top of page
Writer's picturePraveena Vijay

கண்மணி... என் கண்ணின் மணி -28

அத்தியாயம் 28


காலை 8:30 மணி அளவில் சென்னையின் வர்த்தக உலகமான தியாகராயநகரின் பிரமாண்ட புடவைக்கடை ஒன்றில்…. பட்டுப்புடவை பிரிவில் அமர்ந்திருந்தான் ரிஷி. கடை சிப்பந்திகளே அப்போதுதான் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்க ரிஷியோ முதல் ஆளாக இருந்தான் அந்த கடையில்….


இன்னும் வாடிக்கையாளர் நேரம் ஆரம்பிக்க வில்லை என்பதை அங்கிருந்தவர்கள் சொல்ல… ரிஷி தன் நிலையை எடுத்துக் கூற…. ரிஷியின் நிலைமை புரிந்தும்... அதோடு முதல் வாடிக்கையாளர் என்பதாலும் கடை ஊழியர்களும் ஆர்வமாகவே அவனை வரவேற்று அவன் முன் புடைவைகளை எடுத்துக் போட ஆரம்பிக்க.. ரிஷி அமைதியாக அமர்ந்து அவற்றை பார்வையிட ஆரம்பித்தான். புடவைகளை அதன் விதங்களை வண்ணங்களை…. அவன் மனம் நோக்கியதோ என்னவோ மனம் அதன் விலையைக் கணக்கிட ஆரம்பித்திருந்தது.



தன் மனைவிக்கு தான் எடுத்துக் கொடுக்கும் அனைத்தும் தன் சொந்த உழைப்பில் வந்த வருமானத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக நின்றவன் நட்ராஜ் பணம் கொடுத்த போது தனக்கான தொகையை மட்டுமே வாங்கிக் கொண்டான்... அது மட்டும் இல்லாமல் தனக்கென்று உடை வாங்க கொடுத்த மொத்த பணத்தையும் வாங்காமல்… தான் தன் மனைவிக்கு வாங்கும் புடவையின் தொகையோடு கணக்கிட்டு… நிர்ணயம் செய்து வாங்கிக் கொண்டான்.


இந்த ஐந்து வருடங்களில் அவன் சம்பாதித்த பணம் ஓரளவு கணிசமாக இருந்த போதிலும்... தன் அன்னைக்கு உடம்பு சரி இல்லை என்று மருத்துவமனையில் இருந்த போது தானே செலவழிக்க வேண்டுமென்று தான் சம்பாதித்த முக்கால் வாசி பணத்தை செலவழித்தவன்…. மேலும் பணம் தேவைப் பட்ட போதுதான் வேறு வழி இன்றி அன்னையின் வங்கி கணக்கில் கைவைத்தான்.


அனைத்து செலவும் போக அவனது கணக்கில் சொற்ப தொகையே இருக்க... மாங்கல்யம் எடுக்க கால் பவுனில் எடுக்க முடிவு செய்தவன் புடவை முதல் மணமகன் வீட்டில் இருந்து மணமகளுக்கு செய்யும் அனைத்துக்கும் கணக்கு பார்த்துதான் புடவைக் கடைக்கு வந்திருந்தான் ரிஷி...


அவன் சொன்ன தொகைக்கேற்ப பட்டு புடவைகளை அவன் முன் போட ஆரம்பிக்க... ரிஷி பெரிதாகவெல்லாம் யோசிக்க வில்லை... தன் வருங்கால மனைவியை நினைத்து.. ரசித்து பார்த்து புடவை எடுக்கும் மன நிலையிலும் அவன் இல்லை... அவசர கோலமான திருமணம்... ஏன் என்று சரியாகவும் புரியவில்லை... மகிளாவுக்காகவா இல்லை அவனது குடும்ப சூழ்நிலைக்காகவா… பொறுமையாக முடிவெடுக்க முடியாத அளவுக்கு ஏன் இந்த மாதிரியான நிலை... மீண்டும் மீண்டும் நொந்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை... இப்படி மனம் முழுதும் பாரத்துடன் தன் திருமணம் நடக்கும் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை ரிஷி...


இதில் ஒரே நல்ல விஷயம் என்னவென்றால்…. இந்த நேரத்தில் மகிளாவை நினைக்கவில்லை அது மட்டுமே…. அதே நேரம் யாருக்காக புடவை எடுக்க வந்தானோ அவளையும் நினைக்கவில்லை என்பது வேறு விசயம்...


இங்கு அவன் இப்படி இருக்க... அவன் வீட்டிலோ ரிதன்யா, ரித்விகா இருவரும் மாறி மாறி அழுது துக்க வீடு போல் அனுஷ்டித்துக் கொண்டிருந்தனர்... இருவராலும் மகிளா இருந்த இடத்தில இன்னொரு பெண்ணை நினைத்துப் பார்க்க முடியவில்லை ... மகிளாவுக்கும் திருமணம் என்பதால் அந்தக் கவலை வேறு சூழ்ந்து கொள்ள... ரிதன்யாதான் இதில் பெரிதும் வருத்தமடைந்தது….


எப்படியாவது தன் அண்ணனிடம் பேசி இன்று மகிளாவை அழைத்து வந்து தங்கள் வீட்டு மருமகளாக்கி விடலாமென்று ரிதன்யா நினைத்திருக்க


காலையில் அடிபட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ரிஷியைப் பார்த்து பதற ... தனக்கு ஒன்று மில்லை என்று கூறி அவர்களை சில நொடி நிம்மதி அடைய வைத்தவன் அடுத்த நொடி தனக்கும் கண்மணிக்கும் இன்று திருமணம் என்றும் சொல்ல.... லட்சுமியே ஒரு நொடி ஆடித்தான் போனார் மகனது முடிவில்... லட்சுமியின் நிலையே அப்படி என்றால் அவன் தங்கைகள் நிலை எப்படி இருந்திருக்கும் ...


ரித்விகாவுக்கு கண்மணியைப் பிடிக்கும் தான் ஆனால் தன் அண்ணி என்ற அளவில் எதிர்பார்க்க வில்லை... தன் அண்ணன் சொன்ன போது அதை விரும்பவுமில்லை... கண்மணியைப் பிடித்த ரித்விகாவின் நிலையே இப்படி என்றால் ரிதன்யாவின் நிலை கேட்கவா வேண்டும்... பெரிதாக தன் அண்ணனை எதிர்க்க ஆரம்பித்தாள்... மகிளாவையும் முன் வைத்து பேச ... ரிஷியோ ரிதன்யாவிடம் பெரிதாக வாதாடவில்லை .. இது என் வாழ்க்கை ... என் முடிவு... என்று மட்டும் உறுதியாகச் சொல்ல


ரிதன்யாவால் அதற்கு மேல் வாதாட முடியவில்லை... அதே நேரம் தன் அண்ணனின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தவள் அவளையும் மீறி வார்த்தைகளை விட ஆரம்பித்தாள்... தன் அண்ணனை பற்றி பேச முடியாமல் கண்மணியை இழுத்தாள் ரிதன்யா


"கேவலம் இந்த சேரியில் வாழுகிற கண்மணி... உனக்கு மனைவியா… அண்ணா.. எங்களுக்கு அண்ணியா ... நம்ம வீட்டுக்கு வீட்டுக்கு மருமகளா.... நம்ம பரம்பரை என்ன... அதோட பெருமை என்ன...." என்று ஆக்ரோஷமானவள்… என்ன நினைத்தாளோ ... சட்டென்று தணிந்து...



"நீ மகிளாவை கூட மேரேஜ் பண்ண வேண்டாம்.. நாங்களும் வற்புறுத்தலை ... ஆனால் தயவுசெய்து கண்மணியை மேரேஜ் பண்ண வேண்டாம்ன்னா" கெஞ்ச ஆரம்பிக்க


தன் தங்கையிடம் எல்லாம் வாக்குவாதம் செய்ய வில்லை ரிஷி..


மாறாக தன் தாயிடம் மட்டுமே பேச ஆரம்பித்தான்...


"அம்மா எனக்கு ஒவ்வொருத்தவங்க கிட்டயும் எடுத்து சொல்ல டைம் இல்ல.. எப்போ அப்பா இறந்தாங்களோ அப்போதிருந்தே நான் எனக்காக எதையும் யோசிக்கலை எனக்காகன்னு எதை நினைத்திருந்தேனோ அதையும் விட்டுட்டேன்.. என்னோட ஒவ்வொரு முடிவுக்கும் பின்னால நீங்க… இவங்க ரெண்டு பெரும் மட்டும் தான்... உங்களை மையமா வைத்தே முடிவுகள் எடுப்பேன்... இப்போதும் அப்படித்தான்... " என்ற போதே


லட்சுமியும் பேச ஆரம்பித்தார்.. தட்டு தடுமாறி அவர் பேசிய வார்த்தைகளின் சாராம்சம் இதுதான்


ரிஷி கண்மணியை விரும்பி திருமணம் செய்ய வந்து கேட்டிருந்தால் லட்சுமி மனப்பூர்வமாக சம்மதம் சொல்லி இருப்பார்... ஆனால் மகன் சொல்வது தங்கள் குடும்ப நலனுக்காக என்பதுதான் அவரது கவலையாக இருக்க... ரிஷி எப்படியோ தன் அன்னையைத் தேற்றியவன் தங்கைகளை எல்லாம் சமாதானம் படுத்தவில்லை... முயலவில்லை என்பதை விட அதற்கு நேரம் இல்லை அவனுக்கு என்பதே உண்மை...


கோபத்துடன் நின்றிருந்த ரிதன்யாவிடம் அவனுடைய டெபிட் கார்டை மட்டும் எடுத்து வர சொல்லி... அதை வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டான் ரிஷி...


ரிதன்யாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை அப்படியே அமர்ந்து விட்டாள்... மகிளாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... மகிளாவுக்கு தான் ஒன்றுமே பண்ண முடியாத சூழ்நிலையில் இனியும் அவளைக் குழப்ப வேண்டாமென்று முடிவு செய்தவள்... அடுத்து என்ன செய்வது என்று வழி தெரியாமல் புரியாமல் அவள் செய்த ஒரே வேலை… தனது அலைபேசியை அணைத்து வைத்ததுதான்.


மகிளா வாழ்க்கை அதுதான் இனி என்பது போல ரிதன்யாவும் முடிவுக்கு வந்தவள் அடுத்து கவலைப்பட்டது தன் அண்ணனுக்காக மட்டுமே... தன் அண்ணனை நினைக்கும் போதே அவளுக்கு கண்களில் கண்ணீர் மல்கியது... வழிந்த கண்ணீரையும் நிறுத்த முடியவில்லை… தனக்காக யோசிக்கவில்லை உங்கள் மூவருக்காகவும் மட்டுமே யோசிக்கிறேன் என்ற தன் அண்ணனின் வார்த்தைகளில் தான் இவள் மிகப் பெரிய மன வலியை அனுபவித்தாள்...

மற்ற அனைத்து விஷயங்களிலும் புத்திசாலி தனமாக இருக்கும் நான்… பெண்ணாக சமையல் மற்றும் வீட்டு வேலையிலும் கருத்தாக இருந்திருந்தால் தன் அண்ணனுக்கு இந்த நிலைமை வந்திருக்காதோ…. அந்த எண்ணம் தந்த குற்ற உணர்ச்சியில் குறுகி ரிதன்யா அமர்ந்திருக்க...



ரித்விகா அவள் அருகில் வார்த்தைகளின்றி அமர்ந்திருந்தாள். வெளியே போனால் கண்மணியைப் பார்க்க நேரிடுமோ... அவளோடு பேசினால் தன் சகோதரி திட்டி விடுவாளோ என்று வெளியே கூட போக வில்லை...


இலட்சுமிக்கு மட்டும் எதோ ஒரு நம்பிக்கை தன் மகன் வாழ்க்கையில் ஒளி ஏற்படும் என்று... காரணம் கண்மணி... கண்டிப்பாக ரிஷியின் வாழ்க்கை அவளால் வீழாது… அவளின் பண்பட்ட நடவடிக்கை ரிஷியை மென்மேலும் உயர்த்தும் என்றே நம்பினார்...


அதன் விளைவு அவர் அமைதியாக இருந்து விட்டார்... அதே போல மகனுக்கு பெரிதாக விமரிசையாக திருமணம் நடக்க வில்லை என்றெல்லாம் கவலைப்படவில்லை... ரிஷியின் மாற்றங்கள் அவருக்குள்ளும் சில மாற்றங்களை ஏற்படுத்தி இருக்க... தன் மகனின் முடிவுகளை முழுமையாக ஏற்றுக் கொண்ட அன்னையாக மாறி இருந்தார் என்றே சொல்ல வேண்டும்...


அதனால் ரிதன்யாவையம் ரித்விகாவையும்… ரிஷியின் திருமண விழாவுக்கு தயாராகச் சொல்ல... ரித்விகா மனம் இல்லாமல் தன் அண்ணனின் திருமணத்திற்கு கிளம்ப ஆரம்பிக்க… ரிதன்யா இன்னும் அப்படியே தான் அமர்ந்திருந்தாள்... எண்ணம் எங்கும் குழப்பம் குழப்பம் மட்டுமே... அதில் தலை வலி வேறு வந்திருக்க... அப்போதுதான் அவள் மூளை ஒன்றை எடுத்துக் கொடுத்தது...


ஆம் அவள் ரிஷியிடம் கொடுத்த ரிஷியின் டெபிட் கார்டில்தான்… நேற்று அவளது தொலைதூர படிப்பிற்கான தொகையைக் கட்டி இருந்தாள்… இன்று சொல்லலாம் என்று நினைத்திருக்க… நடந்து முடிந்த களேபரத்தில் அதை மறந்து சொல்லாமல் அவனிடம் கார்டை மட்டுமே கொடுத்து விட்டிருந்தாள்… புடவை மாங்கல்யம் வாங்க என்று சொல்லித்தானே போனான்…பணத்துக்கு அண்ணன் என்ன செய்வான்



ரிதன்யா சட்டென்று நடப்புக்கு வந்தாள்... அதுவரை தன் அண்ணன் மேல் இருந்த கோபம் எல்லாம் போய்... வேகமாக தன் மொபைலை எடுத்து தன் அண்ணனுக்கு தொடர்பு கொள்ள நினைக்க... அண்ணன் மொபைல் தான் உடைந்து விட்டதே... கோபத்தில் கார்டில் பணம் இல்லையென்பது நினைவுக்கு வராமல் போய் விட்டதே என்று வருத்தப்பட ஆரம்பித்தவளுக்கு இப்போது தன் அண்ணனிடம் காசு இருக்குமா... என்று கவலை வந்திருக்க ...


இதெல்லாம் தெரியாமல் ரிஷி… கண்மணிக்கான புடவையை தேர்ந்தெடுத்துகொண்டு நட்ராஜ் இவனுக்காக கொடுத்திருந்த பணத்தில் தனக்கான திருமண உடையையும் எடுத்துக் கொண்டு… பில் கவுண்டரில் பணம் செலுத்த வந்தவன்... அனைத்துக்கும் பில் போட சொல்லி விட்டு கார்டை நீட்ட… போதுமான தொகை இல்லை என்ற செய்தி வர… அன்றைய தினத்தின் முதல் ஏமாற்றம் ரிஷிக்கு.... ஏமாற்றம் மட்டுமல்ல அவமானமும் கூடவே...


அதன் பின் குறைந்த பட்சம் பாதித் தொகைக்கு பில் போட்டுப் பார்க்கச் சொல்ல... அதுவும் இல்லை…. பில் போடுபவரின் முகத்திலும் இப்போது மெல்லிய எரிச்சல் படர்ந்திருந்தது.... காரணம் ரிஷி ஒவ்வொரு தொகையாக பார்க்கச் சொல்லி கேட்டுக் கொண்டிருக்க... மீண்டும் மீண்டும் ஏமாற்றமே… இன்றைய முதல் வியாபாரமே இப்படியா இருக்க வேண்டும் என்ற எரிச்சல் தான் அது...


கடைசியாக ஆயிரம் ரூபாய் மட்டுமே இருக்க... ரிஷி யோசனையில் முகம் சுருக்கினான்... அவன் கணக்குப்படி கிட்டத்தட்ட இருபத்து ஐந்தாயிரம் இருக்க வேண்டும் அவன் கணக்கில்... எங்கு எப்படி என்று யோசித்தபோது கடைசியாக ரிதன்யாவாவின் மருத்துவமனை செலவுக்காக உபயோகப்படுத்தினான்… அதன் பின் வேறு எந்த செலவுக்கும் பயன்படுத்தியதாக ஞாபகம் வர வில்லை ....


"என்ன சார்.. பில் போடலாமா" என்ற குரலில் தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தவன்… கலைந்து நிகழ்வுக்கு வந்தவனாக


இப்போது அதை பற்றி யோசித்து பிரயோஜனமில்லை... ரிதன்யாவிடம் கேட்டால் தெரிந்து விடும்.... என்று முடிவு செய்தவன்... இப்போதைய பிரச்சனைக்கு வந்தான்...


ஊழியரிடம் கேட்டான்…


“பில் எவ்ளோ… இது எல்லாம் சேர்த்து” -ரிஷி



"மொத்தமா பில் 8399 வருது... " - கடை ஊழியர்



யோசித்தான் ரிஷி... வீட்டுக்குப் போய் தன் அன்னையின் கார்டை எடுத்து வந்து வாங்கலாமா என்று....


முஹூர்த்தம் காலை 11:30 க்கு வேறு.. கடுப்பாக வந்தது ரிஷிக்கு.... என்ன செய்யலாம் .... கையில் இருக்கும் பணத்தை எண்ணிப் பார்க்க.... நட்ராஜ் கொடுத்த 5000 பணம் போக பர்சில் 1000 மட்டுமே இருக்க மனம் கணக்குப் பார்க்க ஆரம்பித்தது... கண்மணிக்காக முதன் முதலாக எடுத்த புடவையை மாற்ற மனம் வரவில்லை அவனுக்கு....


கண்மணியின் புடவை 6399 இவன் திருமண வேஷ்ட்டி 1000 மற்றும் சட்டை 1000...



”ஒரு நிமிடம்” என்றவன்.... அங்கிருந்து அகன்று வேஷ்டி பிரிவிற்கு சென்று... 300 ரூபாய்க்கு சாதாரண பட்டு வேஷ்டி எடுத்துக் கொண்டு சட்டையையும் 300 ரூபாய்க்கு மாற்றி எடுத்து வந்தவனுக்கு இப்போது கணக்கு சரியாகிவிட....பில் தொகையை கட்டி முடித்து விட்டு... வந்தவனின் கையில் மீதி ஒரு ரூபாய் மட்டுமே... அடுத்த பத்து நிமிடத்தில் இருவரின் திருமண ஆடைகள் அடங்கிய பை இருக்க... வெளியே வந்தவனுக்கு கண்மணிக்கு எடுத்த புடவையை மாற்றாமல் எடுத்து வந்ததை மட்டுமே திருப்தியாக உணர்ந்தான்.... முதன் முதலாக அவளுக்கு தான் எடுத்த புடவையைப் பணம் இல்லாத காரணத்தால் மாற்ற வேண்டிய சூழல் வந்து விடுமோ என்று தான் மனம் பரிதவித்திருந்தான்... அந்த பரிதவிப்பு இப்போது காணாமல் போய் நிம்மதி வந்திருந்தது...


அடுத்து தாலி வாங்க வேண்டும்... அதோடு திருமண மாலை முதல் சில மங்கல பொருட்கள் வேறு வாங்க வேண்டும்... கையில் சுத்தமாக பணம் இல்லை... வீட்டுக்கு போய்த்தான் வாங்கி வர வேண்டும்... மாங்கல்யம் என்பதால் இவன் தான் வாங்க வேண்டும் என்பதால் கண்மணி இல்லம் நோக்கி விரைந்தான் தன் இருசக்கர வாகனத்தில்... மணியைப் பார்க்க அப்போதே மணி 9:30... இரண்டு மணி நேரத்தில் முஹூர்த்தம் என்ற அவசரம் மட்டுமே மனதில் ஓட... தன் பைக்கின் வேகத்தை அதி வேகத்திற்கு உயர்த்த... அவன் நேரம்... சரியாக போக்குவரத்து காவலரிடம் மாட்டினான் ரிஷி...


கிட்டத்தட்ட அவன் ஏரியாவை நெருங்கும் நேரம் போக்குவரத்துக் காவலர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டிருந்தான் ரிஷி... ஒன்வேயில் வந்த காரணத்தால் ...


ரிஷிக்கும் தன் தவறு புரிய... அமைதியாக இறங்கியவன்… காவலர்களோடு வாக்குவாதம் எல்லாம் புரியவில்லை... அதே நேரம் அவனிடம் சுத்தமாகப் பணமும் இல்லையே... என்ன செய்வது என்று யோசித்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை... கையில் அலைபேசி இருந்திருந்தால் யாரையாவது அழைத்திருக்கலாம்... அதுவும் இல்லை... நல்ல வேளை ஏரியாவுக்குள் வந்து விட்டான்... நடந்து போனால் கூட அரை மணி நேரம் தான் ஆகும்… ஆனாலும் வீட்டுக்குப் போய் பணம் எடுத்து வந்து மற்ற பொருட்கள் எல்லாம் வாங்கி... நினைக்கும் போதே மனம் கவலையில் சுணங்க... கிட்டத்தட்ட... கிட்டத்தட்ட என்ன உண்மையிலேயே கையறு நிலையில் இருந்தான் ரிஷி...


ஆனாலும் ஏதாவது செய்ய வேண்டுமே… அதன் விளைவு



"சார் உங்க போன் ஒரு நிமிஷம் கொடுக்க முடியுமா... " என்று காவலரிடம் கேட்க...



கொஞ்சம் யோசித்த அந்த காவலர்… பின் அலைபேசியைக் கொடுக்க... ரிஷி யாரிடமோ பேசி விட்டு...



"என் பிரெண்ட் வந்துட்டு இருக்கான்... நானும் இந்த ஏரியாதான்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் சொன்ன அந்த மெக்கானிக் நண்பன் அங்கு வந்து சேர


"என்ன ஆர் கே என்ன ஏதும் ப்ராப்ளமா ... " என்று கேட்டபடியே தன் பைக்கில் இருந்து இறங்க


"மைக்கேல்... இவங்க கேட்கிற பணத்தை மட்டும் கொடுத்துட்டு வா... உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்.." எனும் போதே அந்த மெக்கானிக் நண்பன் குழப்பமான பாவத்துடனே பணத்தை கொடுக்க ...


ஃபைன் கட்டிய அடுத்த வினாடி பைக் கீ ரிஷியின் கையில் இடம் மாறி இருந்தது... அதன் பிறகு வண்டியை எடுத்தவன் நேராக அவன் நண்பனுடன் மெக்கானிக் ஷாப்பிற்கு விரைந்தான்...


----


நேரம் காலை 10 :30


மைக்கேல் வண்டியில் இருக்க... வண்டியை விட்டு இறங்கிய ரிஷி கண்மணி இல்லத்தின் முன் நின்றான்....


கடைசியாக கண்கள் வண்டியின் முன் இருந்த ’ஆர் கே’ என்ற எழுத்துக்களை ஏமாற்றத்துடன் பார்த்தன... கைகளோ அந்த பைக்கை ஆசையுடன் தழுவின இனி எப்போதும் பார்க்க மாட்டோம் என்ற நினைவில்


அதே நேரம்... பெருமையாகவும் இருந்தது… முதன் முதலாக தன் உழைப்பில் வாங்கிய பொருள்... இன்று தன் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வின் அங்கமாக மாறி இருந்தது.... என்பதை நினைத்து.


ஒரு கை அந்த பைக்கை தழுவி இருக்க மறுகையோ மாங்கல்யம் இருந்த பெட்டியை இறுகப் பற்றிக் கொண்டது...


"தேங்க்ஸ் டா மச்சான்.... வீடு வரை கூட்டிட்டு வந்து விட்டதுக்கு... " என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்க வில்லை...


ரிஷி உள்ளே போய் விட அவன் நண்பனோ... கண்மணிக்கும் ரிஷிக்கும் திருமணமா... இன்னும் நம்ப முடியாத பாவனையில் கண்மணி இல்லத்தை வெறித்துக் கொண்டிருந்தான்... ...


----



ரிஷி நினைவு தெரிந்த நாளில் இருந்து கடவுளை கல்லாக மட்டுமே பார்ப்பவன்... அதனால் கோவிலில் திருமணம் என்பதெல்லாம் அவனுக்கு பிடிக்க வில்லை... அவன் கடவுளாக நினைக்கும் அவன் அன்னை மற்றும் அவன் முதலாளி இருவர் போதும்.. அவர்கள் முன்னிலையில் தங்கள் திருமணம் நடந்தால் போதும் என்று நடராஜிடம் சொல்லி விட... கண்மணியும் அதை மறுக்கவில்லை...


அதே நேரம்


"அவளுக்கு தாய் இல்லை... ஆனால் தன் தாயாக நினைத்து அவள் சிறுவயதில் இருந்து வணங்கி வருவது அந்த ஏரியாவின் அம்மன் தான்.... அந்த அம்மன் சன்னிதானத்தில் திருமணம் நடக்கவில்லை என்றாலும்... சன்னிதானத்திற்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ள... ரிஷிக்கும் அதை மறுக்காத தோன்ற வில்லை... பெரிதாக இருவருக்கும் கருத்து மோதல்கள் வரவில்லை... இவன் சொல்வதை அவள் கேட்டுக் கொள்ள... அவள் சொல்வதை அவனும் கேட்டுக் கொண்டான்... இயல்பாகவே இருவரும் பொருந்தினரா... இல்லை... இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயன்றனரா…. தெரியவில்லை...


கண்மணி இல்லத்தில் நுழைந்த ரிஷி மணமகளுக்கான புடவை அடங்கிய பொருட்களை நடராஜிடம் கொடுத்து விட்டு தன் வீட்டுக்குள் நுழைய ரிதன்யா தன் அண்ணனிடம் ஓடோடி வந்தாள்...


"அண்ணா... கார்ட்... பணம்… ” என்று முதலில் பதட்டத்தில் உளறியவள்… பின் தன்னை நிலைப்படுத்தி…


“அதிலேருந்து நேத்து அமௌன்ட் எடுத்தேன்... அதை சொல்ல மறந்துட்டேன்..." என்க


"பரவாயில்லடா... நான் மேனேஜ் பண்ணிட்டேன்... என்றவன்... நீ போய் கண்மணிக்கு எதாவது ஹெல்ப் வேணுமான்னு கேட்டு பண்ணு ... நான் ரெடி ஆகிறேன்..." என்று தன் அன்னையை நோக்கிப் போக.... ரிதன்யா தன் அண்ணனைத் இப்போது தன்மையாக அழைத்தாள்..


அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று அனுமானிக்க முடியாதவனா ரிஷி...


அவனை அழைத்த ரிதன்யாவுக்கு பதில் கொடுக்காமல்…


"ரித்விகா... ” உள் அறையில் இருந்த ரித்விகாவை அழைக்க…


என்ன ஏதென்று புரியாமல் வந்த ரித்விகாவிடம்..


”உன் அண்ணிக்கு… கண்மணி அண்ணிக்கு…. ஹெல்ப் ஏதாவது வேணுமான்னு கேட்டு பண்ணு போ" என்று கட்டளை போல் சொல்ல….


அந்த குரலில் இருந்த தீவிரம் ரிதன்யாவுக்கும் அவளது அண்ணன் எடுத்த முடிவின் தீர்மானத்தை விளக்குவதாக இருக்க... ரிதன்யாவால் அதற்கு மேல் ரிஷியோடு பேச முடியவில்லை..


அதன் பிறகு ரிஷி... தன் அன்னையிடம் மாங்கல்யத்தைக் கொடுத்து விட்டு... அறைக்கு வந்தவன்... கட்டிலில் சாய்ந்து அமைதியாக கண்களை மூடி அமர்ந்து விட்டான்... வெறுமையான எண்ணங்கள் மட்டுமே...


’இன்று’ அவனது ’திருமண நாள்’..



ஆர்ப்பாட்டமில்லாத... ஆடம்பரம் இல்லாத ... ஒரு பத்து பேர் கூட இல்லாத .... தன் குடும்பமும்... நட்ராஜ் கண்மணி மட்டுமே பங்கு பெரும் ஒரு நிகழ்வு.... இந்த சூழ்நிலையை உள்வாங்கிக் கொள்ள… அதைக் கிரகித்துக் கொள்ள… அவனுக்கு… சில நிமிட தனிமை தேவைப்பட்டது….


அந்த சில நிமிட தனிமையில் மனம் அமைதி கொள்ள… பின் தன் திருமணத்திற்கு தயாராக ஆரம்பித்தான்… அதற்காக உடை மாற்ற ஆரம்பிக்கப் போக… அங்குதான் பிரச்னை உருவானது...


கல்லூரி இரண்டாம் ஆண்டு வரை அவனுக்கு வேஷ்டி கட்டும் நிகழ்ச்சிகள் ஏற்படவில்லை... அதன் பின்னர்... தந்தை மறைவுக்கு பின்னர் ... அவன் வாழ்ந்த வாழ்க்கையில்... ஏதோ உண்டு உடுத்தி வந்தவனுக்கு வேஷ்ட்டி கட்டி சந்தோஷப்பட்டு கொள்ளும் நிகழ்வுகளில் எல்லாம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.... வேலை வேலை மட்டுமே... அதாவது இங்கு சொல்ல வருவது என்னவென்றால் நம் நாயகன் ரிஷிக்கு வேஷ்ட்டி கட்ட தெரியவில்லை..



யாரிடம் உதவி கேட்பது அதுவும் ரிஷிக்கு தெரியவில்லை... தான் கட்டுவது சரியா அதைப் பார்த்து சொல்ல ஆள் இருந்தால் கூட போதும்... யாரைக் கூப்பிடலாம்… கையில் வேஷ்ட்டியை வைத்துக் கொண்டு விழித்துக் கொண்டிருந்தான் ரிஷி....


அப்போது திடிரென்று அவன் அறை கதவு தட்டப்பட.... வேஷ்டியை கையில் வைத்தபடி யோசனையுடனே ரிஷி திறக்க... அவன் முன் ஒரு சிறுவன்... ரிஷிக்கும் அவனைத் தெரியாமல் இல்லை... அதன் காரணமாக


"டேய் கோபி... நீ என்னடா இந்த பக்கம்... மணி அக்கா வீட்டு பக்கம் தானே சுத்துவ... " என்று நக்கலாக கேட்டான்..... வழக்கமான வம்பிழுக்கும் தொணியுடன்.... அது என்னமோ ரிஷிக்கு கோபிக்கும்... இந்த மாதிரியான வம்பிழுக்கும் உரையாடல்களே வழக்கமாகவே போய் விட்டது...


கோபி வழக்கம் போல... ரிஷியை முறைத்துப் பார்த்து விட்டு....


"எனக்கு மட்டும் ஆசையா என்ன ... எங்க மணி அக்காக்கு மேரேஜ்... அதுவும் உங்க கூடவாமே... மணி அக்காதான் உங்க ஆதார் கார்ட் வாங்கிட்டு வரச் சொன்னாங்க... ரெஜிஸ்டர் ஆபிஸ்ல பதியுறதுக்கு" கடுப்பாக சொல்ல...


ரிஷி முகத்திலோ ஒரே புன்னகை.... அன்றைய தினத்தின் முதல் புன்னகை... கோபியின் மூலம் வந்திருந்தது....


"டே... இதுதான் நேரம்கிறாதாடா.. உங்க அக்கா அன்னைக்கு சைலண்டா இருந்துட்டு... இன்னைக்கு உன்னை ஆதார் கார்ட் வாங்க அனுப்பி இருக்கான்னா.... உள்குத்து இருக்கும் போலவே…. அக்காவும் தம்பியும் ரொம்ப நாளா... இல்லையில்லை ரொம்ப வருஷமா காத்துட்டு இருந்துருப்பீங்க போல...." என்ற படியே தன் ஆதார் கார்டை அவனிடம் கொடுத்தவன்...


"கொஞ்சம் பார்த்து பத்திரமா கொண்டு வந்து சேர்த்திடுங்க கோபி சார்... " என்ற போதே...


"உங்களுக்கு பதினெட்டு வயது ஆகி இருச்சு தானே.... வோட்டர் கார்ட் இருக்கும் தானே... இது இல்லைனா அதை வச்சுக்கங்க" என்று சொல்லி முடிக்க வில்லை...


ரிஷி அவனைத் துரத்திக் கொண்டு போக... அதற்குள்... கோபி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்திருக்க.... ரிஷி தன் வீட்டு வாசலிலேயே அப்படியே நின்று விட்டான்...


அது மட்டும் இல்லாமல் வெளியில் இருந்த கூட்டத்தை பார்த்து விட்டு பிரமித்தும் விட்டான்...


காரணம் அந்த பகுதியின் மொத்த மக்களும் அங்கு குழுமி இருந்தனர்...


"மணி... அங்க பந்தல் போட்றலாம்.... மேடை இங்க இந்த மரத்தடியில போட்றலாம்... "


"மணி... தாயி நீ நல்லா இருக்கணும்... இந்த கையில தான் உன்னை முதன் முதலா வாங்கினேன்.... அப்போ தாயில்லாமல் கஷ்டப் பட போறேன்னு உன்னை நினைச்சு வருத்தமா இருந்துச்சு தாயி... உனக்கு தாயெல்லாம் தேவை இல்லை... சுயம்புனு நிரூபிச்சுட்ட ஆத்தா... " என்று சுற்றி போட்டுக் கொண்டிருந்தாள் ஒரு கிழவி அவன் வருங்கால மனைவிக்கு...


கண்மணியை அப்போதுதான் கவனித்தான் ரிஷி... முதன் முதலாக அவன் பார்வை அவள் முகத்தை விட்டு மாறி இருந்தது.... காலையில் கடையில் இருந்த புடவை.... சற்று முன் அவன் கைகளில் இருந்த புடவை .... இப்போது அவள் மேனியைத் தழுவி இருக்க... புடவைக்கு ஏற்றாற் போல ப்ளவுஸ் அவளிடம் எப்படி இருந்தது என்று இவனுக்கு தெரியவில்லை... அம்சமாக இருந்தாள் அந்த புடவையில்... நேர்த்தியாக அவள் கட்டி இருந்ததில்… அதன் விலையை விட அதன் மதிப்பை அவளுக்கு கூட்டிக் கொடுக்க... கூந்தலிலோ பின்னலின் நீளம் வரை மல்லிகைப்பூ சூடி இருந்தாள்... மற்றபடி மணமகளுக்கான வேறு எந்த பிரத்யோக அலங்கரமும் அவளிடம் இல்லை... மிக மிக சாதாரணமாக இருந்தாள் கண்மணி... அது மட்டும் இல்லாமல்... புடவையின் முந்தானையை இடுப்பில் சொருகியபடி... அங்கிருந்தவர்களுக்கு ஏதேதோ கடடளைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தளிடம் மணமகளுக்கான பாவங்கள் சுத்தமாக இல்லை.... கண்மணி முற்றிலும் வித்தியாமாகவே அவனுக்குத் தோன்ற....


மணமகளுக்கான இலக்கண இலக்கிய விதிகள் இன்றி முரணாக காட்சி அளித்தவளை.... அவனையுமறியாமல் விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருக்க...


வேலனும்... தினகரனும் அவன் அருகே வந்தனர்....



"ஆர் கே அண்ணாத்த.... அக்காவை சைட் அடிச்சது போதும்.... சீக்கிரம் கிளம்பி வாங்க... " என்று குறும்பாக கண் அடித்தவன்...


“ஆனாலும் அண்ணாத்த எங்ககிட்டயே மறச்சுட்டீங்க… ஹ்ம்ம்ம்” என்று அலுத்தும் கொள்ளத் தவறவில்லை…


"தல... பொண்ணுங்கதான் மண மேடைக்கு வர லேட் ஆகும்... இங்க தலை கீழா இருக்கு.... சீக்கிரம் ரெடி ஆகுங்க பாஸ்..." என்று தினகரனும் அவன் பங்குக்கு வாற...


முறைத்தவன்... இவர்களிடம் வேஷ்டி கட்ட உதவி கேட்டால்.... நாமே நம் மானத்தை கப்பலில் ஏற்றி விட்ட கதை ஆகி விடும்... தனக்குள் யோசித்து விட்டு.. பார்வையை அந்தக் கூட்டத்தை நோக்கி வெளியில் சுழற்றினான் ரிஷி... வேறு யாரையாவது அழைக்கலாமா என்று....


கூட்டத்தில் சல்லடை போட்டு தேட... ஒரு கணத்தில் அவன் பார்வை அவன் பாவையவளின் விழி நேர்க் கோட்டில் சிக்கிக் கொள்ள...


விழியை மீட்க முடியவில்லைதான் அவனாலும்... தவிர்க்க முடியவில்லைதான் அவளாலுமே…


இருவரின் பார்வையிலும்... காதல் இருந்ததா என்றால் அது இல்லை... ஆனால் அதையும் தாண்டி… இன்ன உணர்வு என்று அறுதியிட்டு சொல்ல முடியாத ஈர்ப்பு… ஒரு வகையான பிணைப்பு... ஜென்ம ஜென்மமாக தொடரும் பந்தம் இந்த ஜென்மத்திலும் அதன் இணையினைக் கண்ட முற்றுப் பெற்ற உணர்வாக… அந்த பார்வைகளின் சங்கமத்தில் இருக்க... கண்கள் காட்டிய உணர்வுகள் இதயத்துக்கு கடத்தப்படவில்லை இருவருக்கும்... அதனால் சாதரணமான பார்வைப் பறிமாற்றமாகவே அங்கு மாறி இருக்க…. இருவருமே அவர்களையும் மீறி மெல்லிய புன்னகையை படர விட்டுக் கொண்டனர் ஒருவருக்கொருவர்...



அப்போது கண்மணி அருகில் நின்றிருந்த தன் தந்தையிடம் அவனைப் பார்த்தவாறே ஏதோ சொல்ல... ரிஷி சட்டென்று தன் பார்வையை மாற்றியவன்.... கேசத்தைக் கோதியபடி சில நிமிடம் அங்கு நின்று தன்னை ஆசுவாசப்படுத்தியவனாக மீண்டும் அறைக்குள் வந்திருந்தான்…



இப்போது அவன் மனதில் வேறு ஒரு குழப்பம் வந்திருந்தது…. திடிரென்று எப்படி இப்படி ஒரு கூட்டம்… தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவனுக்கு… காரணம் மைக்கேல்…. என்று தெரியவில்லை அப்போது….


இத்தனைக் கூட்டமும் தனக்காக இல்லை என்று தெரியும்… ஆனால் நட்ராஜுக்காகவா…. இல்லை கண்மணிக்காகவா…


இதே கண்மணிக்கு வேறு இடத்தில் திருமணம் என்று இருந்தால்… வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்திருப்பான் ரிஷி… நட்ராஜனுக்காவா என்றால் கண்டிப்பாகச் சொல்லுவான்… இல்லை கண்மணிக்காக என்று… அவள் செய்த உதவிகள் எல்லாவற்றுக்கும் கைமாறாக என்று….


ஆக கேள்விக்கு பதில் கிடைத்தது…


பதில் கிடைத்த போது… முதன்முதலாக அவனுக்கு தகுதி என்பதையும் தாண்டி…. தனக்கான பொறுப்பு திடீரென்று உயர்ந்தது போல் தோன்ற… அவன் நரம்புகளில் சிலிர்ப்பு ஓடி அடங்கியது…


கண்மணியிடம் தனக்கான தகுதிகள் என்ன என்பதைக் காட்ட வேண்டும் என்று போன ஷணங்கள் வரை எண்ணி இருந்தவனுக்கு…. திடீரென்று… அவனிடம் விலை உயர்ந்த பொக்கிஷத்தை கொடுத்தது போன்ற உணர்வு அவனையும் மீறி ஆட்கொள்ள…


அதே நேரம் அர்ஜூனின் நினைவு வந்தது…


“என்னோட ப்ரின்சஸ்” அவனது வார்த்தைகளை நினைத்துப் பார்த்தவனுக்கு இளக்காரமாக இதழ் வளைந்தது…..


“பைத்தியக்காரன்… ஏற்கனவே இங்கு மகாராணியாக இருப்பவளை இளவரசியாக்குகிறானாம்… முட்டாள்…” என்று யோசித்தவனுக்கு தான் அவளை என்னவாக நினைக்கிறோம் என்ற எண்ணம் எல்லாம் வரவில்லை….


இப்போது மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம்…


“டேய் ரிஷி…. நீ இன்னும் வேஷ்டியே கட்டலையேடா…. இப்போ யாருடா…. “ என்று யொசித்தபடி வெளியே வர…


’நட்ராஜ்’- அவனது வருங்கால மாமனார் என்ற ஸ்தானத்தை விட அவனது நேற்றைய இன்றைய என்றைக்கும் முதலாளி… யாருமே அவன் மேல் வைக்காத நம்பிக்கையை வைத்திருப்பவர்…. தன் தந்தைக்கும் மேலே… குருவுக்கும் மேலே… இப்படிப்பட்ட ஒருவரை அவன் கண்ணில் காட்டியதற்கே அவன் விக்கிக்கு ஜென்ம ஜென்மத்துக்கும் கோவில் வைத்து கும்பிட வேண்டும்….


நட்ராஜ்… தயங்கியவாறே….உள்ளே வந்தவர்


“மெக்கானிக் மைக்கேல், ஏரியால எல்லார்கிட்டயும் சொல்லிட்டாரு ரிஷி… யாரையும் தவிர்க்க முடியலை… உனக்கு ஏதும் பிரச்சனை இல்லதானே….” சொல்லி முடிக்கும் வரை அவரது குரலில் இருந்த தயக்கம் குறையவில்லை…


ரிஷிக்கு நட்ராஜ் இன்னும் இன்னும் ஆச்சரியமே… நேற்று பார்த்தானே அவரின் ஆக்ரோஷத்தை…. அந்த முகத்தில் இத்தனை பவ்யமா… அதுவும் தனக்காக


கண்கள் கலங்கியது ரிஷிக்கு….


“சார்… இதெல்லாம் ஒரு மேட்டரா… என்கிட்டலாம் பெர்மிஷன் கேட்டுக்கிட்டு… இத்தனை வருஷம் உங்க கூட பயணம் செய்தவங்க… உங்களுக்கு ஒரு சந்தோஷமோ…. இல்லை வருத்தமோ… முதல்ல ஓடோடி வர்றவங்க இவங்கதான்… நானே எத்தனை தடவை பார்த்திருக்கேன்… இவங்க பிரச்சனையான்னு என்கிட்ட வந்து கேட்கறீங்க” என்றவனின் முக மலர்ச்சியான பதிலில்…


“உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லதானே மா… மாப்பிள்ளை” தட்டுத் தடுமாறிச் சொன்னவரிடம்…



”இவ்வளவு தயக்கம் ஏன் சார் தாராளமா மாப்பிள்ளைனு கூப்பிடுங்க…. ஆனால் நான் மாமான்னுலாம் சொல்ல மாட்டேன் சார்… நீங்க எப்போதுமே எனக்கு நட்ராஜ் சார்தான்…. என் குருதான்.... நீங்க… மாமான்ற உறவு என்னைக்காவது என் முதலாளி உணர்வை வின் பண்ணுச்சுனா அன்னைக்கு நானே என் அந்த உறவு முறையில் அழைப்பேன்” என்று ரிஷி சொல்ல…



“என் பொண்ணு உங்களுக்கு முக்கியம்னு வரும்போது அந்த உறவு முறை தானா வரும் ரிஷி உனக்கு” என்றார் உடனடி பதிலாக நட்ராஜும்… இதைச் சொன்ன போது அவர் குரலில் தயக்கமோ…. குழைவோ இல்லை… மிகவும் தீர்மானமாக குரல் உயர்த்திச் சொன்னார் என்றே சொல்ல வேண்டும்…



ரிஷியிடம் பேசியபடியே… மணியைப் பார்த்தவர்….



“கிளம்பலாமா மாப்பிள்ளை” என்று அழைக்க… தயங்கிய ரிஷியைப் பார்த்து…. அவன் தயக்கம் என்ன காரணம் என்று உணர்ந்து… சிரித்தவர்…


அவன் கையில் இருந்த வேஷ்டியைக் கையில் தன் கையில் வாங்கி…. எப்படி கட்ட வேண்டுமென்று கட்டிக் காண்பிக்க… சிறு வெட்கத்துடன்… ரிஷியும் கவனித்துக் கொண்டிருக்க….



“இந்த டெமோ இனிமேல் கட்டவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால்… இப்போ நானே ஹெல்ப் பண்றேன்…” என்று சொல்ல… அதன் பின்…. உலக வரலாற்றில்… உன்னதமான காவியம் அரங்கேறியது…. அதாவது மாமனார் மருமகனுக்கு வேஷ்டி கட்டிவிட்ட காவியம் அரங்கேறியது என்று சொல்ல வேண்டுமா என்ன?



அடுத்த சில நிமிடங்களில் நட்ராஜ் மற்றும் இலட்சுமி முன்னிலையில் அந்த ஏரியா மக்களின் ஆசிர்வாதங்களோடு ரிஷியும் கண்மணியும் கணவன் மனைவி என்ற உறவில் இணைந்தனர்…



“கங்கிராட்ஸ் அண்ணா…. கங்கிராட்ஸ்…. அக்… அண்ணி” என்று அந்த நிமிடத்தின் உற்சாகத்தில் ரித்விகா அவளையும் மீறி கத்தி தன் வாழ்த்தை தெரிவிக்க…. கண்மணி ரிஷியைப் பார்த்தாளோ இல்லையோ… தனக்கு வாழ்த்துச் சொன்ன ரித்விகாவை உரிமையுடன் தன்னை நோக்கி அழைக்க….



ரித்விகாவும் உடனடியாக அவளை நோக்கி போக முயல… ரிதன்யாவோ… தன் கையால் தன் தங்கையை யாரும் அறியாமல் இழுத்துப் பிடித்து அவளைக் கண்மணியின் அருகில் போகாமல் இருக்க வைக்க முயல… ரித்விகா அதை எல்லாம் உணரும் நிலையில் இல்லை…. தன் சகோதரியின் கைகளை அனிச்சையாகத் தட்டி விட்டு…. தன் அண்ணியின் கரங்களுக்குள் சரணடைந்தாள்….


அதன் பின்… மணமக்கள் இருவரும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி… ரிஷியின் தந்தை தனசேகர் புகைப்படத்தின் முன் நின்றும்…. கண்மணியின் தாய் பவித்ராவின் புகைப்படம் முன்பும் ஆசிர்வாதம் வாங்கி முடித்த போது…. மணி 1ஐத் தொட்டிருந்தது…


வழக்கமான திருமணம் போல அங்கு இல்லை… திருமணம் முடிந்தவுடன் ரிஷி ஒருபுறமும்… கண்மணி ஒருபுறமும் தனித்தனியாக விலகி வந்திருந்தனர்….


அங்கு வந்த மக்கள் கூட்டத்தைக் கண்மணி ஒருபுறமும்… ரிஷி ஒருபுறமும் தனித்தனியே கவனிக்க ஆரம்பிக்க… அனைவரும்… வெளியேறிச் சென்ற போது…. மணி நான்கு மணி….


எல்லாம் முடிந்து கண்மணியின் ஆசைக்கேற்ப…. அந்த ஏரியாவின் அம்மன் கோவிலுக்கும் செல்ல முடிவு செய்து அங்கு இருவரும் வந்த போதுதான்… கண்மணி ரிஷியைத் திருமணம் செய்த விபரம் அர்ஜூனுக்கும் நாரயண குருக்களுக்குமே தெரிய வந்தது….



….


கண்மணி அந்த ரிஷியைத் திருமணம் செய்து கொண்டாளா…


சத்தியமாக அர்ஜூன் இதை எதிர்பார்க்கவே இல்லை… கண்மணி கோபத்தோடுதான் போனாள் என்று மட்டுமே நினைத்திருந்தான்…. ஆனால் இப்படி ரிஷியைத் திருமணம் செய்வாள் என்று அவன் ஒரு துளி கூட நினைக்கவில்லை…


ஏன் நேற்று கூட இவனைப் போயா நான் காதலிப்பேன் என்று சொன்னவள் இன்று திருமணம் செய்திருக்கின்றால் என்றால்… அந்த நட்ராஜ் மட்டுமே காரணமாக இருக்கும்… அவன் தான் அவளை உணர்வு வாயிலாக அழுத்தம் கொடுத்து இந்தத் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்திருப்பார் என்று தோன்றியது அவனுக்கு… அது இன்னும் அவனுக்குள் ஆத்திரத்தைக் கூட்ட… ஆக்ரோஷமாக கோவிலை நோக்கி கிளம்ப… அவனைத் தொடர்ந்து நாரயண குருக்களும்…. வைதேகியும் கிளம்பியிருந்தனர்…



---


3,448 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page