top of page
Writer's picturePraveena Vijay

கண்மணி... என் கண்ணின் மணி -32 -1

அத்தியாயம் 32-1


/*கண்மணியே

ச த நி ச

த நி ச ம க ம க ச

த நி ச க க ச

த ப க ச க க

ச நி த நி ச


வழியில பூத்த

சாமந்தி நீயே

விழியில சேர்த்த

பூங்கொத்து நீயே


அடியே அடியே பூங்கொடியே

கவலை மறக்கும் தாய் மடியே

அழகே அழகே பெண் அழகே

தரையில் நடக்கும் பேரழகே


நிழலாட்டம் பின்னால

நான் ஓடி வந்தேனே

ஒரு வாட்டி என்ன

பாரேன் மா*/

“இன்னாது இங்கதான் இனி தங்க போறிங்களா… வந்தீங்களா… ஒருவேள துண்ணுட்டு வந்த திசையை நோக்கி போயின்னே இருக்கனும்… அத்த விட்டுட்டு”


கண்மணியின் குரலே…


பைக்கில் இருந்து இறங்கிய ரிதன்யா கண்மணி இல்ல கேட்டைத் திறக்க…. ரிதன்யாவுக்கு முதலிலும்… அதன் பின் பைக்கில் இருந்த ரிஷிக்கும் கண்மணியின் குரல் வந்தடைய…


கேட்ட கண்மணியின் குரலில்… அத்தனை சத்ததோடு… அதோடு அவள் வார்த்தைகளில் இருந்த அந்த வட்டார பேச்சு வழக்கு என ரிதன்யாவின் முகத்தில் அவளையும் மீறி அசூசையான உணர்வோடு கூடிய பாவனையை கொண்டு வந்திருக்க…


தங்கையை பார்த்த ரிஷி… பார்வையாலேயே… அவளை உள்ளே போகச் சொல்ல… அவளோ


“இதெல்லாம் உனக்குத் தேவையா” என்ற பார்வையை மட்டுமே வீசினாள்…


ஆனால் அந்த ஒரு பார்வையிலேயே தன் அண்ணனின் மேல் கோபமும்… அதே நேரம் பரிதாபமும் ஒரு சேர வந்திருக்க… அதற்கு மேல் அங்கு நின்றால்… உணர்ச்சி வசப்பட்டு… தன் அண்ணனிடம் ஒன்று அந்தக் கண்மணி போல கோபத்தில் தானும் கத்தி விடுவோம்… இல்லை… கண் கலங்கி விடுவோம் என்ற படபடப்பு ரிதன்யாவுக்குள் வர… விருட்டென்று நடந்தவளாக தன் வீட்டுக்குள் நுழைந்தவள்… நுழைந்த வேகத்திலேயே தங்கள் வீட்டுக் கதவையும் படாரென்று மூடிக்கொண்டாள்… எதிலிருந்தோ தப்பிப்பவள் போல…


….


ரிஷிக்குமே ஒன்றுமே புரியவில்லை… ஏன் கண்மணி இப்படி சத்தம் போட்டு பேசிக் கொண்டிருக்கின்றாள்… குடித்தனக்காரர்களிடம் தான் சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றாளோ என்ற எண்ணம் தான் முதலில் அவனுக்குள்… ஆனால் இங்கிருந்து போய்விட்டு திரும்பி வருவதற்குள்… அப்படி என்ன கலவரம் நடந்து விட்டது என்று யோசித்தவனுக்கு.. கண்மணி இப்படி கத்தி சத்தம் போட்டு பேசுவதைக் கேட்பதெல்லாம் புதிது அல்ல… காதில் போட்டுக் கொள்ளாமல் கடந்து போய் விடுவான்… ஆனால் அந்த குடித்தனம் இருந்த பழைய ரிஷியா???… இப்போது… இன்று அப்படி விட்டு விட்டு போய் விட முடியுமா… தனக்குள் குழம்பியபடி.. உள்ளே நுழைந்தவனின் கண்களில் முதலில் பட்டது அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்து… எதையுமே காதில் வாங்காதது போல… நாளிதழைப் படித்துக் கொண்டிருந்த அவனது மாமனார்தான்…


ஒரு நிமிடம் ரிஷி அப்படியே நின்று விட்டான்… அதே நேரம் கண்மணி யாரோடு பேசிக் கொண்டிருக்கின்றாள் இல்லை இல்லை கத்திக் கொண்டிருக்கின்றாள் என்பது புரிய


“அடப்பாவி மனுசா… உள்ள உன் பொண்ணு ஸ்பீக்கர முழுங்கின மாதிரி காட்டு கத்து கத்திட்டு இருக்கா… அதுவும் இவர் அப்பா அம்மாவோட… இவர் என்னடான்னா… கூலா பேப்பர் படிச்சுட்டு இருக்கார்… என்ன குடும்பம்டா”


நினைக்கும் போதே… மனசாட்சி… கெக்க பிக்க என்று சிரிக்க ஆரம்பிக்கப் போக… அது பேச ஆரம்பிக்கும் முன்னேயே…


“என் குடும்பம்… என் பொண்டாட்டிதான்… நீ அடங்கு” என்று அடக்கியவனாக… பைக்கை நிறுத்திவிட்டு… தன் முகத்தை பைக் கண்ணாடியில் பார்த்தவன்… அணிந்திருந்த கண்ணாடியை பார்த்து… இது ஒண்ணுதான் உனக்கு குறைச்சல்… என்றபடியே கண்களில் இருந்து கழட்டி… வேக வேகமாக தன் மாமனார் நட்ராஜை நோக்கிப் போனவன்…


”சார்… என்னாச்சு…” என்று அவரது வீட்டை நோக்கிப் பார்த்தபடியே கேட்க


இவன் தான் படபடத்தான்…


ஆனால் அவரோ…. இவனிடம்.. மிகச் சாதரணமாக


“ஓ… அதுவா… ஒண்ணுமில்ல.. அது வழக்கமா நடக்கிற ஒண்ணுதான்… நீங்க கிளம்புங்க..… நான் வேற கம்பெனிக்கு வர மாட்டேன்”


என்று சொல்ல… அப்போதும் ரிஷி சமாதானமடையவில்லை… அவன் பார்வை வீட்டை நோக்கியே இருக்க…


நடராஜ் மீண்டும் அவனிடம்


”ரிஷி… இடையில நாம போனோம்… நமக்குத்தான் ஆப்பாகும்… “ என்றபடி மீண்டும் நாளிதழில் மூழ்கப் போக…


“சார்… அவ கத்திட்டு இருக்கா” ரிஷி படபடப்பாகச் சொன்னவனுக்கு… ரிதன்யாவின் முகம் வேறு வந்து போக… கண்மணியின் அவன் கவலை அவனுக்கு…


“ஏன் ரிஷி இவ்வளவு பதட்டம்… எங்க அம்மாவும் நம்ம ‘மணி’யும் நார்மலா பேசினாத்தான்… நாம சீரியஸா ஆகனும்… நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க… உட்காருங்க….” என்றவாறு தள்ளி அமர்ந்தவராக… அருகில் இருந்த இடத்தைக் காட்டி அமரச் சொன்னவரிடம்


”சார்..” என்று நட்ராஜின் இன்னும் வீட்டைப் பார்த்தவாறே அவஸ்தையாகச் சொல்ல


”உட்காருங்க இதுக்கெல்லாம் பழகிக்கங்க… என்னைப் பாருங்க…” என்றவரிடம் வேறு வழியின்றியும்… வேறு ஏதும் சொல்ல முடியாமலும் அமர்ந்தவனின் கைகளில்… நாளிதழின் ஒரு பகுதியைக் கொடுக்க… கண்களை அதில் பதித்தான் ரிஷி


ஆனால் கண்கள் நாளிதழில் இருந்தாலும்.. அவன் செவியும்… எண்ணமும்… அவனிடம் இல்லாமல் உள்ளே கண்மணியிடமே இருந்தது…


“இப்போ இன்னாங்கிறீங்க… ஆமா… கல்யாணம் ஆகிருச்சுதான்… அதுக்காக அப்படியே போயிருப்பா… நாம மகன் கூட ஒட்டிக்கலாம்னு மூட்டை முடிச்சை கட்டிட்டு வந்துட்டீங்களா… அப்படி ஒரு எண்ணம் இருந்துச்சுன்னா… “ என்ற போதே…


“என்னடி… ஒரேதா ராங்கா பேசிட்டு இருக்க… அவன் உனக்கு அப்பன்றதுது… எங்களுக்கு அப்புறம் தான்…”


“என்ன கெழவி… வாயெல்லாம் இன்னைக்கு ஓவரா இருக்கு… “ கண்மணியும் விடாமல் பேச


“என் புள்ளைக்குத்தான் அடங்கல…. உன்னைக் கட்டிட்டு வந்த மவராசனாச்சும் உன்னை அடக்கி வச்சுருப்பான்னு பார்த்தா… அவனும் உன்னை அவுத்து விட்டுட்டுதான் இருக்கான் போல… அது புள்ளப் பூச்சி….எங்க நீதான் நீதான் ராங்கி ரவுடி ஆச்சே… இருக்கானா… இல்லை உன்னைக் கட்டின அடுத்த நாளே ஓடிப் பூட்டானா…” என்க…


கேட்ட ரிஷிக்குத்தான் எங்காவது தலையில் முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது…


ஓரக்கண்ணால்… தன் மாமனாரைப் பார்க்க… அவரோ… எந்த ஒரு பாவனையும் காட்டாமல்… உணர்ச்சியற்ற கல் போல படித்துக் கொண்டிருக்க…


”இது வேலைக்காகாது.. இதற்கு மேல் அமைதியாக இருந்தால்… ம்ஹூம்ம்ம்…” நினைத்தவன்… வீட்டினுள் போக முடிவு செய்தவனாக…. எழப் போக… எழுந்தவனை நட்ராஜ்.. கைப் பிடித்து இழுத்து நிறுத்தி தடுக்க…


”அவளுக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு சார்… போக வேண்டாமா” என்றவன் சாதரணமாகச் சொல்லத்தான் நினைத்தான் அவன் மாமனாரிடம்… ஆனாலும் வார்த்தைகள் கடுப்பாகத்தான் வெளிவந்தன…


சொன்னவன்… அடுத்த நிமிடம் வீட்டினுள் நுழைய…


நட்ராஜின் தாயார்… மற்றும் தந்தை இருவரும் வாசலைப் பார்த்து நிற்க… கண்மணியோ… அவர்களைப் பார்த்தபடி… இடுப்பில் கை வைத்தபடி அவர்கள் இருவரையும் அரட்டிக் கொண்டிந்தாள்…


பேசிக் கொண்டிருந்தவள்… ரிஷி உள்ளே வரும் அரவம் கேட்டு திரும்பி இவனைப் பார்த்து விட்டு… கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல் மீண்டும் திரும்பி விட… இங்கு இப்போது ரிஷியின் நிலைதான் வேறு மாதிரி ஆகி இருந்தது…


இவன் இதுவரை பார்த்த கண்மணி உடை விசயத்தில் நேர்த்தியாக இருப்பாள்..


ஆனால் இன்று புடவையை கட்டியிருக்கிறாளா இல்லை அள்ளி செருகி இருந்தாளா… தெரியாதபடி…. அப்படி ஒரு கோணல் மானலாக புடவை அணிந்திருக்க… அதே போல தலை முடி எல்லாம் ஒன்று சேர்த்து… கொண்டையாக போட்டிருந்தவள்.. சீப்பை அதன் மேல் சொருகியிருந்தாள்…


ஆக இவர்களைப் பார்த்தவுடன் அப்படியே பாதியிலேயே வந்து விட்டாளா என்று தோன்றும் படி… கிட்டத்தட்ட பத்ரகாளி அவதரத்திற்கு.. இன்னும் சில பல ஒப்பனைகளே மீதம் என்பது போல… நின்றிருக்க… ரிஷி மனைவியை மேலிருந்து கீழாக பார்க்க ஆரம்பிக்க… அங்குதான் மெல்ல சறுக்கினான்…


இத்தனை வருடத்தில்… ஏன் கணவனாக ஆன பின் கூட அவன் பார்வை அவள் முகத்தை விட்டு மாறியதில்லை… ஆனால் இன்று அவன் பார்வை கன்னாபின்னாவென்று அவன் பேச்சைக் கேட்காமல் சுதந்திரமாக மனைவியை ஊர்கோலமிட்டுக் கொண்டிருக்க…


அவன் மனைவியோ அவள் வெற்றிடையில் கை வைத்து என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தாள்… அப்படிச் சொல்லக் கூடாது… முன்னால் நின்றிருந்தவர்களை மிரட்டிக் கொண்டிருந்தாள்…


ரிஷியின் ஐம்புலன்களில் மற்ற புலன்கள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்து விட்டு கண்கள் மட்டுமே வேலை செய்தது போலிருந்தது அவனுக்கு… அந்தக் கண்கள் கூட கண்மணி கை வைத்திருந்த அவள் இடையோடு மட்டுமே அதன் எல்லை என்பது போல… தன் பார்வையை விலக்க முடியாமல் உறவாடிக் கொண்டிருந்ததா… போராடிக் கொண்டிருந்தா என்று விளங்க முடியாத….. விளக்க முடியாத நிலையில் ரிஷி நின்று கொண்டிருக்க


“தம்பி… தம்பி… “


அவன் இருந்த நிலைமையில் கண்மணி பேசிக் கொண்டிருந்தது… காந்தம்மாள் கூப்பிட்டது கூட அவன் செவிகளில் விழாமல் போனது குற்ற மில்லை… இவனுக்கு பேச வாய் வராமல் போனதுதான் தான் ஆச்சரியம்…


சில நொடிகள்… அப்படியே நின்றவனிடம் ..


”அடப்பாவி… அவராவது உன்னை பழகிக்கத் தான் சொன்னாரு… நீ இப்படி இங்க வந்து… உன் பொண்டாட்டி பேசுற அழகை கண்கொட்டாம… ’ஆ’ன்னு வாயத் திறந்து ரசிச்சுட்டு இருக்க…” எரிச்சலாக மனதுக்குள் எங்கோ ஒரு குரல் அவனுக்குள் ஒலிக்க… அதில்… சிலைக்கு உயிர் வந்தது போல… நொடியில் தன்னிலை மீண்டவன்… தன்னை அழைத்த காந்தம்மாளை நோக்கி முன்னேற…


“தம்பி… நல்லா இருக்கீங்களா…“ ரிஷியிடம் கேட்டபடியே கணவன் புறம் திரும்பியவராக…


”நான் சொல்லுவேனே… இங்க வரும் போதெல்லாம் என்கிட்ட ஒரு பையன் பேசுவான்னு… அது இந்தப் பையனத்தான்… அப்பாவிப் பையன்… நல்ல பையன்… இவ பேசுறதெல்லாம் கேட்டா.. இந்தப் பையனுக்கு உசுறு மிஞ்சுமா என்ன… நல்ல வேளை காது கேட்காது இந்தப் பையனுக்கு … “


”என்..ன.. து….” என்று ரிஷி அதிர்ந்து பார்வை பார்க்க…



“இவ இருக்கும் போது.. அந்த செவுட்டு மிஷின காதுல வச்சுறாதீங்க தம்பி… “ என்ற நட்ராஜின் தாயின் வார்த்தைகளில் கண்மணி ரிஷியை முறைக்க…


ரிஷிக்கோ என்ன செய்வதென்றே தெரியாத நிலைமை… முதன் முதலான சந்தித்திப்பில்… ரிஷிக்கு காது கேட்காது என்று காந்தம்மாள் நினைத்திருந்தார்… ஆனால் அதன் பின் இங்கு காந்தம்மாள் வரும் போதெல்லாம்… ரிஷி அவரைச் சந்திக்க நேரும் போது… அவர் தன்னிடம் வலிய வந்து பேசும் போதெல்லாம் ரிஷியும் காந்தம்மாளிடமிருந்து… அவர் பேச்சில் இருந்து தப்பிக்க தோதாக காது கேட்காதது போல பாவனையிலேயே பேசி அவரிடமிருந்து தப்பித்திருக்க… இன்றோ அது அவனுக்கு ஆப்பாக முடிந்திருந்தது…


“இரண்டு மாசம்… என் புள்ள… கோவிலு குளமுன்னு சுத்திப் பார்த்துட்டு வாங்கன்னு… டிக்கெட் போட்டுக் கொடுத்து போய்ட்டு வந்தால்… இங்க இவளுக்கு கல்யாணமே முடிஞ்சுருச்சி… நீதான் அந்த புண்ணியவானா… உனக்கு வேறு ஆளே கிடைக்கலயா” காந்தம்மாள் பேசிக் கொண்டிருக்கும் போதே…


“ஏய் கெழவி…ஓவரா போயிட்டு இருக்க…” என்று கண்மணி அவள் நின்ற இடத்தில் இருந்து வேகமாக வர… அவள் வந்த பாவனையே ஏதோ அடிக்க வருவது போல் இருக்க… ரிஷி சட்டென்று சுதாரித்து… கண்மணியின் கைகளைப் பிடித்து இழுத்து தன் அருகில் வைத்துக் கொள்ள முயற்சிக்க…



அவன் கைகளில் இருந்து தன் கைகளை விடுவிக்க முயற்சித்தபடியே…



“விடுங்க ரிஷி… இவங்கள கொஞ்சம் விட்டால் “ என்ற போதே… கண்மணியின் முகத்தில் தெரிந்த ஆக்ரோஷ பாவனையில்… ரிஷி அவனையறியாமலே… தன் கைகளை மாற்றி அவளின் வெற்றிடையில் பதித்து அவளை சமாதானப்படுத்துவது போல மென்மையாக அழுத்தம் கொடுக்க…


கண்மணிக்கோ எதிர்பாராத நேரத்தில்… எதிர்பாராத இடத்தில்… கணவனின் தீண்டல்…


ஒரு நொடி… என்ன பேசுவது… என்ன பேசிக் கொண்டிருந்தோம்… ரிஷியிடம் பேசுவதா… இல்லை காந்தமாளிடம் சண்டை போடுவதா… இல்லை தன் இடையில் பதிந்திருந்த அவன் கைகளை எடுக்கச் சொல்வதா… எதை முதலில் செய்வது… அப்படி சொல்வதை விட எதைச் செய்வது என்றே தெரியாத நிலை…


அதுவரை இருந்த ஆக்ரோஷமெல்லாம் மாறி… அவள் கண்களில் குழப்பம் சூழ்ந்த பார்வையோடு கணவனைப் பார்க்க… ரிஷிக்கு அவள் நின்ற நிலை சிரிப்பை வர வழைத்தாலும் அடக்கியபடி… அவள் நின்றிருந்த நிலைமையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு சட்டென்று மனைவியை பிடித்தபடியே… அவளோடு சேர்ந்து அவர்களின் காலில் ஆசிர்வாதம் வாங்க குனிய…


இப்போது கண்மணி உணர்வுக்கு வந்தவளாக… ரிஷியைப் பல்லைக் கடித்துக் கொண்டு முறைக்க… அதற்கு முன்னாலேயே ரிஷி முற்றிலும் குனிந்திருக்க… வேறு வழி… கடுப்பும் எரிச்சலும் ஒரு சேர.. பேருக்கு குனிய… குனிந்திருந்த் ரிஷி கண்மணியை தன் புறம் இழுக்க… கண்மணியும் ரிஷியின் அருகில் வந்திருக்க… எப்படியோ ஒரு வழியாக தன் கோபக்கார மனைவியோடு ஆசிர்வாதம் வாங்கியிருந்தான் ரிஷி… தன் மாமனாரின் பெற்றோரிடமிருந்து….


இப்போது காந்தம்மாளும்… அவரது கணவரும்… சமாதானமடைந்திருக்க…


”உங்களுக்கு காதெல்லாம் கேட்குமா தம்பி… நான் தான் தப்பா நெனச்சுட்டு இருந்தேனா… “ என்று ரிஷியைப் பார்த்தபடியே ஆச்சரியமாக பேச ஆரம்பிக்க… ரிஷியும் அவர்களோடு சிரித்துப் பேச ஆரம்பிக்க… கண்மணியோ… அங்கு நெற்றிக் கண் இல்லாத குறையாக கணவனை முறைத்துக் கொண்டிருக்க…


“பாட்டி… நான் கம்பெனிக்கு கிளம்பனும்…. ஈவ்னிங் இருப்பீங்கள்ள.. உங்க பையன் வீடு… எப்போ வேண்டும்னாலும் வாங்க போங்க… அதெல்லாம் இவ ஒண்ணு சொல்லமாட்டா…“ கண்மணியை ஓரக்கண்ணால் பார்த்தபடி சொன்னவன்…


“கண்மணி… நீ ஸ்கூலுக்கு கிளம்பல… லேட் ஆகுது கிளம்பு” என்று அவளை அந்த இடத்தில் இருந்து கிளப்ப முயற்சிக்க


கண்மணி அசையாமல் நிற்க… ரிஷி கண்களாலேயே கெஞ்சி தாஜா செய்தனாக அவளை அங்கிருந்து போகச் சொல்ல…


கண்மணி அதையெல்லாம் மதிக்காமல்… காந்தம்மாளிடம் திரும்பி…


“கெழவி…ஈவ்னிங் வந்து பார்க்கும் போது இங்க இருந்த… விசம்லாம் இல்ல ஒரே சீவுதான்” என்ற போதே… ரிஷி அதிர்ந்து பார்க்க…


”இங்க என்ன பார்வை… கெளம்புங்க” என்று கணவனிடமும்… அதிகார தொணியில் பேச …


அவள் பேசிய விதத்தில்… கோபம் வந்ததுதான் அவனுக்கு… இருந்தும் அடக்கியபடி…


“அப்போ நான் சொல்றதை கேட்க மாட்ட… “அவள் கண்களைப் பார்த்து ரிஷி கேட்ட விதம் கண்மணியையையும் அசைக்க…


அமைதியாக அவனைப் பார்த்தபடி நிற்க…


“என் பேச்சை நீ மதிக்க மாட்ட” இதை அவன் வார்த்தையாகச் சொல்லவில்லை… ஏமாற்றத்தை கண்களில் தேக்கி கண்மணியை நோக்கியவன்…


”அதுக்கப்புறம் உன் இஷ்டம்” என்றவன்…



மீண்டும் ஒரு ஆழமான பார்வை அவளைப் பார்த்து விட்டு… அதற்கு மேல் நிற்காமல் போக….. கண்மணி அப்படியே அமர்ந்து விட்டாள்… கண்களை மூடி… ஏனோ இவளுக்கும் அதற்கு மேல் பேசப் பிடிக்கவில்லை…


---------


எத்தனை நிமிடங்கள் அப்படி அமர்ந்திருந்தாளோ தெரியவில்லை… நட்ராஜ் வந்த போதுதான் உணர்வுக்கு வந்தாள்


“என்னடா” என்ற போதே… முறைத்த மகளிடம்…


“பேத்திக்கு கல்யாணம் ஆகிருச்சுனு கேள்விப்பட்டா… வர மாட்டாங்களாடா…” என்ற போதே… அவள் நெற்றியில் இருந்த திருநீறு குங்குமம் எல்லாம் பார்த்தவர்…


”எனக்கு கூட கொடுக்கல… என் அம்மா உனக்கு ஊர்ல இருந்து கொண்டு வந்த பிரசாதம் லாம் கொடுத்தாங்களா…”


“ப்ச்ச்.. அதெல்லாம் எங்க உங்க அம்மாக்குத் தெரியும்… அவங்க எங்க வச்சுவிட்டாங்க… என்னைக்கு வச்சுருக்காங்க… நானே பறிச்சு வச்சுக்கிட்டேன்… அப்புறம் தான் சண்டைலாம்…” என்றபடி… தந்தைக்கும் அவர் நெற்றியில் திருநீறை வைத்து விட்டவளாக….


“ஆனாலும் அவங்க இங்க இருக்கக் கூடாது…” என்றவளிடம்…


“கிளம்பிடுவாங்கடா… அவங்க எதுக்கு இங்க இருக்கப் போறாங்க…“ என்ற போதே…


“பவித்ராவோட அம்மா அப்பா எப்படியோ… அதே மாதிரிதான் நட்ராஜோட அம்மா அப்பாவும்… அவங்கவங்க அவங்க அவங்க வீட்ல தான் இருக்கனும்… இங்க நானும் நீங்களும் மட்டும் தான் இருக்கனும்… யாருக்காகவும் நான் மாத்த மாட்டேன்“ என்றவளின் வழக்கமான பிடிவாதக் குரலில்


“சரி… சரி… நீ எழுந்திருடாம்மா… மாப்பிள்ளை வேற கோபமா போனாரு” என்ற போதே…


”ஹான் அவருக்கு இருக்கு… அவர் யாரு இவங்கள இங்கு இருக்கச் சொல்றதுக்கு ” போல கண்மணி துள்ளி எழ…


மகளின் வார்த்தைகளில்… நட்ராஜ் தான் இப்போது விழித்தார்… தங்கள் உரையாடலில்… ரிஷியை இழுக்காமலேயே இருந்திருக்கலாமோ என்று … சொல்லி விட்டாரே… இனி என்ன செய்வது என்று நினைத்தபடி மகளைப் பார்க்க… அவள் அங்கு இருந்தால் தானே…


----



/*பலமுறை நீயும்

பாக்காம போனா

இரும்புக்கு மேல

துரும்பென ஆனேன்

உசுர உனக்கே நேந்து விட்டேன்

இருந்தும் நெருங்க

பயந்துக்கிட்டேன்


உயிரே உயிரே என்னுயிரே

உலகம் நீதான் வா உயிரே

மனசெல்லாம் கண்ணாடி

உடைக்காத பந்தாடி

வதைக்காத கண்ணே கண்மணியே*/

3,008 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page