அத்தியாயம் 44-2
/*
கண்மணி என் கண்மணி
கண்ணிலே காதல் தீயடி
கண்மணி என் கண்மணி
கண்ணிலே காதல் தீயடி
உன் தீண்டலால் நிலை ஆகினேன்...
உன் பார்வையால் கைதானினேன்
நாடி நரம்பில் நீதானே
தேடி களைத்ததேன் ஜீவனே
நெஞ்சுக்கள் கனக்கிறதே இது என்ன மாயமோ
சொல்லுக்குள் வரிகள் இல்லை தவிக்கின்றேன் நான்
கன்ணுக்குள் என் உயிரே
இதுதான் காதலா
சொல்லடி என் சகியே நிஜம் தானே
துயிலை மறந்த இரவுகள் கனவைத் தொலைத்ததேன்
தரையில் விழுந்த மீனைப் போல துடித்து பிழைக்கிறேன்
மனதை தொலைக்கும் நினைவுகள் போதும் போதுமே
நெஞ்சம் எறிக்கும் தனிமையும் என்னைச் சிதைப்பதேன்*/
அவள் எழுவதற்கு முன்னரே ரிஷி எழுந்து போய்விட்டான்…
தெரிந்ததும் சட்டென்று கண்களில் ஈரம் படர ஆரம்பித்தது தான்… ரிதன்யா இருப்பதை உணர்ந்து.. சட்டென்று… தன்னைச் சமாளித்து ரிதன்யா அறியாமல் குனிந்து கண்களின் ஓரத்தைத் துடைத்தவள்… எழ முயற்சிக்க… சுத்தமாக எழ முடியவில்லை… இருந்தும் தானே எழ முயற்சிக்க
ஏழு மாத கர்ப்பிணியான அவளின் நிலை உணர்ந்து ரிதன்யாதான் சுதாரித்தவளாக…
“பார்த்து அண்ணி” என்று கண்மணியின் கரம் பிடித்து எழுந்து அமர வைத்தாள்…
“அண்ணா கீழ இருக்காங்க…” கண்மணியின் தேடல் உணர்ந்து ரிதன்யாவாகவே சொல்ல… கண்மணி சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… அதுவோ மணி 5 எனக் காட்டிக் கொண்டிருந்தது
ரிதன்யாவிடம் அதன் பிறகு ஏதும் பேசவில்லை கண்மணி…. ஓய்வறைக்குச் செல்லத் தோன்ற… எழுந்தவளுக்கு சோதனையாக கர்ப்பிணிப் பெண்களுக்கு காலையில் ஏற்படும் தசைப்பிடிப்பு… இப்போதெல்லாம் அடிக்கடி ஏற்படுவதுதான்… இன்றும் அது வந்திருக்க
காலை எடுத்து வைக்க முடியாமல் வலியில் முகத்தை சுழித்தவளைப் பார்த்த ரிதன்யாதான் பதறி விட்டாள்…
“அண்ணி… என்னாச்சு… என்ன பண்ணுது… அம்மாவைக் கூப்பிடட்டுமா” என்று படபடத்தவளிடம்
“ரிதன்யா…ஒண்ணுமில்ல… ஜஸ்ட் லெக் க்ராம்ப்ஸ் தான்…” என்ற படியே மீண்டும் காலை கீழே தரையில் ஊன்ற முயற்சிக்க காலை அசைக்கவே முடியவில்லை.. ஒரே புறம் படுத்து விட்டாளோ… இன்று வழக்கத்துக்கும் மாறாக அவளின் வலி அதிகமாகவே இருக்க…
எவ்வளவோ முயன்றும் வலி தாங்க முடியவில்லை… அதில் அவளையுமறியாமல்…
“ரிதன்யா” என்று அழைத்தவளாக பல்லைக் கடித்து ரிதன்யாவின் கைகளைப் இறுகப் பற்றிக் கொள்ள…
தன் அண்ணி தன் கைகளைப் பிடித்த விதத்திலேயே அவள் நிலைமை உணர்ந்த ரிதன்யாவுக்கோ… என்ன செய்வதென்றே தெரியவில்லை… பதட்டத்தில் கண்மணியின் அருகில் அமர்ந்தவள்…
“சொல்லுங்க அண்ணி… இருங்க அம்மாவைக் கூப்டறேன்… உங்க முகமே சரி இல்லை… டெய்லி இப்படித்தான் கஷ்டப்படறீங்களா அண்ணி” அவள் தழுதழுத்த போதே
ரிதன்யாவின் பய முகத்தை கண்ட கண்மணி … வலி இருந்தும்… பெரு மூச்சு விட்டு… தனக்குள் சமாளித்துக் கொண்டவள்.. முகத்தை இயல்பாக்கியபடி…
“வார்ம் வாட்டர் மட்டும் எடுத்துட்டு வாங்க… யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்” கண்மணி சொல்லி முடிக்கவில்லை…. ரிதன்யா அவள் அன்னைக்கு அலைபேசியில் அழைப்பும் விடுத்திருந்தாள்… விசயத்தையும் சொல்லியும் முடித்திருந்தாள்
---
”ம்மா… இந்த லிஸ்ட்லாம் ஒகே தானே… என் மாமாக்கு ஒண்ணும் தெரியாது... அப்புறம் அவரை ஏதாவது சொன்னீங்க… அவ்ளோதான் பார்த்துக்கங்க” என்று ரிஷி தன் அன்னையுடன் செல்லமாக வம்பளந்து கொண்டிருக்க… அவன் அருகில் விக்ரம் நின்றிருந்தான் …
நேற்றைய இரவை உறக்கத்துக்கு தாரை வார்க்காமல்… தன்னவளுக்கு சமர்ப்பித்து… அலைபேசி வாயிலாக அவளோடு பேசிக் கொண்டிருந்தவன்… அடுத்து அதிகாலையிலேயே இங்கும் வந்து ஆஜாராகி இருந்தான்….
நண்பன் வீட்டு விசேஷம்… அவனது மனைவிக்கு வளைகாப்பு… அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளையாக பொறுப்பை இப்போதே ஏற்றிருந்தான் விக்ரம்…
“ரிஷிக்கண்ணா… உங்க மாமனாரை நாங்க என்ன சொல்லப் போகிறோம்.. அவர் பொண்ணுக்கு அப்பாவா வந்து நின்றால் போதும்… நமக்குத்தான் பிரச்சனையே… மணியோட ஃபங்கஷனை ஒழுங்கா நடத்தனும்… அவங்க தாத்தா பாட்டி… மாப்பிள்ளையோட வீட்ல… யாரும் நம்மள ஏதும் குறை சொல்லிடக் கூடாது… நாமதான் எங்கேயாவது சொதப்பிருவோமான்னு பயமா இருக்கு… கல்யாணத்தப்போ எனக்கு ஒண்ணும் முடியலை… இப்போ என் மருமகளுக்கு நான்தான் எல்லாத்தையும் குறை இல்லாமல் பார்த்துக்கனும்” என்ற இலட்சுமியை
”ம்மா… நார்மலா இருங்க… ரிலாக்ஸ் கூல்… நீங்க இப்படிப் பதட்டப்பட்டா எப்படி… இப்போதான் சரியாகி இருக்கீங்க… எல்லாத்தையும் இழுத்துப் போட்டுக்காதீங்க… நான் பார்த்துக்கறேன்” என்றவனைப் பார்த்த விக்ரம்
“கண்மணி எழுந்து என்ன சொல்வாளோன்னு ஒரு பதட்டம் கூட இல்லையாடா உனக்கு… அவகிட்ட சொல்லாம இந்த ஏற்பாடெல்லாம் பண்ணனுமா?“ என்ற போதே…
“சொல்லிருக்கலாம்தான்… ஆனால் நாம சொன்னா அவ அதை வேண்டாம்னு சொல்லிட்டு… அது ஏன் வேண்டாம்னு சொன்னதுக்கு காரணமா இன்னொரு பெரிய லெக்சர் கொடுப்பா… அவ ஒண்ணு சொல்லிட்டா இங்க யாரும் அடுத்து அதை மறுத்து பேசக்கூட நினைக்க மாட்டாங்க… அவளுக்கு பிடிக்கலை விட்ரு… அவ்ளோதான்… இவங்க எல்லோருடைய வார்த்தையும் அதுவாகவேத்தான் இருக்கும்…”
“என் கூட வாழ மாட்டேன்னு அவ சொன்னப்போ இவங்க எல்லோரும் பேசினாங்கதான்… ஆனால் என்னோடு வர வைக்க முடிந்ததா இல்லை இவங்க யார் வார்த்தையாவது ஒரு மரியாதைக்காகக் கூட கேட்டாளா அவ…. அவகிட்டலாம் சொல்லி… சம்மதம் வாங்கி… சான்சே இல்லை… அடமண்ட்…” என்றவன்
”இப்படி அதிரடியா ஏதாவது பண்ணினால் தான் கொஞ்சம் அடங்குவா… “ ரிஷி முடிக்க
“அவளைப் பற்றியும் தெரியும்… அவ பிடிவாதமும் உனக்குத் தெரியும்… இவ்ளோ சொல்ற நீ…. இப்போ உனக்கு வளைகாப்புனு போய் நின்னால்… அவகிட்ட சொல்லாமல் இதெல்லாம் பண்றோம்னு கோபத்தில் கிளம்பிப் போய்ட்டான்னா என்னடா பண்ணுவ…” விக்ரம் கேட்க
“எப்படி முன்னாலேயே சொன்னால் என் பேச்சை கேட்கமாட்டான்னு தெரியுமோ… அது மாதிரியே இப்போ சொல்லும் போது போக மாட்டான்னு தெரியும்…”
“ஒருவேளை போய்ட்டான்னா என்னடா பண்ணுவ... கால்ல விழுந்து சம்மதிக்க வச்சுருவியாடா மச்சான்… “ என்று விக்ரம் கிண்டல் செய்ய.. அவனைப் பார்த்து இதழ் சுழித்த ரிஷி
“உள்ளங்கைல வச்சு என்னைத் தாங்குனவடா அவ… அவ என்னை கால்ல விழ வைக்கப் போறாளா..” நண்பனின் முகம் பார்க்காமல் வேறுபுறம் திரும்ப… திடீரென்று ஒரே பரபரப்பு… அவர்கள் இருந்த வரவேற்பறையின் இன்னொருபுறம்…
தன் அன்னை, மகிளாவின் தாய் மற்றும் அங்கிருந்த பெண்கள் கூட்டம் பரபரப்பாக இருந்ததைப் பார்த்தவன்… வேகமாக அவர்கள் அருகில் செல்ல…
“ஒண்ணும் இல்லை… நீ டென்சனாகி… அவளையும் பயப்பட வச்சுராத” அலைபேசியில் ரிதன்யாவைத் திட்டியபடியே வைத்தவர்… சமையலறைக்கு சென்று அங்கிருந்த வேலையாட்களிடம்… பாலைக் காய்ச்சி எடுத்து வரச் சொல்ல… ரிஷியும் இலட்சுமியின் பின்னாலேயே வந்தான்….
“என்னங்கம்மா… என்ன ஆச்சு” ரிஷி கேட்ட போதே…
இலட்சுமி ரிதன்யா பேசியவுடன்… அவருக்குமே பதட்டம் வந்திருக்க… அவரின் பதட்டம் அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கும் கடத்தபட்டது… அதன் காரணமாகவே அங்கு சிறு சலசலப்பும் ஏற்பட்டிருந்தது…
ஆனால் மகன் அருகில் வர… தன் பதட்டத்தை மகன் உணராமல் சட்டென்று மறைத்தவர்… கண்மணியின் தசைப்பிடிப்பைச் சாதரணமாகச் சொல்லியபடியே
“எல்லாருக்கும் வர்றதுதான்… கொஞ்சம் வலி இருக்கும்… எழுந்து நடந்தால் சரி ஆகிரும்… பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல… இந்த ரிது இருக்காளே… அத்தனை பேரையும் பயமுறுத்தி வச்சுட்டா” என்று ஆரம்பித்தவர்…
விக்கி அருகே நிற்க… மகளைப் பற்றி அதற்கு மேல் பேசாமல்… நிறுத்தி விட அதே நேரம் மகனும் முகம் வாடி இருந்தது
“ஒண்ணும் இல்லை ரிஷிக்கண்ணா…” என்ற போதே… அவனோ தான் இயல்பாகத்தான் இருக்கின்றேன் என்பதைக் காட்ட பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்க…
”இன்னைக்கு விடுங்கம்மா… தினம் இப்படி எல்லாம் அனுபவிச்சுட்டு இருப்பாளே… நாமல்லாம் இருந்தும் நாம தேவையில்லன்னு அவ இப்படி பண்ணிட்டு இருக்காளே… ” என்று பல்லைக் கடித்தவனுக்கு வந்த கோபத்தின் அளவோ சற்று முன் அவன் காட்டிய கழிவிரக்கத்தின் அளவைக் காட்டிலும் கூடுதலாகத்தான் இருந்தது…
“நீ அங்க வராதா… நீ இப்படி மூஞ்சியக் காட்டினா அவளுக்கு இன்னும் கஷ்டம் நாங்க பார்த்துக்கிறோம்..” சொன்னவர்… அறைக்கு கண்மணியைப் பார்க்கச் சென்று விட்டார்…
இலட்சுமி அறைக்குச் சென்ற போதே… கண்மணியும் இயல்பு நிலைக்குத் திரும்பி இருக்க… தன் அத்தையைப் பார்த்து புன்னகைத்தவள்
“ஒண்ணும் இல்ல அத்தை… மார்னிங் எப்போதும் வர்றதுதான்…இப்போ சரி ஆகிருச்சு… ரிதன்யாதான் கொஞ்சம் பயந்துட்டாங்க… ” என்ற போதே…
ரிதன்யாவைப் பார்த்து முறைத்தபடியே… கண்மணியின் அருகே வந்தவர்… மருமகளின் களைத்திருந்த முகத்தைப் பார்த்து… வேறு ஏதாவது வலி இருக்கிறதா… என்று விசாரிக்க ஆரம்பித்திருந்தார்…
---
என்னதான் இலட்சுமி ரிஷியிடம் பதட்டத்தைக் காட்டாமல் மறைத்திருந்தாலும்…. கண்மணி என்ன நிலைமையில் இருக்கின்றாளோ என்ற கவலையில் ரிஷிக்கோ கீழே இருப்புக் கொள்ளவே முடியவில்லை… அடுத்த சில நிமிடங்களில் விக்கியை அழைத்துக் கொண்டு அவனும் அறைக்குள் வந்திருந்தான்
ஆனால் அவர்கள் நினைத்தபடி ஏதும் இல்லாமல் கண்மணி சாதரணமாக இருக்க… ரிஷியும் இயல்பாகினான்
விக்கி ரிதன்யாவின் அருகே செல்ல… உள்ளே வந்த ரிஷியோ ஏதுமே கண்டு கொள்ளாமல்… கண்மணியின் அருகில் கூட வராமல்… தன் உடைகள் வைத்திருந்த அலமாரியை நோக்கிச் சென்று விட்டான்…
கண்மணியும் இப்போது… ஓய்வறைக்குச் சென்றிருந்தாள்…
“என்னடி பண்ணின… அத்தனை பேரையும் கொஞ்ச நேரத்தில் டென்சன் ஆக்கிட்ட“ விக்கி ரிதன்யாவிடம்… என்ன ஆனதென்று விசாரித்துக் கொண்டிருந்தான்
“ரிதன்யா, கண்மணி குளிக்கிற வரை இங்கேயே இருந்து அவளை ரெடி பண்ணி அழைச்சுட்டு வா… தனியா விட்றாதா… ரித்விகாவை எழுப்பி அனுப்பி வைக்கிறேன்… அதுக்கப்புறம் நீ வா… அப்புறம் மகிளாவுக்கு போன் பண்ணி சீக்கிரம் வரச் சொல்லு” என்று அடுத்தடுத்து ரிதன்யாவுக்கு வேலைகளை அடுக்கியவர் அங்கிருந்து கிளம்பியும் விட…
ரிதன்யா விக்கியைப் பார்க்க… விக்கிக்கோ ரிதன்யா நின்றிருந்த நிலைமை பார்த்து…. அவளின் முகத்தைப் பார்த்து சிரிப்புதான் வந்தது… இருந்தும் அடக்கிக் கொண்டு…
“ரிதும்மா… இதை விட ரூல்ஸ் அண்ட் ஆர்டலாம்… நீ புகுந்த வீட்ல இருக்கும்… அத்தை இப்போவே ட்ரெயினிங் கொடுக்கிறாங்க போல…” என்று அவளைச் சீண்ட ஆரம்பிக்க… ஏற்கனவே கோபத்தில் இருந்தவள்… அவன் கிண்டல் பொறுக்காமல் அவன் கைகளைக் கோபத்தில் கிள்ள…
“ஆ… ராட்சசி” என்று விக்கி கத்தியிருந்தான் இப்போது…
“டேய்... நானும் இங்கதாண்டா இருக்கேன்… ஞாபகம் வச்சுக்கங்கடா…” ரிஷி இவர்கள் புறம் திரும்பாமல் அலமாரிக்குள் எதையோ தேடியபடியே சொல்ல…
“நீ அந்த அலமாரிக்குள்ளேயே குடும்பம் நடத்துடா…. இப்போதைக்கு அதுதான் உன் இடம்… எத்தனை நாள் என்னைத் தூங்க விடாம என்னைப் படுத்திருக்க… அனுபவி இப்போ… ” அலட்டலே இல்லாமல் சொன்ன விக்ரம்… ரிதன்யாவிடம் திரும்பி…
“இவன் லவ் டைலாக் பேசுறதுக்கு நான் காதைப் பொத்திட்டு படுக்கனும்னு சொல்லுவான்… இப்போ என் டைம்டா…“ என்ற போதே… கண்மணி குளியலறையில் இருந்து வெளியே வர… ரிதன்யா இப்போது விக்கியைப் பார்த்து முறைக்க… விக்கியும் சட்டென்று நிறுத்தினான்…
கண்மணி ஏதும் கேட்கவில்லை தான்… ஆனால் அப்போதுதான் அவன் பேசிய விசயத்தின் சாராம்சமே அவனுக்கு விளங்க… தன்னைத்தானே தனக்குள் அவன் திட்டிக்கொண்டு இருக்கும் போதே…
ரிதன்யாவின் முன் வந்து நின்றிருந்தாள் கண்மணி… வார்த்தைகள் ரிதன்யாவிடம் இருந்தாலும்… பார்வை ரிஷியிடம் மட்டுமே….
“ரிதன்யா… நான் இப்போதே வீட்டுக்குப் போகனும்… என்கிட்ட வேற ட்ரெஸ் கூட இல்லை… “ என்ற போதே… அவள் அருகே அவளின் திருமணப் புடவை அடங்கிய கவரை வந்து வைத்தான் ரிஷி…
புடவையை வைத்த ரிஷியை நோக்கி இவளோ திராவகப் பார்வை வீச…
“இதெல்லாம் வேற யார்கிட்டயாவது காட்டு… ரிதன்யாவும் விக்கியும் இருக்காங்கங்கன்னு… பார்க்கிறேன்... இல்லைனா இந்த ஆசிட் லுக்கை எல்லாம் கூலா மாத்திட்டு போயிட்டே இருப்பேன்… இன்னைக்கு நான் சொல்றதை மட்டும் தான்... இல்லை மத்தவங்க சொல்றதை மட்டும் தான் நீ கேட்கணும்… எத்தனை நாள் தான் நீ சொல்லி நாங்கள்ளாம் கேட்கிறது… ஒருநாள் நீ கேட்டுப் பாரு… கேட்டுப் பாரு இல்லை… கேட்கனும்” என்றபோதே அவள் முறைப்பின் அளவு அதிகமாகி இருக்க
கோபத்தில் சிவந்திருந்த அவளின் மூக்கு நுனியைப் பார்த்தவன்.... கண்மணிக்கு மட்டுமே கேட்கும்படி அடிக் குரலில்...
“இது ஏன் சிவக்குது அதுக்கான காரணமும் நான் சொல்லி இருக்கேன்... இப்போலாம் ரொம்ப சிவக்குதே... என்னவா இருக்கும்... என்கிட்ட பேசாத ஏக்கமா கண்மணி” என்றவனின் விரல் அவர்களைத் தவிர இன்னும் இரண்டும் பேர் அந்த அறையில் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் மறந்து அவனையுமறியாமல் அவளை நோக்கி நீள... அதற்கு முன் கண்மணி சுதாரித்து சட்டென்று முகத்தை திருப்பி இருந்தாள் ...
ரிஷியும் அப்போதுதான் இருக்குமிடம் உணர்ந்தவனாக… தன் தலையைக் கோதிக் கொண்டவன்…
“அந்த கவர்ல… நான் கொடுத்த மூக்குத்தி இருக்குது.. அதையும் போடனும் நீ… இன்னைக்கு மிஸஸ் ரிஷிகேஷ்… அந்த அடையாளம் மட்டும் தான் உன்கிட்ட இருக்கனும்… வீட்டுக்கு போய்ட்டு தூக்கி வீசுறதையெல்லாம் வீசு… வந்து பொறுக்கிக்கிறேன்“ என்றவன்… அவள் பேச ஆரம்பிக்கும் முன்னதாகவே அவளை விட்டு நகன்றவன்…. என்ன நினைத்தானோ மீண்டும் அவள் புறம் வந்தவன்
“அப்புறம் நீ ரைட்டரா இருக்கலாம்… உன் கேரக்டர்ஸை எல்லாம் விரல் நுனில வைத்து ஆட்டுவிக்கலாம்… ஆனால் உன் ஸ்க்ரீன் ப்ளே… ட்விஸ்ட் எல்லாம் உன் ஸ்டோரி அதுல வருகிற இமாஜினரி கேரக்டர்ஸோட நிறுத்திக்க… என்கிட்ட வச்சுக்க நினைக்காதீங்க மேடம்… ” என்றவனை
கண்மணி இப்போது நக்கலாகப் பார்க்க… அவள் பார்த்த பார்வையின் நக்கல் புரிந்தவனாக..
“ஃபர்ஸ்ட் டைம் ப்ரடிக்ட் பண்ண முடியலதான்… ஏமாந்துட்டேன்… ஆனால் இப்போ பழகிக்கிட்டேன்… சோ இனி ஏமாற மாட்டேன்…” அதே நக்கலோடு சொல்லி முடித்தவன்… திடீரென எதையோ நினைத்து… முகம் கடுத்தவனாக
“அவ்ளோ சொல்லியும் இன்னமும் நைட் இரண்டு மணிக்கும் மேலா எழுதிட்டு இருக்க போல… மாமா நேத்துதான் சொன்னாரு… இன்னைக்கு ஃபங்ஷன் முடியட்டும்… அதுக்கு தனி பஞ்சாயத்து இருக்குடி உனக்கு…” என்றவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல்
“டேய் வாடா… போகலாம் “ ரிதன்யாவோடு நின்று கொண்டிருந்த விக்கியை அழைத்தவன்… அடுத்த நொடியே விக்கியோடு அவன் அறையை விட்டு வெளியே வந்திருக்க
“ஏன்டா ரிஷி… இப்படி பேசுற… கொஞ்சம் எடுத்துச் சொன்னா கேட்பாதானே… எனக்கு என்னமோ எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு அவ கிளம்பிடுவாளோன்னு இருக்கு… நீயும் அவகிட்ட பொறுமையா பேசாமல் இப்படி பேசிட்டு வர்ற… நீயே அவளை பிரச்சனை பண்ண வச்சுருவ போல” என்று விக்கி கடுப்பாகக் கேட்க…
“பண்ணமாட்டா வா… ” என்று முன்னால் போனவன்… தன் நண்பன் தன்னை நம்பாத பார்வை விதம் உணர்ந்து
”அப்டியே பண்ண நினைத்தாலும் ஃபங்க்ஷன் முடிச்சுட்டுத்தான் பண்ணுவா… அதைத்தான் நான் ஃபேஸ் பண்ணனும்... ஆனால் அதைச் சாக்கா வச்சு… இன்னைக்கு அவகூடஃபுல் டேவும் ஸ்பெண்ட் பண்ணிருவேன்… ” ரிஷி சொல்ல
தன்னை விழி விரித்துப் பார்த்த நண்பனைப் பார்த்து…
“சீக்கிரம் மேரேஜ் பண்ணு… பேச்சுலர் லைஃப விட கப்புள்ஸ் லைஃப் நல்லாத்தான் இருக்கும்… ஃபர்ஸ்ட் கொஞ்சம் கன்ஃபூயூசன்லயே இருக்கிற மாதிரிதான் இருக்கும்… அப்புறம் அதுவே பழகி செட் ஆகிரும்..” ரிஷி கண் சிமிட்டிச் சிரிக்க…
“இதுல உள்குத்து இருக்கிற மாதிரியே இருக்கேடா… “ விக்கி முகத்தை வைத்துக் கேட்ட விதத்திலேயே ரிஷிக்கு சிரிப்பு வர…
“அப்டியா தெரியுது… உள்குத்தா அப்படிலாம் இல்லையே எல்லாம் நேரடியாவே வரும்… என்ன அடி நான் வாங்குனேன்… வாங்கிட்டு இருக்கேன்… பார்த்ததானே… அதெல்லாம் வாங்கிட்டு உன்கிட்ட பல்லைக் காட்டிட்டு நிற்கிறேன்ல… அதைப் பார்த்தே தெரிஞ்சுருக்கனுமே நண்பா…” ரிஷி நண்பனைக் கலாய்த்த போதே… நண்பனின் முகம் போன விதத்தைப் பார்த்தவனாக
“சும்மா சொன்னேண்டா… எங்க ரிதன்யா சொக்கத் தங்கம்டா… ”
“அப்போ கண்மணி இல்லைன்ற… அப்படித்தானே… ” விக்கி நக்கலாகக் கேட்க… ரிஷி பயத்தில் ஒரு முறை திரும்பிப் பார்த்திருந்தான் தான்…எங்கு கண்மணி ஏதும் எதேச்சையாக வந்துவிடுவாளோ என்ற விதத்தில்
“டேய் நீ என்னைலருந்துடா இப்படி ஆன…” ரிஷி நண்பனிடம் கேட்க
“ஏன் நீ மட்டும் தான் மாறனுமா…. நாங்கள்ளாம் மாறக் கூடாதா” என்ற விக்கியின் வார்த்தைகளில் ரிஷியின் முகத்தில் சிறு வேதனை வர… இருந்துக் நண்பனிடம் காட்டடாமல் சிரித்து வைத்தவன்… விக்கியும் அதில் சேர்ந்து கொள்ள… மற்றதெல்லாம் விட்டுவிட்டு… அன்றைய விழாவுக்கான ஏற்பாடுகளை உற்சாகமாக கவனிக்க ஆரம்பித்திருந்தனர் நண்பர்கள் இருவருமாக சேர்ந்து…
----
”நான் வீட்டுக்கு போகனும் ரிதன்யா… அப்பா எங்க…. போனையும் எடுக்க மாட்டேன்கிறார்… அர்ஜூன் வேற கால் பண்ணிட்டே இருக்கார்…” என்று ரிதன்யாவிடம் கண்மணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே…
மீண்டும் அங்கு பிரசன்னம் ஆகி இருந்தான் ரிஷி… ரிதன்யாவிடம் ஏதோ கேட்கும் பொருட்டு…
அவனும் விக்கியும் போய் பத்து நிமிடம் கூட ஆகி இருக்க வில்லை… மீண்டும் அங்கு வந்து நின்றிருந்தவனை என்ன சொல்வது???
உண்மையிலேயே ரிதன்யாவிடம் பேச வந்தானா??… இல்லை கண்மணி என்ன சொல்கிறாள்… என்ன செய்கிறாள் என்று பார்க்க வந்தானா???… அது அவனுக்கே வெளிச்சம்…
ஆக மொத்தம் அவனால் கீழே கண்மணியை விட்டு இருக்க முடியவில்லை … மீண்டும் தன்னறைக்கு வந்திருந்தான்… ஏதோ ஒரு காரணத்தை சாக்காகக் வைத்துக் கொண்டு
வந்த போதே கண்மணி பேசியதும் அவன் காதில் விழாமல் இல்லை…
ரிதன்யா இன்னும் விசயத்தைச் சொல்லவில்லை என்பது கண்மணி பேசியதிலும்… ரிதன்யா கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருந்த விதத்திலும் உணர்ந்து கொண்டான்
ரிதன்யாவை நம்பினால் வேலைக்காகாது என்பதை அறிந்து கொண்டவனாக… தானே களத்தில் இறங்கினான்… தன் கையே தனக்குதவி என்பது போல… அதாவது மனைவியிடம் தானே பேச ஆரம்பித்தான்
“போகலாம்… இப்போ என்ன அவசரம்… இங்க யாரும் நீ இருக்கனும்னு வச்சுத் தாங்கல… இன்னைக்கு உனக்கு வளைகாப்பு…. சீமந்தம் முடிச்சுட்டு உன் பிறந்த வீட்டுக்கு எப்படி போகனுமோ அப்படித்தான் போகப் போற…… சோ ஃபங்ஷன் முடிச்சுட்டு அங்கதானே போகப் போகிற…” கண்மணியிடம் சட்டென்று சொல்லி இருக்க… அது கூட தன்மையான முறையில் இல்லைதான்
“எதுக்கெடுத்தாலும் முறைக்காத கண்மணி… நான் ஒண்ணும் இங்க என் கூட இருன்னு உன்னைச் சொல்லலயே… நீ வேண்டாம்னு சொன்ன… நானும் விலகி வந்துட்டேன்… இதெல்லாம் சடங்கு சாங்கியம்னு பெரியவங்க ஆசைப்படறது… நீயோ நானோ இங்க ஏதும் சொல்ல முடியாது… எங்க அம்மா ஆசைப்படறாங்க… அவங்க மருமகளுக்கு செய்யனும்னு…” என்ற போதே..
”அண்ணா… நான் பார்த்துக்கறேன்… நான் சொல்றேன்… நீ இப்படி பேசுனா… அவங்களுக்கு இன்னமும் கோபம் தான் ஆகும்… ஏன் இப்படி பண்றீங்க” சொன்ன ரிதன்யாவை கண்மணி திரும்பிப் பார்க்க…
அவளோ பார்வையாலேயே இறைஞ்சுதலாக கண்மணியிடம் கெஞ்சிக் கொண்டிருக்க… கண்மணி… என்ன நினைத்தாளோ… ரிதன்யாவின் கையில் இருந்த மாற்றுடைகளை வாங்கிக் கொண்டு…. குளியலறைக்குச் சென்றிருந்தாள்….
தனக்கு வளைகாப்பு என்று சற்று முன் தான் தெரிந்த போதும்… கோபம் இருந்த போதும்… கண்மணி… வேறு எந்த செய்கையிலும் அதைக் காட்டவில்லை… குளியலறைக்குச் செல்லும் போது கூட… நிதானமாக கவனமாக அவள் நடந்து சென்றது கூட ரிதன்யாவுக்கு கண்மணியை ஆச்சரியமாகத்தான் பார்க்க வைத்தது…
திரும்பி தன் அண்ணனைப் பார்க்க… அவனோ… அதைவிட கட்டிலில் அமர்ந்தபடி… கணினியில் மூழ்கி இருந்தான்
கோபப்பட்டு உணர்ச்சி வசப்பட்டால் கூட ஏதாவது செய்யலாம்… ஆனால் இருவருமே அவரவர் வழியில் நிதானமாக இருந்ததே இங்கு இருவருக்கும் இடையே பிரச்சனையைப் பற்றி பேச முடியவில்லை…
ஒரு மாதிரியான அமைதியான சூழ்நிலை அந்த அறையில் நிலவ ஆரம்பித்திருந்தது
இங்கு ரிஷி கணினியில் மூழ்கி இருந்தாலும்… அவன் நினைவுகள் அங்கு இல்லை…
சற்று தள்ளி அமர்ந்திருந்த ரிதன்யா… கனவு காணும் புதுமணப்பெண்ணாக இல்லாமல் இவர்களைப் பற்றி நினைத்தபடி கண்மணிக்காக காத்திருக்க… தலை குளித்து முடித்து இலகுவான உடை அணிந்து கண்மணியும் வெளியே வந்திருந்தாள்….
இப்போது ரிஷி அவளுக்காகக் காத்திருந்தவன் போல… எழுந்து வந்தவன்… அருகில் இருந்த பொருளையும் எடுத்துக் கொண்டான்… கண்மணியின் அருகிலும் வந்திருந்தான்…
புதிதாக மலர்ந்திருந்த ரோஜா பனியில் குளித்திருந்தார் போன்று.. வந்து நின்றவளின் அருகில்… அவள் அழகில்… அவளின் வாசத்தில் நிலைதடுமாறினான் தான்… கைகள் பரபரத்தன தான்… கவனமாக ஒரு கையை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டவன்… மற்றொரு கையோ வைத்திருந்த அந்த புத்தம் புதிய புடவை அடங்கிய பெட்டியை இறுகப் பற்றிக் கொள்ள… ரிஷி எப்படி எல்லாமோ தன்னைச் சமாளித்து அவளை நேருக்கு நேராகப் பார்க்க.. அந்தோ பரிதாபம் அவளின் கழுத்தருகில் வழிந்து கொண்டிருந்த நீர்த்துளிகள்..
அவனின் அத்தனை சுயக்கட்டுப்பாட்டையும் ஒரே அடியில் அடித்து தூள் தூளாக அடித்து தள்ளியிருந்தன…
அது மட்டுமல்லாமல் அந்த நீர்த்துளிகள் அவனின் கையறு நிலையைப் பார்த்து எள்ளி நகைத்து எக்களிப்பது போன்ற உணர்வு வேறு…
எவ்வளவுதான் முயன்றாலும்… முடியவில்லை அவனால்… கேவலம் அந்த நீர்த்துளிகளோடு தனக்குள் உரிமை கலந்த பொறாமைப் போர் நிகழ்த்திக் கொண்டிருந்தான் ரிஷி….
அவன் மட்டுமே அவளின் உரிமை… அது போல அவளை ஆட்சி செய்பவன் என்றால் அது அவனாக மட்டுமே இருக்க வேண்டும்… அவன் அவளுக்காக அவள் அவனுக்காக… வேறு யாருக்கும் அங்கு இடமில்லை… நினைத்த மாத்திரத்திலேயே சட்டென்று அவள் கழுத்தில் வழிந்த நீரைத் துடைத்து அதன் பாதையைத் தடுத்தும் விட்டிருந்தவனை கண்மணியும் அவனைத் தடுக்கவில்லை…
ஆனால் கோபமாக இருக்கின்றாள்… அவள் நின்ற விதமே உணர்த்த… அதெல்லாம் கண்டுகொள்ளாமல் அவள் அருகே இன்னும் நெருங்கியவன்… அவள் கைகளில் தான் வைத்திருந்த புடவைப் பெட்டியை நீட்டியவன்…
“இது உனக்காக வளைகாப்புக்காக வாங்கினது… ஆனால் இது புதுசுன்னு இன்னைக்கு கட்டக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க…“ என்று சொன்னவன்… அதை அவளது கைகளில் கொடுக்க… கண்மணியோ கை நீட்ட வில்லை…
அவனும் அவளிடம் அதற்கு கெஞ்சிக் கொண்டிருக்கவில்லை… குனிந்து கட்டிலில் வைத்தவன்…
”என்னைத்தான் விட்டுட்ட… இதையாவது எடுத்துட்டு போவேன்னு நினைக்கிறேன்… ” என்றவன்… வேகமாக கீழே இறங்கியும் போயிருக்க… அந்தப் புடவையைப் பார்த்தபடியே எத்தனை நிமிடங்கள் இருந்தாளோ… ரிதன்யா அழைத்த போதுதான் மீண்டும் இயல்புக்கு வந்தாள். …
“அண்ணி ரெடி ஆகலாமா… புடவை மாத்திக்கிறீங்களா” கையில் அவளது திருமணப்புடவையைப் பிரித்து வைத்து நீட்டிய ரிதன்யாவிடம்…
“இது வேண்டாம்… நான் அந்தப் புடவையை கட்டிக்கிறேன்…” என்று தன் திருமணப் புடவையை மறுத்தவளாக… கணவன் வைத்துப் போன புடவையை எடுக்க…
”அண்ணி… அது புதுசுன்னு” என்று இழுத்தவளைக் கண்டு கொள்ளாமல் … அதை வெளியே எடுத்துப் பார்க்க… அந்தப் புடவை தாமரை இதழ் வண்ணத்தோடு வெண்மையும் கலந்த பட்டுப்புடவை….”
”என்னோட இஷ்ட தெய்வம் சரஸ்வதி… அவங்க வெண் தாமரை மேல அமர்ந்து இருக்கிற வீணை வாசிக்கிறதில் இருக்கிற கம்பீரம்… அப்புறம் அந்த லைட் ரோஸ் கலந்த வெண்பட்டு புடவை…“ ரிஷியிடம் சிலாகித்து சொல்லி இருந்த வார்த்தைகள்…
அந்த புடவையை ஆசையாய் தொட்டுப் பார்த்தபடி இருந்தவளையே ரிதன்யா பார்த்துக் கொண்டிருந்தவள்… கண்மணிக்கு தன் அண்ணன் கொடுத்த புடவை பிடித்திருக்கிறதென்று புரிந்தவளாக… அதற்கு மேல் மறுத்துப் பேசாமல் இருக்க…
கண்மணியும் இப்போது அந்தப் புடவையை மாற்ற ஆரம்பித்திருக்க… கதவு தட்டப்படும் ஓசை கேட்டது…
’இப்போது யார்… ஒரு வேளை மீண்டும் தன் அண்ணன் தானா’ என ரிதன்யா தனக்குள் கேட்டபடியே
“ஹேய் அண்ணி… சூப்பர்… செம்மையா இருக்கீங்க…” ரித்விகாவின் உற்சாகக் குரல் அந்த அறை எங்கும் எதிரொலிக்க…. அவளின் சந்தோசம் …. உற்சாகம்… தானாகவே மற்ற இருவரின் முகத்திலும் புன்னகையைக் கொண்டு வந்திருக்க…
அதே நேரம் கண்மணியும் தன் புடவை மடிப்பைக் குனிந்து சரி செய்யப் போக…
“நான் தான்…. நான் தான்” என்று ரித்விகா வேகமாக ஓடி வந்து கண்மணியின் காலடியில் முழங்காலிட்டு அமர்ந்து… அதை சரி செய்ய ஆரம்பித்து…. அழகாக அதை முடித்தும் விட்டிருந்தாள்…
அடுத்த அரை மணி நேரத்தில் கண்மணி… அந்த வெண்பட்டில்… உறுத்தாத மெல்லிய நகைகளோடு சாட்சாத் சரஸ்வதி தேவதையாகவே காட்சி அளித்திருக்க… அவளின் இருபுறத்திலுமோ ரிதன்யாவும் ரித்விகாவும்…. கண்ணாடி வழியே மூவருமாகத் தங்களைப் பார்க்க… அந்தக் கண்ணாடி அவர்களை முப்பெரும் தேவியர்களாகத்தான் காட்டிக் கொண்டிருந்தது…
ரிதன்யா… அங்கிருந்த கண்மையை எடுத்து…
“கண்மணிக்கு கண்மை… கண்ணு வச்சுருவாங்கள்ள” என்று அவளுக்கு திருஷ்டுப் பொட்டு வைத்து விட… கண்மணி சட்டென்று அதிர்ந்து அவளை நோக்க… அவ்வளவுதான் ரிதன்யாவின் கண்களில் அவளையும் மீறி கண்ணீர் வழிய…
“என்னை மன்னிச்சுருங்க அண்ணி…” என்றவளை கண்மணி தன்னருகே வரவழைக்க…
“சாரி அண்ணி… ஐ வாண்ட் யுவர் ஹக் அண்ணி…” என்றவள் குழந்தை போல அவள் அருகே அமர்ந்து…. தலை சாய்க்க…
ரித்விகா… தன் சகோதரியின் அழுகைக்கான புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்
கண்மணியோ…. புரிந்தவளாக
“அர்ஜூனா” என்று கேட்க…
“ஹ்ம்ம்… ஆமாம்… என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க அண்ணி” என்று தலை ஆட்டிய ரிதன்யாவிடம்…
“எனக்கு ரிதன்யா மேல கோபம் எப்போதுமே இல்லை… வருத்தம் மட்டும் தான்… அப்புறம் எதுக்கு மன்னிப்பு… ஆனாலும் மன்னிச்சுட்டேன்… போதுமா… இப்போ எதுக்கு இவ்வளவு அழுகை…… நீங்க ரெண்டு பேரும் எப்போதுமே சந்தோசமா இருக்கனும்… உங்க அண்ணாவுக்காக…. நீங்க ரெண்டு பேரும் அவரோட உலகம்… உங்க கண்ல கண்ணீர் வந்ததுன்னா அவர் அவ்வளவுதான்” என்றவளிடம்…
”எங்க அண்ணா மேல இவ்வளவு பாசம் வச்சுருக்கீங்க தானே… அப்புறம் ஏன் அண்ணி பிடிவாதம் பிடிக்கிறீங்க” என்ற ரிதன்யாவிடம்… பதில் சொல்லாமல்…
தான் அணிந்திருந்த வெண்ணிற வைரக்கல் மூக்குத்தியை கழட்டியவள்… அவன் அவளுக்கு முதன் முதலாக கொடுத்து அவன் காதலைச் சொன்ன பரிசான… அவன் வேண்டாமென்று சொல்லி இவள் தூக்கி எறிந்திருந்த மூக்குத்தியைக் கையில் எடுத்தவள் அதை அணிந்தும் ருந்தாள் இப்போது
அவள் புடவை வண்ணத்திற்கு அந்த மூக்குத்தியின் சிறு ரோஸ் வண்ணக் கல் இன்னும் எடுப்பாக அவளைக் காட்டிக் கொடுக்க…
“நல்லா இருக்கா…” என்று ரிது ரிதன்யாவிடம் கேட்டபடியே…
“எங்க அண்ணா மேல இவ்ளோ பாசம் வச்சுருக்கீங்க… ஹ்ம்ம்… அப்புறம் ஏன்… நல்ல கேள்விதான்… ஆனால் உங்க அண்ணா சொல்லிக் கொடுத்த பாடம்தான் இது… நமக்குப் பிடிச்சவங்க நல்லா இருக்கனும்னா நாம விலகி இருக்கிறது தப்பு இல்லை… அது ரொம்ப ரொம்ப கரெக்ட்னு எனக்கு சொல்லிக் கொடுத்ததே உங்க அண்ணா தான்…” தன்னைக் கண்ணாடியில் பார்த்தவாறே… சொன்னபடியே…
அவர்களைப் பார்த்து திரும்பியவள்…
“உங்க அண்ணாவை நான் உங்களுக்கே திருப்பிக் கொடுத்துட்டேன்… நீங்க அவரை நல்லா பார்த்துப்பீங்கன்ற நம்பிக்கைல…. உங்ககிட்ட திருப்பிக் கொடுத்துட்டேன்… பார்த்துப்பீங்கதானே…” என்று புன்னகை முகமாக கேட்டவள்… கண் ஓரம் மை கசிந்து வந்திருக்க… அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை… கண்களை மூடி அமர்ந்து விட்டாள்… நினைவுகள் என்ற ஆழிசுழியில் சிக்கிக் கொண்டவளாக…
---
கண்கள் திறந்திருந்தாள்… அர்ஜூனின் கைகளை விலக்கி…
”அர்ஜூன்”… கைகளை விலக்கியவளாக அவனைப் பார்த்து வாய்விட்டுச் சொன்னவளி்ன் முகத்தில் அத்தனை சந்தோசம்….
அவளைச் சுற்றி இருந்த அவளின் மனதுக்கு நெருக்கமானவர்கள் அத்தனை பேரும் அவளை விட்டுப் போயிருக்க… அந்த ஏக்கத்தில் வந்து கொண்டிருந்தவள்… அர்ஜூனை பார்த்தவுடன் அவளையுமறியாமல் அவள் முகம் மலர்ந்து விட்டிருந்தது…
அதில்… வாய் விட்டு அவன் பெயரை உற்சாகமாகச் சொன்னவளைப் பார்த்த அர்ஜூனே அதிசயமாகத்தான் பார்த்தான்…
“என்ன வரவேற்பு பலமா இருக்கு” அர்ஜூனும் அவளின் உற்சாகத்துக்கு குறைவில்லாமல் சந்தோசத்தோடு கண்மணியை கிண்டல் செய்தான் தான்…
தன் தந்தை மற்றும் கணவனின் பயண விபரம் சொன்னவளிடம்… அவள் சொல்கிறாள் தான் கேட்கிறோம் என்ற அலட்சிய பாவத்தில் கேட்டுக் கொண்டிருந்தான் அர்ஜூன்…
அதன் பின் ரித்விகா ரிதன்யாவை தன் அருகே அழைத்த கண்மணி… ரிஷியின் தங்கைகள் என்று அறிமுகப்படுத்த… அர்ஜூன் பெரிதாகவெல்லாம் ஈடுபாடு காட்டவில்லை…. பேருக்கு அவர்களோடு அறிமுகப்படலத்தை முடித்துக் கொண்டவன்…
”வா… வீட்டுக்குத்தானே… கார் வெயிட் பண்ணுது..” என்று அவளைக் கையில் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்க… கண்மணியே அவனிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை..
கைகளைப் பிரித்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தாள்… அர்ஜூனை, ரிதன்யா-ரித்விகா முன்னிலையில் திட்டவோ… அவனிடம் கோப முகம் காட்டவோ அவளுக்கு இஷ்டமில்லை…
”அவங்க ரெண்டு பேருக்கும் தனிக்கார் சொல்லிடவா” என்று வேண்டுமென்றே சீண்டியவனை மூன்று பெண்களும் அதிர்ச்சியோடு நோக்க…
”ஓ நம்ம கூடத்தான் அவங்களும் வர்றாங்களா” கண்மணியின் அதிர்ந்த முகத்தைப் பார்த்தபடியே குறும்பாக அர்ஜூன் புன்னகைத்த போதுதான்… அவன் கண்மணியை சீண்டியதே புரிந்தது அவர்கள் மூவருக்கும்
இப்போது கண்மனியின் கையையும் விட்டிருந்தான் அர்ஜூன்…
“நீயும் நானும் நம்ம வீட்ல இறங்கிருவோம்… இவங்கள நம்ம ட்ரைவர விட்டு அவங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்… ஓகேவா” என்றவனை கண்மணி முறைத்துக் கொண்டிருந்தாள்…
அவள் மேல் அவனுக்கான உரிமையை ரிஷியின் தங்கைகளிடம் காட்ட வேண்டும் என்பதற்காகவே இப்படியெல்லாம் நடக்கின்றான் என்று கண்மணி புரிந்து கொண்டாலும்… அர்ஜூனின் எல்லை மீறும் நடவடிக்கைகள் அவளுக்குப் புதிதே….
அவனைப் பார்த்த வந்த சந்தோசம், உற்சாகம் அனைத்தும் வந்த வேகத்திலேயே வடிந்தும் இருக்க… கண்மணி அவனை விட்டு தள்ளி நடந்து ரித்விகாவுடன் சேர்ந்து கொள்ள… அர்ஜூனோ கண்மணிக்கு அருகே அவள் வேகத்திற்கு அவளை ஒட்டியே நடந்து வந்து கொண்டிருந்தான்…
கண்மணிக்கு இந்த அர்ஜூன் புதிதாகத் தெரிந்தான்…. இப்படி எல்லாம் நடக்கின்றவனே கிடையாது அவன்… என்னாயிற்று அவனுக்கு…
ஆளுக்கொரு சிந்தனையுடன் வெளியே வந்திருக்க…. அர்ஜூனை கூட்டிச் செல்லக் காத்திருந்த வாகனமும் அங்கு வந்து அவர்கள் முன் நின்றது…
அர்ஜூன்… ரிதன்யா ரித்விகாவை அமரச் சொல்ல.. ரிதன்யாவால் அவனை எதிர்த்து பேசவே வாய் வரவேஇல்லை…
அர்ஜூனின் தோற்றம்… ஆளுமை… கம்பீரம்… என ரிதன்யாவை மறு வார்த்தை பேசாமல் காரினுள் அமர வைத்திருக்க… ரிதன்யா அமர்ந்ததால்… ரித்விகாவும் அவள் அருகே அமர்ந்து விட்டாள்…
இப்போது கண்மணியும் அவர்களோடு அமரப் போக…
“நீ ஏன் இங்க உட்காரப் போற…. எப்போதும் என் பக்கதில தான் உட்காருவ…. இன்னைக்கு மட்டும் ஏன்” என்றபடி ஓட்டுனர் இருக்கையின் அருகே உள்ள இருக்கையின் கார்க்கதவைத் திறந்து விட்டவனிடம்… இவளும் மறுக்கவில்லை…
அவள் எப்போதுமே அர்ஜூனோடு அருகில் அமர்ந்து சென்றுதான் பழக்கம்… இன்று மறுத்தால் தான் வேண்டுமென்றே செய்வது போல் இருக்கும்… அமைதியாக அமர்ந்து விட… அர்ஜூன் புன்னகையோடு… ஓட்டுனரிடமிருந்து கார்ச்சாவியை வாங்கிக் கொண்டு… ஓட்டுனர் இருக்கையில் வந்து அமர்ந்தவன்… கண்மணி சீட் பெல்ட் போடாமல் இருப்பதைப் பார்த்து… அவளுக்கு அவனே போட்டும் விட
அவன் எவ்வளவு தூரம் போவான் என்று அவளுக்கும் பார்க்க வேண்டும் என்று எண்ணம் வர கண்மணியும் இப்போது அர்ஜூனை விட்டுப் பிடித்தாள்…
இதை எல்லாம் பார்த்து ரிதன்யா மற்றும் ரித்விகா முகம் தான் பேயறைந்தார்ப் போன்று இருந்தது..
ரித்விகா கூட ஒரு முறை பார்த்திருக்கின்றாள்… ரிதன்யாவோ முதல் முறையாக அர்ஜூனை இன்றுதான் பார்க்கின்றாள்..
வந்ததில் இருந்து அவன் பார்வை கண்மணியிடம் மட்டுமே…. அதில் விரசமெல்லாம் இல்லை… ஆனால்… அந்த உரிமை… தன் அண்ணனிடம் கூட ரிதன்யா காணாதது… என்னதான் கண்மணி பிடிக்காவிட்டாலும்… இவன் தன் அண்ணனைக் காட்டிலும் கண்மணியிடம் உரிமை எடுக்க…. கண்மணியும் பெரிதாக ஏதும் சொல்லாமல் இருக்க…. ஒரு மாதிரியான வலி…. கண்மணி தங்கள் வீட்டுப் பெண்… தன் அண்ணனுக்கு உரிமையானவள்… என்று ரிதன்யா உணர்ந்த முதல் நொடி அந்த நொடி…
கண்மணி தன்னை இயல்பாக காட்டிக் கொள்ளும் விதமாக
“அர்ஜூன்… நேரா எங்க வீட்டுக்கு விடுங்க… டிரைவர்லாம் கொண்டு போய் விட்டால் ரிஷி திட்டுவார்…“ என்ற போதே… அர்ஜூனும் மறுக்க வில்லை…
”ஒகே… இளவரசி சொல்லி மறுப்பு ஏது…. விட்றலாம்…” என்றவன்… அவள் சொன்னபடியே… அவர்கள் வசித்து வந்த ஏரியாவில் ரிதன்யாவை ரித்விகாவை இறக்கி விட்டிருக்க… இப்போது கண்மணியும் இறங்கப் போக… அவளைத் தடுத்தவனிடம்…
“எனக்கும் உங்ககிட்ட பேசனும் தான்… ஆனால் இன்னைக்கு வேண்டாம்… நானே வந்து மீட் பண்றேன்” என்றவளிடம்
அவள் வார்த்தைகளை எல்லாம் கண்டுகொள்ளாதவனாக
“நீ சொன்ன மாதிரி… அந்த ரிஷியோட சிஸ்டர்ஸை உங்க ஏரியால விட்டுட்டேன்…. இப்போ நான் சொல்றதை நீ கேட்கனும்… எனக்கு இன்னைக்கே உன்கிட்ட பேசனும்…” என்று கண்மணியிடம் கட்டளையாகச் சொன்னபடியே…. அவனோடு பேச… இல்லை பார்க்கக் கூட கண்மணிக்கு அவகாசம் அளிக்காமல்… அவளைக் காரிலேயே வைத்து லாக் செய்து விட்டு இறங்கியவன்
ரித்விகாவை அழைத்தான்… எரிச்சலும் நக்கலுமாக
“பாப்பா… உங்க அக்காவைக் கூட்டிட்டு பத்திரமா போய்ருவதானே… இல்லை உங்க வீடு வரை வந்து விடனுமா…” என்று சத்தமாகக் கேட்டவன்…
கண்மணி இருந்த திசை இருந்த திசை நோக்கியபடியே… “ரிஷி திட்டுவாராம்.. இருக்குடி உனக்கு” தனக்குள் சொல்லிக் கொண்டான்…
ரித்விகாவிடம் அர்ஜூன் பேசிய விதம் ரிதன்யாவுக்கு கோபத்தை வரவழைக்க…
”ஒழுங்கா எங்க அண்ணிய இறக்கி விடு” ரிதன்யா… தன் தைரியத்தை எல்லாம் வரவழைத்து அர்ஜூனை எச்சரிக்க ஆரம்பிக்க… ரித்விகாவோ வேகமாக தன் அண்ணியை நோக்கி சென்று.. கார்க்கதவைத் திறக்க முயற்சித்துக் கொண்டிருக்க… ஒரே எட்டில் ரித்விகாவை தங்கள் புறமாக இழுத்து… ரிதன்யாவின் அருகில் நிறுத்தியவன்
“அவளப் பற்றி நீங்க கவலைப்படத் தேவையில்லை…. அதுக்கு நான் இருக்கேன்... நீங்க கெளம்புங்க…” என்று அலட்சியமாகச் சொன்னவனை அதிர்ந்து பார்த்தனர் ரிஷியின் தங்கைகள்....
அவர்களின் அதிர்ச்சியான முகத்தைப் பார்த்தெல்லாம் அர்ஜூன் நேரத்தை வீணடிக்கவில்லை… சொன்ன அடுத்த நிமிடமே கண்மணியோடு அந்த இடத்தை விட்டு கிளம்பியும் இருக்க…
ரிதன்யாவோடு நின்றிருந்த ரித்விகா… கண்களில் இலேசான கண்ணீர்… அர்ஜூனை நினைத்தெல்லாம் இல்லை… தன் அண்ணனை விட இவன் தன் அண்ணிக்கு முக்கியமா என்ன… ஒரு வார்த்தை கூட இவனை எதிர்த்து வாய் பேசவில்லையே.. தானாக கண் கலங்கியவளாக
“நம்ம அண்ணன் கூட அண்ணிகிட்ட இவ்ளோ உரிமையா இருந்தது இல்லை…“ ரிதன்யாவிடம் தன் மனக் குமுறலைச் சொல்ல
“ப்ச்ச்… இப்போ ஏன் நீ அழற…. நீ பயப்படற அளவுக்கெல்லாம் ஒண்ணும் இல்லை… அவங்க அண்ணியோட ரிலேஷன் தானே… அதான் அவங்க பெருசா ரியாக்ட் பண்ணலை…. அப்புறம் அண்ணாகிட்ட இதெல்லாம் சொல்லாத…” என்று ரித்விகாவைக் கூட்டிக் கொண்டு ’கண்மணி’ இல்லம் போக
அர்ஜூனோ கண்மணியோடு ’பவித்ரா’ இல்லத்தில் நுழைந்திருந்தான்…..
----
முதல் முறை விமானப் பயணம்… விமானம் டேக் ஆஃப் ஆகும் போதே நட்ராஜால் முடியவில்லை… ஏற்கனவே அவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை வேறு….. இப்போது பயமும் சேர… ரிஷிதான் அவரை ஆற்றுபடுத்தி… எப்படியோ உறங்கவும் வைத்திருக்க… நட்ராஜ்… ஓரளவு சரியாகி விட்டார் என்பதை உறுதி செய்த பின்னர்தான் ரிஷிக்கும் நிம்மதி ஆகி இருக்க… தன் அலைபேசியையை எடுத்தவன்… அலைபேசியில் புகைப்படத் தொகுப்பை திறக்க ஆரம்பித்திருந்தான்…
அதில்… கண்மணிக்காக வாங்கி வைத்திருந்த மூக்குத்தியைப் பார்த்தபடி சில நிமிடங்கள் இருந்தவன்… அடுத்த புகைப்படத்தைப் பார்க்க… அது பவித்ராவின் டைரி… அப்படி சொல்வதை விட… அன்னையாக அவள் ஆசைகள்…
கண்மணியில் ஆரம்பித்து… சுபத்ராவாக முடிந்திருந்த அவள் தாயின் ஆசை…
பவித்ரா தன் மகளுக்கு வைக்க ஆசைப்பட்ட பெயரோ ’கண்மணி’
ஆனால் அவள் செல்ல மருமகன் தெரிந்தோ தெரியாமலோ பரிந்துரைத்த ’சுபத்ரா’ என்ற பெயரில் பவித்ராவின் விருப்பமும் மாறி இருந்தது… இங்குதான் ரிஷியின் உறக்கமும் தொலைந்திருந்தது….
அர்ஜூன் – சுபத்ரா என்று இணைந்திருக்க வேண்டிய பெயர்கள்…
ரிஷி – கண்மணி என்ற இடத்தில் இப்போது நிற்கிறது…
இந்த டைரியைப் படித்தால் மகள் தன்னை விட்டு அர்ஜூனோடு… நாராயண குருக்களோடு போய்விடுவாளோ என்ற பயத்தில் நட்ராஜ் மறைத்துவிட்ட பவித்ராவின் ஆசைகள்…
முதன் முதலாக அவன் அந்த டைரியைப் படித்த போது.. கண்மணி அந்த அர்ஜூனின் உரிமையாகவே மனம் வரித்ததை அவனாலேயே தடுக்க முடியவில்லை… என்னதான் கண்மணி தன் மனைவி என்ற போதும்… தான் அவளது கணவன் என்ற போதும் அவனை விட கண்மணிக்கு எல்லா விதத்திலும் அர்ஜூன் பொருத்தமானவனாகவும்… அதே போல கண்மணியும் அர்ஜூனுக்காகவே பிறப்பெடுத்து வந்தார்ப் போன்ற மாயத் தோற்றமும் அவனுக்குள் ஏற்பட்டதுதான்…
ரிஷியால் அதைத்தான் தாங்கவே முடியவில்லை… எப்படி தன் மனைவிக்கு தன்னை விட இன்னொருவன் மிகப் பொருத்தமானவன் என மனம் நினைக்க வைக்கிறது என்ற வலியே இந்த சில வாரங்களாக அவனை வாட்டி வதைத்திருக்க… கண்மணியிடம் அவனால் இயல்பாகவே இருக்க முடியவில்லை…
கண்மணி இதைப்படித்திருந்தால் ஒருவேளை அர்ஜூனை விட்டுவிட்டு தன்னைத் திருமணம் செய்திருக்க மாட்டாளோ… இதயம் வலிக்க.. அது தந்த வலி தாங்க முடியவில்லை…
தந்தையின் எந்த கனவுகளுக்காக இவன் போராடிக் கொண்டிருக்கின்றானோ… அவை எல்லாம் அவரின் வாய்வார்த்தைகள் அல்ல… எழுதி வைத்திருந்த வெறும் எழுத்துக்கள்தான்…
இங்கு கண்மணியின் தாய் பவித்ராவின் ஆசைகளும் அதே போலதானே… அதை விட கர்ப்பிணியின் நிறைவேறா ஆசைகள்… மனம் நெருடியது….
பவித்ராவின் ஆசைகள் நிறைவேறாதது கூட வேறுவிசயம்… அதை அவரின் மகள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லையே….
தன் மகள் தன்னைவிட்டு போய்விடுவாளோ என்ற ஒரே பயத்தில் அவளிடமிருந்து மறைத்த நட்ராஜின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிந்ததுதான்… ஆனால் கண்மணி படிக்க வேண்டும்… தன் மூலமாகத்தான் அது நடக்க வேண்டும் என்ற விதி இருக்க… அதை மாற்ற முடியுமா… தனக்குள் சிரித்துக் கொண்டான்…
தனசேகரின் எண்ணங்கள்… கண்மணி மூலமாக அவனுக்கு வந்தடைந்திருக்க… இதோ பவித்ராவின் எண்ணங்கள் ரிஷியின் மூலமாக கண்மணிக்கு சென்றடையப் போகும் விந்தை…
தனசேகருக்கோ… பவித்ராவுக்கோ…. தங்கள் வாரிசுகளின் எதிர்காலம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்... தனசேகர் தனக்கும் தன் மகனுக்கும் இடையே பாலமாக கண்மணியை கொண்டு வந்திருந்தார் என்றால்… பவித்ராவின் மறு உருவமாக ரிஷியையே கண்மணியோடு கொண்டு வந்து சேர்ந்திருத்தது விதி…
அன்னையின் பாசம் என்ன என்பதை சிறு அளவு கூட அறியாதவளுக்கு… அவளை வயிற்றில் சுமந்த போதே… அவளைப் பற்றிய கற்பனைகள் வைத்திருந்த அவள் அன்னையின் பாசத்தை கண்மணிக்கு தெரிவிக்க வேண்டும்… ரிஷியின் மனம் துடித்தது… ஆனால் அர்ஜூனின் இடையே வருகிறானே…. அங்குதான் ரிஷி தடுமாறினான்….
இருந்தும் ஒருகட்டத்தில் மனதைக் கல்லாக்கியவன்… கண்மணியும் அந்த டைரியைப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தான்…
அதன்பின் அவள் முடிவு… அது எதுவாக இருந்தாலும் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவனுக்கு… கண்மணி தன்னை விட்டு செல்ல மாட்டாள் என்று தெரியும் தான்… ஆனால் அதை ஆணித்தரமாகத்தான் அவனால் சொல்ல முடியவில்லை.. அதுதான் அவனின் இத்தனை நாட்களின் அலைகழிப்பு… குழப்பத்திலேயே இருந்தான்…
கண்மணி அவனிடம் காட்டும் பாசம்… காதல்… காதலோ என்னவோ… கண்மணிக்கு அவன் முக்கியம் என்பது அவனுக்குத் தெரியும்… இருந்தும் எங்கோ மனம் காற்றிலாடும் சருகைப் போல ஊசலாடியது… மனைவியின் முடிவை எண்ணி….
எதுவாக இருந்தாலும்… கண்மணியிடம் சொன்னபடி… அவள் மனம் எங்கு செல்ல விரும்புகிறதோ… அந்த விருப்பத்துக்கு தான் எப்போதும் தடையாக இருக்கக் கூடாது என இறுதி முடிவெடுத்திருக்க.… கொஞ்சம் தெளிவாகி இருந்தான்…
அதே நேரம் தன் மனதையும் அவளுக்கு சொல்ல முடிவெடுத்து அவளுக்கு முதன் முதலாக தான் கொடுக்க நினைத்த மூக்குத்தியையும் பரிசாகத் தேர்ந்தெடுத்தான் அந்தப் பரிசோடு அவளின் தாயின் டைரியையும் அவளிடம் சேர்க்க நினைத்தான்
கண்மணிக்கு அவளது பிறந்த நாளில் அந்த இரண்டு பரிசையுமே அவளுக்கு கொடுக்க நினைத்தவன்… கண்மணியின் முடிவை விட அவள் தந்தை மறைத்த அவளின் தாயின் ஆசைகள் அவளுக்கு தெரியவேண்டும்… அதுதான் அவனது முதல் எண்ணமாக இருந்தது…
ஒருவேளை இந்த ரிஷியின் கண்மணியாக இருக்க விரும்பினால் மட்டுமே அந்த மூக்குத்தியை அவள் அணிந்து கொள்ளலாம் என்றும் எழுதி மூக்குத்தியோடு டைரியையுமே ஒன்றாக வைத்து தன் அறையில் வைத்து விட்டும் வந்திருந்தவன்… அவளது பிறந்த நாளுக்காக… தன் மனைவியின் காதலுக்காக… அவளின் பதிலுக்காக காத்திருக்க ஆரம்பித்திருந்தான்… அந்த நொடியில் இருந்து…
கண்மணி ரிஷியின் காதலை ஏற்றாளா… ??
ரிஷியின் கண்ணின் மணியாக மாறினாளா??
அவனின் கண்மணியாக மாறியவள் இன்று அவனை விட்டு தனித்திருப்பதேன்… ???
ரிதன்யாவுக்கு தெரிந்த கண்மணியின் கடந்த காலம்… ரிஷி அறிந்திருந்தானா???
கண்மணி என் கண்ணின் மணி- மூன்றாம் பாகம்… விரைவில்
(Dhilip varman 100 th ஆல்பம் song.... கண்மணி என் கண்மணி
கண்ணிலே காதல் தீயடி பாடல் வரி படிக்கலேன்னாலும் ஆடியோ கேட்டுப் பாருங்க... )
/*தேகத்துள் பாய்கிறதே இது என்ன மின்னலா
கண்ணுக்குள் வேர்க்கிறதே அதிசயமே
உன்னுள்ளே கலந்து விட்டேன் உணர்கின்றதாசொல்
நேரில் கண்ட நேரம் எல்லாம் உறைந்தேன் நானே
இரவைக் கண்ட நிலவைப் போல்...உள்ளம் களிக்கிறேன்
காதல் வீணை மீட்டியே உன்னை அழைக்கிறேன்
மீண்டும் அமைதி சூழ்கிறாய் எங்கு மறைகிறாய்...
இன்னும் என்ன செய்கிறாய என்னைக் கொல்கிறாய்
கண்மணி என் கண்மணி
கண்ணிலே காதல் தீயடி
கண்மணி என் கண்மணி
கண்ணிலே காதல் தீயடி
உன் தீண்டலால் நிலை ஆகினேன்...
உன் பார்வையால் கைதானினேன்
நாடி நரம்பில் நீதானே
தேடி களைத்ததேன் ஜீவனே*/
Comments