அத்தியாயம் 42-1
/* உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
படைத்து பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே..
பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ*/
தனக்கு யாரென்று தெரியாத… சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணை திடிரென்று அறிமுகப்படுத்திய பார்த்திபனைப் பார்த்து முறைத்தவளுக்கு… அவன் சொன்னவுடன் அவன் பேச்சைக் கேட்டு அங்கு அமரவே பிடிக்கவில்லைதான்… ஆனாலும் சபை நாகரீகம் கருதி… வேறு வழியின்றி யமுனாவின் அருகில் அமர… பார்த்திபனோ கண்மணியின் முறைப்பை நோட்டமிட்டபடியே யமுனாவிடம் திரும்பி பேச ஆரம்பித்தான்…
“மிஸ் யமுனா.. இவங்க மிஸஸ் கண்மணி” ஆரம்பித்து சற்று இடைவெளிவிட்டு ரிஷிகேஷ்... என்று முடிக்க…
அதைக் கேட்ட யமுனாவின் முகத்திலோ ஆயிரம் மின்னல்கள்…
அதிர்ந்தவள் வேறு ஏதும் பேசாமல்… எதிலோ மாட்டிக் கொண்டது போலவும்… அதிலிருந்து தப்பித்து செல்லும் வேகத்தில்... அவசர அவசரமாக எழுந்து அங்கிருந்து கிளம்ப முயற்சிக்க… அதை கண்டுகொண்ட பார்த்திபனோ அவளை விட வேகமாக எழுந்து எட்டி அவள் கைப்பிடித்து அவளை அமர வைக்க முயற்சிக்க… அவன் பிடிக்குள் மாட்டிக் கொண்ட யமுனாவோ அந்த இறுக்கமான கைப்பிடியில் இருந்து தன்னை விடுவிக்க முயற்சித்தபடியே
“மிஸ்டர்… என்ன வம்பு பண்றீங்களா… நான் கத்தினேன்னு வச்சுக்கங்க” பார்த்திபனையே மிரட்ட ஆரம்பிக்க… கண்மணியோ ஒன்றுமே புரியாத பார்வையாளராக மட்டுமே பார்க்க ஆரம்பித்தாள் முதலில்…
அவளும் அங்கு நடப்பதை புரிந்து கொள்ள எவ்வளவோ முயன்றாள்தான் ஆனால் முடியவில்லை… பார்த்திபன் இங்கு தன்னை வரவைத்ததின் நோக்கம் என்ன?… இந்தப் பெண்ணோ என்னைப் பார்த்தவுடன்… அதிலும் தன்னை அறிமுகப்படுத்தியவுடன் அந்தப் பெண்ணுக்கு வந்த பதட்டம் ஏனோ…
எதுவுமே புரியாததால் யமுனா-பார்த்திபன் பேச்சுவார்த்தைகளுக்கு இடையே நுழையாமல் அமைதியாக இருந்தாள் தான் கண்மணி…. ஆனால் அதே நேரத்தில் பார்த்திபன் அந்தப் பெண்ணிடம் வன்மையாக நடப்பதைப் பார்த்த பின்பு… அதைத் தட்டிக் கேட்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு சும்மா அமர்ந்திருக்க முடியவில்லை கண்மணியால்
“என்னாச்சு பார்த்திபன் உங்களுக்கு… ஃபர்ஸ்ட் அவங்க கைய விடுங்க… இந்த மாதிரி… அதுவும் பொது இடத்திலேயே இப்படி நடந்துக்கறீங்க… இங்கே இருக்கறதும் இல்லாததும் அவங்க இஷ்டம்… அதை தடுக்க உங்களுக்கு என்ன உரிமை… உங்களுக்குத் தெரிந்தவங்கன்னா கூட.. லிமிட்டுனு இருக்கு” என்று அவனைக் கண்டிக்க ஆரம்பிக்க… பார்த்திபன் என்ன நினைத்தானோ இப்போது யமுனாவின் கைகளை விட்டு விட்டான்…
கண்மணி நினைத்தது போல கோபமாகவோ… இல்லை யமுனா நினைத்தது போல தவறான எண்ணத்திலோ அவன் யமுனாவின் கைகளைப் பிடிக்கவில்லை… எங்கே இப்போதும் யமுனா தன்னை விட்டுப் போய் விடுவாளோ என்ற பதட்டத்தில் வந்த அவசரகுடுக்கைத் தனம் அவனையும் மீறி யமுனாவின் கைகளைப் பிடிக்க வைத்து விட்டது… தன்னையே அவன் திட்டிக் கொண்டு இருக்க.. யமுனாவோ மீண்டும் தான் இருந்த இருக்கையிலேயே அமர்ந்திருந்தாள் இப்போது…
கண்மணியின் ஆதரவான ஆதுரமான பேச்சோ இல்லை எதுவோ யமுனாவை அனிச்சையாக அமர வைக்கச் செய்திருக்க… அமர்ந்தவளோ குனிந்தபடி அழ ஆரம்பித்திருந்தாள்… பார்த்திபனோ அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்…
கண்மணி இருவரையும் பார்த்தபடியே
“என்ன நடந்தது… யார் இவங்க… என்னை எதுக்கு இங்க கூப்பிட்டீங்க… இவங்க ஏன் அழறாங்க” என்று வரிசையாகக் கேள்விக் கணைகளைப் பார்த்திபனிடம் தொடுக்க ஆரம்பித்தவள்…
“மிஸஸ் கண்மணி ரிஷிகேஷ்”
பார்த்திபன் தன்னை யமுனாவிடம் அறிமுகப் படுத்திய விதம் இப்போது அவளுக்குள் மின்னலாய்த் தோன்றி மறைய… யமுனாவை யோசனைப் பார்வைப் பார்த்தபடியே… பார்த்திபனிடம் திரும்பியவள்…
“ரிஷிக்கும் இவங்களுக்கும் என்ன சம்பந்தம் பார்த்திபன்…” என்று கேட்ட கண்மணியிடம் துளி கூட பதட்டம் என்பதே இல்லை… ‘என்ன விசயம்’ என்று தெரிந்து கொள்ளும் சாதாரண உத்வேகம் மட்டுமே… அதுகூட தன் கணவன் என்பதாலேயே வந்த வேகம் அது… மற்றபடி கண்மணியிடம் எந்த அதிர்வும் இல்லை…
“இவங்க ரிஷியோட காதலியாம்… ரிஷி அவங்கள மேரேஜ் பண்ணிக்கிறேன்னு ஏமாத்திட்டாராம்” இப்போது பார்த்திபன் யமுனாவை நக்கலாகப் பார்த்தபடியே கண்மணியிடம் சொல்ல.. பார்த்திபன் சொல்லி முடிக்கவில்லை… ரிஷிக்கு அழைத்திருந்தாள் கண்மணி…
“ரிஷி…!!! மாமாவோட பார்ட்னர் பொண்ணுன்னு நினைக்கிறேன… உங்ககிட்ட பேசனும்னு… இங்க ஸ்கூல் வாசல்ல வெயிட் பண்றாங்க… உங்களால இப்போ வர முடியுமா…” என்று யமுனாவைப் பார்த்தபடியே ரிஷியிடம் அலைபேசியில் கேட்டுக்கொண்டிருக்க…
எதிர்முனையில் ரிஷி என்ன சொன்னானோ இவர்களுக்குத் தெரியவில்லை… ஆனால் அவன் சொன்னதைக் கேட்டு ‘சரி’ என்று தலை ஆட்டியபடி போனை வைத்த கண்மணியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும்
பார்த்திபன் தன்னைப் பற்றி சொல்லியும் தன்னிடம் கொஞ்சம் கூட மேல் கோபம் கொள்ளாமல்… அதே நேரம் கணவனையும் சந்தேகிக்காமல் கண்மணி பேசிய விதம் யமுனாவை இன்னும் நிலைகுலைய வைக்க… இன்னும் வேகமாக அழ ஆரம்பித்திருக்க… அதைப் பார்த்த கண்மணியோ அவளுக்கு எந்த ஒரு ஆறுதலையும் சொல்லவில்லை…
மாறாக எழுந்தவள்…
“பார்த்திபன்! ரித்விகாவுக்கு ஸ்கூல் விடற டைம் ஆகிருச்சு… அவள நான் வீட்ல விட்டுட்டு வந்துடறேன்… ரிஷி இவங்கள பீச்ல மீட் பண்ணலாம்னு சொன்னாங்க… அங்க வரச் சொல்லிருக்காங்க”
“ரிஷியைப் போய்ப் பார்ப்பதா???!!… இந்த தருணம் அவள் இத்தனை நாள் எதிர்பார்த்திருந்த தருணம்தான்… ஆனால் ஏனோ இப்போது உள்ளுக்குள் ஒரு உதறல் வந்திருக்க… அது யமுனாவின் விழிகளில் பயம் கலந்த மிரட்சியைக் கொண்டு வந்திருந்தது
யமுனாவின் மிரண்ட விழிகளைப் பார்த்த கண்மணிக்கோ… அவள் மேல் தவறான அபிப்ராயம் தோன்றவில்லை… ரிஷி என்று சொன்னவுடன் யமுனாவின் கண்களில் எந்த அளவுக்கு கோபம் முதலில் தெரிந்ததோ அந்த அளவுக்கு மிரட்சியும் இப்போது அவள் கண்களில்… அதைப் பார்த்த கண்மணி என்ன நினைத்தாளோ தெரியவில்லை…. ஆனால் யமுனாவின் பயத்தைப் போக்கும் விதமாக... பார்த்திபனைக் கைகாட்டியபடி
“சார் எனக்குத் தெரிந்தவர்தான்… இவரை உங்களோட கூட்டிட்டுப் போங்க… அப்படி பார்த்திபன் கூட போக இஷ்டமில்லைனா… 10 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க… நான் வந்த பின்னால நாம ரெண்டு பேரும் சேர்ந்தே ரிஷிய மீட் பண்ணப் போகலாம்…”
கண்மணி யமுனாவிடம் இவ்வளவு சொல்லியும்… யமுனா அப்போதும் மௌனித்து இருக்க… பார்த்திபனோ யமுனாவிடம் ஒரு வார்த்தை கூடக் கேட்காமல்…
“நீ போ கண்மணி… நான் பார்த்துக்கிறேன்” பார்த்திபன் சொல்லி விட கண்மணியும் கிளம்பிவிட்டாள்…
---
சென்னைக் கடற்கரை…
கண்மணி தனியாக ஒரு புறம் நின்றிருக்க… பார்த்திபன் யமுனா இருவருமாக சேர்ந்து மறுபுறம் நின்றிருக்க… பார்த்திபன் அவளோடு ஏதோ பேசியபடியே இருந்தான்… யமுனாவும் முதலில் மிரண்டு விழித்தது போல இல்லாமல் கொஞ்சம் இயல்பு நிலைக்கு மாறியவளாக அவன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்…
கண்மணி கூட ரித்விகாவை வீட்டில் விட்டு விட்டு ரிஷி சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள்… ஆனால் அவர்களை அங்கு வரச் சொல்லி இருந்தவனோ இன்னும் வரவில்லை…
தூரத்தில் ஓசையோடு ஓய்வின்றி ஓடிக் கொண்டிருந்த கடல் அலைகளை… அமைதியாக பார்த்தபடி நின்றிருந்த கண்மணியின் அருகில் பார்த்திபன் மட்டும் வந்தான்…
“கார்ல வரும் போது… யமுனாகிட்ட பேசினேன் கண்மணி… ரிஷி அப்பாவுக்கும் இவங்கப்பாவுக்கும் பிஸ்னஸ்ல பிரச்சனை… ரிஷி அப்பா இறந்ததுக்கு யமுனா அப்பாதான் காரணம்னு… ரிஷி தேவையில்லாமல் இந்தப் பொண்ணு வாழ்க்கைல விளையாண்ட்ருக்கான்” என்ற பார்த்திபனின் கண்களில் இப்போது கொலை வெறி தாண்டவமாடத்தான் செய்தது…
தன் மனம் கவர்ந்தவளின் மனதைக் குறி வைத்து ரிஷி பண்ணிய காரியங்கள் எல்லாமே பார்த்திபனை அளவுக்கதிகமாகவே ரிஷியின் மேல் கோபம் கொள்ள வைத்திருந்தது… கூடவே அர்ஜூனிடமிருந்து வாய்மொழியாக கேட்ட வார்த்தைகளும் அதற்கு தூண்டுகோலாக மாறி இருக்க… யமுனா ஏமாந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தான் பார்த்திபன்
அவன் சொல்லிக் கொண்டிருந்ததை எல்லாம் கண்மணி காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தாள் தான்… அதற்காக அவன் சொன்னதை எல்லாம் கேட்டு அப்படியே நம்பி ரிஷியின் மேல் கோபமும் படவில்லை… அது அவளுக்கு வரவும் இல்லை
ரிஷிக்கு அவனது அப்பாவின் பங்குதாரர்கள் மீது கோபம் தான் ஆனால் அதற்காக… இப்படி தராதரமற்ற காரியங்களில் எல்லாம் இறங்கும் ஆளே இல்லை அவன்… ஆனாலும் பார்த்திபன் சொல்கிறானே… இதோ பாதிக்கப்பட்ட யமுனாவே கண் முன் நிற்கிறளே… என்ன செய்வது… ரிஷி வரும் வரை… மனம் திறந்து கொட்டும் அவன் வாய் வார்த்தைகளைக் கேட்கும் வரை இந்த பார்த்திபன் பேசுவதைக் கேட்டுத்தானே ஆக வேண்டும்… பல்லைக் கடித்துக் கொண்டு பார்த்திபன் சொல்வதை எல்லாம் கேட்க ஆரம்பித்தாள்… கேட்டும் முடித்தாள்
ரிஷி நேரடியாக சம்பந்தபடவில்லை… அந்த வகையில் கண்மணிக்கு நிம்மதி என்ற போதிலும்… யமுனா என்ற இளம்பெண்ணின் வாழ்க்கையை தன் சுயநலத்துக்காக பயன்படுத்தி இருக்கின்றான் தன் கணவன் ரிஷி என்பதைக் கண்மணியால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை…
ஒரு பெண்ணை இன்னொரு ஆடவனை வைத்து ஏமாற்றியிருக்கிறான்… அதிலும் தன் தங்கைகளை பொத்தி பொத்தி காத்து வளர்ப்பவன் தான் இந்தக் காரியத்தை செய்தானா???… தன் வீட்டுப் பெண்கள் வேறு, அடுத்த வீட்டுப் பெண்கள் வேறு என்று நினைக்கும் கேவலமான ஈனப் பிறவிகளின் கூட்டங்களில் ரிஷியும் ஒருவனா???… கண்மணியால் யமுனாவை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை… ஏனோ அவளே யமுனாவை ஏமாற்றியது போல குற்ற உணர்ச்சியில் குறுகி நிற்க… இப்போது கண்மணியின் முன் யமுனா வந்து நின்றாள்…
“கேட்டா லவ் பண்ணின மாதிரி நடிக்கத்தானே செய்தான்… அவன் சுண்டு விரல் கூட உன் பொண்ணு மேல படாத அளவுக்கு நாங்க பார்த்துக்கிட்டோம்தானே… அவன விட்டுட்டு உன் பொண்ண புது வாழ்க்கையைப் பார்க்கச் சொல்லுனு என் அப்பாகிட்ட நக்கலா சொல்லி இருக்கான் உன் புருசன்… என்னை லவ் பண்ணவன் என்கிட்ட நடிச்சான்… ஆனால் அவன் நடிப்பை உண்மைனு நான் நம்பி அவன்கிட்ட மனசைக் கொடுத்திட்டேனே.. இப்போ அந்த ஏமாத்துக்காரனே உண்மையா என்னை லவ் பண்றேன்னு என் பின்னால வந்து சுத்துறான்…. அந்த ராஸ்கல இப்போதும் லவ் பண்றேன்ன்னு சொல்லலை… ஆனால் அவனை விட்டு விலகவும் முடியலயே… இப்போ என்னால இன்னொருத்தன் கூட எப்படி குற்றஉணர்ச்சி இல்லாம வாழ முடியும் சொல்லு… ஒருத்தனை மட்டுமே காதலிக்கனும்… அவன மட்டுமே நினைக்கனும்… அவன்கூடவே வாழ்நாள் முழுக்க சந்தோசமா திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழனும்… அவன் மடியிலேயே சாகனும்ன்றது என்னோட கனவு… அந்தக் கனவு இப்போ நிறைவேறாமலேயே போயிருச்சே”
மனம் நொந்துதான் சொல்லிக் கொண்டிருந்தாள் யமுனா… ஆனால் கேட்ட கண்மணியோ ஆவென்று கண்களை விரித்துப் பார்த்திருந்தாள்…
இந்தப் பெண் வளராத குமரியா… இல்லை வளர்ந்த குழந்தையா…???? யமுனா பேசும் விதத்தைப் பார்த்து… இதுதான் கண்மணிக்குள் தோன்றிய எண்ணம்
“இப்போ என்னால வாழவும் முடியல சாகவும் முடியல… என்னை நிம்மதியா வாழ விடாதவன் அவன் மட்டும் நிம்மதியா வாழனுமா என்ன… என் கையாலேயே அவனக் கொல்லத்தான் தேடிட்டு வந்தேன்… இவனை மட்டும் இல்லை… எல்லாரையும்… நான் எப்படிலாம் வாழ ஆசைப்பட்டேன் தெரியுமா… கடைசியில் ஜெயில்ல தான் என் வாழ்க்கை போல“ சொன்னவளின் பார்வையில் கொலை வெறி உண்மையிலேயே இருந்தது தான்… ஆனால் பேச்சோ மழலை கொஞ்சும் கிள்ளை பேசியது போல் இருந்தது
பேசிக் கொண்டிருந்தவள் வேகமாக தன் கைப்பையில் இருந்து ஏதோ ஒரு பொருளை எடுத்து கண்மணியின் முன் நீட்ட… அதுவோ ஒரு கத்தி….
பார்வையில் மட்டும் அல்ல… பேச்சில் மட்டுமல்ல… செயலாற்றவும் தயாராக இருந்ததை அவர்களுக்கு உணர்த்தும் பொருட்டு… அத்தாட்சியாக அந்தக் கத்தியை காட்டி இருவரையும் கெத்தான!!! பார்வையோடு நோக்கினாள் யமுனா.…
கண்மணி பார்த்திபனை இப்போது பார்க்க… அவனின் நிலையோ அதை விட பரிதாபமாகத்தான் இருந்தது…
இவளின் கள்ளம் கபடம் இல்லாத இந்தக் குணம் தெரிந்துதான் ரிஷி இவளை ஏமாற்றி இருப்பானோ என்று யோசித்தபடி கண்மணி நின்று கொண்டிருக்க… யோசித்துக் கொண்டிருந்தவனின் பார்வை வட்டத்தில் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த ரிஷி கண்களில் பட்டான்… அருகே வர வர அவன் முகம் இவளுக்கு தெளிவாகத் தெரிந்ததுதான்… அ கிஞ்சித்தும் அவன் முகத்தில் பயந்த இல்லை குற்ற உணர்ச்சியின் சாயலில்லை… என்னவோ கடற்கரையில் காத்திருக்கும் காதலியைப் பார்க்க வரும் காதலன் போலத்தான் அவன் வந்து கொண்டிருந்தான்…
ரிஷியின் ஒரு கரமோ அலைபேசியை மட்டும் தாங்கி இருக்க… அவனின் மற்றொரு கரமோ கடல் காற்றில் அடிக்கடி பறந்த கேசத்தை நொடிக்கொரு தரம் சரி செய்யும் பணியை ஓய்வே இல்லாமல் செய்து கொண்டிருக்க… அவன் கண்களோ இவர்களை கண்டு கொண்டாலும்... காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்த சுற்று வட்டாரத்தை வேடிக்கை பார்க்க... அவன் வந்த விதமே ஒரு வித அலட்சியமான உடல் மொழியை இவர்களுக்கு வேண்டுமென்றே காட்டியது போல் இருந்தது கண்மணிக்கு
இவர்கள் அவனுக்காக காத்துக்கொண்டிருப்பது தெரிந்தாலும் அவசரமே இல்லாமல் மிக இயல்பான மித வேக நடையோடுதான் நடந்து வந்தான்...
ஒருவழியாக இவர்கள் மூவரும் நின்றிருந்த இடத்திற்கு ரிஷி வந்தும் சேர்ந்திருந்தான்... வந்தவன் கண்மணியின் அருகில் வந்து அவளோடு சேர்ந்தும் நின்று கொண்டான்…
தூரத்தில் ரிஷி வந்து கொண்டிருந்த போது அவன் வருவதையே பார்த்துக் கொண்டிருந்த கண்மணியோ… இப்போது அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை...
அவள் மட்டுமல்ல... கண்மணியின் அருகே வந்து நின்ற ரிஷியும் கண்மணியைப் பார்க்கவில்லை…
அதே போல யமுனாவை பார்த்தவுடன்… ஐயோ! இந்த பெண்ணா?… இவள் ஏன் இங்கு வந்தாள்… இவள் கண்மணியிடம் என்ன சொல்லி இருப்பாளோ என்ற பதட்டமும் அவன் முகத்தில் இல்லை…. சாதாரணமாகவே அவன் இருந்தான்…
கையில் இருந்த அலைபேசியை பேண்ட் பாக்கெட்டிக்கு மாற்றியபடியே… அலட்சியத்தோடு யமுனாவின் முன் சென்ற ரிஷி… அவள் கையில் இருந்த கத்தியைப் பார்த்து… புருவம் உயர்த்தினான் இன்னும் நக்கலாக… பார்வையில் இருந்த நக்கல் அவன் உதட்டிலும் இருந்தது என்பதை இதழ் வளைந்திருந்த விதமே சொன்னது
“அடேங்கப்பா திருமூர்த்தி பொண்ணுக்கு இவ்ளோ தைரியமா??… இப்போ என்ன என்னைக் குத்தனும்… அவ்ளோதானே… குத்து… உன் முன்னாடிதானே நிற்கிறேன்… எங்க குத்து பார்க்கலாம் “ என்று யமுனா முன் ரிஷி நெஞ்சை நிமிர்த்திக் காட்ட… பார்வையில்… உதட்டில்.. இருந்த அவனின் இகழ்ச்சி… இதோ இப்போது அவன் வார்த்தையிலும் வெளிவந்து யமுனாவை எள்ளி நகையாடிக் கொண்டிருக்க… பார்த்துக் கொண்டிருந்த கண்மணிக்குள்தான் இப்போது உதறல் எடுக்க ஆரம்பித்திருந்தது…
அந்தப் பெண் சிறு குழந்தை போல ஒன்றும் தெரியாமல் அறியாமல் இருக்கின்றாள்… அவளின் முன் இவன் போய் இப்படி நிற்கிறானே… அவளோ அப்பாவி… அறியாமையில் ஏதாவது செய்து விட்டால் என்ன செய்வது…. ரிஷியின் மேல் கோபம் இருந்த போதும்… யமுனா அவனை ஏதாவது செய்துவிட்டால்???… இந்தப் பரிதவிப்போடு ரிஷியின் அருகே போக எத்தனிக்க…
அங்கு யமுனாவோ இதுதான் சந்தர்ப்பம் என்று கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் ரிஷியை குத்த கையை உயர்த்தி கத்தியை ஓங்கி இருந்தாள் தான்…. ஆனால் உயர்ந்த கைகளோ அந்தரத்தில் தான் அப்படியே நின்றிருந்தது… ஆம்!, ஓங்கிய கைகளுக்கு அவனைக் குத்த தைரியமில்லை… அந்தப் பெண்ணால் அது முடியவுமில்லை… உண்மையிலேயே அவனைக் கொல்லத்தான் அவள் வந்தாள்... விளையாட்டெல்லாம் இல்லை…. இத்தனை நாள் அவனைத் தொடர்ந்து வேவு பார்த்தது, பார்த்த உடனே அவனைக் கொன்று விட வேண்டும் என்று தான்… ஆனால் இப்போது அவனே தன்னைக் கொல்லச் சொல்லி முன் வந்து நின்றால் அதுவும் முடியவில்லையே… கைகள் நடுங்கின யமுனாவுக்கு
“வாளோட கூர் முனைல வீரம் இல்லை… அதைப் பிடிச்சுருவங்களோட வீரத்தில் தான் ஒரு வாளோட வீரமே இருக்கு…”
”இன்னும் புரியுற மாதிரி சொல்லவா யமுனா”
“கத்தியைப் பார்த்து யாரும் பயப்படமாட்டாங்க… அதை யார் வச்சுருக்காங்களோ அவங்களைப் பார்த்துதான் பயப்படுவாங்க… உன்கிட்ட எனக்கு பயம் இருக்கும்னு நினைக்கிறியா??… சொல்லு” ரிஷி நிறுத்தி நிதானமாக அவளிடம் பேசிக்கொண்டிருக்க…
அவன் பேசப் பேச யமுனாவோ அப்படியே ஓய்ந்து மணலில் அமர்ந்தவள்… தன்னை நினைத்து… தன் கோழைத்தனத்தை எண்ணி… முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்… அதன் பின் என்ன நினைத்தாளோ தெரியவில்லை… கடலை நோக்கி ஓட ஆரம்பிக்க… பார்த்திபன் தான் சரியான நேரத்தில் சுதாரித்து,… ஓடிப் போய் யமுனாவைப் பிடித்து இழுத்து வந்திருந்தான்..
நடந்த நிகழ்வுகளால் மனதளவில் யமுனா பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றாள் என்பதை… கண்மணியால் நன்றாகவே உணரமுடிந்தது… இதெல்லாம் இப்போது சாதரணமாக நடக்கக் கூடிய நிகழ்வுகள் தான் ஆனால் அதைக் கூட தாங்கும் மனத்திடம் யமுனாவுக்கு இல்லை என்பதுதான் பிரச்சனை… அது கண்மணிக்கு நன்றாகவேத் தெரிந்தது…
ரிஷியின் மேல்தான் அப்படி ஒரு கோபம் வந்தது… ‘போயும் போயும் ஒரு அப்பாவிப் பெண்ணிடமா உன் வீரத்தைக் காட்டி இருக்கிறாய்…’ கோபத்தில் நெற்றிக்கண்ணால் எரித்துக் கொண்டிருந்தாள்…
ரிஷியின் சந்தோசம் தான் தன் சந்தோசம் என வாழ்ந்து கொண்டிருக்கும் கண்மணிக்கே இப்படி என்றால் பார்த்திபனுக்கு இருந்த கோபத்தின் அளவைச் சொல்லவா வேண்டும்???…
இதற்கெல்லாம் காரணகர்த்தவானவனோ…. எந்த ஒரு கலக்கமும் இன்றி… குற்ற உணர்ச்சியும் இன்றி சலனமற்ற கண்களால் அலைகடலை வெறித்துக் கொண்டிருந்தான்… அப்படி அவன் நின்று கொண்டிருந்ததைப் பார்க்க பார்க்க பார்த்திபனுக்கு இன்னும் கோபம் ஏறியதுதான்… ஆனாலும்
“குழந்தை மனசுள்ள ஒரு பொண்ணை… இப்படி ஏமாத்த எப்படிடா மனசு வந்தது… அவ நிலைமையைப் பாருடா” என்று ரிஷியிடம் நியாயம் கேட்கும் விதத்தில்… ரிஷியின் தவறை அவன் புரிந்து கொள்ளும் விதத்தில் தன்மையாகவேத்தான் கேட்க ஆரம்பித்தான் பார்த்திபன்…
ரிஷியோ… பார்த்திபனை , அவன் கோபத்தைக் கொஞ்சம் கூட இலட்சியம் செய்யாமல் அவனை கிண்டல் செய்ய ஆரம்பித்திருந்தான்
“ப்ரோ… ஏன் இவ்ளோ எமோஷனல்… எமோஷனல கொறச்சுக்கங்க… இப்படி குழந்த மனசு இருக்கிற ஒரு பொண்ணத்தான் ஏமாத்த முடியும்… இதோ இவளை மாதிரி இருக்கிறவள எல்லாம் ஏமாத்த முடியுமா என்ன… போடா நீயுமாச்சும் உன் காதலுமாச்சுன்னு தூக்கித் தூரப் போட்டுட்டு போயிற மாட்டா???… எல்லாரையும் ஏமாத்த முடியுமா பாஸ்… என்ன பாஸ் நீங்க…“ ரிஷி கொஞ்சம் கூட அசராமல் பார்த்திபனைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தான்… கூடவே கண்மணியையும் தன் வார்த்தைகளில் இழுத்தும் வைத்தான்…
ரிஷியின் எள்ளல் வார்த்தைகளில் பார்த்திபனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை…. அர்ஜுன் அடிக்கடி சொல்வானே ரிஷி நல்லவன் இல்லை… அவன் கண்மணியிடம் நல்லவன் போல வேஷம் போட்டுக் கொண்டிருக்கின்றான்… இத்தனை நாள் உணரவில்லை… இன்று உணர்ந்தான் பார்த்திபன்… அதில் மௌனமாகவும் ஆக… கண்மணியால் அதற்கு மேல் பேசாமல் இருக்க முடியவில்லை
”என்ன ரிஷி… கொஞ்சம் கூட தப்பு செஞ்சுருக்கோம்ன்ற மனசாட்சி கூட இல்லாமல் பேசுறீங்க… அட்லீஸ்ட் அந்தப் பொண்ணுகிட்ட மன்னிப்பாவது கேட்க தோணுச்சா உங்களுக்கு… என்ன ஒரு மனநிலையில் இருக்கா பார்க்கத்தானே செய்யறீங்க… அவங்க அப்பாவை பழி வாங்க உங்களுக்கு இவதான் கிடைத்தாளா… அட்லீஸ்ட் அவகிட்ட ஆறுதலானாலும் பேச ட்ரை பண்ணலாம்ல.. இனி எதையும் மாற்ற முடியாதுதான்… குறைந்தபட்சம் ஒரு மன்னிப்பு” எனக் கண்மணி ஆரம்பித்திருக்க…
பார்த்திபன் கண்மணியை வலியோடு நோக்கினான்… ரிஷி செய்த காரியங்களுக்காக அவன் மேல் கண்மணி கோபப்பட்டுக் கத்துவாள் என்று அவளது கோப மொழிகளை எதிர்பார்த்திருக்க… அவளோ குழந்தைக்குச் சொல்வது போல அறிவுரை கூறிக் கொண்டிருக்கின்றாள் என்ற நினைப்பில் வந்த வலி அது…
அந்த அறிவுரையைக் கூட ரிஷி என்பவன் நக்கலாக மாற்றிக் கொண்டிருந்தான்… மனச்சாட்சி என்பதே இல்லாமல்…
”என்னது மன்னிப்பா… இவகிட்டயா… மன்னிப்பு கேட்கிற அளவுக்கு நல்லவனா இருந்திருந்தா அவளை இந்த இடத்தில நிற்க வச்சுருப்பேனா… தெரிஞ்சுதான் நான் பண்ணினேன்.. அது உனக்கும் இப்போ தெரிஞ்சுருக்கும்… அப்புறம் எப்படி மன்னிப்பு கேட்கச் சொல்ற நீ… என்ன டீச்சர்மா நீ… ”
“ரிஷி” கண்மணி பல்லைக் கடிக்க…
”வெயிட்… வெயிட் இப்போ எதுக்கு நீங்க ரெண்டு பேரும் ஏன் இவ்ளோ டென்சன் ஆகறீங்க… இது என்னோட பிரச்சனை… அதாவது அந்தப் பொண்ணுக்கும் எனக்குமான பிரச்சனை… நீங்க எதுக்கு இடையில வந்தீங்க…” ஒரே நொடியில் கண்மணியையும் பார்த்திபனோடு சேர்த்து மூன்றாம் மனுசியாக மாற்றி இருந்தான் ரிஷிகேஷ்…
கண்மணியிடம் பார்த்திபனிடமும் அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல்… அவர்களை தள்ளி நிறுத்தியவன்…. யமுனாவைப் பார்த்து…
”ஏய் இங்க வா… என்ன பிரச்சனை உனக்கு… “ எகத்தாளமாக அதிகாரமாக அழைத்தவனைப் பார்த்த யமுனா பயத்தில்… பார்த்திபன் அருகில் இன்னும் நெருக்கமாக போய் ஒன்றி நிற்க…
அதைப் பார்த்த ரிஷியோ… விழுந்து விழுந்து சிரித்தான்…
”நீதான்… நீதான்…. ப்ளான் பண்ணி என்னைக் கொல்ல வந்த ஆளாம்மா… உன் பெர்ஃபார்மன்ஸ்ல இவளே பயந்துட்டா போ… கண்மணி பார்த்துக்கோ… குறை குடம் கூத்தாடும் சொல்வாங்கள்ள அது இதுதான்… உன் ரவுடியிசம்லாம் கொஞ்சம் கத்துக் கொடும்மா… இந்தப் பொண்ணுக்கும்”
கண்மணி ரிஷியைப் பார்த்த முறைப்பானப் பார்வையில்… தானாகவே யமுனாவின் புறம் திரும்பியவன்…
“உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை… உன் அப்பன் காட்ற பையனைக் கல்யாணம் பண்ண அவ்ளோ என்னம்மா கஷ்டம் உனக்கு… அவன் எவ்வளவு மோசமானவன்னு தெரிஞ்சும் மறக்க முடியாதபடி அப்படி என்ன தெய்வீகக் காதலோ… ஒத்து வரலையா வெட்டி விட்டுட்டு… நம்ம வழியப் பார்த்துட்டு போய்ட்டே இருக்கனும்… சும்மா… நச நசன்னு… லவ்வு… ஸ்டவ்வுன்னு… அதெல்லாம் ஒரு மண்ணுக்கும் இங்க உதவாது… இங்க யாருக்கும் யார் மேலயும் உண்மையான காதல்லாம் இல்லை… சந்தர்ப்பம் சூல்நிலை தான் எல்லாரையும் சேர்த்து வச்சுருக்கு… சூழ்நிலை மாறுச்சுனா… எல்லாமே மாறிரும்.. நாமளும் மாறிறனும்… புரியுதா… முடிவா சொல்றேன்... உன் நல்லதுக்காக மட்டுமே... அதுக்கு மேல உன் முடிவு... அதாவது உன் அப்பன் பார்த்து வைக்கிற மாப்பிள்ளையை நீ கல்யாணம் பண்ணிக்கோ… அந்த தேர்ட் ரேட் இனி உன் வாழ்க்கைல வர மாட்டான் ” அறிவுரையா … நக்கலா… பிரித்தறிய முடியாதபடி… யமுனாவிடம் சொல்லிக் கொண்டே போனாலும்… ஓரக் கண்ணால் கண்மணியின் முகமாற்றத்தையும்... அது காட்டிய உணர்வுகளையும் தனக்குள் படம் பிடித்துக் கொண்டுதான் இருந்தான் ரிஷி
ரிஷி பேசப் பேச கண்மணியோ உறைந்திருக்க… பார்த்திபனோ ஆவேசத்தின் உச்சத்திற்கு போயிருக்க…
“ச்சேய் நீயெல்லாம் ஒரு மனுசனா???” என்றபடி ரிஷியின் சட்டையைப் பிடித்திருந்தான் ஒரே தாவலில் …
ரிஷி பார்த்திபனிடமிருந்து இந்த அளவு கோபத்தை எதிர்பார்க்கவில்லைதான்… அதே நேரம் பார்த்திபனுக்கு ஏன் இவ்வளவு கோபம் வர வேண்டும் என்று யோசித்தபோதே… கண்மணி பார்த்திபனின் கையை ரிஷியிடமிருந்து பிரித்து விட்டுக் கொண்டிருக்க… பார்த்திபனோ… ஆவேசம் கோபம் எல்லாம் கலந்த உச்சக் கட்டத்தில் இருந்தான்…
அவன் மனதை ஏதோ ஒரு தருணத்தில் அவனையுமறியாமல் அவளை நோக்கி இழுத்த பெண்ணிற்கு ரிஷி துரோகம் செய்ததைத் தாங்கவே முடியவில்லை அவனால்… அதை விட ரிஷி இப்போது எகத்தாளமாகப் பேசுவதைக் கேட்கவே முடியாதவனாக தன் பொறுமையின் எல்லைகளைத் தாண்டிக் கொண்டிருந்தான்…
இது எல்லாவற்றையும் விட… யமுனாவுக்கு ஏற்கனவே ஒரு காதலன்… அவனை மறக்க முடியாமல் இவள்… என அவன் கேட்ட விசயங்கள் ஒவ்வொன்றும் இத்தனை நாள் யமுனாவை நினைத்து அவன் கட்டியிருந்த கற்பனைக் கோட்டையை அசைத்துக் கொண்டிருக்க… பார்த்திபன் பார்த்திபனாகவே இல்லை… இத்தனை மன உளைச்சலில் இருந்தவன் என்ன செய்வானோ அதைச் செய்தான்… தவறுகளை செய்துவிட்டு… அதன் தாக்கம் சிறிது கூட இல்லாமல் ரிஷி பேசிக் கொண்டிருக்க… அதைக் கேட்க கேட்க.. பார்த்திபனும் தன் கட்டுப்பாடுகளை மீறினான்… அர்ஜுன் அவனிடம் ரிஷியைப் பற்றி சொல்லி இருந்த விசயங்கள் அவனை மீறி வெளி வந்திருந்தன…
“உன்னைச் சொல்லிலாம் தப்பில்லை… நாயைக் குளிப்பாட்டி நடுவீட்ல வச்சாலும் அது அடங்குமா என்ன… அது அதோடப் புத்தியத்தான் காட்டும்” பார்த்திபன் சொல்ல… வார்த்தைகளின் வீரியம்… அது கொடுத்த தாக்கம் ரிஷி இப்போது பார்த்திபனின் குரல் வளையைப் பிடித்திருந்தான்…
கண்மணி பார்த்திபனிடமிருந்து இப்படி வார்த்தைகளை எல்லாம் எதிர்பார்க்கவே இல்லை… இப்போது பார்த்திபனை ரிஷியிடமிருந்து பிரிக்க கண்மணி போராடிக்கொண்டிருக்க… ரிஷியும் சரி… பார்த்திபனும் சரி அங்கிருந்த இரு பெண்களையும் கண்டுகொண்டதாகவே இல்லை…
“என்ன… மனசுல இருந்ததெல்லாம் வெளிய வருது போல… உன்னை அந்த அர்ஜூன் தான் என்கிட்ட வேலை பார்க்க அனுப்பி வைத்தான்னு எனக்கு எப்போதோ தெரியும்… நீ லீகல் அட்வைஸர் வேலை பார்க்க வரலை… இவளும் நானும் எப்படி குடும்பம் நடத்துறோம்னு அந்த அர்ஜூனுக்கு மாமா வேலை பார்க்க வந்த உன் மோப்ப நாய் புத்தி பற்றி என்ன சொல்றது பார்த்திபன்” என்றபடியே ரிஷி தன் கரங்களை இறுக்க… பார்த்திபனும் இப்போது களத்தில் இறங்கி இருந்தான்… தன்னைப் பற்றிதான் ரிஷிக்கு தெரிந்து விட்டதே என்ற எண்ணம் அவனையும் இன்னுமே அதிகமாக எல்லை மீறி பேச ஆரம்பிக்க வைத்தது…
“என் புத்தியைப் பற்றிலாம் பேசலாம் மிஸ்டர் ரிஷிகேஷ் த ... ன... சேகர்…… உன் ஜென்ம புத்திதான் எப்போதே தெரியுமே எங்களுக்கு…” ரிஷி நெறித்த குரல் வளையின் இறுக்கம் தந்த வலியையும் மீறி … நக்கலாக பார்த்திபன் பேச…
தந்தையின் பெயரை பார்த்திபன் நக்கலாக விளித்த விதம் ரிஷியை நிலைகுலைய வைக்க… ரிஷியின் கரங்கள் மெல்ல தளர… இப்போது புருவங்கள் நெறிந்தன பார்த்திபனைப் பார்த்த பார்வையில்…
அதே நேரம் யாரோ ஊட்டியில் ‘ஹர்ஷித்’ தை விசாரித்ததாக அன்று சத்யா சொன்னது ஞாபகத்திற்கு வர… அர்ஜூன் கண்மணிக்காக எதையும் செய்வான் என்று தெரியும்… ஆனால் தன் கடந்த காலம்… அதுவும் ஹர்ஷித் வரை சென்றிருக்கின்றான்… இங்கு தன் கடந்த காலம்… ஹர்ஷித் என்பதை எல்லாம் விட… கண்மணிக்காக அவள் ஒருத்திக்காக மட்டுமே அர்ஜூன் இத்தனை தூரம் இறங்கி இருக்கின்றான்… இதை நினைத்த போதுதான் ரிஷியின் மனதில் சுரீரென்ற வலி…. அமைதி ஆனவனின் கைகள் தானாக பார்த்திபனை விட்டு விலகின…
ரிஷி கையை எடுக்க… இரும ஆரம்பித்த பார்த்திபன்…. ஒரு வழியாக தன்னைச் சமாளித்துக் கொண்டே….
“என்ன பார்க்கிற… புரியலையா… உன் அப்பன் புத்திதானே உனக்கும் வரும்னு சொன்னேன்…” என்ற போதே ரிஷி அடிபட்ட வலியோடு அவனை நோக்க… கண்மணிக்கு நன்றாகவேப் புரிந்தது நிலைமை எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றது என்பது…
பார்த்திபனுக்கும் ரிஷியின் தந்தையைப் பற்றி தெரிந்திருக்கின்றது… தெரிந்திருக்கின்றது என்பதை விட அர்ஜூன் அவனிடம் சொல்லி இருக்கின்றான் என்பது கண்மணிக்கும் புரிய… இதற்கு மேல் இருவரையும் பேசவிட்டால்… கலவரம் வெடிக்கும் என்பதை கண்மணி ஊகித்தவளாக
“பார்த்திபன்… நீங்க அந்தப் பொண்ணைக் கூட்டிட்டுப் போங்க… இப்போ யாருமே சரியான மனநிலையில இல்லை… இப்போ பேசினா… இன்னும் பிரச்ச்சனைதான் வரும்… நாம பொறுமையா பேசலாம்”
“என்ன கண்மணி சொல்ற… இதுதான்… இவ்வளவு தான் நீயா… ரிஷின்னு வந்தால் இன்னொரு பொண்ணுக்கு நடந்த அநியாயம்லாம் உன் கண்ணுக்குத் தெரியாதா… எவ்வளவு தெனாவெட்டா பேசுறான்… நீயும்… “ என்று இப்போது கண்மணியிடம் வந்தவன்…
“உனக்காகவே அங்க ஒருத்தர் காத்துட்டு இருக்காரு…. அவரை விட்டுட்டு… போயும் போயும் இவனுக்காக… அதிலும் இவன் யாரு… இவன் அப்பா யாருன்னு உனக்கு தெரிஞ்சிருந்தும் இவனுக்காக சப்போர்ட் பண்ற… பண்ணிட்டு இருக்க.. அர்ஜூன் சார் சொன்னப்போ… இவன் அப்பனப் பற்றி சொன்னார்தான்… ஆனால் நீ இவன் மேல் காட்டின காதலைப் பார்த்துட்டு… நீ என்ன சொன்னாலும் இவனும் கேட்கிற விதம் பார்த்துட்டு… நான் கூட இவன் மேல நல்ல அபிப்ராயம் வைத்திருந்தேன்… உன்னோட காதல் இவனை மாத்திருக்கும்னு நினைத்தேன்… ஆனால் யமுனா சொன்ன பின்னாடி… அர்ஜூன் சார் இவனைப் பற்றி சொன்ன எந்த ஒரு விசயமும் தப்பே இல்லைனு தோணுது கண்மணி… இவன் ஒரு நல்ல பாம்பு கண்மணி… அதுவும் அடிபட்ட நல்ல பாம்பு… விலகிரு கண்மணி இவனை விட்டு… உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன்… இப்போதாவது புரிய முயற்சி பண்ணு கண்மணி…”
பார்த்திபன் பேசும் வரை அமைதியாக இருவரையும் பார்த்திருந்தவன்… கண்மணியை நோக்கினான் இப்போது... அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதைக் கேட்க…
அதை விட… தன் தந்தையைப் பற்றி இவளுக்கும் தெரிந்திருக்கின்றது… அதுவும் அந்த அர்ஜூன் மூலமாக… தன்னிடம் இதுவரை சொல்லவில்லை… அதைப் பற்றி வாயையும் திறக்கவில்லை… என அவன் முகம் இறுகி கடுகடுத்திருந்தாலும்… கண்மணியின் பதிலை நோக்கி காத்திருந்தான்…
ஆனால் இங்கு கண்மணியிடம் இருந்து வந்ததோ பேரமைதிதான்… அவள் அமைதியைப் பார்த்து பார்த்திபன் தான் இன்னும் குமுற ஆரம்பித்தான்
“இவன் சொன்னானே… யமுனா மாதிரி பொண்ணத்தான் ஏமாத்த முடியும் … உன்னை மாதிரி பொண்ணெல்லாம் ஏமாத்த முடியுமான்னு… நிதர்சனம் என்னன்னா இவன் உன்னைத்தான் மொத்தமா ஏமாத்திட்டு இருக்கான்… இங்க யமுனாக்கு அட்வைஸ் தேவையில்லை… அவள மாதிரி பொண்ணுக்கெல்லாம் நல்லது எது கெட்டது எதுன்னு காட்ட… அதை உணர வைக்க சரியான ஆள் கிடைத்தால் மாறிருவாங்க… உனக்குத்தான்… உன்னை மாதிரி பொண்ணுங்க தான்… தனக்கு எல்லாம் தெரியும்னு நினைக்கிற பொண்ணுங்கதான் இந்த மாதிரி கழிசடைங்க” என்ற போதே ரிஷி அவனை அறைய கையை ஓங்கி இருக்க… சட்டென்று அதைத் தடுத்தவளாக ரிஷியின் கையைப் பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்ட கண்மணி…
“பார்த்திபன் நீங்க போகலாம்… யமுனா கிட்ட நான் பேசறேன்… இவரையும் பேச வைக்கிறேன்… கண்டிப்பா அந்த பொண்ணுக்கு இவர் பதில் சொல்லித்தான் ஆகனும்” என்றவளிடம் பார்த்திபன் ஏதோ பேசப் போக… அவனைப் பேசவிடவில்லை கண்மணி…
ரிஷியின் கரங்களை இப்போது விட்டவள்…
“ரிஷி நீங்க உங்கள கஷ்டப்படுத்திக்கிறதை மட்டும் இல்லை நீங்க அடுத்தவங்களை கஷ்டப்படுத்தவும் நான் விட மாட்டேன் ரிஷி…” ரிஷியின் கரத்தைப் பிடித்த காரணத்தை விளக்கியவளாக… யமுனாவைத் தன்னருகே அழைத்தாள் கண்மணி…
“உங்களுக்கு ஒரே ஒரு விசயம் சொல்றேன் யமுனா… மத்தவங்களை எல்லாம் விடுங்க… உங்களுக்கு ஒருத்தரப் பிடிச்சிருக்கு… அவனுக்காக வாழனும்னு நினைத்தால்… யார் சொன்னாலும் அவரை விடாதீங்க… நல்லவங்களுக்கு மட்டும் தான் இந்தக் காதல், கல்யாணம், குடும்பம்னா இங்க யாருமே அதுக்குத் தகுதியானவங்க இல்லை… கெட்டவன்னு சொல்லப்பட்ட ராவணன்… அவனை விட்டு கடைசி வரை நீங்காமல் பூஜித்த மனைவியப் பற்றியும் நாம படிச்சிருக்கோம்…. நல்லவன் ராமன்… அவனை விட்டு தனித்திருந்த சீதை இதுவும் நாம படிச்சிருக்கோம்.. ஆனால் படிக்கிற சில விசயங்களை நாம மண்டைக்குள்ளயே ஏத்திக்கிறதே இல்லை… யோசிங்க… உங்களுக்கே முடிவு கிடைக்கும்… அதை விட்டுட்டு ஒருவனுக்கு ஒருத்தி… ஒருத்திக்கு ஒருவன்னு… உங்கள நீங்களே ஏமாத்திக்காதீங்க” கண்மணி யமுனாவிடம் சொல்லி முடிக்கவில்லை
பார்த்திபன் வேகமாக
“இது உனக்கும் தான் கண்மணி… நீயும் உன்னைக் கேட்டுக்க… யோசி.. யார் பேச்சையும் கேட்காமல் நீ செய்றது எல்லாமே சரின்னு நினைக்காத”
ரிஷி இப்போது இடையில் வந்தவன்…. எள்ளல் புன்னகை புரிந்தவனாக பார்த்திபனைப் பார்த்தவன்
“என்ன… ஒட்டு மொத்த மகளிர் குலத்துக்கும் கொடி தூக்கிட்டு வர்ற … ஆமாம் நீ யாரு… யமுனா யாருன்னு கூட உனக்குத் தெரியாது… அவளுக்காக இவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்ணின… அடுத்து இப்போ கண்மணிக்கு… அதுதான் அவ யார் பேச்சையும் கேட்க மாட்டான்னு தெரியுதுதானே… அப்புறம் என்ன அட்வைஸ்… அதெல்லாம் அவ கேட்க மாட்டா… உன் டைம கண்மணிக்கிட்ட வேஸ்ட் பண்ணாத… வேணும்னா இவகிட்ட பேசிப்பாரு… அவ கேட்கலாம்” என்று யமுனாவின் பக்கம் கைகாட்ட
“ஹ்ம்ம்.. என்ன பண்ண… யார் பேச்சையும் கேட்காதவளத்தான் உன் பேச்சை மட்டும் கேட்கிற மாதிரி மாத்தி வச்சுருக்கியே… ” இதுவரை இருந்த ரிஷியின் இறுக்கமான முகத்தில்… இப்போது நிம்மதியான திருப்தியான பெருமையான பாவம்… இருந்தும் நொடியில் மறைத்தவனாக… பார்த்திபனைப் பார்க்க... நொடியில் மறைத்திருந்தாலும்... மாறிய ரிஷியின் மென்மையான முக பாவம் பார்த்திபனின் கண்களில் இருந்து தப்பவில்லை.. அது கொடுத்த தைரியத்தில்
“விட்ருடா அவள... வாழ வேண்டிய பொண்ணு... உன் பழி வாங்குற வெறில அவ வாழ்க்கையையும் சேர்த்து பணயம் வைக்காத ரிஷி... நீ புதைகுழில விழுந்துட்டேன்னா... ஏண்டா கண்மணியையும் உன் கூட இழுக்கிற... அர்ஜூனோட வேதனையே இதுதாண்டா... அவளெல்லாம் ராணி மாதிரி இருக்க வேண்டியவ... அவளுக்காக ராஜ வாழ்க்கை காத்துட்டு இருக்கு” இப்போது ரிஷியின் கைகள் இறுக... கை முஷ்டிகள் உயரத் துடித்ததைக் கட்டுக்குள் கொண்டு வந்தவனாக
“கண்மணி ராணி மாதிரினா அப்போ நான் யாரு பார்த்திபன்....” வார்த்தைகள் வலியோடு வெளியே வந்து விழுந்தன ரிஷியிடமிருந்து...
“நீயா... உன்னை மாதிரி கேடு” கடுப்போடு ஆரம்பித்தவன் ஏனோ தொடராமல் நிறுத்திவிட…
ரிஷியோ வலியை மறைத்த சிரிப்போடு
“நான் என்ன... சூனியக்கார மந்திரவாதியா என்ன... கதைல சொல்கிற மாதிரி ராஜாகிட்ட இருந்து ராணிய கடத்திட்டு வந்து... மந்திரஜாலம் பண்ணி.... மயக்கி வைக்க... நான் சாதாரண மனிதன்... எந்த மாயஜாலமும் பண்ணி வைக்கலை… மயக்கியும் வைக்கல… அது கண்மணிக்கே தெரியும்… ஆமாம்.. அது என்ன “உன்னை மாதிரி…” ஆரம்பிச்சீங்கதானே முடிச்சு வைங்க பாஸ்… எனக்கும் கேட்க ஆசையா இருக்கு… ”
பார்த்திபனும் இப்போது வார்த்தைகளை வடிகட்ட நினைக்காமல் பேச ஆரம்பித்திருந்தான்… மனதில் இருந்ததை எல்லாம் கொட்டியும் விட்டான்
“கண்டிப்பா நீ கேட்டே ஆகனுமா ரிஷி… அப்போ கேட்டுக்கோ…. கேடுகெட்டவன்… மொள்ளமாரி… பொறுக்கி… போக்கிரி… பித்தலாட்டக்காரன்…. ஏமாத்துக்காரன்… சுயநலம் பிடிச்சவன்… ”
அவன் வார்த்தைகளைக் கேட்ட ரிஷியோ சிரித்தான்... சிரித்தான்… சிரித்துக் கொண்டே இருந்தான்… கண்களில் கண்ணீர் கசிய நிமிடத்தையும் கடந்து… சிரித்துக் கொண்டிருக்க... கடல் அலைகளின் சத்ததோடு அவன் சத்தமும் கலந்து போட்டி போட்டுக் கொண்டு ஒலித்துக் கொண்டிருந்தது…
“வாவ்… ரிஷி… உனக்கு ஒரு காலத்தில என்ன பேர்… இப்போ என்ன பேரு… வாழத் தெரியாதவன்… எடுப்பார் கைப்பிள்ளை… யார் சொன்னாலும் நம்புவான்… அப்பா பின்னாடி ஒளிஞ்சுட்டு இருக்கிற முதுகெலும்பில்லாதவன்… முக்கியமா சின்னப் பையன்… இவனுக்கெல்லாம் என்ன தெரியும்… விளையாட்டுப் பையன்… சூது வாது தெரியாதவன்...”
“ஆனால் பரவாயில்லடா ரிஷி நீ தேறிட்டதாண்டா” கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்தபடியே… தன்னையேப் பெருமையாகச் சொல்லிக் கொண்டவன்… கண்மணியின் கோபமானப் பார்வையில்…
“மேடம் நீங்க ஏன் முறைக்கிறீங்க… நீங்க எப்போதுமே ஒரு பார்வை பார்ப்பீங்களே… பரிதாபப் பார்வை… அதை பாருங்க… இந்தப் பார்வைக்கெல்லாம் எனக்கு தகுதியே இல்லை… போயும் போயும் இவனைப் போய் நான் லவ் பண்ணுவேணான்னு யாரோ கேட்டாங்கதானே… அவங்களாவே அந்த இடத்திலேயே இருங்க… அப்டியே பாருங்க” என்றவனை அதிர்ச்சியோடு கண்மணி பார்க்க… ரிஷி அவளிடம் இருந்த பார்வையை மாற்றி… பார்த்திபனிடம் திரும்பியவன்
“மிஸ்டர் மங்கையர் குல காவல் நாயகனே… நீங்க கிளம்பலாம்… முடிந்தால் இந்த மங்கையர் குலத்தையும் உங்க கூடவே கூட்டிட்டுப் போங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்… நீங்க போன பின்னால அறிவுரை மழை கொட்டோ கொட்டுனு கொட்டும்… பொண்டாட்டின்ற பேர்ல… ” வார்த்தைகள் அவனிடமிருந்து பாம்பின் நச்சு போல கொட்டிக் கொண்டிருக்க… பார்த்திபன் கண்மணியைத்தான் பாவமாகப் பார்த்து வைத்தான் இப்போது…
“இந்தப் பெண் அவன் மேல் தன் மொத்தக் காதலையும் கொட்டிக் கொடுக்க… அவனும் அவன் வார்த்தைகளும்… ” பார்த்திபன் பார்வையாலேயே ரிஷியை பஸ்பமாக்கி இருந்தான்
“தகுதியான இடத்தில் எது போய்ச் சேரவில்லையென்றாலும் அதன் நிலை இப்படித்தான் கண்மணி… நீ யாரு… உன்னோட தகுதி இது எதுவுமே இவனுக்கு புரியாது…. புரியவும் போறதில்லை“ யமுனாவுக்காக வந்தவன் கண்மணிக்காக பேசிக் கொண்டிருக்க…
யாருக்காக இத்தனை பிரச்சனைகள் ஆரம்பித்ததோ அந்த யமுனாவோ இப்போது பார்வையாளராக மாறி இருந்தாள்… பார்த்திபன் வார்த்தைகளை எல்லாம் கேட்காதது போல ரிஷியை மட்டுமே பார்த்தபடி நின்றிருந்த கண்மணியை அவள் இப்போது பாவமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்… எப்படி இவள் இந்த ரிஷியிடம் மாட்டினாள் என்பது போல
“ஹலோ இடத்தைக் காலி பண்ணு… உன் அமெரிக்க முதலாளிக்காக கொடுத்த காசுக்கு மேல கூவிட்டதான… கெளம்பு கெளம்பு… மணி ஆச்சு… உங்க தகுதியானவர்... நல்லவர் வல்லவர் என்னை வேவு பார்க்க அனுப்புனவர்கிட்ட… இன்னைக்கு ஆன்லைன்ல அதிகப்படியா பேசனும்தானே பார்த்திபன்… எனர்ஜி வேணும்தானே… இந்த தகுதி இல்லாதவன் கிட்ட வேஸ்ட் பண்ணிட்டா எப்படி” என்ற ரிஷி… கடல் அலையை வெறிக்க ஆரம்பிக்க…
“வாங்க போகலாம்.. இதுக்கு மேல இவன்கிட்டலாம் பேசுறதே வேஸ்ட்” என்று கண்மணியையும் யமுனாவையும் பார்த்திபன் அழைக்க…
ரிஷி திரும்பினான்… திரும்பியவன் ”பார்த்திபன்” என்று கூப்பிட…
“நீ சொன்னதுல ஒரு ஒரு தப்பு… கரெக்ஷன் பண்ணிக்கிறியா…” ரிஷி விளையாட்டாகவெல்லாம் கேட்கவில்லை… தீவிர பாவத்தோடு சொல்ல…. பார்த்திபன் முறைப்போடு அவனைப் பார்த்தான் அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை கேட்கும் விதத்தில்
“நீ என்ன சொன்னாலும் இவ கேட்கிறான்னு சொன்னீங்கள்ள… அது தப்பு… “ கண் சிமிட்டினான் ரிஷி…
‘நான் என்ன சொன்னாலும் இவ கேட்க மாட்டா… யோசிப்பா…”
”உண்மைதானே கண்மணி” இப்போது கண்மணியிடம் திரிம்பி கேட்டவன் பார்த்திபனிடம் மீண்டும் திரும்பி
“ஆனால்… என் மனசு என்ன யோசிக்கும்… அதுக்கு என்ன பிடிக்கும்னு இவளுக்குத் தெரியும்… இவளுக்கு மட்டும் தான் தெரியும்… அதை மீறி இவ எதையும் செய்ய மாட்டா… அது அவளுக்குக் கூடத் தெரியாது… எனக்கு மட்டுமே தெரியும்”
“இன்னொரு முக்கியமான விசயம்… அந்த அமெரிக்க அதிபர்கிட்ட இதையும் சொல்லுங்க… ஏழு வருசமா அமெரிக்கால பூ பறிச்சுட்டு இருந்தார் தானே.. அம்பிய அந்த ***** வேலையைவே கண்டினியூ பண்ணச் சொல்லுங்க… அவர்கிட்ட இருக்கிற நல்ல விசயங்களைக் காட்டி ஒரு பொண்ணு மனசை அவர் பக்கம் இழுக்கத் தெரியலை இந்த இலட்சணத்தில் என்னைக் கெட்டவனா காட்டி இவள அவர் பக்கம் கூட்டிட்டு போறாராம்மா… இவர் பிஸ்னஸ்ல என்னத்தை கிழிச்சுட்டு இருக்கார்னு தெரியலை…” அர்ஜூனை நார் நாராக கிழித்துப் போட்டு… வார்த்தைகளால் துண்டாடிக் கொண்டிருந்தவனிடம்
பார்த்திபன் பதிலுக்கு ஏதோ பேசப் போக…
பார்த்திபன் தன்னைப் பற்றி பேசியதை... அர்ஜூனை உயர்த்தி ரிஷியை மட்டம் தட்டி பேசி ... ரிஷியிடம் அவளை விட்டு விடச் சொல்லிக் கேட்டதை இம்மியளவும் அவள் மனம் ஏற்கவே இல்லை... பார்த்திபன் தங்கள் வாழ்க்கையைப் பற்றி பேசியது எதுவுமே பிடிக்கவில்லை...
அதிலும் அவன் அர்ஜூனைப் பற்றி பேசும் போதெல்லாம் அடி பட்ட வேதனை பாவத்தில் ரிஷியின் முகம் இருண்ட விதமும் இவளுக்குப் புரியாதா என்ன... அவன் அப்படி வருந்துவதைப் பார்க்க இவள் மனம் தாங்கவில்லை என்பதே உண்மை.. கோபம் ஒருபுறம் இருந்தாலும் ரிஷியை மற்றவர்கள் வருத்துவதை அவளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை...
எனவே பார்த்திபனை வலுக்கட்டாயமாக கண்மணிதான் அங்கிருந்து கிளப்பியிருந்தாள்… பார்த்திபனும் அதற்கு மேல் நிற்கவில்லை… யமுனாவோடு கிளம்பியிருந்தான்...
கண்மணியும் ரிஷியும் மட்டுமே அங்கே…
பார்த்திபன் யமுனா கிளம்பிவிட்டார்கள் என்பதையும்… தன் அருகே கண்மணி தன்னை எரிக்கும் கோபத்தோடு நிற்கிறாள் என்பதையும் உணராதவனா ரிஷி…
அவள் புறம் திரும்பாமலேயே…
“நான் இருக்கிற நிலைமைல… என்ன பேசுறேன்… என்ன பேசுவேன்னு எனக்கே தெரியல.. தெரியவும் செய்யாது கண்மணி… கிளம்பிரு… அப்புறம் ரிஷி நீ இப்படி பேசிட்டடான்னு கண்ணக் கசக்கிட்டு நிற்கிற நிலைமைதான் உனக்கு வரும்…”
“ரிஷி… “ என்று கண்மணி கடுப்பாக ஆரம்பித்த போதே… இவனோ பட பட பட்டாசாக வெடிக்க ஆரம்பித்து இருந்தான்… யமுனா விசயத்தைப் பற்றி பேசும்போது ரிஷி காட்டிய பொறுமை… நக்கல் … எள்ளல்… எல்லாம் தூரப் பறந்திருந்தது இப்போது
“என்னடி ரிஷி… அந்த அர்ஜூன் கிட்ட எப்போ பேசுன நீ… ஏதாவது என்கிட்ட சொன்னியாடி… ” அவள் முன் வந்து நின்றான் ஆவேசத்தோடு... இத்தனை நேரம் உள்ளுக்குள் பொறுமிக் கொண்டிருந்தவன்... இப்போது வெளியே கொட்டிக் கொண்டிருந்தான்...
“ஆனால் அவன் என்ன பேசினான்… என்னைப் பற்றி என்ன குப்பைலாம் உன்கிட்ட கொட்டினான்றதுலாம் எனக்குத் தேவையுமில்ல… அது எனக்கு..” என்று தலை முடியை காட்டியவன்
“அது எல்லாம் இதுக்குச் சமம்… ஆனால் அவன்கிட்ட பேசினேன்னு ஏன் என்கிட்ட சொல்லல… சொல்லாம மறச்சுட்டதானே… அவன் அவ்ளோ முக்கியமா ஆகிட்டான் உனக்கு அப்படித்தானே… சாரி சாரி அவன் தானே உனக்கு முக்கியம்… நான்லாம் இடையில வந்தவன் தானே… அவன் வேற உன் சொந்தக்காரன்… நான்லாம் அப்படியா…”
அவன் அப்பாவைப் பற்றி தனக்குத் தெரிந்து விட்டது… தனக்கு மட்டுமல்ல பார்த்திபன் வரை தெரிந்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத மன அழுத்தத்தில்…. இந்த மாதிரியெல்லாம் ரிஷி பேசுகிறான் என்பது தான் கண்மணியின் கணிப்பாக இருந்தது...
“அர்” என்று கண்மணி ஆரம்பிக்க… ரிஷி ‘அர்ஜூன்’ என்ற பேரைக் கூட அவளை உச்சரிக்க விடவில்லை…
“பேசாத… எதுவுமே எனக்கு கேட்கப் பிடிக்கலை…. போயிரு… இங்கேயிருந்து… ராட்சசனா மாத்திராத என்னை” என்று வெறிப்பிடித்தவன் போல் கத்தியவனை கண்மணி பாவமாகவெல்லாம் பார்க்கவில்லை… அவளுக்கு அவன் மீதிருந்த கோபம் இன்னும் அதே அளவில் தான் இருந்தது…
யமுனாவைப் பற்றி தான் பேசுவதை…. அவள் விசயமாக தான் கூறும் அறிவுரைகளையோ ரிஷி கேட்க விரும்பவில்லை… அதுமட்டுமல்லாமல் அவன் தந்தையைப் பற்றி தனக்குத் தெரிந்திருக்கின்றது… என்ற விசயம் வேறு… இது எல்லாமே தன்னிடம் இப்படி மிருகத்தனமாக பேச வைக்கிறது… என்று கண்மணி நினைத்தவளாக…
அதே நேரம்… இது பொது இடம்… அவனும் ஒரு நிலையில் இல்லை… இவளும் கோபமாக இருக்க… தீர்வு கிடைக்காது என்றே தோன்றியது…
அதே போல அவள் கேள்விகளுக்கு கண்டிப்பாக ரிஷி இருக்கும் நிலையில் பதில் கிடைக்காது எனும் போது இனி இவனிடம் பேசியும் பயனில்லை… இங்கிருந்தும் பயனில்லை… அவனாக கொஞ்சம் கோபம் தணிந்து வரட்டும்… அப்போது யமுனாவைப் பற்றி பேச… அர்ஜூன் தன்னிடம் அவன் தந்தையைப் பற்றி சொன்னதைப் பற்றி விளக்கம் கொடுக்க முடிவு செய்தவள்… அவனிடம் ஏதுமே சொல்லாமல் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க… அவனை விட்டு நகரப் போனவளை… சட்டென்று பிடித்து நிறுத்தினான் ரிஷி… அவன் பிடித்திருந்த கரத்தின் பிடியின் இறுக்கம் அது கொடுத்த வலியின் தாக்கம் கண்மணியின் முகத்தை சுருங்க வைக்க… கோபத்தோடு திரும்பியவளிடம்…
“நான் போன்னு சொன்னா... என்னை விட்டு போயிருவியா கண்மணி” தளர்வாய் வந்த அவனின் குரலில் கண்மணியின் கோபம் எங்கோ பறந்திருந்ததுதான்
அவன் கைகள் பிடித்திருந்த வன்மையின் தாக்கம் அவன் முகத்தில் இல்லை… சற்று முன் இங்கு யாரையும் மதிக்காமல்... ஏன் இவளைக் கூடத் துச்சமாக பேசிய அந்த முகத்தில் இப்போது இறைஞ்சலான பார்வை மட்டுமே…. கைகளோ அவளை இறுக்கமாகப் பிடித்திருக்க…. பார்வையிலோ கெஞ்சலான பரிதவிப்பு… ரிஷி என்பவனைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தாள் கண்மணி…
ரிஷி என்ற சுழல்… அதன் அடி ஆழத்திற்கு.. மீளவே முடியாத… தப்பிக்கவே முடியாதபடி கண்மணி என்பவளை தனக்குள் உள் வாங்கி சுருட்டிவைத்துக் கொண்டிருந்த உண்மையை அவன் மனைவி உணர்ந்த கணங்கள் அப்போதுதான்….
ரிஷி என்ற சுழலிருந்து தப்பிக்க நினைப்பாளா கண்மணி….!??? பார்த்திபன் சொல்லிச் சென்றது விலக யோசிப்பாளா…. கண்மணி???
என்ன சொல்வது… இதோ இப்போது அவன் பிடித்திருந்த கையையே விலக்க முடியாமல்.. அவனை விட்டுச் செல்ல முடியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தவள்… ரிஷியை விட்டு அவன் வாழ்க்கையை விட்டு விலக நினைப்பாளா என்ன….!!! விலக மாட்டாள் தான்....
அன்றெல்லாம் விலக முடியாத கண்மணிதான்... இன்று அவனை விட்டு விலகியிருந்தாள்... தன்னை விட்டு அவனையும் தள்ளி வைத்திருந்தாள்... காரணம் என்னவோ....
/*போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ போராடும்அன்பில் அட ஏன் தான் காயமோ
விலகும்போது நெருங்கும் காதல் அருகில் போனால் விலகிடுமோ விலங்கு மாட்டி சிறையில் பூட்டி விருப்பம்போல் அது வலி தருமோ..... */
Comments