அத்தியாயம் 18-1
நண்பகல் கிட்டத்தட்ட 11 மணி… ரிஷி அவன் வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தான்…. காலை உணவு முடித்து விட்டு இங்கு வந்து நின்றவன்தான்… கீழே இறங்கிப் போகவே பிடிக்கவில்லை அவனுக்கு… துக்கம் விசாரிக்க… ஆறுதல் கூற என்று வரும் முகங்களைக் காணவே பிடிக்கவில்லைதான்… ஆனால் வருபவர்களை தவிர்க்க முடியாதே... எப்படியோ அனைவரையும் தவிர்த்துவிட்டு வந்து விட்டான்…
கடந்த 30 நாட்கள்... நொடிகளும் யுகங்களாக கழியும் என்பதைப் புரிய வைத்த நாட்கள்… நினைக்கக் கூடாது என்று நினைத்தாலும்... நடந்த நினைவுகள் அவனை அலைகழிக்க அதன் தாக்கத்தை தாண்டிச் செல்லத்தான் நினைக்கின்றான்… முடியவில்லையே.... காலச் சக்கரம் அவனைப் பின்னோக்கி இழுத்து விடாதா என்ற நப்பாசை மட்டும் அவனையுமீறி வந்து கொண்டிருந்தது…
கட்டுப்பாடுகள் இன்றி… கவலையின்றி… வாழ்ந்த நிலையை நினைத்த போதே தந்தையின் நினைவுகளும் வந்து விட…. அவனது கண்களில் அவனையுமறியாமல் நீர் கசிய... அவன் சற்று முன் நினைத்த காலச்சக்கரம் அவனை பின்னோக்கி இழுப்பதற்கு பதில்... நினைவலைகள்தான் ரிஷியை பின்னோக்கி இழுத்தன...
…
அன்று…
தந்தையோடு பேசிவிட்டு.. மறுநாள் எல்லாம் சரி ஆகி விடும் என்ற நிம்மதியோடு படுக்கையில் விழுந்தவனுக்கு… ஒரே எண்ணம் தான்… தந்தை அன்னையைச் சமாதானப்படுத்தி… தன்னோடு பேச வைத்துவிடுவார்… அது மட்டுமே… அந்த எண்ணம் மட்டுமே… அதே மகிழ்ச்சியோடு உறங்கியவனின் செவிகளில் மறுநாள் அன்னையின் அழுகுரலே காதில் விழுந்தது
உறக்கத்திலேயே மரணத்தைத் தழுவிய தன் கணவனின் மரணத்தை தாங்க முடியாமல்… லட்சுமி துக்கத்தில் துவண்டு போக… அந்தக் குடும்பமோ… மொத்தமாக நிலைகுலைந்து போயிருக்க… ரிஷியோ தந்தையின் மரணத்தால் ஸ்தம்பித்துதான் நின்றிருந்தான்…
ஆனால் அடுத்தடுத்த காரியங்கள் அவனை ஓரிடத்தில் நிற்க விடவில்லை… வேறு வழியின்றி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன்… மகனாக அவனின் கடமை என்ன…. பொறுப்பு என்றால் என்ன… தனசேகரின் இறப்பு அவனுக்கு கற்றுக் கொடுத்தது…
ஒரு பக்கம் தந்தை இறந்த துக்கம்… இன்னொரு பக்கம் அன்னை மற்றும் தங்கைகளின் அழுகுரலில் இதயம் பிளந்த வலி… இன்னொரு புறம்… துக்கம் விசாரிக்க வருபவர்களின் முன் கல் போல் நிற்பது… இன்னொரு புறமோ… தந்தையின் இறுதிச் சடங்குகளுக்கான நிகழ்வுகள் என ரிஷியை அவனையும் மீறி அன்றைய நிகழ்வுகள் உள்வாங்கிக் கொள்ள… அவனுக்கேத் தெரியவில்லை… தன்னால் எப்படி இத்தனை துக்கத்திலும் எல்லாவற்றையும் கவனித்து நடத்திக் கொண்டிருக்கின்றோம் என்று… ஒருவாறாக… எல்லாம் முடிந்து அன்னையை பார்க்கச் செல்ல…
லட்சுமி சொன்ன வார்த்தைகளில்தான்… மொத்தமுமாக உடைந்து போனான் ரிஷி… தந்தையின் மரணத்தைக் காட்டிலும் தாயின் வார்த்தைகள் தான் உயிர் வலியைக் கொடுத்தன என்றே சொல்லலாம்…
பெரிதாகவெல்லாம் லட்சுமியும் அவனோடு வாக்குவாதம் செய்ய வில்லை… செய்ய வில்லை என்பதை விட ரிஷி… வாக்குவாதத்தை இழுக்க வில்லை…
“உன்னால் தான் என் கணவர் இறந்தார்… எனக்கு மகன் என்பவனே இனி கிடையாது… எனக்கு இனி மகள்கள் மட்டுமே…. கணவனின் மரணத்தோடு உன்னையும் தலை முழுகிவிட்டேன்… என் கண் முன்னாலேயே நிற்காதே… என் மக்களைப் பார்க்க எனக்குத் தெரியும்… ” சில வார்த்தைகள் மட்டுமே… அதுவே ரிஷியைக் கூறு கூறாக கிழித்துப் போட்டிருக்க… அதற்கு மேல் அவனும் லட்சுமியிடம் பேச வில்லை…
இதோ தந்தை இல்லாமல் 30 நாட்களும் கடந்து விட்டன…
இப்படியெல்லாம் ரிஷி தனக்குள் சிந்தித்துக் கொண்டிருக்க.... அங்கு லட்சுமியோ அறைக்குள்ளேயே முடங்கி இருந்தார்.... அவரின் அருகில் ரிதன்யா அமர்ந்திருக்க... ரித்திகா தன் தாய் மடியில் படுத்திருந்தாள்.... அனைவரிலும் ரித்திகாவின் நிலைமைதான் மிகவும் மோசமாகவும் இருந்தது... அவள் அப்பாவின் செல்லம்.... அவள் அவ்வப்போது தந்தையின் ஏக்கத்தில் இரவெல்லாம் வேறு பிதற்றிக் கொண்டிருப்பாள்...
தனசேகர் இறந்தபின்… அதிலும் தொழில் நஷ்டம் என்ற போதெல்லாம்… லட்சுமிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை தான்... என்ன செய்யப் போகிறோம் இனி இந்த உலகத்தில் என்றெல்லாம் மனம் புழுங்கினார்தான்... மனக் குழப்பத்தில் உழன்றார்தான்… ஆனால் அவர் பெற்ற மக்கள்களுக்காக வாழ்ந்தாக வேண்டுமே... அதிலும் 2 பெண் குழந்தைகள்.... கணவன் இத்தனை நாள் இருந்தார்… இனி அவர் இல்லை… மகன் என்று ஒருவன் இருக்கிறான்… இல்லையில்லை இருந்தான்… அவனும் உபயோகமில்லை…
மகள்களின் வாழ்க்கைக்காக தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற நிதர்சனம் அவருக்கு புரிய... தன்னை தானே தேற்றிக் கொள்ள ஆரம்பித்து இருந்தார்... அதன் பின் கணவன் தொழிலில் நட்டம்… பணக்கஷ்டம் இதெல்லாம் அவருக்குப் பெரிதாகவே தெரியவில்லை… கணவன் இல்லை என்பது மட்டுமே மிகப்பெரிய துக்கம்… அவர் இல்லாமலேயே சமாளிக்கலாம் என்று முடிவு எடுத்த போது… கேவலம் பணம் தானே… பார்த்துக் கொள்ளலாம் என்று லட்சுமியும் மெல்ல மெல்ல தன்னை தனக்குள்ளாக தேற்றிக் கொள்ள ஆரம்பித்திருந்தார்…
இந்த இடைப்பட்ட நாட்களில் ரிஷியோடு பேசக் கூட இல்லை… அவனும் லட்சுமியின் அருகில் வரவில்லை… அதை விட பெரும்பாலும் கண்பார்வையிலேயே படவில்லை என்பதே உண்மை…
ரிதன்யா ஓரளவு விபரம் உள்ள பெண் என்பதால்.... அவளும் ஒருவாறு தன்னை தன் தந்தையின் இறப்பு தந்த துயர வலியில் இருந்து மீட்டெடுக்க ஆரம்பித்து இருந்தாள்... அனைவரும் மெல்ல மெல்ல தனசேகரின் இறப்பிலிருந்து வெளியே வர …
இதோ இன்று முப்பதாம் நாள் காரியம்… மதிய உணவு முடிந்து…. உறவினர்… மிக நெருங்கியவர்கள் என வீடு முழுக்க கூட்டம் இருந்து… அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர்…
ரித்விகாவும் ரிதன்யாவும் தன் அன்னையோடு உள் அறையில் இருக்க அப்போது.... மகிளா.... ரிஷியின் அலைபேசியை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள்...
இந்த ஒரு மாதமாக மகிளாவும் இங்குதான் இருக்கிறாள்.... அவள் தந்தை திட்டி வீட்டிற்கு வரச் சொல்லியும் தன் வீட்டிற்குச் செல்ல வில்லை…
ஒருபுறம் தன் அத்தை மற்றும் தன் தோழி.... மறுபுறம் தான் மிகவும் நேசிக்கும் தன் ரிஷி மாமா... அவர்களுக்கு ஆறுதல் கூறும் வயதும் இல்லை… ஆறுதல் கூறவும் அவளுக்கு தெரியவில்லை…. அவளால் முடிந்தது…. அவர்களின் அருகில் இருப்பது….. அந்த ஒரு ஆறுதலைத்தான் அவளால் கொடுக்க முடிந்தது… கொடுக்கவும் செய்தாள்… ஆனால் அவளால் ரிஷியின் அருகில் நெருங்கக் கூட முடியவில்லை…. காரணம்… பெரும்பாலும் ரிஷி வெளியில் தான் திரிந்தான்… அவன் வீட்டில் இருக்கும் நேரமே சில மணி நேரங்கள் தான்… அந்த நேரத்திலும்… அவன் யாரிடமும் பேச வில்லை… பேச விரும்பவும் இல்லை… அவனை யாருமே நெருங்கவே முடியவில்லை… நெருங்கவும் விட வில்லை…
மகிளாவும் எப்படியெல்லாமோ முயற்சித்தாலும் ரிஷியை நெருங்க முடியாமல் இருக்க… தவித்துக் கொண்டிருந்தவளுக்கு அவனது அலைபேசியில் அழைப்பு வர… அதைக் காரணம் வைத்து இன்றாவது ரிஷியை பார்க்கலாம்.. அவனோடு பேசலாம் என்றால் அது கூட முடியவில்லை… காரணம் அவன் கண்ணில் படவே இல்லை… வேறு வழியின்றி ரிதன்யாவிடம் வந்தாள்…..
“ரிது... ரிஷி மாமா போனை வச்சுட்டு எங்க போனாங்க... அடிச்சுட்டே இருக்கு” என்றவளின் கண்கள் ரிஷியை அந்த அறையிலும் தேடத் தவறவில்லை…
“தெரியல மகி…. மாடியில இருப்பாங்க அண்ணா“ என்ற போதே மீண்டும் ரிஷியின் அலைபேசி ஒலிக்க… மகியின் கையில் இருந்த போனை… ரிதன்யா தன் கையில் வாங்கி… யாரென்று பார்க்க... அது பதிவு செய்யப்படாத எண்ணாக இருக்க.... யோசனையுடன் அட்டெண்ட் செய்தவளின் செவிகளில் விழுந்ததோ விக்ரமின் குரல்
“ஹலோ” என்று எதிர்முனையில் ஒலித்த விக்ரமின் குரலில்…. அவனுக்கு பதில் கூட கூற முடியாமல் தொண்டை அடைத்தது ரிதன்யாவிற்கு… அவளையும் மீறி கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் கன்னங்களை அடைய.. அறையை விட்டு வெளியே தனியாக வந்தவள்… கண்ணீரைத் துடைத்தபடியே ”ஹலோ” என்றாள் விம்மியபடியே..
ஏனென்று தெரியாமலேயே விக்ரமிடம்… அவளின் துக்கம் வெளிப்பட்டு விட… குரலும் கமறியது
ரிஷி தன் மீது கோபமாக இருக்கிறான் என்பது விக்கிக்கு தெரியும்…. நாட்கள் கடந்தால் அவனது கோபமும் தணியும் என்று இத்தனை நாள் பேசாமல் இருந்தான்… இன்று பல முறை தொடர்பு கொண்டும் அவன் எடுக்காமல் போக… விக்கியின் தன்மானம் போனை எடுக்காத ரிஷியின் மேல் கோபம் கொள்ளத்தான் வைத்தது… இருந்தும் தன் மேல் தவறு இருக்கிறதே என்ற ஒரே காரணத்தால் அவன் மீண்டும் மீண்டும் முயற்சித்தான்… இன்று அவனோடு பேசி விட வேண்டும்… சண்டையோ சமாதானமோ… இன்றோடு முடித்துக் கொள்ள வேண்டும்… விக்கி இந்த முடிவு எடுத்து ரிஷியின் குரலுக்காக காத்திருக்க… ரிஷியின் குரலுக்கு பதிலாக கேட்டதோ ரிதன்யாவின் குரல் தான்…
முதலில் ரிதன்யா குரல் கேட்ட நொடியில்… விக்கி மிகவும் கடுப்பாகத்தான் பேச நினைத்தான்… தன் நண்பன் தன் அழைப்பை எடுக்க விரும்பாமல் தங்கையைப் பேசச் சொல்லியிருக்கின்றான் என்றால்… ரிஷி தன்னைத் தவிர்க்கத்தான் அப்படி செய்கிறானோ என்ற எண்ணத்தில் வந்த கடுப்பு அது… ஆனால் அடுத்த நொடியே மனம் வேறு ஒரு ஆராய்சிக்குத் தாவியது
ஆம் விக்கி கேட்ட ரிதன்யாவின் குரல் மாறுபாடுதான்…
எப்போதும் இவனுடம் அவள் பேசும் போதெல்லாம் ரிஷியைப் பற்றிய விசாரிப்புகள் என்பதாலோ என்னவோ… இதுவரை அவன் கேட்ட ரிதன்யாவின் குரல் பதிவுகள் அனைத்திலுமே சில நேரங்களில் அதட்டல் இருக்கும்… சில நேரங்களில் அக்கறை இருக்கும்…. பெரும்பான்மையான நேரங்களில் ரிஷியைப் பற்றிய சந்தேகமான விசாரிப்பாக இருக்கும்…
ஆனால் இன்று விக்கி கேட்ட ரிதன்யாவின் குரலில்… அழுகையோடு வந்த ’ஹலோவில்’ அவன் மனம் ஏனோ பதறியது… ரிதன்யாவின் பதற்றம் அந்தக் குரலில் வலி அவனையும் தொற்ற… மற்றதெல்லாம் மறந்தவன்…. அதே பதற்றத்தோடு…
“என்னாச்சு ரிதா…. ஏன் அழுகிறாய்…. ரிஷி எங்க..” என்று அடுக்கடுகாய் அடுத்தடுத்து கேள்விக் கணைகளை வீச…நடந்த அனைத்தையும் அழுகையினூடே எப்படியோ சொல்லி முடித்திருந்தாள்…. ரிதன்யா…
தனசேகரின் மறைவைக் கேட்ட நொடி விக்கிக்கும் அதிர்ச்சிதான்… என்ன சொல்லி ரிதன்யாவை தேற்றுவது என்றே தெரியவில்லை…. ஆனாலும் எப்படியோ அவளுக்கு ஆறுதல் கூறியவன்… ரிஷியின் தாய் இலட்சுமியிடமும் பேசினான்… அதன் பின் விக்கி ரிஷியிடம் பேச வேண்டுமென்று சொல்ல… ரிஷியைத் தேடி மாடிக்குச் சென்றாள் ரிதன்யா….
”அண்ணா” என்றாள் தனியே நின்று கொண்டிருந்த அண்ணனை நோக்கி கொஞ்சம் தயக்கமாகவே
திரும்பிப் பார்த்த ரிஷியின் முகத்தில்... தனிமை கலைக்கப்பட்ட எரிச்சல் அப்பட்டமாகவே தெரிய… ரிதன்யா… மொபைலைக் காட்ட... சலிப்போடு ரிஷியும் வாங்க…
போனைக் அவனிடம் கொடுத்தபடியே… விக்கியின் பெயரை மொழிந்தாள் ரிதன்யா…
யாரோ என்று சலிப்பாக வாங்கிய ரிஷி... ’விக்கி’ என்ற தங்கை சொன்ன வார்த்தைகளில் வேகமாய் போனை வாங்கி காதில் வைத்தான்….
தன் நண்பனிடம் தன் மனக் குமுறல்களை அனைத்தையும் கொட்ட ரிஷியின் மனம் துடித்ததுதான்…. ஆனால் அடுத்த நொடியே… ஒரு வார்த்தை கூட தன்னிடம் சொல்லாமல் விக்கி போன விதம் அவன் கண் முன் வந்து போக… தன்னைத் தானே கட்டுப்படுத்தியவன்.. நிதானிக்கவும் செய்தான்…
ரிதன்யாவுக்கும் தன் அண்ணன் அவன் நண்பனுடன் என்ன பேசப் போகிறான்… என்ற ஆவல் இருக்க… போனைக் கொடுத்துவிட்டு… அவன் அருகிலேயே நின்றிருந்தாள்…
ஆனால் ரிஷியோ…. அவளைப் கீழே இறங்கிப் போகச் சொல்ல… அவளோ… தான் அங்கேயே இருப்பதாகச் சொல்ல… கடுகடுத்த முகத்தவனாய்..
“கீழ போன்னு சொன்னால் கேட்க மாட்டியா… போ…” போனைக் கையில் வைத்தபடியே…. கோபக் குரலில் ரிதன்யாவிடம் ரிஷி இப்போது எரிந்து விழ …
அவ்வளவுதான்… தன் அண்ணனின் அந்தக் கடுங்குரலிலேயே…. ரிதன்யா முகம் சுருங்கிவிட…அதற்கு மேல் பேசாமல் வருத்தத்தோடு கீழே இறங்கிப் போய்விட. ரிதன்யா போகும்வரை காத்திருந்து விட்டு போனை மீண்டும் காதில் வைத்தான் ரிஷி…
விக்கிக்கும் ரிஷியிடம் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை… அதனால் ரிதன்யாவை ரிஷி திட்டியதால் அதிலிருந்தே ஆரம்பித்தான்…
“ரிஷி… ரிதுவை ஏன் திட்டுகிறாய்” என்றபோதே…. ரிஷி விக்கியின் அந்த வார்த்தைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல்…. நக்கலாக…
“என்னடா உன் வேலை எல்லாம் முடிஞ்சிருச்சா என்ன…. என் ஞாபகம்லாம் வந்து போன் பண்ணியிருக்க… இல்லை வேற யாருக்காவது பண்ணப் போய் எனக்குத் தப்பா பண்ணிட்டியா”
எதிர்முனையில் இருப்பவருக்கு தான் பேசும் வார்த்தைகள் என்ன வலி கொடுக்கும் என்று தெரியும் தான்… இருந்தும் ரிஷி பேசினான்.. ரிஷியின் எகத்தாளமான வார்த்தைகளைக் கேட்ட விக்கிக்கு சட்டென்று கோபம் வந்தாலும்… கோபத்தைத் திருப்பிக் காட்டாமல்… திருப்பிக் காட்டவும் முடியாமல்
“ரிஷி…. என்னடா இப்படி பேசுற சரி அதை விடுடா…. நீ கோபமா இருப்பேன்னுதான் இத்தனை நாள் போன் பண்ணவில்லை… இன்னைக்கு எதார்த்தமாக பேச அழைத்தால்…. அங்கிள்” என்றவன் அதற்கு மேல் பேச முடியாமல் நிறுத்த…
“அப்பா இறந்துட்டாரு… ஏண்டா நிறுத்திட்ட…. ஆறுதல் சொல்லப் போறியா இல்லை அட்வைஸ் பண்ணப் போறியா.… சொல்ல வந்ததை சொல்லிட்டு சீக்கிரம் வை… இந்த காது ஒரு மாதமா பழக்கப்பட்டு போயிருச்சு… வருகிறவன் போறவன்லாம் சொல்ற அட்வைஸ்லாம் கேட்கிற எனக்கு உயிர் நண்பன்… அதுவும் சொல்லாமல் போன உயிர் நண்பன்… சொல்றதைக் கேட்காமல் போனால் உலகம் தப்பா பேசிறாது ” என்றவனின் குரலில் இப்போது நடுக்கம் வர… விக்கியும் அவனின் கோபத்தையும் துக்கத்தையும் புரிந்தவனாய்…
“ரிஷி… விரக்தியாகிறாதடா….” என்று ஆறுதலாகச் சொன்ன போதே
“ஹா ஹா….. இல்லடா மச்சி…. இப்போதான் நான் தெளிவா இருக்கேன்… “ என்று பரிகாசமாய் சிரித்தவன்.. தொடர்ந்தான்…
“என்னடா… நம்ம நண்பன் அப்பா இறந்த துக்கத்தில் தண்ணி அடிச்சிட்டு பேசறான்னு நினைக்கிறியா…. நீ என்ன வேணும்னாலும் நெனச்சுக்கோ…. “ என்று ரிஷி இன்னும் இன்னும் வேகத்தோடு பேச….
விக்கியோ… வேதனையோடு…
“டேய்… ரொம்ப ஃபீல் பண்றியாடா… ப்ச்ச் இந்த டைம்ல உன் பக்கத்தில் நான் இல்லைனு நினைக்கும் போது…” என்று திணறியபடி சொல்ல…
“ஏன்… ஃபீல் பண்றேனு சொன்னால் ஆஸ்திரேலியாவில் இருந்து பறந்து வந்துற போகிறாயா” சட்டென்று முகத்தில் அடித்தாற் போலக் கேட்டான் ரிஷி…
விக்கிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை…. அவனுக்கும் கோபம் வர… இப்போதைக்கு ரிஷியிடம் அதைக் காட்ட முடியாது என்பதையும் உணர்ந்து…. இன்னொரு நாள் பேசுவோம் என்று நினைத்து… அதைச் சொல்லி போனை வைக்கப் போக… ரிஷியோ
“இன்னொரு நாள் என்ன… இனி என்னைக்கும் போன் பண்ணாதே… எனக்கு நல்லது பண்ணனும்னு நினைத்தால்… அதைச் செய்” என்று கடுப்பாகச் சொன்னவன்…. அடுத்த நொடியே விக்கியின் போனை கட் செய்திருந்தான்….
விக்கிக்கு அவன் கோபமாக பேசியது கூட கோபத்தை வரவழைக்கவில்லை… போனை முகத்தில் அடித்தாற்ப் போல் கட் செய்ததைத்தான் அவன் அவமானமாக உணர்ந்தான்…
இங்கு ரிஷிக்கோ…. தன் மீதே கடுங்கோபமாக இருந்தது…. இது அவன் குணமே கிடையாதுதான்... ஏனோ விக்கியோடு பேச முடியவில்லை… அவனின் இயலாமையை எல்லாம் விக்கியின் மேல் கோபமாக கொட்டி விடுவோமோ என்று பயந்துதான் சட்டென்று கட் செய்துவிட்டான் ரிஷி…
அடுத்தவர் மனம் நோகும்படி ஒருபோதும் ரிஷி பேசவே மாட்டான்…. அப்படியே கோபம் வந்தாலும் அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுவான்… இல்லை அந்த சூழ்நிலையை மாற்றி வேறொரு கோணத்திற்கு திசை திருப்பி விட்டு விடுவான்… அதிலும் சமீப காலமாக வந்திருந்த அவனின் குடிப்பழக்கம் அவனது கோபத்திற்கெல்லாம் வடிகாலாக இருக்கும்… உதாரணமாக… மகிளாவின் தந்தை இவனை அவ்வப்போது குற்றம் சொல்லும் போது எல்லாம் மட்டம் தட்டும் போதெல்லாம்... அவரின் முன்… தன் கோபத்தைக் காண்பிக்க மாட்டான்… அதற்கு பதில் , அவரைத் திட்டுவதற்கென்றே மதுவின் துணையை நாடுவான்…. இல்லை தன் நண்பர்களிடம் அவரைப் பற்றி நான்கு வார்த்தைகள் நல்ல விதமாக??? சொல்லித் தன் மனதைத் தேற்றிக் கொள்வான்…. ஆனால் ஒருநாளும் தன் கோப முகத்தைக் காட்ட மாட்டான்… காட்டவும் பிடிக்காது
அப்படிப்பட்டவன்… இன்று தன் நண்பனிடமே இப்படி பேசிவிட்டான்… மாடியின் சுவரில் தன் கைகளை தானாகவே குத்திக் கொண்டவன்….. தன் கோபத்தை எல்லாம் தன் அலைபேசியில் காண்பிக்க நினைக்க… அவன் வாழ்க்கைதான் சுக்கி நூறாக உடைந்து போயிருக்கிறது… பாவம் அந்த அலைபேசி என்ன செய்யும்… ரிஷியின் மனம் உயிரற்ற அலைபேசிக்கு பரிதாபம் பார்க்க… தப்பித்தது அலைபேசி…
பின் மீண்டும் விட்ட பணியைத் தொடர ஆரம்பித்திருந்தான் ரிஷி… அதாவது… வெட்ட வெளியை மாடியில் இருந்து வெறிக்க ஆரம்பித்திருக்க… அப்போது அடுத்தடுத்து வாகனங்கள் வாசல் வழியாக உள்ளே வர… வருவது யாரென உணர்ந்தவனுக்கு… உதடுகளில் அர்த்தப் புன்னகை வர… கைப்பிடிச் சுவரில்… இரு கைகளையும் அழுத்தமாக ஊன்றியபடி…. ஏளனமாய் வெறித்தான் காரில் இருந்து இறங்கியவர்களைப் பார்த்து… அதே நேரம் அவர்களைப் பார்த்து விட்டு… கீழே இறங்கியும் போகவில்லை…
அவன் இப்படி நின்று கொண்டிருக்க… அடுத்த சில நிமிடங்களில்…. யாரோ வரும் காலடி… அதிலும் கொலுசொலி கேட்க…. எங்கிருந்தாலும் அவன் கவனத்தைக் கவரும் மகிளாவின் கொலுசொலி... இன்றும் அவன் கவனத்தைக் கவர்ந்ததுதான்… ஆனாலும்… அவள் தன் அருகில் நெருங்கும் முன்னேயே.... திரும்பியவன்
“என்ன மகி” கேட்டான் எங்கோ கவனம் வைத்தபடியே… குரலில் சுரத்தே இல்லாமல் …
மாறாக மகிளாவோ மேல் தன் முழுக் கவனத்தையும் ரிஷியின் மேல் வைத்தபடி அவனை எண்ண ஓட்டங்களை எடை போட்டபடியே…
“மாமா… பெரிய மாமாவோட ஃப்ரெண்ட்ஸ் வந்திருக்காங்க... அதுதான் உங்ககிட்ட சொல்ல வந்தேன்….. கீழ வாங்க” என்றாள் சற்று தள்ளி நின்றே
“ஹ்ம்ம்ம்ம்ம்ம்… சரி “ என்றவன் அப்போதும் அவள் புறம் திரும்பவில்லை… இப்போது மகிளா முன்னைப் போலத் தள்ளி நிற்காமல்… அவன் அருகில் வந்தவளாக
“வந்துட்டாங்க மாமா… நீ வா.. போகலாம்” என்றபடி உரிமையோடு அவன் கையை பிடித்து இழுத்தபடி கீழே இறங்கப் போக...… “
“ப்ச்ச்... கைய விடு மகி.... யாராவது பார்த்து ஏதாவது சொல்லிறப் போறாங்க...” என்று கைகளை விடுவித்தபடியே...
“நீ போ... அவங்களை அப்பாவோட ஆஃபிஸ் ரூம்ல வெயிட் பண்ணச் சொல்லு…. நான் வருகிறேன்...” என்றபடி மீண்டும் தான் பார்த்து நின்ற திசையை நோக்கி நிற்கப் போக... இப்போது மகிளா அவன் முன் கோப முகத்துடன் போய் நின்றாள்...
“ஏன் மாமா இப்படி இருக்கிற... மாமா இறந்தது எல்லோருக்கும் வருத்தம் தான்... பெரிய இழப்புதான்… அதற்காக இப்படியே இருந்தால் எல்லாம் சரி ஆகிருமா... நீதான் மாமா எல்லோருக்கும் ஆறுதல் சொல்ல வேண்டும்.... நீயே இப்படி இருந்தால் எப்படி ... யோசி மாமா“ என்று ஆரம்பித்தவள்… சிறிது கவலையுடன் தொடர்ந்தாள்
“எனக்குத் தெரியும்... பெரிய மாமா பிஸ்னஸ் நஷ்டமாகிருச்சு... இனி என்ன பண்ண போறோம்னு தானே கவலைப் படுற..” என்றவள் தீர்வு கொண்டு வந்த பாவனையில் உற்சாகமாக பேச ஆரம்பித்தாள் இப்போது….
”நான் ஒரு சூப்பர் ஐடியா கொடுக்கிறேன்... நான் படிச்சு என்ன கிழிக்கப் போகிறேன்... எங்க அப்பா சம்பாதித்தெல்லாம் அவர் பொண்ணு எனக்குத் தானே.... நீ என்னை உடனே கல்யாணம் பண்ணிக்கோ.... சோ எல்லா ப்ராப்ளமும் சால்வ்ட்.... “ என்று சொல்லி கள்ளமில்லாமல் சிரித்தவளைப் பார்த்து விரக்தியாக இதழ்களை விரித்தவன்... அவளை இமைக்காமல் பார்த்தபடியே… தன் கண்களால் அவளின் சிரித்த முகத்தை நிரப்பியபடியே
“நீ எப்போதுமே இதே மாதிரி சிரிச்சுட்டே இருக்கணும் மகிளா” என்றான் சம்பந்தமே இல்லாமல்...
“சிரிச்சுட்டா போச்சு... நீ முதல்ல சிரி… இந்த ரிஷி மாமா என்னோட ரிஷி மாமாவே இல்லை… எல்லாம் சரி ஆகிடும்… நீயும் சரி ஆகிருவ… என் பழைய ரிஷி மாமா சீக்கிரம் வந்துருவார்…. சோ அதுவரை இந்த ரிஷி மாமாவை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் இப்போ வா போகலாம் “ என்றவளுக்குத் தெரியவில்லை… இனி பழைய ரிஷி கிடைக்கவே போவதில்லை என்பது….
மகிளா வார்த்தைகளை கேட்டபடியே பார்த்துக் கொண்டிருந்தவன்… அவளையே வெறித்தபடி நின்றிருந்தான்… பெற்ற தந்தையின் மரணம் அவனறியாமல் நடந்திருக்க… அவன் இதுநாள் வரை மனதில் வளர்த்து வைத்திருந்த காதலின் மரணம் அவன் அறிந்தே நடந்திருந்தது…அது தந்த வலி தாங்க முடியவில்லை தான்... இருந்தும் மனதைக் கல்லாக்கிக் கொண்டு பேச ஆரம்பித்தான்…
அவனுக்குத் தெரியும்… இது மகிளாவுக்கு அவன் செய்யும் துரோகம் என்று… எந்த ஜென்மத்திலும் தீர்க்க முடியாத பாவம் என்று… ஒன்று மட்டும் நிச்சயம் இந்த ஜென்மத்தில் மகிளா அவன் வாழ்க்கையில் இல்லை… நினைவே பெரும் வேதனையைக் கொடுக்கத்தான் செய்தது… அது கொடுத்த வலி வேதனையை எல்லாம் தனக்குள் மறைத்தபடி… மகிளாவைப் பார்த்து அமைதியான குரலில்
“நீ முதலில் போ.... நான் பின்னால் வருகிறேன்.... இரண்டு பேரும் தனித்தனியா போவதுதான் உனக்கு நல்லது” என்றான் இரட்டை அர்த்தத்துடன்…
ஆனால் அதனை மகிளாவோ வேறு எந்த அர்த்தத்திலும் எடுக்காமல்... அவனை விட்டு கீழே இறங்கிப் போக.... அவள் போவதையே பார்த்தபடி நின்றவன் அடுத்த நொடியே தன்னை மீட்டெடுத்தவன்…. வந்திருக்கும் தூரோகிகளை எப்படி சமாளிப்பது என்று தனக்குள் யோசிக்க ஆரம்பித்தவன் .அடுத்த 10 நிமிடங்களில் கீழ் இறங்கிப் போனான்....ன் மணி-15
Comments