ஆனா அப்படியெல்லாம் ஒருத்தர் பாதி சொல்லிட்டுவிட்ட உன்மைய நம்மளால ஈசியா விட முடியாதுல்ல. கதிருக்கும் அதே தான் பிரச்சனை. "டேய் ஒரு அண்ணனா நினைச்சு சொல்லுடா? ஒரு ஃப்ரெண்டா நினைச்சு சொல்லு டா இல்லனா ஒரு கல்லு மண்ணா நெனைச்சி கூட சொல்லுடா. என்ன நடந்ததுனு தெரியலனா எனக்கு தலை வெடிச்சிடும்டா " என்று எத்தனையோ கெஞ்சியும் சுதாகர் வாய் திறக்கவில்லை. "கொஞ்ச நாள் என்ன பத்தியே நெனைங்கனா. சொல்றேன் சீக்கிரமே" என்று முடித்துக்கொண்டான். கதிரோ "இதுக்கு இவங்கிட்ட லைஃப் மேட்டர் கேக்காமலே இருந்திருக்கலாம்" என்று தன்னயே நொந்து கொண்டான். இன்றுடன் இவர்கள் கொடைக்கானலில் இருந்து வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. சுதாகர் எந்த வழியிலும் நித்யாவைத் தொடர்புகொள்ள முயற்ச்சிக்கவேயில்லை. நித்யாவும் தன்னுடைய இயல்பு வாழ்க்கையில் போய்க்கொண்டிருந்த நேரம், செபஸ்டினா கதிர் குழுவினரை அழைத்து "நாளைக்கு நம்ம டீம்க்கு புது உறுப்பினர் வரப்போறாங்க. நித்யா நீ நம்ம வொர்க் பத்தின எல்லாம் சொல்லி குடு. எதாவது சந்தேகம் இருந்தா கதிர்க்கிட்ட கேட்டுக்கோ" என்று கூறி அனுப்பி வைத்தார். ஆர்வம் தாங்காத தினேஷ் "யாரு ப்ரோ புது ரிசோர்ஸ் (உறுப்பினர்), நமக்கு தெரிஞ்சவங்களா?" என்றான். கதிரோ "நாளைக்கு வரும்போது பாத்துக்கோடா பாடிசோடா" என்று வெறுப்பேற்றிவிட்டுச் சென்றான். "விடுறா விடுறா இவங்க குடுக்குற சம்பளத்துக்கு ஆனந்த் அம்பானியா வருவாரு? நம்மள போல எதாவது அரவேக்காடு தான் வரும். ஒத்து வந்தா சேத்துப்போம் இல்லனா கழண்டுக்குவோம்" என்றாள் மங்கை. அனைவரும் ஒன்றுபோல ஆமோதித்துவிட்டு அவரவர் வேலையைப் பார்க்க சென்றனர்.
நித்யா எப்பொழுதுமே முதல் ஆளாக வரும் வழக்கமுடையவள் ஆதலால் தான் அவளை பணிகளை விளக்க செபஸ்டினா கூரியதும், அவளுடைய தொலைபேசி எண்ணை புது உறுப்பினருக்கு கொடுத்ததும். ஒன்பது மணி அளவில் நித்யாவின் கைப்பேசி ஒலியெழுப்ப, அலைபேசி எண்ணாய்க்கண்ட நித்யா ஒரு நிமிடம் ஸ்தம்பித்து மீண்டும் எடுத்து காதில் வைக்குமுன் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. நித்யா கைப்பேசியை கையில் வைத்துப்பார்த்துக் கொண்டிருக்கும்போதே அடுத்த அழைப்பு மீண்டும் வர, இம்முறை தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு அழைப்பை ஏற்றிருந்தாள்.
சுதாகர், "நித்யா, நான் சுதா பேசுறேன். உங்க டீம்ல புதுசா ஜாய்ன் பண்ணியிருக்கேன். உங்க ஆஃபிஸ் வெளிய வெயிட் பன்றேன். வந்து அக்ஸஸ் குடு" என்று கூறிவிட்டு அவள் பதிலை எதிர்பாராமல் வைத்துவிட்டான். இங்கு நித்யாவோ "திமிர் பிடிச்சவன், இவன்லாம் திருந்தவே மாட்டான். நம்மள போய் இவங்கிட்ட மாட்டிவிட்டுடிச்சி இந்த தாய்க்கிழவி" என்று திட்டிக்கொண்டே சென்று கதவைத்திறந்து விட்டாள். சுதாகரோ, "சே, காலேஜ்லலாம் இவள லெஃப்ட் ஹாண்ட்ல டீல் பண்ணியிருக்கேன். இப்ப இவளுக்கு கால் பன்னவே பதறுது. இதுல இவ கூட எப்படி வேலை பாக்கபோறேனோ தெரியலயே. கெத்த மெயின்டைன் பண்ணிக்கோடா சுதாஆஆஆஆ. அவள பாத்து நீ பயப்படுற கடுகளவுகூட வெளிய தெரிஞ்சிற கூடாது" என்று நினைத்துக்கொண்டான். நித்யா வந்து கதவைத்திறக்க அவளுக்கு சிரித்த முகமாக காலை வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு அவளைப்பின் தொடர்ந்தான். நித்யாவோ "என்ன இவ்வளோ கூலா இருக்கான். அது சரி அவன் எப்பயுமே அப்படி தான" என்று நினைத்துக்கொண்டாள். சுதாகரோ "நம்ம மொகரகட்ட நம்ம மைண்ட் வாய்ஸ காட்டிக்கொடுத்திருக்குமோ? சே சே இருக்காது. ஒரு வேள இருக்குமோ? அதுக்கு அவ எங்க நம்ம மூஞ்சிய பாத்தா?" என்று தானே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக்கொண்டு அவளைத் தொடர்ந்திருந்தான்.
நித்யாவின் பக்கத்து இருக்கையை சுதாகருக்காக தயார் செய்திருந்தனர். சுதாகர் சுத்தி இருப்பவர்களின் இருக்கையை நோட்டமிட்டு விட்டு நித்யாவின் இருக்கையையும் ஒரு முறைப் பார்த்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தான். சுதாகருக்கு சில சிறிய வேலைகளைப் பற்றிக்கூறிவிட்டு நித்யா தனது வேலையைப்பார்க்க சென்றுவிட்டாள். சுதாகர் மீண்டும் ஒருமுறை சுற்றி நோட்டமிட்டுவிட்டு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு "எப்படி இருக்க நித்தி?" என்றான். அசைவற்று இருந்த ஒரு நொடிக்குப்பின் சுதாகர் புறம் திரும்பி, "என் சொந்த விஷயங்களைபற்றி பேச வேண்டாம் சுதாகர், நானும் உங்கிட்ட பேச மாட்டேன். நம்ம ரெண்டு பேருக்கும் முன்னடியே தெரியும்ங்கிறத டூர்ல எப்படி காட்டிக்காம இருந்தோமோ அதேபோல இங்கயும் இருந்துக்கலாம். தனியா இருந்தாலும் உங்கிட்ட எதுவும் எனக்கு பேசவேண்டாம். நீ எனக்கு நான் எதையெல்லாம் கடந்து வெளிய வரனும்னு நெனைக்கிறேனோ அதையெல்லாம் நியாபகம் வர வைக்கிற. உண்மைய சொல்லனும்னா உன் முகத்த பாக்ககூட வேண்டாம் எனக்கு. ஆனா வேற வழியில்ல. ரெண்டு பேரும் ஒரே டீம்ல வேல பாக்குறதால வேல சம்பந்தமா மட்டும் பேசிக்கலாம். கொஞ்சநாள்ல அதுக்கு நான் பழகிடுவேன்" என்று முடித்தாள். பழைய சுதாகராய் இருந்திருந்தால் "சரி தான் போடி" என்று சென்றிருப்பான். ஆனால் இப்பொழுது அவன் நித்யாவிற்காக மட்டுமே வந்திருப்பதால், இந்த வார்த்தைகள் அவனைக் காயப்படுத்தியது. "சாரி" என்று நித்யாவிடம் பதில் மொழிந்துவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.
நித்யாவிற்கும் தன்னை நிதானப்படுத்திக்கொள்ள கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க, சுதாகரும் உள்ளே நுழைந்தான். அவனைப்பார்த்த ஜாஹிரின் கண்கள் ஆச்சரியத்தைக் காட்டிப்பின் மெச்சுதலாக ஒரு பார்வைப்பார்த்தது. சுதாகரும் அதைக் கவனித்துக்கொண்டான். அனைவருக்கும் சுதாகர் அறிமுகப்படுத்தப்பட, பெரும்பாலோனோருக்கு அவனைப்பற்றிய அறிமுகம் தேவையிருக்கவில்லை. ஒரு பிரபல பாடல் நிகழ்ச்சியில் முதல் பரிசு வாங்கிய போட்டியாளர் அல்லவா? இதில் அதிகமாக சந்தோசப்பட்டது, செபஸ்டினாவின் கீழ் வேலை செய்யும் மற்றொரு அணியைச்சேர்ந்த பிரதீபா தான். அவளும் கொடைக்கானலில் இருந்தே சுதாகரைக் கவனித்துக்கொண்டு தானிருக்கிறாள். இது கடவுள் தனக்காக ஏற்படுத்திக்கொடுத்த வாய்ப்பாகவே கருதிக்கொண்டாள். சுதாகரிடம் சென்று "ஹாய் சுதாகர், நான் பிரதீபா. உங்க வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க வாய்ஸ நான் ரொம்பவே காதலிக்கிறேன்" என்றாள். சுதாகரும் சிர்த்துக்கொண்டே "நன்றி" கூறி விடைபெற்றான். அப்போது அங்கு வந்த தினேஷ், "என்ன பிரதீபா? சுதாகருக்கு கல்யாணம் ஆயிடுச்சாம் தெரியுமா?" என்றான். அதற்கு பதிலளித்த பிரதீபாவோ "எந்த ஊர்லயாவது இருபத்தியோரு வயசுல பையனுக்கு கல்யாணம் பன்னி வைப்பங்களா? அவன் சும்மா அடிச்சிவிடுறான். நீயும் நம்பிட்டுத்திரி. போடா லூசு" என்று திட்டிவிட்டுச் சென்று விட்டாள். மங்கை தினேஷைப்பார்த்து சிரிக்க தினேஷ் வராத போனை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டு நகர்ந்து சென்றான்.
நித்யாவிற்கு என்ன மனநிலையில் இருக்கிறாள் என்றே புரியவில்லை. "இதுக்கு நாம கவல படனுமா வேண்டாமா?" என்று தீவிர சிந்தனையில் இருந்தவளை "காஃபி" என்று ஒரு குரல் கலைத்தது. வேறு யாராக இருக்க முடியும்? ஜாஹிர் தான். நித்யாவும் ஆமோதித்து அவனுடன் செல்ல, இவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த ஜெனி எழுந்து அவர்களைப் பிந்தொடர்ந்து சென்றாள். நித்யாவைப் பொறுத்தவரை ஜெனிக்கு மறைத்து ஜாஹிரிடம் மட்டும் தனியாக பேச வேண்டிய ரகசியம் ஒன்றுமில்லை. அதனால் கூப்பிடாமலே ஜெனி சென்றதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆளுக்கு ஒரு காஃபியை வாங்கிக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்து அருகில் இருந்த கார்டனில் சென்று அமர்ந்தனர். ஜாஹிர் தொடங்கினான். "அன்னிக்கு கேட்டப்ப தற்செயலா நடந்தது அதனால சொல்ல ஒன்னுமில்லனு சொன்ன? ஆனா இப்ப சுதாகர் திரும்ப வந்தது கண்டிப்பா உனக்காக தான்னு தோனுது நித்யா. உங்க ரெண்டுபேருக்கும் என்ன பிரச்சனைனு இப்போவாவது சொல்லலாமா உனக்கு?" என்றான். ஜெனியும் ஏற்கனவே அந்த மூவரில் ஒருவர் நித்யாவின் கடந்தகால வாழ்க்கையோடு சம்மந்தப்பட்டவர்கள் என்ற ஊகம் இருந்தபடியால், ஒன்றும் பேசாது நித்யாவின் பதிலுக்காக காத்திருந்தாள்.
சிறிது நேர அமைதிக்குப்பின் நித்யா, "நான் மிஸஸ்.சுதாகர்" என்றாள். அதற்கு ஜெனியோ "உன் லைஃப்ல சம்பந்தப்பட்டது சுதாகர்னா நீதான் மிஸஸ்.சுதாகர்னு ஏற்கனவே தெரிஞ்சிட்டுச்சி. மேல சொல்லு" என்றாள். ஜெனியைத்திரும்பி முறைத்த நித்யா, "இப்படியே பேசிட்டு இருந்த எந்திரிச்சி உள்ள போயிடுவேன். நான் பேசி முடிக்கிற வரைக்கும் நீ வாயே திறக்கக்கூடாது" என்று கத்திவிட்டு தனது கதையை சொல்ல ஆரம்பித்தாள்.
இதே சமயம் மதனுடன் பேசிக்கொண்டிருந்த சுதாகரிடம், "நீங்க ஏன் ப்ரோ ரித்விக் ஆஃபிஸ்ல சேராம இங்க வந்தீங்க?" என்றான் மதன். அதற்கு சுதாகரோ, "அவன் டீம் இவ்ளோ ஃபன் இல்லனு சொல்லி இருக்கான், உங்க டீம் பாத்தப்ப எனக்கு ரொம்ப பிடிச்சது அதான் கதிர் ப்ரோட்டக்கேட்டேன்" என்றான். "நீ இங்க வந்தது பிரதீபாக்கு ரொம்ப வசதியாயிடுச்சி, அப்டியே லைட்டா திரும்புங்க. உங்கள தான் பாத்துக்கிட்டு இருக்கா" என்றான். "பாத்தா பாத்துட்டு போகட்டும் ப்ரோ. அம் டேக்கன், அதோட நீ என்னை நீங்க நீ னு குழப்பாம ஒழுங்கா நீ வா போ னு பேசிப்பழகு" என்றான். அதற்கு மதனோ "சரி டா மச்சி, நீ அந்த பொய்ய இன்னும் எத்தன நாளைக்குடா கண்டினியூ பன்னுவ?" என்றான். அவனை முறைத்த சுதாகரோ "டேய் நிஜமாவே நான் குடும்பஸ்தன் டா. எனக்கு கல்யாணமாகி ரெண்டு வருசமாக போகுது" என்றான். "அப்போ ஃபைனலியர்ல படிக்கிறப்போ உனக்கு மேரேஜாயிடுச்சி அப்படித்தான? அப்போ உன் மனைவி போட்டோக்காட்டு" என்றான். சுதாகரோ "ஃபோட்டோ என்னடா? நேர்லயே காட்டுறேன். ஆனா இப்போ இல்ல. எங்க ரெண்டுபேருக்கும் நடுவுல ஒரு பெரிய மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்க். அது சரியாகட்டும் அவ சம்மதத்தோட காட்டுறேன்" என்றான். "என்ன கதவிடுறியா? ஒரு ஆளக்கண்டுபிடிச்சி கூட்டிட்டு வரனும் அதுக்குத்தான டைம் கேக்குற? என்ன பாத்தா உனக்கு கேனையன் மாதிரி தெரியுதுல்ல?" என்றான். சிரித்துக்கொண்டே சுதாகர் "என் அம்மா மேல சத்தியமா எனக்கு மேரேஜ் ஆயிடுச்சி. ஆனா அது யாருகூடனு சொல்லமுடியாது இப்போதைக்கு. ஒரு வேளை என் வைஃப்பால எங்கிட்ட இருந்து நிரந்தரமா பிரிஞ்சு, நான் அவங்க லைஃப்ல இருந்ததயே மறந்து வேற லைஃப்க்குள்ள போயிட முடியும்னா அன்னிக்கு இது அவங்களுக்கு ஒரு பிரச்சனையா இருக்கக்கூடாதுனு நெனைக்குறேன்டா. ஹோப் யு அண்டர்ஸ்டாண்ட்" என்று முடித்தான். "உன் வைஃப் ரொம்ப குடுத்துவச்சவங்க தான் உன்ன போல ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க" என்று சிலாகித்தான் மதன். அதற்கு சுதாகரோ "இல்ல ரொம்ப கஷ்டப்பட்டுட்டா என்னால. இதுக்கு மேலயும் அவள கஷ்டப்படுத்த விரும்பல. அதே சமயம் அவள தவிர வேற யார்கூடவும் வாழமுடியும்னும் தோணல. கடவுள்க்கிட்ட நான் வேண்டிக்கிறதுலாம் ஒன்னே ஒன்னு தான். அவளுக்கு என்ன தவிற வேற யார் மேலயும் விருப்பம் வந்திறகூடாது. ஆனா அது கடவுள் காதுக்குப்போய் சேரும்போது தப்பா போயிடுது போல. அவளுக்கு என்னயுமே பிடிக்கல. இப்படி பேசி பேசியே நான் மென்டல் ஆகுறதுக்கு முன்னாடி நான் அவகூட சேர்ந்திரனும். ஹ்ம்ம்ம்" என்று பெருமூச்சுடன் முடித்தான்.
இது ஒரு புறமிருக்க நித்யாவின் கதையைக்கேட்டுக் கொண்டிருந்த ஜெனிக்கும் ஜாஹிருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஜெனி நித்யாவின் புறமிருந்து யோசிக்க ஜெனிக்கு சுதாகர் செய்தது மன்னிக்க முடியாததாக தோன்றியது. ஆனால் ஜாஹிர் சுதாகரின் புறமிருந்து யோசிக்க, அவனுக்கு சுதாகரின் செயல்கள் மன்னிக்கக்கூடிய தவறாகத்தான் தோன்றியது. இருப்பினும் சுதாகரின் புறமிருந்தும் ஒருமுறைக் கேக்க விரும்பினான். அதற்கான நாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.