top of page
Writer's picturePraveena Vijay

கண்மணி... என் கண்ணின் மணி-19-1

அத்தியாயம் 19-1:

சென்னையின் பரபரப்பான காலைவேளை.... செல்லும் வாகனங்களுக்குள் பந்தயம்தான் நடக்கிறதோ என்று தோன்றுவது போல இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு சாலைகளில் பறந்து சென்று கொண்டிருக்க.. நடை பாதை ஓரத்தில் நடந்த மக்கள் கூட அந்த வாகனங்களுக்கு இணையாக அதே வேகத்தில்தான் இருந்தனரோ… தங்கள் கால்களில் சக்கரம் மாட்டியிருப்பதைப் போல் அவர்களிடமும் வேகம் வேகம் மட்டுமே..

இப்போதிருக்கும் மக்களுக்கு ஒரு நாளின் 24 மணி நேரம் போதவில்லை என்பதே உண்மை... இந்த வேகம்தான்… நாட்களையும்…. வாரங்களையும்…. வருடங்களையும் மின்னல் வேகத்தில் தாண்டிச் செல்ல காரணமாயிருக்கிறது போல… அதனால்தான் என்னவோ... நம் நாயகன் ரிஷியும் தனது 5 வருடங்களை இந்த பரபரப்பான சென்னையில்... அதே வேகத்தோடு கடந்தும் விட்டான்

ஆனால் இன்று

அவனின் பரபரப்பையும் வேகத்தையும் கட்டுப்படுத்துவது போல் ஒரு பெரிய சிக்னலில் மாட்டியிருந்தான் ரிஷி... வெயில் வேறு... 8 மணிக்கே சுள்ளென்று அடித்தது…. ஹெல்மெட் அணிந்திருந்த காரணத்தால் முகம் முழுவதும் வியர்த்துக் கொட்ட… தான் செல்லும் வழிக்கான பச்சை விளக்கின் தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருந்தான்… ஆனால் அது இரக்கமே காட்டாமல அதன் தரிசனத்தைத் தராமல் இருக்க…

கொஞ்சம் எரிச்சலுடன்…. பொறுமை இழந்து ஹெல்மெட்டை கழட்டிவிட்டு தன் முகத்தை கைக்குட்டையால் துடைத்தபடியே…. தன் முன்னே இருந்தவரிடம் விசாரிக்க...

“தெரியலையே தம்பி…. அம்மன் திருவிழா நடக்கிறதால இருக்கலாம்… இப்போதைக்கு இந்த வழி இப்போ க்ளியர் பண்ண மாட்டாங்களாம்..” என்று அவர் முடிக்கவில்லை ...

ரிஷி... அடுத்த நிமிடமே தான் போகும் பாதைக்கான சிக்னலுக்காக காத்திருக்காமல் அவனுக்கு கிடைத்த சிறு வழிகளில் தன் பைக்கை நுழைத்து.... மின்னல் வேகத்தில் கடக்க ஆரம்பித்தான்….. அதே நேரம் அவனது இந்த வேகத்தில் அவனது வண்டி…. முன்னால் பின்னால் நின்ற வாகனங்களில் மோதாமல் கவனமாகவும் செல்லத் தவறவும்வில்லை…

அப்படி இவன்… கவனமாக இருந்தும்…. முன் நின்ற யாரோ ஒருவரின் விலை உயர்ந்த கார் பின்னோக்கி வரும் போது மோதி விட… உண்மையிலேயே பார்த்தால் ரிஷிதான் சண்டைக்குச் செல்ல வேண்டும்… சண்டைக்கு வந்ததோ அந்த வாகனத்தின் ஓட்டுனர்… வண்டியில் இறங்கிய அந்த ஓட்டுநர்

“டேய் சோமாறி…. என்னடா ஒட்ற… கண்ண முன்னாடி வச்சுட்டு ஓட்ட மாட்டியா… என்ன கார்னு பார்த்தியா.. உன் ஓட்டை பைக்குனு நெனச்சியா” என்று கத்த ஆரம்பிக்க…

தவறு செய்தது அந்த அந்த ஓட்டுனர்… தன்னைத் திட்டுவானா அவன்… விடுவானா ரிஷி…

மோதிய ஓட்டுனர் திட்டிய அடுத்த நொடியே… வேகத்தோடு பைக்கைத் திருப்பியவன்… வேண்டுமென்றே அந்தக் காரை இடிக்க… இப்போதுதான் அந்தக் காருக்கு அதிக சேதாரம் ஆக… பைக்கை முறுக்கியபடி ரிஷி… நக்கலோடு

“இது என்ன காரா வேணும்னாலும் இருக்கட்டும்… என்னோட பைக் பழசுதான் என்னாங்கிற இப்போ… அதுனால உனக்கு என்ன பிரச்சனை வந்தது… உன் கார் பெரிய இந்தக் கார்னா… ரோட்ல ஓட்டாத… காரை தலையில வச்சுட்டு சுமந்துட்டு போ.. வந்துட்டானுங்க…” என்றபடியே… இவனும் கத்த ஆரம்பிக்க… இப்போது அந்தக் காரின் உரிமையாளன் கோபத்துடன் இறங்க… ரிஷி சற்று யோசிக்க ஆரம்பித்தான்… எங்கேயோ இவனைப் பார்த்திருக்கிறோமே என்ற தொணியில்

காரணம் காரில் இருந்து இறங்கியவன் வேறு யாருமல்ல..… அர்ஜூனே…

அன்றைய இரவில்… ஒரே ஒரு முறைதான் அர்ஜூனைப் பார்த்திருந்தான் ரிஷி… அதன் பிறகு இன்றுதான்… இந்த ஐந்து வருடங்களில் பெரிதாக அர்ஜூனிடம் மாற்றமில்லாததால் ரிஷியால் அவனைப் பார்த்தவுடன் இல்லையென்றாலும் யோசித்தபின் அடையாளம் காண முடிய… அர்ஜூனுக்குத்தான் ரிஷியை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை…

“அவனா இவன்…” என்று தனக்குள்ளேயே முடிவுக்கு வந்த ரிஷிக்கு… ஏனோ அர்ஜூனிடம் பேசப் பிடிக்காமல்… அவன் ஓட்டுனரிடமே மீண்டும் எகிற ஆரம்பித்தான்…

“இடிச்சது நீதாண்டா ****…. நீ இடிச்சுட்டு என்னைத் திட்டுவியா****… ” என்றபடி… அர்ஜூனை ஒரு மார்க்கமான பார்வை பார்த்தபடியே

“வாங்குகிற காசுக்கு மட்டும் விசுவாசமா இருங்கடா… ரொம்ப கூவாதீங்க… ” என்றபடி தன் வருவாயில்… செகண்ட் ஹேண்டாக வாங்கிய பைக்கை பெருமையுடன் பார்த்தபடி.. மீண்டும் ஹெல்மெட்டை மாட்ட… ரிஷியின் வார்த்தைகளில் அர்ஜூனுக்கும் இப்போது கோபம் வர… அவனும் கோபமாக பேசப் போக… ரிஷி அதற்கு முன்னாலேயே அர்ஜூனிடமும் தன் சண்டையை ஆரம்பித்தான்

“என்ன முறைக்கிற… உன் ட்ரைவர் அவன் மோதிட்டு என்னைத் திட்டுனான்… பதிலுக்கு நான் இடிச்சேன்… இப்போ என்னாங்கிற… என்ன சண்டை போடப் போகிறாயா…” என்ற படி தன் பைக்கை ஆஃப் செய்தவனாஅக… சட்டையின் கைப்பகுதியின் பட்டன்களை கழட்டி… முழங்கை வரை மேலே இழுத்து மடித்தபடியே அக்மார்க் சண்டைக்காரன் போல பேச ஆரம்பிக்க… சுற்றி இருந்த மக்கள் எல்லாம் ரிஷியை ஒரு மாதிரியாகப் பார்க்க… அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ரிஷி தொடர்ந்தான்…

“என்ன லுக்கு… உன் லெவலுக்குலாம் என்னால பேச முடியாது… ஐ மீன் பேச்சு வார்த்தையைத்தான் சொன்னேன்” என்று அடாவடியாக ஆரம்பித்தவன்..

“என் லெவலுக்கு இறங்கி வர ரெடியா” என்று அர்ஜூனை சண்டைக்கு இழுக்க… ரிஷியின் நடவடிக்கைகளில் அர்ஜூனின் முகம் அஷ்ட கோணலாக மாறினாலும்… அர்ஜூனும் ரிஷிக்கு சளைக்காமல் அவனை முறைத்துப் பார்க்க…

அதே நேரம் சரியாக அவனது அலைபேசியில் அவள் மனம் கவர்ந்தவளின் அழைப்பும் வர…

“நமக்குனு வந்து வாய்க்கிறானுங்க… இன்னைக்கு அவ கூட பேசப் போகிற விசயமே என்ன ஆகுமோன்னு டென்சனில் நான் இருக்கிறேன்… இவனுங்க வேற…. அர்ஜூன் இன்னைக்கு இந்த மாதிரி ஆளுங்ககிட்டல்லாம் பேசி… இன்னும் உன்னை டென்ஷன் ஏத்திக்காம போறதுதான் நல்லது…“ அர்ஜூன் தனக்குள் முடிவு செய்தவனாக…

“நீயெல்லாம் எனக்கான சரிசமமான ஆள் கிடையாது.. உன்னோடு நான் ஏன் இறங்கி சண்டை போட வேண்டும்” என்ற ஏளனமான பார்வை.. அர்ஜூனின் கண்களிலும்… இதழ்களில் வழிய… ரிஷி போவதற்கான வழியைக் கைகளால் காட்டினான் அர்ஜூன்…

அதே நேரம்… தன்னோடு சரிசமமாக சண்டைக்கு நிற்கும் ரிஷியையும் அப்படியே விட மனதில்லை… அவனுக்கு தான் யார் என்று நிரூபிக்க வேண்டும் என்ற வெறிதான் அர்ஜூனிக்கு வந்தது… ஆனாலும் இது நேரமில்லையே… ஆனாலும் கண்டிப்பாக ஒரு நாள் இவனுக்கு தான் யார் என்று காட்ட வேண்டும் என்று தோன்ற…. அந்த நொடியே…

ரிஷியின் நம்பர் ப்ளேட்டைப் குறித்துக் கொள்ள நினைக்க… பின்னே வந்து தன் காரினைப் பார்ப்பது போல பார்த்தபடி…. திரும்பி ரிஷியின் பைக்கின் எண்ணை நோட்டமிட… அந்த எண்களைத்தாண்டி ’RK’ என்று எழுத்தப்பட்டிருந்த எழுத்துக்கள் தான் அர்ஜூனின் கண்களில் பட… அதைப் பார்த்தபடியே… ரிஷியின் பைக் எண்ணையும் மனதுக்குள் குறித்துக் கொண்டான்…

அதன் பின் அர்ஜூன்… பெரிதாக சண்டை போடாமல் அமைதியாக காரினும் அமர்ந்து விட…. ரிஷியும் தோளைக் குலுக்கியபடி… அதன் பிறகும் நேரம் கடத்தாமல் அங்கிருந்து நகன்றான்...

----

ரிஷி நடராஜின் பட்டறையை அடையும் போது.... மணி... 8.30.... அங்கு தனக்கு முன் காத்திருந்த அந்த இரு இளைஞர்களை பார்த்து புன்னகைத்தபடி வண்டியை நிறுத்தியவன்.... நிறுத்திய அதே வேகத்தில்… தன் கையில் இருந்த அந்த பட்டறையின் சாவியை அவர்களை நோக்கி அவர்கள் பிடிப்பதற்கு ஏதுவாக தூக்கிப் போட... அந்த இளைஞர்களும் அதைத் தவறவிடாமல் பிடித்து கதவைத் திறந்தனர்...

பைக்கிலிருந்து இறங்கி தன் கேசத்தை சரி செய்தபடியே தங்களை நோக்கி வந்த ரிஷியைப் பார்த்து…. அந்த இளைஞர்களில் ஒருவனான வேலன் என்பவன்....

“தலை இன்னைக்கு என்ன இன்னைக்கு லேட்… வழக்கமா சூரியன் உதிக்கிறதுக்கு முன்னாடி இங்க வந்து நின்னுருப்ப…” அவன் நக்கலாகக் கேட்டாலும் உண்மை அதுவே… ரிஷியைப் பற்றி வேலன் சொன்னதே உண்மை… ரிஷியின் பெரும்பான்மையான பொழுதுகள் இங்குதான் கழியும் என்பதே அது

“வேற ஒரு வேலை விசயமா வெளிய போய்ட்டு வந்தேன்…. டிராஃபிக் ல மாட்டிக்கிட்டேன்டா... நடராஜ் சார் வர்றதுக்கு முன்னாடி வருவோமோ என்னமோனு நினைத்தேன்...” என்ற போதே நடராஜனும் ஆட்டோவில் வந்திறங்க… இதுவரை கல்லென இருந்த ரிஷியின் முகத்தில் இளக்கத்துடன் கூடிய பவ்யம் வந்து சேர…

அவருக்கு வணக்கம் சொல்லியபடியே… அவரோடு இணைந்து நடக்க ஆரம்பிக்க வேலனோடு சேர்ந்தும் கொண்டான்…

மூவருமாக பேசியபடி உள்ளே நுழைய... ஏற்கனவே உள்ளே இருந்த தினகர்... அனைத்து ஸ்விட்சுகளையும் ஆன் செய்தபடியே....

“ஆர் கே அண்ணாத்தே இன்னைக்கு பவர் கட்டாம்... லீவ் தானே எங்களுக்கு...” என்று முகமெல்லாம் பல்லாக ரிஷியைப் பார்த்து கேட்க... ரிஷியோ

”பவர் கட் 11 மணிக்குத்தானே…. பார்த்துக்கலாம்... இப்போ மிஷின ஆன் பண்ணு… ஸ்டார்ட் பண்ணும் போதே… பவர் கட் பற்றி பேச்சு என்ன “ என்று தினகரை கடிந்தவனாகச் சொன்னவன்…

தான் அணிந்து வந்த சட்டையைக் கழட்டி அங்கிருந்த ஆணியில் மாட்டியவன்..... வேலையின் போது உபயோகப்படுத்தும் வேறொரு சட்டையை அணிந்தபடியே

“சூரஜ் கிட்ட பேசிட்டேன் சார்… மேக்சிமம் கிடைச்சிடும்”.. நடராஜைப் பார்த்துச் சொன்னான்

மின்சாரம் இல்லையென்றால் விடுமுறை கிடைக்கும் என்று ஆவலோடு வந்திருந்த அவர்கள் ஆசையில் மண் விழுந்ததை நினைத்து… வேலனும் தினகரும் ஒருவரையொருவர் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டனர் தங்களுக்குள் …

சிறியவர்கள் இவர்கள் இப்படி இருக்க… நடராஜின் முகமோ ரிஷியின் முன் யோசனையில் வழக்கம் போல மெலிதான பெருமைக் கீற்றல் மட்டுமே

“பரவாயில்ல ரிஷி… அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்… ஆனால் அடிக்கடி இப்படி கரெண்ட் கட்டாகிறது தெரிந்திருந்தால்… மெஷின்லாம் வாங்கும் போதே.... பவர் பேக்கப்பும் வாங்கி இருக்கலாம்…“ என்றபடி தனது அறைக்குள் நுழைந்தவர்... அங்கிருந்த சாமி படங்களுக்கு தீபாரதனையை காட்டி முடித்து விட்டு... மெஷின்களுக்கு காட்ட வெளியே வர... ரிஷி சற்று தள்ளி நின்று அவருக்கு வழி விட்டான்...

ரிஷியைப் பார்த்தபடியே மெஷின்களுக்கு கற்பூறம் காட்டிக் கொண்டிருந்தார் நட்ராஜ்...

இன்று பசுமரத்தாணி போல அவர் மனதில் நிற்கின்றது… அவன் இவரிடம் வீடு கேட்டு வந்த தினம்…

முதலில் கண்மணி வீடு கொடுக்க மறுத்ததும்… ரிஷி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்… இவரிடம் வேலை கேட்க… வீடு கொடுக்க பெரிதாக மறுப்பேதும் சொல்லாத நடராஜ்… வேலை கொடுக்க மறுத்துவிட… கண்மணி இப்போது ரிஷிக்கு ஆதரவாக பேசினாள்…

“வேலைதானே கொடுக்கலாமே” என்று அவள் வாதம் செய்ய… நடராஜோ அவர் பிடித்த பிடியிலேயே நின்றார்… தனக்கென்றும் கொள்கைகள் இருக்கின்றது என்று…

அதன் பின் கண்மணி என்ன நினைத்தாளோ… வாடகைக்கு வீடு கொடுக்க ஒத்துக் கொண்டாள்… தந்தை ரிஷிக்கு வேலை கொடுத்தால் என்ற நிபந்தனையோடு…

ஆக ரிஷிக்கு சாதமான சூழ்நிலைதான் உருவாகியது…. அன்றைய தினம்…

அதன் பின் கல்லூரிப்படிப்பு முடியும் வரை… மாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை வேலை செய்தவன்... கல்லூரி முடிந்த இந்த 2 வருடமாகத்தான் முழு நேரமாக இங்கு வருகிறான்... அதன் பின் தான் தினகர், வேலன் இருவரையும் வேலைக்கு எடுத்தார் நட்ராஜ்... அது கூட அவர் மகள் சொல்லித்தான் அவளின் சிபாரிசின் பேரில் தான் சேர்த்தார்…

இதோ அடுத்தடுத்து ஆர்டரும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.... 15 வருடமாக பேருக்கென்று முதலாளியாக இருந்து உழைப்பாளியாக மட்டுமே உழைத்தவரை... இன்று முழு நேர முதலாளியாக மாற்றிய பெருமை... ரிஷிக்கே சேரும்.... அவரிடமே தொழில் கற்று… வெல்டிங்க் பட்டறையாக இருந்த அந்த இடத்தை கொஞ்சம் விரிவு செய்து.... மெஷின்கள் வாங்கச் சொல்லி இன்று சிறு தொழிற்சாலையாக மாற்றி இருந்தான்... அது மட்டும் இன்றி... நடராஜனை முதலாளி ஸ்தானத்தில் வைத்து....அவருக்கென்று சில வரைமுறைகளை வகுத்து.... வெளி விவகாரங்களை மட்டும் அவரைக் கவனிக்க வைத்து… அதிலும் அவரோடு தானும் கூட இருந்து… என்று ரிஷி நடராஜன் தொழிலில் பல மாற்றங்களை கொண்டு வந்திருந்தான்...

விளையாட்டுத்தனமாக சுற்றிக் கொண்டிருந்தவனுக்குள் எப்படி இத்தனை திறமைகள்… பொறுப்பு… என நட்ராஜுக்குள் ரிஷி என்பவன் பெருமையோடு வியப்பை மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்து…

அதே நேரம்… ரிஷியின் மீதான பெருமை… இந்த வியப்பு எல்லாம் அவனோடு பழகி… அவன் வேலை செய்யும் திறமை பார்த்து… வேலையில் எவ்வாறு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறான் என்பதெல்லாம் உணர்ந்து வந்தது… ஆனால் தன் மகளுக்கு இவன் மீது எப்படி நம்பிக்கை வந்தது… மனிதர்களைக் கணிக்கும் மகள் மீதும் பெருமை வர… நினைத்தபடியே தன்னை மறந்து ரிஷியைப் பார்த்துக் கொண்டிருந்தார்…

ரிஷியையே பார்த்துக் கொண்டிருந்த நடராஜைக் கண்டுகொண்ட வேலன்...

“ஆர்கே அண்ணாத்தே.... எங்களுக்குத்தான் நீங்க ஹீரோ மாதிரி தெரியறீங்கன்னா.... நம்ம முதலாளிக்கும் போல… உங்களையே பார்த்துட்டு இருக்காரு… முகமெல்லாம் பெருமையா வேற...” வேலன் சொன்னவுடன் தன் முதலாளியை எல்லாம் அவன் பார்க்க வில்லை.. மாறாக சொன்னவனை பார்த்து வில்லன் பார்வை பார்த்து வைத்தான் ரிஷி ரிஷி...

“வேலையப் பாருடா... லீவு வேணும்னா... கொஞ்சம் அதிகமா உழைக்கனும்… அதை விட்டுட்டு ஐஸ் வைக்கிற வேலை எல்லாம் வைக்கக் கூடாது” அன்றைய தினம் வடிவமைக்கப்படும் பொருள்களுக்கு ஏற்றபடி மெஷினில் புரோகிராம்களை மாற்றியப்பதில் கண்களின் கூர்மையும் கைகளில் கவனம் இருந்தாலும்… வேலனுக்கும் வாய் பதிலடி கொடுத்தது…

“சரி தல… இன்னைக்கு எந்த பீஸ்… என்ன மாதிரி கட்” என்று வேலனும் தினகரும் ரிஷியின் நிலைப்பாட்டுக்கு மாற…

தினகரிடம் அவனுக்கான வேலைகளைச் சொன்னவன்… அடுத்து வேலனிடம் அன்றைய தினத்திற்கான வேலையை சொல்ல ஆரம்பிக்கப் போக... இப்போது ரிஷி கழட்டிப் போட்டிருந்த சட்டையில் இருந்த அவனது மொபைல் அதிர்ந்தபடி ஒளிர்ந்தது.... சைலன்ட் மோடில் போட்டிருந்தபடியால்...

வேலனிடம் வேலைகளை சொல்லியபடியே... தனது மொபைலை எடுத்துப் பார்த்தவன்... புதிய எண்ணாக இருக்க.... யோசனையுடன் காதில் வைக்க... எதிர்முனையில் பேசியது அவன் படித்த கல்லூரியின் முதல்வர்...

அழைக்க காரணம் என்னவாக இருக்கும்… தனக்குள் யோசித்தபடியே… அலட்சியமாக எடுத்தான் ரிஷி..

என்னவென்று கேட்டவனின் குரலில் இப்போது கூட மரியாதை…. பவ்யமெல்லாம் இல்லை….

மறுநாள் காலை அவரை வந்து கல்லூரி அலுவலகத்தில் பார்க்க வருமாறு அவனை அழைக்க… தனக்கான அடுத்தடுத்த வேலைகளின் பட்டியல் ரிஷியின் ஞாபகத்துக்கு வர… நாளை வர முடியாதென்று சொல்லி… இரண்டு வாரம் கழித்துதான் வரமுடியுமென்று கறாராகச் சொல்லிவிட... அவன் சொன்ன அன்றே வருமாறு சொல்லி விட்டு போனை வைத்திருந்தார் அந்த முதல்வர்…

”தன்னை எதற்கு அழைத்திருக்கிறார்கள்.... தான் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லையே..... என்னவாக இருக்கும் என்று யோசித்தவனுக்கு... ஒன்றும் புலப்படாமல் போக... சரி நேரில் தான் போகப் போகிறோமே... தெரிந்து கொள்வோம்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன்... அடுத்த சில கணங்களிலேயே கல்லூரி முதல்வரின் அழைப்பைப் பற்றி பெரிதாக தனக்குள் ஏற்றிக் கொள்ளவில்லை…

அதே நேரம்… ரிஷி யாரிடமோ… அவரை பார்க்க வருவதாக வாக்குறுதி அளித்துக் கொண்டிருப்பதைக் அரைகுறையாக கேட்டுக் கொண்டிருந்த வேலன்...

“டேய் தினகர் நாளைக்கு லீவுடோய்” என்று விசிலடிக்க...

ரிஷி… போனை மீண்டும் சட்டைப் பையில் போட்டபடி,

“ரொம்ப கனவு காணாதீங்கடா… நெக்ஸ்ட் வீக் தான்… அதுகூட பெர்மிஷன் மட்டும் தான்… சண்டே ஒரு நாள் லீவ் பத்தாதாடா உங்களுக்கெல்லாம்” என்று கறாராகச் சொல்லியபடியே

”அது மட்டும் இல்லை... புதுசா வெல்டிங் ஆர்டரும் வந்திருக்கு.... சூரஜ் அண்ணன் கிட்ட ஜெனெரேட்டர் சப்ளை கேட்ருக்கேன்... அவர் ஓகேனு சொல்லிட்டார்னா... ஷிப்ட் போட்டு வேலை பார்க்கனும்…” என்று சொன்னவன் அதற்கு மேல் பேச எதுவுமில்லை என்பது போல தன் வேலையில் மூழ்கினான் ரிஷி

“என்னது… ஷிஃப்ட்டா” அலறியபடி வேலன், தினகர் இருவரும் இன்னும் அதிர்ச்சியாக ரிஷியைப் பார்க்க... மில்லி மீட்டர் புன்னகை பூத்தவன்..

“படம் தானேடா… பார்க்கமாலாம்டா... நானே கூட்டிட்டு போகிறேன்… உங்க ஆர்கே அண்ணாத்த வாக்கு தவற மாட்டேண்டா… நம்புங்கடா… முதலில் இந்த ஆர்டரை முடிப்போம்.. ஓகே“ என்று சொல்ல

“இப்டித்தான் போன ஆர்டருக்கும் சொன்னாரு” என்று இருவருமாக முணங்கியபடி சொன்னாலும்… போன முறை ரிஷியால் சொன்னது போல செய்ய முடியாத காரணம் இருந்ததால் பெரிதாக அதைப் பற்றி பேசவில்லை…

ஆனால்…

‘லாஸ்ட் டைம் கொடுத்த வாக்கும் இருக்கு அண்ணாத்தே… ஞாபகம் வச்சுக்கோ” என்ற போதே…தெரியும்… மறக்கவில்லை என்பது போல ரிஷி கட்டை விரலை மட்டும் உயர்த்திக் காட்டியபடி… கொஞ்சம் பெரிதாக புன்னகைத்து வைத்தான்

தன் கீழ் இருப்பவர்களை தட்டிக் கொடுத்து அவர்களிடம் வேலை வாங்கும் வித்தை ரிஷிக்கு இயல்பிலேயே இருக்க.... நடராஜன் தொழிலுக்கு அது மிகவும் உதவி செய்தது...

ரிஷி கட்டை விரலை உயர்த்தியதுதான் தாமதம் அடுத்த நொடியே...

“ஆர்கே அண்ணாத்த தல படம் தான்“ - வேலன்

“இல்லை தளபதி படம்”

வேலனிடம் தினகரும் போட்டி போட... இப்போது பல்லைக் கடித்தான் ரிஷி…

“டேய்… வந்ததில இருந்து பேச்சு மட்டும் தான் இங்க ஓடுது… ஒழுங்கா வேலை பாருங்க... இல்லை படமே இல்லை... படத்துக்கு கூட்டிட்டு போறதே அதிகம்... இதில் ஆப்ஷன் வேறயாடா உங்களுக்கு… இன்னைக்கு இல்லை அவ்ளோதான்… என்னைக்குனு பிறகு சொல்கிறேன்… ஒழுங்கா வேலையைப் பாருங்க… இல்லை மொத்தமா கட்… ” என்று ரிஷி முறுக்கத்தான் செய்தான்... ஆனால் அதில் அதிகாரம் இல்லை… செல்லமான பயமுறுத்தல் மட்டுமே தொணித்தது…

அதன் பிறகு... வாயை மூடியபடி இன்றே நாளை என்பது வந்து விட்டது போல மும்முரமாக வேலை பார்க்கத் தொடங்கினர்… தினகரும் வேலனும்....

அவர்களுக்குள் நடப்பவற்றையெல்லாம் தன் அறையில் இருந்தபடி புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் அந்த சிறு தொழிற்சாலையின் முதலாளி நடராஜ்...

---

வேலனும் தினகரனும் தங்களுக்குள் கலகலத்துக் கொண்டிருக்க.. ரிஷி அதைக் கேட்டபடியும்... அவ்வப்போது அவர்களிடம் பேச்சுக் கொடுத்தபடியும்…. அதே நேரம் வேலையிலும் கவனம் சிதறாமல் செயலாற்றிக் கொண்டிருக்க... இப்போது மீண்டும் ரிஷியின் மொபைல் அடித்தது.... போனை எடுத்து பார்த்த ரிஷி... அதில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்தவன்... எடுக்காமல் கையில் எடுத்தபடி அதையே பார்த்துக் கொண்டிருக்க... சிறிது நேரத்தில் போன் தானாக அதன் துடிப்பை நிறுத்தியது...

தன் பேண்ட் பாக்கெட்டில் போனை போட்டபடி மீண்டும் வேலையில் கவனமாக…. மீண்டும் போன் அடிக்க... இம்முறை தானே போனை கட் செய்தான்.... அதன்பிறகும் போன் அழைக்க...

எரிச்சலுடன் அட்டெண்ட் செய்தவன்... அதே எரிச்சலுடன்

“மகிளா... போனைக் கட் பண்ணினா பிஸியா இருக்கேனு தெரியாதா”

”ஒருத்தவங்க போனில் அடிக்கடி அழைத்தால்... முக்கியமான விஷயமாகக் கூட இருக்கலாம்னு தெரியாதா மாமா உனக்கு” என்று மகிளாவும் பதிலடி கொடுக்க...

சட்டென்று மாறிய பதட்டமான குரலில்...

“மகி... அம்மா, ரிது, ரித்திக்கு.... எல்லாரும் நல்லாத்தானே இருக்காங்க” வினவினான் ரிஷி…

“ப்ச்ச்… எல்லாரும் நல்லா இருக்காங்க… இன்னைக்கு என்ன டேன்னு தெரியும் தானே… ரிது ரித்விகாக்கு போன் பண்ணி பேசு மாமா…” என்று மகிளா சொல்ல

நிம்மதியாக மூச்சு விட்டவன்

“இதுதான் முக்கியமான விசயமா… போனை வை … என் தங்கைங்ககிட்ட பேச எனக்குத் தெரியும்” என்றபடி அவளின் அடுத்த பதிலைக் கூட எதிர்பார்க்காமல் போனைக் கட் செய்தவன்… அடுத்த நொடியிலேயே தன் வேலையில் தன்னை மூழ்க வைத்துக் கொண்டான்…

அடுத்த சில மணி நேரத்திலேயே இவன் கேட்டிருந்த ஜென்ரேட்டர் அங்கு வந்திறங்க…

வேலனுக்கும் தினகருக்கும் முகம் சுத்தமாக விழுந்து போய் விட்டது…. இனி தியேட்டர் செல்ல முடியாது என்பதால் இருவருக்கும் வந்த அதிருப்தி அது….

நட்ராஜ் முகம் வெகுவாக மலர… தன் முன் நின்றிருந்த ரிஷியைப் பார்த்தபடியே

“சின்னதா சொல்லி இருப்பேன்னு நினைத்தேன்… ரொம்ப தேங்க்ஸ் ரிஷி” என்று சொல்ல…

“இதை லீஸ்கே வாங்கிட்டேன் நட்ராஜ் சார்… இதைச் சொந்தமா வாங்குறதுக்கு… நாம நம்ம வேலைக்கான மெஷின்ஸ் ஏதாவது ஆர்டர் போடலாம்னு தான் இதை வாங்கலை… சூரஜ்… என் ஃப்ரெண்டோட ஃப்ரெண்ட்… சோ… ப்ராப்ளம் இல்ல… இன்னைக்கு ஒரு நாள்… அவங்க ஃபிட்டிங் வேலை பார்க்க டைம் எடுக்கும்… வேலை பார்க்க முடியாது… பசங்க ரெண்டு பேரும் வேற மூவி பார்க்க கேட்கிறாங்க… அடுத்தடுத்து வொர்க் இருக்கிறதுனால அவங்களுக்கும் ஒரு எண்டர்யின்மெண்ட் வேண்டும் சார்… லாஸ்ட் மந்த் வொர்க் கம்ப்ளீட் பண்ணினப்போ… படத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிருந்தேன் சார்… “ என்று ரிஷி சொல்ல…

ரிஷியும் நடராஜும் இங்கு அவர்களது அறையில் பேசிக் கொண்டிருக்கும் போதே…. அதே நேரம் கண்மணியும் அங்கு வந்து இறங்கி இருந்தாள்…

கண்மணி வரும் போதே பார்த்து விட… வேலனும் தினகரும்…

“மணி அக்கா… “ என்று அவர்கள் முகம் பிரகாசமாக… வேகமாக கண்மணியின் அருகே சென்றவர்கள்…

“ஜெனரேட்டர் வந்திருச்சா என்ன” என்று ஆராய்ச்சியோடு கேட்டபடியே… பைக்கை ஸ்டாண்ட் போட்டபடி… மதிய உணவுக் கூடையை வேலனிடம் கொடுக்க…

அதை வாங்கியபடியே ”வந்திருச்சு வந்திருச்சு” என்று சலிப்பாகச் சொல்ல…

அவர்களின் சலிப்பைக் கவனித்தவளாக மெல்லிய புன்னகையுடன் கண்மணி… அவர்களைப் பார்த்து…

“என்னடா… இவ்ளோ சலிப்பு…” தன் பைக்கின் மேல் சாய்ந்தபடியே கேட்க

“பின்ன என்னக்கா… இன்னைக்கு பவர் கட்… படத்துக்கு கூட்டிட்டு போங்கன்னா போக மாட்டேங்கிறார் அண்ணாத்த… இப்போ இது வேற வந்துருச்சு… ” என்று வேலன் கவலையோடு முறையிட

தினகரோ…

“மணி அக்கா… நீ கொஞ்சம் ரெகமண்ட் பண்ணேன்… ஆர்கே அண்ணாத்த கிட்ட… நீ கூடப் பரவாயில்லை… இந்த அண்ணாத்த எப்போ டெரரா இருப்பார்… எப்போ நார்மலா இருப்பார்னே கண்டுபிடிக்கவே முடியலைக்கா… நீ நல்ல டெர்ரர் பீஸ்னா… அவர்… டெரரான நல்ல ” என்ற போதே… ரிஷியும் நட்ராஜும் வெளியே வர… தினகர் கப்பென்று வாயை மூட….

அவன் சட்டென்று நிறுத்தியதில்…. கண்மணிக்கு சிரிப்புதான் அதிகமாக வந்து போனது… அதே புன்னகை முகமாக ரிஷியைப் பார்க்க…

ரிஷியும் அவளிடம் ஒரு சிறு தலை அசைப்போடு கூடிய புன்னகையை மட்டும் சிந்தியபடி… நிற்காமல் அவளைத் தாண்டி…. ஜெனரேட்டர் இறக்கும் இடம் நோக்கிப் போய்க் கொண்டே…

“வேலா… தினா… இங்க வாங்க” என்று வேலனையும் தினகரனையும் தன்னோடு அழைத்துக் கொண்டு போய் விட… நட்ராஜ் மற்றும் கண்மணி மட்டுமே அந்த இடத்தில் இருந்தனர்..

இப்போது கண்மணி நட்ராஜிடம்

“லஞ்ச் கொடுக்க வந்தேன்… “ என்று ஆரம்பிக்க….

”பொங்கல் வச்சாச்சாம்மா…” என்று நடராஜ் இடையில் பேச ஆரம்பிக்க…

“ஹ்ம்ம்… “ என்றபடியே கையோடு கொண்டு வந்திருந்த பிரசாத்ததை அவரிடம் கொடுத்தபடி… திருநீரை தன் தந்தையின் நெற்றியில் வைக்க… மகளின் இந்த செய்கையில்… நடராஜின் முகம் பளீரென்று மலரத்தான் செய்தது… ஆனால் அடுத்த நொடியே மகள் சொன்ன செய்தியில் அவரின் முகம் கூம்பலும் ஆனது

“இன்னைக்கு வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகும்… அர்ஜூன் வந்திருக்காங்க… அவங்களைப் பார்க்க வரச் சொன்னாங்க… ஸ்கூல் போய்ட்டு… தாத்தா வீட்டுக்கு போய்ட்டு வருகிறேன்” என்று மட்டும் சொல்லியபடியே அவரின் பதிலை எதிர்பார்க்காமல் வண்டியை எடுக்க…

நடராஜ்… அப்படியே அங்கேயே நின்று விட்டார்… மகளை தன் கைக்குள் வைக்க முடியாத அவரின்கையாலாகாத் தனத்தை நினைத்து… காரணம்…. அந்த அர்ஜூனிடம் பழகாதே என்றெல்லாம் மகளைக் கட்டுப்படுத்த முடியாதே… மகள் எல்லாவற்றிருக்கும் சரியாக பதில் வைத்திருப்பாளே…

அதே போல, இதுவரை கண்மணி எந்தச் செயல் செய்தாலும் அது சரியாகத்தான் இருந்திருக்கின்றது… எதைச் செய்தாலும் சாதக பாதகங்கள் பார்த்துதான் செய்வாள்… அவள் செய்த மற்ற எல்லா விசயங்களுக்கும்… ஒரு வார்த்தை கூட பேசாமல்.. மறுப்பு சொல்லாமல் தலையாட்டியவர்… இந்த விசயத்தில் மட்டும் என்ன சொல்ல முடியும்…

தன் மனைவியின் பெற்றோரிடம் பேசக் கூடாது என்று ஒருமுறை கண்மணியிடம் சொல்ல

”நீங்க எனக்கு எப்படி முக்கியமோ… உங்களுக்கு நான் எப்படி முக்கியமோ…. அதே போல அவங்க எனக்கு முக்கியம்… அவங்களுக்கும் நான் முக்கியம்.. இதுல நீங்க தலையிடாதீங்க” என்று முகத்திலடித்தாற்போல தன்னிடம் சொன்னவளாயிற்றே தன் மகள்…

இப்போது அர்ஜூன் விசயத்திலும் இவர் பேசப் போய்… அதே போல சொல்லி விட்டால்… அதைத் தன்னால் தாங்க முடியுமா…. மனதோடு மருக மட்டுமே முடிந்தது அவரால்…

வருத்தத்தை வெளியில் அதைக் காண்பிக்க முடியாமல்… மனதுக்குள் வைத்து போராடிக் கொண்டிருந்தார் இந்த ஐந்து வருடங்களாக… இதோ இன்றும் பேயறைந்தார் போல அப்படியே நின்று கொண்டிருந்தார் நட்ராஜ் மகளின் வார்த்தைகளில்….

”மாறும் எந்நாளும் காட்சிகள் மாறும் அப்போது பாதைகள் கேளடி”

சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்த லாரியில் இருந்த ரேடியோவில் பாடல் வரிகள் ஒலித்துக் கொண்டிருந்தன…

லாரியின் அருகே நின்றிருந்தான் ரிஷி…

அங்கிருந்தவர்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை உத்தரவிட்டுக் கொண்டிருந்தாலும்… அதையும் மீறி…. தந்தை மகள் மீதும் ஒரு கண்ணை வைத்துதான் இருந்தான் ரிஷி… …

தந்தை-மகள் என்பதை விட… நடராஜின் முக பாவனைகளைத்தான் அவன் பார்த்துக் கொண்டிருந்தான்… கண்மணியை எல்லாம் அவன் கண்டு கொள்ளவில்லை… இந்த ஐந்து வருடத்தில் ரிஷி தன் குடும்பத்துக்கு அடுத்து உன் பிரியம் யார் மேல் என்று கேட்டால்… தயங்காமல் கை நீட்டி சொல்வான் நடராஜ் சார் என்று… அதுமட்டுமல்லாமல் ரிஷி என்பவன் ரிஷியாக யாரிடம் இருக்கின்றான் என்றால் நடராஜிடம் மட்டுமே… இன்னும் சொல்லப் போனால் தன் தந்தைக்கு அடுத்த இடத்தில் நடராஜை வைத்திருந்தான் ரிஷி…

தன் குடும்பத்தைத் தவிர… அத்தனை பேரையும் தன் வட்டத்திற்கு வெளியே வைத்திருக்க நினைத்தவனால்… நடராஜிடம் மட்டும் ஏனோ அப்படி இருக்க முடியவில்லை… அவரோடு பழகப் பழக அவரின் ஒவ்வொரு அணுகுமுறையும்… நடவடிக்கையும்… அவரிடம் இருக்கும் தொழில் நுணுக்கங்களும்… நடராஜின் மேல் ரிஷிக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்த… மெல்ல மெல்ல அவரின் காலடித்தடம் தொடர ஆரம்பித்திருந்தான்…

அதுமட்டுமல்ல… நடராஜ் என்பவர் சாதாரணமானவர் அல்ல… தொழில் சாம்ராஜ்ஜியங்களை கட்டி ஆள வேண்டியவர்… ஏனோ அவராகவே தன்னைக் குறுக்கிக் கொண்டு சாதாரண ஆளாக நடமாடிக் கொண்டிருக்கின்றார் என்றே ரிஷிக்குத் தோன்றியது…

மனைவியின் மரணம்… இத்தனை தூரம் ஒரு மனிதனை தலைகீழாக மாற்றி விடுமா என்ன… மனைவியைத் தொலைத்தவர்… தனக்கான அத்தனை வழிகளையும் தனக்குள் சுருக்கிக் கொண்டு… அவருக்கான உயரம் எதுவென்று தெரிந்தும் அதை நோக்கிச் செல்லாமல்… தன் உயிர்ப்பான ஒரு சிறுபெண்ணின்… பார்வைக்கும்…. வார்த்தைக்கும் மட்டுமே தன் வாழ்வு என்று வாழ்ந்துக் கொண்டிருப்பதை பார்த்து அவனுக்கு இன்னும் இன்னும் வியப்பே…

இவன் பெயரளவில் மட்டும் தான் ரிஷி… ஆனால் ரிஷியைப் போல இருப்பவர் நடராஜே என அவரைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் உணர்வான்… தன்னைப் போல வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு… இல்லையில்லை தன்னை விட வாழ்க்கையில் அனைத்து அடிகளையும் வாங்கி… அதைத் தாங்கிக் கொண்டு வாழும் இன்னொருவர் கண்ணருகில் நடமாட ரிஷிக்கு அவனையும் அறியாமலேயே நடராஜின் மேல் பந்தம் உருவாகி இருந்தது…

நடராஜைப் பற்றி முழுதாக தெரியாவிட்டாலும்… ஓரளவு அவரைப்பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்தான்…

அதில் அவன் தெரிந்து கொண்டது… அவரின் உயிர் மூச்சு இப்போது அவர் மகள் கண்மணி என்றாலும்… அவரின் மனைவி பவித்ரா அவரின் உயிர்…

“தன்னை… இந்த ஊர் உலகம் வியந்து பார்க்கும் பெரிய மனிதனாக மாற்ற வேண்டும்…” என்ற மனைவியின் வார்த்தைகள், அடிக்கடி அவர் வாயில் இருந்து வரும் வார்த்தைகள்…

அது அவரது மனைவியின் ஆசை… லட்சியம்…

அந்த உயிர் அவரைவிட்டு போனபோது….

தனது ஆசைகள் மட்டுமல்ல… இவரின் தொழில்… இவரின் திறமை எல்லாவற்றையும் தன் மனைவி சேர்ந்ததோடு மண்ணோடு மண்ணாக இவரும் தனக்குள் புதைத்துக் கொண்டு விட்டார்…

நட்ராஜின் மனைவி பவித்ராவுக்கு மட்டுமல்ல… அவரோடு நெருங்கிப் பழகுபவர்களுக்கு மட்டுமே அது புரியும்… நட்ராஜ் ஒரு படிக்காத மேதை என்று… ரிஷிக்குமே முதலில் தெரியவில்லை… மற்றவர்களைப் போல இவனும் சாதரணமானவர் போல்தான் நினைத்தான் … ஆனால் அவரோடு பழக பழக… அதை உணர்ந்தான் என்றே சொல்ல வேண்டும்… அறிவு திறமையில் மட்டுமல்ல… தோற்றத்திலும் அவரிடம் ஒரு தனித்துவம் இருந்தது… அதை ரிஷி முழுமையாக உணர்ந்து கொண்டபோது…. நட்ராஜ்… ரிஷியின் மானசீக குரு… கண் முன் நடமாடும் நாயகனாக மாறி இருந்தார்…

அதே நேரம் கண்மூடித்தனமான அவரின் மகள் பாசமும் சில சமயம் இவனுக்கு எரிச்சலைத் தரும்… கண்மணியும் நடராஜும் இருந்தால்… கண்மணிதான் பெரிதாகத் தெரிவாள்… அப்படிச் சொல்வதை விட… மகளை உயர்வாகக் காட்ட இவர் ஒதுங்கி இருப்பது போலவேத் தோன்றும்… மகள் பாசம் இருக்க வேண்டியதுதான்… ஆனால் இவரின் பாசம் கொஞ்சம் அதிகப்படியோ என்றே தோன்றும்…

அதுமட்டுமல்லாமல்… இவர் அளவுக்கு அவர் மகள் இவர் மீது பாசம் வைத்திருக்காளா என்றால் அதுவும் இல்லை… தன் அப்பாவிற்கு பிடிக்காது என்று தெரிந்தும்… தாத்தா பாட்டியினரிடம் பழகுகிறாள் என்பதை அவ்வப்போது நடராஜ் வார்த்தைகளில் உணர்ந்து கொள்வான் ரிஷி … பெரிதாக ஆராய்ச்சி எல்லாம் செய்ய மாட்டான்… ஆனால் நடராஜ் முகம் வாடி இருந்தால் அதற்கு கண்மணி மட்டுமே காரணம் என்று தெரியும்… ஏனோ தன் முதலாளியின் முகம் வாட்டம் ரிஷிக்கு பிடிக்காது…. அதனால் அவருக்குப் பிடிக்காத கண்மணியின் இந்த நடவடிக்கைகளும் பிடிக்காது...

கண்மணி தாத்தா பாட்டி வீட்டுக்கு போகின்றாள்… என்றளவில் மட்டுமே தெரியும்… அர்ஜூன் என்பவனும் கண்மணி நடராஜ் உறவில் குறுக்கிடுகிறான் என்பது ரிஷிக்கு இன்று வரை தெரியாது…. கண்மணியைப் பற்றி நடராஜ் கூறும் வார்த்தைகளில் தான் அவளைப் பற்றி சிறிதளவாவது தெரியும்… கண்மணியிடம் இவனும் பேசுவான்… கண்மணியும் இவனிடம் பேசுவான்… அதெல்லாம் நேருக்கு நேராக சந்திக்கும் போது பேசும் வார்த்தைகள் மட்டுமே… அதோடு அவர்களின் தொடர்பு முடிந்து விடும்… இருவரும் அருகருகில் இருந்தாலும்… இருவருக்குமான பிணைப்பு… மூன்றாம் நபர் என்ற முறையில் மட்டுமே பழக்க வழக்க பேச்சு எல்லாமே….

இதோ இன்று நடராஜ் முகம் மாற மாற… ரிஷிக்கு அவனையுமறியாமல் கண்மணியிடம் ஒரு எரிச்சல் வந்தாலும்… அதை முகத்தில் பிரதிபலிக்காமல் … தன் அருகில் வந்து நின்றவளிடம் அதைக் காட்டாமல் நின்று கொண்டிருந்தான் என்றே சொல்ல வேண்டும்…

ரிஷியாவது நட்ராஜை நினைக்கும் போதெல்லாம் கண்மணியைப் பற்றி நினைப்பான்… ஆனால் கண்மணிக்கோ ரிஷி என்பவன் நினைத்துப் பார்க்கக் கூடிய முக்கியமான நபர் எல்லாம் இல்லை… அன்றாடம் சந்திக்கும் ஒரு மனிதன்… தங்கள் வீட்டில் வாடகைக்குத் தங்கும் ஒருவன்… நல்லவன்… நம்பிக்கையோடு அவனிடம் பேசலாம்… அவ்வளவுதான் ரிஷியைப் பற்றிய எண்ண ஓட்டங்கள்…

”மேகம் இல்லாத வான்மழை ஏதடி கால தேவனே வழிவிடு நேசம் வாழ்கவே”

ரிஷியின் அருகே போய் நிறுத்தி அவனைப் பார்த்தவள் அவனிடம் பேசாமல் … அவனையும் தாண்டி

“அண்ணா கொஞ்சம் பாட்டை நிறுத்தறீங்களா” கண்மணி லாரி ஓட்டுனரைப் பார்த்துச் சொல்ல பாடலும் நிறுத்தபட்டது…

ரிஷியும் இப்போது அவளைக் கேள்வியோடு பார்க்க

“என்ன ஆர் கே சார்… எங்க பசங்களை ஒரே அடியா போட்டுத் தாக்குறீங்களா என்ன… ரெகமெண்டேஷனுக்கு என்கிட்ட வந்து நிற்கிறாங்க… ” என்றபடி… ரிஷியிடமிருந்த தன் பார்வையைத் வேலன் தினகரிடம் மாற்றியவள்….

“உங்க அண்ணாத்த கிட்ட சொல்லிட்டேண்டா… இதுக்கு மேல உங்க பாடு… உங்க அண்ணாத்த பாரு” என்றவள் அங்கிருந்து கிளம்பிப் போக…

ரிஷி தன் முன் நின்றிருந்த இருவரையும் முறைத்துப் பார்த்தான்…

“அய்யோ அண்ணாத்த அண்ணாத்த டெரர் லுக் லாம் விடாதீங்க… மணி அக்கா வந்துச்சுனுதான் சொன்னோம்… அக்கா சொன்னதாலதான நீங்க எங்களை வேலையில சேர்த்துகிட்டீங்க… அதான் அதே மாதிரி இதுக்கும் ரெகமண்டேஷன் கேட்டோம்…” என்று தலையைச் சொறிந்தபடியே சொல்ல…

கண்மணி… சிரித்தபடியே…

“ஹலோ… ஹலோ… ரொம்ப முறைக்காதிங்க ரிஷி சார்…. எங்க புள்ளைங்க பாவம்… கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க…“ என்ற போதே… வார்த்தை ஏதும் பேசாமல் ரிஷி கண்மணியிடம் தலையாட்டியபடியே… அங்கிருந்து நகன்றுவிட…

”யக்கோய்… வந்த வேல முடிஞ்சுருச்சு தானே… கிளம்பு கிளம்பு” என்று தலை மேல் கையெடுத்து கும்பிட்டபடி அவள் போகும் வழியை நோக்கி வேலன் கைகாட்ட… கண்மணி சிரித்தபடியே… தன் பைக்கை எடுத்தபடியே…

“அப்பாகிட்ட கோவில் பிரசாதம் கொடுத்துருக்கேன்… எடுத்துக்கங்க… “ என்றபடியே கிளம்ப…

“யாரோ கண் பார்த்த பூவிது யாரை கொண்டாட பூத்தது தேனே விழிகள் நனையுது…”

அவர்களுக்கான பாடல் வரிகள் ஒலித்துக் கொண்டிருந்தாலும்… அதைப் புரிந்து கொள்ள முடியாமல் நாயகனும் நாயகியும் அவரவர் திசையில் பயணித்துக் கொண்டிருந்தனர்…

-----

அடுத்த சில மணி நேரத்தில் திரை அரங்கத்திலும் இருந்தனர் ரிஷிம் தினகர் மற்றும் வேலன் மூவரும்… அவர்களோடு அமர்ந்து படம் பார்க்க அமர்ந்த ரிஷி… திரையில் படம் ஆரம்பிக்க…. வழக்கம் போல் கண்களில் கைக்குட்டையை போட்டபடி உறங்க ஆரம்பித்தான்…

வேலன் மற்றும் தினகரன் இருவருக்காக மட்டுமே அவன் அவர்களோடு வருவது… 24 மணி நேரத்தில் முக்கால்வாசி நேரம் இவர்களோடு தான் இருக்கின்றான்… வேலைக்காக மட்டுமின்றி… உங்களில் நானும் ஒருவன் தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தவே இந்த மாதிரி வெளியிடங்களுக்குச் செல்லும் போது, மதிய உணவு அவர்களோடு சேர்ந்தும் செல்வான்

இருபதுகளின் தொடக்கத்தில் இருக்கும் வேலன் தினகர் இருவருக்குமே ரிஷி தான் எல்லாமே… அந்த வயதில் தனக்கு கிடைக்காத அனுபவத்தை அறிவுரைகளை எல்லாம் ரிஷியும் அவர்களுக்க வழங்க… விளைவு அவனின் வழிகாட்டுதல் இந்த இரண்டு வருடங்களில் இவர்களின் பயணம்… அதில் அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவோ மாறுதல்கள்… பள்ளிப்படிப்பு கூட முடிக்காமல் வீட்டில் திட்டு வாங்கியவர்களை… கண்மணி தான் இங்கு வந்து சேர்த்திருந்தாள்… முதலில் தான் தோன்றித்தனமாக வேலை பார்க்க ஆரம்பித்தவர்கள் ரிஷியின் ஆர்வமும்… ஈடுபாடும்… அவன் வேலை பார்க்கும் நேர்த்தியும் கூடுதலாக அவனின் ஆளுமையும்… என அவனின் பால் கொண்ட மரியாதை… இவர்களையும் அவனோடு இணைக்க… முழுவதுமாக ரிஷி அளவுக்கு இல்லாவிட்டாலும்… 75 சதவிகித உழைப்பாளர்களாக… ஈடுபாட்டுடன்… உழைப்பின் அருமை தெரிந்து உழைக்க ஆரம்பித்து இருக்க… அவர்களைப் பொறுத்த வரை… ரிஷி என்பவன் நாயகன் தான்…

இதோ திரையில் படம் ஓட ஆரம்பிக்க… கண்களை மூடி உறங்க முயற்சித்த ரிஷிக்கோ… உறக்கம் வரவில்லை… மாறாக அவனது மனமோ தன்னைப் பற்றிய சுய அலசலில் பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்தது…

நட்ராஜிடம் வியப்பையும் பெருமிதத்தையும் பெற்ற போதிலும்,,,, வேலன் தினகரின் பார்வையில் நாயகனாகத் தெரிந்த போதிலும்…. நம் நாயகனுக்கோ… வாழ்க்கையில் ஏதும் பெரிதாக சாதிக்கவே இல்லை என்ற எண்ணம் மட்டுமே…

ஆம் இந்த 5 வருடங்களில் தன் கல்லூரிப்படிப்பை முடித்திருக்கிறான்… அது மட்டுமே அவன் சாதனை… அவனைப் பொறுத்தவரை அது சாதனை என்றாலும்…. மற்றவர்கள் கண்ணிற்கு அது சாதாரணமே… அடுத்து நடராஜனிடம் தொழில் கற்றுக் கொண்டது… அதிலும் படித்து பகுதி நேர வேலையாக பார்த்து இப்போதுதான் முழு நேரமாக போய்க் கொண்டிருக்கிறான்… கையில் 12000 மாதச் சம்பளம் வாங்குகிறான்…. கடைசி 2 வருடங்களில் அவனுடன் பழகிய சில நண்பர்கள் பன்னாட்டு நிறுவனங்கள் வேலை பார்க்க ஆரம்பிக்க… ரிஷிக்கு அதில் எல்லாம் இஷ்டம் இல்லை… அது மட்டும் இல்லை… வைத்திருந்த அரியர் எல்லாம் முடிக்கவே கூடுதலாக இரண்டு வருடங்கள் வேறு ஆகி இருந்தது… அன்று மிரட்டினான் அவ்வளவே… பணத்திற்கு மட்டுமே அவர்களை உபயோகப்படுத்திக் கொண்டான்…. நட்ராஜிடம் கற்ற அனுபவ அறிவு… அவனையுமறியாமல் கல்வி அறிவையும் தூண்டி விட… கல்வியில் மெல்ல மெல்ல ஏறு முகம் தான்… இஷ்டப்பட்டு படிக்க ஆரம்பிக்க… அதன் பின் எழுதிய தேர்வுகளில் எல்லாம் வெற்றி தான்.. பெரிய மதிப்பெண் இல்லையென்றாலும் அதுவே அவனுக்கு பெருமைதான்… இருந்தும் அதற்கு முன் இரண்டு வருடங்களில் வைத்த தேர்வுகளை எல்லாம் முடிக்க காலதாமதம் ஆனதுதான்… எப்படியோ முடித்து விட்டான்…

நடராஜ் கூட அவனிடம் வேறு வேலைக்குச் செல்ல சொல்லியும்… மறுத்து விட்டான்… அவனது நோக்கம் எல்லாமே வேறு… அதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றானா தெரியவில்லை… ஏன் இந்த வாழ்க்கை… எதற்காக இப்படி வாழுகின்றோம்… இதெல்லாம் பணத்தை மட்டும் நோக்கிய இலக்கா என்றால் இல்லவேயில்லை… தன் அன்னையின் மனதில் தான் ஏற்படுத்தி வைத்திருக்கும் கரும்புள்ளியை அகற்ற மட்டுமே… மற்ற படி ரிஷிக்கு இந்த பணம்… தனக்கான ஆசாபாசங்கள் எல்லாமே தேவையில்லாத விசயங்களே…

அவனைப் பொறுத்தவரை… தன் தாய்… ரிதன்யா… ரித்விகா… இவர்கள் மட்டுமே அவன் வாழ்க்கை.. … அவர்களின் மகிழ்ச்சி மட்டுமே அவன் மகிழ்ச்சி…

ஆனால் தன் குடும்பத்திற்கு என்று என்ன செய்திருக்கிறான்... என்று யோசித்தவனுக்கு.... தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவே தன்னை அவகாசம் தேவைப்பட இத்தனை வருடங்கள் தேவைப் பட்டிருக்க... அதை யோசிக்க தலையே சுற்றியது… ஓரே பாடலில் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் முன்னேறுவது எல்லாம் திரைப்படங்களில் மட்டுமே... என்பது தெரியாதவன் இல்லை ரிஷி

கையில் வாங்கும் 12000 ரிஷி என்ற தனி ஒருவனுக்கான அடையாளம் மட்டுமே…

அவனின் குடும்பம் அது தனசேகரின் குடும்பம் தான் இன்னும்… அவனது தங்கைகளுக்கு தனசேகரின் மகள்கள் தான் அப்படித்தான் கடைசி வரை அவர்களை வைத்திருக்க வேண்டும்… அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை வரும் வரை… தனசேகர்-இலட்சுமி மகள்களாக எப்படி வாழ்ந்தனரோ அப்படித்தான் இருவரும் வாழ வேண்டும்… என் வாழ்க்கை வேறு அவர்கள் வாழ்க்கை வேறு… இப்படித்தான் ரிஷி நினைத்து வைத்திருந்தான்…

ரிதன்யா கடைசி வருட கல்லூரிப் படிப்பில் இருக்கிறாள்... அது முடிந்ததும் அவளுக்கு திருமணத்திற்கு வரன் தேட வேண்டும்... அடமானத்தில் இருக்கும் தங்களது வீட்டை திருப்பி அவனது அன்னைக்கு அளிக்க வேண்டும்… என்றெல்லாம் யோசித்தவனுக்கு… கடைசித் தங்கை ஞாபகம் வர… அவள் அவனைப் பொறுத்தவரையில் இன்னும் குழந்தையே என்பதால் வேறு ஏதும் பெரிதாக நினைக்கத் தோன்றவில்லை…

எல்லாரையும் சுற்றி முடித்த போது மகிளாவின் நினைவும் வர… சட்டென்று அந்த நினைவைக் கடந்தும் வந்திருந்தான்… மனதைப் பாறையாக மாற்றியபடி…

தான் சாதிக்க வேண்டும் அந்த வெறி மட்டுமே அவனுக்குள்... தன்னை மற்றவர்கள் முன்னிலையில் தனித்துவமாக மாற்ற வேண்டும்.... பணத்தளவிலும் அந்தஸ்து அளவிலும்.. அது உடனே முடியுமா... அதற்கு பல ஆண்டுகள் அவனுக்கு வேண்டும்.. அதுவரை அவள் காத்திருக்க முடியுமா? இந்த பல ஆண்டுகள் என்பது அவன் இளமையையும் அல்லவா முழுங்கி விடும்... இதையெல்லாம் நினைத்து தான் அவளை அவன் முற்றிலுமாக தவிர்த்து வருகிறான்... என்ன அவளுக்குத்தான் இன்னும் புரியவில்லை... விரைவில் புரிந்து கொள்வாள்... என்று தன்னைப் பற்றிய அலசலில் நினைவுகளில் வட்டமடித்துக் கொண்டிருந்தவன் நினைவில் … தந்தையின் முகம் வந்து போக… அவன் மூடியிருந்த கைக்குட்டையில் அவன் கண்களின் ஈரக்கசிவு மெலிதாக பரவ ஆரம்பித்து இருந்தது

தந்தை தனசேகரனின் இறந்த நாள் இன்று…



5 வருடங்களுக்கு முன் இதே நாளில் வந்து நின்றது… சொல்லப் போனால் இன்னும் அதே இடத்தில் தான் நிற்கிறான்… என்றே சொல்லவேண்டும் -15

2,873 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page