ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
Happy new Year...
எல்லோருக்கும்... கொஞ்சம் பிஸி.. சாரி... லேட்டா சொன்னதுக்கு அண்ட் எபிசோட் போட்டாச்சு... படிங்க.. கமெண்ட்ஸ் சொல்லுங்க,,, அடுத்த எபில மீட் பண்ணலாம்
Thanks
Praveena Vijay
அத்தியாயம் 97-2
/* ஜூன் ஜூலை மாதத்தில் ரோசா பூவின் வாசத்தில்
ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்
மனம் பாராஷூட் கட்டிதான் வின்னில் பறக்கும்
வானதின் உச்சிக்கு நிலவு வந்த நேரத்தில்
நீ என்ன தொட்டாக்கா பொன்னு பொறப்பா
பூவெல்லாம் பூவெல்லாம் பூக்க போர நேரத்தில்
நான் உன்ன தொட்டாக்கா பையன் பொறப்பான்
மைனா மைனா ஒன்னு கூடும் நேரத்தில்
நாம சேர்ந்தால் அட ரெட்ட புள்ளதான்*/
நாராயணன்… வைதேகி… அர்ஜூன் மட்டுமல்லாமல் அந்த வீட்டின் அடி ஆட்கள் வரை அனைவரும் தொலைக்காட்சித் திரையில் கவனம் வைத்திருக்க… இத்தனை பேரின் கண்காணிப்புகளுக்கு மத்தியில் ரிஷியும் கண்மணியும்…
அவர்கள் இருவரும் பேசுவதைத்தான் வெளியில் இருப்பவர்களால் கேட்க முடியாது… அதே நேரம் அங்கிருந்து அவர்கள் தகவல் அனுப்பினால் ரிஷி கண்மணியால் கேட்க முடியும்…
“ரிஷி… நீங்க உங்க பொசிஷன்லதான் இருந்து மூவ் பண்ண நினைக்காதீங்க” ரிஷிக்கு மீண்டும் கட்டளை வந்திருக்க… ரிஷி சட்டென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டான்… தலையில் கைவைத்தபடி…
பெருமூச்சு விட்டு தன்னை நிதானப்படுத்திக் கொள்ளவே நிமிடங்கள் தேவைப்பட்டது…
“15 மினிட்ஸ் தான்..” கண்மணி அவனிடம் சொல்ல… ரிஷி நிமிரவில்லை… அவள் வார்த்தையைக் கேட்டும்…
அங்கே நடந்து கொண்டிருப்பதை உள்வாங்கி கிரகித்துக் கொள்ள ரிஷி பெரும்பாடு பட்டான்… கண்மணியைச் சந்தித்த முதல் நாள் முதல் அவனோடு இருந்த நாள் வரை… அவளைச் சந்திக்க வேண்டும் இப்படி ஒரு பிரயத்தனம் இவன் பண்ணியதே இல்லை… அதற்கு அவசியமும் ஏற்பட்டதில்லை… கண்மணி இல்ல வீட்டுக்காரம்மாவாக இருந்த போதும் சரி…. ரிஷியின் வீட்டுக்காரம்மாக அவள் மாறிய போதும் சரி கண்மணியைச் சந்திப்பதற்கு பேசுவதற்கு அவனை யாருமே எதுவுமே தடை செய்ததில்லை… ஆனால் இப்போது ஏன் இந்த நிலைமை… இத்தனை பேர் மத்தியில் தன்னவளோடு பேச வேண்டிய கட்டாயம்.. அதிலும் என் மனைவியின் மீதான என் உணர்வுகளை… உரிமைகளை எல்லாம் கட்டிபோட்டு பேச அனுமதி… இதற்கு யார் காரணம்… அந்த அர்ஜூனா???… இல்லவே இல்லை… அனைத்துக்குமே மூலகாரணம்… தன் நாயகி மட்டுமே…
சில நிமிடங்கள் கழித்து நிமிர… நிமிர்ந்தவன் கண்கள் அப்படி ஒரு சிவப்பைப் பூசி இருந்தது…
கண் கலங்கினானோ…. அது அவனுக்கே வெளிச்சம்… ஆனால் கோபத்தில் அவனுக்குள் வெடித்த எரிமலையை அடக்கிக் இருந்தான் என்பது மட்டும் நிச்சயம்…
கன்மணியையே பார்த்தபடி இருந்தான் ரிஷி இப்போதும்… அதுவும் கோபப் பார்வையே… அந்தக் கோபப் பார்வையும் ஆயிரம் கேள்வி அம்புகளாக மாறி அவள் மீது பாய ஆரம்பித்திருக்க… கண்மணியோ அதை எல்லாம் சாதாரணமாக எதிர்கொண்டவளாக மீண்டும் அங்கிருந்த சுவர்க்கடிகாரத்தைப் பார்த்து… கணவனுக்கு சந்திப்புக்கான கால அளவைச் சுட்டிக் காட்ட…
“கொலை பண்ணியிருவேண்டி… இருக்கிற கடுப்புக்கு…. இன்னொரு தடவை டைம மட்டும் பாரு… இருக்கு உனக்கு…” பொங்க ஆரம்பித்தான் தான்… அதே நேரம் பல்லைக் கடித்துக் கொண்டு…. தன்னைச் சாந்தப்படுத்திக் கொண்டவனாக….
”சத்தியமா இப்படி ஒரு மீட்டிங்கை எதிர்பார்க்கவே இல்லடி… “ என ஆரம்பித்த போதே… கண்மணி அலட்சியமாக அவனைப் பார்க்க… அந்த அலட்சியப் பார்வையில் ரிஷியும் நிமிடத்தில் இயல்பானவனாக மாறி இருந்தான்…
“எனிவே… இந்த 15 நிமிசத்துக்கு என்னைப் பிரிப்பேர் பண்ணத்தான்… ஆஸ்திரேலியால ரியாலிட்டி ஷோ பண்ணிருப்பேன் போல… ஹ்ம்ம்… எங்கும் கேமரா… எதிலும் கேமரா… “ என்று ஒன்றுமே நடவாதது போல… மிக மிக நிதானமாக எழுந்தவன்… மடித்துக் கட்டியிருந்த வேஷ்டியைக் கீழே இறக்கி விட்டவனாக… அங்கிருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தவன்… பின் தன் தலைமுடியைக் கோதி சரி செய்தபடியே… கண்மணியைப் பார்த்தான்…
“ஆனா பாரு அ..ம்..… சாரி சாரி… கண்மணி… எனக்கு எப்படி இருக்குனா… உன்னைப் பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை வைப் தான் எனக்கு… இதுவும் நல்லாத்தான் இருக்கு… பாரு காஸ்ட்யூம் கூட அதே வைப்ல… உன் முகத்திலயும் புதுப் பொண்ணு மாதிரி கொஞ்சம் டென்ஷன் தெரியுது கண்மணி…” உல்லாசக் குரலில் ரிஷி அவளைக் கிண்டல் செய்ய ஆரம்பித்திருக்க… கண்மணியோ அவனிடம் கடுப்பான முறைப்பைக் காட்ட…
”இது கூட ஒரு மாதிரி சூப்பராத்தான் இருக்கு…. நாம இந்த சீன்லாம் மிஸ் பண்ணிட்டோம்ல… இப்போ கிடைச்சிருக்கு… அனுபவிச்சுக்குவோம் அம்மு…” சொன்னபடியே ரிஷி கண்மணியை ஆசை தீர பார்த்து ரசிக்க ஆரம்பித்திருக்க…
“ஹலோ…” கண்மணியோ படபடக்க …
“ஹலோ இரும்ம்மா…. சும்மா டிஸ்டர்ப் பண்ணாத… பார்த்துட்டு இருக்கோம்ல… ஒரு வாரம் … அப்படிக் கூடச் சொல்லக் கூடாது… 24 * 7 ” காற்றில் விரல்களால் கணக்குப் போட ஆரம்பித்தவன்…. பின்…
“நீதான் கணக்கு டீச்சரா ஆச்சே… ஆன்சர் என்னவோ அதை கால்குலேட் பண்ணி ஃபில் பண்ணிக்கோ… ”
”இனிமேல் 24*7 என்னோட எண்ணம்… சொல் செயல் எல்லாம் கண்மணிக்காகன்னு நான் ஒரு பேச்சுக்குச் சொன்னா… 24*7 மீனிங்கையே மாத்திட்ட… என்னை 24*7 பார்க்காமாலேயே தவிக்க விட்டுட்ட தானே... ஆனா நீ மட்டும் அன்னைக்கு என்னை ஹோட்டல்ல பார்த்துட்ட... அன்னைக்கு உன் ஹார்ட் பீட் எகிற ஆரம்பிச்சது இங்க என் நெஞ்சில ஃபீல் பண்ணேன்... அதுதான்... போனா போகுதுன்னு ஹெல்மெட்டைக் கழட்டுனேன்” அவளை வார்த்தைகளாலும்… பார்வையாலும் ரிஷி பந்தாட ஆரம்பித்திருக்க… அவள் அவளுக்குள் விதித்திருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக உடைய ஆரம்பித்திருக்க.. கண்மணிக்கு அந்த ஏசியிலும் வியர்க்க ஆரம்பித்திருந்தது….
ரிஷி அவளை ஆச்சரியமாகப் பார்த்தவனாக
”மேடம் நீங்க கண்மணி தானே… அந்த எதுக்குமே கலங்காத ’கல்’ மணி தானே…. “ நக்கலாக சந்தேகத்தை அவளிடமே கேட்டவனிடம்… கண்மணி உதட்டைச் சுழித்து வேறு புறம் திரும்பியபோதே…
“ஓகே… ஒகே… நீ என்னோட கண்மணிதான்… இப்போ க்ளியர்… ஏன் கேட்டேன்னா…டவுட் வந்திருச்சுடி எனக்கு… நீ என் பொண்டாட்டியான்னு” எங்கோ பார்த்தபடி இருந்தவள்… இப்போது வேகமாக அவனைத் திரும்பிப் பார்க்க… ரிஷி குறுஞ் சிரிப்புடன் கண்சிமிட்டியவனாக
”நீயெல்லாம்… இப்படி ஒரு படபடப்பா… ஃபர்ஸ்ட் நைட்ல கூட இப்படி இருந்ததில்லேயேடி… ஐ மீன்… ஆக்சுவல் ..” எனும் போதே… கண்மணி கொடுத்த உண்மையான முறைப்பில்… தானாகவே தன் நிலைக்கு வந்த போதே… கண்மணி சுதாரித்திருந்தாள்…
“இந்த மாதிரிதான் பேசப் போறீங்கன்னா… நான் கெளம்புறேன்… உங்களோட காமெடிக்கு…, ரிலாக்சேசனுக்கு… நக்கலுக்கெல்லாம் என் டைம வேஸ்ட் பண்ண முடியாது…” எனக் கண்மணி உண்மையாகவே நகரப் போக… அவள் முன் கைகளை நீட்டி தடுத்தவனாக
“பெர்பார்மன்ஸ்ல பாதியோட போனா எப்படி…. அது என்ன காமெடி… ரிலாக்ஸ்… நக்கல்னு கம்மியா சொல்ற…. நவரசம் இருக்கும்மா… எல்லாம் காட்றேன்… இதுல முக்கியமா அந்த ரொமான்ஸை விட்டுட்டியே… அந்த ஃபீலிங்குக்கு நீ மட்டும் தான் என்னோட டைம ஸ்பெண்ட் பண்ண முடியும்… இப்படி எனக்காக உன் டைம வேஸ்ட் பண்ண முடியாதுன்னு சொல்லி… உன் ரிஷிக் கண்ணா மனசை உடச்சுட்டியே… நான் எங்க போவேன்… யார்கிட்ட போவேன்….” ரிஷி பேசிக் கொண்டே இருக்க… கண்மணியோ என்னமோ புலம்பிக் கொள் என்ற பாணியில்…… அவன் கைகளைத் தட்டிவிட்டபடி… அவனைத் தாண்டிப் போக… போகவிடுவானா ரிஷி… கண்மணியைப் பிடித்து இழுத்து மீண்டும் தன் முன் நிறுத்திய போதே…. அடுத்த நொடி அந்த அறையில் அர்ஜூனின் எச்சரிக்கைக் குரல் கேட்க ஆரம்பித்திருக்க… தலையிலடித்துக் கொண்டது வேறு யாருமல்ல ரிஷியேதான்…
“சத்தியா சொல்றேன்டி… உன் அர்ஜூன் அம்மாஞ்சி இருக்க வேண்டிய இடமே வேற இடம்… ” என மீண்டும் கண்மணியை அவள் நின்ற இடத்திலேயே நிறுத்திவிட்டு தானும் தள்ளி நிற்க…
அதுவரை கடைபிடித்த அமைதியெல்லாம் போய்… கண்மணிக்கு சட்டென்று கோபம் வந்து… கடுகடுத்த முகத்தோடு பேச ஆரம்பிக்க நினைக்கும் போதே…
“ஏய் என்ன முறைக்கிற… பேச விட்றி… ஒண்ணு நீ முறைக்கிற… இல்லை அவன் என் கழுத்தறுக்கிறான்… “ பேசியதெல்லாம் ரிஷி மட்டும்தான்… ஆனால் என்னவோ ஒன்றுமே பேசாதது போல முறுக்கிக் கொண்டபடியே…. தான் கொண்டு வந்த காகிதக் கட்டை அங்கிருந்த மேஜையின் மீது அவள் முன் தூக்கிப் போட்டிருந்தான் ரிஷி ….
“இது இதுக்காகத்தான் வந்தேன்… ஐந்து நிமிசத்தை வேஸ்ட் பண்ணிட்ட… பத்து நிமிசத்துல படிச்சிருவியா… முடியாதுதானே… சோ… இதுல எழுதியிருக்க எல்லாத்தையும் படிச்சுட்டு… ஏதாவது கரெக்ஷன் வேணும்னா மட்டும் போன் பண்ணு… வேற எதுக்காகவும் பண்ணிறாத” சொன்னவன்… கண்மணியின் பார்வையை கணித்தபடி…
“நீ கேட்கலதான் இந்த விவாகரத்து... ஆனால் என்னைக் கேட்க வச்சுட்டியே...” கண்மணியின் அமைதி தொடர்ந்தது
“ஓஒ... இதுக்காகவா இந்தப் பேப்பர்ஸ்காகவா இவ்வளவு தூரம் வந்தேன்னு கேட்கக் தோணுதா…” கண்மணி பேசியிருப்பாளா என்ன… இல்லை இவன் தான் அவள் பதிலுக்குக் காத்திருப்பானா என்ன… நீ என்னவோ பேசிக்கொள் என அவள் அமைதியாகவே தன் நிலையைத் தொடர… நீ பேசினாலும்… பேசாவிட்டாலும் நான் பேசிக் கொண்டே இருப்பேன் என்ற பாணியில் இவனோ தன் பேச்சைத் தொடர்ந்தான்…
“கொஞ்சம் முட்டாள் தான்… ஆனால்… அ……..வ்ளோ முட்டாள்ளாம் இல்ல..”
“எழுதி இருக்கிற அந்த பேப்பர்க்காக வரலை… இதோ எதுவுமே எழுதாத இந்த வெத்து பேப்பர்க்காகத்தான் வந்தேன்…” எனும் போதே கண்மணி முகம் சுருக்கிப் பார்க்க… அப்போது…
”எதுக்குடி என்னை விட்டுட்டு வந்த… எனக்கு உண்மையான காரணம் சொல்லு… “ ரிஷியின் குரலில் திடிரென்று ஒரு மாற்றம்… ரிஷியின் நக்கல்…. ஏளனம்… எதுவுமே அந்தக் குரலில் இல்லை… உண்மையாகவே தீவிரத்தன்மை அதில் வந்திருக்க
இப்போது கண்மணியும் அவனை நேருக்கு நேராக எதிர்கொண்டபடி…
”சொல்லிட்டேனே ரிஷி… அன்னைக்கு நான் சொன்னது காதில விழலையா… இல்லை விழாத மாதிரி நடிக்கிறீங்களா… திரும்ப திரும்ப உண்மையான காரணம் சொல்லு… உண்மையான காரணம் எனக்கு வேணும்னா என்ன சொல்றது… எனக்கு உங்களைப் பிடிக்கலைன்றதை விட… வேறு என்ன சொல்லலாம்…” நக்கலாக யோசித்தபடியே
“ஹ்ம்ம்ம் … இது ஓகேவான்னு பாருங்க… எனக்கும் உங்களுக்கும் எதுவும் செட் ஆகாது… உங்க லெவலுக்கு நான் இல்லை… என் லெவலுக்கு நீங்க இல்லை… இப்படியும் கூட சொல்லலாம்…” கண்மணி வெற்றுக் குரலில் சொல்ல…
ரிஷியின் தலையும் ஆமோதிப்பாக அசைந்தது இப்போது… கூடவே அவன் உதடும் சுழிந்தது அவன் தலை அசைவின் ஆமோதிப்புக்கு முரணாக… இருந்தும்
“ஹ்ம்ம்ம்.. இப்போ சொன்னது கொஞ்சம் பெட்டரா இருக்கு… ஓகே… அக்செப்டட்… “ என்றபடியே… அங்கிருந்த மேஜையின் மேல் ஏறி அமர்ந்தவன்… கால் மேல் கால் போட்டபடியே... அவளைப் பார்த்தபடியே....
“இன்னைக்கு மட்டும் டீச்சர் மோடை நான் எடுத்துக்கிறேன்... அப்போ அடுத்து என்னோட கேள்வியெல்லாம் கேட்கலாமா நான்… மேடம் ஆன்சர் பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன்… அண்ட்.. என்னோட கோரிக்கைகளும் கூடவே…”
“சோ… மேடம் நீங்க சொன்ன மாதிரி… ஜஸ்ட் நவ்… சொன்னீங்களே அதையும் பாயின்ட்ல நோட் பண்ணிக்கிறேன்… நாம ரெண்டு பேருக்கும் செட் ஆகலை… என்னைப் பிடிக்கலை… இல்ல பழிவாங்க… அப்புறம் என்னென்னவோ சொன்னீங்களே… ஹான் ரைட்… எனக்கு புத்தியில உறைக்க வைக்கிறதுக்காக மேரேஜ் பண்ணுனீங்க… எக்சட்ரா எக்சட்ரா… இப்படி எல்லா காரணமும் ஓகே தான்… மகிளான்ற பொண்ணுக்கு நான் பண்ணின துரோகம் எனக்கும் புரியனும்னு மேடம் நீங்க உங்க வாழ்க்கையையே தியாகம் பண்ணின தியாகச் செம்மல் தான்… எல்லாமே பெர்ஃபெக்ட் தான்… ஆனால் இந்த ஆஸ்திரேலியா ட்ரிப்… அங்க தான் இலேசா.. கொஞ்சமே கொஞ்சம் இடிக்குது மேடம்… அங்கயிருந்தே கொஞ்சம் உங்க தியாகம் தாறுமாறா லிமிட் தாண்டி போனதே மேடம்… அதை மட்டும் ஏன்னு எனக்கு விளக்கியிருங்க… மேடம்… அவ்ளோதான்…” ரிஷி அவளையே அவள் முகத்தையே பார்க்க… அங்கு அவளின் மூக்கில் மூக்குத்தி இருந்த அடையாளமே மறைந்திருக்க…
“இப்போ எதுக்கு இவ்ளோ டென்ஷன்… பாருங்க உங்க மூக்குத்தியே கண்ணுக்குத் தெரிய மாட்டேங்குது…” அவள் நிலையை உணர்ந்த போதிலும் ரிஷி விடவில்லை…
“சோ என் மேல காதல் இல்லைனு சொல்லிட்டீங்க… அப்போ அதை என்னன்னு சொல்றது… தமிழ்ழ சொல்ல எனக்கு தைரியம் இல்லை… அதுனால இங்கிலீஸ்ல சொல்றேன்… லவ் இல்லைனு நீங்க உறுதியா சொன்னதுனால… லஸ்ட்னு வச்சுக்கலாமா மிஸஸ் கண்மணி ரிஷிகேஷ்… நான் அதுக்கு மட்டும் செட் ஆனேனா மிஸஸ் கண்மணி ரிஷிகேஷ்.. இல்லை அதுக்கு மட்டும் என்னை யூஸ் பண்ணிக்கிட்டீங்களா மிஸஸ் கண்மணி ரிஷிகேஷ்…”
அவன் வார்த்தைகளின் வீரியத்தைத் தாங்கமுடியாமல் கண்மணிக்கு அவள் உடல் மெல்ல நடுங்க ஆரம்பித்தாலும்… வேண்டுமென்றே தன்னைத் தூண்டுகிறான் என்பது புரிந்து தன்னை எப்படியோ கட்டுப்படுத்தி அமைதியாகவே இருக்க…
“ஒக்கே அது என்ன வேணும்னாலும் இருக்கட்டும்… எண்ட் ஆஃப் இட்… உங்களுக்கும் ஹேப்பி… எனக்கும் ஹேப்பி… அதையாவது அக்செப்ட் பண்ணிக்கிறீங்களா” என்று கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் ரிஷி அவளை வார்த்தைகளால் பந்தாட ஆரம்பித்திருக்க …
“ரிஷி…” எனும் போதே கண்மணியின் குரல் நடுங்கி இருக்க
“சரி அதை விடுங்க… அடுத்த பாயிண்டுக்கு வருவோம்…” ரிஷி கண்மணியை பேசவே விடவில்லை…
“லவ்வோ… லஸ்…” ரிஷி மீண்டும் அந்த வார்த்தையைச் சொல்ல ஆரம்பித்த போதே கண்மணியின் கண்களில் நீர்ப்படலம் வர ஆரம்பித்திருந்தது…
”ரிஷி ப்ளீஸ்” கண்மணியின் குரல் உடைந்திருக்க…
அதில் ரிஷியும் தடுமாறியவனாக… அந்த வார்த்தையைச் சொல்லாமல் நிறுத்தியவன்… தங்கள் உறவையே நிந்தித்துக் கொண்டிருக்கும் தன் பேச்சை நினைத்து வருந்தினான் தான்…
ஆனாலும் அது சில நிமிடங்கள் தான்… மீண்டும் தொடர்ந்தான்…
“அதுக்கப்புறம்…. அதாவது ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த பின்னால… நீயும் நானும் கணவன் மனைவியா எப்படி இருக்கனுமோ.. எப்படி வாழனுமோ அப்படித்தான் இருந்தோம்.. அப்படித்தான் வாழ்ந்தோம்… அதை நீயும் மறுக்க முடியாது… நானும் மறக்க முடியாது…” என சில நொடிகள் வார்த்தைகளை நிறுத்தி… மூச்சை இழுத்து விட்டபடியே அவளைத் துளைக்கும் பார்வை பார்த்தவன்
“அதே போல நாம முன்னெச்சரிக்கையாவும் இருந்தது இல்லை…. அதுவும் மறுக்க முடியாத உண்மைதானே “ என ரிஷி அவளைப் பார்க்க…
கண்மணி அவனை இப்போது கேள்விக்குறியாகப் பார்க்க
“அதாவது… குழந்தை இப்போதைக்கு வேண்டாம்னு எந்த வித முன்னெச்சரிக்கையும் எடுக்கலை… உண்மையா இல்லையா…”
கண்மணிக்கு இப்போது அவன் எங்கு வருகிறான் என்பது புரிய ஆரம்பித்திருக்க…
“சோ….” எனக் கைகளைக் கட்டிக் கொண்டவள்… ரிஷியை நிமிர்ந்து பார்த்தாள்…
“முன்னெச்சரிக்கையா இருக்காதது நீங்கன்னு மட்டும் சொல்லுங்க… எப்படி என்னையும் சேர்த்துப்பீங்க மிஸ்டர் ரிஷிகேஷ்… ஐ ஹேட் பில்ஸ்… நான் பில்ஸ் எடுத்திட்டு இருந்தேன்” ரிஷி நம்ப முடியாத பாவனையில் அவளை அதிர்ச்சியுடன் பார்க்க…
“ரிஷி சார்… நீங்க சொன்னது போல நான் தியாகச் செம்மல் தான்… ஆனால்… நீங்க சொன்ன அளவுக்கெல்லாம் அ…….வ்ளோ பெரியத் தியாகச் செம்மல்லாம் இல்லை…” அவள் வார்த்தைகளில் தெளிவு மட்டும் இல்லை… அதில் ஆயிரம் கிண்டல் தெறித்திருக்க…
ரிஷி இப்போது உஷாரானவனாக…
”ஓ… ஓ ஓகே… ஒகே இருந்துட்டு போங்க… எனக்கு ஒண்ணே ஒண்ணுதாங்க வேணும்…. உங்களுக்கு டைவர்ஸ் வேணும்னா… மொத்தம் 3 கண்டிஷன் தான்…”
“ரிஷி சார் உங்ககிட்ட ஒண்ணூ ஞாபகப்படுத்திக்கிறேன்... நான் டைவர்சே கேட்கல... இதுல கண்டிஷன் வேறயா... சரி ... என்ன… உங்க வாரிசு என் வயித்துல வளருதா… இல்லையா… “ வாக்கியத்தை முடிக்க விடவில்லை ரிஷி
”அதே… அதே தாங்க… நீங்க புத்திசாலின்னு தெரியும்… இவ்ளோ புத்திசாலியா எப்போ மாறுனீங்க… ஒரு வருசம் உங்க ஹஸ்பண்டோட இருந்த அனுபவமோ… எனி வே என்னோட கண்டிஷன் லிஸ்ட் சொல்லலாமா... அப்புறம் நீங்க டைவர்ஸ் கேட்கலதான்... ஆனால் உங்களுக்கு கொடுக்கனும்னு எனக்கு ஆசை... அதுவும் கண்டிஷன்ஸ் அப்ளை லேபிளோட ”
கண்மணி அவனைப் பார்க்காமல் வேறு புறம் பார்க்க ஆரம்பித்திருக்க…
“ஆனால் அந்த பில்ஸ்… ஆக்சுவலா என் லிஸ்ட்லயே இல்லை… நீங்க இப்போ சொன்ன வார்த்தைல… ஆட் பண்ணிகிட்டேன்… நம்பர் 0 ன்னு வச்சுக்கலாம்” அவன் வார்த்தைகளை கடித்து துப்பிய விதமே கோபத்தின் அளவீட்டை காட்டியிருந்தது... இருந்தும் காட்ட முடியாமல் வேறு வழி இன்றி உணர்வுகளை மறைத்டஹ்வனாக
”நம்பர் 0… நீங்க பிரிகாஷனா பில்ஸ் எடுத்துக்கிட்டீங்களா… இல்லையா அதைக் கன்ஃபார்ம் பண்ணனும்… ஆட் பண்ணிட்டேன் ”
”இப்போ நான் சொல்ல வந்த லிஸ்ட்டுக்கு வருவோம்… அஸ் பெர் மை லிஸ்ட்” என ஆரம்பித்தான் ரிஷி
“நம்பர் 1… சுமார் 2 வாரத்துக்கும் முன்னால் வரை…. நாம பிஷிக்கல் ரிலேஷன்ஷிப்ல இருந்திருக்கோம்… சோ… மே பி .. … நம்ம குழந்தை…. சாரி என்னோட குழந்தை உங்க கருவுல வளர்றதுக்கு பாஸிபிலிட்டி இருக்கு… நீங்க பில்ஸ் எடுத்துக்காத பட்சத்துல…”
கண்மணி உள்ளுக்குள் அதிர்ந்தாலும்… காட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்க்க…
“ஜஸ்ட் ஒரு டெஸ்ட் தான்… அப்படி எதுவும் இல்லைனா… நெகட்டிவ் பாயிண்டுக்கு கடைசியா வருவோம்… சோ சப்போஸ் டெஸ்ட்ல உங்களுக்கு பாசிட்டிவ்னு வந்தால்… அதாவது குட்டி ரிஷியோ… குட்டி கண்மணியோ… முறைக்காதீங்க மேடம்… எல்லாம் பண்ணிட்டு… இப்போ நீங்களும் நானும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து முறைச்சால் கோபபட்டால் என்ன அர்த்தம்… கேளுங்க…” ரிஷி சீரியஸாகவே பேசிக் கொண்டிருக்க…
“சரி சொல்லுங்க… குழந்தை கன்ஃபார்ம்னா என்ன பண்ணுவீங்க” கண்மணியும் அவனது கேள்விகளுக்கு அசராமல் எதிர் கேள்வி கேட்க ஆரம்பித்திருந்தாள்…
“என்ன பண்ணுவோம்… உங்கள என்ன கொஞ்சவா செய்வோம்…. இல்லை பவித்ராவிகஸ் இளவரசிய கொஞ்சிடத்தான் முடியுமா ” அவளை அந்நிய மனுஷியாக தள்ளி நிறுத்திய ரிஷியின் இந்த வார்த்தைகளில் கண்மணி முகம் சட்டென்று வாடிய தோற்றத்தைக் கொடுத்திருக்க
ரிஷிதான் அவள் முகபாவங்களையே பார்த்துக் கொண்டிருந்தானே… மனைவியின் வாடிய முகத்தைத் தாங்குவானா… துடிக்கத்தான் செய்தான்…
“ஏண்டி இப்படி படுத்துற… நீ எனக்கு எவ்ளோ முக்கியம்னு உனக்குத் தெரியலையாடி… உன்னை கொஞ்சாமல் விட்ருவேனாடி” ரிஷி மனதோடே பேசிக் கொண்டிருக்க..
இப்போது அவன் முன் கண்மணி சொடக்குப் போட்டு அவனை மீட்டெடுக்க…. ரிஷியும் மீண்டிருந்தான்…
“கொஞ்சல்… ரொமான்ஸுனு பேசாம… சீரியஸா பேசுவோமா…” கண்மணியும் அதிரடியாகக் கேட்க… ரிஷி அவளைப் பார்த்தபடியே…
“அப்படி கன்ஃபார்ம்னா அந்தக் குழந்தை என்னோட உரிமை... என்னோட குழந்தையை எனக்கு பெத்துக் கொடுக்கனும்னு கண்டிஷன் ஆட் பண்ணுவேன்… அதுக்கு உன்னோட சம்மதம் வேணும்” ரிஷியின் குரலில் கடினத்தன்மை வந்திருந்தது இப்போது
”ஓகே… எனக்கும் சம்மதம் தான்… சப்போஸ் குழந்தை இல்லைனா… இந்த கண்டிஷன் ஏதும் இல்லைதானே… சிம்பிளா முடிச்சுரலாம் தானே”
”இல்லையே… அது இன்னும் காம்ப்ளிகேஷன் ஆச்சே” ரிஷி பெரிதாக இழுக்க… கண்மணி அவனைப் பார்த்தாள் …. அந்தப் பார்வையில் முற்றிலும் குழப்பம் மட்டுமே…
ரிஷியோ எச்சிலை மென்று முழுங்கியவனாக பேசினான்… ஏனென்றால் அவனைப் பொறுத்தவரை கண்மணி கர்ப்பமாக இல்லை என்பது தான் இந்த நிமிடம் வரை அவனது எண்ணமாக இருந்தது… எனவே அதைச் சார்ந்த விசயங்களை வைத்து மட்டுமே யோசித்து… கண்மணியை தன்னோடு கூட்டிக் கொண்டு போவதற்காக தனக்குள் திட்டம் போட்டு அவன் தயார் செய்து வந்திருந்தததே… தன் வார்த்தைகளை எந்த அளவுக்கு எடுத்துக்கொள்வாளோ… எந்த அளவுக்கு தன் திட்டங்களுக்கு கண்மணியை சம்மதிக்க வைக்க முடியுமோ… எதுவுமே உறுதியாகத் தெரியாத நிலை… அதனாலேயே ரிஷி இப்போது தயங்கி தயங்கி ஆரம்பித்தான்…
“சப்போஸ் குழந்தை கன்ஃபார்ம் ஆகலேன்னா…” ரிஷி…. இன்னும் இழுக்க…
கண்மணி அவன் கண்களை மட்டுமே பார்த்தபடி இருக்க…
“என்னோட வாரிசு” எனும் போதே… கண்மணியின் புருவங்கள் ஏறி இறங்கி இருக்க… ரிஷி தயக்கங்களை எல்லாம் விட்டவனாக… பட படவென ஆரம்பிதான்
“உனக்காகத்தானே… நீ சொன்னதால் தானே… என் பிரம்மாச்சாரி தவத்தை விட்டேன்… அதுக்கு என்ன பலன்… எனக்கு வாரிசு வேணும் தானே… என்னோட வாரிசுக்கு நீதானே பொறுப்பேத்துக்கனும்..… அதுமட்டும் அல்ல… இன்னொரு மேரேஜ்லாம் இதுக்காகவெல்லாம் பண்ண முடியாது… அதுக்கு எனக்கு பொறுமையும் கிடையாது… என்னோட பொறுமையை… என்னை… எல்லா நேரத்திலயும்… என்னோட எல்லா குணத்தையும் புரிஞ்சு அனுசரிச்சு போற அளவுக்கு என் முன்னாடி நிற்கிற இந்தக் கண்மணி மாதிரி பொறுமைசாலி இனி தேடினாலும் கிடைக்க மாட்டா…. தேடவும் விருப்பம் இல்லை..”
“சோ”… கைகளைக் கட்டிக் கொண்டு கேள்வி கேட்ட கண்மணியின் முகம் மலர்ந்திருந்ததோ… அவளே உணரவில்லை
“என்ன சோ… சொல்றது புரியலையா… ஜஸ்ட் உனோட தியாகச் செம்மல் பதவிய எக்ஸ்டெண்ட் பண்ணனும்னு சொல்றேன்… அதாவது என் கூட இந்த மூணு மாசம் எப்படி வாழ்ந்தியோ… அதே மாதிரி நீ கன்சீவா ஆகிற வந்து வாழு… முழுக்க முழுக்க L ஃபார் அதர் டெர்ம் தான்… என்ன குழந்தைக்காக மட்டும் இந்த தடவை… என்னைத் திருத்துறதுக்காகவெல்லாம் வேண்டாம்… உன் தியாகச் செம்மல் பதவியை நானும் ரொம்ப காலம் எக்ஸ்டெண்ட் பண்ண விட மாட்டேன்… இந்த தடவை பெர்ஃபார்மன்ஸ் நூறு சதவிகிதம் இல்லல்ல நூற்றி இருபது… இல்லை இருநூறு பெர்சண்ட் போடுவேன்.. உன்னையுமே …” எனும் போதே
”ரிஷி மைண்ட் யுவர் வேர்ட்ஸ்… வாட்ஸ் யுவர் டங்…” கண்மணியின் முகம் கோபத்தில் சிவந்திருக்க…
“என்னடி… இங்க்லீஸ்ல பீட்டர் விட்ற… ஓ மேடம் நாராயணன் பேத்தினு … இல்லல்ல பவித்ர விகாஸுக்கு இளவரசினு காட்றீங்களா…”
”நீங்க ஓகே சொன்னா… நாங்க உங்க பின்னாடி உடனே வரனும்… பிரம்மச்சாரி தவத்தைக் கலைனு சொன்னா… சொன்ன அடுத்த நொடியே… சம்சாரி ஆகனும்… அப்புறம் நீங்க வேண்டாம்னு சொன்னா… அதையும் கேட்டுட்டு சரி சரினு தலையாட்றதோட மட்டும் இல்லாமல்… சொல்லாமல் கொல்லாமல் அமெரிக்கா போகும் போது… ஃப்ளைட்ட பார்த்து கீழேயிருந்தே டாட்டா காட்டி வழி அனுப்பனும்… ஹ்ம்ம்… என்னைப் பார்த்தா எப்படி தெரியுது… இளிச்சவாயன்னு நெத்தில எழுதி ஒட்டிருக்கா என்ன… இவங்களுக்கு வேணும்னா… ரிஷிக்கண்ணானு சொல்வாங்களாம்… கொஞ்சனும்னு தோணுச்சுனா ரிஷிச்செல்லம்னு கொஞ்சுவாங்களாம்.. என்னைக் கண்ட்ரோல் பண்ணனும்னா… ரிஷிடானு செல்லமா மிரட்டுவாங்களாம்… இப்போ வேண்டாம்னா… போடா நாயேன்னு தூக்கிப் போட்டுட்டு போவாங்களாம்… ஆனால் நான் நாய் கிடையாது… வாலை ஆட்டிகிட்டே உன் பின்னால சுத்திட்டி இருக்கிறதுக்கு… உன் புருசன்”
“ரிஷி…”
“என்னடி… ரி்ஷி…” பொறுமையைப் பறக்கவிட்டிருந்தான் ரிஷி… கேமரவாவது ஒன்றாவது அத்தனையையும் மறந்து போயிருந்தான் ரிஷி
“ரிஷிக்கண்ணா… ரிஷிச்செல்லம்… ரிஷிம்மா… ரிஷிடான்னு என்னென்னமோ இந்த வாய் சொன்னதுதானே… என்னை உன் பின்னாடி பைத்தியா சுத்த வச்சதுதானே…… இப்போ என்னடி ரி்ஷின்னு மட்டும் சொல்லுது இந்த உதடு…” ரிஷியின் விரல்கள் உரிமையோடும் ஆத்திரத்தோடும் அவள் இதழ்களைப் பற்றி இருக்க…
கண்மணி வெறுப்பாக???… வேகமாக அவன் கைகளைத் தட்டி விட்டு… அவனை விட்டு விலகி நிற்க… ரிஷியின் பொறூமையும் மொத்தமாக அவனை விட்டு விலகிப் போயிருந்தது… அவளுக்கான அவன் உரிமையையும், காதலையும் அவள் அவமதித்த கோபம் மட்டுமே அவனிடம்
அவள் உதடுகளைத் தொட்ட தன் விரல்களை கண்மணி விலக்கிய அந்த நொடியில் அவளை மொத்தமாகத் தனக்குள் கொண்டு வந்தவனாக தன்னை விட்டு விலகும் நோக்கில் திமிறியவளை அடக்கியவனாக…
”இப்போ இந்த நிமிசம் இங்கயிருந்து உன்னைத் தூக்கிட்டுப் போகவா… அப்டி உன்னை இங்க இருந்து… இத்தனை பேரைத்தாண்டி கூட்டிட்டுப் போய்க் காமிக்கிறேன்… நான் சவால்ல ஜெயிச்சா…காலம் பூரா மிஸஸ் ரிஷியா என் வீட்டு மகாராணியா மட்டும் தான் நீ வாழனும்… ஒத்துகிறியா… லெவல் மேட்ச் பண்ணுவோமா… ” ஆக்ரோஷத்தில் ரிஷியின் குரல் அந்த அறை முழுவதுமாக ஓங்கி ஒலித்திருக்க…
அதே சமயம் வெளியே… அர்ஜூன் பதறியபடி… வேகமாக அந்த அறையை நோக்கி ஓடி வர ஆரம்பித்திருக்க… அவனைத் தொடர்ந்து நாராயணன்… வைதேகி…பார்த்தி என வர ஆரம்பித்திருக்க…. அதே நேரம் ரிஷி அவர்கள் முன் வந்து நின்றிருந்தான்
---
ரிஷி கண்மணியோடு அந்த அறையை விட்டு வெளியே வந்திருக்க… அவர்களை நோக்கி ஓடி வந்த அத்தனை பேரும் ரிஷியைப் பார்த்து… அடுத்த அடி எடுத்து வைக்க முடியாததோடு மட்டுமல்லாமல் ஒரு அடி பின்னோக்கி எடுத்துவைக்கும் நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருந்தான் ரிஷி….
காரணம் ரிஷி கண்மணியின் வாயைத் தன் கரங்களால் பொத்தி… அறையின் வெளியே அவளை இழுத்து வந்திருந்தான்… கண்மணியின் முகத்தில் அப்போதும் பதட்டமில்லைதான்… கண்மணி ஏன் அவனை எதிர்க்காமல் அவன் இழுத்த இழுப்புக்கு வருகிறாள் என அனைவரும் உற்றுப் பார்க்க… அப்போதுதான் தெரிந்தது அவள் கழுத்தைப் பிடித்திருந்த ரிஷியின் கையில் சிறு பிளேடு…. அது அவள் கழுத்தை ஒட்டி இருக்க… நாராயணன் வைதேகி அர்ஜூன் இவர்களின் முகத்தில் கலவரம் வந்திருக்க… அச்சத்தின் உச்சக்கட்டத்தில் மூவரும் நின்றிருந்தனர்..
“டேய் அவள ஒண்ணும் பண்ணிராதடா…” அர்ஜூனுக்கு எப்போதுமே ரிஷியின் மேல் நம்பிக்கை இருந்தது இல்லை…. இப்போதுமே… ரிஷியின் கைகளில் மாட்டிக் கொண்டிருந்த கண்மணியைப் பார்த்து அர்ஜூனின் குரல் கம்ம ஆரம்பித்திருந்தது….
“அப்போ வழியை விடு… யாரும் எங்க பக்கத்தில வரக்கூடாது” ரிஷி மிரட்ட ஆரம்பித்திருக்க… பார்த்திபன் தான் ரிஷியிடம் பேசினான்
“ரிஷி இது என்ன… இப்படி பண்றீங்க… விளையாட்டு இல்லை… கண்மணி கொஞ்சம் அசைந்தால் கூட காயம் பட்ரும்… உங்க நிலைமை புரியுது…. அதுக்காக இப்படியா..” அவனுக்கே ரிஷியின் மீது கடுப்பு வந்திருக்க
“பார்த்தி நான் விளையாடல… சீரியஸா பேசிட்டு இருக்கேன்… ஒரு வாரம்…. ஒரு வாரம் என்னை பைத்தியக்காரனா சுத்தவிட்டுட்டு இவ இங்க வந்து உட்கார்ந்துட்டா… என்ன காரணத்துக்காக வந்துருக்கான்னு சத்தியமா இந்த நிமிஷம் வரை தெரியலை…. புரியல… நீங்க சொன்னீங்களே இவ அர்ஜூன் கூட அமெரிக்கா போறான்னு…. அப்போ எப்படி தெரியுமா இருந்துச்சு… யாராவது ஒருத்தவங்க இவகிட்ட கேள்வி கேட்ருப்பாங்க… விக்கி தாத்தா பேசினப்போ கூட… அவர்லாம் இவ மேல எவ்ளோ மதிப்பு வச்சுருக்காரு தெரியுமா… அவர்கிட்டயே இவ எவ்ளோ தெனாவெட்டா பேசிருக்கா… அட்லீஸ்ட் இந்த வீட்ல இருக்கிறவங்க அட்வைஸ் கொடுப்பாங்களான்னு பார்த்தா… என்னை பேசக் கூட விட மாட்டேங்கிறாங்க…. என் கூட இவ தனியா இருந்தால் பாதுகாப்பு இல்லையாம்… கேமரா செட் பண்ணி பேசச் சொல்றாங்க… இப்போ சொல்லுங்க நான் விளையாட்றேனா… இல்லை இவங்க விளையாட்றாங்களா… என்னை வச்சு காமெடி பண்ணிட்டு இருந்தாங்கள்ள… அப்போ நீங்க இந்தக் கேள்வியைக் கேட்ருக்கனும்… தப்பா என்கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க… இந்த ரிஷிகேஷை உங்க எல்லாருக்கும் தெரியும் ஆனால் ’RK’ யாருனு தெரியாதுதானே… அதுதான் காட்டிட்டு இருக்கேன்… ரிஷிகேஷ் ரொம்ப நல்ல பையன்… ஆனால் ’RK’ அவனுக்கு ஒண்ணு வேணும்னா எந்த எக்ஸ்டென்டுக்கும் போவான்… பார்க்கிறீங்கள்ள இந்த மாதிரி”
ரிஷி படபடவென பொரிந்து தள்ளியிருக்க…
“ரிஷி… அவ பிடிவாதம் தான் தெரியும்ல உனக்கு… எங்கள என்ன பண்ணச் சொல்ற… சரி நான் பேசுறேன்…” நாராயணன் வேறு வழி இன்றி ரிஷியிடம் இறங்கி வந்திருக்க…
“புருசன் பொண்டாட்டினா ஆயிரம் சண்டை இருக்கும் தான்… ஆனால் அது கூட எங்களுக்கு கிடையாதே… அப்போ வீட்டுப் பெரியவங்களா என்ன பண்ணியிருக்கனும்… என்னைக் கூப்பிட்டு பேசியிருக்கனும் தானே… பேத்தி வந்துட்டா… அது மட்டும் தானே உங்க கண்ணுக்குத் தெரிஞ்சது… அவ போதும் உங்களுக்கு… அப்படித்தானே… சோ இதுவரை நீங்க பேசினதெல்லாம் போதும்… பண்ணினதெல்லாம் போதும்… நான்… என் பொண்டாட்டி… நாங்க பார்த்துக்கிறோம்… இப்போ நீங்க எல்லாரும்… தயவு செய்து விலகிக்கங்க… இடையில யாரும் வராதீங்க…. முக்கியமா இவன்…” அர்ஜூனை பார்த்து மொத்தக் கடுப்பையும் வார்த்தைகளாக ரிஷி கொட்டியிருக்க
”டேய் என்ன… ரொம்பத் துள்ற… சின்னக் கீறல் அவ மேல பட்டுச்சு…” அர்ஜூன் ஆவேசத்துடன் அதே நேரம் பயந்தவனாக... எச்சரிக்க ஆரம்பித்த போதே
“என்ன பண்ணுவ… கீறல் போடட்டுமா... பார்க்கலாமா... இவ்ளோ துடிக்கிற” ரிஷி மெல்ல கண்மணியின் கழுத்தைப் பிடித்திருந்த கையின் அழுத்தத்தை கூட்ட…
அவ்வளவுதான்… அர்ஜூன்… அடுத்து ஒரு வார்த்தை வந்திருக்குமா என்ன அவனிடமிருந்து… அப்படியே பணிந்திருக்க…. ரிஷி கண்மணியைப் அர்த்தப் பார்வை பார்த்தான்… அதற்கு காரணமும் இருந்தது…
அவர்கள் இருவரும் முன்னர் பேசிக் கொண்டிருந்த அறையை விட்டு வெளியே வருவதற்கு முன்…
“ரிஷி… ஏன் இப்படி பண்றீங்க…. ஒழுங்கா போங்க…. எத்தனை பேர் இருக்காங்க… உங்களால சமாளிக்க முடியாது” எனும் போதே… அவளைக் ஒரு கரத்தால் சுழற்றி தனக்குள் கொண்டு வந்தவன்…
“என்னடி… என்னை இன்னும் நீ முத முதல்ல பார்த்த ரிஷியாத்தான் இன்னும் நினைக்கிறியா… நான்லாம்…. அப்போதே பெரிய ரவுடி தெரியுமா… என்னைப் பற்றி என்ன தெரியும் உனக்கு… என் சின்ன வயசு… ” என ஆரம்பித்தவன்
”அது எதுக்கு இப்போ” என்றபடியே…
தான் சுருட்டி விட்டிருந்த சட்டையின் கைப்பகுதியில் இருந்து பிளேடை எடுத்தவனைப் பார்த்து கண்மணி கண்களை விரித்த போதே… அவள் வாயை மூடியவனாக… கண்மணியை அவன் கண்களைப் பார்க்க… அதில் பயம் இல்லை மாறாக அதில் ஆச்சரியமும் வியப்பும்… எல்லாம் கலந்த பார்வை இருக்க… ரிஷியுமே இப்போது அதில் மூழ்கி… அவள் கண்களில் அவளைத் தேட ஆரம்பித்த போதே…. அவன் அப்போது இருந்த நிலை… அவன் தேடலைத் தொடரவில்லை… தற்போதைய தன் நிலை உணர்ந்தவனாக… கண்மணியின் பார்வையில் தொலையாமல்…. மீட்டெடுத்தவனாக
“என்ன பார்க்கிற…. தெரியுதுடி… உன் தெனாவெட்டு நல்லாவே…. நான் உன்னை ஒண்ணும் பண்ணமாட்டேன்னு உனக்கு நல்லா தெரியும்… அதுதான் இவ்ளோ தைரியமா இருக்க… ஆனால் நீ ஒண்ணை மறந்துட்ட… வெளில இருக்கிற அர்ஜூன்… உன் தாத்தா பாட்டிக்கெல்லாம் அந்த நம்பிக்கை என் மேல இருக்கும்னு நினைக்கிற… உன் மேல அவங்களுக்கு இருக்கிற கண்மூடித்தனமான பாசம் மட்டும் தான் அவங்ககிட்ட இருக்கும்… இந்த ’கில்லி’ படம் பார்த்துருக்கியா… இப்போ நீ திரிஷாவாம்… நான் விஜய்யாம்… அந்த படத்திலாவது ஒரு பிரகாஷ்ராஜ்தான்… ஆனால் இங்க மூணு பேரு… வா .. வா… உங்க அம்மாஞ்சி முத்துப்பாண்டி பிரகாஷ்ராஷ் ரேஞ்சுக்கு பதறுறாரான்னு பார்ப்போம்..” இப்படி பேசித்தான் அழைத்து வந்திருந்தான்… ரிஷி… அதை நினைத்துதான் கண்மணியையும் நக்கலாகப் பார்த்தும்..
“பரவாயில்ல… கொஞ்சம் அந்த அளவுக்குத்தான் பில்டப் கொடுக்கிறார் உங்க அம்மாஞ்சி” அவள் காதில் ரிஷி சொல்ல… கண்மணி முறைத்தபடி இலேசாக அசைய… அவள் அசைவை உணர்ந்து ரிஷி சுதாரிப்பதற்கு முன்னரே கண்மணி தலையைத் திருப்பியிருக்க… ரிஷியும் அடுத்த நொடி கையை விலக்கியிருந்தான் தான்… இருந்தும்… மிக மிகச் சிறு கீறல் கண்மணியின் கழுத்தில் விழுந்திருக்க…
“ஏய்…” ரிஷி பதறி கையை விலக்கிய போதே… கண்மணியின் கழுத்தில் ப்ளேடு பட்ட இடத்தில் இருந்து மெலிதான கோடாக ரத்தக் கசிவு வர ஆரம்பித்திருக்க... அது வைதேகியின் கண்களிலும் பட்டிருக்க
“அடப் படுபாவி… என் பேத்தி உனக்கு என்னடா பாவம் பண்ணினா… உன்னை நம்பி வந்ததுக்கு… இப்படி வாயும் வயிறுமா இருக்கிற புள்ளைய இந்தப் பாடு படுத்துற…”
வைதேகி பதறி அவள் அருகே வர ஆரம்பித்திருக்க…. ரிஷியும் கைகளை அப்போதே விலக்கியிருந்ததால்…. கண்மணியும் அவன் பிடியில் இல்லை… அவளோ அதிர்ச்சியில் இருந்தாள்… தன் பாட்டியின் வார்த்தைகளில்… பாட்டிக்குத் தன் கர்ப்பம் பற்றி எப்படி தெரிந்தது அதைப் பற்றி யோசிக்கவில்லை… மாறாக
“யாருக்கு தெரியக் கூடாது என்று எந்த விசயத்தை அவள் மறைத்திருந்தாளோ… அந்த விசயத்தை… அவன் முன் தன் பாட்டி சொல்லி விட்டாரே…”
அந்த எண்ணத்திலேயே கண்மணி அப்படியே உறைந்திருக்க… ரிஷியோ… பதற்றத்தில் இருந்தான்… கண்மணியின் கழுத்தில் தன்னால் ஏற்பட்ட அந்த இரத்தக் கோட்டில்…
அந்தப் பதட்டத்தி்ல்… ரிஷி வைதேகியின் வார்த்தைகளில் எல்லாம் பெரிதாக கவனம் வைக்கவில்லை… கண்மணியின் கழுத்தை மட்டுமே ஆராய்ந்து கொண்டிருந்தான்…
“கையை மட்டும் நான் எடுத்திருக்கல…. ஆழமா பட்ருக்குமே… டேய் ரிஷி… உன் பொண்டாட்டி எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சும் இப்படி மிரட்டியிருக்கியே” தன்னையே நொந்து கொண்டிருந்த போதே…
அர்ஜூன் சுதாரித்தவனாக… அங்கிருந்த அடி ஆட்களை நோக்கி
“டேய் இவனை இன்னையோட முடிச்சு விடுங்கடா….” உத்தரவிட்டிருக்க
அவர்களும் வேகமாக ரிஷியைத் தாக்க வந்த போதே…. ரிஷிக்கு ஆபத்து என்று உணர்ந்த அடுத்த நொடியே… உறைந்து நின்றிருந்த கண்மணி உணர்வுக்கு வந்தவளாக அடுத்த நொடியே… ரிஷியின் முன் வந்து நின்று… அனைவரையும் தள்ளி போக வைத்திருக்க…
வைதேகிதான் இப்போது ஒட்டு மொத்த கோபத்தின் உச்சத்தில் இருந்தார்
“அர்ஜூன் நீ சொன்னபோதெல்லாம் இவனை நான் நம்பல… இன்னைக்கு நான் கண்ணால பார்த்துட்டேன்… என் பேத்தி இவன்கிட்ட என்னென்ன கொடுமை அனுபவிச்சாளோ… அதான் இவனை விட்டுட்டு வந்துட்டா… நான் சொல்றேண்டா இவனை விடக்கூடாதுதான்… ” ஆவேசத்தோடு ஆரம்பித்தவர்… அடுத்த நிமிடமே
“ஆனால் என் பேத்தியோட வயித்துல வளர்ற குழந்தைக்கு அப்பாவாகிட்டாரே” வைதேகி அழ ஆரம்பித்திருக்க… ரிஷிக்கு அப்போதுதான் வைதேகியின் வார்த்தைகளே புரிய ஆரம்பித்திருக்க… அவனுக்குள் ஒரு பரபரப்பு… கைகள் ஜில்லிட ஆரம்பித்திருக்க… வேகமாகக் தன் முன் நின்றிருந்த கண்மணியைப் பார்த்தவன்…. வேகமாக அவளைத் தொட்டு தன்புறம் திருப்பியவனாக அவள் கண்களோடு கலந்திருக்க… அந்தக் கண்களே அவனுக்குத் தேவையான பதிலைக் கொடுத்திருக்க… வாய் வார்த்தை தேவைப்படவில்லை இருவருக்குமே…
“எ.. ன........ ந.. ம.. க் ..கு.... … கு… ழ…” ரிஷிக்கு வார்த்தைகளே மறந்த நிலை… உலகமே ராட்டினமாக மாறி அவனை யோசிக்கவிடாமல் சுழற்றி இருக்க… தனக்கும் கண்மணிக்கும் வாரிசு… அதை உணர்ந்த அந்த நொடி…
“எதற்கு இங்கு வந்தான்… என்ன பேசினான்… என்ன கோபப்பட்டான்… கர்ப்பமான விசயத்தை அவனிடம் சொல்லாமல் மறைத்து கண்மணி இங்கு வந்தது…” என எதுவுமே அவன் நினைவுகளில் இல்லை… சந்தோஷம் சந்தோஷம் மட்டுமே
சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லைதான் அவனுக்கு… ஆனால் அடுத்த நொடியே…
“கண்மணி… நான்… அ.. ப்… பா…” கண்மணியிடம் பேச ஆரம்பித்த போதே அவன் உதடுகளில் திக்கித் திணறி வந்த வார்த்தைகளும்… ”அப்பா…” என்ற சொல்லில் மொத்தமாக வேலை நிறுத்தம் செய்து நின்றிருக்க… அவன் மனைவி அவன் நிலை உணராதவளா இல்லை தெரியாதவளா…
ரிஷி தான் அப்பாவான சந்தோசத்தில் வானை நோக்கிப் பறந்து கொண்டிருக்க… கண்மணியோ அதை விட ஆயிரம் மடங்கு கவலையில்… நொறுங்கியவளாக… தனக்குள் ஆழப் புதைய ஆரம்பித்திருந்தாள்….
கண்மணி தன்னிடம் சொல்லவில்லை… மறைத்து விட்டாள்… அந்தக் காரணம்… இந்தக் காரணம்…. என எதுவுமே அவன் மனதில் இல்லை… அவனின் எண்ணமெல்லாம்… ஒரே வார்த்தைதான்… ‘அப்பா…” என்ற ஒரே வார்த்தைதான்
“அ..ப்..பா.… நான் அப்பாவாகப் போகிறேனா” ராட்சச பனிப்பாறை ஒன்று அவனுக்குள் உருவாகி… அது மொத்தமும் நொடியில் ஓராயிரம் ஈட்டி முனையாக மாறி அவனின் ஒவ்வொரு அணுவிலும் பாய்ந்தார்ப் போன்ற மெய்சிலிர்ப்பில் உறைந்திருந்தான் ரிஷி…
”அப்பா…” இந்த வார்த்தை அவன் அகராதியில் இருந்து மறைந்தபோது அவன் வாழ்க்கையே திசை மாறி தலைகீழான தருணம்… அதே வார்த்தை இன்று மீண்டும் அவன் வாழ்க்கையில் வந்தபோதோ... ????
அப்பா… இந்த வார்த்தை அவன் அகராதியில் இருந்து மறைந்த தருணம்…
அப்பா… இந்த வார்த்தையை அவன் வெறுத்த தருணம்…
அப்பா.. இந்த வார்த்தை துரோகங்களால் வஞ்சிக்கப்பட்டு மறைந்த தருணம்..
அத்தனையும் மறந்த தருணம் அவன் அப்பாவாகிப் போன இந்த தருணம்…
ஒவ்வொரு நாள் இரவும்… தன் தந்தையின் நினைவுகளால் தன்னையே வருத்தி அவன் செய்த தவம் முடிந்ததா இன்றோடு… அந்த தவத்தின் பலனுக்கு தன்னவளிடமிருந்து கிடைத்த வரமா.. அப்பா என்று தன்னை அழைக்கும் தன் உயிர் …
அவன் தவக் கோலத்தை கலைத்தவள் அவன் தேவதை என்று தெரியும்… வரம் தந்த சாமியுமே அவள் தானா…. தன்னவளை நன்றியோடு பார்த்தவனுக்கு
கண்களில் மெல்ல மெல்ல நீர்ப்படலம் கோர்க்க ஆரம்பித்து அவன் கண்களின் மணியை மட்டும் மறைக்கவில்லை.. முன்னால் நின்றிருந்த அவன் உயிரான மூச்சான அவன் கண்மணியையும் தான்...
கண்மணியைப் பார்க்க முடியாத அந்த நொடியில் சட்டென்று தன் கண்ணீரைத் துடைத்தவனாக.. சந்தோசமாக வேகமாக அவளை நோக்கி கைகளை உயர்த்தியவன்… அவளை… அவள் முகத்தைப் பார்த்து என்ன நினைத்தானோ…
சட்டென்று திரும்பியவன்… அடுத்து யாரையுமே பார்க்கவில்லை… வேகமாக சமையலறையை நோக்கிப் போனவன்… அங்கிருந்து வெளியே வந்து… அதே வேகத்தோடு கண்மணியின் அருகில் நெருங்கி அவளை தன்புறம் கொண்டு வர… கண்மணி வேகமாக அவனை விட்டு விலகிய போதே.. அவளை விலக விடாமல்… தன்னோடு பிடித்தவன்.. அடுத்த நிமிடமே அவளின் வாயில் வலுக்கட்டாயமாக சர்க்கரையைப் போட்டவன்… அவளுக்குக் கொடுத்தது போக… மீதியை தன் வாயில் போட்டவன்…. அடுத்த நொடியே அவளைத் தள்ளி நிறுத்தியவன்…
“ஏய் அம்மு… நான் இப்போ சந்தோசமா இருக்கேன்… அது எந்த அளவுக்குனு எனக்கே தெரியலை…. நான் ஏதாவது உன்னைக் கஷ்டப்படுத்திருவேனோன்னு எனக்கே பயமா இருக்கு… நான் இப்போ போறேன்… என் பொண்டாட்டி அம்மாவாகப் போறா… அவ புருசன் நான் அப்பாவாகப் போறேன்ற சந்தோசத்தில போறேன்… “ கண்மணியையேப் பார்த்தபடி… பின்புறமாக அடி எடுத்து வைத்து அவளை விட்டு விலக ஆரம்பித்தவன்….
“பாட்டி… நான் நாளைக்கு வர்றேன்… அதுவரை என் பொண்டாட்டிய பத்திரமா பார்த்துக்கங்க…. அவ கழுத்துல மறக்காமல் மருந்து போட்ருங்க… “
கண்மணியை மட்டுமே பார்த்தபடி… ரிஷி அந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்….
அங்கிருந்து சந்தோசமாக வெளியேறினான் தான்… ஆனால் அவன் சந்தோசத்தை யாரிடம் காட்டுவது… அவனின் எல்லை மீறீய சந்தோசத்தை யாரிடம் பகிர்ந்து கொள்வது… அவனின் சந்தோசமோ…. துக்கமோ அனைத்தின் உச்சமாக இருந்தவளிடம் இன்று தன்னை வெளிப்படுத்த முடியாத நிலை…
என்ன செய்வது… யாரிடம் சொல்வது… தன் அம்மாவிடம்… தன் மாமாவிடம்…. தன் தங்கைகளிடம்…. சொல்லலாமா... ஆனால் இவர்கள் யாருமே அவன் இருக்கும் இந்த உச்சகட்ட மகிழ்ச்சியின் நிலையை உணர்ந்து அவனைத் தோள் கொடுத்து தாங்கி தேற்றும் சாத்தியம் உள்ளவர்களா… அவனால் அப்படி அவர்கள் யாரையுமே நினைக்க முடியவில்லை…. ஆனால் யாரிடமாவது தன் சந்தோசத்தைச் சொல்ல வேண்டுமே… அவர்கள் மடியில் விழுந்து அழ வேண்டுமே… உச்சகட்ட பரவசத்தில் துள்ளிக் கொண்டிருந்தவனைத் தாங்கித் தேற்றும் தோள்களைத் தேட ஆரம்பித்த போதே… அப்படிப்பட்ட நபராக அவன் மனம் உணர்ந்ததோ… அவன் நண்பனைத்தான்… அவன் நண்பன் விக்கியைத்தான்….
உடனே விக்கி இருக்குமிடம் கேட்டு… விக்கியைத் தேடிப் போனவன்… விக்கி அவன் கண்பார்வையில் பட்ட அடுத்த நிமிடம்…
“வி…………க்………கி…” சந்தோஷக் கூப்பாடு போட்டபடி அவனின் அருகில் ஓடோடிப் போனவன்… ஒரே அலாக்காக அவனை தூக்கித் தட்டாமலை சுற்ற ஆரம்பித்திருந்தான்….
விக்கி ஒன்றும் புரியாமல்….
“டேய் என்னாச்சுடா… விடுடா… சொல்லித் தொலைடா... கீழ விழப் போறேண்டா” விக்கி கத்த ஆரம்பித்திருக்க… ரிஷியும் இறக்கி விட்டான் தான்…. ஆனாலும் அவனை விடாமல் இறுகக் கட்டிக் கொண்டு சில நிமிடங்கள் அப்படியே விக்கியின் தோளில் சாய்ந்திருந்தவனின் நிலை ஏதும் அறியாமல்... புரியாமல் விக்கி அமைதியாக ரிஷியை அணைத்திருக்க… அடுத்த சில நிமிடங்களிலேயே… அவனைத் அணைத்திருந்த தோள்பகுதியில் ஈரம் பட ஆரம்பித்திருக்க…
விக்கி அதிர்ந்து வேகமாக ரிஷியை தன்னிடமிருந்து பிரித்தெடுக்க நினைத்தபோதே…
“ப்ளீஸ்டா.. எனக்கு இப்போ சந்தோசத்துல அழனும் போல இருக்குடா என் கண்மணி இல்லடா… அவ என் பக்கத்தில இல்லடா… எனக்கு உன் தோள் வேணும்டா….…” விக்கிக்கு ஒன்றுமே புரியவில்லை தான் ஆனாலும் நண்பனைத் தாங்கியவனாக… வார்த்தைகள் ஏதுமின்றி… உடல் மொழியால் மட்டுமே அவனைத் தேற்ற ஆரம்பித்திருக்க
”அம்மா இந்த வார்த்தை என் கண்மணி தெரியாத உணராத வார்த்தைடா… இன்னும் சொல்லப் போனால் அவளுக்குப் பிடிக்காத வார்த்தை கூட… அவ வாழ்க்கைல இந்த வார்த்தைய உச்சரித்த நிமிடங்களை எண்ணிக்கைல அடக்கியிறலாம்… ” விக்கியிடமிருந்து தன்னைப் பிரித்தெடுத்தவன்….
தன் நண்பனின் குழப்பமான முகத்தைப் பார்த்தபடியே…. சிரித்தபடியே அதே நேரம் தன் கண்ணீரைத் தானேத் துடைத்தவனாக
“என் கண்மணி அம்மாவாகப் போறாடா” சந்தோசமாகச் சொல்ல… விக்கிக்கும் இப்போது புரிய… வேகமாக தன் நண்பனைக் கட்டிக் கொண்ட போதே… ரிஷி வேகமாக அவனைத் தள்ளிவிட்டவன்… அதே நேரம் அவனை விடாமல்… அவன் கைகளைத் தன் கையிலே வைத்துக் கொண்டவனாக…
“ஹையா ஹையா ஹோய் நான் அப்பன் ஆனேன் டோய்”
விக்கியைச் சுற்றி விட்டு தானும் சுற்றி ரிஷி பாட ஆரம்பிக்க… விக்கியும் சந்தோசமான அவன் கைகளைப் பற்றியபடியே இருக்க
மாமா எங்கே டோய்”
ரிஷி அவன் தோளை இடிக்க… விக்கி சந்தோசமாக… வேகமாகத் தன்னைக் கைக் காட்ட… ரிஷி புன்னகைத்தவனாக அவனை இழுத்து தன் புறம் நிறுத்தியவனாக
”ஒன் பொண்ணக் கொண்டா டோய்”
ரிஷி கண் சிமிட்டிப் பாட… அதே நேரம் விக்கியோ…
“அதெல்லாம் என் பொண்ணைத் தர முடியாது… ப்போ” விக்கி பொய்யாக முறுக்கிக் கொள்ள… ரிஷியோ குறும்பாக…
“அப்டியா” என்றபடியே….
”யான மேல குதிர மேல பையன் வருவான் டோய் நைனாவாட்டம் ஸ்டைலா நின்னு விசிலும் அடிப்பான் டோய் ஒம் பொண்ணக் கண்டா கண்ணும் அடிப்பான் டோய் தர ரம்பம் பம்பம்”
“ஹையா ஹையா ஹோய் நான் அப்பன் ஆனேன் டோய்”
பாடலை முடித்தபோது விக்கியின் கன்னத்தில்… மாறி மாறி முத்த மழையை வழங்கி இருக்க… விக்கியின் கண்களிலும் இப்போது கண்ணீர்…
இதோ இந்த ரிஷியைத்தானே… தொலைந்து போன அவன் கல்லூரிக் கால தோழன் இந்த ரிஷியைத்தானே அவன் பார்க்க நினைத்தது… இன்று தன் நண்பன் கிடைத்து விட்டானா?… நம்ப முடியாமல் மீண்டும் நண்பனைப் பார்த்தான் விக்கி
ஆம் உண்மையே… அன்று பார்த்த அந்த ரிஷியே… இன்று இப்போது தன் முன் நிற்கும் இந்த ரி்ஷி… அந்தத் துள்ளல்…. அந்தக் குறும்பு… அந்த விளையாட்டுத்தனம்.. அந்த சந்தோசம்… அத்தனையும் தன் நண்பனிடம் இன்று வந்திருக்க…
“டேய் ரிஷி… இத்தனை நாள் எங்கடா இருந்த” விக்கியும் உணர்ச்சி வசப்பட்டிருக்க…
அதே சமயம்… தன் அண்ணன்…. தன் வருங்காலக் கணவன்… இருவரையும் அவர்களின் அட்டாகசங்களையும் பார்த்து சந்தோஷம் குழப்பம் எனக் கலவையான உணர்வுகளோடு அந்த அறை வாசலில் நின்று கொண்டிருந்தாள் ரிதன்யா…
Lovely update