ஹாய் ஃப்ரெண்ட்ஸ். இது என்னுடைய முதல் நாவல். கதையைப் படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களைப் பகிரவும்.
நித்யாவின் மற்ற நாட்களை போல் அல்லாது இந்நாள் அவளுக்கு அருமையாக புலர்ந்திருந்தது. விழிப்புக்கடிகை இல்லாமல், அலுவலகம் சென்ற பின்பு நடக்கும் திமிர் பிடித்த சீனியரின் தொல்லைகளை பற்றி யோசியாமல் மிகவும் சந்தோஷமாக விழித்திருந்தாள். காரணம் இன்று அவர்களின் அலுவலகத்தில் இருந்து நண்பர்களுடன் இன்ப சுற்றுலாவிற்காக கொடைக்கானல் வந்திருந்தாள். நேரம் மணி ஆறை தொட்டிருக்க அவர்கள் வந்த பேருந்து ஜெயராஜ் அன்ன பாக்கியம் சர்ச்சை கடந்து மலை மீது ஏறத்தொடங்கி இருந்தது. அருகில் அமர்ந்திருந்த அவள் தோழி ஜெனிஃபரை நோக்கினாள், ஆழ்ந்த உறக்கம். இவள் எழுந்தது முதல் இவளை கண்காணித்துக் கொண்டிருந்த அவளது சீனியர் மற்றும் சகோதரனாகிய கதிரைக் கண்டு ஒரு காலை வணக்கத்தை தெரிவித்துவிட்டு மீண்டும் தனது தலையாய கடமையாகிய வேடிக்கைப் பார்த்தலில் மூழ்கிவிட்டாள்.
கதிருக்கு எப்பொழுதும் போல் நித்யாவை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. கதிர் நித்யா வேலை செய்யும் ப்ரொஜெக்டின் தற்போதைய தற்காலிக டீம் லீடர். கதிர் தீராத விளையாட்டுப் பிள்ளை லிஸ்டில் சேர எதையாவது செய்து நண்பர்களிடம் மொக்கை வாங்குவதை முழுநேர பொழுது போக்காக கொண்ட புதிதாக திருமணமான இருபத்தி ஏழு வயது இளைஞன். இந்த ப்ரொஜெக்டில் சேர நித்யாவை இன்டெர்வியு எடுத்த பெருமை கதிரையே சாரும். நித்யா அழகே பொறாமை படும் பேரழகி, அப்படிப்பட்ட பெண் அண்ணா என்று அழைப்பது அத்தனை உவப்பான விஷயம் அல்லவே. கதிரும் ப்ரொஜெக்ட் சேர்ந்த நாளில் இருந்து நித்யாவிடம் அண்ணாவென கூப்பிடவேண்ட்டாம் என்று கேட்டுக் கேட்டு அலுத்துப் போய் கடைசியில் அவளை தங்கையாக தத்தெடுத்ததுதான் மிச்சம். இவர்கள் வேலை செய்வது ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில். இவர்களுடைய நூரு பெர் கொண்ட குழுவில் ஆண் பெண் பாகுபாடின்றி நித்யாவை சைட்டடிக்கும் ஒரு கும்பல் ஆனால் நித்யாவிற்கு அணைவரும் நண்பர்களே. அதைத்தாண்டி அவள் சிந்திப்பதும் இல்லை அவளிடம் வந்து வழிபவர்களை அனுமதிப்பதும் இல்லை. மேலாளார்கூட ஒருமுறை காபீக்காக அழைத்து மொக்கை வாங்கி இருக்கிறார். இருப்பினும் அவளுடைய வேலை செய்யும் பாங்கும், கற்பூர புத்தியும் மேலாளரைக் கட்டி போட்டு வைத்திருக்கிறது. நட்புக்கரம் நீட்டிக்கொண்டு வருபவர்களுக்காக நித்யாவின் கரங்கள் எப்பொழுதும் நீண்டே இருக்கும்.
ஒவ்வொருவராக கண்விழிக்க ஆரம்பித்துவிட்டனர், ஆனாலும் நித்யாவின் ஆருயிர் தோழி ஜெனி இன்னும் நீண்ட உறக்கத்தில் தான். ஜெனியும் நித்யாவைப்போல் அழகி தான், ஆனால் தன்னிடம் வரும் வழிசல்களில் நல்லதை தேர்ந்தெடுத்து ரசிக்கும் மனப்பான்மை உடையவள். ஆண் பெண் பாகுபாடின்றி உழைக்கும் துறையில் இருப்பதால் எல்லோருடனும் நட்பு பாராட்டியாக வேண்டிய கட்டாயத்தில் நித்யா அணைவரையும் ஏற்றுக்கொள்ள பழகிக்கொண்டாள். கல்லூரி காலங்களில் இருந்த நித்யாவுக்கும் இப்பொழுது இருக்கும் நித்யாவுக்கும் மலையளவு வித்தியாசம் உண்டு. ஆனால் அதையும் நித்யாவை தவிற ஒருவரும் அறியிலர்.
நித்யாவின் தோழன் ஜாஹிர் விழித்து நித்யாவை அழைத்து அருகில் இருத்திக்கொண்டான். ஜாஹிர் அடுத்தவர் மனதை புண்படுத்தாவண்ணம் நகையாடுவதில் முனைவர் பட்டம் வாங்கிவிடுவான். நித்யாவும் ஜாஹிரும் சேரும்பொழுது அவ்விடத்தில் சிரிப்புக்குப் பஞ்சம் இருக்காது. நித்யா எத்தனை பேரழகியாக இருந்தாலும் ஜாஹிருக்கு என்றும் அவள் தோழி மட்டும் தான். அதனால் தானோ என்னவோ நித்யாவுக்கும் ஜாஹிரை எளிதாக அவளுடைய வட்டத்தில் இணைத்துக்கொள்ள முடிந்தது.
நித்யா ஜாஹிரிடம் "ஏய் என்னடா இது? ஃபன் பண்ணலாம் கூட்டிட்டு வந்து தூங்குறாங்க. அண்ணோவ்... கதிரண்ணோவ்... என்ன இது எல்லாரும் தூங்குற அழக ரசிக்கிறிங்களா? ஊர்ல இருக்க அண்ணிக்குக் கால் பண்ணி அண்ணன் வந்து உங்கள ஊர்லயே கழட்டிவிட்டுட்டு வந்துட்டு டெஸ்டிங்க் டீம் ரேவதிய சைட் அடிக்கிறார்னு சொல்லவா?" என்று ஜாஹிரிடம் ஆரம்பித்து கதிரிடம் முடித்தாள். கதிர் "அம்மா பரதேவதையே நானே என் பொண்டாட்டி கைல கால்ல விழுந்து பெர்மிஸ்ஸன் வாங்கி இருக்கேன்மா. நீ ஊருக்கு போனதும் எனக்கு டிவோர்ஸ் வாங்கி குடுத்துறாத" என்றான். நித்யா "அண்ணன் ரொம்ப அழுவுறாரு அடுத்த ஆள பாப்போம் வா" என்றாள். ஜாஹிர் "நம்ம ராஜ மாதா (மானேஜர்) செபசஸ்டினாவோட, கொரட்டை சத்தத்துல பாறைதான் உருண்டு வருது போலனு ஆப்போஸிட் ல போரவன்லாம் டர் ஆகி பாக்குறான்". "அப்ப நீ வேனா எல்லார்கிட்டயும் இது பாற உருளுர சத்தம் இல்ல எங்க தாய்கிழவியோட கொரட்ட சத்தம்னு மைக் போட்டு சொல்றியா?" என்றாள் நித்யா. இவர்கள் உறங்குவதாக எண்ணியது போல் நடித்துக் கொண்டிருந்த செபஸ்டினா இதைக் கேட்டு கொலைவெறியுடன் முறைத்துக்கொண்டிருந்தார்.
ஜாஹிர் "அய்யோ தாய்க்கிழவி காண்டாகுது நம்ம ஆள மாத்திருவோம். சீனியர் உங்களுக்கு கதிர்னு பேரு வச்சதுக்கு பதிலா குதிர்னு வச்சிருக்கலாம்" என்றான். நித்யா "ஏன்டா என் அண்ணாவ அப்டி சொல்ட்ர, அவரு தங்கச்சி நான் இருக்குற வர எவனும் அவர கலாய்க்க முடியாது, சாவடிசிருவேன். எதோ என் அண்ணன் நேத்து கொஞ்சம் எக்ஷ்ட்ரா பிரியாணி சாப்டதால லைட்டா தொப்ப வெளிய தெரியுது. இப்ப அதனால என்ன கெட்டுப்போச்சு? இழுத்துப்பிடிச்சிருக்க மூச்ச வெளிய விட்டா அந்த நடு பட்டன் தெரிச்சிரும். அதனால எல்லாம் நீ என் அண்ணாவ குதிர்னு சொல்லுவியாடா? விட்டா குந்தானினு சொல்லுவ டா. பிச்சிபுடுவேன் பிச்சி" என்றாள். ஜாஹிர் "சீனியர் இதெல்லாம் இவளோட மைண்ட் வாய்ஸ், நா மீன் பன்னது இப்டி ஒரு பாட்டு கூட போடாம ரேவதிய பாத்துட்டு இப்படி உரல் மாதிரி உக்காந்துட்டு வரீங்களேனு தான். " கடுப்பாகிய கதிரோ "டேய் உங்க ரெண்டு பேரு மனசுலயும் உள்ளதெல்லாம் கொட்டிட்டீங்களே டா. இப்போ பாருங்க டா என்னோட பெர்ஃபார்மன்ஸ. அண்ணா ட்ரைவர் அண்ணா பாட்ட போடுங்கனா. அதும் நம்ம சீர்காழி கோவிந்தராஜன் பாடுன பாட்டா போடுங்கனா. ஒரு பய தூங்க கூடாது" என்றான்.
"விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாம்"
என்று சீர்காழி கோவிந்தராஜன் 'ஐயா ஒலிப்பெருக்கி வழியாக அணைவரின் செவிகளையும் தொட ஆரம்பித்து விட்டார்.
முற்று முழுதாக உறக்கம் கலைந்து எழுந்த செபாஸ்டினாவோ கொலை வெறியுடன் நித்யாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். இதுவரை இதை கண்டும் காணாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நித்யாவை ஒரு தலையாய் காதலிக்கும் மதன் சந்தமாக சிரிக்க ஆரம்பித்து விட்டான். மதன் நித்யாவை ஒருதலையாய் காதலிப்பது நித்யாவிற்கு மட்டுமல்ல, அவர்கள் குழுவில் யாருக்குமே அறிவிக்கப்படாத விஷயம். பெண்களுக்கென்று ஒரு தனித்திறமை உண்டு, தங்களுடன் பழகம் ஆண்கள் எந்த நோக்கத்தில் பழகிறார்கள் என்பதை எளிதாக கண்டு கொள்ள முடியும். நித்யாவும் மதனின் மனதை ஊகித்தும் தெரியாததுபோல் சகஜமாக பழகிக் கொண்டிருக்கிறாள்.
நித்யாவைப் பொறுத்தவரை அவளுக்கு தெரியும் என்பது மதனுக்குத் தெரியவந்தால் அவர்களுக்குள் இருக்கும் நட்பும், அலுவல் ரீதியான உறவும் பாதிக்கப்படலாம். எனவே இப்படியே இருப்பதே நலம் என எண்ணிக்கொண்டிருக்கிறாள். இவர்கள் பட்டாளாத்தில் அடுத்த நபர்கள் தினேஷ் மற்றும் மங்கையர்க்கரசி. இவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை, இருவருமே அழகை ஆராதிக்க தெரிந்த நல் உள்ளங்கள். வழிசல்கள் என்றும் சொல்லலாம். இருப்பினும் நல்ல நண்பர்கள் மற்றும் திறமையான ஊழியர்கள்.
ஒரு வழியாக பேருந்தில் இருந்த அணைவரும் விழித்தாயிற்று. இடது பக்க சாளரத்தின் வழியாக நன்கு மலையின் அழகை ரசிக்க முடியும் என்பதால், நித்யா தினேஷின் அருகில் சென்று அமர்ந்தாள் . அருகில் உள்ள தினேஷ், "இன்னிக்கு கூப்பரா விடிஞ்சிருக்கு எனக்கு, இந்த வெய்யில் கூட அழகா தெரியுதுன்னா பாரேன்" என்றான். அவனது தொலைபேசியை கையில் எடுத்த நித்யா "இந்த மொபைல தூக்கி வெளிய போடுறேன், நீ சத்தம் போடு வண்டிய நிப்பாட்டுவாங்க. கீழ இறங்கி பாரு வெய்யில் இன்னும் அழகா தெரியும்" என்றாள். "தெரியாம சொல்லிட்டேன் தயவுசெஞ்சு அப்டி எதும் பன்னிடாதம்மா" என்று சரண்டர் ஆனவன் நித்யாவைப் பார்த்து கைகளை உயர்த்தினான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த கதிர் "ஏன்டா அவ தான் கோவில்பட்டி வீரலெட்சுமினு தெரியும்ல? அப்புறம் ஏன்டா அவகிட்டயே வம்பு பன்ற என்றான்". ஆம் நித்யாவின் சொந்த ஊர் கோவில்பட்டி, தினேஷ் இது போல பேசி முன்பும் நித்யாவிடம் அடியெல்லாம் வாங்கியிருக்கிறான். ஆனாலும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறான். நித்யாவின் மீது இவனுக்கு காதலும் இல்லை ஈர்ப்பும் இல்லை. இருப்பினும் இப்படி எதையாவது பேசி அவளிடம் சண்டையிட பிடிக்கும். மங்கையர்க்கரசி பெண் தினேஷ் அவள் இதுபோல் வம்பு செய்வது ஜாஹிரிடத்தில். இந்த குழுவில் நித்யாவை தவிர ஐந்து பேரும் (ஜென்னிஃபெர், மதன், ஜாஹிர், மங்கை, தினேஷ்) சென்னையை சேர்ந்தவர்களே.
இவர்கள் அல்லாது இன்னும் சிலபேருடன் அவர்கள் பேருந்து கொடைக்கானலை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருந்தது. பேருந்தில் இருந்த அனைவரும் ஒரே ப்ரொஜெக்டை சேர்ந்த வெவ்வேறு குழு உறுப்பினர்கள். அனைவருக்கும் ஒரே மேலாளர் செபாஸ்டினா. கதிர் நித்யா குழுவின் குழுத்தலைவன். பேருந்தில் இருந்த இருபதில் பதினாரு பேர் இருபத்தி ஐந்து வயதிர்குட்பட்ட இளைஞர்கள், ஆதலால் கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இல்லை. ஆடலும் பாடலுமாக இவர்கள் பேருந்து பதினாறாவது கொண்டை ஊசி வளைவை எட்டும்போது இவர்கள் பேருந்தை மூன்று பேர் நிறுத்த கூறி கை அசைத்தார்கள். அவர்கள் மூன்று பேரும் சொகுசு பேருந்தில் கொடைக்கானல் வந்து அங்கிருந்து வாடகை வாகனம் மூலம் கொடைக்கானலை சுற்றிப்பார்க்க திட்டமிட்டிருந்தனர். பதின்மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் வரும்பொழுது வியூ பாய்ன்ட் என்று சொல்லி ஓட்டுனரிடம் பேருந்தை நிறுத்துமாறு சண்டையிட அவரும் பேருந்தை நிறுத்தி இவர்கள் மூவரையும் பயணப்பொதிகளுடன் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார். அங்கிருந்து மூன்று வளைவுகள் கால்நடையாக ஏரியவர்கள், மூன்றாவது வளைவுக்குமேல் ஏறமுடியாமல் வரும் வாகனங்களிடம் லிஃப்ட் கேக்க ஆராம்பித்து விட்டார்கள். அவர்கள் மூவரில் சுதாகர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற பாட்டுப்போட்டியில் பங்கேற்று முதல் பரிசை தட்டிச்சென்றிருக்கிறான். அதற்கான கொண்டாட்டத்திற்காக தான் அவர்கள் கொடைக்கானல் வந்தது. மற்ற இருவர் பெயர் ஆதர்ஷ் மற்றும் ரித்விக், இருவரும் தனியார் அலுவலகத்தில் பணிபுரிகிறார்கள். இம்மூவரும் பால்ய சினேகிதர்கள், பள்ளிப்படிப்பை மட்டும் ஒன்றாக முடித்துவிட்டு அவரவர் மதிப்பெண்களுக்கேற்ப கிடைத்த பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்பையும் நிறைவு செய்திருந்தனர். சுதாகருக்கு சிறுவயது முதலே பாடுவதில் ஆர்வம் அதிகம் ஒரு சிறந்த பாடகனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. மற்ற இருவரும் எல்லாக்குழந்தைகளைப்போல் சிறுவயதில் இரானுவம், நடுநிலைப்பள்ளியில் விஞ்ஞானி, உயர்நிலைப்பள்ளியில் மருத்துவர் மேல்நிலைப்பள்ளியில் பொறியியல் என்று கனவுகளை மாற்றிக்கொண்ட நம்மைப்போல் இருவர்.
முன்பு டிரைவரின் அருகில் அமர்ந்திருந்த கதிருக்கு சுதாகரை அடையாளம் காண முடிந்தது. விளைவு பேருந்து நிறுத்தப்பட்டு இவர்களும் சேர்ந்து இருபத்திமூவரோடு பேருந்து கொடைக்கானலை நோக்கி நகர ஆரம்பித்தது. சும்மாவே பாட்டு கூத்து என்று களை கட்டும் சுற்றுலாவில் பாடகன் ஒருவன் கிடைத்தால் சும்மா விடுவார்களா என்ன? சுதாகரிடம் பாட்டு பாடுமாறு கோரிக்கை விட்டுக்கப்பட்டது. நித்யா புதிதாய் வந்தவர்களிடம் பேச முயர்சிக்கவில்லை,பொறுமையாக நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்துகொண்டிருந்தாள். அதுதான் நித்யா மற்றும் ஜெனிஃபெரின் குணாதிசயம். இருவருமே தேவையானவர்களிடம் மட்டுமே பேசிக்கொள்வர்.
சுதாகருக்கு பாடுவது என்பது எப்பொழுதுமே பிடித்தம் இவர்களாக கேட்டு மைக்கை கையில் கொடுக்கவும், மகிழ்சியாகவே பாட ஆரம்பித்தான்.
"இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்
ஓஹோ… ஹோ ஒரே ஞாபகம்
ஒஹோ… ஹோ உந்தன் ஞாபகம்
காதல் காயம் நேரும் போது
தூக்கம் இங்கு ஏது
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்"
என்று கண்ணைமூடி பாடி முடித்ததும் கரகோசம் செவிப்பறையை கிழித்தது. பேருந்தில் இருந்த அனைவரும் இதை கைத்தட்டி ரசித்திருந்தார்களென்றால் ஆதர்ஷும் ரித்விக்கும் சுதாகரை சந்தேகக்கண்கொண்டு பார்த்திருந்தனர். கண்ணைத்திறந்த சுதாகர் தன்னையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்த நண்பர்களை பார்த்துவிட்டு நித்யாவை ஒருமுறைப்பார்த்தான். நொடிப்பொழுதில் நித்யாவின் மீதிருந்த பார்வையை மாற்றியும் கொண்டான். இந்த ஒரு கணநேர பார்வை போதுமாயிருந்தது ஆதர்ஷுக்கும் ரித்விக்கிற்கும்.