அத்தியாயம் 8:
கண்மணியின் அருகில் தன் காரை நிறுத்திய ரிஷி... வேகமாய் இறங்கி அவளின் அருகே போய் நிற்க...
அவன் குடித்திருக்கின்றான் என்பது அவனின் இலேசான தடுமாற்றத்திலும்… சிவந்த அவன் கண்ளையும் பார்க்கும் போதே கண்மணிக்கு அப்பட்டமாகத் தெரிய.... தன் அருகில் நெருங்கி வந்தவனிடம்…. சற்றுத் தள்ளி நின்றபடி.. முறைத்துப் பார்த்தாள் கண்மணி...
இவன் குடித்திருக்கின்றான் என்பதாலேயே…. அவள் விலகுகின்றாள்… முறைக்கின்றாள் என்று புரியாமல்…. தன்னை அடையாளம் தெரியாமல் முறைக்கின்றாள் என்று தானாகவே அனுமானித்து….
“ஹேய் கண்மணி.... ஆம் ரிஷி.... ட்டு யூ ரிமெம்பர் மீ.............. வாட்ஸ் த ப்ராப்ளம்....” என்று தன் பீட்டர் இங்கிலீஷை ஆரம்பித்தவன்... கண்மணியின் சூடான பார்வையில்
தானாகவே தன் மொழியை தமிழ் மொழிக்கு மாற்றியவன்
“என்ன விசயம்… இந்த நேரத்தில்… இங்க” என்று அவளைப் பார்த்தபடி கேட்ட போதே… கண்மணியின் பார்வை அருகில் நின்றிருந்த ஆட்டோவின் உள்ளே விழ… அவளின் பார்வையை ரிஷியின் பார்வையும் தொடர்ந்தது….
ஆனாலும் கண்மணி ஏதாவது சொல்லுவாள் என்று அவளைப் பார்க்க… இவனை அவள் கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல் சாலையிலேயே கவனத்தை வைத்திருக்க….
இவளிடம் பதில் வராது என்று ரிஷி தனக்குள் முடிவு செய்தவனாக…. வேகமாக சென்று ஆட்டோவின் உள்ளே பார்க்க… அங்கு நடராஜ் பேச்சு மூச்சின்றி படுக்க வைக்கப்பட்டிருக்க….
“நடராஜ் சாருக்கு என்ன ஆச்சு….” என்றவன்… “ஆட்டோ என்ன ரிப்பேரா…” அடுத்தடுத்து கேள்வியாகக் கேட்க…
கண்மணி இப்போதும் பதில் சொல்லாமல் மௌனமாகவே இருக்க… உண்மையிலேயே ரிஷிக்கு எரிச்சல் வர…. அடக்கிக் கொண்டவனாக…. ஆட்டோ ட்ரைவரைப் பார்க்க…
ஆட்டோ ட்ரைவர் இப்போது பதில் சொன்னார்…
“ஆட்டோ திடிர்னு மக்கர் பண்ணிடுச்சு… வேற ஆட்டோவுக்காக வெயிடிங்க்… ஸ்டாண்ட் ஆட்டோவுக்கு போன் பண்ணியிருக்கோம்…. “ என்ற போதே…
“ஓ… “ என்றவன்… கண்மணியைப் பார்க்க… இப்போது கண்மணி மௌனமாக நிற்காமல்…இயல்பாக…
“நீங்க கெளம்புங்க… தேங்க்ஸ்…… நான் நின்றதைப் பார்த்து இறங்கி விசாரித்தற்கு”
சொல்லி முடித்தவுடன்… தன் வேலை முடிந்து விட்டது என்பது போல… ஆட்டோ வருகிறதா என்று மீண்டும் சாலையைப் பார்க்க ஆரம்பிக்க.. அவளின் இயல்பான வார்த்தையாடல்களில்…. இவனுமே இயல்புக்கு வந்திருக்க… இந்த நிலைமையில் கண்மணியை அப்படியே விட்டுப் போக மனமில்லாமல்…
“பரவாயில்லை… என் கார்ல வாங்க போகலாம்…. எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை….” என்ற ரிஷி… கண்மணியின் பதிலை எதிர்பார்க்காமல்
“அண்ணா… நாம இவரைத் தூக்கி… என் கார்ல வைக்கலாம்…. இருங்க டோரை திறந்து வச்சுட்டு வருகிறேன்” என்று தன் காரின் கதவைத் திறக்கப் போக…
“ஹலோ… நாங்கதான் பார்த்துகிறோம்னு சொல்றோம்ல… நீங்க போகலாம்” கடித்துத் துப்பினாள் வார்த்தைகளை….
”உன் வேலையைப் பார்த்துட்டுப் போடா” என்று நேரடியாகச் சொல்லவில்லை மற்றபடி அவள் சொல்ல நினைத்தது அப்படித்தான் என்பது போல அவள் உடல் மொழி இருக்க…
அதை எல்லாம் கண்டு கொண்டால் அவன் ரிஷி இல்லையே… கண்மணியின் வார்த்தைகள் ரிஷியைக் கொஞ்சம் கூட பாதிக்க வில்லை….
“நீ என்ன சொல்வது… நான் என்ன கேட்பது…” என்ற ரீதியில் தன் காரின் பின் இருக்கையின் கதவை திறந்து வைத்து விட்டு…. மீண்டும் ஆட்டோவின் அருகில் வந்து தானே… நடராஜனைத் தூக்கப் போக… கண்மணியோ எரிச்சலின் உச்சத்திற்கேப் போயிருந்தாள்..
“உங்க வேலையைப் பார்த்துட்டு போங்க ரிஷி” மூக்கு விடைக்க தன் முன் நின்றவளின் கோபம் அவன் கண்களில் விழுந்ததோ இல்லையோ… அவள் அணிந்திருந்த மூக்குத்தியின் கல்லின் ஒளி அவன் கண்களில் விழத் தவறவில்லை…
“ப்ச்ச்.. உங்க அப்பா இருக்கிற நிலைமைல இந்தப் பிடிவாதம் ஏன்... “ என்றபடியே... நடராஜைத் தூக்கியிருந்தான்.. அவனைப் பொறுத்தவரை… கண்மணி என்பவள்… பள்ளி செல்லும் சிறுமி… இந்தக் கண்ணோட்டத்துடன் மட்டுமே இப்போது செயலாற்றிக் கொண்டிருந்தான்…
சொர்ணாக்கா என்று நண்பனோடு சேர்ந்து கிண்டல் செய்திருந்த போதிலும்… இப்போது அப்படி ஒரு எண்ணமெல்லாம் இல்லை…. அவளது தந்தை ஆபத்தில் இருக்கின்றார்… பெண் அதிலும் சிறுமி… தனியாகத் தவிக்கின்றாள் என்ற எண்ணமே அவனிடம்… ஏனோ அவள் கோபம் இவனுக்குப் பெரிதாகப் பட வில்லை… நடராஜைத் தூக்கப் போக…
இவளோ அவனை விடாதபடி....... அவன் கைகளைப் பற்றி இருந்தாள் கண்மணி...
‘இவ என்ன லூசா... இவ அப்பா உயிருக்கு போராடிட்டு இருக்கார்... இந்த நேரத்தில் இத்தனை அழுத்தமா இருக்கா” என்று யோசிக்கும் போதே...
அவன் கைகளை விட்டவள்...
“எனக்கு உங்க கார்ல வர இஷ்டம் இல்லை... நீங்க சாதரணமா இருந்திருந்தால் உங்களோட வருவதில் ஒரு பிரச்சனையும் இல்லை.... நீங்க குடிச்சுருக்கீங்க... அதனால... இப்போதான் எங்க அப்பாக்கு ரிஸ்க் அதிகம்.... ஆட்டோ வந்துட்டே இருக்கு....சோ நீங்க கிளம்பலாம்” என்று அவன் உதவியை மறுத்தற்கு காரணம் சொல்ல...
அவளின் வார்த்தைகளில் இருந்த எதார்த்தத்தினை உணர்ந்த ரிஷி....
“சரி... இவரை ஓட்டச் சொல்லு” என்றபடி நடராஜைத் தூக்கியபடி,.. தன் காரின் பின் இருக்கையில் நடராஜனை படுக்க வைத்தவன்... கண்மணியின் அருகில் இருந்த ஆட்டோ ட்ரைவரை பார்க்க... கண்மணியும் அவரைப் பார்த்தாள்…
இப்போது கண்மணியும் பிடிவாதம் பிடிக்கவில்லை… எந்த காரணத்திற்காக மறுத்தாளோ…. அதற்கு அவன் அளித்த பதில் மறுக்கத் தோன்றவில்லை… எனவே தன்னைக் கூட்டி வந்த ஆட்டோ ஓட்டுனரைப் பார்க்க..
“மணி... எனக்கு 4 வீலர் பெருசா ஓட்டிப் பழக்கமில்ல... அது கூட பரவாயில்லை… இந்த காரைப் பார்த்தாலே காஸ்ட்லியா இருக்கு… எப்டி ஓட்றதுனு முதல்ல பிடிபடவே படாது…. அதிலும் இந்த மாதிரியான நேரத்தில்…. பதட்டத்தில…. என்னால முடியாதுமா… கண்டிப்பா…. எங்கேயாவது மோதிருவேன் ” என்று ஜகா வாங்க..
சற்று யோசித்த ரிஷி… தன் காரில் ஏறி அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்யப் போக… கண்மணி… வேகமாய்… ரிஷியின் அருகே வந்தாள்…
ரிஷி அவளைப் பார்த்து… “என்னை நம்பி வாங்க…" என்று அவன் சொல்ல…. கொஞ்சம் தடுமாற்றத்துடன் வெளி வர….கண்மணி அவனிடம்
“உங்கள நம்பி” என்று அவனை மேலும் கீழும் பார்த்து… நக்கலாக இழுக்க….
ரிஷிக்கு உண்மையிலேயே கோபம் வந்திருந்தது… அவன் நண்பர்கள் யாரையுமே தன் காரைத் தொடவிட மாட்டான்… 6 மாதங்களுக்கு முன்னர் தந்தை அவனது பிறந்த நாளுக்கு வாங்கிக் கொடுத்த கார்… தன் குடும்பத்துக்கு அடுத்து அவன் நேசிக்கும் ஒரு பொருள் என்றால் அவனது கார்… அப்படிப்பட்ட காரை… ஆபத்துக்கு பாவமில்லை… தன் நிலையும் சரி இல்லை என்பதை உணர்ந்து அந்த ஆட்டோ ட்ரைவரிடமே ஓட்டச் சொல்லியும் கொடுக்க… இதெல்லாம் புரிந்து கொள்ளாமல் இந்தப் பெண் பிடிவாதம் பிடிக்கின்றாள் என்ற எண்ணத்தில் வந்த கோபம் அது….
“சரிதான் போடி” என்று சொல்லிவிட்டு… அவளின் அப்பாவை இறக்கி விட்டு விட்டு போய்விடலாம் என்று கூட நினைத்துவிட்டான்…. கண்மணியின் நக்கல் பார்வை ரிஷியை அந்த அளவுக்கு உசுப்பேற்றியது என்று கூட சொல்ல்லாம்…
ஆனால் நினைக்க மட்டுமே முடிந்தது அவனால்… அந்தச் செயலைச் செய்ய முடியவில்லை…
“உங்க அப்பாவுக்குத்தான் முடியலை கண்மணி… அதை ஞாபகம் வச்சுப் பேசு… நேரம் ஆக ஆக அவருக்குதான் பிரச்சனை… உள்ள வா… பிடிவாதம் பிடிக்காத” என்று தன் எரிச்சலை தனக்குள் வைத்துக்கொண்டு… தன் அருகில் இருந்த இருக்கையின் கதவைத் திறந்து வைக்க…
அந்த இருக்கையின் அருகே வந்த கண்மணியோ… அந்தக் கதவை மூடியபடி….
“அண்ணா… இங்க வாங்க அப்பாவைத் தூக்குங்க…” என்று தான் அழைத்து வந்த ஆட்டோகாரரை அழைத்தபடி காரின் பின் சீட்டின் அருகே போக…
ஒரு நொடிதான்… ரிஷி அவளைப் பார்த்தது…. அடுத்த நொடி… விருட்டென்று காரை ஸ்டார்ட் செய்தவன்…. அங்கிருந்து பறந்தும் இருந்தான்…. அத்தனை வேகம் எடுத்திருந்தது அவனது கார்
ரிஷியின் செயலில் கண்மணியே ஒரு நிமிடம் திகைத்து நின்றாள்தான்…
“இவன் என்ன லூசா….” என்பது போல் அவன் போன வழியையேப் பார்த்து நிற்க… இப்போது அந்த ஆட்டோ ஓட்டுனர்
“என்னம்மா இப்படி பண்ணிட்ட…. நீயும் போயிருக்கலாம்…. உனக்குத் தெரிஞ்ச்ச பையனாமா…. எந்த ஹாஸ்பிட்டல் போறான்னு போன் பண்ணிக் கேளும்மா” என்ற போதுதான் கண்மணிக்கு ஐயோ என்றிருந்தது….
தான் அவனை இருமுறைதான் பார்த்திருப்பதாகவும்.. அவன் போன் நம்பர் எல்லாம் தெரியாது எனவும் சொன்னவள் முகத்தில் இப்போதுதான் கவலைக்கோடுகள் அதிகமாக வந்திருந்தது…
“உனக்கு பிடிவாதம் ஜாஸ்திதான் மணி..” என்று ஆட்டோ டிரைவர் சொல்லும் போதே..
“அண்ணா… நீங்க சொன்ன ஆட்டோ வருதான்னு பாருங்க” என்று அவரது பேச்சைப் பட்டுப் போல் கத்தரித்தவள்… வெளியே நிற்காமல்… ஆட்டோவினுள் ஏறி அமர்ந்தாள்….
இதை முதலிலேயே செய்திருக்கலாம் என்று கண்மணிக்குள் தோன்றியது…. ஆனால் தந்தை வசதியாக படுக்கட்டும் என்ற எண்ணத்தில் தான் கீழே இறங்கி வந்து நின்றாள்… நின்ற போதுதான் ரிஷியின் பார்வையில் பட்டாள்…
இனி எதையும் மாற்ற முடியாது… அதை யோசித்தும் பிரயோஜனமில்லை என்று நினைத்தாலும்…. அவளுக்கு தலைவலிப்பது போல் இருக்க… தலையை பிடித்தபடி அமர்ந்து விட்டாள்..
“யார்டா… இவன்… எங்கே இருந்து வந்தான்…. எனக்குத் தெரியாதா… பெரிய இவன் மாதிரி என் அப்பாவைக் காப்பாத்துறானாம்……. கடவுளே… எங்க போய் தேடுறது இவன…” என்று தன் மண்டைக்குள் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் போதே… இவர்கள் அழைத்திருந்த ஆட்டோவும் வர….
முதலில் எங்கு போவது என்று திணறியவள்… எப்படியும் இங்கு அருகில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி… 24 மணி நேர மருத்துவமனைகளில் ஏதாவது ஒன்றில்தான் தன் தந்தையை சேர்த்திருப்பான் என்று உறுதியாகத் தோன்ற…. வந்த ஆட்டோவில் ஏறி இருந்தாள்…
அவள் அழைத்து வந்த அவளது ஏரியாவின் ஆட்டோ டிரைவரே இப்போதும் கண்மணியை அழைத்துச் சென்றார்
……
இங்கு கண்மணி ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்கிக் கொண்டிருக்க…
அங்கு மருத்துவமனையிலோ ரிஷி… நடராஜனை அட்மிட் செய்து விட்டு என்ன செய்வது என்று திணறிக் கொண்டிருந்தான்… இவன் குடித்திருக்கின்றான் என்று தெரிந்து சில மருத்துவமனையில் அனுமதி கிடைக்கவேயில்லை… கடைசியில் ஏதோ ஒரு மருத்துவமனையிலும் சேர்த்துவிட்டான் ஒருவழியாக…. ஆனால் அதன் பிறகுதான் தெரிந்தது…. நடராஜ் என்ற பெயரைத் தவிர அவரைப் பற்றி அவனுக்கு தெரியாத நிலையில் இங்கு வந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று அப்போதுதான் உணர்ந்தான்...
என்ன செய்வது என்று யோசித்தவனுக்கு.. விக்கி ஞாபகம் வர.. உடனடியாக அவனுக்கு போன் செய்து தான் இருக்கும் ஹாஸ்பிட்டலின் முகவரியைச் சொல்லி வரச் சொன்னவன்… அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்....
----
கண்மணிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை... 4 மருத்துவமனைகளில் விசாரித்து விட்டாள்.... நடராஜ் என்ற பெயரில் யாரும் அட்மிட் ஆகவில்லை என்று அவள் விசாரித்த அனைத்து ஹாஸ்பிட்டலிலும் கைவிரிக்க.. இப்போது ரிஷிக்கு தன் அப்பாவின் பெயராவது தெரிந்திருக்குமா என்று யோசிக்க ஆரம்பித்தவளுக்கு... தன் அப்பாவின் பெயர் சொல்லி அவன் அழைத்தது ஞாபகம் வர.... அருகில் இருந்த அடுத்த மருத்துவமனைக்கு செல்ல ஆயத்தமானாள்...
“அண்ணா... குணா ஹாஸ்பிட்டல்ல மட்டும் செக் பண்ணிடலாம்... அங்கேயும் இல்லேண்ணா... நாம வீட்டுக்கு போய் விடலாம்... அந்தப் பையனுக்கு எங்க வீடு தெரியும்.... கண்டிப்பா வீட்டுக்கு வருவான்... அப்பாக்கும் ஒண்ணும் சீரியஸ்லாம் இல்லை.... அவருக்கு நெபுலைசர் கொடுத்தாலே சரி ஆகியிருக்கும்....” என்று சொல்லியபடி குணா ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தனர்....
கண்மணியின் மனம் ஒருபுறம் ரிஷியைத் திட்டியபடி வந்தாலும்.. மறுபுறம் அவனின் உதவும் மனப்பான்மையை எண்ணி வியக்கத்தான் செய்தது,... இருந்தும் தானே அவசியமில்லை எனும்போது அவன் ஒதுங்கிப் போகாததுதான்... இத்தனை அலைச்சலுக்கு காரணம் எனும்போது அவனின் உதவி கூட உபத்திரவமாகத்தான் பட்டது.. கண்மணிக்கு..
குணா ஹாஸ்பிட்டலின் முன் கண்மணி பயணித்த ஆட்டோ உள்ளே வர.... அதே நேரம் விக்கியும் அந்த மருத்துவமனையின் உள் நுழைந்தான்....
வரும்போதே விக்கிக்கு பெருங்குழப்பம்... ரிஷி பேசியதால்.... அவனுக்கு ஒன்றுமில்லை என்பது மனதுக்கு நிம்மதியை அளித்திருந்தாலும்... பிறகு எதற்கு தன்னை வரச் சொல்லி இருக்கிறான்... போனில் கேட்டால் ஒன்றும் சொல்லமுடியாது என்றும் நேரில் வா என்றும் சொல்லி வைத்து விட்டான்... ஒருவேளை யார் மீதாவது மோதி ஆகிஸிடென்ட் ஏதாவது ஆகி விட்டதா… நண்பன் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொண்டானோ என்ற படபடப்போடுதான் வந்து கொண்டிருந்தான்
ரிஷி விசயத்தைச் சொல்லாமல் விக்கியை அழைத்தற்கும் காரணம் இருந்தது.... விஷயத்தை சொல்லி விக்கியை கண்மணி வீட்டிற்கு போகச் சொன்னால் போக மாட்டான்... சம்பவத்தை சொன்னால் மருத்துவமனைக்கே வர மாட்டான்... அதனால் ஒன்றும் சொல்லாமல் அவனை வரச் சொல்லி விட்டான்... அவனும் வந்து கொண்டிருப்பதால்... விக்கியை நடராஜுக்கு துணைக்கு விட்டு விட்டு தான் கண்மணியை அவள் வீட்டிற்கே சென்று கூட்டி வரலாம் என்று ரிஷி எண்ணிக் கொண்டிருக்க....
வழக்கம் போல் கண்மணியும் விக்கியும் முட்டிக் கொண்டு நின்றனர்… நேரடியாக இல்லாமல்…. அவர்கள் வந்த வாகனங்களின் மூலம்…
…
விக்கி ஹெல்மெட் அணியாததால்.. அவனை ஆட்டோவில் இருந்தே பார்த்துவிட்ட கண்மணிக்கு அப்போதுதான் நிம்மதி ஏற்பட... கண்மணி வேகமான அவசரமான குரலில்
“அண்ணா... இங்கதான் அப்பா இருக்காங்கன்னு நினைக்கிறேன்.... இது அவனோட ஃப்ரெண்ட்தான்...” எனும் போதே...
ஆட்டோ ட்ரைவர்.... விக்கியை பார்த்தபடியே திடிரென்று நிறுத்த..... ஆட்டோவின் நிறுத்தத்தை எதிர்பாராத விக்ரம்... ஆட்டோவின் மேல் மோதி விட்டான்... நல்லவேளை அவனும் வேகம் குறைத்திருந்ததால் ஒன்றும் பெரிதாக ஆகவில்லை... இருந்தும் எரிச்சலாக
“யோவ் பார்த்து வர மாட்டியா” எனத் திட்ட ஆரம்பிக்கும் போதே கண்மணி ஆட்டோவில் இருந்து இறங்க... விக்கி திட்டுவதை நிறுத்திவிட்டு கண்மணியை யோசனையுடன் பார்க்க ஆரம்பித்தவன்... அடுத்த நிமிடம்...
இதுதான் தனக்கு கிடைத்த வாய்ப்பென்று… தன்னை மோதிய ஓட்டுனரை விட்டு விட்டு கண்மணியை திட்ட ஆரம்பித்தான்...
“உனக்கு கண்ணு தெரியாதா..... என் பைக் தான் கிடச்சதா....” என்று பட படவென பொறிந்தவனை வித்தியாசமாக கண்மணி பார்க்க...
“என்ன மொறைக்கிற... இந்த முறைப்பை எல்லாம்…. உன் வீடு இருக்கிற ஏரியால வச்ச்சுக்க... என் பைக்குக்கு ஒரு வழி சொல்லு”
கண்மணி விக்கியிடம் பதில் பேசாமல்...
“அண்ணா... இவர் பைக்குக்கு என்ன ஆச்சுனு பார்த்து சரி பண்ணிக் கொடுத்திருங்க்க....நான் அப்பாவைப் போய்ப் பார்க்கிறேன்” என்று தன்னோடு வந்த ட்ரைவர் அண்ணாவிடம் சொல்ல...
விக்கியோ கண்மணியை விடாமல்...
“என்ன எஸ்கேப் ஆகப் பார்க்கிற.. நீதான் எனக்குப் பதில் சொல்லனும்....” வழியை மறித்து நின்றான்…
கண்மணிக்கு என்ன சொல்லுவதென்றே புரியவில்லை... அவன் அரை லூசுனா.. இவன் முக்கால் லூசா இருப்பான் போல... மனதுக்குள் நினைத்தபடி ரிஷி எங்காவது இருக்கின்றான எனச் சுற்றி முற்றி பார்க்க…
சற்று தூரத்தில் ரிஷியும் தவறாமல் கண்ணில் பட்டான்…. கையில் சிகரெட்டும்… வாயில் புகையுமாக…
அவன் அவ்வாறு நின்ற தோற்றமெல்லாம் கண்மணிக்குள் பாதிப்பை ஏற்படுத்த வில்லை… மாறாக இப்போது நிம்மதி வந்திருந்தது… அவனைக் கண்டுபிடித்து விட்டோம்… என்ற நினைவில்….
இப்போது ஓரளவு சரியானவளாக…. விக்கியிடம் திரும்பி…
“இது என் சொந்த ஆட்டோ இல்லை... சவாரிதான் வந்தேன்.... மோதினது இந்த ஆட்டோவை ஓட்டினவர் தான்.... எதுவா இருந்தாலும் அவர்கிட்ட பேசிக்கங்க....” எனும்போதே...
“நீ உள்ள இருந்து என்ன டார்ச்சர் பண்ணினாயோ... அதனாலதான் இவர் மோதி இருப்பார்... சோ உன்னாலதான் ஆக்சிடென்ட் ஆச்சு... அதுனால ஆட்டோல வந்தவங்கதான் இதுக்கு பதில் சொல்லனும்...”
“கடவுளே இருக்கிற நிலைமை தெரியாமல் இவன் வேற... இவன் ஃப்ரெண்ட் கூப்பிட்டு இவன் வந்தானா.. இல்ல எதார்த்தமா வந்திருப்பானா” கண்மணி யோசனையோடு பார்வையை ரிஷியை நோக்கி வீசினாள்...
இவர்களை ரிஷியும் பார்த்து விட்டான் போல…. ரிஷியே அவர்களை நோக்கி வந்து கொண்டிருக்க..
விக்கியை விட்டு விட்டு ரிஷியை நோக்கிப் வேகமாக நடக்க....
“ஏய் நில்லு” என்று விக்கியும் அவள் பின்னாயே போக.... அவனை அலட்சியபடுத்தியவளாக... ரிஷியின் முன்னால் போய் நின்றாள்…
“லூசா நீங்க.... எங்கே என் அப்பா... அவருக்கு என்ன பிரச்சனைனு உங்களுக்குத் தெரியுமா... எங்கப்பாவை எங்க வச்சு பார்க்கனும்னு எனக்குத் தெரியும்..... அப்பா எங்க இருக்காரு... அவரை நான் கூட்டிட்டு போகனும்” என்றபோதே...
“கண்மணி.... அவர் இப்போ ஐசியூ ல இருக்காரு... ரிப்போர்ட்ஸ் இல்லாமல் வெயிட் பண்றாங்க…. ஏன் இப்படி பண்ற” என ரிஷி அவளிடம் தன்மையாக பேச ஆரம்பித்திருக்க…
என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவு யூகிக்க முடிந்தது விக்கிக்கு… கண்மணியின் தந்தை நடராஜ்க்குத்தான் உடல்னிலை சரியில்லை என்பதை உணர்ந்தவனுக்கு… கண்மணியின் திமிரான பேச்சு கோபத்தைக் கொடுத்திருக்க… தன் நண்பன் அவளிடம் கெஞ்சுவது போல் பேசியது… இன்னும் அவனது கோபத்தை அதிகரிக்க
“டேய் அவ அப்பாக்குத்தானே உடம்பு சரியில்லை…. நீ ஏன் கெஞ்சிட்டு இருக்க… ஃபர்ஸ்ட் கெளம்பு… இனி அவ பாடு அவ அப்பா பாடு “ என்றவன் கண்மணியை நோக்கி கேவலமான பார்வையை வீசியபடியே…
“இந்த ஹாஸ்பிட்டல் இவங்க்களுக்குலாம் கட்டுபடியாகுமா…. அதுதான் குதிக்கிறா “ என்று நக்கலாகப் பேச… கண்மணி விக்கியை முறைத்தாள்,…
அப்போதுதான் ரிஷி தன் தவறை உணர்ந்தவனாய்…
“ஓ இதனால்தான் கண்மணி நடராஜை இங்கிருந்து கூட்டிப் போக துடிக்கிறாளா” என்று தனக்குள் யோசித்தபடியே… மூவருமாக மருத்துவமனைக்குள் நுழைய…
அப்போது…
நர்ஸ் ரிஷியின் அருகில் வந்து 50000 தொகையை முன்பணமாக செலுத்துமாறு கூற…. மூவருமே அதிர்ந்து நின்றனர்…
விக்கிதான் முதலில் சுதாரித்து…
“வாடா போகலாம்… உன்னால முடிந்ததை நீ பண்ணிட்ட…. இனி இவ என்னமோ பண்ணட்டும்… அவங்க அப்பாவை இங்கயிருந்து கூட்டிட்டு போகட்டும்… இல்ல இந்தப் பணத்தைக் கட்டி இங்கேயே இருந்து பார்க்கட்டும்… “ என்று ரிஷியை இழுக்க…
“இருடா…” என்று தவிப்பாக ரிஷி விக்கியின் கைகளை விடுவித்துக் கொண்டிருந்தான்… கண்மணியால் இவ்வளவு பணத்தைக் கட்ட முடியுமா என்பதே அவனது சிந்தனையாக இருக்க… தன்னால் தான் இப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக் கொண்டாளோ… ரிஷி இவ்வாறு மனதிற்குள் போராடிக் கொண்டிருக்க…
கண்மணியோ மனதிற்குள்…
“கடவுளே இதுக ரெண்டையும் இங்கயிருந்து அப்புறப்படுத்துவேன்” என்று வேண்டிக் கொண்டிருந்தாள்..
“என்ன சார்… கட்ட முடியும் தானே… கேஷாதான் பே பண்ணனும்….” என்று வேறு ரிஷியிடம் அந்தப் பெண் சொல்லிவிட்டுச் செல்ல…. ரிஷி கண்மணியை அவஸ்தையாகப் பார்த்து வைக்க…
கண்மணிக்கும் தெரியும்… ரிஷி பெரிய இடத்துப் பையன் தான் என்றாலும் அவனால் இவ்வளவு பெரிய தொகையை கட்டமுடியும் என்றாலும்… இவளுக்காக... இவள் தந்தைக்காகவெல்லாம் கட்டுவானா… அதுமட்டுமல்லாமல் அவன் கல்லூரி படிக்கும் மாணவன் வேறு… இவ்வளவு பணம் இவன் கையில் இருக்குமா…. யோசனையுடன் ரிஷியைப் பார்க்க…
ரிஷியோ…. சில நிமிடங்கள் தான் கொஞ்சம் தடுமாறினான்… பிறகு என்ன நினைத்தானோ தெரியவில்லை… பில் கவுண்டருக்குச் சென்று…. தான் உடனே கட்டுவதாக கூறியவன்….
கண்மணியிடம் நடராஜனின் மருத்துவக்குறிப்புகளை கொடுக்கச் சொல்லிவிட்டு… பணம் எடுக்கக் கிளம்ப…….. இப்போது கண்மணியின் கண்களில் அவனை நம்ப முடியாத ஒரு ஆச்சரியப் பார்வை இருந்தது…
“இது வேலைக்காகாது என்று ரிஷி கிளம்பி விடுவான்” என்று கண்மணி எதிர்பார்த்திருக்க.. ரிஷி பணம் எடுக்க கிளம்பியது கண்மணியின் மனதை லேசாக அசைத்திருக்க… அவன் போன திசையையே பார்த்து நின்றிருந்தாள் கண்மணி…
அதே நேரம் விக்கி… கண்மணியைத் திட்டுவதற்கு வாய் திறக்கப் போக… அதற்குள் கண்மணி.. தான் ஆட்டோவில் விட்டு வந்த ஃபைலை எடுத்துவரப் போய்விட்டாள்..
”இது ரிஷிக்குத் தேவையா… தேவையில்லாத வம்பை விலைக்கு வாங்குகிறானோ “ என்ற எரிச்சலுடன் விக்கி நின்றிருக்க… இப்போது ரிஷி கண்மணியோடு வந்து சேர்ந்தான்…
அதன் பிறகு நடராஜனுக்கு சிகிச்சை ஆரம்பிக்கப்பட…கண்மணி தன்னோடு வந்த ஆட்டோ டிரைவரை திருப்பிஅனுப்பி விட்டிருந்தாள்…
இதை எல்லாம் வேடிக்க பார்த்தபடி இருந்த விக்கி ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல்….
ரிஷியிடம்… “இவ்வளவு பணம் ஏதுடா” வள்ளென்று விழுந்தான் …
“அப்பா அக்கவுண்ட்… விக்கி…. உடனே மெசேஜ் அலர்ட் போயிரும்… காலையில கேட்கும் போது… சொல்லனும்” என்று பெருமூச்சு விட்டவனை…
“இது தேவையா என்பது போல முறைத்த விக்கியிடம்”
“மச்சான் உன் மைண்ட் வாய்ஸ் என்ன சொல்லுதுனு எனக்கு தெரியுது எனக்காவது 2000 தான் டா….. உனக்கு 50000னு” என்றவன் தனக்குத் தானே
“ஆமா… நான் ஏன் இந்த அளவுக்கு ஹெல்ப் பண்றேன் இந்தப் பொண்ணுக்கு” என்றபடி தூரத்தில் நின்றிருந்த கண்மணியைப் பார்த்தான்
அதே நொடி கண்மணியும் அவனைப் பார்க்க... வேகமாய்த் தலையைத் திருப்பினான் ரிஷி...
அதன் பின்… விக்கி ரிஷியை வீட்டிற்கு அழைக்க...
கண்மணி தனியாக இருப்பதால்... இருவரும் அங்கேயே இருக்கலாம் என ரிஷி கூற... விக்கி அதை மறுத்து அவன் மட்டும் வீட்டிற்குச் சென்று விட... ரிஷி கண்மணிக்கு துணையாக மருத்துவமனையிலேயே தங்கி விட்டான்...
கண்மணி இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள் தான்.. ஆனால் அவர்களோடு எதுவும் பேசவில்லை....
1 மணி நேரத்திற்குப் பின் நடராஜனுக்கு சிகிச்சை முடிந்து.... தனி அறைக்கு மாற்றப்பட்டு... இனிமேல் கவலை இல்லை என்று மருத்துவர்கள் கூற... ரிஷியும் ஒருமுறை போய் நடராஜனைப் பார்த்துவிட்டு வந்து அறைக்கு வெளியே வந்து உட்கார்ந்திருந்தான்...
கண்மணி தந்தையின் அருகிலேயேதான் அமர்ந்திருந்தாள்…
உண்மையிலேயே தந்தை ஆபத்தான நிலையில் இருந்தாரா… இல்லை இந்த மருத்துவமனையில் ஏமாற்றுகின்றார்களா… அவளுக்கே தெரியவில்லை…
களைப்புற்றிருந்த அவரின் முகத்தில் ஆயிரம் யோசனைகள் கீற்றாக இருக்க… அவரின் இந்த யோசனை கீற்றுகளுக்கு காரணம் தான் மட்டுமே என்பது கண்மணிக்கு நன்றாகத் தெரியும்…
கணவனாக தன் மனைவி பவித்ராவின் நினைவுகளில் தன்னைத் தொலைத்திருந்தவர்… தன் தந்தையாக மீண்டு வந்து விட்டார்தான்…. ஆனாலும் மகள் தன்னை விட்டு விலகி விடுவாளோ என்று மருகியே அவர் இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறார் என்பது கண்மணிக்கு புரியாமல் இல்லை…
இரண்டு வருடங்கள் கூட இருக்காது… தந்தையும் தாயும் சேர்ந்து வாழ்ந்தது…. ஆனால் அந்த மனைவியின் நினைவுகளில் மீதமுள்ள வாழ்நாளை வாழ்ந்து கொண்டிருப்பவர்… தான் மட்டுமே ஒரே ஜீவாதாரம் அவரின் இந்த விரக்தியான வாழ்க்கைக்கு…
“நான் எப்போதுமே உங்களை விட்டுப் போக மாட்டேம்பா… ஆனால் தாத்தா பாட்டிக்கும் நான் தேவைதான்பா” என்றாள் தந்தையின் அருகில் குனிந்து… மெல்லிய குரலில்…
அவர் முகத்துக்கு நேராக சொல்லாத.. சொல்ல முடியாத… சொல்லப் பிடிக்காத வார்த்தைகளை இப்போது சொல்லிக் கொண்டிருந்தாள்… அவரின் கைகளைப் பிடித்தபடியே…
அமைதியாக அமர்ந்திருந்தவளுக்கு கண்களில் நீரெல்லாம் இல்லை…. இரண்டு கரைகளுக்கு இடையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் தன் நிலை அவள் மட்டுமே அறிவாள்…
எத்தனை மணி நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ… நடராஜின் உடல்நிலையைக் கண்காணிக்க… செவிலி ஒருவர் மீண்டும் வர… அறையை விட்டு வெளியில் வந்தாள் கண்மணி…
அந்த வராண்டாவில்... அறைக்கு நேரே உள்ள இருக்கையில் ரிஷி அமர்ந்திருக்க... அதிலும் அவன் கண்களை மூடி அமர்ந்திருக்க… 10 இருக்கைகள் தள்ளிப் போய் கண்மணி அமர்ந்தாள்...
கண்களை மூடியபடிதான் அமர்ந்திருந்தான் ரிஷி... தூங்கவெல்லாம் இல்லை… சொல்லப் போனால் தூக்கமே சுத்தமாகப் போயிருந்தது அவனுக்கு... ஆயிரம் எண்ண ஓட்டங்கள் அவனுக்கு…
”நாளைக் காலை அப்பா வேறு பணம் எடுத்ததற்கு காரணம் கேட்பார்.... அதற்கு சாக்கு சொல்ல வேண்டும்.... ஏனோ கண்மணியிடம் அதைத் திருப்பிக் கேட்க இஷ்டமில்லை அவனுக்கு.... இவன் தான் இவ்வளவு செலவை இழுத்து வைத்து விட்டான் என்ற எண்ணத்தினால் வந்த சிந்தனை அவனுக்கு
“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்.... இந்தப் பார்ட்டி பப் எல்லாம் ஒரம் கட்டி வச்சு இந்தப் பணத்தைச் சரி கட்டணும்...” என்று முடிவுக்கு வந்தவனாக இருக்க... அடுத்து ஒரு 25000 க்கும் அவனுக்கு வேட்டு வைத்தது அந்த மருத்துவமனை.
ரிஷியும் கண்மணியிடம் எதுவுமே பேசவில்லை.. கண்மணியும் ரிஷியிடம் எதுவும் பேசவில்லை… அவரவர் அவரவர் இடத்திலேயே இருந்தனர்…
ரிஷிக்கே தோன்றியது… இது கொஞ்சம் அதிகப்படி என்று… இருந்தும் அவனால் உதவாமல் இருக்க முடியவில்லை… விக்கி போல கண்மணியை விட்டுப் போக மனம் வரவில்லை…
இவ்வளவு உதவி செய்த போதும் ஒரு வார்த்தை கூட பேசாத கண்மணியின் மீது கூட கோபம் வரவில்லை அவனுக்கு… கண்மணிக்காக செய்ய வில்லை… நட்ராஜனுக்காகத்தான் இந்த உதவி... தான் தான் அவரை இங்கு வந்து சேர்த்தோம்… என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் ரிஷி…
கிட்டத்தட்ட அடுத்த ஒரு மணி நேரம் கடந்திருக்க… ரிஷி ஒரு ஒரமும் கண்மணி ஒரு ஓரமுமாய் உட்கார்ந்து.. நேரத்தைக் கடத்தி இருந்தனர்…..
ஒரு கட்டத்தில் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தது கண்மணிக்கு அலுப்பைக் கூட்ட… எழுந்தாள்… நின்றபடியே எதிரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்க்க.. அது 5.30 எனக் காட்டியது...
அன்று திங்கட்கிழமை என்பதால்... இவனுக்கும் கல்லூரி இருக்குமே என்று ரிஷியைப் பார்க்க... அவன் உட்கார்ந்தவாறே தூங்கிக் கொண்டிருந்தான்....
அவனை எப்படி எழுப்புவது... என்று யோசனையுடன் அவன் முன் வந்து நின்றாள் கண்மணி...
கைகளைக் கட்டியபடி.. காதில் ஹெட் போனுடன் கண்களை மூடி இருந்தான் ரிஷி...
அவன் பேர் ரிஷி என்று தெரியும்.... ஆனால் அப்படி அழைக்க முடியாதே... சரி அண்ணா என்று அழைப்போம் என்று நினைக்க
”அண்ணா பையாலாம் சொல்லிராத… ” அன்று அவன் சொன்னது ஞாபகத்திற்கு வந்து போனது…. அதற்காகவெல்லாம் அழைக்காமல் இருக்க முடியுமா…
”அண்ணா” என்று வாயெடுக்கப் போக... ரிஷி அவள் அழைக்கும் முன்னே கண் திறந்தான்... கண்மணியின் அசைவை உணர்ந்து....
இவன் கண் விழிக்க... கண்மணி சட்டென்று வாய் மூடினாள்...
ரிஷி....கண்மணியைப் பார்த்தபடியே... “என்ன மணி...” என்று சாதாரணமாகக் கேட்க...
“நீங்க தூங்கலையா” என்று கண்மணியும் சாதாரணமாக வினவ ஆரம்பித்தாள்...
“இந்த வெளிச்சத்திலயா... எனக்கு சும்மாவே தூக்கம் வராது.... இந்த மாதிரி இடத்தில் சுத்தம்” என்றபடி.. டீ சர்ட்டை இழுத்து விட்டபடியே…. தளர்வாக கால்களை நீட்டி உட்கார்ந்திருந்த நிலையை மாற்றி.... நிமிர்ந்து உட்கார்ந்து கண்மணியைப் பார்க்க...
கண்மணி புன்னகைத்தாள் அவனைப் பார்த்து…. அதே நேரம்
“பணம் கேட்பதற்காகத்தான் இன்னும் உட்கார்ந்திருக்கானோ...” என்று மனதிற்குள் நினைத்தவள்... அதைப் பற்றி பேச ஆரம்பிக்கப் போக...
“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்....“ என்று அவளிடம் தன் இமேஜை உயர்த்திக் கொண்டவன்…
நின்று கொண்டிருந்த கண்மணியிடம்
“உட்காரு...” என்று தன் அருகில் இருந்த இருக்கையைக் காட்ட... கண்மணியும் அமர்ந்தாள்...
தான் சொன்னவுடன் எந்த ஒரு பாசாங்கும் இல்லாமல் அவள் உட்கார்ந்த விதம் அவனுக்கு பிடித்துப் போக... அதுவே அவனை அவளிடம் இயல்பாக விசாரிக்கவும் வைக்க… அவளைப் பற்றி விசாரித்தான்.... அவள் படிப்பைப் பற்றி விசாரித்தான்.... கண்மணியும் அவன் கேட்டதெற்கெல்லாம் பதிலும் கூறினாள்…
கண்மணி தான் 11 ஆம் வகுப்பு படிப்பதாகக் கூற....
உடனே...
“உனக்கும் இன்னைக்கு ஸ்கூல் தானே.. நீதான் இருக்கனுமா.. இல்ல உங்க வீட்ல பெரியவங்க இருக்காங்ககளா என்று விசாரித்தான் ரிஷி...
“நான் தான் இருக்கனும்... நானும் அப்பாவும் தான்” என்று கண்மணி சொன்ன போது.. ரிஷி அவளிடம்
“உங்க பாட்டி.... அன்னைக்கு வந்தாங்களே” என்று சந்தேகமாக இழுத்தான் ரிஷி
“எனக்கும் அவங்களுக்கும் ஒத்து போகாது....” என்று மட்டும் கண்மணி சொல்ல... ரிஷிக்கு கந்தம்மாள் கண்மணியைப் பற்றி பேசியது ஞாபகம் வரத்தான் செய்தது....
இருந்தும்..அவரது மகன் மருத்துவமனையில் இருக்கும் போது அவரிடம் கண்மணி சொல்லலாம் என்று நினைத்தான் தான்… ஆனாலும்
“இது அவர்கள் குடும்ப விஷயம்... தான் தலையிட வேண்டாம்” என்று விட்டு விட்டான்...
அதன் பின் ரிஷி... விடிந்து விட்டது என்பதை உணர்ந்தவனாக… இதற்கு மேலும் தான் இருப்பது சரியல்ல என்பதை உணர்ந்தவனாக… இருக்க… ஆனாலும் அவளிடம் எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டு இருக்க…
கண்மணிக்கும் அவன் நிலைமை புரிய…
“இது தந்தைக்கு அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான் என்றும் தான் பார்த்துக் கொள்வதாக கூறி…” ரிஷியைக் கிளம்பச் சொல்ல… அதற்கு மேல் ரிஷியும் அங்கு இருக்க முயலவில்லை… கண்மணியிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப... கண்மணி ரிஷியிடம் வேகமாக 1000 ரூபாயைக் கொடுத்தாள்...
“இது என்ன.... இது எதற்கு” கண்மணியிடம் திணறினான் ரிஷி...
கண்மணியோ
“இல்ல...அப்பாவுக்கு வழக்கமாய் வருகிற வீசிங் பிரச்சனைதான்.. இத்தனை நாள் வரை.. ஜி.ஹெச் ல காட்டி சரிப்படுத்துவேன்.... 1000 ரூபாய் தான் ஆகும்.... “ என்று சொல்ல....
ரிஷி முறைத்தான் இப்போது... அவனின் முறைப்பை எல்லாம் கண்டு கொள்ளாமல்…
“அப்பாவுக்கு சீரியஸ்னா.... ஆம்புலன்ஸ்ல வராமல் ஆட்டோவில் வருவோமா... இல்லை அடுத்த ஆட்டோவுக்கு காத்திருப்போமா.... என்ன ஏதுன்னு தெரியாமல் உதவின்ற பேர்ல.... பணத்தை வீணாக்கினதுக்கு நாங்க பொறுப்பில்லை ரிஷி சார்” அலட்சியமாகச் சொல்லியபடியே… ரிஷியின் முகத்தைப் பார்க்க..
அவன் முகத்தில் ஈயாடவில்லை... அவனின் அந்த முகத்தைப் பார்த்தவளுக்கு… அவளையுமறியாமல் சிரிப்பு வந்தாலும் தனக்குள் அடக்கிக் கொண்டவளாக முகத்தை தீவிரமாகவே வைத்திருக்க…
“பராவாயில்ல.... நானும் உங்கிட்ட திருப்பிக் கேட்கவில்லையே” என்றபோது... ரிஷியின் குரல் உள்ளுக்குள்தான் போயிருந்தது...
சம்மந்தப்பட்ட கண்மணியின் வாயில் இருந்தே பணம் தர முடியாது என்ற வார்த்தைகள் வந்து விட... கண்மணி எவ்வளவு பணம் செலவானது என்றாவது கேட்பாள்.... சொன்னால் அவளால் முடிந்த தொகையைத் தந்தால் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தான் ரிஷி... இப்போது அதுவும் முடியாமல் போல... குரலே வெளி வரவில்லை ரிஷி...
மாறாக... எப்படியெல்லாம் தன் ஆடம்பரத்தைக் குறைத்து இந்த தொகையை தன் தந்தையின் கணக்கில் கட்டலாம் என்று யோசிக்க ஆரம்பித்தவனுக்கு.. தலைவலி வேறு வந்து விட்டிருந்தது
இப்போது கண்மணி அவன் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தாள்...
கொஞ்சம் பாவமாகத்தான் இருந்தது அவளுக்கு... கல்லூரி படிக்கும் மாணவன் அவன்.... கிட்டத்தட்ட ஒரு இலட்சத்திற்கு உதவி செய்வது என்பது அவன் தகுதிக்கு மீறியதுதான்... ஆனாலும்.. உதவி செய்திருக்க... அதுவே கண்மணிக்கு ஆச்சரியத்தை அளித்திருக்க.... அதை அவன் திருப்பிக் கேட்காதது கண்மணிக்கு இன்னும் ஆச்சரியமே....
அவன் போவதையே பார்த்திருந்தவள்....
“எக்ஸ்கியூஸ்மீ உங்க போனை வச்சுட்டு போறிங்க” என்று சொல்ல..
வேகமாய்த் திரும்பிய ரிஷி... கண்மணியை நோக்க... அவள் கையில் போன் இல்லாமல் இருக்க.
“எங்க”
“உங்க்க பாக்கெட்ல...” என்று வாய்க்குள் சிரிப்பை அடக்கியபடி சொல்ல...
அவள் விளையாட்டு புரிந்தவனாக…. முறைத்து பின் சிரித்த ரிஷி..
"பை மணி” என்று புன்னகைத்து பின் மீண்டும் நடக்க ஆரம்பிக்க... வேகமாக ஓடி வந்து அவன் அருகில் வந்தவள்
”காஃபி… சாப்பிடலாமா” என்று தயங்கி கண்மணி கேட்க… அவன் புருவம் சுருக்கி இவளை நோக்க
”நான் வாங்கித் தருகிறேன்” என்று இவள் சொல்லிவிட்டு அவனைப் பார்க்க…
தலையை மட்டும் சரி என்பது போல ஆட்டினான் ரிஷி… அவனுக்கும் ஏதாவது சூடாக சாப்பிட வேண்டுமென்றுதான் இருந்தது… ஆனால் பில் கவுண்டரில் நின்று வாங்கிச் சாப்பிடும் அளவிற்கெல்லாம் பொறுமை இல்லை… இப்போது கண்மணியே கேட்க… மறுக்காமல் அவளோடு சேர்ந்து இருவருமாக கீழே அந்த மருத்துவமனையின் உணவகத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்…
செல்லும் வழியிலேயே “சாரி அண்ட் தேங்க்ஸ்...” கண்மணி தானாகவே ஆரம்பிக்க
”எதுக்கு” ரிஷி வினவினான்…
”சாரி... சும்மா உங்களை கலாய்ச்சதுக்கு... தேங்க்ஸ்... அப்பாவை இங்க்க கொண்டு வந்து அட்மிட் பண்ணினதுக்கு.... உங்க பணத்தை ஈவ்னிங் தந்திடறேன்... “ என்றவள்..
“வட்டிலாம் தரமாட்டேன்...” என்று மிரட்டுவது போல் சொல்ல... ரிஷி சிரித்தபடி...
‘உடனே வேண்டாம் மணி... மெதுவா தந்தா போதும்..”
“கடன் அன்பை முறிக்கும்… இப்படித்தான் எங்க ஏரியாவில இருக்கிற பெட்டிக் கடைல எல்லாம் போட்டிருக்கும்...” என்று கண்மணி ஒன்றும் தெரியாத அப்பாவி போல சிறுமியாகச் சொல்ல...
”கடன் அன்பைத்தானே முறிக்கும் இந்த ரிஷியை இல்லைல....” என்று பதில் ரிஷியிடமிருந்து சட்டென்று வந்தது....
அதன் பின் வார்த்தகள் இல்லை இருவரிடமும்… ஒரு வழியாக உணவகத்திற்கு வந்திருக்க…
ரிஷி அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர… கண்மணியே…. காஃபி வாங்கி வந்தாள் இருவருக்குமாகச் சேர்த்து….
ரிஷிக்கு தலைவலி... பயங்கரமாக விண் விண்ணென்று வலிக்க ஆரம்பித்திருக்க… புகை பிடித்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் போல தோன்ற… இங்கிருந்து எப்போதடா போவோம் என்றிருக்க… அதற்கு ஏதுவாக கண்மணியும் அவனோடு பேசாமல் காஃபியை மட்டுமே குடித்துக் கொண்டிருக்க… ரிஷிக்கு மௌனமாக இருப்பது வேறு எரிச்சலாக வந்தது…
அவன் பேச முடிந்திருந்தால் கண்மணியோடு நன்றாகவே பேசி இருந்திருப்பான்… ஆனால் அவன் இருந்த நிலைமையில் பேச முடியாமல் இருக்க… கண்மணியோ அதை விட… ஆக மொத்தம் ஒரு வழியாக சலிப்புத் தட்டிய அந்த பத்து நிமிடங்களை எப்படியோ ரிஷி கடத்தி முடித்தவனாக…
“ஒகே மணி…பை…” என்று கார்க் கீயை எடுத்தபடியே எழுந்தவன்…
“காஃபி வாங்கிக் கொடுத்தா மட்டும் போதாது மணி… முன்னாடி உட்கார்ந்திருக்கவங்களை போர் அடிக்காம இருக்க வைக்க பேசவும் தெரிஞ்சுருக்கணும்…” என்று சொல்லி விட்டு கிளம்பிப் போய் விட…
அவனின் வார்த்தைகளை எல்லாம் கண்மணி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இதே வார்த்தைகளை வேறு ஒருவர் சொல்லி இருந்தால் என்ன சொல்லி இருப்பாளோ தெரியவில்லை அவளுக்கே…. ரிஷியாக இருக்க விட்டு விட்டாள் என்றே தோன்ற… அவளும் அங்கிருந்து கிளப்ப எத்தனிக்க…. அப்போது மொபைல் ஒலி அடிக்க… தன் மொபைலைப் பார்க்க… அங்கிருந்து ஒலி வராமல் போக… வேகமாக குனிந்து பார்க்க… ரிஷியின் மொபைல் தான் கீழே கிடந்ததபடி ஒளிர்ந்து கொண்டிருந்தது…
எடுத்துப் பார்க்க விக்கிதான் அடித்திருந்தான்… இவள் எடுக்கும் போதே கட்டாகி இருந்தது…
மொபைல் திரையில் ரிஷியின் அழகான குடும்ப புகைப்படம்… அவன் பெற்றோரோடும் தங்கைகளோடும் ரிஷி சிரித்தபடி இருக்க… சில நொடிகள் பார்த்தபடியே இருந்தவளுக்கு… அவன் கிளம்பி விடுவானோ… என்று மொபைலை எடுத்தபடி வேகமாக வெளியே வந்து கார் நிறுத்துமிடத்திற்கு வந்து அவனைத் தேட…
நல்ல வேளை ரிஷி அங்குதான் நின்றிருந்தான்…. கையில் சிகரெட்டோடு…
அவனை அந்த நிலையில் பார்த்த பின்…. போகலாமா வேண்டாமா என்று தனக்குள் ஒற்றையா இரட்டையா போட்டபடி இருந்தவள்… கடைசியில் போக முடிவு செய்தவளாக… அவன் அருகில் போய் நிற்க…
அவனும் பெரிதாகப் பதறவில்லை… கண்மணி வந்து விட்டாள் என்று கையில் இருக்கும் சிகரெட்டையும் கீழே போடவில்லை… அப்போதைக்கு அவள் முன் வாயில் வைக்காமல்… கைகளில் வைத்தபடி… சிகரெட் நுனியில் இருந்த நுண்ணிய கங்குகளை தட்டி விட்டபடியே… “என்ன” என்பது போல் அவளைக் கேள்விக் குறியோடு பார்க்க…
கண்மணி பதில் பேசாமல்… அவனிடம் தன் கையில் இருந்த அவன் போனை நீட்ட… அதை வாங்கியபடியே
“ஒஹ்ஹ்.. தேங்க்ஸ்” என்று மட்டும் சொல்லி முடிக்க… கண்மணியும் தலை அசைத்தபடி மீண்டும் தன் வழியில் கிளம்ப எத்தனித்தவள்… சற்று முன் அவன் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வர… பேசித்தான் வைப்போம் என்று தோன்ற
“ஸ்கீரின் சேவர்ல… உங்க ஃபேமிலி போட்டோ சூப்பர்” என்று புன்னகைத்துச் சொல்ல… ரிஷியின் முகமும் புன்னகையில் பெரிதாக விரிய…
அந்தப் புன்னகையோடேயே….
“அது என் ஃபேமிலி மட்டும் இல்லை… என்னோட உலகம்” தன் போனை எடுத்து அதில் இருந்த புகைப்படத்தைப் பார்த்தபடியே சொல்ல… அவன் கண்களில் அவன் வார்த்தைகள் நன்றாகவே பிரதிபலித்தது
கண்மணி இப்போது
“உங்க அப்பா.. அம்மா… மேட் ஃபார் ஈச் அதர்… அப்புறம் உங்க அம்மா நாலு பசங்களுக்கு அம்மா மாதிரியே இல்லை” என்ற போதே
"வாட்… நாலு பேரா” குழம்பிய பாவனையில் ரிஷி… அவள் என்ன சொல்கிறாள் என்று யோசித்து… உணர்ந்து…. அதை திருத்தப் போகும் முன்னேயே
“உங்க மூணு சிஸ்டரும் அழகா இருக்காங்க” என்று கண்மணியும் முடித்து வைத்திருக்க…
‘ஸ்டாப்.. ஸ்டாப்…” என்று அலறியபடி….
“எனக்கு ரெண்டு சிஸ்டர்தான்…” என்று சொன்னபோது அவன் முகத்தில்…. ஒரு மாதிரியான எரிச்சல் கலந்த பாவனை… மகிளாவையும் தனக்கு தங்கை ஆக்கி விட்டாளே என்ற கோபத்தில் குரல் கலந்து வந்திருக்க…
கண்மணி இப்போது ’பே’ என்று விழித்திருக்க… வேகமாக அவள் அருகில் வந்தவனாக…
”இது என்னோட அத்தை பொண்ணு… ச்சேசேய்… இவ என்னோட வருங்கால மனைவி” என்று கண்மணியிடம் மகிளாவின் புகைப்படத்தைக் காட்ட... அவன் காட்டிய பெண்ணின் தோள் மேல் கை போட்டபடி.. அவளை அணைத்திருப்பது போல நின்றிருந்தான் ரிஷி…
நாக்கைக் கடித்துக் கொண்டாள் கண்மணி… இப்போது பார்க்கும் போது… தங்கையாகத் தோன்றவில்லை அந்தப் பெண்… ரிஷியின் உரிமையான அணைப்பில்….
ரிஷி கையெடுத்துக் கும்பிட்டபடி…
“ஹலோ மணி அக்கா… இதுக்கு நீங்க பேசாமலேயே இருந்திருக்கலாம்…” நக்கலாக ரிஷி சொல்ல… கண்மணி இப்போது அசடு வழிந்தபடி… மானசீகமாக மன்னிப்புக் கேட்க…
”ஏதோ என்கிட்ட சொன்னதால தப்பிச்ச … இதை மட்டும் மகி கேட்ருந்தா… உனக்கே சொர்ணாக்காவக் காட்டியிருப்பா”
என்றவனிடம் மீண்டும் ஒரு முறை மன்னிப்புக் கேட்டபடி அதற்கு மேலும் பேசாமல் அதாவது சொதப்பாமல் விடைபெற்றுச் செல்ல… ரிஷியும் அங்கிருந்து கிளம்பியிருந்தான்…
ஆக மொத்தம் அன்றைய ஒரே நாளில்… ரிஷியின் அனைத்து தேவையில்லாத பக்கங்களும் அதாவது குடி, புகை, காதலி என மொத்தமும் அவளுக்குத் தெரிந்திருந்தாலும்… எதிர்பார்ப்பின்றி அவன் செய்த உதவி என்னும் ஒரே குணத்தால்… அவனின் மற்ற பழக்கவழக்கங்கள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட… ரிஷி என்பவன் கண்மணியின் கண்களுக்கு நல்லவனாகவே மட்டுமே தோன்றி இருந்தான்…
I can't find kanmani store fist episode 😫 😩 😭.. can you please help me to find out
Nice episode. Chinna vayasaga iruke. Eppo luv start agum. Eagerly waiting.....
Nice update dear 😍😍😍... Already Rishi has a girlfriend n love her but how will you connect Rishi n kanmani with love???? 🤔🤔🤔 Waiting for that dear.... Update soon....
I Like this story and all your previous 3 stories. Please fasta epi podunga wait pannave mudila👍
Rishi and Kanmani characterisation are interesting and good. Nice update. Thank you.