அத்தியாயம் 96-2
அந்த ராத்திரியில் ரிஷிக்கு விழிப்பு வந்திருக்க… வேகமாக எழுந்து சட்டையை மாட்டியவன்… கீழே தன் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்ட… ரிதன்யா கதவைத் திறந்தாள்…
”என்னண்ணா…” எனப் பாதித் தூக்கத்தில் கேட்க..
“ஒண்ணுமில்லடா…. அம்மா எப்படி இருக்காங்கனு பார்க்க வந்தேன்…” என்று சமாளித்தவனாக உள்ளே வந்தவன்… ரித்விகாவையும் அன்னையையும் பார்த்துவிட்டு வெளியே வந்தான்…
வந்தவன்… அடுத்து வேகமாக தன் மாமனார் வீட்டுக்குச் சென்றவன்…. அங்கிருந்த சன்னல் வழியே அவரின் நிம்மதியான உறக்கத்தைக் கண்டான் தான்… அப்போதும் நிம்மதி வராமல்… மாமரத் திண்டில் அமர்ந்தபடி… யோசிக்க ஆரம்பித்தவனாக… இப்போது விக்கிக்கு அழைத்தான்… அடுத்து பிரேமுக்கு… அடுத்து நீலகண்டனுக்கு என அனைவரையும் அழைத்து ஏதோ பேசி வைத்துவிட்டான் தான்… ஆனாலும் அவனால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லை…
“என்னவாக இருக்கும்” என்று எப்படி யோசித்தாலும் அவன் மனம் நிலைகொள்ளாமல் தவிக்க ஆரம்பித்திருக்க… தன் தந்தை மறைவுக்கு முந்தைய தினம்… என்று ஏற்பட்ட உணர்வு போலவே இன்றும்…
ஆனால் அன்று இருந்தவனா இந்த ரிஷி… இன்று இவன் வேறே… வேகமாக எழுந்தவன்… தன் பைக்கை எடுத்தபடி… தான் வீடு கட்டப் போகும் மனையை அடைந்தான் அடுத்த சில நிமிடங்களில்…
அது கண்மணி இல்லத்தோடு சேர்ந்த பகுதிதான் என்றாலும்… அதன் நுழைவாயிலுக்குச் செல்ல எதிர் சாலையில் சுற்றித்தான் போக வேண்டும் இப்போதைக்கு…
வேகமாக அந்த இடத்தை அடைந்தவன்… அங்கிருந்த மேஸ்திரியை அழைக்க… அவனும் வந்திருக்க
“எத்தனை பேர் ஊர்ல இருந்து வந்திருக்காங்க” ரிஷி சட்டென்று கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்திருக்க
‘இப்போதைக்கு இருபது சார்… சத்யா சார் அனுப்பினவங்கதான்” என்ற போதே…
“எல்லோருடையா ஐடெண்ட்டியும் செக் பண்ணீட்டீங்களா…” ரிஷி அடுத்தடுத்த கேள்விக் கணைகளை வைத்திருக்க
”செக் பண்ணிட்டேன் சார்… அவங்களோட ஆதார் கார்ட் ஜெராக்ஸ்லாம் இருக்கு சார்…” என்றபோதே…
“அதை எல்லாம் எடுத்துட்டு வாங்க…”
“எல்லோரையும் கூட்டிட்டு வாங்க…” ரிஷி எதற்காகவும் தன்னை சமரசப்படுத்திக் கொள்ளத் தயாராக இல்லை…. அனைவரையும்… அவர்களுடைய அடையாள அட்டையை வைத்து சரிபார்த்து பின்..
”உங்க… ஐடி கார்ட்” மேஸ்திரியையே கேட்க…
“சார்… நான் நட்ராஜ் ஐயா சொன்ன ஆளு… “
“கேட்டதைக் கொடுங்க” என்றபடி… அவனிடமும் சரிபார்த்தவன்… அவனைப் போகச் சொல்லிவிட…
யாருமே சந்தேகப்படும்படி இல்லை…. ஆனாலும் மனம் நிம்மதி அடைய மாட்டேன் என்கிறதே… தவித்தான் ரிஷி
அனைவரையும் யோசித்தவன் தன் மனைவியைப் பற்றி யோசிக்காமல் இருப்பானா??… கண்மணி இருக்கும் இடம் அப்படி பாதுகாப்பைப் பற்றி சிறிதும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை…
அவள் மனதை நினைத்துதான் இவன் கவலை கொண்டிருந்தாந்தான்… ஆனால் இப்போது அவனுக்குள் வந்த சஞ்சலம் வேறு மாதிரியானது… கண்மணிக்கும் அதற்கும் சம்மந்தமே இல்லாதது… ஒரு மாதிரி நெஞ்சம் கனத்தது போல் இருக்க…
“நானும் அவளும் இங்க வீடு கட்டி சந்தோஷமாக வருடங்கள் கடந்து வாழ வேண்டும்… இந்த இடமும்… அதன் பெயரும் தங்கள் சந்ததிகளுக்கு அவர்கள் இருவரும் இந்த இடத்தில் வாழ்க்கையின் பெருமையையும் சந்தோசத்தையும் மட்டுமே சொல்ல வேண்டும்…”
அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தவனுக்கு… சஞ்சலம் இன்னும் அதிகமாகியது போல இருக்க…
“இந்த இடத்தில் எந்த வித அசம்பாவிதமும் நடக்க விட மாட்டேன்..” தனக்குள் உறுதி பூண்டவனாக… அமர்ந்தி்ருந்தவனுக்கு திடீரென்று ஆதவனின் ஞாபகம் வந்திருக்க… அடுத்து உடனே அழைத்தது மருதுவுக்குத்தான்…
“எங்கள மீறி அந்த ஆதவன் யாருக்கும் வேலை கொடுக்கமாட்டான்… யார் யார் எந்த வேலைக்குப் போறாங்கன்றது வரை எங்க எல்லாருக்குமே ஓரளவு எல்லாமே தெரியும்…… உனக்கு உன் குடும்பத்துக்கு அப்புறம் நீ கொடுத்த லிஸ்ட்ல இருக்கிற யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை…” மருதுவும் நிச்சயமாகச் சொல்லி விட…
யமுனா… பார்த்திபன்… ஹர்ஷித் என அனைவருக்குமே பேசிவிட்டு வைத்தபின் கொஞ்சம் மனதில் அமைதி வந்திருக்க… இறுதியாக விக்கி அழைத்திருந்தான் இப்போது… அவனின் பாதுகாப்பையும் உறுதி செய்திருக்க… கொஞ்சம் அமைதியானவன்… விக்கியிடம் மட்டும் அழைப்பைத் தொடர்ந்திருக்க… விக்கிக்கு அவன் நிலைமையை உணர்ந்தவனாக பேச ஆரம்பித்திருந்தான்…
“டேய் எங்க இருக்க” விக்கி கேட்க ரிஷியும் சொல்ல…
“டேய் ரிஷி… வீட்டுக்கு போடா… நீ இப்படி தெருவுல நைட் தனியா நிற்கிறது எனக்குப் பயமா இருக்கு… நான் வந்துட்டு இருக்கேண்டா”
“ப்ச்ச்… கொஞ்சம் ஓகேடா…. “ என்றவன்… ஏதோ யோசித்தபடி
“இப்போதான் கொஞ்ச நாளா கொஞ்சம் நிம்மதியா தூங்கினேன்… இப்போ மறுபடியும்… அலைபாயுதுடா மனசு…“ என ரிஷி தளர்வான குரலில் சொல்ல
“இங்க பாரு… அதெல்லாம் ஒண்ணும் இல்லை… கண்மணி உன் பக்கத்துல இல்லைன்றதுதான் இப்போ உன் பெரிய பிரச்சனையே… அதை நீ வெளிக்காட்டிக்காமல் இருந்தாலும்… இந்த மாதிரி உன்னை அலைகழிக்குது…. அதுதான் இப்படிலாம் உனக்குத் தோணுது மத்தபடி ஒண்ணும் இல்லடா… அந்த ஆதவன் என்ன பண்ணப் போறான்… சமாளிப்போம்… அதுக்காக இப்படி பயந்து பயந்து “ எனும் போதே
“நான் பயப்படலடா… முன்னெச்சரிக்கையா இருக்கனும் தானே… இவ்ளோ நாள் ரொம்பக் கவனமா இருந்துட்டு இப்போ… லேசா விட்டா எப்படி…”
”சரி போய்த் தூங்கு… நான் வர்றேன்…” என விக்கி அவனைப் புரிந்து… வேறெதுவும் பேசாமல் தூங்கச் சொல்ல
“இல்லடா… இனி தூங்கி என்ன ஆகப் போது.. விடியப் போகுது… குளி்ச்சுட்டு… மறுபடியும் இங்கதான் வரப்போறேன்...” என்று வைத்து விட்டான் ரிஷி…
----
இலட்சுமி… அதிகாலை எழும் போதே… உற்சாகத்துடன் எழுந்திருக்க…
“ம்மா… நேத்து ஹாஸ்பிட்டல் பெட்ல இருந்தவங்க நீங்கன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க… மகன் நடத்துற முதல் விசேசம்னு… துள்ளிட்டு இருக்கீங்க…”
“கண்ணு வைக்காதீங்க ரெண்டு பேரும்… அவன் கல்யாணத்தைக் கூட ஆளா நின்னு பண்ண முடியாத நிலை… ரெண்டு பேரும் மசமசன்னு பேசிட்டு இருக்காதீங்க… போங்க போங்க” மகள்களை விரட்ட…
“நாங்கள்ளாம் ரெடி” என ரிதன்யாவும் ரித்விகாவும் வெளியே வந்திருக்க.. நட்ராஜும்… அவர் வீட்டில் இருந்து வந்திருக்க… ரித்விகா அவரைப் பார்த்து…
“ஆ மாமா… அசத்துறீங்க… நாட்டாமை சரத்குமார் மாதிரி இருக்கீங்க போங்க… இந்த பட்டு வேஷ்டி சட்டைல…” எனும் போதே
”ஏய் அப்படி இல்ல ரித்வி… படையப்பா படத்துல ரம்யா கிருஷ்ணன் சொல்வாங்கள்ள… அந்த மாதிரி.. வயசானாலும்… நம்ம மாமாக்கு ஸ்டைலும் அழகும் போகல..” நட்ராஜை உண்மையாகவே பாராட்டிக் கொண்டிருக்க
“ஏண்டா… இன்னைக்கு யாரும் உங்களுக்குச் சிக்கலையா…” என நட்ராஜ் சிரித்தபடியே நழுவியபோதே…
“மாமா… அத்தை அவ்ளோ பெரிய சாம்ராஜ்யத்தை விட்டுட்டு உங்க பின்னாடி வந்தாங்கன்னாஅ… சும்மாவா என்ன” ரிதன்யா அப்போதும் விடாமல் நட்ராஜிடம் பேச்சை வளர்த்துக் கொண்டிருந்த போதே… கந்தம்மாள் கணவரோடு அங்கு வந்தவர்...
“ஏண்டா… நேத்தே வர்றோம்னு சொன்னா கேட்டியா… இப்படி அதிகாலைல அரக்கப் பரக்க எழுந்து ஓடி வர்றோம்” என்றபடியே…
“எங்க உன் பொண்ணு… ஆளக் காணோம்… ஒரு வார்த்தை கூப்பிட்டாளா… மாப்பிள்ளை கூப்பிட்டார்னு வந்தேன்…” எனச் சொல்ல… ரிதன்யா இப்போது
“பாட்டி… அண்ணி கூப்பிட்டால் என்ன அண்ணன் கூப்பிட்டால் என்ன.. வாங்க வாங்க… இன்னைக்கு நீங்கதான் இங்க ராணி… உங்களக் கேள்வி கேட்க யாருமே கிடையாது…” என அவரை அழைத்துப் போக… கந்தம்மாளே ரிதன்யாவின் பாசத்தில் கொஞ்சம் அதிர்ந்து பார்த்தவராக…
“அவளை உனக்குப் பிடிக்காதுதானே… ” சந்தேகமாக இழுக்க
“உங்களுக்கும் அண்ணியைப் பிடிக்காதுதானே… எனக்கும் அண்ணியைப் பிடிக்காது… அப்போ நாம ரெண்டு பேரும் ஒரே கட்சிதானே” ரிதன்யா அழகாக கந்தம்மாளை வீழ்த்த
“அட ஆமால்ல.. ” கந்தம்மாள் ரிதன்யாவின் பேச்சை நம்பியவராக வீட்டுக்குள் சென்றார்..
ரிஷி உறவினர்கள் என்று பார்த்தால் மகிளா மட்டும் வரவில்லை… மற்ற அனைவருமே வந்திருந்தனர்… மகிளாவின்குழந்தைக்கு தடுப்பூசி போடபட்டிருந்ததால்… குழந்தையை விட்டு விட்டு அவளால் வரமுடியாத சூழ்நிலை…
---
அனைவரும் பூமி பூஜை நடக்கின்ற இடத்தில் குழுமி இருக்க… கந்தம்மாளைத் தவிர…. வேறு யாரும் கண்மணி இல்லை என்பதை பெரிதுபடுத்தவில்லை…
பெரிதுபடுத்தவில்லை என்பதை விட… விக்கி குடும்பத்தினர் முதல்… நீலகண்டன் வரை அனைவருக்கும் கண்மணி அவனோடு இல்லை என்பது தெரிந்தாலும்… அப்போதைக்கு வெளிக்காட்டிக் கொள்ளவில்லை…
இருந்தும் வேங்கட ராகவன் மட்டும் கண்மணியை அலைபேசியில் அழைத்திருக்க… கண்மணிக்காக வேங்கட ராகவன் இறங்கி வருவார்… வேங்கட ராகவனுக்காக கண்மணி இறங்கி வருவாளா…
“நீங்க பூஜையில கலந்துக்கங்க தாத்தா… நான் அப்புறமா பேசுறேன்..” நாசுக்காக பேசி வைத்து விட… அவருக்கும் கலக்கம் தான்… ஆனாலும் நட்ராஜ்… ரிஷி என அனைவரும் அவரவர் வேலையைப் பார்த்தபடி இருக்க…
”இந்த பூஜை முடியட்டும்…. நாம் பேசுவோம்” என தனக்குள் முடிவு செய்து கொண்டார்….
---
இங்கு பூமி பூஜை ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க… கண்மணி அவளது பாட்டியை அம்மன் கோவிலுக்கு அழைத்து வந்திருந்தாள்…
“ஏண்டா… இங்க வந்த நாம … அப்படியே ஒரு எட்டு எடுத்து வச்சோம்னா…. பூஜை நடக்கிற இடம்… ரிஷியும் சந்தோசப்படுவார்ல…” எனும் போதே கண்மணி கண்களை மூடி அம்மனிடம் வேண்ட ஆரம்பித்திருக்க… வைதேகியின் வார்த்தைகள் எல்லாம் யாருக்கோ எனக் காற்றில் கலந்திருந்தன…
அதன் பின்னும் அவரைப் பேச விடாமல் பிரகாரத்தைச் சுற்றி வந்து… கோவிலை விட்டு வெளியே வந்திருக்க… அவர்கள் வாகனத்தின் ஓட்டுனர் இவர்களைப் பார்த்து ஓடி வந்தவராக…
“அம்மா… திருவிழா வருதுனு… இப்போவே கடை எல்லாம் போட்டுட்டாங்க… இங்க காரை நிறுத்தக் கூடாதுனு சொல்லிட்டாங்க… “
“நமக்குமா… நீ அவர் பேரைச் சொன்னியா…” வைதேகி கேட்ட போதே….
“ஐயா பேரைச் சொல்லல… இனி சொல்றேன்மா… நான் புதுசுதானே… இனி நான் பழகிக்கிறேன்மா” என்றபோதே
“பாட்டி… இவ்ளோ நேரம் பேசுனதுக்கு நாமளே அங்க போயிருக்கலாம்…. அண்ணே கார் எங்க இருக்கு… போலாம்” எனச் சொல்ல… ஓட்டுனரும் அவர்களைக் கூட்டிக் கொண்டு நடக்க…
கண்மணி எப்போதும் போல தடுமாறினாள் தான்… இன்றும் அந்த இடத்தைக் கடப்பதற்கு… ஆனாலும் தன்னைச் சமாளித்து… தன் கவனத்தை திசை மாற்றி வைதேகியுடன் பேசியபடி போனாலும்… சரியாக அவர்கள் காரின் அருகே போன போது… மெல்ல மெல்ல மயங்க ஆரம்பித்திருக்க.. இருந்தும் வேகமாகக் காரின் கதவைப் பற்றி தன்னை நிலைப்படுத்திக் கொள்ள… வைதேகி பதறிவிட்டார்
“கண்மணி… என்னடா… என்னாச்சு” என்றபடி அவளைத் தாங்கிக் கொண்டவர்…
“பட்டினியா வர வேண்டாம்னு சொன்னா கேட்காமல் வந்த… இப்போ பாரு... உன்னை யாரு இந்த சமயத்தில எல்லாம் விரதம் இருக்கச் சொன்னா” தன்னை மறந்து வைதேகி பேச ஆரம்பித்திருக்க... அதை எல்லாம் கண்மணி கேட்டிருந்தால் தானே... அவளோ மயங்கி இருந்தாள்…
---
பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டிருக்க… கண்மணி இல்லை என்பது குறைதான்… ஆனால் அதற்காக அதைக் கேட்டு ரிஷியைக் கஷ்டப்படுத்தக் கூடாது என அனைவருமே அவரவர் வேலையைப் பார்த்தபடி இருந்தனர்…
ரிதன்யாவும் ரித்விகாவும் வெகுநாட்களுக்குப் பிறகு… தங்கள் சொந்த நகைகளை அணிந்திருக்க… மகிளாவின் தாய் கோதை தங்கள் மருமகள்கள் இருவரையும் நெட்டி முறித்தவர்… அவர்களை பூஜை நடத்திற்கு அனுப்பியவராக
“லட்சுமி… புள்ளைங்க ரெண்டு பேருக்கும் சுத்தி போட்ரு… சும்மாவே நம்ம புள்ளைங்க அழகு… அதுலயும்… அண்ணன் அவங்களுக்காக எடுத்த நகைகளைப் போட்டதும் பார்க்கிறதுக்கு இரண்டு கண்ணே போதலை…. என் கண்ணே பட்ருச்சு… ஊர்க்கண்ணை விட நம்ம கண்ணுதான் கொள்ளிக் கண்ணு” என தன் மருமகள்களின் அழகைச் சிலாகித்து சொன்னவர்…
“ரிதன்யாக்கு இப்பவே கல்யாணக் களை தாண்டவமாடுது இலட்சுமி… இதை எல்லாம் பார்க்க என் அண்ணன் இல்லை…” அவர் கண்கள் நீரை வடித்திருக்க… இலட்சுமியின்… கண்களும் கலங்கி இருக்க..
“அட… வா… என்னமோ மனசு தாங்காமல் பொங்கிட்டேன்… வா வா…” என்றபடி தன் அண்ணன் மனைவியை சமாதானமும் செய்திருந்தார் தனசேகரின் தங்கை…
ரிஷி… சாதாரண காட்டன் வேஷ்டி… அடர் நிறச் சட்டை… இவ்வளவே அவன் அன்றைய தினத்திற்கு அணிந்திருந்தது…. இது கூட இலட்சுமி அவனை வற்புறுத்தியதால் தான்…
வேஷ்டியில் வந்து நின்றவனைப் பார்த்தவர்... தன் மகனா இது… அவராலேயே நம்பவே முடியவில்லை… வேஷ்டி அவனுக்கு பாந்தமாக இருந்ததா… இல்லை அவன் வேஷ்டியில் நன்றாக இருந்தானா அவருக்கே தெரியவில்லை…
அதைவிட முன்னெல்லாம் வேஷ்டி என்றாலே பிடிக்காது… ஆடை விசயத்தில் மிகவும் கவனமாக இருப்பான் ரிஷி…. அதனால் வேஷ்டி என்றாலே அலறுவான்..
பெண்கள் புதிதாகச் சேலை அணிந்தால் எப்படி அசௌகரியமாக இருப்பார்களோ அப்படித்தான் ரிஷிக்கும் வேஷ்டி…
“ம்மா… ப்பா.. இதெல்லாம் கட்டச் சொல்லாதீங்க… என்னால ஃபன் பண்ணவே முடியாது…” என அனைத்து விழாக்களிலும் ரிஷி மறுத்து விடுவான்…. இப்போது… எப்படி இப்படி… என்னவோ காலம் காலமாக வேஷ்டி அணிவனைப் போல… முழங்கையின் கீழே வரை சட்டையை மடித்தபடி கம்பீரமாக நடந்து வர… காலம் கொடுத்த மாற்றத்தில் இந்த மாற்றமும் ரிஷிக்கு அதுவாகவே வந்திருக்க… இலட்சுமிக்கு தானாகவே தன் மருமகளின் ஞாபகம் வந்திருந்தது…
“சும்மாவே இவன் இந்த இடம் வாங்கிட்டான்னு அவ்ளோ கண்ணும் இவன் மேலதான்… ரெண்டு பேரும் ஒண்ணா நின்னுருந்தால்… ஊர்க்கண்ணே பட்ருக்கும்… மத்தவங்க கண்ணு என்ன… என் கண்ணே பட்ருக்கும்… ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து கண்பட்டு விடும் என்பதற்காக… கண்மணி அவன் பக்கத்தில நிற்கக் கூடாதா என்ன… தன்னையே திட்டிக் கொண்டவளாக
“ஆனால் கண்மணியும் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்குமே…” மருமகள் இல்லாததை நினைத்து மனம் கவலையில் வாடத்தான் செய்தது… ஆனாலும் முகத்தில் இலட்சுமி காட்டிக் கொள்ள வில்லை…
அனைவருமே ரிஷியின் முகத்தில் கவலையைக் கொண்டு வரக்கூடாது என பார்த்து பார்த்து கவனமாக நடந்து கொண்டிருக்க… ரிஷியோ ஒரு விதமான அலைப்புறுதலுடனே இருந்தான்… யாரிடமும் காட்டிக் கொள்ளாவிட்டாலும் ஒரு மாதிரியான பதட்டத்துடன் தான் இருந்தான்…
விக்கிக்கு மட்டுமே அவனின் பதட்டம் புரிந்திருக்க…
“ஏண்டா… நான் சொல்றதை இதை மட்டும் பண்றியா… என்ன பண்றேனா நேரா பவித்ர விகாஸுக்குப் போ… உன் பொண்டாட்டியக் கூட்டிட்டு வா… எல்லாம் சரி ஆகிவிடும்… உனக்கு எப்படியோ… எங்களுக்கு இந்த மூஞ்சிய பார்க்க சகிக்கல….”
ரிஷி அப்போதுமே அவனிடம் பதில் சொல்லாமல் தன் வேலையைப் பார்த்தபடி இருக்க… விக்கிக்குத்தான் ஒரு மாதிரி ஆகி விட்டது…
எத்தனையோ முறை அவன் மூடு சரியில்லாத போது… கோபமாக இருந்த போது… ரிஷி நிமிடத்தில் அவனை சிரிக்க வைப்பான்… ஆனால் தன்னால் முடியவில்லையே… பெருமூச்சு விட்டபடி விக்கி பூஜையைக் கவனிக்க ஆரம்பித்திருந்தான்….
ரிதன்யாவும் கோதையும்… அந்த வீட்டின் பிறந்த பெண்மக்கள் என்பதால்… இருவருமாகச் சேர்ந்து முதல் கல்லை எடுத்து வைக்க…
“நல்ல வேண்டிக்கங்கம்மா… முக்கியமா பிறந்த மக்கள் உங்களோட சந்தோசமான மனசும்… வேண்டுதலும்தான் வேண்டும்… “
ரிதன்யா மனம் உருக வேண்டியபடி… கல்லை எடுத்துக் கொடுக்க… அடுத்தடுத்து அனைவரும் அவளைத் தொடர… ஏற்கனவே சொல்லித்தான் அது மட்டுமில்லாமல் அதிகப்படியான பணத்தையும் கொடுத்துதான்… பூசைக்காக புரோகிதரை அழைத்து வந்திருந்ததால்…. ரிஷியின் மனைவி என்ற வார்த்தையே வரவில்லை அவரிடமிருந்து…
ஒவ்வொருவரும் பூ போட்டு… வணங்கிக் கொண்டிருக்க… அப்போது…
“அண்ணே… நடு ரோட்ல யாரோட வண்டி அது… கொஞ்சம் வந்து எடுக்கறீங்களா…” தன் வாகனத்தில் போக முடியாமல் பூஜைக்கு வந்திருந்தவர்களின் வாகனத்தால் யாரோ சாலையில் சென்றவனின் பயணம் தடைப்பட்டிருக்க… அவன் உள்ளே வந்திருந்தான்... உள்ளே வந்தவன்… வண்டியின் எண்ணை வந்து சொல்லி நின்ற கூட்டத்திடம் விசாரிக்க ஆரம்பித்திருக்க..
“அம்பி… அது என்னோட வண்டிதான்… என்னோட வண்டிதான்… எதுவும் பண்ணிடாதேள்… ட்யூ வேற போயிண்ட்ருக்கு…. ஒரு அஞ்சு நிமிசம் நானே… வந்துறேன்… வெயிட் பண்ணுங்கோ” பத்றிய புரோகிதர்… ரிஷியிடம் திரும்பி...
“உங்க ஆம்படையாள் வீட்ல இருந்து யாராவது இருந்தா… அவங்க பண்ணலாம்… அவ்ளோதான்… எல்லாம் சுபமா முடிஞ்சது….” புரோகிதர் சொல்லி முடித்திருக்க
அனைவரின் சிதறிய கவனமும் மீண்டும் பூஜை நடக்கும் இடத்தில் குவிய… நட்ராஜும் தீபாராதனையை நோக்கி குனிய… அனைவரும் நட்ராஜைக் கவனிக்க ஆரம்பித்திருக்க… அதே நேரம்… நட்ராஜின் கழுத்தை நோக்கி வந்த அரிவாளை ரிஷி ஆக்ரோஷமாகப் பற்றி இருந்தான்… அதே வேகத்தில்… கைகளைச் சுழற்றி…. அந்த அரிவாளைப் பிடித்திருந்தவனையும் ரிஷி மடக்கி இருக்க…
ஒரே நிமிடம் தான்… யாருக்குமே என்ன நடந்தது என்று புரியவில்லை… ரிஷியின் கோபமும்…. அவன் யாரையோ பிடித்து வைத்திருப்பதும் மட்டுமே புரிய… அடுத்த நொடி… இன்னொருவன் … வாகனத்தை எடுத்து வைக்குமாறு வந்து கேட்டவன்… கத்தியோடு நட்ராஜைத் தாக்குவதற்காக அவரை நோக்கி வர…. ரிஷி இன்னொரு கையால் அவனையும் பிடித்தபடி… இருவரின் கைகளில் இருந்த ஆயுதங்களையும் கீழே விழ வைக்க போராடிக் கொண்டிருக்க…
இப்போது அனைவரும் சுதாரித்து ரிஷியை நோக்கி வர… ரிஷி அங்கிருந்து… அந்த இடத்தை விட்டு இருவரையுமே… பிடித்துக் கொண்டு வந்து வெளியில் சாலையில் தள்ளியவன் கண்களில் கொலை வெறி மட்டுமே…
“யார்டா நீங்க…. இதைப் பண்ணச் சொன்னது யாரு…” ஒற்றைக் காலைத் தூக்கி… வேஷ்டியைக் மடித்து இறுக்கிக் கட்டியவன்… இருவரையும் பந்தாடி இருக்க… விக்கி வேகமாக ஓடி வந்தவன்… ரிஷியைப் பிடித்து இழுக்க முயல… அவனாலும் அவனை அடக்கவே முடியவில்லை… தன் பலம் கொண்ட மட்டும் அவர்களை அடித்தபடியே இருக்க….
அடுத்த சில நிமிடங்களில் காவல் துறையும் வந்திருக்க…. விக்கியை ரிஷி முறைக்க மட்டுமே முடிந்தது…. அடுத்த சில மணி நேரத்தில்… காவல்துறையினர் விசாரணையில் அந்தக் கொலையாளிகள்…. நட்ராஜைக் கொல்ல வந்ததைக் ஒப்புக் கொண்டும் இருக்க…
ரிசி விக்கியிடம் எரிந்து விழுந்து கொண்டிருந்தான்…
“உன்னை யார்டா… போலிசை வரவைக்கச் சொன்னது…. அவங்க ஒரு… டேஷையும் கிழிக்க மாட்டாங்க… என்ன சொன்னாங்க பார்த்தேல… வந்தவனுங்க கூலிப்படையாம்… விசாரிக்கனும்னு… எழுதிட்டாங்கள்ள… நீ செத்தாலும்…. நான் செத்தாலும் இது யார் செய்யச் சொன்னதுனு கடைசி வரை தெரிய வரவே வராது… விசயம் தெரிந்தால் உள்ள வரனும்… இல்லை.. கம்முனு ஓரமா ஒதுங்கி நின்றனும்… உனக்குலாம் என்ன தெரியும்னு நீ நினைக்கிற… நேத்து நைட்ல இருந்து… இப்படி ஏதோ ஒண்ணு நடக்கப் போகுதுனு நெனச்சுதான் தூக்கம் வராம சுத்திட்டு இருந்தேன்… அது உனக்கு இப்போ புரியுதா… நீ என்னடான்னா பவித்ரா விகாசுக்குப் போ… பாதாள விகாசுக்குப் போன்னு காமெடி பண்ணிட்டு இருந்த… உன்னலாம்“ விக்கியிடம் ரிஷி ஒட்டு மொத்த கோபத்தையும் கொட்டியபடி இருக்க… அவன் வார்த்தைகளுமே எல்லை மிறீ இருக்க
ரிஷி இது போல…. பேசுவதை…. விக்கி… விக்கி என்ன… ரிஷியின் குடும்பமே முதன் முதலாகப் பார்த்துக் கொண்டிருந்தது…
நட்ராஜ் கூட சமாதானப்படுத்தினார்தான்
“அதுதான் ஒண்ணும் ஆகலேல…”
“ஆகியிருந்ததுனா… உங்க பொண்ணு வந்து என்னை வெட்டிப் போட்ருப்பா…. இல்லை நீயெல்லாம் ஒரு ஆம்பளையான்னு கேட்ருப்பா…. என் அப்பாவை நான் இவ்ளோ நாள் பார்த்துக்கிட்டு இருந்தேன்… உன்னால அது முடியலயான்னு… என்ன… என்ன பதில் சொல்வேன்..” ரிஷி உச்சக்கட்ட ஆவேசத்தில் ஓங்கிய குரலில் பேச பேச அவன் கண்களும் மொத்தமாக சிவந்திருந்தது….
”இப்போ என்னோட பிரச்சனை அது இல்லை… யார் இதைப் பண்ணச் சொன்னது… அந்த ஆதவன்னு தெரியும்… ஆனால்… அவன் எது பண்ணினாலும் எனக்குத் தெரியுமே” என்றபடியே யோசிக்க ஆரம்பித்தவன் அங்கும் இங்கும் நடந்தபடி…
”மாமா நல்லா யோசிச்சு சொல்லுங்க…. உங்க ஃபோட்டோவை கொடுத்து அடையாளம் சொல்லித்தான் கொலை பண்ணச் சொல்லியிருக்காங்க… முழுக்க முழுக்க உங்கள பாயிண்ட் பண்ணித்தான் இந்த முயற்சியே…. யோசிச்சுப் பாருங்க மாமா… உங்களுக்குனு தனிப்பட்ட முறையில் யாராவது எதிரி இருக்காங்களா… நல்ல யோசிச்சுப் பாருங்க மாமா..”
நட்ராஜ் எப்படி யோசித்தும் அவருக்கு அதற்கான விடை தெரியாமல் போக…. தன் மருமகனிடம் இல்லையென்றும் தலை ஆட்ட… ரிஷி அதற்கு மேல் அவரைத் தொந்தரவு செய்யவில்லை…
அடுத்து அவன் அங்கு நிற்கவும் இல்லை… அத்தனை பேரும் பதறி அவனை அழைத்த போதும்… அவன் யாரின் குரலையும் காதில் வாங்கவேயில்லை…. அடுத்த அரை மணி நேரத்தில் அவன் முன் வந்து நின்றிருந்ததோ மருது….
---
துரையை அடைத்து வைத்து… அவன் இறுதி மூச்சை முடித்த அதே இடம்… மருது யோசனையோடே வந்தவன்… வழக்கம் போல ரிஷியின் பைக்கை அடையாளம் வைத்து உள்ளே வந்திருக்க… அவன் உள்ளே வந்த போதே ரிஷியின் கைகளால் அவன் கழுத்துதான் நெருக்கப்பட்டிருந்தது….
அங்கிருந்த சுவற்றில் அவனைத் தள்ளி்யிருக்க… மருது ரிஷியின் இந்த ஆக்ரோசத்தை எதிர்பார்க்கவே இல்லை… அலைபேசியில் அவன் குரல் ஒலிக்கும் விதம் எப்போதுமே இப்படித்தான் இருக்கும்…
நேரில் பார்த்தாலுமே ஒட்டாத தொணியில் தான் பேசுவான்… ஆனால் இன்று இந்த ஆக்ரோஷம் அவன் ரிஷியிடம் பேசியிருந்த இத்தனை நாட்களில் உணராதது…
“ரிஷி…” மருதுவும் பல்லைக் கடித்தவனாக தன் பலம் அனைத்தையும் உபயோகித்து அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றிருக்க
“ஏண்டா என்கிட்ட சொல்லல… ” மருதுவைப் பேச விடாமலேயே ரிஷி அவனை தாக்கிக் கொண்டிருந்தான்
“அந்த ஆதவன் அப்பா… ஹர்ஷித்… ஏன் விக்கி அண்ணன் பொண்ணு இந்த விசயத்தில் எல்லாம் துப்பு சொன்னேன்னு உன்னை நம்பினேன் பாரு…”
”ஏண்டா நட்ராஜ் சாரைக் கொல்ல ஆள் அனுப்பி இருக்கான்னு சொல்லல… “ ரிஷி அவனை எட்டி உதைத்தவனாக… அவனை தள்ளி விட்டிருக்க…
மருதுவுக்கு ஒன்றுமே புரியவில்லை…
“அப்படி என்னடா நாயே அவர் மேல உனக்கு கோபம்… உன்னை சோறு போட்டு வளர்த்தார்னா… நீ நன்றி கெட்ட நாய்னு ஒருதடவை காட்டினதையே அவரால மறக்க முடியல…” என்ற போதே
“அண்ணனுக்கு என்னாச்சு…” மருது பதட்டத்துடன் கேட்டபடியே தள்ளாடி எழுந்து நிற்க
“அவர் மேல அக்கறைலாம் தேவையில்லை…. அவர்க்கு என்னாச்சுன்றதும் உனக்குத் தேவையில்ல…. ஏன் விசயத்தைச் சொல்லல..” கேட்டவன் மருது பேச ஆரம்பிக்கும் முன்னரே… அவனை மீண்டும் தாக்க ஆரம்பித்திருக்க
”அப்படி ஒரு வேலை எங்ககிட்ட…. எங்க ஆளுங்ககிட்ட வரலை….” மருதுவும் இப்போதும் சுதாரித்து ரிஷியிடம் கத்த ஆரம்பித்தவனாக
”அப்படி வந்திருந்தால்… என் அண்ணனை கொல்ல விட்ருப்பேனா… அவர் என் அண்ணன் ரிஷி… ” எனும் போதே ரிஷியின் கைகளினால் மருதுவுக்கு அறை விழுந்திருக்க
“உன் அண்ணனா… கொன்னுடுவேன்… நட்ராஜ் சார்… சொல்லு… சரியா… அண்ணன்னு உறவு கொண்டாடுன” அவன் சட்டையைப் பிடித்து உலுக்கிய போதே… ரிஷியின் குரல் தடுமாறியிருந்தது… இவன் பிடித்து உலுக்கிய உலுக்கலில் மருது அணிந்திருந்த சட்டையின் முன்பட்டன் அறுந்து விழுந்திருக்க… அவன் கண்களில் பட்ட மருது மணி என்ற பெயரைப் பார்த்த அந்த நொடியில்… ரிஷி நிலை தடுமாறினான்
கோவாவில் மருது யாரோ என்றிருந்த போது அவன் நெஞ்சில் பதித்திருந்த பெயர் அவனை இம்சிக்கவில்லை…
இப்போதோ…. ரிஷி தடுமாறி இருக்க… மருதுவுக்கு சமயம் வாய்த்திருக்க… இப்போது ரிஷியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்…
“என்ன ரொம்ப துள்ளுற…. உனக்கு எவ்ளோ நாளா என் அண்ணனைத் தெரியும்… இந்தக் கையால அவருக்கு மூணு வேளையும் சமச்சு போட்ருக்கேன்… நான் பண்ண ஒரே தப்பு… அன்னைக்கு அந்த நைட்ல ம… “ என் ஆரம்பித்த போதே ரிஷி அடுத்து மருதுவைப் பேச விட்டிருப்பானா என்ன…
------
”சத்யா… நான் ஒண்ணும் பண்ணல… அவன் திமிரா பேசினான்… அவ்ளோதான்… மயக்கம் தெளிஞ்சா அவனா போயிருவான்… நம்ம ஆளுங்க இருக்காங்க… அவங்ககிட்ட சொல்லிட்டுத்தான் வந்தேன்… நான் பார்த்துகிறேன்… நீங்க வர வெண்டாம்” ரிஷி எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் சத்யா ஊரில் இருந்து சென்னை நோக்கி கிளம்பி விட்டிருக்க… ரிஷியோ தன் அலுவலகத்தில் குழம்பிப் போனவனாக அமர்ந்திருந்தான்….
மருதுவும் நிச்சயமாகச் சொல்லிவிட்டான்… ஆதவன் இல்லை என்று….
’இவர்களை விடுத்து வெளியே போகவும் மாட்டான் ஆதவன்… பின் யாராக இருக்கும்’ தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்….
“தன் எதிரியா… நட்ராஜுக்கு எதிரியா… அப்படி இருந்தால் யார் இருப்பார்கள்….” யோசனை வந்த போதே… நாராயண குருக்களும் அர்ஜூனும் வந்து அவன் கண் முன் நிற்க
“ச்சேய்… உன் புத்தி ஏன் இப்படி எல்லாம் போகுது… இவ்ளோ நாள் இல்லாமல் இப்போ போய் இப்படியெல்லாம் பண்ணுவாங்களா” ரிஷி தன் தலையில் தட்டியபோதே…
”ஏன் பண்ணியிருக்கக் கூடாது... கண்மணி அவங்ககிட்ட வரணும்… இப்போ அவங்ககிட்ட போய்ட்டா… இனி மறுபடியும் நட்ராஜ்கிட்ட போகக் கூடாதுன்னா…” ரிஷியின் எண்ணங்கள் அந்தப் புள்ளியில் வந்து நின்ற போதே
விக்கியும் பார்த்திபனும் வந்திருக்க…
‘டேய்.. என்னடா.. நான் ஓகே தான்… ஏன் என்னைத் தொல்லை பண்ற…” ரிஷி சோம்பலாக அவர்களைப் பார்த்தான்…
“கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுக்கலாம்லடா… இப்போதைக்கு பிரச்சனை இல்லைதானே ரிலாக்ஸா இருடா…. வீட்டுக்குப் போ… ரெஸ்ட் எடு…. கொஞ்சம் உனக்கும் சரி ஆகும்” விக்கி ஆதுரமாகச் சொன்ன போதே….
வேகமாக அலைபேசியைப் பார்த்தவன்…
“ஷி**… ரித்விகாவுக்கு எக்சாம்னு லீவ் போட முடியாதுன்னு ஸ்கூலுக்கு போயிருக்கா… நேத்தே சொல்லியிருந்தா… ரிது மகி வீட்டுக்குப் போறான்னு… அவளைப் பிக் அப் பண்ண நான் தான் வரனும்னு.. ”
விக்கி அவனை ஆவென்று பார்த்தான் தான்… ஆனாலும் வேகமாக
“நான் போறேன்… நீ ரெஸ்ட் எடுடா… பார்த்தி உங்களுக்கு ரித்வி ஸ்கூல் தெரியும் தானே.. “ எனும் போதே
“இல்ல பரவாயில்ல… நானே போறேன்” ரிஷி தன் பைக்சாவியை எடுத்தபடி அங்கிருந்து கிளம்பியிருந்தான்…
----
நொடிக்கு நொடி அந்நியன் விக்ரமாக மாறும் தான் நண்பனை நினைத்து கவலையோடு விக்கி பார்த்திபனைப் பார்க்க… பார்த்திபனோ
“இன்னைக்கு ஈவ்னிங் கண்மணி கூட வேற மீட்டிங் இருக்கு…” பார்த்திபனும் கொஞ்சம் கவலையாகக் சொல்ல… விக்கியின் முகமோ மலர்ந்தது..
“ஐயா சாமி… ஃபர்ஸ்ட் அதை பண்ணுங்க… இவன் தானா சரி ஆகிருவான்… அட்லிஸ்ட் அடுத்த 24 மணி நேரத்துக்கு கொஞ்சம் நார்மலா இருப்பான்” விக்கி இப்போது நிம்மதிப் பெருமூச்சை விட
“இல்ல சார்… சீரியஸான விசயம்… டைவர்ஸ்” என பார்த்தி இழுக்க…
“யார் இவனா… கண்மணியையா… அட போங்க பார்த்தி… கண்மணி கூடப் பேசனும்… அட்லீஸ்ட் அவளைப் பார்க்கனும்னு சார் உச்சகட்ட ரிஸ்க் எடுத்திருப்பாரு… என்ன பார்த்தி நீங்க… அது புரியாமல்… நீங்க வேற இவ்ளோ ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க… இவ்ளோதானா நீங்க.”
என்றபடி விக்கி பேசிக் கொண்டிருந்த போதே… ரிஷியோ அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான் மீண்டும்…
“என்னடா… ரித்வி ஸ்கூலுக்கே போகலையா…” விக்கி கேட்க
“அர்ஜூன் வீட்ல ட்ராப் பண்ணிட்டாராம்… கண்மணியோட லேப்டாப் வாங்கிட்டு போக வந்தாராம்… அப்டியே ட்ராப் பண்ணிட்டும் போயிட்டாராம்…” மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்திருந்தவனுக்கு… அர்ஜூனைச் சுற்றியே எண்ணங்கள்…
கண்மணி அர்ஜூன் மேல் வைத்திருக்கும் அன்பும் நம்பிக்கையும் கண் முன் வந்து நிற்க…
“அர்ஜூனைப் போய் சந்தேகப்படலாமா….”
ரிஷி ஆஸ்திரேலியாவில் இருந்த சமயம்… ஒரு முறை ரித்விகாவை அர்ஜூன் பள்ளியில் இருந்து வீட்டுக்கு கூட்டிச் சென்றிருக்க… அதற்காக ரிஷி கண்மணியிடம் கோபித்திருக்க
“ரித்வியோட பாதுகாப்புல எனக்கும் அக்கறை இருக்கு ரிஷி… என்னை நீங்க நம்புறீங்கன்னா… அதே நம்பிக்கையை அர்ஜூன் மேலயும் வைக்கலாம்” கண்மணி தெளிவாகச் சொன்னதும் இப்போது ஞாபகம் வந்திருக்க…
கண்மணி… ரித்வி… என் குடும்பம்.. இதெல்லாம் ஓகே தான்… ஆனால் அர்ஜூனுக்கு நட்ராஜ் பிடிக்காது அது மறுக்க முடியாத உண்மைதானே… நட்ராஜ் விசயத்தில் அவன் மனம் அர்ஜூனை நம்ப மறுத்த அதே சமயத்தில்… ரித்விகா அழைத்திருந்தாள்…
“அண்ணா… அண்ணி லேப்டாப்னு உன் லேப்டாப்பை எடுத்து அர்ஜூன் அங்கிள் கிட்ட கொடுத்துட்டேன்… அண்ணிகிட்ட பேசினப்போ தான் அது மாறினதே தெரிஞ்சது… அண்ணி ரெண்டு லேப்டாப்பையும் தானே யூஸ் பண்ணுவாங்க… நீ ஏன் உன் லேப்டாப்பை எடுக்காம போன… அதான் கன்ஃப்யூஸ் ஆகிட்டேன்” செய்வதை எல்லாம் செய்து விட்டு… எல்லாம் உன்னால் தான் என ரிஷியின் மேலேயே பழியை தூக்கிப் போட்டிருக்க
“ஆமா… பண்றதெல்லாம் பண்ணிட்டு… உன்னை… சரி விடு நான் பார்த்துக்கிறேன்” என்றவன்… அடுத்து அர்ஜூனுக்கு அழைத்திருந்தான்…
---
ரிஷியின் மடிக்கணினி… அர்ஜூனின் அலுவலக மேஜையில் இருக்க…. சற்று முன்தான் ரிஷி பேசி வைத்திருந்தான்…
“லைட்டா ரிஷி குரல்ல பதட்டம் தெரிஞ்சதே…… அப்படி என்ன இருக்கும் இந்த லேப்டாப்ல..” அர்ஜூன் தனக்குள் பேசியபடி ரிஷியின் மடிக்கணினியை யோசனையுடன் பார்த்தவன்.. அவன் வேலையைக் காட்ட ஆரம்பித்திருந்தான்
“சார்… உடனே பேக் அப் எடுக்க முடியாது… டைம் ஆகும்…. நீங்க கேட்ட ஃபோல்டர்ஸ் மட்டும் பாஸ்வேர்ட் ஹேக் பண்ணியிருக்கேன்… ”
அர்ஜூனின் அந்த ஃபோல்டர்களை திறந்திருக்க…
ஹர்ஷித்… யமுனா… ஆதவன் … என இவர்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள்…
யாரோ ஒருவனை ரிஷி நையப் புடைத்துக் கொண்டிருந்தது… அவனின் கையில் திராவகம் ஊற்றியது என அந்த வீடியோவே கொடூரமாக இருக்க…
அர்ஜூனின் மனம் சுணங்கியது…
”இப்படிப்பாட்ட ஒருவனையா கண்மணி நம்புகிறாள்…”
“என்னதான் அவள் தங்கள் வீட்டுக்கு வந்திருந்தாலும்… அதுவும் அவன் மேல் கோபப்பட்டு வந்திருந்தாலும்..”
கண்மணிக்கு ரிஷியைப் பிடிக்காமல் வந்திருக்கின்றாள் என அர்ஜூனால் நம்ப முடியவில்லை…. எப்படி ரிஷியைக் காதலிக்கின்றேன் என்று அவள் சொன்ன போது ஏற்றுக் கொள்ள முடியவில்லையோ… அதே போல … இப்போது அவனை விட்டு விலகுகிறேன் என அவள் சொல்வதையும் அர்ஜூனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை…
யோசித்தபடியே… கண்மணி என்ற பெயரில் வைத்திருந்த அடுத்த ஃபோல்டரை ஓபன் செய்ய… அர்ஜூனின் கண்கள் சட்டென்று கோபத்தில் சிவக்க ஆரம்பித்திருந்தன…
கண்மணியின் புகைப்படங்கள்… அதிலும் மழையில் நனைந்தபடி… விதவிதமான கோணங்களில்…. தன்னை மறந்து… தன் மேனி… புடவை எதையுமே கண்டு கொள்ளாமல் அவள் அந்த மழையோடு மூழ்கிய தருணங்கள் என அந்த புகைப்படங்களைப் பார்த்த போதே தெரிய…
பட்டென்று மூடி வைத்து விட்டான் அர்ஜூன்… மூடிய அதே வேகத்தில் அந்த மடிக்கணினி அந்த அறையின் சுவரில் மோதி சிதறியிருந்தது…
அவன் சந்தேகப்பட்டது போல…. கண்மணியை ரிஷி இப்படி ஏதோ ஒன்றை வைத்துதான் மிரட்டி அவளைத் திருமணம் செய்திருப்பானோ…
அர்ஜூன் எதையுமே யோசிக்க வில்லை… அந்த புகைப்படம் எடுத்தது எப்போது… தான் பார்த்துக் கொண்டிருந்தது கண்மணியின் கணவன் ரிஷியின் மடிக்கணினி… அதில் ரிஷி வைத்திருந்தது அவன் மனைவியின் புகைப்படங்கள்…
நியாயமாகப் பார்த்தால் அர்ஜூன் தான் இங்கு தவறு செய்திருந்தது… மூன்றாம் மனிதனாக கணவன் மனைவி அந்தரங்க விசயத்தில் தலையிட்டது… தவறு எல்லாம் அவன் மேல் இருக்க… அதெல்லாம் யோசிக்காமல் கண்மணியின் இப்படிப்பட்ட புகைப்படங்களை ரிஷி எப்படி வைத்திருப்பான்… அர்ஜூனுக்கு அப்படி ஒரு ஆத்திரம்…
உண்மையிலேயே சொல்லப்போனால்… அவை எல்லாம் அந்த அளவுக்கு மோசமான புகைப்படங்கள் இல்லைதான்…
ஆனாலும் அர்ஜூன் கொதி நிலையின் உச்சத்தில் இருந்தான்… ரிஷியிடம் கோபம் வர ஆரம்பித்திருக்க… ரிஷியின் மேல் கோபம் வருவதற்கு முன் நட்ராஜிடம் தான் அவன் கோபம் முதலில் சென்றிருந்தது…
---
Loosada nee