top of page
Writer's picturePraveena Vijay

கண்மணி... என் கண்ணின் மணி -34

Updated: Mar 30, 2021

அத்தியாயம் 34:



இந்த எபிக்கான பாடல்... முடிஞ்சா கேட்டுப் பாருங்க ஃப்ரெண்ட்ஸ்... ஐ தின்க் இட்ஸ் ஸ்லோ பாய்சன்...


/* எல்லை மீறாமலே

சிறு நெருக்கம் நெருக்கம்

கைகள் தீண்டாமலே

உன் இதயம் திறக்கும்!

இசையாய் விரிந்தாய்

நிறமாய் இறைந்தாய்

மணமாய் நிறைந்தாய்

சுவையாய் கரைந்தாய்


நான் மாட்டிக்கொண்டேன்

உனில் மாட்டிக்கொண்டேன்

தமிழுக்குள் போதை போல

உன்னில் மாட்டிக்கொண்டேன்


வேண்டி மாட்டிக்கொண்டேன்

உனில் மாட்டிக்கொண்டேன்

கவிதைக்குள் குழப்பம் போல

உன்னில் மாட்டிக்கொண்டேன்


*/


மீண்டும் மீண்டும் கையில் வைத்திருந்த காகிதங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி…. நட்ராஜ் உறங்கச் சென்று அரை மணி நேரத்துக்கும் மேலாகி இருக்க… ரிஷி இன்னும் அதே இடத்தில் தான் இருந்தான்… கடைசியாக எல்லாவற்றையும் முழுமையாக பார்த்து முடித்து வைத்தவனுக்கு… அவனையுமறியாமல் நிம்மதிப் பெருமூச்சு வர… கூடவே பசி வேறு வயிற்றைக் கிள்ள… அதுவரை காரியமே கண்ணாக இருந்தவன் இப்போது நிமிர்ந்தான்… தன் வீட்டை நோக்கிய பார்வையை வீசியபடியே…

அவன் வீட்டுக்கதவு ஒருக்களித்துச் சாத்தப்பட்டிருக்க… வீட்டின் வரவேற்பறையிலும் இன்னும் விளக்கு எரிந்து கொண்டுதான் இருந்தது… ஆக கண்மணியும் இன்னும் தூங்க வில்லை என்று நினைத்துக் கொண்டான் ரிஷி… ஒருவேளை தனக்காகத்தான் தூங்காமல் காத்துக் கொண்டிருப்பாளோ… என யோசித்த போதே… தனக்காக இல்லாவிட்டாலும் கதை எழுதுகிறேன் பேர்வழி என்று அதற்காகவாது தூங்காமல் இருப்பாள்… என்று நினைத்தவனுக்கு… தான் அவளிடம் நடந்த முறையில் கோபமாக இருப்பாள் என்றெல்லாம் நினைக்கத் தோன்றவில்லை…

இந்த இரண்டு மாதங்களில்… கண்மணி என்பவள் ரிஷியின் மனைவியாக ஒருநாளும் அவனிடம் அதிகப்படி உரிமை எடுத்துக் கொண்டதில்லை… எல்லாவற்றையும் புன்னகை முகமாக… கடந்து செல்லும் கண்மணியாகத்தான் அவளைப் பார்த்திருந்தான்…இன்றும் அதே போலத்தான்…. பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள் என்றே நினைத்துக் கொண்டான்.. அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் … அவள் தன்னிடம் கேட்கா விட்டாலும்… தான் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டான்…

கண்மணியைப் பற்றிய ரிஷியின் கணிப்பு இவ்வாறாக இருந்தாலும்… ரிஷிதான் மற்ற நாட்களைப் போல இல்லை… காலையில் இருந்தே கண்மணிக்கும் அவனுக்கும் இடையில் நடந்த நிகழ்வுகளால் இன்று கண்மணியின் நினைவு அவனுக்குள் சற்று அதிகமாகவே இருக்க… அவளை முதன் முதலாக அவளை பார்த்த நொடிகளில் வந்து விழுந்தது… இதோ இதே இடத்தில் அமர்ந்திருந்த போதுதான் அவளை முதன் முதலாக பார்த்தது… பள்ளிச் சீருடையில் கண்மணியைப் பார்த்தது நியாபகம் வந்து போக… அவனது உதடுகள் மென்னகையில் விரிய…

“சொர்ணாக்கா…” ரிஷியின் இதழ்கள் முணுமுணுத்தன செல்லமாக… அவனையுமறியாமல்…

”முதல்ல இந்தப் பேர மாத்தனும்டா… அந்த லேடி டானுக்கு ” மனதுக்குள் நினைத்தபடியே… தன் வீட்டுக்குள் நுழைய… அங்கு கண்ட காட்சியோ???…

யார் அவனுக்காக உறங்காமல் காத்துக் கொண்டிருப்பாள் என்று நினைத்தபடி உள்ளே வந்தானோ… அவளோ அவளை மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள்… அதுவும் அனைத்தையும் அப்படி அப்படியே போட்டபடியே… ஒரு புறம் பாடப்புத்தகம் இன்னொரு புறம் அவளது முதுகலைப் படிப்புக்கான புத்தகங்கள்... இன்னொரு பக்கமோ அவள் மடிக்கணினி… என அவளைச் சுற்றி பரப்பப் பட்டிருக்க… கண்மணி எதையுமே எடுத்து வைக்காமல் அப்படியே தூங்கியிருந்தாள் …


“தான் வெளியே அமர்ந்திருந்ததால் தான்… கதவைக் கூட மூடாமல்… விளக்கைக் கூட அணைக்காமல் அவளையும் அறியாமல் உறங்கி விட்டாளோ” இப்படித்தான் ரிஷிக்குத் தோன்றியது…


இப்படி கண்மணி தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த போது…. விக்கி நியாபகம் தான் வந்தது ரிஷிக்கு… விக்கியும் இப்படித்தான் பல நேரங்களில் படித்துக் கொண்டிருக்கும் மேஜையின் மீதே விழுந்து தூங்கி இருப்பான்… பார்ட்டி அது இது என்று இவன் தாமதமாக வரும் சில சமயங்களில் ஓரளவு சுயநினைவில் இருக்கும் போது… ரிஷி அவனது பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து விட்டு… அவனை எழுப்பி தூங்கப் போகச் சொன்னதெல்லாம் இப்போது நியாபகம் வர… மனம் அன்றைய நாட்களுக்கு பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்து இருந்தது…


அது கூட சில நிமிடங்கள் தான்…. ஏமாற்ற பெருமூச்சு விட்டவனாக



“தான்தான் அவனைப் பற்றி எல்லாம் நினைக்கிறோம்.. அவனெல்லாம் தன்னை எப்போதோ மறந்திருப்பான்… அதே போல்… அவனது அறிவுக்கும்… திறமைக்கும் ஐந்து வருடத்திற்கு முன் தன் நண்பனாக இருந்த விக்கி இப்போது எங்கோ போயிருப்பான்… விளையாட்டுத்தனங்கள் நிரம்பிய அந்த வயதிலேயே தன் வாழ்க்கை குறித்த இலட்சியங்கள் கொண்டவன்.. கண்டிப்பாக பெரிய ஆளாகத்தான் இருப்பான் என்று நினைக்கும் போதே… தான் எங்கிருக்கிறோம் என்று தன்னை நினைத்த போதே மீண்டும் பெரு மூச்சு மட்டு்மே… அதை மீறி ஏதுமில்லை… ரிஷி என்பவனிடம்…

கண்மணியை சுற்றி இருந்த புத்தகத்தை எல்லாம் எடுத்து மூடி… அருகில் இருந்த மேஜையின் மேல் வைத்தவன்… மடிக்கணியை எடுத்துப் பார்க்க… அவள் கதை எழுதிக் கொண்டு இருந்திருப்பாள் போல… அந்தப் பக்கங்கள் பட… முதலில் படிக்கத் தயங்கியவன் பின் வாசிக்க ஆரம்பித்தான்


ஏதேதோ எழுதி இருந்தாள்… என்னென்னவோ எழுதி இருந்தாள்… இப்படித்தான் ரிஷிக்குத் தோன்றியது… ஆக மொத்தம் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை… மூடி வைத்து விட்டான்…

உறங்கிக் கொண்டிருந்த கண்மணியை தொந்தரவு செய்யாமல் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி விட்டு…. தங்கையும்… தாயும் படுத்திருந்த உள் அறையைப் பார்த்தவன்… அவர்கள் உறக்கம் கலைக்காமல் அவர்களையும் பார்த்து விட்டு வந்தவன்… கடைசியாக சமையலறைக்குப் போக… அங்கேயோ… மிகப்பெரிய வரவேற்பு தான் கிடைத்தது… அதாவது… இவனுக்காக எந்த ஒரு உணவுமே இல்லை… வேக வேகமாகச் சுற்றி முற்றி பார்த்து … அங்கிருந்த அத்தனை பாத்திரங்களையும் திறந்து பார்க்க… கண்மணி எடுத்து வைத்திருந்தால் தானே… இருப்பதற்கு…. பசியோடு ஏமாற்றமும் எரிச்சலும் வர.... ஹாலில் உறங்கிக் கொண்டிருந்த கண்மணியை எட்டிப் பார்த்தபடியே

“அடிப்பாவி… ஒரு பேச்சுக்கு சொன்னா… உண்மையிலேயே எதுவும் பண்ணலையா” மனைவியை சந்தோசமாக??? மெச்சிக் கொண்டபடியே

“ஓகே… ரிஷிக்கண்ணா… டீல்ல விட்டா உன் பொண்டாட்டி…. உன் கையே உனக்கு உதவி… களத்துல இறங்குடா ரிஷிக் கண்ணா…” தனக்குள் சொன்னபடியே அணிந்திருந்த சட்டையைக் கழட்டிவிட்டு… முகத்தை அலம்பி வந்தவன்… அங்கிருந்த கொடியில் தொங்கிக் கொண்டிருந்த துணியை எடுத்து முகத்தை துடைத்துவிட்டு பின் அதே துணியை எடுத்து தலையில் முண்டாசு போலக் கட்டிக் கொண்டபடி சமைக்க இறங்கினான்…


மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு வந்து தோசை ஊற்ற ஆயத்தமானவன்… கண்மணியை நொடிக்கொரு தரம் மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்தபடியே தான் இருந்தான்…

அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்று இவனுக்குத் புரிந்ததுதான்… தூங்கட்டும் என்று ஒரு மனம் நினைத்தாலும்… மறு மனமோ…அவளை எழுப்பி பேச வேண்டும் போலவும் ஏங்கியது… கண்மணியை எழுப்ப மனம் நினைத்தாலும்… ஏதோ ஒன்று அவனுக்குள் தடுத்தது என்பதே உண்மை…

பொதுவாக ரிஷிக்கு யார் உறங்கிக் கொண்டிருந்தாலும் அவர்களைத் தூக்கத்தில் இருந்து எழுப்ப மனம் வராது… ஒருத்தி மட்டுமே விதிவிலக்காக இருந்தாள்… அவளும் அவனை விட்டு விலகி விட்டாள்…. விலகி விட்டாள் என்று சொல்வதை விட விலக்கி வைத்துவிட்டான்…

நினைவுகள் லயம் மாறி தறிகெட்டு ஓட ஆரம்பித்த போதே… மிகச் சரியான தருணத்தில் கடிவாளமிட்டுக் கொண்டவனாக… மீண்டும் அடுப்பில் கவனம் வைக்க… அப்போது

“சாரி சாரி ரிஷி… என்னை எழுப்ப வேண்டியதுதானே”

திடீரென தன் அருகே ஒலித்த குரலில்… ரிஷியின் மனதில் அப்படி ஒரு சந்தோசம் ரீங்காரம்… அது ஏன் என்று அவனுக்கே புரியவில்லை… கண்மணியின் குரல் கேட்ட அதே வேகத்திலேயே அவளைத் திரும்பிப் பார்த்தான் ரிஷி... உண்மையிலேயே எழுந்து வந்து விட்டாளா… தன் அருகே வந்து நின்றவளை… அதிசயம் போல் நம்ப முடியாமல் ஆவென்று அவளையே பார்த்துக் கொண்டிருக்க

கண்மணி சிரித்தபடியே…

”என்னாச்சு… தள்ளிக்கோங்க… நான் பண்றேன்” என்றபோதே… ரிஷியும் தன்னைச் சமாளித்தபடியே

“இல்லம்மா பரவாயில்லை… நீ போய்த் தூங்கு… நான் பார்த்துக்கறேன்” என்று ரிஷி ஒரு வாய் வார்த்தைக்காகச் சொல்ல… அவன் சொல்லி முடிக்கவில்லை கண்மணியும் சட்டென்று திரும்பி ஹாலுக்குள் போக…

“ஏய் … ஏய்… எங்க போற… சும்மா சொன்னேன்… நானே தோசை ஊத்திக்கிறேன்… ஆனால் சாப்ட்ற வரைக்கும் கம்பெனி கொடு…” என்று ரிஷி அவனையும் மீறி… சொல்ல… அதுவும் பதட்டத்தோடு வேக வேகமாகச் சொன்னான்… எங்கே கண்மணி போய்விடுவாளோ என்று நினைத்தவனாக

“சட்னி எடுக்க போறேம்பா…” என்று சொன்னபடியே… அவனருகே வந்தவள்…

“ஏன் இவ்ளோ பதட்டம்… நான் உங்கள விட்டு எங்கயும் போக மாட்டேன்… ஒகேவா… கொஞ்சம் பதட்டத்தைக் குறைங்க பாஸ்…” அந்த நிசப்த நடு நிசியில் மெல்லிய குரலில் சொல்லி… வேண்டுமென்றே அவனை கண்மணி ஓட்ட…

அழகாக முறைத்தான் … அனுபவித்து முறைத்தான்… ரசித்து முறைத்தான்… உரிமையாக முறைத்தான்… சந்தோஷமாக முறைத்தான்… தன்னவளை … தன்னவளின் வார்த்தைகளை…

“நானும் சாப்டல… நீங்க வந்த பின்னால சாப்பிடலாம்னு… இருந்தேன்... ” சொல்லியபடியே… குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த சட்னியோடு திரும்பியவள்… அதை அடுப்பு மேடையில் வைத்து விட்டு… அவனிடம் கையை நீட்ட…. ரிஷியும் பிகு பண்ணாமல்… தோசைக்கரண்டியை அவளிடம் கொடுக்கப் போக…

“இது இல்ல … அது… “ அவன் தலையைச் சுட்டிக் காட்ட… அப்போதுதான் அவனுக்கே புரிந்தது… தான் தலையில் கட்டி இருக்கும் துணி கண்மணியின் துப்பட்டா என்று… இருந்தும்

”அது... அது பாட்டுக்கு இருந்துட்டு போகுது… நீ தோசைய ஊத்து….” என்றவனை கண்மணி இப்போது உண்மையாகவே முறைக்க…

“நீ இப்படி முறைக்கும் போதுதான்… வேற மாதிரி நினைக்க… பா… “ என்று சொல்ல ஆரம்பித்தவன்… அவளது முறைப்பின் அளவு அதிகரித்ததைக் கண்டதும்… சட்டென்று நிறுத்தியவனாக

“ஏய்… என்ன முறைக்கிற நீ… கொடுக்கலாம்னு தான் பார்த்தேன்.. இப்போ அதெல்லாம் தர முடியாது… முடிஞ்சத பார்த்துக்க“ என்றவன் குரலில் வம்பிழுக்கும் பாவனை எல்லாம் இல்லை… அதே நேரம் அவன் கண்மணியையும் பார்க்கவில்லை… அடுப்பில் வைத்திருந்த தோசையில் கவனம் வைத்துக் கொண்டிருக்க…

கண்மணி ஓய்ந்த பார்வை பார்த்தவளாக… அங்கிருந்து நகன்றவள்… மீண்டும் வந்தபோது வேறொரு துப்பட்டாவை அணிந்தபடி வர…

“ரொம்ப பண்றா இவ… பண்ணு… பண்ணு… ” தனக்குள் முணங்கியவனாக சொன்னவன்…


கண்மணியின் கேள்விக் குறியான பார்வையில்

“எனக்கும் ஒரு காலம் வரும்” என்றான் அவளை நேராகப் பார்த்தபடியே…

அவனிடமிருந்த தோசைக் கரண்ட்டியை வாங்கியபடியே...

“நீங்களும் ஷால் போடற காலமா… ஆனாலும் என் ஷால் மேல உங்களுக்கு ஏன் எப்போதுமே ஒரு கண்ணு…” என்று வாய்க்குள் புன்னகையை அடக்கியபடி… கண்ணடித்தவள்… சொன்ன பின்தான் தான் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் உணர்ந்தவளாக… நாக்கைக் கடித்தவளாக… ரிஷிக்கு கோபம் வந்துவிட்டதோ என்று ஓரக்கண்ணால் பார்க்க…

அவனோ… சாதரணமாக

“ஷால் மேல கண்ணா… ஷால் போட்ட பொண்ணு மேல கண்ணான்னு தீர்த்து வைக்கிற காலம் வரும்னு சொன்னேன்… இப்போ வேலைய பார்ப்போமா… கோட்டாவைத் தாண்டி போய்ட்டு இருக்கு” என்றவன்… அவனாகவே பேச்சையும் மாற்றினான்…

“உன்கிட்ட சின்ன வயசு... லைக் கைக்குழந்தையா இருக்கிற மாதிரி போட்டோ இருக்கா…” ரிஷி சட்டென்று பேச்சை மாற்றியது போல் கண்மணிக்குத் தோன்றினாலும்… ரிஷியின் முகத்தில் திடிரென்று தோன்றிய தீவிரம் உணர்ந்ததால்…

”ம்ஹூம்ம்… இல்லை… என்கிட்ட சின்ன வயசு போட்டோ ஒண்ணு கூட இல்லையே… எதுக்கு உங்களுக்கு… “ என்றவள் குரல் சிறிது தடுமாற…. ரிஷி உணரும் முன்னதாகவே தன் குரலை மாற்றிக் கொண்டாள் என்றே சொல்லவேண்டும்

“சரி விடு… ” என்றபடி.. சாப்பிட ஆரம்பித்து விட… அதற்கு மேல் அங்கு மௌனமே ஆட்சி செய்தது …

மௌனம் வெளியே என்றாலும்… ரிஷியின் மனதில் மௌனமா… என்றால் அதுதான் இல்லை…. கண்மணியை இமைக்காமல் பார்த்தபடியே தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் என்றே சொல்லவேண்டும்… கண்மணிக்கும் அவன் தன்னையேப் பார்க்கிறான் என்று தெரியாமல் இல்லை… ஏதும் கேட்காமல் தன் கவனம் முழுவதும் தோசை ஊற்றுவதில் தான் என்பது போல இருக்க…

எத்தனை நிமிடங்கள் அப்படியே இருக்க முடியும்…

“என்னாச்சு… ரிஷி கண்ணா உங்க கண்ணுக்கு… கண்மணியை விட்டு வேற எங்கும் போக மாட்டேங்குது” அவனைப் பார்க்காமலேயே… தோசை ஊற்றியபடியே…. புன் சிரிப்புடன் கேட்க…

ரிஷி.. அப்போதும் பேசவில்லை… அதே நேரம் அவன் பார்வையையும் மாற்றவில்லை… கண்மணிதான் அவன் பதிலை எதிர்பார்த்திருப்பாள் போல… ரிஷியிடமிருந்து வார்த்தைகள் வராமலேயே போக… வேறு வழியில்லாமல் அவனைப் பார்க்க…

ரிஷி… இப்போது கேட்டான்…

“உனக்கு என்ன பிடிக்குமா கண்மணி…” அவன் குரலில் இருந்தது என்ன… ஏக்கமா… சந்தேகமா… தவிப்பா… இல்லை எதிர்பார்ப்பா… கண்மணியால் உணர முடியவில்லை…

”பிடிக்காமல்தான் உங்கள் மேரேஜ் பண்ணிக்கிட்டேனா” கண்மணியும் நேரடியாக பிடிக்கும் என்று சொல்லவில்லை… பதிலைச் சொன்ன போது ரிஷியையும் பார்க்கவில்லை… மீண்டும் அடுப்பில் அவளது கவனம் திரும்பி இருக்க

“பிடிக்குமான்னு கேட்டேன்… மேரேஜ் பண்ணிகிட்டதால மட்டும் பிடிக்கும்னு அர்த்தமா என்ன… ஆன்சர் ஆன்சர்” என்ற போதே

“அப்போ மேரேஜ் பண்ணினா மட்டும் பிடிக்கும்னு சொல்ல முடியாதா… ஓ உங்களுக்கு அப்படித்தானா…” கேள்வியை அவனை நோக்கித் திருப்பி ரிஷி போட… இதற்கு என்ன பதில் சொல்வது… ரிஷிதான் இப்போது மாட்டிக் கொண்டவனாக விழிக்க…

அவன் பதில் சொல்ல முடியாமல் திணறுவதைக் கண்ட கண்மணி… அதற்கு மேல் அவனைத் திணற வைக்காமல்…

“ஹ்ம்ம்… சொல்றேன்… நான் என் சின்ன வயசுல ஒரு பையன பார்த்தேன்… அவன் சிரிக்கும் போது… அவன் கண்லயும் அந்த சிரிப்பு தெரியும்… அவன் சிரிக்கும் போது மட்டும்… அவன் கன்னத்துல அழகா குழி விழும்… அதைப் பார்க்கிறதுக்கே அவ்ளோ அழகா இருக்கும்… இந்த அளவுக்கு ஒருத்தவங்களால மனசு விட்டு சிரிக்க முடியுமானு அவனப் பார்த்த போதுதான் தெரிஞ்சுக்கிட்டேன்…” என்றவளை….


அவள் பேசப் பேச ரிஷி தன் கண் இமைக்காமல் பார்த்தபடியே இருந்த ரிஷிக்கும் ஒன்று தோன்றியது… இவனுக்காவது சிரிக்கும் போதுதான் அவனது கன்னத்தில் குழி விழும்… ஆனால் கண்மணிக்கோ… அவளின் ஒவ்வொரு வார்த்தைக்கும்… இல்லையில்லை… அவள் சிறு இதழ் சுழிப்புக்கே… அவளது கன்னத்தில் அந்தக் குழி அவளிடம் அச்சாரத்தைப் பதித்து விடும்… அப்படிப்பட்டவள்… தன் கன்னக் குழியை ஆச்சரியமாகச் சொல்ல… ஆச்சரியப்படுவானா இல்லை நம்பத்தான் செய்வானா ரிஷி…. நம்பவில்லை…

“ஹேய் நீ என்ன ஓட்றதான… கண்ணாடி பார்ப்பியா… உனக்கெல்லாம்.. ம்ம்ன்னு சொன்னாலே… கன்னத்தில குழி விழும்… எனக்கு எப்போதாவதுதான் விழும்… அதை நீ பார்த்த… அது உனக்கு பிடிக்கும்… என்ன வச்சு காமெடியா பண்ற நீ” என்ற போதே

“உண்மைதான் ரிஷி… ஒத்துக்கறேன்… எனக்கு எப்போதுமே கன்னத்துல குழி விழும்… ஆனால் உங்களுக்கு… நீங்க மனசு விட்டு சிரிக்கும் போதுதான் அது விழும்… நான் பார்த்திருக்கேன்… அது அவ்ளோ அழகா இருக்கும் ரிஷி” கண்மணி கிண்டலாகவோ இல்லை சிரித்தபடியோ சொல்லவில்லை… அவள் குரலில் அப்படி ஒரு உணர்வு பிரவாகம் இருக்க.. ரிஷிக்குமே அவள் குரலின் மாற்றம் புரிய… இப்போது கிண்டல் செய்யவில்லை…

“ஆனால்… அந்தப் பையன் கிட்ட இப்போ அது மிஸ்ஸிங்… தேடுறேன் ரிஷி… நீங்க சொல்வீங்கள்ள… உனக்கானவனா நான் என்னைத் தகுதியாக்கிட்டு வந்து என்கிட்ட வர்றேன்னு சொல்வீங்கள்ள… அதெல்லாம் எனக்கு வேண்டாம் ரிஷி… உங்க சிரிப்பு… அன்னைக்கு நான் பார்த்தேனே… அந்த ஊஞ்சல்ல பார்த்த அந்த பையனோட சிரிப்பு… அதை உங்க கண்ல பார்த்தா போதும் ரிஷி… அதை எனக்குத் தருவீங்களா ரிஷி” அவன் கண்களைப் பார்த்து கண்மணி சொன்ன போது… ரிஷியின் கண்கள் அவனையுமறியாமல் கலங்கி விட்டன...

“உன்னிடம் வேறெதுவும் வேண்டாம்… உன் சிரிப்பு… கவலையற்ற சிரிப்பு… அது போதும் எனக்கு என்பவளை என்னவென்று சொல்வான்… யார் இவள்… எனக்காகவே வந்த இவள் தான் என் தேவதையா… எதிர்பார்ப்பில்லாத காதல் கேள்விப்பட்டிருக்கின்றான்… இன்று அனுபவிக்கின்றான்… தன் கண் முன் நிற்கும் இவள்… அந்தக் கடவுள் அனுப்பிய சிறகில்லாத தேவதை என்றே தோன்றியது ரிஷிக்கு… இன்னும் இன்னுமே அவன் அவளுக்காக தன்னை பெரிய உயரத்துக்கு கொண்டு போக வேண்டும் என்றே தோன்றியது ரிஷிக்கு…

அதே நேரம்… அவள் கேட்ட அந்த சிரிப்பு… கள்ளம் கபடம் இல்லாத ரிஷியின் சிரிப்பு… அது இனி தன்னிடம் சாத்தியமா… இருந்தாலும்… தன்னவள் தன்னிடம் முதன் முதலாக கேட்டது… சிரிக்க முயற்சித்தான் ரிஷி…

ஆனால்…. இப்போதும் வெற்றுப் புன்னகையைத் தான் ரிஷியின் இதழ்கள் அவனிடம் கொண்டு வர…

தனக்காக சிரிக்க முயற்சிக்கின்றான் என்பதை கண்மணி உணர்ந்தவளாக…

“எனக்காக சிரிக்க ட்ரை பண்றீங்களா ரிஷிக் கண்ணா… அதெல்லாம் அதுவா வரணும் கண்ணா… வரும்.. ஒரு நாள் கண்டிப்பா வரும்… இப்போ கஷ்டப்பட வேண்டாமே.. பார்க்க சகிக்கல”

சட்டென்று ரிஷியிடம் கிண்டலாக பேச ஆரம்பித்தாள் கண்மணி… அவனை உணர்ந்தவளாக…

“ம்ஹ்ம்ம்ம்…” செறுமி தன்னைச் சரிப்படுத்திக் கொண்டாலும்… ரிஷியால் மீண்டும் இயல்புக்கு வர முடியாமல் தடுமாற…

”அப்புறம் …. சிரிக்க ட்ரை பண்ணதோட… அப்டியே அந்த தாடியையும் எடுத்துருங்க… ஒரு வேளை நீங்க சிரிச்சு… கன்னத்தில குழி விழுந்தால் கூட… பார்க்க முடியாது போல… ஒழுங்கா எடுத்திருங்க.. எடுப்பீங்க தானே… எடுக்கனும்…” தோசைகரண்டியை தன் முன் நீட்டியபடியே ஆட்டி ஆட்டி பேசியபடி பேசிக் கொண்டிருந்த தன் மனைவியை… தன் மனைவியின் இன்னொரு பரிமாணத்தை… விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு…


மந்திரக் கோலைச் சுழற்றிக் கொண்டிருக்கும் தேவதை போல் தான் தோன்றினாள் கண்மணி …

“ரவுடி…” மனதுக்குள் செல்லமாக முணுமுணுத்துக் கொண்டான்… ரிஷி…


சொர்ணாக்கா… எப்போது அவனின் ‘ரவுடி’ ஆனாள் அவனுக்கே தெரியவில்லை…

அதே நேரம் அவனையும் மீறி நடக்கின்ற விசயங்களையும் அவனால் உணர முடியவில்லை என்றே சொல்ல வேண்டும்…


கண்மணி என்பவள்… அவனை அவன் அறியாமலேயே அவனின் ஒவ்வொரு அணுவையும் மெல்ல மெல்ல ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றாள் என்பதை… ரிஷி என்பவன் மீண்டும் எழவே முடியாத கண்மணி என்னும் அதாள பாதாளத்திற்குள் மெல்ல மெல்ல அவன் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றான் என்பதை…

காதல் என்றால் என்ன என்பதை உணராதவன் இல்லை ரிஷி… காதல் மட்டும் இருந்திருந்தால்… ரிஷியால் அடையாளம் கண்டு கொண்டிருந்திருக்க முடியுமோ என்னவோ… ஆனால் இந்த உணர்வு காதலையும் மீறிய உணர்வு… அதனால் தானோ என்னவோ… அவனால் அவனால் அதை உணர முடியவில்லை…

மீண்டும் அமைதியாகி சாப்பாட்டில் கவனம் வைத்தவனுக்கு அப்போதுதான் கண்மணியும் சாப்பிட வில்லை என்று சொன்னதே நியாபகம் வர…

“கண்மணி… நீயும் சாப்பிடலதானே…” என்றபடி… அவளருகில் அமர்ந்தவனாக… தோசையை பிட்டு அவள் வாயருகே நீட்ட…

இதுவரை ரிஷிதான் கண்மணியிடம் உறைந்து நின்றிருந்தான்… இப்போது உறைந்து நிற்பது கண்மணியின் முறையாகி இருக்க….

கண்மணி அதிர்ச்சியோடு அப்படியே தான் நின்று கொண்டிருந்தாள்…

“நான் சாப்பிட்டு… அதுக்கப்புறம் நீ சாப்பிட்டு… ஏற்கனவே லேட் ஆகிருச்சு…” என்ற சொன்னபடியே அவளைப் பார்க்க… அப்போதுதான் கண்மணி அப்படியே நிற்பதை உணர்ந்தவனாக

“ஹலோ கண்மணி… உன் கண்ணை உருட்டி ஆன்னு பார்க்காம… கொஞ்சம் வாயைக் காட்டு… “ என்று அவள் ஊட்ட ஆரம்பித்து விட…

கண்மணியும் வேறு வழி இன்றி … அவளையுமறியாமல் வாயை திறந்து காண்பிக்க…

“குட் கேர்ள்… ” ஊட்டி விட்டபடியே சொன்னான் ரிஷி…

ரிஷியைப் பொறுத்தவரை… அவன் அவளுக்கு முதன் முதலாக ஊட்டி விடுகிறான் அவ்வளவுதான்… ஆனால் கண்மணியைப் பொறுத்தவரை… நினைவு தெரிந்து இன்னொருவர் அவளுக்கு முதன் முதலாக உணவை ஊட்டிவிடும் சரித்திர நிகழ்வு… அவளையும் மீறி கண்கள் பனிக்க ஆரம்பிக்க… இருந்தாலும் தொண்டைக்குள் விழுங்கிய தோசையோடு தன் உணர்வுகளையும் விழுங்கிக் கொண்டவளாக

“ஆர்கே கேட்டால் ஓகே சொல்லாமல் இருப்பாளா இந்த கண்மணி” என்று தன் உணர்வுகளை எல்லாம் ஒரே நொடியில் மறைத்து சொன்னவளிடம்

“ஓ..ஓஒ … ஒகே கண்மணி… இனி ஆர்கே கண்மணியா….” என்றபடி இவனும் அவளிடம் வாயாட… அடுத்தடுத்து ரிஷி ஊட்ட… கண்மணியும் அதற்கு பழகிக் கொண்டாள் விருப்பத்தோடயே….

இப்போது ரிஷி தான் படித்த அவளின் கதையின் வரிகளை அவளிடம் கேட்க ஆரம்பிக்க … இதோ கண்மணியின் அடுத்த பரிமாணம் அவனுக்கு கிடைத்தது அன்றே…


கண்மணியின் முகத்தில் அப்படி ஒரு ஒளிவட்டம்… அது பதட்டத்திலா… சந்தோஷத்திலா பிரித்தறிய முடியாத ஒளிவட்டம்

“ஹையோ ரிஷி படிச்சீங்களா… படிச்சுட்டீங்களா… உண்மையிலேயே படிச்சீங்களா” தலையில் கை வைத்துக் கேட்டவளின் குரல்… அந்த இரவின் நிசப்தம் எல்லாம் கண்டு கொள்ளாமல் உச்சஸ்தாயில் ஒலிக்க…

“ஏய்… ஏய்… ஏண்டி… இப்படி கத்துற… நட்ட நடு ராத்திரி டி… நீ இப்படி கத்துனேன்னா… மொத்த குடித்தனமும் எழுந்துக்க போகுது” என்ற ரிஷியும் அவளை அடக்க…

சுற்றுப்புறம் உணர்ந்தவளாக…. ரிஷியின் அருகே ஓடி வந்தவள் அவன் அருகே குனிந்து … ஹஸ்கியான குரலில்

“உண்மையிலேயே படிச்சீங்களா” முகத்தை குழந்தை போல வைத்துக் கொண்டு… கண்களில்… ஆச்சரிய பாவத்தோடு… மாட்டிக் கொண்ட உணர்வோடு அவள் கேட்ட போது…


முதன் முதலாக ரிஷி… கண்மணி என்பவளிடம்… ரவுடி…..சொர்ணாக்கா… அவனறிந்த வயதுக்கு மீறிய அவளின் பழக்கவழக்கங்கள் இதை எல்லாம் மீறி… வேறெதுவோ உணர்ந்தான் …


தன்னவளின் அந்தக் குழந்தைத் தனத்தில் … குறும்புத் தனத்தில் இவனுமே அதே பாவத்துக்கு வந்து விட…

“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…” என்று அவன் இழுத்துச் சொன்னபடியே…

“எல்லாம்… எல்லாமே” வேண்டுமென்றே சீண்ட…

இப்போது கண்மணியும்… சிரித்தபடி….

“என்ன படிச்சீங்க.. சொல்லுங்க” என்று கேள்வியாகக் கேட்க

“ஹீரோ… ஹீரோயின் டைலாக்… அதுவும் ரொமான்ஸ் டைலாக்ஸ்லாம்” கள்ளச் சிரிப்போடு ரிஷி சொல்ல…

கண்மணி சிரித்தாள் சிரித்தாள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே இருக்க…. நிறுத்தவே இல்லை…


ரிஷிதான் இப்போது பயந்து போனான்…

“ஏய்… ஏய்… இப்போ நான் காமெடியா சொன்னேன்… இப்படி சிரிக்கிற… கீழ மேல விழுந்துறப் போற…” சட்டென்று இறங்கி அவளைப் பிடித்தே விட…

“அப்படி நாம என்ன சொன்னோம்… இப்படி இவ விழுந்து விழுந்து சிரிக்கிறதுக்கு” ரிஷிக்கே புரியாமல் குழம்பியவனாக

“அம்மா… தாயே… கொஞ்சம் அடங்குறியா… நான் என்னம்மா அப்டி சொல்லிட்டேன்… இப்படி நீ விழுந்து விழுந்து சிரிக்கிறதுக்கு…” ரிஷி உண்மையிலேயே பயந்து போய்க் கேட்க

“ஹீரோ … …”

“ஹீரோயின்..”

“ரொமா…..ன்…..ஸ்…. டைலாக்… நான் எழுதி…. நீங்க படிச்சீங்க முடியல ரிஷி…” சொன்னவள் மீண்டும் சிரிக்க ஆரம்பித்து விட…

ரிஷிக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை… அதைவிட கண்மணி இப்படி சிரிப்பாள் என்று ஒரு நாளும் நினைத்துக் கூட பார்த்திருந்திருக்க மாட்டான் ரிஷி… அப்படி அவள் சிரித்துக் கொண்டிருக்க



“எதுவா இருந்தாலும்.... சொல்லிட்டு சிரிம்மா… பயமா இருக்கும்மா.. அதுவும் இந்த அர்த்த ராத்திரில…” ரிஷி கிட்டத்தட்ட கெஞ்சிக் கொண்டிருக்க…


“இல்ல… நானே கதைல… ஹீரோ ஹீரோயினுக்கு மேரேஜ் பண்ணி வச்சுட்டு… அடுத்து கதைய எப்படி மூவ் பண்றதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன்.. சொல்லுங்க சொல்லுங்க… பார்க்கலாம் என்ன ரொமான்ஸ் டைலாக் படிச்சீங்கன்னு” கண்மணி… மிரட்ட…. அந்த மிரட்டலில் கூட துள்ளல் மட்டுமே இருக்க…

ரிஷி இப்போது…

அவன் படித்த வரிகளைச் சொல்ல…

“அது ஹீரோயினோட அப்பா அம்மா பேசுற சீன்… ஹா ஹா… அது ரொமான்ஸ் டையலாக்கா“ சொன்னபடியே கண்மணி அடக்க மாட்டாமல் மீண்டும் சிரிக்க ஆரம்பிக்க… வேகமாக அவள் வாயைப் பொத்தியவன்…

“நான் இருக்கிற சிச்சுவேஷனுக்கு அதுவே ரொமான்ஸ் டையலாக் மாதிரி தோணுது போல… ஆள விடு்ம்மா…” என்று தன் தோல்வியை ஒப்புக்கொண்டவனிடம்…

“அது… ” என்றவள் சட்டென்று சோகமாகி விட…

“இப்போ என்னாச்சு... ஏன் இப்டி மூஞ்சிய வச்சுருக்க” ரிஷியும் இப்போது அவளின் சோக முகம் தாங்காதவனாக கேட்க

“ப்ச்ச் ரிஷி… அந்தக் கதைல அடுத்து என்ன எழுதுறதுன்னே தெரியலை ரிஷி….” அவனிடம் பேசிக் கொண்டிருந்தாலும்… தன் கதை உலகத்திற்கு போனவளாக…. இதழைச் சுழித்து கேட்ட பாவனையில் அவள் கணவன் தான் வேறொரு உலகத்திற்கு சென்று கொண்டிருந்தான் ...

ஆனாலும் தன்னவள் சோக முகத்தை மாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில்…

“அதான் ஹீரோ ஹீரோக்கு மேரேஜ் பண்ணி வச்சுட்டேல்ல… கதைய முடிச்சுரு… அவ்ளோதான்… இனி என்ன வேணும்… எல்லோரும் அப்படித்தானே கதைய முடிப்பாங்க” என்று ரிஷியும் பொறுப்பாகப் பேச…

“ஆனால் நான் அப்படி எழுதலையே… ஆஃப்டர் மேரேஜ் ஸ்டோரி அது….” ரிஷியிடம் சொல்ல…. முறைத்தான் ரிஷி…

“கதை எப்போ எழுத ஆரம்பிச்ச…”

”அது ரொம்ப நாளைக்கு முன்னால…”

”என்னது… ரொம்ப நாளைக்கு முன்னால… ஆஃப்டர் மேரேஜ் ஸ்டோரியா…” ஆ வென்று ரிஷி பார்க்க…

“இப்போ எதுக்கு இவ்ளோ ரியாக்‌ஷன் ரிஷிக் கண்ணா…” என்றவள்

“ஒரு ஆர்வத்துல எழுத ஆரம்பிச்சுட்டேன்… ஆனால் இப்போ எழுத ஒண்ணுமே வர மாட்டேங்குது” அவள் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னதில் அவள் கதைக் கருவைச் சொல்ல… ரிஷி சிரித்தே விட்டான்…

“கடவுளே… எப்படி அந்த ரெண்டு பேரையும் சேர்த்து வச்சுருவியா…. பாவம்மா பார்த்து பண்ணு … அவங்க சாபம் லாம் நமக்கு வேண்டாம்…”

“சேர்த்து வச்சுருவேன் ரிஷி… டோண்ட் வொரி… ஃபைனல் எபிசோட் நான் ஏற்கனவே ஃபிக்ஸ் பண்ணி வச்சுட்டேன் … “ பெருமிதமான குரலில் சொல்ல…

ரிஷி கிண்டலாக…

“நல்லா வருவம்மா நீ… ஐயோ… பாவம்மா அந்த ஹீரோ… உன்கிட்ட வந்து மாட்டிட்டான்” என்று சொல்ல…

கண்மணி அவன் அருகில் வந்து….


“என்ன... ரிஷி கண்ணா வார்த்தைல… கதைல வர்ற ஹீரோக்கு பாவம் பார்த்த மாதிரி தெரியலேயே… இது அவருக்கே சொன்ன மாதிரி தெரியுதே… அப்படித்தானே” என்று அவன் முன் நம்பியார் பாவனையில் கை வைத்துக் கேட்க…

“இல்ல இல்ல… சத்தியமா இல்லை… அந்த ஹீரோயின் ராட்சசி… என் பொண்டாட்டி… ஏஞ்சல்… தேவதை… எனக்காக ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து செய்வா… அப்போ நான் எப்படி பாவமாவேன்… நான் லக்கி…” என்று வேக வேகமாகச் சொல்ல…

கேட்ட கண்மணியின் முகத்தில் அத்தனை சந்தோசம்…

”ஹான் அதெல்லாம் ஓகே… ஆனால் என் ஹீரோயின் எப்படி ராட்சசின்னு நீங்க சொல்வீங்க…“ மீண்டும் கண்மணி இப்போது தனது கதை நாயகிக்காக சண்டை போட ஆரம்பிக்க…

“ஆமா… நீ சொல்றதைப் பார்த்தால் நான் அப்படித்தான் சொல்வேன்… யார்கிட்ட வேணும்னாலும் உன் கதையச் சொல்லி … கேட்டுப்பாரு…” என்று ரிஷியும் விடமால் பேச ஆரம்பிக்க… கண்மணியின் முகம் உண்மையிலேயே வருத்தமாக மாற ஆரம்பிக்க…


“என்னது… இவ உண்மையிலேயே சீரியஸ் ஆகிட்டாபோல… ரிஷி இது தேவையாடா உனக்கு” என்று நினைத்தபடி…


“கூல் கூல்… நீயே ஹீரோயின்னு சொல்றேன்னா… அவ எப்படிப்பட்ட பொண்ணா இருப்பா… சும்மா சொன்னேம்மா… நீ என் தேவதை… அதே மாதிரி நீ எழுதுன… எழுதிட்டு இருக்க… எழுதப்போற எல்லா ஹீரோயினும் அவங்கவங்க ஹீரோவுக்கு தேவதை போதுமா” ரிஷி இப்போது இறங்கி வர… கண்மணி முகத்தில் மீண்டும் திருப்தி வந்திருக்க… சந்தோஷமாக புன்னகைக்க… அந்தப் புன்னகையில் குழந்தைத்தனம் மட்டுமே….


அதே நேரம்… ரிஷியின் வார்த்தைகளையும் ரசித்தாள் என்றே சொல்ல வேண்டும்… இவள் சொன்னதற்காக அவன் அவள் கதைநாயகிகளை எல்லாம் தேவதை என்று சொன்னாலும்…


“அவங்கவங்க ஹீரோவுக்கு தேவதை…” அவன் சொன்ன வார்த்தைப் பிரவாகத்தை ரசித்து அனுபவித்தாள்… கண்மணி கதாசிரியராக


அதன் பின்… இருவருமாக பேசியபடியே… சாப்பாட்டை முடித்தும் விட்டிருக்க…

”பார்த்தியா… எப்டி டைம் சேவ் பண்ணோம்னு…” என்று அவன் பெருமிதமாக காலரை தூக்கிக் காட்ட…

கண்மணியும் பெருமிதமாக அவனிடம் விரலை உயர்த்திக் காட்டினாள்….

-----

”சரி நான் கிளம்புறேன்… கதவை லாக் பண்ணிக்கோ… “ என்று சொன்னவன் வெளியேறாமல் அவளையே பார்த்தபடி இருக்க…

“எனக்கு உங்ககிட்ட பேசனும்… பேசலாமா”

அவள் சொன்ன அதே நேரம் அவனும் …

“எனக்கு உன்கிட்ட பேசனும்…. பேசலாமா” என்று கேட்க…

ஒருவரும் ஒரே நேரத்தில் ஒரே வார்த்தைகளைப் பேசிய விதத்தில் இருவருக்குமே புன்னகை வந்தது…


காரணம் இருவரும் இதுவரை அதைத்தானே செய்து கொண்டிருந்தனர்...

கண்மணிதான் முதலில் பேச நினைத்தவளாக.... அவன் அருகில் வர... அதை உணர்ந்தவனாக

”நீ சொல்லு….” ஆரம்பித்த ரிஷி சட்டென்று

”சாரி… “ என்று சொல்லி முடிக்க…

“நான் எதைப் பற்றி பேசப் போறேன்னு தெரிஞ்சுதான் சாரி கேட்கறீங்க அப்டித்தானே… ” சற்று முன் குழந்தையாக சிரித்தவளா எனும்படி… ஊடுருவும் பார்வை பார்த்தவளாக தன் முன் நின்றவளை … சலனமின்றி பார்த்தான்... பார்த்துக் கொண்டே இருந்தான்… நொடிகள் கடந்தும்….

தவறு செய்தவனாக இருந்த போதிலும், தன் பார்வையை வேறு புறம் திரும்பவில்லை… பின் சில நொடிகள் கண்களை முடி தன் தவறை தனக்குள் கிரகித்துக் கொண்டவனாக மீண்டும் கண் திறந்தவன் அவள் கண்களை பார்த்தபடியேதான் பேச ஆரம்பித்தான்…

“அப்போதைக்கு என்ன பண்றதுன்னு தெரியலை… உன்னை எப்படி ஸ்டாப் பண்றதுன்னு தெரியலை… ”


“அதே நேரம் மறைக்கனும்னாலாம் இல்லை கண்மணி… உனக்கு கண்டிப்பா தெரியவரும்… அப்போ சொல்றேன்…ஒரு சின்ன ட்ரை… நடந்த பின்னால சொல்றேன்… “ என்றவனின் குரலில் இருந்தது தவறுக்கான மன்னிப்பை விட உண்மையும் அக்கறையும் மட்டுமே…

“ம்ஹ்ம்.. சரி விடுங்க… ” என்ற கண்மணிதான் வேறு எதுவும் பேசாமல் அமைதியாகி விட…

ரிஷிக்குத்தான் அவளின் அமைதி ஒரு மாதிரி ஆகிவிட்டது… அவள் சண்டை போட்டிருந்தாலாவது அவன் மனம் வருந்தி இருக்காதோ என்னவோ…

“சாரிம்மா… இந்த அளவுக்கு நீ ஃபீல் பண்ணுவேன்னு நினைக்கல…” குரலில் அவனையும் மீறிய பதட்டம் நன்றாகவேத் தெரிய….

வழக்கம் போல அவனின் பதட்டம் கண்மணியை அவன் புறம் திருப்ப… கண்மணி அவனின் அருகில் வந்தவள்…

”ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கங்க ரிஷி… ஒரு பொண்ணா… மூணாவது மனுசங்க தன்னை எந்த இண்டென்ஷன்ல தொடுறாங்கன்னு மட்டும் இல்லை அவங்க எந்த நோக்கோட பேசுறாங்கன்னு எனக்குத் தெரியும்… ”

“ஆனால் ஒவ்வொரு பொண்ணும்… ஒரு மனைவியா… ஹஸ்பண்ண்டோட ஒரு சின்ன பார்வைக்கும்… செயலுக்கு…. தொடுகைக்கும்… ஒவ்வொரு அர்த்தம் வச்சுருப்பா… அந்த உணர்வுகளை ஹர்ட் பண்ண நினைக்காதீங்க ரிஷி… அது கண்ணாடி பாத்திரம் மாதிரி… அதுவும் விரல் நுனியில இருக்கிற கண்ணாடி பாத்திரம் மாதிரி… அதை காலம் முழுக்க விழாம பார்த்துக்கறதுக்கு சமம் ஒரு பொண்ணோட நுண்ணிய உணர்வுகளுக்கு அவ புருஷன் மதிப்புக் கொடுக்கிறது…”

ஏதோ சாதாரணமாக அவள் பேசியது போல இருந்தாலும்… அந்த மங்கிய இருளில்…. அவள் சொன்ன விதம்… அந்தக் குரலில் இருந்த கடினம்… தொணியில் தெரிந்த அழுத்தம்…

கண்மணி எந்த அளவுக்கு வருந்தி இருக்கின்றாள் என்பதை அவன் புரிந்து கொள்ள… அதற்கு மேல் அவனால் அவளை தள்ளி நிற்க முடியவில்லை… அவளை ஆறுதல் படுத்த அவன் மனம் அவனை உந்தியதையும் அவனால் தடுத்து நிறுத்த முடியவில்லை… அவனையும் மீறி அவன் கைகள் அவளை நோக்கி விரிய…

கண்மணியோ அசையவில்லை… கைகளைக் கட்டியபடி அதே இடத்தில் தான் நின்று கொண்டிருந்தாள்…

“நான்லாம் ஒரு ஃபீலும் பண்ணல… சும்மா சொன்னேன்… ரிஷிக் கண்ணா நீங்க ஃபீல்லாம் பண்ணத் தேவையில்லை….” பொய்யான கோபத்துடன்… வேண்டுமென்றே விறைப்பாக… சன்னச் சிரிப்போடு சொல்ல… நின்ற இடத்தில் இருந்தே சொல்ல

அவள் சிரிப்பு… ரிஷியையும் இலேசாகத் தொற்றிக் கொள்ளத்தான் செய்தது…

“அப்போ நான் கூப்பிட்டா வரமாட்டா… சரி பார்க்கலாம்… இதையும் என் லிஸ்ட்ல வச்சுக்கறேன்… நீயா… என்னைத் தேடி ஓடி வருவ… அப்போ பார்த்துக்கறேன்… “ நீட்டிய கைகளை மடக்கி இவனும் கைகளைக் கட்டியபடி சவால் விட…

அவளும் புருவம் உயர்த்தி அவனது சவாலை ஏற்றுக் கொள்ள… இருவரின் பார்வைகள் ஒரே நேர்க்கோட்டில்… பட்டு விலகிய போது … இரு முகத்திலும்….. புன்னகை சிதறல்கள் மட்டுமே…

தவறு செய்தவனாக அவள் முன் நின்றபோது அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்த ரிஷியால் இப்போது அந்தக் கண்களைக் காண ஏனோ முடியவில்லை…

சிரிப்போடு வேறு புறம் திரும்ப… கண்மணி அவனிடம்…

“யாரோ இன்னைக்கு எங்க தாத்தா வீட்டுக்கு போனாங்களாமாமே… ” இப்போது ரிஷி கண்மணியைப் பார்க்க..

”உங்க வருங்கால வாரிசு… அந்த சொத்து இதெல்லாம் விட… ஹான்… முக்கியமா அவங்க பேத்தியவிட… மாமானார்தான் முக்கியம்னு சொல்லிட்டு வந்தாங்களாமே ” ஒரே குரலில்… கோபம்… சந்தோஷம்… பொறாமை… எல்லாமே தேக்கி அவனைப் பார்க்க

யோசிக்காமல் அவள் கரம் பற்றி தன் புறம் இழுத்தவன்…


அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்தபடி… அவளின் அத்தனை உணர்வுகளையும் புரிந்தவனாக…

“உன்னைவிட அவர் முக்கியம்னு சொன்னதால வந்த பொறாமைய விட.… உங்க அப்பாவை நான் விட்டுக் கொடுக்காத சந்தோசம்தான் இந்த முகத்தில அதிகமா தெரியுது… “ சீண்டினான் மனைவியை…


“என்னை விடுங்க… உங்களுக்கு உங்க மாமாதானே முக்கியம்” கண்மணி தன் கரங்களை அவனிடமிருந்து முயற்சித்தபடியே கோபமாகச் சொல்ல…

“ஆனா அந்த கோபம்… ஏன்… “ என்று அவளை விடமாலேயே யோசித்தவன்…

“ஓ… மேடத்தோட தாத்தா பாட்டிய வருத்தப்பட வச்சுட்டேன்னுனா…”

“எனக்கு நட்ராஜ் சார்தான் முக்கியமா பட்டார் கண்மணி… மற்றபடி அவங்கள ஹர்ட் பண்றதெல்லாம் எனோட இன்டென்ஷன் இல்லம்மா… என்னை நீ புரிஞ்சுக்கவதானே… ”

பதில் சொல்லவில்லை கண்மணி… ஆனால் தான் அவனை புரிந்து கொண்டதாக தன் மென் கரம் பொதிந்திருந்த அவன் வலிய கரத்தில் தன் அழுத்தத்தைக் கொடுக்க… அந்த மென் அழுத்தம் ஆயிரம் கதை பேச இழுத்த போதும்… தனக்குள் மறைத்துக் கொண்டவனாக…

“நாளைக்கு நான் ஊருக்கு போறேன் கண்மணி… ஒன் வீக் கூட ஆகலாம்… “

சொன்னவனை… யோசனையாக கண்மணி பார்க்க…

“இவ்ளோ நாள் கம்பெனி விசயமா… நான் எந்த ஸ்டெப்பும் எடுக்க முடியல…. அம்மா.. ரிது ரிதன்யாவை விட்டுட்டு அதிக நாள் ஸ்பெண்ட் பண்ண முடியாத சூழ்நிலை… இப்போ நீ இருக்க… இவங்கள பற்றின கவலை இல்லாம நான் நிம்மதியா போவேன்… “ என்றவனிடம்…

தலை ஆட்டியபடியே….

“கிட்டத்தட்ட அஞ்சு வருசமா… கேஸ் அப்படியே இருக்கா ரிஷி… நம்ம ராஜம் மேடம் சன் பார்த்திபன் கிட்ட பேசிப் பார்க்கறீங்களா… அவர் ஏதாவது இதுக்கு ஐடியா கொடுப்பாரு”



“ஹ்ம்ம்… பார்க்கலாம்.. ஊருக்கு போய்ட்டு வந்து…” இப்போது ரிஷியின் முகம் இயல்புக்கு மாறி இருந்தாலும்… குரலில் தான் அந்தக் கடினம் மாறவில்லை….



கண்மணியும் அதற்கு மேல் பெரிதாக வற்புறுத்தவும் இல்லை… அந்த விசயத்தைப் பற்றி….



அடுத்த சில நொடிகளிலேயே கண்மணியிடம் சொல்லி விட்டு… அந்த இடத்தை விட்டு அகன்றவன்… அடுத்த நாளே தன் சொந்த ஊருக்கும் கிளம்பிச் சென்றிருந்தான்…


கண்மணியிடம் ’கம்பெனி… கோர்ட் கேஸ் விசயம்’ என்று சொல்லி விட்டு வந்தவன் பார்த்துக் கொண்டிருந்த வேலையோ வேறாக இருந்தது

----

“சத்யா… இதை இவன் முகத்துல ஊத்துனா… பையன்… யமுனா கிட்ட போக மாட்டான் தானே… ” என்ற கேட்ட ரிஷியின் கைகளில் திராவக பாட்டில் இருக்க… உள்ளிருந்த திராவகத்தின் அமிலத்தன்மையின் கொந்தளிப்பை விட அவன் முகம் கொந்தளித்துக் கொண்டிருக்க…

“பாஸ்…” என்று சொன்ன சத்யாவின் கண்களில்தான் மிரட்சி இருந்தது…


”ஊரில் இருந்து வந்த ரிஷி... யமுனாவை தொல்லை செய்து தற்கொலைக்கு முயல வைத்த ரஞ்சித்தை ஏதாவது மிரட்டுவான் என்று மட்டுமே நினைத்திருக்க… இப்படி ஆசிட் பாட்டிலை வைத்து மிரட்டுவான் என்று நினைக்கவே இல்லை…



சத்யாவிடம் இருந்து பதில் வராமல் போக... ரிஷி மீண்டும் ரஞ்சித்தின் புறம் திரும்பினான்



“ஏண்டா உன்னை சும்மா நடிக்கச் சொன்னா… உண்மையாவே லவ் பண்றேன்னு அவள மிரட்டிட்டு இருப்பியா நீ… ”


“உன்னை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம்… இந்த அடி தடிலாம் பிரயோஜனமே இல்லை… கடத்திட்டு போவேன்லாம்லாம் சொன்னியாமே… அவ்ளோ தைரியமா உனக்கு… ஏதோ ஒரு போட்டோவ வச்சு மிரட்டுனியாமே” என்றவன்

“உன்னை அவள லவ் பண்ற மாதிரி நடிக்கச் சொல்லும் போதே என்னடா சொன்னேன்… யமுனா மேல சுண்டு விரல் கூட படக்கூடாதுனு தானே சொன்னேன்… எங்க கிட்ட தலையாட்டிட்டு…” என்ற போதே

”ஆர்கே சார்… ஆர் கே சார்… நான் அந்தப் பொண்ணை டச் கூடப் பண்ணலை…” அந்த ரஞ்சித் என்பவன் பதறிச் சொல்ல

இப்போது ரிஷி அந்த போட்டோவைப் பார்க்க…

யமுனா அவன் கைகளில் முத்தமிடுவது போல் இருந்த போட்டோவைப் பார்த்தவன்…. தன் தாடியைத் தடவியபடியே… சில நிமிடங்கள் யோசித்த ரிஷி

“சார் நமக்கு உண்மையா இருந்திருக்காரு சத்யா… நாமதான் தப்பா புரிஞ்சுட்டோம்… அப்புறம் எதுக்கு இந்த ஆசிட்…” என்று அந்த பாட்டிலைக் கீழே போட… பாட்டில் சுக்கு நூறாகி… அதில் இருந்த திராவகம் எல்லாம் கொட்டி… பொங்கி மேலெழும்ப…

அதைப் பார்த்த ரஞ்சித் “ஹப்பா” நிம்மதி பெருமூச்சு விட… அந்த நிம்மதி பெருமூச்சு விட்ட அடுத்த நொடியிலேயே… ஆவென்று வலியில் துடித்து அலறிக் கொண்டிருந்தான் ரஞ்சித்

“நீ தொடல அது ஓகே…. அந்தப் பொண்ணையும் தொட விட்ருக்க கூடாதுதானே… கேம் உள்ள எண்டரானா … ரூல்ஸ் கரெக்டா ஃபாளோ பண்ணி இருக்கனும்தானே…. இல்லைனா இதுதான் தண்டனை… ”

அமிலத்தின் எரிச்சலும்… உடைந்த கண்ணாடி துகள்களின் கீறல்களும் ஒரே நேரத்தில் ரஞ்சித்தை கதற வைக்க ஆரம்பிக்க…. வலியில் துடித்துக் கொண்டிருந்தவனை… ரிஷி கொஞ்சம் கூட பரிதாபமாகப் பார்க்கவில்லை… அந்த அமிலத்தின் மேல் ரஞ்சித்தின் இன்னொரு கரத்தையும் பிடித்து அழுத்த… மரண வேதனையில் துடித்தவனிடம் மெல்ல தன் கைகளை விட்டு விலக்கி எடுத்தபடி…


“இனி… எந்தப் பொண்ணையும்… நீயும் தொட முடியாது… எந்தப் பொண்ணும்… “ என்றவன்…


“இதுக்கு மேல எந்தப் பொண்ணும் உன் கையைப் பிடிக்கவும் ஆசைப்படுவாளா என்ன” ஏளனமும் கோபமும் கலந்த சொன்னவன் கண்களில்…


“பாப்பா… இந்த சாக்லேட் உனக்கு” இளித்த மருதுவின் முகமும்… கள்ளம் கபடம் இல்லாமல் அதை வாங்கிச் சாப்பிட்ட அந்தக் குழந்தையின் முகமும் வந்து போக… அந்த நொடியே தலையில் கைவைத்தபடி அமர்ந்து விட்டான் ரிஷி…


“இந்த சாக்லேட் கவுண்ட் எத்தனைடா…. கணக்கு முக்கியம் மருது…” சிரித்த மற்றொருவனின் முகம் இப்போது ரிஷிக்கு நியாபகம் வர


உயிர் கருகிய உணர்வு ரிஷிக்கு… அவன் சொன்ன அந்த கணக்குகளில் அவன் கண்மணியும் இருக்கின்றாள் என்று தெரியாமலேயே….


----------------------


/*

உன்னுள்ளே செல்லச் செல்ல

இன்னும் உன்னைப் பிடிக்கையிலே

இவ்வாறே நான் வாழ்ந்தால் போதாதா?


என் நெஞ்சின் மேடை இங்கே

உன்னை ஆட அழைக்கையிலே

கால்கள் வேண்டாம் காதல் போதாதா?


நான் மாட்டிக்கொண்டேன்

உனில் மாட்டிக்கொண்டேன்

கோவில் உள் கடவுள் போல

உன்னில் மாட்டிக்கொண்டேன்


தானாய் மாட்டிக்கொண்டேன்

உனில் மாட்டிக்கொண்டேன்

கர்ப்பத்தில் சிசுவைப் போல

உன்னில் மாட்டிக்கொண்டேன்*/



இந்த எபிக்கான பாடல்... முடிஞ்சா கேட்டுப் பாருங்க ஃப்ரெண்ட்ஸ்... ஐ தின்க் இட்ஸ் ஸ்லோ பாய்சன்...

3,466 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page