top of page
Writer's picturePraveena Vijay

கண்மணி... என் கண்ணின் மணி -28-2

அத்தியாயம் 28 -2



ரிஷி பேருக்கு கண்மணியின் அருகில் நின்று வேடிக்கை பார்த்தபடி நிற்க… கண்மணியோ கண் மூடி மனம் உருக அந்த அம்மனின் முன் நின்றிருந்தாள்…. ஒரு நிமிடம் இரு நிமிடம் ஐந்து நிமிடமோ இல்லை… கிட்டத்தட்ட கால் மணி நேரத்துக்கும் மேலாக கண் மூடி அம்மனைப் பிரார்தித்துக் கொண்டிருக்க… அங்கிருந்த அர்ச்சகர்…


“மணிப்பாப்பாக்கு அம்பாள்னா அவ்வளவு இஷ்டம்…” என்று ரிஷியிடம் பேசிக் கொண்டிருக்க…


ரித்விகாவே கண்மணியின் பக்தி பிரவாகத்தில் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தாள்…


நல்ல வேளை ரிதன்யா அவர்களோடு வரவில்லை… ரிதன்யாவுக்கு தலைவலி என்று ஒதுங்கி விட்டாள்… பொய்யெல்லாம் இல்லை… உண்மையிலேயே தலைவலிதான்…. என்ன காரணம் கண்மணியாகிப் போனதுதான் அங்கு கவலைக்குரிய விசயம்…


ரிதன்யா அவர்கள் வீட்டின் ராணி…. சிறு வயதில் இருந்தே அவர்கள் பெற்றோர்களால் ரிஷியை விட புத்திசாலி, பொறுப்பானவள் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டிருந்தவளுக்கு… திடிரென்று ஒரு கூட்டம் கண்மணி கண்மணி என்று தூக்கி வைத்துக் கொண்டாட அந்த கூட்டத்துக்கு நடுவில் தன் புத்திசாலித்தனத்தையோ, இல்லை… தானும் நல்லவள் என்பதைக் காட்டவோ பிடிக்கவில்லை… ஒரு மாதிரியான ஒத்துப் போகாத ஒவ்வாத உணர்வு….. அது மொத்தமாக கண்மணியிடம் திரும்பியிருக்க… அதே நேரம் கண்மணியிடமும் தன் பிடித்தமின்மையையும் நேரடியாக காட்டப் பிடிக்கவில்லை….


இனி நடந்தது எதையும் மாற்ற முடியாது… அதே நேரம் கண்மணியையும் தன் அண்ணியாக ஏற்றுக்கொள்ள முடியாது… அவளைப் பார்ப்பதையே தவிர்க்க வேண்டும்… எப்படி என்று ரிதன்யா யோசிக்கத் தொடங்கி இருந்தாள்….


---


இங்கு புயலென கோவிலுக்குள் நுழைந்த அர்ஜூன் கண்களில்... கண் மூடி நின்றிருந்த கண்மணிதான் காட்சி அளித்தாள்…


தன் வாழ்க்கையை மொத்தமாக இருளாக்கி விட்டு… இங்கு மனமுருக வேண்டுதலா…. கோபத்துடன் கோவில் சன்னிதானத்துக்குள் நுழைந்தவன் அவளருகில் போய் அவள் பிரார்த்தனையை கலைக்க முயற்சிக்கப் போக…



ரிஷி அர்ஜூனைத் தன் புறம் இழுத்திருந்தான்….



“என்னைத் தாண்டி… என் மனைவிக்கிட்ட போகலாம் மிஸ்டர் அர்ஜூன்… என் வைஃப் இப்போ சாமி கும்பிட்டுட்டு இருக்காங்க… அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாமே…எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசலாம்” என்று அர்ஜூனை நிறுத்தி வைக்க….



நேற்று வரை… தன் உரிமை என்றிருந்தவளை இன்று யாரோ ஒருவன் உரிமையுடன் உறவாடிக் கொண்டிருக்க… நினைக்கும் போதே அர்ஜூன் மனம் துடிக்க ஆரம்பிக்க…


“கண்மணி” என்று உச்சஸ்தாயில் கத்த….


கண்மணி கண் திறந்தாள்….



ரிஷியோ….



“கண்மணின்னு…. சும்மா கூப்பிடாமல்… கண்மணி ரிஷின்னு கூப்பிட்டா இன்னும் எனக்கு காது குளிரும்…” என்று ரிஷி அர்ஜூனிடம் கண்மணிக்கான தன் உரிமையைச் சொல்லிக் காட்ட…


அப்போதுதான் அர்ஜூனுக்கே தன்னை மறந்து கண்மணி என்று அழைத்தது அவன் உணர்வுக்கு புரிந்தது… உச்சக்கட்ட ஆவேசத்தில் இருந்தவனுக்கு அவன் நிலையையே மறந்திருக்க… மற்றதெல்லாம் எங்கு ஞாபகத்திற்கு வரும்…


கண்மணி அர்ஜூன் முன் வந்து நின்றாள்…



“சொல்லுங்க அர்ஜூன்… “ என்றவளிடம்…. அவள் அருகில் போக எத்தனித்த அர்ஜூன் நெருங்காமல் கண்மணியைத் தன் புறம் கொண்டு வந்து தன் கையணைவுக்குள் வைத்தவன்….


”கண்மணி… வா… முதல்ல பெரியவங்க வந்திருக்காங்க… அவங்கள கண்டுக்காம அர்ஜூனா” என்று அழைத்துக்கொண்டு நாரயண குருக்கள் மற்றும் வைதேகி முன் சென்று அவர்கள் காலில் விழ…. நாரயண குருக்கள் இரும்பென விறைத்துப் போய் நிற்க… வைதேகி யார் பக்கம் பேசுவது என்று புரியாமல் முதலில் குழம்பி… பின் தன் பேத்திதான் முக்கியம் என்று முடிவுக்கு வந்தவராக… தங்கள் காலடியில் விழுந்த கண்மணி – ரிஷியை தொட்டுத் தூக்கி ஆசிர்வாதம் வழங்க….



அர்ஜூன் நட்ராஜிடம் எகிறிக் கொண்டிருந்தான்….



”என்னைத் தோற்கடிக்கிறதா நினைத்து…. அவளை பழி வாங்கிட்டா… உன்னை” என்று நட்ராஜின் குரல் வளையில் கை வைக்க…



“அர்ஜூன்… “ என்ற கண்மணியின் குரல் அர்ஜூனை நிறுத்த….


“என்னோட முழு சம்மதத்தோட தான் இந்த திருமணம் நடந்தது..” பிசிறில்லாமல் ஒலித்தது கண்மணியிடமிருந்து…. பதில் அர்ஜூனுக்கும் மட்டும் இல்லை அவள் தாத்தா பாட்டிக்கும் சேர்த்தே…


நட்ராஜை விட்டு விட்டான் அர்ஜூன்… கண்மணியிடம் வந்து நின்றவன்…


“என்னடி மிரட்டினான் உன்னை… இவன்லாம் ஒரு ஆளுன்னு… நினைக்கவே கேவலமா இருக்கு,…” என்று ஆவேசமாக ஆரம்பித்தவன்… தன்னைக் கட்டுப்படுத்தியபடி


“உன்னால… எமோசனல… உனக்கான முடிவுகளை ஹேண்டில் பண்ண முடியாதுன்னு எனக்குத் தெரியும் கண்மணி… ஓவர் எமோசனலா இருந்தால் உன்னால பேசவே” என்ற போதே…. நட்ராஜ் இப்போது… அர்ஜுனின் இந்த வார்த்தைகளில் உக்கிர மூர்த்தியாக மாறி இருக்க…


“டேய்.. என் பொண்ணப் பத்தி ஏதாவது இதுக்கு மேல பேசுன” நட்ராஜின் கோபம் கண்மணிக்கும் புரிய… தன் தந்தையை ஆசுவாசப்படுத்த ஆரம்பித்தாள் கண்மணி…


ரிஷி புருவம் சுருக்கினான்… மற்ற மூவருக்கும் புரிந்த ஏதோ ஒன்று அவனுக்கு புரியாதது போன்ற உணர்வு தோன்றியதுதான்… ஆனால் அதன் ஆழம் உணர முடியவில்லை



“ஏதோ உணர்ச்சி வசப்பட்டு… நீ இருந்திருக்க… அதை யூஸ் பண்ணி உன்னை இந்த முடிவெடுக்க வச்சுருக்காங்க…. இதெல்லாம்… இவங்கள்ளாம் நமக்கு வேண்டாம்… நாம பேசுவோம்… என் கூட வந்துரு …” இங்கு அர்ஜூனின் குரலில் மொத்தமாக கெஞ்சல் மட்டுமே இருக்க…




இப்போது ரிஷி


”கண்மணி கிளம்பு…. “ என்று கட்டளை போல் சொல்லியவன் ரித்விகாவிடம் திரும்பி


”ரிதி உங்க அண்ணியைக் கூட்டிட்டு நீ போகலாம்” அதட்டலாகச் சொல்ல… கண்மணி தன் தாத்தாவிடம் வந்தாள்....


”தாத்தா… அர்ஜூன் கிட்ட என்னைப் பற்றி ஒரு விசயம் கூட விடாமல் சொல்லி சொல்லிதானே இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கீங்க… இனி எனக்கு எந்த ஆபத்பாந்தவனும் வேண்டாம்னு சொல்லுங்க அர்ஜூன் கிட்ட… நான் சாதாரண பொண்ணு…. எனக்கு ரட்சகன் வேண்டாம்… சாதரண மனிதனே போதும்னு நான் முடிவெடுத்துட்டேன்… அர்ஜூன் புத்திசாலி… நீங்கதான் செண்டிமெண்டலா பேசி அவர் மனதை கலச்சு வச்சுருக்கீங்க… நான் தெளிஞ்சுட்டேன்… அவரும் தெளிவார்…. இல்லை புரிய வைக்க முயற்சி பண்ணுங்க… பிரின்சஸா நினைக்காம கண்மணியா என்கிட்ட அவர் என்கிட்ட எப்போதும் பேசலாம்னு சொல்லுங்க…” என்று பொதுவாகச் சொன்னவள்… அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்கவில்லை…


ஏனோ அர்ஜூன் மீண்டும் மீண்டும் அவளின் பழைய நிகழ்வுகளை மீட்டெழுப்புவது போல… எதைத் தவிர்க்க… மறக்க… நினைக்கிறாளோ… அவற்றை கொண்டு வந்து அவளை முழுவதுமாக தெரிந்து கொண்டவன் என்று காட்ட வேண்டும் என்ற பாவனையில் பேசுவதை கண்மணி தவிர்க்க நினைத்தவளாக… அங்கிருந்து வெளியேறி விட்டாள்… நட்ராஜ் மட்டுமே தன் மகளின் நிலையை புரிந்து கொள்ள… வேறு யாருக்கும் கண்மணி அங்கிருந்து விலகிச் சென்றது உறுத்தலாக இல்லை


இப்போது நட்ராஜ்… ரிஷியை நோக்க….



“அவங்க ரெண்டு பேர் கூடவும் போங்க சார் நீங்க…. அர்ஜூன் சார்கிட்ட எனக்கு பேச வேண்டிய விசயம் ஒண்ணு இருக்கு… நான் வருகிறேன்” என்ற போதே அர்ஜூன் நெற்றிக் கண்ணைக் காட்ட…


”என்ன பார்க்கிற…. தனியா பேசனும்… என் பின்னால யாரும் இல்லை… உனக்கு உன் தாத்தா பாடிகார்டா வேணும்னா… நடுவுல வச்சுட்டே பேசலாம்” என்று அவனைச் சீண்ட…


அர்ஜூன் கண் சைகையாலேயே… நாரயண குருக்கள் மற்றும்… வைதேகியைப் போகச் சொல்ல…


வேறு வழியின்றி…. அவர்களும் வெளியேறி இருக்க…



ரிஷியும் அர்ஜூனும் மட்டுமே…. அங்கு



அந்தக் கோவிலின் தெப்பக் குளத்தின் சுவரில் ஒருவரை ஒருவர் முறைத்தபடி நின்றிருந்தனர்…


அர்ஜூனை விட ரிஷி உச்சக்கட்ட கோபத்தில் இருந்தான் இப்போது…


“சோ… கண்மணி கழுத்துல நான் கட்டின தாலி இருந்தாலும்… உன் கூட வான்னு என் முன்னாலேயே கூப்பிடுவ நீ” ரிஷி பல்லைக் கடித்துக் கொண்டு பேச…


”தாலி… ஹா… ஹா… அதெல்லாம் எனக்கு ஒரு காரணமே கிடையாது…. இப்போதும் அவ என்னோட பிரின்சஸ் தாண்டா…”


தன் முன் நிற்கும் ரிஷி.... கண்மணியின் கணவன் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் அர்ஜூன் பேச


“என்னடா சொன்ன….” என்று ரிஷி அவனிடம் பாயப் போக… அவனைத் தடுத்து நிறுத்தியவனாக…



“6 வருசமா என் மனசுல இருக்கவ… பார்க்கலாம் அவளுக்கு… என்னோட காதல் முக்கியமா இல்லை நேத்து வந்த நீ முக்கியமான்னு பார்க்கலாம்டா…. நீ எல்லாம் அவளுக்கு ஒரு ஆளா… உன்னோட ஒரு சுண்டு விரல் அவளைத் தொடனும்னா… ம்ஹூம்ம்ம்… அவ்வளவு ஏன்… ஒரு பார்வை அவளை உன்னால வேற மாதிரி பார்க்க முடியாதுடா… சேலஞ்ச் பண்றேன்… மனசு முழுவதும் காதல் இருந்த என்னாலேயே அவகிட்ட நெருங்க முடியல… ஆஃப்ட்ரால் தாலி கட்டிட்டா நீ நெருங்கிருவியா… எழுதி வச்சுக்கோ… அது உன்னால முடியாது…. அவ கோவில் தீபம்…. அதை நெருங்குறதுக்கோ தொடுறதுக்கோ என்னைக்குமே உன்னால முடியாது…”


அவன் வார்த்தைகளில்… ரிஷியோ அப்படி ஒரு சிரிப்பு சிரித்தான்…



“என்னது சொல்லு சொல்லு… .. கோவில் தீபம்… கற்பூரமா… சத்தியமா சொல்லு நீ அமெரிக்க ரிட்டர்னாதானா..”



“அந்த கோவில் தீபத்தை எப்படி ஒளிர வைக்கிறதுன்னு … கற்பூரத்தை எப்படி அணைக்கிறதுன்னு…. நாங்க பார்த்துக்கிறோம்.. சாரி சாரி… நான் பார்த்துக்கிறேன்…” ரிஷியின் குரலில் நக்கல் நக்கல் மட்டுமே நூறு சதவிகிதம் இருக்க…



”ஆமா…. இவ்வளவு பேசுறியே… உன்கிட்ட ஒண்ணு சொல்லவா… என் பாலிசி என்னன்னு தெரிந்திருந்தால்… நீ இவ்வளவு டைலாக் பேச வேண்டியே இருந்திருக்காது….. இந்த பிரின்சஸ்… காதல் இதெல்லாம் இந்த உளறல் எல்லாம் உனக்கு இருக்கலாம்… நான் என்ன கண்மணி மேல காதல் பொங்கி வந்தா தாலி கட்டி மனைவியா ஏத்துகிட்டேன்… கண்மணி என்னைப் பொறுத்தவரை ரொம்ப ரொம்ப ரொம்ப சாதாரண பொண்ணு… எனக்கு என் வீட்டுக்கு வேலைக்காரி வேண்டும்… அது கண்மணியா இருந்தா வசதின்னு தோணுச்சு… மனசில தோணினத அவகிட்ட கேட்டேன்… விருப்பம் இல்லைனு சொன்னா விட்டுட்டேன்… ஆனால் நீ பண்ணின கூத்து இருக்கே அதன் பிறகுதான் முடிவெடுத்தேன்… என் மேல கையை வச்ச உன்னை பழி வாங்கனுமே… என்ன பண்ணலாம்னு யோசித்தால்… ப்ரின்சஸ்… தான் என் கண்ணு முன்னால வந்து நின்னாங்க… நட்ராஜ் சார் பொண்ணு… விட்றலாம்னுதான் திங்க் பண்ணினேன்… அப்புறம்… ப்ரின்சஸ் நட்ராஜ் சார் பொண்ணு கண்மணியை விட முந்திட்டாங்க… ப்ச்ச்… பாவம்…” என்று தோளைக் குலுக்க…


“ஏய்” அர்ஜூன் இப்போது ரிஷி மேல் பாயப்போக



“இருங்க அர்ஜூன் சார்…. கையை நீட்டி கூட பேச முடியலை…. அடி பின்னி எடுத்துட்டு… இப்டி ஆக்ரோஷமா பேசுனீங்கன்னா… என்னால பதிலுக்கு கையை நீட்டி பேச முடியுமா என்ன…”


“தாலி கூட கஷ்டப்பட்டுத்தான் கட்டினேன்… மூணு முடிச்சு போடவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன் சார்… இதுல உங்க கிட்ட என் எனர்ஜி எல்லாம் செலவு பண்ணிட்டா… புதுமாப்பிள்ளை வேற”


என்று சோம்பலாக கையை முறித்தவன்


“சுருக்கமா சொல்லிக்கிறேன் அர்ஜூன் சார்…. நீ இளவரசியா வாழ வைக்க ஆசைப்பட்டவ… இனி என் வீட்ல வேலைக்காரியா சாரி சாரி இந்த ரிஷி வீட்டுக்காரியா இருக்கப் போறா… என் மேல கை வைத்ததுக்கு இதுதான் உனக்குத் தண்டனை…. நீ புத்திசாலியா இருந்தால் உன் வாழ்க்கை.. உனக்கானவள்னு போய் என் மூஞ்சில கரியைப் பூசலாம்… இல்ல காதல் காவியம் பிரின்சஸ்னு உளரிட்டு இருந்தாலும் எனக்கு சந்தோஷம் தான்… என்னை அடிச்சவன் தேவதாஸ் மாதிரி திரிந்தால் எனக்கு சந்தோசம் தான்…”


“அப்புறம் நீ மட்டும் காரணம் இல்ல…. கண்மணிய மேரேஜ் பண்ணினதுக்கு… ம….” என்று மகிளாவைப் பற்றி ஆரம்பித்தவன்…


“ப்ச்ச்… அது எதுக்கு… உனக்கு தேவையில்லாத விசயம் “ என்று விட்டு விட்டு


”உன் காதல் காவியத்தை ஜெயிக்க வைக்க ட்ரை பண்ண நினைச்சேன்னா…. கொஞ்சம் லேட்டா ட்ரை பண்ணு…. எனக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்…. காரணம்… என் குடும்பத்துக்கு ரெண்டு மூணு வருசத்துக்கு கண்மணின்ற வேலைக்காரி தேவைப்படுறா… ”


“ஆனாலும்… நான் பெர்மெனட்டா அவளுக்கு வேலைக்காரி வேலை கொடுத்து என்கூட…. வச்சுக்கதான் ஆசைப்படுறேன்…. ஆனால் நீதான் துள்ளுற… “ என்றவன்… அர்ஜூனின் முகத்தைப் பார்க்க


அர்ஜூனின் முகத்தில் இருந்த ஆக்ரோசம் மாறி... உதவியற்ற பாவனை வந்திருக்க… அதற்கு மேல் பேச விருப்பமில்லை ரிஷிக்குமே…



”வரட்டுமா அ…ர்…ஜூ…ன் சார்…. என் வீட்டு வேலைக்காரி எனக்காக காத்துட்டு இருப்பா… போகனும்ல…” அர்ஜுனிடம் கண்மணியைப் பற்றி விளித்த போதெல்லாம் வேலைக்காரி என்றே சொன்ன ரிஷி…. அந்த வார்த்தையையும் சாதாரணமாக உச்சரிக்க வில்லை…. அதையும் அழுத்தியே உச்சரித்து…. அர்ஜூனின் இரத்த அழுத்தத்தை ஏற்றும் பணியைச் செவ்வனே செய்து முடித்தவன்… அதற்கு மேல் அங்கு நிற்க வில்லை… அர்ஜூன் தான் பிரமை பிடித்தபடி நின்று கொண்டிருந்தான்…



இந்த ரிஷி என்னைப் பழிவாங்க கண்மணியைத் திருமணம் செய்திருக்கின்றானா… கண்மணியிடம் இதை சொல்ல வேண்டுமே…. நம்புவாளா… நான் சொல்வதை எல்லாம் உண்மை என்று நம்பி… அவனை விட்டு விலகி என்னிடம் வந்து சேர்வாளா… கண்மணி இன்னும் தன்னை விட்டு போக வில்லை என்று நப்பாசையுடன் மனம் நம்பியது….



---



கிட்டத்தட்ட இரவு ஒன்பது மணி…. கோவிலில் இவர்களைப் போகச் சொன்னவன் தான் அதன் பிறகு ரிஷி வீடு திரும்பவில்லை… ரிஷியின் போனும் வேலை செய்யவில்லை என்பதால்…. நட்ராஜ் தான் பதட்டமானார்….


ஆனால் ரிஷி நட்ராஜ் எண்ணுக்கு அழைத்து தான் கம்பெனியில் இருப்பதாகச் சொன்னவன்… இரவு வீடு வந்து விடுவதாகச் சொல்ல…. நட்ராஜ் நிம்மதி ஆனார்… அதே நேரம்… அன்றிரவு…. தான் வீட்டில் தங்காமல் கம்பெனிக்குச் சென்று விட வேண்டும் என்று முடிவும் செய்திருந்தார்….



அதனால் இரவு மணி பத்தாக கண்மணியிடம் வந்தவர்



“மணி… நான் கம்பெனிக்கு போய்ட்டு மாப்பிள்ளையை வரச்சொல்கிறேன்மா…. நான் அங்கேயே தங்கிக்கிறேன்….” என்று கிளம்ப…. கண்மணியும் தடுக்க வில்லை… தலை ஆட்டியவள்…


“இன்னைக்கு ஒரு நாள் மட்டும்பா… நான் ரிஷி கிட்ட பேசனும்… அதுனால மட்டுமே…. அப்புறம் … நாளைக்கு நான் ரிஷி வீட்டுக்கு… இல்லை என்னோட வீட்டுக்கு என்னோட தின்க்ஸ்லாம் ஷிஃப்ட் பண்ணிருவேன்…. உங்களுக்கு ஒகேதானே….”


மகளின் அருகில் வந்தவர் புன்னகையுடன்…. கண்மணியின் நெற்றியில் வாஞ்ஞையுடன் முத்தமிட… அமைதியாக அதை ஏற்றுக் கொண்டவளை… தன் தோள் மீது சாய்த்தவர்…



“நல்லா இருப்படா… ராஜாத்தி நீ… உன் அம்மாவோட ஆசிர்வாதம் வழக்கம் போல எப்போதும் இருக்கும்… உன்னைக் காக்கும்… நாங்க வாழாத நாளையும் சேர்த்து உனக்கு அவ ஆசிர்வதமாக கொடுப்பா” என்ற போதே நட்ராஜின் கண்கள் கலங்க… அவர் மகளோ வழக்கம் போல உணர்வுகள் வடித்த சிலையாக நின்றாள்….



நட்ராஜ் போய் அரை மணி நேரம் ஆகி இருக்க… ரிஷி கண்மணி இல்லத்திற்கு வரவில்லை… மாறாக நட்ராஜ் போனில் இருந்து ரிஷிதான் அலைபேசி அழைப்புதான் கண்மணியை வந்தடைந்திருந்தது…


திடீரென்று ஒரு ஆர்டர் உடனடியாக வேண்டும் என்று கேட்டதால்… இரவு கம்பெனியிலேயே தங்கப் போவதாக… அவன் அழைப்பில் விபரம் சொல்ல… ரிஷியோடு வாக்குவாதம் செய்யாமல்…. அமைதியாக போனை வைத்தவள்… அடுத்த நொடி…. கட்டி இருந்த புடவையை மாற்றி சுடிதாருக்கு மாறியவள்…. தன் ஸ்கூட்டியின் கீயை எடுத்தபடி வீட்டைப் பூட்டி வெளியேறியவள்…. தங்கள் கம்பெனியை நோக்கி விரைந்தாள்…



அதே நேரம் அர்ஜூனும்…. தனக்குள் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்… இது சாதாரண முடிவல்லதான்… அதே நேரம்…. ரிஷி இவனைப் பழிவாங்குவதற்காகவே அவளைத் திருமணம் செய்திருக்கின்றான் என்றால்… கண்மணி எப்போதும் அவனோடு சந்தோஷமாக இருக்க மாட்டாள்… இருக்கவும் முடியாது… இதற்கு மேலும் அவளை கை நழுவ விட முடியாது… இது அவனுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு… ரிஷியைப் பற்றி சொல்லி கண்மணிக்கு அவனின் சுயரூபத்தை காட்டலாம்… அப்படியும் கண்மணி பிடிவாதம் பிடித்தால்… அவளை வலுக்கட்டாயமாக… தன்னோடு அழைத்து வந்து விடலாம்... இதுநாள் வரை கண்மணியின் முடிவுக்காக காத்திருந்த அர்ஜூன்… இன்று எதற்கும் கவலைப்படவில்லை… கண்மணி இல்லம் நோக்கி விரைந்தான்… கண்மணியை ரிஷியிடமிருந்து காப்பாற்றி தன்னோடு அழைத்துப் போக….


இவர்கள் எல்லாம் இப்படி இருக்க…



மகிளா என்ற அப்பாவி ஜீவனுக்கோ… ரிஷி மாமாவுக்கு நடந்த திருமணத்தை ரிதன்யா சற்று முன் தன் அனுப்பியிருந்த புகைப்படத்தில் பார்த்தவளுக்கு அதிர்ச்சி அதிர்ச்சி மட்டுமே…. யார் தன்னை இந்த இரவுக்குள் வந்து அவனோடு அழைத்துச் செல்வான் என்று நம்பி இருந்தாளோ அவன் இன்னொருத்தியின் கணவன் இப்போது…. அவனை எதிர்பார்த்து காத்திருப்பேன் கடைசி நிமிடம் வரை… என்று சொன்னவள்… இதோ… ரிஷியை எதிர்பார்த்து காத்திருக்காமல்…. அவன் கொடுத்த அதிர்ச்சியை மட்டுமே சுமந்தபடி… இன்னொருவன் அணிவித்த மோதிரத்தை அணிந்து கொண்டு… மேடையில் செயற்கை புன்னகையோடு நின்று கொண்டிருந்தாள்…


அவளது வருங்காலக் கணவனாகிய பிரேம்… மகிளாவுக்கு மேடையில் நிற்பது சங்கடமாக இருக்கிறதோ என்று எண்ணி அவளை இயல்பாக்கும் விதமாக… அவளோடு அளவளாவிக் கொண்டே இருக்க… அவன் பேசிக் கொண்டே இருந்ததால்… ரிஷியைப் பற்றி நினைக்கக் கூட முடியாமல்… இவளும் பதில் சொல்லிக் கொண்டே இருக்க… அதைப் பார்த நீலகண்டன் மனதில் நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாக பரவ ஆரம்பித்திருக்க… ஆனாலும் திருமணம் முடியும் வரை…. இந்த நிம்மதி நிலைக்க வேண்டுமே… ரிஷியைப் பற்றி… அவனுக்கு நடந்த திருமணம் பற்றி தெரியாமல்… கவலையுடன் இருக்க…



நீலகண்டன் யாரை நினைத்து பயந்து கொண்டிருந்தாரோ… அந்த ரிஷியோ…. கம்பெனியில்…. அணிந்திருந்த திருமண வேஷ்டி சட்டையைக் மாற்றி விட்டு… வழக்கமாக வேலை நேரத்தில் அணியும் உடையோடு வழக்கம் போல் இயந்திரத்துடன் உறவாடிக் கொண்டிருந்தான் வியர்வை சிந்த…. நட்ராஜ்… ரிஷியிடம் பேச முடியாமல்… தத்தளித்துக் கொண்டிருந்தார்…



அதே நேரம் கண்மணி அவருக்கு போன் செய்து தான் அங்கு வருவதாகவும்…ரிஷியிடம் சொல்ல வேண்டாம் என்றும்…. தான் வந்தபின் அவர் கிளம்பலாம் என்று சொல்லி விட… மகளிடமும் மறுத்துப் பேச முடியாமல் மகளுக்காக காத்திருக்க ஆரம்பிக்க…. வெகு நேரம் எல்லாம் காத்திருக்க வைக்காமல்…. கண்மணியும் வந்து சேர்ந்தாள்…


தன் முன் வந்து நின்ற தன் மனைவியை விழி உயர்த்திப் பார்த்து விட்டு… ரிஷி தன் வேலையில் மீண்டும் கவனம் வைக்க…


கண்மணி அவனை ஓரக் கண்ணால் பார்த்து முறைத்தபடியே….


“இந்தாங்கப்பா வீட்டு சாவி… நாங்க நாளைக்கு வருகிறோம்…” என்று தந்தையிடம் சாவியை நீட்ட…


“மணிடா… உண்மையிலேயே ஆர்டர் தான் வந்திருக்கு…. நீ மாப்பிள்ளைகிட்ட பிரச்சனை ஏதும் பண்ண வேண்டாம்டா”… மகள் கோபம் உணர்ந்தவராக…. நட்ராஜ் மகளிடம் தண்மையாகச் சொல்லிக் கொண்டிருக்க


தன் தந்தையைச் சட்டை செய்யவே இல்லை கண்மணி… மாறாக….



“நீங்க போகலாம்னு சொன்னேன்பா” அதன் பிறகும் நட்ராஜ் அங்கு நிற்பாறா என்ன…. அவர் கிளம்பி விட்டார்…


கண்மணி ரிஷியின் முன்னால் வந்து நின்றாள்…


தன் முன்னால் வந்து நின்றவளை… தன்னை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பவளை… உணராதவனா ரிஷி….


“சொல்லு கண்மணி… வேலை பார்த்துக்கிட்டே பேச எனக்கு பிரச்சனை இல்லை“ அவளைப் பார்க்காமல் இயந்திரத்திலேயே பார்வையை வைத்தபடி சாதாரணமாக ரிஷியும் பேச ஆரம்பிக்க….



கண்மணி இப்போது அவனுக்கு பதில் பேசாமல்… நடந்தவள்… அருகில் இருந்த மெயின் ஸ்விட்ச் போர்டின் அருகே போய்… இயந்திரங்களுக்கான மின்சாரம் வரும் மெயினை ஆஃப் செய்ய…. அங்கு மெல்ல மெல்ல இயந்திரங்களின் சத்தம் குறைய….




இப்போது ரிஷி…. அவளை முறைக்க….


இயந்திரங்களின் சத்தங்களை அணைத்த இயந்திரப் பாவையின் முகத்தில்…. சிறு இதழ் சுழித்த குழந்தைத் தனமான குறும்புப் புன்னகை… கூடவே கன்னத்துக் குழியோடு….


“எனக்கு வேலை பார்த்துகிட்டே பேசுனா பிரச்சனை ரிஷி… இப்போ பேசலாமா” கைகளைக் கட்டியபடி அவனை நோக்கிப் பேசி முடித்தவளிடம்….



“கண்மணி… சின்னப் புள்ள மாதிரி என்ன விளையாட்டு…. மெயின ஆன் பண்ணு… முக்கியமான ஆர்டர்” என்றபடி அவளருகில் வர… அவளோ இன்னும் குழந்தையாகிப் போனாள்…


மெயின் பாக்ஸின் கதவை மூடி அதன் சாவியை தன் துப்பட்டாவில் முடிந்து வைத்தவள்… அங்கிருந்த மூவர் அமரும் இரும்பு இருக்கையில் அமர்ந்தவள்…



“எனக்கு பேசணும்… உங்ககிட்ட பேசணும்… இப்போதே பேசனும்” பிடிவாதமாக சொன்னவள்… வெறித்த பார்வையில் அமர்ந்து விட… ரிஷி இப்போது பிடிவாதம் பிடிக்காமல்… அவளருகில் அமர்ந்தவன்…


“உண்மையிலேயே இன்னைக்கு இமிடியட்டா முடிக்க வேண்டிய ஆர்டர் தான் கண்மணி…. நம்மள நம்பி இருக்கவங்க... ப்ளீஸ்… ஒரு இரண்டு மணி நேர வேலைதான்…”


அவன் சொன்ன பாவனையில்… அவளையும் மீறி சமாதானமானவள்…



“ஓகே அக்ரீ… ஆனால் 2 ஹவர்ஸ் தான்… நான் இங்க தூங்கறேன்… எழுப்பி விடனும்… “ என்று கறாராகச் சொன்னபடி… மெயின் ஸ்விட்ச் பாக்ஸ் போர்டின் சாவியை நீட்ட….



“குட் கேர்ள்…. “ அவளிடமிருந்த சாவியை வாங்கிக் கொண்டே தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்து அவளிடம் நீட்ட…



”இது எதற்கு” என்பது போல புரியாத பார்வையை கண்மணி பார்க்க…



சுற்றி ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகளைக் காட்டியவன்….


“லைட்லாம் ஆஃப் பண்ண முடியாது மணி… ரெண்டாவது வெல்டிங் ஸ்பார்க்ஸ் வேற…. கண்ல பட்டா அவ்ளோதான்… கண்ணைக் கட்டிட்டு படு” என்று சொன்னபடியே நகர்ந்தவன்…. மெயின் ஸ்விட்சை ஆன் செய்ய…. இயந்திரங்கள் அனைத்தும் மீண்டும் செயலாற்ற ஆரம்பிக்க…



“உங்க மேல நம்பிக்கை இல்லை… அதுனால மொபைல் அலார்ம் வச்சுட்டே படுக்கிறேன்”…. ரிஷி வெல்டிங் ஷீல்ட் போட்டிருந்தபடியால்…. ரிஷிக்கு கேட்கும் விதமாக குரல் உயர்த்தி சத்தமாகச் சொல்ல….


ரிஷியும் சரி என்பது போல கட்டை விரலை உயர்த்திக் காட்ட…


முகத்தை மறைத்த கவசமும்… அவன் அணிந்திருந்த கையில்லாத டீஷர்ட்டின் வழியே தெரிந்த…. நரம்புகள் விடைத்த… வலிமையான புஜங்கள் மட்டுமே கண்மணிக்கு தெரிய…


கண்மணி அவனை நோக்கி தலை அசைத்து விட்டு…. அந்த இருக்கையின் நீளத்திற்கேற்ப தனது உடலை குறுக்கியபடி… படுத்தவள்… அடுத்த சில நிமிடங்களிலேயே தூங்கியும் போக…


அவள் வசதியாக படுத்துவிட்டாலும்… எங்கு தூக்கத்தில் புரண்டு…. கீழே விழுந்து விடுவாளோ என்று ரிஷிக்கு தான் பயம் வந்திருந்தது…. அதனால்…. கண்மணியை தன் பார்வை வட்டத்தில் வைத்தபடியே…. தன் வேலையிலும் கவனம் வைத்தவனாக அதில் மூழ்க..


வெளியே ஆகாயத்தில்…. நிலவினை மறைத்திருந்த மேகம்….… நிலவை விட்டு… மெல்ல மெல்ல நகரத் தொடங்க…. கொஞ்சம் கொஞ்சமாக இதமான நிலவொளி அதிகரிக்கத் தொடங்கி இருந்தது….



அதே போல நாயகன் வாழ்க்கையிலும்.... அது நாள் வரை அவன் அடைந்த கஷ்டங்கள்…. எல்லாம்…. மெல்ல மெல்ல மறைந்து…. ஒளி பரவத் தொடங்க ஆரம்பித்திருந்தை அவன் உணரவில்லை….


அவன் உணராவிட்டால் என்ன…


அவன் வாழ்க்கையில் அவனோடு இணைந்து அவனின் ஒளியாக மாறி அவன் வாழ்க்கைப் பாதையில் இதுநாள் வரை தடைக்கல்லாக இருந்த அனைத்தையும் தகர்க்க உதவி செய்து… அவனுக்கு சரியான பாதையைக் காட்டி அதில் பயணிக்கவும் வைத்து வெற்றி வாகை அவன் சூட அவன் கரம் பிடித்து வந்துவிட்டாளே அவன் கண்ணின் மணி…. கண்மணி… இனி அவனுக்கு எப்போது வெற்றிதான்….



---


2,954 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page