அனைவரும் இரவு உணவுக்குப்பின் சுடரொளிக்களியாட்டத்திற்காக ஒன்று கூடினர். கதிர் குழுவில் இருந்த இருபது பேருடன் சுதாகர், ஆதர்ஷ் மற்றும் ரித்விக்கும் இணைந்துகொள்ள ஆட்டம் துவங்கியது. கதிர் மற்றும் சுதாகர் இருவரும் தங்களுக்கு ஆடுவதில் விருப்பமில்லை என்று கூறி அமர்ந்திருந்தனர். நடனமாடிக்கொண்டிருப்பவர்களை பார்த்துக்கொண்டிருந்த சுதாகரிடம், "நீங்க மூனுபேரும் சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்ட்சா?" என்றான் கதிர் அமைதியைக்குலைக்க வேண்டி. "ஆம், நாங்க மூனு பேரும் விவரம் தெரிய முன்னாடில இருந்தே ஒன்னா தான் இருக்கோம். எங்க அப்பா மூனு பேரும் பிசினஸ் பார்ட்னர்ஸ்." என்றான் சுதாகர். பின்பு அங்கு ஆடிக்கொண்டிருந்த தினேஷைக்காட்டிய சுதாகர், "அவன் எப்பவுமே இப்படி தான் இருப்பானா?" என்றான். கதிர் அதற்கு, "இப்படினா? நீ அவன பத்தி என்ன நெனைச்சு வசிருக்கனு சொல்லு, நான் ஆமாவா இல்லையானு சொல்றேன்" என்றான். சிரித்துக்கொண்டே சுதாகர், "அவன் முதல்ல பாக்கும்போது நித்யாவ ஒன் சைடா லவ் பன்னுவானோனு நினைச்சேன், அப்புறம் அப்படி இல்லனு தெரிஞ்சிடுச்சி. ஆனா அவன் ஒரு மாதிரி ஜாலியா எல்லாரையும் சிரிக்க வச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கான் ல, அத கேட்டேன்" என்றான். தினேஷைத்திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு "அவனோட அப்பா ஆமுக கட்சி எம்.எல்.ஏ. அவனுக்கு அம்மா இல்ல, சின்ன வயசுல இருந்தே கேர்டேக்கர்கிட்டயே வளர்ந்து இருக்கான், மங்கையும் அவனும் சின்ன வயசுல இருந்தே ஒன்னா படிச்சவங்க. என்னோட அப்சர்வேஷன் என்னன்னா மங்கைக்கூட இருந்தா மட்டும் இவன் ரொம்ப ஃப்ரீயா இருக்கான், ரொம்ப ஜாலியா இருக்கான். அவ ஒரு நாள் ஆஃபிஸ் வரலனா கூட அய்யா அமைதியின் சிகரமாயிடுவாரு. ஆனா அத அவனே உணர்ந்திருக்கானானு தெரியல" என்றான் கதிர்.
ஆச்சர்யமாக இருவரையும் ஒரு பார்வைப்பார்த்த சுதாகர், "அப்போ மங்கை? அவங்க இவன லவ் பன்றாங்களா?" என்றான். ஒரு மென்னகையுடன் தொடர்ந்த கதிர், "என் கணிப்பு சரினா மங்கை இவன் முதல்ல சொல்லனும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கா" என்றான். "செம்ம போங்க. எல்லாரப்பத்தியும் தெரியுமா உங்களுக்கு?" என்றான். சிரித்துக்கொண்ட கதிர் "உனக்கு யாரப்பத்தி தெரியனும்?" என்ற கேள்வியை முன் வைத்தான். சுதாகர் மைண்ட் வாய்சில் 'அவ்ளோ அப்பட்டமாவா தெரியுது' என்று நினைத்துக்கொண்டு, "இல்ல அவங்க மனசுல நினைக்கிறதெல்லாம் சொல்றீங்களே, அதனால கேட்டேன்" என்று சமாளித்தான். கதிர், "குடும்ப விவரங்கள் எல்லாம் அவங்க சொன்னது தான் இந்த லவ் மேட்டர்லாம் 'பாம்பின் கால் பாம்பறியும்'னு சொல்லுவங்கல்ல அப்படி தெரிய வந்ததுதான். என்ன பாக்குற? நானும் லவ் மேரேஜ் தான். நாங்க ரெண்டு பேரும் ஒரே ஐடி பார்க்ல வேற வேற கம்பனில வேலைப்பார்த்தோம். அடிக்கடி பாத்து அப்படியே லவ் ஆயிடுச்சி. மங்கை தினேஷ் விஷயத்துல பெற்றோர் சைடுல இருந்து எதிர்ப்பு வராது, ஏன்னா ரெண்டு குடும்பமும் பெரும்புள்ளிங்க தான். தினேஷ் தான் வாய திறக்கனும். இந்த ப்ரொஜெக்ட்ல அடுத்த ஜோடி ஜாஹிர், ஜென்னிஃபெர். ரொம்ப கஷ்டப்பட வேண்டி வரும் ஆனா அப்பகூட சேருவாங்களானு சந்தேகம் தான்" என்றான். "ஜென்னிஃபெரும் ஜாஹிரும் லவ் பன்றாங்களா? காலைல அந்த பொண்ணு அவ்ளோ பேசினாங்க ஆனா அவங்க ஆளுனு அந்த பையன அறிமுகப்படுத்தவேயில்ல" என்றான் சுதாகர். சிரித்துக்கொண்டே கதிர் "அவங்க அவங்களுக்கே சொல்லிக்கல, நான் பார்த்தத வச்சி என்னோட ஊகத்ததான் சொல்றேன். அதுமட்டுமில்ல, அந்த மதன் இருக்கானே, அவன் நித்யாவ ஒன்சைடா லவ் பன்றான், யாருக்கும் தெரியாதுனு வேற நெனைச்சுகிட்டு இருக்கான், என் டீம் மொத்தம் கிறுக்கனுங்க தான். நல்லா வேலைப்பார்ப்பானுங்க அதான் டீம்ல வச்சிருக்கேன். எங்க டீம் எப்பவுமே கொஞ்சம் சத்தமாதான் இருக்கும். ஜாலியா இருப்பானுங்க எனக்கும் அதான் பிடிக்கும், ஆனா தாய்க்கிழவிக்கு பிடிக்காது. அதுலயும் ஒரு நாள் தினேஷ் என்ன பன்னான் தெரியுமா? எங்க ஆபிஸ்ல நாங்க ரெண்டாவது மாடில இருக்கோம். சாப்பிட போகனும்னா பதினோரவது மாடிக்குப் போகனும். மொத்தமா எல்லாரும் வந்து மின்தூக்கிக்காக வெயிட் பன்னிட்டு இருக்கும்போது செபஸ்டினாவும் வந்துட்டாங்க. இவன் மொதல்ல நின்னதால அவங்கள பாக்கல. லிஃப்ட்ல இருந்த கண்ணாடிய பாத்து தலைமுடிய சரி பன்னிட்டே இருந்ததால அவங்கள உள்ள வந்ததையும் கவனிக்கல. அவன் மூஞ்சியவே பாத்துக்கிட்டு, "கதிர் ப்ரோ, தாய்கிழவி மூனு வாரம் ஃபாரின் போறேன்னு சொல்லுச்சி போகவே இல்ல, ஒரே கடுப்பா வருது ப்ரோ. என்ன ப்ரோ பேசவே மாற்றிங்க"னு திரும்ப அங்க செபஸ்டினா நிக்கிறாங்க. நாமளா இருந்தா ரியாக்சன்லயே அவங்கள தான் பேசுறோம்னு காட்டிக்கொடுத்திருப்போம். அவன் என்ன பன்னான் தெரியுமா? "எங்க அப்பாவும் எப்ப தான் தாய்க்கிழவிய அனுப்பிவிடப் போறரோ தெரியல"னு சொல்லிட்டு அப்படியே திரும்பி செபஸ்டினாவ அப்ப தான் பாக்குற மாதிரி "ஹை செபஸ்டினா"னு சொன்னான். நாங்களே ஒரு நிமிஷம் அவங்க அப்பத்தாவ தான் சொல்றானோனு குழம்பி போய்ட்டோம்" என்று கூற சுதாகர் மென்னகை புரிந்தான்.
"உங்களயெல்லாம் பாக்கும்போது எனக்கும்கூட உங்க டீம்ல சேர ஆசையாயிருக்கு" என்று கூறி கதிரைப்பார்த்தான். "எங்களப்பார்த்துதான் எங்க டீம்ல சேர ஆசை வருதா இல்ல நித்யாவப்பார்த்தா?" என்றான் கதிர். ஒரு நொடி ஷாக்கான சுதாகர் சிரித்துக்கொண்டே "அட ஏன் கதிர் நீங்க வேற, மியூசிக் ப்ரொக்ராம் முடிஞ்சதால எப்படியும் அடுத்து என்னனு பாக்கனும். அதுவே ஒரு நல்ல கம்பனில உங்க எல்லாரையும் மாதிரி ஒரு நல்ல கோவொர்க்கர்ஸ்க்கூட அமைஞ்சா நல்லா இருக்கும்" என்றான். கதிரும் "சரிடா ப்ரொஃபைல் அனுப்பு பாத்துக்கலாம்" என்றான். பின் சுதாகர் நித்யா அவளைப்பற்றி இவர்களிடம் என்ன சொல்லியிருக்கிறாள் என்று தெரிந்துகொள்ளவேண்டி "அவங்களுக்கு அப்பா அம்மா இல்லையா?" என்று நித்யாவைக் கைகாட்டிக்கேட்டான். கதிரோ "ஆமா டா, அவ கடைசி வருட படிப்பு படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு விபத்துல இறந்துட்டதா சொன்னா. சொந்தகாரங்களும் யாரும் இல்லனு சொன்னா. பண்டிகை நாட்கள்ல ஊருக்குப்போக மாட்டா, அப்பா அம்மா நியாபகம் வருதுனு சொல்லுவா. ஆனா மூனு மாசத்துக்கு ஒரு முறை போய் வீட்ட சுத்தப்படுத்தி வச்சிட்டு வருவா. ஆனா நல்ல பொண்ணுடா மத்த பொண்ணுங்கள போல யாரையும் ஆர்வமா பாக்கவும் மாட்டா, யாரும் பார்த்தாலும் அது அவளுக்கு பிடிக்கலனு நாசூக்கா தெரியப்படுத்திடுவா. இந்த டீம்ல அவளுக்கு ரொம்ப நெருக்கம் ஜாஹிர் அடுத்து ஜெனி தான். அவங்களுக்கும் நித்யாப்பத்தி இவ்ளோ தான் தெரியுமாம்" என்றான்.
இப்படியே பேச்சுத்தொடர்ந்து கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் ஆடிக்கொண்டிருந்த அனைவரும் ஆட்டத்தை நிறுத்திவிட்டு அமர்ந்து பேச தொடங்கினர். அங்கிருந்து அது ஒரு விளையட்டாக மாறியது. முதலில் நித்யாவிற்கு ஜாஹிர் ஒரு பணியைக்கொடுத்தான், அதன் படி நித்யா செபஸ்டினாவிடம் சென்று அவர்களுடைய செல்லப்பெயரான "தாய்க்கிழவி" என்று கூப்பிடவேண்டும், இல்லாத பட்சத்தில் இசைக்கும் ஒரு பாடலுக்கு தனியாக நடனமாடவேண்டும். நித்யா தாய்க்கிழவி என்று கூப்பிடுவதைக் கனவிலும் நினைத்துப்பார்க்க மாட்டாள், எனவே அவளுக்கான பாடல் இசைக்கப்பட அவளும் நடனமாடினாள். இதைப்பார்த்துக்கொண்டிருந்த செபஸ்டினா மற்றும் மற்ற குழுவினரும் இவர்களுடன் இணைந்துகொண்டனர்.
இப்பொழுது நித்யாவைத் தவிர்த்து அனைவருடைய பெயரும் சிறிய காகிதங்களில் எழுதப்பட்டு ஒரு குடுவைக்குள் போடப்பட்டது. இப்பொழுது நித்யா அவர்கள் குடுவையிலிருந்து ஒவ்வொரு பெயராக எடுக்க எடுக்க அவர்கள் இசைக்கப்படும் பாடலுக்கேற்ப நடனமாட வேண்டும். இல்லையெனில் அவர்கள் வாழ்க்கையின் யாருமறியாத ஒரு விசயத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு ஆட்டம் தொடர்ந்தது. முதலில் நித்யா இரண்டு சீட்டுகளை எடுக்க அதில் ரித்விக் மற்றும் மதனின் பெயர் இடம்பெற்றிருந்தது. அவர்கள் இருவருக்கும் ஒரு பாடல் ஒலிக்கப்பட அவர்களது நடனம் ஐந்து நிமிடம் வரைத்தொடர்ந்தது. அடுத்ததாக இருவர் பெயர் எடுக்கப்பட அதில் கதிர் மற்றும் ஜென்னிஃபெரின் பெயர் இடம் பெற்றிருந்தது. டிஜேவாக இருந்தது ஜாஹிர் ஆதலால் அவர்களுக்கு ஒலிக்கப்பட்ட பாடல் "உன் கூடவே பிறக்கனும்". ஜாஹிரைத் திரும்பி பார்த்து ஒரு மென்சிரிப்புடன் ஜென்னிஃபெர் தொடர கதிரும் ஜென்னிஃபெருடன் கைகோர்த்து அழகாக ஆடினான். அடுத்ததாக தினேஷ் மற்றும் செபஸ்டினாவின் பெயர் வர, கதிரின் வேண்டுகோளுக்கு இனங்க ஒலிக்கப்பட்ட பாடல் "தாய்க்கிழவி". இதில் யாரும் எதிர்பார்க்காதது யாதெனில், செபஸ்டினா நித்யாமேனன் போல் அழகாக நடனமாடியது.
அவர்கள் ஆடி முடித்ததும் விசில் சத்தம் காதைப்பிழந்தது. இது ஒரு புறமிருக்க மறுபுறம் ஆதர்ஷ் சுதாகரிடம் "கதிர் ப்ரோகிட்ட ரொம்ப நேரமா என்னடா பேசிட்டு இருந்த?" என்றான். சுதாகர் "அதுவா அவங்க கம்பனில ஒரு வேலைக்கு அப்ளிகசன் போட்டு வந்திருக்கேன்" என, "ஏன்டா எங்கக்கிட்ட கேட்டா நாங்க பாக்க மாட்டோமாடா? ஏன் அவர்கிட்ட கேட்ட?" என்றவன், தானே விடையையும் கண்டறிந்து "ஓ சீக்கிரமே டூயட் பாட திட்டம் போட்டச்சு. அப்டிதான?" என்றான். அதற்கு சிரித்துக்கொண்டே சுதாகர் தலையசைக்க, சீட்டில் அவர்கள் இருவர் பெயர் எடுக்கப்பட்டது. சுதாகர் ஆட மறுக்க ஆதர்ஷ் தனியாக ஆடி அவனுடைய டாஸ்க்கை நிறைவு செய்தான். இப்பொழுது சுதாகருக்கான இரகசிய பகிர்தல் நேரம். ஒரு நிமிடம் அமைதியாக நின்றிருந்த சுதாகர் "எனக்கு ஒரே ஒரு முறை கல்யாணம் ஆயிடுச்சி" என்று கூற அங்கு பலத்த அமைதி. முதலில் சுதாரித்தது கதிர் தான். "டேய் டாஸ்க்னாலும் ஒரு நியாயம் வேணாமாடா? கல்யாணம் ஆயிடுச்சினு சொல்ற?" என்க, ஆதர்ஷ் அவனிடம் திரும்பி "ஆமா ப்ரோ அவனுக்கு இருபத்தியோரு வயசுலயே கல்யாணம் பன்னி வச்சிட்டாங்க" என்றான். கதிர் மட்டுமல்லாது, நித்யா ஆதர்ஷ் ரித்விக் தவிர அனைவருக்கும் குழப்பம். தினேஷ் "நீ என்ன சிவாஜி பேரனா டா? கல்யாணம் பன்னிகிட்டுதான் சினிமால பாட போகனும்னு உங்க வீட்டுல சொல்லிட்டாங்களா?" என்று கேட்க சுதாகரோ "ஒரே ஒரு உன்மைதான சொல்ல சொன்னீங்க, இந்த கேள்விலாம் ஔட் ஒஃப் சில்லபஸ்" என்று கூறி சிரித்துக்கொண்டே அமர்ந்தான்.
அப்ப நித்யா யாரு? சுதாகரோட முன்னாள் காதலியா இல்ல மனைவியா? என்ன தான் அவங்க வாழ்க்கைல நடந்தது?