ஹலோ ஃப்ரெண்ட்ஸ்
அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்…
படிச்சுட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க… கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ் போட்ட எல்லோருக்கும் நன்றிகள்
அடுத்த அத்தியாயத்தில் என்னவாக இருக்கும்... எனி கெஸ்... ஆராதனா திருமணம் நடக்குமா?... செழியன் வருவானா....?
நன்றி
உங்கள் பிரவீணா…
அத்தியாயம் 11
நாயகன்
நான் நாயகன் ஆனால்
என் நாயகி நீதானே
நான் ராவணன் ஆனால்
என் ஈழமே நீதானே
ஊ நாலும் ஊ சொல்லு
ஊஊ நாலும் ஊ சொல்லு
ஓகே கண்மணியே
ஆரா உன் பேரா
வேறேதோ ஊரா
என் நெஞ்சுக்குள்ளே
ஏதோ கோளாறா
நாயகி
நான் பெண்ணானது கல்யாணம் தேடவா
ஓ கண்ணாளன் வந்து பூமாலை போடவா
ஏன் அம்மாடியோ பெண் பார்க்கும் நாடகம்
யார் வந்தாலுமென்ன திரும்பாது ஞாபகம்
பூவிலங்கு தேவையில்லையே
இரவு 11.30 மணி… ஊர்ப்பக்கத்தைப் பொறுத்தவரை நடுஜாமம் என்பதற்கு உண்டான மரியாதையைக் கொடுக்கத்தவறாதவர்கள்… அதே போல் ஆராதனா வீட்டில் அனைவரும் நல்ல உறக்கத்தில் இருக்க… ஆராதனா மட்டுமே உறங்கவில்லை… இரண்டு முறை வெளியே வந்து அனைவரையும் பார்த்து விட்டு தான்… அவளைத் தவிர அனைவரும் தூங்கி விட்டார்கள் என்பதை உறுதி செய்தவளாக இப்போது படுக்கையில் உறங்காமல் படுத்திருந்தாள்…
புரண்டு புரண்டு படுத்திருந்தவள்… எப்போதடா 11.50 ஆகும் என அலைபேசியினையே பார்த்தபடி இருந்தவள்… ஒரு வழியாக 11.50ம் ஆகி இருக்க.. யாரும் அறியாமல் வெளியே வந்து கொல்லைப்புற கதவைச் சத்தம் வராமல் திறந்து மறுபடியும் மூடி… கிணற்றடிக்கும் வந்து சேர்ந்தாள்…
“ஹப்பா… வந்துட்டோம்…” தான் கொண்டு வந்திருந்த பொருட்களோடு… நிம்மதிப் பெருமூச்சு விட்டவளாக
“அந்த லைட் வேண்டாம்… இந்த லைட்டைப் போடுவோம்… நாம பின்பக்கம் வந்தது கூடத் தெரியாது…” என்று எப்போதும் போடும் விளக்கைப் போடாமல்… கிணற்றுக்கு அந்தப்பக்கம் உள்ள விளக்கைப் போட்டவள்… கையோடு கொண்டு வந்திருந்த ஷண்முகம் அன்று கொடுத்திருந்த வைர மோதிரப் பெட்டியையும்… கூடவே இன்று அவன் கொடுத்த அலைபேசியையும் கிணற்றின் கைப்பிடி சுவற்றின் மேல் வைத்தவள்…. தன் தாவணியை இடுப்பில் சரியாகச் சொருகியபடி… செல்வியிடம் பேசி இருந்தபடி தன் அலைபேசியில் செல்வியை அழைத்திருந்தாள் முதலில்…
ஆராதனா செல்விக்கு அழைத்த அதே நேரம் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த கார்த்திக்கின் முகத்தில் பட்டென்று மின்னலாக ஏதோ ஒரு வெளிச்சம்…
கொல்லைப்புறம் யாராவது போனால் கூட அங்கிருக்கும் விளக்கைப் போட்டால் கூட அவனது அறைக்கு விளக்கு வெளிச்சம் வராது… கிணற்றடியின் பின்னால் உள்ள விளக்கை போட்டால் தான் அவனது அறைக்கு வெளிச்சம் வரும்… அப்படி இருக்க… யார் இந்த விளக்கை போட்டிருப்பார்கள்… இந்தப் பக்க விளக்கை போட யாருக்கும் அவசியம் இல்லையே… அப்படியிருக்க… ”எப்படி இந்த வெளிச்சம்” கார்த்திக் உள்ளுணர்வு சொல்லிக் கொண்டிருந்தாலும்…. அவன் தூக்கம் கலையவில்லை… புரண்டு படுத்தவன் வெளிச்சம் படாமல் வெளிச்சம் வந்த திசைக்கு மறுபுறம் முகத்தை வைத்தபடி மீண்டும் தூங்க ஆரம்பித்திருக்க…
“ஏய் செல்வி… *********** ****** ****************”
யாரோ பேசிக் கொண்டிருந்த அந்த வாக்கியத்தில் ’செல்வி’ என்ற பெயர்தான் அவனுக்கு காதில் விழுந்ததே தவிர… மற்றபடி வேறு எந்த வார்த்தைகளும் அவன் காதில் விழவில்லை… ஏன் பேசிக் கொண்டிருந்த தங்கையின் குரல் கூட அடையாளம் தெரியவில்லை… ’செல்வி’ என்ற பெயர் மட்டுமே மீண்டும் மீண்டும் அவன் காதில் விழ… திடுக்கிட்டு எழுந்தவன்… வேகமாகச்சன்னல் வழியே பார்க்க… பின்புறம் விளக்கெரிந்து கொண்டிருந்தது…
“நைட் பாத்ரூம் போறதுனா கூட… இந்த லைட் போட மாட்டாங்களே.. வேற யாரும்???…திருடனா இருக்குமோ..” கார்த்திக்கின் உள்ளுணர்வு எச்சரிக்கை கொடுக்க… அடுத்த நொடியே தூக்கமெல்லாம் கலைந்து போனவனக… வேகமாக எழுந்து அறையை விட்டு வெளியே வந்து… கொல்லைப்பக்கம் வர… இப்போது அங்கு ஒரே நிசப்தம்… முதலில் விழுந்த பேச்சுக் குரல் கூட வரவில்லை…
அப்போது… கிணற்றின் சுவரில் அந்தப் பக்கம்… யாரோ உட்கார்ந்திருக்க… இப்போது உஷாராக மெல்ல அடி எடுத்து வைத்து நடந்தவன்… அருகில் செல்லச் செல்ல… அது தன் தங்கை ஆராதனா என்று உணர்ந்த அடுத்த நிமிடமே
“ஏய்… தனா… இங்க பண்ற..” சத்தம் போட்டு அழைக்க.. அவன் அழைத்த சத்தத்தில் அங்கு அவனை எதிர்பாராத பதற்றத்தில் காலை நீட்டி கிணற்றுச் சுவரில் அமர்ந்திருந்த ஆராதனா திடுக்கிட்டு எழ… பதட்டத்தில் அவள் எழும் போதே… அவள் கால்கள் பட்டு… எதிரில் அவள் முன்னால் வைத்திருந்த ஷண்முகம் கொடுத்த மோதிரப் பெட்டி கிணற்றுக்குள் விழ… ஐயோ என்று பதறியவளின் கைகளில் இருந்த அலைபேசியும் இப்போது தண்ணிருக்குள் விழுந்திருக்க… அதற்குள் கார்த்திக்கும் அவளருகில் வந்திருந்தான்…
---
மணி 12.30 ஐத் தாண்டியிருக்க… ஆராதனாவின் அழுகை இன்னமுமே ஓயவில்லை… மொத்தக் குடும்பமுமே அவளைக் கெஞ்சியும் கொஞ்சியும் ஆற்றியும் தேற்றியும் கொண்டிருக்க… இருந்தும், தன் தாயின் மடியில் படுத்திருந்தவளின் உடம்பின் நடுக்கத்தில் அவள் மெலிதான் விசும்பல் நன்றாகவேத் தெரிந்தது…
“எனக்கென்ன தெரியும்மா…. இந்த நேரத்துல ’தனா ’ அங்க இருப்பான்னு…. ஏதோ திருடன்னு நெனச்சேன்… எப்போதும் இந்தப்பக்கம் லைட் தானே எரியும்… இன்னைக்கு அந்தப்பக்க லைட் ஏன் எரியனும்… அதை எல்லாம் விட நான் வந்தா இவ ஏன் பதட்டப்படனும்… “செஞ்சது தப்புதான்னு அவளுக்கே தெரிஞ்சிருக்கு அதுனாலதான் அழுகிற… “ கார்த்திக் கவலை பாதி… கடுப்பு பாதி எனத் தங்கையைத் திட்டிக் கொண்டிருக்க
“டேய் அவளே இப்போதான் அழுகையை நிறுத்தி… படுத்திருக்கா… ஏண்டா நீ வேற அவளை அதட்ற… மறுபடி ஆரம்பிக்காத” நீலவேணி பேரனை அடக்கியவராக
”மேகலா… பூஜை ரூம்ல போய் சாமி முன்னால போய் நின்னு…. இந்தக் கல்யாணம் எந்தத் தடங்கலும் இல்லாமல் நல்லபடியா நடக்கனும்னு… காசை முடிஞ்சு வைம்மா… எல்லாம் நல்லதே நடக்கும்” என்க… மேகலாவும் தன் மாமியார் சொன்னவுடன் எழ முயற்சிக்க… சட்டென்று ஆராதனா அழுகையை நிறுத்தி தன் தாயைத் தடுத்தவளாக…
“அம்மா… அப்புறமா பண்ணிக்கலாம்…” தாயை விடாதவள் போல இறுக்கமாகக் கட்டிக் கொள்ள… மேகலாவும் விட்டு விட… நீலவேணியும் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை…
அனைவரும் ஒரு வித சமாதானத்திற்கு வந்தது போல் இருக்க… இப்போது…
”ஏம்மா மாப்பிள்ளை பேசச் சொன்னார்னா… எங்ககிட்ட சொல்லிட்டு பேச வேண்டியதுதானே…” ராஜசேகர் மகளிடம் நிதானமானக் குரலில் கேட்க
“உங்ககிட்ட சொன்னா என்ன சொல்வீங்க… அன்னைக்கு அவர் ரிங் கொடுத்தப்போ… போட விட்டிங்களா… தனியா நாங்க பேசிட்டு இருக்கும் போது அவர் என்கிட்ட நீட்டின ரிங்கை நான் தான் சபைல கொடுங்கன்னு உங்க எல்லாரையும் நம்பி சொன்னேன்… ஆனால் போட விட்டீங்களா…. பழக்கம் இல்லை… நிச்சயம் முடியும் வரை பொண்ணு கையை தொடக் கூடாதுன்னு ஏதேதோ சொல்லி ரிங் போட வேண்டாம்னு சொன்னவங்கதானே நீங்க எல்லோரும்… இப்ப மட்டும் பேச விட்ருவீங்களா என்ன… இதுல உங்ககிட்ட சொல்லிட்டு வேற பேசனுமா… முதன் முதலா அவர் வாங்கிக் கொடுத்த மோதிரமும் போச்சு… செல்போனும் அதுவுமா கிணத்துக்குள்ள விழுந்திருச்சு…” மீண்டும் பொங்க ஆரம்பித்தவளிடம் இப்போது தேம்பல் அதிகரித்திருக்க
இப்போது கார்த்திக் தங்கையின் அருகில் வந்து அமர்ந்தவன்
“சரிம்மா… இப்போ அழுது என்ன பிரயோசனம்… இப்போ என்ன… ஷண்முகம் மாப்பிள்ளைகிட்ட பேசு… பொறந்த நாள் வாழ்த்துதானே கேட்டாரு… சொல்லிட்டு படு”
அவ்வளவுதான் அவன் சொல்லி முடிக்கவில்லை… மூக்கை உறிஞ்சியவளாக எழுந்து அமர்ந்தவளாக… அடுத்த அழுகை மழையை ஆரம்பித்திருந்தாள் ஆராதனா…
“எப்படி அப்படி பேசுவேன் நான்… அவர் கொடுத்த போன்லதான் முதன் முதலா பேசச் சொன்னாரு… இப்போ எதுல நான் பேசுவேன்… அப்படியே பேசினாலும் என்ன ஆகப் போகுது… எனக்கென்னமோ செண்டிமெண்டா அவர் தப்பா எடுத்துகிட்டு ஃபீல் பண்ணுவாரோன்னு தோணுது…. திட்டிருவாரோன்னு தோணுது…. முதன் முதலா பேசும் போதே இப்படி நெகட்டிவா திங்கிங் வருது… இல்லை… நான் அவர்கிட்ட பேச மாட்டேன்… பேசவே மாட்டேன்…” அரை மணி நேரமாக ஆராதனா இப்படித்தான் அடம்பிடித்திருக்க…
“சரி நானாச்சும் பேசுறேன் கண்ணு” ராஜசேகர் மகளிடம் சொல்ல
“வேண்டாம்… நானும் பேச மாட்டேன்… நீங்களும் யாரும் பேசக் கூடாது…” ஆராதனா பிடிவாதமாகச் சொல்ல..
“ஏங்க அவ பிடிவாதம் தெரியும் தானே… விடுங்க….” மேகலா முடித்திருக்க….
கார்த்திக் தங்கையின் கண்ணீரைத் துடைத்தவனாக….
“ரிங் பாக்ஸை மட்டும் திறந்து வைக்காமல் மூடி வச்சிருந்திருந்த… நாளைக்கே கிணத்தை தூர் வாறிருப்பேன்… எப்படியும் எடுத்துக் கொடுத்திருப்பேன்… ஆனால் பாக்ஸ் ஓபன்ல இருந்ததுனால ரிங் தனியாத்தான் விழுந்திருக்கும்… ஹ்ம்ம்ம்ம்… கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்…”
இப்போது ஆராதனாவின் அழுகை அதிகரித்திருக்க….
“சரி அழாத…. இந்த பாரு தனா… அந்த வைர மோதிரம்… செல்போனு இதை நினச்சு… அதோட விலையை எல்லாம் நினச்சு அழுதுட்டு இருக்காத… நாளைக்கே அண்ணன் அதே மாதிரி வாங்கிட்டு வந்துறேன்… போன் மாடல் என்னனு சொல்லு… மோதிரம் போட்டோ என்கிட்ட இருக்கு… மாப்பிள்ளைக்குத் எதுவும் தெரியாமல் நான் பார்த்துக்கிறேன்… அதுக்கப்புறம் நீ பேசு… சிம் நம்பர் அதுகூட அவர் கொடுத்தது என்னனு அவர்கிட்ட எப்படியாவது கேட்டு வாங்கித் தர்றேன்… சரியா… அதுவரை அவர் திட்டாமல் நான் பார்த்துக்கிறேன்… உன் நம்பர் இன்னும் அவருக்குத் தெரியாதுதானே…”
“ஆமாம்” என தலையாட்டிய ஆராதனா கண்ணில் அழுகை குறைந்து அண்ணனை நம்ப முடியாத பாவனையோடு பார்த்தபடி இருந்தவள் பின்…
”உடனே கூட வேண்டாம்… ரெண்டு நாள் இல்ல மூணு நாள்னா கூடப் பரவாயில்லை… ஆனா வாங்கித் தருவதானே… நான் அந்த நம்பர்ல இருந்துதான் அவர்கிட்ட பேசனும்… அதுவரை அவர்கிட்ட பேச மாட்டேன்…” விசும்பல் போயிருந்தது என்றாலும்… மெல்லிய குரலில் ஆராதனா சொல்ல…
“அதென்ன ரெண்டு நாள் மூணு நாள் தவணை மேடம்… அதுக்கு மேல போனா என்ன பண்ணுவீங்க மேடம்… லேட்டா ஆனா வாங்கிக்க மாட்டீங்களா… உங்க அவர்கிட்ட பேச மாட்டீங்களா…” கார்த்திக்கும் தன் தங்கையை ஓட்ட
இப்போது மொத்த குடும்பமும் சிரித்திருக்க வெட்கப்பட வேண்டியவளோ…. ஏதும் பேசாமல் இப்போது தாயின் மடியில் மீண்டும் தலை வைத்திருந்தாள் …
”ஏன் தனா… ஆனால் நீ இவ்ளோ அஜாக்கிரதையா இருக்க மாட்டியே… ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து செய்வியே… இன்னைக்கு என்னாச்சு… ஒரு குண்டூசியைக் கூட வெளில விடாமல் பத்திரம் பண்ணுவ… “ மேகலா அவள் உச்சந்தலையை ஆறுதலாகத் தடவியபடியே கேட்க… ஆராதனா கண்களை மூடியிருந்தாள்…
அவள் அமைதியை உணர்ந்தவகள்… அதற்கு மேல் பேச்சை வளர்க்கவில்லை…
“சரி தூங்கப் போகலாமா… மேகலா, நீ புள்ள கூட இங்கயே பாயை விரிச்சுப் படுத்துரு… அது பயந்து போயிருக்கு… கார்த்தி, ராஜா நீங்க ரெண்டு பேரும் போய்ப்படுங்க… கவலைப்பட்றதுக்கு ஒண்ணும் இல்லை… அந்தப் பொருள்ளாம் போனது… கண்ணேறு போன மாதிரி… இனி எல்லாம் நல்லதே நடக்கும் பாருங்க” நீலவேணி சொன்னபோதே… அந்த நள்ளிரவில் மேகலாவின் அலைபேசி அடித்திருக்க… அதுவும் பூர்ணியிடமிருந்து வந்திருக்க… மொத்த குடும்பத்தின் பார்வையும் மேகலாவின் அலைபேசியில் குவிந்திருந்தது… அதே நேரம்… முகிலனும் அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டியிருந்தான்….
---
”தை மாதம் ஆரம்பிச்சதுலருந்தே என் குடும்பத்துக்கு நேரம் சரியில்லையே… அப்போ ஆரம்பிச்சது… ” நல்ல நேரம் ஆரம்பித்து விட்டது சற்று முன் சொன்ன நீலவேணி பாட்டியேதான் இப்போது பிதற்றிக் கொண்டிருந்தது….
“அடேய் கார்த்திக்… உன்கிட்ட ஆரம்பிச்சு… என் மகன் அப்புறம்… இப்போ என் பேரன்கிட்ட வந்து நிக்குதே” மூக்கைச் சிந்தி …. உரத்த குரலில் நீலவேணி அழ ஆரம்பித்திருந்தாள்…
யார் யாரைச் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருக்க…மேகலா மட்டும் தன் மாமியார் மாமானாரைத் தேற்றிக் கொண்டிருக்க… இராஜசேகர் ஒரு புறம் கல்லாக அமர்ந்திருந்தார்…. செழியனின் விபத்தைக் கேள்விப்பட்டு… பூர்ணிமா ஒருபுறம்… முகிலன் ஒருபுறம் விசயத்தை அங்கு சொல்லியிருந்தனர்…
“ஏண்டா செழியனுக்கு பெருசாவாடா அடிபட்ருக்கு… பேச்சு மூச்சுலாம் இல்லைனு பூர்ணி சொல்லுதேடா… ” முகிலனிடம் கேட்ட போதே அவர் குரல் கம்மியிருக்க… கார்த்திக் இப்போது…
“அதெல்லாம் ஒண்ணும் ஆகி இருக்காதுப்பா… அடிபட்டதுல கான்ஷியஸ் போயிருக்கும்…. நீங்க உடம்பை அலட்டிக்காதிங்க… நீங்க கவலைப்படாதீங்க… நீங்கலே இப்போதான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்திருக்கீங்க…”
கார்த்திக் தன் தந்தையைத் தேற்ற… முகிலன் அங்கிருந்தவர்களிடம் நண்பனின் விபத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாலும்… அவனின் பார்வை… கவனம் முழுக்க ஆராதனாவிடம் மட்டுமே இருந்தது…
அவள் அவளின் அப்பத்தாவை தேற்றிக் கொண்டிருந்தாளே தவிர… அவள் முகத்தில் கொஞ்சம் கூட சோகமோ.. கவலையோ இல்லை… இவனிடம் ஒரு வார்த்தை கூட செழியனைப் பற்றி விசாரிக்கவில்லை… யோசித்துக் கொண்டிருந்த போதே…
ஆராதனா இப்போது பூஜை அறைக்குள் நுழைந்திருந்தாள்… அடுத்த சில நிமிடங்களிலேயே வெளியே வந்தவள்…
“பாட்டி… இங்க பாருங்க… உங்க பேரனுக்கு ஒண்ணும் ஆகாது… அவர் வாழ்க்கைல அவர் பார்க்கிறதுக்கு இன்னும் எவ்வளவோ இருக்கு… அனுபவிக்கிறதுக்கு இருக்கு… கவலைப்படாதீங்க… அவர் உயிரோட இருக்கனும்னு…. நான் நல்லா வேண்டிகிட்டு… நம்ம குலசாமிக்கு ரூபாய் முடிஞ்சு வச்சிருக்கேன் பாருங்க… “ தன் பாட்டியிடம் சொல்லிக் கொண்டிருந்த ஆராதனாவைப் பார்த்த முகிலனின் முகத்தில் கவலையையும் மீறி மெல்லிய மகிழ்ச்சி… நம்பிக்கை வந்திருக்க… கார்த்திக்கிடம் பேச ஆரம்பித்தான்
“கார்த்தியண்ணா… செழியனுக்கு ரொம்ப அடிபட்ருக்காம்… 24 மணி நேரம் கழிச்சுதான் எதுவுமே சொல்ல முடியும்னு சொல்லிருக்காங்க… பூர்ணி அத்தைகிட்ட கூட யாரும் பெருசா சொல்லல போல… அவங்க பயந்துருவாங்கன்னு அவங்க கிட்ட பெருசா அடி எல்லாம் இல்லைனும் சொல்லியிருக்காங்க… திலகா அத்தையும்…. முத்துராம் மாமாவும் அங்க போக கெளம்பிட்டு இருக்காங்க…”
சொல்லி முடித்த முகிலனின் குரல் மொத்தமாக உடைந்திருக்க… கார்த்திக் இப்போது…
“அதெல்லாம் அவனுக்கு ஒண்ணும் ஆகாது… அவங்கள்ளாம் ரொம்ப நல்லவங்க ஆச்சே… அவங்களுக்கு ஒண்ணும் ஆகாது…” கார்த்திக் விரக்தியோடு சொல்ல…
இந்தச் சூழ்நிலையிலும் இப்படி பேச வேண்டுமா இவன் என்ற வேதனையில் முகிலன் அதிர்ச்சியோடு கார்த்திக்கைப் பார்க்க… முகிலனின் முகத்தைப் பார்த்த கார்த்திக்
“டேய் நான் கோபத்துல சொல்லல…”
“என்னதான் உன் ஃப்ரெண்டு மேல கோபம் இருந்தாலும்… அவனுக்கு ஒண்ணும் ஆகக் கூடாதுனுதான் நான் வேண்டிட்டு இருக்கேன்”
முகிலன் இப்போது ஆராதனாவைப் பார்த்து பின் கார்த்திக்கிடம் தயக்கத்தோடு …
“இந்த நிலைமைல ’தனா’ மேரேஜ் ஏற்பாடெல்லாம் பண்ணனுமா… கொஞ்சம் தள்ளிப் போடலாம்ல… அப்பத்தா தாத்தாக்கு மனசு தாங்குமா… பேரன் அப்படி இருக்க பேத்திக்கு விசேஷம்னு” சொல்லி முடிக்கவில்லை… கார்த்திக் இப்போது எகிறி இருந்தான்…. சற்று முன் முகிலனுக்கு ஆறுதல் சொன்ன கார்த்திக்கின் முகத்தில் இப்போது அப்படி ஒரு ஆவேசம்
“என்ன… என்ன… உன் ஃப்ரெண்டுக்கு சப்போர்ட்டா என்ன… இங்க பாரு உன் ஃப்ரெண்டு நல்லாகிருவான்… அவ்ளோதான்… அவனுக்காக கவலைபட்றோம்தான்…. அதுக்காக அவனோட உறவு கொண்டாடப் போறதுல்ல… “
“என்ன என்ன சொன்ன… என் தங்கச்சி கல்யாண ஏற்பாடை நான் ஏன் நிறுத்தனும்… உன் ஃப்ரென்ய் அவன் அக்கா கல்யாணத்தை நிறுத்தினானா… என்னையை நெனச்சுப் பார்த்தானா… இல்லை எங்க அப்பாவை… அவனுக்கு தாய்மாமா தானே… நெனச்சுப் பார்த்தானா… இதை எல்லாம் விட… உனக்கு ஒண்ணு தெரியுமா… நான் இன்னேரம்” எனும் போதே… ஆராதனா வேகமாக இடையில் வந்தவளாக…
“அண்ணன்… ப்ச்ச்… அமைதியா இரு…. ஏன் இவ்ளோ கோபப்பட்ற… “ ஆராதனா தன் அண்ணனை முறைத்தவளாக… அடக்கியிருக்க…. கார்த்திக்கும் சூழ்நிலை புரிந்தவனாக… தன் முகத்தை அழுந்த துடைத்தவனாக…
“தனா… நான் உன் அண்ணன் சொல்றேன்… உன் மேரேஜ் இதுக்காகவெல்லாம் யாரோ ஒரு செழியனுக்காகவெல்லாம்… ஏன் அவன் செத்தா கூட எனக்கு கவலை இல்லை… நான் நிப்பாட்ட மாட்டேன்மா… கண்டிப்பா நடக்கும்… நடக்கனும்… யாராச்சும் ஏதாச்சும் சொன்னீங்க… எங் தங்கச்சி கல்யாண விசயத்துல… நான் மனுஷனா இருக்க மாட்டேன்… தனா இது உனக்கும் தான் “
ஆராதனா கலவரமான முகத்தோடு தன் அண்ணனைப் பார்த்துக் கொண்டிருக்க… முகிலன் ஆராதனாவிடம் திரும்பியவனாக
“தனா… நீ சொல்லும்மா… செழியன் இந்த நிலைமைல இருக்கும் போது நீ எப்படிம்மா… இந்த மேரேஜ் வேண்டாம்னு சொல்லு” முகிலனும் தன் தைரியத்தை எல்லாம் திரட்டி ஆராதனாவிடம் பேச ஆரம்பிக்கும் போதே…. இராஜசேகர் முகிலன் பேசுவதை தடுத்து நிறுத்தினார்
’முகிலா… உன் ஃப்ரெண்டப் பற்றி… அவன் ஆக்ஸிடெண்ட் பற்றி சொல்லி வருத்தப்பட்ட… அது எங்களுக்கும் வருத்தம் தான்… இல்லைனு சொல்லல… ஆனால் நாங்க இதை விட வருத்தமெல்லாம் கடந்து வந்திருக்கோம்… அதெல்லாம் உனக்குத் தெரியுமா… போப்பா… ஆனா தனா மேரேஜப் பற்றியெல்லாம் நீ பேசக் கூடாது… இதுக்கு மேல அதைப் பற்றி ஒரு வார்த்தை பேசுன…” ராஜசேகர் கண்டிப்பான தோரணையோடு சொல்ல… முகிலனுக்கு அப்போது அந்த இடத்தில் ஆராதனாவோடு பேச முடியாத இக்கட்டான நிலை… அந்த வருத்தத்தில் மெதுவாக அங்கிருந்து கவலையோடு வெளியே வர… சரியாக அதேநேரம் பூஜாவும் அவனுக்கு அழைப்பு விடுக்க…
வேக வேகமாக எடுத்தான் முகிலன்
“பூஜா செழியனுக்கு நினைவு திரும்பிருச்சா… ப்ளீஸ் நல்லா இருக்கான்னு சொல்லு… கண்ணு முழிச்சுட்டான்னு சொல்லு பூஜா…” முகிலன் அழுதிருக்க… பூஜாவின் குரலும் தயங்கித்தான் வந்தது…
”இல்ல முகிலா… இன்னும் நிலைமை சீரியஸாத்தான் போயிட்டு இருக்கு… இவன் ஏன் இன்னைக்கு கெளம்புனான்… என்கிட்ட கூட நேரில சொல்லாமல்… எனக்கு கஷ்டமா இருக்கு அவனை இப்படி பார்க்கிறதுக்கு… இன்னும் கான்ஷியஸே வரலைடா… ஆன்டியும் அங்கிளும் கூட போன்ல பேசினாங்க… அவங்க பேசிக் கூட அவன் உடம்பு நிலைல இம்ப்ரூவ்மெண்ட் வரலை.. அனுதான் செழியன் கூட பேசிட்டே இருக்கா… அவனுக்கு அவளை ரொம்பப் பிடிக்குமாமே” கேட்ட போதே முகிலனுக்குள் ஒன்று தோன்ற…
வேகமாக மீண்டும் இராஜசேகர் வீட்டுக்குள் சென்றான்… அங்கு அனைவரும் இருக்க…
“என்ன முகிலா… என்னாச்சு… போன்ல யாரு… ” நீலவேணி பதறியபடி கேட்க…
“அப்பத்தா… நீங்க கொஞ்சம் செழியன் கிட்ட பேசுங்களேன்… அவனுக்கு உங்க குரல் கேட்டா கான்ஷியஸ் வருதான்னு பார்க்கலாம்…” என்றவன்
“நீ… நீங்க மட்டும் இல்லை… வீட்ல எல்லோருமே…. கண்ணாத்தாள் பாட்டி கூட பேசட்டும்” ஆராதனாவை நேரடியாகச் சொல்லாமல் முகிலன் அனைவரையும் பேசச் சொல்ல…
கார்த்திக்கின் மனமோ சில மணி நேரங்களுக்கு முன் அவன் உறக்கத்திலும் அவன் காதில் விழுந்த ’செல்வி’ என்ற பெயரில் ஆழ்ந்திருக்க… அந்த எண்ணம் தோன்றிய காரணத்தால் கார்த்திக்குமே முகிலனைத் தடுக்கவில்லை…
ஆனால் ஆராதனா வேகமாக…
“முகிலண்ணா… நான் ஒண்ணு சொல்லட்டுமா… தப்பா எடுத்துகாதீங்க… உங்க ஃப்ரெண்டுக்கு எங்க குடும்பம்னா வேப்பங்காயா கசக்கும்… ஒருவேளை நாங்க பேசி… எங்க குரல் கேட்டு இன்னும் அவர் நிலை மோசமானாலும் ஆகுமே தவிர… நீங்க நினைக்கிற மாதிரி முன்னேற்றம்லாம் ஆகாது… புரிஞ்சுக்கங்க…”
“ஆமாமா என் பேத்தி சொல்றதுதான் சரி முகிலா… வேண்டாம் வேண்டாம்… அவனுக்கும் எங்க மேல கோபம் தானே… கடைசியா சண்டை தானே போட்டுட்டு போனான்” நீலவேணி சொல்ல… கார்த்திக்…. மேகலா… ஏன் இராஜ சேகர் கூட ஆராதனா சொன்னதில் உள்ள நிதர்சனம் உணர்ந்து அதன் காரணமாக பயந்து பேச மறுத்துவிட…
முகிலன் மனம் பரிதவித்தது….
“தனா… ப்ளீஸ்… அட்லீஸ்ட் நீயாவது பேசு தனா… அவனுக்கு உங்க எல்லாரையும் ரொம்ப பிடிக்கும்” அவன் குரல் நண்பனுக்காக தவிக்க ஆரம்பித்திருக்க… ஆராதனா அப்போதும் மறுத்து விட்டாள்… முகிலனாலும் அவளை பேசச் சொல்லி… கட்டாயப் படுத்த முடியவில்லை…
ஆராதனாவின் கவனம் எல்லாம் இப்போது தன் தந்தையிடக் மாறி இருந்தது….
“அம்மா… அப்பாவைப் பாருங்க… முகமெல்லா சரியா இல்லை…அப்பாக்கு டையர்டா ஆகப் போகுது…. ஏற்கனவே மாத்திரை போட்ட தூக்கத்தில இருந்தவர் நான் பண்ணின கலாட்டால… எழுந்துட்டாரு… அதுவே எனக்கு பயமா இருக்கு… படுக்கச் சொல்லுங்கம்மா”
“அப்பத்தா நீங்களும் படுங்க… காலையில நல்ல சேதிதான் வரும்… முகிலண்ணா நீங்களும் போய்ப் படுங்க… இந்தியா டாக்டர்ஸை விட அமெரிக்கா டாக்டர்ஸ்லாம் அறிவாளிங்க… அதெல்லாம் உங்க ஃப்ரெண்டைக் காப்பாத்திருவாங்க… பாருங்க உங்க ஃப்ரெண்ட் நூறு ஆயுசோட இருப்பாரு”
முகிலன் இப்போது என்ன நினைத்தானோ… அதன் பிறகு அவளிடம் கெஞ்ச வில்லை… மாறாக
“நீ சொல்றேல்ல அவன் நூறு வருசம் இருப்பான்னு இது போதும்மா… இது போதும்… கண்டிப்பா நல்லா வருவான்… அவன் நல்லபடியா வந்தா அது போதும்மா எனக்கு” என்ற முகிலன் வேறெதுவும் பேசாமல் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்…
ஒரு பக்கம் நண்பன்… அவன் நிலை… இன்னொரு பக்கம்… ஆராதனா அவள் திருமண ஏற்பாடு…
இப்போதைக்கு போய் ஆராதனாவிடம் என் நண்பன் உன் மேல் உயிரை வைத்திருப்பவன்… உனக்காகத்தான் உன்னைப் பார்க்கத்தான் ஓடி வந்தான்… அதனால்தான் இப்போது உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றான் என்று சொன்னால்… ஆராதனா என்ன சொல்லுவாள்?… நம்புவாளா????…
செழியன் வந்து அவனே அவன் வாய் திறந்து சொன்னால் ஒழிய அதுவரை யாரும் நம்ப மாட்டார்களே… அப்படி இருக்க எப்படி இந்த திருமணத்தை நிறுத்துவது…
ஆனால் தன் நண்பன் செழியனுக்காக இவன் இந்த திருமணத்தை நிறுத்தியே ஆகவேண்டும்… செழியன் அவன் காதலை அன்று ஆராதனாவிடம் சொல்லாமல் நிறுத்தியவன் இவன் தானே… இவனேதான் இன்று செழியனின் ஆராதனா மீதான கொண்டிருந்த காதலையும் சொல்ல வேண்டும்… இந்தத் திருமணத்தையும் நிறுத்த வேண்டும்…
மனதில் உறுதி தோன்றிய போதே
செழியனின் காதலைச் சொல்லலாம்…. ஒருவேளை… ஆனால் அதன் செழியனுக்கு ஏதாவது ஆகிவிட்டால்… அதன் பின் என்ன சொல்லி என்ன பிரயோஜனம்…
“ஒரு பெண்ணின் வாழ்க்கையை அடமானம் வைப்பது போல் ஆகிவிடுமே…”
“இல்ல… இல்ல… என் ஃப்ரெண்டுக்கு அப்டிலாம் ஒண்ணும் ஆகாது…. அவன் நல்லா இருப்பான்…”
“அவன் நல்லா ஆகனும் முதல்ல… அதுக்கப்புறம் ஆராதனாகிட்ட சொல்லலாமா… இல்லை..”
ஐயோ…. தலையில் பிரளயமே வெடித்துக் கொண்டிருந்தது முகிலனுக்கு…
“செழியா… நீ சொல்வியே என் ’ஆரா’… எனக்காக பிறந்தவன்னு… ஆனால் அவகிட்ட அப்படி ஒரு சின்ன சலனம் கூட இல்லையேடா…. நான் என்னடா பண்றது இப்போ… இப்படி என்னை இக்கட்ல… உன் வாழ்க்கையை என் கைல விட்டுட்டு… நீ கண்ண மூடி படுத்துட்டியேடா…” முகிலன் வேதனையில் பிதற்ற ஆரம்பித்திருந்தான்…
“நான் உன் காதலை எப்படிடா காப்பாத்துவேன்”
அந்த விபரமறியாத இரண்டுங்கிட்டானான 13 வயதில் காதல்வயப்பட்ட நண்பனை அதிலிருந்து மாற்ற…
“இதெல்லாம் இன்ஃபேக்சுவேஷன்டா…. அதாவது மணல் வீடு கட்ற மாதிரிடா… சீக்கிரமா கலஞ்சுரும்….” முகிலன் அறிவுரை சொல்ல
“பரவாயில்ல மணல் வீடாவே இருந்துட்டுப் போகட்டும்… அதை எப்படி காப்பாத்தி கொண்டு வர்றதுன்னு எனக்குத் தெரியும்” பிடிவாதமான குரலில் சொன்ன அன்றைய நண்பனின் குரல் ஞாபகத்துக்கு வந்திருக்க…
“நீ இதுநாள் வரை அதைக் காப்பாத்தி கொண்டுவந்ததான்… எனக்குத்தான் அதை எப்படிக் காப்பாத்தி… உன் கைல மறுபடியும் ஒப்படைக்கப் போறதுன்னு தெரியலடா… கடைசியில உன் காதல் மணல்ல கட்டின கோட்டை மாதிரியே இருக்கிற இடம் தெரியாமல் போகப் போகுதாடா…”
ஏதேதோ நினைத்து முகிலன் ஒரு புறம் வருத்ததோடு இருக்க…. ஆராதனாவின் வீட்டிலும் அதே நிலைமைதான்… வருத்ததோடுதான் இருந்தனர்.. ஆனால் அது எல்லாமே திலகாவின் அலைபேசி அழைப்பு வராதவரைதான்
---
உறங்க ஆயத்தமாக அவரவர் அறைக்கு போக முடிவு செய்து கொண்டிருந்த போதே…
ராஜசேகர் அலைபேசி அடித்துக் கொண்டே இருக்க… ராஜசேகர் யார் என்று தெரிந்தே… எடுக்காமல் இருக்க…
”அப்பா… அத்தை போன் அடிச்சுட்டே இருக்காங்க… பேசுங்கப்பா…” ஆராதனா தன் அத்தையின் அழைப்பைக் காட்டி தன் தந்தையிடம் பேச…
மேகலாவும் தன் கணவனிடம் பேசினாள்….
“பேசுங்க… திலகாக்கு ஆறுதல் சொல்லுங்க… கோபம் சண்டைலாம் காட்றதுக்கு இதுவா நேரம்”
“பாவம்பா அத்தை… அவங்களுக்கு நீங்க… அப்பத்தா பேசுனா ஆறுதலா இருக்கும்னு நினைப்பாங்க போல… அவங்களுக்கும் கொஞ்சம் நம்பிக்கை கிடைக்கும்” ஆராதனா தந்தையிடம் அவர் அலைபேசியைக் கொடுத்த போதே… அலைபேசியை கோபத்தோடு வாங்கியவர்… அதை ஸ்விட்ச் ஆஃப் செய்தவராக…. இராஜசேகர் தன் மனைவியையேப் பார்த்தபடி இருந்தவர்…. பின் தன் அன்னையைப் பார்த்தவர்….
”என் பொண்டாட்டிக்கு அன்னைக்கு யார்மா ஆறுதலா இருந்தாங்க… புருசன் மகன் ரெண்டு பேருமே உயிருக்குப் போராடுனாங்களே அப்போ யார் அவளுக்கு நம்பிக்கை கொடுத்தாங்க… ஒத்த ஆளா என் மகனை யாருக்கும் தெரியாமல்… வீட்லயே வச்சு காப்பாத்துனாளே… ஒரு பக்கம் புருசன் நான் ஹாஸ்பிட்டல்ல… இன்னொரு பக்கம் இதோ இன்னைக்கு முழுமனுசனா உயிரோட நிற்கிறானே அவ மகன்… அன்னைக்கு என்ன பண்ணி வச்சான்… விசத்தைக் குடிச்சுட்டு வந்து கிடந்தானே…. என் பொண்டாட்டி என் மகனை காப்பாத்தலையா… எமண்ட்ட இருந்து காப்பாத்தலையா… நான் கூட அவளுக்கு துணையா நிக்கலையே…”
கார்த்திக் குற்ற உணர்வில் தலை குனிந்து நிற்க… ஆராதனாவின் கண்களிலோ கண்ணிர் கரை புரண்டிருக்க… வேகமாக உதட்டைக் கடித்து தன் அழுகையை அடக்க நினைத்தாள் தான் ஆனால் முடியவில்லை அன்றைய இரவின் நினைவில்…
”நான் யாருக்கும் ஆறுதல் சொல்லலாம் முடியாதும்மா… அவன் அவ மகன்… அவங்க கவலை அது…” என்றபடியே ராஜசேகர் எழுந்து போக…
“அத்தை நான் பேசினா அவர் கோபப்படுவாரு… நீங்களாவது திலகாகிட்ட பேசுங்க அத்தை… “ மேகலா தன் மாமியாரிடம் சொல்ல ….
”என் மகன் சொல்றதுல என்ன தப்பு இருக்கு மேகலா… கார்த்திக் அன்னைக்கு இருந்த நிலையில… உயிரோட வந்திருப்பான்னு நெனச்சுப் பார்த்தோமா… நீ ஒரு பக்கம் நான் ஒரு பக்கம்னு பெத்த மனசு பரிதவிச்சு கிடந்தோமே… அந்தப் பாவம்லாம் சும்மா விடுமா… ஆனால் என் பேரன் செழியன்ல இப்போ எல்லா பாவத்தையும் தாங்கிட்டு கிடக்கறான்” மகளிடம் பேசாமல் பேரனை நினைத்து அழுது கொண்டிருக்க… மேகலா ராஜசேகரிடம் சென்று எவ்வளோ எடுத்துச் சொல்லியும் அவர் பேச வில்லை…
மேகலா செழியனை நினைத்துப் பார்த்தார்…
“அவ்வளவாக இவளிடம் பேச மாட்டான்… இவளாகப் பேசினால்… எங்கோ பார்த்தபடி பதில் கூறிவிட்டுச் சென்றுவிடுவான்…” இதுதான் செழியனுக்கும் மேகலாவுக்கும் உள்ள உறவு…
“நீங்க என்ன என் சொந்த அத்தையா… எங்க மாமாவோட பொண்டாட்டி… அவ்ளோதான் சரியா… சும்மா என்கிட்டலாம் வந்து மத்தவங்ககிட்டலாம் போட்ற மாதிரி ஆர்டர் போடாதீங்க…” ஒருநாள் அவன் இப்படி பேசியவுடன் மேகலாவும் பெரிதாக அவனிடம் பேச்சு வைத்துக் கொண்டதில்லை… பெரியவனாகி விட்டபின் சுத்தமாக பேச்சு வார்த்தை இல்லை என்றே சொல்லலாம்…
மேகலா படுத்தபடி யோசித்துக் கொண்டிருக்க… அந்தப் படுக்கையின் இன்னொரு புறமோ… இராஜசேகர் மனம் அவர் மருமகனை நினைத்து துடித்துக் கொண்டிருந்தது…..
செழியன்… பிறந்ததில் இருந்தே அவனைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்…
அவனின் அறிவு… தெளிவான குணம்… மற்றவர்களின் குணம் அறிந்து இயல்பறிந்து நடக்கும் பாங்கு… அப்பா அம்மா அக்கா என குடும்பம் மட்டுமல்லாது மாமா என்றால் அவன் கொண்டிருக்கும் மரியாதை… பாசம்… விளையாட்டு… படிப்பு… மட்டுமல்லாது… மற்ற திறன்களிலும் அவன் சிறப்பு… அதுமட்டுமல்லாது இப்போது தொழில்… என அவனை கவனித்துக் கொண்டிருந்தவர்தான்…
“கார்த்திக்க்கும் கமலிக்கும் பெரியவர்கள் பேசி வைத்தது”
ஆனால் இராஜசேகருக்கு ஒரு எண்ணம்… செழியன் தன் மருமகனாக வரவேண்டுமென்று…
அவருக்கு ஒரு எண்ணம் இருந்தது…. எண்ணம் என்பதை விட ஆசை… ஒரு கட்டத்தில் செழியன் படிப்பு தொழில் வசதி என மேலே செல்லச் செல்ல… அவனது வளர்ச்சியைக் கண்டு… அவரது எண்ணத்தில்… ஆசையில் ஒரு வித தயக்கமும் வந்திருந்தது…. தாழ்வு மனப்பான்மை என்று கூடச் சொல்லலாம்
”செழியன்… தன் மகளைத் திருமணம் செய்ய சம்மதிப்பானா” சஞ்சலம் இருந்தாலும்
“நான் கேட்டு நான் தூக்கி வளர்த்த என் மருமகன் மாட்டேனென்று சொல்லி விடுவானா…” நம்பிக்கை இருந்தது…
அத்தனையும்… கார்த்திக் விசயத்தில் அவன் நடந்து கொண்ட முறையில்… கமலியின் திருமணத்தை நடத்திய விதத்தில்… அதிலும் தன் மனைவியை நேருக்கு நேராக எதிர்த்துப் பேசியதில் மொத்தமாக நொறுங்கி இருக்க… இன்று இப்படி ஒரு செய்தி… என்னதான் இன்று தன் மருமகன் மேல் கோபம் இருந்தாலும்… தன் வீட்டுக்கு மருமகனாக வரப்போவதில்லை என்று தெரிந்த போதிலும்… செழியனுக்காக… அது மட்டுமல்லாமல் தன் தங்கைக்காகவும் துடிக்க ஆரம்பித்திருந்தார்….
---
மணி இரண்டைத் தாண்டி இருக்க
கார்த்திக் தன் அறைக்கு இன்னும் உறங்கப் போகவில்லை…. முற்றத்திலேயே… நிலா வெளிச்சத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான்… அவன் நினைவுகளிலும்… செழியன் மட்டுமே…
“கார்த்தி… நான் சொல்றதைக் கேளு… படிக்காம விட்றாத… நான் உனக்குச் சொல்லித் தர்றேன்… நானும் நீயும் ஒண்ணா ஒரே க்ளாஸ்ல படிக்கிறதுல என்ன அவமானம்… வேணும்னா நான் நீ இருக்கிற செக்ஷன் இல்லாம வேற செக்ஷன் கேட்டுப் போறேன்…” செழியன் அவனிடம் கெஞ்சியது இன்றும் அவன் முகத்தில் நிழலாடியது…
”அம்மா… நான் இந்த வருசம் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்… செழியனும் நானும் ஒரே க்ளாஸா… எனக்கு அசிங்கமா இருக்குமா… எல்லோரும் அவனைச் சும்மாவே பாராட்டுவாங்க… என்னைக் கம்பேர் பண்ணுவாங்க… என்னால முடியாதும்மா… “
“நரேனும் நல்லா படிக்கிறவன் தானே… அவன் கூட நீ படிக்கல… அவன் உன் ஃப்ரெண்டுதானடா…” மேகலா எடுத்துச் சொல்ல…
“ஆனால் அவனுக்கும் எனக்கும் ஒரே வயசுதானே… “ வேகமாக கார்த்திக் அதற்கு பதில் கொடுக்க… மேகலாவும் எப்படி எப்படியோ பேசி அவனைப் பள்ளிக்கு அனுப்ப முயற்சித்தாள்…
“போன வருசமும் ஃபெயில் ஆகி உன்னை விட சின்னப்பசங்க கூடத்தானே படிச்ச… அப்போ தெரியலையா இந்த அசிங்கம்”
“ஆனால் அவங்களாம் செழியன் இல்லையே… நான் அவன் கூட படிக்க மாட்டேன்… ” இப்படி வட்டத்துக்குள் சதுரமும்… சதுரத்துக்குள் வட்டமுமாக கார்த்திக் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்க…
”நீங்கதான் அப்பாகிட்ட சொல்லனும்… ஆனால் செழியனைப் பற்றியெல்லாம் சொல்லாமல் என் படிப்பை நிறுத்தனும்” கார்த்திக் கறாராக முடித்திருக்க..
ஒருகட்டத்தில் வேறு வழியின்றி மேகலாவே குடும்பத்தினருடன் பேசி மகனின் பள்ளிப் படிப்பை நிறுத்தியிருந்தார்…
அதன்பிறகு செழியனுடன் நேரடியாக போட்டி இல்லை… சண்டை இல்லை… அன்றையை கமலி விசயத்தில் நடந்த கலவரத்துக்கு முன்வரை… ஆனாலும் மனதுக்குள் செழியனை விட தான் தாழ்ந்து போய் விடக் கூடாது என்ற எண்ணம் எப்போதும் கார்த்திக்கு இருக்கும்… அதே நேரம்… மாமன் மச்சான்… என்ற தங்கள் உறவையும் விட்டுக் கொடுத்ததும் இல்லை…. பொறாமையும் பட்டதில்லை அவன் வளர்ச்சியில்… எல்லாமே நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது…
இதோ இன்று செழியனுக்கு ஏற்பட்ட விபத்தை நினைத்து சந்தோசப்பட முடியவில்லை…. மாறாக மனம் ஒரு மாதிரி பாரமாகத்தான் இருந்தது கார்த்திக்குக்கு…
யோசனையில் சுழன்று கொண்டிருந்த போதே… யாருடைய அலைபேசியோ ஒலி எழுப்ப… இன்றைய சூழலுக்கு யாருடைய அலைபேசி அடித்தாலும் எடுத்துப் பார்க்க வேண்டிய சூழ்நிலை…
எழுந்து போய்ப் பார்க்க… ஆராதனாவின் அலைபேசிதான் அது…
“ஒரு வேளை ஷண்முகம் மாப்பிள்ளையா இருக்குமோ…” வேகமாக அருகில் போக… அதுவோ ‘செல்வி’ என்று காட்ட
”மணி என்னாகுது… இவ எதுக்கு இப்போ கால் பண்றா” நினைத்தவன் அழைப்பை கட் செய்தான்…
அவள் மேல் இருந்த கோபத்தை அவள் காலைக் கட்செய்த விதத்திலேயே காட்டியிருந்தான்…
அவன் கோபத்தை அலட்சியம் செய்யும் விதமாம… மீண்டும் அலைபேசி அடிக்க… இவன் கடுப்புடன் மீண்டும் கட் செய்ய… செல்வி… அடுத்தடுத்து அடித்துக் கொண்டே இருக்க… பொறுமை இழந்தவனாக வேறு வழியும் இல்லாமல் செல்வியின் அழைப்பை எடுக்க…
எதிர்முனையோ படபடவென பேச ஆரம்பித்திருந்தது…
“ஹலோ அம்மணி… 2 மணி நேரம் பத்தலையோ… சங்கீத ஸ்வரங்கள் வாசிசிட்டு இருக்கீங்களோ… ஒரு பத்து… இல்லல்ல ஐஞ்சு நிமிசம் எங்க கூட பேசிட்டு போயிருங்களேன்… நானும் சிவபூஜைக் கரடி மாதிரி தொந்தரவு பண்ணாமல் போறேன்”
“ஏய்…” இங்கு கார்த்திக் உறுமியிருக்க… எடுத்தது தன் தோழி ‘தனா’ என்று எதிர்முனையில் பேசிக்கொண்டிருந்த செல்விக்கோ ஒரு நொடி பதட்டம் வந்து பின் சமாளித்தவளாக
“த… தனா இல்லையா…” பட்டென்று பதவிசாகப் பேச…
“அவ தூங்கிட்டா… வை…” வெறெதுவும் பேசாமல் கார்த்திக் போனை வைக்கப் போக
“ஹலோ.. ஹலோ… நான் அவகிட்ட பேசனுமே…”
”காலையில பேசுங்க… இப்போ வைங்க…”
“நீங்க யாரு அதைச் சொல்ல… தனாகிட்ட எனக்கு இப்போ பேசனும்.. இல்லைனா எனக்குத் தூக்கமே வராது…” செல்வி கார்த்திக்கை கொஞ்சம் கூட இலட்சியம் செய்யாமல் பேச…
”சரி …. ரொம்ப சந்தோசம்… முழிச்சுட்டே இரு… 5 மணிக்கு அவளே பேசுவா…” பட்டென்று இவன் போனை வைக்க… அவளோ மறுபடியும் அழைப்பு விடுத்திருக்க… இவன் கட் செய்ய… அவள் மறுபடியும் அழைக்க.. இவன் மறுபடியும் கட் செய்ய… இந்த விளையாட்டு போய்க் கொண்டே இருக்க… கார்த்திகே ஒரு கட்டத்தில் இந்த விளையாட்டை நிறுத்த நினைத்தவனாக… வேகமாக அலைபேசியை எடுத்தவன்…
“ஏய் உனக்கு… அறிவில்லையா… கட் பண்ண கட் பண்ண போட்டுட்டே இருந்தா என்ன அர்த்தம்…”
“என் ஃப்ரெண்டு… அவ மொபைல்… நான் போன் போடுவேன்… அதைக் கட் பண்ண உங்களுக்கு எந்த ரைட்ஸும் இல்லைனு அர்த்தம்”
“ஏய்” கார்த்திக் உறும
”என் ஃப்ரெண்ட் என் காலைக் கட் பண்ணட்டும்… நானும் பேசாமல் தூங்கப் போறேன்… நீங்க யாரு எங்களுக்கு இடையில வற...”
“என் தங்கச்சி கட் பண்ணனும் அவ்ளோதானே… இப்போ பண்ணுவா பாரு… “ என்றவன் செல்வியிடம் அதற்கு மேல் பேசாமல்…. ஆராதனாவை எழுப்ப…
அவளோ… நல்ல உறக்கத்தில் இருக்க…
“உன் ஃப்ரெண்ட் பேசனுமாம்…. காலையில பேசுறேன்னு சொல்லிட்டு வை…” அலைபேசியை ஆராதனாவிடம் கொடுக்க…
“ஹ்ம்ம்… சரிண்ணா…” தலை ஆட்டியபடி… அலைபேசியை வாங்க… நல்ல தூக்க கலக்கத்தில் இருந்தாள் ஆராதனா அலைபேசியை வாங்கும் வரையில்…
”ஏய் என்னடி தூங்குறியா… உனக்குலாம் தூக்கம்லாம் வருதாடி… என்ன நடந்துச்சுனு ஒண்ணுமே சொல்லாம நீ மட்டும் நல்லா தூங்கிட்டு இருக்கியா… உன்னை என்ன சொல்லி திட்றதுன்னே தெரியலையே… இங்க ஒருத்தி உன்னையே நெனச்சுட்டு தூங்காமல் இருக்கான்ற ஒரு சின்ன எண்ணமாவது இருந்துச்சாடி… உன்னலாம்ம்…” செல்வி மூச்சு விடாமல் பேசிக் கொண்டே போய்க் கொண்டிருக்க…
ஆராதனாக்கும் இப்போது தூக்ககலக்கம் போய் விழிப்பு வந்திருந்தது தோழியின் கொஞ்சல் வார்த்தைகளிலில்…
தயங்கி அண்ணனைப் பார்த்தவள்…
“அண்ணா… கொஞ்ச நேரம்… ஜஸ்ட் பத்து நிமிசம் மட்டும்ண்ணா… ப்ளீஸ்னா…” ஆராதனா கெஞ்சலாக அண்ணனிடம் வேண்டிக் கேட்க…
“சீக்கிரம் பேசிட்டு படு… காலையில வந்து வச்சுக்கிறேன் உங்க ரெண்டு பேருக்கும் இருக்கு…” என்றபடி கார்த்திக் கடுப்போடு கடக்க… ஆராதனாவும் எழுந்து வெளியே வந்தாள்…
“செல்வி… சாரிடி… இங்க நடந்த கலவரத்துல உன்கிட்ட பேச மறந்துட்டு தூங்கப் போயிட்டேன்…” சுரத்தே இல்லாமல் ஆராதனா பேச ஆரம்பிக்க
“என்னடி… வீட்ல திட்டிட்டாங்களா ஷாம் அண்ணாகூட பேசினதுக்கு” என்று செல்வி ஆரம்பித்த போதே…
“இரு இரு… நான் சொல்றதைக் கேளு…” என்ற ஆராதனா… உடனடியாக விசயத்தை உடைத்தாள்…
“சென்னைல திலகாத்தை பையன் இருக்காங்கள்ள… அவங்களுக்கு ஆகிஸிடெண்ட் ஆகிருச்சு செல்வி.. நைட் தான் பூர்ணி அத்தைகிட்ட இருந்து போன் வந்துச்சு… யூ எஸ் போனப்ப… அங்க ஆக்சிடெண்டாம்… வீட்ல எல்லோரும் கவலையா இருக்காங்க… “
செல்வி மற்றதெல்லாம் மறந்தவளாக… ஆராதனாவின் வார்த்தைகளில் ஒரு நிமிடம் திகைத்து பின் யாருக்கு விபத்து என்பதை யூகித்த போதே அவள் குரலில் நடுக்கம் வந்திருந்தது…
“செழியன் அண்ணனுக்கா… ”
“ஹ்ம்ம்… சீரியஸ் கண்டிஷனாம்”
“என்னடி சொல்ற… உண்மையாவா” கேட்ட போதே செல்வி அழ ஆரம்பித்திருந்திருக்க…
“ஏய்… இப்போ எதுக்குடி அழற… அதெல்லாம் அவங்களுக்கு ஒண்ணும் ஆகாது… பாரு நீ என்கிட்ட எதுக்காக பேசுனியோ அதைச் சொல்ல மறந்துட்டேன் பாரு” என்று ஷண்முகத்துடன் தான் பேச வில்லை என்பதையும் அதன் காரணத்தையும் சொல்லியிருக்க
பேசிவிட்டு உடனே ஆராதனாவும் வைத்துவிட…. செல்விக்கு மற்ற எதையும் விவரமாக கேட்கும் மனநிலையும் இல்லை…
”தன் அண்ணன் மேல் வைத்திருக்கும் அதே அளவு பாசம் செழியனிடம் வைத்திருந்தாள்… நரேனுக்கும்… செழியனுக்கும் ஒரு சில மனஸ்தாபங்கள்… பேச மாட்டார்கள் என்பது தெரியும்… செழியன் ஒரு நாளும் அவளை நரேனின் தங்கையாகப் பார்க்க மாட்டன்… தன் கூடப்பிறக்காத தங்கைப் போலத்தான் நடத்துவான்… பழகுவான்…”
“தனாவை நல்ல படிக்கவை… அவளுக்குனு ஒரு இலட்சியம் வேணும்னு உன்னைப் பார்த்து கத்துக்க வை…” அடிக்கடி ஆராதனாவைப் பற்றி… அவள் படிப்பைப் பற்றிதான் அவன் அவளிடம் பேசுவான்… அதேநேரம்
“நீ ஏன் டாக்டர் சீட் வேண்டாம்னு சொன்ன… ஃப்ரெண்ட்ஷிப் முக்கியம்தான்… அதுக்காக அவ எங்க படிக்கிறாளோ அங்கதான்… அவளோடதான் படிக்கிறேன்னு சொல்றதுலாம் தப்பு செல்வி” செழியனின் கண்டிப்பு கலந்த அக்கறை… இப்போது நினைவில் ஆட… செல்விக்கு அவளையுமறியாமல் கண் கலங்கி இருக்க
கமலி… செழியன்… திலகா… முத்துராம் என அவர்கள் குடும்பத்தினருக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இருந்த நெருக்கம்… அனைத்தும் நினைவுகளில் வட்டம் அடிக்க ஆரம்பித்திருக்க… ஒரு கட்டத்தில்…
ஆராதனா சொன்ன ’திலகா அத்தை பையன்’… என்ற வார்த்தையில் நின்றிருந்தது அவள் எண்ணம்
செழியன் இவளிடம் பேசும் போதெல்லாம் எந்த அளவுக்கு ஆராதனா பற்றி பேசுவானோ… அதற்கு மாறாக… ஆராதனா செழியனைப் பற்றியே இவளிடம் பேச மாட்டாள்…
இவளாகத்தான் செழியனைப் பற்றி ஆராதனாவிடம் பேசி இருக்கின்றாள்…
“இந்த தடவை செழியண்ணே வந்தப்போ… நீ எப்படி படிக்கிற… உன் மார்க்ஸ்லாம் என்னன்னு கேட்டாங்க …”
”என்கிட்டயும் கேட்டாங்க…” இவ்வளவுதான் ஆராதனாவின் பதிலாக இருக்கும்… அதற்கு மேல் அவனைப் பற்றி அதிகமாகவும் பேச மாட்டாள்… குறைவாகவும் பேச மாட்டாள் ஆராதனா… கமலியக்கா… திலாகாத்தை… முத்துராம் மாமா என்றெல்லாம் பேசுபவள்… செழியனைப் பற்றி பேசுவதை தவிர்த்து விடுவாள்…
“செழியன் என்ற பெயரைக் கூட அவள் அவ்வளவாக உச்சரிக்க மாட்டாள்… அவனைப் பற்றி அவள் பேசினால் தானே… பெயரைச் சொல்வதற்கு…”
கேட்டாலும்…
“ஏதாவது இருந்தால் அவங்களப் பற்றி பேசலாம்… பேசுறதுக்கு ஒண்ணுமே இல்லையே…” என்று முடித்து விடுவாள் ஆராதனா
ஆனாலும் ’திலகாத்தைப் பையன்’ என்று சொன்னது முதலில் வித்தியாசமாகத் தெரிந்தாலும்… ஆராதனா செழியனிடம் ஆரம்பத்தில் இருந்தே ஒதுங்கியிருந்தாள் என்பதை உணர்ந்தவளாக ஆராதனா அப்படி சொன்னதில் தவறேதும் இல்லை என்று தன் தோழியையும் புரிந்து கொண்டாள்…
ஆக ’ஆரா” என்ற ஒற்றைப் புள்ளியில் செழியன் தன் மொத்த உலகத்தையும் அடக்கியிருக்க… அவனின் ’ஆரா’ என்ற ஒற்றைப் புள்ளியோ… அவனிடமிருந்து நழுவி… அவனில்லாத வேறொரு உலகம் நோக்கி சென்று கொண்டிருந்தாளா…????
VeryVery nice next ud sekerampodinga please
Hi varuni after a very long gap I'm commenting, as I moved here from abroad after 25 years. Again we started our journey I hope this novel will also be a fabulous one. Best best wishes to you.
Marriage nadakathunu na guess panren.. Seekaram nxt ud potrunga sis
செழியன் வந்துருவானா?இல்ல தானாவே கல்யாணம் நின்னு போய்டுமா?
Praveena.u have a great writting talent ..wish u all the success for ur future nice episode
Paavam sezhiyan.
Aara nadanthathu nanmaikae nu late aa purinjukkuva...
Lovely update praveee
Aara manasula enna
Kaduka mudiyalaye
Iva ph pesa tan ponala puriyala inda karthi idaila vandu
Daii karthi Avan senjadu sarinu oru naal purinjupa
Mukil enna seiya poran