அத்தியாயம் 92-2
பவித்ரா விகாஸை விட்டு வெளியே வந்து அந்த தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தனர் மருதுவும் கண்மணியும்….
”ஏய்… செமப்பா… அத்தனை பேரையும் ஒரே ஆளா சமாளிச்சுட்ட… “ கண்மணி இன்னுமே ஆச்சரியம் மாறாமல் அவனிடம் கேட்டபடி வர…
“இப்போ அமைதியா வரப்போறியா இல்லையா…” மருது சுள்ளென்று விழ…
“சான்ஸே இல்லை… மாஸ் ஹீரோவை சினிமால பார்த்திருக்கேன்… ஆனால் நான் நெஜத்தில பார்த்தது உன்னைத்தான்….” அவள் கண்களை விரித்து சொல்ல… மருது அவளை நக்கலாகப் பார்த்தபடி
“அந்த நாராயணன் பொண்டாட்டிக்கு ரொம்ப முடியாமல் போனதுனால… நாம எஸ்கேப் ஆனோம்… அதுனால என்னை ரொம்ப பாராட்டாத… ஆமா உன்னை யாரு அங்க போகச் சொன்னது” மருது ஓரளவு அவளிடம் இயல்பாக பேச ஆரம்பித்திருக்க
கண்மணி நடந்ததைச் சொல்ல… ஒரு நிமிடம் திகைத்தவன்… பின் கண்மணியைப் பார்த்தான்…
கண்மணிக்கும் பவித்ராவுக்கும் ஒரே சாயலா… தானே கந்தம்மாளுடன் சேர்ந்து வந்ததால் தான் ஓரளவு யூகித்துப் பார்த்தேன்… மற்றபடி பவித்ரா அக்கா போலவா இருக்கிறாள்…
கொஞ்சம் பருமனாக… மாநிறத்தில்…. இருந்த கண்மணியை பவித்ராவுடன் ஒப்பிடவே முடியவில்லை அவனால்… ஆனால் அந்த வைதேகி எப்படி பார்த்தவுடன் கண்டுகொண்டார்… அவனுக்கே புரியாமல் விழித்தவன்… பின் சட்டென்று தன்னை மாற்றியவனாக
”சாப்பிட்டியா இல்லையா… “ வேகமாகக் கேட்க…
“அதெல்லாம் ஒரு பிடி பிடி பிடிச்சேன்” என்றபடியே… ”ஆனால்….” என இழுக்க மருது என்ன என்பது போல பார்க்க…
“பால் பாயாசம் மட்டும் பாக்கி… “ அவள் பரிதாபமாகச் சொல்ல… மருது முதன் முதலாக அவளைப் பார்த்து சிரிக்க… கண்மணியின் முகம் அதில் பிரகாசமாகியிருந்தது….
அதன் பின் மருது பேசாமல் நடந்து வர… அவன் பேசாவிட்டாலும்… கண்மணியை விட்டு விலகாமல் நடந்து வர… இப்போது கண்மணி உரிமையுடன் அவன் கையைப் பிடித்துக் கொண்டே துள்ளளுடன் வேடிக்கைப் பார்த்தபடி சில அடி தூரம் நடந்து வந்தவள்… மெல்ல மருதுவைப் பார்த்து…
“உனக்கு என்னை அவ்ளோ பிடிக்குமா…. எனக்காகத்தானே சண்டை போட்ட… நாயெல்லாம் ஓட ஓட விரட்டுன…” விடவில்லை அவள்… கேள்வி கேட்க
“ரொம்ப பேசாத வா… ஏதோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்த பொண்ணுனு காப்பாத்தினேன்… அதும் எதேச்சையா வந்தேன் அதுனால நீ தப்பிச்ச…” மருது எங்கோ பார்த்தபடி சொல்ல…
“ஹா ஹா… நம்பிட்டேன்… நம்பிட்டேன்.. எதேச்சையா வந்தியா… “ என்று வாயை மூடிக்கொண்டு நக்கலாகச் சிரிக்க… மருதுவோ முறைக்க
“நான் கேட்டேனே… நீ கண்மணி… கண்மணினு கத்திட்டு ஓடி வந்ததை… நான் கேட்டுட்டேனே… ஹீரோ சார்” என்றவளிடம் மருது என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க
“இந்த பழைய படம் பார்த்திருக்கியா…. அதுல ஹீரோ கண்மணி கண்மணின்னு கத்திட்டு கோவில் மண்டபத்துல பைத்தியமா காத்துட்டு இருப்பாரே… அந்த மாதிரி… எனக்கு ஃபீல் ஆச்சு… தெரியுமா… என் பேரையும் இப்படி கத்தி கூப்பிடறக்கு ஆள் இருக்காங்களானு… இங்க பாரு என் கையைப் பாரு… எனக்கு எப்படி புல்லரிச்சுப் போச்சு பாருங்க”
“ஆமா… இவங்களுக்காக பைத்தியக்காரனா சுத்துறோம்…. தேவையில்லாம கடுப்படிக்காத… ஆமா உனக்கு பத்து வயசு தானே உனக்கு ஆகுது… இந்த பேச்சு பேசுற…” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே…
“ஏய் பஞ்சு மிட்டாய்… அங்க பாரு… வாங்கித் தா….” என அந்தக் கடையை நோக்கி அவனை இழுக்க…
“காசு இல்ல கண்மணி… காலையில தானே என் சட்டைப் பைல பார்த்த… எல்லாமே காலி ஆகிருச்சு…” என மருது சமாளிக்கப் பார்க்க… அவனை நிமிர்ந்து பார்த்தவள்…….
“சட்டைப் பைல இல்லேனா… பேண்ட் பாக்கெட்ல வச்சுருப்ப… என்னை ஏமாத்தத…. நானே எடுத்துக்கிறேன்” எனும் போதே மருது பதறி… அவளை விட்டு விலகி நின்றவனாக
“இவ கையை விட்டு எடுத்தாலும் எடுப்பா.. எல்லாம் பண்ணுவா…” தனக்குள் சொல்லிக் கொண்டவன்… வேகமாக… அவளிடம்…
“இருக்கு இருக்கு… காசு இருக்கு… ஆனால் கம்பெனி காசு… ” என யோசித்தபோதே
“அதெல்லாம் தம்முக்குனு நீ காசை அபேஸ் பண்ணி வச்சுருப்ப… இரண்டு நாளுக்கு நீ தம்மடிக்கிறதை மறந்துட்டு அதை எல்லாம் கண்மணிக்குத் தாரை வார்த்துரு… உன்னோட வாழ்நாள்ள ரெண்டு நாளை சேவ் பண்ணித் தந்திருக்கேன்… எனக்கு ஒரு பஞ்சு மிட்டாய் வாங்கித் தர மாட்டியா…” கண்மணி பேசியபடியே இருக்க
மருதுவுக்கு அவளைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை… ஒன்று அறிவாளி போல மேதாவித்தனமாகப் பேசுகிறாள்… இல்லை ஒன்றுமே தெரியாத குழந்தை போல பேசுகிறாள்… இதில் இவள் யார்…. குழம்பியபடி இருக்க.. அப்போது மருதுவின் அருகில் யாரோ ஒருவன் நின்று பேசிக் கொண்டிருக்க… அவனைப் பார்த்தாபடியே வந்து மருதுவின் அருகில் நிற்க…
“இந்த ஏரியா தானா நீ… நீ சண்டை போட்டத பார்த்தேன்… நீ என்ன வேலை பார்க்கிற…” வந்தவன் விசாரித்துக் கொண்டு இருக்க…
கண்மணி இப்போது…
“எனக்காகத்தான் சண்டை போட்டாங்க… தெரியுமா” பெருமையுடன் சொல்ல மருதுவோ அவளை முறைக்க…
துரையோ… அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டப் போக… கண்மணியோ மெல்ல விலக நினைத்த போதே… அவன் கைகள் அவள் கன்னத்தை தொட்டிருக்க… கண்மணி உதட்டைச் சுழித்தபடி அவனை முறைத்தாள்…
“க்யூட்… கன்னக் குழி அழகா இருக்கு பாப்பா” என மீண்டும் அவளின் கன்னங்களைத் தொடப் போக.. மருது வேகமாக கண்மணியை தன் அருகில் வைத்துக் கொண்டவனாக
“என்ன ப்ரதர் வேணும் உங்களுக்கு” எனும் போதே துரையின் பார்வை மருதுவிடம் மட்டுமே…
”ஒண்ணுமில்ல… உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு… அதான் பேசிட்டு போகலாம்னு வந்தேன்… இந்த ஏரியா தானே…கண்டிப்பா இன்னொரு நாள் பார்ப்போம்” என்றபடி நகர்ந்தவன்…ஏதோ ஞாபகம் வந்தவன் போல…
“இந்தா பாப்பா…” என அவன் பையில் இருந்த சாக்லேட்டை எடுத்து நீட்ட… கண்மணிக்கு சாக்லேட் பிடிக்கும் தான்… ஆனால் யாரோ ஒருவன்… அவனிடம் எப்படி வாங்க முடியும்…. கண்மணி இப்போது மருதுவைப் பார்க்க… அவன் வேண்டாமென்று சொல்லு என்பது போல சைகை காட்ட… கண்மணியும் மறுத்துவிட…
கண்மணியைக் கண்டு கொள்ளவில்லை துரை… அவன் பார்வை முழுவதும் மருதுவை மட்டுமே சூழ்ந்திருக்க… முகத்தில் விசமமான புன்னகையுடன் மருதுவிடமிருந்து விடைபெற்றிருந்தான்…
----
மாலையில் மருத்துவர் வந்த பின் தான் நட்ராஜின் உடல்நிலையைப் பார்த்துவிட்டு மருத்துவர் சொன்னபின் தான் வீட்டுக்குச் செல்ல முடியும் என்பதால் கந்தம்மாள் நட்ராஜுடன் இருந்தவராக… கண்மணியை மட்டும் மருதுவுடன் வீட்டுக்கு அனுப்பிவிட்டாள்…
“அப்போ நான் நாளைக்கு லீவா…” சந்தோசமாகக் கேட்டபடி… அன்றைய நட்ராஜ் வீட்டை… இப்போதையை கண்மணி இல்லத்தை நோக்கி மருதுவுடன் சென்று கொண்டிருந்தாள்…
“அப்போ இன்னைக்குத்தான் இங்க நியூ இயரா… ”
”உன் கூடத்தானா…”
“ஏய் ஏய் நாம வெடி வெடிப்போமா… பெரிய பட்டாசு… வானத்துல வெடிக்கிற மாதிரி… அது வெடிக்கும் போது ஹேப்பி நியூ இயர்னு கத்தி சொல்லனும்… “ எனும் போதே
”ஆமா நான் என்ன உனக்கு சொந்தக் காரனா என்ன… காலையில இருந்து அதை வாங்கித்தான்ற…. இதை வாங்கித்தான்ற…. அப்புறம்….. என் வயசு என்ன தெரியுமா… 23… உன் வயசு பத்து… ஒழுங்கா அண்ணானு சொல்லு” மருது மிரட்ட ஆரம்பித்திருக்க
கண்மணி… அவனைப் பார்த்து…
”அதெல்லாம் இருக்கட்டும்… உன் பேர் என்ன…” கண்மணி கேட்டபடியே… தமிழ்ப் பேர் தானே எனக் கூடுதலாகவும் கேட்டு வைக்க
அமைதியாக நடந்து போனவனிடம்
“பேர் சொல்லு… பேர் தெரியனும்… இல்லைனா… ஏய்… வா… போன்னுதான் கூப்பிடுவேன்” என்று அவள் முடிக்கவில்லை
“மருதிஸ்வர்…” எனும் போதே… கண்மணியின் முகம் சுருங்க… அடுத்த நொடி அவளே அதற்கு மாற்றும் கண்டுபிடித்தவளாக
“சரி விடு… மருது, ஈஸ்வர்… ரெண்டு பார்ட் இருக்குதானே…. மருது அதை மட்டும் நான் வச்சுக்கிறேன்… “ கண்மணி சொன்னபோதே மருது அவளிடம்
“அதெல்லாம் தேவையில்ல… நீ மருதீஸ்வர் முழுப்பேரையும் சொல்லனும்” என்ற போதே
“இங்க பாரு மருது… நீ வேணும்னா என்னை ’மணி’ னு என் பேர்ல பாதி கூப்பிட்டுக்கோ… உனக்கும் எனக்கும் இப்போ டீல் சரியாகிரும்…ஓகே வா… எனக்கு நீ ’மருது’… உனக்கு நான் ’மணி’… அவ்ளோதான் ”… மருது தலையிலடித்துக் கொண்டபடி…
”ஒரு நாள்தானே… எப்படியாவது இவளைச் சமாளிப்போம்” என்று அவளோடு விதியே என்று சென்றவன்… வீட்டையும் அடைந்திருந்தான்…
“இது என்ன புதர் புதரா இருக்கு… ஓ அந்த ஓட்டு வீடுதான் நம்ம வீடா… அதுக்குப் பக்கத்துல குடிசை வீடு இருக்கு… அது யார் வீடு…” கண்மணி கேள்வியாக கேட்டு அவனைத் துளைத்தெடுத்துக் கொண்டிருக்க… அவளைச் சமாளிக்க முடியாமல் மருது திணறித்தான் போனான்…
---
ஒரு வழியாக… அவளை தன் வீட்டுக்குள் அழைத்துச் சென்றவனிடம்
“ஓ இதுதான் உன் வீடா… அப்போ அது யார் வீடு…” குடிசை வீட்டுக்குள் சென்றபடி கேட்க…
“ஹ்ம்ம்ம்ம்… அதுதான் உன் பாட்டியோட பையன் வீடு… அதாவது என் முதலாளி வீடு… அங்க போகக் கூடாது…சரியா” என்ற போதே…
அவனிடம் தலை ஆட்டியபடி கண்மணி அமைதியாக சுற்றிப் பார்த்தபடி வந்தவள்…
“எனக்கு ஒரு பிளாஸ்டிக் கவர் வேணும்” எனக் கேட்க… மருது அவளிடம் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்க..
அதை வாங்கிக் கொண்டவள்…
“இப்போ எனக்கு ரெஸ்ட் ரூம் போகனுமே” என அடுத்து அவனிடம் கோரிக்கையை வைக்க… மருது ஒன்றும் சொல்லாமல் இடத்தைக் காண்பிக்க… கண்மணியும் சென்றிருந்தாள்…
---
கண்மணி மீண்டும் திரும்பி வரும் போது… மருது அங்கிருந்த மரத்துக்கு அடியில் கட்டப்பட்டிருந்த மண்அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றி விறகைப் பற்ற வைக்க முயற்சித்துக் கொண்டிருக்க…
“உன் வீட்ல தான் சிலிண்டர் இருக்கே… ஏன் அடுப்புல வைக்கிற….” அவன் வீட்டை அதற்குள் அவள் அலசி ஆராய்ந்திருந்தாள்…ஃ
“சிலிண்டர்ல கேஸ் இல்ல…” என்றபடி… தீயை வளர வைத்துக் கொண்டிருக்க…
”ஏய் பார்த்து… எங்க ஏரியால அடிக்கடி தீப்பிடிக்கும்” கண்மணி கவலையோடு சொல்ல… மருது அவளை நிமிர்ந்து பார்க்க…
“எனக்கும் சீரியஸா பேசத் தெரியும்” என்பது போலகண்மணி அவன் முன் கெத்தாக நிமிர்ந்து நிற்க… பவித்ராதான் வந்து போனாள் அந்த சில நொடிகளில் அவன் முன்…
அதன் பின் மருது தான் உண்டு தன் வேலையுண்டு என சமைத்துக் கொண்டு இருக்க… கண்மணிக்குத்தான் பொழுதே போக வில்லை…
எத்தனை தடவைதான் அந்த இடத்தை சுற்றி சுற்றி வருவது…. செடியையும் மரத்தையும் பார்த்துக் கொண்டு இருப்பது… அங்கிருந்த இன்னொரு வீட்டுக்கும் செல்லக் கூடாது எனச் சொல்லிவிட்டான்… அதற்காக எல்லாம் போகாமல் இருப்பாளா என்ன.. ஆனால் வீடு பூட்டி இருந்தது… அதனால் போக முடியவில்லை…
ஒரு கட்டத்தில் போரடித்து.. எதுவும் பிடிக்காமல்… மீண்டும் மருது சமைக்கும் இடத்திற்கு வந்தவள்…
“எனக்கு போரடிக்குது…” என்று அவன் அருகில் அமர்ந்தவள்…
“எனக்கும் சமையல் பண்ணக் கத்துக் கொடு…” என அவனிடம் பேச்சை வளர்க்க
“ஒரு நாள்ள எல்லாம் கத்துக்க முடியாது….” என்றபடி அடுப்பில் இருந்து சாதத்தை வடிக்கப் போக….
“அப்போ இதை இதைக் கத்துக்கறேன்…ப்ளீஸ் ப்ளீஸ்” என வேகமாக அவனிடமிருந்து துணியை வாங்க… மருதுவுக்கோ என்ன சொல்வதென்று தெரியாத நிலை…. வேறு வழியின்றி அவளுக்கு எப்படி சாதம் வடிப்பது என்று சொல்லிக் கொடுக்க… கண்மணியும் அவ்வாறே செய்ய…. அப்போது அவளது கையில் இலேசாக வடிநீர் பட்டு விட… அடுத்த நொடி அவ்வளவுத்தான்…
“ஆ.. அம்மா…” எனக் கையை உதறிக் கொண்டு சத்தமாக அழ ஆரம்பித்திருக்க……
“இலேசாதானே பட்டுச்சு… இவ ஏன் இவ்ளோ ரியாக்ட் பண்ற…” உள்ளுக்குள் மருதுவுக்கு கேள்வி வந்தபோதும்… அவளது அழுகை அவள் மீது ந்ப்பரிதாபப்படச் செய்திருக்க….
“ஏய் இங்க காட்டு… ஒண்ணும் இல்ல… சரியாயிடும்” எனும் போதே…. இன்னும் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தவளாக
“ஒண்ணுமில்லையா…. பாரு… எப்படி சுடுது தெரியுமா… ஐயோ அம்மா… எரியுதே” என தேம்பி தேம்பி் அழுதபடியே சொல்லி அவனிடம் கையைக் காண்பிக்க… அவனுக்கோ அந்தக் கையில் ஒன்றுமே தெரியவில்லை…. ஆனாலும் ஏதாவது சொன்னால் இன்னும் பெரிதாக சத்தம் போட்டு அழுதுவிடுவாளோ என்ற பயம் மருதுவுக்குள் வந்திருக்க….
“இரு இரு…. அழாத… மருந்தெல்லாம் இல்ல… கொஞ்ச நேரத்துல சரி ஆகி்டும்.. “ என யோசித்த போதே… அவன் கண்ணில் வாழை மரம் பட்டிருக்க…. வேகமாக மருது அதை நோக்கிப் போக…
இப்போது கண்மணியோ…. அழுகையை நிறுத்தி விட்டு…. ஓடியவனையே பார்த்தபடி கல்மிஷமாக புன்னகைக்க ஆரம்பித்திருந்தாள்… இந்த அக்கறை அவளுக்கு புதியதான ஒன்று… அதை விட மனதுக்கு ஏதோ ஒரு சந்தோசத்தை அது கொடுக்க… அதைச் சந்தோசமாக அனுபவித்துக் கொண்டிருந்தாள்…
மருது திரும்பியிருக்க… மீண்டும் முகத்தை அழுவதைப் போல் மாற்றியவளாக அமர்ந்திருக்க… வாழை மட்டையுடன் வந்தவன்… அவள் கையில் அதன் சாறைப் பிழிந்து ஊற்றியபடி…
“இனி ஒண்ணும் பண்ணாது…. சரியா… ரொம்ப வலிச்சதுனா தூங்குறியா… இதுக்குப் போய் இப்படி அழுவாங்களா” மருதுவின் குரலே மென்மையாக மாறி இருக்க…. கண்மணிக்கு எல்லாமே புதிதாகத் தெரிந்ததன்….
காலையில் பார்த்த போது எரிந்து எரிந்து விழுந்தவனா இவன் என்னுமளவுக்கு அவனின் அக்கறை கலந்த குரல் கண்மணிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்க… அவனிடம் இன்னுமே அவள் உரிமை எடுக்க ஆரம்பித்திருந்தாள்…
”எனக்கு தூக்கமெல்லாம் வரலை… இன்னைக்குப் பிறந்த நாள்… எனக்கு பால் பாயாசம் வச்சுத் தாயேன்… நீதான் நல்லா சமைக்கிறியே… “ எனும் போதே மருது முறைக்க ஆரம்பித்திருக்க
“அட்லீஸ்ட் பால் இல்லாம வெறும் பாயாசம்…” கண்களைச் சுருக்கி… கன்னக் குழிகள் விழ அவள் கெஞ்சலாகக் கேட்க…
“ஹ்ம்ம்ம்…. பால் பாயாசமா… இங்க பால் காப்பி… பால் டீக்கு கூட வழி கிடையாது… ஓடிப்போயிரு…” என மருது அலட்சியமாகச் சொல்ல
“என்னது…. டீ காபி கூட பால்ல கிடையாதா…” என்றபடி… அவன் முன் நின்றவள்… இடுப்பில் கை வைத்தபடி….
“என்னைப் பாறேன்…. என்னை நல்லா பாறேன்” என அவனிடம் சொல்ல… அவனும் அவளை தலை முதல் பாதம் வரை அலட்சியப் பார்வை பார்க்க…
“நான் என்ன கலர்ல இருக்கேன்…” எனக் கேட்க… மருதுவும் இப்போது வேறு வழியின்றி அவளை நன்றாகப் பார்த்தான்… கருப்பு என்று சொல்ல முடியாது… மாநிறம்….
“நீ கலர் இல்லதான்… அதுக்காக கருப்புனு சொல்ல முடியாது” என இழுத்த போதே
“ஹான்… அதே தான்…. என்ன கலர்னே கண்டுபிடிக்க முடியலையா…” என அவள் குரலில் சோகத்தைக் கொண்டு வந்திருக்க… மருது அவள் முகத்தையே பார்த்தபடி இருக்க
“ஏன்னு கேளு… அப்போதானே நானும் சொல்ல முடியும்…” என அவனிடம் சொல்ல… மருதுவும் அவள் குழந்தைத் தனத்தில் தன்னையே மறந்தவனாக
“ஏன்” உடனே அவன் கேட்க
“சொல்றேன்… ஆனால் அதுக்கு முன்னால நீ ஒரு பத்து வருசம் முன்னால போகனும்…” என்றபடி…
“அப்டியே அங்க பாரு… கொசுவர்த்தி சுருள் சுத்துதா உனக்கு…” மருதுவிடம் கேட்க… மருது பல்லைக் கடித்தபடி…
“சுத்துது… சுத்துது… சொல்லித் தொலையுறியா” என சுள்ளென்று விழ…
“ஹான் வெரிகுட்… பத்து வருசத்துக்கு முன்னாடி… டிசம்பர் 31 பெரிய காத்து… சூறாவளி… இடி மின்னல் மழை… அப்போ “ என சாதாரணமாக சொல்ல ஆரம்பித்தவள்…
“அப்போ…. திடீர்னு ஒரு குழந்தையோட அழுகுரல்…” இப்போது கண்களை விரித்துச் சொன்னவள்… மருதுவின் நக்கலானப் பார்வையைப் புரிந்து கொள்ள முடியாமல்
”அட நான் தான்பா…. வையிட் ட்ரஸ் போட்ட நர்ஸ் எங்க அப்பாகிட்ட என்னை கொடுக்கிறாங்க”
கண்மணி பிறந்தவுடன் அவள் அழவே இல்லை என்பதுதான் அவளது முதல் பிரச்சனையே… அது மருதுவுக்கு தெரியாதா என்ன…. இவள் அழுதாளாம்… அதிலும் அவள் அப்பா இவளைக் கையில் வாங்கினாராம்… அவள் விடும் கதையில் மருது ஆவென்று பார்த்திருந்தான் …
“இந்த ஸ்னோ வைட் கதை கேள்விப்பட்ருக்கியா… ஸ்னோல ரத்தம் பட்டால் ஒரு கலர்… அந்த கலர் தெரியுமா…தெரியலேன்னா… கற்பனை பண்ணிப் பார்த்துக்கோ… அப்படி கலர்ல நான் பொறந்தேன்..”
இப்போது மருதுவுக்கு சத்தியமாக சிரிப்பை அடக்கவே முடியவில்லைதான்… இருந்தாலும்… இருந்தாலும் அடக்கியபடி…
“அப்புறம்….இந்தக் கலர் எப்படி…” மருதுவும் நக்கலாகக் கேட்க
“ஹான்…. குட்… கதைக்குள்ள வந்துட்டப்பா… அங்கதான் ட்விஸ்டே…. எங்க வீட்டு சூனியக்கார கெழவி ஒண்ணு இருக்கே…. நீதான் காலையில பார்த்தியே… அதுக்கு எங்க அம்மா மேல பொறாமை…. அப்புறம் என் மேல பொறாமை…. ஏன்னா… நாங்க ரெண்டு பேரும் அவ்ளோ அழகு… கலர்னு…”
“ஹ்ம்ம்ம்” அப்புறம் என மருது சுவாரஸ்யமாகக் கேட்க ஆரம்பித்திருக்க
“டெய்லி… வரக்காப்பி… தெரியும்தானே…. ப்ளாக் காஃபி… அதைக் குடுத்து குடுத்தே…. என்னை இந்தக் கலர்ல கொண்டு வந்திருச்சு…. எனக்கு வெவரம் தெரியாத வயசுல…. நான் குழந்தையா இருந்தப்போ… குடிச்சுட்டேன்… கலரும் மாறிருச்சு… ஆனால் இப்போ சுதாரிச்சுட்டேன்…. குடிக்கிறது இல்லையே… மறுபடியும் என் கலர் கொஞ்சம் கொஞ்சமா வருதா”
எனக் அவனைப் பார்த்துக் கேட்டவள்…
“ஆனால் ஒரு நாள் இல்ல ஒரு நாள் அந்தக் கலர்ல வருவேன்… ஆனால் என் நுனி மூக்கை மட்டும் பாரு… அந்தக் கலர்ல இருக்கும் பாரு… பிங்க் கலர்ல இருக்கா… தெரியலையா… உன் ஞானக் கண்ண வச்சுப் பாரு… தெரியும்”
மருதுவுக்கோ முடியவில்லை… வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தவனுக்கு… ஒரு கட்டத்தில் கண்களில் நீரே வர ஆரம்பித்திருக்க…
“நீ பெறக்கும் போது…. அப்டியே ஸ்னோ வொயிட் கலர்… இந்த காஃபி குடிச்சதுனால…. கருப்பாகிட்ட…. நம்பிட்டேன் ஓடிரு… உன் கதையை எல்லாம் எவனாவது இளிச்சவாயன் வருவான் அவன் கிட்ட சொல்லு… அவன் நம்புவான்…. என்கிட்ட அதுவும் என்கிட்ட… முடியல மணி…”
எனச் சிரித்தபடியே சொல்லி முடித்திருக்க
“நம்பலேனா போ….” என்று அவள் முகம் சுருங்க… மருதுவும் உடனே சிரிப்பை நிறுத்தியவனாக..
“ஏய் ஏய்… சும்மா சொன்னேன்…. சொல்லு… அப்புறம்…” என அவளிடம் பேச ஆரம்பித்தவள்… கண்மணி அப்போது ஆரம்பித்தவள் தான்…. பேசினாள் பேசினாள்… பேசிக் கொண்டே இருக்க… மருதுவும் அவள் சொல்வதை எல்லாம் கேட்க ஆரம்பித்திருந்தான்… கண்மணியின் கண்கள் அவள் சொல்லும் ஒவ்வொரு கதைக்கும் அதற்கேற்றார்ப்போல அபிநயம் பிடிக்க…. குறும்பின் மொத்த உருவமாக இருந்த கண்மணியைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்திருந்தான் மருது…
---
மதிய உணவுக்குப் பின்…
“நேத்து நைட்ல இருந்து தூங்கல மணி… நான் கொஞ்ச நேரம் படுத்திருக்கேன்…. நீ வெளையாண்டுட்டு இரு…. வேற எங்கயும் போகக் கூடாது…. சரியா…” என எச்சரித்தபடி…. கண்களை மூடிப் படுக்க ஆரம்பித்தவனிடம் தலை ஆட்டிவிட்டு வெளியே போனவள்… அடுத்த பத்தாவது நிமிடம் மீண்டும் திரும்பி வந்தவளாக
”ஏய் மருது… இந்த மரத்துல எனக்கு ஊஞ்சல் கட்டித்தாயேன்… எனக்குப் போரடிக்குதுல… அதை மட்டும் கட்டிக் கொடுத்துட்டு தூங்கு…. நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்…” கண்மணி வந்து எழுப்பி இருக்க..
“அய்யோ… படுத்துறாளே… இவளச் சமாளிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகுதே” மனதுக்குள் புலம்பியபடியே… கண்களைத் திறக்காமல் எழாமல் படுத்திருக்க
“எழுந்திரு… எழுந்திரு….” கண்மணி இப்போது அவனை உலுக்க ஆரம்பித்திருக்க… அவளை எப்படி அவன் தவிர்க்க நினைத்தாலும் அவள் விடவே இல்லை… வேறு வழியில்லாமல்… தூக்கம் கலைந்த கடுப்போடு எழுந்து வந்தவன்….
“ஊஞ்சல் தானே… கட்டித் தாறேன் வா…. மவளே இனிமேல நீ ஊஞ்சல் ஆட்றதையே மறந்துரனும்… குட்டிச் சாத்தானே என் தூக்கத்தையே கெடுத்துட்ட” மனதுக்குள் கருவியபடியே கயிற்றைக் கண்டுபிடித்து…. வீட்டில் இருந்த உட்காரும் பலகையை எடுத்து வந்து… ஊஞ்சலைக் கட்ட…. கண்மணியும் ஆவென்று ரசித்துப் பார்த்தபடி இருந்த போதே… அந்த ஊஞ்சல் கட்டிய விதத்தில் அவளுக்கு சந்தேகம் வந்திருக்க… அதை உணர்ந்து அவள் கேட்க வாயைத் திறக்க ஆரம்பித்த போதே…. அவளை அலேக்காகத் தூக்கியவன்…. அந்த ஊஞ்சலில் உட்கார வைத்தவனாக
“இரண்டு மணி நேரம்… இல்லல்ல ஒரு மணி நேரம்… இதுலயே இரு… நானே வந்து இறக்கி விட்றேன்… ஊஞ்சல் கேட்டேல…. ஆடு… ஆனால்… இனி கேட்பியா” காலைக் கீழே வைக்க முடியாத உயரத்தில் ஊஞ்சலைக் கட்டி… அதில் கண்மணியையும் அமர வைத்திருக்க… கண்மணியோ அவனிடம் கெஞ்ச ஆரம்பித்திருந்தாள்
“மருது மருது… நான் எப்படி இதுல ஆடுவேன்… எனக்குப் பயமா இருக்கு…”
”போரடிக்குதுனு சொன்னேல…. காத்தடிக்குதுல… ஊஞ்சல் தானா ஆடும்…. நான் தூங்கப் போறேன்…. நிம்மதியா” என்றபடி… இவள் கெஞ்சலை எல்லாம் கண்டு கொள்ளாமல் மருது உள்ளே போக… மருது தலை மறையும் வரை கெஞ்சிக் கொண்டிருந்தவள்… அவன் தலை மறைந்ததும்….
“லூசு… நான்லாம் எங்க ஏரிக்கரைல எவ்ளோ பெரிய ஹைட்ல ஊஞ்சல்ல ஆடிருக்கேன்… இதெல்லாம் ஜூஜூபி…. பயந்த மாதிரி பேசுன உடனே நம்பிட்டு போகுது பேக்கு…” என்றபடி… அந்த ஊஞ்சலில் எழுந்து நின்று ஆட ஆரம்பித்தவள்…. மற்றதெல்லாம் மறந்தும் போனாள்….
----
நேற்றைய உறக்கமின்மை… அந்த பணக்கார வீட்டின் அடி ஆட்களோடு சண்டை… இதை எல்லாம் விட கண்மணி அவனிடம் பேசி பேசி… அதைக் கேட்டு கேட்டே மருது களைப்பாகிப் போயிருக்க… அந்தக் களைப்பிலேயே அவனும் தூங்கியிருக்க… எத்தனை மணி நேரம் தூங்கினானோ… அவனுக்கேத் தெரியவில்லை… எழுந்த போதோ கடிகார மணியைக் கூடப் பார்க்கவில்லை… கண் ’மணி’ யைத்தான் தேடினான்…
“அய்யோ… ரொம்ப நேரம் தூங்கிட்டோமோ” வேகமாக பதட்டத்துடன் எழுந்து வெளியே வர… அங்கோ வெறும் ஊஞ்சல் தான் இருக்க… கண்மணியைக் காணவில்லை….
”மணி… மணி….” என சத்தம் போட்டபடி அந்த வீட்டைச் சுற்றி கத்த ஆரம்பித்திருக்க… கூடவே அவனுக்கு பயமும் பதட்டமும் வந்திருக்க…
சுமார் ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடம் அவனைக் கத்தவிட்டவளாக… கதறவிட்டவளாக… அந்த மாமரத்தின் கிளையில் மறைந்து அமர்ந்திருந்தபடி… அதை ரசித்துக் கேட்டபடி அமர்ந்திருக்க… ஒரு கட்டத்தில் மருது வெளியே போக நினைத்தவனாக தெருவை நோக்கிச் செல்வதற்காகத் திரும்பப் போக… அதை உணர்ந்தவளாக… சட்டென்று மரத்தில் இருந்து குதிக்க.. மருதுவிடம் இப்போது கோபமெல்லாம் இல்லை… மாறாக அப்போதுதான் மீண்டும் மூச்சே வந்தது போல இருந்தது நிம்மதியில்….
Some Snippets from அத்தியாயம்: 92-3
“நானு… நானு… என்னையும்… தூக்கி விடு….” என்று பாயாசத்தை வேகமாகக் குடித்து விட்டு அவனிடம் கைகளை உயர்த்த… மருது இப்போது சிரித்தபடி…
“உனக்கு வாலு மட்டும் தான் இல்லை… மத்தபடி எல்லா அம்சமும் பொருத்தமா இருக்கு” என அவளைத் தூக்கி ஒரு சுற்று சுற்றி தட்டாமலை சுற்றியவன்… மரக்கிளையில் ஏற்றி விட… கண்மணியும் அவனைப் போலவே தொங்கி… உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்திருந்தாள்… அவள் கீழே விழும் போதெல்லாம் அவன் அவளை தூக்கி … கிளையில் தொங்க விட…
----
”ஏன் மணி… இவ்ளோ அறிவா இருக்கிற… ஏதேதோ பேசுற… எனக்கே அதுல பாதி புரியல… இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கிற நீ உன் அப்பா அம்மாவைப் பற்றி மட்டும் தெரிஞ்சு வச்சுக்கலையா” அவனுக்கே சந்தேகம் தோன்றியிருக்க… கேட்டும் விட்டான்
---
”நம்மள விட்டுட்டு போறோம்னு… இவளுக்கு கவலையே இல்லையா… அப்படி பேசுனா… என்னையே சுத்தி சுத்தி வந்தாள்…ஆனால் இப்போ ஊருக்குப் போறோம்னு சந்தோசமா இருக்கா” மருது அவள் முகத்தையேப் பார்த்தபடி இருக்க…
--
“இதுதான் த்ரில்லா இருக்கும் மருது… நீ ஏறுவியா மாட்டியான்னு… செம்ம டென்ஷன்… நீ ஏறின உடனே … அந்த டென்ஷன் எல்லாமே அதை விட பல மடங்கு சந்தோசமா மாறிருச்சு” என்ற போதே அவளின் கையைப் பிடித்து உள்ளங்கையைத் திருப்பி… சாக்லேட் பாக்கெட்… ஒன்றை வைக்க… அதுவும் அவளுக்குப் பிடித்த ப்ராண்ட்… இரண்டு மூன்று முறைச் சாப்பிட்டு இருப்பாள்… அதுவும் சிறிதளவு மட்டுமே….
---
”நான் ஏன் இந்த பஸ்ல ஏறினேன் தெரியுமா” என்று மருது ரகசியக் குரலில் அவள் புறம் குனிந்து கேட்க..
---
“என்னை என் அப்பாகிட்ட கொண்டு போய் விடு” என அவளிடம் கேட்க ஆரம்பித்திருக்க… கந்தம்மாளுக்கோ தலை சுற்றாத குறைதான்…
மகன் என்ன சொல்வானோ… பயந்தவராக…. கண்மணியை மிரட்டி வீட்டுக்குள் அடக்கி வைத்திருக்க… கண்மணி அடங்குவாளா என்ன… இரண்டும் முறை பகல் பொழுதில் வீட்டை விட்டு சென்று அடி வாங்கி வீட்டில் அடைக்கப்பட்டிருக்க…
---
அதன் படி நல்ல பிள்ளை போல நடித்து அமைதியாக இருந்தவள்… கந்தம்மாளை ஏமாற்றி… இதோ கிளம்பி விட்டாள்.. பகலில் சென்றால் தானே யாராவது பார்த்து இவளை மாட்டி விடுகின்றனர்… இரவைத் தேர்ந்தெடுத்தாள்… அதுவும் பௌர்ணமி இரவுக்காக காத்திருந்தவள்… கிளம்பியிருந்தாள்…
---
”அப்பான்னு இவரத் தேடி வந்த உங்க மருமகளுக்கு இவர் என்ன பரிசு கொடுத்தார் தெரியுமாம்மா… வாழ்நாள் முழுக்க நடைபிணமா வாழ்ற வாழ்க்கையத்தான்… ”
----
கன்னம் கூட தெரியக் கூடாது… என்று நன்றாக இழுத்து விட்டிருந்தாள்… அவளின் கன்னக்குழி அவளின் மிகப்பெரிய அடையாளம்… அதையும் மறைத்து வி்ட்டிருந்தாள்….
--
போரளியாக…. ஜான்ஸி ராணியாக வீர மங்கம்மவாக தன் தந்தையின் இடம் நோக்கி செல்லக் காத்திருந்தாள் அந்த பேருந்து நிறுத்தத்தில்… அதுவும் கடைசிப் பேருந்துக்காக
Lovely update