top of page
Writer's picturePraveena Vijay

கண்மணி... என் கண்ணின் மணி-6

அத்தியாயம் 6:

அன்று மாலை... நண்பர்கள் இருவருமாக கண்மணியின் வீட்டுக்கு சென்றார்கள்... விக்கிதான் ரிஷியை வம்படியாக அழைத்து சென்றான்...

வரும் வழியில்.... விக்கி ரிஷியிடம்

“உங்க வீட்ல இருந்து ஒரே பாராட்டு மழைடா இன்னைக்கு.. அம்மா, ரிது, மகி, உன் வீட்டுக் கடைக்குட்டினு.... சான்ஸே இல்லைடா” என்று விக்கி மகிழ்ச்சியுடன் கூற…

ரிஷி இப்போது ஆச்சரியமாகக் கேட்டான்...

“உங்க வீட்ல உன்னை பாராட்ட மாட்டாங்களா விக்கி”

“ப்ச்ச்... சின்ன வயதில் இருந்தே இந்த மாதிரி பல காம்பெட்டிஷன்ல பார்ட்டிசிப்பேட் பண்ணி அடிக்கடி ப்ரைஸ் வாங்குவேன்... அவங்களும் கங்கிராட்ஸ் அடிக்கடி பண்ணுவாங்க... இப்போலாம் நான் ப்ரைஸ் வாங்குவதும் அவங்களுக்கு பெரிய விஷயம் இல்லை.... அவங்க கங்கிராட்ஸ் பண்றதும் எனக்கும் பெருசா தெரியறதில்ல… ” என்றவன்…

”இன்னைக்கு உன் தங்கை ரிது கூட போன்ல… எடுத்தவுடனே என்னைத் திட்டாமல்.... சந்தோஷமா பேசுனாடா... புல்லரிக்க வச்சுட்டா... தேங்க்ஸ்டா” என்று சிலாகித்துச் சொல்ல...

ரிஷியோ

“ஹ்ம்ம்ம்ம்ம்... என்னாலதான் உன்னை ஃபுல் அடிக்க வைக்க முடியல... அட்லீஸ்ட் என் தங்கையாவது உன்னை புல்லரிக்க வச்சுருக்காளே… ஹ்ம்ம் க்ரேட் தான் விக்கி” என்றவன்...

விக்கியின் முறைப்பில்...

“முறைக்காதடா… அந்த பெரிய பிசாசு... எப்படியாவது என்னைப் பற்றி... இங்க நடக்கிறதைப் பற்றியெல்லாம் உன் வாயில இருந்து பிடுங்க ட்ரை பண்றா... மாட்டிக்காத... சரியான வில்லி…. அதிலும் நான் தண்ணி அடிக்கிறதுலாம் தெரிஞ்சா... நான் காலி... அது மட்டும் இல்லை... நான் அரியர் வைச்சுருக்குறதுலாம் தெரிஞ்சது... என் அம்மாகிட்ட போட்டுக் கொடுத்தான்னு வச்சுக்க.... ஹையோ நான் செத்தேன்… ஏற்கனவே என் லவ் மேட்டரை தம்பட்டம் அடிச்சவடா.... நீ எதையும் உளறி வைக்கலையே..“ நண்பனை சந்தேகமாகப் பார்த்து கேட்டவன்…

தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டான்

“இவன் நம்பரைக் கொடுத்தது முதல்ல தப்பு... ஆ ஊனா இவனுக்கு போன் பண்ணிடறா அந்த அரிசி மூட்டை”

விக்கியோ… ரிஷியின் ’வில்லி’ என்ற விளிப்பிற்கு தன் நண்பனை முறைத்தபடி…. ரிதன்யாவிற்கு சப்போர்ட் பண்ணவும் ஆரம்பித்தான்

“ச்சேச்சே உன் மேல ரொம்ப பாசம் டா அவளுக்கு…“ எனச் சொன்னவனுக்கு ரிஷியிடம் ஏனோ சில விசயங்களை சொல்ல வேண்டும் போல் இருக்க…

”யூ நோ(know) நான் ஃபெயிலியரே ஃபேஸ் பண்ணினது கிடையாதுடா… ஸ்கூல் படிக்கும் போது ஆல்வேஸ் ஃபர்ஸ்ட்… ஸ்போர்ட்ஸ், எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்னு எதை எடுத்தாலும் ஃபர்ஸ்ட்… ஒரு தடவை எக்ஸாம் தவறா ஒரு ஆன்சர் பண்ணிட்டு பயந்துட்டே இருந்தேன்… மார்க் போச்சேனு… ஆனால் ஆச்சரியம் என்னன்னா… அப்போதும் நான் ஃபுல் மார்க்… மிஸ் பார்க்கலை… பார்க்கலைனு சொல்ல முடியாது…. அந்த அளவு என் மேல நம்பிக்கை… அப்போதான் எனக்கு இந்த ஃபர்ஸ்ட் ப்ளேஸ் மேல சலிப்பு தட்டுச்சு… அதே போல என்னைச் சுத்தி இருக்கிறவங்க எல்லோரும் என்னை ஜெயிக்கவும் நினைக்கலை… ஒரு கட்டத்தில் அது போரடிச்சுருச்சு… அப்போதிருந்து இந்த சக்ஸஸ்… ஃபர்ஸ்ட் மார்க் இதில் எல்லாம் பெருசா நம்பிக்கை இல்லை… சோ ஸ்கூல் மாத்திட்டேன்…. அங்கேயும் ஸ்கூல் ஃபர்ஸ்ட்… ஆனால் என்னோட சர்க்கிள மாத்தி புதுப்புது ஆளுங்ககிட்ட கன்கிராட்ஸ் வாங்குறப்போ ஐ ஃபீல் சேட்டிஸ்ஃபை அவ்வளவுதான்… இப்போ நான் அப்ராட் போறது கூட… அங்க நான் என்ன சாதிக்கப் போறேன்னுதான்… அங்கயும் போரடிச்சா அடுத்த இடம்…. என்னோட இலட்சியம் என்னை விட பெரிய ஆளுங்களை மீட் பண்ணனும் வின் பண்ணனும்… எந்த இடமா இருந்தாலும்… சோ என்னோட தேடல், குறிக்கோள் என்னை விட பெரிய ஆளுங்களை மீட் பண்றதுதான்… ராமாயண வாலி தெரியுமா… லைக் அந்த மாதிரி எனக்கு முன்னாடி இருக்கிறவனோட அறிவை அப்சார்ப் பண்ணி வின் பண்றதுதான்” அசால்ட்டாக சொன்னவன்...

”ஆனால் அதே நேரம்… போரடிச்சாலும்… சலிப்புத்த ட்டினாலும் நான் இருக்கிற இடத்தில் நான் தான் நம்பர் ஒண்ணாவும் இருக்கனும்… அதையும் விட்டுக் கொடுக்க மாட்டென் ” என்றும் ஆரம்ப இடத்தியே வந்து நின்றவனாக…. ரிஷியைத் திரும்பிப் பார்க்க…

விக்கி சொன்னதை எல்லாம் கேட்டபடிதான் வந்து கொண்டிருந்தான்…

“இவனுக்கு ஃபர்ஸ்ட் ப்ளேஸ் பிடிக்கும்னு சொல்றானா… இல்லை பிடிக்காதுன்னு சொல்றானா… ஆண்டவர் மாதிரியே குழப்புறானே...” இந்த சிந்தனை ஓட்டம்தான் அவனுக்கு

“உனக்கு அந்த மாதிரி ஏதாவது லட்சியம் இருக்காடா… வாழ்க்கைல இதைச் சாதிக்கனும்…. அதை பண்ணனும்னு” இப்போது விக்கி ரிஷியிடம் கேட்க

ரிஷிக்கோ… விக்கி கேட்ட போதுதான் ’இலட்சியம்’ அப்படி ஒரு வார்த்தையை… அவன் வாழ்நாளில் இன்றுதான் கேட்டது போல் அவன் மூளை யோசிக்க ஆரம்பிக்க…

“அதெல்லாம் நான் யோசித்தது கூட கிடையாது… படித்து முடித்த உடனேயே… அப்பா கம்பெனில போய் உட்கார்ந்திருவேன்… அப்புறம் மகிய மேரேஜ் பண்ணனும்… அதுவும் அவ ஆசைப்பட்ட மாதிரி கிராண்டா… இவ்வளவுதான் எனக்கு… இந்த விசயங்களுக்கு பெரிதா மெனக்கெடவும் தேவையில்லை… சோ என்னோட குறிக்கோள் என்னன்னா ‘அது என்னன்னு’ தேடறதுதான்” என்று தன் குறிக்கோளை சட்டென்று முடித்தவன் நண்பனிடம் விளையாட்டாக கண்சிமிட்ட..

விக்கி கலகலவென சிரித்தபடி…

“தெய்வமே… நீ நல்லா வருவடா… ஆனால் உனக்கு பீப்பிள்(people) மேனேஜ்மெண்ட் சூப்பரா வருதுடா… நான் அதுல வீக்டா… அதை உன்கிட்ட இருந்து நான் கத்துக்கிட்டு இருக்கேன்“ என்ற போதே…

“சோ அஸ் யூ டோல்ட்.. யூ ஆர் அப்சார்பிங் மை டாலன்ட்… நினைத்தேன்டா… இவன் எப்படி நம்மள ஃப்ரெண்டா சேர்த்துக்கிட்டான்னு… சோ ஏதோ ஒரு விசயத்தில் நான் உன்னை விட பெட்டரா இருக்கேன்… அதை என்கிட்ட கத்துக்கனும்னு நினைக்கிற… சரியா” என்று ரிஷி சரியாக அனுமானித்து அவனிடம் கேட்க…

“மே பீ… இருக்கலாம்” என்றான் விக்கியும் தீவிர பாவத்துடனேயே…

விக்கி சொன்னவற்றை எல்லாம் மனதினிலே அசை போட்டபடியே அமைதியாக சில நிமிடங்கள் நடந்த ரிஷி…

“சில விசயங்களுக்கு தேடலே தேவையில்லைடா… உனக்கு பக்கத்திலேயே இருக்கும்… உன் கூடவே இருக்கும்… நாம அதில் சேட்டிஸ்ஃபை முழுவதுமா ஆகியிருப்போம்… ஆனால் அதை நாம உணர மாட்டோம்” என்றவன்… நின்று விக்கியைப் பார்த்து புன்னகை முகமாக

“உன் அம்மாவோட அன்பை வேற இடத்தில் தேடுவியாடா… அது போரடிச்சுருச்சுனு நினைப்பியாடா…” என்ற கேட்ட ரிஷியின் வார்த்தைகளில் விக்கி அவனை அதிர்ச்சியாகப் பார்க்க…. ரிஷி தன் பேச்சை தொடர்ந்தான்

“சில விசயங்கள் மூச்சுக்காற்று மாதிரி விக்கி... நம்ம கூட இருக்கிற வரை நமக்கு அதோட முக்கியத்துவமே தெரியாது… ஆனால் அதோட சின்ன விலகலைக் கூட நம்மாள தாங்க முடியாது…. பட் நாம அதுக்கு முக்கியத்துவமே கொடுக்கிறது இல்லைடா... தேடல் தேவைனு ஓடிட்டே இருப்போம்…. இது உனக்கு மட்டும் இல்லை எனக்கும் சேர்த்துதான்டா”…. என்ற வார்த்தைகளை ரிஷி முடித்த போது…. கண்மணியின் வீட்டை அடைந்திருக்க…

தங்கள் உரையாடல்களை முடித்துக் கொண்டபடி கண்மணியின் வீட்டின் முன் நின்றனர்…

ஞாயிற்றுக்கிழமை என்பதால்… கண்மணி வீட்டில் இருப்பாள் என்று நம்பிக்கையுடன் சென்றனர்… அதே போல கண்மணியின் வீடும் பூட்டி இருக்கவில்லை…

ஆனால் என்ன, அவர்களை வரவேற்றது கண்மணி இல்லை… பதிலாக அவளது பாட்டி…

கண்மணியை எதிர்பார்த்து விக்கி போயிருக்க…. அங்கு நின்ற அவளது பாட்டியைப் பார்த்த விக்கிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை… அப்படி ஒரு முக பாவத்தில் நின்று கொண்டிருக்க…

ஓரக்கண்ணால் விக்கியின் முகத்தைப் பார்த்த ரிஷிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை….

நண்பன் கடுகடுப்பில் இருக்கிறான் என்று தெரிந்தும் அவனால் அடக்க முடியவில்லை.. மெதுவாக அவன் காதில் முணுமுணுத்தான்…

“விக்கி… நீ போட்ட பிளானே மொக்கை… அந்த மொக்க ப்ளானுக்கு ஏத்த ஆள்தாண்டா…”

தன் நண்பனை கண்களினாலேயே எரித்த விக்கி அவனிடம்… பதில் ஏதும் சொல்லாமல்… கண்மணியின் பாட்டியிடம் பேச ஆரம்பிக்க… அதே நேரம் ரிஷிக்கு மகி கால் செய்ய…

“டார்லா… வீட்டுக்கு வந்த உடனே பேசவா… சொன்னேனே அந்த நடராஜ் சார் வீட்டுக்கு பணம் கொடுக்க வந்திருக்கேன்டா” என்று மகியிடம் பேசியபடியே அவர்களை விட்டு தள்ளி நின்று போனில் பேச ஆரம்பித்தான்…

எதிர்முனையில் மகி என்ன சொன்னாளோ….

“தெரியும் மகி… இது உன்னோட டைம்னு… விக்கிதான் என்னை இழுத்துட்டு வந்துட்டான்… ” என்றவன் சற்று தள்ளி நின்ற விக்கியை முறைத்தான்… தன் அத்தை மகளிடம் திட்டு வாங்க வைத்து விட்டானே என்று… இனி அவளை சமாதானப்படுத்துவதிலேயே இன்றைய தினம் போய்விடுமே… ரிஷியின் கவலை அவனுக்கு….

விக்கியின் கவலையோ… இன்று கண்மணியை அவமானப்படுத்த முடியாதோ... அவன் கவலை அவனுக்கு….

“பாட்டி…. பணம் கொடுக்கனும்…. நடராஜ் சார் அவர் பொண்ணுக்கிட்டதான் கொடுக்கச் சொன்னார்… அவர் பொண்ணு இல்லையா…” விக்கி.. கண்மணியின் பாட்டி காந்தமாளிடம் கேட்க

“ஏஏஏஏன் நான் அந்த நடராசனப் பெத்த ஆத்தாதான்… எங்கிட்ட கொடுத்தா ஆகாதா என்ன…” இழுத்தார் அந்த மூதாட்டி…

“இ… இல்ல, சார் அவர் பொண்ணுகிட்டதான் பணத்தைக் கொடுக்கச் சொன்னார்… அதுதான்” விக்கி தயங்கியபடி சொல்ல…

“ம்க்கும்… அந்த மகராணிகிட்ட தான் கொடுக்கணுமாக்கும்” என்று நொடித்த அந்த பெண்மணி…

“வருவா… இங்கன குந்துங்க… ஆத்தா மகமாரி.. எங்க போறா வாறானா சொல்லிட்டா போறா… அவ இஷ்டத்துக்கு நடக்கிறா…. அவ வச்சதுதான் இங்க சட்டமா ஆகிருச்சு… எடம் கொடுத்த என் மவனச் சொல்லனும்… வெயிட்டு பண்ணுங்க வருவா…” கிழவி தனக்குள் முணுமுணுத்தபடி… அங்கேயே நிற்க….

இப்போது ரிஷியும் மகிளாவிடம் பேசி முடித்து போனை வைத்திருந்தான்…

ரிஷிக்கு கண்மணியின் பாட்டி பேசியது ஒழுங்காக கேட்கவில்லை… கேட்கவில்லை என்பதை விட, அவ்வளவாக கவனிக்கவில்லை மகியோடு பேசிக் கொண்டிருந்ததால்……

அதனால் விக்கியிடம்

“என்னவாம்டா..… பாட்டி ரொம்ப சளிச்சுக்கிறாங்க” கொஞ்சம் சத்தமாகக் கேட்டான்… காதில் வைத்திருந்த ப்ளூடூத்தை சரிசெய்தவாறே….

அங்கு நடத்தவற்றை ரிஷி விக்கியிடம் மீண்டும் ஒரு முறை கேட்டதாலும்… அவன் காதில் வைத்திருந்த ப்ளூடூத் கருவியினாலும்.. ரிஷிக்கு காது கேட்காது போல என்று தானாகவே முடிவு செய்த கண்மணியின் பாட்டி காந்தம்மாள்…. விக்கியிடம்

“இந்த தம்பிக்கு காது கேக்காதாப்பா… ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. சேட்டுப் பையன் மாதிரி இம்புட்டு அழகா இருக்கு…. இதுக்கு இப்படி ஒரு குறையா”… தன் முகவாயில் கை வைத்தவாறே ரிஷியைப் பார்த்து பரிதாபப் பட….

கேட்ட ரிஷிக்கு… “அடக் கடவுளே” என்றிருக்க…. அவனுக்கு பதில் சொல்ல தோணவில்லை அந்த பாட்டி பேசிய வார்த்தைகளுக்கு….

விக்கிதான் சிரித்தபடி…

“பாட்டி… அது ஹியரிங் மெஷின் இல்ல… ப்ளூடூத் ஹெட்செட்.” என்று ரிஷியைப் பார்த்து இன்னும் சிரிப்புடன் சொல்ல

ரிஷி அவனிடம்…

“ஆமாடா… நீ சொன்னவுடனே அவங்களுக்கு புரிஞ்சுரும்… அதோட அந்த பாட்டி ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவெர்சிட்டில டாக்டரேட் வாங்கியிருப்பாங்க பாரு…. நீ பேசுற இங்க்லீஸ் வேர்ட்ஸ்லாம் புரிய“ கடுப்புடன் சொல்ல

விக்கி தன் தவறை உணர்ந்தவனாய்… நாக்கைக் கடிக்க… இப்போது ரிஷி அந்தப் பாட்டியிடம்

“பாட்டி… இது செவிட்டு மெஷின் இல்ல…… போன்ல நேரடியா காதில வைக்காமல் போனை தூரமா வச்சுட்டு அது மூலமா பேசலாம்” என்று விளக்க ஆரம்பிக்க…

ரிஷியைக் காந்தம்மாள் பாட்டி நக்கலாகப் பார்த்து...

“யார்க்கிட டபாய்க்கிற… எனுக்கு தெரியாதுனு நெனக்கிறியா… இந்தக் காந்தம்மாளா கொக்காவா…. ” என்றபடி…

தன் இடுப்பில் இருந்த சுருக்குப்பையில் இருந்து வயருடன் இருந்த ஹெட்போனை வெளியே எடுத்து காட்டியபடி… இதுதான் அது… போனுக்கடைக்காரனே சொல்லி கொடுத்தான்… ”

போனமாசம் தான் எனக்கு என் மவன் டச்சுப் போனு வாங்கிக் கொடுத்தான்…போனைத் தொட்டுதொட்டுப் பேசுனா அழுக்காயிருமேனு அந்தக் கடக்காரன்கிட்ட கேட்டேன்…. அப்போதான் சொன்னான்…. இத போன்ல மாட்டிக்கிட்டா போனைத் தொடவே வேண்டாம்னு…. எனக்கு போன் வந்தாக்கூட இத மாட்டிக்கிட்டு தான் பேசுவேனாக்கும்” எனப் பெருமையாகக் கூற…

“டச் போனை கண்டுபிடிச்சவன் இதக் கேட்டா தூக்கு போட்டு நிப்பாண்டா” ரிஷி விக்கிக்கு மட்டும் கேட்குமாறு கவுண்டர் விட…

விக்கி காந்தம்மாளிடம்

“அது மாதிரிதான் பாட்டி இதுவும்” என்று விளக்க ஆரம்பிக்க

ரிஷி விக்கியிடம்…

“அய்யா சாமி…. நீ எதுவும் விளக்க வேண்டாம்…. நீ ஒண்ணு சொல்லி அதுக்கு அவங்க ஒரு பதில் சொல்லி…. ஆள விடுங்கடா.. அதுக்கு நான் காது கேட்காத செவிடனாகவே இருந்துட்டு போறேன்…. இந்தப் பாட்டிக்கு நான் செவிடனா இருந்தா என்ன…. நல்ல பையனா இருந்தா என்ன… விட்டுத் தள்ளு” என்று அந்தப் பேச்சை அப்போது முடித்தவன்…. காந்தம்மாளின் கையில் இருந்த போனைத் தன் கையில் வாங்கியபடி…

“பாட்டி…. டச் போன்லாம் டச் பண்ணித்தான் யூஸ் பண்ணனும்… நீங்க போன் பேச யூஸ் பண்ண வேண்டாம்…. ஆனால் போட்டோ எடுக்க யூஸ் பண்ணலாம்…” என்றவாறு…. தன்னையும்.. அவரையும் வைத்து செல்ஃபி எடுத்துக் கொடுக்க…

“அட ஆமாம்ல… இத அந்த எடுபட்ட கடைக்காரன் சொல்லலையே” ரிஷிக்கு மெஷின் வைத்திருப்பதால்தான் காது கேட்கிறது என்று நம்பியதால் ஆதங்கமாகச் சொன்னார்…

அதன் பின் காந்தம்மாள் பாட்டியுடன், ரிஷி அரட்டைக் கச்சேரி அடிக்க ஆரம்பித்திருக்க… விக்கி… இருவரையும் பார்த்தபடி புன்னகையுடன் அவர்கள் பேசியவற்றைக் கேட்டபடி இருந்தான்…

“இம்புட்டு ஜாலியா பேசுற தம்பி…. உனக்குப் போயி இப்படியா” கிழவி அவ்வப்போது அங்கலாய்த்தபடிதான் இருந்தார்…

ரிஷியுமே பாட்டியோடு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தான்….

அரை மணி நேரம் கடந்துவிட்டிருக்க… விக்கியின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க்கொண்டிருக்க… நண்பனின் முகத்தைப் பார்த்த ரிஷிக்கும் புரிந்தது… அவன் டென்சனாக இருக்கிறான் என்று…. எனவே அவன் பதட்டத்தைத் தணிக்கும் பொருட்டு...

தன்னிடம் கடைசியாக இருந்த ஒரே ஒரு சூயிங்கம்மை தன் நண்பனிடம் தூக்கிப் போட்டவன்…

“டென்சனைக் குறைக்க” என்று கண்சிமிட்டியபடி சொல்ல… விக்கியும் அதை மென்றபடி… தன் நேரத்தைக் கடத்த ஆரம்பித்தவன்… ஒரு கட்டத்தில்…

பொறுமை இழந்தவனாக , காந்தம்மாளிடம்….

“பாட்டி…. உங்க பேத்தி எப்போ வரும்” என்று கேட்க…

“அந்த அடங்காப்பிடரி… எப்போ வருவானு யாருக்குத் தெரியும்…. வெயிட்டு பண்ணுங்க வந்துரும்….” எனும்போதே

அந்தக் காம்பவுண்ட்டின் வெளிக் கேட் திறக்கப்படும் சத்தம் கேட்க… மூவருக் திரும்பிப் பார்க்க…. கண்மணிதான் அதைத் திறந்து கொண்டு இருந்தாள்…

காந்தம்மாள்…. இருவரிடமும்

“பிசாச நென வந்து நிக்கும்னு சொல்லுவாங்களே சரியாத்தான் இருக்கு” என்று நொடிக்க…

அந்த வார்த்தைகளைக் கேட்ட , ரிஷி முகம் சுருக்க… விக்கியோ…

“பாட்டிக்கு கூட பேத்திக்கு பிடிக்கலை… யாராவது சொந்தப் பேத்திய இப்படி சொல்வாங்களா” ரிஷியின் காதைக் கடிக்க…

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே…. கண்மணி அவள் வீட்டின் அருகில் வந்து விட… காந்தம்மாள்…. எதுவும் பேசாமல் சட்டென்று வாயை மூடினார்… கண்மணி அருகில் வந்தவுடன்

கண்மணியோ காந்தம்மாளைப் பார்த்து நெற்றி சுருக்கினாலும்….அவரிடம் ஏதும் பேசாமல்…

விக்கி ரிஷி இருவரிடமும் பொதுவாக…

“வெயிட் பண்ணுங்க… கணக்கு எழுதி வைத்த சீட்டு உள்ள இருக்கு அதை எடுத்துட்டு வருகிறேன்” என்றபடியே உள்ளே போனவள்… ஏதோ ஞாபகம் வந்தவளாக ஒரு நிமிடம் நின்று விக்கியிடம் திரும்பினாள்…

“சின்னப் பசங்க வருகிற இடம்… இந்த மாதிரி பழக்கமெல்லாம் வேண்டாமே… இதையெல்லாம் வாசல் கேட்டோட விட்டுட்டு வரதுன்னா உள்ள வாங்க…” என்று விக்கி சூயிங்கம் மென்று கொண்டிருப்பதை சுட்டிக் காட்டினாள்… பெரிதாக கடுகடுவென்றெல்லாம் சொல்லவில்லை… தன்மையாகத்தான் சொன்னாள்…

அந்த தன்மைக்கே…. விக்கிக்கு முகத்தில் கோபஜ்ஜுவாலை பற்றி எரிய…. அதற்கு காரணமானவனிடம் திரும்ப… அவனோ… உதடுகளை அழுந்த மூட முயற்சித்துக் கொண்டிருந்தான்… வந்த சிரிப்பை அடக்க…

”நான் உன்கிட்ட கேட்டனடா… இந்த சூயிங்கம்மை” என்று பார்வையாலேயே ரிஷியிடம் கோபமுகத்தைக் கேட்க…

“சாரிடா மச்சான்…. சாரிடா… “ என்று வேகமாக அருகில் இருந்த மரத்தின் இலையைப் பறித்து விக்கியிடம் நீட்ட… விக்கியும் அந்த சூயிங்கம்மை இப்போது வெளியில் விட்டெறிந்திருந்தான்

“தட்ஸ் ஆல்… ஈஸி… இதுக்கு போய் இவ்வளவு டென்சனா” என்று தன்னால் ஆரம்பித்த பிரச்சனைக்கு தீர்வும் கொடுத்து நண்பனையும் சாந்தபடுத்த முயற்சிக்க… அதில் கொஞ்சம் அமைதி ஆனான்தான் விக்கி…

ஆனாலும்… கண்மணியின் மேல் உள்ள கோபம் இன்னும் பல சதவிகிதம் உயர்ந்திருந்ததுதான் உண்மை….

கண்மணியும் இப்போது வெளியே வந்தாள்... செலவு விபரம்.. 15700.00 சொல்ல.... விக்கி எதுவும் பேசாமல்... 16000 ரூபாயை 8 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களாக தர..

கண்மணி விக்கியிடமிருந்து அதை வாங்கியபடி... தங்கள் பணம் போக மீதித் தொகையை எடுக்க உள்ளே போக எத்தனித்தவள்.. அப்போதுதான் காந்தம்மாளைக் கவனித்தாள்…. அவர் மாலை வரை இங்கு இன்னும் இருப்பது உறுத்தியது

எப்போதும் காலையில் வந்த உடனேயே பணத்தை வாங்கிக் கொண்டு கிளம்பிவிடும் தன் பாட்டி… இன்று ஏன் இவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்ற யோசனை கண்மணிக்கு வர…

“ஏ கெழவி… நீ இன்னும் கெளம்பல… உன்னை மதியமே கிளம்பச் சொன்னேனே” அதிகாரமாய்க் கேட்க…

விக்கி-ரிஷி இருந்த தைரியத்தில்… காந்தம்மாளும்…

“எம்மவன் வீட்ல நான் இருப்பேன்… ஓனக்கென்ன…. ஒன்ன நான் கேக்கனும்… நாயித்துக் கெழமை அதுவுமா எங்கடி போய் சுத்திட்டு வர்ற…. ஸ்ஸ்கூலே இன்னைக்கு இருக்காது… எங்க போய்ட்டு இத்தன மணிக்கு வூட்டாண்ட வர்ற... கேக்க ஆள் இல்லனு ஆட்டமா ஆடுற நீ…. எம் மருமவ வயித்துல இருக்கும் போது இந்த ஆட்டம் ஆடித்தான் பெறக்கும்போதே… அந்த மகராசிய மேல அனுப்புன.... அதிர்ஷ்டக் கட்டை....இப்போ” எனும் போதே...

“என்ன.... இவங்க இருக்கிற தைரியத்தில பேசுறியா....” விக்கி-ரிஷி யைச் சுட்டிக் காட்டியபடி பேசியவள்…

”இன்னும் அஞ்சு நிமிசத்தில் இவங்க இங்கயிருந்து போயிருவாங்க... ஞாபகம் வச்சுக்கோ... வாய மூடிட்டு ஒழுங்கா கிளம்பற வழியப்பாரு” என்றாள் கண்மணி....

ரிஷிக்கு காந்தம்மாளின் வார்த்தைகள்…. அவன் மனதில் இலேசாக அதிர்வைக் கொடுத்திருக்க…

“என்ன இந்த மாதிரி பேசுது இந்த கிழவி… அந்த பொண்ணு மனசு என்ன பாடுபடும்” என்று கண்மணியின் முகத்தைப் பார்க்க…

உணர்வுகளைத் துடைத்து வைத்தது போல் இருந்தது…. பெரிதாக முகமாறுதல்கள் இல்லை… அவள் முகம் வரும் போது எப்படி இருந்ததோ அப்படியேதான் இருந்தது...

கண்மணியின் முகத்தை ரிஷி இன்னும் உற்றுப் பார்த்தான்… கண்டிப்பாக அவள் மனதில் இந்த வார்த்தைகளின் தாக்கம் இருக்கும்…. அது அவளின் முகத்தில் பிரதிபலிக்கிறதா என்று….

ஏனோ இவனால் அவளின் உணர்வுகளின் ஆழத்தை அதன் ஒரு டெசிமல் பாயின்ட் அளவு கூட ஊடுருவி… கணிக்க முடியவில்லை அப்போது…

விட்டுவிட்டான்…. ரிஷியும்… அதே நேரம் ரிஷிக்கு கண்மணி அவள் பாட்டியை அப்படி பேசியதுதான் சரி என்று தோன்றியது....

“சின்னப் பொண்ண இந்தக் கிழவி இப்படி பேசுது...” என்று நினைத்தபடி ரிஷி இருக்க.. விக்கிக்கோ கண்மணியை அதிகாரமாய் அதட்டிய அந்தப் பாட்டியை பிடிக்கத்தான் செய்தது.. கண்மணியை விமர்சனம் செய்த போதிலும்

காந்தம்மாளோ கண்மணி திட்டியும் அடங்காமல்

“இங்கதான் இருப்பேன்.. என் மவன் வீடு என்னடி பண்ணுவ” என்று பதிலுக்கு பேச

“இரு இரு நல்லா இரு கெழவி... உனக்கு ஒருவேளைச் சோறுதான் ஒழுங்கா போடுவேன்... அடுத்த வேளை... வெசத்த வச்சுதான் கொடுப்பேன்... என்னை நம்பி இந்த வீட்ல இருந்தால் இந்தக் கதிதான் உனக்கு” என்றபடி உள்ளே போக...

கண்மணி தமாஷாகப் பேசவில்லை என்பது அவளது முகமே சொல்ல.... அதைப் பார்த்த ரிஷி ஆவென்று வாய்பிளக்க... விக்கி அவனிடம்..

“பால் பாயாசாமாடா... ரொம்ப டேஸ்டா இருந்துச்சாடா... நான் அப்பவே சொல்லலை” கிடைத்த வாய்ப்பை விடுவானா விக்கி… நக்கலடித்தான் ரிஷியை.... இருந்தும் விக்கியின் குரலில் கண்மணியின் மீதான் எரிச்சல் இருக்கத்தான் செய்தது...

அதன்பின் காந்தம்மாள் என்ன நினைத்தாரோ தெரியவில்லை...

“உன் வீட்ல எனக்கென்ன வேலை... என் மவன் இருக்கச் சொன்னான்... இந்த பசங்க வந்து போகிற வரைக்கும் இருக்கச் சொன்னான்….. இருந்தேன்.. இல்ல நான் அப்பவே கிளம்பியிருப்பேன்.... எல்லாம் ரெடியாத்தான் இருந்தேன்...” என்று பையை எடுத்தபடி....

“கொஞ்சம் டீத்தண்ணி போட்டுத்தாவேன்” என்று உள்ளே சென்ற குரலில்… தயங்கியபடியே கண்மணியிடம் … கெஞ்சல் குரலில் கேட்க...

“இவ்வளவுதானா உன் அதிகாரம்” என்றிருந்தது விக்கிக்கும் ரிஷிக்கும்

அதே சமயம்…. “இவர்கள் வருகிறார்கள் என்றுதான் நடராஜ் அவரை இருக்கச் சொன்னதாக” காந்தம்மாள் பாட்டி சொன்னதும் நண்பர்கள் கருத்திலும் சென்றடைந்ததுதான்… ஆனாலும் நடராஜைக் குற்றம் காண தோன்றவில்லை…

பெண்ணைப் பெற்ற தந்தையாய் அவர் செய்தது இருவருக்குமே தவறாகத் தோன்றவில்லை… அதனால் காந்தமாளின் வார்த்தைகளைப் பெரிதாகவும் எடுத்துக் கொள்ள வில்லை…

கண்மணி அவள் பாட்டியிடம்

“எனக்கு காவல் காக்கிற வேலையெல்லாம் தேவையில்லைனு உன் மவனுக்கு நல்லாவேத் தெரியும்… அதுனால கிளம்புற வழியப் பாரு…. டீத்தண்ணி… அது இதுனு நேரத்தைக் கடத்தாத… டீத்தண்ணியில கூட விசம் வைக்கலாம் கிழவி... சாப்பாட்டுல விசம் வைக்கிறத விட... இது ரொம்ப ஈசி.... அதுனால இடத்தைக் காலி பண்ணு.... வழக்கம் போல அண்ணாத்த கடையில டீயக் குடிச்சுட்டு உன் ஏரியாக்கு… போய்ச் சேரு... உன் புருசன் காத்துட்டு இருப்பாரு”

காந்தம்மாளும் அதற்கு மேல் பதில் பேசாமல் கிளம்பினார்..

போகும் போது.... விக்கியிடம் விடைபெற்றபடி… ரிஷியைப் பார்த்தவர்…

காதில் வைத்திருந்த மெசின் எங்கே என்று சைகையால் கேட்க... ரிஷி நொந்து போனவனாய்... கையில் எடுத்துக் காட்ட...

“மாட்டிக்க ராசா... நான் வர்றேன்” என்று ரிஷியைப் பார்த்து பாவமாய்ச் சொன்னபடி.... ரிஷியும் அவருமாக எடுத்த புகைப்படத்தை அவனுக்கு காட்டி...

“என் வூட்டுக்காரர்ட்ட காமிக்கிறேன்” என்றபடி அந்த இடத்தைக் காலி செய்தார் கண்மணியின் பாட்டி...

இப்போது….கண்மணியும் தங்கள் பணம் போக மீதித் தொகையை இவர்களிடம் எடுத்துக் கொடுக்க உள்ளே போக..

விக்கி அவளிடம்

“ஒரு நிமிசம்…” நிறுத்தினான் கண்மணியை உள்ளே போக விடாமல்

“எங்களுக்கு மீதிப் பணம்லாம் வேண்டாம்.... சில்லறை எல்லாம் கணக்குப் பார்க்கிற சில்லறைத்தனமான மக்களா... கடவுள் எங்கள விடல... 300 ரூபாய்… லாபம் தானே உனக்கு... அத வச்சுக்க... உன் அப்பாகிட்ட சொல்லாமல் கூட வச்சுக்கலாம்... இந்தக் கேடித்தனமான வேலையெல்லாம் உனக்குச் சொல்லித்தரனுமா என்ன...” என்றவன்.. ரிஷியை நோக்கி

“ரிஷி வாடா போகலாம் ” என்க

விக்கி தேவையில்லாமல் வார்த்தைகளை அதிகமாக விடுகிறானோ என்று ரிஷி கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தான்... கண்மணி என்ன சொல்வாளோ என்றிருக்க

“ஓ...” என்று மட்டும் புருவம் உயர்த்தியவளாக...

தன் கையில் வைத்திருந்த அட்டையை இப்போது நீட்டினாள்..

”இது என் அப்பா போட்ட கால்குலேசன்... 18600.00 வருது..... இந்த அமவுண்ட் தான் உங்ககிட்ட வாங்கச் சொன்னார்... நான்தான் அங்க இங்க குறைத்து 16000குள்ள வருகிற மாதிரி மாற்றினேன்... நீங்கதான் சில்லறைத்தனமான வர்க்கத்தில் பிறக்காமல் வள்ளல் பரம்பரையில் பிறந்தவராச்சே.... பத்தொன்பதாயிரம் என்ன இருபதாயிரமா ரவுண்ட் பண்ணிக் கொடுத்தால் கூட வாங்கிறேன்...” என்று சாதாரணமாகச் சொல்ல... விக்கியின் கண்கள் கோபத்தில் சிவக்க... ரிஷி இப்போது இடையிட்டு...

“சாரிங்க... அவன் ஏதோ... விளையாட்டுத்தனமாய்” என்று ஆரம்பிக்க... ரிஷியையும் அடுத்த வார்த்தை பேச விடாமல்

“ஹலோ.... 18600 ரூபாய்,.. அது மட்டும் தான் பேச்சு,... இஷ்டம்னா கொடுங்க இல்லையா.. என் அப்பாகிட்ட பேசிக்கங்க… நடையக் கட்டுங்க” என்று வெட்டு ஒன்று துண்டு ஒன்றாகப் பேசி... ரிஷியிடமும் கடுப்பை காட்ட

அவளது சுள்ளென்ற வார்த்தைகளில்… ரிஷிக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது

ரிஷி... அதற்கு மேலும் பேச்சை வளர்க்காமல்… இன்னும் இரண்டு இரண்டாயிரம் நோட்டுத் தாள்களை எடுக்க...

விக்கி அதைத் தடுக்க முயற்சிக்க...

“விக்கி.... கொஞ்சம் பேசாமல் இரு “ என்று முறைத்த ரிஷி...

“பேலன்ஸ் அமவுண்ட் கொடுங்க” என்றான் கண்மணியிடம் நீட்டியபடி…

கண்மணியும் அதை வாங்கி வைத்துக் கொண்டு உள்ளே போய் மீதிபணத்தை எடுத்து வந்தாள்…. அதன் பிறகு

“பேலன்ஸ் அமௌண்ட்... 1399” என்று ரிஷியிடம் சொல்லியபடியே.. அவனிடமே மீதித் தொகையைக் கொடுக்க...

விக்கி தன்னையுமறியாமல்...

“1 ரூபாய விட்டுட்டாளே... பெரியா கணக்குப்புலி மாதிரி பேசினா..” என்று தன் மனதிற்குள் யோசிக்க...

யோசித்துக் கொண்டிருந்த விக்கியின் முகத்திற்கு முன் சொடக்கு போட்டுத் தன்னைப் பார்க்க வைத்த கண்மணி… அவனிடம்

”என்ன 1 ரூபாய் மிஸ் ஆகுதா விக்கி அண்ணா… நாங்கள்ளாம் சில்லறை வம்சம்ல… சோ இதுதான் இருக்கு… இதை வாங்கிக்குவீங்களா” என்று எள்ளலாகச் சொன்னவள்… அவன் முன் நீட்டியதோ….

“நான்கு 25 பைசா நாணயங்களை…”

ரிஷி வார்த்தைகளற்று திகைத்து நிற்க... விக்கி அதற்கு மேல் அங்கு நிற்பானா என்ன… கோபத்தில் சிவந்த முகத்தைக் கூட காட்டப்பிடிக்கவில்லை…. கண்மணி வீட்டை விட்டு வெளியேற ஆரம்பிக்க.. ரிஷியும் அங்கு நிற்க நினைக்கவில்லை…

ஆனால் அதற்கு முன் கண்மணியிடம் விடைபெற்றுச் செல்வதா வேண்டாமா என்று சில நிமிடங்கள் தனக்குள் குழம்பியவன்… நண்பன் கோபத்துடன் செல்கிறான்… அவனைச் சமானதானப்படுத்துவதுதான் இப்போது முக்கியம்… என்று ஒரு வழியாக முடிவு செய்தவனாக விக்கியைப் பிடிக்க… வேக நடை எடுத்து வைக்க ஆரம்பிக்க …

ரிஷியும் கிளம்பப் போவதை உணர்ந்த கண்மணி… அவனை அழைக்க நினைக்க… விக்கியின் பெயர்தான் கண்மணிக்கு நினைவில் இருக்க… ரிஷியின் பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை….

வேறு வழி இன்றி ரிஷியையும் சுண்டி அழைத்தாள்… விக்கி வேறு ரிஷி வேறு என்று அவளுக்குத் தோன்றவில்லை… விக்கியின் மீதிருந்த கடுமை ரிஷியின் மேலும் இருக்கத்தான் செய்தது… என்ன அளவுதான் குறைவு….

“ஹலோ” என்று பெயர் சொல்லாமல்... அவனை நிறுத்த…

ரிஷிக்கு அவள் சுண்டி அழைத்த விதம் பிடிக்கவில்லை என்றாலும்… அதையும் மீறிய பெரிய கவலை வந்திருந்தது இப்போது… அதாவது விக்கியைப் போல தன்னையும் அண்ணன் என்று கண்மணி அழைத்து விடுவாளோ… வாலிபனாக பதறியது ரிஷியின் மனது… அவள் ‘அண்ணா’ என்று கூப்பிட்டு விடுவாளோ… உடனடியாக அதைத் தடுக்க வேண்டும் என்று பதறியது அவனுக்குள் இருந்த ரெமோ மனம் ….

அந்த பதட்டத்தில் வேகமாக கண்மணியிடம் திரும்பியவன்

“ரிஷி… ரிஷி என்னோட பெயர்”

“அண்ணா பையாலாம் போட்றாதிங்க… என் தங்கைகளுக்கு மட்டும் தான் தார்மீக உரிமை…” என்று வேக வேகமாக முடிக்க…

உதட்டைச் சுழித்தாள் கண்மணி அலட்சிய பாவத்தோடு… அந்த உதட்டுச் சுழிப்பு… கோபத்திலோ… எரிச்சலிலோ வந்தது அல்ல… இது இப்போது மிகவும் முக்கியம் என்ற அலட்சிய பாவத்தில் மட்டுமே…

அப்போதுதான் ரிஷியும் கவனித்தான்… கண்மணி உதட்டைச் சுழிக்கும் போது அவள் வலது கன்னத்தில் விழுந்த குழியை…. இவனாவது சிரிக்கும் போதுதான் கன்னத்தில் குழி விழும்… கண்மணிக்கோ சிறு உதட்டுச் சுழிப்பிலேயே அழகாய் குழிந்தது

கண்மணியின் கன்னத்துக் குழியில் ரிஷியின் கவனம் சிதறும் போதே…. கண்மணியின் குரல் குறுக்கிட்டது…

“எனக்கு எப்போதும் கணக்கை முடித்துதான் பழக்கம்… யாரோட கணக்கும் என்கிட்ட எஞ்சி நிற்க கூடாது…. முடிச்சுக்கலாம்…. இந்தாங்க உங்க ரூபாய்” என்று இப்போது ரிஷியிடம் ஒரு ரூபாய் நாணயத்தை நீட்டினாள்… நல்லவேளை 25 பைசா நாணயங்களை எல்லாம் நீட்ட வில்லை இப்போது

பார்த்த ரிஷியின் மனதிலோ….

“அடிப்பாவி… கடைசியில என்னைப் பிச்சைக்காரனா மாத்திட்டாளா… பரவாயில்ல… 25 பைசாவா கொடுக்கல… அந்த அளவுல ரிஷி நீ தப்பிச்ச” என்று யோசித்தவனாக…. தோளைக் குலுக்கியபடி…

“கொடுங்க… நம்ம சூப்பர் ஸ்டார் படத்தில எல்லாம்… இந்த மாதிரி ஒரு ரூபாய்லதான் மேல போவாரு… நீங்க கொடுக்கிற அதிர்ஷ்டம் நமக்கு என்ன மாதிரி ஒர்க் அவுட் ஆகுதுனு பார்ப்போம்” என்று கூலாகச் சொல்லியபடி கை நீட்ட…

அவன் வாக்கியத்தில் இருந்த அதிர்ஷ்டம்… என்ற வார்த்தை கண்மணிக்குள் உறுத்த... சட்டென்று நீட்டிய கைகளை தன்புறம் இழுத்துக் கொண்டவள்… ஒரு ரூபாய் நாணயத்தையும் தன் உள்ளங்கையில் வைத்து அழுந்த மூடி வைத்துக் கொள்ள…. ரிஷி அவளைக் கேள்விக் குறியோடு பார்க்க…

”சூப்பர் ஸ்டார் மாதிரி பெரிய ஆளாகிட்டிங்கன்னா… சோ என்கிட்டயே இருக்கட்டும்… போகலாம் நீங்க” கண்மணி… தோரணையுடன் இயல்பாகச் சொல்ல… குரல் இயல்பாக இருந்தாலும்…. அவள் கண்களில் ஓரத்தில் சிறு துளியளவு மலர்ச்சி முடிச்சுட்டதோ…

“நல்ல எண்ணம்மா உனக்கு… ஆனால்… உனக்கும் எனக்கும் கணக்கு முடியாமல் நிற்குதே” என்று ரிஷியும் சட்டென்று தன் குண இயல்பில்… கண்மணியை இயல்பாக கிண்டலடித்தவன்… அடுத்த நொடியே… கண்மணியின் குணம் நினைவுக்கு வர….

“அடேய்… அவ சொர்ணாக்காடா…. மறந்துட்டியாடா… வேகமா இடத்தைக் காலி பண்ணு…” மனசாட்சி சொல்ல… அதே வேகத்தில்

”பை கண்மணி” என்று வேகமாக சொல்லி கண்மனியின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் ரிஷி விடை பெற்றுச் சென்று விட….

வீட்டிற்குள் நுழைந்த கண்மணியோ…. தன் அன்னையின் புகைப்படத்தின் முன் நின்றாள்… கையில் வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயத்தை அவளையுமறியாமல்… ஏதோ ஒரு ஞாபகத்தில்… அவள் அன்னையின் புகைப்படம் முன் உள்ள சிறு பெட்டியில் வைத்தவளுக்கு…

சற்று முன் தன் பாட்டி சொன்ன… ’அதிருஷ்ட கட்டை’ …. ரிஷி சொன்ன ’அதிர்ஷடம்’ என்ற இந்த வார்த்தைகள்… அவள் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்க… தன் அன்னையையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்மணியின் கண்களிலோ கண்ணீர் இல்லை… வெறுமை மட்டுமே…

கண்மணியின் முகத்தில் மெலிதான புன்னகையைக் கூடப் பார்க்கலாம்… ஆனால் கண்ணீர்…. கடைசியாக அவள் கண்ணீர் விட்டு அழுத தினம் இப்போதும் ஞாபகம் வந்தது அவளுக்கு...

அந்த கருப்பு தினத்திற்குப் பிறகு… அவள் கண்ணீர் அவள் கண்களை விட்டு அணை மீறியதில்லை…. இவளும் அதை கரை கடக்க விட்டதுமில்லை என்றும் சொல்லலாம்…

அழுது கரைந்திருந்தாலாவாது… அன்றைய தின கசடுகளை ஏனோ வெளியேற்றிருந்திருப்பாளோ என்னவோ… குத்தும் வார்த்தைகளை… கொல்லும் வார்த்தைகளைக் கேட்டால் கூட மனம் ரணமாகாமல்… தாங்கும் அளவிற்கு இரும்பு வேலியை தனக்குள் அமைத்துக் கொண்டிருந்தாளே அவள்….

ஆனால் கண்மணியின் கண்ணீர் அணை உடைக்க… கரை கடக்க… வார்த்தைகள் எல்லாம் தேவையில்லை தன் மௌனமே போதும் என்று நிரூபித்தான் பின்னொரு நாளில் ரிஷி….

3,634 views5 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

5 comentarios


Tee Kay
Tee Kay
12 jul 2020

Nice update.

Me gusta

Malar vizhi
Malar vizhi
05 jul 2020

Super. I like rishi

Me gusta

Saru S
Saru S
20 jun 2020

Lovely update pravee

Me gusta

DR.ANITHA selvan
DR.ANITHA selvan
13 jun 2020

Hi dear nice episode... Waiting for rishi and kanmani love😍😍😍😍 apart from the cinematic love ur love stories touches the heart..... Esp Anbe nee indri.... I don't know how many times I read that novel... Vijay_Deeksha, Bala_Keerthana... And now Ragav_Sandiya, Rishi_Kanmani.... Expecting more from you dear...... Pls update soon...

Me gusta

Sulo Novels
Sulo Novels
13 jun 2020

“சில விசயங்கள் மூச்சுக்காற்று மாதிரி விக்கி... நம்ம கூட இருக்கிற வரை நமக்கு அதோட முக்கியத்துவமே தெரியாது… ஆனால் அதோட சின்ன விலகலைக் கூட நம்மாள தாங்க முடியாது…. பட் நாம அதுக்கு முக்கியத்துவமே கொடுக்கிறது இல்லைடா... தேடல் தேவைனு ஓடிட்டே இருப்போம்…. இது உனக்கு மட்டும் இல்லை எனக்கும் சேர்த்துதான்டா”….


Ithellam varuni yala mattum than mudiyum. Sema lines

Me gusta
© 2020 by PraveenaNovels
bottom of page