அத்தியாயம் 27-1:
தன்னருகில் சிலையாக நின்றிருந்தவளை அர்ஜூன் இன்னும் அருகே அழைத்து தோளில் கை போட்டபடி… கண்மணியைப் பார்க்க… அவளுடைய பார்வையோ ரிஷியின்புறம் தரை தாழ்ந்திருந்தது…
அர்ஜூனின் மேல் கட்டுக்கடங்கா கோபம் அவளுக்குள் பொங்கிக் கொண்டிருந்தாலும்… அதைக்காட்டாமல்… ரிஷியிடம் அவன் நடந்து கொண்டிருக்கும் முட்டாள் தனத்தை எப்படி தடுத்து நிறுத்துவது என்று மட்டுமே யோசித்தாள்…
அதே நேரம் அர்ஜூனிடம் அவன் செய்த செயல்களுக்கான விளக்கங்கள் எதிர்பார்ப்பதோ இல்லை அவன் செய்த… செய்து கொண்டிருக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டி அவனோடு தர்க்கம் செய்வதோ அநாவசியம் என்று மட்டுமே தோன்றியது கண்மணிக்கு…
”அர்ஜூன் தயவு செய்து நீங்க பண்ணிட்டு இருக்கிற முட்டாள் தனத்தை நிறுத்துங்க… ப்ளீஸ்… நீங்க ஒரு அப்பாவிய தப்பா நெனச்சுட்டு தண்டிச்சுட்டு இருக்கீங்க”
கோபம் இருந்தாலும் அத்தனையையும் அடக்கியபடி… கெஞ்சல் குரலில் அர்ஜுனிடம் இறங்கித்தான் பேசினாள் கண்மணி…
“உன்னைக் கல்யாணம் பண்ணிக்க கேட்டானா… இல்லையா” கண்மணியின் கெஞ்சல் குரலில் எல்லாம் இவன் மசியவில்லை சற்றேறக்குறைய உச்சக் கட்ட கோபத்தின் அளவைத் தொட்டு வந்தான் அர்ஜூன்…
“ஆமாம்.. ஆனால் நீங்க நினைக்” என்ற போதே… அவளைப் பேசவிடாமல் நிறுத்தியவன்… முகம் இன்னும் இன்னும இறுக…
”இந்த நா…த் தூக்கி நிறுத்துங்கடா… நாய்னு கூடச் சொல்லக்கூடாது அதெல்லாம் நன்றி உள்ள ஜென்மங்க… நம்பி உள்ள விட்ட வீட்டுக்கு உண்டகம் பண்ணாதுங்க… கடைசி வரை தன் விசுவாசத்தைக் காட்டுங்க… இவனைச் சொல்லக்கூடாது… இவனை உள்ள விட்டானே அந்த ஆளைச் சொல்லனும்… ஒரு தடவை அனுபவிச்ச வலி” என்ற போதே கண்மணியின் தேகம் அவளையும் மீறி இலேசான நடுக்கத்தைக் கொண்டு வந்து இறுக ஆரம்பிக்க… அவளை அணைத்திருந்த கைகளில் அதை உணர்ந்த அர்ஜூன் சட்டென்று தன் வார்த்தைகளை நிறுத்தியவனாக…
“சாரிம்மா” என்றபடி… அந்த வார்த்தைகளை அப்படியே விட்டவன்… ரிஷியிடம் தன் கவனத்தைக் குவித்தான்… அதிலும் ரிஷி கண்மணியை எரிப்பது போல பார்த்ததைக் கவனித்தவன்… அங்கிருந்த அடியாட்களைச் சாடை செய்ய… அடுத்த நொடி… சற்று முன் ரிஷி கண்மணியைப் பார்த்த பார்வைக்கு பிரதி உபச்சாரம் அவன் கன்னங்களில் அந்த அடியாட்களால் வழங்கப்பட.. ரிஷியின் இரத்தம் கொப்பளித்து கண்மணியின் மேல் சிதறி நின்றது…
பணத்திமிர்… அதிகாரம் இவற்றின் உச்சக்கட்டமாக அர்ஜூன் இருக்க… கண்மணியும் தன் குரலை உயர்த்தினாள்…
“அர்ஜூன்… உங்க முட்டாள் தனத்தை நிறுத்தறேளா…”
அவள் குரல் அந்த வரவேற்பறை முழுக்கப் பட்டு எதிரொலித்து அடங்க… அதே நேரம் நாராயண குருக்கள்…அவள் குரல் கேட்டு வந்தாரோ… தானாகவே இறங்கி வந்தாரா தெரியவில்லை
”என்ன அர்ஜூன்… ஏன் கொழந்தையை பயப்பட வைக்கிற… கத்த வைக்கிற” கேட்ட தன் தாத்தாவின் வார்த்தைகளில் அதிர்ச்சி எல்லாம் இல்லை கண்மணிக்கு… அவரைப் பற்றி தெரியாதவளா என்ன… நட்ராஜை ஒரு காலத்தில் தன் மகளைக் காதலிக்கிறான் என்று ஓட ஓட விரட்டியவர் தானே இந்த நாராயண குருக்கள்… அவருக்கு இந்த அரட்டல் மிரட்டல் எல்லாம் புதிதா என்ன??? ஆச்சரியம் இல்லை கண்மணிக்கு…
“ஒண்ணுமில்லடா… அவனை உன்கிட்ட ஒரு சாரி கேட்க வைக்கத்தான்… சின்னதா ஒரு தட்டு தட்டச் சொன்னோம்” என்று சாதரணமாகத் தன் பேத்தியிடம் சொன்னவர் தன் பேரனிடம் திரும்பி
“அர்ஜூன்… இன்னும் இவனை இங்கு வைத்திருக்கிற… மன்னிப்பு கேட்க வச்சுட்டு அந்தப் பையனை சீக்கிறம் அனுப்பி வச்சுரு” வயதாகி விட்டது போல நாராயண குருக்களுக்கு… வயதுக்கு தகுந்த தன் பெருந்தன்மையைக்??? காட்டினார்…
“ஹ்ம்ம்..” என்று தன் தாத்தாவுக்கு எரிச்சலுடன்… பதில் கூறியவனாக… ரிஷியின் தாடையை பிடித்து கண்மணியின் முன் அவன் முகத்தைத் திருப்பியவன்…
”மன்னிப்புக் கேளுடா…” ரிஷியை கண்மணியிடம் மன்னிப்புக் கேட்க வற்புறுத்த
ரிஷியோ… வாயைத் திறக்காமல் கண்மணியையேப் பார்த்தபடி நின்றிருந்தான்… அர்ஜூனை விட கண்மணியின் மேல் தான் கோபமே என்பது போல
“என்னடா முறைக்கிற… இவ்ளோ தூரம் அடி வாங்கியும் அவளைப் பார்த்து முறைக்கிற… அவ யாருன்னு நெனச்ச.. அந்த சேரில இருக்கிற அந்த வீணாப்போனவன் பொண்ணுனு நெனச்சியா… எப்படி எப்படி… தொரைக்கு லவ் வந்து மேரேஜ் பண்ணிக்க கேட்கலையாமே… உன் வீட்டுக்கு வேலைக்காரியா… உன் அம்மாவுக்கு ஆயாவேலை பார்க்க கேட்டியாமே…”
கேட்டபடியே… ரிஷியின் கழுத்தை தன் கரங்களுக்கிடையில் பிடித்து இறுக்க ஆரம்பிக்க… அவன் பிடியின் அழுத்தம் தாங்காமல்… இரும ஆரம்பித்தான் ரிஷி…
இப்போது தன் பிடியைத் தளர்தியபடியே
“ராஸ்கல்.. என்னோட ப்ரின்சஸ் உன் வீட்டு வேலைக்காரியா வரணுமா… பில்லியனர் ஒரே வாரிசுடா… என்ன தைரியம் இருந்தா இப்படி கேட்ருப்ப… அந்த ஒண்ணத்துக்கும் உதவாத நட்ராஜோட பொண்ணுனுதானே நினைத்து கேட்ட… இப்போ கேளுடா… உனக்குத் தைரியம் இருந்தா… அன்னைக்கு கேட்ட அதே வார்த்தையைக் கேளுடா…”
இப்போது ரிஷி அர்ஜூனைப் பார்க்கவில்லை… இதழ் வளைத்து நக்கலாக கண்மணியைப் பார்த்துச் சிரித்தவன்… சிரிக்கக் கூட முடியவில்லை இருந்தும் சிரித்தபடியே கண்மணியின் கண்களையேப் பார்த்தபடி
“கண்மணி… என்னை பொறுத்தவரை… என் குடும்பத்துக்கு பொறுப்பான எல்லாம் தெரிஞ்ச பொண்ணுதான் வேண்டும்…. இன்னும் சொல்லப் போனால் எனக்கு பணமும் வேண்டும்… என்னை மேரேஜ் பண்ணிக்கிறியா… பில்லியனர் வாரிசு கண்மணி… எனக்கு இன்னும் வசதி…” என்று முடிக்கவில்லை… அர்ஜூன் விட்ட உதையில் தூரப் போய் கீழே விழுந்திருந்தான் ரிஷி… அடுத்தடுத்து அவனுக்கு கிடைத்த பரிசுகளில் மெல்ல மெல்ல மயங்கியும் போயிருந்தான்….
கண்மணிக்கு இன்னும் இன்னும் சிக்கலான நிலைதான்… ரிஷி இப்படிப் பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை அவள்… ரிஷியின் மேலும் கோபம் வர… அதைக் காட்டும் நிலையிலா இருக்கின்றான் அவன்… ரிஷியின் மேலுள்ள கோபத்தையும் சேர்த்து அர்ஜூனிடம் காட்டினாள் என்றே சொல்லவேண்டும்…
“ஸ்டாப் இட் அர்ஜூன்… இதுக்கும் மேல நீங்க பண்ற காரியத்தை எல்லாம் பார்த்துட்டு இருக்கிற முட்டாள் தனத்தை எல்லாம் என்னால பண்ண முடியாது… யாரைக் கேட்டு இதை எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க நான் வந்து உங்ககிட்ட அழுதேனா இல்லை பாட்டிகிட்ட தான் அழுதேனா… ப்ரப்போஸ் பண்ணினதைச் சொன்னேன்… இந்த அளவுக்கு நீங்க அரக்கத்தனமா நடப்பீங்கன்னு எதிர்பார்க்கலை நான்”
“பண்ணினான் தானே… “ மீண்டும் அதே கேள்வி… அர்ஜூன் கண்களில் கோபம் மட்டுமே தொக்கி நிற்க…
“ஆமா… ஏன்… அதுல என்ன தப்பு… நீங்க அமெரிக்காலதான இருக்கீங்க… இல்லை… ஏதாவது காட்டுவாசிங்க வசிக்கிற கண்டத்துல இருக்கீங்களா… இப்படி காட்டுமிராண்டித் தனமா நடந்துக்கறீங்க..” என்ற போதே அர்ஜூனுக்கு அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் கோபத்தை அதிகரித்து வெறி ஏற்றிக் கொண்டிருக்க… அவளிடம் ஒன்றும் பேசாமல் சற்று கையைத்தூக்கி யாரையோப் பார்த்து சொடக்கிட… அவனின் செயல்கள் புரியாமல் கண்மணி முகம் சுருக்கியவளாக… அவனை விட்டு தள்ளி நிற்கப் போக… போனவளை விடாமல் தன்னை நோக்கி இழுத்து நிறுத்தி இருந்தான்
இப்போது அர்ஜூனின் கரங்கள் அவள் தோளை விட்டு இறங்கி… இடையைத் தழுவியபடி… பெரிதாக அழுத்தம் இல்லாத… பாதுகாப்பே எனும் தோன்றும்படி அவளைத் தொட்டிருக்க… இருந்தும் அவனது நடவடிக்கையில் கண்மணி காயம் பட்டவளாக… அவனை நோக்கி பார்க்க…
புன் சிரிப்புடன் அவள் பார்வையை பக்கவாட்டுத் திசையில் தன் சுட்டு விரல்களால் திசைமாற்றினான்… ஏன் அவளை இழுத்து தன்னருகில் வைத்துக் கொண்டான் என்ற காரணத்தையும் புரியவைத்தான்
அங்கு…. உயர தர காவல் ஜாதி நாய்… பார்ப்பவர்களை மிரள வைக்கும் தோற்றத்துடன்… அழைத்து வரப்பட்டிருக்க… கண்மணியின் பார்வையில் அவளையுமறியாமல் மிரட்சி வந்து போக… அவள் காதருகில் கிசுகிசுத்தான் அர்ஜூன்…
“ஹீரோக்கு ஹீரோயினோட எல்லா பயமும் அத்துபடி..” என்ற போது அவன் கை அவள் இடையில் அழுந்தி அவளிடமே அவன் உரிமையைச் சொல்ல… கண்மணிக்கு அர்ஜூனின் நடவடிக்கைகள் எல்லாமே வரம்பு மீறியதாகவே பட்டது… இத்தனை வருடங்களில் அர்ஜூன் இன்றுதான் இப்படி நடக்கின்றான்… எல்லாம் தெரிந்தே நடந்து கொண்டிருக்கின்றான் என்று புரிய… அவன் தனக்குள் ஏதோ ஒரு முடிவெடுத்தபடிதான் வந்திருக்கின்றான் என்பது நன்றாகவேத் தெரிந்தது….
இத்தனை நாள் தன் வார்த்தைகளில்… செயல்களில் கண்ணியத்தைக் காட்டிய அர்ஜூன் இன்று யார் முன் தன் உரிமையைக் காட்ட நினைக்கிறான்… இதோ இந்த ரிஷிக்காகவா… அவனிடம் என் மீதான இவனுக்கு இருக்கும் என் உரிமையைக் காட்டி என்ன சாதிக்கப் போகிறான்…
அர்ஜூன் செயலின் பிடித்தமின்மையக் காட்டியவாறே…. அவன் கைகளை தன் இடையில் இருந்து விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தவளுக்கு… அப்போதுதான்… அவன் நாயைக் கூப்பிட்டது ஞாபகத்துக்கு வர... அவன் கையை விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தவளுக்கு அப்போதுதான் புரிய நடு மண்டையில் ஆணி அடித்தது உறைந்து நின்றாள்… ஆக நாயை அழைத்தது தன்னைப் பயமுறுத்த அல்ல… ரிஷியை…
“பயமுறுத்த மட்டுமா… இல்லை வேறு…“ சட்டென்று அர்ஜூனிடம் கையை தன்னை விட்டு விலக்கி நிமிர… அவள் எண்ணம் சரியே என்பது போல அந்த நாயும் ரிஷியை நோக்கித்தான் பாயத் தயாராகி இருக்க… நொடி நேரம் தான் அவளுக்கே அவள் வேகம் எதிர்பாராதாது… ரிஷியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே… ரிஷியின் அருகில் அவனை மறைத்தவாறு அவன் முன் நின்றிருக்க… அவள் மேல் பாயப்போன அந்த நாயை… கண்மணியின் வேகத்தை விட… இப்போது அர்ஜூன் ஓடி நிறுத்தி இருக்க… கண்மணி இப்போதும் கண்ணைத் திறக்கவில்லை
“முட்டாள்… உன் மேல பாஞ்சிருக்கும்டி… லூசாடி நீ” என்ற அர்ஜூனின் கோபம் கலந்த கத்தல் குரலில் மயங்கி இருந்த ரிஷி இப்போது மெல்ல மெல்ல மீண்டு சுயநினைவுக்கு வந்து கொண்டிருந்தான் ரிஷி… கண்களைத் திறக்க முயல அது முடியவில்லை… ஆனாலும் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுக்க பெரும் பிரயத்தனம் பட்டுக் கொண்டிருக்க…
அதே நேரம் ரிஷியை விட்டு விலக்கி கண்மணியை தன் முன் நிறுத்தியவனாக… தன் ஆட்காட்டி விரல் உயர்த்தி…. கோபத்தில் அர்ஜுன் ஏதோ பேசப் போக
“அவரை விட்ருங்க அர்ஜூன்… இதுக்குமேல உங்க கேவலமான நடவடிக்கையை காட்டுனீங்க” என்றவளின் கட்டளையில்
புருவம் சுருக்கினான் அர்ஜூன்
“என்னடி அவரு இவருனு இந்த தேர்ட் ரேட்டுக்கு மரியாதை…. “
பொறுமை பறந்தது கண்மணிக்கும்
”அர்ஜூன்… நீங்க ஏதோ மனசுல வச்சுக்கிட்டு… ஏதோ என்ன… எனக்கு நடந்த விசயங்களை இன்னும் மனசுல வச்சுகிட்டு அந்த கோபத்தை… யார் மேலயோ காட்ட வேண்டிய வன்மத்தை எல்லாம்… ரிஷி மேல காட்டிட்டு இருக்கீங்க… இவர் அப்பாவி “
“அப்டியா… “ நக்கலாக வார்த்தைகள் அர்ஜூனிடம் இருந்து வெளியில் வர…
“இந்த அப்பாவி இன்னைக்கு… வாய் இருக்குனு… வார்த்தைல கேட்பான்… நாளைக்கு கை இருக்குனு… உன் மேல கை வைப்பான்… அதுக்கப்புறம் தான் உனக்கும் தெரியும் அவன் அப்பாவியா அடப்பாவியானு… அப்போ நீ என்கிட்ட வந்து நிற்கிற வரை கையைக் கட்டிட்டு நிற்க சொல்றியாடி…”
எகிறினான் அர்ஜூனும் கோபத்தில் …
”கண்டபடி கற்பனை செஞ்சு உளறாதீங்க அர்ஜூன்… நீங்க யாரு… இதெல்லாம் பண்றதுக்கு… உங்ககிட்ட வந்து நின்னேனா நான்…“ கண்மணியும் தன் பொறுமையை முற்றிலுமாக இழக்க ஆரம்பித்திருந்தாள் என்றே சொல்ல வேண்டும்… அதனால் அவள் குரலும் உயர்ந்திருந்திருந்தது…
இப்போதுதான் ரிஷி உணர்ந்தான்… கண்மணி போய்ச் சொல்லவில்லை இவனிடம் என்பதை… ஆனாலும் முழுதாக சமாதானமாகி அவளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவனால்… இவனிடம் சொல்ல வில்லை…. தன்னைக் குற்றம் சாட்ட வில்லை… ஆனால் வேறு யாரிடமோ இவள் சொல்லப் போய்த்தானே இந்த அர்ஜூனுக்கு விசயம் போயிருக்கின்றது… அப்போதும் கண்மணியிடம் குறை மட்டுமே கண்டுபிடித்துக் கொண்டிருந்தது ரிஷியின் மனம்
”அவனுக்காக என்னை யார்னு கேட்கிறியா…” என்றவன் அங்கிருந்த புக் ஷெல்பில் இருந்து ஏதேதோ பேப்பர்களை எடுத்து வந்து அவள் முன் தூக்கி எறிய அது கண்மணியின் முகத்தில் பட்டு… அந்த அறை எங்கும் விரவ ஆரம்பித்திருக்க…
“என்னடி இதெல்லாம்… இந்த கட்டுரை எல்லாம் நீதானே எழுதின… பொண்ணுங்க மேல கையை வைக்கிறவங்க…. குழந்தைகளை காம வெறியோட தங்கள் இச்சைக்கு பயன்படுத்திகிறவங்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை எல்லாம் கொடுக்கனும்னு எழுதி வச்சுருக்கியே அதெல்லாம் கட்டுரைக்காக மட்டும் எழுதி வச்சதா… “
“யார் தப்பு பண்ணினாங்களோ அவங்களுக்கு அர்ஜூன்… ” என்ற போதே
’ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்… இந்த வார்த்தைகள்… மற்ற அநீதிகளுக்கு… காமுகர்களுக்கு பொருந்தாது… அவர்களில் ஒருவன் கூட தண்டனையில் இருந்து தப்பக்கூடாது…’
” ’ஃபீனிக்ஸ் பறவைகளாக நாங்கள்’ அந்தக் கட்டுரையில் நீதானே எழுதி இருக்க… இதோ இவனும் அதுல ஒருத்தவனா இருந்தால்…” கண்மணியின் முன் கேள்வி வைத்த போதே அவள் முகம் மாறிய விதம் தாங்காதவனாக…
“அவனுங்க என்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது கண்மணி… நாளைக்கு அவனுங்க ரிலீஸ்… அதுக்கபுறம் 8 மாதம் அங்கேயே ஐபிஎஸ் ஆபிசர் வீட்ல வேலை… அதுவரை என்னால ஒண்ணும் பண்ண முடியாது… ஆனால் அவங்க வெளிய வரும் போது… நாயை விட கேவலமா சாவானுங்க டா… “ அர்ஜூனின் குரல் தழுதழுத்த போதே….
”ப்ளீஸ்… “ கையெடுத்து கும்பிட்டவளாக… அதற்கு மேல் வேறெதுவும் கேட்க பிடிக்காதவளாக அந்த சூழ்நிலையை மாற்றும் முயற்சியில்… அர்ஜூனிடம் அதற்கு மேல் பேசாமல்.. ரிஷியின் அருகில் போய் அமர்ந்தவள்… அவனை எழுப்ப முயற்சிக்க… அர்ஜூனின் புருவங்கள் நெறிந்தன… அவளின் செய்கையில்…
”இவ்ளோ அக்கறையா அவன் மேல” அர்ஜூனின் காதல் தடமாற காரணமான வார்த்தைகள் அவனிடமிருந்து வெளி வர ஆரம்பித்திருந்தன அவனையும் மீறி… கண்மணி காட்டிய ரிஷியின் மீதான அக்கறையில்…
கண்மணி பார்வையாலேயே எரித்தாள் அர்ஜூனை… அவனை… அவன் வார்த்தைகளை… இருந்தும் அர்ஜூன்… அமைதி ஆக வில்லை… இவனுக்குப் போய் பாவம் பார்க்கின்றாளே என்ற ஆத்திரத்தில்…
“என்னை விட… அவன் உனக்கு முக்கியமா என்ன” மீண்டும் அழுத்திக் கேட்க…
“முக்கியமான்னு கேட்டீங்கன்னா… அது இல்லை… ஆனா அக்கறை இருக்கு” இவளும் அழுத்தமாகச் சொல்ல… புருவங்கள் நெறிந்தன அர்ஜூனுக்கு…
“ரிஷி ஒரு அப்பாவி… அவரோட குடும்பத்துக்கு அவர் மட்டுமே முக்கியனு உங்களுக்குத் தெரியுமா அர்ஜூன்… உண்மையைச் சொல்லப் போனால்… என் கிட்ட என்னை மேரேஜ் பண்ணிக்கிறியான்னு அவர் கேட்ட போது கூட எனக்கு கோபம் வரலை… ஏன் இப்போதும் கோபம் வரலை… உங்களுக்கு வந்த மாதிரி…” அர்ஜூன் இன்னும் இன்னுமே புரியாமல் பார்க்க…
“விளையாட்டா சின்னப் பையன் சொல்கிற மாதிரிதான் எனக்குத் தோணுச்சே தவிர… எனக்கு ரிஷி மேல கோபம் வரலை… கோபம்கிறது தனக்குத் தகுதியான ஒருத்தவங்ககிட்ட வரணும்… இல்லை தரம் தாழ்ந்தவங்ககிட்ட வரணும்… இது ரெண்டுமே ரிஷி இல்லை என்னும் போது எனக்கு எப்படி கோபம் வரும் அர்ஜூன்… ஆனால் நீங்க ரிஷியைப் போய் உங்களுக்கு சமமா நினைத்து கோபப்பட்டதுதான் எனக்கு ஆச்சரியம்” ரிஷியின் அருகில் அமர்ந்திருந்தபடியே தான் கண்மணி பேசிக் கொண்டிருந்தாள்
ரிஷிக்கு ஆதரவாக பேசுகிறோம் என்று நினைத்து… அவனை அடிமட்டத்திற்கு தள்ளிக் கொண்டிருந்தாள் கண்மணி அவள் வார்த்தைகளால்… அது உணராமல் பேசிக் கொண்டிருந்தாள் அர்ஜூனுக்கு அவன் செய்து கொண்டிருக்கும் புரிய வைக்க வேண்டும் என்று அந்த உணர்வோடு பேசிக் கொண்டிருந்தாள் கண்மணி…
இப்போது கண்மணியின் வார்த்தைகளில் அர்ஜூனின் முகம் இலேசாகத் தெளிவு பெற்றிருக்க… தன்னை சுற்றி இருந்த அனைவரையும் பார்வையாலேயே வெளியேறச் சொன்னவன்…
“தாத்தா… நீங்களும் போங்க…. உங்க பேத்திக்கும் எனக்கும் எனக்கு ரொம்ப நாளா ஒரு விசயம் இன்னும் இழுபறியிலேயே இருக்கு… அதை பேசிட்டு வந்துறேன்… அப்புறம் நாம நிதானமா மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்ணிறலாம்” என்ற போது…
“அர்ஜூன்… அந்தப் பையனை விட்ரு… கண்மணியே தெளிவா சொல்லிட்டாள்ளா… அவன் புள்ளப்பூச்சிதான்னு… இனி அநேகமா வாலாட்ட மாட்டான்னுதான் நினைக்கிறேன்…” என்றவர்
தன் தாத்தாவின் வார்த்தைகள் கண்மணியின் முகம் முழுவதும் செந்தழலை வாறி இறைத்திருக்க…அவளைப் பார்த்தபடியே
”கொழந்தகிட்ட அப்புறமா பேசிக்கலாம்டா….” என்று கண்மணி அருகில் போய்… வியர்வை பூத்திருந்த…. அவள் முகத்தை கையில் வைத்திருந்த கைத்துண்டால் துடைத்துவிட்டவரின் கைகளை வேகமாகக் கண்மணி தட்டிவிட…
அவளின் வேகமான அந்தச் செயலைப் பார்த்து… சிரித்தபடியே… இளகுவான குரலில் பேச ஆரம்பித்தான் அர்ஜூன்
“நீங்க போங்க தாத்தா… உங்க பேத்தி ரொம்ம்ப்ப கோபமா இருக்கா... பத்து நிமிசத்தில நாம எல்லோருமே இங்கிருந்து கிளம்பலாம்” என்று சொன்ன போது கூட அர்ஜூன் மனதில் வேறு எண்ணங்கள் இல்லை… என்றே சொல்லலாம்
அவர் அங்கிருந்து நகர…
“இப்போ எதுக்குடி உனக்கு இவ்வளவு கோபம்… அதெல்லாம் அவனை நாங்க பெருசா அடிக்கலை… வெளிக்காயம் மட்டும் தான்… ரெண்டு நாள்ள சரியாகிடும்…” அர்ஜூனுக்கும் இப்போது பெரிய கோபம் ஆக்ரோஷம் எல்லாம் இல்லை… இன்னும் சொல்லப் போனால்… உல்லாச மனநிலை தான் இப்போது அவனிடம் இருந்தது…
தன் ஆவேச பாவனை எல்லாம் அவனிடம் மாறி அந்த முகத்தில் இப்போது மொத்தமுமாக இருந்தது காதலனின் மனநிலையே… இதுவரை இருந்த காதலோடு இன்று உரிமையும் அவனிடம் கூடுதலாக ஒட்டிக் கொள்ள… அதை கண்மணியிடம் காட்டவே முயற்சித்தான்…
அதைவிட கண்மணியும் அதை உணர வேண்டும் என்று நினைத்தவன்… மயங்கிக் கிடந்த ரிஷியைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை என்பதை உறுதி செய்தவனாக…
“சொல்லு… நாம எப்போ மேரேஜ் பண்ணிக்கலாம்” என்றவனின் உரிமையுடன் கூடிய கரகரத்த குரல்… கண்மணியின் மீதான் காதலையும் மொத்தமாக கொண்டு வெளியே வர… கண்மணியின் பதிலுக்காகக் காத்திருந்தான் அர்ஜூன்…
கண்மணி ஏதோ பேச வர… அவள் சொல்ல வருவதை அவனாக உத்தேசித்து
“அந்த நட்ராஜை இழுக்காதா… எனக்குத் தெரியும் உனக்கு என் மேல இருக்கிற காதல்… நாம எப்போ மேரேஜ் பண்ணிக்கலாம்… அதை மட்டும் சொல்லு…”
கண்மணி இப்போது அவனை நேருக்கு நேராக அவனைப் பார்த்தாள்… அவளது கண்களில் இப்போது தெளிவு வந்திருந்தது…
காதல் என்ற உணர்வு சிறு மெல்லிய நூலிழைதான்… அந்த நூலிழை உணர்வுதான்… பிடித்தமில்லாத ஒருவனையும் அவனே மொத்தம் என காதலிக்கவும் வைக்கும் … மொத்தமாகப் பிடிக்கும் ஒருவனையும் வேண்டாம் என்று அடியோடு வெறுக்கவும் வைக்கும்
அந்த நூலிழை உணர்வை… தனக்கு சாதகமாக… கண்மணியிடம் கொண்டு வரமுடியாமல் போனதுதான் அர்ஜூனின் விதியாகிப் போனது… கண்மணி மீது காதல் கொண்ட போதிலும்… அந்தக் காதலில் தோற்றுப் போனான் அர்ஜூன்…
அவனையே வெறித்தபடி பேசினாள் கண்மணி… ஆனால் தெளிவோடு…
“இவ்ளோ நாள் நீங்க கேட்கும் போதெல்லாம் ஏன் என் அப்பாவைச் சொன்னேன்னு இப்போ வருத்தப்படுகிறேன்.. தேவையில்லாமல் அவரை இழுத்துட்டேனோன்னு வருத்தமா இருக்கு”
நெற்றிச் சுருக்கத்தோடு அர்ஜூன் கேள்வியோடு பார்க்க…
“ஒகே… உங்களை எனக்குப் பிடிக்கும் தான்… ஆனால் அது காதாலான்னு இத்தனை நாள் யோசிச்சுட்டு இருந்தேன்…” நிறுத்தியவள்…
“இப்போ அது ஏதும் இல்லைனு தெரிஞ்சுருச்சு… இன்னைக்கு அது புரிஞ்சுருச்சு… நீங்க காட்டின அக்கறை… அன்பு… நெருக்கம்… எதுவுமே என்னை… சந்தோஷப்படுத்தலை அர்ஜூன்…. அதுக்கு பதிலா… எனக்கு மூச்சு முட்டுது… என்னை ஃபோர்ஸ் பண்ற மாதிரி ஃபீல்.. தங்க கூண்டுல கிளி இருக்குமே அந்த மாதிரி உணர்வு… யாரும் கொடுக்காததை நான் கொடுக்கிறேன்னு… சொல்லி சொல்லிக் காட்டி அதைக் கொடுக்கிற மாதிரி உணர்வு… நான் மறக்க நினைக்கிறதை… எனக்கு மறுபடி மறுபடி ஞாபகப்படுத்துற மாதிரி வலிக்குது… நீ நட்ராஜ் பொண்ணுன்றதை மறக்க வைக்கிறேன்னு நீங்க சொல்லும் போதெல்லாம்… அது எனக்கான வார்த்தைகள் இல்லை… உங்களுக்குள்ள நீங்களே சொல்லிக்கிற மாதிரி எனக்குத் தோணுது… என்னோட அடையாளங்கள்… என்னோட வாழ்க்கைல நடந்த சம்பவங்கள் இது எல்லாம் உங்க மனசுல ஒரு ஓரத்துல உங்களை குத்திட்டே இருக்கு… அதை மறக்க உங்களால முடியலை… உங்களை நீங்க சமாதானப்படுத்த உங்களுக்குள்ளேயே நீங்க போராடிட்டு இருக்கீங்க… அதோட வெளிப்பாடுதான்… இது எல்லாமே… அதுதான் உண்மை… இது எப்போதுமே நமக்குள்ள அது பிரச்சனைதான்” என்ற போதே… அர்ஜூனி கை முஷ்டி இறுக…
“என்னடி உளர்ற” பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க…
“உளறல… எனக்கு உங்க மேல காதல் இல்லைனு சொன்னேன்… ”ஒற்றை வரியில் முடித்தவளின் முகத்தை ஆக்ரோஷமாக தன் முன் திருப்பினான்
‘இன்னொரு தடவை சொல்லு…”
பதில் சொல்லாமல் அலட்சியமாகத் திரும்பினாள் கண்மணி…
அவளின் அலட்சியம் இவனுக்கு ஆக்ரோசத்தை மட்டுமல்ல… அவன் காதலின் ஸ்திரத்தன்மையே சந்தேகப்பட்டு அவள் பேசியது அவனுக்குள் எரிமலையை வெடிக்க வைத்திருக்க…
“என் மேல காதல் இல்லைனு சொல்றியா… உன் மேலான என் காதலையே சந்தேகப்படுறியா” என்று தீர்க்கமாகக் கேட்டான்… அவள் முகத்தைப் பிடித்திருந்த கைகளின் இறுக்கமே அவன் கோபத்தின் அளவை சொன்னபோதும்… கண்மணி அமைதியாகவே அவனைப் பார்த்தாள்…
“ரெண்டுமே”… என்று அவன் கைகளை தளர்த்தி நகர்ந்தவளை… இப்போது தன் கைவளைவுக்குள் கொண்டு வந்து நிறுத்தி இருந்தான்… கிட்டத்தட்ட மொத்தமாக அவளை அணைத்திருந்தான் அர்ஜூன்…
இப்போது ரிஷி தன் சுய உணர்வுக்கு வந்திருக்க… எழ பிரயணத்தப்பட்டு முயல அவனால் அது முடியவில்லை… எழ என்ன தலையைக் கூட அவனால் உயர்த்த முடியாதபடி அப்படி ஒரு வலி… அதே நேரம் எழ முடியும் என்று உள்ளுணர்வும் அவனுக்குள் இருக்க… தனக்குள் அதற்கான வலிமையைத் திரட்டிக் கொண்டிருக்க…
”என் மேல காதல் வரலைனா… வேற யார் மேல வந்திருக்கு… இதோ இவன் மேலயா… பரிதாபம்… அக்கறைனு… கடைசியில காதலும் வந்திருச்சா”
கைநழுவிப் போகும் பொருளை கைப்பற்ற நினைக்கும் அவசரம் போல… அர்ஜூனும் நிதானம் தவறினான்… வார்த்தைகளை விட்டான்…
கண்மணி அவனைப் பார்த்து… அதிலும் அவன் அவனை ரிஷியோடு ஒப்புமைப்படுத்தி… பேச… இப்போது கண்மணிக்கு கோபம் வர வில்லை மாறாக சிரிப்புதான் வந்தது
”அர்ஜூன்… சத்தியமா இது நீங்கதானான்னு என்னால் நம்ப முடியலை… உங்க மேலேயே காதல் வரலை கத்தரிக்காய் வரலேன்னு சொல்றேன்… கிட்டத்தட்ட ஒரு பொண்ணு தனக்கு வர்றவன் இப்படித்தான் இருக்கனும்னு அத்தனை குணமும் இருக்கிற உங்கமேலேயே எனக்கு அந்தக் காதல் வராதப்போ… இந்த ரிஷி மேலே எல்லாம்… காமெடி பண்ணாதீங்க அர்ஜூன்…” என்று அவள் அர்ஜூனைக் எள்ளி நகையாடிக் கொண்டிருக்க…
அர்ஜூன் அவள் சிரிப்பில் முறைத்துக் கொண்டிருந்தான் என்றால்… ரிஷியோ கண்மணியின் வார்த்தைகளில் அவமானத்தில் கூனிக் குறுகிப் போனான்…அதே நேரம் அவன் எண்ணங்களில் மகிளாவும் வந்து போனாள் என்றே சொல்ல வேண்டும்…
”நீ மட்டுமே என் உலகம்… வேறெதுவும் வேண்டாம்” என்று தன்னை மட்டுமே நம்பி வந்தவளை உதாசீனப்படுத்தி அவளை அனுப்பி வைத்த தனக்கு இன்னொருத்தி தன்னை சிறுமையாக வைத்து பேசும் பேச்சுக்களை எல்லாம் கேட்கும் அவல நிலை தான் கிடைக்கும்… கிடைக்க வேண்டும்… இந்தத் தண்டனை தனக்குத் தேவைதான் என்று மனதோடு வெம்பிக் கொண்டிருந்தவனுக்கு… இத்தனை நாள் கண்மணி தனக்கு செய்த உதவிகள் எல்லாம் எந்த விதத்தில் என்று இன்று நன்றாகவேப் புரிந்தது… கிட்டத்தட்ட பிச்சைக்காரனை விட கீழாக தன்னை சிறுமையாக நினைத்திருக்கின்றாள் என்பது தெளிவாகப் புரிய… உதவிகள் புரிந்திருக்கின்றாள்தான் தன்னை எந்த நிலையில் நினைத்து உதவி செய்திருக்கின்றாள்… புரிந்த போது அந்த உதவிகள் அனைத்துமே அவமானச் சின்னங்களாகவே அவன் முன் வந்து நிற்க… சற்று முன் தனக்குள் வலிமையைக் கொண்டு வர முயற்சித்த முயற்சி எல்லாம் இந்த கீழ்மை உணர்வில்… அது தந்த அவமான உணர்வில் மொத்தமாக முடக்கியது போன்று உணர… எழ முடியாமல் அப்படியே தரையில் மீண்டும் படுத்து விட்டான் ரிஷி
”என்னடி… ரொம்ப தெளிவா பேசுறேன்னு நினைப்பா உனக்கு… இவன்கிட்ட காட்டின அக்கறையைக் கூட என்கிட்ட நீ காண்பிக்கலை… அதை வைத்து கேட்டா… என் மேலேயே காதல் இல்லைனு சொல்வியா நீ…” உணர்வுகளின் உச்சகட்ட கொதிநிலையில் இருந்தான் அர்ஜூன்…
கண்மணியின் வார்த்தைகள் ஒரே நேரத்தில் இரண்டு பேரின் மனதையும் கூறாக கிழித்துவிட்டிருந்தனவா என்றால் ’ஆம்’ என்றே சொல்லவேண்டும்…
ஒருவனுக்கு அவனை அவமானப்படுத்தி குன்ற வைத்தது என்றால்… இன்னொருவனுக்கு அவனை அவன் உணர்வுகளை உதாசீனப்படுத்தி… ஆக்ரோசம் கொள்ள வைத்தது
’அர்ஜூன் உணர வேண்டும்’ என்று வேண்டுமென்றே… கண்மணி வார்த்தைகளை விட்டாள்… அதனால் அர்ஜூனின் கோபம் எதிர்பார்த்ததுதான்… ஏற்றுக் கொண்டாள்.. இன்னொருவனின் மனதை அப்போது நினைக்கவில்லை கண்மணி… இந்த வார்த்தைகள் அவன் மனதை எந்த அளவுக்கு தாக்கி இருக்கின்றது என்பதை உணராமலேயே இங்கு அர்ஜூனோடு சொற்போர் நிகழ்த்திக் கொண்டிருந்தாள் கண்மணி…
“உன்னையே நினைத்து… இத்தனை வருசம் இந்தியா யூ எஸ்ஸுனு மாறி பறந்து வந்து பைத்தியக்காரன் மாதிரி சுத்திட்டு இருந்தவன் நான் கேனையனாடி”
பைத்தியக்காரனும்… கேனையனும் வேறு வேறு என்பது போல பைத்தியம் என்று சொன்னவனே… கேனையனா என்று கேள்வியும் கேட்டபோதே அர்ஜூனும் தன் நிலை மறக்க ஆரம்பித்திருந்தான் என்றே சொல்ல வேண்டும்… தவம் போல தான் கட்டிக் காத்த காதலின் ஆயுள் இன்னும் சில கணங்களே என்னும் உண்மை அறியாமல்… அவனுடைய உணர்ச்சி வசப்பட்ட காதலே… அவன் காதலை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கின்றது என்பதை அறியாமலேயே பேச ஆரம்பித்தான்…
”சோ காதல் உனக்கும் இல்லை… என்கிட்ட இருக்கிறதும் காதல் இல்லைனு முடிவு பண்ணிட்ட… ரொம்ப சந்தோஷம்…“ என்று அவளைத் தன்னிடமிருந்து தள்ளி விட்டவன்..
யோசிக்கும் பாவனையில் அவளையேப் பார்த்தவன்…
“காதலுக்கு அடுத்த கட்டம் என்ன… நாம அதுக்கே போயிறலாம்… நிதானமா நாம அப்புறம் பேசித் தீர்த்துக்கலாம்…” என்றவனை கண்மணி கொஞ்சம் கூட அச்சமின்றி பார்க்க…
தரையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த ரிஷிக்குத்தான் இப்போது தர்மசங்கடமான நிலை…
கண்மணி-அர்ஜூன் இருவரும்…. ரிஷி சுய உணர்வுக்கு வந்து விட்டான் என்பதை அறியாமலேயே பேசிக் கொண்டிருந்தனர்…
அர்ஜூன் கண்மணியின் நேர் கொண்ட அச்சமில்லா பார்வையைப் பார்த்தவன்…
”இப்போ கூட உனக்கு என் மேல பயம் வரலை தானே… நான் அத்துமீறூவேன்னு நினைக்கலைதானே இந்த நம்பிக்கைக்கு என்னடி அர்த்தம்…. இது காதல் இல்லையா… இல்லை உனக்கு புரியலையா” என்றபோதே
“இது உங்க மேல இருக்கிற நம்பிக்கை இல்லை… என் மேல எனக்கு இருக்கிற நம்பிக்கை… என்னை மீறி எதுவும் நடந்து விடாது… என்னை நானே காப்பாற்றிக்கிற தைரியம் எனக்கு இருக்கின்றதுன்ற நம்பிக்கை… நீங்க இல்லை இந்த இடத்தில யார் இருந்தாலும்… என்னை நான் காப்பாத்திக்க எனக்கு மனோ திடம் இருக்கும்”
“ஹ்ம்ம்… உன்கிட்ட நான் ஏன் ஃபோர்ஸ் பண்ணப் போறேன்… எனக்கான உரிமையை நான் ஐ மீன் என்னோட மனைவின்றதை… வேற மாதிரி இல்லை… சட்ட ரீதியா … இந்த உலகத்துக்கான அங்கீகாரத்தை கொடுத்து மாத்திக்கிறேன்… அதாவது தாலி கட்டி….” என்று அவளருகில் நெருங்கியவன்
”மெதுவா பார்த்துக்கலாம் காதல் இருக்கா இல்லையான்னு”
கண்மணி சிரித்தாள் இப்போது இன்னும் இன்னும் இகழ்ச்சியாக
”என்னடி சிரிக்கிற…”
“இல்லை… அமெரிக்க வளர்ப்பு அமிஞ்சிக்கரை தாண்டலை போல… நினைத்தேன்…. சிரித்தேன்… தாலி… அங்கீகாரம்… இதெல்லாம் என்னை உங்ககிட்ட தக்க வச்சுரும்னு நினைக்கிறீங்களா… “
அர்ஜூன் மெல்லிய புன்னகையை விடுத்தான்…
“செக் பண்ணிறாலாமா” என்றவன்… தன் தாத்தாவுக்கு போனை அடித்தான்……
”தாத்தா பாட்டியை இங்க வரவைங்க… அவங்ககிட்ட கொடுத்துட்டு வந்த தாலியையும் எடுத்துட்டு வரச் சொல்லுங்க …” என்றவன்…
“இவகிட்ட இனி பேசிப் பிரயோசனமில்லை சொன்ன அர்ஜூனைப் பார்த்து கண்மணி முறைக்கவில்லை…
“அர்ஜூன்… கொஞ்சம் நிதானமா…” என்றபடியே நாராயண குருக்களும் இப்போது அங்கு வந்திருக்க
போனை வைத்து விட்டு…
“ப்ச்ச்… அர்ஜூன்… இது என்ன பிகேவியர்… எடுத்தோம் கவிழ்த்தோம்னு பண்ற வேலை இல்லை… அந்தப் பையனை தட்டியாச்சுள்ள… இனி வீட்டுக்கு போய் நிதானமா அடுத்து நடக்க வேண்டியதைப் பேசுவோம்… கண்மணி எங்க போகப் போறா…”
அங்கிருந்த சுவற்றின் மேல் தன் கைகளைக் குத்தியவன்… தன் மொத்தக் கோபத்தையும் காட்டியவன்…
“என் மேல எந்த உணர்ச்சியுமே இல்லையாம் இவளுக்கு… என் கண்ணைப் பார்த்துச் சொல்றா தாத்தா… “ என்றவன் இப்போதும் கண்மணி அருகில் வந்து…
“உன் கண்ணுல என்னைப் பார்த்தால் வருகிற சந்தோசத்தை நான் பார்த்திருக்கேண்டி… என்கிட்டயே அதை மறைக்கிற நீ” என்றவனிடம்
“நானும் இல்லைனு சொல்லலை… ஏன் ரிஷிய இந்த மாதிரி நிலைமல போட்டோ அனுப்பி வைத்தபோது … வந்த வருத்தத்தை விட… அதுக்கு காரணம் நீங்களா இருக்கக் கூடாதுனுதான் என் மனசு துடிச்சுச்சு… எனக்கு உங்களைப் பிடிக்கும் அர்ஜூன்… இன்னும் சொல்லப் போனால்… என் அப்பா… தாத்தா பாட்டி… இவங்க எல்லார்கிட்டயும் பார்த்த முதல் பார்வையிலேயே எது ஏங்கி கிடைக்காம வருந்தினேனோ… அந்த பாசம்… உரிமை… இதெல்லாம் பார்த்த முதல் பார்வையிலேயே எனக்குக் கிடைத்தது உங்ககிட்ட மட்டும் தான்… ஏன் என்னை இவ்ளோ உரிமையா கூப்பிடுற உரிமைய நான் உங்களைத் தவிர யாருக்குமே கொடுத்தது இல்லை… ஆனால் இதெல்லாம் என்னால அனுபவிக்க முடியலை… என்னோட மனசு இதை எல்லாம் மீறி எதையோ எதிர்பார்க்குது அர்ஜூன்… அது என்னன்னு சொல்லத் தெரியலை… என்னையுமீறி நான் உங்ககிட்ட தேடித்தான் பார்த்தஏன்… ஆனால் “
என்றவள்… அவன் கண்களைப் பார்த்து…
“அது உங்ககிட்ட கிடைக்கவே இல்லை அர்ஜூன்… அதை மட்டும் சொல்ல முடியும்…” வெகுநாட்களாக தனக்குள் போராடிக் கொண்டிருந்த போராட்டத்தை முடித்து வைத்தவள் போல கண்மணிக்கு அவள் மனம் இலேசாக… அதை அவள் கண்களும் பிரதிபலிக்க… கண்மணியின் முகம் இன்னும் இன்னுமே தெளிவாக விகசித்தது
அதற்கு எதிர்மாறாக கருத்துப் போனது அர்ஜூனின் முகம்… கிட்டத்தட்ட இவனின் இத்தனை வருட காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல இருந்த கண்மணியின் பேச்சில்… இதற்கு மேலும் பொறுத்துப் போக அவன் என்ன முட்டாளா…
வேகமாக தனது தாய் தந்தைக்கு கால் செய்தான்…
“டாட்… இன்னும் அரைமணி நேரத்தில எனக்கு உங்க மருமகளோட மேரேஜ்… பையன் மேரேஜ பார்க்கனும்னு தோணுச்சுனா… வீடியோ கால்ல வாங்க” என்றவன்… அவருக்கு பேசக் கூட வாய்ப்பளிக்காமல் அழைப்பைத் துண்டித்தவன்… அதன் பின் அவரிடமிருந்து வந்த அழைப்பையும் கண்டு கொள்ள வில்லை…
உண்மையில் சொல்லப் போனால் அர்ஜூன் அவ்வளவு உச்சக்கட்ட பதட்டத்தில் இருந்தான்… கண்மணியைத் திருமணம் செய்து தன்னோடு அழைத்துப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வந்திருந்தான்… ஆனால் உடனே அல்ல… இந்த மாதிரி எல்லாம் யாருக்கும் தெரியாமல் எல்லாம் இல்லை…. அனைவருக்கும் தெரிந்தே…
நட்ராஜைக் கூட பேருக்கு நிறுத்தி விட்டு… திருமணம் முடிந்தவுடன் மொத்தமாக கழட்டிவிட்டு விடலாம் என்று நினைத்தே வந்திருந்தான்…. அவனால் நட்ராஜை ஏற்றுக்கொள்ளவே முடியாத பட்சத்தில் இந்த அளவுக்கே அவன் இறங்கியிருப்பது கண்மணிக்காக மட்டுமே… அவளைத் தன்னோடு வாழ்நாள் முழுக்க வைத்துக் கொள்வதற்காகவே மட்டுமே…
அப்படி இவன் வந்திருக்க… காதலே இல்லையாமா இவளுக்கு…. ரிஷி என்பவன் மீதெல்லாம் அவனுக்கிருந்த கோபம் வடிந்து போயிருக்க… அவன் மொத்த கோபமும் கண்மணியிடம் திரும்பியிருக்க… கண்மணியைப் பார்த்தான்
அவளிடமோ மருந்துக்கு கூட கலக்கமில்லை… அமைதியாக கைகளைக் கட்டியபடி சோபாவில் அமர்ந்திருந்தாள் இப்போது… இவனையே பார்த்தபடி… அர்ஜூனின் நடவடிக்கைகளை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க… அர்ஜூன்னுக்குத்தான் இன்னும் உள்ளுக்குள் எகிறிக் கொண்டிருந்தது கோபம் ஆழிப்பேரலையாக…
அதே நேரம்… கண்மணி கோபப்பட்டோ இல்லை நியாயம் கேட்பது போல கத்தி ஆர்ப்பாட்டமோ செய்ய வில்லை… சற்று முன் யாரோ ஒருவனுக்காக குரல் உயர்த்தி பேசியதைக் கூட அவளுக்காக அவள் பேசவில்லை ஆச்சரியமாகத்தான் இருந்தது அர்ஜூனுக்கு… கண்மணி என்பவள் மற்றவர்களுக்குத்தான் புரியாத புதிர்… தனக்கு இல்லை என்ற அகங்காரம் அவனுக்குள் அழிந்து கொண்டிருக்க… கண்மணியின் அமைதியை புரிந்து கொள்ள முடியாமல் அவளையேப் பார்க்க…
அர்ஜூனும் தன்னைப் பார்க்கின்றான் என்பதை உணர்ந்தவளாக... கண்மணி நிதானமாக பேச ஆரம்பித்தாள்…
“இவ்ளோ தூரம் ஆன பின்னால இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி தான் வைக்கவேண்டும்… ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்… நட்ராஜ் பொண்ணா… அர்ஜூன் மனை… “ என்று ஆரம்பித்தவள்… நிறுத்தியபடி
”நட்ராஜ் பொண்ணா என்னை ஜெயிச்சுருங்க அர்ஜூன்…. எப்போதுமே சொல்வீங்களே… அவன் பெரிய இவனா… பொண்ணைப் பாதுகாக்க தெரியாதவன்… பொண்ணோட அருமை தெரியாதவன்னு… என் அப்பாவை எவ்வளவு கேவலப்படுத்துவீங்க… நான் ஒண்ணே ஒண்ணு கேட்கிறேன்… அந்த லாயக்கில்லாதவனை… ஒண்ணுக்கும் உதவாதவனை நம்பித்தான்… ஒருத்தி… தன் மொத்த குடும்பத்தையே உதறித் தள்ளிட்டு வந்தா… அதை மறந்துட்டு நீங்க அத்தனை பேரும் பேசறீங்க…”
“ஏன் இதோ நிற்கிறாரே இந்த நாராயண குருக்கள் வீட்ல புகுந்து… அவரைத் தடுத்த அத்தனை பேரையும் ஒரே ஆளா சமாளிச்சு… என் அம்மாவைக் கூட்டிட்டு போயிருக்காரு… அவரு உங்களுக்கெல்லாம் மட்டமா போயிட்டாரு இன்னைக்கு… “ என்றவள்
”இன்னொரு தடவை இங்க யாராச்சும் என் அப்பாவை தப்பா பேசுனா… என்னை ஒழுங்கா பார்த்துக்கலைன்னு… அவரை குற்றம் சாட்டினால்” என்று சுட்டு விரல் காட்டி பத்திரம் காட்டியவள்…
“உண்மையச் சொல்லப் போனால் இங்க யாருக்குமே என் அப்பா முன்னால் நிற்கிறதுக்கு தகுதி இல்லை… இப்போ சொல்றேன் கேட்டுக்கங்க… என் அப்பாவை மீறி என் கிட்ட வாங்க அர்ஜூன்… அதுக்கப்புறம் உங்களுக்கு மனைவியா… மனைவியா என்ன… அடிமையா கூட நான் வாழறேன்…”
சொல்ல மட்டும் செய்யாமல் உஅடனே தன் தந்தைக்கு போன் செய்தாள்… அர்ஜூனும் தடுக்க வில்லை…
எதிர் முனையில் நட்ராஜோ…. இவள் போனை எடுத்த உடனேயே பதட்டமாக ஆரம்பித்தார்… மகள் வீட்டில் இருக்கின்றாள் என்ற எண்ணத்தில்…
“மணி… ரிஷித் தம்பி… “ என்று … ரிஷியை வெகு நேரமாகத் தொடர்புகொள்ள முடியாமல் போனதை மகளிடம் சொல்ல ஆரம்பிக்க
அவரை பேசாமல் தடுத்து தான் பேச ஆரம்பித்தாள்…
“அப்பா… நான் இங்க அர்ஜூன் கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கேன்… எனக்கும் அர்ஜூனுக்கும் இப்போ மேரேஜ்… முடிஞ்சா அதைத் தடுத்து என்னைக் கூட்டிட்டுப் போங்க” என்ற போதே நட்ராஜின் பாதி உயிர் போயிருக்க… அப்படியே அவர் உலகம் மீண்டும் ஒருமுறை நின்றது போல இருக்க… ரிஷியைப் பற்றிய கவலை எல்லாம் அடுத்ததாகப் போயிருக்க…
கண்மணி அவரின் அமைதியைக் கணக்கிட்டபடியே…
“எனக்கு சம்மதமில்லாமல்ப்பா… அம்மா வந்து அவங்களக் கூட்டிட்டுப் போங்கன்னு சொன்னவுடனேயே கூட்டிட்டு போனிங்கள்ள… இப்போ என்னைக் கூட்டிட்டு போங்கப்பா… நட்ராஜ்னா யார்னு இங்க இருக்கிற அத்தனை பேருக்கும் காட்டிட்டு என்னைக் கூட்டிட்டுப் போங்க” என்றவள் அர்ஜூனைப் பார்த்து முறைத்தபடியே தான் நட்ராஜிடம் பேசிக் கொண்டிருந்தாள்…
அவளின் வீர வசனம் எல்லாம் கண்டு அர்ஜூனும் மிரளவில்லை… கண்மணி பேசி முடித்த உடனேயே…
வெளியில் இருந்தவ அடி ஆட்களை அழைத்தவன்…
“இப்போ ஒரு வயசானவர் வருவார்… நானும் ரவுடிதான்னு… கொஞ்சம் துள்ளுவாரு… அடிச்சு வெளிய தூக்கி போட்ருங்க… ”
கண்மணி அர்ஜூனை எள்ளலாகப் பார்த்தபடி..…
“அர்ஜூன்… இது எனக்கும் உங்களுக்கும்… என் அப்பாவுக்கு உள்ள பிரச்சனை… ரிஷியை அனுப்பிருங்க… சம்பந்தமே இல்லாத இன்னொருத்தர் நமக்கிடையில வேண்டாம்… அட்லீஸ்ட் பண்ணின பாவத்துக்கு ஹாஸ்பிட்டல்லனாச்சும் அட்மிட் பண்ணுங்க ப்ளீஸ்” கண்மணி பேசிக் கொண்டிருக்கும் போதே…
அர்ஜூனோ…மறுப்பாகத் தலை அசைத்தான்…
“இவன் இருக்கட்டும்… இருக்கனும் இங்க… நம்ம மேரேஜுக்கு மூன்றாவது சாட்சி… வேண்டாமா… அது இவனாவே இருக்கட்டும்”
தன் ஆட்களில் ஒருவனை அழைத்தவன்
“டேய்… இவனுக்கு கொஞ்சம் ஃபர்ஸ்ட் எயிட் பண்ணுங்கடா… ஹாஸ்பிட்டல் போகிற வரை தாங்கனும்ல… பாவம் வலியில பயந்தே செத்துப் போகப் போகிறான்…”
ரிஷி முற்றிலும் தன்னிலைக்கு வந்தாலும்… அங்கு என்ன சுழ்நிலை இருக்கின்றது என்று உணர்ந்து கொண்டவனுக்கு… அர்ஜூன் பேசியவை எல்லாம் கேட்காமல் இல்லை… அவனை எதிர்த்து போராட ஏனோ தோன்றவில்லை…
கண்மணி - அர்ஜுன் – அவர்கள் திருமணம் பற்றி எல்லாம் கவலை எல்லை… கண்மணி இவர்களிடம் போராடிக் கொண்டிருப்பது போல் எல்லாம் தோன்றவில்லை…
ஆனால்… தன் முதலாளி… இவர்களிடம் தனியாக மாட்டிக் கொள்வாரோ… சட்டென்று மனம் பரபரக்க… வேகமாக எழ முயற்சித்தான் ரிஷி… கைகள் கட்டியிருந்த போதும்… உடல் வலி கொடுத்த போதும்…
அர்ஜூனின் கண்ணசைவில் அடி ஆட்கள் அவனை உட்கார வைக்க முயற்சி செய்ய… தட்டி விட…
கண்மணி இப்போது அருகில் போக… அவளை பார்வையாலேயே தள்ளி நிறுத்தினான் ரிஷி…
”என் பக்கத்தில வராத…” அவன் சொன்ன விதத்திலேயே கண்மணி அப்படியே நின்று விட்டாள்… அருகில் போக வில்லை
அர்ஜூன் ஒரு வித நக்கலுடனே தான் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்,,,
கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் ரிஷி அதைப் பிரிக்க முயற்சித்துக் கொண்டிருக்க… கண்மணி அதற்கு மேல் பேசவில்லை… அவன் அருகிலும் போக வில்லை
அமைதியாக மீண்டும் சோபாவில் அமர்ந்தவள்… ரிஷியை ஒரு வித வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்க…. அர்ஜூனுக்கு கண்மணியின் செய்கைகள் இன்னும் இன்னும் கடுப்பை ஏற்றினாலும்… எங்கோ ஒரு நிம்மதி… கண்மணி இவனை மீறி போவதற்கு முயற்சி செய்யவில்லை என்ற எண்ணத்தில் நிம்மதியே அது… ஒரு புறம் அவளையே பார்த்தபடி அமர்ந்திருக்க…
இதற்கிடையே ரிஷி இப்போது தன் கைகட்டுக்களைப் பிரித்தவன்… கஷ்டப்பட்டு தள்ளாடி எழுந்து நின்றவன்… அர்ஜூனிடம் வந்தவன்
”இதுக்கெல்லாம் கண்டிப்பா ஒருநாள் அனுபவிப்ப” என்று சொல்லி அர்ஜூனை மட்டுமே பார்த்தவன்… கண்மணியை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை…
அதே நேரம்… அங்கு நிற்காமல் வெளியேற எத்தனிக்க… வேகமாக அர்ஜூன் அவன் முன் வந்து நின்றவனாக….
‘இருங்க பாஸ்…ஆசிர்வாதம் பண்ணிட்டு போங்க…“ என்று தெனாவெட்டாக இளக்காரமாகப் பேசியவன்…
“அரைமணி நேரம் தான் எனக்கும் என் பிரின்சஸுக்கும் மேரேஜ் முடிஞ்சுரும்… நானே உங்களை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் ட்ரீட்மெண்ட் பண்றேன்… பண்ணின காரியத்துக்கு பரிகாரமா… அப்டினு சொல்றதை விட…”
கண்மணியைப் திரும்பிப் பார்த்து கண்சிமிட்டியவன்…
”என் வருங்கால மனைவிக்கு பிடிக்காத காரியத்தை பண்ணிட்டேனே… அதுவும் எங்க கல்யாண நாள் அன்னைக்கே… திருத்திக்கனும்தானே…”
இப்போது ரிஷி…
“நீ கொஞ்சம் அதிகமா ஆடுறேன்னு நினைக்கிறேன்… ப்ச்ச்… உன் வாழ்க்கை… ஆடிக்கோ… என் வாழ்க்கைல ஏற்கனவே ஆயிரத்தெட்டு பிரச்சனை… இதுல நீ வேற அனாவசியமா தலையிட்டுட்ட…. இப்போ உன்னை விட்டுட்டு போறேன்னா… என்னோட ப்ரையாரிட்டி நீ இல்லை… உனக்கு முன்னாலேயே… நான் யாருன்னு காட்றதுக்கு ஆளுங்க வரிசைலா நிற்கிறாங்க…அதுனால இப்போ நீ எனக்கு முக்கியம் இல்லை… ஆனால் அதுக்காக மறந்துருவேன்னு நினைக்காத… உனக்கான பதிலடி சீக்கிரம் கிடைக்கும்… கண்டிப்பா நடக்கும்… எனிவே” என்று நிறுத்தியவன்
நட்ராஜால் அர்ஜூனை எதிர்க்க முடியாது என்றே நினைத்தான் ரிஷி…
“கேவலம் உன் வீரத்தை வயதானவர்கிட்ட காட்டி ஜெயிக்கப் போற…. பெஸ்ட் ஆஃப் லக் மிஸ்டர் அண்ட் மிஸஸ்…” என்று நிறுத்தி கண்மணியைப் பார்த்தவன்… வலியில் பேச முடியவில்லை என்றாலும் பேசிக் கொண்டிருந்தான் ரிஷி
“நீதி தேவதைக்கு அடுத்தவங்க லைஃப்லதான் டெசிஷன் எடுக்க … நாட்டாமை வேலை பார்க்கத் தெரியுமோ… உனக்குனு வரும்போது… வேலை செய்யாதா… உங்க அப்பாவை எதுக்கு நடுவுல கொண்டு வர்ற… பிடிச்சிருந்ததுன்னா… சரின்னு சொல்லு… இல்லையா இல்லைனு சொல்லிட்டு வரனும்… அதை விட்டுட்டு… அப்பாவை ஜெயிக்கனும்… அர்னால்டை ஜெயிக்கனும்னு… ட்ராமட்டிக்கா சவால்”
உதடுகள் ஏளனத்தில் வளைந்தன… ரிஷிக்கு… அதே நேரம் இவள் சவாலால் தன் முதலாளிக்கு நேர இருக்கும் ஆபத்தையும் உணர்ந்தவனாக
“அவரால இவனுங்களை எல்லாம் சமாளிக்க முடியுமானு யோசிச்சியா” என்று கண்மணியிடம் இவன் எகிற ஆரம்பிக்கும் போதே….
வெளியே சத்தம்… நட்ராஜின் புல்லட் சத்தம்… வெகுநாட்களுக்குப் பிறகு அவர் எடுத்து வந்திருக்க…
கண்மணியின் முகம் மலர… ரிஷியின் முகமோ கவலையில் வாட… அர்ஜூனின் முகமோ கண்மணியின் முகத்தைக்காட்டிலும் பிரகாசத்தை கொண்டு வர ஆரம்பித்திருக்க… அது எல்லாமே சில நிமிடமே…
நட்ராஜுக்கு வெளியே இருந்தவர்கள் எல்லாம் துவம்சம் செய்ய சில நிமிடங்களே போதுமானதாக இருக்க… உள்ளேயும் வந்திருக்க… கண்மணியின் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை… எதிர்பார்த்ததுதான் என்பது போல அப்படியே இருக்க..
ரிஷி மற்றும் அர்ஜூன் இருவரும் தான் வியப்பில் விழி விரித்திருந்தனர்… முன்னவன் ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் விழி விரித்தான் என்றால்…பின்னவன் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் விழி விரித்திருந்தான்…
இதில் நாரயண குருக்களின் நிலைதான் அங்கு யாராலும் கணிக்க முடியாதது… அதில் என்ன இருந்தது என்றே யாராலும் உணர முடியாத பார்வை…
நட்ராஜ் அவருக்கு ஆச்சரியம் இல்லை… இந்த பலம்.. மிரட்டல்… சவால் இதெல்லாம் இன்று புதியதாகப் பார்ப்பவரா என்ன… தனது அதிகாராம், ஆள்பலம்… பணபலம் இதை எல்லாம் தூசு போல தட்டி விட்டு காதல் என்ற மாயவலை வீசி தனது மகளை தன்னிடமிருந்து பறித்தவன் தானே இந்த நட்ராஜ்…
கண்மணி இப்போது அர்ஜூனை நிமிர்ந்து வெற்றிப் புன்னகையோடு பார்க்க… அர்ஜூன் முகமோ சுருங்க… உள்ளே வந்த நட்ராஜுக்கு அர்ஜூனோ கண்மணியோ கண்ணில் படவில்லை… காயங்களுடன் நின்ற ரிஷிதான் முதலில் கண்களில் பட… அவன் முன் தான் முதலில் போய் நின்றார்…
“ரிஷி.. என்.. என்னப்பா ஆச்சு” ஒன்றும் புரியாதவராக அவனின் காயங்களை கண்டு… அதில் வழிந்த குருதியைக் கண்டு பரிதவித்தவராக நிற்க….
கண்மணி அர்ஜூனிடம் மகளுக்கான பெருமையுடன்
“இப்போ நான் போகலாமா அர்ஜூன்… என் அப்பா மேல இருந்த சந்தேகம்லாம் போயிருச்சா என்ன… இந்த உலகத்தில நீ ஒருத்தன் மட்டுமே என்னை காப்பாற்ற வந்த இரட்சகன்ற நினைப்பு இனி இருக்காதுதானே” என்று தன் தந்தையின் அருகில் போய் நிற்க…
நட்ராஜுக்கு என்ன ஏதென்று சரியாக முழுவதுமாக புரியவில்லை தான்… அர்ஜூன் கண்மணிக்கு இடையே இருக்கும் பிரச்சனை என்னவென்று ஓரளவு ஊகிக்க முடிந்தவருக்கு ஏனோ ரிஷி இங்கு எப்படி?? அதிலும் அடிபட்ட விதம் வேறு… காரணத்தை கணிக்கவே முடியவில்லை..
அதே நேரம்… தன் மகள் அந்த அர்ஜூனிடம் சொன்ன வார்த்தைகள்… இதுநாள் வரை தான் எதை எண்ணி கவலையில் மருகி இருந்தாரோ அந்தக் கவலை மகள் வார்த்தைகளைக் கேட்ட நொடியில் காற்றில் கரைந்த கற்பூரம் போல் காணாமல் போயிருக்க… அவருக்குள் இன்னும் கூடுதல் பலம் வந்திருந்தது போல் தான் உணர்ந்தார் நட்ராஜ்…
அர்ஜூன் இப்போது பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்…
“ஹ்ம்ம்.. உன் அப்பா பெரிய பயில்வான் தான்… என்ன இந்த பலத்தை எல்லாம் என்னை மாதிரி ஒருத்தன் கிட்ட காட்டினதை… அவர்கிட்ட வேலை பார்த்த பார்க்கிற நாய்ங்ககிட்ட காட்டிருக்கலாம்… அந்த பயம் இல்லாததுனாலதான் தெருவுல இருக்க வேண்டியதெல்லாம் நடுக்கூடத்துக்கு வந்துருச்சு..” அர்ஜூன் ரிஷியைச் சொல்லவில்லைதான்… ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலைக்கு ரிஷிக்குதான் அது அது பொருத்தம் என்பதை போல் தான் இருந்தது அவனின் வார்த்தைகள்…
ரிஷியின் கண்கள் முதல் முறையாக இடுங்கின அர்ஜூனைப் பார்த்து நேருக்கு நேராக… அதே நேரம் அவன் மனதும் குற்ற உணர்ச்சியில் குத்தாமல் இல்லை… நட்ராஜ் தன்னை எவ்வளவு தூரம் நம்பியிருப்பார்… அந்த நம்பிக்கையில் தான் அவர் தன்னை அவர் வீடு வரைக்கும் அனுமதித்து இருந்திருப்பார்… ஆனால் தான் செய்தது என்ன… தீவிரமாக இல்லாவிட்டாலும் அவர் மகளிடம் கேட்ட வார்த்தைகள் தவறுதானே… நம்பிக்கை துரோகம் தானே… மனசாட்சி சுட… அர்ஜூன் வார்த்தைகளின் அடி ஆழத்தில் இருந்த உண்மை… அர்ஜூன் மேல் வந்த கோபம் தன் மேலேயே தன் மீதே திரும்பியிருந்தாற்ப் போல இருந்தது…
இப்படி ரிஷி குற்ற உணர்வில் நின்று கொண்டிருக்க.. அர்ஜூனோ நட்ராஜ் முன் வந்தான்…இயல்பாக பேச ஆரம்பித்தான்… கண்மணியின் கரம் பற்றியபடியே….
”எனக்கும் உன் பொண்ணுக்கும் மேரேஜ்… உன்கிட்ட எனக்கு சொல்ல இஷ்டமில்லைதான்… அதே நேரம் உன் பொண்ணுக்கு அப்பான்றதை நிரூபிச்சுட்ட… அதுனால வேறு வழியில்லை… அட்சதை போட்றதுக்கு மட்டும் நின்னுட்டு போ“ என்றான் போனால் போகிறதென்ற தொணியில்… மிக மிக அலட்சியமாக…
கண்மணி அர்ஜூனை கொலை வெறியோடு முறைக்க… ரிஷியோ மூவரையும் வேடிக்கை மட்டுமே பார்த்தான்… அதே நேரம் நட்ராஜின் நடவடிக்கை என்ன… என்பதில் மட்டுமே அவனது முழுக்கவனமும் இருந்தது…
”என்ன முறைக்கிற… உன் அப்பா சம்மதம் தானே கேட்கிறேன் போதுமா… “ என்றவன்…
இப்போதும் நட்ராஜை மனிதனாக நினைக்கவில்லை தான் அதே நேரம்… தனக்கும் கண்மணிக்கும் இடையில் இருக்கும் சிறு பிரச்சனை நட்ராஜ் எனும் போது… அதை இனி வளர்க்க விரும்பவில்லை… நடராஜின் மகள் என்னும் அடையாளம் தங்கள் திருமணம் முடிந்தபின் முற்றிலுமாக மாறி விடும் எனும் போது… நட்ராஜை இன்னும் தங்களுக்குள் பிரச்சனையாக வைத்திருக்க விரும்பவில்லை… நட்ராஜின் நிழல் அடையாளம் கூட இல்லாமல் தான் கண்மணியோடு வாழ விரும்பினான் அர்ஜூன்… இப்போதும் விரும்புகிறான்… ஆனால்… இனி அது முடியாது என்று தோன்றவே… தன் மனம் விரும்பியவளுக்காக… முதன் முதலாக தனக்குப் பிடிக்காததைச் செய்ய முன் வந்தான் அர்ஜூன்…
என்ன செய்ய… காலம் கடந்த ஞானதோயம்… அர்ஜூனுக்குப் புரிய வைத்தன நட்ராஜ் சொன்ன வார்த்தைகள்…
-----
கிட்டத்தட்ட இரவு பதினோரு மணி… கும்மிருட்டும் நிசப்தமும் சூழ்ந்த அந்த வட இந்திய சிறைவளாகத்தின் சிறு அறையில் இரு குரல்கள் நிசப்தத்தை கிழித்து தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தது…
“டேய் அடுத்து நாம என்ன பண்ணப் போகிறோம்… இங்கேயே டேரா போட்றலாமா … இல்லை சென்னை போகலாமா” என்று கேட்டது ஒரு குரல்….
“ஏன் இன்னும் ஏதாவது செய்ய வச்சு இங்கேயே என் கதையை முடிக்கவா… உன்னை…” என்ற போதே…
அதைக் கேட்ட இன்னொரு குரல் இப்போது தனக்குள் முணங்கியபடி அமைதியாக….
“சென்னைக்குப் போகனும்டா… “ சுவரில் தன் கை முஷ்டியைக் குத்தியவனைப் பார்த்து…
“நம்மள மாட்டி விட்டவனைக் கண்டுபிடிச்சு பழி வாங்கப் போறியா என்ன… அந்த ரிஷியை பழி வாங்குறதுன்னா கொலை கிலை பண்ணித் தொலச்சுறாத மருது… அவனோட மொபைல்ல நாம பார்த்தோமே அந்த 3 புள்ளங்க… அவன் தங்கச்சிங்கதானே… அதுல ஒண்ணைத் தூக்கு… அவனை பழிக்கு வழி வாங்கின மாதிரியும் இருக்கும்…அப்டியே நமக்கும்” என்று பல்லை இளிக்க…
இப்போது மருதுவின் கை முஷ்டிகள் சுவரைத் தகர்க்கவில்லை மாறாக… எதிரில் இருந்தவனின் கன்னங்களைத்தான் பதம் பார்த்தன…
“ஆ” வென்று அதிர்ச்சியுடன் பார்க்க…
“உன்னால 5 வருசம் போச்சேன்னு நானே ஃபீல் பண்ணிக்கினு இருக்கேன்… இன்னும் என்னை வேற திசையில திருப்பப் பார்க்கிறியா… அவன் கெடக்குறான்… அந்த ரிஷி எனக்கு முக்கியமில்லை… ஆனா கண்டிப்பா மாட்டுவான்… அப்போ பார்த்துக்கலாம்… அவனை விட… எனக்கு முக்கியமான விசயம் இருக்கு” என்றபோதே
இப்போது அந்த மற்றொருவன்… தன் கன்னத்தைச் சரி செய்தபடியே…
”ஹ்ம்க்கும்… அந்த மணியா” என்றவாறே நக்கலாகக் கேட்க…
“ஏண்டா அவளை விட்டுத் தொலைய மாட்டியா என்ன… இந்நேரம் அதெல்லாம் கல்யாணம் பண்ணிட்டு ஏரியாவை விட்டே போயிருக்கும்…”
“எவன் கூட போனாலும்… அவ எனக்கு அடிமையா வேணும்டா… நான் என்ன சொன்னாலும்… மருது மாமா மருது மாமான்னு என் பின்னால அன்னைக்கு அலைந்த மாதிரி… இனிமேலும்.. எப்போதும் என் கூடவே நான் சொன்ன சொல்லுக்கு மறு வார்த்தை பேசாத மணியா…. சாகிற வரை எனக்கு சேவகம் பண்ண வைக்கனும்டா… ஒரு தடவையோட விட்றலாம்னு அன்னைக்கு” என்றவன்… நிறுத்திவிட்டு
“இனி அவ வாழ்நாள் பூரா என் பேச்சை மட்டும் தான் கேட்கணும்… என் அடிமையாத்தான் இருக்கனும் “
முறைத்தான்…
“உனக்கே இது ஓவரா தெரியலை… உன் வயசென்ன என்ன இப்போ… வாழ்நாள் பூரான்னா… உனக்கு என்ன பைத்தியாமா என்ன”
”அதெல்லாம் விடு அப்போ அவ விபரம் தெரியாத சின்னப் புள்ள… நீ என்ன சொன்னாலும் கேட்டுச்சு… இப்போ நீ சொல்றதெல்லாம் நல்லா கேட்கும்டா… சாக்லெட் கொடுத்தே கவர் பண்ணின ட்ரிக்லாம் இன்னுமா யூஸ் பண்ணலாம்னு நினைக்கிற…” நக்கலாகக் கேட்க…
மருது சிரித்தான்… சிரித்தான்… சிரித்துக் கொண்டே இருந்தான்… அவனது சிரிப்புச் சத்தம் அதிகமாக அதிகமாக… வேகமாக அவ வாயைப் பொத்தியவன் அவன் நண்பன்…
”இப்போதாண்டா சொல்லிட்டு போனாங்க… நாளைக்கு நமக்கு விடுதலைனு… இப்படி சிரிச்சு… இன்னும் ரெண்டு மூணு மாசத்தை இங்கேயே ஓட்ட வச்சுறாதாடா…”
தன் வாயைப் பொத்தி இருந்த அவன் கரங்களை எடுத்த மருது
“அந்த மணியோட வீக்னஸ் என்னன்னு எனக்கு மட்டும் தாண்டா தெரியும்… “ என்றவனின் கண்களில் இப்போதும் கண்மணி… சிறுமியாகவே கற்பனையில் தெரிந்தாள்… “மருது மாமா எனக்கு சாக்லேட்” என்றபடி…
“அப்போ மாமா கேட்டதைக் கொடு”…. அவன் சொன்னவுடன் மறுக்காமல் அவன் கேட்டதைக் கொடுத்தபடி… சாக்லேட்டை வாங்கியபடி கள்ளம் கபடம் இல்லாமல் கன்னக் குழி விழ சிரித்த கண்மணி மட்டுமே அவன் நினைவுகளில்…
இப்போது இளம் பெண்ணாகி இருப்பாள்… என்ன செய்தால் அவள் தன் வழிக்கு வருவாள் என்று தனக்கு மட்டுமே தெரியும்… அவள் எதற்கு ஏங்குகிறாளோ அதைக் கொடுத்தால் போதும்… நாயைப் போல காலடியில் கிடப்பாள்… முட்டாள் பெண்… இப்போது மட்டுமா மாறி இருக்கப் போகிறாள்…
முதலில் மணி… அதன் பிறகு அந்த ரிஷியைக் கவனிப்போம்… தனக்குள் வரிசைப்படுத்திக் கொண்டவனுக்கு தெரியாமல் போய் விட்டது… மணி வேறு ரிஷி வேறல்ல என்பது… இருவரில் யார் மீது கை வைத்தாலும் அடுத்த நபர் அவன் வலையில் தானாகவே வந்து விழுவர் என்பது… ரிஷியா இல்லை கண்மணியா அவனிடம் மாட்டிக் கொள்ளப் போவது யார்… ரிஷிக்கு விரித்த வலையில் கண்மணி சிக்கப் போகிறாளா இல்லை கண்மணிக்கு விரித்த வலையில் ரிஷி சிக்கப் போகிறானா… இல்லை மருது தானே தனக்கான அழிவைத் தேடிக் கொண்டானா…
விதி வலியது… அதன் பிடியில் அகப்பட்ட இவர்கள் அனைவரின் வாழ்க்கையும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருந்தது
----
Comments