top of page
Writer's picturePraveena Vijay

கண்மணி... என் கண்ணின் மணி -43 -1

Updated: Aug 19, 2021

அத்தியாயம்: 43-1


ரிஷியின் அப்பா தனசேகருக்கும் தனக்கும் என்ன சம்பந்தம்… அவரை இதுவரை தன் வாழ்நாளில் ஒருமுறை கூடப் பார்த்தது இல்லை… அவளறிந்தவரை தனசேகரோடு சம்பந்தப்படுத்தும் நிகழ்வுகள் எதுவுமே நடந்ததே இல்லையே.. அப்படி இருக்க ரிஷியின் தந்தை தன் மூலமாக அவர் ரகசியங்களை காட்டினாரா??… கண்மணி இப்போது குழப்பத்தில் ரிஷியை நோக்க… அவளது புரியாத பாவனையை புரிந்து கொண்ட ரிஷி


”அப்பா கூட கடைசியா பேசினப்போ… உன்னைப் பற்றி கூட பேசி இருக்கேன் கண்மணி… நீ ஒரு ஆர்ட்டிகிள் எழுதி உன்னோட ஃபோட்டோ பேப்பர்ல வந்திருந்ததே… சொல்லி இருக்கேனே…” அவர்களுக்கான முதல் தனிமையில் இருவரும் பேசிக்கொண்டதை ஞாபகப்படுத்த… கண்மணியும் ஆமோதிப்பாக தலை அசைத்தாள் வார்த்தைகள் இன்றி… அவன் சொன்னது தனக்கும் ஞாபகம் உள்ளது என்பதைக் காட்டும் வகையில்


”அப்பா அன்னைக்கு நைட் என்கிட்ட பேசிட்டு போனப்போ… அவர் மனநிம்மதியோட போனார்னு நினைத்து ஏமாந்து போய்ட்டேன் கண்மணி… நான் இனிமே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வேன்னு அவருக்கு என் மீது வந்த நம்பிக்கையில்… சொல்ல முடியாத விசயங்களையும் எனக்குத் தெரிய ஏற்பாடு பண்ணிட்டு… படுத்திருக்காரு… எல்லாவற்றையும் என்கிட்ட என் முகம் பார்த்து சொல்ல முடிந்தவரால… சில விசயங்களை என் முகம் பார்த்து சொல்ல முடியல… மகனா போயிட்டேன்ல… அதுக்குதான் உன்னை யூஸ் பண்ணினார்” இப்போது விரக்தி கலந்த ஏளன இதழ் சுழிப்பு அவனிடமிருந்து வெளிப்பட்டது…


கண்மணி அவனை ஆறுதல் படுத்த நினைத்து… அவன் பிடித்து வைத்திருந்த தன் கைகளை அவனிடமிருந்து விடுவிக்க நினைக்க… அவனோ அதற்கு விடவில்லை…


“நான் ஓகே கண்மணி…” என்றவன் தொடர்ந்தான்


”அப்பா இறந்து ஒரு வாரம் ஆகி இருக்கும்… மொத்த குடும்பமும் நிலைகுலைந்து போயிருந்த சமயம்… அப்பாவோட மரணம் மட்டுமல்லாமல் அவர் இறந்த நிலை… பிஸ்னஸ்ல அவரோட தோல்வி… அப்புறம் நான் என்னோட பிரச்சனை என இப்படி எல்லாமே அம்மாக்கு நிம்மதி இல்லாத நிலை… மனசளவுல நொறுங்கிப் போயிருந்தாங்க… எந்த அளவுக்குன்னா… என்னை அவங்ககிட்ட நெருங்கி ஒரு வார்த்தை கூட பேச முடியாத அளவுக்கு நான் போனாலே உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாகிற அளவுக்கு… நானும் அவங்ககிட்ட போகல… ஒருத்தொருக்கொருத்தர் ஆறுதலா இருக்க வேண்டிய இக்கட்டான நிலைமைல ஆளுக்கொரு மூலையில்… எனக்கு அவங்க மடி தேவைபட்ட காலம்… ஆனால்… தனியாளா ஆக்கப்பட்ட கொடுமைதான் நடந்தது… நாளாக நாளாக சரியாகிருவாங்க… என்கிட்ட பேசுவாங்கன்னு… எதிர்பார்த்து காத்திருக்க… அம்மாவோட மனதிலோ அப்பா இறந்ததுக்கு காரணம் நான்தான்ற எண்ணம் அதுதான் அதிகமா வளர ஆரம்பிக்க… என்னை விட்டு விலக ஆரம்பிச்சாங்க… என்னை நானே சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டிய கட்டாயம்… அம்மா நினைப்பும் தவறே இல்லை என்பது போலத்தான் இருந்திருந்தன என்னுடைய பழக்க வழக்கங்கள்… ஆக எங்க மாமா சொன்னது போல… நான் ஒரு யாருக்குமே தேவைப்படாத யூஸ்லெஸ்ன்னு அப்போதான் புரிந்தது…”


“அப்படிலாம் இல்லை ரிஷி… யார் சொன்னா… நீங்க எப்போதுமே ப்ரைஸ்லெஸ்” அவன் சொன்னது பிடிக்காமல்… கண்மணி வேகவேகமாகச் சொல்ல… புன்னகைத்தான் ரிஷி…


“நீ மட்டும் என்னை விட்டுக் கொடுக்க மாட்டியே… என்கிட்ட கூட” அவன் கண்கள் பெருமிதத்தில் ஒளிரத்தான் செய்தது…


“நீங்க இப்படி உங்கள நீங்களே தாழ்வா பேசறதை விடுங்க… எனக்குப் பிடிக்கல…” கண்மணி கோபமாகச் சொல்ல..


”சரி சொல்லலை… இந்தக் கண்மணிக்கு மட்டும் நான் எப்போதுமே ப்ரைஸ்லெஸ் தான்… போதுமா…” அவனுக்கு மட்டுமே தெரியும்… விக்கி என்ன அர்ஜூன் என்ன… அவர்களைப் போல ஆயிரம் பேர் வந்தாலும் அவர்களுக்கு மத்தியில் அத்தனை பேரையும் ஒரு அடி குறைத்து தன்னை அவர்கள் முன் ராஜா போல் தூக்கி நிறுத்தும் ஆளுமை கொண்ட ஒரே நபர் அவன் மனைவி மட்டுமே… அறியாதவனா என்ன… யாருக்கு கிடைப்பாள் இப்படிப்பட்ட மனைவி… அதிர்ஷ்டம், வரம் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது அவனுக்கு… அதே போல இவை யாவும் அவனைப் பொறுத்தவரை… கண்மணி என்ற ஒரே வார்த்தைக்குள் மட்டுமே அடங்கியிருந்தன…


ரிஷி கண்மணியை நினைத்த மறுநொடி அவனது நினைவில்… அந்த வரம் தன் வாழ்வில் வந்த காலங்கள் எல்லாம் அவனின் மனக்கண்ணில் வர… இத்தனை நேரம் அலைப்புறுதலில் இருந்தவனுக்கு… அந்த எண்ணம் தந்த நிம்மதி அமைதியைக் கொண்டு வந்திருக்க… கண்மணிதான் அவன் மௌனத்தைக் கலைத்தாள்


“சொல்லுங்க ரிஷி… அத்தைக்கு கோபம் எப்போதான் போனது” என்று அவனைக் கேட்க…


“அது ஒருத்தவங்க வீட்ல காலடி எடுத்து வச்ச பின்னாலதான் போனது… யார் அந்த அவங்கன்னு உங்களுக்கு தெரியனுமா…. மிஸஸ் ஆர்கே” ரிஷி தான் இருந்த நிலையெல்லாம் மறந்தவனாக கண்சிமிட்டி அவளைக் கிண்டல் செய்ய…


கண்மணிக்கோ அவனை முறைப்பதா… இல்லை அவனது கிண்டலை ரசிப்பதா என்ற நிலைதான்…


“மாமா பற்றி சொல்ற ஐடியால இருக்கீங்களா… இல்லை என்னை டைவர்ட் பண்ணி… அப்டியே எதுவும் சொல்லாம விட்றலாம்னு இருக்கீங்களா” கண்மணி தீவிரமாகக் கேட்க… ரிஷியோ பெருமூச்சு விட்டவனாக… மீண்டும் தொடர்ந்தான்…

”அம்மா கோபம் கூடினதே தவிர… குறைந்த பாடில்லை… பொறுமையா அவங்க கோபம் போக நாளை எதிர்பார்த்து காத்திருப்பதைத் தவிர எனக்கும் வேறு வழி தெரியவில்லை… அப்படி இருக்கும் போதுதான்… அப்பாவோட ரூமைக் கிளீன் பண்ண ஆரம்பித்தோம்… அப்பா பயன்படுத்திய பொருட்களை எல்லாம் அப்புறப்படுத்த ஆரம்பிக்க… அந்த டைம்தான் உன்னோட ஆர்ட்டிகிள் வந்த நியூஸ் பேப்பரை அடையாளமா வைத்திருந்த டைரி… அதுவும் உன்னோட போட்டோ இருந்த பக்கத்தை மட்டும் கட் பண்ணி எடுத்து அந்த டைரில வைக்கப்பட்டிருந்தது… நான் கூட பார்க்கவில்லை… ரிதன்யாதான் பார்த்து… என்கிட்ட காட்டினா… அவளைப் பொறுத்தவரை அது நியூஸ் பேப்பர்… ” ரிஷி கடந்த காலத்தில் கரைந்திருந்தான் அவனையுமறியாமல்…


….



“அண்ணா இந்த டைரில ஒண்ணுமே இல்லை… இதை தூக்கிப் போட்றலாமா… பாரு…” ரிஷியிடம் ரிதன்யா நீட்ட… ரிஷியும் வாங்கிப் பார்த்தான்…. உள்ளே பார்க்க… ஒன்றுமே இல்லை…


தேவையில்லாத டைரிதான் என்று போடப்போனவனுக்கு… அதில் வெட்டி வைக்கப்பட்டிருந்த நியூஸ் பேப்பர் உறுத்தியது….


அதிலும் அந்தக் காகிதத்தில் இருந்த பகுதி…கண்மணியின் செய்தி இருந்த பகுதி.. தந்தை அதை ஏன் வெட்டி இதில் வைக்க வேண்டும்… அதிலும் இங்கு யாருக்குமே தெரியாத… அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒரு பெண்ணின் செய்தி அடங்கிய பகுதியை… கையில் வைத்தபடி யோசித்துக் கொண்டே இருந்தவனுக்கு ஒன்றுமே புலப்படவில்லை… அதே நேரம் அந்த டைரியை ஒதுக்காமல் தன்னோடு வைத்துக் கொண்டவன்… தன் அறைக்கு வந்து மீண்டும் மீண்டும் புரட்டிப் பார்க்க… ஒன்றுமே புலப்படவில்லை…


தன்னிடம் பேசிவிட்டு வந்த பிறகுதான் அந்த நள்ளிரவில்தான் தன் தந்தை இதைச் செய்திருக்கின்றார்… அந்த செய்தித்தாள் பகுதி கூட எதார்த்தமாக வைக்க சாத்தியமே இல்லை… அப்படி என்றால் தனக்கு மட்டுமே ஏதோ சொல்ல நினைத்து வைத்தாரா… ’கண்மணி’ என்ற அந்த சிறு பெண்ணின் புகைப்படத்தை வைத்து அவர் சொல்ல வருவது என்ன?… எப்படி யோசித்தாலும் எதுவும் புலப்படவில்லை… அதே நேரம் ஏதோ பேப்பர்… அதில் அந்தப் பெண் கண்மணி இருந்தாள் அவ்வளவுதான்… என அவனால் அதை சுலபமாக விட்டு விடவும் முடியவில்லை… விடமுடியாத பந்தமாக உயிர் சுமந்து அவனுக்காக அவள் காத்திருந்தவள்… விட்டு விடுவாளா என்ன… கண்மணி என்பவள் காகிதமாக இருந்த போதிலும் கூட விலகாமல் அவன் நினைவுகளை ஆட்கொண்டு அவனை ஆட்டிப் படைக்க ஆரம்பித்திருந்தாள்…


ஒரு வார்த்தை கூட எழுத வில்லையே அந்த டைரியை புரட்டிப் புரட்டிப் பார்க்க.. ஒன்றுமே கிடைக்கவில்லைதான் முதலில்… ஆனால் மீண்டும் மீண்டும் பார்த்தவனுக்கு அந்த டைரியின் சில பக்கங்களில் சில எண்களில் மட்டுமே வட்டமிடப்பட்டிருக்க… அவனுக்கும் பொறி தட்டியது... நிதானமாக ஒவ்வொரு பக்கங்களையும் பிரித்து… அந்த எண்களை எல்லாம் தனியே எழுதி வரிசைப்படுத்திப் பார்க்க… கிடைத்ததோ ஒரு பத்திலக்க எண்… அது ஒரு அலை பேசி எண் என்று பார்க்கும் போதே தெரிய… மீண்டும் அதன் வரிசையை சரிபார்த்துவிட்டு… அந்த எண்ணுக்கு அழைத்தான்… ஏதோ ஒரு நம்பிக்கையில்…


எதிர்முனையும் எடுத்தது… அவனை எதிர்பார்த்திருந்தது போலவே


இவன் அழைத்ததும்… எடுத்ததோடு மட்டுமல்லாம ரிஷி என்றும் பதில் கொடுக்க… ரிஷிக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த நிலையே… அதோடு பேசியது அவனது தந்தையின் காரியதரிசி ’சத்யா’ என்பது வேறு…. அடுத்து ரிஷி செய்த காரியம் என்னவாக இருக்கும்??…


சத்யாவைச் நேரில் சென்று பார்க்க… அவனோ ரிஷியிடம் வேறொரு டைரியை நீட்டினான்… ஏழுகடல் ஏழுமலை தாண்டி ரகசியங்கள் கதைகளில் கேள்விப்பட்டிருக்கின்றான்… இதோ அவன் வாழ்க்கையிலும்….


சத்யா கொடுத்த டைரியை தன் கைகளில் வாங்கி இருந்தான் ரிஷி…


----


“அந்த டைரியில என்ன இருந்திருக்கும்னு நினைக்கிற கண்மணி” கண்மணியிடம் தன் தந்தையின் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருந்த ரிஷி தான் சொன்னவற்றை நிறுத்திக் கேட்க…


“உங்க அப்பாவோட இன்னொரு லைஃப்… அதைப் பற்றி சொல்லி இருப்பாங்க” கண்மணியும் சொல்ல… அவளைப் பார்த்தபடியே ரிஷியும் தொடர்ந்தான்…


“ஹ்ம்ம்… திருமூர்த்தி அண்ட் கேசவன் ரெண்டு பேரும் அப்பாவை பிஸ்னஸ் விசயமா பேச அவங்களுக்கு தெரிந்த இடத்திற்கு அழைக்க அங்கு போன இடத்தில் தான் அந்த லேடிய மீட் பண்ணிருக்காங்க அப்பா… கூடவே அவங்க பையனோட… அந்த லேடி அப்பாக்கு ஏற்கனவே தெரிந்தவங்கதான்… சில வருடங்களுக்கு முன்னால கனடால அப்பாக்கு அறிமுகம் ஆன லேடிதான்… அங்க அப்பாவை பெர்சனலாவும் சேட்டிஸ்ஃபை பண்றதுக்காக அனுப்பப்ப பட்டிருந்த வகையில் அறிமுகம் ஆனவங்கள மறுபடியும் அப்பா பார்த்திருக்காங்க… அதுவும் அந்த நாலு வயசுப் பையனோட அப்பா நீங்கதான்னு என் அப்பாகிட்ட சொல்லிருக்காங்க…”


அந்த டைரியின் இருந்த எழுத்துக்களை படித்தபோது இருந்த அவன் கண்களில் இருந்த அதிர்ச்சி… ரிஷியின் கண்களில் இப்போதும்


உயிரற்ற தந்தையின் உயிர் கொண்ட எழுத்துக்களோடு உறவாடிய தருணம்…


----


தெரிந்த பெண்ணின் பையனுக்கு பிறந்த நாள் விழா என்றுதான் கேசவன் அழைத்து வந்தது… வந்த இடத்தில் அந்தப் பையனுக்கு நீதான் தந்தை என்று சொல்லப்பட்டிருக்க…. தனசேகருக்கு அதிர்ச்சி உச்சந்தலையில் ஏறி அவரையே உலுக்கியது போன்ற நிலை…


“ஹர்ஷித் தனசேகர்” என்று அந்த சிறுவனை தனசேகருக்கே நேத்ரா அறிமுகம் செய்து வைக்க… நேத்ராவின் வார்த்தைகளில்… வானமே இடிந்து அவர் தலையில் விழுந்தார்ப் போல இருந்தது…


நான்கு வருடம் முன்பு இந்த நேத்ரா அவரைப் படுக்கைக்கு விருந்தாக வந்த போது… தனசேகரும் போதையில் தான் இருந்தார்… அது மறுக்க முடியாதுதான்… ஆனால் அப்போதும் தன் மனைவியை அவர் மறக்கவில்லை… இதெல்லாம் தனக்குப்பிடிக்காது என்று இந்தப் பெண்ணை அறையை விட்டு வெளியே அனுப்பி இருந்தாரே…


நேத்ராவிடம் அன்றைய தினத்தை ஞாபகப்படுத்தியவர் உக்கிரமாக மாறி இருக்க…


நேத்ரா அவரிடம் சொன்ன விசயமோ வேறாக இருந்தது… அது தனசேகரையோ புரட்டிப் போட்டிருந்தது… முதலில் தன் மனைவியைத் தவிர வேறு யாரும் தன்னிடம் நெருங்கக் முடியாது... என்றுதான் அவளை வெளியேறும்படி கத்தினாராம்… ஆனால் தான் வெளியேறவில்லை என்றும் அவருடன் தான் அன்றைய இரவை பகிர்ந்து கொண்டாள் என்று சொல்லி முடிக்க… தனசேகர் நம்பவே இல்லை… நம்பவும் முடியவில்லை…


தன் மனைவியை விட்டு வேறு ஒரு பெண்ணோடு தன்னை நினைத்துப் பார்க்கவே அவரால் முடியவில்லை… மனைவிக்கு துரோகம் செய்துவிட்டோமா இந்த எண்ணமே கொடுமையான மரண வலியைக் கொடுத்திருந்தது…. ஆனாலும் எங்கோ ஒரு மூலையில் மனம் தான் அப்படி செய்திருக்க மாட்டோம் என்ற எண்ணம் திண்ணமாக ஓடிக் கொண்டிருக்க… நேத்ரா அதற்கும் பதிலடி கொடுத்தாள்… கேசவன் திருமூர்த்தி உதவியுடன் டிஎன்ஏ ரிப்போர்ட் வாயிலாக ...


அதுமட்டுமல்லாமல் இத்தனை வருடங்களாக வராதவள்… இப்போது மட்டும் ஏன்…. எதற்காக வந்தாள்… என்ற கேள்வியை தனசேகர் அவளிடம் வைக்க… அதற்கு பதில் திருமூர்த்தி கூற ஆரம்பித்தார்….


“தனா… இந்தப் பொண்ணு… மூணு மாசம் இருக்கும் போதே உன்னைத் தேடி வந்தா… நாங்கதான் மிரட்டி அனுப்பி வச்சுட்டோம்… எங்கள மீறி உன்கிட்ட வரவிடுவோமா… இப்போ எங்க தேவைக்கு தேவைப்பட்டா… கூப்பிட்டுகிட்டோம்…”


தனசேகர் அடுத்த அதிர்ச்சியோடு தனது நண்பர்களைப் பார்க்க…


“என்ன பார்க்கிற... என் பையன்… உன் கம்பெனில ப்ராஜெக்ட் இண்டக்‌ஷன் வந்தப்போ தான் ஒரு மிகப்பெரிய தகவல் சொன்னான்… அதாவது நாம ப்ரோசஸ் பண்ணிட்டு இருக்கிற மெட்டல்… ஆட்டோமொபைல்ல இன்னும் சில வருசங்களுக்கு தேவைப்படுகிற முக்கியப் பொருளா மாறப் போகுதுன்னு… இப்போதே லாபகரமான தொழில்தான்… ஆனால் சில வருடங்களில் உச்சக்கட்டத்துக்கு இதோட மதிப்பு ஏறும்னு… அவன் சொல்லித்தான் உன்கிட்ட வந்தோம்… “


தனசேகருக்கு அடுத்த அடி… நண்பர்களிடம் இருந்து… துரோகிகளாக மாறி இருந்தனர்… திருமூர்த்தியும் கேசவனும்…


”உன்னோட பிஸ்னஸ எங்ககிட்ட கொடுத்திரு… மொத்தமா கூட வேண்டாம்… சின்னதா ஒரு பார்ட் ஷேர் தருகிறோம்… சாதாரண பிஸ்னஸ் தான்… ஆனால் கால மாற்றத்தில் இது இப்போ பெருத்த லாபம் தரும் பிஸ்னஸா மாறினது உன் கெட்ட நேரமா… இல்லை எங்க நல்ல நேரமான்னு தெரியலை… உனக்கப்புறம் உன் பையனுங்களாம் இதை எடுத்து நடத்த முடியாது… அந்தத் திறமையும் இல்லை... ஒண்ணு குழந்தை… இன்னொன்னு வளர்ந்திருந்தாலும் குழந்தைதான்” கேசவன் சொன்ன போது மற்றதெல்லாம் அவர் தலையில் ஏறவில்லை… 'பசங்க' என்று பன்மையில் அவர்கள் விளித்த போதே அவர் உடைந்திருக்க… இருந்தும் சுதாரித்தவராக… அங்கிருந்து வெளியேறியவர்…. அதன் பிறகு தான் தவறு செய்யாதவர் என்று நிருபிக்க போராடினார்தான்… ஆனால் எங்கு சென்ற போதும் மருத்துவமனை முடிவுகள் அவருக்குச் சாதகமாக இல்லை… ஒரு கட்டத்தில் அவரே நம்பும்படியாக சூழ்நிலையின் கட்டாயம் அவரை மாற்றிக் கொண்டு இருந்தது…


நேத்ராவும் பெரிதாக அவரை தொந்தரவு செய்யவில்லை… காரணம்… நேத்ராவைப் பொறுத்தவரை… தனசேகரும் முக்கியமில்லை… அவரது பணமும் குறிக்கோள் இல்லை… உண்மையில் சொல்லப் போனால் தனசேகரே அவளின் குறிக்கோள் இல்லை… தனசேகர் மாதிரி ஒரு நல்லவனின் குழந்தை அவள் வயிற்றில் என்பதால் ஏற்றுக் கொண்டாள்… இல்லையென்றால் அவள் கருக்கலைப்பு வரிசையில் தனசேகர் வாரிசும் இடம்பெற்றிருக்கும்… ஏனோ தனசேகரின் வாரிசு அவளுக்குப் பிடித்திருந்தது… ஆனால் அவரை பெரிதாக தொந்தரவு செய்யவில்லை.. இப்போது கூட கேசவனும் திருமூர்த்தியும் தான் அவளையும் மிரட்டி தனசேகர் வாழ்க்கையில் புகுத்தியிருந்தார்கள்…


ஆக மொத்தம் நேத்ரா அவருக்கு பிரச்சனை அல்ல என்பது உறுதி ஆகி இருந்தாலும்… அவளை வைத்து கேசவனும்.. திருமூர்த்தியும் மொத்தமாக தனசேகரை சூறையாட நினைத்த திட்டம் தனசேகருக்கு புரிந்தது…


தனசேகரின் மொத்த நிம்மதியும் பறி போயிருந்தது… பணம் தொழில்… இவை எல்லாவற்றையும் விட தன் மனைவி இலட்சுமிக்கு துரோகம் செய்து விட்டோம் என்று அவர் கொஞ்சம் கொஞ்சமாக நம்pa ஆரம்பித்திருக்க… அதன் பின் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது… என்ற ரீதியில் அவரால் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியவில்லை…


மகன்- 20 வயது வாலிபன்.. இரண்டு மகள்கள் என்ற நிலையில் 4 வயதில் இன்னொரு சிறுவன்… உலகம் அவரை எப்படி நினைக்கும்… அதைவிட அவரது மனைவி இலட்சுமிதான்… அவர் முன் வந்து நின்றாள்… தன்னையே அவர் அடியோடு வெறுக்க ஆரம்பித்தார்…


இனி தன் மனைவி முகத்தில் எப்படி விழிப்பது… என்ற குற்ற உணர்ச்சி மட்டுமே அவரை வாட்டி வதைக்க ஆரம்பித்து இருந்தது…


தன்னாலேயே தாங்க முடியவில்லையே … தன் மனைவி தாங்குவாளா… குற்றம் புரிந்தவராக மெல்ல மெல்ல தன் மனைவியைத் தவிர்க்க ஆரம்பித்தார் தனசேகர்…


இலட்சுமியோடான அவரது தாம்பத்திய வாழ்க்கை இன்னொரு பெண்ணுடன் பகிர்ந்திருக்கப்பட்டிருக்கின்றது என்று தெரிந்த பின் அதன் பிறகான நாட்களை அவரால் மனைவியுடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை… தன்னவளை மனதால் நெருங்கியிருந்தவர்… உடலளவிலோ விலகினார் முற்றிலுமாக… தானறியாமல் செய்த துரோகத்தின் தண்டனையை தனக்கு மட்டுமல்லாமல் அவளுக்கும் சேர்த்து கொடுத்திருந்தார்… அந்த இரண்டு மாத காலத்தில்…


நேத்ரா விவகாரங்கள் அவரை அலைகழித்துக் கொண்டிருந்த ஒரு நாளில் தான் அவரது மகன் வேறு ஒரு மிகப்பெரிய தொகையை எடுத்திருக்க… அது ஏனென்று கூட கேட்க முடியாத நிலையில் தனசேகர் இருந்தார்…


சென்னையில் அவன் என்ன செய்து கொண்டிருக்கின்றான்… கல்லூரி மாணவனான அவனுக்கு ஏன் இவ்வளவு பணம் தேவைப்பட்டது என்று கூடக் கேட்கத் தோன்றவில்லை… அந்த அளவு தனசேகர் தன் சுயத்தை இழந்து கிட்டத்தட்ட பைத்தியக்காரனாக இருந்த காலம் அது


இது நடந்துகொண்டிருந்த போதே ரிஷி வேறு தன் குடும்பத்தைச் சென்னைக்கு அழைத்திருக்க… அவர்களை அங்கு அனுப்ப முடிவு செய்தவர்… தனக்கு நடந்து கொண்டிருந்த பிரச்சனைகளுக்கும் முடிவு கட்ட தயாராகி இருந்தார்…


தன் மனைவியோ… தன் குடும்பமோ… தனக்கு வேறொருத்தியோடு தொடர்பு இருந்திருக்கின்றது…. என்று தெரிந்து கொள்வதை விட… இந்த தொழில், பணம் இதெல்லாம் இல்லாமல் இருப்பது நிம்மதி என்று தன் தொழில் சாம்ராஜ்ஜியத்தை நண்பர்கள் என்று தன்னை ஏமாற்றிய துரோகிகளிடம் கொடுக்க சம்மதித்து…. பங்குகளை எல்லாம் மாற்றினார் தனசேகர்


ஆனால் அப்போதும் நிம்மதி இல்லை… தான் செய்த தவறை குடும்பத்தினரிடமிருந்து மறைக்கத்தான் முடிந்ததே தவிர மறக்க முடியவில்லை… அழிக்க முடியவில்லை… உள்ளுக்குள் உறுத்தல் இன்னும் அதிகமானதே தவிர… குறைந்தபாடில்லை…


ஆக மொத்தம் தனசேகர் தனக்குள்ளாகவே போராடிக் கொண்டிருந்த நாட்களில் தான் ரிஷியின் உச்சக்கட்ட பிரச்சனை வேறு… தான் தான் இப்படி மோசம் போய்விட்டோம் என்றால் மகனுமா???… உள்ளுக்குள் உடைந்து சிதறிப் போயிருந்தார் தனசேகர்…


அதுவரை யாரிடமும் காட்ட முடியாமல் அவர் மீதே அவர் கொண்டிருந்த குற்ற உணர்ச்சியும்… கழிவிரக்கம்… கோபம் விரக்தி இது எல்லாவற்றையும் மகன் செய்த செயலைக் காட்டி… தன் அத்தனை உணர்ச்சிகளையும் ரிஷியின் மேல் மொத்தமாக கொட்டி விட்டவர்… உணர்வுகளின் தாக்கம் தீர்ந்து முதன் முதலாக யோசிக்க ஆரம்பித்தார்… தன்னைப் பற்றி… ரிஷியைப் பற்றி…


தான் அவனை அவ்வளவு திட்டிய போதும் அவன் அவர் கண்களைப் பார்த்து நிமிர்ந்து தைரியமாகப் பேசியது இவர் உணர்ந்தார்தான்… தான் தொலைத்திருந்த நேர்மையும் தைரியமும் அவர் மகனிடம் கண்டு கொண்டார் தனசேகர்


தன் மகன் தவறு செய்திருந்தால் இப்படியா பேசி இருப்பான்… ஏதோ ஒரு நேர்மை மகனிடம் இருக்க… அவனிடம் பேசினால்… அவன் மற்ற பழக்கங்களை எல்லாம் திருத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது… என்று மகனிடம் பேச வந்தவர்… மெல்ல மெல்ல மகனிடம் நம்பிக்கை வர தன்னைப் பற்றி… தன் வாழ்க்கையில் திடீரென நடந்த அசம்பாவிதங்கள் பற்றி மொத்தமாக ரிஷியிடம் சொல்லி விடலாம் என்று தான் நினைத்தார்… ஆனால் முடியவில்லை.. தொழில் சம்பந்தமாக அதில் அவருக்கு நடந்த துரோகங்கள் மட்டுமே சொல்லிச் சென்றவர்… தன் வாழ்வின் இன்னொரு பக்கம் பற்றி மகனிடம் நேரடியாகச் சொல்ல முடியவில்லை… ஏதோ தடுத்து விட்டது


யாரோ ஒரு சிறுமியைக் காப்பாற்றி மகன் நாயகனாக தன்னைக் காண்பித்த தருணத்தில்… அவரோ தன் இழிநிலையை மகனிடம் சொல்ல முடியாமல் மனதுக்குள் அசிங்கப்பட்டு கூனிக் குறுகிதான் போனார்… சொல்ல முடியாமல் வந்தும் விட்டார்… தொழில் துரோகத்தை சுலபமாகச் சொல்ல முடிந்த அவரால், தான் தன் குடும்பத்துக்கு செய்த துரோகத்தை மகனிடம் அவன் முகம் பார்த்து சொல்ல முடியாத அசிங்கமான தன் அவல நிலையை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை… அது இன்னமுமே அவரை மனதோடு கொல்ல ஆரம்பித்தது…


ஆனாலும் மகனிடம் சொல்லி இருக்கலாமோ??… கிடைத்த வாய்ப்பை தவற விட்டு விட்டோமோ??… தனக்குள் மருகியவருக்கு… மகனிடம் தெரியப்படுத்த வேண்டும் என்ற உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருக்க… இப்போது வாய்ப்பை மட்டுமல்ல…. ஏனோ அடுத்த நாளின் விடியலைக் கூட அவர் எதிர்பார்க்கவில்லை…


சத்யாவிடம் ஏற்கனவே சொல்லி இருந்தது தான்… அவன் ஒருவன் மட்டுமே தன் முதலாளிக்கு இழைக்கப்பட்ட துரோக காலத்தில் உடன் இருந்தது…


தன்னால் தன் மனைவி மக்களிடம் நேரடியாக அவர்கள் முகம் பார்த்து இதைச் சொல்ல முடியாது… ஒரு வேளை தான் இறந்த பின்னாலோ… இல்லை தானே தன் துரோகத்தை பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைத்தாலோ சத்யாவின் வாயிலாக மட்டுமே அவர்கள் கேட்டு தெரிந்து கொள்ள வெண்டும் என்று முடிவு செய்து தன் குடும்பத்தினர் யார் வந்தாலும் நேத்ரா பற்றிய அனைத்து விபரங்களையும் ஒரு டைரியில் தன் கைப்பட எழுதி… அந்த டைரியை அவர்களிடம் கொடுத்து விடுமாறு சத்யாவிடம் கொடுத்து வைத்திருந்தார்தான்….


ஆனால் இன்று மகனிடம் பேசிவிட்டு வந்தவருக்கு ஏனோ ஒரு நம்பிக்கை மகன் அனைத்தையும் பார்த்துக்கொள்வான் என்று…


ஆனால் தன் மனதை எப்படி அவனுக்கு மட்டும் எப்படி தெரிவிப்பது… அப்போது அவருக்குத் கிடைத்த யோசனைதான்… கண்மணியின் புகைப்படம் அடங்கிய நாளிதழ்


கண்மணி இருந்த பகுதியை வெட்டி அந்த டைரியில் வைத்தவர்… தனக்கும் சத்யாவுக்குமான தனிப்பட்ட அலைபேசி எண்ணை அடையாளமிட்டு வைத்து மற்ற டைரிகளோடு சேர்த்து வைத்தார்…


ஒருவேளை மகன் சாதுரியமாக இருந்தால்… இதைக் கட்டாயம் கண்டுபிடிப்பான்… தன்னைப் பற்றி தவறாக நினைத்தாலும்… இதை மட்டும் கண்டுபிடித்து தன் வாழ்க்கையின் மறுபக்கம் தெரிந்தால்… கண்டிப்பாக மகன் வாழ்க்கையில் சூதுவாதுகளை எதிர்கொள்ளும் வெற்றி மகனாக அவன் மாறுவான் என்றே தோன்றியது அவருக்கு


அதேநேரம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை… தன்னைப் பற்றிய உண்மை கடைசி வரை தன் குடும்பத்தாருக்கு தெரியாமலேயே போகட்டும்..


ஆனால் தன் தொழில் துரோகிகள் மூலம் ஒருவேளை தெரிந்து விட்டால்… தன் முதுகில் குத்திய அந்தத் துரோகிகள் தன்னிடம் சத்தியம் செய்து கொடுத்ததை மட்டும் காப்பாற்றுவார்களா என்ன? துரோகிகளிடம் சத்தியத்தை வாங்கியிருந்த மனது அடி வாங்கியதுதான்…


இது எல்லாவற்றையும் மீறி… தன் வாரிசு என காண்பிக்கப்பட்ட அந்த நாலு வயது சிறுவன்… யார் செய்த பாவத்திற்கோ அவன் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்……


ரிஷியைப் போலவே அவனும் அவர் மகன் தானே… ரிஷிக்கு என்னவெல்லாம் கிடைக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்திருந்தாரோ… அதைப் போலவே அந்தப் பையனுக்கும் எழுதி தனியே பிரித்து அவனிடம் சேர்ப்பித்து விட்டார்…


இந்த இளகிய மனதுதான் அவரை அதள பாதாளத்தில் தள்ளி விட்டதோ… அந்த இளகிய மனம் என்னும் பரம்பரை குணம்தான் அவரிடமிருந்து அவர் மகனுக்கும் கடத்தப்பட்டிருந்ததோ… ஆனால் அவரது மரணமே ரிஷியின் இளகிய மனதை இரும்பென இறுக்கியும் மாற்றிச் சென்றிருந்தது…


தொழில் தான் போய்விட்டது… ஆனால் மனைவி குழந்தைகளை நட்டாற்றில் விடாமல் அவர்கள் வருங்காலத்திற்கென திருமூர்த்தி கேசவனிடமிருந்து குறிப்பிட்ட தொகையை வாங்கி பத்திரமும் படுத்தியவருக்கு தற்போதைய பிரச்சனை… இனி அவரது தொழில் என்ன… எதைப் பார்ப்பது… மனைவியிடம் என்ன சொல்வது என்ற பிரச்சனை மட்டுமே இருக்க… எங்கும் இருள் சூழ்ந்த நிலைதான்…


டைரியில் எழுதி வைத்தவற்றை நினைத்தபடியே…. அன்றைய இரவு வெகு நேரம் மனைவியைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தார்… மனைவிக்கு துரோகம் எப்படி செய்தோம்… நினைவு தப்பிய நிலையிலும் தான் தன் இலட்சுமியை மட்டுமே நினைந்திருக்க வேண்டுமே… எப்படி அவளை மறந்தோம்… இந்தக் கேள்விதான் இந்த இரண்டு மாதங்களாக அவரை கூர்கூறாக அவரைக் கிழிக்கும் கேள்வி… நெஞ்சைத் தாக்கிய சூரீரென்ற வலியைக் கூடப் பொருட்படுத்தாமல்… அன்றும்… கூட அதையே நினைத்துக் கொண்டிருந்தவருக்கு… அன்று மட்டுமல்ல…. என்றுமே விடை கிடைக்கப் போவதில்லை என்று தெரியவில்லை


அவரைத் துளைத்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் அவர் தவித்தது போல… அவரது உயிரும் அவர் அறியாமலேயே அவரை விட்டுப் பிரிந்திருந்தது…


---


தன் தந்தையின் டைரியை படித்து முடித்தவன் தூக்கி எறிந்த வேகத்தில் அதன் பக்கங்கள் கூட தனித்தனியாக பிரிந்து அந்த அறை முழுக்க தனசேகரின் எழுத்துக்கள் அடங்கிய காகிதங்கள் மட்டுமே… சத்யாதான் அவற்றை எல்லாம் சேகரித்துக் கொண்டிருந்தான்….


ரிஷி என்ற இருபது வயது இளைஞனுக்கு தொழிலில் தந்தை ஏமாந்து விட்டேன் என்று சொன்ன போது கூட.. தந்தையிடம் ஆறுதலாகத்தான் பேசினான்… அதிர்ச்சி அடையவெல்லாம் இல்லை… ஆனால் தன் தந்தையின் நடத்தை… அதுவும் நடந்தது எல்லாம் அவரறியாமல் நடந்தது என்ற அவரின் சப்பைக்கட்டு வேறு… ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை…


சத்யா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்… தந்தையின் மேல் அவனுக்கு தோன்றிய கோபத்தையும் வெறுப்பையைம் அருவருப்பையும் மாற்ற முடியவில்லை…


கேவலமான காரியங்கள் எல்லாம் செய்து விட்டு…. தன்னை எப்படி எல்லாம் பேசினார்…


’மகன் தந்தைக்காற்றும் உதவி அது இது என்று குறள் வேறு… அவமானத்தின் மொத்த குத்தகையாக இருந்துவிட்டு தன்னை அவமானத்தில் கூனிக் குறுக வைத்ததென்ன…


“தானும் அந்த ....க்குப் பிறந்தவனும் சமமா...” குமுறியவன்…


”ஏன் சத்யா இதெல்லாம் சொல்லல… இந்த விசயமெல்லாம் முன்னமே தெரிந்திருந்தால் அந்த ஆளுக்கு கொல்லி கூட வைத்திருக்க மாட்டேன்… அவனுகெல்லாம் அந்தத் தகுதியே இல்லை… என் அம்மா இந்தாளைப் போய்… ச்சேய்” ஆங்காரமாக கத்தியவன் அவன் அகராதியில் அறிந்த அளவுக்கு கெட்ட வார்த்தைகள் கொண்டு தன் தந்தையை வசைபாடியும் அவன் மனம் ஆறவில்லை… தன் தாயிடம் சொல்லி தனசேகரின் முகத்திரையைக் கிழிக்க வேண்டுமென்று தான் வந்தான்…


ஆனால்… கணவர் இறந்தது… அந்த மரணமும் தொழில் ரீதியாக அவரடைந்த நஷ்ட கொடுத்த மன உளைச்சலால் என கேள்விப்பட்டது… தன் மகன் அவன் நடத்தை என இலட்சுமியின் உடல்நிலை மிக மோசமாக மாறிக் கொண்டிருக்க… இலட்சுமியோ மருத்துவமனை வாசம்…


அதிர்ச்சியான விசயங்கள்.., மனதைப் பாதிக்கும் விசயங்கள் இப்போதைக்கு அவரிடம் போக வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரித்ததோடு மட்டுமல்லாமல்… ரிஷியுமே சில நாட்களுக்கு அவரிடம் பேச வேண்டாம் என்ற அறிவுரை வேறு மருத்துவர்களால் சொல்லப்பட்டிருக்க… ரிஷி தன் தந்தையின் துரோகத்தை… அவர் மீதான கோபத்தை… யாரிடமும் காட்ட முடியவில்லை… இதை எல்லாம் கொட்டித் தீர்க்கும் ஒரே மூலம் சத்யா மட்டுமே இருக்க… தன் தந்தையை திட்டுவதற்காகவே சத்யாவை தினம் சந்திக்கச் சென்றான்…


அவன் தந்தையைத் திட்டும் ஒவ்வொரு வார்த்தையிலும் அவன் இறுக ஆரம்பித்திருந்தான் என்பதே உண்மை… வாழ்க்கையில் மிகவும் நேசித்த… பாசம் வைத்த… நம்பிக்கை வைத்த… ஒரே நபர்…. அவருக்கு ஏற்பட்ட துரோகங்கள் கூட அவனை இந்த அளவு இறுக்கமாக்கவில்லை… ஆனால் அவன் அறிந்து கொண்ட அவரின் மற்றொரு முகம்… காதல்… குடும்பம்.. பாசம் பந்தம் அத்தனையையும் அவனுக்குள்ளே புதைத்து விட்டிருந்தது…


இவை எல்லாவற்றையும் விட்டு விட்டு… மறந்து விட்டு வெகு தூரம் ஓடி விட நினைத்தான் தான்….


குடும்பம்… அதன் பந்தம்,,, உறவுகள்… என இலகுவாக அவனுக்குள் சந்தோசத்தை மட்டுமே கொடுத்த உணர்வுகள்... இப்போது கைவிலங்குகளாக அவனைக் கட்டுப்படுத்த அதையும் வெறுத்தான்…


தாய் தங்கைகள் என தானாக அமைந்த உறவுகளால் கட்டிப் போடப்பட்டவன்… இதை மீறி புதிதாக எந்த உறவும் இனிமேல் தன்னைக் கட்டுப்படுத்தக் விடக் கூடாது என்று முடிவு செய்தவன்தான்… அன்று தன் காதலையும் துறந்தான்…


இன்று அவனே மனைவியின் கட்டுப்பாட்டுக்குள் விரும்பியே தன்னை மாட்டிக்கொண்டு இருந்தான் என்பது வேறு விசயம்...


ஆக காதல்… மணவாழ்க்கை… என அவன் கட்டிய கோட்டைகள் எல்லாம் வெறும் மணல் கோட்டைகளே என்பதையும் அவன் உணர்ந்து கொண்டான்… தன் தந்தை தனக்கு காட்டிப் போயிருந்த தாம்பத்திய வாழ்க்கையினால்…


வேசியைத் தொட்ட கையால் மனைவியைத் தொட முடியவில்லையாம்… உத்தமன் வேசம் போட்ட தந்தையின் வார்த்தைகளில் பல்லைக் கடித்தான் ரிஷி…


தன் தாய்க்கு எப்படி இருந்திருக்கும்… கணவனை நெருங்கும் போதெல்லாம் அவர் விலகிப் போன நிலையை நினைத்து… காரணமே புரியாமல் தவித்திருப்பாரே….


“அந்த ஆள் தவறு செய்தார்… தெரிந்து விலகினார்… ஆனால் என் தாய் என்ன பாவம் என்ன செய்தார்…”


ஒரு தாய் தந்தையைப் பற்றி மகன் நினைக்கக் கூடாத எண்ணங்கள் எல்லாம் ரிஷியை நினைக்கவைத்தது காலத்தின் கொடுமை…


கண்மணியிடம் சொல்லிக் கொண்டிருந்தவனால் அதற்கு மேல் பேச முடியவில்லை… வார்த்தைகள் ஒவ்வொன்றும் நடுங்கி அவனிடமிருந்து வெளிவர… என்ன முயன்றும் அவனால் அடுத்து தெளிவாகவே வார்த்தைகளைக் கோர்க்கவே முடியவில்லை…


‘ரிஷி… வேண்டாம் ரிஷி… எனக்கு எதுவுமே தெரிய வேண்டாம்… நிறுத்திருங்க…” கண்மணி கணவனின் நிலை கண்டு அவன் படும் பாடு கண்டு பதறி அவனை சாந்தப்படுத்த முயற்சிக்க…


ரிஷியின் கண்களில் கண்ணீர் கரை புரண்டோட… சில நிமிடங்கள் மௌனமாக மனைவியின் தோள் சாய்ந்திருந்தவன்… மீண்டும் பேச ஆரம்பித்தான்


“இந்த உலகத்திலேயே அதிகமா நேசித்துப் பேசியவரும் அவர்தான்… வெறுத்துப் பேசியவரும் அவர்தான்”


”விட்ருங்க ரிஷி… என்னால கேட்க முடியலை “ என்ற கண்மணியிடம்… அவனோ விடாமல் பேசிக் கொண்டிருந்தான்


“இது எல்லாமே கொடுமை இல்லை கண்மணி… இதுக்கு மேலதான் கொடுமையே… கேவலம் பணத்துக்காக ஒரு மனுசனோட ஆத்மாவை நிம்மதியில்லாமலேயே கொன்னுருக்கானுங்க இந்தப் பாவிங்க” என்றவன் தொடர்ந்தான்… கண்மணியும் இப்போது அவனை நிறுத்தவில்லை


----


அந்த நாட்கள்...


வாழ்க்கையில் பற்றில்லாமல்…. தாயிடமும் நெருங்க முடியாமல்…. தங்கைகளிடமும் சொல்ல முடியாமல்… துரோகிகளிடமும் போட்டி போட முடியாமல்… காதலையும் காதலியையும் விட்டு விலகி விரக்தியோடிருந்த நாட்கள் ரிஷிக்கு….


உண்மையை சொல்லப் போனால்… அவனுக்கு தந்தை மீது மட்டுமே கோபம் வேறு யாரிடமும் அந்த அளவுக்கு இல்லை என்றே சொல்லலாம்… ஏன் அந்தக் கேசவன் திருமூர்த்தி மீது கூட இல்லை என்றே சொல்லலாம்…


ஒருபக்கம் தாயின் புறக்கணிப்பு… மறுபக்கம் தந்தையின் துரோகம்… இதில் கேசவன் திருமூர்த்தி இவர்களின் மறைமுக மிரட்டல்… இது எல்லாம் போக நீலகண்டனின் குத்தல் பேச்சுக்கள் என ரிஷிக்கு பலகட்ட தாக்குதல்கள்… தாக்குப் பிடிக்க முடியாமல்… தவிக்க ஆரம்பித்திருந்தான் அந்த 20 வயது இளைஞன்… இந்த பலமுனைத் தாக்குதலை எதிர்த்து எதிர்நீச்சல் போட முடியாமல் தோல்வியை ஏற்றுக் கொண்டு மூழ்க ஆரம்பித்திருந்தான்.. கொஞ்சம் கொஞ்சமாக தன்னை அழித்துக் கொள்ளவும் ஆரம்பித்து இருந்தான்…

அடுத்து தான் என்ன செய்வது… எதை நோக்கிப் போவது இந்த சிந்தனை எல்லாம் சுத்தமாகவே அவனிடம் இல்லை… வாழ்க்கையில் முன்னேறுவது … பழிவாங்குவது… தொழிலை மீண்டும் கைப்பற்றுவது என… இப்படி திட்டங்கள் எல்லாம் அவனிடம் அப்போது மருந்துக்கு கூட இல்லை… முக்கியமாக தன்னைப் பற்றிய அக்கறை என்பது சுத்தமாக இல்லை… ரிதன்யா ரித்விகா இலட்சுமி இவர்கள் மட்டுமே அவனின் உயிரோட்டமாக இருக்க… அது மட்டுமே அந்த அவனை காப்பாற்றிக் கொண்டிருந்தது..


தனசேகரை விட அவர் மகன் மோசமான நிலையில் இருந்தான் என்றே சொல்லவேண்டும்…


சத்யா மட்டுமே அவனின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருந்தான்…


சத்யா என்னவோ அவனின் போதி மரம் என்பது போல தினமும் அவன் இருக்கும் இடத்திற்கு சென்று விடுவான்.. மற்றபடி ஒரு மாதிரியான மந்த நிலை… உணர்ச்சியற்ற மரம் போல… எதுவுமே செய்யாமல்… குடும்பத்தில் எந்த விசயம் நடந்தாலும் அதில் ஒட்டாமல்… எனக்கென என்பது போல ஒதுங்கி இருந்தவனை… அவனது மாமா நீலகண்டன் வழக்கம் போல இன்னும் இளக்காரமாக பேசி விட..


அன்றும் வழக்கம் போல சத்யாவை சந்திக்க வந்தவன்… தன் மனக்குமுறலை எல்லாம் அவனிடம் கொட்டிக் கொண்டிருந்தவன்… ஒரு கட்டத்தில் மனதின் வலி தாங்க முடியாமல் துடித்தவன் ஆத்திரத்தில் கைகளை அங்கிருந்த கண்ணாடியில் குத்திக் கொள்ள உயர்த்த… ஆனால் அது ரிஷியால் முடியவில்லை… கரத்தை உயர்த்த முடியாத வலியில் துடித்தவன் ஏனென்று கைகளைப் பார்க்க… அவன் கையின் மணிக்கட்டுப் பகுதியில் கண்மணியின் வளையல் குத்திய இடத்தில் இருந்து இரத்தம் பீறிட்டு வந்து கொண்டிருக்க… அதைப் பார்த்தபடியே மயங்கிச் சரிந்தவனை சத்யாதான் பிடித்து தன் மேல் தாங்கிக் கொண்டான்


---



2,495 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page