அத்தியாயம் 25-2:
மெயின் கேட்டை வெறித்தபடியேதான் அமர்ந்திருந்தாள் கண்மணி உச்சக்கட்ட கோபத்தோடு…. ரிஷி என்பவன் மேல் இருந்த ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத அனுதாப உணர்வு முற்றிலுமாக போயிருந்தது அவளுக்கு… வாழ்க்கையை எதிர் நோக்க தெரியாத கோழையாக… வாழ்க்கையின் வலிகளை தாங்கிக் கொள்ள முடியாத முதுகெலும்பு இல்லாதவனாக…. சுயநலக்காரனாக… மட்டுமே ரிஷி அவள் கண்களுக்கு இப்போது தெரிந்தான்
மணி நள்ளிரவு இரண்டாகியிருக்க… ரிஷி இன்னும் வரவில்லை…
ரிஷியிடம் பேச வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக…. இரவு உடைக்குக் கூட மாறாமல்… சல்வாரில் தான் இருந்தாள் கண்மணி…
எப்படியும் அவன் தங்கையை அழைக்க வந்துதானே ஆக வேண்டும்.. அப்போது தான் கேட்கும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்… மகிளாவால் கேட்க முடியவில்லை பாவம் அவள்.. ஆனால் தான் கேட்டே ஆக வேண்டும்… என்ற கோபம் மற்றும் பிடிவாத உணர்வில்
கண்மணியால் தாங்கவே முடியவில்லை…. அவள் கண்முன் ஒரு பெண்ணுக்கு நடந்த அவமானத்தை….
காதலன் என்ற போர்வையில் ரிஷியும்… தந்தை என்ற பெயரில் நீலகண்டனும்… மகிளாவின் உணர்வுகளை ஒட்டவே வைக்க முடியாத உடைந்த கண்ணாடிச் சில்லுகளாக சிதறடித்து விட்டிருந்தனர்…
மகளிர் காவலர் வந்த போது நீலகண்டன் கண்களில் கூட பயம் இருக்க ரிஷியின் கண்களில் கிஞ்சித்தும் பயம் இல்லை… தைரியமாகவே எதிர்கொண்டான்…
விரும்பினேன்தான்… எப்போதோ அவளிடமிருந்தும் விலகியும் விட்டேன் என்றும்… ஏற்கனவே எல்லாவற்றையும் எதிர்பார்த்து வைத்திருந்திருப்பான் போல… எந்தக் கேள்வி கேட்டாலும்… பதில் கொடுக்க தயங்கவே இல்லை… நீலகண்டனோடு சேர்ந்தே காவலரிடம் பேசினான் ரிஷி… மகிளாவுக்காக அவள் வாழ்க்கைக்காக… இருவருக்குமான மணவாழ்க்கை சரிவராது என்று தான் விலகிய காரணத்தைச் சொல்லி விட்டு… இப்போது இருக்கும் தனது நிலையையும்… தன் அன்னை நிலையையும் விளக்க…
மகிளாவும் போராடினாள் தன் காதலுக்காக… கண்மணியும் போராடினாள் மகிளாவுக்காக…
”இன்னைக்கே உங்களை மேரேஜ் பண்ணச் சொல்லலையே ரிஷி… ஜஸ்ட் அவங்களுக்காக நீங்க இருக்கீங்கன்ற நம்பிக்கையைக் கொடுங்கன்னு சொல்கிறேன்” என்று எதிர்வாதம் செய்ய…
ரிஷி… ஒரே வாக்கியத்தில் முடித்து விட்டான்…
“இவர் பொண்ணை என்னால வாழ வைக்க முடியாது… இன்னைக்கு நீங்க எல்லாரும் இருப்பீங்க… நாளைக்கு என்னோட வாழ்கிற வாழ்க்கைல இவ கஷ்டத்தை அனுபவிக்கும் போது… நாட்டாமை பண்ற நீங்கள்ளாம் எங்களை வாழ வைப்பீங்களா… அவ அப்பா மட்டும்தான் இருப்பார்… புரிஞ்சுட்டு விலகிட்டேன்னு… நீங்க அந்தப் பொண்ணை அவரோட அனுப்பி வச்சுருங்க மேடம்… அந்தப் பொண்ணு நல்லா இருக்கனும்னா… அவளுக்கு புத்தி சொல்லி அனுப்பி வைங்க…” என்றவன்…
கண்மணியை நோக்கி…
“என்ன…. எனக்கு எதிரா... வேற ஏதாவது உன் நீதி தராசுல எக்ஸ்ட்ரா போடனுமா…” என்று குரோதத்துடன் கேட்டவன்… மகிளாவின் புறம் திரும்பினான்…
“உனக்கும் தான்… உங்கப்பா பார்த்து வச்சிருக்கிற மாப்பிள்ளை… ரொம்ப நல்லவர்… அவரையே மேரேஜ் பண்ணிக்க… காதலிச்சவங்க எல்லாம் சேர்றதுதான் நீதி நியாயம்னா இங்க அத்தனையும் சூனியம் தான் ஆகி இருக்கும்… புரிஞ்சு நடந்துக்கோ… “ என்றவனை அமைதியாக இருக்கச் சொன்ன ஆய்வாளர்.. மகிளாவிடமும் ரிஷியிடமும் தனித்தனியாக விசாரிக்க… முடிவில் அவர் தெரிந்து கொண்டது இதுதான்…
ரிஷி…. மகிளா நல் வாழ்க்கைக்காக மட்டுமே இவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதையும்… அதே நேரம் மகிளாவை வேறு எந்த முறையிலும் அவன் ஏமாற்றிவிட்டு தப்பிக்க வில்லை என்பதையும் புரிந்து கொள்ள… அதே நேரம் நீலகண்டனும் அவர் பங்கு வாதங்களை தகப்பனாராக வைக்க… ரிஷி நீலகண்டன் பக்கம் சாய்ந்தது ஆய்வாளரின் தீர்ப்பு…
முடிவு… மகிளாவுக்கு ஆயிரம் அறிவுரைகள் சொல்லப்பட்டு நீலகண்டனோடு அனுப்பி வைக்கப் பட்டிருந்தாள்… உயிருள்ள ஜடமாக…
---
கண்மணியின் நீண்ட காத்திருப்புக்கு பிறகு… கிட்டத்தட்ட மூன்று மணி அளவில் வந்த ரிஷி வழக்கம் போல பைக்கில் இருந்தபடியே கேட்டைத் தள்ள… கதவு திறக்க வில்லை… புருவம் சுளிப்போடு பார்க்க… பெரிய இரும்புச் சங்கிலியோடு கேட் பூட்டப்பட்டிருக்க… நெற்றி சுருக்கமே அவன் யோசிக்கின்றான் என்று சொன்னது…
எப்போதுமே கேட் பூட்டப்பட்டிருக்காதே… எத்தனையோ முறை நேரம் கெட்ட நேரத்தில் வந்திருக்கின்றானே… அப்போதெல்லாம் திறந்தே இருக்கும் கதவுக்கு இன்று என்ன ஆனது யோசித்துக் கொண்டிருக்கும் போதே… கண்மணி அவள் வீட்டில் இருந்து வெளியே வந்தவள்… மெயின் கேட்டையும் திறந்து விட…
இருவருமே ஒருவர் மேல் ஒருவர் கோபமாக இருக்க… இருவரும் ஒருவரை ஒருவர் நேர்கோட்டில் சந்தித்த பார்வையிலும் நெருப்பின் பொறிதான் பறந்தது…
அதே நேரம்… ரிஷி தன் பக்க நியாயத்தையோ… இல்லை அதிகப்பிரசிங்கித் தனமாக அவள் தன் பிரச்சனையில் குறுக்கிட்டதையோ மீண்டும் விவாதிக்க தயாராக இல்லை என்றே சொல்ல வேண்டும்…
அதனால் அவளை முறைப்போடேயே கடந்து சென்றவன்… வழக்கம் போல அறைக்கதவை திறந்து வைத்து விட்டு… ரித்விகாவை அழைத்து வரலாம் என்று தன் பைக்கை நிறுத்திவிட்டு படிகளில் தாவ….
“எனக்கு உங்ககிட்ட பேசனும்…” கண்மணி உரத்துச் சொல்ல…
ஏறியவன்… நிதானித்தான்
“என்ன விசயம்…” – ரிஷி அழுத்தமாக கேட்டான் திரும்பாமலேயே
”இப்போ இல்லை மார்னிங்”- கண்மணி அதே அழுத்ததோடு சொல்ல
கண்மணியின் புறம் திரும்பியவனாக… கூர்பார்வை பார்த்தவன்
“அது மகிளா விசயம்னா… இப்போ இல்லை எப்போதுமே எனக்கு உன்கிட்ட பேச விருப்பம் இல்லை… அதைத் தவிர வேறெதுனாலும்… இப்போதே நான் ரெடி” இப்போது அவளை நோக்கி கீழே படிகளில் இறங்க எத்தனிக்க
இவளும் கைகளைக் கட்டிக்கொண்டபடி
“மகிளா விசயம் தான் நான் பேசனும்… “ அழுத்தமாக ஆணித்தரமாக தன் கருத்தை எடுத்து வைத்து ரிஷியைப் பார்க்க
”உன்னிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை” எள்ளல் பார்வை பார்வை பார்த்தவனாக… அடுத்த வார்த்தை பேசாமல்… மீண்டும் மேலே ஏற ஆரம்பிக்க…
”உங்களை ஒரு பொண்ணு நம்பி வருதுன்னா… அந்தப் பொண்ணு உங்க மேல அவ்வளவு நம்பிக்கை வைத்துதானே ரிஷி… மகிளா உங்க மேல வச்சிருந்த நம்பிக்கைல ஒரு பெர்சண்ட் கூட நம்பிக்கை நீங்க ஏன் உங்க மேல நம்பிக்கை வைக்கலை…”
ரிஷி இப்போதும் நிற்கவில்லை… மாறாக அவனின் வேகம் அதிகரிக்க…
“கேள்விக்கே பயந்து ஓடுகிற ” என்றவள் நிதானித்தவளாக
”கோழை… உங்ககிட்ட பேசி பிரயோஜனமில்லை ….” என்று முடிக்கவில்லை… ரிஷி நின்று விட்டான்… நெற்றிப் பொட்டில் மொத்த கோபமும் முடிச்சுட்டு இருக்க… கண்களை மூடி உஷ்ணப் பெருமூச்சுகளை விட்டு தன்னை அடக்கியவன்… இறங்கியிருந்தான்… அதுவும் ஒவ்வொரு படியாக நிறுத்தி நிதானமாக… வந்தவன் கண்மணியின் அருகில் போய் நிற்காமல் நிறுத்தியிருந்த பைக்கின் மேல் ஏறி அமர்ந்தவனாக…
மணிக்கட்டை இறுகப்பிடித்திருந்த கைப்பட்டன்களை விடுவித்தவனாக… கைப்பகுதி சட்டையைமுழங்கை வரை ஏற்றியபடியே…. சண்டியர் போல ஒய்யாரமாக அமர்ந்திருந்த விதமே… அவனும் இவள் கேள்விகளுக்குத் தயாராகி விட்டான் என்பதைக் காட்ட… அதே நேரம் அவன் அமர்ந்திருந்த விதமே எதிராளியை தவிடுபொடியாக்கவும் தன்னைத் தயார்படுத்திக் கொண்டான் என்பதையும் சொல்லாமல் சொல்ல…
கண்மணிக்கே அவனின் இந்த தோற்றம் புதிதாகத்தான் தோன்றியது… இவன் எக்கேடு கெட்டால் என்ன… இவன் காதல் என்னவானால் நமக்கென்ன என்று தோன்றத்தான் செய்தது அவளுக்கும்… அதே நேரம் அவளுக்குள் எப்போதும் இருக்கும் நீதி தேவதை அவளை அப்படி செய்ய விடாமல் தடுக்க… அவன் அருகில் இல்லாமலும்… அதே நேரம் அவனை விட்டு வெகு தூரம் தள்ளியும் நிற்காமலும் இடைவெளி விட்டு மாடிப்படி தொடங்குகிற இடத்தில் நின்று கொண்டு இவனைப் பார்க்க…
“கேளு…” என்றபடி கைகளைக் கட்டியபடி இன்னும் சாவதனமாக அமர்ந்தவன்… கண்மணியைப் பேசச் சொல்ல..
கண்மணியும் இப்போது பேச ஆரம்பிக்கப் போக…
சட்டென்று கைகாட்டி அவளை நிறுத்தினான் ரிஷி
”எனக்கு ஒரே ஒரு சந்தேகம்…”
“நீ இந்த வீட்டுக்குத்தானே ஓனர்…” நக்கலாகக் கேட்டான் ரிஷி…
“வாட் யூ மீன்” கண்மணி எரி பார்வை பார்த்தாள்
“இல்லை... இந்த அர்த்த ராத்திரில… கட்டின புருசன்கிட்ட கூட எவளும் கேள்வி கேட்க யோசிப்பா… அதுதான் கேட்டேன்... அவ்ளோதான் என் டவுட்.. நீ இப்போ கேளு” எதிராளியின் கோபத்தை வேறு திசையில் சுலமாக மாற்றி விட்டவனாக அர்த்த புன்னகை வைக்க..
அருவருப்பாக கேவலமானப் பார்வை பார்த்தவள்… அதற்கு மேல் ஏனோ அவனிடம் பேசப் பிடிக்கவில்லை என்பதே உண்மை…… ஆக… இவனிடம் இனி பேசுவது தனக்குத்தான் அசிங்கம் என்று முடிவெடுத்தவளாக… தன் இல்லம் நோக்கி நடக்க ஆரம்பிக்க…
”நம்பி வந்த பெண்ணுக்கு இப்படி துரோகம் செய்யற நீயெல்லாம் ஒரு ஆம்பளையா… சாரி சாரி” ரிஷியின் வார்த்தைகள் அவளைத் தொடர்ந்தது
“நம்பி வந்த பெண்ணை வாழ வைக்கிறதுக்குத்தான் ஒரு ஆண்மகனுக்கு அழகு… இதுதானே நீ கேட்க வந்த கேள்வி” என்று வார்த்தைகளை மாற்றி போட்டு இவன் அவளைப் பார்த்துக் கேட்க… கண்மணி திரும்பினாள்…
”ரிஷி மனசாட்சியோடத்தான் பேசறீங்களா… ஒரு நொடி கூட மகிளா கண்ணீர் உங்களை அசைக்கலையா” என்ற போது..
“இல்லை” என்றான் ரிஷி பட்டென்று யோசிக்காமல் …
“ரொம்ப சந்தோஷம்… இதுக்கு மேல எனக்கும் உங்ககிட்ட பேச இஷ்டம் இல்லை… தப்பு செய்றோம்னு தெரியாம செய்றவங்ககிட்ட அதைச் சொல்லி திருத்திக்க வாய்ப்பு கொடுக்கலாம்… தெரிந்தே தப்பு செய்றவங்ககிட்ட வேஸ்ட்தான்… முட்டாள் தனம்… அந்த முட்டாள் தனத்தை செய்ய எனக்கும் பிடிக்கலை… “ என்றவள்…
ரிஷி தற்போது இருக்கும் சூழ்நிலை உணர்ந்தவள்தான்… சொல்லப் பிடிக்கவில்லைதான் ஆனாலும் சொல்ல வேண்டிய கட்டாயத்தில்…
“உங்க அட்வான்ஸை நாளைக்கே வாங்கிக்கங்க… “ என்று முடிக்க…
“கண்மணி இல்ல உரிமையாளர் கண்மணி” இதழ் வளைத்தவன்
“சொன்னா கேட்டுத்தானே ஆக வேண்டும்…” என்று முடித்த போது கண்மணி அவனை முறைப்புடன் பார்க்க… அவனோ இவளை எல்லாம் கண்டுகொள்ள வில்லை மாறாக…. தெரு விளக்கின் வெளிச்சத்தோடு சேர்ந்த நிலவொளியில்… தன் பைக் கண்ணாடியில் தன்னைப் பார்த்தபடி தன் கேசத்தை இருகைகளாலும் மாற்றி திருத்திக் கொண்டிருந்தவனை பார்த்தவளுக்கு பற்றிக் கொண்டுதான் வந்தது…
எப்படி இவனால் இப்படி சாதரணமாக இருக்க முடிகின்றது… இவன் நிலைமை கஷ்டமான நிலைமைதான்… என்னவோ இவன் குடும்பத்திற்கு மட்டும் தான் கஷ்டம் என்பது போல… இவனுக்கு மட்டும் தான் அத்தனை பொறுப்பு இருக்கின்றது போல... மகிளாவை தள்ளி வைத்தது தான் அவளுக்கு பிடிக்கவில்லை…
அதைக் கேட்க வந்த தன்னையே பேச விடாமல் திசை திருப்பி விட்டுவிட்டான் என்றே தோன்ற….
ரிஷி அவளிடம்
“ஏதோ பேச வந்தீங்கன்னு நினைக்கிறேன்… இன்னைக்கு விட்டால் இனி என்னைக்குமே பேச முடியாது மேதகு ஹவுஸ் ஓ..ன.. ர் க.. ண்… ம… ணி அவர்களே” வார்த்தைகளில் நக்கல் வழிந்தாலும்…. அவனுக்குள் கண்மணியின் மேல் இருந்த கோபம் இப்போது முற்றிலுமாக வெளியே வந்திருந்தது… இவள் யார்… தன் விசயத்தில் தலையிட… அதுவும் அதன் உச்சகட்டமாக அவள் செய்த பைத்தியக்காரத்தனம்… காவல்துறை வரை பஞ்சாயத்து செய்ய இழுத்தது… அப்போது காட்ட முடியாத கோபம் இப்போது வெளி வந்து கொண்டிருக்க… வேகமாக அவள் முன்னே வந்து நின்றவன்
“நாட்டாமை… நீதி தேவதைனு மேடத்துக்கு நினைப்பா… உன் உரிமை… உன் நாட்டாமை லாம்… என் வீட்டு வாசல் வெளியே… வாடகை வாங்குகிற அளவுக்குத்தான்… வீட்டுக்குள்ளே இல்லை…. அதெல்லாம் மத்தவங்ககிட்ட வச்சுக்க..” என்று பற்களை கடித்துக் கொண்டு… சொன்னவனிடம் உக்கிரம் மட்டுமே இருக்க… அதைப் பார்த்தவளிடமோ அதை விட கோபம் இப்போது வந்து சேர்ந்திருக்க… நேருக்கு நேராக இருவரும் பார்த்த போது… ரிஷியின் பார்வை வழக்கம் போல அவள் மூக்குத்தியில் பட்டு விலக.. அதுவரை இருந்த உக்கிரம் ஏனோ குறைய… கோபத்தில்ன் இருந்து மீண்டு் அவனாகவே அவன் பைக் இருந்த இடத்திற்கு… மீண்டும் வந்தவன்
”ஆமாம் என்னைப் பற்றி என்ன தெரியும்னு மகிளாவை என் கூட சேர்த்து வைக்க.. இவ்ளோ துடிக்கிற… அவர் யார்னு தெரியுமா… என்னோட மாமா… அவர் பொண்ணை ஏன் எனக்கு கொடுக்க மாட்றாருனு யோசிக்க மாட்டியா”
கண்மணி இப்போது யோசனையுடன் அவனைப் பார்க்க… புருவம் உயர்த்தினான்…
“காரணம் 1 : நான் ஒரு பொம்பளைப் பொறுக்கி… எனக்கெல்லாம் ஒரு பொண்ணோடலாம் செட் ஆகாது”
கண்மணியும் இப்போது நிமிர்ந்திருந்தாள்… அடுத்தடுத்து அவன் சொல்வதைக் கேட்கும் பாவனையில்… காரணம் முதல் காரணமே முற்றிலும் பொய் என்று ஆன பின் அடுத்து என்ன சால்ஜாப்பு வைக்கப் போகின்றான் என்ற ரீதியில்…
“காரணம் 2” விரல்களை காட்டியவன்…
“எனக்கு பெரிய நோய் இருக்கு” கேட்ட போதே கண்மணி உதடுகள் ஒரு பக்கமாக வளைத்து சிரித்தே தன் நம்பாத தன்மையைக் காட்டி விட…
அவளை... அவள் நக்கலைப் பார்த்தபடியே…
“காரணம் 3” என்றவன் இப்போது சற்று தயங்கி சொல்வோமா என்ற ரீதியில் கண்மணியைப் பார்த்த போதே… கண்மணியின் இதழ் சுழிப்பு நக்கலாக இன்னும் வளைய… அவள் ஏளனம் சுள்ளென்று இவனுக்குள் ஏற… வேகமாக அவளருகில் வந்தவன் சட்டென்று அவள் துப்பட்டவை இழுக்க… கண்மணி சட்டென்று சுதாரித்து கைகளில் பிடித்து வைத்துக் கொள்ள… பெருமூச்சு விட்டவன்… துப்பட்டாவையும் விட்டவனாக… அதே வேகத்தில் திரும்பி வந்து தன் பைக் கண்ணாடியில் ஓங்கி குத்த… கண்ணாடி அவன் கைகளில் பட்டு குத்திக் கிழித்து சிதற ஆரம்பித்து வெளியேயும் தெறிக்க ஆரம்பித்திருக்க…
கண்மணிக்கோ அவன் தன் துப்பட்டாவில் கை வைத்து இழுத்த ஆத்திரத்தில் பத்திரகாளியாக நிற்க… அதெல்லாம் அவனை சிறிதளவும் பாதிக்க வில்லை
“நான் ஒரு இம்பொட்டெண்ட் போதுமா… போதுமாடி... இதை நிருபி” கண்கள் சிவக்க அவமானமும்… கோபமும் சேர்ந்து உதடு துடிக்க கத்த ஆரம்பித்தவன்… நொடியில் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன்…
“உன் துப்பட்டாலாம் எனக்கு போதாது... போ… போய்… எனக்கு உன் சுடிதார்… இல்லை புடவையை எடுத்துட்டு வந்து கொடு… போட்டுக்கிறேன்… போதுமா…. நான் பொட்டைதான்…” உச்சஸ்தாயில் கத்தியவனைப் பார்த்து கண்மணி கிஞ்சித்தும் பாவம் பார்க்கவில்லை… அதே நேரம் அவன் தன் துப்பட்டாவை ஏன் இழுத்தான் என்றும் புரிய… இருந்தும் கோபம் மாறவில்லை…
கிட்டத்தட்ட… அவனால் கட்டுப்படுத்த முடியாத உணர்வுகளின் பிடியில் நிற்கிறான் என்றே தோன்றியது… மதுவின் போதையை விட… இது அதிகப்பட்சமாகவே தோன்றியது கண்மணிக்கு… மது அருந்தி வந்தால் கூட வேறு ஏதாவது மாற்று கொடுத்து மெல்ல மெல்ல நிதானத்திற்கு கொண்டு வர வைத்து விடலாம்… இப்போது ரிஷி இருந்த நிலை… உச்சக்கட்ட உணர்சிகளுக்கிடையில் ஆட்கொள்ளப்பட்டு… இருந்த நிலை…
அதே நேரம் கைகளில் ரத்தம் வழிய நின்றிருந்தவனைப் பார்த்து இவள் பதறவெல்லாம் இல்லை… அதே நேரம் அவன் சொன்ன காரணம் அனைத்தும் உண்மையா பொய்யா இவள் ஆராயும் நிலையில் இல்லை.. அது தேவையும் இல்லை இவளுக்கு… ஒன்றே ஒன்று அதை மட்டும் கேட்டுவிட்டால் போதும்..
”உங்க நிலைமை எனக்கும் புரியுது ரிஷி… ஆனால் எனக்கு ஒண்ணு மட்டும் சொல்லுங்க… இப்போ நீங்க இருக்கிற நிலை… மகிளா கழுத்தில தாலி கட்டின பின்னால வந்திருந்தால்… அப்போதும் இதே தியாகியாத்தான் இருந்துருப்பீங்களா மிஸ்டர் ரிஷி… ஐ மீன் இதே தியாகி பதவி தாலி கட்டிய கணவனா இருந்திருந்தாலும் இருந்திருக்குமா” தன் நெஞ்சுக்குள் முள்ளாக குத்திக் கொண்டிருந்த வார்த்தைகளை… அவனை நோக்கி வீசி எறிந்த நிம்மதியில் கண்மணி இருக்க…
ரிஷி.. இப்போது முற்றிலுமாக உடைந்திருக்க…
“ஏய்… “ என்று கண்மணியின் அருகில் வந்த போதே… கண்மணியும் என்ன வந்தாலும் நானும் உன்னை கை பார்ப்பேன் என்ற ரீதியில் அவளும் தயாராக…
இப்போது அப்படியே அடங்கினான் ரிஷி…. காரணம் புரியாமல் அவன் பார்வை போன இடத்தை பார்க்க பின்னால் திரும்ப… ரித்விகா கலவரத்துடன் அங்கு நின்றிருந்தாள் இருவரையும் பார்த்தபடி… தூக்க கலக்கமும்… தன் அண்ணனின் கைகளில் வழிந்த குருதியைப் பார்த்த கலவரமும்… சேர்ந்தவளாக ரித்விகா நிற்க…
ரிஷி ரித்விகாவை எப்போது பார்த்தானோ அப்போதே பொங்கிய பாலில் நீர்த்துளி பட்டது போல மொத்தமுமாக அடங்கி விட… கண்மணி அதற்கு மேல் அங்கு நிற்க வில்லை… வீட்டுக்குள் போய் விட… ரித்விகா பதறி தன் அண்ணனின் அருகில் வந்து கைகளைப் பார்க்க அவளுக்கு மயக்கமே வரும் போல இருந்தது…
“ரித்வி” என்ற கண்மணியின் அழைப்பில் வேகமாக.. சாவி கொடுத்த பொம்மை போல கண்மணியிடம் போக… கண்மணி அவள் கைகளில் முதலுதவி பெட்டியை வைக்க… பரிதாபமாகப் பார்த்தாள் ரித்விகா….
“அக்கா… எனக்கு எப்படி ஃபர்ஸ்ட் எய்ட் பண்றதுன்னு தெரியாதுக்கா… அண்ணாவைப் பார்த்தாலே பயமா இருக்கு… அவர் பக்கத்தில போகவே அதை விட பயமா இருக்குக்கா” ரித்விகாதான் அண்ணனின் ருத்ர அவதாரத்தை காலையில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கின்றாளே… அழ ஆரம்பிக்க…
“ப்ச்ச்… ரித்வி…” என்ற போதே…
“ப்ளீஸ்கா… அண்ணாக்கு நீங்களே மருந்து போடுங்க… ப்ளீஸ்க்கா” என்று இழுத்துக் கொண்டு வர… இப்போது ரிஷி மாடிப்படியில் அமர்ந்திருந்தான்… இடது கையை தலையில் வைத்தபடி… காயம் பட்ட வலது கையை கீழே தொங்க விட்டிருந்தான்… இப்போது அந்தக் கையில் இரத்தம் வேறு அதிகமாக கசிய ஆரம்பித்திருக்க…
கண்மணிக்கு ரித்வியிடம் என்ன சொல்லி புரியவைப்பது என்று தெரியவில்லை.. வேறு வழி… இருவருமாக அவன் முன் வந்து நிற்க.. கண்மணியைப் பார்த்தவன்… மூக்கு விடைக்க.. பல்லைக் கடித்தபடி
“போயிரு…” உச்சகட்ட கோபத்தில் கத்தினாலும் அவன் குரல் இப்போது தளர்வாகி இருக்க… ரித்விகாவோ கண்மணியோடு ஒன்றி இருந்தாள்… தன் அண்ணனின் கோப முகம் காண முடியாமல்…
அதே நேரம் ரிஷிக்கும் மயக்கம் வருவது போல இருக்க… மாடிப்படியின் சுவரின் மேல் தலை சாய்த்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆரம்பிக்க… கண்மணி அதற்கு மேல் தன் கோபத்தை அவனிடம் காட்ட விரும்பாதவளாக… அவன் முன் அமர்ந்து… அவன் குருதி வழிந்து கொண்டிருந்த கரத்தை… பற்ற….
அவளிடமிருந்து தன் கைகளை பறித்து இழுத்தான் ரிஷி… அவள் உதவி தேவையில்லை என்பது போல… அந்த நிலையிலும் அவன் அவள் மேல் உள்ள கோபத்தைக் காட்டிக் கொண்டிருக்க…
“ரிஷி… ஓவர் ரியாக்ட் பண்ணாதீங்க.. எனக்கும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னு ஆசை இல்லை... உங்க தங்கைக்காகத்தான்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கண்மணி கூற…
ரிஷி தானாகவே அடங்கினான்… அவள் சொன்ன கடைசி வார்த்தையில்… பிடிக்கவில்லை என்றாலும் கண்மணி பற்றி இருந்த கைகளை விடுவிக்க முயலவில்லை… மாறாக தன் முன் அமர்ந்திருந்த அவள் முகம் பார்க்க பிடிக்காமல் வேறு திசையில் வைத்தபடி தன் விருப்பமின்மையைக் காட்ட
”ரித்வி…. பாக்ஸி ஓபன் பண்ணு” என்ற கண்மணி பரபரவென்று… தன் காரியமே கருமமாக இறங்கினாள்… அவன் கோபத்தை எல்லாம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல்… பெரிய காயம் இல்லை… ஆனால் அதற்கே இரத்தம் இந்த அளவுக்கு… அனைத்தையும் துடைத்து… மருந்திட்டு… மெல்லிய வெண் துணியில் நன்றாக கட்டியவள்… வலியை இழுத்து பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவனைப் பார்த்தபடியே முடிச்சு போடும் போது… தன் கோபத்தை எல்லாம் மொத்தமாக காட்ட நினைத்தாளோ என்னவோ… … வேண்டுமென்றே….. அழுத்தமாக இறுக்கிக் கட்ட… இப்போது ரிஷி…
“ஆ” என்று தன்னையுமறியாமல் வலி தாங்காமல் கத்தி விட… இவளும் அடங்க வில்லை… இன்னும் இரண்டு முடிச்சுகளையும் அவனுக்கு வலிக்கட்டும் என்று பல்லைக் கடித்துக் கொண்டு இறுக்கமாக போட்டு விட…
”ஆஹ்ஹ்ஹ்... ஏய்…. வலிக்குது” என்று முகத்துக்கு நேராகப் பார்த்து பல்லைக் கடித்தவனிடம்
“பரவாயில்லயே… உணர்ச்சிலாம் இருக்கு போல…”
“எனக்கிருக்கிற கோபத்துக்கு மூனு முடிச்சோட விட்டேன்னு சந்தோஷப்பட்டுக்கங்க ரிஷி சார்” ரித்விகாவுக்கு கேட்காமல் கசப்போடு சொன்னவளை
இவன் முறைத்துப் பார்க்க… தன் கடமை முடிந்தது…. அதற்கு மேல் தனக்கும் அந்த இடத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல சட்டென்று எழுந்தவள் வீட்டை நோக்கிப் போக…
ரித்விகா அவள் பின்னாலேயே ஓடி வந்தாள்… ஏனோ அண்ணனின் கோப முகமும் பிடிக்கவில்லை... அதே நேரம் தன் அண்ணன் மேலும் அவளும் கோபமும் இருக்க...
“மணி அக்கா நான் உங்க கூடவே படுத்துக்கிறேன்” என்று சொல்ல… கண்மணி திரும்பி ரிஷியைப் பார்க்க… அவன் மறுப்பது போல ஏதும் சொல்லாமல் போக… ரித்விகாவை அழைத்துக் கொண்டு உள்ளே போனவளிடம்…
ரித்விகா தான் புலம்ப ஆரம்பித்தாள்… ஒரு பக்கம் தன் அண்ணனை நினைத்தும்… இன்னொரு பக்கம் மகிளாவை நினைத்தும்… புலம்பியபடியே ஒரு கட்டத்தில் உறங்கியும் போக…
கண்மணிக்குத்தான் மொத்த உறக்கமும் போயிருந்தது… இன்றைய சம்பவங்களால்… மகிளா விசயத்தில் ரிஷி யோசிப்பானா என்று நினைத்தவளுக்கு… இன்று நேற்றல்ல என்றோ அவன் முடிவு செய்துவிட்டான் மகிளா விசயத்தில் என்றே தோன்ற… கண்மணியால் என்ன செய்ய முடியும் இதற்கு மேல்… அவரவர் வாழ்க்கை அவரவர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்ய… மொபைல் ஒளிர்ந்தது…. காரணம் அர்ஜூனிடமிருந்து வெகு நாட்களுக்குப் பிறகு வந்த வாட்சப் மெசேஜ்…
“இரண்டு மூன்று தேதிகள் வரிசையாக அனுப்பி இருந்தான்… அதோடு… திருமண பத்திரிக்கையின் மாதிரிகளும் அனுப்பி இருக்க… மூச்சு முட்டுவது போல இருந்தது கண்மணிக்கு… அர்ஜூனை வேண்டாமென்று தள்ளி வைக்கவும் முடியவில்லை… அவன் மட்டுமே போதுமென்றும் சரணடையவும் முடிய வில்லை….
பதில் ஏதும் அனுப்பவில்லை… அதே நேரம் அவன் மேல் ஏனோ பெரிதாக கோபமும் வரவில்லை இன்று… கோபத்திற்கான இன்றைய மொத்த கோட்டாவும் வேறொருவனிடம் காட்டியதால் முடிந்து போய்விட்டதோ என்னவோ… இல்லை அர்ஜூனுக்காக அவள் மனம் இரங்கியதாலா என்னவோ… அர்ஜூன் மேல் அன்றிருந்த அளவுக்கு கோபம் இன்று இல்லை என்றே சொல்ல வேண்டும்…
உண்மையிலேயே சொல்லப்போனால் அவன் மேல் ஒரே ஒரு கோபம் தான்… தன் தந்தையை அவன் ஏற்க மறுக்கின்றான்… அது தவறு என்று அவனுக்கு புரிய வைக்க ஏதாவது முயற்சி எடுத்தோமா என்று இப்போது கண்மணி யோசித்துப் பார்க்க… இதை மட்டும் சரிபடுத்தினால் தனக்கும் அர்ஜூனுக்குமான எல்லா குழப்பமும் சரி ஆகி விடும் என்று முடிவெடுத்தவளுக்கு… தூக்கம் வரமால் போக… வேகமாக மடிக்கணியை எடுத்து எழுத ஆரம்பித்தவளின் கை…
அத்தியாயம் 28(ஃபைனல்): என்று கணினித்திரையில் ஒளிர்ந்த போது… முகம் மலர்ந்தது…. காரணம் தான் தொடங்கிய முதல் கதையை முடிக்கப் போகின்றோம் என்ற உத்வேகத்தில் வந்த புன்னகை அது….
அவள் விரல்கள்… கீ போர்டில் நர்த்தனமாட… கிட்டத்தட்ட கதையின் கடைசி பக்கம் வந்திருக்க…
“தனக்கு வாரிசை தந்த தன் நாயகிக்கு…. நாயகனும் பரிசு தந்திருந்தான்… தன்னவனை முதலாளியாக மாற்றிப் பார்க்க வேண்டும் என்ற அவள் கனவை நனவாக்கிய கணவனாக…” நட்ராஜ்-பவித்ரா வாழ்வில் நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி அந்தக் கதையை நிறைவான முடிவோடு முடிக்க… அந்தக் கதையின் கதாசிரியையாக திருப்தி இருந்தாலும்…. உண்மைக் கதை அது இல்லை என்பதால்… கண்மணிக்கு திருப்தி அளிக்கவில்லை…
மொத்தமாக அழிக்கவில்லை அந்த வரிகளை… மஞ்சளாக வண்ணம் தீட்டி வைத்துக் கொண்டவள்…
அடுத்த முடிவை எழுதினாள்…
“நாயகனுக்காக அனைத்தையும் துறந்த நாயகி… இன்று அவனுக்காக அவன் வாரிசுக்காக அவள் உயிரையும் துறந்திருக்க… தங்கள் மகிழ்வான நிறைவான வாழ்க்கையின் அடையாளமாக தங்கள் கண்மணியை அவன் கைகளில் கொடுத்த நிம்மதியில் கண்மூட… நாயகனோ… தன்னவள் இல்லாத தன் உலகத்தில் இனி யாருக்கும் இடம் இல்லை என்று முடிவெடுத்தவனாக… நாயகியின் கனவை மட்டுமல்ல… அவர்களின் உயிர் என்று கனவுகளோடு காத்திருந்த அந்தக் குழந்தையையும் மறந்தவனாக… அனைத்தையும் விட்டு… மது என்னும் அரக்கனின் பிடிக்குள் தன்னை மாய்த்துக் கொண்டான்” என்று ஆரம்பிக்க… கண்மணி இப்போது நிறுத்தினாள்… இது முடிவு போல் இல்லை… அடுத்த பாகத்திற்கான தொடக்கம் போல் இருக்க… உண்மை இதுதான் என்ற போதும்… உண்மை அதோடு முடியவில்லையே… அதன் கருப்பு பக்கங்கள் இன்னுமொரு நாவலாக போகுமே என்று தோன்ற… அந்த முடிவுக்கான வரிகளை சிவப்பு வண்ணத்தில் தீட்டி வைத்துக் கொண்டவள்
அடுத்த முடிவை எழுத ஆரம்பிக்க… எழுதி முடித்தவளுக்கு கதாசிரியராகவும்… கண்மணியாகவும் அவள் முகம் திருப்தியைக் கொடுக்க… பச்சை வண்ணத்தில் தீட்டினாள் பின்வரும் வரிகளை…
“நாயகி மறைந்தால் என்ன… அவள் கனவுகளையும்… அவர்களின் கண்மணியையும் அவனோடுதானே விட்டுச் சென்றிருக்கின்றாள்… வலியும் வேதனைகளும் தாங்கும் மனோபாவம் காலம் கற்றுக் கொடுத்தது இதற்காகவா… ஏற்றுக் கொண்டான் நாயகன்… கண்ணின் மணியாக மனைவி இருக்க… தன்னை நம்பி அவள் கொடுத்த கனவுகளையும்… வாரிசையும் கையில் ஏந்தியவன் கண்களில்… எதிர்காலம் ஒளி மயமாகவே தோன்றி இருக்க… அது உண்மையே என்பது போல… அவன் வாரிசும் பொக்கை வாயைக் காட்டி சிரிக்க… அதில் தொலைந்தவனுக்கு வாழ்க்கை அவன் தேடிய வெற்றிக்கான பாதைகளை விரித்து புன்னகைக்க ஆரம்பித்தது…
மூன்றாவது முடிவில் சோகத்தையும் தாண்டி… ஒரு திருப்தியான முடிவு… என்று தோன்றிய போதே…
“வலியும் வேதனைகளும் தாங்கும் மனோபாவம் காலம் கற்றுக் கொடுத்தது இதற்காகவா…” இந்த வரி நட்ராஜுக்கான வாழ்க்கையில் இல்லையே… இடித்தது கண்மணிக்கு…
இந்த வரிகள் வர வேண்டுமென்றால்… மொத்த கதையும் மாறி விடுமே… மொத்தமாக கதையின் போக்கையே மாற்ற வேண்டுமே… இந்த இரண்டு வரிகளுக்காக கதையையே மாற்ற முடியுமா என்ன… ஆக மூன்று முடிவுகளிலும் திருப்தி வராமல் இருந்தாலும்… இதில் ஒன்றுதான் கடைசி முடிவு… இன்றிருந்த மனநிலையில் எது என்று தீர்மானமாக முடிவெடுக்க முடியாத நிலையில் கணிணியை மூடிவைத்து நம் நாயகி கண்மணி கண் உறங்க…
தன் வாழ்க்கையில் ஏன் இந்த போராட்டங்களும்… வலிகளும்…. வேதனைகளும்… வாழ்க்கை தன்னைச் செதுக்குவது எதற்காக… எதை தாங்குவதற்காக… இதை எல்லாம் விட பெரிய வேதனை தனக்கு எதிர்காலத்தில் வரப் போகிறதா.. அதற்கான தயார்படுத்தலுக்காகவா… மனதோடு புலம்பிக் கொண்டிருந்தான் நம் நாயகன் ரிஷி...
/* நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாழும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
கால் போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி*/
Comments