top of page

என் உயிரே !!! என் உறவே !!! 12

Writer's picture: Praveena VijayPraveena Vijay

அத்தியாயம் 12:

சென்னையின் மையப் பகுதியில் அமைந்திருந்த சூர்யா மருத்துவமனை அதன் வழக்கமான அமைதியிலும், பணியிலும் தன்னை நிரப்பிக் கொண்டிருந்தது.அதன் ஒரு அறையில் ஜெகனாதன் கண்களை மூடி படுத்திருந்தார்.அவரது அருகில் அருந்ததியும், ஜெகனாதனின் நண்பனும் , அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவருமான முரளியும் நின்று கொண்டிருந்தனர்.

அருந்ததியின் மனம் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களின் காலடியிலும் விழுந்து தன் கணவனுக்கு நல்ல விதமாக அறுவைச் சிகிச்சை நடைபெற வேண்டும் என்று நொடி பிறகாமல் பிரார்த்திக் கொண்டிருந்தது. சிறிது நேரம் ஓய்வாக கண்களை மூடிப் படுத்திருந்தவர் தன் மனைவியின் அருகாமையினால் ஏற்பட்ட அதிர்வலையில் மெதுவாக கண்களை திறந்து பார்த்தார்.

ஜெகனாதன் கண்விழித்து மெதுவாக அருந்ததியை நோக்கினார். அவர் கண்களை அருந்ததியின் கண்கள் சந்தித்த வினாடியில் அவளது கண்கள் அனிச்சையாகவே கண்ணீரை நிரப்பியது. ஆயினும் தன் கணவனுக்கு இப்போதைய தேவை தனது ஆறுதல் வார்த்தைகளும் , நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும் தான் என்பதை உணர்ந்த அருந்ததி கண்களின் நீரை மறைத்து தன் கணவனை நோக்கி குனிந்தாள்.

அதே நேரத்தில் தன் மனைவியின் நிலைமையினை உணர்ந்த ஜெகனாதன் , அவள் தன்னை தனக்குள்ளாகவே தேற்றுவது அவருக்கு புரியாமல் இல்லை. எனவே ஜெகனாதன் தன் மனைவிக்கு ஆறுதலாக புன்னகையினை தன் முகத்தில் மலர விட்டார். ஆயினும் அந்த முயற்சியில் அவருக்கு பாதி வெற்றிதான் கிடைத்தது. இப்போதைய அவரது வலிகளின் காரணமாக…..

இப்போதைய அவரது வலிகளுக்கு காரணம் அந்த மருத்துவமனையின் உபகரணங்களும் , மருந்துகளும் தான். அவரது மனத்தை பொறுத்த வரையில் தன் மகனின் திருமணத்தினைக் கண்ட வினாடியில் இருந்து மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. இப்போது தன் உயிர் பிரிந்தால் கூட அவருக்கு கவலை இல்லைதான்.அவருக்கு இப்போதிருக்கும் சிறிய கவலை என்னவென்றால் இன்றைய அறுவைச் சிகிச்சைதான், அதுவும் தன் உயிரினைப் பற்றிய கவலை கூட கிடையாது. மூன்று நாட்களுக்கு முன்னதாகத்தான் தன் மகனின் திருமணம் நடந்து முடிந்திருந்தது. அந்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிப்பதற்கு முன்னரே இந்த மருத்துவமனை வாசம் கொஞ்சம் கவலை அளித்தது. இப்போதைய தனது குடும்ப மகிழ்ச்சிக்கு இந்த அறுவைச் சிகிச்சை ஒரு முட்டுக் கட்டை போல் தோன்றியது. இருந்தாலும் தன் மகனின் மனமாற்றத்திற்கு அடிப்படை ஆதாரமே இந்த அறுவைச் சிகிச்சைதான் என்ற வரையில் அவருக்கு திருப்திதான்

ஜெகனாதனின் கஷ்டப்பட்டு புன்னகை பூப்பபதை பார்த்த அருந்ததிக்கு அவரது வேதனையினை பார்த்தவுடன் இப்போது அவளது கண்களில் கட்டுப்படுத்த முடியாமல் நீர் வழிந்தது.

ஜெகனாதன் மெதுவாக அருந்ததியிடம்

நீ ஏம்மா அழுகிறாய், எல்லா கஷ்டமும் பறந்து போய் விட்டது. இந்த ஒன்றையும் கடந்து விட்டால் இத்தனை நாள் நாம் மனதால் பட்ட துன்பம் எல்லாம் முடிந்து விடும். தைரியமாக இரு அருந்ததி. எனக்கு ஆபரேசன் நல்லபடியாக முடிந்து குணமடைவேன். நான் நம்ம பேரப் பிள்ளைகளை கொஞ்ச வேண்டாமா. இன்னும் எத்தனையோ இருக்கு அதை எல்லாம் அனுபவிக்காமல் போய் விடுவேனா

எனும் போதே அருந்ததிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

எங்கே பாலாவும் , கீர்த்தியும்…. அழைத்து வாஎன்றவுடன் வெளியே வந்தாள் அருந்ததி.

கணவன் வேதனைகளை இறக்கி வைத்துவிட்டார். ஆனால் அருந்ததியின் மனதில் சுமையாய் மாறிய வேதனைகளை யாரிடம் இறக்கி வைப்பாள். தன் மகன் பாலா செய்து வைத்திருக்கிற காரியத்திற்கு இந்த ஜென்மத்தில் இல்லை ஏழேழு ஜென்மத்திற்கும் விடிவு காலம் இல்லை. நேற்று பாலாவும் கீர்த்தியிடமும் பேசியதிலிருந்து கிட்டத்தட்ட தன் மகன் இப்படியெல்லாம் யோசிப்பானா, அப்பாவி பெண்ணின் குடும்பச் சூழ்னிலையினை தனக்காக மாற்றி அவளை கிட்டத்தட்ட வியாபார நோக்கில் திருமணம் செய்தது மட்டுமில்லாமல், அவனது திட்டம் யாருக்கும் தெரிந்து விடாமல் இருக்க என்னென்ன செய்திருக்கிறான்.

தன் தந்தையினைப் பற்றி யோசித்தவன் அந்தப் பெண்ணின் வாழ்க்கையினைப் பற்றி யோசிக்கவே இல்லையே என்று பாலாவைப் பற்றி நினைக்குபோதே அவனைப் பெற்ற வயிறு எரிந்தது. கீர்த்தி அவளைப் போய் என்ன சொல்வது. அவளும் பணத்திற்காக தன் வாழ்க்கையினை பணயம் வைத்து விட்டாள். தனக்கு மட்டும் இவர்களது திட்டம் முன்னமே தெரிந்திருந்தால் கட்டாயம் இந்தத் திருமணத்திற்கு சம்மதமே சொல்லி இருக்க மாட்டாள். என்ன செய்வது எல்லாம் முடிந்து விட்டது. இனி யாரைச் சொல்லியும் , என்ன புலம்பியிம் பயனுமில்லை.

தன் கணவன் ஏதோ மகன் வாழ்வு நேராகி விட்டது என்ற பூரிப்பில் இருக்கிறார். கீர்த்தியின் பெற்றோர் ராகவ் மைதிலியை நினைக்கும் போது இன்னும் அதிகமாய் மனம் வலித்தது. தன் ஒரே மகள் அதுவும் செல்ல மகள் வாழ்வு பாலைவனமாய் மாறிவிட்டதை அறியாமல்,அவள் நினைத்த வாழ்க்கையினை அளித்த திருப்தி அவர்களுக்கு. ஆக மொத்தம் இருவரும் சேர்ந்து அனைவரையும் ஏமாற்றி விட்டனர். இவளுக்கு மட்டும் உண்மை தெரிந்து விட்டதில் மொத்தமாய் நொந்து போய் விட்டாள். இனி மகன் மருமகளோடு தானும் நடிக்க வேண்டிய கட்டாயம்.

அவளைப் பொறுத்தவரை அவன் இனி மகனுமில்லை, கீர்த்தி அவள் மேல் வைத்திருந்த பாசமெல்லாம் போய் அந்தப் பெண் என்ற அளவில் நின்று விட்டது. காலம் தான் விடை சொல்ல வேண்டும். முதலிலாவது ஏதோ மகன் வாழ்க்கை என்ற பயம் மட்டும் இனி ஒன்றுமே புரியவில்லை. கடவுள்தான் விடை சொல்ல வேண்டும் என்றெல்லாம் மனதில் நினைத்தபடி வெளியே வந்தாள் அருந்த்தி.

அங்கு வாயிலின் இரு மருங்கிலும் நின்றிருந்த பாலா, கீர்த்தியை பார்த்தாள். திருமணம் மூன்று நாட்களுக்கு முன்னர்தான் முடிந்த ஒரு புது மணமகனின் தோற்றமே இல்லை பாலாவிற்குக்கு. எதையோ பறிகொடுத்த படி இருந்த அவனது முகத்தில் உணர்ச்சிகள் துடைக்கப் பட்டிருந்ததது. அவனுக்கு எதிராக நின்று கொண்டிருந்த கீர்த்தியோ பார்த்த மாத்திரத்திலே புது மஞ்சள் மணம் மாறாத மணமகளின் களை குடி கொண்டிருந்தது. ஆனால் அவளது கண்களில் முற்றிலும் வெறுமையே குடிகொண்டிருந்தது. அதற்கு காரணம் தன் மகன் எனும்போது இன்னும் நம்ப முடியவில்லை.

அவர்களின் அருகில் வந்தவள் தன் கணவனின் வார்த்தைக்கு மதிப்பளித்து பாலா மற்றும் கீர்த்தியை வேண்டா வெறுப்பாக அழைத்தவள் , ஜெகனாதனிடம் கூட்டிச் சென்றாள்.பாலாவையும் கீர்த்தியையும் பார்த்தவுடனே ஜெகனாதானின் முகத்தில் பிரகாசம் கூடியது. அவர்களை அருகில் வரும்படி அழைத்தவர் , கீர்த்தியை பார்த்த பார்வையில் அன்பும், பெருமையும் வழிந்தது. மேலும் அவரைப் பொருத்தவரை தன் மனதில் கீர்த்தியை இருண்டு போகவிருந்த தனது குடும்பத்தினை மீட்ட தேவதையாக அவர் வரித்திருந்தார். கீர்த்தியை தனது அருகே அழைத்தவர்

அம்மா கீர்த்தி உன் அத்தைக்கு நீதான் ஆறுதலாய் இருக்க வேண்டும். எனக்கு இனி ஒரு கவலையுமில்லை . என் பையனுக்கும் என் மனைவிக்கும் ஒரு நல்ல மனைவி , நல்ல மருமகள் கிடைத்த சந்தோசத்தில் எனக்கு எது நடந்தாலும் கவலை இல்லை. என்னம்மா….. என் பையன் பாலாவை பார்த்துக் கொள்வேன்…. அவன் மனதினை மாற்றி அவனது வாழ்க்கையில் மலர்ச்சியை ஏற்படுத்துவேன்….. என்று மாமாவிடம் சொன்னது போல் நடந்து கொள்வாய் தானே ”என்றவரிடம் கீர்த்தி

கண்டிப்பாக மாமா , நான் உங்க மருமகள் ஆயிற்றே நான் நிறைவேற்றாமல் போனால் என்ன ஆவது. நீங்க பார்க்கத்தானே போகிறீர்கள்

என்றபடி தன் மாமாவிடம் பேசியபடி பாலாவைப் பார்த்தாள் கீர்த்தி.

அவனும் அவளுடன் சேர்ந்து

அப்பா…. மருமகளும் மாமானாரும் ஒண்ணா சேர்ந்தாலே என் தலைதான் உருளும் போல இருக்கு” என்றபடி தன் தந்தையின் அருகில் அமர்ந்தான்.

அவர்கள் இருவரும் நடத்தும் நாடகத்தை பார்த்த அருந்ததிக்கு அங்கு நிற்கவும் முடியவில்லை, அந்த இடத்தை விட்டு விலகவும் முடியவில்லை. இவர்களுக்கு இடையில் ஒன்றும் செய்ய இயலாமல் தன் கணவனை நினைத்து மனதிற்குள் வேதனையோடு சிரிக்கத்தான் முடிந்தது. அதன் பிறகு அவர்களோடு சிறிது நேரம் நின்றவள் மெதுவாக வெளியேறினாள். அருந்ததி போவதை பாலாவும் கீர்த்தியும் உணர்ந்த போதிலும் ஒன்றும் சொல்லாமல் ஜெகனாதனோடு பேசியதைத் தொடர்ந்தார்கள். ஏதோ அவர்கள் இருவரும் மனமொத்த தம்பதிகள் போல் பாலா பேசியதற்கெல்லாம் கீர்த்தி ஒத்து ஊதினாள். கீர்த்தி பேசியதற்கெல்லாம் பாலா தலையாட்டிக் கொண்டிருந்தான்.

அடுத்த நான்கு மணி நேரத்தில் அவருக்கு அறுவைச் சிகிச்சை என்பதால் அவருக்கு இன்னும் ஓய்வு தேவை என்பதை டாக்டர் சொன்னவுடன் அவரை உற‌ங்கச் சொல்லி விட்டு வெளியே வந்தனர் பாலாவும் கீர்த்தியும். கிட்டத்தட்ட இந்த 35 நாட்களில் இந்த நாடகத்திற்கெல்லாம் இருவரும் நன்றாகத் தேறிவிட்டிருந்தனர். முதலில் இருவரும் தடுமாறினாலும் , போக போக இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து அவரவர் பெற்றோருக்கு பயந்து மற்றவர் பெற்றோரிடம் நல்ல பெயரை எடுத்து விட்டனர். ஆனால் பாவம் அருந்ததிக்கு உண்மை தெரிந்ததுதான் அதில் வேதனை.

அருந்ததி இவர்கள் வெளியே வந்தவுடன் வேறு புறமாக திரும்பியபடி ,விட்ட இடத்திலிருந்து தன் பிரார்த்தனையினை தொடங்கினாள். பாலா தன் தாயின் அருகில் சென்றாள். கீர்த்திக்கோ அவள் அருகில் செல்ல தயக்கமாய் இருந்ததால் சற்று தள்ளியே நின்று கொண்டாள்.

அருகில் சென்றவனை முறைத்த அருந்ததி அவனுடன் பேசாமல் இருந்தாலே இப்போதைய நிலைமைக்கு நன்மை என்பதால் அவனை லட்சியம் செய்யாமல் கண்களை மூடினாள். அம்மா என்று அழைத்த பாலாவுக்கு அவளிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராததால் சில நிமிடங்கள் அமைதி காத்தவன் மீண்டும் அழைத்த போது அவனது குரல் உடைந்திருந்தது. இப்போது மெதுவாய் தலையை உயர்த்தி அவனை நோக்கினாள் அருந்ததி.

ஏன் பாலா இன்னும் ஏதாவது சொல்வதற்கு மீதி இருக்கிறதா. ஏற்கனவே உன் பங்குக்கு

நீயும் ,உன் மனைவி என்றவள் இல்லையில்லை அப்படி சொன்னால் அது நான் என்னை தெரிந்தே ஏமாற்றுவதற்கு சமம். அந்தப் பெண் அவள் பங்குக்கு பேசி விட்டீர்கள். இன்னும் என்னப்பாஎன்றபடி இப்போது கீர்த்தியைப் பார்த்தாள்.

அவர்கள் பேசுவது அவள் காதில் விழுந்தபடியால் அருந்ததியின் பார்வையினை சந்திக்க முடியாமல் தரையினை நோக்கினாள். கண்டிப்பாக இப்படி ஒரு மாமியார் கிடைக்க அவள் கொடுத்துதான் வைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படிப்பட்டவளையே அவள் பேச்சினை மதிக்காமல் பேசியது நினைவுக்கு வர உண்மையிலயே இதெல்லாம் தன் வாழ்வில்தான் நடக்கிறதா என்று தெரியவில்லை. ஏன் என்றும் புரியவில்லை.

ஒரே மாதத்தில் ஒரே மாயமாக நடந்து விட்டது. ஆனால் அவளைப் பொறுத்த வரை எல்லாமே அவளை விட்டு போய் விட்டார் போல் ஒரு உணர்வு. இதோ நேற்றிலிருந்து அருந்த‌தி அவளிடம் பாராமுகம் காட்டிவிட்டாள்.

வினோத் வீட்டிலோ இவளிடம் திருமணத்தன்று பேசியது. அதுவும் தாங்கள் வளர்த்த பெண் நன்றாக வாழ வேண்டும் என்று அவர்களின் ஆசிர்வாதம் கூறியதோடு இருந்து விட்டனர். ஆனால் வினோத் மட்டும் தனக்குள்ள வேதனைகளை மறைத்தபடி பேசிக் கொண்டிருந்தான். எப்படிப் பட்ட குடும்பம் .எல்லாம் கைநழுவி போய்விட்டதை யாரிடம் தான் புலம்ப முடியும்.

ராகவ் மைதிலியோ ஏதோ பெண் ஆசைப்பட்டாள் என்பதோடு பழைய மாதிரி அவளிடம் கலகலப்பினை காட்டுவதில்லை. முதலில் இருந்த நிலைமைக்கு இப்போது பரவாயில்லை என்ற மட்டில் சந்தோசம். எதிர்காலத்தில் அவர்கள் இன்னொரு இடியை வேறு தாங்க வேண்டும். ஜெகனாதன் மட்டுமே அவளுடன் பூரண மன நிம்மதியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு உண்மை நிலை தெரிய வரும்போது அருந்ததியைக் காட்டிலும் மிகுதியான கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

இதற்கெல்லாம் காரணம் தன் விதி மட்டுமல்ல அவன் முன்னால் நின்று கொண்டிருக்கும் இந்த பாலாவும்தான்…. எனும் போது நெஞ்சம் துடித்தது.கண்களில் அவளையுமறியாமல் கண்ணீர் கசிந்தது.

அவளைப் பொறுத்தவரை அவள் தாயும் தந்தையும் தான் கடைசி வரை அவளின் பற்றுதல் . அவர்களுக்காக தன் வாழ்க்கையினை பணயம் வைத்தாகி விட்டது. அது அவர்களுக்கு தெரியாமல் இருக்கப் போவதில்லை…. கொஞ்ச நாள் கண்ணீர் வடிப்பார்கள். அவர்களால்தான் தங்கள் மகளின் வாழ்வு வீணாகிவிட்டது என்று குமுறுவார்கள். நாளாக நாளாக சரி ஆகிவிடும். ஏன் தனக்கே சரியாக வில்லையா கிட்டத்தட்ட அவளின் வாழ்க்கையில நடந்த பிரச்சனையில் தன் வாழ்க்கைக்கு ஆதாயம் தேடிக் கொண்ட சுயநலவாதியுடன் வாழவில்லையா எனும் போதே இதில் அவளது சுயநலமும் பாதி இருக்கிறது என்பதை மறுக்க முடியவில்லை அவள் எண்ண ஓட்டங்கள் தாறுமாறாக ஓடியதை நிறுத்தியபடி பேசிக் கொண்டிருந்த தாயிடமும் மகனிடமும் கவனத்தை திருப்பினாள்.

அம்மா நான் ஏன் பண்ணினேன் என்று நினைத்துப் பாருங்கள். எனக்கு வேறு வழி இல்லையே…. நான் என்ன பண்னுவது.எனக்கு அப்பாவை காப்பாற்ற வழி தெரிய வில்லைமா…” என்றவனை தீர்க்கமாகப் பார்த்தவள்

உனக்கு மட்டும் தான் அம்மா அப்பா இருக்கிறார்களா? நீயாவது ஆண்பிள்ளை உனக்கே…. என்ன வழி செய்வதுஎப்படி உன் வாழ்வை நேராக்குவது?.... என்று தெரியாமல் நாங்கள் எப்படியெல்லாம் துடித்தோம் தெரியுமா, எங்களுக்கே இந்த நிலைமை என்றால் அவர்களின் நிலைமை என்ன சொல்வது?.... சத்தியமாய் சொல்கிறேன்…. பாலா அவர்கள் வயிறு எரிந்து சாபம் விட்டால் இந்த ஜென்மம் மட்டுமில்லை ,இனி வரும் ஏழேழு ஜென்மத்திற்கும் நமக்கு நல்ல வழி கிடையாது. என் மனசாட்சியே என்னை தினம் கொல்கிறது ……. நீ செய்து வைத்திருக்கிற காரியத்திற்கு நான் எத்தனை கடவுளை வேண்டினாலும் அதற்கெல்லாம் பலன் கிடைக்குமா என்று தெரியவில்லை….. நீ செய்த பாவம் உன் அப்பாவை பாதித்தால் ….. அய்யோ நினைக்கும் போதே எனக்கு தலையே வெடித்து விடும் போல் இருக்கிறது

என்றபடி புலம்பியவளை தேற்ற திராணியில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ராகவனும் மைதிலியும் அவர்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை பார்த்தவன் உடனே அருந்ததியிடம்

அம்மா கீர்த்தியின் அம்மா அப்பா வருகிறார்கள் ,தயவுசெய்து அவர்களிடம் எதையும் காட்டிக் கொள்ள வேண்டாம்”. என்றபடி எச்சரித்தவன் கீர்த்தியிடமும் சைகை செய்தான்.

ராகவும், மைதிலியும் அருகில் வரும்போதே தன் வாக்குவாதத்தினை நிறுத்தியவள் , அவர்கள் அருகில் வரும்போது தன் முகத்தில் இருந்த எல்லா கவலைகளையும் மீறி புன்னகை செய்தாள் அருந்ததி. இந்த ஒரு மாதத்தில் அருந்ததியும் மைதிலியும் ஒருவரையொருவர் பெயர் சொல்லிக் கூப்பிடும் அள‌விற்கு நெருங்கியிருந்தனர். அவளருகே வந்த மைதிலி அருந்ததியின் கைகளினை ஆறுதலாகப் பற்றியபடி

அண்ணனுக்கு எப்பொழுது ஆபரேசன் ஆரம்பிப்பார்கள். நாங்கள் போய் பார்த்து விட்டு வரட்டுமா , கோவிலில் காலையில் அர்ச்சனை செய்து எடுத்து வந்திருக்கிறேன். அந்த பிரசாதத்தை எல்லாம் கொடுக்க முடியாது. இந்த விபூதியையும் , குங்குமத்தையும் மட்டும் வைத்து விட்டு வந்து விடுகிறேன் அருந்ததி. அண்ணனை பார்க்க போக அனுமதிப்பார்களாஎன்றவள் ராகவனை அருந்ததிக்கு ஆறுதலாய் ஏதாவது சொல்லுமாறு ராகவை அழைத்தாள்.

ராகவனும் இந்த ஆபரேசனாலாம் இப்போது மருத்துவ உலகில் சாதாரணம். அதிலும் டாக்டர் முரளி இதில் தேர்ந்தவர் அதுமட்டுமில்லாமல் …. ஜெகனாதனின் உடல்நிலை அவருக்கு ஆரம்ப நிலையிலிருந்து தெரியும். அதனால் கண்டிப்பாக நமக்கு நல்ல படியாகத்தான் நடக்கும். அழுதழுது உடம்பை நோகடித்து கொள்ளாதேமா . நீ தைரியமாய் இருந்தால்தானே அவருக்கும் ஒரு அமைதியாய் இருக்கும். உன்னைப் பார்த்து பார் பாலாவும் கஷ்டப்படுகிறார்…..”

என்று ஆறுதலாய் பேசியவர்

சரி வாம்மா ஜெகனைப் போய் பார்த்துவிட்டு வருவோம்

என்றபடி அருந்ததியையும் மைதிலியையும் அழைத்தபடி ஜெகனைப் பார்க்கச் சென்றார்.

அதன் பிறகு கிட்டத்தட்ட அரைமணி நேரத்தில் ஜெகனாதன் ஆபரேசன் தியேட்டருக்கு மாற்றப்பட்டு ஆபரேசனும் வெற்றிகரமாக முடிந்து விட்டிருந்தது.

மயக்க நிலையில் இருந்த ஜெகனாதனைப் பார்த்த அருந்ததி பார்த்து இதுவரை ஊமையாய் மனதினுள் அழுதவள் தன் நிலை மறந்து கதறத் தொடங்கினாள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத மற்றவர்கள் அவளுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியாமல் திகைத்தனர்.முதலில் பாலாதான் நிலைமையினை சமாளித்தவன் தன் தோள்களில் தன் தாயினை தாங்கியபடி

அம்மா அப்பாவுக்கு இனி ஓன்றுமே இல்லை. எதற்கம்மா அழுகிறீர்கள். அப்பா அபாயகரமான கட்டத்தையெல்லாம் தாண்டி விட்டார். இனி நாம்தான் அவரது உடல நிலையினை தேற்ற வேண்டும்

.என்றவன் அதற்கு மேல் வார்த்தை வராமல் தாயின் கண்ணீர், கண்ணாடி வழியே பார்த்த போது தந்தை கட்டிலில் கிடந்த நிலை இவை எல்லாம் அவனையும் அலைகழிக்க இப்போது அவன் கண்களிலும் கண்ணீர் கரை புரண்டது.

இதற்கு மேல் இனி அவர்களை பார்த்துக் கொண்டே இருப்பது நல்லதல்ல என்று நினைத்த ராகவ் கீர்த்தியை அழைத்து

பாலாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு செல். எப்படியும் ஜெகன் கண் முழிக்க 4 மணி நேரத்திற்கு மேல் ஆகும்.அருந்ததியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இருவரும் இருந்தால் ஒருவரை ஒருவர் பார்த்து அழுது கொண்டே இருப்பார்கள்என்று கூறி விட்டு

அருந்ததியின் அருகில் நின்று கொண்டிருந்த பாலாவிடம் சென்று அவனை வற்புறுத்தி வீட்டிற்கு கீர்த்தியுடன் அனுப்பி வைத்தார்.

கீர்த்தியும் பாலாவும் மருத்துவமனையிலிருந்து வெளியேறி பெசன்ட் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்தன்ர். அருந்ததியின் பாராமுகம் அவர்கள் இருவருக்குமே பெரும் வருத்தமாக இருந்தது.

அருந்ததிக்கே இப்படி என்றால் தன் பெற்றோரை நினைத்த கீர்த்திக்கு நினைக்கும் போதே உடல் சிலிர்த்தது. பாலாவுக்கோ இத்தனை நாள் தந்தையிடம் நடத்திய போராட்டத்திற்கு தற்காலிகமாய் உருவாக்கப் பட்ட விசயமே இப்போது தாயை அவனுக்கு எதிராக திசை திருப்பி விட்டு விட்டது. இப்படியாக இருவரும் அவரவர் போக்கில் அவரவர் மனங்கள் தத்தளிக்க , கடந்த காலத்தை நோக்கி இருவர் மனமும் பயணித்தது …………………….

1,177 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comments


© 2020 by PraveenaNovels
bottom of page