top of page
Writer's picturePraveena Vijay

கண்மணி... என் கண்ணின் மணி-22-2

அத்தியாயம் 22-2:


ஆயிரம் முறை ரிஷி கேட்டு விட்டான்…


இதோ இப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறான்…


”ரெண்டு நாள் இங்க தங்குறதுல பிரச்சனை இல்லையா உங்களுக்கு….எந்த வசதியுமே இங்க இல்லயேம்மா…. ஊர்ல ரிது ரிதன்யா…. வேற தனியா இருப்பாங்க… ஏன்மா இப்படி… நான் கஷ்டப்படலாம் இல்லை….. எதுக்குமா இப்படி ஒரு முடிவெடுத்தீங்க…”


“என் பையனோட ரெண்டு நாள் தங்குறதுக்கு உனக்கு எதுக்குடா இத்தனை கேள்வி… உனக்கே ஒரு கஷ்டம் இல்லை எனும் போது உன்னை பெத்தவ எனக்கு எங்க இருந்து கஷ்டம் வரப் போகுது… அதுமட்டுமல்ல ரெண்டு நாள்ள உங்க ஒண்ணு விட்ட பெரியப்பா பொண்ணோட மேரேஜ்… அதுனால எல்லோரும் வர்றாங்கன்னு சொல்லிட்டேனேடா… ரிது ரிதன்யா வெல்லாம் தனியாவா இருக்காங்க… உங்க அத்தை வீட்லதான் இருக்காங்க… நீலகண்டன் அண்ணா முன்ன மாதிரிலாம் இல்லை…” என்ற சொல்லியபடியே தன் மடியில் படுத்திருந்த தன் மகனின் தலையைக் கோதிக் கொடுக்க…


மகிளாவின் முகம் கண்முன் வந்து நிற்க… உதட்டைக் கடித்து அவள் நினைவுகளை கடந்து வர முயன்றவனுக்கு… தன் அன்னை சொன்ன அந்த திடீரென்று முளைத்த பெரியப்பா யார்…. அது யாரென்று யோசிக்க ஆரம்பித்தவன்… கண்டுபிடிக்க முடியாமல் முடிவில் தன் தாயிடமே கேட்க…


“உனக்கு தெரியாதுடா… ரொம்ப நாளா அவங்க நம்மளோட பேசாமல் இருந்தாங்க… “ என்ற போதே…


“இப்போ என்ன திடீர்னு… நம்ம உறவு வேணும்னு வந்திருக்காங்க” என்று ஒரு மாதிரியான பாவனையில் கேட்க…


“ப்ச்ச்… உறவுன்னா அப்டித்தான் இருக்கும்டா ரிஷிக்கண்ணா… உன்னைக் கூட அவர் பார்க்கனும்னு சொன்னார்… மேரேஜ்ல பார்க்கலாம் “ என்க … ரிஷியும் அத்தோடு அந்த பேச்சை விட்டு விட்டான்…


தனக்கும் தாய்க்கும் பேச ஆயிரம் விசயங்கள் இருக்கும் போது புதிதாக முளைத்த பெரியப்பா குடும்பத்துக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்க நினைக்கவில்லை….


லட்சுமி இப்போது தன் மகனிடம் அடுத்து ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்….

“ரிஷி… நீ ஊருக்கு வரமாட்டேன்னு சொல்லிட்ட… ஆனால் நான் வரக்கூடாதுன்னு சொல்லமுடியாதுதானே… ரிது ரிதன்யா கூட நான் இங்க வரப் போகிறேன்… இத்தனை வருஷமா என் புள்ளய கஷ்டபடுத்திட்டேன் இனி அவன் வேலைக்கு போகிறதை பக்கத்தில் இருந்து பார்க்கனும்னு ஆசை…. ” என்ற போதே அவரைத் தடுத்து ரிஷி ஏதோ சொல்லப் போக…


”இதுக்கு மேல ஏதாவது பேசுன…” என்று செல்லமாக கடிந்தவர்…


“இங்கே நம்மளால இருக்க முடியாதுப்பா… வேற வீடு பார்க்கலாம்… சரியா” என்று கேட்க… ரிஷியால் அதற்கு மேல் மறுத்துப் பேச முடியுமா என்ன… சந்தோஷத்தோடு தலையாட்ட… லட்சுமி தொடர்ந்தார்…


”அப்புறம் நீலகண்டன் அண்ணாகிட்ட பேசனும்… உனக்கும் மகிளாவுக்கும் மேரேஜ் விசயமா பேச ஆரம்பிக்கனும்” என்றபோதே


ரிஷி… சட்டென்று….


“ம்மா… எனக்கு இருக்கட்டும்… முதலில் ரிதன்யாவுக்கு “ என்ற போதே


“ஹ்ம்ம்…. எல்லாம் தெரியும்… அவளுக்கு தோசம் இருக்காம்… பரிகாரம் பண்ணச் சொல்லி இருக்காங்க… அவங்க சொன்ன அம்மனுக்கு விரதம் இருக்கனுமாம்…. அந்த அம்மன் அனுக்கிரகம் கிடைத்தால் தான் வழி கிடைக்குமாம்… அது மட்டும் இல்லை… உனக்கு திருமணம் முடித்த பின்னாலதான் ரிதன்யாவுக்கு திருமணம் நடக்குமாம்… அதுனால தான் உனக்கும் மகிளாவுக்கும் முதல்ல” என்ற போதே இலட்சுமி முடிக்க வில்லை…

ரிஷி சுள்ளென்று விழுந்தான்…


“எந்த மடையன் சொன்னான்… அம்மன் அனுக்கிரகம்… ஏன் அந்த அம்மனோட பார்வை நம்ம மேல படலேன்னா ஒண்ணும் நடக்காதா என்ன… ஃபர்ஸ்ட் இந்த மூட நம்பிக்கை எல்லாம் தூக்கி தூரப் போடுங்கம்மா… அம்மனாம் கடவுளாம்… அவங்கதானே நம்ம வாழ்க்கைய சரிப்படுத்த வரப் போறாங்க” என்று இகழ்வாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே

கதவு தட்டப்படும் ஓசை கேட்க.… சட்டென்று பேசிக் கொண்டிருந்த தன் வார்த்தைகளை நிறுத்தினான் ரிஷி…


அதே நேரம்… வந்திருப்பது கண்மணி தான் என்பது தெரிந்ததால்… “வா மணி… கதவு சும்மாதான் சாத்தியிருக்கு” என்று உள்ளிருந்தே ரிஷி குரல் கொடுக்க… கண்மணியும் கதவைத் திறந்து உள்ளே வந்தாள்…

கண்மணி வந்ததின் காரணம்…


தாயும் மகனும் ’கண்மணி இல்லம்’ மீண்டும் திரும்பி வர… குழந்தைகளுக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த கண்மணியும் ஊருக்கு கிளம்புவதாகச் சொன்ன இலட்சுமி மீண்டும் வந்ததை ஆச்சரியமாகப் பார்க்க.. ரிஷி… தன் அன்னை இன்னும் இரண்டு நாட்கள் இங்கே தங்கப் போவதை அவளிடம் தெரிவித்தான் முகமெங்கும் புன்னகையோடு…


அதன் நடராஜன் எதுவும் கூறாமலே… ரிஷி அவர்களுக்கான அன்றைய இரவு உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்… ரிஷி மற்றும் லட்சுமியிடமும் சொல்லி விட்டாள்…


லட்சுமியையும் ரிஷியையும் தன் வீட்டுக்கு அழைக்க நினைத்தாள் தான்,…. ஆனால் ரிஷி காலையிலேயே சாப்பிட வராமல் போனது ஞாபகத்திற்கு வர… உணவைத் தயார் செய்து…ரிஷியின் அறைக்கே கொண்டு சென்றிருந்தாள்…

---

உள்ளே நுழைந்தவளுக்கு… தாய் மகன் அமர்ந்திருந்த விதம் ஒரு அழகான பாசக் கவிதை போல் தான் தோன்றியது….


லட்சுமி நாற்காலியில் அமர்ந்திருக்க…. ரிஷி தரையில் அமர்ந்திருந்தபடி… தன் தாயின் மடியில் தன் தலை சாய்ந்திருக்க… அந்த 25 வயது இளைஞனை… குழந்தை போல் தலை கோதி சீராட்டிக் கொண்டிருந்தார் அந்தத் தாய்…


தன்னையுமறியாமல் அவர்களை ரசித்தபடியே கண்மணி உள்ளே வர… அப்போதும் ரிஷி தன் தாயின் மடியின் சாய்த்திருந்த தலையை எடுக்க வில்லை…. அதே நிலையில் இருந்தபடியே… கண்மணியைப் பார்த்து புன்னகைத்தவன்…


அவள் கையில் உள்ள பாத்திரங்களையும்… அதைக் கீழே விழாமல் கவனமுடன் அவள் கொண்டு வருவதையும் பார்த்தவுடன்… இப்போது எழ முயல… அதற்குள் கண்மணி அவன் எதிரில் லாவகமாக அமர்ந்து தான் கொண்டு வந்த பாத்திரங்களை வைக்க… ரிஷி…. அவற்றைப் பார்த்தபடியே…

“ஏன் மணி… இதெல்லாம்…. நாங்களே வந்திருப்போம்ல…. உனக்கு ஏன் இவ்வளவு சிரமம்” என்று தணிந்த குரலில் அவளின் உதவியை ஏற்றுக் கொண்ட தொணியில் பேச…


“ஹ்ம்ம்ம்ம்… உங்களாலதான் இவ்வளவு சிரமம்…. சார் காலையிலேயே எங்க வீட்டுக்கு வராம போய்ட்டீங்க… தன்மானச் சிங்கம் இப்பவும் அதே மாதிரி போய்ட்டீங்கன்னா…. எனக்கு சாப்பாடை வேஸ்ட் பண்றது பிடிக்காது… அதுனாலதான் இங்கேயே கொண்டு வந்துட்டேன்…” என்று பொய்யான கோபத்துடன் கூற… லட்சுமி மலர்ந்த முகத்தோடேயே தன் இரு புறமும் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்தபடி இருக்க..


கண்மணி சுற்றும் முற்றும் பார்த்தவளாக


“ஓ… சாப்பாடுத் தட்டு… ஒண்ணுதான் இருக்கா… ஒரு நிமிசம்…. எடுத்துட்டு வந்துறேன்…” என்றபடி மீண்டும் கீழ் இறங்க…


ரிஷி அவளிடம்


“கண்மணி… அது போதும்” என்று வேக வேகமாகச் சொல்ல… அதற்குள் கண்மணி கீழ் இறங்கியிருக்க…ரிஷி… தலையைச் சிலுப்பியபடி.. திரும்ப… லட்சுமி… எழுந்திருந்தார்… கண்மணி கொண்டு வந்திருந்த இரவு உணவைப் பார்வையிட்டபடியே தட்டை எடுத்து கழுவ ஆரம்பிக்க…


“ரொம்ப நல்ல பொண்ணுடா… கண்மணி… நமக்காக காலையிலும்… இப்போ நைட்டும் டிபன்… ” என்ற போதே…


“ரொம்ம்ம்ம்ம்ப நல்ல பொண்ணுதான் தான் அம்மா…” என்று சத்தமாகச் சொன்னவன்…


அடுத்து தாய்க்கு கேட்காத குரலில் தனக்குள் பேசிக் கொண்டான்


“ஆனால் கொஞ்சம் பயமா இருக்கேடா ரிஷி… இந்த மணி அக்காவுக்கு பாசம் அதிகமா வந்திருச்சுனா… பால்பாயாசம் கூட இல்லை டீல கூட விசம் வைக்குமே… அதை நினைக்கும் போதுதான் நமக்கு அல்லு விடுது” வாய் மட்டுமே கிண்டலாக முணுமுணுத்தாலும்… கையோ நம்பிக்கையோடு அவள் கொண்டு வந்திருந்த சப்பாத்தியை எடுத்து லட்சுமி நீட்டிய தட்டில் போட ஆரம்பித்திருந்தது…


அதே நேரம்தட்டில் இருந்த சப்பாத்தியை விண்ட இலட்சுமியின் விரல்கள் … நேராக ரிஷியின் வாயருகே போக


தன் தாயைப் பார்த்தவன்..

“நான் சொன்னால் தான் ஊட்டி விடுவீங்களாம்மா” நொறுங்கிய குரலில் அவன் கேட்க


அதற்கு மேல் லட்சுமி.... சும்மா இருப்பாரா என்ன... தன் மகனுக்கு தன் ஆசை தீர ஊட்டி விட ஆரம்பித்திருக்க... ரிஷியும் வாங்கி சாப்பிட ஆரம்பிக்க… கீழே போன கண்மணியும் இப்போது உள்ளே வந்திருந்தாள்...


ஆனால் தாய் மகனின் பாசப் பிணைப்பில் உள்ளே வரலாமா வேண்டாமா இப்போது தயங்கியபடி வந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்...


தன் அன்னை தரும் சாப்பாட்டை சிறு குழந்தை போல் ருசித்துச் சாப்பட்டுக் கொண்டிருந்த மீசை வைத்த இளைஞனான ரிஷியை சிறு பொறாமையோடும்.... அவனுக்கு ஊட்டிக் கொண்டிருந்த லட்சுமியை ஏக்கத்தோடும் பார்த்தபடி... தயங்கி நின்றவளை...


ரிஷி தங்கள் அருகில் அழைக்க.... ஒரு வித ஏக்க மயக்கத்தோடு அவன் அருகில் போய் நின்றவள்...


“த... தட்டு...வேண்டாமா ஆன்ட்டி?” கண்மணி தடுமாற்றமாகக் கேட்க... இதுவரை ரிஷி கண்மணியின் இந்த தடுமாற்றமான குரலை கேட்டிராததால்... யோசனையோடு பார்க்க.... அதற்குள் லட்சுமி...


“இல்லம்மா... இதுவே போதும்மா...” என்று சொல்லியபடி... தன் மகனுக்கு பசி ஆற்றும் ஒரு தாயாக தன் கடமையில் மூழ்கி விட்டார்...


கண்மணியும் ரிஷியும் 5 வயதுக் குழந்தைகள் என்றால்.... ரிஷிக்கு ஊட்டும்போது கண்மணி பார்த்துக் கொண்டிருக்கின்றாளே என்று லட்சுமி ஊட்டியிருப்பார்... 23 வயது குமரிப் பெண்ணுக்கு ஊட்டத் தோன்றவில்லை... 23 வயது என்பதை விட.... அவள் அடுத்த வீட்டுப் பெண்... எந்த உரிமையில் இலட்சுமி கேட்பாள்... மகிளா என்றால் இந்நேரம் ரிஷிக்கு போட்டியாக வந்திருப்பாள்.... இப்படி இந்த நினைவுகளில் கண்மணியை பெரிதாக எண்ண வில்லை..


அவராவது அப்படி மௌனமாக இருந்து விட்டார்... ஆனால் ரிஷியோ ஒரு படி மேலே போய்...


“அம்மா எனக்கு சுத்தி போடுங்க அம்மா... இந்தப் பொண்ணு என்னையே பார்த்துட்டு இருக்கு…” என்று சிரித்தபடி சொல்ல... அவன் விளையாட்டாகச் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட கண்மணிக்குத்தான் சிரிப்பதா... அழுவதா என்று தெரியவில்லை...


அவன் சொன்னது முற்றிலும் உண்மைதானே.... தவறில்லையே… இப்படி ஏக்கமாக பொறாமையோடு பார்த்தால்.... பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்…. நினைத்தவள்...


உடனடியாக அவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பியவள்... நடராஜனைச் சாப்பிடச் சொல்லிவிட்டு.... தன் அன்னையின் புகைப்படத்தை பார்த்தபடி சோபாவில் அமர்ந்தவள் தான்.... நடராஜன் எவ்வளவோ பேசியும் தன் தாயின் புகைப்படத்தை இமைக்க மறந்து வெறித்திருந்த கண்களோடு பார்த்தபடியே... பிடிவாதமாக அமர்ந்திருந்தாள் கண்மணி...


-----


புகைப்படத்தில் இருந்த தன் தாய் பவித்ராவின் முகத்தினையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த தன் மகளின் நிலையைப் பார்த்த நடராஜனுக்கோ மனம் தாளவேயில்லை....


தன் மகள் கண்மணி அடிக்கடி எல்லாம் இது போல இருக்க மாட்டாள்… அவளையும் மீறி அவள் அன்னை ஞாபகம் வரும் போது மட்டுமே இது போன்ற மன நிலையில் இருப்பாள்…. பின் அவளாகவே சரி ஆகி விடுவாள்…. என்பது அவருக்கும் தெரியும்…


ஆனால் சற்று முன் வரை நன்றாகத்தானே இருந்தாள்… இப்போது என்ன ஆனது… புரியாமல்… குழம்பியபடி… நடராஜன் மகளின் அருகே சென்று அமர்ந்தார்….


கண்மணி.. ஹாலில் இருந்த சோபாவில் சம்மணம் போட்டபடி கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டியபடி உம்மென்று அமர்ந்திருந்தாள்…


நடராஜன் அவளின் அருகே அமர்ந்தார் என்று சொல்வதை விட… மகள் அமர்ந்திருந்த சோபாவின் கீழே அமர்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்… சொல்லப்போனால் ரிஷி-லட்சுமி இருந்த நிலைக்கு எதிர்மாறாக இருந்தது…. நடராஜன்-கண்மணி நிலை…


“என்னடாம்மா…என்னாச்சுடா… சாப்பிடாம இப்படி அம்மா போட்டோவையே பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்டா…. வா சாப்பிடலாம்…. அப்பா சாப்பாடு போட்டு எடுத்துட்டு வரவா… ஊட்டி விடவா…” என்று அவள் கைகளைப் பிடித்தபடியே வாஞ்ஜையோடு கேட்க…


சட்டென்று அவரின் கைகளை தட்டி விட்டாள் கண்மணி…. நடராஜனிடம் மட்டுமே.. தன் தந்தையிடம் மட்டுமே காட்டும் பிடிவாதம் அது… அவரின் பாசம் தனக்குத் தேவையில்லை என்பதைக் காட்டும் வழக்கமான அவளது பிடிவாதம்…


“எனக்கு பசிக்கலை…. நீங்க போய்த் தூங்குங்க…” அப்போதும் கண்மணி தன் தந்தையைப் பார்க்கவில்லை…. அன்னையின் புகைப்படத்தைப் பார்த்தபடியே சொன்னவளின் உதடுகள் கூட இலேசாக நடுங்கத்தான் செய்தன…


தன் மகளின் பாசத்தைத்தான் அவரால் வாங்க முடியவில்லை… அவளது ஏக்கத்தையும் தீர்க்க முடியாத பாவியாகிப் போன நடராஜனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை…. புரியாமல் விழித்தவருக்கு… தன் மகளை பட்டினியாக விடவும் மனம் வரவில்லை….


வேகமாக சமையல் அறைக்குள் போனார்…. மகளுக்கு சாப்பாடு எடுத்து வர….


அவர் போவதைப் பார்த்தாள் தான்….. அவர் எதற்குப் போகிறார் என்று தெரிந்தும் தடுக்கவில்லை கண்மணி….


அவளுக்கு தான் பிடிவாதம் பிடிக்கிறோம் என்று நன்றாகவே தெரிகிறது… ஆனால் அதை அவளால் விட முடியவில்லை… தன் வாழ்க்கையில் நடந்து முடிந்த எதையும் இனி மாற்ற முடியாது எனும் போது எதை எதிர்பார்த்து இப்படி அமர்ந்திருக்கிறாள்…


இதோ தன் முன் புன்னகைத்தபடி புகைப்படத்தில் தன் அன்னையின் பாசம்.... தாய்ப்பாசம்… தாயின் அரவணைப்பு…. இதெல்லாம் அவள் உணர்ந்திருந்தால் தானே…. நினைத்து ஏங்குவதற்கு….


உணராத ஏக்கங்களாகவே நிலைத்துப் போய்விட்ட உணர்வுகளை தேடுவதில் யாருக்கு லாபம்….


அன்னை என்ற உறவு தன் அன்னையோடு இணைக்கப்பட்டிருந்த தொப்புள் கொடியின் ஆயுட்காலம் வரைதான் எனும் போது…. அதற்கு மேல் அவளுக்கு என்ன கிடைத்திருக்கும்… என்ன ஞாபகம் இருந்திருக்கும்


தன் தாயின் கருவறையில் தான் அனுபவித்த தாயன்பை… தனக்குள் தேடிக் கொண்டாலொழிய வேறெங்கும் அவள் தேடினாலும் கிடைக்காதே…


ஆனால் இருட்டறையில் கருவாக அவள் அனுபவித்த தாயன்பு அது அவள் உணர முடியுமா என்ன… தேட முடியுமா என்ன….. இல்லை வேறு யாரும் தான் அதைத் தர முடியுமா…


உணர்ந்தவள் வழக்கம் போல தன்னைச் சமாதானப்படுத்திக் கொள்ளும் விதமாக இமைகளை மூட…. அவளையுமறியாமல் கசிந்த கண்களின் ஈரம் அவள் இமை உணர……. அழக்கூடாது என்று எப்போதோ முடிவெடுத்திருந்த மூளை இப்போது விழித்துக் கொள்ள…. அனிச்சை செயலாய் நடந்திருந்த அவளின் கண்களின் ஈரம் .... இப்போது உள்வாங்க.... தான் இருந்த நிலையை மாற்றி அமர்ந்து… ஆழப் பெருமூச்சு விட்டவளாய் கண்களை மூடித் திறக்க... அதே நேரம் அவள் தாய் பவித்ராவின் புகைப்படத்தில் நிழலுருவம் பிரதிபலிக்க... சட்டென்று திரும்பினாள் கண்மணி…


ரிஷி தான் வந்திருந்தான்…


ஒருக்களித்து சாத்தியிருந்த கண்மணியின் வீட்டுக்கதவை லேசாகத் தட்டியபடி திறந்தவன்… கண்மணியைப் பார்க்க… அவனும் இவனைப் பார்த்து விட்டு… உடனேயே திரும்பிவிட்டாள்…


அதே நேரம் கண்மணி அமர்ந்திருந்த நிலையோ?… இல்லை அவனைப் பார்த்துவிட்டு சட்டென்று முகம் திருப்பிய அவள் பாவனையோ? எதுவோ? அங்கு நிலைமை சரி இல்லை என்பதை அவனுக்குப் புரியவைத்தது…


கால்களை மடக்கி... முழங்காலின் மேல் தன் முகவாயை வைத்தபடி… உம்மென்று அமர்ந்திருந்த கண்மணியைப் பார்த்தபடியே… நடராஜனைத் தேட…


தன் அன்னையின் புகைப்படத்தில் நிழலாடிய ரிஷியின் பிம்பத்தை பார்த்து திரும்பிய கண்மணி… அவனைப் பார்த்து விட்டு முகத்தை சட்டென்று திருப்பிக் கொண்டாள் தான்… காரணம் யாரோ ஒரு மூன்றாம் மனிதரிடம் தன் கவலை படிந்த முகத்தைக் காட்டப் பிடிக்காமல் மறைக்கும் செயலாகவே கண்மணி அப்படி செய்தாள்…


அதே நேரம் தன் நிலையிலிருந்து மீள முயற்சிக்க பிரயணத்தப்பட்டவளாக…. வார்த்தைகள் இன்றி ரிஷி எதற்காக வந்திருக்கின்றான் என்று அவள் கண்கள் ரிஷியை மீண்டும் நோக்க…


அவனது கையில் இருந்த பாத்திரங்கள்…. அவன் எதற்காக வந்திருக்கிறான் என்பதை இப்போது விளம்ப… நொடியில் தன் பாவத்தை மாற்றியவளாக… எழுந்தாள் கண்மணி


“நாளைக்கு கொண்டு வந்திருக்கலாமே” என்றபடி அவன் கொண்டு வந்திருந்த பாத்திரங்களை வாங்கப் போக… சரியாக நடராஜனும் மகளுக்கு சாப்பாடை எடுத்து வந்திருந்தார்… அதே நேரம் கிடைத்த வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்…


மூன்றாம் மனிதர்கள் முன் கண்மணி தன்னை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டாள் என்பதை புரிந்தவராய்… ரிஷி வந்திருந்ததைப் பயன்படுத்தியவர்


“மணி…. சாப்பிடும்மா…” என்று அவள் கையில் தான் வைத்திருந்த தட்டை திணிக்க… கண்மணி ரிஷிக்கு தெரியாதவாறு நடராஜனைப் பார்த்து முறைக்க… நடராஜனோ அவள் முறைப்பதை எல்லாம் கண்டும் காணாதது போல்…


“மணி இன்னும் சாப்பிடல….” ரிஷியிடம் சொல்லியபடியே…


“நீ சாப்பிடுடா…. நான் பாத்திரத்தை வாங்கி வைக்கிறேன்” என்று கண்மணியின் கைகளில் தட்டைக் கொடுத்து விட்டு ரிஷியின் கையில் இருந்த பாத்திரங்க்களை வாங்கிக் கொள்ள…


தந்தையைப் புரியாதவளா என்ன…. ரிஷியின் முன் அவரிடம் தன் கோபத்தைக் காட்ட முடியாத கோபமும் இப்போது வந்து சேர… தன் கையில் இருந்த தட்டையே… அதில் இருந்த சப்பாத்தியையே வெறித்தபடி இருக்க…

ரிஷி… நடராஜனிடம்….


“சாரி… உங்க பொண்ணு சூப்பரா சமைச்சிருக்குனு… எங்க அம்மா ஒரே புகழாரம் தான் போங்க…” என்றவன்…. ஓரக்கண்ணால் கண்மணியைப் பார்த்தபடியே…. நடராஜனிடம் மௌன உதட்டசைவால் கேட்டான்…


“என்னாச்சு… மேடம் அப்செட்” கண்ணசைவால் கண்மணியைக் காட்டியபடியே


நடராஜனும்… தன் மனைவியின் புகைப்படத்தைக் காட்டியபடி…


“அவ அம்மா ஞாபகம்..” என்று மெதுவாகச் சொல்ல…. ரிஷி இப்போது கண்மணியை லேசான பரிதாபத்துடன் பார்க்க… கண்மணியோ அவனிடம்…


“ஏன் நீங்க சாப்பிடலையா…“ கோபம் கலந்த நக்கலாகக் கேட்டாள்.. ஏனோ தெரியவில்லை.... அவனின் பரிதாபப் பார்வை அவளுக்கு கோபத்தைத்தான் தூண்டியது


ரிஷியைப் பார்க்க பார்க்க கோபம் கோபமாக வந்தது அவளுக்கு இப்போது... அவளது இயல்பில் இருந்து மாறி... சிறு பிள்ளைத்தனமாக கேட்டாள் கண்மணி... பொறாமையா என்று கேட்டால் அப்படியும் கூட சொல்லலாம் என்றே சொல்ல வேண்டும்…


சம்மந்தமில்லாத அவளின் திடீர் கேள்வி புரியாமல் ரிஷிஅவளைப் பார்க்க…


“இல்ல உங்க அம்மா புகழ்ந்தாங்கன்னு சொன்னீங்களே…. ஏன் நீங்க சாப்பிடலையா என்ன… உங்களுக்கு சாப்பாடு நல்லா இல்லையானு தெரியலையா” இருக்கின்ற கடுப்பை எல்லாம் மறைத்தவாறு கேட்டாள் கண்மணி…


எவ்வளவுதான் கடுகடுப்பை மறைக்க முயற்சித்தாலும்… வார்த்தைகளில் வெளிப்படத்தான் செய்தது


நட்ராஜனோ மகள் வார்த்தைகளை என்று எதிர்த்து பேசி இருக்கின்றார்… வேறு வழியின்றி ரிஷியை சங்கடமாக பார்வை பார்த்து வைக்க


ரிஷி ’ஞே’ என்று நின்றான்... என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்… அதே நேரம்


“சாப்பாடு போட்டதே திட்றதுக்குத்தானா... தேவையாடா ரிஷி உனக்கு” மனதுக்குள் சொல்லிக் கொண்டவன்.... இருந்தும் அவளுக்கு புரிய வைக்கும் விதமாக


“நான் சாப்பிட்டேன் தான் மணி.... ஆனால் எங்க அம்மா கையால சாப்பிட்டேனா.... அதுனால சாப்பாடு எவ்வளவு கேவலமா இருந்தாலும்.... அது டேஸ்டா மாறிரும்” என்று நேரம் காலம் தெரியாமல்.... ஒரு வேகத்தில் ஆரம்பித்தவன்... நடராஜன் மற்றும் கண்மணி இருவரின் கொலைவெறி முக பாவனையில் சட்டென்று நாக்கைக் கடித்து நிறுத்தினான் தன் வார்த்தைகளை...


“டேய் ரிஷி....உனக்கு சனி நாக்குல தாண்டா.... வேற எங்கேயும் இல்லை… இப்போ அம்மா கை.... டேஸ்ட்.... இதுலாம தேவையாடா... நடராஜ் சொன்னாரே.... அம்மா ஞாபகம் இவளுக்கு வந்திருச்சுனு.... “ என்று நினைத்த போதே...


கண்மணிக்கு அவளின் தாய் ஞாபகம் வந்ததற்கு காரணம் தான்தான் என்று மனம் உணர... இப்போது வருத்தத்தில் மனம் குன்றியவனாய் அப்படியே நின்றுவிட்டான் குற்ற உணர்வில்...


நடராஜனோ...


“என் பொண்ணே அவ அம்மா நினைப்பில துவண்டு போய் இருக்கா... இவன் என்னடான்ன அவகிட்டயே.... எரியிற நெருப்புல எண்ணைய விட்ட மாதிரி இப்படி பேசிட்டு இருக்கானே...” என்று மனதுக்குள் புலம்ப...


கண்மணியோ இப்போது அமைதியாகி இருக்க... ரிஷிதான் அந்தச் சூழலை தன் கையில் எடுத்தான்...


கையில் தட்டுடன்.. பிடிவாதம் கலந்த கோபத்தோடு விறைப்பாக நின்று கொண்டிருந்த கண்மணி அவன் கண்ணுக்கு உண்மையாகவே வளர்ந்த குழந்தையாகத்தான் தெரிந்தாள் ரிஷிக்கு…. எப்போதுமே பெரிய அறிவாளி போல… தனக்குத்தான் எல்லாம் தெரியும்… தன் வார்த்தைகள்தான் சரி என்ற தோற்ற பிம்பத்தில் அவன் கண் முன் உலவிக் கொண்டிருந்த கண்மணியின் இந்த தோற்றம் ரிஷி அவளிடம் இதுவரை காணாதது… அவனையுமறியாமல் அவன் இதழ்களில் மென்னகை பரவ…. அதே புன்னைகையோடு


“இப்போ என்ன… உன் சாப்பாடு டேஸ்ட் எப்படி இருக்குனு… உனக்கு நான் சொல்லனும் அவ்வளவு தானே… இதோ சொல்றேன்… இதுக்கெல்லாம் கோபப்பட்டா அப்புறம் நான்லாம் உன் மேல வைத்திருக்கிற சொர்ணாக்…” என்றபோதே கண்மணி நெற்றிக் கண் காட்ட…. சுதாரித்த ரிஷி


“ஐ... ஐ.. மீன்.. மணி அக்கா இமேஜ் என்னாகிறதுன்னு சொல்ல வந்தேன்” என்று மழுப்பியவனாக… எப்படியோ சமாளித்தவனாக என்ன செய்வதென்று தெரியாமல் அவள் கையில் வைத்திருந்த தட்டில் இருந்த சப்பாத்தியை இரண்டு விரல்களால் பிட்டவன்... குருமாவில் தோய்த்து எடுத்து.... பின் தன் வாயில் போட்டவன்...



“வாவ்.... சூப்பர்.... எங்க அம்மா கையால சாப்பிட்டதை விட.... செம டேஸ்டா இருக்கு... ரிஷி மிஸ் பண்ணிட்டியேடா...” என்று ஏற்ற இறக்கத்தோடு சொல்ல...


கண்மணி இப்போது இன்னும் அதிகமாகத்தான் முறைத்தாள்.... ஆனால் அந்த முறைப்பில் கோபம் தான் இல்லை எனும்படி அவளது பாவனை இருக்க...


“நல்லா இருக்குனுதானே சொன்னேன்... பாராட்டினால் சிரிக்கனும் மிஸ். கண்மணி நட்ராஜ்... முறைக்கக் கூடாது... சொல்லுங்க சார்... நீங்களும் சாப்பிட்டீங்கதானே” நடராஜனை தன் சப்போர்ட்டுக்கு அழைக்க...


கண்மணியோ.... அப்போதும் சாப்பிடாமல் அமைதியாக தட்டை கீழே வைக்க...


“உங்க கஷ்டம் எனக்குப் புரியுது சார்” பெருமூச்சு விட்டவனாக நடராஜனிடம் சொன்னவன்... அவரது காதில்...


“இத்தனை வருசம் எப்படி சார் சமாளிச்சிங்க.... க்ரேட்சார் நீங்க...” என ரகசியம் ஓத.... அதைப் பார்த்த கண்மணியின் புருவம் கேள்விக் குறியாக அவனை நோக்க....


உடனே ரிஷி…. குனிந்தவனாக கைகளைக் குறுக்காகக் கட்டியபடி… வேலையாள் எஜமானியிடம் பேசுவது போல…


“ஒண்ணுமில்லங்க மேடம்… என்ன டவுட்டுங்கன்னா சாப்பாடு போட்டவங்கள பட்டினியா போட்டு சாப்பிட்டோம்னா... சாமி நைட் வந்து கண்ண குத்திடுமோனு கேட்டேன்... உங்க அப்பா அதாவது எங்க முதலாளி சார்க்கு அடிக்கடி எக்ஸ்பீரியன்ஸ் ஆகி இருக்கும் தானே... அதுதான் செக் பண்ணினேனுங்க மேடம்.... மேடம் அப்பாக்கு முன்ன பின்ன அப்படி ஆகி இருக்கிறதானு...”


ரிஷி வார்த்தைகளில் அவன் சொன்ன பாவங்களில் கண்மணிக்கு இப்போது சிரிப்பு வர அவள் அதை அடக்க முயல...


“சிரிப்புதான் வருதுள்ள.... சிரிக்கிறதுதானே.....” என இப்போது ரிஷி அவளைச் செல்லமாக அதட்ட... இப்போது நடராஜனோ பார்வையாளராக இருவரையும் மாறி மாறி பார்த்தபடி இருக்க...


கண்மணி அதற்கு மேலும் பாசாங்கு காட்டாமல்.... சாப்பிட ஆரம்பித்தவள்... ரிஷியை விடவில்லை


“அம்மாவைப் பார்த்த உடனே.... ரிஷி புள்ளைக்கு.... ஒரே புன்னகை தான் போல” சாப்பிட்ட படியே கண்மணி சாதாரணமாக கேட்க...


நடராஜனுக்கு ஒரே ஆச்சரியம்...


’இவள் தன் மகளா....’


அதே நேரம் தன்னால் முடியாததை... ரிஷி செய்து காட்டியதில்..... லேசான பொறாமை கூட எட்டிப் பார்த்ததோ என்னவோ அவருக்குள்... ஆனால் தன் மகள் வருத்தம் போய் சாதாரணமாகி சாப்பிட ஆரம்பித்தது அவருக்கு திருப்தி தான்.... அதே திருப்தியில் ரிஷியைப் பார்க்க…. நட்ராஜிடம் கண்சிமிட்டி கட்டைவிரலை உயர்த்திக் காட்டியவன் அடுத்த சில நிமிடங்களில் தன் அறைக்கும் சென்று விட்டான் ரிஷிகேஷ்…


------


கண்மணிக்கு அன்று இரவு.... அதே சிந்தனைதான்...


’ரிஷி சொன்னதால் சாப்பிட்டோமா... இல்லை... முதலில் இருந்த கோபம் போனதால் சாப்பிட்டோமா.... இல்லை... பசி இருந்ததால் சாப்பிட்டோமா...’ காரணம் தேடியவளுக்கு...


ரிஷி தன்னைச் சாப்பிட வைத்ததை நினைத்தவள்... சட்டென்று.... அவளையும் மீறி.... சிரிப்பாக வர.......தன் போனை எடுத்து


“சாமி வந்து கண்ணக் குத்துச்சா” என்று மெசேஜ் டைப் செய்தவள்.... உடனே அனுப்பாமல் சில பல நிமிடம் யோசித்து பின் அனுப்பியும் விட...


உடனடியாக... ரிஷியிடமிருந்து பதில் வந்தது...


“நீதான் சாப்பிட்டுட்டியே...... அதனால இந்த தடவை தப்பிச்சுட்டேன்..” அதோடு சேர்த்து அதை ஸ்மைலியாகவும் அனுப்ப...


கண்மணி இப்போது…


”சாமி நம்பிக்கை இல்லாதவங்களை எல்லாம் சாமி வந்து கண்ணைக் குத்தாது ரிஷி சார்” - கண்மணி அனுப்ப


”சாப்பாடு போட்ட... கண்மணி மேடத்துக்கு அளவுக்கதிகமா நம்பிக்கை இருக்குதானே… அதுதான் பயமே” நக்கலாக ஸ்மைலிகளை அனுப்ப…


அதற்கு கண்மணி பதில் அனுப்பாமல்…. குட்நைட் என்று மட்டும் அனுப்ப.. பதிலுக்கு ரிஷியும் அனுப்ப... புன்னகை முகமாக கண்மணி உறங்க.... ரிஷியோ வெகுநாட்களுக்கு பிறகு தன் தாயின் அன்பை மீட்டெடுத்த நிம்மதியில் உறங்கினான்....

---------------

2,844 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Commentaires


Les commentaires ont été désactivés.
© 2020 by PraveenaNovels
bottom of page