top of page

கண்மணி... என் கண்ணின் மணி-24-2

அத்தியாயம் 24 -2


அறைக்குள்….


கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியபடி அவன் முகத்தையே பார்த்தபடி அவனை எதிர்நோக்கி காத்திருந்த கண்மணியின் முகத்தில் பெரிய உணர்ச்சிபிரவாகம் எல்லாம் இல்லை… அமைதியாகவே நின்றிருக்க…


ரிஷியோ அவள் அருகில் எல்லாம் வரவில்லை… பூட்டிய கதவின் மேலேயே சாய்ந்தபடி நின்றவன்… அவளைப் பார்க்க…. உணர்வுகளை எல்லாம் அடக்கி வைத்திருந்த அந்த முகத்தில் அதையும் மீறி களைப்பு தெரிய…

“ஏன் டல்லா இருக்க…”


அவளை எதற்காக பேச அழைத்தோம் என்பதை எல்லாம் தள்ளி வைத்து விட்டு… அவளின் களைப்புக்கான காரணம் என்ன என்பதுதான் முக்கியம் என்பது போல…. ரிஷியின் கேள்வி இருக்க…


அவன் அக்கறையில் கண்மணியின் இதழ்கள் ஏளனமாக சுழிய… அவள் இதழ் சுழித்ததில் அவள் கன்னக் குழிகளும் தானாகாவே அவள் கன்னங்களில் தன் பிரசன்னத்தை பதிய வைக்க…


எப்போதும் போல் இன்றும்… கண்மணியின் கன்னத்துக் குழி… ரிஷி என்னும் ஆண்மகனை கண்மணியின் கணவனாக தனக்குள் சுருட்டிக் கொள்ள… அதில் மூழ்க நினைத்தாலும்… முடியாத சூழ்நிலை… வேறு வழியின்றி ரிஷி அமைதியாகத் தன்னவளையே பார்த்தபடி நிற்க…


”ஓ…. இதைக் கேட்கிறதுக்குத்தான் ரிஷி சார்… கூப்பிட்டிங்களா” நின்ற தோரணையும்… கேட்ட குரலிலும் தெனாவெட்டு இருந்தாலும்… அதை எல்லாம் மீறி நக்கல் டன் டன்னாக வழிய… இப்போது ரிஷியும் மனைவியின் கன்னத்துக் குழியில் இருந்து தன்னை மீட்டெடுத்தவனாக…


“ஹ்ம்ம்… இதைக் கேட்கிறதுக்காகத்தான் கூப்பிட்ருப்பேன்னு நினைக்கிற அளவுக்கு என் பொண்டாட்டி முட்டாள் இல்லைனு எனக்குத் தெரியும்” இப்போது அவன் குரலும் அவளுக்கு சளைக்காtஹ போட்டி போட்ட குரலில் இருக்க…


” புத்திசாலி கண்மணி… ” இகழ்வாகத் தனக்குள் சொல்லிக் கொண்டவள்…


“அந்தக் கண்மணி தன் மூளையெல்லாம் கடன் கொடுத்து ரொம்ப நாள் ஆகிருச்சு” தன்னையே திட்டிக் கொண்டாளா… அவளுக்கே தெரியாமல் நிலை…


அவளது இந்தப் பதிலில் ரிஷியின் முகம் மற்றதெல்லாம் மறந்து விட்டு பிரகாசமாக மாற… அதில் அவனையும் மீறி புன்னகை வர…. தன்னவளைப் பார்த்தபடி அவளை நோக்கி வந்தவன்… இப்போது கண்மணியின் அருகில் நின்றவனாக… அருகில் இருந்த நாற்காலியை எடுத்தபடியே….


“விடு விடு… ரொம்ப ஃபீல் பண்ணாத…. மூளையை யார்கிட்ட கடன் கொடுத்தியோ அந்த கடன்காரன் பக்கத்திலதான் நிற்கிறான்… பெருசாலாம் அவன் எதிர்பார்க்கலை… அவன் இதயத்துக்கிட்ட மொத்தமா சரண்டர் ஆகிரு… ஆல் ப்ராப்ளம் சால்வ்ட்…” என்றவனிடம் அவளின் மொத்தக் கோபத்தையும் கண்களில் நிரப்பி அவனைப் பார்க்க…


“என்னை எரிக்கிற பார்வையெல்லாம் இதுல உட்கார்ந்துட்டே பார்க்கலாம்… உட்காரு” என்று நாற்காலியை அவளருகே இழுத்துப் போட்டபடியே ரிஷி பேச ஆரம்பிக்க…”


“ரொம்ப நன்றி ரிஷி சார் உங்க அக்கறைக்கு… சொல்ல வந்த விசயத்தைச் சீக்கிரம் சொன்னீங்கன்னா… இங்க எல்லாருக்கும் நல்லது… எல்லாரும் வெயிட் பண்றாங்க… “ என்று எரிச்சலும் கோபமுமாகப் பட்டென்று … சொல்ல….


இந்தக் கோபம் கூட… ரிஷியின் வார்த்தைகளினால் வந்தது அல்ல… ரிஷியின் நடவடிக்கைகளுக்காக மட்டுமே… காரணம்… அத்தனை பேர் வெளியில் காத்துக் கொண்டிருக்க… எதற்காக அழைத்தான் என்று சட்டென்று சொல்லாமல் இழுத்துக் கொண்டிருந்ததால் வந்த கோபமே…


“அப்போ உட்கார்ந்து நான் சொல்றதைக் கேளு…”


அவன் சொல்வதை சட்டை செய்யாமல்… அவளோ பிடிவாதமாக நிற்க…


“நீ உட்காருகிற வரை நானும் பேச்சை ஆரம்பிக்க மாட்டேன்… வெளியில வெயிட் பண்றவங்களைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை” என்றவனின் குரலில் வெளிப்பட்ட தொணியில்…


“என்ன மிரட்டறீங்களா” பல்லைக் கடித்து துப்பிய வார்த்தைகளாக கண்மணியும் அவனுக்கு சளைக்காமல் கேட்க…


இப்போது ரிஷியோ…. அடக்க முடியாமல் சத்தம் போட்டு சிரித்தான்….


“என்னது என்னது… .மேடம் இன்னொரு தடவை சொல்லுங்க… ” இப்போதும் அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை… இருந்தும் அடக்கியபடி


”உங்களை… ”


”நான்…”


“நான் மிரட்டறேனா… சத்தியமா… மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க…மேடம் யாரு… உங்க பராக்கிரமம் என்ன… இதெல்லாம் தெரிஞ்சும் மிரட்டுவேனா என்ன…”


“அப்படியே உங்களை மிரட்டினாலும்…மிரட்டிட்டு இந்த ரிஷிலாம் உயிரோட நடமாட முடியுமா என்ன… ”


பவ்யமாக அவள் முன் பேசிய பேச்சில் ரிஷி கண்மணியிடம் நூறு சதவிகித அளவுக்கு பயந்தவன்… என்று நன்றாகவே தெரிந்தது… ஆனால் …

அந்தோ பரிதாபம் அந்த நூறு சதவிகிதம் என்பது மைனஸ் நூறு சதவிகிதமாக இருந்ததுதான அங்கே கண்மணியின் முறைப்புக்கு காரணமாகி இருக்க… ரிஷியோ அவள் முறைப்பை எல்லாம் கண்டு கொள்ளாமல்…


”மேடம் உங்களை விடுங்க… தாலி கட்டின புருசன்னு பொழச்சு போன்னு நீங்க என்னை விட்ருவீங்க…. ஆனால்” என்றபடி கதவின் புறம் பார்த்தவன்


“வெளிய நிற்கிற அத்தனை பேரும் கேள்வி கேட்டே… ஹ்ம்ம்… இல்லையில்லை… பார்வையாலேயே எரிச்சுற மாட்டாங்களா என்ன… மேடம் அவ்வ்வ்வளவு பெரிய ஆள்… உங்களை நான் மிரட்டுகிறேனா… நல்லா காமெடி பண்றீங்க மேடம்” என்றபடி சிரித்தவனின் சிரிப்பை அதற்கு மேல் கேட்க முடியாமல்…


“ஷட் அப் ரிஷி… என்னோட பொறுமையை நீங்க அதிகமாகவே சோதிக்கிறீங்க…” கண்மணியும் தன் பொறுமையை எல்லாம் துறந்தவளாக… அவளையு மீறி குரல் உயர…


தன்னை நோக்கி உயர்ந்த… அவளது அந்தக் குரலில் முதன் முதலாக ரிஷியும்… கண்மணியின் கணவனாக உருமாறியிருந்தான்


“என்னடி ஷட் அப்… யாரு… நான்… நான் உன் பொறுமையை சோதிக்கிறேனா… “ என்று விரல் காட்டி அவளை எச்சரிக்க…


“காலில் விழுந்து கெஞ்சாத குறையா… நேத்து நான் வந்து உன்கிட்ட நின்னப்போ… பெரிய இவ மாதிரி வரமுடியாதுன்னு சொன்னவ… இன்னைக்கு எதுக்குடி வந்து நிற்கிற… இப்போ அதுதான் என் பிரச்சனை” தான் அழைத்து வராதவள்… மற்றவர்கள் சொல்லி… அவர்கள் அழைத்து வந்திருக்கின்றாள் என்பதே அவனது ஒவ்வொரு வார்த்தையிலும் கோபமாக சிதறி இருக்க…


கண்மணி இப்போது அமைதியாக கேட்டாள்…


“இப்போ நான் வந்தது… உங்களுக்கு என்ன பிரச்சனை ஆகிருச்சு ரிஷி… சொல்லப் போனால் தேவையில்லாத பேச்சுக்களை எல்லாம் கொண்டு வர வேண்டாம்னு தான் நான் வந்ததே” என்ற போதே


“அதுதாண்டி எனக்குப் பிரச்சனை… உன் பொண்டாட்டி எங்கன்னு கேட்ருந்தா… என் பொண்டாட்டி என் கூட வாழப் பிடிக்காமல் போயிட்டாள்னு ஒரு வார்த்தைல சொல்லிருப்பேன்.. முடிச்சுருப்பேன்”


”இப்போ” என்று அவன் அதற்கு மேல் பேசாமல் வார்த்தைகளை தொண்டைக் குழியிலேயே முழுங்கி விட…


“இப்போ என்ன பிரச்சனை ரிஷி… காரணம் சொல்லுங்க… ” என்ற போதே அவளை சட்டென்று தன் அருகில் இழுக்க.. இப்போதும் கண்மணி-ரிஷி இருவரின் தேகமும் மோதிக் கொள்ளவில்லை… இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியின் காரணம் உணர்ந்தவனாக… தன் கோபத்தை எல்லாம் உணர்வுகளில் மட்டுமே வைத்தவனாக… கைவளைவில் இருந்த கண்மணியை வலுக்கட்டாயமாக அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தவனாக…


“என்ன பிரச்சனையா… எனக்கு ஒரே ஒரு பதில் தான் வேண்டும்… “ அமர்ந்திருந்த அவள் நாற்காலியின் இரு முனைகளிலும் தன் இருகைகளையும் அழுந்த ஊன்றியவனின் அழுத்தம் கைகளில் மட்டுமல்ல வார்த்தைகளிலும் இருக்க…


கண்மணியும் தன் முகத்தை நோக்கி குனிந்திருந்த கண்களை… நேர்ப் பார்வை பார்க்க… கணவனின் கண்களைச் சந்திந்த கண்மணியின் பார்வையில் எள்ளளவும் அச்சம் என்பதோ…. மிரட்சி என்பதோ இல்லை…


”உன் கேள்வி என்ன…” என்ற பதில் பார்வை இருக்க….


“நேற்று நான் கூப்பிட்டு நீ வந்திருந்தால் எனக்கு இந்த கேள்வியே வந்திருக்காது… ஐ மீன் மிஸஸ். கண்மணி ரிஷிகேஷா நீங்க வந்துருக்கீங்களா இல்லையான்ற கேள்வி…“


என்ற போதே கண்மணி ஏதோ பேச வாய் திறக்கப் போக… அவள் இதழ்களில் அவனின் ஆட்காட்டி விரலை வைத்து அவளை இதழ் மூடச் செய்தவன்…


“ஷ்ஷ்ஷ்… நான் பேசுகிற வரை… இதுக்கு வேலை நீயும் கொடுக்காத… என்கிட்ட பிடிவாதம் பிடித்து எனக்கும் வேலை கொடுத்திராத” என்றவனின் வார்த்தைகளில் அவ்னை முறைத்தவளிடம்.…


“இப்போ நீ யாரா வந்திருக்க…”


அவன் கேட்ட கேள்வி புரியாமல் எரிச்சலாக கண்மணி அவனைப் பார்க்க…


“புரியலையா மேடத்துக்கு… அது சரி… நீங்கதான் மூளையை கடன் கொடுத்துட்டீங்களே….. புரியாதுதான்” என்றவன்…


அருகில் இருந்த இன்னொரு நாற்காலியை இழுத்து அவள் முன் போட்டு… தானும் அமர்ந்தபடி…


“மேடம் சொல்லுங்க… இதுல எந்த முகமா வந்துருக்கீங்கன்னு” பொறுமையாக நிதானமாக அவன் கேள்விகளை அடுக்கினான்…. ரிஷி



“விக்கி தாத்தாவோட… அவரோட குலத்தை காத்த தெய்வமா வந்துருக்கீங்களா… இல்லை ஆர்கே இண்டஸ்ட்ரீஸோட ஒன் ஆஃப் த பார்ட்னரா வந்துருக்கீங்களா… இல்லை ஆர் கே இண்டஸ்டீரீஸோட ஓனரோட வெல்விஷர் கம் அட்வைசர் மிஸ்டர் நட்ராஜோட பொண்ணா வந்துருக்கீங்களா… இல்லை ’அம்பகம்’ ட்ரஸ்ட்டோட சேர்மன்… அதாவது நாரயணகுருக்களோட ஒன் அண்ட் ஒன்லி வாரிசா வந்துருக்கீங்களா…”


”சரி இதை எல்லாம் விட்றலாம்… ரித்வி…”


”அதாவது உங்க செல்லம் ரித்விகாவோட ஸ்கூஸ் கரஸ்பாண்டண்டா ரித்வி அக்கா நிச்சயத்துக்கு வந்துருக்கீங்களா…”


”தி க்ரேட் கண்மணி மேடம் இதுக்கு பதில் சொல்லிட்டீங்கன்னா… எனக்கும் தெளிவு கிடைக்கும்… மேல சொன்ன ஏதாவது ஒரு கேள்விக்கு ஆமாம்ன்றது உங்க பதில்னா… நாங்களும் உங்களை விட்டு பத்தடி தூரம் தள்ளி நின்னுக்கலாம்.. இது தெரியாமல் நீங்க மிஸஸ் கண்மணி ரிஷிகேஷ்னு உங்க பக்கத்தில் நான் நின்னுட்டேனா.. அது உங்க ஸ்டேட்டஸ்க்கு பங்கம் ஆகிடாது” எள்ளளாக ஒவ்வொரு வார்த்தைகளை விட்டவன்… அவளைக் கூர்ப்பார்வை பார்த்தபடியே கேட்க


“ரிஷி” என்று பல்லைக் கடித்தவளிடம்


“சொல்லுங்க கண்மணி மிஸ்.. ஸ்டூடண்ட் கேள்வி கேட்டா இந்த மிஸ் பதில் சொல்லமாட்டாங்களா என்ன… ஓ.. கண்மணி மிஸ் பதில் சொல்வாங்க… மிஸஸ் கண்மணி பதில் சொல்லமாட்டாங்களா என்ன” என்றான் ஒட்டு மொத்த கிண்டல் பாவனைகளையும் தன் குரலில் கொண்டு வந்தவனாக… கண்மணியை எல்லா பக்கங்களிலும் இருந்து கேள்விகளால் திணறடிக்க…


கண்மணிதான் திணறினாள் இப்போது… இருந்தும் சமாளிக்கும் பாவனையில்


“உங்க அளவுக்கு சாமர்த்தியமா எனக்கு பேசத் தெரியாது ரிஷி… எனிவே… நீங்க கேட்ட கேள்விக்கு… என்னோட பதில்… நீங்க மேல சொன்ன எந்த முகமாகவும் நான் வரவில்லை… “ என்று நிறுத்தியவள்…


“தனசேகர்-இலட்சுமி இவங்க மருமகளா வந்திருக்கேன்.. என் அத்தையோட வார்த்தைக்காக மட்டுமே இங்க நான் வந்திருக்கேன் போதுமா… உங்க கேள்விக்கு இதுதான் பதில்” என்றவாறு எழுந்தவளிடம்…


புருவம் உயர்த்தியவனாக…


“ஹ்ம்ம்… இதற்கான அர்த்தம்… மறைமுகமா நான் எடுத்துக்கணுமா… “ என்று அவளை எழ விடாமல் இவன் எழுந்து அவள் அருகில் நெருங்கியவனின் கண்களில் இப்போது அனல் பறந்தது…


“சோ எனக்கு பொண்டாட்டியா வரல…. இந்தக் குடும்பத்துக்கு மருமகளா வந்திருக்க… சபாஷ்… ஆனால் மருமகளுக்கு மனைவி கதாபாத்திரம் மட்டும் மறந்துருச்சோ… ஞாபகப்படுத்திறலாமா” என்று தாடையைத் தடவியபடி யோசிப்பது போல பாவனை செய்ய… சட்டென்று எழுந்திருந்தாள்… கண்மணி…

தன்னை மீண்டும் அமர வைப்பதற்காக அவளைப் பிடித்து நிறுத்திய அவன் கைகளைத் தட்டிவிட்டு… அவனைத் தாண்டிச் செல்ல… சட்டென்று எழுந்தவன்


அவள் புறம் திரும்பாமலேயே… பெரிதும் முயலாமல்… சாதரணமாக… தன் கைகளை அவள் புறம் நீட்டி தன் கைவளைவுக்குள் மீண்டும் கொண்டு வர… கண்மணியும் இப்போது திமிறாமல் திமிர்பார்வை பார்த்தவள்…


“என்ன… மனைவி உரிமைனு… அரதப்பழசான டைலாக்ஸ் சொல்லப் போறிங்களா ரிஷி” என்று நிதானமாக கேட்க


”ஹா ஹா…” ரிஷி சிரிக்க


அவன் பாவனையில் கண்மணி எரிச்சலுடன் அவனைப் பார்க்க… அவனோ கண் சிமிட்டியவனாக


”கன்ஃபார்ம்… மூளை அடமானம் தான் போயிருக்கு…. அடேய் ரிஷி… கொஞ்சம் பாவம் பாருடா உன் பொண்டாட்டிக்கு” என்று யாரிடமோ சொல்வது போல சொன்னவன்…


”மனசாட்சிக்கிட்ட கேட்டேன் கண்மணி…. அது எப்போதும் உன் பக்கம் தான் இருக்கும்… இப்போ என்னவோ என் பக்கமாவே பேசுது… மெதுவா மூளையை திருப்பிக் கொடுக்கவாம்… தீர்ப்பு சொல்லிருச்சு”


”என்ன உளர்றீங்க…” கண்மணி கடுப்படிக்க…


“ஹ்ம்ம்ம்ம்…. என் உரிமை… என் எல்லை… இதெல்லாம் உன்கிட்ட எந்த அளவுக்குனு இனிமேலயும் நிருபிக்கனுமா என் பொண்டாட்டியே…” தன்னை விட்டு அவளைத் தள்ளி நிறுத்தியவனின் கண்கள்… மேடிட்ட அவளின் 7 மாத வயிற்றில் நிலைத்திருக்க… இப்போது கண்மணி அவனைக் கண் கொண்டு காண முடியாமல் தன் முகத்தை பக்கவாட்டில் திருப்பிக் கொள்ள…


ஒரு கைகளால் அவள் முகத்தைத் திருப்பி… தன் முகத்தைப் பார்க்கும் படி திருப்பியவன்…


“ஏன் என்னைப் பார்க்க முடியலையா??? கண்!!… மணி!!!” இப்போது அவன் கைகள் அவள் அணிந்திருந்த புடவையைத் தாண்டி அவள் இடையை ஆதுரமாக வருட ஆரம்பிக்க… சட்டென்று அவன் கைகளைப் பிடித்தவள்…


”ரிஷி… நான் போகனும்..” திக்கித் திணறி தடுமாற்றமாக கண்மணியிடமிருந்து வார்த்தைகள் இப்போது வெளிவந்தன… குற்றம் செய்து குறுகியவளாக அவள் தடுமாற…


அவள் தடுமாற்றத்தை உள்ளுக்குள் மாயக் கண்ணனாக ரசித்தாலும்…. அவள் பிடிவாதம் அவனுக்குள் கோபத்த்தைத்தான் கொண்டு வந்தது


“சொல்லு கண்மணி… இது கூட என் மனைவி… என் உரிமை என் கடமைன்ற பேர்ல நமக்கு உண்டானதா… ரிஷியோட காதலையும்… கண்மணியோட காதலையும் சொல்ல நமக்கு இது போதாதா கண்மணி… ஏண்டி பிடிவாதம் பிடிக்கிற… நீயும் நானும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு நடந்தப்போ நம்மகிட்ட காதல் இல்லை… ஆனால் காதல் வந்தப்போ அந்தப் புரிதல் என்னாச்சு… யாரோவா நான் இருந்தப்போ எனக்காக எல்லாமுமாக இருந்த நீ… இப்போ கணவனா இருக்கும் போது… என்னை விட்டு தள்ளி நிற்கிற.. ” இப்போது ரிஷியின் குரலும் உடைந்திருக்க…


“ரிஷி… சில விசயங்கள் எப்போதுமே ஒட்டாது… அதிலயும் எனக்கு … நான் துரதிர்ஷடசாலி… நான் எதை நோக்கி போனாலும்… எனக்கு ஏமாற்றம் தான்.. கடைசியில உங்க விசயத்துலயும் பலிச்சுருச்சு…” என்றவள்… அவனை விட்டு விட்டு நகர…


ரிஷி இப்போது அவளைத் தடுத்து நிறுத்த முயலவில்லை… மாறாக அமைதியாக நின்று கொண்டிருக்க…


கண்மணி இப்போது நின்று…


“லட்சுமியோட மருமகள்னா… ரிஷியோட மனைவின்றதும் மறுக்க முடியாத உண்மைதான்… அதுல உங்களுக்கு ஏதும் டவுட் வேண்டாம் ரிஷி”


ரிஷி வேதனையாக கண்களை மூடித்திறந்தவனாக… அவளிடம் மீண்டும் வந்தவன்…


“ரொம்ப நன்றி… மிஸஸ் தனசேகரோட மருமகள் அவர்களே…” நிறுத்தியவன்


“அந்த அர்ஜூன்… ரொம்பத்தான் பாசத்துல தடுக்கி விழறான்… சொல்லி வை அவன் கிட்ட… கண்மூடித்தனமான காதல்ன்ற பேர்ல… ஏற்கனவே வாங்கின அடி பத்தாதா அவனுக்கு… இன்னும் அடி வாங்கனுமா என்ன”


கேட்கக் கூடாது என்று மனம் தடுத்து வைத்திருந்தாலும்… கேட்காமல் இருக்க வாய் விடவில்லை… கேட்டு விட்டான்


இப்போது ரிஷியைப் பார்த்து… அவன் கேட்ட கேள்வியில்… கண்மணி சிரித்தே விட்டாள்… அவள் சிரித்த சிரிப்பில் அவளுக்கு கண்ணீரே வந்து விட…


முறைத்த ரிஷியிடம்…


“ஓ…… அர்ஜூன் என் மேல காட்டிய அக்கறைல கோபம் வருதா ரிஷி சார் உங்களுக்கு… ஆனால் வரக்கூடாதே… ஏன்னா… உங்களுக்குத்தான்… உங்களுக்கு பிடித்த பொருளை… உங்களை விட அடுத்தவங்க நல்லா பார்த்துக்குவாங்கன்னு நம்பிக்கை வந்தால்… அந்தப் பொருளை அவங்களுக்கே தாரை வார்த்துக் கொடுத்துருவீங்களே ரிஷி சார்…”


ரிஷிதான் அர்ஜூனைப் பற்றி கேட்க தயங்கினான்… கண்மணிக்கு அந்த தயக்கமெல்லாம் கிடையாது…


பட்டென்று கேட்டாள்… அவள் எப்போதும் தயங்க மாட்டாள் இந்தக் கேள்வியைக் கேட்க…


“ஏய்” என்று ரிஷி இப்போது கண்மணியை எச்சரிக்க…


கண்மணியோ…


“உண்மையைச் சொன்னா கோபம்லாம் படக் கூடாது… நான் சொன்னதுல ஒரு சதவிகிதம் கூட பொய் இல்லை மிஸ்டர் ரிஷி… ஆதாரம் காண்பிக்கனுமா” என்றவளை ரிஷி இப்போது நெருங்கி இருக்க…


“கோபம் வந்தா… கண்ல ருத்திர தாண்டவம் ஆடினா… நடந்ததெல்லாம் இல்லைனு ஆகிருமா ரிஷி… அர்ஜூன் என்னை” என்ற போதே அடுத்து அவளைப் பேசவிடவில்லை அவன்…


“ப்ளீஸ் கண்மணி…” மகிளாவுக்கு அவன் செய்த துரோகத்தை கண்மணி மனைவியாகச் சுட்டிக் காட்டிக் கேட்ட போது… அவன் பதில் பேசமுடியாமல் திணற…


கண்மணியும் இப்போது அமைதியானவளாக…


“பிடித்தவங்களைத்தான் அவங்க நல்ல இருக்கனும்னு விட்டுக் கொடுப்போம்… நான் பிடிக்காதவதானே… விடுங்க… அர்ஜூன் பயமெல்லாம் வேண்டாம்… நான் கிளம்புறேன்.. உங்க கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சுனு நினைக்கிறேன்” என்றவாறு அவனை விட்டு நகர ஆரம்பிக்க…


அவளை தன் புறம் இழுத்தவன்… அவள் மொத்த முகத்தையும் தன் கண்களுக்குள் தேக்கியவன்… குனிந்து


அவளது அணிந்திருந்த மூக்குத்தியில் தன் இதழை ஒற்றியவன்… வழக்கம் போல அவன் இதழ் அவள் மூக்குத்தியில் பட்டதுமே… அனிச்சை செயலாக அவளது இதழ் சுழிப்பது போல இப்போதும் கண்மணி செய்ய… எப்போதும் போல கன்னக் குழி இப்போதும் விழுந்து… அவனை உள்வாங்கிக் கொள்ள அவனையும் மீறி… அவள் கன்னங்களில்… இல்லையில்லை கன்னக்குழியில் தன் முத்தத்தைப் பதிக்க… கண்மணி கண்களை மூடி நின்றாள்… அவனை தவிர்க்கவும் இல்லை… தள்ளிவிடவும் இல்லை… மாறாக கண்களில் நீர் வழிய நின்றிருக்க…


அவளது கண்களின் வழியாக வழிந்த நீர் அவனையும் அடைய… அவளைச் சமாதானப்படுத்துவது போல அணைப்பை மாற்றியவன்…


“தெரியாதவங்ககிட்ட… புரியாதவங்ககிட்ட வாதம் செய்யலாம் கண்மணி… ஆனால் பிடிவாதம் பிடிக்கிறவங்ககிட்ட வாதம் செய்தால்… அது ஜெயிக்காதுன்னு எனக்கும் தெரியும் …”


“யெஸ்.. நான் மகிளா விசயத்தில பண்ணினது எல்லாமே தவறுதான்… உன்னோட விசயத்தில்.. அதை விட பெரிய தவறுதான் பண்ணிருக்கேன்…”


”என்னைப் புரியவைக்க… நீதான் என் வாழ்க்கைனு என்னால சொல்லக் கூட முடியாத நிலைமைல இருக்கேன் கண்மணி… அது ஏன்னு உனக்கும் தெரியும்… ” மகிளா என்ற பெயரைத் தவிர்த்தவனாகச் சொன்னவன்…


தன்னவளை தீர்க்கமாகப் பார்த்தபடி…


“உனக்கும் எனக்கும் பிரச்சனை மகிளாவோ இல்லை… அர்ஜூனோ இல்லைனு எனக்கும் தெரியும் உனக்கும் அது புரியும்… அதை எல்லாம் நாம எப்போதோ கடந்து வந்துட்டோம்.. இருந்தாலும்… உனக்கு ஒரே ஒரு விசயத்தை சொல்கிறேன்… இதயம் மாற்றி உயிர் வாழ்ந்தவங்க கூட இருக்காங்க… ஆனால் உயிர் மூச்சை விட்டு யாரும் வாழ்ந்ததா சரித்திரம் இல்லை கண்மணி… அந்த உயிர் மூச்சா நீ எனக்குள்ள எப்போது மாறினேன்னும் எனக்குச் சொல்லத் தெரியலை… ” என்று தவிப்பாக ஆரம்பிக்க... அதே நேரம் கதவும் தட்டப்பட… வேறு வழி இன்றி… அவளை விட்டு கதவைத் திறந்தவன்…


“தேங்க்ஸ்… மிஸஸ் ரிஷிகேஷா வந்ததுக்கு” சொன்னபடிஅமைதியாக வெளியேறி விட… கண்மணியும் கண்களில் வழிந்த நீரைத் துடைத்தவளாக… முகத்தைச் சாதாரணமாக மாற்றியபடி… வெளியே வந்தவள்… கலக்கமாக நின்றிருந்த இலட்சுமியிடன் அருகில் வந்தவளாக…


“ஒண்ணுமில்ல அத்தை… வாங்க… மேடைக்குப் போகலாம்” என்று சிரித்த போதுதான் மொத்த குடும்பங்களின் நிம்மதியும் மீண்டும் வந்திருந்தது….


அதன் பிறகு… பெரிதாக அங்கு குழப்பம் எல்லாம் இல்லை… அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்.. குதுகலமும்…உற்சாகமுமாகவுமே நடைபெற்றுக் கொண்டிருந்தன…


அதிலும் ரித்விகாதான் அங்கு மிகவும் உற்சாகமாக இருந்தாள்… ஒரு கையில் மகிளாவின் குழந்தையோடும்… விக்கியின் அண்ணன் குழந்தையான ’கண்மணி’ யோடும்…


வந்த அத்தனை பேரும் ரிதன்யாவுக்கு பதில் ரித்விகாவை ஓட்ட ஆரம்பித்திருந்தனர் இப்போது…


“ரித்விகா… இப்போதே ப்ராக்டிஸா… ரிதுவுக்கு மேரேஜ் முடித்த அடுத்து உனக்கு ஏற்பாடு பண்ணிறலாமா” என்று


ஆனால் ரித்விகாவோ… தன்னைக் கிண்டலடித்த உறவினரிடம் சிறிதும் கோபப்படாமல்


“ஹான் ப்ராக்டிஸ்தான்… எங்க அண்ணாக்கு பாப்பாவோ பையனோ… நான்தானே பார்க்கனும்… எங்க அண்ணிக்கு என்ன அம்மாவா இருக்காங்க…. பிறந்த வீட்ல ரொம்ப நாள் இருக்க முடியுமா… எங்க அண்ணிய நாங்கதானே பார்க்கனும்… ரிதன்யாவும் மேரேஜ் பண்ணிட்டு அவங்க வீட்டுக்கு போய்டுவா… எங்க அம்மாக்கு ஹெல்ப் வேண்டாமா… அதுதான் பிராக்டிஸ்… போதுமா” என்று சொன்னவளிடம் அதற்கு மேல் கிண்டலடிப்பவர்கள் நிற்பார்களா என்ன…


கண்மணிதான் அவளிடம்


“ரிதிம்மா” என்று செல்லமாகக் கடிய…


“அப்புறம் என்ன அண்ணி… சும்மா.. ஒரு குழந்தையைத் தூக்கி கொஞ்சிட்டா போதும்.. உனக்கும் மேரேஜ் பண்ணிடலாமான்னு லூசுத்தனமா கேட்டுட்டு…” என்ற போதே… ரிஷி இருவரையும் பார்த்தபடியே


“ரிதிம்மா… ஏற்கனவே நீ வாய்… இந்தம்மா ட்ரெயினிங் வேற… உன்னைப் பற்றி தெரியாமல் உன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டாங்க” என்று சொன்னவன்… கண்மணியின் பார்வை தீப்பார்வையை இப்போது எதிர்பார்க்க… அவள் அப்போதும் கூட அமைதியாக நின்றிருக்க…


“ஹப்பா… அடம்… உன்னலாம் “ என்று புலம்பியபடியே… பெருமூச்சு விட்டவனாக நகர்ந்து சென்றான்…


கண்மணி வழக்கம் போல அமைதியாக சபையில் ரிதன்யாவின் அண்ணியாக ரிஷியோடு சேர்ந்து சடங்குகளைச் செய்து கொண்டிருக்க… மகிளா-பிரேம்… யமுனா-பார்த்திபன் இரு ஜோடிகளும்… அன்றைய நாயகன் நாயகியாக இருந்த விக்கி-ரிதன்யா ஜோடிகளை ஒட்டிக் கொண்டு இருக்க… ரிதன்யா விக்ரம் இருவருமே பெரிதாக அன்றைய தினத்தை கொண்டாடிக் கொள்ளவில்லை… கண்மணி-ரிஷி வாழ்க்கையில் இருவரும் செய்த திருவிளையாடல்கள் அப்படி… அதனாலோ என்னவோ அமைதியாகவே இருந்தனர் தங்களுக்குள்...


அவர்கள் நிலை இப்படி இருக்க… பெரியவர்களோ பூரண திருப்தியில் இருந்தனர்…


இரு வீட்டினரின் பெரியவர்களான விக்கியின் தாத்தா ரங்கநாதன் அபிராமி தம்பதியினரும்… நாரயண குருக்கள் வைதேகி தம்பதியினரும் சபையில் அமர்ந்திருக்க… விக்கியின் தாய் தந்தையரோடு ரிதன்யாவின் தாய் தந்தை சார்பாக ரிஷி மற்றும் கண்மணி சேர்ந்து சடங்குகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்…


இலட்சுமியின் தன் மனதில் கணவரை நினைந்தவராக… அனைத்தையும் முக மலர்ந்து பார்த்துக் கொண்டிருக்க… ரிஷிக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது போல… வேகமாக தன் தாயை தன்னருகில் அழைக்க… இலட்சுமியும் என்னவென்று கேட்க…


“அம்மா… நட்ராஜ் சாரோட அம்மாவும் அப்பாவும் எங்கே… அவங்களையும் இங்க வந்து உட்காரச் சொன்னேனே…” என்ற போதே…


இலட்சுமியும் பார்க்க… ஒரு ஓரத்தில் இங்கிருக்கும் பணம் படோபம் பார்த்த அயர்ச்சியில் மிரட்சியுடன் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தவன்… தன் தாயின் மூலமாக அவர்களையும் அழைத்து வந்து சபையில் அமர்த்த…


”உனக்கு பிடிக்காதுனாலும்… என் பொண்டாட்டிய பத்து வருசம் பார்த்துக்கிட்டவங்க…” மனைவியிடம் முணுமுணுத்தவன் அவளைப் பார்க்கவே இல்லையே… அவனுக்குத் தெரியும் கண்டிப்பாக தன்னை அக்கினி குண்டலத்தில் வறுத்தெடுக்கும் பார்வைதான் அங்கு இருக்கும் என்று… பார்ப்பானா என்ன அவன்…


-----

Recent Posts

See All
கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

 
 
கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

 
 
கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

 
 

Comentarios


Ya no es posible comentar esta entrada. Contacta al propietario del sitio para obtener más información.
© 2020 by PraveenaNovels

Developed by Varuni Vijay

© 2020 by PraveenaNovels

  • Grey Facebook Icon
bottom of page