top of page
Writer's picturePraveena Vijay

கண்மணி என் கண்ணின் மணி-39

அத்தியாயம் 39


/* உன்னை பார்க்கும் முன்பு நான் காகிதத்தின் வெண்மையடி உன்னை பார்த்த பின்பு நான் வானவில்லின் வண்ணமடி

தோளில் சாயும் போது தோழி நீயடி

மடியில் சாயும் போது தாயும் நீயடி

எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்

எப்படி நீயும் என்னுள் வந்தாய்

கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்

நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்*/


”மணிம்மா” என்று நட்ராஜ் சத்தமாக குரல் கொடுக்க… கண்மணியும் நட்ராஜ் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெளியே வந்தாள் கேட்ட தந்தையின் குரலில்…


“மாப்பிள்ளை வீட்லருந்து அவங்க சொந்தக்காரங்க எல்லாரும் வந்துட்டாங்கம்மா” என்ற போதே ரிஷியும் அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தவன்…


நீலகண்டனோடு வந்திருந்த அவர்களது மற்ற மிக நெருங்கிய சொந்தங்களைப் பார்த்தவன்… நட்ராஜ் அருகில் நின்றிருந்த கண்மணியை கண்களாலேயே அழைக்க… கண்மணியும் அவன் அருகில் வர… இருவருமாக அவர்களை வரவேற்றனர்…


கண்மணிக்குத்தான் என்ன சொல்லி… எப்படிச் சொல்லி வந்தவர்களை வரவேற்பது என்று தெரியவில்லை…


பரிதாபமாக ரிஷியைப் பார்க்க… அவன் இவளைப் பார்த்தால் தானே… அப்படியே பார்த்தாலும்… பேசிவிட்டுத்தான் மறுவேலை…


இந்த பத்து நாளாக ரிஷி இவளோடு முகம் கொடுத்துக் கூடப் பேசவில்லை… அதிலும் இவர்கள் ஊட்டியில் இருந்து திரும்பிய இரண்டு மூன்று நாட்களில் ரிஷி வெளியூர் கிளம்பி விட்டான்… முந்திய தினம்தான் வந்தான்… திரும்பி வந்தவன் தேவை என்றால் மட்டும் கண்மணியோடு பேசிய போதே தெரிந்து விட்டது… கண்மணி மேல் அவனுக்கு இன்னும் கோபம் போகவில்லை என்று…


அவனை எப்படி சமாதானப்படுத்துவதுதான் என்று தெரியவில்லை… சாதாரண கொஞ்சல் மொழிகளே அவளது அகராதியில் பெரிதாக இல்லை எனும் போது மனைவியாக கொஞ்சல் மொழிகள் இன்னுமே கடினமாக… அப்படியே விட்டு விட்டாள்… ஆனால் ரிஷி பேசா விட்டால் என்ன… எப்போதும் தான் இருப்பது போலவே கண்மணி இருந்தாள்


இன்றும் அப்படித்தான் இருக்கப் போகின்றான்… நினைத்தவாறே அமைதியாக இருக்க… கண்மணியின் அமைதியை உணர்ந்தவனாக… அவள்புறம் திரும்பியவன்… அதன்பின்தான் தன் தவறு புரிந்தவனாக… கண்மணியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியனாக… அவர்களையும் ஒவ்வொருவராக அவளுக்கு அறிமுகப்படுத்தவும் செய்தான்…


பொதுவாக “வாங்க” என்று மட்டும் சொல்லி இன்முகமாக கண்மணி வரவேற்க…


வந்த ஒவ்வொருவரின் பார்வையும் கண்மணியில் தொடங்கி… பின் அங்கிருந்த சுற்றுப்புறத்தையும் ஒரு வட்டமடித்து ரிஷியிடம் வந்து நின்றது… அது மட்டுமல்லாமல்… அவர்களுக்குள்ள்ளாக கிசுகிசுக்கவும் ஆரம்பித்துக் கொண்டனர்…


”தனசேகர் குடும்பத்துக்கு வந்த சோதனையைப் பாரு..”


“எப்படி இருந்த குடும்பம்”


“இலட்சுமி நிலையும் இப்படி ஆகி இருக்கக் கூடாது” என தங்களுக்குள்ளாகப் பேசிக் கொண்டிருக்க…


மகிளாவும் கோதையும் முதல் நாளே அங்கு வந்து விட்டதால்… வீட்டில் இருந்து வெளியே வந்தவர்கள்… வந்த அனைவரையும் உறவு முறைகளைச் சொல்லி வரவேற்க… அதிலும் மகிளா வரவேற்கும் பொறுப்பை ஏற்று… செவ்வனே செய்து முடிக்க… ரிஷி-கண்மணிக்கு பெரிய சுமை தீர்ந்தார்ப் போல இருந்தது…


வந்தவர்கள் மகிளா கோதையோடு ஐக்கியமாகி விட… அதன் பின் கண்மணி ரித்விகாவிடம் போய் விட்டாள்…


அன்று ஊட்டியில்…


ஒவ்வொருவராக… ரித்விகாவைத் தேட… ரித்விகாவோ.. சற்று தள்ளி இருந்த ஓய்வறையில் இருக்க… அனைவரும் அங்கே செல்ல…


அவளோ… இவர்கள் அனைவரையும் ஆச்சரியமாகப் பார்த்தபடி… கொஞ்சம் பதட்டத்துடன் இருந்த கண்மணியைப் பார்த்து


“என்ன அண்ணி… இவ்ளோ டென்சன்” என்றவள்…


தன் அண்ணியை மட்டும் தனியே அழைத்து… அவளுக்கு ஏற்பட்ட மாற்றங்களைச் சொன்னவள்…


“உங்கள கூப்பிடலாம்னு இருந்தேன்… ஆனால் நீங்க ஏற்கனவே சொல்லி இருந்த மாதிரி… நானே எல்லாம் பண்ணிட்டு உங்களக் கூப்பிடலாம்னு இருந்தேன்… நாம இதுக்காக டூரெல்லாம் கேன்சல் பண்ண வேண்டாம் அண்ணி… நான் ஓகேதான்… வீட்ல எல்லாம் சொல்ல வேண்டாம்… டூர் முடிந்து போய்ச் சொல்லிக்கிறலாம்” என்று சாதாரணமாகச் சொல்லி தன் அண்ணியைப் பார்க்க…


கண்மணி அவள் உச்சியில் முத்தம் இட்டவளாக… அவளை அரவணைத்துக் கொண்டாள்… உணர்வுகளை பெரிதாக காட்ட வில்லை என்றாலும்… கண்மணி ரித்விகாவை நினைத்து பெருமை கொண்டாள் தான்…


இருந்தாலும்… ரிஷியிடம் சொல்லாமல் இருக்க முடியுமா என்ன… வெகுநாட்களாக லட்சுமி கவலை கொண்டிருந்த விசயம்… அந்தக் குடும்பத்தில் அடுத்த சந்தோஷம்…


ரித்விகா … பெரிய பெண்ணாகி விட்டாள்… என்ற தகவலைத் தெரிவிக்க… அதன் தொடர்ச்சியாக மகிளா ரிதன்யா கோதை என சந்தோசத்தை ரித்விகாவிடம் பகிர்ந்து கொள்ள… அதே போல தன் அன்னையின் உடல்நிலை கேள்விப்பட்டு ரித்விகா அடைந்த சந்தோஷத்திற்கும் அளவில்லை…


இலட்சுமியின் நிலையைக் கேட்கவா வேண்டும்…


ரித்விகா பிடிவாதம் பிடிக்கவில்லை… மாறாக இலட்சுமிதான் பிடிவாதம் பிடித்தார் மகளை உடனே காணவேண்டும் என்று…


ரித்விகாவை உடனே அழைத்து வரலாம் என்று மொத்தக் குடும்பமும் முடிவெடுக்க.. அங்குதான் கண்மணிக்கும் ரிஷிக்கும் பிரச்சனை ஏற்பட்டது…


பிரேமும் ரிஷியும் சென்னையில் இருந்து கிளம்பி கண்மணி ரித்விகாவை அழைத்து வருவதாக முடிவெடுத்தவர்கள் கண்மணியிடம் சொல்ல… கண்மணிக்குச் சுத்தமாக அதில் உடன்பாடில்லை… அவர்கள் வந்து அதன் பின் இவர்கள் செல்வதா… நேர விரயம் தான்…


எனவே தானே ரித்விகாவை அழைத்து வந்து விடுவதாகச் சொல்ல… அதைக்கூட இயல்பாகவேத் தான் சொன்னாள்…


“நான் சொல்றதைப் பண்ணு… நீயா முடிவெடுக்காத கண்மணி” ரிஷி வார்த்தைகளை விட்டான் கண்மணியிடம்


“கேட்க வேண்டியதை மட்டும் தான் கேட்க முடியும் ரிஷி… முட்டாள் தனமா கண்ண மூடிட்டு நீங்க சொல்ற எல்லாத்துக்கும் தலை ஆட்ட முடியாது “ கண்மணியும் பட்டென்று சொல்லி விட்டாள்…


ரித்விகா காணவில்லையென்று கேள்விப்பட்டவுடன்… ரிஷி காட்டிய முக பாவனைகளில்… வேதனைகளில்... பதட்டத்தில் கண்மணிக்கும் அவன் உணர்ச்சிகளின் வேகம் தாக்கி… அவளை யோசிக்க வைக்க விடாமல் வைத்து விட்டதே… அந்த கடுப்பில் கண்மணியும் இப்போது பேசிவிட…


ரிஷி விடவில்லை…


“உன் கூட இருக்கிறது என் தங்கச்சி… அவ விசயத்துல நான் என்ன சொல்றனோ அதைத்தான் அதை மட்டும் தான் நீ செய்ய வேண்டும்… உனக்கான விசயங்கள்ள கேட்க வேண்டியதை மட்டும் கேட்டுக்கோ… சாரி… நான் அதுல தலையிடக் கூட மாட்டேன்”


“என்னோட விசயங்கள்ள நான் கேட்க மாட்டேன்னு நீங்க தலையிடலயா… இல்லை தேவையில்லைனு தலையிடலயா” உண்மையைச் சொன்ன போதும் வார்த்தைகள் வாயில் இருந்து வரும் போதே கண்மணிக்கும் புரிந்தது… இந்த நேரத்தில் இது தேவையா என்று… இருந்தும் அவளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை… வார்த்தைகளை உதிர்த்து விட்டவள்… ஒரு நிமிடம் மௌனித்தாள்… தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவளாக



“தேங்க்ஸ் ரிஷி… எனக்கான விசயங்கள்ள தலையிட மாட்டேன்னு சொன்னதுக்கு… அதுமட்டுமில்லாம ரித்வி விசயம் என்னோட சம்பந்தப்பட்ட விசயம் தான்.. ரித்வி யாரு… அவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னு உங்களுக்கு விளக்கம் தேவையா என்ன… தெரியலேன்னா” என்றவள்… அவர்கள் திருமண தேதியைக் குறிப்பிட்டு…


“அந்த தேதியிலருந்து ரித்வி கண்மணியோட சம்பந்தமானவள் தான்” சொன்னவள் போனை வேகமாக வைத்து விட்டாள்… அதன் பின் ரிஷியின் போனை எடுக்கவே இல்லை வீடு வந்து சேரும் வரை… காரணம்... ரிஷியோடு இது போல பேசவே அவள் தயாராக இல்லை… யாரிடம் வேண்டுமென்றாலும் பட்டென்று பேசும் அவள் குணம் ரிஷியிடம் மட்டும் முரண்டு பிடித்தது… அவனோடு பதிலுக்கு பதில் இரண்டு வார்த்தைகளை விட்டதற்கே மனம் சுணங்கியது போன்ற ஒரு உணர்வு… அதனாலேயே அவன் போனை எடுக்கவில்லை…


அவர்கள் பள்ளியின் வாகன ஓட்டுனரை அழைத்துக் கொண்டு… சென்னையும் வந்து சேர்ந்து விட்டாள்…


இலட்சுமி… ரித்விகா… தாய் மகள் பாசப் பிணைப்பு… பார்த்த ஒவ்வொருவரையும் நெகிழவே வைத்தது…


யாரோடும் சேராமல் தனியே நின்ற கண்மணியை இலட்சுமி தன் அருகே அழைத்த போதுதான் அவள் தன் கணவனின் அன்னையின் அருகே போக… இலட்சுமி தான் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருந்தார்… கண்மணி இதழ் விரித்த புன்னகையில் சந்தோச பரவிய முகத்தோடு இருக்க… எவ்வளவு முயன்றாலும் இதுதான் கண்மணி… அவளால் இந்த அளவுக்குத்தான் தன் அன்பை வெளிப்படுத்த முடிந்தது….


லட்சுமியின் அருகே சென்றவள்


“நீங்க கண்டிப்பா சரி ஆகிருவீங்கன்னு தெரியும் அத்தை” என்று மலர்ந்த முகத்துடன் தன் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டவள்… ரிஷியின் இறுகிய முகத்தைப் பார்த்த போதே தெரிந்து கொண்டாள்… இன்னும் கோபத்தோடுதான் இருக்கின்றான் என்று… அதிலும் முதலிலாவது தாடி மறைத்த பாதி முகம் தான்… இப்போது முழு முகமும் கடுகடுத்த பாவத்துடன்… இவள் பார்த்த போதே கடுவன் பூனை!!! தன் வாசம் செய்யும் மாடி அறையும் ஏறிவிட்டது… விட்டுப் பிடிக்கலாம் என்று கண்மணி அப்போதைக்கு விட்டு விட்டு... மற்ற விசயங்களில் கவனம் செலுத்தி விட்டாள்


ஆனால் அடுத்த இரண்டு நாளில்… வெளியூர் பயணம் செல்லும் போது கூட… எங்கோ வெறித்தபடி… யாரிடமோ சொல்வது போல இவளிடம் சொல்லிக் கொண்டு போனது… இவள் பார்த்த அவன் கோபம்… வளர்ந்த ஆண்மகனின் கோபம் போலத் தோன்றவில்லை கண்மணிக்கு… மாறாக குழந்தையின் கோபம்போல்தான் தோன்ற கண்மணிக்கு அவனை சமாதானப்படுத்தத்தான் தோன்றியதே தவிர பதிலுக்கு அவனோடு கோபம் கொள்ளத் தோன்றவில்லை…


ஆக ரிஷியோடு கண்மணிக்கு தனியே பேசவும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை… அவனும் உருவாக்கவில்லை… தொழில் ரீதியாக ரிஷி மிகவுமே அலைந்து கொண்டிருக்க.. இவளும் அவனை பெரிதாகத் தொந்தரவு செய்யவில்லை…


அதே போல நீலகண்டன் குடும்பம் மீண்டும் அவர்களோடு சேர்ந்தது கண்மணிக்கு சந்தோஷமே… மகிளா-பிரேம் என அவர்களின் வருகையுமே…


ரிஷிக்கும் அவளுக்குமான வாழ்க்கையில் அது ஒரு பிரச்சனையும் இல்லை என்பதை நன்றாகவே உணர்ந்திருக்க… கண்மணியை அவர்கள் வருகை பாதிக்கவும் இல்லை…


அனைவரையும் விட பிரேமுடன் அவள் இயல்பாகப் பழகினாள் என்றே சொல்ல வேண்டும்… மகிளாவின் சந்தோசத்தைப் பார்க்கும் போது… அதுவே பிரேமின் குணத்தைப் பறைசாற்ற… கண்மணிக்கும் தானாகவே அவன் மேல் ஏற்பட்ட ஒரு நல்ல அபிப்ராயம் கூட கண்மணியை அவனோடு இயல்பாக பழக வைத்தது என்றும் கூட வைத்துக் கொள்ளலாம்…


பிரேமுக்கும் அப்படியே… கண்மணி உறவுமுறைகள் தெரியாமல் திணறிய போது… பிரேம் தான் கை கொடுத்தான்…


மகிளா எவ்வாறு கூப்பிடுகிறாளோ அந்த உறவுமுறைகள் தான் கண்மணிக்கும் வர வேண்டும் என்று கண்மணிக்கும் தெரியும்…ஆனால் மகிளாவோடு அவ்வளவாக பழக்கமில்லை… ரித்விகா அருகே இருந்திருந்திருந்தால் அவள் கூப்பிடும் முறையைக் கணித்து கண்மணி மாற்றிக் கொண்டிருப்பாள்… அதற்கும் வழி இல்லை…ரிதன்யாவுக்கும் கண்மணிக்கும் இடையே இருக்கும் நெருக்கம் பற்றி சொல்லவே வேண்டாம்…


லட்சுமியோ சொல்ல முடியாத நிலை… ரிஷியோ ஊரிலேயே இல்லை… இந்த பத்து நாட்களாக அவ்வப்போது வரும் ரிஷியின் மிக நெருங்கிய சில சொந்தங்களை பிரேம் மூலமாகத்தான் எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தாள்…


இதில் இன்னொரு பேச்சு வார்த்தையும் ஓடிக் கொண்டிருந்தது ரிஷியின் சொந்தங்களுக்கிடையே… அதுவும் நீலகண்டனுக்கு அறிவுரையாக…


ரிஷிக்கு மகிளா என்று இந்தச் சொந்தங்கள் முன்னிலையில் தான் பேசி முடிக்கவைக்கப்பட்டிருந்தது… அதே போல…


ரிஷி வேண்டாம் என்று நீலகண்டன் அவர் மகள் வாழ்வில் முடிவெடுத்த போது இதே சொந்தங்கள் அவர் வார்த்தையில் இருந்த நியாயத்தை புரிந்து கொண்டு அவர் வேறிடத்தில் மகளை கொடுக்க ஆதரவாகவும் இருந்தனர்… அந்த ஆதரவு என்பது ரிஷி மகிளாவை விட மாட்டேன் என்று ஏதாவது பிரச்சனை பண்ணினால் ரிஷியை சமாளிக்கும் விதம் வரை…


லட்சுமி நடையுடையாக இருந்த வரை… சொந்தங்களை விட்டுப் பிரிந்ததில்லை… ரிஷி மட்டுமே தனித்திருந்தான்… லட்சுமி என்றைக்கு படுக்கையில் விழுந்தாரோ… ரிஷி அவர்கள் குடும்பத்தையே பிரித்துக் கூட்டி வந்து விட்டதால் இடைவெளி விழுந்து விட… இப்போது சொந்த பந்தங்கள் என்ற நெருக்கம் மீண்டும் வந்து விட்டிருந்தது


“இங்க பாரு நீலகண்டா… நீ உன் பொண்ணு விசயத்தில் முடிவெடுத்தப்போ நாங்க ஏதாவது சொன்னோமோ… நீ சொன்னதுல நியாயம் இருந்துச்சு… அந்தப் பையனும் சரி இல்லை… நல்ல சம்பந்தம் மகிளாவுக்கும் வர அந்த இடத்தில மேரேஜ் பண்ணி… நம்ம பொண்ணு நல்லா இருக்கு… அதே மாதிரி தனசேகர் பொண்ணுங்களும் முக்கியம்பா… தனசேகர் பையன விடு… அவன் ஒழுங்கா இருந்திருந்தா இந்தக் குடும்பம் இந்த நிலைக்கு வந்திருக்குமா… லட்சுமியும், இந்தப் பொண்ணுங்களும் நம்ம வீட்டு மகாலட்சுமிங்க.. இப்படி விட்டுட்டோம்னு கவலையா இருக்கு… அந்த ஏரியாவைப் பார்த்தவுடனேயே பதறிருச்சுப்பா… ரிஷி அவன் ஆம்பளைப் பையன்… ஏதோ ஒருத்தி… என்னமோ கல்யாணம்… எப்படியோ போகிறான்… அது அவனோட போகட்டும்… தனசேகர் பொண்ணுங்கள விட்டுடக் கூடாது… நீதான்பா பார்க்கனும்… லட்சுமி கிட்ட பேசுவோம்… இது விசயமா பேசுவோம்… முதல்ல அங்க இருந்து அவங்களை கூட்டிட்டு வந்துரனும்…” என்று நீலகண்டனுக்கு பஞ்சாயத்து பண்ண…


நீலகண்டனுக்குமே உடன்பாடே… மறுத்துப் பேசவில்லை… அவருக்கு எப்போதுமே ரிதன்யா ரித்விகாவை பிடிக்கும்… ரிஷி மட்டுமே அவரின் பிரச்சனை… இப்போது அதுவும் இல்லை… அதேபோல லட்சுமியின் உடம்பு சரியில்லாத இந்த நிலைக்கு தான் ஒரு முக்கிய காரணம் என்ற குற்ற உணர்ச்சியும்… ரிஷியை விட்டு தள்ளி இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வும் இதுநாள் வரை இலட்சுமி குடும்பத்தோடு மீண்டும் சேர முடியாமல் தடுத்திருந்தது…


இப்போது அனைவரும் சொன்ன உடனே நீலகண்டனும் ஒப்புக் கொள்ள… அதில் ஒரு குடும்பம் ரிதன்யாவை அவர்கள் பையனுக்கு பேசுவது என்று வரை முடிவு செய்யப்பட்டிருந்தது…


இது எதுவும் அறியாமல் ரிஷி அலுவலக நிமித்தமாக வட இந்தியா வரை சென்று விட்டு திரும்பி வந்தவன்… வந்த உறவுகளைப் பார்த்து பெரிதாக மகிழவும் இல்லை… அதே நேரம் அவர்களை மதிக்காமலும் இல்லை…


நீலகண்டனோடு பேசிய அத்தனை பெரிய மனிதர்களும் ரிஷியை பொருட்டாக மதிக்காமல்தான் இருந்தனர்… அவனை மீண்டும் பார்க்கும் வரை… அந்த சொந்தங்கள் மீண்டும் நாட்டாமை பண்ணிய போதுதான்… வேறொரு ரிஷியாகப் பார்த்தனர்…


அன்றைய தினம் ரித்விகாவுக்கு அய்யரை வரவழைத்து புண்ணியவாசம் செய்து மீண்டும் வீட்டுக்குள் வரவழைக்கும் நிகழ்ச்சி…


முக்கியமான குடும்ப நபர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்…


ஊரில் இருந்து திரும்பி வந்த ரிஷிக்கே ஆச்சரியம்..


லட்சுமி மற்று கோதை வற்புறுத்த வேறு வழி இல்லாமல் அலைபேசியில் அழைத்து விசயத்தைச் சொல்ல… இதோ வந்தும் விட்டிருக்க… மனைவியோடு அவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தான்… அந்தச் சொந்தங்களும் கண்மணியின் முன் நேராக முகத்தைக் காட்டவில்லை… போலிப் புன்னகையை கண்மணியிடம் காட்டத்தான் செய்தனர்…


ரித்விகாவுக்கு சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டது… தாய்மாமன் இல்லை என்பதால் நீலகண்டன் தான் அந்தப் பொறுப்பை ஏற்பார்… ரிதன்யாவுக்கும் அவர்தான் செய்தார்… ஆனால் ரிஷி இன்று விடவில்லை… நட்ராஜை மையப்படுத்தி ரித்விகாவுக்கான சடங்குகளைச் செய்ய வைக்க… மொத்த சொந்தங்களுக்கும் கோபமே.. ரிஷி அதை எல்லாம் ஒரு சதவிகிதம் கூட கண்டுகொள்ளவே இல்லை…


ஆனால் அதே நேரம் பெண்கள் செய்யும் சடங்குகள் விசயத்தில் அவன் தலையிடவில்லை…


கோதை தனசேகர் தங்கை என்ற பந்தத்தின் உரிமையைத் தடுக்கவில்லை…


ரித்விகாவுக்கு நீராட்டும் நிகழ்வு… நட்ராஜ் தாய்மாமன் சடங்கு செய்ததால் அவர்தான் முதல் தண்ணீரை ரித்விகாவுக்கு ஊற்ற வேண்டும்… சந்தனம் தடவிய கன்னத்தோடு… ரித்விகா புது நாற்றாக அமர்ந்திருக்க… நட்ராஜ் கைகள் நடுங்க செம்பில் தண்ணீர் எடுத்து ஊற்றி விட்டு… ரித்விகாவை ஆசிர்வதித்து விட்டு வந்தவர்… குற்ற உணர்ச்சி சூழ… தன் மகளை பார்த்தபடியே தான் அந்த இடத்தை விட்டு வெளியே வந்தார்… கண்மணியோ அவரை ஏறெடுத்து கூட பார்க்கக் இல்லை…


அதன் பின் கோதை சொந்தங்களில் இருந்த நடுத்தர வயது பெண்மணிகளோடு சேர்ந்து மற்ற சடங்குகளைச் செய்து ரித்விகாவை வீட்டுக்குள் அழைத்து வந்தனர்…


இளம் வயது பட்டாளங்கள் மகிளா ரிதன்யாவோடு சேர்ந்து ரித்விகாவை ஓட்டியபடி அன்றைய தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்க… கண்மணி தற்போதைய குண இயல்பு படி சட்டென்று யாரோடும் ஒட்டாத விதத்தால் கண்மணி தனித்து விடப்பட்டாள்…


அப்படி சொல்வதை விட மூன்றாம் மனுசியாக அங்கு நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்… உண்மையில் சொல்லப் போனால் அந்தச் சடங்குகள் எல்லாம் அவள் அறியாததே… அதேபோல ரித்விகாவின் சந்தோஷம் அவளையும் தொற்றிக் கொள்ள… அதனால் சிறு பிள்ளை போல சுவாரசியமாகவே பார்த்துக் கொண்டிருந்தாள்


இத்தனை நாள் ரித்விகாவோடு இருந்தாள்… இன்று அவளோடும் இருக்க முடியாத சூழ்நிலை… கண்மணியின் தனிமையை உணர்ந்ததாலோ என்னவோ லட்சுமி கண்மணியைத் தன்னருகே வைத்துக் கொண்டார்… அவரால் செய்ய முடிந்தது இப்போதைக்கு அவ்வளவுதான்…


ஒரு வழியாக … அந்தச் சிறு விழா மகிழ்ச்சியான விழாவாக நிறைவு பெற… அதன் பின் தான் பிரச்சனையே ஆரம்பமாகியது…


இதுவரை அதாவது தனசேகர் இறப்புக்குப் பின்னர்… தெரிந்தோ தெரியாமலோ ரிஷியின் குடும்பத்தில் மூன்றாம் நபர்கள் தலையீடு இருந்ததில்லை… ரிஷியின் முடிவுகள் மட்டுமே இறுதி முடிவாக இருக்கும்… ரிஷி கண்மணி திருமணமே அதற்கு சாட்சி…


இன்று மூன்றாம் நபர்களின் தலையீடு அந்தக் குடும்பத்தில் வெகு நாட்களுக்குப் பிறகு…


வரவேற்பறையில் மூத்த உறுப்பினர்கள் கூடியிருக்க… ரிஷி, பிரேம் ஒரு புறமும்… பெண்கள் அனைவரும் ஒரு புறமும் இருக்க… கண்மணிக்கோ எல்லாமே புதுவிதமாக இருந்தது… கண்களில் ஆச்சரியத்தைத் தேக்கி பார்த்துக் கொண்டிருந்தாள்…


ரிஷியும் அவளை அவ்வப்போது பார்த்துக் கொண்டுதான் இருந்தான்… கூடவே கோபத்தையும் தேக்கியபடியேதான்…


“ரிஷி… “ என்று நடுநாயகமாக அமர்ந்திருந்தவர் ரிஷி அழைக்க.. ரிஷி தன்னை அழைத்தவரை நோக்க


இப்போது ரிதன்யாவும் மகிளாவும் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்…


”இப்போ நம்ம தாத்தா செருமுவார் பாரு…” என்றாள் மகிளா தன் தோழியிடம்


”நான் என்ன சொல்ல வர்றேன்னான்னு அடுத்து ஆரம்பிப்பார்… பஞ்சாயத்து தலைவர் ஆச்சே… ஆனா இவர் ஆரம்பிச்ச விசயம் ஒண்ணா இருக்கும் முடிந்தது ஒண்ணா இருக்கும்” ரிதன்யா மகிளாவிடம் நக்கலாகச் சொல்ல… கண்மணிக்கே சிரிப்பு வந்து விட்டது.. தோழிகளின் பேச்சில்


கண்மணி அவர்கள் அருகில் இருந்ததால் ரிதன்யா-ரித்விகா அவர்களுக்குள் பேசிக் கொண்டது நன்றாகவே கேட்கத்தான் செய்தது…


இவர்கள் கிண்டல் செய்த அந்த பெரியவர்


“இங்க பாருப்பா… நடந்த முரணான விசயம் பற்றியெல்லாம் விட்றலாம்… இனி நடக்கிறது நல்லா இருக்கனும்… அதைப் பற்றி பேசுவோம்” என்று ஆரம்பிக்க…


ரிஷி புருவம் உயர்த்தினான்…


“எது முரணான விசயம்னு சொல்றீங்க… எதை விடச் சொல்றீங்க… எனக்கு இங்க எதுவுமே முரணா நடந்த மாதிரி தெரியலை… உங்களுக்கு அப்படி தெரியுதுனா… விசயம் எதுன்னு சொல்லுங்க… விளக்கம் கொடுக்க நான் ரெடி…” அவன் கேட்டவிதமே… பேசியவிதமே அங்கிருந்தவர்களோடு வாக்குவாதம் புரியும் தொணியில் இருக்க… அங்கிருந்த மற்றவர்கள்… அந்தப் பெரியவரிடம்


“நாம எதுக்காக பேச வந்திருக்கோம்னு சொல்லுங்க… வேற ஏதும் பேசவேண்டாம்” என்று எடுத்துக் கொடுக்க… அவரும் வார்த்தைகளை மாற்றினர்


“ரித்விகா பெரிய பொண்ணாகிருச்சு… கோதை என்ன நினைக்குதுன்னா…. அவங்க அண்ணன் பொண்ணுக்கு அதாவது இரண்டாவது பொண்ணுக்கு… மூத்த பொண்ணுக்கு செஞ்ச மாதிரியே அதே போல விமரிசையா எல்லாம் செய்ய ஆசைப்படுது… “


“அதுக்கு” ரிஷி நக்கலாகக் கேட்க…


”என்னப்பா இப்படிக் கேட்கிற… நம்ம பழக்கவழக்கம் தெரியாதா… பொண்ணுக்கு சடங்கு வைக்கனும்… அதுக்கு பெருசா ஃபங்ஷன் வைக்கனும்..”


”அப்போ இன்னைக்கு நடந்ததென்ன தாத்தா” கண்மணி உண்மையிலேயேதான் தெரியாமல் தான் கேட்டாள்… பெரியவர் கேள்வி வந்த திசையை நோக்கி முறைத்தார்…


“ஆம்பளைங்க பேசிட்டு இருக்கோம்மா… “ என்ற போதே


கண்மணிக்கு முகம் மாறிவிட… சந்தேகம் வந்தது கேட்கத் தோணியது… கேட்டு விட்டாள்…


“வாயே திறக்கக் கூடாது” என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் அவளை அடக்கிய விதம் கண்மணிக்கு எரிச்சலைத் தர…


“ரித்விகாவுக்கு இதுக்கு மேல என்ன ஃபங்ஷன் பண்ணனும்… எனக்குப் புரியல… அதுனாலதான் கேட்டேன்… எனக்குத் தெரியனும்… ஏன் பண்றீங்கன்னு தெரியனும்… கேள்வியே கேட்கக் கூடாதுன்னா என்ன அர்த்தம்” கண்மணி அங்கிருந்த ஒவ்வொருவரையும் நேர்ப்பார்வைப் பார்த்துக் கேட்க…


அத்தனை பேரின் முகத்திலும் ஒரு நிமிடம் ஈயாடவில்லை…


“தெரியாதா… இதெல்லாம் இவளுக்கு தெரியாதாம்மா” இங்கு ரிதன்யா காதில் மகிளா கிசுகிசுக்க…


“யாருக்குத் தெரியும்… தெரியாதுன்னா… அப்படி ஒரு விசயமே நடக்கலையோ என்னவோ” சிரித்தபடியே ரிதன்யா நக்கலாகச் சொன்ன போதே கண்மணிக்கும் கேட்டு விட… செந்தனலாக மாறி அவள் கண்கள் ரிதன்யாவை எரிக்க ஆரம்பிக்க… ரிதன்யாவே அப்போதுதான் பேசிய வார்த்தைகளின் வீரியம் புரிய தலை குனிந்து கொண்டாள்…


இதற்கிடையே நிலைமையைச் சமாளிக்க… அவசரமாக ரிஷி அவள் அருகில் வர… ரிஷியின் அருகாமையே அந்த செந்தனலை தானாகவே குளிர வைத்திருந்தது


“ரிஷி எனக்கு உண்மையிலேயே தெரியலை ரிஷி… கேள்வி கேட்டது தப்பா” என்று வந்தவனிடம் கேட்க…


அவனும் அவளிடம் விளக்க ஆரம்பித்திருந்தான் அவள் மேல் இருந்த கோபத்தையெல்லாம் தற்காலிகமாக ஒத்திவைத்து விட்டு… இப்போது அங்கிருந்த அத்தனை பேரையும் இவர்கள் இருந்த திசை நோக்கி திரும்ப வைத்தாள் கண்மணி


ரிஷி-கண்மணி பேசிக் கொண்டிருக்க… அதில் கடுப்பான நீலகண்டன் அங்கிருந்தவர்களிடம்


“நீங்க பேச ஆரம்பிங்க மாமா… நாம முடிவெடுத்துட்டு ரிஷிகிட்ட சொல்வோம்… “ என்ற போதே கண்மணியோடு பேசிக் கொண்டிருந்த ரிஷிக்கும் அந்த வார்த்தைகள் கேட்க… அவன் முகம் கோபத்தில் கொப்பளிக்க… அவன் பேச ஆரம்பிக்கும் முன்னேயே


“ரிஷி… நீங்க சொல்லுங்க… அவங்க பேசுறது எதுவும் எனக்குப் புரியலை… நீங்க எடுக்கிற முடிவு எதுனாலும் எனக்கு ஓகே…” என்றவள்…


அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்து…


“இது ரிஷியோட குடும்பம்… ரிஷி அவர் குடும்பத்துக்காக அவர் என்ன முடிவெடுத்து வச்சுருக்கார்னு… நீங்க யாருமே ஏன் கேட்கலை… முதல்ல அவர் என்ன சொல்ல வர்றாருன்னு அதைக் கேளுங்க… அதைக் கேட்டுட்டு அடுத்து நீங்க எல்லாரும் பேச ஆரம்பிங்க” என்றவள்.. ரிஷியைப் பார்த்து

“நீங்க சொல்லுங்க ரிஷி…” என்று அவனைப் பேச ஊக்குவிக்க... அங்கிருந்த மொத்தக் கூட்டமும் வாயடைத்துப் போய் அவளைப் பார்க்க……


ரிஷி இப்போது முறைத்தான் கண்மணியைப் பார்த்து… அந்த முறைப்பும் தற்போது அவள் பேசியதற்காக இல்லை… அன்று ஊட்டியில் நடந்த நிகழ்வுக்காக


“இவ என் பேச்சைக் கேட்க மாட்டாளாம்… ஆனால் இவளத் தவிர மத்தவங்க எல்லாரும் என் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்கனுமாம்” அந்தத் தொணியில் அவன் முறைத்தபடியே பேச ஆரம்பிக்க


அவன் பேச்சைக் கவனிக்காமல்… அங்கு கூட்டம் தங்களுக்குள் பேச ஆரம்பித்ததில் சலசலப்பு ஏற்பட…


“கொஞ்சம் அமைதியா இருங்க எல்லாரும்… அவர் பேச ஆரம்பிச்சுட்டாரு” என்று ரிஷியை நோக்கியபடியே… அவன் பேசுவதைக் கவனிக்க ஆரம்பித்தவள்… மற்றவர்களையும் கவனிக்க வைக்க… அத்தனை பேரின் பார்வையும் ரிஷியிடம் இருக்க… நட்ராஜின் பார்வையோ வழக்கம் போல… தன் மகளிடம்... அதிலும் மகள் பேசிய விதத்தை ரசித்துக் கொண்டிருந்தார்… எந்தக் கண்மணியை அவர் தொலைத்தாரோ… அவளை கொஞ்சம் கொஞ்சமாக கண்டுபிடிக்க ஆரம்பித்த சந்தோசம் அவர் முகத்தில் அப்பட்டமாகவேத் தெரிந்தது…


ரிஷி அங்கு பேசிக் கொண்டிருந்தான்…


”தாத்தா… எனக்கு இப்போ ஃபங்ஷன் வைக்க விருப்பம் இல்லை… அதுனால நடத்தவே போறதில்லேன்னு சொல்லலை… அப்பாவும் அம்மாவும் சேர்ந்து ரிதன்யாவுக்கு எப்படி விமரிசையா பண்ணாங்களோ அதை விட பெருசா பண்ணுவேன்… ஆனா இப்போ எனக்கு வசதியும் இல்லை… அதை விட எனக்கு நேரமும் இல்லை… இதுதான் என்னோட நிலை… முடிவும் கூட… இதுக்கு மேல ஓபனா ஏதும் சொல்ல முடியாது…


“ஹ்ம்ம்ம்… உங்க எல்லோருக்கும் ரொம்ப நன்றி… எங்க குடும்பத்தை உங்க குடும்பமா நினைத்து நீங்க எல்லோரும் இங்க வந்ததுக்கு… இதைப் பற்றி பேசினதுக்கு” என்று கை கூப்பி… மென்மையாகவே முடிக்க


கண்மணிக்கும் அவன் பேசிய விதம் திருப்தியைத் தர… கணவனைப் பெருமையுடன் பார்த்தாள்…


“அம்மா… உன் வீட்டுக்காரர் பேசி முடிச்சுட்டாரு… இப்போ நான் பேசலாமாம்மா…” கேட்ட அங்கு நடுநாயகமாக வீற்றிருந்த பெரியவருக்கும் புன்னகையே முகமெங்கும்…


அவருக்குத் தெரியும் இந்த ரிஷி யார் என்று… முதலில் எப்படி இருந்தான் என்றும்..


ஆனால் இந்தப் பக்குவப்பட்ட ரிஷி… அவர் அறியாதது… முதலில் இவரிடம் அவன் பேச ஆரம்பித்த போது இருந்த கோப பாவம் … கண்மணி இடையிட்ட போது.. அவனை அங்கு இருந்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு… முதல் மனிதனாக முன்னிருத்தி அவனை பேச வைத்த போது… அவன் பேசிய பாங்கு… வேறு விதமாக மாறி இருக்க…


“ரிஷிக்கு வேறு யாரும் தேவையில்லை… இவள் ஒருத்தி மட்டுமே போதும்… அவன் பெரிய நிலைக்கு வந்து விடுவான்” என்று தோன்ற… அந்த நினைப்பில் அந்தப் பெரியவருக்கும் புன்னகையில் விரிந்தது முகம்…


ஆக பெரிய விழா தேவையில்லை என்ற முடிவுக்கு மூத்தவர்களும் வந்திருக்க…


“இல்ல ரிஷி மாமா… ரித்விகாவுக்கு இந்த ஃப்ங்ஷன் நடக்கனும்” யாருமே எதிர்பார்க்கவில்லை… மகிளா இடையிட்டிருந்தாள்…


அவள் குரலில் அப்படி ஒரு ஆவேசம் இருக்க… யாரையும் அவள் கண்டுகொள்ளவில்லை…

தன் கணவனை நோக்கி


“ரிஷி மாமா நடத்தலேன்னா நாம நடத்துவோம் பிரேம்… ரித்வி உங்களுக்கு தங்கை முறைதானே… சொல்லுங்க பிரேம்” என்று பிரேமை வேறு முன்னிருத்த…


பிரேமின் குடும்பமும் அங்கு இருக்க… அதைப்பற்றி எல்லாம் அவளுக்கு கவலை இல்லை… தான் பிடித்த பிடியிலேயே இருக்க… நீலகண்டனுக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை…


கண்மணி ரிஷியின் பின்னால் இருந்து… அவனை அத்தனை பேர் முன்னிலையிலும் யாருக்கும் விட்டுக் கொடுக்காமல்… தலைவனாக முன்னிருத்த… மகிளாவோ… தன் உரிமையை… நிலைநாட்ட தனக்குப் பின்னால் தன் மேல் அளவில்லாத காதல் கொண்ட தன் கணவன் இருக்கின்றான் அவனை முன்னிருத்தி பிரேமை சங்கடத்தில் ஆழ்த்தினாள்…


“சொல்லுங்க.. சரின்னு சொல்லுங்க பிரேம்” அவன் அவளுக்கு கொடுத்த சலுகையை… காதலை… அத்தனை பேரின் முன்னிலையிலும் காட்டிக் கொண்டிருக்க…


வேறு வழியின்றி பிரேம் தலை அசைத்து வைக்க… ரிஷிக்கு பிரேமை நினைத்து கவலையும் அதே நேரம்… மகிளாவை நினைத்து கோபமும் ஒரே நேரத்தில் வர… வந்தக் கோபத்தை மகிளாவிடம் காட்ட முடியுமா என்ன…


பிரேமை அந்தத் தர்ம சங்கடமான நிலையில் இருந்து காப்பாற்ற ஒரே வழிதான் அவனுக்குத் தெரிந்தது…


“இல்லை மகிளா… இது எங்க குடும்ப விழா… இதை இன்னொருத்தவங்க எடுத்து நடத்துறது எனக்குப் பிடிக்கலை…” சொல்லிக் கொண்டிருக்கும் போதே


”ரிஷி ஒரு நிமிஷம்… உங்களோட பேசனும்” கண்மணி மகிளாவைப் பார்த்தவாறே… சொல்ல ரிஷியும் மறுக்கவில்லை… அவளோடு அறைக்குள் சென்று விட


அதைப் பார்த்த ரிதன்யா மட்டும் தனக்குள் சிரித்துக் கொண்டவள் மகிளாவிடம் திரும்பி…


“இப்போ பாரு… அவளோட பேசிட்டு வந்து… எங்க அண்ணன் நீ எடுத்த முடிவுக்கு சரின்னு சொல்லுவாரு பாரு… நிச்சயமா சொல்றேன்… இதுதான் மகிளா நடக்கும்… என் புருசன் பேச்சைக் கேளுங்கன்னு முதல்ல எல்லோரையும் வாய மூட வச்சு கேட்க வச்சாள்ள... அடுத்து என் புருசன் என் கைலதான் இருக்காரு… நான் சொல்றதை மட்டும் கேட்பாருன்னு அந்தக் கண்மணி காட்டுவா எல்லோர்கிட்டயும்…” மொத்த ஆதங்கமும் இகழ்ச்சியாக வெளி வந்திருந்தது ரிதன்யாவிடமிருந்து….


---

வெளியே அனைவரும் காத்திருக்க… அறையிலோ… ரிஷிக்கும் கண்மணிக்கும் இடையே வாக்குவாதம்


மகிளா எடுத்த முடிவுக்கு ரிஷியை ஒத்துக் கொள்ள கண்மணி சொல்ல… ரிஷியோ மறுத்தவனாக


”நீ அன்னைக்கு என்கிட்ட சொன்ன அதே பதில் தான் உனக்கும்…. நீ சொல்ற எல்லாத்துக்கும் நான் தலையை ஆட்ட முடியாது… ஏற்கனவே உன் மேல கோபமா இருக்கேன்… இன்னும் இன்னும் அதை அதிகப்படுத்தாத” என்று வெளியேற நினைக்க…சட்டென்று அவன் கையைப் பிடிக்க…


“ரிஷிம்மா… நான் சொல்றதை கொஞ்சம் காதில வாங்கிட்டு உங்க முடிவை தாராளமா எடுக்கலாம்” என்று கெஞ்சலாகச் சொன்னவள்…


“கொலை வெறில இருக்கேன்… ஆளாளுக்கு என்னைக் காண்டாக்கிட்டு இருக்காங்க… நீ வேற என்னைப் படுத்தாத” அவளின் கெஞ்சலுக்கு இவனின் கொஞ்சலான!!! கோப மொழிகள் வார்த்தைகள் வர…


அவனின் கோப மொழிகள் பார்த்து மருளும் விழிகளா கண்மணியின் விழிகள்… இருந்தும் நடித்தன…


“ப்ச்ச்” என்று சலித்தாவாறே


“சரி போங்க… உங்க முடிவையே சொல்லுங்க…” என்று சொல்லி விட்டு அவனைப் பார்க்க… இவனோ… அவள் பிடித்திருந்த இவன் கையைப் பார்த்தான்…


“போங்க ரிஷிக் கண்ணா… “ என்று சிரிப்பை அடக்கியவாறு சொல்ல… அவள் கன்னக் குழியின் ஆழம் அதிகமாகி அவள் மறைத்த சிரிப்பை அவனுக்கு காட்டிக் கொடுக்க… இவனோ முறைத்தான் இன்னும் அதிகமாக


“லைட்டாத்தான் பிடிச்சுருக்கேன்… உங்க பலத்துக்கு உதறிட்டே போகலாம் ரிஷிக் கண்ணா..”


“என்னடி பிரச்சனை உனக்கு… இன்னைக்குத்தான் மேடத்துக்கு சமாதானமா பேசுறதுக்கு தெரிஞ்சுருக்கோ” என்று பொறுமியவனாக… அதே வேகத்தில் அவள் புறம் திரும்ப… அதில் அவள் மேலேயே இடித்துக் கொள்ளப் போக… நல்ல வேளை கண்மணி நகர்ந்து விட்டாள்…


“சமாதானம்தானே… பேசலாமே… ஆனால் நீங்க அதுக்கு இடம் கொடுக்கலைன்றதுதான் உண்மை…” என்று ஆரம்பித்தவள்.. மகிளா விசயமாக பேச வந்தது தங்களை நோக்கி… திசை மாறுவதை உணர்ந்தவள்


”வெளில எல்லாரும் இருக்காங்க… நாம அப்புறம் அந்த சமாதானக் கதையைப் பேசுவோம்… ஊட்டிக் கதையை ஊட்டிக்கிட்டே பேசலாம்… ரிஷிம்மா… ” என்றவள்… மகிளாவைப் பற்றி பேச ஆரம்பித்தாள் ரிஷியிடம்


”மகிளா பாவம் ரிஷி… அந்தப் பொண்ணு இவ்வளவு சந்தோசமா இருக்கான்னா… அதுக்கு பிரேம் தான் காரணம்… மகிளாவுக்கு உங்க மேல இருந்த காதல் இப்போ இல்லாமல் இருக்கலாம் ரிஷி… ஆனால் அவங்கள நீங்க தள்ளி வச்சதுக்கான காரணத்தை ஏத்துக்க முடியலை… அவங்களுக்குனு இல்லை… எந்தப் பொண்ணுக்குமே ஏத்துக்க முடியாது ரிஷி… வாய்ப்பே கொடுக்காமல் அவளை நிராகரிச்சு இருக்கீங்க அந்த வலி இன்னும் இருக்கு… அதுதான்… எல்லாத்திலயும் நான் பெர்ஃபெக்ட்… எல்லாத்தையும் நான் சாமாளிப்பேன்னு முன்னால வந்து நிற்க வைக்குது… நானும் பார்த்துட்டுத்தான் இருக்கேன் ரிஷி அவங்களை… எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்றாங்க… எனக்கு எல்லாம் தெரியும்னு ஒவ்வொரு இடத்திலயும் வந்து பேசுறாங்க… இது எல்லாத்துக்கு காரணம் என்ன தெரியுமா.. உங்களோட நிராகரிப்பு… நீங்க அவங்க மெச்சூரிட்டியப் பார்க்கனும்… அவங்கள மிஸ் பண்ணிட்டோம்னு நினைக்க வைக்கனும்… அதுக்காக மட்டுமே…”


ரிஷி கண்மணியை அவள் பேசுவதை எல்லாம் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான்… யோசிக்கவும் செய்து கொண்டிருந்தான்


“ரித்விகா ஃபங்ஷன் அவங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு… தப்பு சொல்லலை நான்… ஆனால் அதே நேரம் பிரேமோட அவங்க உறவு எந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்குனு… அவங்க அத்தனைப் பேருக்கு முன்னால ஒரு முடிவெடுத்து பிரேமை ஒத்துக்க வைத்ததில் இருந்தே தெரியுதுதானே… பிரேம் மகிளாவை அந்த இடத்தில வச்சுருக்காங்க… அன்பைக் கொட்டிக் கொடுக்கிறாங்க… ஆனாலும்… மகிளாவால அதை முழுமையா அனுபவிக்க முடியல… அதுக்கு காரணம் நீங்க.. உங்க அன்பை மறக்க முடியலை… அது உங்க தப்பு இல்லை…”


என்றவள் சற்று நிறுத்தி… ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தபடியே


”நாம கொஞ்சமா கொடுத்தாலே… ” என்ற போதே


கண்மணியின் பேச்சை இடையில் நிறுத்தியவன்


“உன் டீச்சர் வியாக்கியானம் எல்லாம் விட்டுட்டு… சொல்ல வந்ததை நேரடியா சொல்றியா… வெளில எல்லாரும் நமக்காக காத்துட்டு இருக்காங்க” கடுகடுக்க… கண்மணியும் மீண்டும் தொடர்ந்தாள் தீவிர பாவத்துடன்

“மகிளா பிரேமோட அவங்க வாழ்க்கையை முழுமையா வாழ இதை மட்டும் பண்ணுங்க… அட்லீஸ்ட் மகிளாவுக்காக இல்லைனாலும் பிரேமுக்காக… அவரோட உண்மையான காதலுக்காக… புரிஞ்சுக்கங்க ரிஷி… மகிளா அவங்களோட எல்லா உணர்வுகளுக்கும் வடிகாலா தீர்வா பிரேம் என்ற ஒருத்தர்கிட்டதான் தேடனும்…… முக்கியமா உங்ககிட்ட வந்து முடியக் கூடாது… யோசிங்க ரிஷி… ” என்று முடிக்க


சிலநிமிடம் யோசித்தவன்


அவளிடம் எதுவுமே பேசாமல் அறையை விட்டு வெளியேற…. கண்மணியும் அவன் பின்னாலேயே வெளியேற நினைக்க… கதவைத் திறக்கப் போனவன்… என்ன நினைத்தானோ தெரியவில்லை…


வேகமாகத் திரும்பி வந்தவன்…. வந்த வேகத்தோடே… கண்மணியை இழுத்து சுவரோரம் நிறுத்தியவன்….


“ப்ளாக்மெயில்லாம் பலமா இருக்கு… மகிளாவுக்கு யூஸ் பண்ணி என்னை கார்னர் பண்ணிட்ட… நான் உன் மேல கோபமா இருக்கேன்னு தெரியுமா தெரியாதா உனக்கு” என்றான்…


அவனுக்கும் தெரியும்… கண்மணி அவர்களுக்கிடையே உள்ள பிரச்சனைக்காக அவனைக் கார்னர் செய்யவில்லை… அதை உணர்ந்து கொண்டாலும்… ஏனோ கோபம்தான் பெருகியது…


”ப்ச்ச்..” அழகாக இதழ் சுழித்தவளின் கன்னக் குழியில் அவன் கவனம் சிதற… இருந்தும் நொடியில் சுதாரித்தவன்… தன் கேசத்தை அழுந்த சரிப்படுத்தி தன்னை சமாளித்தவன்… அவளை விட்டு தள்ளி நின்று


”இப்போ உன் பேச்சைக் கேட்டதால… உன் மேல எனக்கு கோபம் போயிருச்சுனு அர்த்தம் இல்லை… “


கண்மணியிடமிருந்து வார்த்தைகள் வர வில்லை… அவள் அமைதி உணர்ந்து அவளைப் பார்த்தவன்…


”நான் சொன்னது புரியுதா” என்று கோபத்துடன் கேட்க அப்போதும் பேசாமல் அழுத்தமாக அவள் நிற்பதை உணர்ந்து… இவளிடம் இதற்கு மேல் பேசுவது வேலைக்காகாது உணர்ந்தவனாக… பேசாமல் நகர்ந்தவன்…. கதவின் அருகில் அவன் செல்லும் போது…


”மன்னா… ”


“புரிந்தது மன்னா” என்று அவனைப் பார்த்து குறுஞ்சிரிப்புடன் சொல்ல… ரிஷி ஒரு வினாடி நின்று நிதானித்து திரும்பினான்…


“மன்னா… கண்ணான்னு ஐஸ் வச்சா கூட நான் இன்னும் கோபமாத்தான் இருக்கேன்”


“சரிங்க மன்னா” ஒன்றுமே தெரியாத சிறுமி போலச் சொல்ல… அவள் தன்னோடு விளையாடுகிறாள் என்பது புரியாதவனா… அதில் இன்னும் கடுப்போடு அவளை நோக்கி வர எத்தனிக்க…


“தங்கள் நாட்டு பிரஜைகள்… வெளியே தங்கள் திருவாய்மொழிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் மன்னா” என்று இன்னுமே முகத்தை அப்பாவியாக வைத்தபடி வெளியே கைகாட்டியயவள் அவனுக்கு மற்றவர்களை நினைவுபடுத்த…


“உன்னை” என்ற போதே… அவள் அவனருகில் வந்து கதவைத் திறந்து விட… இப்போது எதுவுமே செய்ய, பேச முடியாத நிலை… ரிஷிக்கு


வேறு வழி இல்லாமல் வெளியே வந்தவன் அனைவர் முன்னிலையிலும் நிற்க… கண்மணி மீண்டும் தன் இடத்தில் வந்து நின்று கொண்டாள்… சற்று முன் ரிஷியுடன் விளையாடிய குறும்பு ததும்பிய விழிகளோ இப்போது கூர்மையுடன் அங்கு நடப்பதைக் கவனிக்க ஆரம்பித்திருந்தன…


ரிஷியும், மகிளா சொன்னது போல அவளும் பிரேமும் ரித்விகா ரித்விகாவின் சடங்கு விழாவை நடத்த சம்மதம் சொன்னவன்… அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தான்…


“ஆனால் இன்னும் ஒரு வாரத்திலேயோ இல்லை இரண்டு வாரத்திலேயோ முக்கியமான ப்ராஜெக்ட் விசயமா.. ஆஸ்திரேலியா போகிறேன்… இந்தியா வர 3 மந்த்ஸ் டூ 5 மந்த்ஸ் கூட ஆகலாம்…“ என்றவனின் வார்த்தைகளில் மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கலாம்… ஆனால் கண்மணிக்கு அதிர்ச்சி ஏற்பட்டதுதான் அங்கு கொடுமை… இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவளிடம் ரிஷி சொல்ல வில்லை..


ரிஷி சொன்ன அடுத்த நொடியே தன் தந்தையைப் பார்க்க… அவருக்குமே இப்போதுதான் தெரியும் என்ற பாவனையில் இருக்க…


”உன் ஆஸ்திரேலியா ட்ரிப்பை தள்ளிப் போட முடியாதாப்பா” என்று ஒரு குரல் கூட்டத்தில் இருந்து வினவ


“இது என் வாழ்க்கையோட அடுத்த கட்டம்… இந்த ப்ராஜெக்ட் முக்கியமானது… யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்…” என்றவனின் தீவிரமானத் தொணியில் அனைவரும் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் பேசிக் கொள்ள.. ரிஷி அவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல்


“இப்போ சொல்லுங்க பிரேம்… ஒன் வீக் டைம் தான் இருக்கு… முடியுமா உங்களால… அதுமட்டுமில்ல… நான் திரும்பி வரும் போது… எனக்கு நேரமும் இருக்கும்… அதுக்கான வசதியும் இருக்கும்” என்று பிரேமுக்கு சம்மதம் போல சொல்லி… பிரேம்-மகிளாவை விழாவை நடத்த முடியாத நிர்பந்தத்திலும் நிற்க வைக்க…


தான் இவ்வளவு சொல்லியும்… மகிளா வாழ்க்கையைப் பற்றி ரிஷி யோசிக்கவே இல்லையோ என்று தோன்றியது கண்மணிக்கு…


ஆனால் மகிளா அப்போதும் பிடிவாதமாக இந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே தங்களால் நடத்த முடியும் என்று உறுதியாகக் கூற….


“ஒகே… ஆனால், என்னையோ… என்னோட மனைவின்றதுனால கண்மணியையோ எதுக்காகவும் இழுக்கக் கூடாது… முடியுமா உன்னால… ” ரிஷி மகிளாவைப் பார்த்து சவாலாகக் கேட்க…


“கண்டிப்பா… எங்களால முடியும்” சவாலை ஏற்றுக்கொண்ட விதத்தில் குரல் வர… குரல் வந்த திசையோ மகிளாவிடமிருந்து இல்லை அவளது கணவன் பிரேமிருந்து…

----

/*என் இதயம் முழுதும் விதையாய் விழுந்தாய் வெறும் விதை என்று விட்டு விட்டு சென்றாய் விருட்சத்தை போல நீ வளர்ந்து நின்றாய்

உயிரில்…. கலந்தாய்….. உணர்வில்….. நுழைந்தாய்….. எந்தன் வீடு என்று என்னை விட்டு விட்டு சென்று உந்தன் பின் வந்து தொடர்கிறதே


தோளில் சாயும் போது தோழி நீயடி மடியில் சாயும் போது தாயும் நீயடி

எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய் எப்படி நீயும் என்னுள் வந்தாய்*/



2,891 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page