அத்தியாயம்: 1
காலைக் கதிரவன் தன் கரங்களினால் மெல்ல மெல்ல இருளென்னும் போர்வையினை பகலெனும் மேனியிலிருந்து விலக்கிக் கொண்டிருந்தான். கதிரவனைக் கண்ட பறவைகள் அக்கதிரவனை வரவேற்கும் விதமாக ஆர்பரித்து தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. சென்னையின் வழக்கமான பரபரப்பு மிகுந்த காலை தொடங்கியிருந்தது. ஆனால் மைலாப்பூரில் அமைந்திருந்த அடுக்கு மாடி கட்டிடத்தின் 4 வது மாடியின் ஒரு ப்ளாட்டில், இதையெல்லாம் கண் மூடி ரசித்துக் கொண்டே, விழிப்பு வந்தபோதும் எழ மனம் இல்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் கீர்த்தனா என்கின்ற கீர்த்தி. இவள்தான் நம் கதாநாயகி.
கீர்த்தனா- இறைவன் மிகுந்த சந்தோசமான தருணத்தில் படைக்கப்பட்ட படைப்பு. அறிவு, அழகு, பண்பு, செல்வம் இவை அனைத்தும் அப்படைப்பை நிறைவு செய்யும்வண்ணம் படைத்து இவ்வுலகிற்கு அனுப்பியிருந்தான். அழகான அன்பான தாய், தந்தைக்கு தவமாய் பிறந்த ஒற்றை ரோஜா. தந்தை ராகவன் வங்கி ஒன்றில் மேனேஜராக இருக்கின்றார். தன் ஒரே செல்ல மகளின் தேவைக்கும் அதிகமான வருமானம். தாய் மைதில…, கீர்த்தி, ராகவ் மட்டுமே தனது உலகமாய் வாழ்பவள். ராகவனை திருமணம் செய்தாள் என்ற ஒரே காரணத்தால் உறவுகளினால் உதறி தள்ளப்பட்டவள். ஆனாள் அந்த மன வருத்தமெல்லாம் ராகவனின் அன்பினால் துடைக்கப்பட்டு, வாழ்க்கையை நிறைவுடனும், மகிழ்வுடனும் அனுபவித்துக்க் கொண்டிருந்தாள்
கீர்த்தி B.E(CS)- படித்து முடித்து இன்று ஒரு வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் உள்ள சாஃப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்.
“கீர்த்தி” என்ற மைதிலியின் குரல் கீர்த்தியின் அருகாமையினில் கேட்டது.
தனது தாயின் குரலைக் கேட்ட கீர்த்தி “என்னம்மா” என்று தூக்க கலக்கம் மாறாமல் சிணுங்கினாள்.
”மணி என்னாகிறது பார்?அப்புறம் லேட்டாகுதுன்னு என்ன படுத்துவ,எழுந்திரும்மா”
என்று கெஞ்சலுடன் எழுப்பினாள். ஏனென்றால், கீர்த்தியிடம் காரியம் ஆக வேண்டுமென்றால் கோபமோ அல்லது அதிகாரமோ எடுபடாது. கொஞ்சம் இலகுவாக பேசினாள் போதும். மைதிலியின் குணமும் அப்படித்தான். தாயை போல பிள்ளை என்று சும்மாவா சொன்னார்கள். மைதிலியும் அந்த பாணியைத்தான் கடை பிடிப்பாள் மகளிடம். இன்றும் அப்படித்தான்.
தாயின் நெகிழ்வான குரலில் மெதுவாக கண்களை திறந்த கீர்த்தி,
“டைம், என்னம்மா இவ்ளோ சீக்கிரம் எழுப்பறீங்க” என்று போர்வையை விலக்காமல் வினவினாள்.
”6.30 டா” என்ற மைதிலியிடம்,
”அம்மா கரெக்டா சொல்லுங்கம்மா” என்றபடி மீண்டும் படுக்கையில் புரண்டாள்.
”உனக்கு வர வர கொழுப்பு ஜாஸ்தி அதிகமாயிட்டே வருது. உன்ன…….. என்று பொய்யான கோபத்துடன் கடிந்தவள், 6.27 ஆகுது. போதுமா இப்ப எழ போகிறாயா இல்லயா” என்ற மைதிலியிடம்,
”அய்யோ ,அம்மா, இன்னும் 3 minutes இருக்கிறது. என் டைம waste பண்ணீட்டீங்களே” என்று அலுத்தவள், அதற்கு மேல் எதுவும் பேசாமல் போர்வைக்குள் சரண் புகுந்தாள்.
இனி இவளிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்த மைதிலி, எழுந்து றெக்கை கட்டி பறக்கும் போது உனக்கு இருக்குடி என்று முணுமுணுத்தவாறு கிச்சனுக்குள் புகுந்தாள்.
அதன் பிறகு குளித்து முடித்து கீர்த்தி வெளியே வந்த பொழுது, ராகவன் தன் ஜாகிங்கை முடித்துவிட்டு வந்து நியூஸ் பேப்பரை படித்துக் கொண்டிருந்தார்.
”குட் மார்னிங்ப்பா” இப்பத்தான் ஜாகிங் முடித்து விட்டு வருகிறீர்களா? என்றபடி அவர் அருகில் அமர்ந்து கீர்த்தியும் பேப்பரில் கண் பதித்தாள்.
“குட் மார்னிங்” டா.” என்றவர் இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகி விட்டது என்று கூறி அதற்குரிய காரணத்தையும் விளக்கினார்
.”ஓ அப்படியாப்பா” என்றவள் கிச்சனில் மும்முரமாய் வேலையில் இருந்த மைதிலியை நோக்கியவள், தன் குறும்பை தொடங்கினாள்.
“அப்பா” என்று இழுத்தவள், நீங்க இப்படி லேட் பண்ணிடுவீங்க அப்புறம் ஆஃபிஸ் கிளம்பும் போது என்னம்மோ அம்மாவினால்தான் லேட் என்பது மாதிரி லேட் ஆகிடுச்சு லேட் ஆகிடுச்சுனு கால்ல சுடுதண்ணி கொட்டுன மாறி குதிப்பீங்க. என்னங்கம்மா நான் சொல்வது சரிதானே என்று மைதிலியையும் தன் சப்போர்ட்டாக இழுத்தாள்.
ஹாலில் அவள் பேசியது எல்லாம் மைதிலியிம் காதில் விழாமல் இல்லை, தினமும் கீர்த்தி என்ன செய்வாளோ அதையெல்லாம் தன் கணவன் செய்வது போல மாற்றி சொல்லிக் கொண்டிருந்த தன் மகளின் குறும்புத் தனத்தை ரசித்தவாறே செய்வது போல தன் மகளின் குறும்புத் தனத்தை ரசித்தவாறே வேலை செய்து கொண்டிருந்தாள். கீர்த்தியோ ராகவை அத்துடன் விடுவதாக இல்லை.
”ராகவ், வர வர சரி கிடையாது நீ. அம்மாவுக்கு தெரியாமல் அங்க எந்த பொண்ணாவது கம்பெனி குடுக்குதா என்ன. ஜாகிங் பண்ற டைம் அதிகமாய்ட்டே வருதே. விடக் கூடாதே இப்படியே….” என்றபடி கண் சிமிட்டினாள்.
“ஏன்டா? இன்னைக்கு யாரும் உன்கிட்ட மாட்டலயா, நான்தான் கிடைத்தேனா” என்றார் அப்பாவியாக
அவர்கள் இருவருக்கும் காஃபி எடுத்து வந்த மைதிலி, கீர்த்தியை பார்த்து,
“உனக்கு செல்லம் குடுத்து வாய் ஜாஸ்தி ஆகி விட்டது. இந்த வாயெல்லாம் இந்த வீட்டோட நிறுத்திக்க. என் அண்ணன் வீட்டில் மானத்த வாங்கிடாத. பாவம் விநோத்” என்றாள்.
சீரியஸாகவே முகத்தை வைத்துக் கொண்டு
“அப்படி ஒரு பாவம் எனக்கு ஒன்றும் வேண்டாம். உங்க மருமகனுக்கு வேற ஒரு பொண்ண பாருங்க.யாரும் ஒண்ணும் இங்க அவன மேரேஜ் பண்ண வேண்டுமென்று ஒத்தை காலில் நிற்க வில்லை” என்றவள் தனது தந்தையிடம் திரும்பி,
“அப்பா அவன என் பெயரை ஒழுங்கா கூப்பிட சொல்லுங்க முதலில்” என்றவளிடம்
“நீ விநோத்தை மரியாதையாக கூப்பிட try பண்ணுடா” மரியாதையாக என்ற இடத்தில் அழுத்தி திருத்தினார்.
”இந்த விசயத்திலாவது உங்க பொண்ண சப்போர்ட் பண்ணாம இருக்கறீங்களே அந்த மட்டில எனக்கு சந்தோசம்” என்றாள் மைதிலி ராகவனை பார்த்து.
மைதிலி கொஞ்சம் டென்சனாக இருப்பதை உணர்ந்த கீர்த்தி, ராகவனிடம் “அப்பா அம்மாவுக்கு என்ன ஆச்சு,ரொம்ப சூடா இருக்காங்க” என்று கேலியாகக் கேட்டவள், மைதிலியின் அருகில் சென்று அமர்ந்து,
“அம்மா, இந்த ஜாகிங் மேட்டரெல்லாம் சும்மா. நீங்க கண்டதெல்லாம் நினைத்து feel பண்ணாதீங்க. ராகவ் யாரையும் பார்க்க மாட்டான். ராகவத்தான் பொண்ணுங்க பார்ப்பாங்க. அதுக்கு காரணம் இந்த ராகவதான். பின்ன இந்த வயதில் தலைக்கு டை அடிச்சு, exercise பண்ணி இன்னும் சின்ன பையன் மாதிரி இருந்தா அந்த பொண்ணுங்களும் என்ன பண்ணுவாங்க. ஆனா நீ கவலை படாத மைதிலி ,இனிமேல் ராகவ்க்கு காவலா நான் போகிறேன்”
என்ற மகளை நினைத்து சிரித்தாள் மைதிலி. ஏனென்றால் 6.30க்கு எழுப்பினாலே எழ சோம்பேறித்தனம் படுபவள், தினம் 5 மணிக்கு எழுந்து ஜாகிங் செல்லும் தனது கணவனுக்கு காவலாக செல்லுவதாய் சொன்னால் சிரிப்பு வராமல் என்ன செய்யும்.தனக்கு காவலாய் வருவதாக சொல்லிக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்த கீர்த்தியை,
“ஏய்” என்று ராகவ் துரத்த, அம்மா அப்பாவிடம் இருந்து ”என்னை காப்பாதுங்க” என்று மைதிலியின் பின்னால் சென்று கட்டிக் கொண்டாள்
“நான் எப்பவும் என் புருசன் கட்சிதான்பா” என்றபடி, கீர்த்தியை தன் கணவனிடம் மாட்டி விட்டாள் மைதிலி.
”இப்ப என்ன பண்ணுவீங்க மேடம்” என்று அவளது காதைத் திருகினார் ராகவ்.
”எனக்கு காவலா நீங்க வறீங்களா மேடம். அப்புறம் வேறன்ன மேடம் பண்ணுவீங்க” என்றவரிடம்,
“சரி சரி விடுங்க ,எனக்கு இந்த வீட்டில் சப்போர்ட் பண்ண யாரு இருக்காங்க,
”அய்யோ கீர்த்தி, இப்படி தனியாளா நிற்கிறாயே உன் நிலமை இந்த உலகத்தில் வேறு யாருக்கும் வர கூடாது” என்று புலம்பியவாரே தனது அறைக்குள் சென்ற மகளை ரசித்தவாரே சிரித்தனர் அவளை பெற்றவர்கள்.
தனது அறைக்குள் சென்றவள் அலுவலகம் செல்ல தயாரானாள். கண்ணாடியின் முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்தவளுக்கு இந்த உலகத்தின் கொடுத்து வைத்தவர்களின் பட்டியலில் தனது பெயர்தான் முதல் இடமாக இருக்க வேண்டும் என்று நினைத்த பொழுதே கண்ணாடியில் பார்த்த அவள் முகம் பூரித்திருந்தது
பின்னெ இருக்காதா. அவளை பொறுத்த வரை அவளது தந்தை அவளுக்கு ஒரு ஹீரோ, தாய் ஒரு தேவதை. அவள் மனம் நோகாமல் ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து பண்ணுபவர்கள். அவளை பொருத்தவரை அவளது வீடு ஒரு பிருந்தாவனம்.
அவளது கல்லூரியில் கூட பெரும்பாலான அவளது பேச்சு ராகவ், மைதிலியை பற்றிதான் இருக்கும்.அதிலும் ராகவை பற்றி தினமும் ஒரு வார்த்தையாவது பேசாவிட்டால் அவளுக்கு தூக்கம் வராது. சில நேரங்களில் மைதிலிக்கு சுற்றியெல்லாம் போடுவாள்
“என்னடா, என்ன விசயம் அம்மாக்கு இப்படி ஐஸ் வைக்கிறாய் . என்று விசாரித்தால், நீங்க வேறப்பா நீங்க, ஸ்மார்டா, சூப்பரா இருந்துட்டு அம்மாவ பிருத்விராஜ்,சம்யுக்தாவா தூக்கிட்டு வந்த மாதிரி தூக்கிட்டு வந்துட்டீங்க, உங்க கதையை சொன்னாள் என் friends லாம் அம்மா மேல கண்ணு வச்சுட்டாங்க என்றபடி ஊருக்கண்ணு, உலகுக் கண்ணு, then last இந்த கீர்த்தி கண்ணு என்றபடி துப்புங்கம்மா என்பாள் கீர்த்தி.
கீர்த்திம்மா உனக்குதான் வேலை இல்லை ,நீ பண்ற வேலைக்கெல்லாம் என்ன வேற கூட்டு சேர்க்கிரியா என்று பொய்யாகச் சலிப்பாள்.
ஹேய், மைதிலி, சும்மா பந்தா பண்ணாதே, ஏதோ எங்க அப்பாவை மேரெஜ் பண்ணினதுனால் இவ்ளொ மவுசு .இல்லைனா யாரு மதிக்கப் போறா” என்று மிரட்டி பணிய வைப்பாள்
”கீர்த்திம்மா லேட் ஆகுது. லஞ்ச் பாக்ஸில் லஞ்ச் எடுத்து வச்சுட்டேன். சாப்பிட வா” என்ற மைதிலியின் குரல் கேட்டு வேகமாய் தனது அலங்காரத்தை முடித்து வெளியே வந்தவள் பேருக்கு இரண்டு வாய் போட்டுக் கொண்டு கிளம்பினாள் கீர்த்தி. ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தவள், பால்கனியில் நின்ற ராகவ்,மைதிலியை மேலே பார்த்தபடி கையசைத்துவிட்டு அவளின் அபார்ட்மெண்ட் கேட்டை தாண்டினாள். அவள் போகும் வரை பார்த்துக் கொண்டிருந்த ராகவ், மைதிலியிடம், நம்ம கீர்த்தி எப்போதும் இப்படி சந்தோசமா இருக்க வேண்டும். இதுதான் நான் கடவுளிடம் வேண்டுவது. இந்த சந்தோசம் அவ போகப் போற இடத்திலயும் இருக்கணும். அது போதும் எனக்கு.என்றார் அவள் போன திசையை பார்த்தபடி.
மௌண்ட் ரோடு சிக்னலில் நின்று கொண்டிந்த கீர்த்தி மணியை பார்த்த பொழுது 8.45 ஆகியிருந்தது. “ச்ச்சேய்” என்று எரிச்சலுடன் சிக்னலை நோக்கியவள்,இன்னும் 15 நிமிடத்தில் ஆஃபிஸில் இருக்க வேண்டுமே. இன்று லேட்தான் என்று நினைக்கும் போதே சிக்னல் மாறியிருந்தது. வேகமாக பைக்கை ஸ்டார்ட் செய்தாள் கீர்த்தி. ஆனால் கீர்த்தியின் பின்னால் நின்றிருந்த ஒரு பைக்காரன், கிடைத்த கேப்பில் அவர்களுக்கு முன்னால் நின்று கொன்டிருந்த பேருந்தையும் தாண்டி வேகமாக செல்ல முயல, அவனது அவசரத்தினால், மொத்த போக்குவரத்தும் மீண்டும் ஸ்தம்பித்தது. நல்ல வேளையாக பேருந்து ஓட்டுனரினால் உயிர் சேதம் தடுக்கப் பட்டாலும், விபத்தினை தவிர்க்க முடியவில்லை. பைக் பேருந்தின் இடையில் மாட்டினதால், பேருந்துக்கு பின்னால் நின்ற அத்தனை வாகனங்களும் முன்னேற வழி இல்லாமல் நின்று கொண்டிருந்தன.
ஒரு வழியாக அந்த சிக்னலை கடந்த போது மணி 10 ஐ நெருங்கியிருந்தது. ஏற்கனவே லேட் ஆகி விட்டது என்ற எரிச்சலில் இருந்த கீர்த்திக்கு, அந்த பைக்கில் வந்தவனை மனதிற்குள்ளாக திட்டிக் கொன்டிருந்தாள். என்னதான் அவசரமோ என்று நினைத்தவளுக்கு அப்பொழுதுதான் அவளது அலுவலகம் ஞாபகம் வந்தது. போனவுடன் அவளது Team Leader கேசவனிடம் அவளது அன்றைய கால தாமதத்திற்கு விளக்கம் வேறு அளிக்க வேண்டும் என்று நினைத்தபடி முந்தைய தினம் அலுவலகத்தில் நடந்தவற்றை நினைத்தபடி அலுவலகத்தை நோக்கி முடிந்த அளவு வேகமாக சென்று கொண்டிருந்தாள் கீர்த்தி.
நேற்று அவளது MD பாலா அலுவலகம் வர வில்லை. அதனால் அவள் இருக்கும் தளத்தில் ஒரே ஆட்டம், பாட்டம். ஒருவர் கூட வேலை செய்ய வில்லை. கீர்த்தியும் செய்து கொண்டிருந்த புராஜெக்டும் முடிந்து விட்டிருந்தது. அதனால் அவளும் அன்றைய கலகலப்பில் அவளும் தன் பங்கிற்கு தனது தோழி கவியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள். கவி கீர்த்தியுடன் அந்த அலுவலகத்தில் சேர்ந்தவள். சேர்ந்த நாள் முதல் அவர்களிருவரும் இணைபிரியா தோழிகள்.
கவியும் அவளுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாலும் கவிக்கு பாலா வராததில் கொஞ்சம் வருத்தம். அவ்வப்போது அவள் கீர்த்தியிடம் புலம்பிக்கொண்டிருந்தாள். “பாலா சார் இன்னைக்கு லீவ் என்று தெரிந்திருந்தால் நானும் வந்திருக்க மாட்டேன். போர் அடிக்குதுப்பா” என்று அவள் விளையாட்டாக கூறினாலும் கீர்த்திக்கு சிரிப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.
ஏனென்றால், பாலா காலையில் வரும் பொழுதும் மட்டுமே பார்க்க முடியும். மாலையில் கூட அரிதுதான். அவ்வப்போது சந்தேகங்களை நிவர்த்தி பண்ண வேண்டியிருந்தால் மட்டுமே தனது அறையை விட்டு வெளியே வருவான். கீர்த்திக்கு தெரிந்த வரையில் அவளது இன்டெர்யூவில் மட்டுமே பேசி இருக்கிறாள். அதன் பிறகு பேசியது இல்லை. Project சந்தேகம் என்றால் கூட டீம் லீடர் மூலமாகத்தான் தொடர்பு கொள்ள முடியும். அப்படிப்பட்டவன் வரவில்லை என்பதால் போர் அடிப்பதாக கவி சொன்னபோது கீர்த்திக்கு ஆச்சரியமும், சிரிப்பும் வராமல் என்ன செய்யும். நினைத்த பொழுதே கீர்த்திக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. உண்மையில் அவனுக்கு அவர்களது பெயர்கள் கூட தெரிந்திருக்குமா என்பதே ஆச்சரியம்
கீர்த்தி எவ்வளவுதான் வீட்டில் வாயடித்தாலும் வெளி இடங்களில் அந்த அளவு பேச மாட்டாள். அந்தந்த இடங்களில் சூழ்நிலைக்கு ஏற்றவாறே கவனமாக நடந்து கொள்வாள். அந்த அளவுக்கு அவளது பெற்றோரின் வளர்ப்பு இருந்தது. அலுவலகத்தில் கூட தானுண்டு தன் வேலையுண்டு என்றுதான் இருப்பாள். அதற்காக உம்மணா மூஞ்சியாகவும் இருக்க மாட்டாள். கவிதாவிடம் மட்டுமே நெருக்கமாக பழகுவாள்.
கவியை கிண்டல் செய்வதே அலுவலகத்தில் கீர்த்தியின் பொழுதுபோக்கு. காலையில் பாலா அலுவலகத்தில் நுழையும்பொழுதே கவி கீர்த்திக்கு கால் பண்ணி விடுவாள். ” கீர்த்தி, நம்ம சார் இந்த shirt- ல so charm லா இன்னைக்கு என்று பாலாவை பற்றி கூறி ஏதாவது கூறிய பிறகுதான் தனது பணிகளையே தொடங்குவாள். கீர்த்தியும் தன் பங்குக்கு கவியை கிண்டல் அடித்து விட்டு போனை வைப்பாள்.
அலுவலக நினைவுகளில் மூழ்கியிருந்தவள், இன்றும் அவளது MD பாலா வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினத்தபடி அலுவலக மெயின் கேட்டை அடைந்தாள். ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு மணியைப் பார்த்தவளுக்கு, அவளது கைக்கடிகாரம் வஞ்சகமில்லாமல் 10.45 என்றுகாட்டியது. தன்னை நொந்தபடி அப்போதுதான் மூடப் போன லிஃப்ட்டை நோக்கி வேகமாக நடந்தாள் கிர்த்தி. லிஃப்டின் உள்ளே நுழைந்த கீர்த்திக்கு மின்சாரம் தாக்கியது போல் உடல் அதிர்ந்தது. அங்கு அவளது MD பாலா நின்று கொண்டிருந்தான். சற்று சுதாரித்த கீர்த்தி
“Good….. Good morning Sir” என்றாள்.அவனும் பதிலுக்கு சற்று புன்னகையுடன் சொல்லிவிட்டு ,” எந்த ஃப்ளோர் 6 or 7 என்று கேட்டான். ஏனென்றால் அவனது அலுவலகம் அந்த இரண்டு தளங்களில் இயங்கிக் கொண்டிருந்தது.” 7 சார்” என்றாள் கீர்த்தி. சொல்லியபோதே தினம் தன்னை கடந்து போகிறான். அவள் எந்த ஃப்ளோர் என்று கூட தெரியாதா இவனுக்கு. திமிர் பிடித்தவன், இவனையும் போய் கவிக்கு பிடிக்கிறதே.என்று அவனைத் திட்டியவள், நான் அவனது அலுவலகத்தில் வேலை செய்கிறேன் என்று தெரிந்திருக்கிறதே அந்த மட்டில் பரவாயில்லை. என்று நினைத்தபடி நின்று கொண்டிருந்தவளுக்கு , அப்போதுதான் தான் தாமதமாக வந்திருக்கிறோம் என்பது நினைவுக்கு வந்தது. அதுவும் பாலாவிடமே மாட்டி விட்டோமே, என்ன காரணம் என்று சொல்லி விடலாமா என்று யோசித்தவள், சொல்லிவிடலாம் என்று “சார் இன்று ” என்று அவள் ஆரம்பித்த பொழுது லிஃப்ட் ஒரு ஆட்டத்துடன் நின்றது.
அதற்குள்ளாகவா 7த் ஃப்ளோர் வந்து விட்டது, என்று பார்த்தவளுக்கு , 4th ஃப்ளோரை காண்பித்துக் கொண்டிருந்தது. தான் சொல்ல வந்ததை மறந்து விட்டு ,”என்னாயிற்று சார்” என்றாள் பதட்டத்துடன் அவனோ ,அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மொபைலில் கால் பண்ணிக் கொண்டிருந்தான்.
“ப்ரவீன் நான் பாலா பேசுகிறேன். இங்க ரைட் கார்னரில் ஃபர்ஸ்ட் லிஃப்ட் வொர்க் ஆகவில்லை. என்னாயிற்று என்று பார்த்து சரி பண்ணச் சொல்லுங்க” என்று கீர்த்தியை பார்த்தபடியே பேசிக் கொண்டிருந்தான்.” ok ப்ரவீன் சீக்கிரம்” என்றபடி மொபைலை கட் செய்தவன் ,அவளை பார்த்து சிரித்தபடி
”என்ன கீர்த்தனா இப்படி பயப்படுறீங்க, ஒண்ணும் ப்ரச்சனை இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் லிஃப்ட் வொர்க் ஆகிவிடும் பயப்படாதீங்க ” என்று கூறினான்.
“இல்ல இல்ல சார்” அதெல்லாம் ஒண்ணும் இல்ல” என்று அவள் வாய் சொன்னாலும் அவள் கண்களில் பயமும் அத்துடன் ஆச்சரியமுமிருந்தது. நம்ம பெயர் கூட தெரிந்திருக்கிறதே வியப்புடன் பாலாவை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அப்போதுதான் அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது ஞாபகம் வந்தவளாய் வேகமாக வேறு திசையை நோக்கி திரும்பியள், காலையில் இருந்தே நேரம் சரியில்லை நமக்கு என்று நினைத்தவாறு லிஃப்ட்டை அளவெடுத்துக் கொண்டிருந்தாள். கைகளை கட்டிக் கொண்டு அவளுக்குள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவனது மொபைல் ஒலித்தது.அதை அட்டெண்ட் செய்தவன்
“ஓகே ப்ரவீன் 15 மினிட்ஸ் ஆகுமா” சரி ஆகிடும்ல, இல்லை என்றால் ரிப்பேர் பண்ண வேறு ஏதாவது வழி இருக்குமா என்று பாருங்க என்றபடி போனை வைத்தான்.
“இன்னும் 15 மினிட்ஸா ” என்று யோசித்தவள், அவன் ஏதாவது சொல்வான் என்று அவனை பார்த்தாள். அவனோ எந்த பதிலும் சொல்லாமல் அவனது மொபைலில் ஏதோ செய்து கொண்டிருந்தான் என்பதை விட எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்
நினைத்ததை விட கொஞ்சம் திமிர் ஜாஸ்திதான் இவனுக்கு, என்ன பிரச்சனை, எப்பொழுது லிஃப்ட் வொர்க் ஆகும் என்று வாயை திறந்து சொல்ல மாட்டானோ சரியான் கல்லுளிமங்கன் என்று முணுமுணுத்தவாறே லிஃப்ட்டை சுற்றி நோட்டமிட்டவளுக்கு 15 நிமிடங்கள் 15 யுகமாக கழிந்தது. நல்ல வேளையாக, சொன்ன நேரத்தில் லிஃப்ட் வொர்க் ஆனது ஒருவாறாக கீர்த்தி இருக்கையில் வந்து அமர்ந்தாள்.காலையிலிருந்து நடந்த நிகழ்வுகளினால் சற்று எரிச்சலுடன் சிஸ்டமை ஆன் செய்தவள் அன்றைய வேலைகளில் மூழ்கினாள்.
மதிய உணவு இடைவேளையின் போதுதான் கவியின் அருகே சென்றாள். “என்ன இவள் நம்ம கிட்ட காலையில் இருந்து ஒண்னுமே பேசவே இல்லை. என்ன காரணம்” என்ற யோசித்தபடி கவி சாப்பிட போகலாமா” என்று கேட்டாள். “ம்” என்ற ஒற்றை சொல்லுடன் தலைஆட்டினாள் கவி
அவளது சோர்வான முகத்தை பார்த்தவள், “மேடத்துக்கு இன்னைக்கு என்ன பிரச்சனை அதான் உங்க ஆளு தரிசனம் தந்துட்டாரே” அப்புறம் என்ன என்று அவளது காதருகில் குனிந்து மெதுவாகக் கூறினாள்
”போப்பா நானே மனசு சரி இல்லாம இருக்கிறேன் நீ வேற” என்று டல்லாக கூறியபடி பாக்சை எடுத்தவளை பார்த்த கீர்த்திக்கு அவள் உண்மையிலேயே கவலையாக் இருப்பது தெரிந்தது.
“என்ன விசயம் கவி” anything serious என்று கேட்டாள். தலையை மட்டும் ஆட்டிய கவியிடம் எதுவும் பேசாமல் அவளை அழைத்துக் கொண்டு சாப்பிடும் இடம் சென்று டேபிளில் அமர்ந்தாள் கீர்த்தி. சில நிமிடங்கள் இருவரும் பேசாமல் அம்ர்ந்திருந்தனர். கவியை பார்த்தபடியே இருந்த கீர்த்தி அவள் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்ததால் தானே என்னவென்று கேட்போம் என்று, “என்னப்பா என்னாச்சு? என்னவென்று சொன்னால்தானெ தெரியும் ” என்று மெதுவாக அவளிடம் ரம்பித்தாள்.
அதுவரை மௌனமாக இருந்த கவி, பேச ஆரம்பித்தாள்,”
கீர்த்தி நாம இந்த office ல் join பண்ணி எட்டு மாதம் ஆகியிருக்கும் இல்ல ” என்றவளிடம்
“ஆமா. நம்ம ஒண்ணாத்தானே வந்தோம். அதில் என்ன கவலை உனக்கு” என்று முறைத்தாள்
“நீ எப்படியோ கீர்த்தி, எனக்கு இந்த office எனக்கு மிகவும் பிடிக்கும், நீ,பாலா சார், நம்ம மற்ற ஆஃபிஸ் ப்ரெண்ட்ஸ் இப்படி எல்லாரையும் ரொம்ப பிடிக்கும்”. என்று நிறுத்தினாள்.
“சரி அதுக்கென்ன ” என்று சற்று தலையை சாய்த்துக் கேலி செய்தவளிடம்”
நீ இப்படியெல்லாம் கேட்டால் நான் ஒண்ணும் சொல்லவில்லை. நான் எவ்ளோ சீரியசாக பேசுகிறேன். நீ என்னடாவென்றால் கிண்டல் பண்ணுகிறாய் ” என்றாள் ஒரு மாதிரியான குரலில்
“ok ok இப்ப பாரு” என்று கை கட்டி, பவ்யமான் குரலில் கண்களில் தீவிரம் இருப்பது போல் பாவனை காட்டிய கீர்த்தியை பார்த்த கவி தன்னையும் மறந்து சிரித்து விட்டாள்.
“அம்மா தாயே இதுதான் உங்க ஊரில் சீரியசாக இருப்பதா,ரொம்ப கக்ஷ்டம்டி கீர்த்தி” என்று சொன்னவள், தொடர்ந்து, “கடவுளே இவளை கல்யாணம் பண்ணி கக்ஷ்டபட போற அந்த பாவப் பட்ட புண்ணியவானை நினைத்து ஒரெ கவலையாக இருக்குதே. நீதான் காப்பாற்ற வேண்டும் ” என்றபடி தலையில் கை வைத்தாள் கவி
அவள் பேசி முடிக்கும் வரை காத்திருந்த கீர்த்தி,கொஞ்சமும் காத்திராமல்“ஓ அப்போ இதுதான் உன்னோட கவலையா கவி, சரி என்ற படி கவியைப் போலவே” கடவுளே என் அருமை தோழி ஆசைப் பட்டதால், என்னை திருமணம் செய்து பாவ பலனை அனுபவிக்க போறவனின் பாவத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளப்பா. என் ஃப்ரெண்ட் கவி சந்தோசப் பட வேண்டும் ” என்றவாறு கவியிடம்
போதுமா கவி அப்புறம் என்ன? உன்னுடைய வேண்டுதலுக்கு இல்லேனாலும் நான் ரெகமெண்ட் பண்ணுவதால் கடவுள் நிறைவேற்றுவார். என்று கூறியவள்,தன் விளையாட்டை நிறுத்திவிட்டு, கவியின் கைகளை பற்றினாள்.
“என்ன கவி சொல்லுமா” என்று நெகிழ்வாகக் கேட்டாள். கீர்த்தியின் நெகிழ்வான குரலில் தன்னை கட்டுப் படுத்த முடியாமல் அவளையும் அறியாமல் கண்களில் நீர் பெருகியது கவிக்கு, தன் கைகளில் விழுந்த சூடான கண்ணீர் துளிகளில் அதிர்ந்தாள் கீர்த்தி,
“ஏய் கவி என்ன இது” என்று அவளருகில் அமர்ந்த கீர்த்தி்யிடம்
”கீர்த்தி ,அப்பாவுக்கு ட்ரான்ஸ்பெர் கிடைத்திருக்கிறது. அதுவும் டெல்லியில். என்னை வேலையை விடச் சொல்கிறார். தம்பிக்கு ஸ்கூலில் டிசி வாங்குவதுதான் அவரோட கவலை. நான் ஹாஸ்டலில் இருக்கேன் என்றாலும் விட மாட்றாங்கப்பா.டெல்லியில் வேலை தேடிக் கொள்ளலாம் என்கிறார். மனசே சரி இல்ல 1 மாதம் தான் இங்கே இருப்பேன் என்று நினைக்கிறேன்.இந்த வார இறுதியில் பேப்பர் போட வேண்டுமென்று” என்று கூறி விட்டு வெளியே வெறித்தாள் கவி.
கவியின் கைகளை தன் மடியில் வைத்து அழுத்திய கீர்த்திக்கு அவளது கவலையின் காரணம் புரிந்த போது ஒன்றும் கூறத் தோன்ற வில்லை.இருந்தாலும் அவளது அப்போதைய மனநிலையினை மாற்ற எண்ணியவளாய்
“ப்ப்பூ இவ்ளோதானா நான் கூட என்னமோ பெரியதாக கூறப் போகிறாய் என்று பயந்து விட்டேன்” என்ற கீர்த்தியை சட்டென நிமிர்ந்து பார்த்து முறைத்தவள்
,“அப்போ நான் போவது உனக்கு கவலை இல்லையா” என்று தணிந்த குரலில் கேட்டாள்.
“லூசு நீயெல்லாம் ஒரு சஃப்ட்வேர் எஞ்சினியர். இந்த ஃபீல்டில் இருந்து கொண்டு கம்யூனிகேசனை நினைத்து கவலை படுகிறாய். இருக்கவே இருக்கு ஈமெயில்,சாட்,மொபைல். இதெல்லாம் விட பார்க்க வேண்டுமென்றும் நினைத்தால் ஒரு ஃப்ளைட்டை பிடித்தால் போதும். இதுக்கு போய் இவ்ளோ ஃபீல் பண்ற” என்று தன் வருத்தத்தை மனதினுள்ளேயே வைத்துக் கொண்டு தோழிக்கு ஆறுதல் கூறியவள், அவள் முகம் தெளியாததால் அவளை கலகலப்பாக்க பாலாவின் பெயரை இழுத்தாள்
”அது என்னமோ நீ ஃபீல் பண்ணுவது கரெக்ட்தான்மா. எங்க கூட வெல்லாம் நீ போன் ,மெயில்னு கான்டாக்ட் பண்ணிக் கொள்ளலாம். ஆனால் பாவம் MD தரிசனம் அங்க கிடைக்காது இல்ல. உண்மையிலயே கக்ஷ்டம்தான்” என்று தோழியை சீண்டினாள் கீர்த்தி.
அவளது கிண்டலை புரிந்து கொண்ட கவி, “¨ஹைய்யோ கீர்த்தி உன் அறிவோ அறிவு, கரெக்டாக கண்டு பிடித்து விட்டாயே போயும் போயும் உன்னெல்லாம் பிரிஞ்சு போறேன்னு ஃபீல் பண்ணுவேனா . பாலாவ பத்திதான் என்னோட கவலை எல்லாம் ”என்று பெருமூச்சை இழுத்தாள் கவி.
“யூ” என்றவள், போடி பேசாத என்கிட்ட என்று பொய்யாக உம்மென்று இருந்தாள் கீர்த்தி. அதைப்பார்த்த கவி
“யேய் யேய் சும்மாதான் சொன்னென். நீ மட்டும் கிண்டல் பண்ணலாமா” என்று சமாதான கொடி நீட்டினாள்.
கீர்த்தி அவளிடம் பேச எத்தனித்த போது கீர்த்தியின் மொபைல் அடித்தது. “இருடி உன்ன கவனித்துக் கொள்கிறேன்” என்று ஆள்காட்டி விரலை உயர்த்தியபடி போனை அட்டெண்ட் செய்த கீர்த்திக்கு
“ஹலோ குறத்தி ” என்ற விநோத்தின் குரலில் தோன்றிய அனலை மறைத்து, “சொல்லுடா விநோத்” என்று பல்லை கடித்தபடி பேசினாள்.
அதை பார்த்த கவி கண்ணடித்தபடி, ஜமாய் ஜமாய் என்பது போல் தலையினை ஆட்டினாள்
.”ஏய் உதை” என்று கவியின் தலையில் தட்டியவள்”
என் பேர உன்னைத் தவிர இவ்ளோ கேவலமா வேற யாராலும் கூப்பிட முடியாதுடா.எத்தன தடவை சொன்னாலும் உனக்கு ஏறாதா, என் டென்சன ஏத்துவதே உன் வேலை” என்று பொறிந்தவள்,
“என்ன இந்த டைம்ல கால் பண்ணி இருக்கிறாய்” என்றாள்..
“இல்ல குறத்தி, sorry sorry கீர்த்தி எனக்கு இப்போ புரை ஏறியது. அதுதான் நீ என்னை நினைக்கிறாய் போல. சரி எதுக்கு உன்ன கக்ஷ்டப் படுத்த வேண்டும் என்று நானே கால் பண்ணிட்டேன். என்ன என்னை நினைத்தாய் தானே என்று சாதாரணமாகக் கேட்டான்.
”ஒ அப்படியா விநோத், அப்பொ நீ ஒரு நொடி கூட புரை ஏறாமல் இருக்க முடியாதே. எப்படி அங்க இருக்க” என்றாள் பதிலுக்கு நக்கலாக,
கீர்த்தி விநோத்திடம் பேசிக் கொண்டிருக்கும் போதே,கவி கீர்த்தியிடம் இருந்து போனை பறித்தாள்.
“விநோத் உங்களுக்கு அங்க என்னவோ தெரியாது ஆனால் என் ஃப்ரெண்ட் அடிக்கடி புரை ஏறி கக்ஷ்டப் படுகிறாள். கொஞ்சம் பார்த்து நடங்க என்றபடி தன் பங்குக்கு அவனை வாரி அசடு வழிய வைத்தாள்.விநோத் அவளிடம்
”அதானே பார்த்தேன் கீர்த்திக்கு ஏற்ற தோழி, நான் அவள வாரலாம் என்று பார்த்தால் செட்டா சேர்ந்த்துட்டீங்க, நான் தப்ப முடியுமா” என்றவனிடம்
“ok ok அந்த பயம் இருந்தால் சரி. கீர்த்தியிடம் போனைத் தருகிறேன்” என்று சிரித்தபடி கீர்த்தியிடம் கொடுத்தாள்.
“ம்.சொல்லு விநோத்” என்று கீர்த்தியிடம்“ ஒண்ணுமில்லப்பா இன்னைக்கு ஈவ்னிங் எனக்கு மீட்டிங். அதனால் நான் நைட் கால் பண்ண முடியாது டா. அதுதான் என்னோட அட்வான்ஸ் விக்ஷ்சை சொல்லத்தான் இப்போ கால் பண்ணினேன். நாளைக்கு சொன்னால் என்னை எரிச்சுட மாட்டாய். என்றவனிடம்
”உனக்கு என்னை விட மீட்டிங் பெரிதா போச்சு.” என்றவள் அவனது நிலையை உணர்ந்து பிகு பண்ணாமல்
“சரி சரி பரவாயில்லை உன்னை மன்னித்து அருள் புரிகிறேன்.” என்றாள் விளையாட்டாய்
“ம்.பரவாயில்லை குறத்தி நல்லா தமிழ் பேசுறியே, கொஞ்சம் உங்க பாக்ஷை பேசுவது என்று கேலி செய்தவனை
“உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதாடா,உன்னை என்று திட்டுவதற்க்கு வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தவளிடம்,
”சரி சரி நீ திட்டுவதற்கு வார்த்தைகளை தேடி கண்டுபிடிக்கும் வரை காத்திருந்து திட்டு வாங்க எனக்கு டைம் இல்லை.bye” என்று கூறி அவனுடைய வாழ்த்துகளை தெரிவித்து விட்டு போனை வைத்தான்.
“வச்சுட்டான்,இருக்குடா உனக்கு“ என்றபடி போனை வைத்தவள் கவியை பார்த்தாள். அவளோ, சற்று முன் கவலையாக இருந்த கவியா இவள் என்னூம் படி ,
“என்னடி ரொமான்ஸ்லாம் முடிந்ததா ” என்றவளை முறைத்தவள்,
“இப்போ நாங்க பேசுனது ரொமான்சா உனக்கு” என்ற கீர்த்தியிடம்
“சும்மா நிறுத்துடி , நான் யாரையும் லவ் பண்ண மாட்டேன், எங்க அப்பா அம்மா சொல்ற பையனைத்தான் மேரேஜ் பண்ணுவேன்னு சொல்றதெல்லாம் சும்மா” என்றவளை உண்மையாகவே முறைத்தாள் கீர்த்தி.
”நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை” என்றாள் கீர்த்தி.
“அதையேதான் நானும் சொல்கிறேன் கீர்த்தி., உன் அப்பா அம்மா உனக்கு பார்த்து வைத்திருக்கிற பையன்தானே விநோத். பிறகு ஏன் நல்லாத்தான் மனச திறந்து ரெண்டு பேரும் பேசுவது .பெருசா dialog மட்டும் பேசுவது, என்னமோ நீ விநோத்தை லவ் பண்ணாதது மாதிரி. உன் மனதில் விநோத் இருப்பதினால்தான் வேற ஒருத்தரையும் பார்க்க தோண வில்லை.என்று கூறி விட்டு ,சுற்றும் முற்றும் பார்த்து விட்டு,மெதுவாக கீர்த்தியின் காதில்,
”இல்லைனா பாலா மாதிரி ஒரு பையனை எல்லாம் கண்டுக்காம் இருப்பியா” என்றவளிடம் முறைத்தவள்
”நான் விநோத் கூட நினைவு தெரிந்த நாள் முதல் இப்படிதான் பேசுவேன்.அவனும் அப்படித்தான். எங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் ஆகிற வரைக்கும் அவன் என் மாமா பையன்.,ஃப்ரெண்ட் அவ்ளோதான். எங்க அப்பா நாளைகே இன்னொருத்தன சொல்லி இவன்தான் மாப்பிள்ளை என்று சொன்னால்,அப்போ என்ன பண்ணுவது. So இப்போதைக்கு இந்த இடம் காலி” என்று இதயத்தை தொட்டுக் காட்டியவளுக்கு ,வெகு விரைவில் பாலா வின் பெயரை தன் பெற்றோரிடம் கூற போகிறோம் என்று அப்போது அறியவில்லை
கீர்த்தி கூறியவற்றினைக் கேட்ட கவி “இப்படி ஒரு அப்பா அம்மா பைத்தியத்தை நான் எங்கேயும் பார்க்க முடியாதுப்பா,
“சரி கீர்த்தி, தாலி கட்டின பின்னாடி, உன் அப்பா அவன் வேண்டாம் என்று சொன்னால் உங்க அப்பா பின்னாலேயே போய்டுவியாடி, பாவம் கீர்த்தி ஆண்பாவம் பொல்லாதது” என்று கூறியவளை அடிக்க எழுந்தாள் கீர்த்தி.
கீர்த்தி அவளை துரத்த எழுந்தத்தை பார்த்த கவி,அவளிடம் மாட்டாமல் இருக்க வேகமாக ஓடினாள்.“ஏய் நில்லுடி ” என்று கீர்த்தியும் வேகமாக அவளை துரத்த ஆரம்பித்தாள்.அவளுக்கு பிடி கொடுக்காமல் ஓடிய கவி சற்றும் எதிர்பாராமல் திருப்பத்தில் பாலா அவளுக்கு எதிராக வந்து கொண்டிருந்தான்.
“அய்யோ மோத போகிறோமே” என்றபடி கண்களை மூடியவளை சட்டென்று கீர்த்தி இழுத்து பிடித்து, பாலாவுடன் மோதமல் நிறுத்தினாள். அப்போதுதான் கவிக்கு நிம்மதியானது.
Comments