top of page
Writer's picturePraveena Vijay

கண்மணி... என் கண்ணின் மணி-22-1

அத்தியாயம் 22-1:


அதிகப்பட்சம் இருவர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய அளவுக்கு இருந்தது அவனது அறை... அந்த அளவுக்கு மிகச் சிறியதாக இருந்தது அந்த அறை... குளியலறை கூட அறைக்கு வெளியே தான்....


லட்சுமியின் கண்கள் அவனின் அறையை ஒரே நொடியில் அலசி முடித்திருக்க… அந்த அறைக்கு அதற்கு மேலெல்லாம் நேரம் தேவைப்படவே இல்லை…


அறையின் ஒரு ஓரத்தில் ஒரே ஒரு நாற்காலி மட்டும்.... ரிஷியின் உடைகள் எல்லாம்... அங்கிருந்த அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.... அது போக அவன் உபயோகப்படுத்தும் பாத்திரங்களாக சாப்பிடும் தட்டு, நீர் அருந்த ஒரு டம்ளர் என இரண்டு மட்டும் இருந்தன...


கண்கள் பனிக்க மகனையே பார்க்க... அவனோ.... தாயின் ஆராயும் பார்வைகளை எல்லாம் கவனித்தபடிதான் இருந்தான்… பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை… அதே நேரம் அவன் கவலை எல்லாம் அவன் அன்னைக்கு இந்த இடம் உகந்ததாக இருக்குமா? அது மட்டுமே கவலையாக இருக்க…


“அம்மா… அட்ஜஸ்ட் பண்ணீக்குவீங்கதானே... கொஞ்ச நேரம் தான்... அப்புறம் காலேஜ் போய்ட்டா அங்கேயே நேரம் போய் விடும்... ஈவ்னிங் நாம அப்படியே ஸ்டேஷன் போய்டலாம்.....” என்றவன்...


“இங்க பெரிய வசதியெல்லாம் இல்லை... அதுனாலதான்... ஹோட்டெல்ல ரூம் புக் பண்ணினேன்... பாத்ரூம்லாம் பளிச்சுனு இருக்காது தான்... ஆனால் சுத்தமா இருக்கும்”...


தயங்கியபடி சொன்னான் தான்... ஆனால் குரலில் வருத்தம் என்பது மருந்துக்கும் இல்லை...


மகனையே பார்த்தபடி நின்றிருந்தார்....


தான் படுக்கும் படுக்கையின் மெத்தை விரிப்பு சற்று கலைந்திருந்தால் கூட படுக்க மாட்டான் ரிஷி.... அதற்காக வேலை ஆட்களை ஏவவும் மாட்டான்... அடுத்தவர்களை அவன் என்றுமே நோகடிக்க மாட்டான்... அதே நேரம் தன் சுகபோகத்தை விட்டு வெளியிலும் வர மாட்டான் ரிஷி... அப்படிப் பட்டவன் இன்று படுக்க தலையணை கூட இல்லாமல்... ஏன் தன் மகன் இப்படி மாறினான்... தன் வார்த்தைகளுக்காகவா.... தான் அவனை நம்ப வேண்டும் என்பதற்காகவா....


தன் மேலான தன் தாயின் நம்பிக்கையின்மை மட்டும் ரிஷியின் இந்த வாழ்க்கைக்கு காரணம் அல்ல... திடீரென்று இவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம்… நிலையில்லாத அந்த அந்த சொகுசு வாழ்க்கையின் கானல் நீர் சந்தோஷங்கள் இவற்றின் மேல் கொண்ட அதிருப்தி என தன்னையே மாற்றிக் கொண்டிருக்கிறான் என்பது லட்சுமிக்கு அப்போது தெரிய வாய்ப்பில்லாமல் போக.... மௌனமாக இருந்தார்... ஆனால் அவர் மனமோ மகனின் நினைவுச் சூறாவளியில் மாட்டி வெளியே வர முடியாமல் சுழன்று கொண்டிருக்க.. அப்போதைக்கு எதுவும் பேச மனம் வரவில்லை அவருக்கு.... ரிஷியின் வாழ்க்கை முறை… அவரை பேச மடந்தையாக்கி இருந்தது…. மகனுக்கு தண்டனை கொடுக்கின்றோம் என்ற பெயரில் தள்ளி வைத்து.. அவனை அனாதை போல எண்ண வைத்து விட்டோமோ…. குற்ற உணர்வு… அவர் மனதின் முழுவதும் ஆக்கிரமிக்க ஆரம்பிக்க… அந்த அறையிலோ மௌனம் மட்டுமே ஆக்கிரமிக்க ஆரம்பித்து இருந்தது….


-----

கிட்டத்தட்ட 8 மணி அளவில் தாயும் தனையனும் கல்லூரிக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தனர்... தன் அன்னையை கிளம்பித் தயாராக இருக்கச் சொல்லிவிட்டு....... இருவருக்கும் காலை உணவு வாங்கி வருவதற்காக கீழே இறங்கினான் ரிஷி....



இதற்கிடையே... நடராஜ் ரிஷியின் அறைக்கே வந்து லட்சுமியை வந்து பார்த்து நலம் விசாரித்து விட்டுப் போனவர்.... தன் மகளிடம் ரிஷியின் தாய்க்கும் சேர்த்து காலை உணவு தயாரிக்கச் சொல்லியிருந்தார்... கண்மணியும் தன் தந்தை சொன்னபடி காலை உணவைச் செய்து விட்டு.... லட்சுமியை அழைப்பதற்காக மேலே வரப் போக... ரிஷியும் அதே நேரத்தில் மாடிப் படிகளில் இருந்து இறங்கி வந்து கொண்டிருக்க... கண்மணி அவனைப் பார்த்து விட்டு கீழேயே நிற்க....



ரிஷி கண்மணியைப் பார்த்து புன்னகைத்தபடி...


“என்ன டீச்சரம்மா... ஸ்கூலுக்கு போகலையா” என்று கொஞ்சம் அக்கறை.... கொஞ்சம் கிண்டல் என கலந்து கேட்க


“போகனும்.... சம்மர் ஹாலி டே தானே…. பெருசா வேலைலாம் இல்ல வெல்டர் சார்...“ அவனைப் போலவே கிண்டல் பாணியில் ஆரம்பித்தவள்…. சட்டென்று


“சாரி சாரி... இஞ்சினியர் சார்…” என்று திருத்திச் சொல்ல... அவள் வார்த்தைகளில் சத்தமாக வாய்விட்டுச் சிரித்த ரிஷி...


“ஹப்பா.... படிச்ச படிப்ப உன் திரு வாயால என் காது குளிர கேட்டுட்டேன்.... அது போதும்…” என்றான் அவளையே பார்த்தபடி... ஒரு மாதிரிக் குரலில்


அவன் குரலில் இருந்தது சந்தோஷமா வருத்தமா? சொன்ன அவனுக்கே தெரியவில்லை…. சொன்ன அவனுக்கே அப்படி இருக்க கேட்ட கண்மணிக்கு மட்டும் புரிந்திருக்குமா என்ன…. அவளுக்கும் அதே பாவம் தான்… இவன் சந்தோஷமாகச் சொல்கிறானா இல்லை வருத்தப்படுகிறானா…. குழப்பமாக இருக்க... ரிஷியின் முக பாவத்தை கவனிப்பதற்காக அவன் முகத்தையே நோக்க... அவளின் பார்வை புரியாமல் ரிஷி... என்னவென்று கேட்டான்... வார்த்தைகள் இல்லாமல்... தன் கண் பார்வையாலே அவள் கண்களை நோக்கி...


இருவரின் கண்களும் ஒரே நேர்கோட்டில் இருந்தாலும்… எதிர் எதிராக பயணித்துக் கொண்டிருக்க…. கண்மணியால் அவன் பார்வைகளைக் கணிக்க முடியவில்லை… கனநேரத்தில் தன் பார்வையை மாற்றியபடி… இன்றைய பட்டமளிப்பு விழாவுக்காக அவனுக்கு வாழ்த்துக்களைக் கூறியவள்…


“ஆன்ட்டிய சாப்பிட கூப்பிட வந்தேன்…” என்று தான் வந்த காரணத்தைச் சொல்ல…


தனக்குள் சில நொடி யோசித்தான் ரிஷி…


’தன் அம்மா கண்மணி வீட்டில் சாப்பிடுவார்களா…” என்ற தயக்கத்தில் வந்த யோசனைதான் அது…

அதுமட்டுமல்லாமல்… தன் தாயின் மனநிலை தெரியாமல் கண்மணி அழைக்கப் போய்… அவர் ஏதாவது சொல்லி… கண்மணி ஏதாவது பேசி…. இருவருக்கும் ஒருவேளை தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டால் என்னாவது” முடிவெடுத்தவனாக…


“ஹ்ம்ம்ம்ம்ம்…. அம்மா வருவாங்களா இல்லையானு தெரியலை மணி…. நீ இங்கேயே இரு… நான் கேட்கிறேன்…” என்று கண்மணியிடம் சொல்லிக் கொண்டே.. தன் அறைக்கு போவதற்காக.. மீண்டும் மாடிப் படி ஏறப் போனவனை… வேகமாக கையைப் பிடித்து இழுத்து… கண்மணி தடுத்து நிறுத்த… அதை எதிர்பார்க்காத ரிஷி… சற்று தடுமாறி… பின் நின்று… திரும்பி முறைத்தான்…


“என்ன பண்ற” அதட்டலாக அவன் குரல் கண்மணியைச் சென்றடைய… அவன் நின்று திரும்பியதும் அவன் கைகளை விட்டவள்… அவன் அதட்டலைக் கண்டுகொள்ளாமல்


“சாரி… ” என்றவள்…


“நீங்க ஒண்ணும் கேட்க வேண்டாம்… நான் பார்த்துக்கிறேனு சொல்ல வந்தேன்…. நீங்க வீட்டுக்கு போங்க… அப்பா இருக்காங்க… ஆன்ட்டிய சாப்பிட கூப்பிட்டு வருவது என் பொறுப்பு” என்றபடி அதற்கு மேல் அவன் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் படிகளில் விறுவிறுவென்று ஏறி அவனது அறைக்குள் சென்று விட…


ரிஷி அதற்கு மேல் ஏதும் பேசவில்லை... ’அவள் பாடு தன் அன்னை பாடு’ என்று தோளைக் குலுக்கியவனாக… கண்மணி வீடு இருந்த திசைக்கு எதிர்புறமாக திரும்பி நடந்தான்.... அதாவது வழக்கம் போல அவன் காலை உணவு சாப்பிடச் செல்லும் உணவகம் நோக்கிச் சென்று விட்டான்.


காரணம் அவனுக்கு நடராஜன் வீட்டில் சாப்பிட மனம் வரவில்லை... இந்த 5 வருடங்களில் ரிஷி நடராஜ் வீட்டில் தண்ணீர் கூட அருந்தியதில்லை.... அவனுக்கு தெரிந்து முதன் முதலாக நடராஜைப் பார்க்க இவனும் விக்கியும் வந்த போது பால் பாயாசம் குடித்தது...


அன்றைய நினைவுகளை சுமந்தபடியே கடையை நோக்கிப் போனவனுக்கு கண்மணி தன் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தியது மீண்டும் ஞாபகம் வர...


“இவ தொட்டால் அது பிரச்சனையில்லை... நாம பண்ணினதுக்கு என்னமா சீன் போட்டா.. எதிரியப் பார்க்கிற மாதிரி பார்த்தாள்” என்று நினைத்து முதலில் கடுப்பானவன்... பின் அடுத்த நாளே அவள் தன்னிடம் மன்னிப்பு கேட்ட விதம் ஞாபகம் வர... குறு நகையுடன் நடந்தான்....

---

கண்மணி வந்து அழைத்த போது … முதலில் லட்சுமி மறுக்கத்தான் செய்தார்... அவர் மறுத்தால்.... கண்மணி விடுவாளா என்ன.... எப்படியோ பேசி தன் வழிக்கு கொண்டு வந்தவள்... தன் வீட்டிற்கும் அழைத்து வந்து விட்டாள்…


வந்தவள் தங்கள் வீட்டில் ரிஷியைத் தேட அவன் அங்கில்லாமல் போக …. தன் தந்தையிடம்... ”ரிஷி எங்கே” என்று கேட்க... நடராஜனோ ரிஷி இங்கு வர வில்லை என்று விளம்ப... கண்மணியும் விட்டுவிட்டாள்…பின்... லட்சுமியை மட்டும் சாப்பிட வைத்தாள்...


லட்சுமியோ தன் மகன் இல்லாததால் சாப்பிட ஆரம்பிக்காமல் தயக்கமாக இருக்க… ரிஷிக்கு தான் போன் செய்து சாப்பிட அழைப்பதாக கூறி… லட்சுமியைச் சாப்பிடச் சொல்லி கண்மணி வற்புறுத்த… கண்மணி மற்றும் நட்ராஜின் விருந்தோம்பலை அதற்கு மேல் மறுக்க முடியாமல்…. அதிகம் பாசங்கு செய்யாமல் கண்மணி பறிமாற ஆரம்பித்தவுடன் சாப்பிட ஆரம்பித்தார் லட்சுமியும்….


அதே நேரம்…. “ரிஷி எங்க போய்ட்டாங்க… வீட்டுக்குத்தானே போகச் சொன்னேன்” என்ற யோசனையோடு…. பறிமாறிக் கொண்டிருந்தவளை…. அவள் யோசனையின் நாயகனே அலைபேசியில் அழைக்க... போனை எடுத்தாள்...


“கண்மணி... அம்மா சாப்பிட வந்தாங்களா” ரிஷி கேட்க


“சாப்பிட்டு இருக்காங்க... நீங்க” என்ற போதே...


“நான் இங்க சாப்பிட்டுட்டேன்.... அம்மா சாப்பிடலைனா.... பார்சல் வாங்கிட்டு வரத்தான் போன் செய்தேன்.... அம்மா போன் எடுக்கலை... அதனாலதான் உனக்கு போன் செய்தேன்… “ என்ற கூடுதல் தகவலையும் சொல்லியபடி போனை வைக்க.... கண்மணி போனையே வெறித்தபடி இருந்தாள்...


“இவன் எதுக்கு இவ்ளோ ஓவர் ரியாக்ட் பண்றான்.... நாம இத்தனை நாள் இங்கிருந்தோமே... நமக்கு ஒருவேளை சாப்பாடு போட்டாளா இவ... இன்னைக்கு வந்த நம்ம அம்மாக்கு மட்டும் சாப்பாடானு.... நினைக்கிறானோ” மனதுக்குள் நினைத்தவள்....


“அவன் என்ன நினைத்தால் நமக்கென்ன... கூப்பிட்டோம் வரவில்லை... அவ்வளவுதான்” என்று தன் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டாள்...


சில நிமிடங்களில் ரிஷியும் நட்ராஜ் வீட்டிற்கு வர… லட்சுமியும் சாப்பிட்டு முடித்திருக்க


’தன் அன்னை விழா முடிந்து அப்படியே ஊருக்கு சென்று விடுவார்’ என்று ரிஷி நட்ராஜிடமும் கண்மணியிடமும் கூற…

லட்சுமியும் அவர்களிடமிருந்து விடைபெற்றவராக…. மகனுடன் அவன் கல்லூரிக்கு கிளம்பிச் சென்றார்... ரிஷியின் பைக்கிலேயே.


----

ரிஷியின் பட்டமளிப்பு விழா கிட்டத்தட்ட 3 மணி அளவில் முடிந்திருந்தது… சான்றிதழ் வாங்கி தாயும் மகனுமாக இருவரும் வெளியேற நினைத்திருக்க… ரிஷி கிளம்புவதை சரியாக கணித்து அவன் கல்லூரி முதல்வர் அவன் முன் வந்து நின்றிருந்தார்…


திடீரென்று முன்னால் வந்து நின்ற முதல்வரைப் பார்த்த லட்சுமி…. என்ன ஏதென்று புரியாமல்… தன் மகனைப் பார்க்க… ரிஷியோ அவரை எதிர்பார்த்தவன் போல… அவர் ஏன் தன்னிடமும், தன் தாயிடமும் பேச நினைக்கின்றார் என்பதும் புரிய… அலட்சிய பாவத்துடன் நின்றிருந்தான்…

அவர் அழைத்த காரணம் பின்வருவதாக


அன்று கல்லூரி முதல்வர் அழைத்திருந்ததை மறக்காமல்… ரிஷி சில நாட்களுக்கு முன் தான் கல்லூரிக்குச் சென்று கல்லூரி முதல்வரைக் காணச் சென்று சந்திருந்தான்....


சில வருடங்களுக்கு முன் இவர்கள் கல்லூரியில் நடைபெற்ற போட்டிக்காக ரிஷி மற்றும் விக்கி இருவருமாக செய்த மாடல்... அந்தப் போட்டியில் நடுவராய் வந்திருந்த ஒரு பிரபல கார் கம்பெனியின் முதன்மை செயல் அதிகாரியைப் பெரிதும் கவர்ந்து விட்டிருக்க.. கல்லூரிப் படிப்பை முடித்தபின் அவர்களை அணுக வேண்டும் என்று முடிவு செய்திருந்தார் அப்போதே...


அதற்கு நேரம் இப்போதுதான் வாய்த்தது போல… அவர்களின் போட்டிக் கம்பெனி கிட்டத்தட்ட ரிஷி-விக்கி செய்த அதே தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதாக தகவல் கிடைக்க… அவரும் கல்லூரிக்கு வந்து விக்கி ரிஷியைப் பற்றி விசாரிக்க.... முதல்வருக்கு மிகவும் சந்தோஷம்...


விக்ரம்!!! அவன் மட்டுமே செய்தான்… இந்த கௌரவத்துக்கு அவன் மட்டுமே தகுதியானவன் என்று அந்த முதல்வருக்கும் தெரியும்… ஆனால் விக்ரமைச் சொன்னால்… அவர்கள் நேரடியாக விக்ரமைத் தேடிச் சென்று விடுவார்கள்… இவர்கள் கல்லூரிக்கு அதனால் என்ன பெயர் கிடைக்கும்… காரணம் விக்ரம் தற்போது அவர்கள் கல்லூரி மாணவன் இல்லையே… ஆனால் ரிஷி இருக்கிறானே... அவனுக்கு தகுதி இல்லை என்று தெரியும்… அதற்காக கல்லூரிக்கு கிடைக்கும் மிகப் பெரிய கௌரவத்தை இழக்கமுடியுமா என்ன… விக்ரமின் பெயரை அப்படியே மறைத்துவிட்டனர்… ரிஷியின் பெயரை மட்டும் அவர்களிடம் சொல்லி வைத்திருந்தனர்…


அதே நேரம் இந்த பட்டமளிப்பு விழாவில் இதை அறிவித்ததால் இது அவர்கள் கல்லூரிக்கு மிகப் பெரிய கௌரவமாக இருக்கும் என்று… அவர்களை சந்திக்க வரச் சொல்லி ரிஷியையும் அழைக்க. ரிஷியும் வந்தான் தான்…


ஆனால் கொஞ்சமும் யோசிக்காமல் கல்லூரி நிர்வாகத்திற்கு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டான்…


அந்த ப்ராஜெக்ட்டும் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் முழுக்க முழுக்க தன் நண்பன் விக்ரம் தான் அதன் காரணகர்த்தா எனச் சொல்லி... விக்கியின் பாண்டிச்சேரி முகவரியையும் அவர்களுக்கு கொடுத்து விட்டான்...


வந்த கார் கம்பெனி அதிகாரியும்.. விக்கியின் தகவல்களை வாங்கிக் கொண்டு... விக்ரமை தாங்களே நேரிடையாக தொடர்பு கொண்டு கொள்கிறோம்… என்று கிளம்பி விட்டிருந்தார்... அதுமட்டுமல்லாமல் கல்லூரி முதல்வரை கேவலமாக வேறு பார்த்து சென்றார் என்பது வேறு விசயம்


எப்படி ரிஷிக்கு நயவஞ்சகர்களையும் குள்ள நரிகளையும் பிடிக்காதோ… அதேபோலவே தன்னை இகழ்ச்சியாகவும்… சிறுமையாகவும்… தாழ்ச்சியாகவும் நினைப்பவர்களையும் ஏனோ பிடிக்காமல் பிடிக்காமல் போய்விட்டது… முதலில் எல்லாம் ரிஷி கண்டுகொள்ள மாட்டான்… இப்போதோ… யார் தன்னை அப்படி நினைக்கிறார்களோ அவர்கள் முன் அவர்கள் நினைப்பதற்கு மாறாக தன்னைக் காட்ட வேண்டும் என்ற வெறி தான் வளர்ந்திருந்தது அவனுக்குள்… இது எல்லாமே மனரீதியாக அவனுக்குள் ஏற்பட்ட பாதிப்பின் வெளிப்பாடே என்று அவனுக்கும் தெரியும்… அதே நேரம் அவனால் அதை மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை… கடவுள் கிருபையால் அந்த மாதிரி இகழ்ச்சியாக பரிதாபமாக அவனை யாரும் பார்க்க நேரவில்லை என்பதே உண்மை… நட்ராஜ்… தினகர்… வேலன் என அவனைச் சுற்றி இருந்தவர்கள் அவனை உயரத்திலேயே வைத்திருக்க… அவனுக்கு அந்த மாதிரியான நிலை கிட்டவில்லை…


கல்லூரியைப் பொறுத்தவரை தன்னை எந்த இடத்தில் அவர்கள் வைத்திருக்கின்றனர் என்று ரிஷிக்குத் தெரியும்… அவர்கள் பிச்சை போடுவது போலத்தான் இந்த வாய்ப்பை அளிக்கின்றனர் என்று ரிஷிக்கும் தெரியும்…. ஏற்றுக்கொள்வானா என்ன….


இதோ இன்று… அன்று ரிஷி மறுத்ததால் வந்த கோபத்தோடு தான் இப்போதும் அந்த முதல்வர் நின்று கொண்டிருந்தார்….


பின் தன் அறைக்கு தாய்-மகன் இருவரையும் அழைத்தவர்… ரிஷியின் தாய் முன்னாலேயே… ரிஷியைப் பற்றி.... புகார் கடிதம் வாசித்துக் கொண்டிருந்தார்…


“எவ்வளவு பெரிய ஆஃபர்... அப்படி என்ன உங்க பையனுக்கு தலைக்கனம்... கல்லூரிக்கு கிடைக்க விருந்த கௌரவமும் போச்சு... உங்க பையன் அக்செப்ட் பண்ணி இருந்தால் எவ்வளவு பெரிய பெருமை அவனுக்கு..” எனும் போதே... ரிஷி அதற்கு மேல் அவரைப் பேச விடாமல்….


“சாரி சார்.... நாம உழைத்த காசே இப்போலாம் நம்ம கையில நிற்கிறது இல்லை... இதுல அடுத்தவங்க உழைப்பை நம்மதுனு சொல்லி வரும் காசு கைல நிற்குமா என்ன... அதில கிடைக்கிற பெருமைலதான் சந்தோஷம் இருக்குமா என்ன… இது எனக்கு கிடைத்த அங்கீகாரம் இல்லை... என் நண்பனுக்கு கிடைத்த அங்கீகாரம்.... அதை தட்டிப் பறிக்க விரும்பலை...” என்றவன் அதற்கு மேல் பேச விரும்பாமல் எழ...


பேசிக் கொண்டிருக்கும் போதே மரியாதை இல்லாமல் எழுந்த மகனை இலட்சுமி முறைக்க… தாயின் பார்வையை எல்லாம் ரிஷி பார்த்தால் தானே….


கையில் வைத்திருந்த சான்றிதழை கல்லூரி முதல்வருக்கு முன் உயர்த்திக் காட்டியவன்…


”இதோட எனக்கும் இந்தக் காலேஜுக்குமான அனைத்தும் முடிந்து விட்டது… இது கூட உங்களை மிரட்டினதுனால கிடைத்ததா இல்லை உண்மையிலேயே நான் படித்ததால கிடைத்ததானு எனக்கே தெரியவில்லை… எப்படியோ முடித்து விட்டேன்… எனிவே தேங்க்ஸ்… ” என்று விட்டேற்றியாகச் சொன்னவன்… தன் தாயின் முகத்தைப் பார்க்க முடியாமல் குற்றம் செய்தவன் போல் விருட்டென்று வெளியேற…


கல்லூரி முதல்வரிடம் தன் மகன் சொன்ன வார்த்தைகளில்… அவனது நடவடிக்கைகளில்… நம்ப முடியாமல் லட்சுமி அப்படியே அமர்ந்திருந்தார்… காலையில் கண்ட அவனது அமைதியும்… பண்பட்ட நடவடிக்கையும்… நட்ராஜிடம் காட்டிய மரியாதையும்… இப்போது இங்கு தலைகீழாக மாறி இருந்ததை நன்றாகவே உணர்ந்தார் லட்சுமி… இங்கேயும் தன் மகன் ரிஷியை அவர் உணரமுடியவில்லை… தனக்கு கல்வி கொடுத்த கல்லூரியின் முதல்வரிடம் ரிஷி பேசிய விதமும் அலட்சியபாவமும்… மிரட்டல் அது இது என்ற வார்த்தை பிரவாகங்களும்… என ரிஷியின் அடுத்த பரிணாமமும் அவர் உணர ஆரம்பித்திருக்க …


வேதனையோடு தன் மகனைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போதே…. லட்சுமியை யோசிக்க விடவில்லை அவர் முன்னால் அமர்ந்திருந்த கல்லூரி முதல்வர்


“என்ன மேடம் உங்க பையன் இப்படி இருக்கான்… “ என்று ஆரம்பித்து இலட்சுமியிடம் வரிசையாக ரிஷியின் மேல் அடுத்தடுத்து குற்றம் சாட்ட ஆரம்பிக்க


ஒரு கட்டத்தில் சட்டென்று அவரின் வார்த்தைகளை நிறுத்தினார் இலட்சுமி…


”என்னோட பையன் சொன்னதுல என்ன தப்பு இருக்கு சார்… விக்ரமுக்கு சேர வேண்டிய பெருமையை ரிஷியை ஏத்துக்க சொல்ற உங்க வார்த்தைகளில் தான் தவறு இருக்கிறது சார்… என் பையன் அந்த வாய்ப்பை அக்செப்ட் பண்ணியிருந்தால் நான் வருத்தப்பட்டிருப்பேனே தவிர… சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன்… இப்போதும் சந்தோசம்தான் எனக்கு… என் மகன் எடுத்த முடிவால்… அதே நேரம் இதற்கு முன்னால என் பையன் ஒரு வார்த்தை சொன்னான்… ஏதோ மிரட்டினேன் என்ற வார்த்தையெல்லாம் சொன்னான்… அதைப் பற்றி எனக்கெதுவும் தெரியவில்லை… ஆனால் அப்படி அவன் ஒருத்தவங்களை மிரட்டி இருக்கான்னா… கண்டிப்பா எதிர்ல இருக்கிறவங்க ஏதோ தப்பு செஞ்சிருக்காங்கன்னுதான் தோணுது…. ஆனால் எதுவா இருந்தாலும் பாடம் சொல்லிக் கொடுக்கிற குருவையே மிரட்டுறதுன்றது… தவறுதான்… அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்… “ என்றவர்… தான் பேசிய வார்த்தைகளை எல்லாம் வாயிலிலேயே நின்று கேட்டுக் கொண்டிருந்த தன் மகனை அழைத்தார் இப்போது…


வெளியே தாயின் வார்த்தைகளில் நெகிழ்ந்து நின்றிருந்தான் ரிஷி… வெகுநாட்களுக்குப் பிறகு தனக்கான ஆதரவான… நம்பிக்கையான வார்த்தைகள்… தன் தாயிடமிருந்து…

காதாரக் கேட்டுக் கொண்டிருந்தான்… அவருடைய வார்த்தைகளை எல்லாம் மகிழ்வோடு உள்வாங்கிக் கொண்டிருந்தான்… ரிஷி…

---

தான் அழைத்தவுடன் மறுவார்த்தை பேசாமல் உள்ளே வந்த தன் மகனிடம்…

முதல்வரிடம் அவன் பேசிய வார்த்தைகளுக்காகவும்… அவனின் மரியாதையற்ற நடவடிக்கைகளுக்கும் மன்னிப்பு கேட்கச் சொல்ல…


ரிஷியும் மறுக்கவெல்லாம் இல்லை… தாய் சொன்ன அடுத்த நொடியே மன்னிப்பும் கேட்டான்… அதே நேரம்… முதல்வரிடம்…


“உங்களுக்கு கிடைத்த பதவியை… அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்காக உபயோகியுங்கள்… மாறாக.. கல்லூரி நிர்வாகத்திற்கு அடிமை வேலை பார்க்காதீர்கள்” என்று சொல்லிவிட்டுத்தான் வந்திருந்தான்…

அறியாமல் செய்பவர்கள் திருந்துவார்கள்… அறிந்தே செய்பவர்கள் திருந்துவார்களா என்ன… ரிஷியின் வாழ்க்கையில் அவனுக்கு அந்த இளம் வயதிலேயே கிடைத்த அனுபவ பாடம் அந்த முதல்வர் வாழ்க்கையிலும் கிடைக்காமலா போகும்… கிடைக்கும் போது அவரும் திருந்துவார் என நம்புவோம்

-----

ரிஷிக்கு ஒரு மாதிரியான கலவையான உணர்வாக இருந்தது... அதிலும் தன் தாய் பேசிய விதம்… தன்னை எந்த ஒரு இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் அவர் பேசியது அவனுக்கு நெகிழ்வைத் தர… அதே நேரம் முதல்வர் அறையில் தனக்காக பேசிய தன் அன்னை இப்போது ஏதும் பேசாமல் வந்து கொண்டிருக்க… அவனுக்கு ஏதேதோ பேச ஆசைதான்…. ஆனால் இத்தனை நாள் தாயிடம் பெற்ற அனுபவம் இன்று பேச விடாமல் செய்ய… அமைதியாக வந்தவன்… ஒரு கட்டத்தில் முடியாமல் தன் மௌனத்தை தானே உடைத்தவனாக…


“ம்மா… எந்த ட்ரெயினுக்கு புக் பண்ணிருக்கீங்க… காலையிலேயே கேட்க நினைத்தேன்” கேட்டான் இலட்சுமியிடம்…


காரணம்… அவர்கள் ஊருக்கு இரண்டு இரயில்கள் மட்டுமே… இரவு 8 மணிக்கு ஒன்று மற்றும்10 மணிக்கு ஒன்று…. என்பதால் ரிஷி அவ்வாறு கேட்க…


இலட்சுமி… பதில் பேசாமல் அவன் பைக்கின் அருகில் வந்தவர்… அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்


“கண்மணி இல்லம்… என் மகனோட அட்ரெஸ் இதுதான்… போகலாமா” என்று மட்டும் சொல்ல… ரிஷியின் கண்கள் நம்பமுடியாத பாவத்தில் விரிய…


ரிஷியின் பாவத்தில் இத்தனை நாள் தொலைத்திருந்த தன் மகனை அந்த நொடியில் கண்டார் இலட்சுமி…


அந்த நொடியில் இருந்து மகனிடம் கடைபிடித்துக் கொண்டிருந்த அத்தனை வருட தன் மௌன விரதத்தை எல்லாம் முடித்து மடைதிறந்த வெள்ளம் போல பேச ஆரம்பித்தார் இலட்சுமி….


“என்ன ரிஷிக் கண்ணா” என்றார் கொஞ்சலாக…


“ரிஷிக் கண்ணா” என்று வெகு நாட்களுக்கு பிறகு கேட்ட தன் தாயின் செல்ல அழைப்பு.... அவன் கவனத்தை திசை திருப்ப... தன் காதுகளை நம்ப முடியாமல் தன் தாயை பார்க்க...


“நான் தாண்டா கூப்பிட்டேன்.... வித்தியாசமா பார்க்கிற” என்று செல்ல அதட்டலோடு ஆரம்பித்த லட்சுமியைப் பார்த்தவனின் முகத்திலும் இப்போது சந்தோஷ ரேகைகள் ஒட... அதைத் தன் கண்களில் நிரப்பியபடியே


“என் பையன்.... அவனை மத்தவங்க குற்றம் சொல்ற வித்தில் நடந்துக்கிட்டானேன்ற மன வருத்தம்,.... உங்க அப்பாவோட இறப்பு.... அன்றைக்கு… அந்த சூழலில் கடுமையா நடந்துக்கிட்டேன்.... என்னை மன்னிச்சுக்கடா… நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் ரிஷி” என்று மனம் வருந்தி தழுதழுத்த போதே....


பதறித் தடுத்தான் ரிஷி…


“ஐயோ அம்மா.... இது என்ன மன்னிப்பு அது இதுனு பெரிய வார்த்தை... உங்களுக்கு இல்லாத உரிமையா.. மகன் தப்பு பண்ணினால் தண்டிக்கிற முதல் உரிமை... அம்மாக்குத்தான்.... நான் என்னமோ உத்தமன் மாதிரி... எங்கிட்ட போய் மன்னிப்பு... கேட்கிறீங்க... “ என்ற ரிஷியை... தன் தோள்களில் சாய்த்துக் கொண்டார் லட்சுமி.....


உணர்வுகள் மட்டுமே ஆட்கொண்ட அந்த சில நிமிடங்கள் இருவரும் எதுவும் பேச வில்லை...


வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்த தன் தாயின் அரவணைப்பில் தன் கவலையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு.... தன் அன்னையின் அன்பில் கரைந்தான் ரிஷி …அதில் மூழ்கிடவே விரும்பினான்…


அவன் தாயோ.... பல நாட்களுக்குப் பிறகு தன் புதல்வனோடு பேசிய சந்தோஷத்தில் மூழ்கியிருந்தார்..


அதன் பின் மௌனத்தைக் கலைத்தது... லட்சுமிதான்...


“ரிஷி..”


“ஹ்ம்ம்ம்ம்ம்... சொல்லுங்கம்மா” என்றபோது அவன் குரல் தாயின் செல்ல பிள்ளையின் மொழிகளாய் வெளிப்பட... அவன் குரலில்….நீண்ட நாள்கள் கழித்து வெளிப்பட்ட தன் மகனின் செல்லம் கொஞ்சும் குரலில் தன் மகனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடியே இருந்தவர்…


“நீ எதுக்கு இங்க கஷ்டப்படனும்.... படிப்பு முடிந்து விட்டது.... இனி இங்க என்ன வேலை.... ஊருக்கு வந்துருப்பா.... நீ ஒரு இடம்... நாங்க ஒரு இடம்னு... யார் செய்த பாவமோ… இப்படியெல்லாம் அனுபவிக்கனும்னு இருந்திருக்கு…. அனுபவிச்சுட்டோம்… இனியும் வேண்டாம்டா கண்ணா....” என்று தாயாக பேச ஆரம்பிக்க....


ரிஷி தன் தாயை விட்டு தள்ளி நின்று…. தெளிவாக தீர்மானமாக பேச ஆரம்பித்தான்…


“இல்லம்மா… நான் அங்கே வரலை… சில விஷயங்களை விட்டு தள்ளி நிற்கனும்னு நினைக்கிறேன்…. ஏன் ஏதற்குனு கட்டாயப்படுத்தாதீங்க…. எனக்குனு ஒரு தனி அடையாளம் வேண்டும் என்று நினைக்கிறேன்…. அப்படி ஒரு அடையாளத்தை அடையும் போது…. சில காயங்கள் ஆறும்னு நினைக்கிறேன்…. அப்போ நான் உங்க மகனா திரும்பி வருவேன்…. அதுவரை…. என்னைத் தொந்திரவு படுத்தாதீங்க” என்று தன் தாயை நேருக்கு நேர் பார்க்காமல் பேசி முடித்து… வெட்ட வெளியைப் பார்த்தபடி இருந்தான்…


தன் மகன் நடந்த நிகழ்வுகளில் ஏதோ ஒரு வகையில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பது மட்டும் லட்சுமியால் உணர முடிந்தது… அதை எப்படி போக்குவது என்றும் தெரியவில்லை அவருக்கு… அதே போல இதுவரை நடந்தவற்றை எல்லாம் அவனிடம் கிண்டி கிளறிக் கேட்கவும் மனம் வரவில்லை…


தாயும் மகனுமாக மீண்டும் கண்மணி இல்லம் வந்து சேர்ந்தனர்….



2,790 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page