top of page
Writer's picturePraveena Vijay

சந்திக்க வருவாயோ? 27

Updated: Mar 12, 2020

அத்தியாயம் 27:

/* எவனோ ஒருவன் வாசிக்கிறான்…

இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்…

தவம் போல் இருந்து யோசிக்கிறேன்

அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்

கேட்பதை அவனோ அறியவில்லை

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே

அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை

புல்லாங்குழலே பூங்குழலே */



”என்ன சொல்றீங்க சந்தோஷ்”... ராகவ்வை பற்றி சந்தோஷ் சொன்ன போது.. இதுதான் மிருணாளினியின் முதல் வார்த்தையாக இருக்க… அதிலும் மிகவும் சூடாக…


”அப்பா ஏற்கனவே அண்ணா மேல கோபமா இருக்காங்க… ஏன் இப்படி பண்றாங்க...இருங்க நான் பேசுறேன்” என்றபடி… தனது மொபைலை எடுத்து தன் சகோதரனுக்கு அழைக்கப் போக…


வேகமாகப் பறித்த சந்தோஷ்…


“இனி… நான் சொல்றதைக் கேளு… ” என்று பறித்தவனிடம்… மிருணாளினி முகத்தில் கோபம் கோபம்… அது மட்டுமே இருக்க…


“ப்ச்...இனி… எதுக்கெடுத்தாலும் கோபப்படாத… ”

“ஜஸ்ட் அனலைஸ் பண்ணு… ஏன் இப்படி பண்ணினாங்கன்னு… இது நீ அடிக்கடி சொல்ற டைலாக்… மத்தவங்ககிட்ட… உனக்கு அப்ளை பண்ண மறந்துற…” என்ற போதே…


மிருணாளினியின் கோபம் அவளுக்காக இல்லை அவன் தங்கைக்காக என்பதை அறியாமல் அவன் பேச…


“சந்தோஷ்… ஒர் பொண்ணோட எமோஷனல் இதுல இருக்கு… சந்தியா என்னென்ன கற்பனை பண்ணி வச்சுருப்பா… இன்னைக்கு நடக்கப் போற விசயங்களை நினைத்து… ஈசியா சொல்றீங்க… ஒருவேளை… நீங்க இன்னைக்கு இங்க வரலைன்னா… என்னோட நிலமை எப்படி இருக்கும்னு தின்க் பண்ணிப் பாருங்க…” என்றவளின் முகம் கோபத்திலும்… வருத்தத்திலும் இன்னும் சிவக்க…


“புரியுது… ஆனால் என்ன பண்ண முடியும் சொல்லு… என் தங்கையை அழ வச்சுட்டேன்னு சொல்லி ரகுவை கட்டி இழுத்துட்டு வரமுடியுமா சொல்லு…” ராகவ்விடம் காட்ட முடியாத கோபம் இப்போது வெளிவர… இருந்தும் தன்னை அடக்கினான்… இவன் கோபம் கண்டு மிருணாளினியின் முகத்தில் படர்ந்த அதிர்ச்சியில்….


”நடந்ததை மாத்த முடியாதும்மா.. இனிமேல என்ன நடக்கனும்னு யோசிக்கலாம்… அம்மாகிட்டயும் காதம்பரி கிட்டயும் ரகு வரமாட்டான்னு சொல்லி… சந்தியாகிட்ட சொல்ல சொல்லிட்டேன்… ஆனால் அம்மா சந்தியாகிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாங்க…” என்றான் சற்றே கவலையுடன்..


“ஏன்”.. யோசனையாக கேட்டவளிடம்…

“அவ எப்படி எடுத்துக்குவான்னே தெரியலை இனி… ரகுவும் அவகிட்ட பேச மாட்டேனுட்டான்… ஸ்டேஜ்ல எப்படியும் தெரியத்தானே போகுது… அப்போ அவ பெருசா ரியாக்ட் பண்ண மாட்டான்னு… ஒரு கெஸ்…” என்ற போதே…


மிருணாளினியின் முகம் கடுகடுக்க…


“இது சரி வராது சந்தோஷ்… நான் அண்ணாகிட்ட பேசுறேன்… சந்தியாகிட்ட தன்னோட நிலையை அவங்களே சொல்லட்டும்…” என்ற போதே…


“இவ்வளவு சொல்லியும் நீ கேட்க மாட்டேன்னா… அது உன்னோட இஷ்டம்… “ உள்ளடங்கிய ஆதங்கத்தில்.. அவன் குரல் வெளி வர…


மிருணாளினி… சட்டென்று தன் பிடிவாதத்தை நிறுத்தினாள்…. அவனின் குரலில்…


“இப்போ நான் என்ன பண்ண” … எரிச்சல் மட்டுமே இருக்க…


“உங்க வீட்ல… ஐ மீன் அத்தைகிட்டயும் மாமாகிட்டயும் நீ சொல்றியா… இல்ல நானே சொல்லட்டா… நீ சந்தியாவை விட எமோஷனலாயிட்ட… நீயே இந்த அளவு கோபப்பட்டேன்னா… சந்தியா நோ வே” என்றவனின் இப்போது சந்தியாவை நினைத்து மிகவும் வருத்தப்பட… கோபம் வருத்தம் ஆற்றாமை என அனைத்தும் சேர்ந்த கலவையாகி அதை அடக்கும் வழி தெரியாது அருகில் இருந்த இருக்கையில் அமர…


இப்போது யார் யாரைத் தேற்றுவது என்ற நிலமையில் இருந்தனர் இருவருமே…


சில நிமிடங்களில்… மிருணாளினிதான் சந்தோஷிடம்…


“சந்தோஷ்… சாரி…” என்றவள் அவன் இன்னும் அப்படியே இருப்பதை உணர்ந்து… அவனிடம் நெருங்கித் தேற்ற நினைக்க… காதலியின் அருகாமையோ… இல்லை தன் வேதனை அவள் மட்டுமே உணருவாள் என்ற நம்பிக்கையோ… சட்டென்று இறுக்கமாக அணைத்தவனின் திடீர் அணைப்பில்… திகைத்தவள்…


“சந்தோஷ்” என்று தன்னை அவனிடமிருந்து விடுவித்துக் கொள்ளப் போராட…


“ப்ளீஸ் ’இனி’… நோ மோர் ரூல்ஸ்… “ என்றவன்… அதே நேரம் அதற்கு மேல் முன்னேறவும் இல்லை…


“சந்தோஷ்… இது என்ன சின்னப் பிள்ளை மாதிரி…யாராவது தப்பா நினைக்கப் போறாங்க” என்று அச்சம் பாதி படபடப்பு பாதி என இவள் பேச..


உட்கார்ந்திருந்த படி… அவளுக்குள் புதைந்திருந்தவன் …


“அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டாங்க…. உன் ரூல்ஸ் ராஜாங்கம் இந்த உலகமே அறியும்… இன்னைக்கும் நான் ப்ரேக் பண்ணலேன்னா… என்னை வேற மாதிரி சொல்லிருவாங்கடி…” என்ற போதே அவன் தலையிலேயே செல்லமாக அடி வைத்தவளை… நிமிர்ந்து பார்த்தான் ஆச்சரியமாக… கோபமில்லா மிருணாளினியை…


“ஹேய் இனி… இது என் மிருணாளினியா.. என்னைத் தொட்டுலாம் பேசுறா…” என்றவனிடம்


“நீங்க… உங்க தங்கையை நினைத்து ஃபீல் பண்றீங்களா… நீங்க ஃபீல் பண்ற இலட்சணம் அழகா இருக்கு…” மிருணாளியின் பொய்க் கோபத்திலும் நாணமென்னும் செவ்வானம் அழகாக விரிய…


இவனின் இறுக்கமோ… இன்னும் அழுத்தமாக…


”இனி… ஆமாம் தங்கையை நெனச்சு ஃபீல் பண்றதுனாலதான்… இவ்ளோ அழகா… அலங்காரம் பண்ணிட்டு தேவதை மாதிரி இருக்கிற உன்னை… நீ இந்த புடவைல அழகா இருக்கேன்னு சொல்ல முடியலை… அப்டியே என்னை கொல்றேன்னு சொல்ல முடியலை… ” என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே நிமிர்ந்தவன் முடிவில் அவள் இதழ்களில் தன் பார்வையைப் பதிக்க… முறைத்தவளிடம்.. உல்லாசமாகச் சிரிக்க… அங்கு அவர்கள் உலகம் மட்டுமே


”நீதானே ரூல்ஸ் ராமானுஜி… எனக்கு எந்த ரூல்சும் இல்லை… உன்னை மொத்தமா எனக்கு நம்ம மேரேஜ் முடிச்ச பின்னாடி கொடு… நானும் எடுத்துக்கறேன்… இப்போ என்னை கொஞ்சமா கொஞ்சமா எடுத்துக்கோ.. கொஞ்சம் என்ன மொத்தமாவே நான் உன் அளவுகெல்லாம் கஞ்சம் இல்லை” என்று அவள் அருகே நெருங்க…


”எ… என்ன… கம் அகைன்… முடியாது…” என்று வார்த்தைகளோடு தடுமாறியவளிடம்.. பிடிவாதமாக இவனும் வாதாடினான்..


”யெஸ்… ஐ நீட் யுவர் ஆக்ஷன் ஃபர்ஸ்ட்… பெண்கள் ஆண்களுக்குச் சமம்… அது இது,... பெண்ணியம் பேசுற ஆள் தானே.,... ஜஸ்ட்… உன்னோட லிப்ஸ் டச் மட்டும் போதும்… இங்க” என்று இதழைக் காட்ட..


“விளையாடுறிங்களா” என்ற போதே… அவள் குரலில் வெட்கம் அபிநயம் பிடிக்க..


“விளையாட.. ஸ்டார்ட் பண்ணவே இல்லை கண்ணம்மா” என்றவனின் பார்வை… கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் பார்க்காமல் இருக்க…


“2 வீக்ஸ் தானே…சந்தோஷ்” இப்போது கோபமோ… முறைப்போ இல்லாமல் வார்த்தைகள்… சிணுங்கலாக வர…. அதைக் கண்டு கொண்ட சந்தோஷின் கண்கள் சமரசமே இல்லாமல் சில்மிஷப் பார்வையை வீசியபடி தன்னை நோக்கிச் சட்டென்று இழுக்க,…

மிருணாளினியும் இலக்கியம் படைக்க தயாராகி மெதுவாகக் குனிந்தவள்…

தயங்கியவளாக…

“மிஸஸ் சந்தோஷா உங்களுக்கு முதல் முத்திரைய கொடுக்கலாம்னு இருந்தேன்… பரவாயில்லை…” என்ற அவள் வார்த்தைகளைக் கேட்டவன்… நினைவுகள் எங்கோ பறக்கப் போக…

கொஞ்சமாக எடுத்துகொள்ள நினைத்தவளோ முதல் இதழ் பதிவுகளை மொத்தமாக சரணடையும் நாளுக்கான அச்சாரமாக வைக்க ஆரம்பித்து இருந்தாள்…


----------



அதன் பிறகு மிருணாளினி.. தன் பெற்றோரிடம் சொல்ல… சுகுமார் அடைந்த கோபத்திற்கு அளவே இல்லை என்றே சொல்லலாம்… ராகவ்விற்கு அவர் தொடர்பு கொண்டதோ கணக்கில் அடங்கா முயற்சிகளாக இருக்க...இத்தனை கூட்டத்தை வைத்துக் கொண்டும் கோபப்படவும் முடியாமல்.. அதை அடக்கமும் முடியாமல்…. அன்றைய நிச்சயதார்த்த விழாவில்... ரகுவைப் பற்றி விசாரிப்பவர்களுக்கு பதில் சொல்லிச் சொல்லியே மனம் குன்றலானார்…




சந்தியாவின் கல்லூரித் தோழிகள், அலுவலகத் தோழிகள் எனக் கொஞ்சம் கொஞ்சமாக சந்தியாவைச் சுற்றி கூட்டம் சேர… மணப்பெண்ணுக்கான…. நாணம்… அடக்கம்… எதிர்பார்ப்பு… படபடப்பு என… அன்றைய நாளின்… அக்மார்க் நாயகியாக நம் நாயகி மாறியிருக்க...


சாதரணமாகவே சந்தியா அழகி... அன்றைய தின பிரத்யோக அலங்காரம் அவளின் அழகை இன்னும் மெருகேற்ற அது போதாதென்று.... சுற்றி நின்றவர்களின் கேலி கிண்டல் என அவள் கன்னங்கள் இன்னும் சிவப்பேறி பேரழகியாக மாற்றிக் கொண்டிருக்க.... ஏனோ ராகவ்வை சந்திக்கும் தருணத்தை அவளையுமறியாமல் மனம் எதிர்பார்க்க ஆரம்பிக்க.. அவளுக்குள் ஏற்பட்ட இனிய படபடப்பு இதுவரை அவளறிய படபடப்பாக இருக்க… அந்தப் படபடப்பில் தானாகவே அமைதியும் ஆனாள்…


சற்று முன் காதம்பரியுடனும்… நிரஞ்சனாவுடனும் அவள் பேசிய பேச்சென்ன… இப்போது இருக்கும் நிலையென்ன… என்ற விதத்தில்.. நேரம் நெருங்க நெருங்க… அவளது உள்ளமும் ராகவ்வை சந்திக்க பேராவல் கொள்ள… அவளுக்கே சற்று அதிகப்படியாகத்தான் இருந்தது… அவளது இந்த நிலை… தனக்குத்தான் இதெல்லாம் ஓவராகத் தெரிகிறதா…. இல்லை இப்படித்தான் மணமக்கள் நிலை இருக்குமா… இதே போல் ராகவ்வும் தன்னை எதிர்பார்த்து காத்திருப்பானா… மனம் சுகமான கேள்விகளால் அவளைச் சுகமாகவேப் பந்தாடிக் கொண்டிருக்க.. அதையும் சுகமாகவே அனுபவிக்க… முகம் தானாகாவே அழகில் இன்னும் விகசித்தது,.


“சந்தியாக்கு எல்லாம் முடிஞ்சதா…. அவங்க கூப்பிடும் போது ரெடியா இருங்க.. அப்போ அது பண்ணலை இது பண்ணலைனு… டைம் கடத்தாதீங்க” பரிமளா அறிவிப்பாக சொல்லி விட்டுச் செல்ல… ஒரு வழியாக அவளைச் சுற்றி நின்ற அவளது தோழிகளை அழைத்துக் கொண்டு நிரஞ்சனாவும் வெளியேறி விட… காதம்பரியும் சந்தியாவும் மட்டுமே…


சந்தியா காதம்பரியைப் பார்த்து பெரிதாக புன்னகைக்க… காதம்பரி முகத்திலோ முதலில் இருந்த புன்னகை எல்லாம் இப்போது இல்லை… சந்தியா சிரித்தாள் என்பதற்காகவே அவள் சிரித்து வைக்க… காதம்பரியின் முக வாட்டம் சந்தியாவுக்கு நன்றாகவேப் புரிய…


“காது… என்னாச்சு… ஏன் ஒரு மாதிரியா இருக்க… முடியலையா.. ரெஸ்ட் எடு காதம்பரி... ” சகோதரியாக சந்தியா படபடக்க…


காதம்பரி… இப்போது சுதாரித்து… முகத்தை மாற்ற… அது சந்தியாவின் பார்வையில் தப்பிதம் இல்லாமல் பட… சந்தியாவின் முகமும் மாறியது...

“ஏதாவது ப்ராப்ளமா காதம்பரி… சந்தோஷப் பார்க்க போயிட்டு வந்த பின்னால உன் முகமே சரி இல்லையே… கொஞ்ச நேரத்துக்கு முன்னால வந்த அம்மா முகமுமே சரி இல்லையே… என்ன ஆச்சு…” தன் தாயை சரியாக இனம் கண்டு கொண்டவள்… இப்போது காதம்பரியின் முகவாட்டத்தை நூல் பிடித்துக் கேட்க… சந்தியாவின் குரலில் இப்போது… என்ன விசயம் என்று காதம்பரி தன்னிடம் சொல்ல வேண்டும் என்ற தொணியில்… அழுத்தமும் பிடிவாதமும் கலக்க…


‘ச்ச்சேய் அதெல்லாம் ஒண்ணுமில்லை சந்தியா… ” என்ற போதே காதம்பரி சொன்ன வார்த்தைகளின் உண்மைத் தன்மை அவளது முகத்தில் பொய்க்க..


முறைத்தாள் சந்தியா…


“இப்போ என்னன்னு சொல்லப் போறியா இல்லையா… அப்பா ஏதாவது பிரச்சனை பண்ணிட்டாரா.. அம்மாவை ஏதாவது திட்டிட்டாரா” ஏனோ வழக்கம் போல கணேசனின் கோபம் அவள் கண் முன் வர… அதனால் அவளும் அப்படிக் கேட்க….


அப்போது சரியாக கணேசனும்… வசந்தியும் உள்ளே வந்தனர்….

தந்தையாக கணேசனுக்கும் சந்தியாவைப் பார்த்து மனம் நெகிழ… இருந்தும் அதை வெளிக்காட்டாமல்… எப்போதும் போல..…


“உன் வால்த்தனம்… குறும்பு அதையெல்லாம் கொஞ்சம் அடக்கி வாசி…. சபையில…” என்று சொன்னபடி...வசந்தியிடம் திரும்பி…


”மாப்பிள்ளை ஏன் வரலைன்னு சபைல யாராவது கேட்டா நான் பதில் சொல்லிக்கிறேன்… நீ கண்டுக்காத… நம்ம ஆளுங்க கிட்டயும் கொஞ்சம் வாயை அடக்கி வைக்க சொல்லு... சுகுமார் வேற டென்சனா இருக்கார்… சந்தியாவை அழைச்சுட்டு வர லேட் பண்ணிடாத காதம்பரி” என்று வசந்தியிடம் ஆரம்பித்து காதம்பரியிடமும் கேட்டபடியே தான் வந்த வேலை முடிந்து விட்டது போல… அறையை விட்டு கிளம்ப… வசந்தியும் அவரோடே கிளம்ப எத்தனிக்க… வசந்தியால் அது முடியவில்லை… ஏனென்றால்…. வசந்தி அங்கிருந்து போக முடியாமல் தாயின் கைகளை.. போக விடாமல் இறுகப் பற்றியிருந்தாள் சந்தியா...


தன் கைகளைப் பற்றியிருந்த சந்தியாவின் கைகளின் அழுத்தமே தன் மகளின் மன நிலையை வசந்திக்குப் பறைசாற்ற… குற்ற உணர்ச்சி ஒரு புறம்… மகளின் வருத்த முகம் ஒருபுறம் தன்னை இம்சிக்க… மகளின் முகம் காணவே தவித்தார் வசந்தி...


“ரகு வரலையாம்மா…” அடக்கப்பட்ட கோபமும்… நிராசையாகிப் போன ஆசையில் வந்த வேதனையும் அழுத்தப்பட்ட வார்த்தைகளாக சந்தியாவிடமிருந்து வெளிவர… வசந்தியின் நிலைமையோ அதை விட மோசமான நிலை


"சந்தியா" என்ற தாயின் தழுதழுத்த குரலிலேயே… சந்தியாவின் கண்கள் கலங்க ஆரம்பித்து இருந்தன...


காதம்பரி தான் இப்போது…


”ரகுக்கு… அவரோட வேலை முடியலையாம் சந்தியா… இன்னும் மொரீஷியஸ்ல தான்” என்று தயங்கித் தயங்கி ஆரம்பிக்க… காதம்பரியிடம் கைமறித்து நிறுத்தினாள்…


”ரகு வரலைல… நோ நீட் எக்ஸ்ப்ளனேஷன்... போதும்” வாய் வார்த்தைகள் காதம்பரிக்கு மட்டுமே… ஆனால் பார்வை இன்னும் தன் தாயிடம் தான் இருந்தது….


அந்த பார்வை வீரியம் தாங்க முடியாத வசந்தியிடம் இருந்து வார்த்தைகள் வராமல்…. விசும்பல் மட்டுமே இருக்க

“உன்கிட்ட எதையாவது நான் மறச்சுருக்கேனா வசந்தி… அப்போ ஏன்” என்ற போதே… கண்கள்.. விழிநீரை சட்டென்று அவளைக் கேட்காமலே இறக்கி விட…

”ஏன்னா… நான் உன் அம்மா சந்தியா…. உன்னோட இந்தக் கண்ணீரை என்னால பார்க்க முடியலடா…” வெடித்தன வார்த்தைகள் மகளைக் கட்டிக் கொண்ட வசந்தியிடம் இருந்தும்…

இப்போது தாயும் கண்கள் கலங்க…

அப்போதும் சிலையாகத்தான் இருந்தாள் சந்தியா… சந்தியா அழக் கூட நினைக்கவில்லை... வரும் கண்ணீரை நிறுத்தத்தான் நினைத்தாள்.... ஏனோ அவள் கண்கள் அவள் பேச்சை கேட்க மறுத்தன.... காதம்பரி எவ்வளவோ சொல்லியும் சந்தியா அழுவதை நிறுத்தவில்லை..... நிறுத்த முடியவில்லை…

ராகவ் வரவில்லை… வரமாட்டான்… என்பதை நேற்றே கேள்விப் பட்டிருந்தால்கூட அதை தனக்குள் சமாளித்து இன்றைய தினத்தில் புன்னகையுடன் நின்றிருந்திருப்பாளோ என்னவோ ....


இன்று அப்பட்டமாக ஏமாற்றப்பட்ட வேதனை... எப்போதும் அவளுக்கு ரகுவால் ஏமாற்றம் தான்... இதற்கு முன்னரெல்லாம் தனக்குள் சமாளித்து கொண்டவளால் இன்று ஏனோ முடியவில்லை... அதற்கேற்றார்போல தன் வருத்தத்தையும் துக்கத்தையும் தனக்குள் கிரகித்துக் கொள்ள… தனிமையும் கிடைக்காமல் போனதுதான் உச்சக்கட்ட வேதனை… அடுத்தடுத்து ஆட்கள் அவளது அறைக்குள் வர..


வந்த அனைவரின் பார்வையும் இவளுக்கு தன்னை நோக்கிய பரிதாப பார்வைகளாகவேப் பட… அடிப்பட்ட மானாக.... துடிக்க ஆரம்பித்தாள் சந்தியா...


வசந்தியால் கூட தன் மகளைத் தேற்ற முடியவில்லை .....


மௌனமாக கண்களின் வழியே வழிந்த கண்ணிர்… சந்தியாவின் மணமகள் அலங்காரத்தை அலங்கோலப்படுத்திக் கொண்டிருக்க... மற்றவர்களோ... அதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்க… கண்ணாடியில் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சந்தியாவுக்குள் பலவிதமான போராட்டங்கள்…


இன்று ராகவ் வரவில்லை என்பதால் அழுகிறாள் என மற்றவர்கள் நினைத்திருக்க…


இவளுக்கோ… ரகு வேண்டுமென்றே வராமல் தவிர்க்கிறான்.. என்ற உண்மை உணர்ந்ததால் உள்ளம் கனமாகி இருந்தது… இந்த அளவு வெறுப்பவனோடு திருமண வாழ்க்கையில் ஒன்றி வாழ முடியுமா… இன்னொரு வசந்தியாக ஆகப்போகின்றளா இந்த சந்தியா… தன் தாய்க்காவது ஆறுதல் தேட தானும் சந்தோஷும் இருந்தோம்… ஆனால் எனக்கு... முதன் முதலாக வாழ்க்கை குறித்த பயம் அடி மனதில் சுளீரென்று ஒரு வலியைக் கொடுக்க…


அந்த பயத்தினால் வந்த வலியின் வீரியம் எந்த அளவு இருந்ததோ அதே அளவு கோபம் ராகவ் மீது வந்தது… இதுவரை அவன் மீது வராத கோபம்… இன்று ஒருவித உரிமையும் சேர… கோபத்தின் அளவு பல்மடங்கு பெருகிக் கொண்டிருக்க… கைகளை இறுக அழுந்திக் கொண்டாள்


எங்கு அவன் மீதுள்ள கோபத்தை இங்கு யாரிடமும் காட்டிவிடுமோ… இல்லை வெடித்து விடுவோமோ… தன் உணர்ச்சிப் பிரவாகங்களை தனக்குள் அடக்கிக் கொள்ள பெரும் போராட்டத்தில் இருக்க…

கண்ணாடியில் தன் முகம் பார்த்தாள்… காதம்பரியோ இவள் அழுகையினால் கரைந்த.. கரைத்த அலங்காரத்தை… சரி செய்ய பெரும்பாடு பட… இவளுக்கோ ஏளனமாக இதழ்கள் வளைந்தன...

"கேவலம் இந்த அலங்காரம் அலங்கோலம் ஆகி விடாமல் இவர்கள் பாடு படுகின்றனர்... என் வாழ்க்கையில் என் திருமணம் என்னும் அலங்காரம் என்ன ஆகுமோ" சந்தியாவின் மனம் இதை நினைக்க இன்னும் அவள் கண்கள் என்னும் குளம் நீரால் நிரம்ப.... அணை உடைத்த நீராக அவள் கண்கள் அருவியாக வழிய.... யாரோ ஒரு குழந்தை செல்போனை கொண்டு வந்து...


"ரகு அங்கிள் லைன்ல இருக்காங்க..... பொண்ணுகிட்ட இனி ஆண்ட்டி கொடுக்கச்சொன்னாங்க" என்று நீட்ட..


சந்தியா பட்டென்று எழுந்து உடை மாற்றும் அறைக்குச் செல்ல...

"சந்தியா பேசு ....... எங்க போற" என்ற காதம்பரியின் குரல் மட்டுமே எதிர்முனையில் இருந்த ராகவுக்கு போய்ச் சேர... அழைப்பும் தானாகவே கட் ஆகி இருந்தது…


சந்தியா தன் முகத்தில் எத்தனை முறை தண்ணீரை அடித்தாலும்..... கண்ணீர் போட்டி போட்டுக் கொண்டு வர.... வாழ்க்கையில் தன் அடிமனதில் வைத்திருந்த வைராக்கியம் அத்தனையும்... அவளிடம் இருந்து வெளியில் வந்து கொண்டிருந்தது...


யார் என்ன சொன்னாலும்... எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் அடுத்தது என்ன என்று சிறு குழந்தை போல மாறிவிடும் அந்த குணம் சிறு வயதிலேயே.. அவளால் அவளுக்குள்ளேயே பழக்கப்படுத்தியிருந்த இந்த குணம் இன்று மாறுபட்டிருந்தது....


"ஏன் என்னால் என்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை..... ரகுவிற்கு வேலை இருந்திருக்கும்... அதனால் வர முடியாமல் போயிருக்கும் என்பது உண்மை என்று நினைத்தால் கூட என்னால் அதை ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... அவனை நான் ஏன் எதிர்பார்க்கிறேன்.... அவன் வரமுடியாததை எண்ணி நான் ஏன் உடைகிறேன்... ஆயிரம் பேர் இருக்கும் இந்த இடத்தில் அவன் ஒருவனின் பிரசன்னத்தை மட்டுமே என் விழி நிரப்ப ஆசைப் படுகிறதா.... அது முடியாமல் போன நிராசையால் தான் என் விழிகள் இப்படி கண்ணீரை உகுக்கின்றனவா... இதற்கெல்லாம் பெயர்தான் காதலா.... இந்த எதிர்பார்ப்புதான் காதலா.. ஆனால் இதற்கெல்லாம் தகுதி இருக்கிறதா அவனுக்கு… என் தவிப்பு புரியுமா… புரிந்தாலும் அவனுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலையா என்ன...."

கிட்டத்தட்ட சில நிமிட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தன்னைச் சமன்படுத்திய சந்தியாவிடம் இப்போது கன்னங்கள் சிவப்பை பூசிக் கொள்ள வில்லை ... கண்கள் தான் சிவந்திருந்தன....

யாரிடமும் அவள் பேச வில்லை.... பேச விரும்பவோ… இல்லை மற்றவர்களின் அனுதாப வார்த்தைகளைக் கேட்க விரும்பவில்லையோ என்னவோ… அமைதியாகவே இருந்தாள்...


முதலில் மிருணாளினி சந்தோஷ் இருவருக்குமான நிச்சயம் உறுதிப் படுத்தப்பட.... அடுத்து சந்தியா - ராகவ் திருமண பந்தம் உறுதிப்படுத்தப்பட.... மேடையில் தன் கண்ணீரை கட்டுப்படுத்தி அடக்கி கொண்டு பொம்மை போல் அமர்ந்திருந்தாள் சந்தியா...


அதே நேரம்.... மேடையின் கீழ் இருந்த சுகுமாரின் உறவினர் ஒருவர்....


"என்ன சுகுமார் உன் மருமகள் பாட்டெல்லாம் பாடுவாள்னு சொன்னீங்க... ஒரு பாட்டு பாடச் சொல்லுங்க... வீணைக் கச்சேரி கூட உங்க மருமகளுக்காகத்தான் வச்சேனு சொன்னீங்க" என்று சுகுமாரை வம்பிழுக்க...


சுகுமாருக்கு ஏற்கனேவே... சந்தியாவின் முகம் இருந்த விதத்தில் மனம் குற்ற உணர்ச்சியில் துவண்டு கொண்டிருக்க....


"இல்ல கொழந்தை டயர்டா இருக்கா..... வீட்டுக்கு வாங்க ஒருநாள்... எங்க வீட்டு பொண்ணா வந்த பின்னால் பாட வைக்கிறேன்" என்று பேச்சை மாற்ற…


அருகில் இருந்த கணேசனோ ....... தன் மகளின் நிலை புரியாமல்...


"பாட்டுக் கிளாசுக்கு அனுப்பினதுதான் மிச்சம்.... பூஜை அறையில் பாடினதுதான் சொச்சம்" என்று தன் மகளைப் பற்றி அன்றும் அப்போதும் குறை பட்டுக் கொள்ள....


ஏற்கனவே போட்டிருந்த திட்டம் தான் மேடையில் சந்தியா பாடுவது… அதற்கான குறித்த நேரமும் வர… சந்தியாவின் கைகளில்… மோகனா வீணையை கொடுக்க…. அவளால் அதை மறுக்க முடியவில்லை… ஏனோ மறுத்தால்… வெள்ளைத்தாமரையில் வீணை ஏந்தியிருக்கும் ஆயக் கலைகளின் முதன்மை அரசியாம் கலைமகள் என்ற சரஸ்வதி தேவியையே அவமதிப்பது போல் இருக்க… கைகள் தானாகவே வீணையைப் பற்றின…


ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ…..

ஆஆஆஅ…..ஆஅ…. ஆஆஆ…..

நிஸ கமபநி மநிபகா

ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ…..

நிஸக நிஸக நிஸஸநி

ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ…..

ஸகநிஸகா மபகமபா ஸகநிஸகா மபகம

பமக பமக பமக பமக பம மகஸா

ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ…..

ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ…..

ராகவனே ரமணா ரகுநாதா


என்று நேற்று வரை பயிற்சி செய்த பாடலை ஆரம்பிக்கும் போதே அவளால் அது முடியாமல் போக…. திணறினாள்… பாடவே… இருந்தும் என்றோ… போட்டியின் போது கண்ணன் நினைவாக மீரா பாடிய பாடல் நினைவுக்கு வர…. பாட ஆரம்பித்தாள்..சந்தி்யா.. அவளது ராகவ ரகு ராமனை கண்ணனாக பாவித்து…


கண்ணா வா கவிதை சொல்வேன் வா

தலைவா

அன்பே வா .. அழுது நின்றேன் வா

துணைவா...

என்ன சோதனை

ஜீவ வாதனை

வானவில்லை காண வில்லை நாதனை....

---

சுதி சேரும் முன்னே இசை பாட வந்தேன்…

விதி சேரும் முன்பே விளையாட வந்தேன்…

புறாவைப் போல வாழ்ந்தவள் நிலாவை போல தேய்கிறேன்…

வராத வந்த மேடை வந்தவள் பநாதை போல பாடினேன்..

இளைய மேகம் திரும்புமா… எனது மண்ணில் பொழியுமோ

உறவில் பூக்கள் அரும்புமா…

---

கண்ணா வா கவிதை சொல்வேன் வா

--

குரல் தந்தவனை இவள் பாடுகின்றாள்…

வரம் தந்தவனை இவள் தேடுகின்றாள்…

வராத தோட்டம் வந்தது சங்கீதம் செய்த வேலையோ

இந்நேரம் உன்னைத் தேடினேன்… என்னோடு என்ன லீலையோ


எந்தன் கண்ணில் நீர் வரும்… என்று உந்தன் தேர் வரும்;…

இணைய வேண்டும் இருவரும்…

---

கண்ணா வா கவிதை சொல்வேன் வா

--




உணர்வுகளை … தன் வேதனைகளை மறைக்காமல் பாட… அனைவரும் ரசித்தனர்… அவளுக்கு நெருக்கமானவர்களைத் தவிர..


மகளின் வேதனை கணேசனுக்கும் தெரியவில்லை... நெருக்கமில்லை என்பதாலா… தெரியவில்லை…

அவர் உணரவில்லை சந்தியாவின் வேதனையை… மாறாக மகளின் இனிமையான குரலில் தன் மகளைப் பார்த்து பிரமித்து நின்றார் கணேசன்...


அதே நேரம்…


“அப்பா.. வீணைக் கச்சேரில நான் தான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ்…” என்று தன்னை நோக்கி ஓடிவந்த சிந்தியாவின் முகம் நினைவில் தோன்ற… முதன் முதலாக அடிபட்ட வலியில் முகம் அதிர நின்றிருந்தார்…


“சிந்தியா… எப்படி இருப்பாள்…” அடிக்கடி தோன்றும் நினைவுகள் தான்…. தன்னை விட்டுச் சென்ற தாரகா மேல் உள்ள கோபத்தில்… அவர்களின் நினைவுகள் அத்தனையையும் அடி மனதில் புதைத்து… அது தந்த வேதனைகளை வசந்தியிடமும்… அவள் பெற்ற குழந்தைகளிடமும் காட்டிக் கொண்டிருந்தவருக்கு…. சிந்தியாவின் நினைவுகள் அலை மோத… சந்தியாவின் முகம் சிந்தியாவை அவர் முன் நிறுத்த… சந்தியாவில் தன் மூத்த மகள் சிந்தியாவைத் தேடிக் கொண்டிருந்தவர் தன் மனதில்… இருந்தும் வழக்கம் போல நினைவுகளை புதைத்தவர்….


தான் எத்தனை முறையோ கேட்டும் தனக்காக தன் முன்னால் பாடாத தன் மகள் இன்று பாடுகிறாள் என்பது ஒரு புறம் கோபமாக இருந்தாலும்..... பெருமையாகவும் இருந்தது மறுபுறம்.... தன்னை ஒருநிலைப்படுத்தி…. சந்தியாவைக் கவனிக்க ஆரம்பிக்க.. இப்போதும் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை ..... சந்தியாவின் வேதனைகளை…


ராகவ் இல்லாமலேயே ..... உறுதிப்படுத்தப்பட்ட..... அவளுக்கும் அவனுக்குமான திருமணபந்தம் சந்தியாவுக்கு மட்டும் வேதனையைக் கொடுக்க.... அந்த நிச்சயதார்த்தம் ஒருவழியாக அதன் சந்தோஷ தருணங்களை பதிவு செய்தபடி முடிவுக்கு வர.....


திவாகர்… காதம்பரி… ஏன் வசந்தியைக் கூடத் தவிர்த்தாள் சந்தியா… தனக்கு மிக நெருக்கமானவர்களை காரணத்தோடே தள்ளிவைத்தாள் சந்தியா… தன் வேதனை தனக்குப் பிடித்தவர்களையும் தாக்கி விட வேண்டாம் என்ற எண்ணத்தில்… நிரஞ்சனாவை மட்டுமே தன்னோடு தங்கி இருந்து செல்ல வற்புறுத்த


அன்றைய இரவில் அவளோடு தங்கி இருந்த நிரஞ்சனாவோ …. அவளை தேற்ற வார்த்தைகள் இருந்தும் குற்ற உணர்ச்சியில் அதைச் சொல்ல முடியாத வேதனையில் மருகினாள்.... இருந்தும்


"சந்தோஷ் அண்ணா மேரேஜ் தானே உனக்கு முக்கியம்னு சொல்வ சந்தியா.... அவங்களுக்காகத்தான் இந்த மேரேஜுக்கு ஒத்துக்கிட்டேனு சொன்ன.. பின்ன ஏன் இவ்வளவு ஃபீல் பண்ற" என்று என்ன சொல்வதென்று தெரியாமல் சொல்ல...


அமைதியாக நிமிர்ந்து அமர்ந்தாள் சந்தியா.....


"ஏன்னா எனக்கு அவனப் பிடிச்சிருக்கு ரஞ்சி… அது காதலானாலாம் தெரியாது… பிடிச்சுருக்க்கு. நேத்து வரை லவ் பண்றோமானு குழம்பிட்டு இருந்தேன்... அதுனால மத்ததெல்லாம் குழப்பமா இல்லை..... இப்போ எங்க ரெண்டு பேருக்கும் இடையில எல்லாமே உறுதி ஆகிருச்சு...... அதுனால மத்ததெல்லாம் குழப்பமாகி..... பயமுறுத்த ஆரம்பிச்சுருச்சு...." என்று மருண்ட விழிகளுடன் சொன்னவளை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் திணறிய நிரஞ்சனாவைப் பார்த்தவள்...


"உனக்கு கூட இந்த மாதிரி ஃபீலிங்லாம் இருக்கா... அந்த சிவா மேல....." என்ற போது சற்று முன் மருண்ட விழிகளில் இப்போது குறும்பு மட்டுமே கொப்பளிக்க.... முறைத்த நிரஞ்சனாவிடம்...

சிவாவை எனக்கு பார்க்கனும் போல இருக்கு… அவர மட்டும் நேர்ல பார்த்தேன்… உன் கண்ணு காட்ற இந்த வர்ண ஜாலணைய… அவருக்கு காட்டி அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்ப்பேன் நிரஞ்சனா… உனக்காக நான் அவர்கிட்ட பேசுறேன் ரஞ்சி… என்றாள்… வாஞ்சையாக…


ஆனால் அவள் சிவாவைப் சந்திக்க நேரும் போது…. நிரஞ்சனாவுக்கான கேள்விகள் மறைந்து… தனக்கான கேள்விகளாக மாறி… தன் வாழ்க்கை குறித்த அச்சத்தின் கேள்விகளாக அவனிடம் கேட்க்கப் போகும் விந்தை அறிவாளோ சந்தியா..


----

கிட்டத்தட்ட அன்றைய தினப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தது ராகவ்வுக்கு… அந்த புத்தம் புதிய இல்லத்தின்… மொட்டை மாடியில்…. அந்தி சாயும் நேரம்… இப்படியும் சொல்லலாம் ’சந்தியா’ காலம்… ஆனால் மனதிலோ சந்தியாவின் நினைவுகள் மட்டுமே இன்றைய தினத்தின் இருண்ட பக்கங்களை வெளிச்சமாக மாற்றிக் கொண்டிருக்க…



இன்னும் அவனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை… தான் இப்போது சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்று… ஒரே நாளில்… எத்தனை விதமான தாக்குதல்கள்… முற்றிலுமாக வீழ்ந்து விடுவோம் என்று நினைத்திருக்க…


“ஆல் த பெஸ்ட்.. கங்கிராஜுலேஷன்ஸ்… உங்களுக்கு உங்க சந்தியாவுக்கும்” என்ற அந்த உயரதிகாரியின் வார்த்தைகள்… இப்போதும் தெவிட்டாத தேனாக காதுகளில் பாய… நினைக்கவே முடியாத தன் வாழ்க்கையின் இன்றைய திருப்பங்களை… அதன் வேதனை நினைவுகளை பின்னோக்கி அலைபாய விட்டுக் கொண்டிருந்தான்…

---

சாதனா தன்னை மிரட்டியது… தன்னோடு அவளை இணைத்து மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள்… போதை மருந்து வழக்கு… நிச்சயதார்த்ததிற்கு போகமுடியாத சூழ்நிலை… என் ஒட்டு மொத்த அத்தனை துயரங்களும் அவனைச் சுற்றி வளைக்க… மீள வழியில்லாதவனாக கையறு நிலையில் இருந்தவனிடம்…


“நீங்க கிளம்பலாம்” என்று சிவா சொன்ன தருணம்… கனவா என்று நினைத்த தருணம்…


புரியாமல் விழித்தவனிடம்…


“இந்த புகைப்படங்கள்ள உங்களை வைத்து மாற்றப்பட்டிருக்கும் விதமே… நீங்க குற்றவாளி இல்லைனு எங்களுக்கு ஒரு நம்பிக்கை தருது…. உங்கள வச்சு மே பி ப்ளே பண்ணிருக்கலாம்… அந்த பொண்ணு மேல எங்க மொத்த பார்வையும் திரும்பி இருக்கு… அது மட்டும் இல்லாம.. இது போல தப்பே செய்யாதவங்களை இந்த மாதிரி புகைப்படங்களாகவும்… வீடியோவாகவும் இணைத்து… மிரட்டுகிற இந்த கும்பலை ரொம்ப நாளா தேடிட்டு இருந்தோம்… இன்னைக்கு இந்த பொண்ணு மூலமா… அந்த கும்பலையும் பிடிக்க ஒரு வழி கிடைச்சுருக்கு… சோ இப்போதைக்கு நீங்க போகலாம்… ” நிறுத்திய சிவா….


“இப்போதைக்குத்தான் ராகவ்… உங்க மேல ஒரு வேளை தவறு இருந்தால் நிச்சயம் திரும்ப இங்க வருவீங்க… ஆயிரம் குற்றவாளி தப்பிக்கலாம்… ஆனால் ஒரு நிரபராதி மாட்டக்கூடாது… இதுதான் நீங்க இப்ப இந்த இக்கட்டிலிருந்து தப்பித்த விதம்” என்று சிரிக்க…


நம்ப முடியாத பார்வை பார்த்தான் ராகவ்… எப்படி இது சாத்தியம்… காலையில் இருந்து நீதான் என்று குற்றம் சாட்டிய ஆயிரம் பார்வைகள்… இப்போது ஏனோ ஒரே நொடியில்… மாறிய விதம்… அவனால் நம்ப முடியுமா என்ன…


அவனின் நம்ப முடியாத பார்வையில்… இப்போது சிவா தோளைக் குலுக்கியபடி…


“நம்பிக்கை இல்லைனா… நாங்க எங்க பார்மாலிட்டிசைப் பார்க்கிறோம்… நீங்க உங்களை குற்றமில்லாதவர்னு நிருபிச்சுட்டே போங்க…” என்றவன்…


“உங்க லாயர் இருந்தா உடனே வரச்சொல்லுங்க… மூர்த்தி… எஃப் ஐ ஆர்… எழுத ரெடி ஆகுங்க” என்று தன் வேலையைக் கவனிக்க… ராகவ் உடனடியாக… தன் நிலை உணர்ந்து பேச ஆரம்பித்தான்


“சார்… நம்பிக்கை இல்லைனு இல்லை… நான் தப்பு செய்யலை… என்னால அதை நிருபிக்க முடியும்” என்ற போதெ… சிவாவின் புருவம் நக்கலாக உயர… அதை உணர்ந்தவன்… புரிந்தபடி…. சட்டென்று மாறினான்


“சாரி சார்… நீங்க எனக்குக் கொடுத்த சான்ஸை… உங்க உதவிய ஏத்துக்கிறேன்… ஆனால் சாதனா…” என்ற போதே…


அவளுக்காக பரிந்து பேசப்போனவனை… பேச விடாமல் தடுக்க… இவனுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை…


“அந்தப் பொண்ணு தப்பு செய்யலேன்னா… மாட்டிக்க மாட்டா…” கண்டிப்புடன் கூறிய சிவாவிடம் வாக்குவாதம் செய்யாமல்… மணியைப் பார்க்க… இன்னும் நேரம் இருந்தது… திருமணம் உறுதி செய்ய குறித்திருந்த நேரத்திற்கு


”சார்… உண்மையிலேயே நான் போகலாமா” என்று மீண்டும் கேட்டவனிடம்..


அவனது போனை மட்டும் அவனிடம் திருப்பித் தந்த சிவா… உங்க பேக்.. பாஸ்போர்ட் ஒரிஜினல் எல்லாம் எங்ககிட்டதான் இருக்கும்… திரும்பவும் ஏதோ ஒரு வகையில சந்தேகம் வந்தால்… நீங்க எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கனும்… பாஸ்போர்ட் மட்டும்… ஒன் வீக்ல வந்து கலெக்ட் பண்ணிக்கங்க… ” என்ற போதே…


“சார் அந்த பேக்ல…” என்று தயங்கியவனிடம்… என்ன என்பது போலப் பார்க்க…


“என்னோட ஃபியான்ஸிக்கு வாங்கின என்கேஜ்மெண்ட் ரிங்” என்ற போதே… தர முடியாது … என்பது போல தலையை ஆட்டியவன்


”இப்போதைக்கு முடியாது ராகவ்… பில் இருந்தா ஜெராக்ஸ் எடுத்து வச்சுக்கங்க… கண்டிப்பா ரிட்டர்ன் பண்ணிருவோம்… பட் இப்போ இல்லை… சாரி” என்றவன்.. அத்துடன் தன் வார்த்தைகளை முடித்துக் கொள்ள…


விடைபெற்று வெளியேற நினைத்தவனிடம் சிவா சொன்ன வார்த்தைகள் தான் அது...


“ஆல் த பெஸ்ட்.. கங்கிராஜுலேஷன்ஸ்… உங்களுக்கு உங்க சந்தியாவுக்கும்” … என்றவன்…


”உங்க கண்ல இருக்கிற உங்க தவிப்பு கூட உங்கள குற்றமில்லாதவன்னு எனக்கு சொல்லிருக்கலாம்… அண்ட் மறுபடியும் நாம சந்திப்போம்னு நினைக்கிறேன்…” என்ற போது திகைத்த ராகவ்வின் பார்வையில்…


“ஐ மீன்… இந்த கேஸ் விசயமா… ” என்று சிவா மாற்றிவிட.. விடைபெற்று வெளியே வந்து இருந்தான் காவல் நிலையத்தை விட்டு…. வெளிக்காற்றை சுவாசித்தவனுக்குள் ஒரு சந்தேகம் வந்தது…


அங்கு இருக்கும் போது… சந்தியா மிருணாளினி என யார் பெயரையும் இவன் தன் உணர்வோடேயே சொல்லாமல் தவிர்த்திருக்க.. சிவா சந்தியா பெயரைச் சொல்லி வாழ்த்திய விதம் மனதினுள் நெருடல் தர…. அதே நேரம்…

“நீ டிக்கெட் கேன்சல் பண்ணி… மறுபடியும் போட்டது வரை அலசி இருக்காங்க... இதுல உன் வருங்காலப் பொண்டாட்டி பேரை மட்டும் விட்டு வச்சுருப்பாங்களா என்ன” என்று தேற்றிய போதே…

மிருணாளினி வரிசையாக விடாமல் இவனுக்கு அடித்துக் கொண்டே இருக்க… வேறு வழியின்றி எடுத்தவனிடம்…. மிருணாளினி… சந்தியாவின் கோபம் அழுகை கேள்விப்பட்டு…. சந்தியாவிடம் பேசச் சொல்லி சொல்ல… இவனும் அவளிடம் பேச நினைக்க… சந்தியாவோ இவனிடம் பேச மறுத்து விட… சந்தியாவின் குரல் அவனை அடையாமல்… யாரோ ஒரு அந்நியக் குரல் தான் இவனை அடைய… தன்னவளின் குரலைக் கேட்க முடியாத வேதனையில் தானாகவே போனை அணைத்தான்… ராகவ்…


சந்தியாவைப் பற்றி நினைத்துப் பார்க்கும் போதே.. அவனின் இதயம் படபடத்த ஓசை அவன் காதுகளை அடைய…


ஒருவேளை… திருமணத்திற்கு இடைப்பட்ட இந்த இரண்டு வாரங்களில்... சந்தியா… இதையெல்லாம்.. இன்று நடந்தவற்றையெல்லாம்.. அறிய நேர்ந்தால்…. தன்னைப் பற்றி தவறாக நினைத்து விட்டால்… கோபம் கொள்வாளா… சண்டை போடுவாளா…. இல்லை தன்னை ஒரே அடியாக ஒதுக்கி வைத்து விடுவாளா…


காதல் கொண்ட மனம்… அந்தக் காதலைத் தன்னவளிடத்தில் உறுதி செய்யாத அச்சத்தில்… தவிக்க ஆரம்பிக்க… இருவருக்குமான திருமணம் பந்தம் அந்தரத்தில் ஊசலாடும் நிகழ்வாக மாறி விடுமோ… சந்தியா தன்னை விட்டுச் சென்று விடுவாளோ… அவளை தன்னோடு இணைத்து வைக்கும் ஆதாரம் எதுவும் இல்லையே…. காதலும் நேசமும் கூட தன்னோடு மட்டுமே…. அவளுக்குள்ளும் இருக்குமா என்ன…


மனம் தனக்கும் சந்தியாவுக்கான எதிர் கால வாழ்க்கையின் உறுதிக்காக பற்றுக்கம்பியை தேடிக் கொண்டிருக்க…. அதே நேரம்… அவனது மொபைலும் அலர… அதை எடுத்தான் ராகவ்


“சார்… இன்ஃபினிட்டி ஸ்பேஸ் இன்டீரியர் கம்பெனிலருந்து பேசுறோம்… கோட் கொடுத்துட்டோம்…. டேட் சொல்றீங்கன்னு சொல்லி இருந்தீங்க… வொர்க் ஸ்டார்ட் பண்ண” என்று எதிர்முனை பெண்குரல் தேன்குரலில் பேச…


நொடியில் மனம் சைத்தானின் உலைகளாமானது ராகவ்வுக்கு… ஏனோ அவனுக்கு நிகழ்ந்திருந்த இன்றைய எதிர்மறையான பல நிகழ்வுகள்… அவன் மனதையும் மாற்றி விட்டதோ என்னவோ


“எனக்கு ரெண்டு நாள்ள என் வீடு ரெடியாகனும்… ஐ மீன் புதன் கிழமை எனக்கு ஃபுல் ஃபர்னிசிங்கோட வேண்டும்… முடியுமா உங்களால..” என்றவனின் உடனடி அதிரடிக் கேள்வியில் அந்தப் பெண்ணும் திகைத்து… அங்கிருந்த அலுவலர்களிடம் விசாரித்து விட்டு


“சார்… அல்ரெடி நீங்க டிசைன் டிஸ்கஸன் முடிச்சு ஃபைனலைஸ் பண்ணிட்டீங்க… அமௌண்ட் கோட் பண்ணின மெயிலும் இருக்கு… சோ கன்ஃபார்மா முடிச்சுடலாம்… இன்னைக்கே வரலாமா… நீங்க அங்க இருப்பீங்களா” என்றவளிடம்…


சரி என்று சொல்லிவிட்டு… போனை அணைத்தவன்… கண்களில் தீவிரம் மட்டுமே இருக்க..

மிகப்பெரிய தவறை அதிலும் தன் மனம் விரும்பியவளிடமே… செய்யப்போகும் குற்ற உணர்வு அவனிடம் சிறிதும் இல்லை…. அவனைப் பொறுத்தவரை… தன் சகியை இனி அவனிடமிருந்து யாரும் பிரிக்கக் கூடாது… அது உள்ளத்தாலும்… உடலாலும்… முடிவெடுத்து விட்டான்…


எவரையும் சந்திக்காமல்… சந்திக்க பிடிக்காமல். இங்கு வந்தவன்.. இதோ தங்கள் வருங்கால அரண்மனையில் இருந்தபடி… தன்னவளுக்காக.. அவள் தன்னை விட்டு போகாமல் இருக்க அத்தனை வழிகளையும் திட்டங்களையும் தீட்டிக் கொண்டிருந்தான்…


“சகி நீ என்னை விட்டு உன்னை போக விடாம தடுக்க வேற வழி தெரியவில்லை எனக்கு… என் காதலைச் சொல்லி … அதோட ஆழத்தை உனக்கு புரியவைக்க எனக்கு டைம் இல்லை… அகிம்சை வழி இப்போதைக்கு உதவாது… எப்படியும் இரண்டு வாரத்தில் என் மனைவி ஆகப் போகிறவள் தானே… அந்த உரிமையை நான் இப்போதே எடுத்துக்கிற நிர்பந்தம் எனக்கு… சாரி சந்தியா… இனி எந்த காரணங்களும் உன்னை என்னிடமிருந்து பிரிக்க..பிரிய நான் விட மாட்டேன்… அது நீ நினைத்தால் கூட” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன்… சந்தியாவை தனியாக தன்னுடன் அழைத்துப் போய் முழுவதுமாக தன்னவளாக்க திட்டங்களை தீட்ட ஆரம்பிக்க…


சந்தியாவோ…. ராகவ்வை மட்டும் திருமணத்திற்கு முன் சந்திக்கவே கூடாது.. அப்படி நடந்தால் ஒருவேளை அந்த சந்திப்பு கூட அது பிரிவுக்கு வழி வகுத்துவிடும்…. என்ற பயம் ஏனோ அவளுக்குள் இருக்க……

ராகவ்வை சந்த்திக்க கூடாது என்ற முடிவோடு திருமண நாளை எதிர்நோக்கி இருக்க…


இங்கு ராகவனுக்குள்ளே பல உணர்வுகள் விஸ்பரூமெடுத்து அவனை பந்தாடிக் கொண்டிருந்தன…


அன்றோ மோதல்..

நேற்றோ காதல்..

இன்றோ துரோகம் …

நாளை காமமா?????


/* அடி காதல் என்பது தூங்கும் மிருகம்

மனசுக்குள் படுத்திருக்கும்


அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை

ஒரு கண் விழித்திருக்கும்

சகியே அது சாதுவான ஒரு சைவ பூனை போல்

உள்ளே ஒளிந்திருக்கும்


அந்த வேளை வந்ததும் விஸ்வருபம் கொண்டு

வெளியே குதித்துவிடும் */

3,557 views3 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

3 Comments


PAPPU PAPPU
PAPPU PAPPU
Mar 21, 2020

Wow super ud sisy. Next epi eppo?

Like

radhikaraja21
radhikaraja21
Mar 12, 2020

Nice ud

Like

Baladurga R Elango
Baladurga R Elango
Mar 12, 2020

சூப்பர் சூப்பர். ரகு சந்தியா எதிர் மறை ஆனால் ரெண்டு பேரும் காதல் க்கு தான் பிளான் பண்ணுறாங்க. பாக்கலாம்

Like
© 2020 by PraveenaNovels
bottom of page