ஒரு வழியாக ஆட்டமும் பாட்டுமாய் அவர்கள் கொடைக்கானலை அடைந்த போது நேரம் காலை ஒன்பதைத் தொட்டிருந்தது. கதிர் ஆதர்ஷிடம் அவர்கள் தங்குமிடத்தைச்சொன்னால் அங்கே விடுவதாகக் கூறினான். ஆனால் ஆதர்ஷுக்கு சுதாகர் என்ன சொல்வானோ என்ற தயக்கத்தில் அவனை ஏறிட்டுப் பார்க்க அவனும் சம்மதமாக தலை அசைத்தான், ரித்விக் மங்கையர்க்கரசியிடம் அரட்டையில் மூழ்கியதால் அவனை இருவருமே கண்டுகொள்ளவில்லை. ஆதர்ஷ் கதிரிடம் தாங்கள் ***** விடுதியில் தங்கப்போவதாக சொல்லவும் கதிர் அவர்களும் அதே விடுதியில் தங்கபோவதாக தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். நித்யா இதுவரை நடந்த எதையும் கண்டுகொள்ளாது தினேஷிடம் அரட்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள். பேருந்தில் கடைசி இருக்கையில் சுதாகர் ஆதர்ஷ் மற்றும் கதிரும் அவர்களுக்கு முன் இருக்கையில் தினேஷ் மற்றும் நித்யாவும் அமர்ந்திருந்ததால் அவர்கள் தான் கடைசியாக இறங்கும்படி இருந்தது. தினேஷ் முதலில் இறங்கிய பின் நித்யாவும் அவளைத்தொடர்ந்து சுதாகரும் பின்னால் கதிர் மற்றும் ஆதர்ஷும் இறங்கும் படி அமைந்தது. சுதாகர் மெலிதாக ஒரு பாடலை முனுமுனுத்தபடி வந்துகொண்டிருந்தான். பின்னால் வந்த கதிர் "தம்பி கொஞ்சம் சத்தமா பாடினா நாங்களும் கேட்டுகுவோம் என்றான். சிரித்துக்கொண்டே சுதாகர்
"காதலென்னும் சொல்லை நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையில் இல்லை
ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம்..."
என்று பாடினான். விடுதியை வந்தடைந்ததும் அவரவர் அறை நோக்கி பிரிந்து சென்றனர்.
அவர்கள் தங்கி இருந்த விடுதியில் காலை உணவுக்கும் சேர்த்து அவர்கள் பணம் செலுத்தியிருந்த படியால் மீண்டும் ஒரு சந்திப்பு உணவறையில் நடந்தது. அப்பொழுது கதிர் ரித்விக்கிடம் அவர்களுடைய அன்றைய நாளுக்கான திட்டத்தைக் கேட்டறிந்தான். கதிருக்கு இவர்கள் மூவரையும் மிகவும் பிடித்துவிட்டது. அவர்களையும் தங்களுடன் அழைத்துச்செல்ல விரும்பி அவனது குழு உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்தான். நித்யா மற்றும் தினேஷை தவிர அனைவரும் ஒரு மனதாக தங்களின் சம்மதத்தைத் தெரிவித்தனர். தினேஷுக்கு தன்னைவிட அழகாக இருந்த அம்மூவரையும் பிடிக்கவில்லை,நித்யாவிற்கு தனிப்பட்ட கருத்து என்று எதுவுமில்லை. அனைவரின் முடிவுக்கு உடன்படுவதாக தெரிவித்திருந்தாள். மஜாரிட்டி வின்ஸ் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அனைவரும் ஒன்றாக செல்வது என்று முடிவானது. இதை சுதாகர் அண்ட் கோவிடம் தெரிவிக்க அவர்களும் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். சுற்றுலா செல்லும் இடத்தில் தனியாக சுற்றுவதைவிட இப்படி ஒரு குழுவுடன் சுற்றுவது மகிழ்ச்சியல்லவா?
முதலாவதாக பேரிஜம் ஏரியை பார்க்க அனுமதி வாங்கி இருந்தபடியால் அங்கு சென்றனர். இம்முறை சுதாகர் மதனின் அருகில் அமர்ந்திருந்தான். மதன் " ஹெல்லோ ப்ரோ, நான் மதன். நீங்க பாடின ப்ரொக்ராம் பார்க்கல. சாரி." என்றான். சுதாகருக்கு மதனின் இந்த அறிமுகம் மிகவும் பிடித்தது. பதிலுக்கு சுதாகரும் தனது பெயரை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். இவர்கள் இருவரும் இம்முறை அமர்ந்தது கடைசி இருக்கையில் தான். மற்ற அனைவரும் சுற்றுலாவில் தங்கள் தலையாய கடமையாகிய நடனத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் இருவரும் அவர்கள் மீது ஒரு கண்ணையும் பேச்சில் தங்கள் கவனத்தையும் வைத்திருந்தனர். மதனுக்கு தன் மனதில் உள்ள காதலை யாரிடமாவது பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது பைத்தியம் பிடிப்பதைப்போல் உணர்ந்தான், ஆதலால் சுதாகரிடம் தனது மனதைத் திறக்க ஆரம்பித்தான். "ப்ரோ அந்த பேபி பிங்க் குர்தா போட்டிருக்காங்கள்ள அந்த பொன்னு பேரு நித்யா, அவங்கள நான் ஒருதலையா அவங்க இந்த டீம்ல சேர்ந்த நாள்ல இருந்து காதலிக்கிறேன். ஆனா யாருக்கும் தெரியாது இப்போக்கூட இதை ஏன் உங்ககிட்ட சொல்றேன்னு தெரியல. ஆனா யார்கிட்டயாவது சொல்லலன்னா நான் சீக்கிரம் பைத்தியமாயிடுவேன்னு மட்டும் புரியுது" என்று சொல்லி சிரித்தான். சுதாகருக்கு இதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று புரியவில்லை, மெதுவாக ஒரு தலையசைப்பு மட்டும். மதன் மேலும் தொடர்ந்தான், "சீக்கிரமா அவங்ககிட்ட சொல்லனும் ப்ரோ ஆனா கண்டிப்பா ஏற்றுக்கொள்ளமாட்டாங்க, அதோட அன்னிக்கு தான் எங்க நட்புக்கு கடைசி நாளா இருக்கும். அதனால ஒரு திட்டம் போட்டிருக்கேன், சீக்கிரமா வேற வேல தேடிக்கிட்டு இந்த கம்பனில இருந்து வெளிய போற அன்னிக்கு சொல்லிட போறேன். சம்மதிச்சா சந்தோஷம் இல்லனாலும் பரவால்ல, மனச தேத்திக்குவேன். நீங்க என்ன நெனைக்கிறீங்க? எனக்கு ஓகே சொல்லுவாங்களா?" என்று கேட்டுவிட்டு "உங்ககிட்ட போய் கேக்குறேன் பாருங்க உங்களுக்கு நித்யாப்பத்தி என்ன தெரியும்" என்றான்.
இது அனைத்தையும் மௌனமாகக்கேட்டுக் கொண்டிருந்த சுதாகர் "பாக்க அவங்க உங்க வயசு இல்லனா அதவிட கம்மியா தான் இருப்பாங்க போலிருக்கு ஆனா ஏன் அவங்க இவங்கனு பேசுரிங்க" என்று அதுதான் முக்கியம் போலக்கேட்டான். மதன் "இல்ல ப்ரோ நான் அவங்ககிட்ட பேசும்பொழுது ஒருமைல தான் பேசுவேன் ஆனா என்ன இருந்தாலும் நீங்க ஒரு மூன்றாம் மனிதர் உங்ககிட்ட மரியாதையா பேசுனா தான அவங்களுக்கு மரியாதையா இருக்கும்" என்றான். சுதாகருக்கு உள்ளுக்குள் எதுவோ ஒன்று உடைவதைப்போல் உணர்வு என்ன முயன்றும் கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் குளம் கட்டத்தொடங்கியது.
இதற்குள் பேரிஜம் ஏரியும் வந்திருந்த படியால் அவர்களால் மேற்க்கொண்டு உரையாடலைத் தொடரமுடியவில்லை. சுதாகர் இறங்கி ஆதர்ஷுடன் சேர்ந்துகொண்டான், அவனுக்கு அவன் நண்பனுடனான தனிமை தேவைப்பட்டது, யாருடைய முகத்தையும் பார்க்கவிருப்பமில்லை. ஆதர்ஷும் அவனுடைய முகத்தை வைத்தே நண்பனின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவனை அழைத்துக்கொண்டு எதுவும் பேசாமல் வேறு திசையில் செல்ல ஆரம்பித்தான். இருவரும் சேர்ந்து ஒரு முப்பது நிமிடங்கள் நடந்தபிறகு ஒருவாறாக இயல்புநிலைக்குத் திரும்பினான். சுதாகர் "ஆது வாடா போலாம் ரித்வி தேடுவான்" என்றான். அதற்கும் ஆதர்ஷ் ஒன்றும் சொல்லாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தான். திரும்பி வந்த அவர்கள் கண்டது யாரும் இல்லாத தனிமையில் அமர்ந்திருந்த நித்யாவையும் அவள் கவனிக்க முடியாதபடி சற்றுத்தொலைவில் அவளைக் கண்காணித்துக் கொண்டிருந்த மதனையும் தான். இவர்கள் பார்ப்பதைக் கண்டுகொண்ட மதன் அவர்களை நோக்கிக் கையசைத்தான். அப்பொழுதுதான் சுதாகர் ஆதர்ஷிடம் வாய் திறந்தான். "மதன் நித்யாவ காதலிக்கிறானாம் ஒருதலையா" என்றான். ஆதர்ஷ் சுதாகரை நோக்கி புரியாத பார்வை ஒன்றை வீசினான். "எங்கிட்ட அவள பத்தி பேசும்போது கூட அவங்க இவங்கனு மரியாதையா பேசுறான் டா. கேட்டா நான் மூனாவது மனுஷனாம் எங்கிட்ட அவளுக்கான மரியாதைய குறைக்கக்கூடாதாம், நான் எவ்ளோ தப்பா இருந்திருக்கேன்ல" என்றான். ஆதர்ஷுக்குப்புரிந்தது அவன் தனிமையை நாடியதன் அர்த்தம். மெதுவாக அவன் கைகளை மட்டும் அழுத்திவிட்டான் அதற்குள் இருவரும் மதனை நெருங்கியிருந்தனர்.
ஆதர்ஷ் மதனிடம் "என்னவாம் நித்யா? தனியா உக்காந்திருக்காங்க?" என்றான். மதனும் "அவங்க அம்மா அப்பா ரெண்டு பேருமே ஒரு விபத்துல இறந்துட்டதா சொன்னாங்க, சொந்த பந்தமும் அம்மா அப்பாவோடயே காணாம போய்ட்டதாவும் அவங்க அங்கிள் ஒருத்தர் காசு கொடுத்து உதவி பன்னதால தான் படிப்ப முடிக்க முடிஞ்சதாவும் சொன்னாங்க. அவங்க உதவியா கொடுத்த பணத்தையும் ஆறு மாசத்துல திருப்பிட்டாங்க. அநேகமா இப்போ அவங்க பெற்றோர் நியாபகம் வந்திருக்கும்னு நெனைக்குறேன். அவங்க தனியா நடந்து வரத பார்த்தேன் அதான் ஒரு பாதுகாப்புக்கு நானும் அவங்களுக்கு தெரியாம அவங்க பின்னாடியே வந்தேன்" என்றான். இதைக்கேட்ட சுதாகரின் நிலை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது, மீண்டும் மௌனம். ஆதர்ஷ் மதனிடம் "தேங்க்ஸ்" என்றான். மதன் அவர்களைப் புரியாமல் பார்க்க "சாரி எதோ நெனைப்புல சொல்லிட்டேன்" என்று சமாளித்தான்.
நித்யாவும் ஒருவாறாக தனது தவத்தைக் கலைத்துவிட்டு நிமிர்ந்து பார்க்க இவர்களைக் கண்டுகொண்டாள். நித்யா அழுது தனது வேதனையை போக்கிக்கொள்ளும் ரகம் அல்ல, அவளுடைய துன்பங்களின் வடிகாலாக அவள் எப்பொழுதும் தேர்ந்தெடுப்பது தனிமையைத்தான் என்பதால் முகத்தினை மறைக்க போராட வேண்டிய அவசியம் எப்பொழுதும் இருந்ததில்லை. அவளும் இவர்களைக் கண்டவுடன் முகத்தில் ஒரு ஒட்டவைத்த புன்னகையுடன் எழுந்து வந்தாள். சுதாகர் அவள் மீதிருந்த கண்களை இம்மியளவும் நகட்டவில்லை, ஆழ்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்ப்பது நித்யாவிற்கு தெரிந்தது, இருந்தும் கண்டுகொள்ளவில்லை. அப்படியே பேசிக்கொண்டே நால்வரும் திரும்பி நடக்க, பேச்சுவாக்கில் மதனும் ஆதர்ஷும் முன்னால் நடந்து விட்டனர். சுதாகர் தனது கையில் இருந்த மொபைலை தவறவிட அது நித்யாவின் காலை பதம் பார்த்தது, நித்யா வழியில் முகம் சுருக்கி நிற்க சுதாகர் தரையில் அமர்ந்து நித்யாவின் காலை கையில் ஏந்தி கண்ணில் ஒற்றிக்கொண்டான், அவன் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் நித்யாவின் காலைத்தொட்டது. இவை அனைத்தும் நொடிப்பொழுதில் நடந்து முடிந்திருக்க மதன் திரும்பும் பொழுது கண்டது நித்யாவின் காலைப்பிடித்து விட்டுக் கொண்டிருந்த சுதாகரைத்தான். அவர்களும் நித்யாவை நோக்கி வர நித்யா ஒருவாறு சுதாரித்துக்கொண்டு சுதாகரின் பிடியில் இருந்த காலை விடுவித்துக்கொண்டாள்.
சுதாகரும் தன்னை சமாளித்து எழுந்து ஒரு சாரியுடன் அவ்விடம் விட்டு நகர்ந்தான். அத்துடன் அனைவரும் ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தனர். மீண்டும் பேருந்தில் ஏறிய பின் பாட்டுக்குப் பாட்டுடன் பயணம் செய்ய ஆரம்பித்தனர். முதலில் சுதாகர் பாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட அவனும்
"கண்ணால் பேசும் பெண்ணே
எனை மன்னிப்பாயா?
ஒரு கவிதை தமிழில் கேட்டேன்
எனை மன்னிப்பாயா"
பாடலுடன் நிகழ்ச்சியைத்தொடங்கி வைத்தான். நித்யாவும் சுதாகரும் எதிரெதிர் அணியில் இருந்ததால் நித்யாவின் அணி இப்பொழுது "யா" என்ற எழுத்தில் பாடவேண்டும். நித்யாவின் அணியில் இருந்த ஜெனிஃபர்
"யாரோ யாரோடி உன்னோட புருஷன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்"
என்ற பாடலை அறியாமலே நித்யாவை நோக்கி பாடினாள். நித்யாவின் கண்கள் அனிச்சை செயலாக சுதாகரின் புறம் அரைநொடி திரும்பியதை சுதாகர், ஆதர்ஷ் மற்றும் ரித்விக் மூவருமே கவனித்திருந்தனர். காலையில் இருந்து அநுபவித்த துன்பங்கள் எல்லாம் தூரம் சென்றுவிட்டதைப்போல் உணர்ந்தான் சுதாகர். நித்யாவிற்குமே எதனால் சுதாகரைப் பார்த்தால் என்பது புரியவில்லை, ஒருவேளை அவனது கண்ணீர் அவளது பாதம் தொட்டதால் வந்த இளக்கமா என்று யோசித்துக்கொண்டிருந்தாள். அதற்குள் சுதாகரணியின் முறை வர இம்முறை மதன் பாடினான்.
"நெஞ்சம் எல்லாம் காதல்
தேகம் எல்லாம் காமம்
உண்மை சொன்னால்
என்னை நேசிப்பாயா?"
ஆதர்ஷ் அவனைப்பார்த்து கண்ணை சிமிட்டி சிரிக்க அதன் தொடர்ச்சி தினேஷ் பாடினான்.
"காதல் கொஞ்சம் கம்மி
காமம் கொஞ்சம் தூக்கல்
உண்மை சொன்னால்
என்னை மன்னிப்பாயா?"
என்று முடித்தான். அங்கிருந்து மண்மணம் என்னும் உணவகத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டு ப்ரையன்ட் பார்க் சென்றார்கள். ஆதர்ஷ், சுதாகர், மதன் மற்றும் ரித்விக் ஒன்றாக நடந்துவர நித்யா ஜாஹிருடனும், ஜென்னிஃபெர், மங்கை மற்றும் தினேஷ் ஒரு குழுவாகவும் நடந்து கொண்டிருந்தனர். எந்தவித முகப்பூச்சும் இல்லாமல் ஜாஹிர் நித்யாவிடம் "அவங்க மூனு பேர்ல யாரு நித்யா?" என்றான். அவள் ஜாஹிரை புரியாமல் நோக்க "கொஞ்சம் உக்காந்து பேசலாமா?" என்றான்.
இருவரும் யாருடைய கவனத்தையும் கவராதவாறு சற்று தொலைவில் சென்று ஒரு கல் மேடையில் அமர்ந்தனர். நித்யாவின் புறம் திரும்பிய ஜாஹிர் "இப்போ சொல்லு நிதி, இவங்க மூனு பேர்ல யாரோ ஒருத்தர் உன்ன டிஸ்டர்ப் பன்னுறாங்க, அது யாரு? என்ன விஷயம்னு யார்கிட்டயாவது ஷேர் பன்னிக்கலாம்னு தோனுச்சினா என்கிட்ட சொல்லலாம்" என்றான். நித்யாவின் கண்கள் ஒரு நிமிடம் சொல்லொனா வேதனையைப் பிரதிபலித்தது, உடனே தனது முகபாவனையை மாற்றிக்கொண்டு "சுதாகர், அத தவிர வேற எதுவும் இப்போ நான் சொல்ல முடியாது. ஏன்னா மறுபடி நான் அவன சந்திச்சது ரொம்ப தற்செயலா நடந்த விஷயம். அத தவிற அவனப்பத்தி பேசகூட எனக்கு எதுவும் இருக்க வேண்டாம். ஆனா தான்க்ஸ் ஃபார் ஆஸ்கிங்க். இப்பொ எனக்கே ஒரு தெளிவு கிடைச்சிருக்கு. சரி வா போலாம் இல்லன்னா ஜெனி நம்ம ரெண்டு பேரையும் உண்டு இல்லனு ஆக்கிடுவா" என்று சிரித்தபடி சொல்லிக்கொண்டு எழுந்து நின்றாள். ஜாஹிர் மீண்டும் அவள் கையைப்பற்றி அமரவைத்து "உனக்கு எங்கிட்ட எதும் கேக்க வேணாம் அப்டிதான?" என்றான். நித்யா "நீ எப்டியும் இந்த ட்ரிப் முடியறதுக்குள்ள ஜெனிக்கிட்ட ப்ரொபோஸ் பன்னிடுவ அவளும் ஒகே சொல்லிடுவா. அப்புறம் வீட்டுல எப்டி சொல்றதுனு யோசிக்க ஆரம்பிச்சிடுவ, என்ன நடக்கும்னு யோசிச்சாதான் கேக்க வேண்டிய தேவை வரும். எனக்கு ரிசல்ட் தெரியும் அப்புறம் எதுக்கு டா கேள்வி?" என்றாள். "ஜெனி உங்கிட்ட எதும் சொன்னாளா" என்றான். "நீ அவகிட்ட சொன்னியா?" என்று நித்யா கேட்க அதற்கு இல்லை என்பது போல் தலையாட்டினான். "அப்புறம் எப்படி அவ எங்கிட்ட சொல்லுவா?" என்று திருப்பினாள்.
ஜாஹிரின் கண்கள் சாசர்போல் விரிந்தது. "எப்படி நீ நாங்க சொல்லாமலே புரிஞ்சிக்கிறனு கேக்கமாட்டேன் ஆனா நீ, ரொம்ப நல்ல ஃப்ரெண்ட். நா உனக்கு எவ்வளவு நல்ல ஃப்ரெண்டோ அத விட நீ எனக்கு நல்ல ஃப்ரெண்ட்" என்றான். நித்யா மெதுவாக கண்சிமிட்டி சிரித்துக்கொண்டாள். இங்கு தினேஷ், மங்கை மற்றும் ஜெனி கொஞ்சம் மனிதர்களையும் கொஞ்சம் இயற்கையையும் ரசித்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தனர். தினேஷ் தூரத்தில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணைக்காட்டி "ஹெய் குயின், அவ என் ஆளு" என்றான். அதற்கு மங்கையோ "யாருடா அந்த கருப்பு டீசர்ட்டா?" என்றாள். அதற்கு தினேஷ் ஆம் என்னும் விதமாக தலையசைக்க, ஜெனியோ "அருகில் நின்றிருந்த மற்றொரு பையனைக்காட்டி "அவன் அவ ஆளு" என்றாள். அதில் கடுப்பாகிய தினேஷ் "சரி அப்ப வாங்க ஒரு கேம் ஆடலாம். நம்ம பொய் அந்த சேர்ல உக்காந்துக்கலாம், இங்க ஒரு கல் வசுக்கலாம், மொதல்ல இந்த கல்ல தாண்டி நடந்து வர பொண்ணு என் ஆளு. ஒகேவா" என்றான். அதற்கு ஒத்துக்கொண்ட மங்கையோ, "சரி அப்படினா மொதல்ல அத தாண்டி நடந்து வர பையன் என் ஆளு" என்றாள். மூவரும் ஒரு மனதாக இந்த மானங்கெட்ட விளையாட்டுக்கு ஒத்துக்கொண்டு ஒரு கல்லை எடுத்து வைத்து விட்டு அவர்கள் திட்டமிட்ட பென்ச்சில் சென்று அமர்ந்துகொண்டனர். முதலாவதாக ஒரு மஞ்சள் சுடிதார் அணிந்த ஒரு பெண் அந்த கல்லை நோக்கி நடந்து வர தினேஷின் கண்கள் ஆனந்தத்தில் விரிந்தது, "அங்க பாருங்க அந்த மஞ்ச காட்டு மைனா எனக்கு தான்" என்று சொல்லிவிட்டு
அந்திவானம் அரைக்கும் மஞ்சள்
அக்னி கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத்தோடு ஜனித்த மஞ்சள்
கொன்றை பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
என்று பாட ஆரம்பித்தான். அந்த பெண் அந்த கல்லின் அருகில் வரும்பொழுது அவளது கைபேசி இசைக்கத்துவங்க அதில் என்ன சொல்லப்பட்டதோ அவள் வந்த வழியே திரும்பிச்சென்றாள். தினேஷின் முகம் சோர்ந்து போக, இப்பொழுது ஜெனி பாட ஆரம்பித்தாள்.
அவள் பறந்து போனாளே
உன்னை மறந்து போனாளே
என்று பாடி ஜெனியும் மங்கையும் ஹைஃபை கொடுத்துக்கொண்டனர். சற்றும் மனம் தளராத தினேஷ் அடுத்த வரவிற்காக காதிருக்க துவங்கினான், ஜெனியும் மங்கையும் கூட ஆவலாக அந்த பக்கம் பார்திருந்தனர். அப்பொழுது அந்த வழியாக சந்தனகலர் சட்டை அணிந்த ஒரு பையன் வர, மங்கை இப்பொழுது "இது என் டர்ன், நா பாடுவேன்" என்று கூறி
காக்கிசட்டை போட்ட மச்சான்
அடுத்த லைன் தெரியல
சீக்கிரம் வந்துடு
என்று பாடினாள். இடைக்கேட்ட மற்ற இருவரும் சிரித்தனர். இவர்கள் சிரிப்பு சத்தம் சற்று அருகில் பேசிக்கொண்டு நடந்து கொண்டிருந்த சுதாகர் குழுவின் கண்களில் விழுந்தது, ரித்வி உடனே "டேய் வாங்கடா நாமளும் போய் என்னானு கேப்போம்" என்றான், ஆனால் சுதாகரும் ஆதர்ஷும் "டேய் அவங்களுக்குள்ள எதாவது பெர்சனலா இருக்கும் டா நம்ம போனா நல்லா இருக்காது" என்றான். ஆனால் ரித்வி இவர்களின் பேச்சைக்கேட்பதாக இல்லை, "நீங்க வரலைனா போங்க டா நான் போறேன்" என்று கூறி அவர்களை நோக்கி ஓடத்தொடங்கினான். அவன் ஓடி வந்தமையால் சந்தன சட்டைக்குமுன்பாக அந்த கல்லைக்கடந்து அவர்களிடம் சென்றுவிட்டான். முதலில் இதை எதிர்பார்க்காத மூவரும் திகைத்து பின் தினேஷ்
கருப்பு தான் உனக்கு பிடிச்ச கலரு
டொய்யோ டொய்யோ
என்று ரித்வி அனிந்திருந்த ஸ்வர்ட் ஸ்ர்ட்டின் வண்ணமான கருப்பை வைத்துப்பாட ஆரம்பித்தான். இங்கு ஜெனியோ முதலில் திகைத்துப்பின் வயிற்றைப்பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
சாராம்சம் புரியாத ரித்வி முழித்துக்கொண்டிருக்க மங்கை எதுவும் பேசாமல் தலை குணிந்து அமர்ந்திருந்தாள். தினேஷும் ஜெனியும் ஹைஃபைக் கொடுத்துக்கொள்ள ரித்வி "என்னடா விஷயம்? எனக்கும் சொல்லுங்க டா" என்றான். தினேஷ் அவர்கள் விளையாட்டின் விதிமுறைகளை விளக்க இப்பொழுது அசடு வழிவது ரித்வியின் முறையாயிற்று. "சரி சரி விடுங்க டா அடுத்த ஆள பாப்போம்" என்றான் ரித்வி. நால்வரும் தொடர்ந்து அடுத்த நபருக்காக காத்திருக்க ஆரம்பித்தனர். ஜாஹிரும், நித்யாவும் இவர்களை தேடிக்கண்டு கொண்டு இவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். இங்கு தினேஷ் பாகப்பிரிவினையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான், "குயின் உன்னோட சான்ஸ் முடிஞ்சது, இனி வர பொன்னு எனக்கு பையன் ஜெனிக்கு. ரித்வி புதுசா கேம்ல ஜாய்ன் பன்னதால, அதுக்கு அடுத்து வர பொண்ணு உனக்கு. ஒகேவா?" என்றான். ஆனால் மங்கையோ இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை,"ரித்வி கேம்ல இருக்கதால எனக்கு வேற பையன் தான் வேனும், அதனால அடுத்து வர பையன் எனக்கு தான்" என்றாள். இதற்கு சம்மதிக்காத தினேஷ் "சரி அப்படின்னா ரெண்டாவதா வர பையன் தான் உனக்கு. ஏன்னா ஏற்கனவே ஒரு சான்ஸ் உனக்கு கொடுத்து அது ஃபௌலாக்கிட்டான் இந்த பன்னிக்குட்டி. இனி நீ ரெண்டாவது சான்ஸ்தான் எடுக்கனும்" என்றான். அது அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்டு ஆட்டம் தொடர்ந்தது. சரியாக இப்பொழுது நித்யாவும் ஜாஹிரும் இவர்களை நோக்கி வர ஆரம்பித்தனர். இதைப்பார்த்த ஜெனி மனதிற்க்குள் குத்தாட்டம் போட்டுக்கொள்ள, தினேஷ் வெளிப்படையாகவே பாடல் பாட ஆரம்பித்தான். "நினைவெல்லாம் நித்யா அந்த படத்திலிருந்து
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை நம் சொந்தம்
என் வாசல் ஹேய் வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹேய் அரங்கேறும் கண்ணோரம்
" என்று பாட ஆரம்பித்தான். இம்முறை இவர்கள் எதிர்பார்ப்பைப் பொய் ஆக்காமல் நித்யாவும் ஜாஹிரும் ஒன்றாக கல்லைத்தாண்டி உள்ளே நுழைந்தனர். இப்பொழுது தினேஷ் சந்தோசத்தில் குதிக்க ஆரம்பிக்க மற்ற இருவரும் கடுப்பாகினர். ஜெனி இந்த உலகத்திலேயே இல்லை. புதிதாய் வந்த இருவரும் என்னவென்று கேக்க ரித்விக்கு சொல்லப்பட்ட கதைகள் இருவருக்கும் சொல்லப்பட்டது, ஜாஹிர் ஜெனியை ஒரு பார்வை பார்த்துவிட்டு "நான் இந்த விளையாட்டுக்கு வரலப்பா, சும்மா ஆடியன்ஸ்போல் ல உக்காந்துகிறேன்" என்றான். நித்யா அவனைப்பார்த்து சிரித்துவிட்டு, "ஆட்டத்துக்கு நான் ரெடி" என்றாள்.இப்பொழுது தினேஷைப் பார்த்து மங்கையும் ரித்வியும் "உன் மூஞ்சிக்கு ஓயாமெல்லாம் சோகப்பாட்டு பாட முடியாது, அடுத்துவர பொன்னு ரித்விக்கு. உனக்கு ரெண்டாவதா வர பொண்ணு. ஒகே வா?" என்றாள். தினேஷும் சோகமாக தலையாட்டிக்கொண்டான். இப்பொழுது தினேஷ் முதலில் பார்த்த கருப்பு டீசர்ட் பெண்ணும் அவளுடன் இருந்த பையனும் அவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். மங்கை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருக்க அவர்களது எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல் அவர்கள் இருவரும் இவர்களுடைய கல்லைக்கடந்தனர். இவர்களைக் கடக்கும்போது அந்த பையன் கருப்பு டீசர்ட் பெண்ணை அக்கா என்றழைத்து எதையோ காட்டிக்கொண்டிருந்தான். தினேஷ் இப்பொழுது கொலைவெறியுடன் மங்கையை அடிக்க துரத்த, மங்கையோ அவன் கையில் அகப்படாதவாறு போக்குக்காட்டிக்கொண்டே, "டேய், ஆம்பூர் பிரியானி உளுந்தூர்பேட்டைல இருக்க நாய்க்கு தான் கிடைக்கனும்னு விதி டா, மீ பாவம். என்ன ஒன்னும் பன்னாத" என்றாள். தினேஷும் "எனக்குனு ஒரு தேவதை வானத்துல இருந்து இறங்கிவருவா, நான் அவளுக்காக காத்திருக்கேன்" என்று கூறிக்கொண்டு மீண்டும் கல்லைப்பார்க்க ஆரம்பித்தான். இப்பொழுது குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்த இரண்டு பாட்டிகள் ஒன்றாக அந்த கல்லைத்தாண்டி நடந்து வந்தனர். ரித்வி "கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?" என்க மற்ற நால்வரும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தனர். கடுப்பாகிய தினேஷ் "போங்கடா நா இந்த விளையாட்டுக்கு வரல" என்றான். அதற்கு மங்கையோ "அப்டிலாம் போக முடியாது தம்பி, அந்த ரெண்டு லட்டு தான் வானத்துல இருந்து இறங்கி வந்த உன்னோட தேவதைங்க. நம்ம நித்யாக்கு யாருனு பாத்துட்டு விளையாட்ட முடிசிக்கலாம்" என்றாள். "அப்ப உனக்கு வேனாமா?" என்றான் தினேஷ். அதற்கு மங்கையோ "அந்த கருப்பு டீசர்ட் பொண்ணுக்கூட போன பாடிபில்டர் எனக்கு" என்றாள்.
ஓஓஓ என்ற தினேஷ் "கடவுளே, நித்யாவுக்கு எதாவது தாத்தா வந்து எனக்கு கம்பெனிக்கு ஆள்சேர்த்து விடு" என்று சத்தமாக வேண்டிக்கொள்ள நித்யா அவனை முறைத்தாள். ஆனால் வெகுநேரம் ஆகியும் இவர்கள் பக்கம் யாரும் வராமல் போக இவர்கள் விளையாட்டை முடித்துக்கொள்ள முடிவெடுக்கும் பொழுது சுதாகரும், ஆதர்ஷும், மதனும் அந்த பக்கமாக வந்தனர். மூவரும் ஒரே சமயத்தில் உள்ளே நுழைய இப்பொழுது முழிப்பது நித்யாவின் முறையாயிற்று. இடையில் மதன் தனது ஷூவின் கயிற்றை சரி செய்வதற்காக குனிய மற்ற இருவரும் ஒன்றாக ஒரே சமயத்தில் நுழைந்தனர்.
அவர்கள் இருவரும் கல்லைத்தாண்டி வருவதைக்கண்ட இவர்கள் அறுவரும் ஒன்றாக சேர்ந்து திட்டமொன்றை தீட்டினர், அதன் படி அவர்களிடம் விளையாட்டைப்பற்றிய விவரம் ஒன்றும் கொடுக்காமல் "நீங்க ரெண்டுபேரும் எங்க கேம்க்கு வறீங்களா இல்லையா" என்றான் ரித்வி. நித்யாவின் இதயத்தில் மெல்லிய படபடப்பு. சுதாகர் நித்யாவின் முகத்தை ஒரு கணம் நோக்கிவிட்டு இல்லை என்று தலையசைக்க ஆதர்ஷ் ஆமென்று தலையசைத்தான். மீண்டும் சுதாகர் தலையைத்திருப்பி நித்யாவைப்பார்த்தான் ஆனால் அவள் முகத்தில் இருந்து எதையும் கண்டுகொள்ள முடியவில்லை. இப்பொழுது தினேஷ் "அப்போ நித்யாவோட சான்ஸ் ஓவர்" என்றுவிட்டு ஆதர்ஷிடம் விளையாட்டின் விதிமுறைகளை விளக்கினான். மதனும் அங்கு வந்து சேர "வட போச்சே" என்ற ரீதியில் முழித்துக்கொண்டிருந்தான். அதற்குள் கதிர் அங்கு வந்து அனைவரையும் அழைக்க ஆட்டம் அத்துடன் நிறைவு பெற்றது.