top of page
Writer's picturePraveena Vijay

கண்மணி... என் கண்ணின் மணி -26-2

Updated: Dec 29, 2020

அத்தியாயம் 26-2


மருத்துவர்கள் லட்சுமியின் உடல்நிலையைப் பற்றி சொன்ன போது ரிதன்யாவே அழாமல் இறுகி இருந்தாள் எனும் போது ரிஷி எப்படி இருப்பான்… துக்கத்தின் உச்சக் கட்டம் என்றே சொல்ல வேண்டும் அந்த நிலையில் இருந்தனர்… உணர்வுகள் மொத்தமும் மரத்துப் போய் அமர்ந்திருக்க


ரிஷி மட்டும்… தொண்டை அடைக்க…


“என்ன காரணம் டாக்டர்… இப்படி திடீர்னு அம்மாக்கு ஸ்ட்ரோக் வரக் காரணம் என்ன” வார்த்தைகள் வரவே இல்லை அவனுக்கு… இருந்தும் பேசியாக வேண்டுமே…. பேசினான் ரிஷி…


“உங்க அம்மா சில நாட்களாகவே பல உணர்ச்சி போராட்டங்களுக்கு இடையில இருந்திருக்கலாம்.. காரணம் ஃபிஷிக்கலா அவங்களுக்கு விபத்து ஏதும் நடக்கலை… சோ மே பி இது காரணமா இருக்கலாம்.. அது மகிழ்ச்சி… துக்கம்.. குற்ற உணர்ச்சி… இப்படி பல உணர்ச்சிகள் அவங்களை ஆட்டிப் படைச்சுட்டு இருந்திருக்கு… நீண்ட நாள் போராட்டம்னு கூட சொல்லலாம்… அதோட உச்சக்கட்டம் உங்க ரிலேட்டிவோட ஏற்பட்ட வாக்குவாதம் … ” அவர்கள் குழுவில் இருந்த மருத்துவர் அவனுக்கு விளக்க… ரிதன்யாவும் ரிஷியும் அவற்றை எல்லாம் கேட்டபடியே இருந்தனர்…


ஒன்று மட்டும் விளங்கியது… இது நிரந்தரமல்ல… தற்காலிகமே… கேட்டதில் அது ஒன்றுதான் அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலும் கூட…


வெளியே வந்தவர்கள்… மருத்துவமனை அறையில் படுத்திருந்த தாய் முன்தான் நின்றிருந்தனர்… தாயையே பார்த்தபடி..


“ரிது… நாம இனி நம்ம அம்மாக்கு குழந்தைங்க கிடையாதுடா… அவங்கதான் இனி நமக்கு” என்ற போதே அவன் வார்த்தைகள் அவனிடம் உடைபட்டு வர… தாயின் காலடியில் சரிந்திருந்தான் ரிஷி… ரிதன்யாவோ தாயின் தலைமாட்டில் கதறிக் கொண்டிருந்தாள்… அவள் தைரியமானவள் எதையும் சமாளிப்பாள் என்று சொல்வார்கள் அவளைச் சுற்றி இருப்பவர்கள்… அப்படிப்பட்டவளுக்கு அவள் தைரியம் எந்த அளவு என்பதை அவள் தாயின் நிலை அவளுக்கு இன்று புரிய வைத்தது…


ரிஷியும் தன் தாயையே பார்த்துக் கொண்டிருந்தான்… அவரது கால் மாட்டில் அமர்ந்தபடியே…

அவனது சத்தமில்லா ஊமைக் கண்ணீர் இலட்சுமியின் பாதத்தைக் கழுவிக் கொண்டிருக்க… அவன் மனமோ…


“ரிஷிக்கண்ணா” என்ற அழைப்பு இனி எப்போதுமே அவனுக்கு கேட்காதா… அந்த குரலை மீட்டெடுக்கும் காலம் வாராதா… என ஏங்க ஆரம்பித்து இருந்தது


இலட்சுமியின் வலது பக்கம் முழுவதும் செயல் இழந்தது மட்டுமல்லாமல் அவரின் பேச்சுத்திறனும் பாதிக்கப்பட்டிருக்க… நினைவுத்திறன் … ஆட்களை அடையாளம் காணுவது போன்ற குணங்கள் பெரிதாக பாதிக்கப்படவில்லை… நேரம் எடுத்துக் கொண்டாலும் இலட்சுமி அடையாளம் கண்டு கொள்ள… அந்த வகையில் இலட்சுமி அவரது முடக்கத்தை வெற்றி கொள்வேன் என்ற நம்பிக்கையை மருத்துவர்களுக்கும்,… அவர் பிள்ளைகளுக்கும் கொடுத்தார் என்றே சொல்ல வேண்டும்… அதன் பின் அடுத்த சில நாட்களில் மருத்துவமனையில் இருந்த லட்சுமி வீட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்…. அதாவது ’கண்மணி’ இல்லத்திற்கு வந்தார்


----

ரிஷியின் இந்த கடின காலக்கட்டத்தில் முழுக்க முழுக்க ஆதரவாக இருந்தது நட்ராஜ் மட்டுமே… ரிஷியை எந்த ஒரு இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் அவன் தொய்ந்த போதெல்லாம் அவனுக்கு தோள் கொடுத்து ஆறுதலாக இருந்தவர்… வாடகைக்கு விடத் தயாராக இருந்த வீட்டை ரிஷியின் குடும்பத்திற்கு வாடகைக்கு விட்டு விட்டார்…


நட்ராஜ் இந்த முடிவை எடுத்து மகளிடம் கேட்ட போது கண்மணியும் மறுக்கவில்லை… ரிஷிக்கு… அவன் குடும்பத்துக்கு விருப்பம் என்றால்… தனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று நட்ராஜின் முடிவுக்கு இசைந்தாள்… அதுமட்டுமல்லாமல் ரித்விகாவின் பள்ளி மாற்றத்திற்கும் அவளே முழுப்பொறுப்பு எடுத்துக் கொண்டாள்.. ரித்விகாவும் ’அம்பகம்’ பள்ளியில் சேர்க்கப்பட்டாள்… ரித்விகாவுக்கு இந்த மாற்றம் பெரிதாகப் படவில்லை… சொல்லப் போனால் அவள் துள்ளளான குறும்பான குழந்தையாகவே இருந்ததால்… அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப தன் இயல்புகளை மாற்றிக் கொள்ள முடிந்தது… ஆக பெரிய வித்தியாசத்தை அவள் உணரவில்லை… ரிஷியும் ஏற்கனவே இந்த வாழ்க்கைக்கு வலிந்து தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டதால் அவனுக்கு இந்த வாழ்க்கை புதிதாக இல்லை… இலட்சுமி படுத்த படுக்கை என்பதால் அவருக்கும் பிரச்சனை இல்லாமல் போக… ரிஷியின் ஒரே ஒரு குடும்ப நபர் மட்டுமே இதில் விதிவிலக்காகிப் போனாள்…


’ரிதன்யா…’ ஆம் அவளால் இந்த வாழ்க்கை முறைக்கு உடனடியாக தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை… அதே நேரம் தாய் மற்றும் சகோதரன் படும் கஷ்டங்களை மீறி வேறு ஏதும் செய்ய முடியவில்லை…அதனால் இங்குதான் தங்கப் போகிறோம் என்று சொன்ன தன் அண்ணனிடம் பெரிதாக வாக்குவாதம் எல்லாம் பண்ணாமல் வாழ ஆரம்பித்தாள் ’கண்மணி’ இல்லத்தில்…


ஒரே உறையில் இரு கத்திகள் இருக்க முடியுமா… கிட்டத்தட்ட அதே மாதிரியான போட்டிதான்… ரிதன்யாவுக்கும் கண்மணிக்கும் இடையே… அதில் மாட்டிக் கொண்டவன் ரிஷியாகிப் போனான் என்பது வேறு கதை…


ஆக ரிதன்யா… வலுக்கட்டாயமாக அவள் மீது திணிக்கப்பட்ட வாழ்க்கையில் இருந்து தப்பிக்க வழி இல்லையோ… இதுவே நிரந்தரமாகி விடுமோ… விடுபட வேண்டும் தனக்குள் போராடிக்கொண்டவளாக… தன்னுள்ளே புழுங்கிகொண்டவளாக மட்டுமே இருந்தாள்…


மருத்துவமனையில் இருந்தவரை ரிதன்யாவுக்கு பெரிதாக தெரியவில்லை… தாயின் உடல்நிலை மட்டுமே கருத்தில் கொண்டு இருந்தாள்… இங்குமே தன் தாயைக் கவனிப்பதில் அவள் சுணக்கமே காட்ட வில்லை… ஆனால் அவளுக்கு சவாலாக இருந்தது வீட்டு வேலைகள் மட்டுமே…


ரித்விகாவுக்கும் ரிதன்யாவுக்கும் அதுநாள் நாள் வரை பழக்கமில்லாத ஒன்று… வேலையாட்கள் செய்து பார்த்தே பழக்கப்பட்ட வீட்டு வேலைகள்.. இன்று அவர்களே செய்தாக வேண்டிய நிலை… இருந்தும் ரிதன்யா கலவரமடையாமல்… அதையும் சவாலாக ஏற்றுக் கொண்டாள்


அது மட்டுமல்லாமல் கண்மணி உதவி என்ற பெயரில் அவர்களுக்கு ஏதாவது செய்து தருவது ரிதன்யாவுக்கு பிடிக்கவில்லை… தன்னை விட சிறிய பெண் அவளே செய்யும் போது தன்னால் முடியாதா… போட்டி அந்த இடத்தில் இருந்து ரிதன்யா கண்மணி இருவருக்கும் இடையே ஆரம்பமாக… ரிதன்யாவின் ஒதுக்கத்தை, விருப்பமின்மையை கண்மணி கண்டுகொண்டபின் அவளும் ரிதன்யாவிடம் கொஞ்சம் ஒதுங்கியே போக ஆரம்பித்தாள் என்றே சொல்ல வேண்டும்…


என்னதான் சவாலாக எடுத்து தீவிரத்தை செயலில் கொண்டு வந்தாலும் ரிதன்யாவால் முடியவில்லை… சமையல் என்று வந்து விட்டால் சொதப்பினாள் என்றே சொல்லவேண்டும்… அதே நேரம் ரிஷியும் தன் தங்கையைத் தனியாக விடவில்லை… அண்ணன் தங்கைகள் மூவருமாக அதிகாலையிலேயே அந்தச் சமையலறையை அமளி துமளிப் படுத்திக் கொண்டிருப்பார்கள்… ரிதன்யாவுக்கும் அது பிடிக்கும்… நன்றாக இருக்கின்றதோ இல்லையோ… தங்களுக்குள் தாங்கள் மட்டுமே… அதில் வேறொரு மூன்றாம் நபர் தலையீடு இல்லை…


இப்படியாக ஒருவருக்கொருவர் ஓரளவு தங்களை சந்தோஷமாக வைத்துக்கொண்டபடி… தங்கள் உடன்பிறப்புகள் தாயின் கவலையில் இருந்து மீட்டுக்கொள்ள ஒருவருக்கொருவர் மாற்றி தோள் கொடுத்துக் கொண்டனர்


தன் அண்ணனுக்கும் தங்கைக்கும் தான் பிரச்சனை தரக்கூடாது என ரிதன்யாவும்… தன் அண்ணனுக்கும் சகோதரிக்கும் தொல்லை தரக்கூடாது அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என ரித்விகாவும்… ரிஷி… அவனைப் பற்றி புதிதாகச் சொல்ல வேண்டுமா என்ன…இந்த ஐந்து வருடமாக அவர்களை மனதில் சுமந்து தனித்திருந்தவன்… இப்போது கண்முன்னே இருக்கும் போது மட்டும் விட்டுவிடுவானா என்ன… இன்னும் இன்னும் கூடுதலாக அவர்கள் மேல் பாசம் வைக்க ஆரம்பித்திருந்தான் என்றே சொல்ல வேண்டும்… அவர்கள் இந்த இடத்தில் இருந்தாலும்… அவர்கள் முகம் சுணங்காமல்… தாய் தந்தை பாசத்திற்கு மேலேயே தன் கண்ணுக்குள் வைத்து வேறெந்த கவலையும் வாராமல் அவர்களைக் காப்பதிலேயே கவனமாக இருந்தான்…


தாயாகவும்… தந்தையாகவும் இனி நானே அனைத்தும் உங்களுக்கு என்பதை தன் ஒவ்வொரு அசைவிலும் அவர்களுக்கு உணரவைத்துக் கொண்டிருந்தான்… தங்கைகளுக்கு மட்டுமல்ல… தாய்க்குமே…


ஆக மொத்தம் ரிஷியின் குடும்பம் கண்மணி இல்லத்திற்கு இடம்பெயர்ந்திருக்க… ரிஷியின் இல்லத்தில் கண்மணி இடம்பெயர தன் கடமையை செவ்வனே ஆற்ற ஆரம்பித்திருந்தது….


---


ரிஷி குடும்பம் இங்கு வந்து முழுதாக ஒரு மாதம் முடிந்திருக்க… ரித்விகாவும் பள்ளிக்குச் செல்லவும் ஆரம்பித்திருந்தாள்…


பள்ளி தொடங்கிய முதல் வாரம் என்பதால்… ஆசிரியரான கண்மணி ரித்விகாவை விட சீக்கிரமாக பள்ளியை விட்டுக் கிளம்பி விடுவாள்…


கண்மணி கூட ரிஷியிடம் கேட்டுப் பார்த்தாள்…. ரித்விகாவை தானே பள்ளிக்கு அழைத்துச் சென்று… வரும்போது அழைத்து வருவதாக கண்மணி ரிஷியிடம் கேட்க… ரிஷியோ வேண்டாமென்று மறுத்து விட்டான்…


கண்மணியும் விட்டு விட்டாள்… ரிஷியின் இன்றைய நிலையைப் பார்க்கும் போது அவன் மகிளா விசயத்தில் எடுத்த முடிவு சரியே என்று கண்மணிக்குத் தோன்றினாலும் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை… ஆக ரிஷி மேல் கண்மணிக்கு இருந்த கோபம் எல்லாம் போய்… மகிளா என்ற பெண்ணுக்காக மட்டுமே… சிறு வருத்தமே அவன் மீது என்ற நிலைமைக்கு இறங்கி வந்திருந்தாள்…


ஆனால் ரிஷி கண்மணியின் மேல் கொண்ட கோபத்தை முற்றிலும் விடுத்திருந்தானா என்றால்… இல்லை என்றே சொல்ல வேண்டும்… அன்று கண்மணியிடம் குறும்பாக நடந்து பாட்டு பாடினது எல்லாம் நட்ராஜ் தன்னிடம் காட்டிய அக்கறையில் வந்த எல்லை மீறிய மகிழ்ச்சியே தவிர… கண்மணியிடம் கொண்ட கோபம் குறைந்து இல்லை…


அதே நேரம் கண்மணியிடம் இன்னும் அவன் கோபமாகத்தான் இருக்கின்றான் என்பதை அவளிடம் காட்டிக் கொள்ளவும் இல்லை.. ரிஷி தன் மீது இன்னுமே கோபமாக இருக்கின்றான் என்பதைக் கண்மணியும் உணராமலேயே அவன் குடும்பத்திற்கு உதவி செய்து கொண்டிருக்க… அன்றைய தினம் கண்மணி அதைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் வந்தது…


அன்று பள்ளியில் இருந்து வீட்டுக்கு போய்க் கொண்டிருந்தவளின் பைக் திடீரென மக்கர் செய்ய சாலையோரத்தில் தன் வண்டியை நிறுத்தி… அதில் என்ன பிரச்சனை என்று பார்த்துக் கொண்டிருக்க… அதே நேரம் ரிஷி ரித்விகாவை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தவன்… தூரத்தில் வரும் போதே... சாலையோரத்தில் நின்ற கண்மணியைப் பார்த்து விட்டான்…


அவளருகில் வரும் போது பைக்கின் வேகத்தைக் குறைத்து… அவளையே பார்த்தபடி போனாலும்… நிற்க வில்லை அவன்… நிற்காமல் தாண்டி செல்ல… அவனது மனசாட்சி அவனைக் காறித்துப்பாத குறைதான்… வீடு தேடி இதே ரோட்டில் அவன் நடந்து வந்த போது கண்மணி அவனைக் கண்டு தானே வந்து பேசிய காட்சி* இப்போதும் அவனுக்கு நினைவில் வர… அதே நேரம் அவள் மேல் இருந்த கோபமும் சரிசமமாக இருக்க.. வண்டியைத் திருப்பி அவளிடம் போவோமா வேண்டாமா என்று யோசனையோடேயே பைக்கின் வேகத்தை ஆமை வேகத்திற்கு மாற்ற ஆரம்பிக்க… அப்போது அவன் பின்னால் அமர்ந்திருந்த ரித்விகா எதேச்சையாகத் பின்னால் திரும்பிப் பார்த்தபோது… கண்மணியைக் கவனித்து விட…


“அண்ணா… அண்ணா ஸ்டாப் ஸ்டாப்… மணி அக்கா” ரித்விகா… கத்த ஆரம்பிக்க… அதன் பிறகும் ரிஷி தன் பிடிவாதத்தை கண்மணியிடம் காட்ட நினைக்கவில்லை… பைக்கை வளைத்து யூ டர்ன் போட்டு திரும்பியவன்… கண்மணி நின்ற இடத்தில் வந்து நிற்க… தன் முன் வந்து நின்ற இவர்கள் இருவரையும் பார்த்து பைக்கைச் சரிபார்த்தபடியே அவளும் புன்னகைக்க…


“எழுந்திரு… என்னன்னு நான் பார்க்கிறேன்” என்று பிடித்தமில்லாத குரலில் ஏதோ ஒப்புக்கு உதவுபவன் போல சொன்னவன்… அவள் பதிலை எல்லாம் எதிர்பார்க்கவில்லை… கண்மணி அவள் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த சக்கரத்தின் அருகில் இவனும் குத்துக் காலிட்டு அமர்ந்து விட… இப்போது கண்மணி எழுந்து ரித்விகாவின் அருகில் போய் நின்று கொண்டாள்…


அதே நேரம் இவள் சிரித்தபோது அவன் முகத்தைச் சட்டென்று மாற்றிக் கொண்ட விதம் கண்மணிக்கு முதன் முதலாக உறுத்த… யோசனை தான் அவளுக்கும்… இருந்தும்… அவனிடம்


“ப்ரேக் லாம் சரியாத்தான் இருக்கு ரிஷி… ஆனால்… வண்டி மூவ் ஆக கஷ்டமா இருக்கு” என்று அதுவரை தான் பார்த்து கண்டுபிடித்த ஆராய்ச்சியின் முடிவைச் சொல்ல… திரும்பி அவளிடம் ஒரு முறைப்பு பார்வையை மட்டும் காட்டி விட்டு… அவள் பேச்சினைக் கண்டு கொள்ளாத பாவனையில் தன் பணியே கருமம் என செய்து கொண்டிருக்க…


அருகில் இருந்த ரித்விகாவிடம்… கண்மணி முணுமுணுத்தாள்…


“என்னவாம்… என்னவோ விஸ்வாமித்ரர் ரிஷியோட தவத்தை கெடுத்த மேனகை மாதிரி என்னைப் முறைக்கிறாரு உங்க அண்ணண்…


ரித்விகா… இப்போது….


”அது ரொம்ப நாளா... தெரியாதா உங்களுக்கு” என்று பீடிகை போட… கேள்வியான பார்வையில் ஆச்சரியமாக உதட்டைப் பிதுக்கினாள் கண்மணி….


“உண்மையிலேயே மணி அக்கா…உங்களுக்குத் தெரியாதா… அந்த ரோசம் ரோசாப்பூ கதை…” என்று ஆரம்பித்தவளாக… மகிளா காரணமாக தன் அண்ணனுக்கு கண்மணி மேல் இன்னும் கோபமே என்பதை எடுத்துரைக்க…



கண்மணி.. புருவம் உயர்த்தினாள்… அதே நேரம் மனதுக்குள்ளே… ’இவன் இத்தனை நாள் நம்மோடு கோபமாக இருந்திருக்கின்றானா???… அது தெரியாமல் தான் நான் இருந்திருக்கின்றேனா???’ என்று யோசித்த போது…


இருவருமே அவரவர் வேலைகளிம் மூழ்கி விட்டதால் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பே கிடைக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்… அப்படியே பேசினாலும் ரிஷியும் இவளும் பேசிய போது கூட வீட்டு விசயம்… அவன் அம்மாவின் நிலை, ரித்விகா படிப்பு விசயம் என்று ரிஷி குடும்பம் மற்றும் நட்ராஜ் சூழ இருக்கும் போது மட்டுமே விவாதங்கள் நடைபெற்று இருக்க… இப்போது யோசித்துப் பார்த்தால், ரிஷி மிகத் தேவை என்ற விசயங்களுக்கு மட்டுமே… அதுவும் இவளிடம் பேசியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் வந்த போதுதான் வேறு வழி இல்லாமல் பேசி இருக்கின்றான் என்று தோன்றியது அன்றைய அவனது முகபாவனைகள் இன்று அவளுக்கு ஞாபகம் வந்த போது…


கண்மணி இப்படி அவனைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் நினைவின் காரணகர்த்தாவாகிய ரிஷியின் குரல் தான் இப்போதும் அவளைக் கலைத்தது… அந்தக் குரல் கூட இவளை நோக்கி இல்லை… தன் தங்கையிடம் தான்… ஆனால் வார்த்தைகள் கண்மணியைப் பற்றி….


“எல்லாம் நமக்கு மட்டும் தான் தெரியும்னு நினைக்கக் கூடாது ரித்வி… சில விசயங்கள் நம்மளவிட அடுத்தவங்களுக்கும் தெரியும்னு நினைக்கனும்…” என்று ரித்விகாவைப் பார்த்து சொன்னவனின் வார்த்தைகள் ரித்விகாவுக்கு ஒரு சதவிகிதம் கூட இல்லை கண்மணிக்கு என்பதை சிறு குழந்தை கூடச் சொல்லிவிடும்…


“நாம இதைப் பார்க்க முடியாது… மெக்கானிக் தான் பார்க்க முடியும்” சொன்னவன் அடுத்த வினாடியே அந்த ஏரியாவின் மெக்கானிக்கும் அழைத்து சொல்லி விட்டு…எழுந்தபடியே…


“ரெண்டு பேரும் கிளம்புங்க… நான் மெக்கானிக் வந்து பைக்கை எடுத்துட்டு போனவுடனே கம்பெனிக்கு கிளம்புகிறேன்…” என்று சாவியை கண்மனியிடம் நீட்ட…. கண்மணியும் அவன் எதற்கு நீட்டுகிறான் என்று புரிந்தவனாக கையை நீட்ட… அன்று அவள் செய்தது போலவே… மேலே தூக்கி அவள் கையில் சாவியைப் போட்டான்… ஆனால் அவள் போல் இல்லாமல்… மெதுவாக..


கண்மணிக்கு அவன் செய்கை புரிந்தது என்றாலும் கோபம் வரவில்லை… மாறாக சிரிப்புத்தான் வந்தது என்றே சொல்ல வேண்டும்… ஆனாலும் சிரிக்க வில்லை… ஏற்கனவே நம் மீது கோபமாக இருக்கின்றான்… இதில் நாம் வேறு சிரித்து… இன்னும் அவன் கோபத்தை ஏற்ற வேண்டுமா என்று நினைத்தபடி…அடக்கிக் கொண்டாள் புத்திசாலியாக


“ரிஷி சார் கொஞ்சம் தள்ளிக்கிறது… சீட் லாக் ஓபன் பண்ணி பேக் எடுக்க வேண்டாமா…” என்று அவனிடம் சொன்னபடி… அவன் முகத்தைப் பார்க்க… கடுகைப் போட்டால் வெடிக்கும் அளவுக்கு அவன் முகம்…


பேகை எடுத்தபடியே… ரித்வியிடம் திரும்பி கண்சிமிட்டியவள்


“ரித்விமா… ரோசம் ரோசாப்பூ இங்க எக்கச்சக்கமா பூக்குதே… தோட்டம் தாங்கிருமா“ அவன் தங்கையிடமே அவனைப் பற்றி கிண்டல் செய்து விளையாட…


ரித்விகாவும் வந்த சிரிப்பை அடக்கியவளாக… கண்மணியிடம் அவள் அண்ணனை பார்வையாலேயே காட்ட… கண்மணி வந்த சிரிப்பை அடக்குவது அவள் இதழ் கடித்து மறைப்பதிலேயே கண்டுபிடித்து விடலாம்… அவள் பேசினாலே கன்னக் குழி விழும்… இதில் அவள் இதழ் சுழித்ததால்… இன்னும் ஆழமாக விழ…


”அக்கா… ஹையோ அழகுக்கா…” சொன்ன ரித்விகா… தன்னையுமறியாமல் கண்மணியின் அருகில் ஓடிப் போய் அவள் கன்னக் குழியைத் தொட்டுப்பார்த்தவள்…


”பொறாமையா இருக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்தால்… கன்னத்துக் குழி உங்களுக்கு மட்டும் விழுதுன்னு… அதிலயும் மணி அக்கா உங்களுக்கு “ என்ற போதே… காலியான ஆட்டோ அங்கு வர… தங்கையை முறைத்தபடியே நிறுத்திய ரிஷி… ஓட்டுனர் யாரென்று… குனிந்து பார்க்க…


”ஆர் கே அண்ணாத்த… நான் தான்… வேலனோட சகாதான்” என்று ரிஷிக்கு வணக்கம் வைக்க… ரிஷி அவனிடம் முறுவலித்தபடி… இவர்கள் புறம் திரும்பியவன்… கண்மணியையும் ரித்விகாவையும் அதில் ஏறச் சொல்ல…


ஏறிய கண்மணியைப் பார்த்த அந்த ஆட்டோ ஓட்டுனர்…


“ அட நம்ம மணி அக்காவா… “ என்று சினேக புன்னகை பூக்க…


அதே நேரம் ரிஷி… ஓரத்தில் அமர்ந்திருந்த ரித்விகாவிடம்


“ரித்வி… வர வர அதிகமா பேசிட்டு இருக்க… ஒரு நாள் பாரு…” என்று கோப முகத்தைக் காட்ட… ரித்வியின் முகம் சட்டென்று மாறியது அவள் அண்ணன் காட்டிய கோபத்தில்… அதே கோபத்தோடு ஸ்கூல் பேக்கை மார்போடு அணைத்து உம்மென்று வந்து கொண்டிருக்க…


அதை உணர்ந்த கண்மணி… அவளிடம் திரும்பி…


“ரித்விம்மா… இந்த ரோச ரோசாப்பூக்கே இப்படி ஆனா என்ன அர்த்தம்… “ என்று ரித்விகாவை சமாதானப்படுத்துவதற்காக அவளை மாதிரியே பேச ஆரம்பிக்க… ரித்விகா முகம் இப்போது சிரிப்பை பூசிக் கொள்ள…


“ஹான்… இதுதான் ரித்விம்மாக்கு அழகு…” என்றவள்…


“என்ன… உங்கண்ணா நம்மகிட்ட காட்டின ரோச ரோசாப்பூவை… மகிளாகிட்டையும் அவங்க அப்பாகிட்டயும் காட்டி இருக்கலாம்… கல்யாண மாலையாவது கட்டி இருக்கலாம்” என்று கண்மணி நகைச்சுவைக்காக சொன்னது என்றாலும்... மனதில் உள்ளததைத்தான் சொன்னாள் என்றே சொல்லவேண்டும்… தன் கோபத்தை காட்டுகிற இடத்தில் அவன் காட்டி இருந்தால்… மகிளா அவனை விட்டு விலகி இருக்கவே மாட்டாளே… இனி என்ன சொல்லி என்ன பிரயோஜனம்… மகிளாவுக்கு இன்னும் 15 நாட்களில் திருமணம்…


ரித்விகா இப்போது…


“ப்ச்ச்… மகிளா நல்லா இருப்பா… அண்ணா அன்னைக்கு மகிளாவை வேண்டாம்னு சொன்னது சரிதான் அக்கா…” எங்கோ பார்த்தபடி சொன்ன ரித்விகா…


“மகிளாவை நான் வா போன்னு சொல்லாமல் மரியாதை கொடுத்திருந்தால்… அவ எங்கள விட்டு போயிருந்திருக்க மாட்டாளோ” கவலையோடு சொன்ன போது கூட ரித்விகா மகிளாவுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்பது வேறு விசயம்…


“எங்க போனாலும் நாங்க மூணு பேரும் தான் போவோம்… ஊர்ல எல்லோரும் முப்பெரும் தேவியர்னு தான் சொல்வாங்க தெரியுமா” சொல்லும் போதே ரித்விகாவின் ஒவ்வொரு வார்த்தையிலும் மகிளாவைப் பிரிந்த துயரம் மட்டுமே…


”ஆனால் ஒண்ணு எங்க மகிளா எங்க இருந்தாலும் சந்தோசமா இருப்பா… சந்தோசமா இருக்கனும்” என்றவள் அதற்கு மேல் பேசாமல் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் தன் கவலையை மறைக்க… மறக்க…


ரித்விகாவின் இந்த குணங்கள்தான் கண்மணிக்கு மிகவும் பிடிக்கும்… அந்த வயதுக்கு உரிய குறும்புத்தனமும் இருக்கும் அதே நேரம் பெரிய மனுசி போல் மாறிப் பேசும் தோரணையும் இருக்கும்… தேவைக்கு ஏற்ற இடத்தில் அப்படியே மாறிவிடுவாள் ரித்விகா…


இருவரும் பேசியபடி வீட்டை அடைந்த போது… கண்மணி மட்டும் தனக்குள் முடிவெடுத்துக் கொண்டாள்… அதாவது ரிஷியோடு சமாதான உடன்படிக்கை மேற்கொள்வதென்பது…


அவள் கோபம் மகிளாவுக்கான உணர்வுகளுக்கு அவன் மதிப்பு கொடுக்கவில்லை என்பதுதான்… அதே நேரம் அதையே பிடித்துக் கொண்டு அவனோ அவளோ ஒருவரை முறைத்துக் கொண்டு இருப்பது சரியென்றும் படவில்லை… இன்றோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் முடிவு செய்தவளுக்கு ஏதுவாக மெக்கானிக் ஷாப்பில் இருந்து இவள் பைக் வர… அதை வைத்தே ரிஷியிடம் சமாதான உடன்படிக்கைக்கும் திட்டமிட்டாள் கண்மணி…


-----

கிட்டத்தட்ட இரவு 10 மணி… நட்ராஜ் பெரும்பாலும் 7 மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுவார்… 7 மணிக்குள் வீட்டுக்கு வந்து விட வேண்டும் அதை நினைவில் வைத்தே அவரின் அன்றாட வேலைகளையும் தீர்மானித்துக் கொள்வார் நட்ராஜ்… வெளியூர் சென்றால் மட்டுமே இந்த மணிக்கணக்கு தப்பும்…


அதே போல் இன்றும் 7 மணிக்கே வந்து 8 மணிக்கெல்லாம் இரவு உணவை முடித்தவர் அவரின் வழக்கமான… வீட்டின் முன் நின்ற அந்த மாமரத்தின் அடியில் இயற்கை காற்றை வாங்கியபடி எஃப் எம்மில் பாட்டு கேட்டபடியே 10 மணி வரை படுத்திருந்து விட்டு பின் வீட்டில் படுக்கச் செல்வதை இன்றும் செயல்படுத்த ஆரம்பித்தார்


அந்த மாமரத்தடியின் ஒரு பகுதியில் அவர் படுத்திருக்க…. அதன் மறுபகுதியிலோ… கண்மணியும் ரித்விகாவும் …


ரித்விகாவுக்கு அன்று கணக்குப் பாடத்தில் சந்தேகம்…. ரிதன்யாவை இப்போதெல்லாம் தொந்தரவு செய்வதில்லை… காலையில் எழுபவளுக்கு மாலை அவள் அன்னை உறங்கும் வரை தொடர்ந்து வேலைகள் இருந்து கொண்டே இருப்பதால்… அவள் படும் கஷ்டங்களை ரித்விகாவும் உணர்ந்ததால் பாடங்களில் சந்தேகம் என்றால் கண்மணியிடம் வந்து விடுவாள்…


ரித்விகா கணக்குப் பாடத்தில் கேட்ட சந்தேகங்களை அவளுக்குச் சொல்லிக் கொடுத்தபடியே வாயிலையேத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் கண்மணி…


ரிஷியின் வரவுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தாள்… அவளை ஏமாற்றாமல்… ரிஷியும் உள்ளே நுழைந்தவன் வழக்கமாக பைக்கை நிறுத்துமிடத்தில் நின்று…


“ரித்தி இங்க வா”


ரிஷி வேகமாக அங்கிருந்து ரித்விகாவை சத்தம் போட்டு அழைத்தான் நட்ராஜும் அங்கு இருக்கின்றார் என்று தெரியாமலேயே…


கண்மணி நட்ராஜ் ரித்விகா மூவரும் ரிஷி இருந்த திசையை நோக்க… கண்மணிக்கு மட்டும் ரிஷி ஏன் இப்படி கத்துகிறான் என்று காரணம் புரிய… அவள் முகம் அர்த்தத்துடன் கூடிய குறும்பு புன்னகையை பூசியது…


தன் அண்ணன் அழைத்தவுடன் என்னவோ ஏதோவென்று ரித்விகா அவன் அருகில் போக… கண்மணியும் அவள் பின்னாலேயே போக…


கண்மணியை முறைத்தபடியே…


“ரித்வி… உங்க மணி அக்காவை அவங்க பைக்கை எடுத்து வேற இடத்தில வைக்கச் சொல்லு” என்க


ரித்விகா பெருமூச்சு விட்டவளாக


“இதுக்குத்தானாண்ணா…இப்படி கத்துன”


“ரித்வி… நான் தான் இங்க ஹவுஸ் ஓனர்… எங்க வேணும்னாலும் வைக்க உரிமை இருக்கு” கள்ளக் கன்னக்குழி சிரிப்போடு அதே நேரம் அதை மறைக்காமல் கண்மணி சொல்ல…


ரிஷிக்கும் ரித்விகாவுக்கும் நன்றாகவே தெரிந்தது… கண்மணி வேண்டுமென்றேதான் இங்கே தன் வாகனத்தை நிறுத்தி இருக்கின்றாள் என்பது… அதிலும் ரித்விகாவுக்கு கண்மணி அக்கா தன் அண்ணா அவள் மீது கோபத்தோடு இருப்பதை முடித்துக் கொள்ளும் முடிவோடுதான் இதைச் செய்திருக்கின்றாள் என்பது புரிய… அந்தப் புரிதலில் வந்த சிரிப்பை அவள் கண்களிலும் கொண்டு வர… கண்மணி சைகையாலேயே அவளை அடக்க… ரித்விகாவும் அடங்கினாள்…


“ரித்வி… மேடத்தோட பைக்கை எடுக்கச் சொல்ற அளவுக்கெல்லாம் பெரிய ஆளு இல்லை… என் பைக்கை எங்க நிறுத்தறது… ஹவுஸ் ஓனரா அதைச் சொல்லச் சொல்லு நிறுத்திக்கிறேன்…” என்று கடுகடுத்தவாறே... வாடகை வீட்டுக்காரனாக...கேட்க


“ரித்விம்மா… உங்க அண்ணா ஹவுஸ் ஓனரைப் பார்த்த உடனே முகத்தை தூக்கி வச்சுக்கிறாருதானே… முகத்தை தூக்கி வச்சுக்க தெரிஞ்ச உங்க அண்ணாக்கு அதே மாதிரி பைக்கை தூக்கி வச்சுக்க தெரியாதா என்ன” கண்மணி சொல்ல


ரித்வி… அவளைப் பார்த்து ஹைஃபை அடித்தவளாக…


“மணி அக்கா… உங்க லெவலே வேற தான்” என்ற போதே…. ரிஷி பல்லைக் கடித்தபடி ஏதோ பேசப் போக…


அதே நேரம்… என்ன நடக்கிறதென்ற ஆராய்ச்சி பாணியில் துண்டை உதறியபடி நட்ராஜ் அங்கு வர… நட்ராஜ் அங்கிருந்ததை அப்போதுதான் பார்த்தவனாக ரிஷி அமைதியாகிவிட்டான்…


கண்மணியிடம் கோப முகத்தைக் கூட காட்ட முடியவில்லை…


“ஒண்ணும் இல்லப்பா… மெக்கானிக் பைக்கை மாத்தி இந்த இடத்தில நிறுத்திட்டு போயிட்டான்… அதுதான்… நீங்க போய் தூங்குக்க….” என்று கூற… ரிஷியும் தலை ஆட்ட… நட்ராஜும் போய் விட்டார்


ரிஷிக்கு இப்போது உண்மையாகவே… அப்படித்தான் இருக்குமோ என்ற சந்தேகம் வர… பேசாமல் கண்மணியின் பைக் அருகே நிறுத்தப் போக…

“பாஸ்(Pass) கொடுங்க ரிஷி பாஸ்(Boss)… அப்போதான் பைக் பக்கம் நிறுத்த அனுமதி அளிக்கப்படும்”


கண்மணி வேண்டுமென்றே வம்பிழுக்கின்றாள் என்பது ரிஷிக்கு தெள்ளத் தெளிவாக இப்போது விளங்க… அதற்கு மேல் அவனாலும் அவன் கோபத்தை அவளிடம் இழுத்துப் பிடிக்கவில்லை…


தலையைக் கோதியபடியே தன் கோப முகத்தை மாற்றி… புன்னகை முகத்துடன்


“என்ன பிரச்சனை கண்மணி உனக்கு… என்ன வேண்டும் சொல்லு…” சமாதான உடன்படிக்கை அங்கு தொடங்க ஆரம்பிக்க… நடுவராக இருந்த ரித்விகா… இருவருக்குமான சமாதான உடன்படிக்கையை எடுத்து வைக்க… இருவர் சார்பாகவும் எடுத்து வைக்க… முடிவு ரிஷி கண்மணிக்கு இடையேயான கோபத்திரை விலக…


“நீ என்னைக்கு இந்த வானரத்தோட சேர்ந்து கூட்டணி வச்ச… “ கண்மணியிடம் கேட்டபடியே… தனது பைக்கை நிறுத்த… கண்மணியும் அவளது பைக்கை அங்கிருந்து எடுத்து வழக்கமாக தான் நிறுத்தும் இடத்திற்கு கொண்டு நிறுத்தினாள்…


“ஹல்லோ…. பார்த்தீங்களா பார்த்தீங்களா… காரியம் முடிஞ்சதும் கழட்டி விடறீங்களே” என்று இடுப்பில் கை வைத்து இருவரையும் பார்த்து முறைக்க…


முறைத்த தன் தங்கையைப் பார்த்து சிரித்தபடி…


“ஏய் குட்டிச்சாத்தான்… முகத்தை தூக்கி வச்ச மாதிரி பைக்கை தூக்கி வைச்சுக்கனுமா… உன் மணி அக்கா சொன்னா நீ சிரிப்பியா என்ன” சொன்னவன்


“பைக்கை தூக்கவா.. இப்போ பாரு…” என்றபடி ரித்விகாவின் அருகில் போக… அவளோ பயந்தது போல பாவ்லா காட்டி ஓட எத்தனிக்க


ஒரே எட்டில் தன் தங்கையைப் பிடித்தவன்… அவள் மறுக்க மறுக்க அவளைத் தூக்கி தலைக்கு மேலே உயர்த்தி உடற்பயிற்சி செய்வது போல செய்து காட்டி… பின் இறக்கிவிட்டவன்... பின் அவள் தோள் மேல் கை போட்டபடி தாஜா செய்ய ஆரம்பிக்க…


“போடாண்ணா… உன் பேச்சு கா... சொன்னது அவங்க… பனிஷ்மெண்ட் எனக்கா“ என்ற் அவள் கேட்ட கேள்வியில்


“அடிப்பாவி… சொர்ணாக்காகிட்ட அடி வாங்க வைக்காமல் விட மாட்டா போலயே” ரிஷி உள்ளுக்குள் அரண்டாலும்… அதைக் காட்டிக் கொள்ளாமல்


“அண்ணாக்கு பசிக்குதுடா… கிச்சன்ல என்ன இருக்கோ… அதை தட்ல போட்டு எடுத்துட்டு வா” என்று பேச்சை வேண்டுமென்றே திசை மாற்றினான் கண்மணியை ஓரக்கண்ணால் பார்த்தபடியே…


அங்கு ஒரு எதிர் வினையும் இல்லாமல் இருக்க... நிம்மதி ஆனவன்


”இதோண்ணா… தோசைதான் ஹாட்பாக்ஸ்ல ரிது போட்டு வச்சுட்டா… சாப்பிடலாம்… நானும் சாப்பிடலை மணி அக்காவும் சாப்பிடலை…” ரித்விகா சொல்ல


ரிஷியும்… கண்மணியையும் அவர்களோடு வந்து சேர்ந்து சாப்பிடச் சொல்ல… முதலில் தயங்கி பின் அவர்களோடு இணைந்து கொண்டாள்…


ரித்விகா ஒரே தட்டில் தனக்கும் அண்ணனுக்குமாக சாப்பாடை எடுத்து வர… ரிஷி தன் தங்கைக்கு ஊட்டியபடியே தானுமாக சாப்பிட்டுக் கொண்டிருக்க… கண்மணியும் அவளுக்கு தோசை சுட்டு எடுத்துக் கொண்டு…. வந்து சேர்ந்தவள் தானும் சாப்பிட ஆரம்பிக்க…


“அக்கா எனக்கு” என்று கண்மணியிடம் ஆவென்று வாயைத் திறக்க… கண்மணியும் சிரித்தபடி அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தாள்… கண்மணி வீட்டில் இருக்கும் போது … தாயின் நினைவில் அழுது பிடிவாதம் பிடித்த போது… அவளைச் சாப்பிட வற்புறுத்தி கண்மணி ஊட்டி விட்டிருக்க… ரிஷி இருவரையும் ஆவென்று பார்த்தபடி இருந்தான்


”அண்ணா… நீயே சாப்பிடு… நான் அக்கா கிட்ட வாங்கிக்கறேன்…. “ என்று சொல்ல… முறைத்த தன் அண்ணனிடம்…


“உன் தலைஎழுத்து… உன் பிரிய தங்கச்சி ரிதா செய்த கேவலமான சட்னியைச் சாப்பிடனும்னு…. எனக்கென்ன தலை எழுத்தா… எனக்கு மணி அக்கா இருக்காங்களே” என்று தப்பித்துக் கொள்ள


ரிஷி இப்போது முறைக்கவில்லை…


“என்னை விடு ரிதி… இதெல்லாம் டெம்ரவரி ஃபேஸ்(phase) தான்… நம்ம ரிதன்யாவை கட்டப் போறவனை நினைத்தால் தான்” என்று சொல்ல… ரித்விகாவுக்கு புரை ஏற… கண்மணி வேகமாக அவள் தலையைத் தட்ட…. ரிஷி அருகில் இருந்த தண்ணீரை எடுத்து தங்கைக்கு குடிக்கக் கொடுத்தான்…


அதன் பிறகு மூவருமாக சந்தோசமாகப் பேசியபடி அவரவர் வீட்டுக்குப் போக… ரிஷி அவன் வீட்டுக்குள் நுழையப் போவதற்கு முன்…


“குட் நைட்… ஓனரம்மா’ என்று சொல்லி விட்டுப் போக…புன்னகை முகத்துடன் தலை அசைத்தாள் கண்மணி…


ரித்விகா உள்ளுக்குள் நுழையும் போதே… தன் அண்ணனிடம்


“வா வா உன்னை ரிதா கிட்ட போட்டுக் கொடுக்கிறேன்… என் வருங்கால மாமாவைப் பற்றியா பேசுற”


“சொல்லிக்கோ… மச்சான் துணை இல்லாமல் மலை ஏற முடியாதுன்னு சொல்லியே என் மச்சானையே கவர் பண்ணிருவேன்” என்று தங்கைக்கும் தனக்கும் படுக்கையை ஹாலில் விரித்தவன் தங்கையைத் தூங்க வைத்து விட்டு… அறையினுள் உறங்கிக் கொண்டிருந்த தாயின் அருகில் அமர்ந்தவன்... வழக்கமாகிப் போன பழக்கமான… அவர் கைகளுக்கும் காலுக்கும் செய்ய வேண்டிய சில பயிற்சிகளை… அவர் உறக்கம் கலையாமல் செய்து விட்டு… பின் தன் படுக்கையில் படுத்தான் ரிஷி… உறக்கம் என்பது இல்லாமல் நாட்காட்டியை பார்த்தவன்… அதில் இருந்த மகிளாவின் திருமண தினத்தை வெறித்தபடி மரக்கட்டையாகிப் போன மனதை இன்னும் இன்னும் மரத்துப் போக வைக்க தனக்குள் முயன்றான்…


இங்கு தன் அறையில் படுத்திருந்த கண்மணிக்கோ… அர்ஜூன் ஞாபகம்… யார் யாரையோ சமாதானப்படுத்தி சுலபமாக… தன்னோடு பேச வைக்க முடிந்தவளால்… அர்ஜூனை சமாதானப்படுத்த முடியவில்லையே என்று தனக்குள் யோசித்துக் கொண்டிருக்க…


அங்கு அமெரிக்க கண்டத்தில் வசித்த அர்ஜூன் விக்கியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்….


“விக்கி… உன் அக்கா லூசு மாதிரி பண்ணினாள்னா அதுக்கு நான் பொறுப்பேற்க முடியுமா என்ன… எனக்கும் மனசு இருக்கு… நானும் லவ் பண்றேன்.. சும்மா இல்லை… 7 வருடக் காதல்… என்னோட அத்தை பொண்ணு…. அடுத்த மாதம் இந்தியால மேரேஜ்….”


நிவேதா என்பவளோ…அலட்சியமாக அர்ஜூனைப் பார்த்து முறைத்தாள்


‘சுத்த ஹம்பக் விக்கி… இங்க வளர்ந்தவருக்கு… அத்தை பொண்ணு மேல காதலாம்… அத்தை பொண்ணு... 7 வருச காதல்னு நம்ப முடியுதா என்ன...என்னை ஏமாத்த பொய் சொல்றாரு…”


“ஹேய்… நான் இங்க வளரத்தான் செய்தேன்… என்னோட பத்து வயசு வரைக்கும் இந்தியாலதான் வளர்ந்தேன்… இப்போதும் என் பிஸ்னஸ் இங்கேயும் அங்கேயும் தான்… என் லவ்வப் பற்றி பேச இனி ஒரு வார்த்தை பேசுன…”


இவர்களின் வாக்குவாதத்தில்… இருவருக்கும் இடையில் இருந்த விக்கிக்குத்தான் தலை சுற்ற ஆரம்பித்து இருந்தது….


இருந்தும் அர்ஜூன் தெளிவாகத்தான் இருக்கின்றார்… தன் பெரியப்பா மகள் தான் குழம்பி இருக்கின்றாள் என்பது விக்கிக்கு புரியாமல் எல்லாம் இல்லை…


நிவேதா… விக்கியின் புத்திசாலித்தனத்துக்கும்… சாதூர்யத்துக்கும் முதல் புள்ளி அவளே… இரண்டு வயது மூத்தவள் என்றாலும் தோழியே அவனுக்கு… கல்வியில் தொழிலில் அவனுக்கு அடுத்த நிலை என்ன அதை நோக்கிக் கூட்டிப் போகும் ஆலோசகர் அவள்… ஆஸ்திரேலியாவில் இவன் படிக்க அத்தனை வழிகளையும் காட்டி தாத்தாவிடம் சம்மதம் வாங்கித் தந்த பெருமை நிவேதாவையேச் சாரும்… அப்படிப்பட்ட தன் சகோதரி... இந்த அர்ஜூனுக்காக தன் இயல்பை மாற்றி பெண்ணாக துடிப்பது வேதனை தான் அளித்தது அவனுக்கு,…


அதே நேரம் அர்ஜூனும் எப்படிப்பட்ட உயரத்தில் இருப்பவன் என்று தெரியும் அர்ஜூனிடம் விக்கியை அறிமுகப்படுத்தி அவனிடம் பழக வைத்தது நிவேதாவேதான்… அவனோடு பழகினால் தொழில் துறையின் சாதக பாதகங்களை அறிந்துகொள்ள முடியும் என்று அறிமுகப்படுத்த… தன் தமக்கை கைகாட்டுபவன் நிச்சயம் விசயம் தெரிந்தவன் என்பது தெரிந்து அர்ஜூனுடன் பழக ஆரம்பித்தவன்… பின் அர்ஜூன் புத்திச்சாலித்தனமும்.. கம்பீரமும்… எதிரிகளை வீழ்த்தி தொழில் நடத்தும் நிர்வாகத் திறமையும்… என விக்கியை அவன் கவர்ந்து விட அர்ஜூனை தன் ஆத்மார்த்த குருவாகவே நினைத்தான் விக்கி… அந்த அளவு விக்கியின் மனதில் அர்ஜூன் இடம் பிடித்திருக்க…


அப்படிப்பட்ட அர்ஜூன் தான் ரிஷியிடம் வீழ்ந்தான்… கண்மணியையும் மொத்தமாக இழந்தான்…. சாம்ராஜ்யங்களே உணர்வுகள் என்று வந்தால் அழிந்து தரைமட்டமாகும் எனும்போது…. அர்ஜூனெல்லாம் எம்மாத்திரம்…


அர்ஜூன் தன் கருத்தைச் சொல்லிவிட்டு… கிளம்பி விட… நிவேதாவோ விக்கியிடம் அர்ஜுனைப்பற்றி புலம்பியபடியே இருக்க… அவளைத் தனியே விட மனமின்றி… வேறு வழியில்லாமல் அவள் வீட்டிலேயே தங்கி விட்டான் விக்கி…


காதல் என்ற உணர்வுகள் இப்படி எல்லாம் ஆட்டிப்படைக்குமா என்ன…. வேறொருத்தியைக் காதலிக்கின்றேன் என்று சொன்னவனிடம் இன்னும் காதலை எதிர்பார்க்கும் தன் சகோதரியின் முட்டாள் தனமும்… அதே போல்… அமெரிக்கா என்னும் மேலைநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அர்ஜூனின் அத்தை மகளின் மீதான காதல்.. அதுவும் ஏழு வருடமாக… விக்கிக்கு இன்னும் ஒரு ஆச்சரியமே… காதல் என்ற ஒன்று வந்து விட்டால் புத்திசாலியும் முட்டாளாகிறானோ… உணர்ச்சிகளின் வசம் தன்னை இழந்து விடுகிறானோ… படுக்கையில் படுத்தபடி யோசிக்கையிலேயே….


விக்கியின் கைகள் அவனது அலைபேசியில் வைத்திருந்த… ரிஷியின் மொபைல் ஸ்கீரின் சேவர் புகைப்படத்தை கள்ளத்தனமாக தனது மொபைலில் எடுத்து வைத்திருந்த புகைப்படத்தில் வந்து நின்றது…. தனியாகவெல்லாம் ரிதன்யாவை மட்டும் பிரித்து எடுத்து வைக்கவில்லை…. ஆனால் ரிதன்யாவை மட்டுமே அவனது பார்வை மையம் கொண்டிருக்க... நிச்சயமில்லாத காதல் தான்… ஆனால் அதே நேரம்… தன் காதலுக்கான நேரம் கண்டிப்பாக ஒருநாள் வரும் என்ற உணர்ச்சி வயப்படாத பொறுமையும் அவனுக்கு இருந்தது…


இப்படி இவன் தன்னவளைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்க… விக்கியின் நினைவுகள் அவனவளுக்கு கடத்தப்பட்டனவோ என்னவோ… அன்று வழக்கத்தைக் காட்டிலும் ஒரு மணி நேரம் முன்னதாகவே… அதிகாலையிலேயே ரிதன்யா விழித்திருந்தாள்…


அறையில் இருந்து கூடத்துக்கு வந்தவள்… ரிஷி ரித்விகாவைப் பார்க்க இன்னும் உறங்கிக் கொண்டிருந்தனர்… ஏனோ அன்று அவளுக்கு திடீர் உற்சாகம்… தன் அண்ணன் எழுந்து அவளுக்கு உதவி செய்யும் முன் எல்லா வேலைகளையும் செய்து முடித்து ஆச்சரியம் காட்ட வேண்டும் என்று சுறுசுறுப்பாக ஆரம்பிக்க… நாம் ஒன்று நினைத்தால் விதி ஒன்றுதானே நினைக்கும்… ரிதன்யா விதியின் வலையின் மாட்டினாள்… அப்படி சொல்வதை விட கண்மனி ரிஷியின் மனைவியாக வருவதற்கு சாதகமான காரணிகள் உச்ச கட்டத்திற்கு வந்தன என்று சொல்ல வேண்டும்…


பூரி சுடுவதற்காக அடுப்பில் எண்ணையை வைத்து விட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தவள் ஒரே நேரத்தில் பூரிக்கு தேவையான குருமாவையைம் தயார் செய்து கொண்டிருக்க… அதற்கான தாளிக்கும் பொருளை எட்டி எடுக்க… அடுத்த நொடி… கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய்.. ரிதன்யாவின் கைகளைப் பதம் பார்த்தது...


ஆவென்று அலறிச் சரிந்தவளுக்கு அதற்கு மேல் நினைவு ஒன்றும் இல்லை… நினைவு திரும்பிய போதோ மருத்துவமனையில் இருந்தாள்….




2,730 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page