top of page
Writer's picturePraveena Vijay

கண்மணி... என் கண்ணின் மணி -30

அத்தியாயம் 30


மும்முரமாக தன் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனுக்கு… கண்மணி கொடுத்த நேரக் கணக்கெல்லாம் ஞாபகத்துக்கு வரவில்லை….


ரிஷிக்குத்தான் உறக்கமென்பதோ களைப்பென்பதோ இல்லை… ஆனால்….கண்மணிக்கோ முந்தைய நாள் உறக்கமின்மை… திருமண அலைச்சல் என அனைத்தும் ஒன்று சேர்ந்ததால் அந்தக் களைப்பில் உறங்கி விட்டிருக்க… அவள் வைத்த அலாரம் கூட உணர முடியாத அளவுக்கு அப்படி ஒரு தூக்கம்…


ரிஷிக்கும் கண்மணி சொன்னது ஞாபகத்துக்கே வர வில்லை… அந்த இயந்திரங்களின் இரைச்சலில்…அடித்துக் கொண்டிருந்த அலார்ம் ஒலியும் அவனை வந்தடையவில்லை… நாளை டெலிவரி செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கில்… வேலையில் மட்டுமே கவனம் கொண்டிருக்க… இப்போது அங்கிருந்த இயந்திரங்களின் ஒத்திசைவற்ற இரைச்சலையும் மீறி… ஒத்திசைவான ஒலி… தொடர்ந்து ஒலித்து… ஒரு கட்டத்தில் ரிஷியின் காதுகளையும் வந்தடைய… ரிஷிக்கும் பெரிதாகவெல்லாம் யோசிக்கத் தேவையிருக்கவில்லை… அது கண்மணி அவள் அலைபேசியில் வைத்த அலார்ம் சத்தமென்று….

மெஷின்களின் இரைச்சலுக்கே அசராமல் பேய்த்தூக்கம் தூங்கிக் கொண்டிருப்பவளுக்கு அலார்ம் சத்தம் எல்லாம் எம்மாத்திரம்…


கண்மணி படுத்திருந்த நீள் இருக்கையின் அருகே வந்தவன்… கண்மணியை எழுப்பவெல்லாம் இல்லை… மெதுவாக அவள் தூக்கம் கலையாமல் அலைபேசியை எடுத்து அணைத்து வைத்து விட்டு… இதுதான் சாக்கென்று மீண்டும் தன் வேலையில் ஈடுபட… கிட்டத்தட்ட அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவன் நினைத்தபடி அனைத்தும் முழுமையாக முடிவடைய… அப்போதுதான் அவனுக்கும் நிம்மதியாகி இருந்தது…. கண்மணியிடம் பேச வருவதாகச் சொன்ன அந்த இரண்டு மணி நேரக் காலக் கெடுவுக்குள் முடிக்க முடியாத வேலை… கண்மணி உறங்கிவிட… இதோ வேலையையும் முடித்து விட்டான்…. இனி நாளை பிரச்சனை இல்லை… சொன்னபடி அனைத்தையும் டெலிவரி செய்து விடலாம்….


இயந்திரங்களை எல்லாம் ஆஃப் செய்ததால்… இப்போது அங்கு நிசப்தம் நிசப்தம் மட்டுமே… இப்போது ரிஷிக்குமே அசதி வந்திருக்க… ஆனால் தூக்கம் வரவில்லை… உடல்வலியே… அதையும் இப்போதுதான் உணர்ந்திருக்க… அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து தலை சாய்ந்து… சற்று நேரம் அப்படியே கண்களை மூடியபடி உறங்க முயற்சிக்க… அது வருவேனா என்றிருக்க… அதே நேரம் கண்மணி அவனிடம் பேச வேண்டும்… கட்டாயம் எழுப்ப வேண்டும் என்று சொன்னது கண்ணுக்குள் வந்து நின்றது…


இன்றைய இரவு… என்ன இரவு என்று அவனுக்குத் தெரியாத பாலகனா அவன்… திருமணம்… முதல் இரவு… மணமக்களாக இருவருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை… முதல் இரவின் முதல் உறவுக்கான படபடப்போடு கலந்த ஆர்வம் இவனிடமும் இல்லை.. கண்மணியிடம்???…


யோசித்தவன்….


“அவளிடமுமே இல்லை” என்றுதான் தோன்றியது… இவனிடம் பேச வேண்டும் என்று அவள் சொன்ன அவளது பாவனையில் மிரட்டலுடன் கூடிய அதிகாரம் மட்டுமே இருக்க அதை மீறி வேறொன்றுமில்லை… அவள் உணர்வுகளையும் தனக்குள்ளாக அனுமானித்தவன்… பேச வேண்டும் என்று வந்தவளை அப்படியே தூங்க விட மனதில்லை…


”உன்னிடம் பேச வந்த போது பேசக் கூட இல்லை நீ…” என வருங்காலத்தில் இவர்களுக்கான வாழ்க்கையில் பிரச்சனையாக இந்த இரவு வந்து விடக் கூடாது… இவளுடன்தான் இனி என்னோடான வாழ்க்கைப் பயணம் எனும் போது… இது இருவருக்குமான முக்கியமான நேரம்…” யோசித்தவன்…


தானுமே அவளைத் தவிர்க்க நினைக்கவில்லையே… வேலை முடிந்து வருகிறேன் என்றுதானே சொன்னேன்… அவள்தான் அவசரப்பட்டு இங்கு வந்து விட்டாள்… ஆனால் அதே நேரம் நிச்சயமாக இதையும் சொல்லுவான்.. அவர்கள் மணவாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் மன நிலையிலும் அவன் இல்லை… இதைக் கண்மணியிடமும் சொல்லிபுரிய வைக்கவே நினைத்தான்… இன்றைய தனிமையில்…


ஆக இருவரும் பேசியே ஆக வேண்டிய கட்டாயம்… தன்னை அவளுக்கு புரிய வைத்து விட வேண்டும்… ஆனால் அதற்கு முன் முதலில் அவள் மனதில் என்ன இருக்கிறது… அவள் என்ன பேச வந்தாள்… அதைக்கேட்க வேண்டும்…


நினைத்தவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை… மணிக்கட்டைத் திருப்பி மணியைப் பார்த்தபடியே… எழுந்தவன்…


கைகளை உயர்த்தி நெட்டி எடுத்தபடியே…. கண்மணியின் அருகில் வந்தவன்… ஒரு நிமிடம் தயங்கி நின்றான்தான்… அவள் அருகில்…


“என்னமா தூங்குறா…இவ்ளோ சத்தத்தில….” பொறாமையாகப் பார்த்தபடி தனக்குள் சொன்னவன் வெளியே வந்து தண்ணீரில் முகம் மற்றும் தேகத்தை அலம்பிக் கொண்டவன்… கைக்குட்டையைத் தேட.. அது கண்மணியிடம் கொடுத்தது நினைவுக்கு வர… ஈர முகத்துடன் மீண்டும் உள்ளே வந்தவன்… வேலையின் போது வியர்வையைத் துடைக்க உபயோகிக்கும் துண்டை எடுத்து துடைத்தபடியே கண்மணியின் அருகில் வந்து நின்றவன்..


“கண்மணி” என்று அழைக்க… கண்மணியிடத்தில் இவன் அழைப்புக்கான எந்த ஒரு பிரதிபலிப்பும் இல்லை…


“மணி” இன்னும் கொஞ்சம் சத்தமாக அழைக்க… இப்போது இலேசாக அசைந்தாள் கண்மணி… அவ்வளவே


”எழுந்துக்க மாட்டேங்கிறாளே… என்ன செய்வது… தூங்கட்டும்னு விட்ருவோமா” யோசித்தவன்…


“இப்போ எழுப்பி விட்றதுக்கே சொர்ணாக்கா அவதாரம் எடுப்பாளானு தெரியலை… இதுல தூங்க விட்டா அவ்வளவுதான்… முழுக்க முழுக்க சந்திரமுகியாத்தான் பார்ப்போம்… “ என்று கண்மணியை அறிந்தவனாக உஷாராகி இருந்தான் ரிஷி….


வந்தது வரட்டும் என்று… அவள் தோளைத் தொட்டு எழுப்ப… அரண்டடித்துக் கொண்டு எழும்பினாள் கண்மணி…. கண்களைக் கட்டியபடி இருந்ததாலோ என்னவோ…


இவன் என்னமோ மெதுவாகத்தான் அவள் தோள்களைத் தொட்டு எழுப்பினான்… ஆனால் பதட்டத்தில் அவள் கொடுத்த எதிர்வினைதான் அதிகமாக இருக்க…


“ஹேய்… நான்… நான்… நான் தான்” என்று ரிஷியும் பதற


அவன் குரலில் சில நொடிகளுக்குள் தன்னைச் சுதாரித்தவள்.. இருந்தும் கண்களைக் கட்டியிருந்ததால் தடுமாற… ரிஷிதான் அவளைப் பிடித்து ஒழுங்காக அமர வைக்க…


கண்மணியும் இப்போது கண் கட்டை அவிழ்த்துப் பார்த்தவள் தன் முன் நின்ற ரிஷியைப் பார்த்ததும் தான் இயல்பாகி அமர்ந்தாள்…


தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கிறோமே… எந்த இலட்சணத்தில் இருக்கிறோம் என்று தன்னை அறியாமல் பதட்டத்தோடே தன்னையும் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ள… நல்லவேளை சுடிதார் என்பதால் வேறு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் போக… இப்போது ரிஷியைப் பார்த்தாள் கண்மணி…


ரிஷி அவளின் நடவடிக்கைகளை எல்லாம் கண்டு கொண்டாலும் … காணாதது போல


“பேசலாமா…” என்று மட்டும் உதட்டில் மறைத்த புன்னகையோடு ரிஷி கேட்க…


இன்னும் தூக்கத்தில் இருந்து விடுபடவே இல்லை கண்மணி… முதலில் யார் எழுப்பியது என்று தெரியாமல் எழுந்தது… அடுத்து எங்கு இருக்கிறோம்.. என்று புரியாமல் குழம்பியது… இப்போது என்ன பேச… என்று யோசித்தவளுக்கு மெல்ல மெல்ல மூளை விழிப்படைய ஆரம்பிக்க…


“ஆஹா,,, நாமதானே அலார்ம்லாம் வச்சு படுத்தோம்… எழுந்துக்கலையா” வேகமாக அலைபேசியை எடுக்க…


கைகளைக் கட்டியபடி அவளை விட்டு தள்ளி எல்லாம் அமராமல்… அவள் அருகிலேயே இயல்பாக அமர்ந்தவன்… அவளிடம் திரும்பி…


“நீ கொடுத்த டைம்லாம் லிமிட் தாண்டி இப்போ மணி மார்னிங் 4… பேசலாமா… வீட்டுக்கு போகலாமா”


வேகமாக தலை அசைத்தாள்… இடவலமாக…


“இல்லல்ல பேசனும்…” சட்டென்று சொன்னவளிடம்


“அப்போ ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வா… நான் பைக் ஷெட்ல வெயிட் பண்றேன்… இங்க ஒரே ஹீட்டா இருக்கு… வெளில கொஞ்சம் நல்லா இருக்கும்” என்றபடியே எழ…


”ஹ்ம்ம்..2 மினிட்ஸ்” என்றபடி அவனைக் கடந்தவள்…


மீண்டும் கண்மணி திரும்பி வந்த போது… ரிஷி இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நட்ராஜின் பைக்கில் அமர்ந்திருந்தவன்… ஒரு காலை தரையில் ஊன்றி மற்றொரு காலை பைக்கில் வைத்தபடி… கைகளைக் கட்டியபடி எங்கோ வெறித்தபடி பார்த்தபடியே இருந்தவனை இவளும் பார்த்தபடியே….. அவனருகே வந்தவள்…


ரிஷி கொடுத்த அவன் கைக்குட்டையை அவனிம் நீட்ட… அவனும் வாங்கிக் கொண்டான் தான்…


கைக்குட்டையை அவனிடம் கொடுத்து விட்டு தன் துப்பட்டாவால் முகத்தை துடைத்தபடி.. அவனோடு பேச வாகாக அவனுக்கு எதிராக தன் பைக்கில் அமர்ந்தவளுக்கு.. என்ன பேச எப்படி பேச எங்கிருந்து ஆரம்பிப்பது என்று புரியவே இல்லை… நேற்று வந்த வேகத்தில் பேசி இருந்தாதாலாவது பேசி இருந்திருக்கலாம்… அதற்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது…


”எப்படி ஆரம்பிப்பது ” என்று கண்மணி யோசித்துக் கொண்டிருக்க…


”சாரி… உனக்கு யோசிக்க டைம் கொடுக்காமல் மேரேஜ் நடத்தினதுக்கு” அவளுக்கு வாய்ப்பே கொடுக்காமல் ரிஷி பேச ஆரம்பித்து விட்டான்


”அடேங்கப்பா சீக்கிரமே சொல்லிட்டான்…” என்று கண்மணி யோசிக்கும் போதே


“இப்போதும் ஒரு பிரச்சனையுமில்ல… உனக்கு பிடிக்கலைனா சொல்லிரு… தாலி கட்டும் போதே முடிச்சு லூசாத்தான் போட்டேன்…” என்று குறும்போடு சொல்ல… முதல் வார்த்தையில் சீரியஸாக பேசிக் கொண்டிருக்கின்றான் என்று நினைத்த கண்மணி இப்போது சுதாரித்து படக்கென்று பார்க்க…


ரிஷி ஒன்றுமே தெரியாத பாவத்தில் முகத்தை வைத்திருக்க… உதடுகளோ சிரிப்பை அடக்கி வைத்துக் கொண்டிருப்பது நன்றாகத் தெரிய


அவனது நடிப்பு அப்பட்டமாக கண்மணிக்கு அவனைப் பார்க்கும் போதே தெரிய… கண்மணி முகம் சுருக்கினாள்…


இதை நகைச்சுவை என்று சிரிக்கும் அளவுக்கு கண்மணி சின்னப் பெண் அல்ல… அதே நேரம் இந்த நேரத்தில் அதுவும் இருவருக்குமான முதன் முறையான தனிமையில் இந்த மாதிரி அவன் பேசியதை அவள் ரசிக்கவும் இல்லை…


நினைக்கும் போதே கண்மணிக்கு இன்னொன்றும் அவள் மனதுக்குள் உதித்தது..


ஆம் இவர்களின் பெரும்பாலான சந்திப்புகள்… இந்த மாதிரியான நட்ட நடு இரவில் அல்லது அதிகாலையில் தான் இருந்திருக்கிறது


மற்றவர்களைப் பொறுத்தவரை இது அவர்களின் முதல் இரவு… ஆனால் அவர்களைப் பொறுத்தவரை… இன்றைய இரவு வழக்கமான அவர்களின் மற்ற சந்திப்புகளைப் போல மற்றுமொரு இரவு…


“காமெடி பண்றீங்களா ரிஷி” எரிச்சலுடன் கேட்டவள்

“நான், ஒருத்தவங்க நல்லா காமெடி பண்ணினாலே சிரிக்க மாட்டேன்… இதுக்கெல்லாம் சான்ஸே இல்ல” கண்மணி சொல்ல…


“காமெடின்னு சொல்லவே இல்லயே… சீரியஸாத்தான் சொன்னேன் கண்மணி” இவனும் தீவிர பாவத்துடன் சொல்ல…


முறைத்தாள் கண்மணி… அதே நேரம் வேண்டுமென்றே அவன் பேசிக் கொண்டிருப்பது தெரிய… அது ஒரு மாதிரி ஒட்டாத செயற்கைத் தனமான பாவனையில் இருக்க… என்றுமே ரிஷியிடம் உணராத பாவம்… கோபமோ … சண்டையோ … நகைச்சுவையோ ரிஷியின் கண்களும் முகபாவங்களும் ஒன்றே சொல்லும்.. இன்று அவன் பேச்சும்… கண்கள் சொன்ன செய்தியும் வேறு வேறாகத் தோன்றியது…


உதடுகள் சிரித்தபடி அவன் இயல்பாக இருப்பது போல இருந்தாலும்… அவன் கண்கள் அந்தச் சிரிப்பை கொண்டு வரவில்லை… தீவிர பாவத்தில் இருந்தது… தன்னிடம் நடிக்கின்றான்… தன் உண்மையான எண்ணங்களை வெளிக் கொணராமல் அவன் தன் முன் நடிப்பது போல… முதன் முதலாக அவன் முகமூடி அணிந்திருப்பது உணர்ந்தாள் கண்மணி… தன்னையே பார்ப்பது போன்ற உணர்வு.. மனதுக்குள் சுருக்கென்ற வலி… சட்டென்று வர… அதே நேரம்… தன்னிடம் இயல்பாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள ரிஷி பிரயத்தனம் படுகிறான் … என்பதை புரிந்து கொண்டவளாக… அவன் போக்கிலேயே பேச நினைத்தவள்… தன் இறுக்க பாவத்தை மாற்றி அவனிடம் தன் இயல்புடன் பேச ஆரம்பித்தாள் கண்மணி… அதாவது கண்மணியாக பேச ஆரம்பித்தாள்…


“அப்டியா… உங்களுக்கு அறிவு கொஞ்சம் தூக்கலா இருக்குனு நினைக்கிறேன்… உங்க அளவுக்குலாம் நான் இல்லை… ஆறு அறிவுதான்… இந்த மூணு முடிச்சையும் அவிழ்த்துதான் இந்த தாலியை கழட்டிப் போடனும்னு தெரியாத அளவுக்கு அறிவு கொஞ்சம் கம்மிதான்… பிடிக்கலைனா தலை வழியா இப்படி கழட்ற அளவுக்குத்தான் அறிவு வளர்ந்திருக்கு” என்று சொல்லிக் காட்டியவள்… முகத்தில் இப்போது எரிச்சல் இல்லாம் இல்லை…


“என்ன மூணு முடிச்சு போடாம … ஒரே ஒரு முடிச்சு லூசா… போட்ருந்தீங்கன்னா… அதுவாகவே கழண்டு விழுந்திருக்கும்” சொல்ல வந்தவள்… சொல்லவில்லை… ஏனோ திருமணமாகி இருவரும் பேச ஆரம்பிக்கும் போதே இந்த மாதிரி அவன் ஆரம்பித்தது அவளுக்கு பிடிக்காமல் இருக்க… கண்மணியும் அதைத் தவிர்க்க ஆரம்பித்தாள்… அதில் கண்மணியின் முகம் அவளையுமறியாமல் வாடிவிட


அதை உணார்ந்த ரிஷி இப்போது எதுவுமே பேச வில்லை..


உண்மையிலேயே அவன் இயல்பாக இருப்பதாக அவளிடம் காட்ட வேண்டும் என்று தான் இப்படி பேச ஆரம்பித்தது… ஆனால் கண்மணியின் முகம் போன போக்கில் அவனால் அந்த மாதிரி காமெடியாக பேசுகிறேன்…இயல்பாக இருக்கிறேன் என்று நடிப்பைத் தொடர முடியவில்லை…


அதே நேரம் உணர்வு மிகுந்த இரவாகவும் அவன் மாற்ற விரும்பவில்லை என்பதாலேயே அவன் அப்படி பேச ஆரம்பித்தது… மனதில் ஆயிரம் வலிகளை மறைத்தபடிதான் ரிஷி அவளை வம்பிழுப்பது போல பேச ஆரம்பிக்க… கண்மணியோ அதற்கு விடாமல் போக… அமைதியாகி விட்டான்…


ஆரம்பித்த உரையாடல் தொடரவில்லை…. இருவருமே அமைதி ஆகி விட்டனர்… தத்தமது எண்ணங்களில்…


கண்மணி வந்தது என்னவோ தன்னைப் பற்றி அவனிடம் பேசத்தான் ஆனால்… ஏனோ இப்போது சொல்ல விரும்பவில்லை… ஏனோ சொல்லத் தோன்ற வில்லையா இல்லை சொல்லத் தோணும்படி அவளது உணர்வுகளை அவன் தூண்ட வில்லையா என்று தெரியவில்லை…


அதே சமயம் தன் நினைவுகளைத் தோண்டி எடுத்து அவனிடம் கொட்டுவதைக் காட்டிலும் ரிஷி பேச வேண்டும் என்று எதிர்பார்த்தாள்


காரணம் ரிஷியின் முக மூடியை நொடியில் கண்டு கொண்டதால் இப்படி நினைத்தாள் அவள்…


இத்தனை நாள்… ரிஷியைப் பற்றி பெரிதாக அவள் மனம் ஆராய்ச்சிக்கு போனதில்லை… முதலில் இருந்த குறும்புத் தனம் மகிழ்ச்சி இப்போது அவனிடம் இல்லை…


இப்படி மட்டுமே ரிஷியைப் பற்றிய எண்ணங்களில் இருந்தவளுக்கு… இப்போது பல வித எண்ணங்களை அவள் மனதுக்குள் தோன்றியது…


கண்மணியின் எண்ணங்கள் சரியே என்பது போல… ரிஷியும் அவளிடம் பேச ஆரம்பித்து இருந்தான்… தான் யார்… கண்மணியைப் பற்றி என்ன தன் எண்ணம் என்ன… தன் முகமூடியை எல்லாம் கிழித்தெறிந்து பேச ஆரம்பிக்க… இப்போதுதான் கண்மணி ரிஷியை ரிஷியாகப் பார்த்தாள்…


அவள் எதிர்பார்க்காததெல்லாம் அவன் பேசினாலும்… அவன் உண்மையாக மறைக்காமல் பேசுவதையே அவள் விரும்பினாள்…. கண்மணியிடம் இப்போது நிதானம் வந்திருந்தது… அவனது பேச்சை கூர்மையாக… அமைதியாக கவனிக்க ஆரம்பித்தாள்..


“உங்க அளவுக்கு நாங்கள்ளாம் வர முடியுமா கண்மணி…. நீங்கள்ளாம் அங்க இருக்கீங்க.. “ என்று கைகளை தலைக்கு மேலே உயர்த்திக் காட்டியவன்…


“நாங்கள்ளாம்… “


“ஹ்ம்ம்… ஏணி வச்சா கூட எட்ட முடியாது” என்ற போதே…


கண்மணி அவனது முகத்தை கூர்ந்து பார்த்தபடியே இருக்க…


“என்ன பார்க்கிற”


”நீ மட்டும் நட்ராஜ் சார் பொண்ணா மட்டும் இல்லைனு வச்சுக்கோ” என்ற போதே


கண்மணியின் முகம் மாறினாலும்… இருந்தும் தன்னை அமைதி ஆக்கிக் கொண்டவள்…


“உங்க நட்ராஜ் சார் பொண்ணு ஆகிட்டேன்ல… அப்புறம் எதுக்கு தேவையில்லாத பேச்சு… ” என்று மட்டும் அவனைப் பார்த்தபடியே சொல்ல…


”நட்ராஜன் பெண்ணாக இல்லையென்றால் என்ன செய்துவிடுவாய் ” என்று எதிர்த்து ஆவேசமாக கண்மணி கேட்பாள் என்று அவனறிந்த கண்மணியாக அவன் எதிர்பார்த்திருக்க… அவளோ… சாந்த சொரூபியாக மாறி இருக்க…

கண்மணியின் இந்த அமைதியை எதிர்பார்க்காத ரிஷி… அவனுக்குள் முதன் முதலாக ஏதோ ஒரு உணர்வு… அதில் அமைதியானவனாக கண்மணியைப் பார்க்க முடியாமல் வேறு புறம் திரும்ப…


“நட்ராஜ் பொண்ணா மட்டும் தான் பார்த்தீங்களா ரிஷி… கண்மணியா நீங்க ஒரு நாள் கூட என்கூட பழகலையா… “


இப்போதும் அவள் புறம் திரும்பவில்லை அவன்…


ஆனால் கண்மணி அவன் முன் வந்து நின்றாள்…


“என்னைப் பாருங்க.. எனக்கு அப்படி தோணலை… நட்ராஜ் பொண்ணா மட்டும் தான் என் கிட்ட பழகி இருக்கீங்கள… சொல்லுங்க… ”


“கண்டிப்பா… எனக்கு நீ எத்தனையோ உதவி பண்ணியிருக்க… ஆனால் அதையெல்லாம் மீறி நான் உன்னை நட்ராஜ் சாரோட பொண்ணா மட்டும் தான் பார்க்கிறேன்…”


தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கண்மணியின் கேள்விகுறியான பாவத்தில்…


“என்னைப் பொறுத்தவரை… எனக்கு என் அப்பாக்கு அப்புறம்… நட்ராஜ் சார் மட்டும் தான் எல்லாமே… அவர் என்னை நம்பின மாதிரி… வேறு யாருமே நம்பினது இல்லை… தொழில்ல இருந்து இன்னைக்கு அவர் பொண்ணை என்னை நம்பிக் கொடுத்தது வரை… ஏன் என் அம்மா அப்பாக்கு கூட என் மேல இல்லாத நம்பிக்கை அவர் என் மேல வைத்தது… அதுக்காகவே உன்னை” என்றவன்…


“என் மேல அவர் வைத்த நம்பிக்கைதான்…” ரிஷி அவளை எதிரியாகப் பாவிக்காமல் விட்டதை சொல்லப் போக… கண்மணி இப்போது இடைமறித்தாள்…


“ஏன் நான் கூடத்தான் உங்களை நம்பி மேரேஜ் பண்ணிருக்கேன்” முதன் முதலாக உரிமையா… பொறாமையா என்று உணரக் கூட முடியாமல் தானாகவே கண்மணியிடமிருந்து மனைவியாக… பதில் பட்டென்று வர…


ரிஷி.. கண் சிமிட்டாமல் அவளைப் பார்த்தபடி இருந்தவன்… அமைதியாக சில நிமிடங்களைக் கடந்தவனாக…


“இதற்கு என்ன பதில் சொல்ல” என்று தலையைக் கோதியவனாக…


“என்னை ஒரு பொண்ணு முழுக்க முழுக்க நம்பி வந்ததுன்றது எனக்கு புதுசு இல்லை… அதுனால நீ என்னை மேரேஜ் பண்ணினது… எனக்கு பெருசா தெரியலை” அலட்சியமாக சொல்லவில்ல ஆனாலும் மெதுவாக வார்த்தைகள் வெளிவர…

கண்மணிக்கு அவன் மகிளாவைச் சொல்கிறான் என்று தெரிந்த போதும்


“காதலிக்கிற பொண்ணு உங்கள வர்றதுன்றது ஒண்ணும் பெருசு இல்ல ரிஷி… “


”உங்கள பற்றி எல்லாமே தெரிஞ்சு… நம்பி வருகிற பொண்ணுதான் பெருசு… தண்ணி… தம்மு…ஏற்கனவே லவ்” என்று அடுக்கிக் கொண்டே போனவளிடம்…


”தம்மு… தண்ணி… காதல்… வாவ்… ஆனால் ஒண்ணு கண்மணி…”


“ஆனா இதெல்லாம் இப்போ என்கிட்ட இல்லைன்றது உனக்கு தெரியாதா என்ன… இது எதுவுமே இல்லாத அக்மார்க் நல்ல பையன்னு தெரிஞ்சுதானே மேரேஜ் பண்ணிகிட்ட… இதை ஒத்துக்கறியா…” இவனும் அவளுக்கு சரியாக அதிரடியாக ஆரம்பிக்க…


கண்மணியும் விடவில்லை


“நல்ல பையன் மட்டும் வேண்டும்னா, எனக்காக நான் மட்டுமேன்னு என்ற போதே


“அந்த நல்லவனை நீ மேரேஜ் பண்ண வேண்டாம்னு இங்க யாரும் பெருசா உனக்குத் தடை போடலையே… மேடம் நீங்க என்ன சொன்னாலும் முடிவெடுத்தாலும் சரின்னு சொல்ற பாசக்கார அடிமைகள்தானே உங்களைச் சுத்தி இருக்காங்க… ஏன் வேண்டாம்னு சொன்னீங்க… ஏன் பிடிக்கலை… அதை நீதான் யோசிக்கனும்…” இப்போது அலட்சியமான பாவத்தில் தோளைக் குலுக்கியவன்


“ஆனால் அதைப்பற்றி… இனி யோசிக்க தேவையுமில்லை… யோசிக்கவும் கூடாது நீ” நக்கல் இருந்தாலும்… கணவனாக கண்மணியை எச்சரிக்கும் அதிகார பாவனைதான் ரிஷியிடம் அதிகம் இருந்தது… அதே நேரம் அவனிடம் மருந்துக்கு கூட பொறாமை இல்லை..


ஆக மொத்தம் அர்ஜூன் பற்றிய பேச்சை கட் செய்தான் ரிஷி…


“ஆமா என்னைப் பற்றி எல்லாம் தெரியும்ன்னு சொன்னியே… ஹ்ம்ம்ம்… என்ன தெரியும் என்னைப் பற்றி உனக்கு… சொல்லு பார்க்கலாம்… ”


”நீ முதன் முதலா பார்த்த ரிஷியா இன்னும் என்னை நீ நெனச்சுட்டு இருந்தேன்னா… நீ ஃபெயில் தான் ” புருவம் உயர்த்தி நக்கலாகப் பார்த்தவனை இவளும் சளைக்காமல் எதிர்ப்பார்வை பார்க்க… அவள் அருகே ஆவேசத்தோடு


”உனக்குத் தெரியுமா… நான் எதிரியா நினைத்த முதல் பெண் நீதான்… எனக்கு உன்னையவே பிடிக்காது” என்றவன் கண்களில் அத்தனை வெறி… அடிபட்ட சிங்கத்தின் வெறி…


இவளுக்கோ சற்று முன் தான் நக்கலாகப் பார்த்தான்… இப்போது இப்படி… பார்க்கிறான்… நொடிக்கு நொடி மாறிய அவனது முகபாவத்தில் அந்த இடத்தில்தான் கண்மணி குழம்ப ஆரம்பித்தாள் தனக்குள்… இருந்தும் வெளியே காட்டிக் கொள்ளாமல்… அவனைக் கவனிக்க ஆரம்பித்தாள்…


”நீ முதற்கொண்டு… அத்தனை பேர்கிட்டயும் நான் யார்னு காட்டனும்” என்றவன் தன் நிலை உணர்ந்து அவளை விட்டு தள்ளி நிற்க… ரிஷியின் கண்களில் இதுவரை பார்க்காத ஒன்றை உணர்ந்தாள்… அவன் கோபத்தை எல்லாம் பார்க்காதவள் இல்லை… அது எல்லாம் வேறு வகை.. அதற்கு பதிலடியும் இவள் கொடுக்காமல் இல்லை… ஆனால் இந்தக் கோபம் அவள் அவனிடம் பாராதது…


அதே நேரம் அந்த அளவுக்கு தன் மேல் வெறுப்பு வரும் அளவுக்கு தான் என்ன செய்தோம் என்ற எண்ணம் வர… யோசித்து பார்த்தாள் கண்மணி… அவனைப் பார்த்த நாளிலிருந்து இன்று வரை…


இவன் நண்பன் விக்கியிடம் காட்டிய அலட்சியத்தை… கோபத்தை கூட இவனிடம் காட்டியதில்லையே… இடையிடையே சண்டை வந்த போது கூட மகிளாவுக்காக மட்டுமே என்று யோசித்த போதே.. ஒரு நாள்…


“இவள் கைகளை அவன் இழுத்த போது” கண்மணி அவனிடம் கோபம் கொண்டாளே… அதற்காக தன் மேல் வஞ்சமா…இப்படியெல்லாம் அவள் நினைத்துக் குழம்பிக் கொண்டிருக்க…


”என்னலாம் நீ எந்த இடத்தில வச்சுருக்கேன்னு… அன்னைக்கு நீ அர்ஜூன் கிட்ட சொன்னியே அன்னைக்குத்தான் தெரிந்தது…”


இன்னும் இன்னும் கண்மணி குழம்பிப் போய் பார்க்க…


“என்ன யோசிக்கிற… உன்கிட்டயே வராத காதல் இவன் கிட்ட வருமான்னு… எவ்ளோ அசிங்கப்படுத்தின நீ”


இப்போது முறைத்தவள்… அன்று இருந்த நிலைமையில் அப்படி சொன்னாள்… அதை எல்லாம் பிடித்துக் கொண்டு இப்படி பேசுவானா… கொஞ்சம் எரிச்சலாகவும் இருக்க… வேறுவழியின்றி அடக்கிக் கொண்டு…


“அது நார்மலா நான் சொன்னேன் ரிஷி… உங்களை அவர் கிட்ட இருந்து காப்பாத்தனும்ன்ற ஒரே எண்ணம் தான் எனக்கு அப்போ இருந்தது… அப்போ என்னையுமறியாமல் ஒரு வேகத்தில நான் சொன்னேனே தவிர… வேற எந்த எண்ணமுமில்லை…”


கண்மணியின் அமைதி… நிதானம் எல்லாம் அவளை விட்டு போய்… ரிஷியிடம் தன்னைப் பற்றி புரிய வைக்கும் படபடப்பு வந்திருக்க… எழுந்தவள்… தன்னை நிதானப்படுத்திக்கொண்டு… அங்கிருந்த திண்டில் அமர்ந்தாள்


“இவனைலாம்… அங்கதான் அந்த இடத்திலதான் கண்மணி… நீ என்னை அசிங்கப்படுத்தின…


”என்னை லவ் பண்ணின உங்க மேலேயே எனக்கு காதல் வரல… அவர் மேல வரப்போகுதான்னுலாம் சொன்னதான… பேச்சை மாத்தாத கண்மணி”


“நீ எனக்கு பண்ணின அத்தனை உதவியும் அந்த ஒரு வார்த்தைல… மகிளா அப்பாக்கு அப்புறம்… அவராவது, என்னை ஒரு ஆளா மதிக்கலைனாலும்… நேரடியா என் மேல கோபமா காட்டினாரு… ஆனால் நீ.. உதவின்ற பேர்ல பிச்சைக்காரனைக் காட்டிலும் கேவலமான நிலைமைல என்னை வச்சு பார்த்திருந்திருக்க”


அவனின் இந்த வார்த்தைத் தாக்குதலில்… கோபம் கோண்டாள் தான்… இன்னும் சொல்லப் போனால்… ரிஷியை ஹீரோவாகவும் நினைக்கவில்லை… அதே நேரம் இவ்வளவு கேவலமாகவும் அவள் நினைக்கவில்லை…


இதை சொன்னால் ’நீயெல்லாம் என்னைப் பற்றி நினைப்பாயா’ … என்று சொல்லி… இன்னும்தான் அவன் தன் மேல் கோபப்படுவான் என்பதை உணர்ந்தவளாக


“ஒகே ஒத்துக்கறேன்… ஆமாம்.. பாவம் பார்த்துதான் உதவி செய்தேன்… அதைச் சொல்றதுல எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை… அதே நேரம் கேவலமான நிலைல உங்கள வச்சுப் பார்த்தேனுலாம் சொல்லாதீங்க ரிஷி…


“நான் உன்கிட்ட கேட்டனாடி… என் மேல பாவம் , பரிதாபம் லாம் பாருன்னு” ரிஷி பட்டென்று சொன்னவன்…


“என்ன தெரியும் உனக்கு என்னைப் பற்றி… என் மேல பாவம் பரிதாபம் பார்க்க…”


“எனக்கு தெரிந்தவரை உங்க மேல எனக்கு அதுதான் ஏற்பட்டுச்சு… போதுமா… இப்போ அதுகூட கண்டிப்பா இல்லை… உண்மையிலேயே முகத்தில சந்தோஷம் மட்டும் இருந்த பையனுக்கு.. “


கண்மணியின்…’பையன்’ என்ற சொல்லில் ரிஷி முறைக்க… இந்த முறைப்பில் ஆவேசம் எல்லாம் இல்லை…வழக்கமான இயல்பான அவன் முறைப்பாக இருக்க…


கண்மணிக்கும் அவன் முக மாறுதலில்… அவள் பார்த்த பழகிய ரிஷி வந்தது போல் தோன்ற… மனதுக்குள் நிம்மதி வந்து விட… அதை வைத்தே… அங்கிருந்த சூழ்நிலையை மாற்ற ஆரம்பித்தாள்..


’ஏனோ நீ எனக்கு எதிரி… பழி வாங்க’ இந்த வார்த்தைகள் ரிஷியிடமிருந்து வருவதை விரும்பவில்லை… கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு.. ரிஷியின் மனநிலையை மாற்ற முயன்றாள்…


”ஹலோ என்ன பார்க்கிறீங்க… நீங்கதான் அண்ணா சொல்லக் கூடாதுன்னு சொல்லிருக்கீங்கள்ள… இல்லேண்ணா இப்டி வந்திருக்காது டையலாக்… சந்தோசமா இருந்த இந்த அண்ணா ஏன் இப்படி மாறிட்டாங்கன்னு யோசிச்சுருப்பேன்… இப்போ பையன்னு சொன்னாலும் முறைக்கறீஙக… அதுக்காக அத்தான் மச்சான் மாமான்னா சொல்ல முடியும்…” என்ற போதே


ஆவென்று பார்த்தது வேறு யார் ரிஷிதான்… வேறு எதற்கு… கண்மணி இப்படியெல்லாம் பேசுவாளா என்றுதான்…


“என்னது அத்தான் மச்சான் மாமாவா” இந்த வார்த்தைகளிலேயே ரிஷியின் உலகம் நின்று விட… கண்மணியோ…. அவன் நின்ற நிலைமையைப் பார்த்து… சிரிப்பு வந்தாலும் உதட்டைக் கடித்து சிரிப்பை அடக்கியபடியே


”இந்தப் பையனுக்கு அப்படி என்ன கஷ்டம்… அடுத்து… பொறுப்பு இல்லைன்லாம் சொல்ல மாட்டேன்… அன்னைக்கு அப்பா ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு… நீங்க பார்த்து பார்த்து செய்ததையும் பார்த்திருக்கிறேன்… உண்மையச் சொல்லப் போனால் நீங்க ஒருத்தவங்க மட்டும் தான் என்னை ஸ்கூல் படிக்கிற பொண்ணாப் பார்த்தது ” என்றவளிடம்


ரிஷியும் பேச ஆரம்பித்தான்… வாய்க்கு வந்ததை…


“நீ அப்போ ஸ்கூல்தானே படிச்ச… அப்போ உன்னை எப்படி பார்ப்பாங்களாம்… உன்கிட்ட எப்படி பேசுவாங்களாம்…” என்ற போதே

“ம்க்கூம்” என்று கண்மணி செறும…


”இப்போ எதுக்கு உனக்கு இந்த ரியாக்‌ஷன் “ புரியாமல் கேட்க…


”அது வேற ஒண்ணு நினச்சேன்…”


” என்ன நெனச்ச… சொல்லு… எனக்குத் தெரிஞ்சாகனும்… நக்கலா சிரிச்சநீ” கடுப்புடன் அவளை நோக்கி முன்னேற…


“இந்த நல்லவங்க … ஸ்கூல் படிச்ச பொண்ணுகிட்ட தான கண்டதைச் சொல்லி… உங்க பின்னால சுத்த வச்சுருந்தீங்க… அத மறந்துட்டு பேசிட்டு இருக்கீங்கன்னு சொல்ல வந்தேன்” சூடாக பதிலடியும் கொடுக்க…


ரிஷியின் முகம் மாறியது சட்டென்று.. கண்மணி வாய் தவறி எல்லாம் சொல்லவில்லை… வேண்டுமென்றே தான் சொன்னாள்… ரிஷியின் முகம் மாறியதற்காக எல்லாம் வருத்தப்படவில்லை…


இருந்தும்…


”சரி விடுங்க… டாபிக் மாறுது… நம்மளப் பற்றி மட்டுமே பேசுவோம்… எனக்கு தெரிந்த… புரிந்த ரிஷி நீங்க இல்லைனு சொல்லிட்டீங்க… சொல்லுங்க…. கேட்போம்… அட்லீஸ்ட் பரிதாபம் பாவம் போய்… எனக்கு உங்க மேல கோபமாவது வருதான்னு பார்ப்போம்… பைக்ல இருந்து இப்படி இறங்கி வாங்க… எனக்கு கழுத்து வலிக்குது” சமாதானமான குரலில் இறங்கி வந்தவள்… என்று அவனுக்கு இடம் அளித்து சற்று தள்ளி அமர்ந்தவள்… கதை கேட்கும் பாவனையில் அமர்ந்து விட்டாள்…


அவள் அப்படி அமர்ந்து தன்னை அழைத்த பாவனையிலேயே…. ரிஷியும் அவனையுமறியாமலேயே இப்போது நார்மலாகி இருக்க… அங்கு சூழ்நிலை சட்டென்று மாறியது போல்தான் இருந்தது… இருவருக்குமே சண்டை போட எண்ணமில்லை என்பதாக மாறி இருக்க… வழக்கம் போல தோழமையுடன் உரையாடும் சூழ்நிலை எதார்த்தமாகவே வந்திருந்தது அவர்களுக்குள் மீண்டும்… எது எப்படியோ… தாங்கள் இருவரும் கணவன் மனைவி என்ற உணர்வு அவனுக்கும் இல்லை… அவளுக்கும் இல்லை…


”ஹலோ நான் என்ன கதையா சொல்ல போறேன்… “ என்று இவனும் நக்கலாகவே கேட்டபடி அவள் அருகில் அமர…


“நீங்க சொல்லுங்க ரிஷி… மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்… ”


”க்ளைமேக்ஸ் உங்களுக்கு பிடிச்ச முடிவா கூட மாத்திக்கலாம்… நம்பி சொல்லுங்க” என்றவளிடம்…


நக்கலுடன் கூடிய முறைப்பைக் கொடுத்தபடியே…


“ஃபீனிக்ஸ்… நெருப்பு பறவை னு… தீப்பொறி பறக்கிற கட்டுரை எழுதுற நீ… ரொமான்ஸ் ஸ்டோரிலாம் எழுதற அளவுக்கு மாறிட்டியா என்ன” என்றவனிடம்…


”ரியலி…. இப்போ நீங்க சொல்லப் போற ஸ்டோரில ரொமான்ஸ்லாம் இருக்குமா ரிஷி…” கண்களை விரித்து அவள் கேட்க


அவளின் இந்த பாவனையில் ரிஷிக்கு இப்போது சிரிப்பே வந்து விட்டது…. சுற்றி முற்றி தேடினான்…. கண்மணியைத் தாண்டி… கண்மணியும் என்ன செய்கிறான் என்பது போல புரியாத பார்வையை அவனிடம் வீச…


“எங்க மணி அக்காக்குள்ள சொர்ணாக்கா மட்டும் தான் இருக்கும் பார்த்தால்… பல ரூபங்கள் இருக்கும் போல… “


முற்றிலும் இயல்பாக ரிஷி மாறி இருக்க… அவனின் மாற்றத்தை கண்மணி கண்டுகொண்டபடியே தன் இலகுவான பேச்சை தொடர்ந்தாள்…


”சரி சரி கதை…. சாரி சாரி உங்க ஃப்ளாஸ்பேக் சொல்லுங்க… ஒரு நாலஞ்சு ஜானர்ல கதை எழுத முடியுமான்னு பார்ப்போம்” என்று ஆர்வமாகச் சொன்னவள் இப்போது அவன் முகம் பார்க்கும் வகையில் அவன் எதிரில் அமர…


“கன்ஃபெஷன் நைட்டா என்ன இது… ஜெக ஜோதியா இருக்கு..” ரிஷி புருவம் உயர்த்தி புன்னகையுடன் கேட்க.. அவன் சொல்வதைக் கேட்டபடியே


“ஹப்பா இந்த இடம்தான் வசதியா இருக்கு… உங்க முகத்தைப் பார்க்க…அது என்ன நைட்டோ… அதெல்லாம் விடுங்க… சொல்லுங்க ரிஷி” யாரும் காணாத… ரிஷி மட்டுமே பார்க்கக் கூடிய… ரிஷிக்கு மட்டுமே சொந்தமான… ரிஷியின் கண்மணியாக அங்கு உருவாக ஆரம்பித்திருந்தாள்…


அன்றும் இன்றும் என்றும் கண்மணியின் குழந்தைத்தனம் ரிஷி என்பவனிடம் மட்டுமே…


அவனிடம் மட்டுமே அவள் அவளாக இருக்க முயற்சித்தாளா… தெரியவில்லை… இன்று இருக்க முயற்சித்தாள்… ஆனால் ரிஷியோடு எப்போது பேசினாலும்… அவன் வாய் சாமார்த்தியத்திற்கு முன் கண்மணி இலகுவாகி விடுவாள்… இன்றும் இப்படித்தான் என்பது போல… கண்மணி ரிஷியோடு பேச ஆரம்பிக்க…


கண்மணிதான் இப்படி இருந்தாள்… ஆனால் ரிஷி அவனைப் பற்றி சொல்ல ஆரம்பித்த போது… அவனது இளமைக்காலம் முதல் இன்றைய தினம் வரை முடிந்த அளவு அத்தனையும் சொல்லி முடிக்கும் போது அவன் முகம் ஒரே பாவனையில் தான் இருந்தது… இறுக்கம் இறுக்கம் மட்டுமேவலிகள் அவன் வார்த்தைகளில் இருக்க…அவனையே பார்த்தபடி அவன் சொல்வதை மட்டுமே கேட்டபடி இருந்த கண்மணி முகத்தில் வித வித பாவனைகள் வந்து போக… அவள் மனதிலோ ஆயிரம் ஆயிரம் யோசனைகள்…


அனைத்தையும் கண்மணியிடம் கொட்டித் தீர்த்தவன்…


“இதுதான் ரிஷிகேஷ்… என்னைப் பற்றி கிட்டத்தட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்…” என்று முடித்த போது அவன் தன்னைச் சாதாரணமாக வைத்துக் கொள்ள பிரயத்தனம் பட்டான்… என்றே சொல்ல வேண்டும்…. அது கண்மணிக்குமே புரியாமல் இல்லை…..


”கடைசில இப்போ இந்த ரிஷிகேஷ் கிட்ட மிஞ்சுனது கேஷ் கூட கிடையாது… எனக்கு உரிமையான சொந்தமானது கையில இருக்கிற இந்த மணிதான் என்று தன் கையில் இருந்த ஒரு ரூபாய் காசை வானை நோக்கி தூக்கிப் போட.. அவன் பிடிப்பதற்கு முன் கண்மணி தன் கையை உயர்த்தி… தன் கைகளில் வாங்கிக் கொள்ள…


“அதுவும் போச்சா… ” அவள் பிடித்ததை பறிக்காமல்… ரிஷி ஏமாற்றமாய் சொல்வது போல சொல்லி… புன்னைக்க


கண்மணியோ தன்னைக் காட்டி


“இப்போ… இந்த ஒன் அன் ஒன்லி ’மணி’ மட்டும் தான் திருவாளார் ரிஷி அவர்களின் உரிமையாக சொந்தமாக…” என்று புருவம் உயர்த்தி சொன்னவள்…


”சோ இவன்லாம் எனக்கொரு ஆளான்னு சொன்ன என் முன்னாடியே கெத்தா வாழ்ந்து காட்டனும்… ”


”ம்ஹ்ம்ம்.. நல்ல சவால்தான்…” என்று சர்வ சாதரணமாகச் சொன்னவள்


”எனக்கான தகுதி விகுதி வருவது சரி… .1 பெர்சண்ட்… ரொம்ப ஆசைப்படுகிறேனோ… சரி விடுங்க… 0.00009 அளவுக்காவது காதலும் வச்சுட்டும் வாங்க… வெயிட் பண்றேன்….. வருமா” என்று அவள் அவனைப் பார்த்துக் கேட்க…


ரிஷி பதில் பேசவில்லை… மௌனமாக வேறு திசையை நோக்கிப் பார்க்க ஆரம்பிக்க…


“மௌனம் சம்மதம்னு வச்சுக்கறேன்” எனும் போதே வைகறையின் மிதமான ஒளி போய்…. சட்டென்று இருவரின் முகத்திலும் சூரியனின் இளம் மஞ்சள் நிற ஒளி பாய…


6 மணிக்கெல்லாம் சூரியன் வந்து விட்டபடியால்… நன்றாகவே விடிந்து விட்டிருந்தது… ரிஷியை அதற்கு மேல் கேள்வி கேட்க இஷ்டமில்லை கண்மணிக்கு… அதே நேரம் அவன் சொன்ன விசயங்கள் இவளுக்குள் ஓடிக் கொண்டிருக்க… அதன் பின் சில பல நிமிடங்கள் மௌனமாகவே கழிந்தது….


ரிஷிதான் மௌனத்தைக் கலைத்தவனாக “வீட்டுக்கு கெளம்பலாமா…” எழுந்தவன் ஃபேக்டரி நோக்கி மீண்டும் நடக்க……


தலை அசைத்தவளாக கண்மணியும் அவன் பின்னே நடக்க ஆரம்பித்தாள்…


----


கண்மணி வந்தது தன்னைப் பற்றி அனைத்தையும் சொல்ல…. ஆனால் நிலைமையோ தலை கீழாக ஆகியிருக்க … இருவரும் ஒருவரை பற்றி ஒருவர்… இன்னும் விளக்கிக் கொள்ளாமலேயே நான் உன்னை புரிந்து கொண்டேன்… என்ற ரீதியில் முடித்து விட்டனர அவர்களின் பேச்சு வார்த்தையை…


ரிஷி முன்னால் நடக்க… கண்மணி அவனிடம்..


“ரிஷி… எல்லாமே சொல்லிட்டீங்களா.. ஏதாவது மறச்சுட்டீங்களா…” கண்மணி வேகமாக நடந்து போய் அவன் அருகே போய் சேர்ந்து கொள்ள…


அவள் வேகத்துக்கு தன் நடையின் வேகத்தைக் குறைத்தபடி…


“இந்த கண்மணின்ற தியேட்டர்ல ஓட்டுற அளவுக்கு… தேவையானத மட்டும் சொல்லி தேவையில்லாதத சென்சார் பண்ணி கரெக்டா சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்”


“ஓ.ஹ்ஹ் அப்போ கத்தறி போட்டுட்டிங்களா ரிஷி” முறைப்பாக கேட்க


“சொன்னேனே… தேவையில்லாதத கட் பண்ணிட்டேன்னு” ரிஷியும் அழுத்தமாக நிதானமாக சொல்லி முடித்தவன்.. நின்று அவளைப் பார்த்து…


“சென்சார் இல்லாம வேண்டுமா… “ கண்களைப் பார்த்து கேட்க…


“ஹ்ம்ம்… கொஞ்சம் சுவாரஸ்யம் கம்மியா இருக்கே” என்றவள் உதடுகளை சுழித்து… கன்னக்குழி விழ… அப்பாவியாகக் கேட்க


சட்டென்று ரிஷிக்குள் ஏதோ தோன்ற…. சொல்ல வாயெடுத்தவன்… அதை விட்டு விட்டு…


“உன் போனும் பைக் சாவியும் தானே.. நீ இங்கேயே நில்லு… நான் எடுத்துட்டு வர்றேன்” என்றபடி முன்னே போக… அப்போதுதான் அவளுக்கே முக்கியமான ஒன்று ஞாபகம் வர…. வேகமாக அவனுக்கு முன்னே ஓடிப் போய்… தனது பைக் சாவியை எடுத்து வந்தவள்… மீண்டும் பைக் நிறுத்துமிடத்திற்கு ஓடிப் போக…


“என்னாச்சு இவளுக்கு…


அவளை விளங்காத பார்வை பார்த்தபடி… ஃபேக்டரிக்குள் நுழைந்தவன்… அனைத்தையும் சரிபார்த்து கிளம்ப ஆயத்தமாக… கண்மணி இப்போது மீண்டும் உள்ளே வந்தாள்… இப்போது அவள் மட்டுமல்ல.. கையில் ஒரு பரிசுப் பெட்டியோடு…


விளையாட்டெல்லாம் காட்டி நேரத்தை வீணாக்காமல்… ரிஷியிடம் அதைக் கொடுத்தவள்


”நம்ம மேரேஜுக்கு யாருமே நமக்கு கிஃப்ட் கொடுக்கலேயேனு நீங்க ஃபர்ஸ்ட் நாளே ஃபீல் பண்ணிறக் கூடாது பாருங்க… பிரிச்சுப் பாருங்க“ என்று சொல்ல


ரிஷியும் எந்த பந்தாவும் இல்லாமல் ஆச்சரியமும்… ஆர்வமுமாக ரிஷி பிரித்துப் பார்க்க… அந்தப் பொருள்… ஒரு புதிய அலைபேசி….


“இது உங்க ஃப்ரெண்ட் கண்மணி உங்களுக்காக கொடுத்தது.. உங்க மேரேஜுக்கான கிஃப்ட்” என்றவளிடம்…


“பட் நான் எதுவுமே உனக்கு கிஃப்ட் வாங்கலயே” ரிஷி உண்மையான கவலையோடு பேச…


“நீங்கதான் என்னை ஃப்ரெண்டாவே ஏத்துக்கலையே… எனிமி லிஸ்ட்லதான வச்சுருந்தீங்க்… விடுங்க… ரொம்ப வொரி பண்ணிக்காதீங்க…” என்றவள்…


கண்சிமிட்டி… தன் மாங்கல்யத்தைக் காட்டியபடி


“சொந்த உழைப்பு… இதை விட பெரிய கிஃப்ட்“ என்று ஆரம்பித்தபோதே…


“முடியல கண்மணி… நான் பாவம்ல… ஒரே நாள்ள உன் சொர்ணாக்கா இமேஜை என்கிட்ட மாத்த ட்ரை பண்ணாதடி… “ என்றபடியே


“அதெல்லாம் சரி… ஆனால் நட்ராஜ் சார் பொண்ணுக்கு மேரேஜ்னா சும்மா இருந்திருப்பேனா…” இவனும் வம்பிழுக்க…


“ஹப்பா. இந்த பேச்சு மட்டும் இல்லேன்னா… சரி சரி… கிஃப்ட் பிடிச்சுருக்கா சொல்லுங்க… நான் கால் பண்றேன்… அட்டென்ட் பண்ணுங்க” என்க…


இவனும் தன் கையில் இருந்த அலைபேசித் திரையைப் பார்க்க… இவனது எண் அதில் ஒளிர…. குழப்பமாகப் பார்த்தான்…


”என் நம்பர்”


”உங்க நம்பரே தான்… உங்க கிட்ட இருக்கிற மொபைல்ல என் நம்பர் இருக்கு…”


”கிஃப்ட் கொடுத்த ஃப்ரெண்ட் கண்மணி… வைஃபா நம்பர சுட்டுட்டா.. இனி அதுதான் உங்க நம்பர்.. உங்க நம்பர் தான் என் நம்பர்” என்று சொல்லும் போதே…


ரிஷியின் முகம் மாறியது… கண்மணி செய்த அதிகப்பிரசிங்கித்தன வேலையில்…


“என்ன வேலை இது… என்னோட காண்டாக்ட்ஸ்லாம் எக்கச்சக்கம்… எத்தனை இடத்தில… எத்தனை பேர்கிட்ட மாத்துறது… “ அவனையுமறியாமல் அவளிடம் சுள்ளென்று விழ…


நொடியில் மாறிய அவனது முகத்தைப் பார்த்தபடியே


“இன்னைக்கு ஒருநாள் மட்டும்…” என்ற போது கண்மணி குரலில் இருந்த அழுத்தத்தில் பழைய கண்மணி திரும்பியிருந்தாள் என்றே சொல்ல வேண்டும்…


“ப்ளீஸ்… ஏன்லாம் கேட்காதீங்க… நாளைக்கு உங்க நம்பர் உங்ககிட்ட வந்துரும்” சொன்னபடி… அவனை விட்டு விலகி… கதவை நோக்கிப் போக ஆயத்தமாக…


ரிஷியும் அவள் மேல் கோபப்பட்ட தன் தவறை உணர்ந்தவனாக…


“சாரி சாரி… வைஃபா முதன் முதலா நீ பண்ணின அட்ராசிட்டிய பார்த்து ஹஸ்பண்டா முதன்முதலா கோவிச்சுக்கிட்டேன்” என்று கெஞ்ச… அப்போதும் சமாதானமடையாமல் நிற்காமல் போய்க் கொண்டிருக்க....


“நட்ராஜ் சார் பொண்ணுக்கு நானும் ஒரு கிஃப்ட் வச்சுருக்கேன்…” அவன் இருந்த இடத்தில் இருந்தே சொல்ல… வேகமாக கண்மணி திரும்பிப் பார்க்க…


அங்கிருந்த மேஜையில் சாய்ந்தபடி… கைகள் இரண்டையும் தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்தபடி ஒய்யாரமாக நின்றிருந்தான் ரிஷி… கண்மணியைப் பார்த்தபடியே…


கண்மணி திரும்பியவுடன்… கள்ளச் சிரிப்புடன்… தன் ஆள்காட்டி விரலை உயர்த்தி ரிஷி தன் அருகே வரச் சொல்ல…


அவன் அழைத்த பாவனையில்


’ரிஷி’ என்னும் இரண்டெழுத்து மந்திரம் அவளை அங்கு ஆட்கொள்ள ஆரம்பித்ததோ என்னவோ… என்னவென்று கூட கேட்காமல் அவனைப் பார்த்தபடியே யோசனையோடே போனவள்… அவனருகே போய் நிற்க


ரிஷியும் இவளைப் போலவே ஏதோ பொருள்தான் பரிசாகக் கொடுக்கப் போகிறான் என்று யோசனையோடு அவன் பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்திருந்த கையைப் பார்த்துக் கொண்டிருக்க…


ரிஷியோ அவள் கைகளை மென்மையாகப் பற்றி குனிந்தவன்… கண்மணியின் நெற்றியோடு தன் நெற்றியை மட்டும் பட்டும் படாமலும் பதித்து… அவள் தேகம் தொடாமல் காற்றில் இதழ் குவித்தான்…… நட்போடு… பாசத்தோடு…


சட்டென்று நிமிர்ந்து பார்த்த கண்மணியின் கண்களில் நீர்த்துளி அவளையுமறியாமல்… வந்துவிடப் போக… இருந்தும் அடக்கிக் கொள்ள…


“இது கண்மணியோட ஹஸ்பெண்டா இல்ல… ஃப்ரெண்டா… “ என்று சொன்னவன்…


”இது நீ வேற யார மேரேஜ் பண்ணிருந்தாலும்… அப்போ கொடுக்க எனக்கு தைரியம் இருந்துருக்குமான்னு தெரியலை… ஆனால் இப்போ கொடுக்க தோணுச்சு… “ என்று முடித்தவன் அவள் கைகளையும் விட…


அன்னை மகளுக்கு கொடுக்கும் முத்தம்… தந்தை மகளுக்கு கொடுக்கும் முத்தம்… சகோதரன் சகோதரிக்கு கொடுக்கும் முத்தம்… தோழன் தோழிக்கு கொடுக்கும் முத்தம்… இது எதையுமே உணராத… இது எதுவுமே கிடைக்காத கண்மணிக்கு முதன் முதலாக இது அனைத்தையுமே தன் கணவனிடமிருந்து கிடைத்த முதல் முத்தத்திலேயே கிடைத்திருக்க… அனைத்தையும் முதன்முறை உணர்ந்தவள்… உறைந்தாள்தான்……


இருந்தும்… நொடிப்பொழுதில் தன்னைச் சமாளித்து


“தேங்க்ஸ் ரிஷி…” அதே நட்போடு அவன் கண்களைப் பார்த்துச் சொன்னவள் சிரிக்கவும் செய்ய..


”இந்த ஃப்ரெண்டோட கிஃப்ட் பிடிச்சுருக்கா” என்றவனிடம் சந்தோஷமாக தலையை ஆட்டியவள்..


“சரி வாங்க போகலாம்” என்று அவன் கைகளோடு தன் கைகளைப் பற்றி … வாசல் நோக்கித் திரும்ப


அவள் பற்றியிருந்த ரிஷியின் வலுவான கரங்களின் அழுத்தம் உணர… திடீரென்று … என்ன… ஏது என்று கண்மணி உணரும் முன்னரே… ரிஷியின் மறுகரமோ… கண்மணியின் இடையை அழுத்தத்துடன் பற்றி ஒரு சுற்றி சுற்றி… திருப்பி அவளை தன் புறம் இழுத்து… தன்னோடு அணைத்திருந்தது


இது எல்லாமே ஒரே வினாடிதான்… ரிஷியின் முகம் கண்மணியின் முகம் நோக்கி குனிந்திருக்க…


கண்மணி திடுக்கிட்டாலும்.. ரிஷியைத் தடுக்க நினைக்கவில்லை… எதிர்வினை ஆற்றலாமா வேண்டாமா என்று நினைக்கும் முன்னேயே ரிஷியின் வன்மையான உதடுகள்… கண்மணியின் முகத்தில் தொட்டும் தொடாமலும்… பட்டும் படாமலும் இருக்க… அவள் கன்னத்தில் அவன் உதடுகள் அவளைத் தீண்டிவிட்டன என்பதற்கு அத்தாட்சியாக அவனின் மீசை குறுகுறுக்க வைக்க… டிரிம் செய்யப்பட்ட இலேசான தாடி… அவள் கன்னத்தில் மொத்தமாக தன் பதிவைப் பதித்திருந்தது…


சற்று முன் அவன் கொடுத்த காமமில்லா முத்தத்தில் உறைந்து போயிருந்தவள்… இந்த மயிலிறகு வருடினாற்போன்ற மெல்லிய இதழ் வருடலில்… இப்போது உறையவில்லை.. மாறாக சூடான ரத்தம் தலை முதல் கால் வரை பாய்ந்தது போன்ற உணர்வு…


“வைஃபோட அட்ராசிட்டிய மேடம் காட்டிட்டீங்க.. ஹஸ்பண்டோட அட்ராசிட்டிய… காட்ட வேண்டாமா”


அவன் பேசும் ஒவ்வொரு எழுத்துக்கும் மிக மிக நுண்ணிய உரசலோடு அவன் உதடுகள் அவள் கன்னத்தோடு உறவாட…


கண்மணியின் மூளை முதல் முறை எதையும் யோசிக்காமல் ஸ்தம்பித்து நின்றது… அவன் விட்டால் தான் அவள் யோசிக்கவே முடியும் என்ற நிலைமையில் இருந்தாள்… அதற்காக அவனது தொடுகையில் அவள் கோபம் எல்லாம் கொள்ள வில்லை… அது வரவில்லை என்பதே உண்மை… கணவன் என்று ஏற்றுக் கொண்டபின் அவனை வேற்றாளாக நினக்கக் கூடாது மனதுக்கு ஆயிரம் முறை சொல்லிக் கொடுக்க…… அவள் மனமும் அப்படியே நினைக்க ஆரம்பித்தது…… அது தெரிந்ததுதான்


ஆனால் அவள் தேகமும் அவனை அந்நிய ஆடவனாக நினைக்கவில்லை என்பதை அவன் கைகளில் சரணடைந்திருந்த நிலையே அவள் கண்டுகொள்ள… என்ன செய்ய என்று அவளுக்கு தெரியவில்லை… தெரிந்து கொள்ளவும் நினைக்கவில்லை…


ரிஷி… தன்னை நோக்கி இன்னும் இழுத்து அவன் அணைப்பை இன்னும் இறுக்கியவனாக … அவள் காதில் …


“என் பாஸ்ட் லைப் பற்றி சொன்னால் சென்சார் இல்லாம சுவாரஸ்யமா வேண்டுமா மேடத்துக்கு… என் ஃப்யூச்சர் லைஃப… இந்த ஓடிடி(OTT) ஓட்டிரலாமா…. சென்சாரே இல்லாமல்…” கரகரத்த குரலில் கேட்க…


கண்மணியும் ஓரளவு தன்னிலைக்கு வந்து விட்டாலும்.. அவனை விட்டு விலகாமல்…


“ஒரு ரெண்டு வருசம் ஆகுமா… அந்தப் படம் வர… அப்புறம் 0.00009 காதலோடவும்” சட்டென்று கேட்டு விட்டு இப்போது தள்ளி நிற்கப் போக


தன்னை விட்டு விலக நினைத்தவளை… விலக விடாமல் மீண்டும் இழுத்து தனக்குள் கொண்டு வந்தவன்…


இப்போதும்… மறந்தும் முத்தம் என்ற ஒன்றை அவன் கண்மணிக்கு கொடுக்கவில்லை…. கொடுக்கவும் நினைக்கவில்லை


“தெரியலை கண்மணி… இந்த அணைப்பு கூட… காதலான்னா அது தெரியலை… ஆனால் இந்த ஜென்மத்தில என் மனைவின்னா அது நீ மட்டும் தான்… அந்த உரிமையை உனக்கு காட்டனும்னு எனக்கு தோணுச்சு… ” என்று இப்போது அவளை தன்னை விட்டு விலக்கியவன்…


”புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன்… கணவன் மனைவியா நமக்குள்ள உணர்வுகளை பரிமாறிக் கொள்ள… ரெண்டு பேருமே வெயிட் பண்ணனும்… எனக்காக வெயிட் பண்ணுவியா”


”ரிஷி… ஆனால் உங்களுக்காக நான் எப்போதுமே இருப்பேன்… இந்த நொடி கூட கணவனா என்கிட்ட நடந்தீங்கன்னா கூட… “ என்று நிறுத்தியவள்…


“எப்போ உங்கள மேரேஜ் பண்ணிக்க சம்மதம் சொன்னேனோ… அப்போதே எல்லாத்துக்குமே தயார் ஆகிட்டுதான் உங்க கையால தாலி கட்டிக்கிட்டேன்… அதுனால என்னைப் பற்றி கவலைப்படாம உங்க இலட்சியங்களை நோக்கி போங்க… சொல்லப் போனால் இப்போ நான் பேசுறதில கூட காதல் இல்லை… ஆனால் புரிதல் இருக்கு… அந்தப் புரிதல் எப்போதும் உங்கள என் கூட வைத்திருக்கும்” என்றவளுக்குத்தான் காதல் வந்த போது புரிதல் இல்லாமல் போய் இருந்தது….


----


நேற்று நடந்ததை எல்லால் இப்போது நினைத்தாலும் ரிஷிக்கு கண்மணி ஆச்சரியமே… புன்முறுவலோடு நடந்ததை எல்லாம் நினைத்தபடி…. மனைவியை நினைத்தபடியே மீண்டும் ஃபேக்டரிக்குள் போனவனுக்கு… நட்ராஜ் அவனது மாமனாராக மீண்டுமொரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்… அவன் முன் அவர் புல்லட் கீயை நீட்ட…


”சார்.. . உங்க ஆர் எக்ஸ் xxxx சாவி” கண் விரித்து ஆச்சரியமாகப் பார்த்தபடியே…


“நான் உங்ககிட்ட அந்த பைக்க செகண்ட் ஹேண்டா எனக்குத் தருவீங்களான்னு கேட்டப்போ… யார்கிட்டயும் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்க சார்” என்ற போதே…


“அது ரிஷிகிட்ட… இது என் மாப்பிள்ளைகிட்ட…” என்றவரிடம்


“இது உங்களுக்கு செண்டிமெண்ட்டா “ என்று ரிஷி இழுத்தபோதே…


“பிடி ரிஷி… இனி இது உனக்குத்தான்” என்று வலுக்கட்டாயமாக அவன் உள்ளங்கையைத் திருப்பி சாவியை வைத்தவர்…. அவ்வளவுதான் என் வேலை முடிந்து விட்டது என்பது போலஅங்கு நிற்காமல் உள்ளே போய்விட…


இதை விட அதிக காஸ்ட்லியான பைக்கெல்லாம் ஒரு காலத்தில் வைத்திருந்தான்… ஆனாலும்…. இந்த பைக் அவனது பல நாள் கனவு… கையில் வைத்திருந்த சாவியை ஆர்வமாக ஆசையாகப் பார்த்துக் கொண்டிருக்க…


தினகர்… வேகமாக ஓடி வந்தான்…


“ஆர் கே அண்ணாத்தா… அவ்ளோ பெரிய பெரியா ஆளுங்க பிட்ல எல்லாம் ஜெயிச்சு… இன்னும் ஒரு ஸ்டெப்தான்… செலெக்ட் ஆகிருச்சுனா… நம்ம கொட்டேஷன் ப்ராஸஸுக்கு மூவ் ஆகிருக்காம்…. ஃபர்ஸ்ட் டைம் நமக்கு பல்க் ஆர்டர்னா… ஆனால் அட்லீஸ்ட் நாம கோட் பண்ண டைம்முக்குள்ள முடிச்சுக் கொடுக்கனும்னா… அட்லீஸ்ட் இருநூறு பேராவது வேணுமே…. மெஷின் கூட வாடகைக்கு எடுத்துக்கலாம்… ஆனால் ஆளுங்க” என்று கவலையாகக் கேட்க…


”ஆளுங்கதானே… இந்த டீல் மட்டும் கிடைக்கட்டும்… பார்த்துக்கலாம்” என்று மர்மப் புன்னகை புரிந்தபடி…. தினகரை விட்டு தள்ளி வந்தவன்


தன்னிடமிருந்த கண்மணியின் எண் வாயிலாக… எண்களை ஒவ்வொன்றாக அழுத்தியவன்… அந்த எண்ணுக்கு அழைக்க


எதிர்முனை எடுத்தவுடன்…


“சத்யா… சீக்கிரம் ஊருக்கு வருகிறேன்… லாயர் கிட்ட சொல்லி டேட் ஃபிக்ஸ் பண்ணிரு… அண்ட்…. அந்தக் கொட்டேஷன செலெக்ட் பண்ணச் சொல்லிரு… நம்ம ட்ரஸ்டில படிக்கிற… பசங்கள்ள… மெக்கானிக்கல் ஃபீல்ட்ல இருந்து… செலெக்ட் பண்ணி வைச்சுட்டியா… தேவைப்படுவாங்கன்னு நினைக்கிறேன்… நட்ராஜ் சாரை நாம எப்படியும் இம்ப்ரஸ் பண்ணனும்.. நமக்கு நட்ராஜ் சாரும் முக்கியம்”


“புரியுது ஆர்கே… இருக்காங்க அந்தக் கவலையை விடு… எல்லாருமே உங்களுக்காகத்தான் காத்துட்டு இருக்காங்க… நீங்க எப்போ நம்ம ஃபேக்டரிக்கு மறுபடியும் முதலாளி சீட்ல உட்காருவீங்க.. சார் இருக்கிற இடத்துக்கு நீங்க வருவீங்கன்னு நாங்க எல்லோருமே காத்துட்டு இருக்கோம் சார்” என்று எதிர்முனை சொல்ல…


“சீக்கிரமா…” என்றவன்


“அப்புறம்… நம்ம பார்ட்னர்ஸ்லாம்… எப்டி இருக்காங்க…”


“அந்த கேசவன் நல்லா இருக்கான்னு தெரியும்… அவன விடு நம்ம டார்கெட் திருமூர்த்திதான்… பொண்ணு மேரேக் நின்றுச்சுனு… உடஞ்சு போய்ட்டானாமே… பார்த்துட்டு இருந்த மத்த பிஸ்னஸ்லாம் லாஸ்ல போய்… செமையா கஷ்டப்பட்டுட்டு இருக்கானாமே… ஏன் சத்யா… உனக்கு வேற வேலையே இல்லையா… அவன மட்டுமே ஏன் டார்கெட் பண்ற…” என்று ரிஷி சத்தமாகச் சிரிக்க…


“என்ன பண்ண… எங்க ஆர்கே பாஸ்… அதுக்குதான் எனக்கு சம்பளம் கொடுக்கிறாரு… நான் என்ன பண்ண…” எதிர்முனையில் சொன்ன சத்யாவும் பவ்யமாகச் சொல்ல


”ஹேய் என்கிட்டயேவா… சரி சரி நெக்ஸ்ட் டைம் வரும்போது திருமூர்த்தி கிட்ட இருக்கிற ஷேர்ஸ்… நம்ம கைக்கு வந்துரும் தானே… ஆள வச்சு பேசிட்டு இருக்கதானே… எனக்காக பேசுறேன்னு யார்க்கும் தெரியக்கூடாது… அவன நம்ம கைக்குள்ள கொண்டு வந்த பின்னாலதான்… நாம ஃபைல் பண்ணின கேஸை வாபஸ் வாங்கிட்டு… புது கேஸ் போடனும்… நான் சொன்னதெல்லாம் புரிஞ்சதா… அடிக்கடி என்னை காண்டாக்ட் பண்ணாத… நானே பேசுகிறேன்…” என்ற போதே


“பாஸ்… நீலகண்டன் சார் அவங்க பொண்ணுக்கு இன்னைக்கு மேரேஜ்… “ என்று தயக்கமாக இழுக்க…


”நல்லா இருக்கட்டும்… ” இதுமட்டுமே சொன்னவன்… அந்தப் பேச்சை அப்படியே விட்டு


”உனக்குத் தெரியுமா… உங்க பாஸ்க்கு கூட நேற்றே மேரேஜ் ஆகிருச்சு…. இந்த நம்பர் மிஸஸ் ஆர்கே நம்பர்தான்… நோட் பண்ணிக்கோ… ’ஆர்கே2’ ன்னு” என்ற போது சத்யா புரியாமல் விழிக்க


“ரிஷி-கண்மணி… இதுவும் ஆர்கே தான் அதைத்தான் சொன்னேன் சத்யா… ” என்றவன்


“அம்மாவை இந்த நிலைமையில விட்டுட்டு என்னால வரமுடியலை… இனி.. எனக்கு பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன்… அதுக்கும் முன்னால… நான் நட்ராஜ் சாரை வச்சு சில விசயங்கள் பண்ணனும்… ஏற்கனவே சொல்லி இருக்கேனே… என்னோட ஃபோகஸ்லாம் இனி அவர்தான் “ என்று பேச ஆரம்பித்தவன் தான் பேச வேண்டியதை எல்லாம் முடித்துவிட்டு


பதிலை எதிர்பார்க்காமல் சட்டென்று வைத்து விட்டான்…


ரிஷியாக கண்மணியிடம் எல்லாம் சொன்னவனைப் பார்த்தே… ரிஷி என்பவன் முகமூடி அணிந்திருக்கின்றான் என்று குழம்பி இருந்த அவன் மனைவி … ’ஆர் கே’ வாக அவன் செய்த… செய்து கொண்டிருந்த… செய்யப் போகும் விசயங்கள் எல்லாம் கேட்டிருந்தால்… என்னவாகி இருப்பாளோ….

-----






4,319 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page