அத்தியாயம் 3:
சிறிது நேரம் கழித்து தீக்ஷா தன் தோழியைப் பார்த்தவள்……….. என்னடி பேசி பேசி கொல்றேனா…. என்று சொல்லியவாறே பாட்டு கேட்கிறாயா என்று கேட்டவள்…..
“ச்செய்… இங்க பாட்டுக்கு கூட வழி இல்ல” என்று அலுத்தபடி… மொபைல்ல கேட்ப்போம்…” என்றபடி தனது மொபைலில் பாட்டைப் போட்டவள்… ஹெட் செட்டின் ஒரு முனையை தன் காதிலும் அடுத்த முனையை தோழி காதிலும் மாட்ட
“ஏண்டி இவ்ளோ காஸ்ட்லியான கார்ல பாட்டு போட வழி இல்லையா” என்று பார்வதி சந்தேகமாய்க் கேட்டாள்….
”கார்ல பிரச்சனை இல்லை…. எங்க விருமாண்டிக்கு சாங்க்ஸ்லாம் பிடிக்காதுடி” என்று மெதுவாய்ச் சொல்ல… அவளைப் பொறுத்தவரை அது மெதுவாய்…. ஆனால் காதில் ஹெட்செட் போட்டு பாட்டு கேட்டுக் கொண்டிருந்ததால் சத்தமாக வெளி வர……… திரும்பிப் பார்த்தான் விஜய்…. அவளின் சத்தமான பேச்சில் பார்வதியும் கொஞ்சம் அதிர்ந்து விஜய்யைப் பார்த்தாள்…….. அவன் என்ன நினைப்பானோ என்று
பார்த்தவன் உடனே திரும்பியும் விட்டான்……..அவ்வளவுதான் அதற்கு மேல் அவனிடமும் எந்த வித ரியாக்சனும் இல்லை….. பார்வதி நிம்மதி பெருமூச்சு விட்டாள்………… ஏற்கனவே அவள் அவன் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவனுக்காக காத்திருக்காமல் வந்த விதம் வேறு மனசாட்சி குத்தியது…………. தவறு தானே…………….. அலுவலக விதிகளை மீறி………….. யாரிடமும் சொல்லாமல் கிளம்பியது………… அதனாலே அமைதி காத்தாள்…………
தீக்ஷா வீட்டின் முன் கார் நிற்க
இறங்கிய பார்வதி மலைத்தாள்…………. தீக்ஷாவின் பொருளாதார நிலையைப் பார்த்து…. தங்களை போல மிடில் கிளாஸ் குடும்பம் தான் தீக்ஷாவினுடையதும்……. எப்படி இந்த அளவு?………. அதிலும் 7 வருடத்தில் என்று யோசித்தபடி நிற்க
வீட்டைப் பார்த்துதான் தோழியும் அதிர்ந்து நிற்கிறாள் என்று உணர்ந்த தீக்ஷா………… ”உள்ள வா பாரு” என்று இழுத்துக் கொண்டு சென்றாள்…..
காரை விட்டு இறங்கிய விஜய்………….. வாசல் கேட்டில் நின்ற முருகேசனிடம்……
“உங்க தங்கச்சிக்கு தெரிஞ்சவர் வருவார்…….. பேர் சாரகேஷ்னு சொல்வாங்க……… உள்ள விடுங்க” என்று உள்ளே போக
முருகேசன் காத்துமுத்துவிடம்…….
“யாருடா……… அது ………. நம்ம தங்கச்சிக்கு தெரிஞ்சவங்க” என்று வினவ
“தெரியல காத்தா…………” என்றவன்
“இன்னைக்கு தீக்ஷா தங்கச்சி என்னை திட்டிடுச்சு” என்று வருந்த
”விடுடா……….. அது நிலைமை அப்படி…………… நம்ம கண்ணுதாண்டா அந்த பிள்ளைக்கு பட்டுடுச்சு” என்று புலம்பியவாறே அகன்றனர்…………
அம்மா என்று கத்தியபடியே உள்ளே நுழைந்தாள் தீக்ஷா………… அது எந்த பிரதிபலிப்பையும் கொடுக்காமல் போக………….. அண்ணி என்று அடுத்து கத்த……….
தீக்ஷாவின் கத்தலில்
என்னவோ ஏதோ என்று பதறியவளாய் சுனந்தாவை ராதா தூக்கியபடி பரிதவித்து இறங்க…… அங்கு சாதரணாமாய் நின்ற தீக்ஷாவைப் பார்த்து நிம்மதி அடைந்தாள்…..
”சுனோ” குட்டி என்று அவளை தூக்கிக் கொண்டவள்
“அண்ணி………. அம்மா இல்லையா” என்று சுனந்தாவைக் கொஞ்சியபடியே கேட்டவளுக்கு
“கோவிலுக்கு போயிருக்காங்க………..” என்று பதிலாய்ச் சொல்ல
‘இவங்களுக்கு வேற வேலையே கிடையாது……….. ஆவுனா கோவில்ல போய் உக்காந்துருவாங்க………. என்று சலித்தவள்………. ராதாவிடம் திரும்பி
“அண்ணி இது ’பாரு’……… பார்வதி அலைஸ் சாருமதி….. வீட்ல ரெண்டு சாரு வர்றதுனால…. மேடமுக்கு பார்வதினு பாட்டி பேர்…….. என்றவள்…..
“யாரு தேவதாஸோ????” என்று தோழியைப் பார்த்துக் கண்ணடித்தவள்…. ராதாவும் அருகில் இருந்ததால் அவள் என்ன நினைப்பாளோ என்று பார்வதி முறைக்க
”அண்ணி ஒண்ணும் நினைச்சுக்க மாட்டாங்க……. நம்மை விட 1 வயதுதான் பெரியவங்க…… அது மட்டும் இல்லாமல்……… அவங்களே காதலுக்கு மரியாதை செஞ்சுதான் எங்க வீட்டுக்கே வந்தாங்க…….” என்று தன் அண்ணியையும் கிண்டல் செய்தவளை….. இப்போது ராதா முறைக்க
“ஒகே ஒகே தீக்ஷாவை மொறச்சே கொல்லாதீங்க……… அதுக்கெல்லாம் ரெடிமேட் பீஸ் ஒண்ணு அல்ரெடி இருக்கு” என்றாள் உள்ளே நுழைந்த விஜய்யைப் பார்த்தபடியே… பின் தன் அண்ணியிடம் திரும்பி
”சொல்லி இருக்கேன்ல……… என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்……… திருச்சி……… 7 வருசத்துக்கு அப்புறம் இப்போதான் பார்க்கிறேன்…………….“ என்று சொன்னபடி பாருவிடம்
”பாரு இது எங்க அண்ணி…. சோ ஸ்வீட் அண்ணி தெரியுமா…….. என் அண்ணாக்கு இவங்க கொஞ்சம் அதிகம் தான்……. இப்டி ஒரு நல்ல…… அழகான அண்ணிய எனக்கு கொடுத்ததுக்காகவே இப்போலாம் அவன் கூட சண்டை போடறது இல்லை தெரியுமா.” என்று சிரித்தபடியே சொல்ல
ராதா மென்னகை புரிந்தாள்………… பார்வதியைப் பார்த்து……….. பார்வதியும் அவளைப் பார்த்து அறிமுகப் புன்னகை புரிந்தாள்
”பாரு உனக்கு என்ன வேண்டும்……… டீ…காபி…பால் தென் நைட் டின்னர் முடிச்சிட்டுதான் போகனும்…….. உங்க அண்ணாக்கு என்ன பிடிக்கும்…… இப்போதே லட்சுமிகிட்ட சொல்லி ப்ரிபேர் பண்ணச் சொல்றேன்…… இப்போ உனக்கு என் கையால காபி ஒக்கேவா…………. உனக்கு காபிதானே பிடிக்கும்” என்று கேள்வியும் அவளே பதிலும் அவளேயாகி சுனந்தாவோடு கிச்சனில் நுழைய
அந்த ஹாலில் மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது
பார்வதி சோபாவில் அமர்ந்திருக்க விஜய் அவளுக்கு எதிரில் அமர்ந்திருந்தான்…
ராதா பார்வதியின் அருகில் அமர்ந்தபடி அவளை பார்த்து பேச ஆரம்பித்தாள்
”தீக்ஷா உன்னைப் பற்றி அடிக்கடி சொல்வா பாரு………. “ என்ற போது
புன்னகைத்த பார்வதி……….
” ’விடி’ ப்ரோமோட்டர்ஸ்ல இன்றுதான் ஜாயின் பண்ணினேன்…….. எதிர்பாராத விதமா சந்திப்பு……… மறந்துருப்பாளோனு நினைச்சுட்டு இருந்தேன்…….” என்று சொல்லியவள்…. காலையில் தீக்ஷாவைப் பார்த்ததை சொல்லியபடி இருவரும் பேச்சினைத் தொடர…….. சற்று நேரம் கழித்து ராதா தன் அண்ணனை உணர்ந்து
“அண்ணா……….. நீங்க கிளம்பலையா…… உடனே கிளம்பியிருவீங்க…. வேலை இல்லையா“ என்று கேட்க
“இல்லமா…… இன்னைக்கு இங்கேயே சாப்பிட்டு விட்டு………… கிளம்புகிறேன்” என்று சொல்ல….. அவனின் தளர்வான பேச்சில்
தன் சகோதரனையே ஒரு நொடி பார்த்தவள்…… அதில் தெரிந்த கவலைக் கோடுகள் மனதை வருத்த
“அண்ணா சூடா காஃபி சாப்பிடறீங்களா…………. களைப்பா இருக்கிற மாதிரி இருக்கு” என்றவளிடம்
”வேண்டாம் என்ற தலை ஆட்டலில் மட்டும் பதில் சொன்னவன்…….. சோபாவில் சாய்ந்து அவனின் எதிரே உள்ள சுவரில் பார்வையைப் பதித்தான்……………….. ராதாவும் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் பார்வதியிடம் பேச ஆரம்பிக்க………. இப்போது பார்வதி விஜய்யிடம்
“சாரி சார்…………தீக்ஷா என்னைக் கம்பெல் பண்ணிணா………… அதுனாலதான்………. என்று தயங்கியவன்
எதிரே இருந்த சுவரில் இருந்த பார்வையை திருப்பி பார்வதியை பார்த்த விஜய்
“அவ இப்டி பண்ணுவானுதான்………… நான் உன்னை இருக்கச் சொன்னேன்……….. ஆனாலும் உன்னைக் கிளம்ப வச்சிட்டா…………. நோ பிராப்ளம்………….. ஆனா……….. இது மாதிரி இன்னொரு தடவை நடக்காம பார்த்துக்கோ………..” என்று சொல்லி முடிக்க…….
அபோது ஜெயந்தி….. தீக்ஷாவின் தாய் உள்ளே வர….. உள்ளே நுழைந்த போதே விஜய் கண்களில் பட
விஜய்யை பார்த்த வினாடியே
”வாங்க தம்பி…….” என்றபடியே
‘அம்மா ராதா….. அண்ணாக்கு எதுவும் கொடுத்தியா” என்று கேட்க ஆரம்பித்தவள்
தீக்ஷா ஒரு கையில் காபிக் கப்பையும் மறு கையில் சுனந்தாவையும் வைத்துக் கர்ம சிரத்தையாய் பார்த்து பார்த்து நடந்து வர………. விஜய்க்கா கொண்டு வருகிறாள் என்று வியந்து பார்க்க
அவளோ அதை பார்வதிக்கு கொடுக்க…. ஜெயந்தியும் ராதாவை அடுத்து உட்கார்ந்து இருந்த பார்வதியை அப்போதுதான் பார்த்தாள்……..
“அடடே பாருதானம்மா நீ…………….. நல்லா இருக்கியாமா” என்று அவளை விசாரித்தபடியே…………….
“ஏண்டி……………. தம்பிக்கு எதுவும் கொடுக்கலையா” என்று தீக்ஷாவை கேட்க
“நீங்களே போட்டுக் கொடுங்க………… என் ஃப்ரெண்ட் நான் எப்டிக் கொடுத்த்தாலும் சாப்பிடுவா……… உங்க தம்பி சாப்பிடுவாரா…..” என்ற சொல்லியபடியே………
”வா பாரு நாம மேல போகலாம்” என்று சுனந்தாவை தூக்கியபடி பார்வதியுடன் மாடியேறியவளை கவலையோடு இரண்டு ஜோடி விழிகள் தொடர
ஒரு ஜோடி விழியோ அவளைத் தொடராமல் கண்களை மூடிக் கொண்டது………..
-----------------
தீக்ஷாவும் பாருவும் தீக்ஷா அறையில் இருக்க………….
தீக்ஷா ஆரம்பித்தாள்
”என்னடி ஆச்சரியமா இருக்கா…… இவ்ளோ பெரிய பங்களா…….. எங்க நிலை பார்த்து மிரண்டுட்டியா………. இதெல்லாம் எனக்கு நிரந்தரமில்லை பாரு……… என் அண்ணி எங்க வீட்டுக்கு வந்ததால வந்தது………….. நான் எப்போதுமே…………. அதே பழைய தீக்ஷாதான்……. என்ன இந்த பிரச்சனை இல்லைனா நானும் நம்மை மாதிரி இருக்கிற ஒருத்தவன் வீட்ல வாழப் போயிருந்திருப்பேன்……. இப்போ அதுக்கும் வழி இல்லை“ என்று சொல்ல
”ப்ளீஸ் டி………. அதையே சொல்லாத தீக்ஷா……… உன்னை எல்லோரும் பரிதாபப் பார்வை பார்க்கிறாங்கனு சொல்லிட்டு…… நீயே அதைச் சொல்லிட்டு இருக்க”
“ஒகே ஒகே………….. திக்ஷா வுக்கு ஒண்ணும் இல்லை……….. இப்போ பாரு” என்றவள் முகத்தை மாற்ற
“ஹை” அவளின் முக பாவனையில் சுனந்தா கைதட்ட
“செல்லக் குட்டி” என்று உச்சி முகர்ந்தவள்
”உன் பேர் என்ன… குட்டிமா “ என்று கேட்க….
சுனந்தா என்று சொல்லாமல் “குட்டி தீக்ஷா” என்று சொன்னாள்
அடிப்பாவி… உன் பேரையே அவளுக்கும் வச்சுட்டியா என்று பார்வதி சிரிக்க
”நீ வேற….. இத நான் சொல்லிக் கொடுக்கலை…….. நான் சொல்லிக் கொடுத்ததே வேற”
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு………….. நாம வச்சுருக்கிற பேரெல்லாம் ஆன்ட்டிக்கு சொல்வோமா என்றவள்……. எங்க அம்மாவுக்கு நான் வச்சிருக்கிற பேர் உனக்கு ஏற்கனவே தெரியும் ’பாரு’…….. இன்னும் ரொம்ப பேருக்கு பேர் வச்சுருக்கேன் …. எங்க ஸ்னோ சொல்வா பாரு என்றபடி சுனந்தாவிடம்
“உங்க அப்பா பேர் என்ன” என்று கேட்க
“தீபன்” என்று மழலை மொழியில் சொல்ல
“ப்ச்ச்,..குட்டிமா………. அது இல்ல… இன்னொன்னு…”. சொல்லுங்க
“காதலுகு மர்ர்தை ‘விஜய்’
”ம்ஹ்ஹ்ஹ்ஹ்ம் சூப்பர்டி செல்லம்..” என்றவளிடம் குழந்தை சொன்னது புரியாமல் பார்வதி விழிக்க
காதலுக்கு மரியாதை ’விஜய்’ என்று அவளுக்கு புரியும்படி சொல்லியவள்…. மீண்டும் சுனந்தாவிடம் திரும்பி
”உங்க மாமா பேர் என்ன சொல்லு…”
“எந்த மாமா………” என்று சுனந்தா கேள்வி கேட்க……….. சிரித்த தீக்ஷா……….. இவங்க வீட்ல இது வேற தொல்லை……….. 3 பேர் இருந்துகிட்டு” என்று பார்வதியிடம் சலித்தவளாய்
சுரேந்தர் மாமா பேர் என்ன என்று கேட்க
’தலைவாசல் விஜய்’ என்று குழந்தை மொழியில் சொன்னாலும் பார்வதிக்கு இப்போது புரிய……… பட்டப் பேருக்கு காரணம் புரியாவிட்டாலும் …. சுரேந்தரை அவள் பார்த்திருந்ததால் அவன் நல்லாத்தானே இருக்கிறான்…. ஏன் இந்தப் பேரப் போய் அவனுக்கு வச்சுருக்கா……. என்று மனதுக்குள் நினைத்தவள் மீண்டும் நடப்புக்கு வந்தாள்…..
தென் ஃபர்ஸ்ட் மாமா பேரு
“விருமாண்டி விஜய் மாமா” என்று இதை மட்டும் அழுத்தமாய்ச் சொன்னவள் தானாகவே அப்புறம் பாட்டி பேரு ’வைஜெயந்தி IPS’ என்று சுனந்தா தன் அத்தை தனக்கு இட்ட பணியை செவ்வனே முடிக்க
சிரித்து முடித்த பார்வதி……
“உனக்கு அடுத்து ஆளா…….நல்லா பழக்கி வச்சுருக்க தீக்ஷா… இல்லை இல்லை கெடுத்து வச்சுருக்க” என்றவளிடம்
இந்த 6 மந்த்ல வேற வேலை……. ”ஸ்னோ” குட்டிகுதான் ட்ரெய்னிங் என்று சொல்லியவள்……
“அத்தையோட ஸ்லோகம் என்ன சொல்லுங்க………. ’பாரு’ ஆன்ட்டிக்கிட்ட”
அவள் கேட்ட அடுத்த நிமிடம் வார்த்தைகள் விழுந்தன
“தீக்ஷா மூச்சு இல்லாம கூட இருப்பா……….. ஆனா பேச்சு இல்லாம இருக்க மாட்டா” என்று கெத்தாக சுனந்தா சொன்னவுடன் குழந்தையைப் பார்க்காமல் தீக்ஷாவையே பார்த்த ’பாரு’வின் கண்கள் கலங்க
“ஆனால் இப்போலாம் நான் இந்த டயலாக் சொல்றது இல்ல ’பாரு’……… தரித்தினியமா பேசித்தான் இந்த நிலைமையில இருக்கேனாம்…… நாம சொன்னாத்தானா…………. பார்த்தியா…………. அதுதான் இப்டி ட்ரைனிங்………” என்று பெருமிதமாய்க் கூறியவளிடம் சோக முகம் காட்டாமல்………..
”இன்னும் என்னென்ன பேரு தீக்ஷா……… கண்டினியூ பண்ணு” என்றபடி பார்வதி தொடர
பட்ட பேர் எல்லாம் என்கிட்ட அட்ஜஸ்ட் பண்ணிப் போகாதவங்களுக்கு மட்டும்தான்…. அதுதான் இந்த பட்டபேர்……… எங்க அண்ணிக்கு கூட பட்டப் பேர் வச்சுருந்தேன் கல்யாணத்துக்கு முன்னால்………. ஆனா…………வாபஸ் வாங்கிட்டேன்……… எங்க அண்ணி ரொம்ப நல்லவங்க…………. என் மேல ரொம்ப பாசம்” என்றவள்
“சுரேந்தர் அத்தானுக்கு கூட பட்டப் பேர வாபஸ் வாங்கலாம்தான்….. ஆனால் விருமாண்டி கூட சேர்ந்துகிட்டு அப்போப்ப சீன் காமிப்பார்………… அதுதான் இன்னும் அந்தப் பேரை விடல………. ஆனா நல்ல அத்தான்” என்று சொன்னவள்
“அப்போ எங்க அண்ணாக்கு கூட பேர் வச்சுருப்பியே” என்று பார்வதி தன் வேலையைக் காட்ட…………….
”ச்சேசேய் இல்லடி………. வைக்கல” என்று சொல்ல………. அவளின் விழிகளே அது பொய் என்று சொல்லாமல் சொல்லியது
உண்மையா என்று நம்பாமல் பார்வதி கேட்க அசடு வழிந்தவளாய்………..
“உங்க அண்ணா,…. சம் டைம் நம்மள மேக்ஸ் ஒழுங்கா போடலேனா திட்டுவாங்கள்ள அப்போ மட்டும் வச்சுருக்கேன்” என்றவள் தயக்கமாக
“வசூல் ராஜா எம்பிபிஎஸ்”…. ’பாரு’ தப்பா எடுத்துக்காத…. நீ போய் சொல்லித் தொலையாத… சொல்லக் கூடாது…. ஓகேவா” என்று கெஞ்சிய குரலிலே மிரட்டவும் செய்ய……….
”நான் தானே சொல்லவே மாட்டேன் தீக்ஷா” என்று பார்வதி சொன்ன தோரணையே சொல்லிவிட்டுதான் மறு வேலை என்று இருக்க………
”அதுமட்டும் இல்லை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சவங்களுக்கும் பட்டப் பேர் வைப்பேன்…. என் சுனந்தா குட்டிக்கு ‘ஸ்னோ”னு வச்சுருக்கேனே” என்று சுனந்தாவை முத்தமிட்டு சுற்றியவள்
”போன மாதம் நீ வந்திருக்கலாம்…. சுனந்தாவோட 2 வது பிறந்தநாள்………. சூப்பரா நடந்தது….” என்றவளின் நினைவுகளில்……. சுனந்தாவின் முதல் பிறந்த நாள் விழா ஞாபகம் வர முகம் கன்றினாள்………. இருந்தும் பார்வதி பார்க்கும் முன் மறைத்தாள்………
இப்போது சுனந்தா தீக்ஷாவின் முகத்தைப் பார்த்தவாறே
“யுகி மாமா…..” என்று சொல்ல…….. அந்த நேரம் தீக்ஷாவை அவள் தாய் அழைக்க……..
“ஒரு நிமிசம் என்றபடி வெளியேறினாள் தீக்ஷா
இப்போது பார்வதி……….
“யாரு குட்டி யுகி மாமா” என்று சுனந்தாவிடம் பேச ஆரம்பிக்க
“மாமா………….என்றபடி” என்று அவள் அத்தை போல சைகை பாசையில்
விமானம் பறப்பதுப் போல் காட்டி….. அதன் சத்தம் போல் செய்துக் காட்டியவள்
“பிளைட்ல போய்ருக்காங்க……….. எனக்கு வரும்போது சாக்கி,டாய் லாம் வாங்கிட்டு வருவாங்க” என்று ஆரம்பித்து குழந்தை மொழியில் சரளமாய் அவளிடம் பேச ஆரம்பிக்க……… பார்வதியும் அவளைத் தூக்கி வைத்துக் கொண்டு கேட்க ஆரம்பித்தாள்……….
மீண்டும் உள்ளே வந்த தீக்ஷாவிடம்
“யுகி யாரு தீக்ஷா” என்று கேட்க
“யுகேந்தர்……….. இப்போ UK ல இருக்கான்……………. “ என்று சொன்னவள்………..
“அண்ணி வீட்ல எனக்கு கிடைத்த ஃப்ரெண்ட்………. ஆனா எனக்கும் அவனுக்கும் இடையில் ஒரு பிரச்சனை……….. அதுக்கு கூட விருமாண்டிதான் காரணம்………. UK க்கு போகும் போது கூட சொல்லாமல் கிளம்பினான்………… கோபம் இருந்தும் அவனை வழி அனுப்ப ஏர்போர்ட் கூட போனேன்….. ஆனாலும் பேச மாட்டேன்கிறான்…. போன்ல பேசினால் கூட…… ஒரு வார்த்தைல பதில் சொல்றான்……….. இங்க வரட்டும் ஒரு பெரிய கச்சேரி இருக்கு அவனுக்கு………….” என்றவள்…………
“நம்ம கேரக்டர்டி அவன்……… இப்போ மட்டும் அவன் இருந்தானு வச்சுக்கோ செம ஜாலியா இருக்கும்” என்று சொல்லியவள்
“நான் யுகிய ரொம்ப மிஸ் பண்றேன்………..” என்றவள் பார்வதியின் காதில் ரகசியமாய்
“பையன் லவ் பண்றான்……….. பொண்ணு அவங்க அண்ணாவோட எனிமி சிஸ்டர்……. எனக்கு மட்டும் தான் தெரியும்……. இப்போ உனக்கும்……. யார்கிட்டயும் சொல்லிராத…. விஜய் அத்தானுக்கும்…. சுரேந்தர் அத்தானுக்கும் தெரிஞ்சது பையன் காலி……” என்று முடித்தாள்…
அதன்பிறகு அங்கு கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்க
ஹாலிலோ
விஜய் ராதாவிடம்
“ராதா….. இங்க எனக்கு பக்கத்தில வேலை இருக்கு போய்ட்டு 1 ஹவர் கழிச்சு வருகிறேன் என்று வெளியேற………….. அவனிடம் அவன் தங்கை
“அண்ணா……. எதுவும் பிரச்சனையா அண்ணா?.... ரொம்ப டல்லா இருக்கீங்க…….” என்றபோது…
“அதெல்லாம் இல்லமா………..” என்றவன்………..
”இனிமேல் தான் எனக்கு பிரச்சனை வர வேண்டுமா…….. ஒண்ணும் இல்லை………. கொஞ்சம் குழப்பம்… அவ்ளோதான்…… பெருசா இல்லை…..” என்று வெளியேறினான்… அப்போது
சாரகேஷ் வெளியே வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான்……..
விஜய் அவனைப் பார்த்த வினாடியில் அவன் சாரகேஷென்று மனம் உணர அவனைக் கண்களால் அளவெடுக்க ஆரம்பித்தான்
மருத்துவனுக்கு உரிய சாந்தம் அவனது முகத்தில் தவழ்ந்தாலும்….. கண்களில் ஒரு தீர்க்கம் இருந்தது……… கம்பீரமாய் அவனை நோக்கி வந்தவனை நோக்கி விஜய்யும் தன் கம்பீரத்தை மீட்டெடுத்து போக……..
சாரகேஷும் யோசனையில் தான் வந்தான். தன் முன் வந்து கொண்டிருப்பவனை பற்றியெல்லாம் இல்லை………. பார்வதி இங்கு எதற்கு வர சொன்னாள்…. இது யார் வீடு என்ற யோசனையில்……
வந்தவன்…….. தன் எதிரே வந்த விஜய்யிடம்
“எக்ஸ்க்யூஸ் மீ……….” என்ற போதே இவன் காரை நிறுத்தும் போதே பார்வதிக்கு மிஸ்ட் கால் கொடுத்திருந்தபடியால்…… பார்வதியும், தீக்ஷாவும் வெளியே வந்திருந்தனர்………..
விஜய்யிடம் பேச எத்தனித்த போதே தீக்ஷாவைப் பார்த்த சாரகேசின் விழிகள்……….. மகிழ்ச்சி,சுவாரஸ்யம், ஆச்சரியம்… என மாறி மாறி உணர்வுகளை பிரதிபலிக்க…………
விஜய்யின் இதயம் நின்று துடித்தது…….. துடித்த தன் இதயத்தை அடக்கியபடி தீக்ஷாவைப் பார்க்க திரும்பியவனின் கண்கள்……… அவள் கண்களை சந்திக்க தைரியம் இன்றி அதைச் செய்ய இயலாமல் பார்வதியைப் பார்க்க…… அதில் தெரிந்த சந்தோசம் அவன் உயிரை குடித்தது………...
”இவளை எதற்கு வேலைக்கு எடுத்தோம்….. இவளால் தான் சாரகேஷ் இங்கு வந்திருக்கிறான்…… இனி என்ன ஆகுமோ…… இவள் மட்டும் பார்வதி என்று முன்னமே தெரிந்திருந்தால்……. ரிஜெக்ட் செய்திருக்கலாம்….” என்று தன்னைத்தானே நொந்தவனின் மனசாட்சி………
“அதுக்காக தீக்ஷாவை விரும்பினவங்கள எல்லாம்……….. அவ கண்ணில படாம மறச்சு வைக்க முடியுமா……”. என்று கேள்வி கேட்டு அவனைப் பார்த்து சிரிக்க
“ஆனா இவன் கொஞ்சம் ஸ்பெஷல் ஆச்சே அவளுக்கு….” என்று மனசாட்சிக்கு பதில் விடுக்க…………
அவன் இவ்வாறு போராடிக் கொண்டிருக்க……
இவனின் மனநிலைக்கு எதிர்மாறாய் தீக்சாவின் கண்களோ சாரகேஷின் மேல் அவஸ்தையாய் விழுந்து……… அவன் தன் வீட்டுக்கு வந்த விருந்தாளி என்பதில் மீண்டு…………
“வாங்க பாரு அண்ணா” என்றபடி உள்ளே அழைக்க
பாருவிடம் சாரகேஷ் கண்களால் சைகை பேசினான்……….
“எப்ப்டி…….. தீக்ஷாவை பார்த்த” என்று விழியாலே கேட்க
சிரித்தாள் பாரு…………. என்ன சொல்வது அவள்……. தீக்ஷாவைப் பார்த்தது சந்தோசம் தான் ஆனால் தீக்ஷாவின் நிலைமை………. ஒன்றும் புரியவில்லை…………
தீக்ஷா இருவரையும் அழைத்து உள்ளே சென்று விட……….. விஜய் அசோக்குக்கு கால் செய்தான்
“அசோக் நான் சொன்ன பையனை பத்தி விசாரிச்சியா” என்று கேட்க
“நானே போன் பண்ணலாம்னா இருந்தேன் சார் … பையன் பேரு சாரகேஷ்…. என்று சொல்ல……..
“அதை நானே சொல்லிட்டேன்…………… அவன் தங்கை பேர் சாருமதி……… இப்போ நம்ம புது ஆபிஸ்ல தான் வேலை பார்க்கிறா…….. இதைத் தவிர மேல சொல்லு”
“ஹார்ட் சர்ஜன்…………. இங்கேதான் ஸ்ரீராம் ஹாஸ்பிட்டல்ல வொர்க் பண்றான்………. ஒரு தங்கை… நீங்களே சொல்லிட்டீங்க அதை….. அம்மா மட்டும்தான்… அப்பா இல்லை……….. என்று சொன்னவன்
”ம்ம்ம்ம்….. சரி……… மேரேஜ் ஆகி விட்டதா……. வேற எதுனாலும் அவனைப் பற்றி ராங் மேட்டர் ஏதாவது சிக்குச்சா” என்று கேட்க
“இல்ல சார்……. மேரேஜ் ஆக வில்லை……. ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவன் போல……….. நோ தம்…. நோ தண்ணி…. இதுக்கே வழி இல்லையா……. பொண்ணும் கிடையாது என்றவன்… பட் கூட வேலை பார்க்கிற டாக்டர் பொண்ணு தீவிரமா லவ் பண்ணுது போல…. பையன் சிக்க மாட்டென்கிறானாம்” என்று சொல்ல……..
கவனமாய்க் கேட்ட விஜய் …..
“அந்த பொண்ணு யாருனு விசாரிச்சு சீக்கிரம் சொல்லு…………. நாம மேரேஜ் பண்ணி வச்சிரலாம்…. “ என்று சிரிக்க…. அந்தச் சிரிப்பு கூட வலியுடன் தான் இருந்தது……………
“ஏன் சார் தீக்ஷா மேடம் கிட்ட வம்பு பண்றானா…………” என்றவனிடம்
“சொன்னதை மட்டும் செய்……… கேள்விலாம் கேட்காத……. அந்தப் பொண்ணோட டீடெயில்ஸ்லாம் சீக்கிரமா எனக்கு வரணும்…..” என்று பேசியபடி வெளியேறினான்
------
சாரகேஷ்க்கு தீக்ஷாவிடம் தனியாக பேசும் வாய்ப்பெல்லாம் கிடைக்கவில்லை………. ஹாலில் அமர்ந்து மட்டும் பேசினர்…………. அது எல்லாம் பொதுவான விசாரணையில் கழிய….. அடுத்த அரை மணி நேரத்திலேயே சாரகேஷ் தனக்கு வேலை இருக்கிறது என்று கூறி….. அடுத்த நாள் தீக்ஷாவையும் அவர்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்தவன்….. தன் தங்கையோடு கிளம்பினான்…..
காரில் சாரகேஷ் உற்சாகமாக வந்தவன் தங்கையைப் பார்க்க அது அவனுக்கு எதிர்மாறாய் இருக்க…….
“என்ன மேடம் டல்லா வர்ற ……………. அனேகமா என்னை ஓட்டி எடுக்கப் போறேனு நினைச்சு வந்தேன்…….. ஆனாலும் உனக்கு திமிர் தான்………… தீக்ஷாவைப் பார்த்ததை சொல்லவே இல்லைல…….. ஆள் சூப்பரா ஆகிட்டாள்ளா………” என்றவன் தங்கையின் பார்வையில்
“சாரி சாரி உன் ஃப்ரெண்ட கொஞ்சம் சைட் அடிச்சேன் தான்……… தப்பாலாம் இல்லைமா………… போட்டுக் கொடுத்திராத…….. அப்புறம் இன்னும் ஒரு 10 வருசத்துக்கு நம்ம பக்கமே தலை வச்சு படுக்க மாட்டா………….” என்ற போது கண்ணில் வலியுடன் பார்த்தாள்
“அண்ணா நீ சந்தோசமா இருக்கியா தீக்ஷாவை பார்த்ததினால’ என்று கேட்டு அவன் முகத்தையே பார்க்க
“சந்தோசம் இருக்காதா பாரு…….. நாம முதன் முதலா விரும்பின பொண்ணு…………. திரும்ப பார்க்கும் போது சந்தோசமா இருக்காதா……….”
”ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஒரே சைட்தானா……… தைரியம் தான் உனக்கு……. அவகிட்ட உதை வாங்கப் போற” என்றவளிடம்
“ஏன் பார்க்கக் கூடாதா………. நான் என்ன அடுத்தவன் பொண்டாட்டியவ பார்த்தேன்…. ஒருவேளை…………… எனக்கு மறுபடியும் லக் இருக்கோ என்னவோ” என்று அசால்ட்டாய் கூறிய தன் அண்ணனை விழி விரித்துப் பார்த்தாள் பார்வதி……. கண்டிப்பாக கேட்டாக வேண்டும் என்று நினைத்து
“நீ இன்னும் அவளை நினைச்சுட்டு இருக்கியாண்ணா…………” என்றவளிட,ம்
“தெரியல………. அப்போ காதல் இருந்ததுதான்…….. ஆனா இப்போ இருக்கா இல்லையானு தெரியல…….. இத்தனை வருசத்தில் மறந்தும் விட்டேன் தான்……. அவ இல்லாம இருக்க முடியாது அப்டினுலாம் சொல்ல முடியாது………… ஆனா அவ என் வாழ்க்கைல வந்தா சந்தோசப்படுவேன்………… ஏன் கேட்கிற” என்று கேள்வியாய் தொடர
”அண்ணா அவளுக்கு அவளுக்கு……..” என்று சொன்னவள் அழ ஆரம்பிக்க
தன்னை தேற்றியபடி அவள் நிலையை விளக்க
அதிர்ச்சியில் காரை நிறுத்தி விட்டான் சாரகேஷ்
”ஓ மை காட்………… என்று மனம் ஆட்டம் காண………… தீக்சாவுக்கா………. ஏன் எதுனால….. என்று மருத்துவனாய் இல்லாமல்………… சாதரண மனிதன் நிலையில் இருக்க
“அண்ணா அண்ணா” என்று உலுக்க…………
“தீக்சாவுக்கு க்யூர் பண்ணிரலாமா அண்ணா……………” என்று நம்பிக்கையோடு கேட்க
தலையை இட வலமாக ஆட்டியவன்………
“இது ரொம்ப ரேர் கேஸ் பாரு………….. லட்சத்துல ஒருத்தருக்கு வரும்………….. இந்தியாவில மட்டும் 1000 பேர்……… அதில் தீக்சாவுமா……………….”. என்று தலையை சாய்த்துவிட்டான்………
அவனின் நம்பிக்கை இல்லா வார்த்தையில் கலங்கிய பார்வதி………..
“ஒண்ணும் பண்ண முடியாதா அண்ணா………” என்று மீண்டும் கேட்க
பதில் சொல்ல முடியாத வருத்தமுடன்……… “இப்போ எந்த டாக்டர்கிட்ட பார்த்துட்டு இருக்கா……………..”
விஜய்…. எங்க MD…. நீ உள்ள வரும்போது பார்த்தேல………. அவர்தான் அது அவ அண்ணியோட அண்ணன் தானாம்……….. அவங்க கொஞ்சம் பெரிய இடம் போல……….. அவர் தான் ஹெல்ப் பண்றாரு………. ஆனா தீக்சாவுக்கு அவரைப் பிடிக்கலை……….. “ என்று கூறியவளை
ஏன் என்ற ஆச்சரியக் குறியில் நோக்க……………
“எனக்கும் தெரியல…………. பணக்காரத் திமிர் பிடித்தவனாம்……… நம்ம தீக்ஷாகிட்ட கூட ஏதோ தப்பா நடந்துக்கிட்டாருனு சொன்னா……….. என்னனுலாம் சொல்லலை……………எல்லாம் விளக்கமா இன்னொரு நாள் சொல்றேனு சொன்னா……….” என்று சொல்ல
திடுக்கிட்டவனாய்
“என்னது தப்பா நடந்துக்க பார்த்தானா……… என்ன பாரு சொல்ற……….. விளையாட்டா சொல்ற……… தீக்ஷா அவனோட சொந்தம்… அவகிட்டயே மிஸ் பிஹேவ் பண்ணினான் என்றால்………….. உன் நிலைமை….. நீ அவன் ஆஃபிஸ்க்லாம் போக வேண்டாம்…………….” என்று அண்ணனாய் ஆரம்பித்தவனிடம்
“இல்லண்னா……….. தீக்ஷாவோட நிலை சரி இல்லை…….. அவங்க வீட்டை விஜய்தான் கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கான் போல………… தீக்ஷா ரொம்ப லோன்லியா ஃபீல் பண்றா………….. அவளைப் பார்த்தாலே தெரியுது…… அவளுக்கு இப்போ நம்ம சப்போர்ட் தேவைனா….. அதுக்கு நான் இந்த ஆஃபிஸுக்கு கண்டிப்பா போக வேண்டும்…………. விஜய் கொஞ்சம் திமிர்தான்………. எனக்கு கூட இன்னைக்கு அவன் காரில் போக பிடிக்க வில்லைதான்…………… நான் உட்கார்ந்தா கார் ஓட்ட மாட்டானாம்……….. தீக்சாவுக்காக தான் போனேன்…………. அவன் தீக்ஷாவை அடையனும்னு நினைக்கிறான் போல அண்ணா……. அவன் தீக்ஷா கிட்ட பேசும் போது சாதாரணம பார்த்தாலும்…… எனக்கு என்னமோ தப்பா படுது……. அவங்க வீட்டு ஆளுங்க யாரும் அதை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்கனு நினைக்கிறேன்……… பொறுக்கி………. பொண்டாட்டிய வச்சு வாழத் தெரியாதவனுக்கு அடுத்த பொண்ணு மேல என்ன கண்ணு” என்றவளை சமாதானாமாக்கும் முயற்சியில்…….
”அடேங்கப்பா………….. அவன் பேர் என்ன சொன்ன விஜய்தானே… டேய் விஜய்………. என் தங்கச்சியோட ராசி தெரியாம விளையாடிட்ட………… நீ கைமாதான் போல…………” என்று சென்னை பாஷையில் நக்கலாய்ச் சொன்னவன்……….. அதே வேகத்தில்
“தீக்சாவுக்கு மட்டும் இனி அவன் எதுனாலும் பண்ணட்டும்…………. இந்த சாரகேஷோட இன்னொரு முகம் அவனுக்கு தெரியாது” என்று கோப முகமாய் மாற…………
பாருவே அவன் தீவிர பாவனையில் கொஞ்சம் அரண்டாள்………
அண்ணா தங்கை இருவரும் அதன் பிறகு எதுவும் பேசாமல் அமைதியாகவே வந்தனர்……….. தீக்ஷாவின் நிலை இருவரின் மனதிலும் ஒட……… அதுவே அவர்கள் இருவரின் மனதையும் ஆட்கொண்டது
--------------------------
விஜய் மீண்டும் தீக்ஷா வீட்டுக்கு வந்தவன்…………. இரவுச் சாப்பாட்டை அங்கேயே முடித்து விட்டுதான் கிளம்பினான்…………
கிட்டத்தட்ட 10 மணி அளவில் தன் தாய் முன் மாத்திரை போட்ட தீக்ஷா……….
ஒரு தடவை மாத்திரைய குப்பைத் தொட்டியில போட்டு ஏமாத்தினதுக்கு…..அவன் ஆபிஸ்ல படுத்துறான்…….. நீங்க வீட்டில படுத்துங்க…….. என்றவள்
தன் தந்தையிடமும்…. தன் அண்ணனிடமும்…
”பாருவைப் பார்த்தது முதல் வீட்டிற்கு வந்தது வரை சொன்னவள்………… அப்பா நாளைக்கு பார்வதி வீட்டிற்கு போகட்டுமா…………….. என்னைக் கூட்டிட்டு போய் விட மட்டும் செய்யுங்கப்பா……………. வரும்போது அவ கூட வந்துருவேன்……..” என்று கெஞ்ச………………
”அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்……… விஜய் தம்பி திட்டுவாரு……”. என்ற தனது தாயின் வார்த்தையில் கொதிப்படைந்த தீக்சா
தன் அண்ணி அங்கு அருகில் இல்லை என்பதால்……………………………. பல்லைக் கடித்தபடி
“நான் என் அப்பாகிட்ட சொல்லிட்டு இருக்கேன்……….. கண்டவன் திட்டுவான்லாம் கவலைப் பட முடியாது………… உங்களுக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் நம்ம வீட்டு விசயத்தில் எதுக்குமா அவன் தலையிடுறான்……. வந்தானா………. அண்ணியப் பார்த்தானானு போய்ட்டே இருக்கணும்…….. எல்லை மீறி போய்ட்டு இருக்கான்………” என்றவளின் பேச்சில்
கடுமையான ஜெயந்தி
“அவன் இவன் லாம் பேசாத பேசதனு பல தடவை சொல்லிட்டேன்…..தீக்ஷா……….. “ என்றவளிடம்
“அப்பா………. இந்த அம்மாவை அவனுக்கு ஜால்ரா போட்றதை நிறுத்தச் சொல்லுங்க” என்று அடிகுரலில் இருந்து கத்த
”ஜெயந்தி……….. உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா……….. உள்ள போ” என்றவரிடம் முறைத்தபடி அவர் மனைவி செல்ல….
”அப்பா…….நாளைக்கு போகட்டுமா…ப்ளீஸ்” என்று கொஞ்சியபடி…….
“வேண்டாம்னு மட்டும் சொல்லிடாதீங்கப்பா………. அப்புறம் அடுத்த ஜென்மமும் வைஜெயந்தி IPS தான் உங்களுக்கு பொண்டாடியா வரனும்னு சாபம் விட்ருவேன்……… எப்டி வசதி” என்ற மகளை வைத்த கண் வாங்காமல் பார்த்த அவள் தந்தை……………
“ஒரு பத்து நிமிசம் கழிச்சு சொல்லவாம்மா” என்றபோது ஏளனமாகப் பார்த்தவள்
“இதுக்கு அம்மாவே பரவாயில்லை……. நேரா சொல்லிடுவாங்க……… அவன்கிட்ட பெர்மிஷன் வாங்க இந்த டைம் வேணுமா அப்பா” என்று சரியாகக் கண்டிபிடித்து கேட்டவள்………
“ப்ளீஸ் பா……….. அவன் கிட்ட கேட்டு நான் போகனுமுனா வேண்டாம்” என்று எழ…..
“நாளைக்கு அப்பா ஆஃபிஸ் போற டைம்ல கூட்டிட்டு போகலாமா……… இல்லை…….. எப்போ போகலாம்னு யோசிச்சேன் மா…. ஆஃபிஸ்ல வேலை கொஞ்சம் அதிகம்… அதுதான்” என்று மாற்றியவரிடம்
“கட்டிக் கொண்டவள்” பின் நக்கலாக
“ஆமா…….. போஸ்ட் ஆபிஸ்ல பெரிய வேலை இருக்கப் போகுதா……… லெட்டர்… கார்ட், இதுலாம் வாங்கத்தான் இப்போ எல்லாரும் க்யூல நிற்கிறாங்க……. ஏன்ப்பா நீங்க வேற சீன் போடறீங்க…….. TNPSC ஃபார்ம் கொடுக்கும் வேலைதான் இருந்துச்சு…. இப்போ அதுவும் ஆன்லைன்ல வந்து அதுக்கும் வேலை இல்லை……… சேவிங்ஸ் ஒண்ணும் மட்டும் தான் ஏதோ ஓடிட்டு இருக்கு… என்று சலிக்க
“இப்போ சொல்லுங்க எப்போ போகலாம்” என்று முறைக்க
“உனக்குத் தெரியாதுமா……… இப்பவும் போஸ்ட் ஆபிஸ்லாம் பிஸிதான்மா………” என்றபடி
“அதை விடு…. பத்து மணி ஓக்கேவா” என்று கூறியவுடன் சம்மதமாய் தலையாட்டியபடி தந்தையிடம் சொல்லிக் கொண்டு தூங்கச் சென்றவள்...........
தன் தாய் தன் அருகில் வந்து படுக்கும் வரை எல்லாம் காத்திருக்க வில்லை……… உடனேயே கண் உறங்கினாள்…………
வைத்தீஸ்வரன் விஜய்க்கு போன் செய்ய எண்களை அழுத்த போக……. அவர் மனதின் நாயகனே போன் செய்தான்
”விஜய் நானே உங்களுக்கு போன் பண்ணலாம்னு நினைத்தேன் பா…….” என்று சொல்லி தீக்சா பார்வதி வீட்டுக்கு போக அனுமதி கேட்ட விசயத்தை சொல்ல……….
அவனும் ஒன்றும் சொல்ல வில்லை………… சரி என்று சொன்னவன் ஒன்று மட்டும் கேட்டான்
‘”பார்வதி வீடு ஏர்போர்ட் பக்கமெல்லாம்……….. இல்லைல மாமா………. நீங்க யாராவது ஒருத்தவங்க அவ கூடவே இருக்க முடியாதா………… எனி வே பார்வதி ஓகே தான் … இன்னைக்கு கூட அவ இருக்கானுதான்….. நான் கூட மெயின் ப்ராஞ்சுக்கு போய்ட்டு வந்தேன் ….. பார்வதி பார்த்துப்பா…… மறக்காம மாத்திரைலாம் அவ பேக்ல வச்சு அனுப்புங்க மாமா” என்று சொல்ல
“சரிங்க தம்பி….. ஆனா நீங்க தீக்ஷா விசயத்தில தப்பா முடிவெடுக்கிறீங்களோனு…” எனும்போதே
“மாமா எனக்கு தூக்கம் வருது பை”
என்று சொல்லி போனை வைத்தவனை நினைத்து……….. ஆழ்ந்த பெருமூச்சை இழுத்தபடி தனது அறையை நோக்கிச் சென்றார் வைத்தீஸ்வரன்
போனை வைத்த விஜய் என்கிற விஜயேந்தர்………….. தன் இடது மார்பில் கை வைத்தபடியே கட்டிலில் படுத்திருந்தவன்…….. தன் உயிரான மூன்றெழுத்து மந்திரத்தை வாயில் உச்சரிக்காமல்………… மனதோடு உச்சரித்து மனம் அமைதி ஆனவன்……… அந்த அறையின் சுவர்களில் இரண்டு மூன்று இடங்களில் அவன் உச்சரித்த அந்த மூன்றெழுத்து மந்திரம் அவன் பெயரோடு சேர்த்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்க.... அதைப் பார்த்தவனின் மனது இப்போது ஆறெழுத்து மந்திரமாய் அதைச் சொல்லி பார்த்து பேரமைதி கொண்டது
பின் எழுந்து….
பீரொவைத் திறந்தவன் அவனது இளம் பிங் வண்ண சட்டையையும்…. அதோடு இணைந்து இருந்த அடர் பிங்க் வண்ண புடவையையும் எடுத்தவன் தன் மார்பில் வைத்து வழக்கம் போல் கண் மூடி சிறிது நேரம் இருந்தவன்… மீண்டும் அவற்றை தனது பீரோவில் வைத்து பூட்டப் போனான்…..
அன்று மட்டும் உள்ளே வைப்பதற்கு மனமே வராமல் சில நிமிடம் தன்னோடே வைத்திருந்தவன் பிறகு மனம் இன்றி உள்ளே வைத்தான்
உள்ளே வைப்பதற்கு முன் தன் சட்டையின் இடது மார்புப் பகுதியில் அழுத்தமாய் பதித்திருந்த இளம் சிவப்பு நிற லிப்ஸ்டிக் இதழின் அச்சாரத்தினை தன் இதழால் அழுந்த மூடினான்.
கடவுள் விட்ட வழி என்னவோ என்ற மனக் குழப்பத்திலேயே மூடியவனின் காதுகளில் ஹெட்செட் ஆட்சி செய்ய வழக்கம் போல் கண் மூடி விழித்திருந்தான்…..
தீக்ஷா உடலில் மட்டும் பிரச்சினை கிடையாது போல.... வேற ஏதோ பிரச்சினை இருக்கிறது