப்பம்… என்கிறான்… அதுமட்டுமில்லாமல் தன் அம்மா கேட்ட வாக்குறுதி… என எல்லாமே அவளை அலைகழிக்க.. மற்ற யார் மீதும் அவளுக்கு கோபம் வரவில்லை… மொத்தமாக ரிஷியின் மீதுதான் வந்திருந்தது…
அவளை மட்டும் தனித்து விட்டு விட்டு போய் விட்டான்… இப்போது பேசவும் செய்யாமல்… தன்னை நிலை குலைய வைக்கிறான்… தோள் சாய ரிஷி தேவை… அவனுக்கு மட்டுமல்ல தனக்கும் ரிஷி தேவை என்பதையே…. முதன் முதலாக கண்மணி உணர்ந்தாள்… இத்தனை நாளாக அவனுக்கு மட்டுமே தான் தேவை என்று நினைத்திருந்தவளுக்கு… இப்போதுதான் அவன் அருகாமையும்… அவன் பிரசன்னமும் எந்த அளவுக்கு முக்கியம் என்பதையே உணர முடிந்திருந்தது… அவன் பிரிந்து சென்ற போது வராத உணர்வுகள்… அவனின் ஒரு வார்த்தையைக் கூட கேட்க இயலாமல் இந்த ஒரு வாரத்தைக் கழித்த போது உணர்ந்திருந்தாள்…
எத்தனை நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்திருந்தாளோ அவளுக்கே தெரியவில்லை… ரிஷியோடு பேச வேண்டும்… பேசியே ஆக வேண்டும்… எனத் தோன்றியது…
ஏற்கனவே முடிவு செய்திருந்தாள் தான்… இன்று இரவு பனிரெண்டு மணிக்கு பேச வேண்டுமென்று… அதற்காக இன்னும் ஆறு மணி நேரம் எல்லாம் காத்திருக்க வேண்டுமே… அந்த நேரத்தைக் கடத்த வேண்டுமே… முடியாது என்றே தோன்றியது கண்மணிக்கு… அவளை நினைத்தே அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது… உணர்வுகளின் உந்துதல் தனக்குமா… எது வந்தாலும் சலனமின்றி கடந்து செல்ல வாழ பழகிக் கொண்டவள்… இன்று ஒரு ஆறு மணித் தியாலத்தைக் கடத்த முடியவில்லையா…
பைக் முன்னால் சாய்ந்து அமர்ந்திருந்தவள்… தன் பொறுமையை மீண்டும் தனக்குள் கொண்டு வர நினைக்க… மீண்டும் தோல்வியே… ரிஷியைப் பிடிக்கும்… மற்ற எல்லோரையும் விட அவனை அவளுக்குப் பிடிக்கும்… தெரிந்த விசயம் தான்… ஆனால் ஏன்… இந்த அளவுக்கு அவனைப் பிடிக்க காரணம் என்ன… யோசித்தாலும் காரணமே பிடிபடவில்லை…
அதே நேரம்… இப்போது விஸ்வரூபமாக அவன் அவளை ஆட்கொண்டிருக்கின்றான்… அதுவே அவளுக்கு பயத்தைக் கொடுத்தது… எதிர்பார்ப்பின்றி அவனோடு வாழ்கிறேன் என்று சொன்னதெல்லாம் கண்மணி தன்னை உணர்ந்தே…
கண்மணி என்பவள் எதிலுமே ஆசை இல்லாமல் வாழும் துறவி அல்ல… அவள் ஆசைப்பட்ட அத்தனை எதிர்பார்ப்பும் நிறைவேற வேண்டும் என்று வாழ்ந்தவள்… அதே நேரம் அதில் ஏமாற்றம் அடைந்தவள்… அதன் பிறகு யாரிடமும் எதிர்பார்ப்பை வைக்காதவள்… இன்று ரிஷியிடம் மொத்தமாக அத்தனையையும் எதிர்பார்க்க ஆரம்பித்திருக்கின்றாளா???….. ஆரம்பித்து விட்டாள் என்றே தோன்றியது… அதன் ஆரம்பக்கட்டம் தான் விக்கி விசயத்தில் அவளின் பிடிவாதம் என்று தோன்ற ஆரம்பித்திருந்தது…
இந்த உணர்வை வளர விட்டால் ரிஷி தன் சின்ன எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும் கூட…. உடைந்து விடுவோமா என்று பயம் வந்ததோடு… ரிஷியையும் காயப்படுத்தி விடுவோமோ… ஏதேதோ எண்ணங்கள்… அவளை ஒரே நேரத்தில் தாக்க… முற்றிலுமாக உடைந்திருந்தவள்…
“ஏன் தனக்கு மட்டும்… இப்படி எல்லாம் யோசிக்க தோன்றுகிறது… எல்லோருக்கும் இயல்பாக இருக்கும் கணவன் மனைவி பந்தம்… காதல்… அவர்களுக்குள் வரும் ஊடல்… என ஏன் கடந்து செல்ல முடியவில்லை… இந்த அளவு பதட்டம் ஏன்… கவலை ஏன்…”
”தனக்கு மனநலம் இன்னுமே சரியாக வில்லையோ… இன்னுமே பைத்தியக்காரியாகத்தான் இருக்கின்றேனா… அப்போது நான் மட்டுமே… இப்போது ரிஷியும் அல்லவா பாதிக்கப்படுவான்… ”
அவளையும் மீறி… அவளது கடந்த காலக் கசப்புகள் அவளை இழுத்தது…. ரிஷியிடம் எல்லாவற்றையும் சொல்லத் துடித்தாள் தான்… தன் தந்தை நட்ராஜிடம் ஆரம்பித்து… தன் தாத்தா பாட்டி… அந்த துரோகி மருது வரை… அத்தனை பேரையும் அவன் மார்பில் சாய்ந்தபடி… ஒருவர் விடாமல் அவனிடம் கைகாட்டி குற்றவாளிக் கூண்டில் நிறுத்த ஆவேசப்பட்டாள் தான்… என்னைத் துச்சமாக மதித்தவர்கள் தான்… இன்று பல்லக்கு தூக்குகிறார்கள்… என்று இளக்காரமாக சொல்ல ஆசைப்பட்டாள் தான்… இவை எல்லாவற்றையும் விட…. அந்த அத்தனை பேர் முன்பும் எனக்காக என் ரிஷிக்கண்ணா இருக்கின்றான் என்று காட்ட வேண்டும்… அத்தனை பேரும் அதை உணர வேண்டும் என்று துடித்தது அவள் மனது…
ஆனால் இதற்கெல்லாம் நேரம் என்ற ஒன்று இருக்கின்றது… காத்திருக்க முடிவு செய்திருந்தாள்… ரிஷி - தன் கணவனாக மட்டுமே அப்போது இருக்க வேண்டும்…
உனக்கான தகுதியை நான் வளர்த்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்வானே… அவன் என்ன தகுதியைப் பற்றி சொன்னானோ… அதெல்லாம் அவள் கவலை இல்லை…. அந்த தகுதி இவளைப் பொறுத்தவரை அது வேறு… தன் கடந்த கால கதையைக் கேட்டு தாங்கிக் கொள்ளும் தகுதி அவனுக்கிருக்கிறதா… அது மட்டுமே… அது தான் கண்மணிக்கு இன்னுமே தெரியவில்லை… முகம் குப்பென்று வியர்க்க ஆரம்பித்திருந்தது கண்மணிக்கு
அர்ஜூனுக்கு எல்லாம் தெரியும்… அது இவளுக்கும் தெரியும்… தெரிந்தும் தன்னை நேசிக்கின்றான் என்பது கூட அவன் பால் இவளுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கலாம்… சொல்லப் போனால் அவன் நட்ராஜை வெறுப்பது… இவளுக்கு சந்தோசத்தைத்தான் கொடுக்கவேண்டும்… ஆனால் கொடுக்க வில்லையே…
எப்போது அர்ஜூனோடு சண்டை… அவனோடு பேச வில்லை என்றால்… அவனுக்காக வருத்தம் தான் மனம் படுமே தவிர… வேறொன்றுமே அவனிடம் எதிர்பார்த்ததில்லை… ரிஷியோடு மட்டும் எனக்கு ஏன் இப்படி… தாலி கட்டியதால் மனைவியாக கணவனிடம் எதிர்பார்க்கும் உரிமையா???…
கண்மணிக்கு ஒன்று மட்டும் புரிந்தது… தான் இயல்பாக இல்லை… இதை வளர விடக் கூடாது… பயமாக இருந்தது… தனக்காக இல்லாவிட்டாலும்… ரிஷிக்காக… தங்கள் வாழ்க்கைக்காக… தன் அன்னையியின் மருத்துவத் தோழி… கிருத்திகாவை பார்க்க வேண்டும் என்றே தோன்றியது… ரிஷியோடு பேசுவதற்கு முன் கிருத்திகாவிடம் பேசினால்… தன் மனக்குழப்பங்கள் தீரும் என்றே தோன்ற… வேகமாக தன் கைப்பையைத் திறந்தவள் கிருத்திகாவுக்குப் பேச அலைபேசியை எடுக்க… தவறிய அழைப்புகளின் வரிசையால் அவள் போன் நிரம்பியிருந்தது…
அத்தனையும் ரிஷி மற்றும் நட்ராஜ் இருவரின் எண்களில் இருந்தும்… பள்ளி அலுவலகத்தில் வேலை என்பதால் ”சைலண்ட் மோடில் “ போட்டிருக்க… அதை மறந்தும் இருக்க… வந்த எந்த அழைப்பையும் கவனிக்கவில்லை கண்மணி
ஆனால் ரிஷியும் சரி… நட்ராஜும் சரி… மிஸ்ட் கால் கொடுத்தால் கூட… இத்தனை தடவைக்கு மேல் கொடுக்க மாட்டர்கள்.. இரண்டு அழைப்புகள் கொடுத்துவிட்டு… இவள் பதில் அழைப்புக்காக பொறுத்திருப்பார்களே… இன்று ஏன்…
பயப்பந்து அவளுக்குள் சுழழ ஆரம்பித்து இருந்தது… தன் அப்பாவுக்கு இல்லை கணவனுக்கு… ஏதாவது… சற்று முன் தன் மனநிலையைப் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்திருந்தவள் அதை எல்லாம் கிடப்பில் போட்டவளாக… ரிஷிக்கு போன் செய்ய நினைத்தாள் தான்…
ஆனால் ஒருவேளை ரிஷி எடுக்காமல் அதை தன் தந்தை எடுத்து விடுவாரோ…
தன் அப்பாவுக்கு போன் செய்ய நினைக்க அதற்கும் பயம்… அவளை அதிகம் யோசிக்க விடாமல் இப்போது அழைப்பு…. அதுவும் அவள் தந்தையின் அலைபேசி எண்ணில் இருந்து…
எடுக்கலாமா… வேண்டாமா… ஏன் சந்தோசமான காரணமாகக் கூட இருக்கலாமே.. ஒரு பக்கம் நினைத்தாலும்… யாருமே சந்தோசமான விசயத்துக்கு இந்த அவசரம் காட்ட மாட்டார்கள் என்று தோன்ற.. மீண்டும் சுணக்கம்… எப்படியோ… தன்னைத் தைரியப்படுத்தி அட்டெண்ட் செய்தும் விட்டவள்…
“அப்..” என்று ஆரம்பித்த போதே…
“Happy birth day… MRS... Kanmani Rishikesh..” ரிஷியின் கணீர் குரல் அவள் காதுகளில் வந்தடைய… கணப் பொழுதில் அவன் இருக்குமிடத்தில் நள்ளிரவு 12 மணி என்பது உணர்ந்தவளாக… அதைக் கணக்கிட்டு அவன் வாழ்த்து சொல்லி இருக்கின்றான்… அதை விட… அவனும் இவளோடு பேச துடித்துக் கொண்டிருக்கின்றான் என்பதை அவன் குரலே சொல்ல… அதுவரை குழப்பம் குழப்பம் மட்டுமே நிறைந்திருந்த மனதில் ரிஷி மட்டுமே… அவனது குரல் மட்டுமே… அவன் சொன்ன வாழ்த்தில் மனம் நிறைந்த மகிழ்ச்சி மட்டுமே…
பேச்சே வரவில்லை அவளுக்கு… ஆனந்தக் கண்ணீர் கேள்விப்பட்டிருக்கின்றாள்… ஆனந்த சிரிப்பு என்ன என்பதை அப்போதுதான் உணர்ந்திருந்தாள் கண்மணி…
ரிஷியிடமிருந்து பிறந்த நாள் வாழ்த்தை எல்லாம் அவள் எதிர்பார்க்கவே இல்லை… அப்படியே எதிர்பார்த்திருந்தாலும்… இந்திய நேரத்துக்கு நள்ளிரவு 12 மணிக்கு எதிர்ப்பார்த்திருந்திருப்பாள்… அவன் வாழ்த்துவதையே எதிர்பார்க்காது இருந்தவளுக்கு…. அவன் தனக்காக… தன்னை யோசித்து… அதுவும் அவளே நினைத்துப் பார்க்காத நேரத்துக்கு…
திக்குமுக்காடிய சந்தோசத்தில் என்ன பேசுவது என்றே தெரியவில்லை கண்மணிக்கு… யாராவது கேட்டால்… பார்த்தால்… ஒரு பிறந்த நாள் வாழ்த்துக்கு… இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்றுதான் தோன்றும்… அந்த அளவுக்கு கண்மணி உணர்ச்சி வசப்பட்டிருக்க…
தான் சொன்ன வாழ்த்துக்கு மறுமொழி வராமல் மௌனமே எதிர்முனையில் பதிலாக கிடைத்திருக்க
”ஏய்… பேச மாட்டியா நீ…” கோபமாக பேச முயன்று கரகரப்புடன் ரிஷியின் குரல் முடிய
“ரிஷி… ரிஷி… க்கண்ணா” என்றவள்… கண்மணியோ அவளை மறந்து… சுற்றம் மறந்து… தான் எங்கிருக்கின்றோம் என்பதெல்லாம் மறந்து ரோட்டில் நின்றபடி சிரிக்க ஆரம்பித்திருந்தாள்…
“ஏய்…கண்மணி… மணி… ரௌடி… என்ன ஆச்சு “ கண்மணி தன் பெயரை அழைத்ததில் ரிஷியும் இயல்புக்கு வந்தனாக… வரிசையாக அவளைத் தான் அழைக்கும் விதங்களில் எல்லாம் அழைத்துக் கொண்டிருக்க… கண்மணி… இப்போது தன்னை அடக்கியபடி…
“என்ன பேசனும்…” புன்னகையை விடாமல் பேச…
”பிறந்த நாள் வாழ்த்து சொன்னேண்டி… காமெடியா பண்ணினேன்….” ரிஷிக்கே சந்தேகம் வர… அவளிடமே அதைக் கேட்க…
“என்ன சொல்லனும்… எனக்கு பிறந்த நாள் வாழ்த்து யாரும் சொன்னதில்லை… சொன்னவங்களுக்கும் பதில் கொடுக்கலை… உங்க விஷ்ஷுக்கு ரிப்ளை சொல்லத்தான் நினைக்கிறேன்… உண்மையிலேயே எனக்குத் தெரியலை”
“அவள் பிறந்த நாள்… அவள் தாயின் இறந்த நாள்…” ரிஷி அவளை உணர்ந்தவனாக அமைதியாக இருந்தான்… பின் தன்னைக் கட்டுக்குள் கொண்டு வர… தொண்டையைச் செறுமியவனாக
“அதெல்லாம் நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்… எங்க இருக்க… ஏன் போனை எடுக்கலை… “ ஒரு வார காலம் பேசவில்லை என்பதற்கு அறிகுறியே இல்லாதது போல் ரிஷி பேச ஆரம்பித்திருக்க
கண்மணியும் அவனைப் போலவே… சண்டையாவது ஒன்றாவது… அது யாருக்கோ என்ற தொணியில்…
”ப்ச்ச்… இந்த பிறந்த நாள் வாழ்த்து சொல்றதுக்கு இவ்ளோ மிஸ்ட் காலா… நான் பதறிப் போய்ட்டேன்… தெரியுமா… “ நட்ராஜ்… மற்றும் இவனது எண்ணில் இருந்து வந்த அழைப்பின் எண்ணிக்கையை கூட்டிப் பார்த்தவள்…
“விட்டால் செஞ்சுரி… அடிச்சுருப்பீங்க ரிஷி…” சொன்னவள்…
“இவ்ளோ ரிங் கொடுத்து டென்ஷன் ஆக்குனீங்கள்ள… எத்தனை மிஸ்ட் கால் கொடுத்தீங்களோ… அத்தனை தடவை விஷ் பண்ணுங்க..” என்று கறாராகச் சொன்னபடி… மௌனிக்க…
“ஓவரா இல்லையாடி உனக்கு… பர்த்டே விஷ் மட்டும் சொல்லச் சொல்லியே… இன்னைக்கு நாள முடிச்சுருவ போல… பேசாததுக்கு இவ்ளோ பெரிய இம்போஷிஷனா… கொடுமைக்கார டீச்சர்டீ…. ஸ்கூல்ல கூட தப்பிச்சு வந்துட்டேன்… நல்லா உன்கிட்ட மாட்டிருக்கேன்… தப்பிக்கவும் முடியாது… பார்த்து பண்ணுங்க டீச்சர் மேடம்” ரிஷி சலுகையாகக் முடிக்க…
“ம்ஹ்ம்ம்… சரி… ரிஷிக்கண்ணாவுக்காக யோசிக்கிறேன்” என்று யோசித்தவள்…
”இது எத்தனையாவது பிறந்த நாள்… “ கண்மணி அவனிடமே கேள்வி கேட்க
”23…” ரிஷியும் சரியாகச் சொல்ல
”எனக்கு… நான் மிஸ் பண்ணின முதல் பிறந்த நாள்ல இருந்து… இந்த பிறந்த நாள் வரை வாழ்த்து வேண்டும்… ” கண்மணியோ தன் கணவனிடம் தன் உரிமைச் சலுகையை ஆரம்பித்திருந்தாள்…
“ஹ்ம்ம்… இது அழகு… நான் தயார்… பாப்பா ரெடியா…” கன்னக் குழி விழ வந்த குறும்புச் சிரிப்பை மறைத்தபடியே… ரிஷி அவளைச் சீண்ட
“வாட்…” அவனின் ‘பாப்பா’ என்ற அழைப்பில் கண்மணி அதிர்ந்து கேட்க…
“யெஸ் பேபி… இவ்ளோ ரியாக்ஷன்லாம் ஏன்…. இப்போ நீ ஒரு வயசு பேபி… நாட் 23 வயசுப் பொண்ணு… ஒகே… கவுண்ட் பண்ணு… ”
இருவரும் ஒருவாரம் பேசாமல் இருந்ததென்ன… இப்போது பேசும் பேச்சென்ன… அர்த்தமற்ற இனிமை பேச்சுகளே… ஆனால் அந்தரங்கம் இல்லை… கண்மணி ரிஷி… இவர்களுக்கிடையே… இந்த அர்த்தமற்ற பேச்சுக்களே அவர்களை இணைத்திருந்த மிகப்பெரிய பாலம்… அது இன்றுமே தொடர்ந்திருக்க
“1” கண்மணி சொல்ல
“ஹேப்பி 1ஸ்ட் பர்த்டே பேபிம்மா…” ரிஷி சொல்ல
”2ண்ட்” கண்மணி அடுத்து எண்ண…
“ரிப்ளை வரல பேபி”
“ஒன் இயர் ஓல்ட் பேபி ரிப்ளை பண்ணாது ரிஷிக்கண்ணா… ஐக்யூ யூஸ் பண்ணனும் ரிஷிம்மா”
“ஹப்பா… என் பொண்டாட்டி பொறக்கும் போதே அறிவோட பொறந்துட்டாட்டாடா” சிலாகித்துச் சொன்னவனிடம்… இவளும் சிரிக்க…
ரிஷியு… வரிசையாக அவள் வயதின் எண்ணிக்கை சொல்லச் சொல்ல இவனும் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொண்டே வர…
“ஹேப்பி… 12த் பர்த்டே …” சில நொடி தயங்கி பின்…. “பேபி” என்று ரிஷி முடித்தான்…
இப்போது கண்மணி… 13 என்று.. தன் வயதைச் சொல்ல
“ஹேப்பி… 13த் பர்த்டே …” ரிஷி ஆரம்பித்த போதே …
“இப்போ ’பேபி’ கட் பண்ணிக்கலாம்… ரிஷிக்கண்ணா” மனைவி குறும்பாகச் சொல்ல…
தன்னவள் தனக்கானவளாக மாறிய வருடம்… சொன்ன அவளிடம் இல்லை… மாறாக அவன் கணவனிடம் வெட்கப் புன்னகை வந்திருந்தது…
.
.
“ஹேப்பி 16 த் பர்த்டே.. மணி அக்கா… உன்னை ஃபர்ஸ்ட் டைம் பார்த்த வருடம்…” நினைவு படுத்திச் சொன்னவனை… மௌனமாக தனக்குள் ரசித்துக் கொண்டாள் அவன் மனைவி…
”அட்லாஸ்ட்… ஃபைனல்… 23” என்று கண்மணி முடித்த போது…
“ஃபைனல் இல்லை…. ஆரம்பம்… மிஸஸ் ரிஷிகேஷா… ” என்று அவள் வார்த்தைகளைத் திருத்தியவன்
“இனிய முதல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் பொண்டாட்டியே…. இது மாதிரி நூறு பிறந்த வாழ்த்துக்கள் நான் சொல்லனும் உன் புருஷனா…”
முடித்தபோது… இருவரிடமே… அமைதி…
“ஏய்… ரவுடி…” குரலில் மென்மை கலந்த அடிக்குரலில் இரவின் தாக்கத்தோடு ஏகாந்தம் கலந்து அவளை அழைக்க….
“ஹ்ம்ம்” என்று மட்டும் சொன்னவள்… வேறெதுவும் பேச முடியாமல் இப்போது சுற்றுப்புறத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க…
“உன் ரிஷிக்கண்ணா கூட பேசாமலும் இருக்க முடியும்னு காட்டிட்ட தானே… நான் நெனச்சேன்… என் கண்மணி என்கூட பேசாமல் இருக்க மாட்டான்னு….” சற்று முன் ஏகாந்தம் கலந்திருந்த குரலா அது என்று நினைக்கும் அளவுக்கு இப்போது அந்தக் குரலில் வலி மட்டுமே…
உதட்டைக் கடித்துக் கொண்டு கண்மணி மௌனம் சாதித்தவள்… பிறகு அவளாகவே தன் மௌனத்தை உடைத்தவளாக
“எனக்கு ஈகோலாம் இல்ல… எங்க இடையில பேசினா… வேற ஏதாவது…. வேறு யாரைப் பற்றியாவது பேசனுமே… உங்க கிட்ட சண்டை வந்துருமோன்னு பயமா இருந்துச்சு ரிஷி… எனக்கு உங்ககிட்ட அப்படி பேச இஷ்டமே இல்லை…” கண்மணியின் குரல் கம்ம…
நிம்மதிப் பெருமூச்சை விட்டவனின் மூச்சுக் காற்றை உணர்ந்தவளாக தொடர்ந்தாள் கண்மணி…
“இன்னைக்கு நானே பேசிருப்பேன் ரிஷி… என்னோட பிறந்த நாள்… என்னைப் பற்றி மட்டுமே பேசனும்னு… எனக்கான நாள்னு… எடுத்தவுடனேயே சொல்லிட்டுத்தான் பேசி இருப்பேன்”
ரிஷி சிரித்தபடி… இதை எதிர்பார்த்தேன்… ஆனால் இன்னைக்கு இல்லை… நாளைக்கு… அவன் பிறந்த நாளைக் கணக்கிட்டுச் சொன்னவனிடம்…
“ஓ… பாவம்… என் பிறந்த நாள் ஒரு நாள் முன்னாடி வந்து… எல்லாத்தையும் கெடுத்துருச்சு… இல்லைனா… நான் பேசுறதுக்காகத்தானே வெயிட் பண்ணிட்டு இருந்துருப்பீங்க… உங்க ஈகோவை விட்டுக் கொடுக்காமல்…” பொய்யாகச் சலித்தவளிடம்… அவளை உணர்ந்தனாக…
“கண்மணி…” என்று மட்டும் சொல்லி நிறுத்தியவன்…
“எனக்காக ஒரே ஒரு ப்ராமிஸ்…” பதிலேதும் சொல்லாமல்…. அவனது வாக்குறுதிக்காக காத்திருக்க…
“நீ உன்னை பத்திரமா பார்த்துக்கனும்… எனக்காக… நான் வாழ்றதுக்காக… நான் இருக்கிற வரை… கண் மூட்ற வரை… பார்த்துக்குவியா உன்னை…” ரிஷியின் குரல் உள்ளே போயிருந்தாலும்… அதில் அவ்வளவு அழுத்தம்
“இந்த கதைல எல்லாம் சொல்வாங்கள்ள… ஏழு கடல்… ஏழு மலை தாண்டி… உயிரை ஒளிச்சு வச்சுருப்பாங்கன்னு… அது மாதிரி… என் உயிர் உன்கிட்ட தான் இருக்குன்னு…. இங்க வந்துதான் தெரிஞ்சுகிட்டேன் கண்மணி… இன்னொரு பந்தம் என்னை எமோசனல் வீக் ஆக்க கூடாதுன்னு கவனமா இருந்தேன்… ஆனால் இப்படி மொத்தமா நானே காலி ஆவேன்னு நினைக்கல…. காதலான்னா தெரியல… ஆனால் நீ இல்லாத இடம்… ஆக்சிஜனே இல்லாத பூமிக்கு சமம்… நீ சொல்லலாம்… கண்ணை மூடு… காத்துல தேடுன்னு… உனக்குள்ள தேடுன்னு… அதெல்லாம் பத்தாது எனக்கு….” முற்றிலும் உடைந்திருந்தான் ரிஷி…
உணர்ச்சி வயப்பட்ட ரிஷியை எத்தனையோ முறை பார்த்திருக்கின்றாள்… ஆனால் அது யார் யாருக்காகவோ??… ஆனால் இவளுக்காக… முதன் முதலாக இவளது ரிஷிக்கண்ணாவாக… உடைந்திருந்த ரிஷியை… அவன் குரலைக் கேட்கிறாள் கண்மணி
எப்போதும் அவனை மீட்பவள்… இப்போது மட்டும் விட்டு விடுவாளா என்ன…
“ரிஷி… இப்போ நீங்க கேட்டதை… வரமா கடவுள் கிட்ட கேட்டால் கூட இந்த வரத்தை அவரால கொடுக்க முடியாது… என்கிட்ட கேட்கறீங்க” கண்மணி மழுப்பலாகப் பதில் சொல்ல
“எனக்கு கடவுள் மேல நம்பிக்கை இல்லை… வச்சதும் இல்லை… ஆனால் என் கண்மணி மேல இருக்கு… அவ காப்பாத்துவான்னு… ப்ராமிஸ் பண்ணிக் கொடு…” ரிஷி யாசிப்புக் கலந்த கெஞ்சலோடு கேட்க
“நான் இல்லாத வாழ்க்கைக்கு வேணும்னா உங்களுக்கு ட்ரையின் பண்ணவா.. அது என்னால முடியும்…” சிரித்தபடி அவனை வம்பிழுக்க…
“போன்ல பேசிட்டு இருக்கேன்னு சந்தோசப்பட்டுக்க… இல்லை கன்னம் பழுத்திருக்கும்” ரிஷி கடுப்போடு முடிக்க…
“ஹ்ம்ம்… ஏய் புருசா… பொண்டாட்டிக்கு பர்த்டே விஷ் பண்ணிட்டு… கிஃப்ட் என்ன கொடுக்கலாம்னு தான் யோசிப்பாங்க… இங்க என்னடான்னா… என்கிட்டயே கிஃப்டா ப்ராமிஸ் கேட்கிறாங்க… கன்னம் பழுத்திருக்கும்னு வயலண்ட் ஸ்பீச் வேற…”
”வேற என்ன… ரொமாண்டிக்கா எக்ஸ்பெக்ட் பண்ணுனியா என்ன…”
“சரி ரொமாண்டிக்கா சொல்லனுமா… இல்லை ரொமாண்டிக்க வேணுமா” தயங்காமல் கேட்டவனின் குரலோ… ஹஸ்கியாக கரகரத்து ஒலிக்க
“கல்யாணம் ஆன நாள்ல இருந்து… எல்லாத்துக்குமே நான் ரெடி… எல்லாத்துக்குமேன்றதையும் மீன் பண்ணித்தான் சொல்றேன் ரிஷிக்கண்ணா..… நீங்கதான் ரொமான்ஸ் ‘R’ ஐயும் மிஸ் பண்ணிட்டு கண்மணி ‘K’ வையும் மிஸ் பண்ணிட்டு… வெறுமை… ஆக்ஸிஜன் இல்லாத பூமி அது இதுன்னு வெத்து டைலாக் பேசிட்டு இருக்கீங்க ’மிஸ்…. டர்… ’R K’ ”
“ரொம்ப பேசுறடி…”
“பின்ன எப்படி பேசுவாங்க… போன்ல கூட இந்த ‘K’ க்கு ஒரு ‘k கொடுக்க மிஸ்டர் ’RK’ க்கு பஞ்சம்… அப்படித்தான் பேசுவேன்… பேசக் கூடாதுன்னா… என்ன பண்ணனுமோ… அதைப் பண்ணுங்க“ கண்மணியும் தயங்கவில்லை …
“என் பொண்டாட்டிக்கும் எனக்கும் இடையில காத்துக்கே இடமில்லைனு சொல்லிட்டு இருக்கேன்… இந்த கேட்ஜெட்லாம் இடையில வர விடுவேனா…” ரிஷி சமாளிக்க
“ஹப்பா… என்ன ஒரு சமாளிப்பு…. இந்த சமாளிப்புலாம் எவ்ளோ நாள் வரைக்கும் ரிஷிக்கண்ணா… நேர்ல பார்க்கும் போது உங்க வண்டவாளம் என்ன ஆகப் போகுதுன்னே தெரியலையே…. நான் எக்ஸ்பெக்டேஷன்லாம் வைக்க மாட்டேன் பா… ’நோ எக்ஸ்பெக்டேஷன் நமஹோன்னு’ எப்போதும் போல இருந்துக்கறேன்” கணவன் என்று பாராமல்… தான் அவனின் மனைவி என்றும் நினைக்காமல்… யாரோ யாரையோ ஓட்டுவது போல ரிஷியை, மனசாட்சியே இல்லாமல் கண்மணி வாற ஆரம்பித்து… சிரிக்கவும் செய்ய
“நீ சிரிம்மா… நல்லா சிரி… என்கிட்டதான வரணும்… அன்னைக்கு இருக்கு… அப்போ கவனிச்சுக்கறேன்… அன்னைக்கு என்ன சொன்ன?… நல்ல டாக்டர் கிட்ட போகனுமா நான்… நோட் பண்ணி வச்சுருக்கேன்டி… இன்னைக்கு வண்டவாளம் என்ன ஆகப் போகுதோன்னு கேட்கிற… நான் சும்மாவே எதையும் ஈஸியா எடுத்துக்க மாட்டேன்… பார்த்துக்கலாம் வா… “ மிரட்டல் தொணியில் எதிராளியிடம் பேசுவது போல் தான் பேசினான்… என்ன இந்த எதிராளி தன் மனம் கவர்ந்த எதிராளி என்பது அவனுக்குத் தெரியாதா என்ன???…
“ரிஷி… ரிஷிம்மா… கோபமா… சும்மா… உல்லாலாய்க்கு கண்ணா” கண்மணி அப்போதும் சிரிப்பை நிறுத்தாமல் பேச… வெகு நாட்களுக்குப் பிறகு… பல நீண்ட வருடங்களுக்குப் பிறகு ரிஷி நிம்மதி என்பதை உளமார அனுபவிக்க ஆரம்பித்திருந்தான்…
சற்று முன் குழப்பத்துடன் இருந்தவளா இந்தக் கண்மணி எனும் அளவுக்கு அவளுக்குத் தோன்றி இருந்த குழப்பமான எண்ணங்களில் இருந்து கண்மணியை விடுவித்து... சிரிக்கவும் வைத்துக் கொண்டிருந்தான் அவள் நாயகன்…
---
Comments