top of page
Writer's picturePraveena Vijay

கண்மணி... என் கண்ணின் மணி -26-3

Updated: Dec 29, 2020

அத்தியாயம் 26-3


கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகி இருக்க… கண்மணிதான் ரிஷி வீட்டின் முழுப்பொறுப்பையும் ஏற்றிருந்தாள்… பள்ளிக்கும் விடுமுறை போட்டு விட்டாள்… ரித்விகாவை பள்ளிக்கு அனுப்புவது… வீட்டு வேலை… சமையல்… லட்சுமி அம்மாவைப் பார்ப்பது… ஏன் ரிதன்யாவைக் கவனிப்பது என அனைத்தையும் இழுத்துப் போட்டுச் செய்ய… ரிஷியும் வேலைக்குச் செல்லாமல் அவளோடு வீட்டில் இருக்கத்தான் நினைத்தான்… ஆனால் கண்மணி அவனைப் போகச் சொல்லி விட… அவள் வார்த்தைகளை தட்ட முடியாமல் வேலைக்கு சென்று கொண்டு இருந்தான்….


ஒரு பக்கம் தன் குடும்பம் கஷ்டத்தில் இருக்கின்றது என்று இருந்தாலும்… ரிதன்யா சரி ஆகி விட்டால் எல்லாம் சரி ஆகி விடும் என்றாலும்… தற்காலிகமாக என்று தெரிந்தாலும்… கண்மணியைத் தன் குடும்பத்துக்காக கஷ்டப்படுத்துவதும் அவனுக்கு வேதனையை அளித்தது என்றே சொல்ல வேண்டும்…


இதோ இன்று காலையில் எழும் போதே ரிஷிக்கு மொத்த உலகமும் இன்றோடு அழியாதா என்று தோன்றும் அளவுக்கு எதிர்மறை தாக்கங்கள்… தன் கஷ்டத்திற்கு உலகத்தையே காவு கொடுக்கும் அளவுக்கு விரக்தியைக் கொடுத்த எதிர்மறை உணர்வுகள்…


ஒருவார விடுமுறை முடிந்து… கண்மணி இன்றிலிருந்து மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும்…


அன்று ரிஷி எழும் போதே… இடி இடிப்பது போல அவனுக்கு தலை வலித்தது என்றே சொல்ல வேண்டும்… இருந்தும் அவனால் படுக்க முடியாது…. அடுத்தடுத்து வேலைகள் அவனை நோக்கி காத்திருக்க… எழ முடியாமல் எழுந்தான் என்றே சொல்ல வேண்டும்…. என்னவாக இருந்தாலும் அவன் தானே பார்த்தாக வேண்டும் என்று எழும்போதே ரித்விகாவின் அருகில் இருந்த அலாரம் அடிக்க… யோசனையுடன் ரித்விகாவைப் பார்க்க… அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்திருந்தாள் ரித்விகா…


எழுந்தவள்…


“அச்சோ அண்ணா… அக்கா 5 மணிக்கே எழச் சொன்னாங்க” என்று வெளியே போக… கண்மணியும் அங்கு தயாராக இருந்தாள்… தங்கையைத் தொடர்ந்து அவள் பின்னேயே ரிஷி போக…


இப்படித்தான் வாசல் தெளிக்க வேண்டும் என்று ஆரம்பித்த கண்மணி… அடுத்து கோலம் போடுவதையும் ரித்விகாவுக்கு சொல்லிக் கொடுக்க… வாசலின் நிலைப்படியில் சாய்ந்தபடி நின்றபடி இருவரையும் தொந்தரவு செய்யாமல் பார்த்தபடி சிறிது நேரம் நின்றிருந்தவன்… பின் உள்ளே சென்று விட்டான்…


இங்கு ரித்விகாவும் கண்மணி சொன்னது போலவே கோல மாவில் கம்பியை இழுக்க… ஓரளவு நன்றாகவே வர… அதைத் தொடரச் சொல்லியபடி… அடுத்து… ரிஷி வீட்டுக்குள் வந்த கண்மணி..அப்போதுதான் டீ போட ஆரம்பித்திருந்த ரிஷியிடம்…


”நீங்க போங்க ரிஷி…. எனக்கு கிச்சன்ல யாரும் இருந்தால் தான் கம்ஃபார்ட்டா ஃபீல் பண்ண மாட்டேன்…” என்ற போதே… ரிஷி போக மறுத்து விட்டான்…


”நீ எவ்ளோ நாள் கஷ்டப்படுவ கண்மணி… நான் பார்த்துக்கிறேன்… ரிது இருக்கும் போது கூட நான் சமைக்கத்தான் செய்வேன்” என்ற போதே


”ரிது சரியாகி வந்தவுடனே நீங்க அதெல்லாம் பண்ணிக்கங்க… எனக்கு நான் கிச்சன்ல இருக்கும் போது வேறு யாரும் இருக்கக் கூடாது” கண்மணி கறாராகச் சொல்லிவிட அதற்கு மேல் ரிஷி அங்கு நிற்க முடியவில்லை… அதே நேரம் வேலைக்கும் அவன் அன்று செல்ல வில்லை… அடுத்த ஒரே மணி நேரம் தான்… டீ… காலை உணவு… மதிய உணவு… இலட்சுமிக்கு பிரத்யோகமான உணவு… என முடித்து… பாத்திரங்களை விளக்கி… அடுப்பு மேடையைத் துடைத்து… சுத்தமாக்கியவள்… தன் வீட்டுக்கு போயிருந்தாள் கண்மணி…


ரிஷிதான் ஆவென்று பார்த்தபடி இருந்தான் பிரமிப்பில்… இத்தனை நாள் இவனும் ரிதன்யாவும் அந்த சமையலறையை என்ன பாடு படுத்தி வைத்திருப்பார்கள் என்று… போர்க்களம் போல இருக்கும்… அதிலும் ரித்விகா பள்ளி செல்லும் நேரம் இன்னும் கலவரமாகக் காட்சி அளிக்கும் என்றே சொல்ல வேண்டும்… தாங்கள் இருவரும்…. இல்லையில்லை மூவருமாக கடினப்பட்டு செய்த வேலைகளை எல்லாம் இவளால் எப்படி ஒரே ஆளாக செய்து முடிக்க முடிகிறது… அதிலும் மிக சுலபமே என்று தோன்றும்படி… ஆச்சரியப்பட்டுத்தான் போனான் ரிஷி…


அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் ரிஷியின் வீட்டுக்கு வந்த கண்மணி ரிஷியிடம் பலமுறை கேட்டுவிட்டாள்… இன்று ஒரு மட்டும் தனியாக அவன் சமாளித்து விடுவானா என்று… இல்ட்சுமியைக் கவனித்துக் கொள்ள செவிலிப் பெண்ணுக்கு இவள் ஓரிடத்தில் சொல்லி வைத்திருந்தாள்… ஆனால் அந்தப் பெண் வருவது தாமாதாகிவிட… கண்மணிக்குத்தான் பெரிய வருத்தம்… ஆண்மகன் ரிஷியால் தன் தாயை எப்படி பார்த்துக் கொள்வான் என்று…


ரிஷிக்கு அந்தக் கவலை எல்லாம் இல்லை… தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்ல… சரி ரித்விகாவையாவது பள்ளிக்கு தன்னோடு அழைத்துக் கொண்டு போவதாக வந்து கேட்க…


ரிஷி அதற்கு மறுத்து விட்டான்… காரணம் ரித்விகாவுக்கு காலை 7:30 மணிக்கே பள்ளியில் இருக்க வேண்டும்… அதற்காக 7 மணிக்கே கிளம்ப வேண்டும்…


அதே நேரம் ஆசிரியையாக கண்மணி 9 மணிக்கு போனால் போதும்… அதனால் கண்மணி ரித்விகாவுக்காக இவ்வளவு சீக்கிரம் கிளம்ப வேண்டாம் என்று அவனே கூட்டிப் போக… கண்மணியும் விட்டு விட்டாள்…


ரிஷியும் ரித்விகாவை பள்ளியில் விட்டு விட்டு…. ஏரியா கடையில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி்க் கொண்டு வீட்டுக்குத் திரும்பும் போதுதான் அந்த வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன…



“அடியேய்… என்னமோ என் காதுல விழுந்ததே அது உண்மையா இன்ன… வாடகைக்கு இருக்கிற பையனோட… அந்த மணி ஒரே கூத்தும் கும்மாளமமுமாமே… பெரிய ரூல்ஸ் மங்காத்தா பேசி கீச்சது எல்லாம் இத்க்குத்தானா… 5 வருசமாவே இது நடக்குதாமே…. இந்த கூத்துக்குதான்… என்னை அப்டி பேசி வீட்டை விட்டு வெளியேத்துனாளா… அவ வெளியே அனுப்பிட்டா நாம் வாழ வழி இல்லாமல் தட்டுக் கெட்டு போயிருவோமா என்ன” அந்தப் பெண்ணின் ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்ட ரிஷியின் காதுகள் அதைக் கேட்க முடியாமல் கூசின…. கண்களோ கோபத்தில் சிவந்தன… அவன் கை கால்களே ஆட்டம் கண்டு படபடத்தன என்றே சொல்ல வேண்டும்… மகிளாவுக்கு திருட்டுத்தனமாக முத்தம் கொடுத்து மாட்டிய போது கூட வராத படபடப்பு… இன்று அவனோடு கண்மணியை சேர்த்து வைத்துப் பேசிய போது அவனுக்குள் தோன்றியது என்பதே உண்மை…


”அந்த வயசுலேயே மருது கிட்ட” என்று அந்தப் பெண் முடிக்கவில்லை… ரிஷி அவர்கள் முன் நின்றிருந்தான் ருத்ர அவதாரத்தோடு.. கூடுதலாக ’மருது’ என்று காதில் விழுந்த பெயர் வேறு தனது குடும்ப சூழ்நிலைகளால் அவன் மறந்திருந்த கோவா நினைவுகளை கிளறி விட... அத்தனை ஆத்திரத்தில் கண்கள் சிவக்க நின்றிருந்தான் ரிஷி….


வெகு நாட்களுக்குப் பிறகு இந்த ஏரியாவுக்கு வந்திருந்ததால்… பேசிக் கொண்டிருந்த பெண்ணுக்கு கண்மணியோடு சேர்த்து வைத்து பேசிக் கொண்டிருந்த ரிஷிதான் தன் முன்னால் நிற்பவன் என்று தெரியவில்லை….


அதே நேரம் கேட்டுக் கொண்டிருந்த பெண்… சைகையால் யாரென்று சொல்ல… இருவரும் அடுத்த வினாடி… பயத்தில் அங்கிருந்த ஆட்டோவைக் கைகாட்டி அதில் ஏறி மறைந்தும் விட… ரிஷிக்கு இருந்த ஆத்திரத்தில் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற கோபமும் கூடுதலாகச் சேர… அதே நேரம்… குனிந்து கையில் கிடைத்த கல்லை அந்த ஆட்டோவின் மேல் எறிந்து தன் ஒட்டு மொத்த ஆத்திரத்தையும் காட்டியவனுக்கு இன்னும் படபடப்பு போகவே இல்லை… தன்னைக் கண்மணியோடு இணைத்தா நினைக்கும் போதே பல்லைக் கடித்து தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டவனுக்கு அடுத்த அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை… அப்படியே நிற்க அவனைக் கலைத்தது அலைபேசி அழைப்புதான்…


மகிளாவின் தந்தை நீலகண்டனிடமிருந்துதான்…


“மகிளாவுக்கு அடுத்த வாரம் மேரேஜ்… தேதி ஞாபகம் இருக்குதானே… இன்னும் பிரச்சனைதான் பண்ணிட்டு இருக்கா… எனக்கு என்ன பண்றதுன்னே தெரியவில்லை” எனும்போதே


“யோவ்… யாருய்யா நீ… உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்… உன் பொண்ணு அவ கல்யாணம்… அது உன்னோட பிரச்சனை… இன்னும் என்னை ஏன் தொந்தரவு பண்றய்யா… என்கிட்ட ஏன் புலம்புற… விட்டு தொலச்சுட்டுதானே நடுத்தெருவுல நிற்கிறேன்… இன்னொரு தடவை என்கிட்ட பேசுன… மொத்தமா சங்குதாண்டா உனக்கு” என்று வெறிப்பிடித்தவன் போலக் கத்தியபடி போனைக் கட் செய்தவன்…. கண்மண் தெரியாத கோபத்தோடுதான் தன் வீட்டை அடைந்தான்…


கேட்டை எப்போதும் பைக்கை நிறுத்தி கைகளால் திறப்பான்… இன்று இருந்த கோபத்தில் பைக்கை நிறுத்தாமலேயே கேட்டின் மீது பைக்கை மோதித் திறந்தவன் அதே வேகத்தில் தன் வீட்டுக்கும் சென்றவன்… முதலில் பார்த்தது கண்மணியைத்தான்… ஆனால் அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல்… அப்படிச் சொல்வதை விட பார்க்க முடியவில்லை…


’ஒரு நல்ல பெண்ணுக்கு… தன்னால் அவப்பெயர்’


ஏனோ இவனே குற்றம் செய்தது போல மருகினான் என்றே சொல்ல வேண்டும்… அதன் விளைவு… கோபமாக வெளி வந்தது… அவனை நினைத்தே…


”நீ கிளம்பு…” என்று மட்டும் சொல்ல கண்மணிக்கு அவனின் திடீர் கோபம் ஏனென்று புரியவில்லை…


“ரிஷி….” என்ற போதே….


“கிளம்புன்னு சொல்றேன்ல... வெளிய போ… இனி இந்த வீட்டுக்குள்ள வராத” என்றவனிடம் கண்மணி நிதானித்தாள் இப்போது… ஏதோ நடந்திருக்கிறதென்று அவளால் உணர முடிந்தது… அதே நேரம் தன்னிடம் அவன் காட்டும் கோபமும் சொன்ன வார்த்தைகளும் எரிச்சலாக வர அவமானமாகக் கூட இருந்தது என்றே சொல்ல வேண்டும்… ரிதன்யா இலட்சுமி இருவருமே அங்கே இருக்க… உடனடியாக அதைக் காட்டவும் முடியாத நிலை…அதற்கு மேல் அங்கு இருக்கப் பிடிக்கவில்லை... அவளுக்கு


அடக்கப்பட்ட கோபத்தையும்… அவமானத்தையும் பல்லைக் கடித்துக் கொண்டு தனக்குள் சீரணித்தபடி வெளியேறப் போக… இலட்சுமி அவள் கையைப் பிடித்து நிறுத்தினார்… இடது கையால் தான்…கண்மணியைப் போக வேண்டாம் என்பது போல…


ரிஷி அதிர்ந்து அன்னையைப் பார்க்க… இப்போது அவரின் முகத்தில் மகனின் மீது கோபம் இருந்தாலும்… அதே நேரம் அவனையும் தன்னருகில் அழைத்து… அமரச் சொன்னவர் கண்மணியின் கையைப் பிடித்திருந்தபடியே அவனின் கைகளையும் சேர்த்து பிடித்துக் கொள்ள… அவரும் தெரிந்து செய்ய வில்லை… அவர் உணராமலேயே எதேச்சையாக இச்செயல் அமைந்து விட… அவஸ்தையுடன் நின்றிருந்தது இளையவர்கள் இருவர் மட்டுமே… அதிலும் கண்மணி கூட பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவளது முகபாவனை காட்ட… ரிஷிதான் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது…


சில நொடி கழித்து…. கைகளைப் பிரித்தவர் தன் மகன் நல்லவன்தான்… காரணம் இல்லாமல் சொல்லி இருக்கமாட்டான் என்பது போல கண்மணிக்கும் சைகையில் சொல்ல… ரிஷியின் கண்களில் காட்சிகள் மறைந்தன கண்ணீரில்… தன் அன்னையின் பாசத்தில் அவரின் தன் மீதான நம்பிக்கையில்…


ரிதன்யாவோ தான் இன்னும் கூடுதல் கவனமாக இருந்திருக்கலாமோ… தன்னையே நம்பி இருந்த அண்ணனுக்கு… தன்னால் தான் இவ்வளவு இக்கட்டோ… அவள் ஒருபுறம் குமுறிக் கொண்டிருந்தாள்…


புரிந்து கொண்ட பாவனையில் இலட்சுமியிடம் தலையாட்டிய கண்மணி தன் முகத்தில் இப்போது புன்னகையை கொண்டு வைத்திருக்க…


இலட்சுமியோ… தான் தன்னைப் பார்த்துக் கொள்வதாக கூறி அவளைப் போகச் சொல்ல… மறுத்தவளாக அந்த நல்ல உள்ளம் கொண்ட பெண்மணியின் வேதனை உணர்ந்தவளாக கண்மணி வேலைக்குப் போகவில்லை அன்றும்…


அதே நேரம் ரிஷியும் வீட்டில் தங்கவில்லை… செவிலிப் பெண் நாளை வந்து விடுவார் என்பதால் இன்று ஒரு நாள் மட்டும் தன் அன்னையைப் கவனித்துக் கொள்ளச் சொல்லி வெளியேறியவன் தான் அடுத்த நாள் அவளிடம்… தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு நின்றிருந்தான்…


அவன் கேட்டவுடன் கண்மணி பெரிதாக கோபம் எல்லாம் கொள்ளவில்லை… மாறாக… புன்னகை முகத்துடன் தான் இருந்தாள்…. இதை எதிர்பார்த்தேன்… என்ற ரீதியில்


----


முந்தைய தினம் போலவே.... அடுத்த நாளும் கண்மணி சொல்லி வைத்த செவிலிப் பெண் வராமல் போக… கண்மணிக்கும் விடுப்பை நீட்டிக்க வேறு வழி இல்லை… அதனால் பள்ளிக்குச் சென்று விட… ரிஷிதான் அன்று முழுவதும் தாயைக் கவனித்துக் கொண்டான்…


அன்று முழுவதும் அவனுக்குள் ஒரே யோசனை… கண்மணி எந்த அளவுக்கு இறங்கி அவள் குடும்பத்துக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றாள் என்பதை யோசிக்க யோசிக்க… அதே நேரம் நேற்று தன் தாய் இருவரையும் சேர்த்து வைத்த அந்த காட்சியும்… வந்து போக… நொடிப் பொழுது என்றாலும்… அவனுக்குள் ஏன் கண்மணியிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளக் கேட்கக் கூடாது… மூன்றாம் நபராக அவள் செய்த வேலைகளை உரிமையாகச் செய்தால் யாரும் தவறாக சொல்ல மாட்டார்களே… இப்படி யோசித்தானே தவிர… அவளை தன் வீட்டுக்கு சேவகம் செய்ய கேட்கிறோம் என்பதையோ… தனக்கான தகுதிகள் என்ன இருக்கின்றது என்பதையோ… இல்லை அவள் மனதில் என்ன இருக்கின்றது என்பதையோ அவன் யோசிக்க வில்லை… மாலை பள்ளி விடும் நேரம் இடையிலேயே அவளை மறித்து… காஃபி ஷாப்புக்கு அழைக்க… முதலில் மறுத்த கண்மணி…பின் நேற்று அவன் திடீரெனக் காட்டிய கோபம் ஞாபகத்துக்கு வர… அதைப்பற்றிதான் ஏதோ பேசஅழைக்கின்றான் என்பதை அவளாக அனுமானித்து அதன் பின் அவனோடு் போக…


அங்கு அவளிடம் தன் திருமண கோரிக்கையை வைத்திருந்தான் ரிஷி


---


கண்மணியும் இயல்பாகவே எதிர்கொண்டாள்தான் அவன் கோரிக்கையை


“ஹ்ம்ம்.. இதை எதிர்பார்த்தேன் ரிஷி… என்ன உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கவில்லை… உங்க அம்மாகிட்ட இருந்து எதிர்பார்த்தேன்… ஏன்னா எனக்கு இப்படிப்பட்ட பல அனுபவம் இருக்கு… எனக்கு ஒண்ணுமே புரியலை… ஒரு பொண்ணு ஒரு உதவி செய்தால்… அந்த பொண்ணே வேணும்னு கேட்கிறது என்ன டிசைனோ… என்னைப் பற்றி என்ன தெரியும்னு எல்லோரும் இப்படி கேட்கிறாங்கன்னு தெரியலை ரிஷி…”


”எங்க ஸ்கூல் பிரின்சிபால் ராஜம் மேடம் கூட … அவங்க பையனுக்கு மேரேஜ் ப்ரப்போசல் கேட்டு ரீச் பண்ணாங்க… சிரிப்புதான் வருது ரிஷி” என்று சாதாரணமாகச் சொல்ல… வாயடைத்துப் போனவன் ரிஷிதான்… பொறுமையாகப் பேசும் அவள் தொணியில்


”அதெல்லாம் விடுங்க… என்ன திடீர்னு… உங்களுக்கு எங்கேயிருந்து வந்தது இந்த ஞானதோயம்… ஏன்னா நான் உங்களை இம்ப்ரஸ் பண்ணியிருந்தால் இன்னைக்கு இல்லை… சில பல வருசங்களுக்கு முன்னாடியே… அதாவது மகிளாவை வேண்டாம்னு முடிவெடுத்த அப்போதே… அதாவது மகிளாவை விட்டு தள்ளி நிற்கனும்னு… சாரி சாரி… அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கனும்னு முடிவெடுத்த 5 வருசத்துக்கு முன்னாடியே வந்திருக்கனுமே.. இப்போ என்ன தீடீர்னு..…” என்றவள்… இப்போது முகம் இறுகியவளாக அவனைப் பார்த்தவள்


“மகிளா உங்களை மேரேஜ் பண்ணிகிட்டா… நல்லா இருக்க மாட்டாள்… ஆனால் நான்… இந்த கண்மணி யாரோ ஒருத்திதானே எக்கேடு கெட்டால் என்ன… கல்யாணம் பண்ணி உங்க வீட்டுக்கு சேவகம் பண்ண ஆள் வேண்டும்… சரியா… என்ன ஒரு சுயநலம் ரிஷி சார்.. நீங்க உங்க குடும்பதுக்காக… மெழுகா மாறுங்க… அதுக்காக நான் உங்க கூட சேர்ந்து எறியனும்னு எந்த வகையில எதிர்பார்த்தீங்க… மோர் ஓவர்… ஒரு பெர்சண்ட் கூட நீங்க எனக்கு தகு…” என்று ஆரம்பித்தவள்… தகுதி என்ற வார்த்தையைத் தவிர்த்தவள்…


“ஆக்சுவலா எனக்கு உங்க மேல கோபம் வந்திருக்கனும்… ஆனால் கோபப்பட முடியவில்லை… பரிதாபம்தான் வருது ரிஷி… ஏன்னா… கோபம் கூட அவங்களுக்கு சமமான தகுதி இருக்கிறவங்க கிட்ட தான் வரும்… ” ரிஷி அவளிடம் திருமணம் செய்யச் சொல்லிக் கேட்ட போதே அவன் ஒரு நிலையில் இல்லை… அதிலும் புன்னகை முகத்தோடேயே அவள் மறுத்த விதம்… பின் அவள் முகம் இறுகிய பாவம் என… அதன் பிறகு அவள் என்ன பேசுகிறாள் என்று கவனிக்கவே இல்லை… கவனித்திருந்தால் அவள் எந்த இடத்தில் வைத்திருக்கின்றாள் என்பது அவனுக்குப் புரிந்திருக்கும்… அவளைப் பொறுத்தவரை… ரிஷி என்பவன் அப்பாவி… வாழ்க்கை அவனுக்கு கொடுத்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் திணறுபவன்… வாழ்க்கை என்னும் ஆழிக்கடலில் முன்னேறவும் முடியாமல்… மூழ்கவும் முடியாமல் போராடிக் கொண்டிருப்பவன்… அவன் பற்றிக் கொண்டு முன்னேற சிறு மரத்தைப் பொல தன் உதவியைச் செய்தால்… அவனோ இவளையே கைப்பற்றி இழுக்க நினைப்பானா… கடுப்பாகத்தான் வந்தது கண்மணிக்கு… திருமணம் என்பது இவன் வீட்டுக்கு வேலைகாரியைக் கூட்டி வருவதா என்ன… அதிலும் அவன் நேசித்த பெண் கஷ்டபடக் கூடாதாம்… இவள் பட வேண்டுமாம்…”


இருந்தாலும்… யோசித்து அவன் கண்களைப் பார்த்தவள்.…


“இந்தப் பேச்சை இத்தோட விட்றலாமே… அப்புறம் இதை எல்லாம் காரணம் காட்டி அன்னைக்குச் சொன்னது போல வீட்டைக் காலி பண்ணவெல்லாம் சொல்ல மாட்டேன்” என்ற போதே



ரிஷி இப்போது தன்னிலைக்கு வந்தவனாக நிமிர்ந்து அமர்ந்தான்… ஏனோ இந்த விசயத்தை வளர்க்க விரும்பவில்லை அவன்... தவறு என்று தெரிந்துதானே கேட்டான்... அதனால் அவனாகவே சமாதானமும் செய்ய முன் வந்தான்...


அதனால் அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே கை காட்டி தடுத்தவன்…


“ஓகே தான்க் யூ… யூஸ் லெஸ் டாபிக்குக்கு... எதுக்கு கண்மணி இவ்ளோ வார்த்தைகள்… இவ்ளோ லென்தி டைலாக்ஸ்… ஜஸ்ட் கேட்டேன் நீ இல்லைனு சொல்லிட்ட… ஆக்சுவலா நீ கோபப்பட்டா சமாதானப்படுத்ததான் நான் பிரிப்பேர் பண்ணிட்டு வந்தேன்… மேக்சிமம் நீ சம்மதம் சொல்ல மாட்டேன்னு எனக்கும் தெரியும்.. இருந்தும் ஒரு நப்பாசை கேட்டுப் பார்ப்போம்னு… எனிவே… நீ மெச்சூர்டா சிரிச்சுகிட்டே பதிலடி கொடுத்துட்ட… லைக் இட்” என்று ரிஷி கூறிய போதுதான் கண்மணிக்கு கோபம் வர ஆரம்பிக்க…


அவள் முகம் பார்த்தவன்…. அதில் இருந்த படபடப்பை உணர்ந்தவனாக


“நான் ஜஸ்ட் கேட்டேன் கண்மணி… ஃபீல் ஃப்ரீ…. உன்னைப் பார்த்து மயங்கி… லவ் வந்து நீ இல்லாம நான் இல்லைன்ற நிலைமைல உன் கிட்ட இந்த ப்ரபோசலை வைக்கலை… அதுனால நீ வேண்டாம்னு சொன்ன உடனே ஹார்ட் ப்ரோக் ஆகி… மனசு துடித்து உன்கிட்ட என்னை மேரேஜ் பண்ணிக்கனு கெஞ்ச வரலை… ஜஸ்ட் இட்ஸ் அ ப்ரப்போசல் இட் இஸ் அ ப்ரபோசல்… நான் கேட்டேன்.. நீ உன்னோட ஆன்சரை சொல்லிட்ட… உன்னை மிஸ் பண்ணிட்டோம்னு இதுல நான் வருத்தப்படறதுக்கும் ஒண்ணும் இல்லை… இவன் என்கிட்ட இப்படி கேட்டுட்டான்னு கோபப்படுறதுக்கும் ஒண்ணும் இல்லை…”


எழுந்தவன்…


அப்படியே அமர்ந்திருந்தவளிடம்…


“தென் வீட்டைக் காலி பண்ணவெல்லாம் சொல்ல மாட்டேன்னு நினைக்கிறேன்… சொன்னாலும் போகிற மாதிரி ஐடியா இல்லை… உண்மையைச் சொல்லப் போனால்… நட்ராஜ் சார் கிட்டத்தான் உன்னை மேரேஜ் பண்ணக் கேட்கலாம்னு நினைத்தேன்” என்றவன்… அவள் முன் சிரித்தபடி


“உல்டாவா இல்லை… உன்கிட்ட பிரப்போஸல் கொண்டு வந்தவங்கள்ளாம் பெரியவங்க… நான் உன்னைப் பற்றி பேச நினைத்தது என் முதலாளிக் கிட்ட…”


கண்மணியும் தன் நிலை மீண்டவளாக இயல்பாகி இருக்க… இப்போது சிரித்தபடி… புருவம் உயர்த்தியவளாக…


“ஏன் அவர்கிட்ட போகலை… என் அப்பாவைப் பார்த்து பயமா” என்று நக்கலாகக் கேட்க


“ஹா ஹா… நான் கேட்டு என் முதலாளி இதுவரை எதையும் மறுத்தது இல்லை தெரியுமா… ஐ மீன் வேலைல நான் என்ன சொல்றேனோ அதை மீறி அவர் பண்ணினது இல்லை… என்னோட எந்த வொர்க் ப்ரப்போசலுக்கு அவர் மறு வார்த்தை சொன்னதில்லை…சோ இந்த ப்ரபொசலுக்கும்”


என்றவன் தன்னையும் அவளையும் காட்டி…


“சரின்னு தலை ஆட்டிருப்பாரு… என்ன அவர் பொண்ணுதான் சண்டி ராணியா அவர்கிட்ட மல்லுக்கு நிற்கும்… என் பாஸ் பாவம்… அதான் நானே நேரடியா உன்கிட்ட கேட்டேன்”


“ம்ஹூஹூம்… அவ்வளவு நம்பிக்கையா… அப்போ அப்பாகிட்ட கேளுங்க… அவர் ஓகேன்னு சொன்னா…” கண்மணி நிறுத்த


“நான் கேட்டு அவர் ஒக்கேன்னு சொல்லிட்டா…” சவாலாக இவனும் கேட்க


“கேட்டுப்பாருங்க ரிஷி சார்… அதுக்கப்புறம் பார்க்கலாம்” என்று எழுந்தவளிடம்…


அதுவரை இருந்த நீயா நானா என்ற வாக்குவாதமெல்லாம் மறைந்த பாவமாக…


“சாரி கண்மணி… “ மனதாரக் கேட்டவனிடம் என்ன சொல்ல விழி விரித்துப் பார்த்தவளுக்கு…. நொடிக்கு நொடி மாறும் அவன் குணம் புரியவில்லை என்றே சொல்ல வேண்டும்…


“உண்மையிலேயே எனக்கு உன்கிட்ட இப்படி கேட்க அசிங்கமாத்தான் இருந்துச்சு..… ஆனால் ஏன் கேட்டால் என்ன தப்புன்னு தோணுச்சு… மற்றபடி வேறந்த எண்ணமும் இல்லை… இப்போ பேசின சவால் வார்த்தையையும் சேர்த்துதான்… சார்கிட்ட இதெல்லாம் கொண்டு போக வேண்டாம்” என்றவன்…


“நீ ஒக்கேன்னு சொல்லிடக்கூடாதுனு வேண்டிக்கிட்டே தான் உன்கிட்ட சொன்னேன்” என்றவன் முகத்தில் குறும்பு கொப்பளிக்க…


அதைப் பார்த்து இவளும் பொய்யாக முறைத்து… பின் அமைதியாக இருக்க.


“நட்ராஜ் சார் உன்கிட்ட படுற பாட்டைப் பார்த்து உன்கிட்டலாம் லவ் சொல்ல வருவானா என்ன” என்றவனிடம்


“ரிஷி…” இவள் முறைக்க…


அவள் முறைப்பைப் பார்த்தபடியே சிரிப்பைத் தனக்குள் எவ்வளவுக்கெவ்வளவு முடியுமோ அத்தனை தூரம் அடக்கியபடி…


“ஒர் வாரத்துக்கு இரண்டாயிரமோ ஐயாயிரமோ கொடுத்து முடிக்கிற நர்ஸ் வேலைக்கு… ஆயுள் முழுசும் தொல்லையா இருக்கப் போகிற சாய்சை யாராவது சூஸ் பண்ணுவாங்களா… முட்டாள் கூட பண்ண மாட்டான்” கண்சிமிட்டி கண்மணியை வம்பிழுக்க… அவன் அப்படிச் சொல்லும் போதே


அர்ஜூன் ஞாபகம் வர…


”எனக்காக ஒருவன் வருடக்கணக்கில் காத்திருக்கின்றான்” என்று சொல்ல நினைத்தாலும்… ஏனோ அதை ரிஷியிடம் சொல்ல முடியவில்லை…. ஏனென்றும் தெரியவில்லை… எது தடுத்ததென்றும் புரியவில்லை


அதே நேரம் ரிஷியை பெரிய விசயமாகவும் அவள் நினைக்கவில்லை என்பதும் உண்மை…


இது நடந்த அடுத்த நாளே இலட்சுமி… அவராக தனியாக இல்லையென்றாலும்… சிறு கைப்பிடித்தல் மட்டும் இருந்தால் போதும்… என்பது போல நடக்க முயற்சிக்க ஆரம்பிக்க அதில் வெற்றியும் காண… அதனால் ரிதன்யா ஓரளவு சமாளித்துக் கொள்ள… ரிஷியும் அவன் தினசரி அலுவல்களில் மூழ்கினான்…


அதுமட்டுமல்லாமல் கண்மணியும் ரிஷியும் மற்றவற்றை எல்லாம் மறந்து சகஜமாகவே பழகிக் கொண்டிருந்தனர்…


இந்த முறை ரிஷி… கண்மணியிடம் தான் பேசியதையோ… அவள் தன்னிடம் பேசியதையோ மனதில் வைத்து சுற்றிக் கொண்டிருக்க வில்லை….


மாறாக கண்மணி இயல்பாக இருப்பதாகத் தோன்றினாலும்… அவள் அப்படி இல்லை என்பதே உண்மை… அவன் குடும்பத்தைப் பார்க்க… மனைவி என்ற அடையாளம் தாங்கிய வேலைக்காரிக்கான பதவிக்கு ரிஷி தன்னிடம் வந்து நின்றது அவள் மனதின் ஒரு ஓரத்தில் தங்கிப் போயிருக்க… அது அவளையுமறியாமல் அவளது பாட்டியிடம் பேசிய போது வெளி வந்து விட்டது…


தன் பாட்டியைப் பார்க்க… அவள் பவித்ரா இல்லம் சென்ற போது…

வைதேகி கண்மணியிடம்….


“அர்ஜூன் நெக்ஸ்ட் மன்ந்த் மேரேஜ் வைக்கலாம்னு தேதி எல்லாம் அனுப்பி இருக்கின்றான்… உன்கிட்ட பேசினானா…” என்ற போதே


“என் அப்பாகிட்ட பேசச் சொல்லுங்க அவரை…” பூச்சரத்தைக் கட்டியபடியே..அழுத்தமாகச்ச் சொன்னவள்…


“இவர் என்னை மகாராணியா வைக்க நினைக்கிறாராம்…. ஆனால் என் அப்பாகிட்ட பேச மாட்டாராம்… ஆனா ஒருத்தன் கிட்டத்தட்ட வேலைகாரியா வச்சுக்க என் அப்பாகிட்டயே போய் கேட்பானாம்… என்ன ஒரு முரண்… சிரிப்புதான் வருது பாட்டி” அவளை மறந்து பேசியபடி… பூச்சரத்தைத் தொடுத்துக் கொண்டிருக்க… நொடியில் மாறிய தன் பாட்டி வைதேகியின் முகத்தை கண்மணி கவனிக்கவே இல்லை…


வைதேகி… மெதுவாக… யார் அது… ஏன் கேட்டான் என்றெல்லாம் நைந்து கேட்க… கண்மணியும் பெரிதாக யோசிக்க வில்லை அப்போது… ரிஷியைப் பற்றி சாதாரணமாகவே சொல்லிவிட்டு…


”பாவம் பாட்டி அந்த ரிஷி… ” என்று அப்போதும் அவனுக்காக கவலைப்பட்டுத்தான் சொன்னாளே தவிர… இப்படி என்னிடம் சொல்லி விட்டான் என்றெல்லாம் புலம்ப வில்லை…


அவள் தான் ரிஷிக்கு பாவம் பார்த்தாள்… வைதேகியோ கணவரிடமும் அர்ஜூனிடம் அன்றே போனில் சொல்லி புலம்பி விட்டார்… அதிலும் அர்ஜூனிடம்


“ஏன் பேத்திய இப்படி இன்னும் எத்தனை கொடுமைய பார்க்க வைக்கப் போறீங்க… சீக்கிரம் உன் ஆம்படையாளா ஆக்கிக்கோடா… அந்த படுபாவி நட்ராஜ் கிட்ட இருந்து என் பேத்திய மீட்டெடுக்கிறதுக்கு வழியே இல்லையா… வர்றவன் போறவன் எல்லாம் … “ என்றவர்… நிறுத்தியபடி…


“தலை எழுத்தா என்ன அவளுக்கு… எவ எவளுக்கோ சேவகம் பண்ணனும்னு….” புலம்ப ஆரம்பிக்க… அங்கு அர்ஜூனுக்கோ…. உடலெங்கும் அமிலம் ஊற்றினார் போல பற்றி எரிய ஆரம்பித்திருக்க… விளைவு…. அவனது கெஸ்ட் ஹவுஸின் தோட்டத்தில் ரிஷி…


அர்ஜூனின் ஆட்களால் சுற்றிவளைக்கப்பட்டு… இங்கு கொண்டு வரப்பட்டவன்… உயிர் மட்டுமே அவனிடம் விட்டு வைத்திருக்கிறோம் என்பது போல அடித்தவர்கள் அர்ஜூனின் காலடியில் கொண்டு வந்து போட… அந்த புகைப்படங்களைத் தான் கண்மணியின் அலைபேசிக்கு அனுப்பி இருந்தான் அர்ஜூன்…


இதோ… அர்ஜூன் கெஸ்ட் ஹவுஸ் முன் பைக்கை நிறுத்திய கண்மணி அடித்த ஹாரன் சத்தத்தில் வாட்ச்மேன் கூட பயந்து கதவைத் திறக்க… உள்ளே வேகத்தோடு போனவள் கண்களில்… தன் தாத்தா நாராயண குருக்களின் வாகனமும் கண்ணில் பட… ஆக மொத்தம் தாத்தா பாட்டிக்கும் தெரிந்தே ரிஷியை தன் கஸ்டடிக்கு கொண்டு வந்து இந்த நிலைக்கு ஆளாக்கி இருக்கின்றான் அர்ஜூன் என்பதை உணர்ந்தவளாக வீட்டினுள் உள்ளே சென்றவளை…


அர்ஜூன்… எதிர்பார்த்தவன் போல… சந்தோஷத்தோடு… கைப்பிடித்து இழுத்து தன் அருகில் நிற்க வைக்க… இயந்திரப் பாவையாக உணர்ச்சியற்று அவனருகில் நின்றவள்…


அர்ஜூனின் அடியாட்களால் இழுத்து வரப்பட்டு… அவளின் காலடியில் போடப்பட்ட ரிஷியைப் பார்க்க…


“உன் மெச்சூரிட்டியை… உன் பெருந்தன்மையை… நீ யாரென்பதை எனக்கு நன்றாகக் காட்டி விட்டாய்…” என்ற விதத்தில் உடல் முழுவதும் அடி வாங்கிய ரண வேதனை இருந்தாலும்… அதையும் தாண்டிய ஏளனப் பார்வையோடு கண்மணியைப் பார்த்தான் ரிஷி என்கின்ற ரிஷிகேஷ்…



இனி அர்ஜூனின் காதல்… ரிஷியின் நிலை… கண்மணியின் முடிவு… ????


/*

நான் கொடுத்ததை

திருப்பிக்கொடுத்தால் முத்தமாகொடு அதமொத்தமாகொடு

சின்ன கண்மணி

உன் செல்லக்கண்மணி


கொண்டாட்டம் டம்போட்டால்ஜம்ஜம் வண்டாட்டம்டம்வந்தால்யோகம்யோகம் (நான்)


உன்னை சுற்றி வட்டம் இடுது ராஜா

உள்ளம் ஒரு திட்டம் இடுது

தொட்ட இடம் தாளமிடுது ராஜா

மற்ற இடம் தத்தளிக்குது


நானா நானா வந்தேன் அன்பே வம்பாய் கொண்டு வந்தாய் இங்கே ஏழெடுக்கு மாளிகையும் தேவையில்லை ராஜா வாழும் வரை உன்னுடன்தான் வாழும் இந்த ரோஜா


நான் கொடுத்ததைதிருப்பிக்கொடுத்தால் முத்தமாகொடு அதமொத்தமாகொடு

சின்ன கண்மணி

உன் செல்லக்கண்மணி */

2,956 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page